பதிவு செய்த நாள்
03
அக்
2023
03:10
விசாகம்: யோகமான காலம்
குருபகவானை நட்சத்திர நாதனாக கொண்ட உங்களுக்கு அக்.8, 2023ல் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கிடப் போகிறது?
இதுவரை ராகு 1,2,3 ம் பாதத்தினருக்கு 7ம் இடத்தில் சஞ்சரித்து தொழில் பின்னடைவு, குடும்பத்தில் குழப்பம், தீயோர் சேர்க்கை, உடல்நிலையில் திருப்தியின்மையை உண்டாக்கி வந்தார். 4ம் பாதத்தினருக்கு 6ம் இடத்தில் சஞ்சரித்து முன்னேற்றம், லாபம், செயலில் வெற்றியை வழங்கினார். இனி 1,2,3 ம் பாதத்தினருக்கு 6ம் இடத்தில் சஞ்சரித்து நன்மை வழங்குவார், உடல் நிலையில் இருந்த சங்கடம் போகும். எதிரி பலம் இழப்பர். வழக்கு விவகாரத்தில் சாதகமான நிலை உண்டாகும், தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும், வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு திறமைக்கேற்ப வேலை கிடைக்கும். சிலர் வெளிநாட்டிற்கு செல்வீர்கள். 4ம் பாதத்தினருக்கு ஒரு பக்கம் தகுதி குறைந்தவர்களால் அவமானத்திற்கு ஆளாவதுடன் பிள்ளைகளால் சங்கடத்திற்கு ஆளாவர். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னை ஏற்படும். கணவன், மனைவி உறவிலும் ஒற்றுமை இல்லாமல் போகும். ஆனாலும் மனதில் தெளிவு உண்டாகும். தொழிலில் முயற்சியும், ஆர்வமும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும், தடைபட்ட முயற்சி வெற்றியாகும்.
கேது இதுவரை 1,2,3ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவாக சஞ்சரித்து, குடும்பத்தில் சங்கடம், வீண் பிரச்னை, எதிர்பாராத விபத்து, ஆரோக்கிய குறைபாடு, இனம் புரியாத அச்சம், தொழில் பாதிப்பு, உறவினரிடம் மனக்கசப்பு என்று வழங்கி வந்தார். 4ம் பாதத்தினருக்கு விரய கேதுவாக சஞ்சரித்து குழப்பம், வீண்செலவு, பணத்தட்டுப்பாடு, தொழிலில் பின்னடைவு, வழக்கு, கடன், நஷ்டம் என பாதக பலன்களை வழங்கினார். இனி 1,2,3ம் பாதத்தினருக்கு விரய கேதுவாக சஞ்சரித்து வீண் செலவை உண்டாக்குவார், நிம்மதியற்ற நிலையை உருவாக்குவார். சங்கடங்களை அதிகரிப்பார். 4ம் பாதத்தினருக்கு லாப கேதுவாகி, அதிர்ஷ்டங்களை அள்ளித் தருவார். தொழில், வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். மனதில் துணிச்சல் உடலில் ஆரோக்கியம் உண்டாகும்.
சனி சஞ்சாரம்:
மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளிலிருந்து அக்.23, 2023 வரை 1,2,3 ம் பாதத்தினருக்கு 4ம் இடத்தில் வக்கிர கதியாக சஞ்சரிப்பவர் அதன்பின் வக்கிர நிவர்த்தியாகி டிச.20, 2023 முதல் 5ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 4ம் பாதத்தினருக்கு அக்.23, 2023 வரை 3ம் இடத்தில் வக்கிர கதியாக சஞ்சரிப்பவர் அதன்பின் வக்கிர நிவர்த்தி ஆவதுடன் டிச.20, 2023 முதல் 4ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார் என்பதால் இக்காலத்தில் இடையூறு, குடும்பத்தில் பிரச்னை, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, தொழிலில் தடை, வீண் விரோதம், ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை, தாயின் உடல்நிலை பாதிப்பு உண்டாகும்.
குரு சஞ்சாரம்:
ஏப்.30, 2024 வரை 1,2,3ம் பாதத்தினருக்கு 7ம் இடத்திலும், 4ம் பாதத்தினருக்கு 6ம் இடத்திலும் குரு சஞ்சாரம் செய்வதால், 1,2,3 பாதத்தினருக்கு யோகமான பலன்களையும், 4ம் பாதத்தினருக்கு சங்கடமான பலன்களையும் வழங்குவார். என்றாலும் அக்.8, 2023 க்கும் டிச.20,2023 க்குமான காலத்தில் அவர் வக்கிரம் அடைவதால் பலன்கள் மாறுபடும். மே1, 2024 முதல் 1,2,3 ம் பாதத்தினருக்கு அஷ்டம குருவாக சங்கடமான பலன்களையும், 4ம் பாதத்தினருக்கு சப்தம குருவாக யோக பலன்களை வழங்குவார்.
பொதுப்பலன்:
1,2,3ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவும், ஏப்.30, 2024 வரை குருவும் யோகப் பலன்களை வழங்குவதால் அதிர்ஷ்ட வாய்ப்பு அதிகரிக்கும். வருமானம் கூடும், வழக்குகள் சாதகமாகும். ஆரோக்கியம் மேம்படும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். 4ம் பாதத்தினருக்கு லாப ஸ்தான கேதுவும், மே1, 2024 முதல் 7 ம்இட குருவும் யோகப் பலன்களை வழங்குவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் லாபம் அதிகரிக்கும்.
தொழில்: விவசாயம், பண்ணைகள், ஆன்மிகவாதிகள், ஞானிகள், ஆலோசகர்கள், ஜோதிடர்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பதிப்பகங்கள், ரியல் எஸ்டேட், சினிமா, டி.வி, கெமிக்கல், ஓட்டல், கட்டுமான நிறுவனம், ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு பணியாளர்களின் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரின் திறமை வெளிப்படும். முதலாளியின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கும்.
பெண்கள்: தனித்திறமை வெளிப்படும். ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும், திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குடும்ப பிரச்னை தீரும். உடல் நிலை பாதிப்பு விலகும். பொருளாதாரம் உயரும். பொன் பொருள் சேரும்.
கல்வி: படிப்பில் கவனம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு செயல்படுவீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண் பெற்று மேற்கல்விக்கு செல்வீர்கள்.
உடல்நிலை: உடலில் இருந்த சங்கடம் தீரும். நீண்டநாள் நோய் கூட மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் விலகும். ஆரோக்கியம் மேம்படும். உடலிலும் மனதிலும் வலிமை உண்டாகும்.
குடும்பம்: வாழ்வில் வசந்தம் வந்தது போல் தோன்றும். நன்மை அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். சிலர் வீடு கட்டி குடியேறுவர். பொன் பொருள் சேரும். திருமண வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் உண்டாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.
பரிகாரம்: ஜென்ம நட்சத்திரத்தன்று ஆலங்குடி குருபகவானை வழிபடுங்கள். ராகு காலத்தில் பிரத்யங்கிரா தேவிக்கு அர்ச்சனை செய்ய நன்மை அதிகரிக்கும்.
அனுஷம்: லாபம் அதிகரிக்கும்
கடந்த ஒன்றரை ஆண்டாக ராகு 6ம் இடமான மேஷ ராசியில் சஞ்சரித்து உங்கள் முயற்சியில் முன்னேற்றம், வெற்றி, ஆரோக்கியத்தில் மேன்மை, வழக்கில் நல்ல முடிவு, தொழிலில் லாபம், வேலை வாய்ப்பும் வழங்கினார். இப்போது உங்கள் ராசிக்கு 5ம் இடமான மீனத்திற்கு அக்.8, 2023 அன்று செல்கிறார் ராகு. 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் போது மனநிலையில் தெளிவை உண்டாக்குவார். தொழிலில் ஆர்வத்தை அதிகரிப்பார். பணியாளர்களுக்கு மேலதிகாரி அல்லது முதலாளியால் அனுகூலம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். தடைபட்ட முயற்சி கைகூடி வரும். ஆனால் வீணான கவலை, அலைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.
கேது உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் சஞ்சரித்து உங்களை சங்கடப்படுத்தி வந்திருப்பார். குடும்பத்தில் பணத் தட்டுப்பாடு, வீண் மனஸ்தாபம் அதிகரிக்கும். செலவு கட்டுக்கடங்காமல் போய் கையில் இருக்கும் பொருட்களை விற்று சமாளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். தொழிலிலும் எதிர்பார்த்த லாபம் இல்லாமல் மனதில் சங்கடம் மேலோங்கும். உடலில் ஏதாவது ஒரு நோய் வந்து மனதை வேதனைப் படுத்தி இருக்கும். உறவினர்களும் உங்களுக்கு எதிராக திரும்பி இருப்பார்கள். இந்நிலையில் அக்.8, 2023 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அசாத்தியமான துணிச்சல் உண்டாகும். குழப்பம் விலகி தெளிவடைவீர்கள். இருப்பிடத்தில் மாற்றம் செய்வீர்கள். சிலர் வசதியான இடத்திற்கு குடி போவர். வாகனம் வாங்க வசதி ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் சரளமான போக்கு ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
சனி சஞ்சாரம்
5ம் இடத்தில் ராகுவும், 11ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் இருந்து அக்.23, 2023 வரை 3ம் இடத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பவர் அதன்பின் வக்கிர நிவர்த்தியாவதுடன் டிச.20, 2023 முதல் 4ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரிக்கிறார் என்பதால், தேவையற்ற இடையூறு, அலைக்கழிப்பு, வீண் விரோதம், ஊரை விட்டுச் செல்லும் நிலை, வீடு, வாகனத்தால் தொல்லை, உடல் நலிவு என நெருக்கடிகள் தோன்றும்.
குரு சஞ்சாரம்
ஏப்.30,2024 வரை ராசிக்கு 6ம் இடத்தில் குரு சஞ்சாரம் செய்வது சாதகமான நிலை இல்லை என்றாலும், அக்.8, 2023 க்கும் டிச.20, 2023 க்குமான காலத்தில் அவர் வக்கிரம் அடைவதும், மே 1, 2024 முதல் 7ம் இடமான சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் நன்மை அதிகரிக்கும், உங்கள் தகுதி உயரும். திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும், குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வீடு வாகனம் சொத்து வசதிகள் என அவரவர் யோகத்தை பொறுத்து அதிகரிக்கும்.
பொதுப்பலன்
நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு நன்மை அதிகரிப்பதுடன் எதிர்பார்த்தவற்றை அடையும் நிலை உண்டாகும். செலவு குறைந்து வருமானம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலை அமையும். திருமணம் நடந்தேறும், சொத்து சேர்க்கை உண்டாகும். குழந்தை பாக்கியம் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு கட்டி குடியேறும் அதிர்ஷ்ட நிலை ஏற்படும்.
தொழில்
போட்டியாளர்கள் விலகிச் செல்வர். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட், ஆன்லைன் வியாபாரம், விவசாயம், பத்திரிகை, பதிப்பகம், கமிஷன் வியாபாரம், தங்கம், வெள்ளி, நகை வியாபாரம் லாபமடையும். மே 1, 2024 க்குப்பின் சிலருக்கு தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.
பணியாளர்கள்
கடந்த கால நெருக்கடிகள் விலகும், புதிய பாதை தெரியும், அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உண்டான சிக்கல்கள் விலகும், விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும், பதவி உயர்வு ஏற்படும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோரின் நிலை உயரும், வேலை பளு குறையும், புதிய பொறுப்பு வந்து சேரும், சம்பளம் அதிகரிக்கும். 1.5.2024 முதல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பெண்கள்
பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். பூர்வீக சொத்து வந்து சேரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமண வாய்ப்பு உண்டாகும். பொன் பொருள் சேரும். நவீன வசதிகள் கூடும். அலுவலகத்தில் பணிபுரிவோரின் நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். மே1, 2024 முதல் வாழ்வில் சந்தோஷம், எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
கல்வி
டிச.20, 2023 முதல் 4ம் இடத்தில் சனி சஞ்சரிப்பது படிப்பில் சங்கடத்தை உண்டாக்கும் என்றாலும் மே1, 2024 முதல் குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் தடைகள் விலகும், கல்வியில் அக்கறை ஏற்படும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவதுடன் உயர் கல்விக்காக விரும்பிய கல்லுாரியில் சேர்வீர்கள்.
உடல்நிலை: உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். அர்த்தாஷ்டமச் சனி பாதிப்பை கேதுவின் பின்னோக்கிய பார்வை விலக்கும். நீண்டகாலமாக நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். மே1, 2024 முதல் குருவின் பார்வை உங்களுக்கு உண்டாவதால் ஆரோக்கியம் மேம்படும்.
குடும்பம்
லாப ஸ்தான கேதுவாலும், மே 1, 2024 முதல் சப்தம ஸ்தான குருவாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். திருமண வயதினருக்கு திருமணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும், பிள்ளைகள் கல்வி, வேலையில் முன்னேற்றம் அடைவர். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். இடம், வீடு, வாகன கனவு நிறைவேறும்.
பரிகாரம்
ஐயப்பன், ராகு, சனிபகவானை வழிபட நன்மை அதிகரிக்கும்.
கேட்டை: விருப்பம் நிறைவேறும்
ஒன்றரை ஆண்டாக 6ம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நன்மைகளை வழங்கி வந்தார் ராகு. உடல் ஆரோக்கியம், காரியங்களில் வெற்றிகளை வழங்கியதுடன் எதிரிகளையும் பலமிழக்க வைத்து அதனால் உங்கள் செயல்கள் லாபமடைய வழிகாட்டி வந்தார். இப்போது 5ம் இடமான மீன ராசிக்கு வருவதால் முன்புபோல் நன்மை தர முடியாமல் போகும். குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய கவலை ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரத்தில் வம்பு, வழக்கு உருவாகும். அரசாங்க விவகாரங்களில் எதிர்பார்க்கும் பலன்கள் எதிர்மறையாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும் என்றாலும், அவருடைய பின்னோக்கிய 7 ம் பார்வை உங்கள் நட்சத்திர நாதனின் வீடும், லாப ஸ்தானமுமான கன்னி ராசியில் பதிவதால் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். எதிர்பாலினரால் ஆதாயம் ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கேது கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் வெற்றியாகும். வழக்கமான வருமானமும் அதிகரிக்கும். ஆதாயம் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். பொருளாதாரம் உயரும். கடல் கடந்து வேலைக்கு செல்ல நினைத்தவர்களின் கனவு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு உண்டான யோகமும் நன்மையும் இப்போதும் தொடரும்.
சனி சஞ்சாரம்: உங்கள் புத்தி ஸ்தானத்தில் ராகுவும், லாபஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் அக்.23, 2023 வரை 3ம் இடத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பவர், அதன்பின் வக்கிர நிவர்த்தியடைந்து 2 மாதத்திற்கு யோகப் பலனை வழங்கி, டிச.20, 2023 முதல் 4ம் இடமான சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டமச்சனியாக சஞ்சரிக்கிறார் என்பதால் செயலில் சிரமங்கள் உண்டாகும். பொறுப்பு அதிகரிக்கும். முயற்சியில் தடை, தாமதம் ஏற்படும். உடல்நலக்குறைவு தோன்றும். குடும்பத்தில் போராட்டமான நிலை உண்டாகும், இக்காலத்தில் அனைத்திலும் எச்சரிக்கை தேவை.
குரு சஞ்சாரம்: ஏப்.30, 2024 வரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் குரு சஞ்சரிப்பது சாதகமான நிலை இல்லை என்றாலும் அக்.8, 2023 க்கும் டிச.20, 2023 க்குமான காலத்தில் அவர் வக்ரமடைவதும், மே 1, 2024 முதல் 7ம் இடமான நட்பு, களத்திர ஸ்தானத்தில் சப்தம குருவாக சஞ்சரித்து உங்களுக்கு லாபம், யோகம், தைரியம் தன்னம்பிக்கையை அளித்து சமூகத்தில் அந்தஸ்து, செல்வாக்கை வழங்கிட உள்ளார் குரு. குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தையை உங்கள் ராசியின் மீது குருவின் பார்வை பதியும் இக்காலத்தில் உணர்வீர்கள். வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, திருமணம், குழந்தை பாக்கியம், சமூக அந்தஸ்து என்பதையெல்லாம் இப்போது உண்டாக்குவார் குரு.
பொதுப்பலன்: முயற்சியும் அதை செயலாக்குவதில் உள்ள வழிகளையும் தெரிந்து வாழ்வில் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு இக்காலத்தில் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். ஒரு சிலருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் என்பதும் இக்காலத்தில் நடக்கும். வியாபாரம் முன்னேற்றமடையும், லாபம் அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கையுடன் வெளி வட்டாரத்தில் உங்கள் அந்தஸ்தும் உயரும்.
தொழில்: தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடுதல் லாபத்தை உண்டாக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் நிலை ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பணியாளர்கள்: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடத்திற்கு இட மாற்றம் உண்டாகும். உடன் பணி புரிபவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் திறன் ஏற்படும்.
பெண்கள்
வாழ்க்கைத் துணையின் ஆதரவும், அன்பும் அதிகரிக்கும். சுயதொழில் புரிவோருக்கு லாபம் அதிகரிக்கும். அரசு பணியாளர்களுக்கு செல்வாக்கு ஏற்படும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திருமண வயதினருக்கு தகுதியான வாழ்க்கை அமையும். கணவனை இழந்த, விவாகரத்து பெற்றவர்களுக்கு மறுமணம் நடைபெறும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பொன் பொருள் சேரும்.
கல்வி: வித்யாகாரகனை நட்சத்திர நாதனாக கொண்டிருந்தாலும், புத்தி ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் கல்வியில் கவனம் தேவை. ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்றால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். 2024 - 25 கல்வியாண்டில் உங்கள் திறன் மேம்படும். எதிர்பார்த்த கல்வி, கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: உங்கள் நட்சத்திர நாதனே ஆயுள் ஸ்தானாதிபதியும் என்பதால், ஆயுள் காரகன் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்தாலும் பெருமளவில் பாதிப்பு ஏற்படாது. 3ம் இடத்திற்கு ராகு பார்வை உண்டாவதும், 11ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மனம், உடலை உற்சாகத்துடன் செயல்பட வைக்கும். இருப்பினும் ஆயுள்காரகனின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. பரம்பரை நோய்களும், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படலாம்.
குடும்பம்:
மேஷ குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான தனுசுவில் பதிவதாலும், அதன்பின் ரிஷப குருவின் பார்வை ஜென்ம ராசியில் பதிவதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பணவரவு அதிகரிப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு புதிய இடம் வாங்கி வீடு கட்டி குடி போகும் எண்ணம் நிறைவேறும். வாகனம் வசதி ஏற்படும்.
பரிகாரம்: திருப்பாம்புரம் ராகு, கேதுவை வழிபட்டு திருநள்ளாறு சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தானம் செய்யுங்கள்.