பதிவு செய்த நாள்
03
அக்
2023
04:10
அவிட்டம்: முயற்சி வெற்றியாகும்
உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் பகைவர்கள் என்றாலும் அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப ஸ்தான பலன்களை வழங்குவர். அக்.8, 2023 முதல் அவிட்டம் முதல் இரண்டு பாதத்தினருக்கு ராகு 3ம் இடத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு 2ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். கேது பகவான் அவிட்டம் முதல் இரண்டு பாதத்தினருக்கு 9ம் இடத்திலும் 3,4 ம் பாதத்தினருக்கு 8 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் முதல் இரண்டு பாதத்தினருக்கு யோக பலன் உண்டாகும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். இழந்த பொருள், சொத்து வந்து சேரும். நீண்ட காலமாக தடைபட்ட செயல் நிறைவேறும். தொழிலில் நிம்மதி உண்டாகும். உழைப்பிற்கேற்ற வரவு ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். எதிர்பாராத வகையில் உறவினர் வகையில் சிலருக்கு சொத்து பணம் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் நன்மை தரும். 3,4 ம் பாதத்தினருக்கு 2 ம் இட ராகுவாலும், 8 ம் இட கேதுவாலும் இனம் புரியாத பயம் ஏற்படும். மனதில் மிகப்பெரிய திட்டங்கள் தோன்றும். ஆனால் காரியங்கள் எதுவும் நடக்காது. தொழில் மந்த நிலை இருக்கும். வருமானத்தில் நிறைவின்மை ஏற்படும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். எங்கு போனாலும் ஏதாவதொரு பிரச்னை வந்து நிற்கும். நீங்கள் நினைத்தபடி எதையும் சாதித்துக் கொள்ள முடியாத நிலை இருக்கும். சொந்த ஊரை விட்டு வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். அரசுப் பணியாளர்களுக்கு நெருக்கடியான காலமாக இருக்கும்.
சனி பெயர்ச்சி:ராகு கேது பெயர்ச்சி நடைபெறும் நாளில், சனி பகவான் மகரத்தில் வக்கிர நிலையிலும், 23.10.2023 அன்று வக்கிர நிவர்த்தியாகி ஆட்சியாகவும் சஞ்சரிப்பவர் 20.12.2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரித்து அவிட்டம் முதல் இரண்டு பாதத்தினருக்கு ஏழரைச் சனியின் பாத சனியாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாகவும் சஞ்சரிக்கிறார். சனி பகவான் உங்கள் ராசி நாதன் என்றாலும் கர்ம வினைகளின் பலன்களை அனுபவிக்க வைத்திடக் கூடியவர் என்பதால், எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். குடும்பத்திலும் தொழிலிலும் நிம்மதியற்ற நிலை உண்டாகும். நன்றாக பழகியவர்களும் உங்களை விட்டு பிரிந்து செல்லக்கூடிய நிலை ஏற்படும். பொருளாதார நிலையிலும் சங்கடங்கள் தோன்றும். பணத் தட்டுப்பாட்டின் காரணமாக செயல்களில் முடக்கம் ஏற்படும்.
குரு சஞ்சாரம்:
மேஷ ராசியில் ஏப்.30, 2024 வரை சஞ்சரிக்கும் குரு அவிட்டம் முதல் இரண்டு பாதத்தினருக்கு 4ம் இடத்திலும் 3, 4 ம் பாதத்தினருக்கு 3ம் இடத்திலும் சஞ்சரிப்பதால், முதல் இரண்டு பாதத்தினருக்கும் ஆசைகளை அதிகரித்து சஞ்சலத்தை ஏற்படுத்துவார். புதிய வாகனம், வீட்டை நவீன மயமாக்க வைப்பார். 3, 4 ம் பாதத்தினருக்கு சங்கடங்களை அதிகரிப்பார். வேலையில் நிம்மதி குறையும். குழப்பத்தை அதிகரிப்பார். சுற்றி இருப்பவர்களை ஒவ்வொருவராக விலக்கி வைப்பார். வீண் பழிகளுக்கு சிலரை ஆளாக்குவார். எந்தவொரு வேலையையும் முடிக்க முடியாமல் திணற வைப்பார் என்றாலும் அக்.10, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்ரமடைவதால் இப்பலன்களில் மாற்றம் உண்டாகும். மே1, 2024 முதல் அவிட்டம் முதல் இரண்டு பாதத்தினருக்கு 5ம் இடத்திலும், 3,4, ம் பாதத்தினருக்கு 4 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால், முதல் இரண்டு பாதத்தினருக்கு முன்னேற்றம் உண்டாகும். நினைத்ததை எல்லாம் சாதிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய முயற்சி வெற்றியாகும். 3,4 ம் பாதத்தினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மனம் அலைபாயும். வருமானத்தை விட சந்தோஷத்தை எதிர்பார்த்து செயல்படும் நிலை உண்டாகும். அதன் காரணமாக வருமானத்தில் தடைகள், தொழிலில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.
பொதுப்பலன்:
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது ஏழரை சனியின் காலம் என்பதால் நெருக்கடி ஒரு பக்கம் இருக்கும். அதே நேரத்தில் முதல் இரண்டு பாதத்தினருக்கு 3 ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதாலும், மே1, 2024 முதல் 5ம் இடத்தில் குரு சஞ்சரிக்க இருப்பதாலும் இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். வருமானம் அதிகரிக்கும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு அனைத்து செயல்கள், முயற்சிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவதுடன் உடல்நலனிலும் கவனம் தேவை.
தொழில்: முதல் இரண்டு பாதத்தினருக்கு லாப நிலை உண்டாகும். புதிய முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழிலில் கவனத்தை செலுத்துவது நல்லது. போட்டிகள் அதிகரித்து நெருக்கடி உண்டாகும் என்றாலும் மே1, 2024 முதல் தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். நெருக்கடி நீங்கும்.
பணியாளர்கள்: முதல் இரண்டு பாதத்தினருக்கு பணியில் முன்னேற்றம் காண்பர். புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு இது ஆதாய காலமாகும். 3,4 ம் பாதத்தினருக்கு கவனமுடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் வேலையை இழக்க வேண்டி வரலாம். மே1, 2024 முதல் சங்கடமான நிலை மாறும். உங்கள் செல்வாக்கு உயரும்.
பெண்கள்: முதல் இரண்டு பாதத்தினருக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். ஆதாயம் அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் ஆசை நிறைவேறும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். 3,4 ம் பாதத்தினருக்கு கவனமுடன் செயல்படுவதுடன் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவுகளிடம் கவனமாக இருப்பதுடன் பேச்சில் நிதானம் தேவை. உடல் நலனில் கூடுதல் கவனம் வேண்டும். சுய தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகளை ஏப்.30, 2024 வரை தவிர்ப்பது நல்லது.
கல்வி: ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு செயல்படுவது அவசியமாகும். சிந்தனையை வேறு எங்கும் சிதற விடாமல் கல்வியில் முழு கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியும். விரும்பிய பாடப்பிரில் சேர முடியும்.
உடல்நிலை: ஏழரை சனியின் காலம் என்பதால் உடல் நிலையில் ஏதேனும் சிரமம் இருந்து கொண்டே இருக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு 8 ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் பரம்பரை நோய், தொற்று வியாதியால் பாதிப்பு அதிகரிக்கும். இக்காலத்தில் உடல் நலனில் அக்கறை தேவை. சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.
குடும்பம்: பொதுவாக முதல் இரண்டு பாதத்தினருக்கு முன்னேற்றம் இருக்கும். நெருக்கடி விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து சேர்க்கை உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு இந்நிலையிலிருந்து வேறுபடும். சங்கடம் அதிகரிக்கும் என்றாலும் சுய ஜாதகம் பலம் பெற்றிருந்தால், திசா புத்தி நன்றாக இருந்தால் நற்பலன் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சங்கடங்கள் விலகும்.
பரிகாரம்:
திருநள்ளாறு நள தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபட நெருக்கடி நீங்கும்.
சதயம்: குடும்பத்தில் குழப்பம்
உங்கள் ராசிக்கு 2ம் இடமான மீனத்திற்கு அக்.8, 2023 அன்று செல்கிறார் ராகு. குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் மந்தநிலை, சகோதரர் தொல்லை, பொருள் இழப்பு, வீண் அலைச்சல் உண்டாகும். சிலருக்கு தொழிலை மாற்றும் நிலை உண்டாகும். எதிர்மறையான பலன்களே ஏற்படும். நினைத்தது கூடி வராமல் சங்கடத்தை உண்டாக்கும். பொருளாதாரம் தடுமாறும்.
கேது அக்.8, 2023 முதல் உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உடல் நலனில் பாதிப்பு, செயல்களில் தடை, வீண்சங்கடம், எதிர்பாராத விபத்து ஏற்படலாம். இக்காலத்தில் மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பக்தியில் மனதை ஈடுபடுத்துவது நல்லது.
சனி சஞ்சாரம்: சனி மகரத்தில் வக்கிர நிலையிலும், அக்.23, 2023 அன்று வக்கிர நிவர்த்தியாகி அங்கே ஆட்சியாகவும் சஞ்சரிப்பார். டிச.20, 2023 முதல் உங்கள் ராசியில் ஜென்ம சனியாக சஞ்சரித்து பலன் தர உள்ளார். சனி ராசிநாதன் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய ஸ்தான பலன்களை வழங்குவார் என்பதால், ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார். பணத் தட்டுப்பாட்டை அதிகமாக்குவார். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோரை தண்டனைக்கு ஆளாக்குவார். குடும்பத்தினருக்கு எதிர்பாராத சங்கடங்களை ஏற்படுத்துவார்.
குரு சஞ்சாரம்: ராசிக்கு 3ம் இடமான மேஷத்தில் ஏப்.30, 2024 வரை சஞ்சரிக்கும் குரு சோதனைகளை அதிகரிப்பார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் இல்லாமல் போகும் வேலையிலும் சங்கடம் ஏற்படும். வருமானத்தில் தடை உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும் என்றாலும் அக்.10.2023 முதல் டிச.20, 2023 வரை வக்ரம் அடைவதால் இப்பலன்களில் மாற்றம் உண்டாகும். மே1, 2024 முதல் 4ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பவர் அங்கும் எதிர்மறை பலன்களைத் தருவார். ஆசைகளை அதிகரிப்பார். மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துவார். தவறான வழியில் செல்ல வைப்பார். வீடு வாகனம் போன்றவற்றில் திருப்தியான நிலையை உண்டாக்குவார். அவரது பார்வையால் சங்கடங்களை எல்லாம் விலக்கி வைப்பார்.
பொதுப்பலன்: ஏழரை சனி, 2 ல் ராகு, 8 ல் கேது என நெருக்கடி உண்டானாலும், ஏப்.30, 2024 வரை குருவின் பார்வைகள் 7,9,11 ம் இடங்களில் பதிவதால் நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். ஆதாயம் அதிகரிக்கும். நண்பர் உதவியால் எண்ணம் நிறைவேறும். மே1, 2024 முதல் குருவின் பார்வைகள் 8,10,12 ம் இடங்களில் பதிவதால் உடல்நிலை பாதிப்பு விலகும். அச்சம் நீங்கும். தொழிலில் தடைகள் விலகும். வருவாய் அதிகரிக்கும். நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.
தொழில்: தொழிலில் சில தடைகள் உண்டாகும். வரவேண்டிய பணமும் இழுபறியாகும். ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைக்க வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை தவிர்க்கவும். மே1, 2024 முதல் தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் நிலைமை சீராகும். வருமானம் அதிகரிக்கும். சங்கடம் நீங்கும்.
பணியாளர்கள்: வேலைப்பளு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட நிலை உருவாகும். சகஊழியர்களிடம் எந்தவித தகவல் பரிமாற்றத்தையும் செய்ய வேண்டாம். மே1, 2024 முதல் குருவின் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கு உண்டாவதால் வேலையில் இருந்த சங்கடங்கள் விலகும். அதிகாரியின் ஒத்துழைப்பு உண்டாகும். முதலாளியின் ஆதரவு அதிகரிக்கும்.
பெண்கள்:
குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும். ஜென்ம சனியால் உடல் நிலையில் பாதிப்புகள் தோன்றும். வயிறு, கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். மாங்கல்ய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் கணவரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. மே1, 2024 முதல் குரு பார்வை மாங்கல்ய ஸ்தானத்தில் பதிவதால் பயம் விலகும். பணியிடத்தில் வேலையின் காரணமாக சங்கடங்கள் தோன்றும். அதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாக நேரும். சுயதொழில் புரிவோர் நெருக்கடிகளை சந்தித்தாலும் மே1, 2024 க்குப் பிறகு நன்மையான நிலை ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.
கல்வி
படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டிய காலம் இது. மனதில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுத்தால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் போகும். ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்றால் தேர்வில் வெற்றி உண்டாகும். மேற்படிப்பு கனவு நனவாகும்.
உடல்நிலை
பரம்பரை, தொற்று நோய்களும் இக்காலத்தில் சங்கடத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத விபத்து, விஷ ஜந்துக்களால் பிரச்னை ஏற்படலாம். ஜென்ம சனி, 8 ல் கேது என்பதால் உடல்நிலையில் ஏதேனும் சங்கடம் இருந்து கொண்டே இருக்கும்.
குடும்பம்
குடும்ப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் இருந்த நெருக்கத்தில் விரிசல் உண்டாகும். ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு வரும். சிலர் இருக்கும் இடத்தை விட்டு வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையால் சில சங்கடங்களை சந்திக்கலாம்.
பரிகாரம் சரபேஸ்வரர் வழிபாட்டுடன் சனீஸ்வரரை சனிக்கிழமை சனி ஹோரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வழிபட்டு வர சங்கடங்கள் குறையும்.
பூரட்டாதி: உங்கள் நட்சத்திர நாதனான குருபகவானுக்கு ராகு, கேது இருவரும் பகையற்றவர்கள் என்பதால் அதிகமான சங்கடங்களை ஏற்படுத்த மாட்டார்கள். அக்.8, 2023 முதல் பூரட்டாதி முதல் 3 பாதத்தினருக்கு ராகு குடும்ப ஸ்தானமான 2 லும், 4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிக்கிறார். கேது பூரட்டாதி முதல் 3 பாதத்தினருக்கு 8 ம் இடமான ஆயுள் ஸ்தானத்திலும், 4 ம் பாதத்தினருக்கு 7 ம் இடமான களத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் முதல் 3 பாதத்தினருக்கு பண விவகாரங்களில் இழுபறி, நெருக்கடி, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, நிம்மதியற்ற நிலையை ராகு உண்டாக்குவார். கேது ஆரோக்கியத்தில் சங்கடம். உடல் நிலையில் அச்சம், தவறான நட்பினை ஏற்படுத்தி சங்கடத்தை உண்டாக்குவார். 4 ம் பாதத்தினருக்கு ராகு உடல் நலக்குறைவு, குழப்பம், உடல் சோர்வை உண்டாக்குவார். கேது நண்பர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு, கூட்டுத் தொழிலில் சங்கடம், வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை, பிரிவினை உண்டாக்குவார். தவறான நபர்களின் தொடர்பால் சோதனைகளை ஏற்படுத்துவார்.
சனி சஞ்சாரம்:
சனி மகரத்தில் வக்ர நிலையிலும், அக்.23, 2023 அன்று வக்ர நிவர்த்தியாகி ஆட்சியாகவும் சஞ்சரிப்பார். டிச.20, 2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரித்து பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் 3 பாதத்தினருக்கு ஜென்ம சனியாகவும், 4ம் பாதத்தினருக்கு விரய சனியாகவும் சஞ்சரிக்கிறார். எதிர்பாராத பிரச்னைகள் உருவாகும். நிம்மதியற்ற நிலை ஏற்படும். நன்றாக பழகியவர் கூட விலகிச் செல்வர். வாழ்க்கைத் துணையுடன் விரிசல், போராட்டம் என்ற நிலை தோன்றும். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். சனியின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
குரு சஞ்சாரம்
ஏப்.30, 2024 வரை மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குரு பூரட்டாதி முதல் 3 பாதத்தினருக்கு 3 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சோதனைகளை அதிகரிப்பார், சங்கடம், நெருக்கடி, பிரச்னை ஒவ்வொன்றாக உருவெடுக்கும். வழக்கமான பணியில் இழுபறி நிலை தோன்றும். 4 ம் பாதத்தினருக்கு பணவரவு உண்டாகும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலை உருவாகும். பொன் பொருள் சேரும். அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்ரம் அடைவதால் இப்பலன்களில் மாற்றம் உண்டாகும். மே1, 2024 முதல் பூரட்டாதி முதல் 3 பாதத்தினருக்கு 4ம் இடத்திலும் 4ம் பாதத்தினருக்கு 3ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த இருஇடங்களும் குரு நன்மை தரும் இடங்கள் இல்லை. அவரது பார்வைகள் நன்மை தரும்.
பொதுப்பலன்
இது ஏழரை சனி காலம் என்பதால் நெருக்கடி இருக்கும். ராகு, கேதுவாலும் நற்பலன் வழங்க முடியாது. குருவின் பார்வை படும் இடங்களால் நன்மை உண்டாகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். ஆயுள் மீதான அச்சம் போகும். தொழில் வளர்ச்சி ஏற்படும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சொத்து விவகாரத்தில் இருந்த சங்கடம் தீரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். கோயில் தரிசனம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
தொழில் முதல் 3 பாதத்தினருக்கு பிரச்னைகளை சந்திப்பர். விற்பனையில் மந்தம், பண வரவில் தடை என நெருக்கடிக்கு ஆளாவர். 4 ம் பாதத்தினருக்கு மே1,2024 வரை லாபமான நிலையையும் அதன்பின் வரவுகளில் தடையையும் சந்திக்க நேரிடும்.
பணியாளர்கள்
செய்து வரும் தொழிலில் சில நெருக்கடிகளை சந்தித்தாலும் விரும்பிய இடத்திற்கு மாற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு ஏற்படும். வேலையில் அதிகபட்ச கவனம் தேவையாக இருக்கும். ஊதிய உயர்வை எதிர்பார்த்தவர்களுக்கு திருப்தியான நிலை ஏற்படும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 1.5.2024 வரை எண்ணங்கள் பூர்த்தியாகும் பணி புரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
பெண்கள்
முதல் 3 பாதத்தினருக்கு குடும்ப உறவுகளிடம் விரிசல் ஏற்படும். உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். கணவரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு கூடும். ஆனால் செல்வாக்கு அதிகரிக்கும். மறைமுகத் தொல்லை விலகும். 4 ம் பாதத்தினருக்கு நட்பு வட்டத்தில் சில சங்கடம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துப் போவது நல்லது. பொன் பொருள் சேரும். சிலர் பணி விஷயமாக வெளிநாடு செல்வர்.
கல்வி: இக்காலத்தில் முதல் 3 பாதத்தினருக்கு முயற்சி ஒன்றே வெற்றிக்கு வழிவகுக்கும். ஆசிரியர் அறிவுரையை கேட்டு செயல்படுவதால் மதிப்பெண் அதிகரிக்கும். 4 ம் பாதத்தினருக்கு மே1, 2024 வரை யோகமான நிலை இருக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடப்பிரிவில் சேர முடியும்.
உடல்நிலை: எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். தொற்று நோய், பரம்பரை நோயால் பாதிப்பு தோன்றும். வாகனப் பயணத்திலும், பணிபுரியும் இடத்திலும் மிகவும் கவனம் தேவை. இல்லாவிட்டால் விபத்து, செலவு, பயம் என்ற நிலை ஏற்படலாம்.
குடும்பம்: உறவுகளிடம் பிரச்னை வராத வகையில் செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் வீண் சச்சரவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. புதிய சொத்து வாங்கும்போது வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது. குரு பார்வைகளால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் போகும். பிறந்த ஜாதகத்தில் திசா புத்தி நன்றாக இருந்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பரிகாரம்: சனிபகவானை வன்னி இலையால் அர்ச்சனை செய்யுங்கள்.