பதிவு செய்த நாள்
03
அக்
2023
04:10
பூரட்டாதி: உடல்நிலையில் கவனம் தேவை
உங்கள் நட்சத்திர நாதனான
குருபகவானுக்கு ராகு, கேது இருவரும் பகையற்றவர்கள் என்பதால் அதிகமான
சங்கடங்களை ஏற்படுத்த மாட்டார்கள். அக்.8, 2023 முதல் பூரட்டாதி முதல் 3
பாதத்தினருக்கு ராகு குடும்ப ஸ்தானமான 2 லும், 4 ம் பாதத்தினருக்கு ஜென்ம
ராசிக்குள்ளும் சஞ்சரிக்கிறார். கேது பூரட்டாதி முதல் 3 பாதத்தினருக்கு 8
ம் இடமான ஆயுள் ஸ்தானத்திலும், 4 ம் பாதத்தினருக்கு 7 ம் இடமான களத்திர
ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் முதல் 3 பாதத்தினருக்கு பண
விவகாரங்களில் இழுபறி, நெருக்கடி, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை,
நிம்மதியற்ற நிலையை ராகு உண்டாக்குவார். கேது ஆரோக்கியத்தில் சங்கடம். உடல்
நிலையில் அச்சம், தவறான நட்பினை ஏற்படுத்தி சங்கடத்தை உண்டாக்குவார். 4
ம் பாதத்தினருக்கு ராகு உடல் நலக்குறைவு, குழப்பம், உடல் சோர்வை
உண்டாக்குவார். கேது நண்பர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு, கூட்டுத்
தொழிலில் சங்கடம், வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை, பிரிவினை உண்டாக்குவார்.
தவறான நபர்களின் தொடர்பால் சோதனைகளை ஏற்படுத்துவார்.
சனி சஞ்சாரம்:
சனி
மகரத்தில் வக்ர நிலையிலும், அக்.23, 2023 அன்று வக்ர நிவர்த்தியாகி
ஆட்சியாகவும் சஞ்சரிப்பார். டிச.20, 2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரித்து
பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் 3 பாதத்தினருக்கு ஜென்ம சனியாகவும், 4ம்
பாதத்தினருக்கு விரய சனியாகவும் சஞ்சரிக்கிறார். எதிர்பாராத பிரச்னைகள்
உருவாகும். நிம்மதியற்ற நிலை ஏற்படும். நன்றாக பழகியவர் கூட விலகிச்
செல்வர். வாழ்க்கைத் துணையுடன் விரிசல், போராட்டம் என்ற நிலை தோன்றும்.
பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். சனியின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக
இருக்காது.
குரு சஞ்சாரம்
ஏப்.30, 2024 வரை மேஷ ராசியில்
சஞ்சரிக்கும் குரு பூரட்டாதி முதல் 3 பாதத்தினருக்கு 3 ம் இடத்தில்
சஞ்சரிப்பதால் சோதனைகளை அதிகரிப்பார், சங்கடம், நெருக்கடி, பிரச்னை
ஒவ்வொன்றாக உருவெடுக்கும். வழக்கமான பணியில் இழுபறி நிலை தோன்றும். 4 ம்
பாதத்தினருக்கு பணவரவு உண்டாகும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கொடுத்த
வாக்கை காப்பாற்றும் நிலை உருவாகும். பொன் பொருள் சேரும். அக்.8, 2023
முதல் டிச.20, 2023 வரை அவர் வக்ரம் அடைவதால் இப்பலன்களில் மாற்றம்
உண்டாகும். மே1, 2024 முதல் பூரட்டாதி முதல் 3 பாதத்தினருக்கு 4ம்
இடத்திலும் 4ம் பாதத்தினருக்கு 3ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த
இருஇடங்களும் குரு நன்மை தரும் இடங்கள் இல்லை. அவரது பார்வைகள் நன்மை
தரும்.
பொதுப்பலன்
இது ஏழரை சனி காலம் என்பதால் நெருக்கடி
இருக்கும். ராகு, கேதுவாலும் நற்பலன் வழங்க முடியாது. குருவின் பார்வை
படும் இடங்களால் நன்மை உண்டாகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும்.
ஆயுள் மீதான அச்சம் போகும். தொழில் வளர்ச்சி ஏற்படும். வரவேண்டிய பணம்
வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு திருமணம்
நடந்தேறும். சொத்து விவகாரத்தில் இருந்த சங்கடம் தீரும். புதிய சொத்து
சேர்க்கை உண்டாகும். கோயில் தரிசனம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
தொழில்
முதல் 3 பாதத்தினருக்கு பிரச்னைகளை சந்திப்பர். விற்பனையில் மந்தம், பண
வரவில் தடை என நெருக்கடிக்கு ஆளாவர். 4 ம் பாதத்தினருக்கு மே1,2024 வரை
லாபமான நிலையையும் அதன்பின் வரவுகளில் தடையையும் சந்திக்க நேரிடும்.
பணியாளர்கள்
செய்து
வரும் தொழிலில் சில நெருக்கடிகளை சந்தித்தாலும் விரும்பிய இடத்திற்கு
மாற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு ஏற்படும்.
வேலையில் அதிகபட்ச கவனம் தேவையாக இருக்கும். ஊதிய உயர்வை
எதிர்பார்த்தவர்களுக்கு திருப்தியான நிலை ஏற்படும். 4 ம் பாதத்தில்
பிறந்தவர்களுக்கு 1.5.2024 வரை எண்ணங்கள் பூர்த்தியாகும் பணி புரியும்
இடத்தில் செல்வாக்கு உயரும்.
பெண்கள்
முதல் 3 பாதத்தினருக்கு
குடும்ப உறவுகளிடம் விரிசல் ஏற்படும். உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும்.
கணவரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில்
பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு கூடும். ஆனால் செல்வாக்கு அதிகரிக்கும்.
மறைமுகத் தொல்லை விலகும். 4 ம் பாதத்தினருக்கு நட்பு வட்டத்தில் சில
சங்கடம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துப் போவது நல்லது. பொன்
பொருள் சேரும். சிலர் பணி விஷயமாக வெளிநாடு செல்வர்.
கல்வி
இக்காலத்தில்
முதல் 3 பாதத்தினருக்கு முயற்சி ஒன்றே வெற்றிக்கு வழிவகுக்கும். ஆசிரியர்
அறிவுரையை கேட்டு செயல்படுவதால் மதிப்பெண் அதிகரிக்கும். 4 ம்
பாதத்தினருக்கு மே1, 2024 வரை யோகமான நிலை இருக்கும். எதிர்பார்த்த
மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடப்பிரிவில் சேர முடியும்.
உடல்நிலை:
எதிர்பாராத
சங்கடங்கள் தோன்றும். தொற்று நோய், பரம்பரை நோயால் பாதிப்பு தோன்றும்.
வாகனப் பயணத்திலும், பணிபுரியும் இடத்திலும் மிகவும் கவனம் தேவை.
இல்லாவிட்டால் விபத்து, செலவு, பயம் என்ற நிலை ஏற்படலாம்.
குடும்பம்
உறவுகளிடம்
பிரச்னை வராத வகையில் செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் வீண்
சச்சரவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. புதிய சொத்து
வாங்கும்போது வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது. குரு பார்வைகளால்
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் போகும். பிறந்த ஜாதகத்தில் திசா
புத்தி நன்றாக இருந்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பரிகாரம்: சனிபகவானை வன்னி இலையால் அர்ச்சனை செய்யுங்கள்.
உத்திரட்டாதி: முயற்சியால் வெற்றி
உங்கள்
ராசிக்குள் ஜென்ம ராகுவாக அக்.8, 2023 முதல் சஞ்சரிக்கிறார். உடல்,
மனநிலையில் மாற்றங்களை உண்டாக்குவார். சிறிய நோய் என அலட்சியம் காட்டினால்
அதுவே பெரிய பாதிப்பாக மாறலாம். மருத்துவச் செலவு, அலைச்சல் அதிகரிக்கும்.
தொழிலில் தடுமாற்றம் உண்டாகும். வருமானக் குறைவு, தொழிலில் நஷ்டம்,
வியாபாரத்தில் சங்கடம், வீண் அலைச்சல், செயல்களில் நெருக்கடி என எதிர்மறை
பலன்களே அதிகமாகும். வீண்பழியும் சிலருக்கு ஏற்படும். செய்யாத
குற்றத்திற்கு அபராதம் செலுத்த நேரும். நிம்மதியின்மை, குழப்பம்
அதிகரிக்கும்.
கேது அக்.8, 2023 முதல் உங்கள் ராசிக்கு 7ம் இடமான
களத்திர நட்பு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், புதியதாக எதாவது ஒன்றை செய்யும்
எண்ணத்தை ஏற்படுத்துவார். உதவும் மனப்பான்மையால் பொருள் இழப்பு, நெருக்கடி
உண்டாகக் கூடும். உடல்நலத்தில் பெரிய அளவிற்கு பாதிப்பு இல்லாவிட்டாலும்
உஷ்ண வியாதி, விஷ ஜந்துவால் பாதிப்பு உண்டாகும். குடும்பத்தில் சங்கடம்
பிரச்னை, நோயின் தொல்லை இருந்து வரும். உறவினர் விரோதம், பணச்செலவு, அரசு
வகையில் நெருக்கடி உண்டாகும்.
சனி சஞ்சாரம்:
சனி பகவான்
மகரத்தில் வக்கிர நிலையிலும், அக்.23, 2023 அன்று வக்ர நிவர்த்தியாகி அங்கே
லாபசனியாக சஞ்சரித்து லாபம், நன்மையை அதிகரிப்பார். டிச.20, 2023 முதல்
12ல் விரய சனியாக சஞ்சரித்து பலன் தர உள்ளார். ஏழரைச் சனி ஆரம்பம் என்பதால்
இக்காலத்தில் காரிய தேக்கம், வருமானத்தில் குறைவு உண்டாகும். பொருள், வீண்
அலைச்சல், மன உளைச்சல் ஏற்படும். கவுரவத்திற்கு பங்கம் உண்டாகும்.
குடும்பத்தில் சண்டை சச்சரவு, பிரிவு ஏற்படும். எதிரி இடையூறு, தீய
வழியில் செல்ல சந்தர்ப்பம் அமையும்.
குரு சஞ்சாரம்
உங்கள்
ராசிக்கு 2 ம் இடமான மேஷ ராசியில் 31.4.2024 வரை சஞ்சரிக்கும் குருபகவான்,
இக்காலத்தில் மண்ணைத் தொட்டாலும் பொன்னாக்கிட வைப்பார். உடல் நிலையில்
முன்னேற்றத்தை ஏற்படுத்துவார் மனதில் இருந்த குழப்பங்களை விலக்குவார்.
தொழிலில் லாபம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு
உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். எதிர்பாராத பண வரவு
உண்டாகும். இப்படி நிறையவே பலன்களை சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும்,
8.10.2023
முதல் 20.12.2023 வரை அவர் வக்கிரமடைவதால் இப்பலன்களில் மாற்றம்
உண்டாகும். அதன்பின் மீண்டும் நன்மையான பலன்கள் நடைபெற ஆரம்பிக்கும்.
1.5.2024
முதல் 3 ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பவர், முன்பிருந்த சாதகமான நிலைகளில்
சோதனைகளை உண்டாக்குவார். தொழிலில் மந்தமான நிலையும் வேலையில் சங்கடங்களும்
உண்டாகும். வருமானத்தில் தடை ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
உங்களை பலமிக்கவர்களாக மாற்றியவர்கள் ஒவ்வொருவராக உங்களை விட்டு விலகிச்
செல்வார்கள். அதனால் உங்கள் பலம் குறைய ஆரம்பிக்கும். மனதில் இனம் புரியாத
பயம் தோன்றும். என்றாலும் அவருடைய பார்வைகளால் நெருக்கடி நீங்கும்.
பொதுப்பலன்
ஏழரை
சனி, ஜென்மத்தில் ராகு, 7 ல் கேது என்று நெருக்கடி அதிகரித்தாலும் ஏப்.30,
2024 வரை குருவின் சஞ்சாரம், பார்வை பாதுகாப்பு கவசம்போல் இருக்கும்.
எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறும் நிலை
உண்டாகும். விருப்பம் நிறைவேறும். உற்சாகம் அதிகரிக்கும். தொழிலில்
எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். மே1, 2024 முதல் குருவின் பார்வை 7, 9,
11ல் பதிவதால் திருமண வயதினருக்கு திருமணம் நடைபெறும், கூட்டுத் தொழிலில்
இருந்த சங்கடம் விலகும், ஆதாயம் அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை
உண்டாகும்.
தொழில் தொழிலில் சில தடைகள் ஏற்படும். புதிய தொழில்
தொடங்கும் முயற்சியில் தீர்க்கமாக சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. குரு
சாதகமாக இருப்பதால் அறிவாற்றல் வெளிப்படும். பங்கு வர்த்தகம், பைனான்ஸ்,
ஹார்ட்வேர்ஸ், நகை வியாபாரம், ரியல் எஸ்டேட், பதிப்பகம், கல்விக்கூடங்கள்
லாபத்தை உண்டாக்கும். முயற்சிக்கு தகுந்த லாபம் காண்பீர்கள்.
பணியாளர்கள்
அரசு
ஊழியர்களுக்கு சில சங்கடம் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு
விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். சக ஊழியர்களிடம்
எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தனியார் துறையினர் கவனமாக செயல்பட
வேண்டும். முதலாளியின் பார்வை எப்போதும் உங்கள் மீதிருக்கும் என்பதால்
பணியில் கவனம் அவசியம்.
பெண்கள்
பிரச்னைகளை எதிர்கொண்டு
சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம்
நீங்கும். ஆடம்பர செலவால் நெருக்கடி ஏற்படும். குருவருளால் குடும்பத்தின்
மீது அக்கறை அதிகரிக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு வரன் தேடி வரும்.
அலுவலகத்தில் நெருக்கடி உண்டானாலும் அதை சமளிப்பீர்கள். சிலருக்கு பொன்
பொருள் சேரும்.
கல்வி
உடல் நிலையும் மனநிலையும் உங்கள்
எண்ணத்திற்கு ஒத்துழைக்காமல் போகும். இக்காலத்தில் படிப்பில் கூடுதல் கவனம்
தேவை. ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்பதால் தேர்வில் வெற்றி பெற முடியும்.
உடல்நிலை
விரய
சனி, ராசியில் ராகு என்பதால் இனம் புரியாத நோய் சங்கடத்திற்கு ஆளாக்கும்.
உடல் அடிக்கடி சோர்வடையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும் என்றாலும், குரு
பகவானின் சஞ்சார நிலையும் பார்வைகளாலும் பாதிப்பு விலகும்.
குடும்பம்
குடும்ப
ஸ்தானத்தை விட்டு ராகு விலகியதால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தினரின்
எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.
திருமண வயதினருக்கு வரன் வரும், வேலைக்காக முயற்சித்தவர்களின்
எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் அக்கறை
தேவை. புதிய நண்பர்களால் குடும்பத்திற்குள் சங்கடம் ஏற்படலாம் கவனம்.
பரிகாரம் : காளகஸ்தியில் ராகு கேதுவிற்கு பரிகார பூஜை செய்யுங்கள். துர்கை, விநாயகரை வழிபட சங்கடம் தீரும்.
ரேவதி: குருவருளால் குறை தீரும்
உங்கள்
ராசிக்குள் ஜென்ம ராகுவாக அக்.8, 2023 அன்று சஞ்சரிக்கிறார். ஜென்ம
ராசிக்குள் ராகு சஞ்சரிக்கும் போது அலைச்சல் அதிகரிக்கும். வீண் சங்கடம்
ஏற்படும். பிரச்னைகள் தேடி வரும் என்றாலும், கேந்திர ராகு திடீர் யோக
பலன்களையும் தருவார். வருமானம், செல்வாக்கை ஏற்படுத்துவார். சட்ட ரீதியான
பிரச்னைகளில் கவனமாக இருப்பதும், குழப்பத்திற்கு ஆளாகாமல் இருப்பதும்,
தீயவரோடு சேராமல் இருப்பதும் நல்லது.
கேது அக்.8, 2023 முதல் 7ம்
இடமான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், வாழ்க்கைத் துணையிடம் பிரச்னை,
நண்பர்களுடன் கருத்து வேறுபாடு. கூட்டுத் தொழிலில் சங்கடம், சிலருக்கு
இடமாற்றம், பணி மாற்றம், திருமணத்தில் பிரச்னை, குடும்ப வாழ்வில்
நெருக்கடி, தவறானவர்களின் சேர்க்கை, மனதில் பயம் ஏற்படும்.
சனி சஞ்சாரம்:
ராகு கேது பெயர்ச்சி நடைபெறும் நாளில் சனி மகரத்தில் வக்ர நிலையிலும்,
அக்.23,
2023 அன்று வக்ர நிவர்த்தியாகி லாப சனியாக சஞ்சரித்து யோக பலன்களை வழங்கி,
செல்வாக்கை அதிகரிக்க உள்ளார். டிச.20, 2023 முதல் ராசிக்கு 12ல் விரய
சனியாக சஞ்சரித்து குடும்பத்தில் பிரச்னைகள் தலைதுாக்கும். சிலர்
குடும்பத்தை விட்டுப் பிரியும் நிலை உருவாகும். தந்தையின் உடல்நிலையில்
சங்கடம் ஏற்படும். தொழிலில் தடை, வருமானத்தில் முடக்கம் உண்டாகும். வீண்
அலைச்சல், மன உளைச்சல் ஏற்படும். மதிப்பு, கவுரவத்திற்கு பங்கம் உண்டாகும்.
மறுபக்கம் ஆரோக்கியம், எதிரிகளை வீழ்த்தும் வலிமை உண்டாகும்.
குரு சஞ்சாரம்
2ம்
இடமான மேஷத்தில் ஏப்.30, 2024 வரை சஞ்சரிக்கும் குரு குடும்பத்தில்
முன்னேற்றம், மகிழ்ச்சி, எதிர்பார்த்த வருமானம், பொன் பொருள் சேர்க்கை,
சிலருக்கு புதிய இடம் வாங்கும் நிலை, தொழிலில் லாபம், பணியில் செல்வாக்கை
அதிகரிப்பார், வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும்,
குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். என்றாலும் அக்.8, 2023 முதல்
டிச.20, 2023 வரை குரு வக்ரம் அடைவதால் இப்பலன்களில் மாற்றம் ஏற்படும்.
அதன்பின் மீண்டும் நன்மை நடைபெற ஆரம்பிக்கும். மே1, 2024 முதல் 3ம்
இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சியில் தடை, செல்வாக்கில் பாதிப்பு, தொழிலில்
பின்னடைவு, வேலையில் சிக்கல், நட்பில் விரிசல், முயற்சியில் தோல்வி,
மனதில் குழப்பம் உண்டாக்கி ஊர் ஊராக சுற்ற வைப்பார், அவமானத்திற்கு
ஆளாக்குவார். குருவின் பார்வைகள் 7, 9, 11ம் இடங்களில் பதிவதால் ஓரளவு
நன்மை அதிகரிக்கும்.
பொதுப்பலன்
விரய சனி, ஜென்ம ராகு, 7ல் கேது
என்ற நிலை இருந்தாலும், ஏப்.30, 2023 வரை குருவின் சஞ்சாரம் பார்வை உங்கள்
நிலையை உயர்த்தும். செல்வாக்கை அதிகரிக்கும். விருப்பத்தை நிறைவேற்றும்.
மே1, 2024 முதல் குருவின் பார்வை 7, 9, 11 ம் இடத்தில் பதிவதால் வாழ்க்கைத்
துணையுடன் இருந்த சங்கடம் நீங்கும், திருமண வயதினருக்கு திருமணம்
நடந்தேறும், கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை விலகும், ஆதாயம்
அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குரு பார்க்க கோடி
புண்ணியம் என்பதை இக்காலத்தில் உணர்வீர்கள்.
தொழில்: புதனை
நட்சத்திர நாதனாக கொண்ட உங்களுக்கு, கேது உங்கள் ராசி நாதனின்
ராசிக்குள்ளாகவே சஞ்சரிப்பதால், கூட்டுத் தொழிலை சங்கடம் இல்லாமல் நடத்திச்
செல்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். குருவின்
அருளும் இருப்பதால் தொழிலில் லாபம் அதிகரிக்கும், நெருக்கடி விலகும்.
பணியாளர்கள்
சாதுரியமாகவும்,
அறிவு பூர்வமாகவும் செயல்படும் உங்களுக்கு நன்மையே உண்டாகும். மேலதிகாரி
ஆதரவாக இருப்பார். பொறுப்புகள் கூடும். இடமாற்றமும் ஏற்படும். தனியார்
நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் முதலாளியின் மதிப்பிற்கு ஆளாவர். ஊதிய உயர்வு,
சலுகைகள் கிடைக்கும்.
பெண்கள்
உடல், மன நிலையில் சங்கடம்
தோன்றினாலும் குருவின் அருளால் நிம்மதி அடைவீர்கள். வாழ்க்கைத் துணையுடன்
அனுசரித்துப் போவது நல்லது. குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும்.
சிலருக்கு பொன் பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களின் முயற்சி
வெற்றியாகும், பணியாளர்களுக்கு நெருக்கடி உண்டானாலும் அதை சமாளிக்கும் நிலை
ஏற்படும். தனித்திறமை வெளிப்படும்.
கல்வி: மனதில் தேவையற்ற
சிந்தனை தோன்றும் என்பதால் படிப்பில் கவனம் சிதறும். கவனத்தை முழுமையாக
படிப்பில் செலுத்துவதுடன், ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்றால் தேர்வில்
எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உடல்நிலை: ஆரோக்கியத்தில் எதிர்பாராத
சங்கடம் உண்டாகும். சோர்வு அதிகரிக்கும். ஏதாவது ஒரு கோளாறு இருந்து கொண்டே
இருக்கும். மருத்துவ செலவு அதிகரிக்கும்.
குடும்பம்: குடும்ப
ஸ்தானத்தில் ஏப்.30, 2024 வரை சஞ்சரிக்கும் குருவால் நன்மை அதிகரிக்கும்.
எல்லாவிதமான சங்கடங்களையும் சமாளித்து குடும்பத்தை நடத்திச் செல்வீர்கள்.
புதிய சொத்து சேர்க்கை, பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில்
சுபநிகழ்ச்சி நடந்தேறும். வேலை வாய்ப்பு முயற்சி வெற்றியாகும், வருமானம்
அதிகரிக்கும்.
பரிகாரம்: ஒருமுறை திருநள்ளாறுக்கு சென்று நள
தீர்த்தத்தில் நீராடி நள்ளாற்று நாயகனை வணங்கி அர்ச்சித்து வருவதுடன்,
வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் உங்களால்
முடிந்த அளவிற்கு உணவு உடை வழங்கி வாருங்கள் சங்கடங்கள் விலகும் நன்மைகள்
அதிகரிக்கும்.