பதிவு செய்த நாள்
14
மார்
2011
04:03
உக்கிரபாண்டியன் பொறுப்பேற்று சில மாதங்கள் கடந்தன. தந்தையைப் போலவே, உக்கிரபாண்டியனும் நல்லாட்சி நடத்தி வந்தான். அவனது மனைவி காந்திமதியும் கணவனின் மனம்கோணாமல் நடந்து, புகுந்த வீட்டுக்கும், பிறந்த வீட்டுக்கும் பெருமை தேடித்தந்தாள். உக்கிரபாண்டியன் 96 யாகங்களைச் செய்து முடித்து, மதுரை நகர் செழிப்புடன் இருக்க வழிவகை செய்தான். இன்னும் நான்கு யாகங்களை பூர்த்தி செய்துவிட்டால், அஸ்வமேத யாகம் நடத்தி இந்திர லோகத்தையும் தன் வசம் ஈர்க்கலாம் என்பது அவனது திட்டம். அதாவது, நாடு பிடிப்பது என்பது அவனது ஆசையல்ல. இந்திரலோகம் தன் கைக்குள் வந்தால், பாண்டியநாட்டில் மாதம் மும்மாரி பொழிய வைத்து, மக்களை செழிப்புடன் வாழ வைக்கலாம் என்பது அவனது எண்ணம். மழைக்கடவுளான இந்திரனின் இடத்தைப் பிடித்தால் தான் இது சாத்தியம். இதை இந்திரன் தெரிந்து கொண்டான். உக்கிரபாண்டியனின் திறமையை அவன் அறிவான். மேலும், முருகப்பெருமானின் அவதாரமான அவனால் எதையும் சாதிகமுடியும் என்று தெரிந்து கொண்டு, தன் பதவியைக் காப்பதற்குரிய முயற்சியை எடுத்தான். வருணனை அழைத்து, வருணா! நீ மதுரைக்குச் செல். அங்கே சோமசுந்தரர் வரவழத்த எழுகடல்கள் உள்ளன. அவற்றைப் பொங்கச்செய்து மதுரையை அழித்து விடு. இல்லாவிட்டால், இந்திரலோகம் உக்கிரபாண்டியனின் வசமாகி விடும்.
நாம் அவனது அடிமைகளாகி விடுவோம். உன் பதவியைக் காப்பாற்றிக் கொள், என்று உத்தரவிட்டான். இந்திரனின் உத்தரவை தட்ட முடியாத வருணனும், வேறு வழியின்றி மதுரைக்குச் சென்றான். ஒருநாள் இரவு வேளையில் உக்கிரபாண்டியனும், காந்திமதியும் தங்கள் மஞ்சத்தில் சயனித்திருந்தனர். நள்ளிரவு வேளை, பேய்கள் கூட உறங்கிப் போனதோ என்று சொல்லுமளவுக்கு பெரும் நிசப்தம். அப்போது எழுகடலில் இருந்து பேரோசை எழும்பியது. மன்னனின் கனவில் தோன்றிய சோமசுந்தரர், மகனே! இந்திரன் எழுகடலை பொங்கச் செய்து மதுரையை அழிக்க திட்டமிட்டுள்ளான். நான் உன்னிடம் கொடுத்த வேலை கடல் மீது எறிந்து அதை வற்றச்செய், என ஆணையிட்டார். திடுக்கிட்டு எழுந்த உக்கிரபாண்டியன், உடனடியாக அமைச்சர் சுமதி மற்றும் பெரும்படையுடன் எழுகடல் பகுதிக்கு வேலுடன் சென்றான். எழுகடலும் மதுரையை நோக்கி உக்கிரத்துடன் வந்து கொண்டிருந்ததைப் பார்த்து திகைத்துப் போனான். சோமசுந்தரரை மனதில் நினைத்து துதித்து, வேலை கடலை நோக்கி வேகமாக எய்தான். அந்த வேலின் நுனிபட்டதோ இல்லையோ, எழுகடல் தண்ணீரும் சொட்டு கூட இல்லாமல் அப்படியே வற்றிப்போனது. மன்னனும், மற்றவர்களும் ஆர்ப்பரித்தனர்.
சோமசுந்தரரையும், மீனாட்சியையும் போற்றிப் புகழ்ந்தனர். மறுநாள் காலையில் தான் மக்களுக்கு இந்த தகவல் தெரியவந்தது. எழுகடலும் காணாமல் போய் பெரும் நிலப்பரப்பு தங்கள் முன் இருந்ததை அவர்கள் கண்டனர். கடல் பொங்கியதும், உக்கிரபாண்டியன் அதை அடக்கியதும் கேள்விப்பட்டு மன்னனை வாயார வாழ்த்தினர். ஊரெங்கும் விழா எடுத்தனர். எழுகடல் நிலத்தையும் மன்னன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு பட்டயம் செய்து வைத்தான். வெற்றி வாகை சூடி, இனிய ஆட்சியை சிறிது காலம் தொடர்ந்த மன்னனின் வாழ்வில் விதி விளையாடியது. தெய்வங்களே மனிதராக பிறப்பெடுத்தாலும், அவர்கள் கிரகங்களின் ஆதிக்கத்திற்கு கட்டுப் பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது ஜோதிட நியதி. இந்த நியதிக்கு உக்கிரபாண்டியனும் கட்டுப்பட வேண்டியதாயிற்று. நவக்கிரகங் களின் சாரமும் உக்கிரபாண்டியனுக்கு சாதகமாக இல்லாததால், சோதனைகள் அவனை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருந்தன. திருமால், ராமனாகப் பிறந்து, காட்டுக்கு போனது போல, ஆட்சியையே ஆட்டம் காண வைக்கும் சோதனை அது!