Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கடல் சுவற வேல் விடுத்த படலம்! உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்! உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்!
முதல் பக்கம் » 64 திருவிளையாடல்
உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 மார்
2011
05:03

உக்ரவர்மனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற செய்தி, பல தேசங்களுக்கும் பரவவே, ராஜாக்கள் தங்கள் பெண்களை அவனுக்கு மணம் முடித்து வைக்கக் கருதி, தங்கள் பெண்களின் ஓவியங்களையும், ஜாதகத்தையும் அனுப்பி வைத்தனர். மலைபோல் குவிந்து கிடந்த ஓவியங் களை அமைச்சர்கள் பரிசீலித்துக் கொண்டிருக்க, சுந்தரேஸ்வரப் பெருமான், மணவூர் என்னும் பகுதியை ஆண்ட சோமசேகரனின் கனவில், பார்வதிதேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். சோமசேகரா! உன் மகள் காந்திமதியை மதுரை அரசாளும் சுந்தர பாண்டியனின் மகன் உக்ரவர்மனுக்கு மணம் முடித்துக் கொடு. அவள் நல்வாழ்வு வாழ்வாள், என அருளினார். ஏற்கனவே, தன் மகளின் மணவாழ்வு பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்த மன்னனுக்கு, கனவில் இறைவனே கொடுத்த இந்தச் செய்தி பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவன் இந்தத் தகவலை மதுரையின் அமைச்சர் சுமதிக்கு தெரிவித்தார். சுமதியும் அவளது ஜாதகத்தை பரிசீலிக்க அத்தனை பொருத்தமும் பொருந்தியிருந்தது. அவளது ஓவியமே, அவள் பேரழகு பெட்டகம் என்பதை அறிவித்து விட்டது. இந்தப் பெண் உக்ரவர்மனுக்கு மனைவியாகத் தகுதியானவள் என்ற தகவலை சுந்தரபாண்டியனுக்கு அறிவித்தார் சுமதி. பெண் பார்க்க புறப்படுங்கள். சகல பணிகளும் வேகமாக நடக்கட்டும், என சுந்தரபாண்டியன் உத்தரவிட்டார். மதுரை மன்னரின் அமைச்சரும் உறவினர்களும் பெண் பார்க்க வந்து கொண்டிருக்கும் தகவலை காந்திமதியிடம் தெரிவித்தான் சோமசேகரன்.

அவளது குழி விழுந்த கன்னங்கள் சிவந்தன. ஈசனின் அவதாரமான சுந்தரபாண்டியனின் மகன் தன் மணாளனாக அமைந்தார் என்றால், அதை விட வேறென்ன பாக்கியம் வேண்டுமென ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். இதனிடையே சோமசேகரனின் அமைச்சர்கள் சிலர் அரசரிடம், அரசே! பெண் பார்க்கும் படலத்தை பெண் வீட்டில் வைத்துக் கொள்வது தான் மரபு. இருப்பினும், தங்கள் கனவில் பெருமானே ரிஷபாரூடராக வந்து, இந்த திருமணத்தை நடத்தி வைக்கும்படி சொல்லியுள்ளதால், நாமே பெண்ணுடன் மதுரை செல்வோம். அமைச்சர் சுமதி எதிரில் வருவார். அவரையும் அழைத்துக் கொண்டு மதுரை சென்று, உலகாளும் சோமசுந்தரரையும், தடாதகை பிராட்டியாரையும் சந்தித்து பேசி முடிப்போம். அதுதான் மரியாதையாக இருக்கும்,என்றனர். அரசனுக்கும் இந்த யோசனை நல்லதெனப்பட்டது. உடனடியாக பயண ஏற்பாடுகள் துவங்கின. காந்திமதியையும் அழைத்துக் கொண்டு சோமசேகரன் பரிவாரங்களுடன் மதுரை கிளம்பினான். தேர்கள் வேகமாகச் சென்றன. அவர்கள் மணவூர் எல்லையைத் தாண்டி மதுரை எல்லைக்குள் நுழையவும் சுமதியும் அங்கு வந்து சேர்ந்தார். நம் வேலையைக் குறைத்தது மட்டுமின்றி, மணமகளே நேரில் மதுரைக்கு வந்தால் சோமசுந்தரரும், தடாதகை பிராட்டியும் மகிழ்ச்சியடைவது மட்டுமின்றி, உக்கிரபாண்டியனும் பெண்ணை நேரில் பார்த்துவிடுவான். மாப்பிள்ளையும், பெண்ணும் நேரில் பார்த்துக் கொண்டால் நாளைக்கு நம்மைக் குறை சொல்ல முடியாது, என நினைத்து சிரித்தபடியே சோம சேகரனை அடையாளம் தெரிந்து கொண்டு எதிர்கொண்டழைத்து வரவேற்றார்.

எதிரே நிற்பவர் அமைச்சராயினும், அவர் மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்பதால் மன்னன் சோமசேகரன் தேரில் இருந்து இறங்கி பணிவுடன் வணக்கம் தெரிவித்தான். அமைச்சர் சுமதி மன்னன் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்தார். அவர் மட்டுமென்ன! வந்தவர்கள் எல்லாருமே ராஜகுமாரியாயினும் அடக்கத்தின் வடிவாய் நின்ற காந்திமதியைப் பார்த்து மகிழ்ந்தார்கள். உலகத்துக்கே ராஜாவான சோமசுந்தர பாண்டியனின் வீட்டுக்கு மருமகளாக இருந்தாலும், அவள் அமைச்சர் சுமதியை வணங்கினாள். பின்னர் அனைவருமாக மதுரை புறப்பட்டனர். இந்தத் தகவலை அமைச்சர் சுமதி முன்கூட்டியே மன்னருக்கு அறிவிக்க ஆட்களை அனுப்பி விட்டார். அவர்கள் அங்கு சென்று தகவல் சொல்லவே, தங்கள் வீட்டுக்கு குத்து விளக்கேற்ற வரும் குலக்கொடியை வரவேற்க சோமசுந்தரரும், தடாதகை பிராட்டியாரும் தயாரானார்கள். மாளிகையில் பாவை விளக்குகள் ஏற்றப்பட்டன. ஒளி வெள்ளத்தில் மிதந்தது அரண்மனை. மதுரை மக்களுக்கு தகவல் தெரிவிக்க முரசறையப்பட்டதால், அவர்கள் உடனடியாக நகரெங்கும் வரவேற்பு வளைவுகளை வைக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பிட்ட நேரத்துக்குள் எல்லாம் தயாராகி விட்டது. மணவூர் அரசன் தன் மகளுடன் மதுரை வந்து அரண்மனைக்குச் சென்றான். அவர்களை சோமசுந்தர பாண்டியன் அன்புடன் வரவேற்றார். தடாதகை பிராட்டியார் தன் மகளின் அழகு தன்னழைகையும் விஞ்சியது என்பதைப் புரிந்துகொண்டு பெருமைப்பட்டாள். உக்கிரபாண்டியன் தன் வருங்கால மனைவியைப் பார்க்கும் சையை அடக்கிக் கொண்டு தன் அறையில் இருந்தான். மாப்பிள்ளையின் அவசரத்தை அவனைச் சுற்றியிருப்பவர்கள் புரிந்து கொண்டு வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தனர். காந்திமதியின் நிலையும் இதுதான்.

மாமா, அத்தையைப் பார்த்தாயிற்று....அவர் எங்கிருக்கிறாரோ? அந்தக் கட்டழகன் எப்போது வருவார்? என்று ஆவலுடன் யாருமறியாமல் கண்களைச் சுழல விட்டுக்கொண்டிருந்தாள். தடாதகைபிராட்டியாரும், சோமசுந்தரப்பாண்டியனும் இதை கவனிக்காமல் இல்லை. நிச்சயதார்த்தத்தை உடனடியாக முடித்துக் கொள்ள முடிவாயிற்று. காந்திமதியின் அவசரத்தைப் புரிந்து கொண்ட தடாதகை, உக்கிரவர்மனை வரச்சொல்லுங்கள், என்றாள். காந்திமதி நாணித் தலை குனிவது போல் பாசாங்கு காட்டினாலும், கண்கள் மட்டும் உயர்ந்து அவன் வரும் வழியைப் பார்த்தவண்ணம் இருந்தன. ஆஜானுபாகுவான  தோற்றத்துடன் உக்கிரவர்மன் புன்னகை ததும்ப, கைகள் கூப்பி வந்து கொண்டிருந்தான். பெற்றோரைப் பணிந்த பின், மாமனாருக்கும் அவருடன் வந்திருந்த முக்கியஸ்தர்களுக்கும் நமஸ்காரம் தெரிவித்தான். மதுரை மன்னரும், மணவூர் மன்னரும், உக்கிரவர்மனும் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்க, தடாதகைபிராட்டியார், காந்திமதி ஆகியோர் தரையில் விரித்திருந்த ரத்தின கம்பளங்களில் அமர்ந்தனர். ஆண்களுக்கு அக்காலப் பெண்கள் தக்க மரியாதை அளித்ததை இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது. நிச்சயதார்த்தம் முடிந்து மணநாள் குறித்த பிறகு, பெண் வீட்டார் விடை பெற்றனர். உக்கிரவர்மனின் கண்களும், காந்திமதியின் கண்களும், ராமனும், சீதையும் திருமணத்துக்கு முன்னதாக நோக்கிக் கொண்டது போல நோக்கிக் கொண்டன. இந்த நிகழ்ச்சியின் போது மதுரை வந்திருந்த தேவகுருவாகிய பிரகஸ்பதி காந்திமதியை மிகவும் புகழ்ந்தார். அவள் சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவள் என்றும், அவளுக்கு வாய்க்கும் கணவன் நீண்டகாலம் புகழுடன் வாழ்வான் என்றும் சொன்னார்.

இதனால் அனைவரது மகிழ்ச்சியும் இரட்டிப்பாயிற்று. நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு, திருமணநாள் வரையுள்ள நாட்கள் இருக்கிறதே... அது கழிவதற்கு மிகுந்த சிரமமாயிருப்பது போன்ற தோற்றம் எல்லா மணமக்களுக்குமே இருக்கும். உக்கிரவர்மன், காந்திமதியும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல் கழிய, மணநாளுக்காக அவர்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்தத் திருநாளும் வந்தது. பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் திருமணத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்து மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர். மணமக்கள் சர்வ அலங்காரத்துடனும் மணப்பந்தலுக்கு வந்தனர். உக்கிரவர்மன் தன் மனையாட்டிக்கு மங்கலநாண் பூட்ட, தடாதகை பிராட்டிக்கு கண்கள் பனித்தது. பெண்ணைப் பெற்ற சோமசேகரனுக்கும் இதே நிலை. தாலிகட்டும் வேளையில் பெற்றவர்களின் உணர்ச்சிவெள்ளம் அவர்களைப் பெற்ற நாளை விட பெருக்கெடுக்கும் என்பதில் சந்தேகமென்ன! உக்கிரவர்மன்- காந்திமதி திருமணம் இனிதாக நிறைவேறி, வந்தவர்கள் அவரவர் இருப்பிடம் திரும்பினர். சிவபெருமானாகிய சோமசுந்தர பாண்டியனும், பராசக்தியாகிய தடாதகை பிராட்டியும் தாங்கள் பூமிக்கு வந்த பணி முடிந்ததால் தங்கள் உலகம் திரும்ப முடிவெடுத்தனர். இதை தங்கள் புத்திரனிடம் தெரிவித்து, உக்கிரவர்மா! இனி நீயே மதுரையின் அரசன். உனக்கு பட்டம் சூட்டிவிட்டு நாங்கள் சிவலோகம் திரும்பப் போகிறோம், என்றனர். பெற்றவர்களைப் பிரிவது எவ்வளவு கடினமான விஷயம்! காந்திமதியும் வுருத்தப்பட்டாள். அமைச்சர் சுமதி உள்ளிட்டவர்களும், மதுரை மக்களும் இந்த செய்தியறிந்து வேதனைப்பட்டனர். அவர்களைத் தேற்றிய தடாதகைபிராட்டியார், என் அன்பு மக்களே! மீன்கள் தங்கள் கண்களை இமைக்காமல் தங்கள் குஞ்சுகளை எப்படி பாதுகாக்கின்றதோ, அதுபோல் நான் என்றும் உங்களைக் காப்பேன்.

சோமசுந்தரரும் சொக்கநாதராக இங்கே எழுந்தருளி உங்களுக்குத் தெரியாமலே ஆட்சி நடத்துவார். நாங்கள் இங்குள்ள கோயிலிலேயே ஐக்கியமாவோம், என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னாள். மக்களும் மற்றவர்களும்ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டனர். ஒரு இனியநாளில், உக்கிரவர்மனுக்கு பட்டாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தது. அப்போது, சோமசுந்தரர், தன் மகனிடம், உக்கிரவர்மா! இதோ நான் தரும் வேல், வளை, செண்டு ஆகியவற்றைப் பெற்றுக் கொள். மதுரை நகரை கடல் ஆட்கொள்ளும் சமயம் வரும். அப்போது, மக்களைக் காப்பாற்ற இந்த வேலை கடல் மீது எறிந்தால் அது உள்வாங்கி விடும். இந்திரன் உன் மீது கொண்ட பொறாமையால் உனக்கு இடைஞ்சல் செய்வான். அப்போது, இந்த வளையை அவனது மகுடத்தின் மீது வீசி அவனை அடக்கு. இதோ! இந்த செண்டால் (மலர்க்கொத்து) மேருமலையை அடித்து நொறுக்கு. ஒரு சமயத்தில் அது அகங்காரம் கொண்டு மக்களுக்கு இடைஞ்சல் செய்யும். அப்போது, இது பயன்படும், என்று சொன்னார். அவற்றை பயபக்தியுடன் உக்கிரவர்மன் பெற்றுக் கொண்டான். பட்டாபிஷேகம் முடிந்ததும் உக்கிரவர்மனை உக்கிரபாண்டியன் என்று மக்கள் அழைக்கலாயினர். பின்னர், சோமசுந்தரபாண்டியனும், தடாதகை பிராட்டியாரும் கோயிலுக்குள் சென்று மறைந்தனர். அவர்கள் சொக்கநாதர் என்றும், மீனாட்சியம்மன் என்றும் போற்றப்பட்டனர். சொக்கநாதர் லிங்கவடிவில் எழுந்தருளினார்.

 
மேலும் 64 திருவிளையாடல் »
பெரிய தர்மம் செய்தால் தான் இறை ஆசி கிடைக்கும் என்பதில்லை. சிறிய தொண்டு கூட கருணையைப் பெற்றுத் தரும். ... மேலும்
 
temple news
ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்
 
temple news
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்
 
temple news
மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்
 
temple news
குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar