பதிவு செய்த நாள்
13
மே
2015
04:05
பீமசேனனின் புதல்வனான கடோத்கஜனுக்கும் மவுர்விக்கும் பிறந்தவன் பர்பரீகன், பாண்டவர்கள் வனவாசத்தையும், அஞ்ஞாத வாசத்தையும் முடித்தனர். கிருஷ்ணர் தூது போய் பாண்டவ, கவுரவ யுத்தம் முடிவாயிற்று. பீஷ்மர் தலைமையில் கவுரவர்களும், கிருஷ்ணர் துணையோடு பாண்டவர்களும் குருக்ஷேத்திரத்தை அடைந்தனர். தருமர் கிருஷ்ணரிடம், பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமா, கிருபா சாரியார், கர்ணன் போன்றவர்களுக்கு ஈடுகொடுக்க நம் பக்கம் எவருண்டு? எனக் கேட்டார்.
அர்ஜுனன் உடனே, பீமசேனன், துருபதன், திருஷ்டத்யும்னன், விராடன், சாத்யகி, சிகண்டி, சேகி தானன், கடோத்கஜன் இவர்களோடு பகவான் கிருஷ்ணரும் நம் பக்கம் இருக்கும் போது விசனம் வரலாமா? உங்களுக்கு அச்சமாயிருந்தால் நான் தனித்தே போரிட்டு கவுரவப் பஞ்சுக் குவியல்களை அழிக்கும் தீப்பொறியாயிருப்பேன் என சபதமிட்டான். அப்போது பர்பரீகன், ஒரு முகூர்த்த நேரத்தில் கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன் தவிர மற்றவர்களின் உயிர்நிலை எங்குள்ளது என்றறிந்து சொல்லும் வல்லமை என் அஸ்திரத்துக்குண்டு. சித்தாம்பிகையை நோக்கித் தவமிருந்து அஸ்திரங்களைப் பெற்றவன் நான். நீங்களெல்லாம் ஒதுங்கியிருங்கள். ஒன்றரை மணி நேரத்தில் இந்த இடம் சுடுகாடாகிவிடும் என்றான். கிருஷ்ணர் பர்பரீகனிடம், ஒரு பாணத்தால் 19 அக்ஷௌகிணி சேனை வீரர்களின் உயிர் நிலையை அறிய முடியும் என்ற உன் பேச்சு மிகையா இல்லையா? என்று கேட்டார். பர்பரீகன் வில்லில் நாண் தொடுத்து, அம்பின் முனையில் சிவப்பு நிற சாம்பலை நிரப்பி, நாணைக் காது வரை இழுத்து விட்டபடி மந்திரம் ஜபித்தான். பாணம் பாய்ந்ததும் சாம்பல் பரவலாக இருபக்க சேனைகளிலுமுள்ள ஒவ்வொரு வீரனின் உயிர்நிலையையும் சிவப்புக் குறியிட்டுக் காண்பித்தது - பஞ்சபாண்டவர்கள், கிருபர், அஸ்வத்தாமன் நீங்கலாக.....! பாண்டவ சேனை வெற்றி கோஷமிட்டது.
பர்பரீகா! எதுவும் முறைப்படித்தான் நடக்க வேண்டும். உன் பாட்டனார்கள் பீமன், அர்ஜுனன் சபதம் வெல்ல வேண்டும் என்று கூறி, சுதர்சன சக்கரத்தை ஏவி பர்பரீகன் சிரத்தைக் கொய்தார் கிருஷ்ணர். ஏன் இப்படி? என்று பாண்டவர்கள் திகைக்க, சித்தாம்பிகை தோன்றி, பர்பரீகன் போன ஜென்மத்தில் சூர்யவர்ச்சஸ் என்ற யக்ஷனாக இருந்தான். பூமாதேவி பூபாரம் தாங்காமல் மேருகிரியிடம் முறையிட்டாள். அப்போது பர்பரீகன், நானே அரக்கர்களை நாசம் செய்வேன். அமரர்கள் பூமியில் ஏன் பிறக்க வேண்டும். என்றான். பிரம்ம தேவர் சினம் கொண்டு பூபாரம் குறைக்க யுத்தம் தொடங்குகையில் முதல் பலி நீதான் என்றார். அதுவே இப்போது நடந்தது. அமரனான பர்பரீகன் ஞானக்கண்ணால் யுத்தம் முடியும் வரை அதைப் பார்ப்பான் என்றருளி, பர்பரீகன் தலையை அமிர்தத்தில் நனைத்து, உயரமான ஒரு மலையுச்சியில் வைத்து மறைந்தாள். பாரதப் போர் முடிந்தது. பீமன், அர்ஜுனன் தத்தம் பிரதாபங்களைப் பெருமையடித்துக்கொள்ள பர்பரீகன் தலையிடம் கேளுங்கள் என்றார் மாதவன். பர்பரீகன் வாய், இடப்புறம் ஐந்து முகமும், சடாமுடியும், திரிசூலமும், வலப்புறம் ஒரு முகமும், நான்கு புஜங்களும், கவுஸ்துபமணி, சுதர்ஸனமும், மகுடமும் தரித்த ஒரு புண்ணிய புருஷரே போரிட்டார். அந்த ருத்ர விஷ்ணுவே பூபாரம் குறைத்த பராக்கிரமசாலி என்று சொல்லவும், விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தது. பீமார்ஜுனர் நாணித் தலை கவிழ்ந்தனர்.