Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

போகமும் துறவும்! போகமும் துறவும்!
முதல் பக்கம் » முண்டக உபநிஷதம்!
போகம் ஒரு கண்ணோட்டம்!
எழுத்தின் அளவு:
போகம் ஒரு கண்ணோட்டம்!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
03:06

வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித் தெழுந்தது. அதன் தவப்புதல்வர்களாகிய ரிஷிகள், இருளுக்கு அப்பால்  பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரம்பொருளை அறிந்து கொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை, அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள் என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற  உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவி அழைத்தனர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோகூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழைய நூல் இந்தச் சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது  தோன்றியது என்பது ஒரு வாக்கு தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம். ... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்றுநிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக <உலகின் விதிகளும்... அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அவற்றை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.

அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம் (யாக  விவரங்கள்), ஆரண்யகம் (<உபநிஷதங்கள்; அறதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி).

உபநிஷதங்கள்: உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.

வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை <உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் 14 உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதகி, மஹா நாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார். 14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.

*உபநிஷதம்        *வேதம்

ஐதரேய, கௌசீதகி    ரிக்

ஈச, கட, தைத்திரீய
பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, யஜுர்
மைத்ராயணீ, மஹாநாராயண    

கேன, சாந்தோக்ய    சாம

பிரச்ன, முண்டக, மாண்டூக்ய    அதர்வண

*முண்டக உபநிஷதம்:

அதர்வண வேதத்திலுள்ள 28 உபநிஷதங்களுள் ஒன்று இது. முண்ட என்ற மூலச்சொல்லிலிருந்து வந்தது முண்டகம். முண்ட என்றால் நீக்குதல். நிழலைப் பற்றிக் கொண்டிருக்கிறாய் என்று நமது அறியாமையைச் சுட்டிக்காட்டி, நிஜம் எது என்பதை எடுத்துக் கூறி, நமது அறியாமையை நீக்க இந்த உபநிஷதம் முயற்சி செய்கிறது. எனவே முண்டக உபநிஷதம் என்று வழங்கப்படுகிறது.

முண்ட என்றால் மழித்தல்; தலையை மழித்தவர்களான துறவியருக்கு உரிய உபநிஷதம் இது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

இந்த உபநிஷதத்தில் மூன்று முண்டகங்கள் (பகுதிகள்) உள்ளன. ஒவ்வொரு முண்டகத்திலும் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. இந்த ஆறு உட்பிரிவுகளிலுமாக மொத்தம் 64 மந்திரங்கள் உள்ளன.

உபநிஷதக் கரு:

நிழலை உண்மை என்று நம்பி, அதன் பின்னால் ஓடுகிறோம் நாம். தவறான திசையில் நாம் செய்கின்ற இந்தப் பயணம்தான் நமது ஏமாற்றங்கள், துன்ப துயரங்கள் அனைத்திற்கும் காரணம். எனவே, நிழலைவிட்டு நிஜத்தைப் பற்று என்று வற்புறுத்துகிறது இந்த உபநிஷதம்.

உடம்பு, மனம், ஆன்மா என்று பல பகுதிகளால் ஆனவன் மனிதன். இதில் உடம்பும் மனமும் மாறக்கூடியவை, நிழல். ஆன்மா மாறாதது, நிஜம். நிழலுடன் நம்மை ஒன்றுபடுத்துவதை விட்டுவிட்டு நிஜத்துடன் ஒன்றுபடுத்திக் காண வேண்டும்; அதனை அனுபூதியில் <உணர வேண்டும் என்பது இந்த உபநிஷதத்தின் தனிக்கருத்தாக உள்ளது. அதற்கான சில சாதனை முறைகளையும் இங்கே நாம் காண்கிறோம்.

வித்யைகள்:

மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிற்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் <உயிரும் சென்று அடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். <உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உ<லகில் வாழ்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு <உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் <உபநிஷதமும் தனக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகிறது. இந்தப் பாதை வித்யை எனப்படுகிறது. வித்யைகள் எண்ணற்றவை. 14 முக்கிய உபநிஷதங்களிலுமாக சுமார் 35 வித்யைகர் அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்துவிட்டதாலும் வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறைகளோ சரியான பொருளோ நமக்குத் தெரியவில்லை.

முண்டக உபநிஷதத்தில் நாம் காண்பது அக்ஷர-பரா வித்யை. இது அக்ஷராக்ஷர வித்யை என்றும் வழங்கப்படுகிறது. 1.1.4-6-1.1.9 மந்திரங்கள் இதனைக் கூறுகின்றன.

மொழிபெயர்ப்பு:

ஸ்ரீசங்கரரைத் தவிர முண்டக உபநிஷதத்திற்குப் பலர் விளக்கவுரைகள் எழுதியுள்ளனர். அவற்றுள் ஸ்ரீமத்வரும் ஸ்ரீரங்க ராமானுஜாச்சாரியரும் எழுதிய உரைகள் முக்கியமானவை.

தற்போதைய மொழிபெயர்ப்பு, இந்த உபநிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன:

1. தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளாமல் இறைவன் என்ற மாபெரும் சக்தியிடம் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்த்துள்ளோம்.

2. இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.

பொருள் விளக்கத்திற்கு எமது மடத்தின் தவமிகு துறவியர் மூவரின் நூல்கள் பேரளவு துணை செய்தன.

அமைப்பு: சம்ஸ்கிருத மூலம், தமிழ் வடிவம், பதவுரை, பொழிப்புரை, திரண்ட பொருள் விளக்கம் என்ற ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வார்த்தை: உபநிஷதங்களை நமக்கு அளித்த முனிவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி எதையும் கூறாமல், எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள் 1. இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே - ஈசாவாஸ்ய உபநிஷதம், 10,13. என்றே குறிப்பிடுகிறார்ககள். அதாவது, இந்த உண்மைகள் ஏதோ தங்கள் திறமையால் பெறப்பட்டவை அல்ல, மகான்களின் அருளால் கிடைத்தவை என்று அவர்கள் கூறுவது போல் உள்ளது இது.

நாம் எத்தகைய மனப்பாங்குடன் உபநிஷதங்களை அணுக வேண்டும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ வேத மந்திரங்களின் 2. இன்றைய வழக்கில், மீண்டும்மீண்டும் சொல்லி, அதாவது ஜபித்து உய்வு பெறுவதற்கான ஒன்றே மந்திரம் (மனனாத் த்ராயதே இதி மந்த்ர:) என்று கொள்ளப்படுகிறது. ஆனால் வேதப் பாடல்கள் அனைத்துமே மந்திரங்கள் என்றுதான் வழங்கப்படுகின்றன.
உண்மையான பொருளை அறிந்துகொள்வது சாத்தியம் அல்ல. பிரார்த்தனைபூர்வமாக, உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மை பெற்று இறைவனை நோக்கி நாம் முன்னேறமுன்னேற இவற்றின் <உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும்மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை <உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும்.

சாந்தி மந்திரம்!

எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைத்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடியாது. அதுபோல் அனுபூதிக் கருவூலமான <உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் <உதவுகின்றன.

முண்ட உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம் இது:

ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: பத்ரம்
பச்யேமாக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரைரங்கைஸ்
துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி: வ்யசேம தேவஹிதம் யதாயு:

ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்த ச்ரவா: ஸ்வஸ்தி ந: பூஷா விச்வ
வேதா: ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்ட்டநேமி: ஸ்வஸ்தி நோ
ப்ருஹஸ்பதிர் ததாது ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

தேவா:- தேவர்களே! கர்ணேபி:- காதுகளால்; பத்ரம்- நல்ல விஷயங்களை; ச்ருணுயாம- கேட்க வேண்டும்; யஜத்ரா:- பூஜிக்கத் தகுந்தவர்களே; அக்ஷபி:- கண்களால்; பச்யமே- காண வேண்டும்; ஸ்திரரங்ககை:- உறுதியான அங்கங்களுடன் கூடிய; தனூபி:- உடலுடன்; யதாயு:- ஆயுள் முழுவதும்; துஷ்ட்டுவாம்ஸ: 1. துஷ்ட்டுவாம்ஸ என்பதுதான் வார்த்தை. துஷ்ட்டுவாக்ம்ஸ என்பதிலுள்ள க் பாராயண முறைக்காக சேர்க்கப்பட்து. - துதிக்க வேண்டும்; தேவ ஹிதம்- தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம்; வ்யசேம - வாழ வேண்டும்; வ்ருத்த ச்ரவா:- பழம்புகழ்பெற்ற; இந்த்ர:- இந்திரன்; ந:- நமக்கு; ஸ்வஸ்தி -நன்மை செய்யட்டும்; விச்வ வேதா:- எல்லாம் அறிகின்ற; பூஷா-சூரியன்; ஸ்வஸ்தி-மங்கலம் செய்யட்டும்; அரிஷ்ட்டநேமி- நன்மை செய்யட்டும்; ப்ருஹஸ்பதி:- பிருகஸ்பதி; ஸ்வஸ்தி- நன்மை; ததாது- தரட்டும்.

ஓம். தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்
களைக் கேட்க வேண்டும். பூஜிக்கத் தகுந்தவர்களே! கண்களால்
நாங்கள் நல்ல விஷயங்களைக் காண வேண்டும். உறுதியான
அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் நாங்கள்
உங்களைத் துதிக்க வேண்டும். உங்களுக்கு நன்மை செய்த
வண்ணம் நாங்கள் வாழ வேண்டும்!

பழம்புகழ் பெற்ற இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும்.
எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும்.
தீமையை அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மை செய்யட்டும்.
பிருகஸ்பதி நமக்கு நன்மை தரட்டும்!

உலகியலில் மூழ்கடிப்பதற்கான விஷயங்கள், உயர் வாழ்க்கையில் தூண்டுகின்ற விஷயங்கள் ஆகிய இரண்டுமே மனிதனின் முன்னால் வருகின்றன; அறிவாளி இரண்டாம் வகையைத் தேர்ந்தெடுக்கிறான் என்று கட உபநிஷதம் (1.2.2) கூறுகிறது. அவ்வாறு நல்லவற்றையும் உயர்ந்தவற்றையும் தேர்ந்தெடுப்பதற்கு நமது உடம்பிற்கும் புலன்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கும், அந்த முயற்சியில் தேவர்களின் துணையை நாடுவதற்குமான மந்திரம் இது.

தேவர்கள் யார்? அவர்களுக்கு நன்மை செய்வது என்பது என்ன?

சூரியன் உதிப்பது, கடலில் அலைகள் எழுவது, நட்சத்திர மண்டலங்கள் வானவெளியில் வலம் வருவது என்று இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலம் சக்தியின் வெளிப்பாட்டைக் காண்கிறோம். இந்தச் சக்திகள் ஒவ்வொன்றையும் ஒரு தேவனாக உருவாகப்படுத்தின் நமது முன்னோர். இந்திரன், வருணன், வாயு என்றெல்லாம் நமது வேதங்கள் கூறுகின்ற தேவர்கள் இத்தகைய இயற்கை ஆற்றலின் உருவகங்களே.

உலகின் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும் வாழ வசதியும் வழங்குவதற்கும் இயற்கை அன்னை தயாராகவே இருக்கிறாள். ஆனால் அதற்கு அவளுடன், அதாவது இந்த இயற்கை ஆற்றல்களுடன் இயைந்து வாழ்வது இன்றியமையாதது. இயற்கையை நாம் அழித்தால் நாமும் அழிவோம். மாறாக, நாமும் இயற்கையும் பரஸ்பரம் பேணி வாழ்ந்தால் இயற்கையும் வாழும், நாமும் வாழ்வோம்.

உயர் வாழ்க்கை வாழ வேண்டுமானால் உடம்பையும் புலன்களையும் அதற்குத் தகுதியானவையாக வைத்திருக்க வேண்டும், இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும் என்ற பரந்த கருத்துடன் உபநிஷதம் ஆரம்பிக்கிறது.

1:1 சாதாரண அறிவும் உயர் அறிவும்!

உலகம் நம் கண் முன்னால் தன் அனைத்துப் பரிமாணங்களுடனும் பரந்து கிடக்கிறது. அழகு, அறிவு, ஆற்றல் என்று அதன் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொண்டாலும் மனிதன் அறிந்துள்ளது மிகக் குறைவே. அவன் புலன்களால் அறிகின்ற கலை, கல்வி, விஞ்ஞானம், மதம் போன்றவை, அதிமன ஆற்றலால் அறிகின்ற ஜோதிடம் போன்றவை, ஏன் வேதங்கள்கூட சாதாரண அறிவே என்று பாகுபடுத்துகிறது இந்த அத்தியாயம்.

மனிதன் தன் அறிவையெல்லாம் செலுத்தியும் ஓர் அம்சத்தைக் கூடப் புரிந்துகொள்ள இயலாத இந்த உலகைப் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரை அறிகின்ற அறிவே உயர் அறிவு. அது அனைத்து அறிவிற்கும் அடிப்படை. இந்த உயர் அறிவு, அதற்கு ஆதாரமான கடவுளின் மகிமை போன்றவற்றை இந்த அத்தியாயத்தில் காண்கிறோம்.

இந்த உபநிஷதம் கூறுகின்ற அக்ஷர-பரா வித்யையும் இந்த அத்தியாயத்திலேயே வருகிறது.

ஆன்மீக அறிவே அனைத்து அறிவுகளின் அடிப்படை:

எதை அறிந்தால் அனைத்தும் அறிந்ததாகும்? என்று 3-ஆம் மந்திரம் ஒரு கேள்வியை எழுப்புகிறது. அந்த விளக்கத்திற்கு ஒரு முன்னுரைபோல் அமைகிறது இந்த மந்திரம்.

ஓம் ப்ரஹ்மா தேவானாம் ப்ரதம: ஸம்பபூவ
விச்வஸ்ய கர்த்தா புவனஸ்ய கோப்தா
ஸ ப்ரஹ்மவித்யாம் ஸர்வவித்யா ப்ரதிஷ்ட்டாம்
அதர்வாய ஜ்யேஷ்ட்டபுத்ராய ப்ராஹ (1)

ப்ரஹ்மா- பிரம்ம தேவர்; தேவானாம்- தேவர்களில்; ப்ரதம:- முதலில்; ஸம்பபூவ-தோன்றினார்; விச்வஸ்ய- உலகின்; கர்த்தா- படைத்தனர்; புவனஸ்ய- உலகின்; கோப்தா- காப்பவர்; ஸ:- அவர்; ஸர்வ வித்யா- எல்லா அறிவுகளின்; ப்ரதிஷ்ட்டாம்- அடிப்படையான; ப்ரஹ்ம வித்யாம்- ஆன்மீக அறிவை; ஜ்யேஷ்ட்ட புத்ராய- மூத்த மகனான; அதர்வாய- அதர்வனுக்கு; ப்ராஹ- உபதேசித்தார்.

1. ஓம். பிரம்ம தேவர் தேவர்களில் முதலில்
தோன்றியவர். <உலகைப் படைத்தவரும் காப்பவரும்
அவரே. அனைத்து அறிவுகளின் அடிப்படையான
ஆன்மீக அறிவை அவர் தமது மூத்த மகனான
அதர்வனுக்கு உபதேசித்தார்.

ஓர் அறையில் நாற்காலி, மேஜை, புத்தகங்கள் என்று பல்வேறு பொருட்கள் உள்ளன. இவற்றை காண வேண்டுமானால் ஒளி வேண்டும். எனவே இந்த அத்தனைப் பொருட்களின் அடிப்படையாக இருப்பது ஒளியேயாகும். ஒளியில்லா விட்டால் அறையிலுள்ள எதனையும் காண இயலாது.

அதுபோல், ஆன்மீக அறிவு அனைத்து அறிவுகளின் அடிப்படையாக உள்ளது. ஆன்மா பற்றிய அறிவு ஆன்மீக அறிவு. உடம்பையும் மனத்தையும் தவிர நம்மமில் ஆன்மா என்ற ஒன்று உள்ளது. உண்மையில் நாம் உடம்போ மனமோ அல்ல; இவை இரண்டையும் கருவிகளாகக் கொண்ட ஆன்மா என்ற உண்மையை அனுபூர்வமாக அனுபூதியில் உணர்வதே வாழ்க்கையின் லட்சியம். உபநிஷதங்களின் அடிப்படைக் கருத்து இது.

ஆன்மா என்ற ஒன்று இருப்பதால்தான் நாம் பார்க்க முடிகிறது, கேட்க முடிகிறது, அனுபவிக்க முடிகிறது; சுருக்கமாகச் சொல்வதானால் வாழ்க்கையை வாழ முடிகிறது. ஆன்மா இருப்பதால்தான் கேட்க முடிகிறது; சிந்திக்க முடியாதவற்றைச் சிந்திக்க முடிகிறது அறிய முடியாதவற்றை அறிய முடிகிறது (1. யேன அச்ருதம் ச்ருதம் பவதி அமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம்-சாந்தோக்ய உபநிஷதம், 6.1.3.) என்கிறது சாந்தோக்ய உபநிஷதம். அதனால்தான் ஆன்மீக அறிவு அனைத்து அறிவுகளின் அடிப்படை என்று கூறப்பட்டது.

பரம்பரையாக வருவது ஆன்மிக அறிவு:

அதர்வண யாம் ப்ரவதேத ப்ரஹ்மா-
ஸதர்வா தாம் புரோவாசாங்கிரே ப்ரஹ்மவித்யாம்
ஸ பாரத்வாஜாய ஸத்யவஹாய ப்ராஹ
பாரத்வாஜோஸங்கிரஸே பராவராம் (2)

ப்ரஹ்மா- பிரம்ம தேவர்; யாம்- எதை; அதர்வணே- அதர்வனுக்கு; ப்ரவதேத- சொன்னாரோ; தாம்- அந்த;

ப்ரஹ்ம வித்யாம்- ஆன்மீக அறிவை; அதர்வா- அதர்வன்; புரா-முன்பு; அங்கிரே- அங்கிரருக்கு; உவாச- சொன்னார்; ஸ:- அவர்; பாரத்வாஜாய- பரத்வாஜரின் வழிவந்த; ஸத்யவஹாய- ஸத்யவஹனுக்கு; ப்ராஹ- சொன்னார்; பாரத்வாஜ:- பரத்வாஜரின் வழிவந்த அவர்; அங்கிரஸே- அங்ககிரசுக்கு; பரா அவராம்- குருவிடமிருந்து சீடருக்கு.

2. பிரம்ம தேவரிடமிருந்து பெற்ற ஆன்மீக அறிவை
அதர்வன் அங்கிரருக்குச் சொன்னார். அங்கிரர்
பரத்வாஜரின் வழிவந்தவராகிய ஸத்யவஹனுக்குச்
சொன்னார். அவர் அங்கிரஸுக்குச் சொன்னார்.
இவ்வாறு அந்த அறிவு குருவிடமிருந்து சீடருக்கு
வழிவழியாக வந்தது.

அடிப்படை அறிவு ஒன்று உண்டா?

சௌனகோ ஹ வை மஹாசாலோஸங்கிரஸம் விதிவதுபஸன்ன: பப்ரச்ச கஸ்மின்னு பகவோ விஜ்ஞாதே ஸர்வமிதம் விஜ்ஞாதம் பவதீதி (3)

ஹ வை மஹாசால:- சிறந்த இல்லறத்தாராகிய; சௌனக:- சௌனகர்; அங்கிரஸம்- அங்கிரஸைவிதிவத்- முறைப்படி; உபஸன்ன:- அணுகி; அறிந்தால்; பகவ:- தெய்வத்திற்கு நிகரானவரே; இதம்- இந்த; ஸர்வம் - அனைத்தும்; விஜ்ஞாதம் பவதி- அறிந்ததாகும்; இதி- என்று.

3. சிறந்த இல்லறத்தாராகிய சௌனகர் அங்கிரஸை
முறைப்படி அணுகி, தெய்வத்திற்கு நிகரானவ÷!
எதை அறிந்தால் இந்த அனைத்தும் அறிந்ததாகும்?
என்று கேட்டார்.

பாரதம் மற்றும் பிற நாடுகளின் கலாச்சசாரம், விஞ்ஞானம், மதம், ஆன்மீகம் என்று எந்தத் துறையையும் ஆழ்ந்து படிப்பவர்கள் ஓர் அற்புதமான உண்மையைக் காண முடியும். எதிலும் அறுதி ஒருமையைக் காண விழைந்தது இந்திய மனம். பொருட்களின் ஓர் அறுதி ஒருமையைக் காண்பதே <<உபநிஷதங்களின் நோக்கம். எதை அறிந்தால் இந்த அனைத்தும் அறிந்ததாகும்? - இந்த ஆராய்ச்சியையே உபநிஷதங்கள் தங்கள் ஒரே கருத்தாகக் கொண்டிருக்கின்றன என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

இதனை விளக்குகிறார் அவர்: ஒருமைநிலையைக் கண்டுபிடிப்பதுதான் விஞ்ஞானம். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் விஞ்ஞானம் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டிவிட்டது. அதுபோலவே, எந்த மூலப்பொருளிலிருந்து எல்லா பொருட்களும் படைக்கப்படுகின்றனவோ, அதைக் கண்டுபிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப்படுகின்றனவோ, அதைக் கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், மத விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.

அத்தகைய அறிவு ஒன்று உண்டா என்று சௌனகர் அங்கிரஸைக் கேட்கிறார்.

இரண்டு வகை அறிவுகள்: 4-5

அனைத்திற்கும் அடிப்படையான அறிவு ஒன்று உண்டா என்பது கேள்வி. உண்டு என்று கூறி, அந்த அடிப்படை அறிவு மட்டுமே மிக உயர்ந்தது, மற்ற அனைத்து அறிவுகளும் இரண்டாம் பட்சமானவை, சாதாரணமானவை என்று அங்கிரஸ் சௌனருக்கு உபதேசிக்கிறார்.

தஸ்மை ஸ ஹோவாச த்வே வித்யே வேதிதவ்யே இதி ஹ ஸ்ம யத் ப்ரஹ்மவிதோ வதந்தி பரா சைவாபராச (4)

தஸ்மை- அவரிடம்; ஸ:- அவர்; ஹ உவாச- கூறினார்; த்வே- இரண்டு; வித்யே- அறிவுகள்; வேதிதவ்யே- அறியப்பட வேண்டியவை; இதி- என்று; ஹ யத்- எவை; பராச- உயர்ந்தது; ஏவ-மேலும்; அபராச- சாதாரணமானது; ப்ரஹ்ம வித:- மகான்கள்; வதந்தி ஸ்ம- கூறுகிறார்கள்.

4. அங்கிரஸ் சௌனகரிடம் கூறினார்: உயர்ந்தது
மற்றும் சாதாரணமானது என்று இரண்டுவகை
அறிவுகள் உள்ளன. இவற்றை அறிய வேண்டும் என்று
இறையனுபூதி பெற்ற மகான்கள் கூறுகிறார்கள்.

தத்ராபரா ரிக்வேதோ யஜுர்வேத: ஸாமவேதோ ஸதர்வேத: சிக்ஷா கல்போ வ்யாகரணம் நிருக்தம் சந்தோ ஜ்யோதிஷமிதி அதபரா யயா ததக்ஷரமதிகம்யதே (5)

தத்ர- அவற்றுள்; அபரா- சாதாரணமானது; ரிக்வேத:- ரிக்வேதம்; யஜுர்வேத:- யஜுர்வேதம்; ஸாமவேத:- சாம வேதம்; அதர்வ வேத:- அதர்வண வேதம்; சிக்ஷா- உச்சரிப்பு; கல்பம்-சடங்குகள்; வியாகரணம்- இலக்கணம்; நிருக்தம்- அகராதி; சந்தஸ்-யாப்பு; ஜ்யோதிஷம்-வானவியல், ஜோதிடம்; இதி- ஆகியவை; அத-இனி; பரா-உயர்ந்தது; யயா- எதனால்; தத்- அந்த; அக்ஷரம்- அழிவற்ற இறைவன்; அதிகம்யதே- அடையப்படுகிறாரோ.

5. ரிக்வேதம், யஜுர்வேதம், சாம வேதம்,
அதர்வண வேதம், உச்சரிப்பு, சடங்குகள்,
இலக்கணம், அகராதி, யாப்பு, வானவியல்,
ஜோதிடம் போன்றவை சாதாரண அறிவைச் சேர்ந்
தவை. அழிவற்றவராகிய இறைவன் எந்த அறிவால்
அடையப்படுகிறாரோ அது <உயர்ந்த அறிவு.

இந்து மதத்தின் ஓர் ஒப்பற்ற தனித்தன்மையை இங்கே நாம் காண்கிறோம். வேதங்களைக் கடவுளின் மூச்சாகக் கொள்கின்ற அதேவேளையில் வேதங்களும் சாதாரண அறிவே என்று கூறுவதை இந்து மதத்தில் மட்டுமே நாம் காண முடியும். வேதங்களின் சிறப்பு என்ன? என்று கேட்ட போது சுவாமி விவேகானந்தர், தங்கள் போதனையையும் கடந்து செல்ல வேண்டும் என்று திரும்பத்திரும்ப வற்புறுத்துகின்ற சாஸ்திரம் அது ஒன்றே. தாங்கள் போதிப்பவை எல்லாம் வெறும் குழந்தை <உள்ளத்திற்கே, நீ வளர்ந்ததும் அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கின்றன வேதங்கள். என்கிறார். வேதங்கள்
இறை வாக்காக இருக்கலாம், இறைவனின் மூச்சாக இருக்கலாம். ஆனாலும் அவை இறைவன் அல்ல. இறைவனை அடைவது மட்டுமே உயர்ந்தது, மேலானது.

உயர் அறிவு (6-9)

எந்த அறிவால் இறைவன் அடையப்படுகிறாரோ அது <உயர் அறிவு. (5) அந்த இறைவன் எப்படிப்பட்டவர், அந்த அனுபூதி எப்படிப்பட்டது, அவர் எப்படி இந்த <உலகைப் படைத்தார் போன்றவைபற்றி, தொடரும் 4 மந்திரங்கள் கூறுகின்றன.

இறைவனனைப்பற்றிய அறிவு

யத்ததத்ரேச்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம்
அசக்ஷு: ச்ரோத்ரம் ததபாணிபாதம்
நித்யம் விபும் ஸர்வகதம் ஸுஸூக்ஷ்ம்ம
ததவ்யயம் யத் பூதயோனிம் பரிபச்யந்தி தீரா: (6)

யத்-யார்; தத்- அவர்; அத்ரேச்யம்- பார்க்க முடியாதவர்; அக்ராஹ்யம்- புரிந்துகொள்ள முடியாதவர்; அகோத்ரம்- ஆரம்பம் இல்லாதவர்; அவர்ணம்- நிறங்களற்றவர்; அசக்ஷு: ச்ரோத்ரம்- கண்களோ காதுகளோ இல்லாதவர்; அபாணிபாதம்- கைகளோ காதுகளோ இல்லாதவர்; நித்யம்- என்றென்றும் இருப்பவர்; விபும்- எண்ணற்ற வடிவங்கள் உடையவர்; ஸர்வகதம்- எங்கும் நிறைந்தவர்; ஸுஸூக்ஷ்மம்-மிகவும் நுண்ணியவர்; அவ்யயம்- அழிவற்றவர்; பூதயோனிம்- படைப்பிற்கு மூலகாரணமானவர்; தீரா:- விழிப்புற்றவர்கள்; பரிபச்யந்தி- எங்கும் காண்கிறார்கள்.

6. அந்த இறைவனைப் பார்க்க முடியாது, புரிந்து
கொள்ள முடியாது. அவருக்கு ஆரம்பம் கிடையாது.
அவர் நிறங்கள் அற்றவர். அவருக்குக் கண்களோ
காதுகளோ கைகளோ கால்களோ கிடையாது. அவர்
என்றென்றும் இருப்பவர், எண்ணற்ற வடிவங்கள்
<உடையவர், எங்கும் நிறைந்தவர், மிகவும் நுண்ணிய
வர், அழிவற்றவர், படைப்பிற்கு மூலகாரணமானவர்.
விழிப்புற்றவர்கள் அவரை எங்கும் காண்கிறார்கள்.

அந்த இறைவனைப் பார்க்க முடியாது என்று முதல் வரியும் விழிப்புற்றவர்கள் அவரை எங்கும் காண்கிறார்கள் என்று கடைசி வரியும் முன்னுக்குப் பின் முரண்போல் ஒலிக்கின்றன.

நமது அறிவு புலன்களுக்கு உட்பட்டது. புலன்களின் மூலமே நாம் எதையும் அறிந்துகொள்கிறோம். ஆனால் இறைவன் புலன்களுக்கு அப்பாற்பட்டவர். புலன்களால் அவரைக் கிரகிக்க முடியாது. அதனால்தான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம், உனது இந்தக் கண்ணினால் என்னைப் பார்க்க இயலாது. எனவே உனக்கு தெய்வீகக் கண்ணைத் தருகிறேன். எனது யோக சக்தி மகிமையைப் பார் என்கிறார். அவ்வாறு தெய்வீகக் கண்ணைப் பெற்ற அர்ஜுனன் கடவுளை எங்கும் கண்டான். (பச்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத்- கீதை, 11.17.
பொருள்: கண்ணால் காண முடியாத உன்னை எங்கும் காண்கிறேன்.

இறைவனும் படைப்பும்!

யதோர்ணநாபி: ஸ்ருஜதே க்ருஹ்ணதே ச
யதா ப்ருதிவ்யாம் ஓஷதய: ஸம்பவந்தி
யதா ஸத: புருஷாத் கேச லோமானி
ததாஸக்ஷராத் ஸம்பவதீஹ விச்வம் (7)

யதா- எவ்வாயு; ஊர்ணநாபி:- சிலந்தி; ஸ்ருஜதே- வெளிப்படுத்துகிறது; க்ருஹ்ணதே ச- கிரகித்துக் கொள்கிறது; ப்ருதிவ்யாம்- பூமியிலிருந்து; ஓஷதய:- செடி கொடிகள்; ஸம்பவந்தி- தோன்றுகின்றன; ஸத: புருஷாத்- வாழ்கின்ற மனிதனிடமிருந்து; கேச லோமானி- முடி; ததா- அவ்வாறு; அக்ஷராத்- அழிவற்ற இறைவனிடமிருந்து; இஹ- இங்கே; விச்வம்- பிரபஞ்சம்; ஸம்பவதி- தோன்றுகிறது.

7. எவ்வாறு சிலந்தி தன்னிடமிருந்து வலைநூலை
வெளிப்படுத்தவும் தன்னிடமே அடக்கிக்கொள்ள
வும் செய்கிறதோ, எவ்வாறு பூமியிலிருந்து செடி
கொடிகள் தோன்றுகின்றனவோ, வாழ்கின்ற
மனிதனில் எவ்வாறு முடி வளர்கிறதோ அவ்வாறே
அழிவற்ற இறைவனிடமிருந்து இந்தப் பிரபஞ்சம்
தோன்றுகிறது.

இறைவனுக்கும் படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்குவதற்கு இங்கே மூன்று உவமைகள் கூறப்பட்டுள்ளன. இங்கே மூன்று உவமைகள் கூறப்பட்டுள்ளன. மூன்றும் படிகளாக அமைந்துள்ளன. சிலந்தியும் வலைநூலும். சிலந்தி வலைநூலை வெளியே கொண்டுவருவது இரண்டு காரணங்களுக்காக- 1. தான் தங்குவதற்கான வலைபின்னுவதற்காக;

2. இரை பிடிப்பதற்காக. நூலை வெளியே கொண்டு வருவதற்குச் சிலந்தியின் முயற்சியும் தேவைப்படுகிறது. அதுபோல் இறைவனும் உலகைப் படைத்ததில் ஏதேனும் நோக்கமோ முயற்சியோ உண்டா?

இல்லை. இதனை அடுத்த உவமை விளக்குகிறது.

பூமியிலிருந்து செடிகொடிகள் இயல்பாக வளர்கின்றன. பூமிக்கென்று ஒரு நோக்கமோ முயற்சியோ இல்லை. ஆனால் பூமி ஒரு ஜடப் பொருள், அது உணர்வற்றது. இறைவனும் அப்படிப்பட்டவரா?

இல்லை. இதனை அடுத்த உவமை விளக்குகிறது.

மனிதன் உணர்வு உடையவன். அவனது உடம்பிலிருந்து முடி வளர்கிறது. அதற்கென்று அவன் எந்த முயற்சியும் செய்வதில்லை.

இதிலிருந்து மூன்று விஷயங்கள் தெளிவாகின்றன:

1. இறைவனிலிருந்தே படைப்பு தோன்றியுள்ளது. அவரிலேயே ஒடுங்கவும் செய்கிறது.

2. இறைவன் உலகைப் படைப்பதற்கென்று சொந்த நோக்கமோ முயற்சியோ இல்லை; அவரிடமிருந்து இயல்பாகவே பிரபஞ்சம் தோன்றி ஒடுங்குகிறது.

3. இறைவன் ஒரு ஜடப்பொருள் அல்ல; உணர்வுப் பொருள்.

*இறைவனின் தவத்தால் தோன்றிய உலகம்:

தபஸா சீயதே ப்ரஹ்ம ததோஸன்னமபிஜாயதே
அன்னாத் ப்ராணோ மன: ஸத்யம் லோகா: கர்மஸு
    -சாம்ருதம் (8)

ப்ரஹ்ம- இறைவன்; தபஸா- தவத்தால்; சீய தே- வளர்கிறார்; தத:- அவரிலிருந்து; அன்னம்- தோன்றா நிலை; அன்னாத் - தோன்றா நிலையிலிருந்து; ப்ராண:- பிராணன்; மன:- மனம்; ஸத்யம்- அடிப்படை மூலங்கள்; லோகா:- உலகங்கள்; கர்மஸு- கர்மங்கள்; அம்ருதம் ச- வினைப்பயன்கள்; அபிஜாயதே- தோன்றின.

8. இறைவன் தவத்தால் வளர்கிறார். முதலில்
அவரிலிருந்து தோன்றாநிலை வெளிப்பட்டது.
அதிலிருந்து பிராணன், பிறகு மனம், அடிப்படை
மூலங்கள், உலகங்கள், கர்மங்கள், வினைப்
பயன்கள் எல்லாம் தோன்றின.

இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முந்தைய நிலையே தோன்றாநிலை. எல்லாம் விதையாக ஒடுங்கி இருக்கின்ற நிலை அது. அதிலிருந்தே படைப்பு தோன்றியது.

இறைவன் உலகை எப்படிப் படைத்தார்? தவத்தின் மூலம்.

தவத்தைப்பற்றிய அடிப்படைக் கோட்பாடு ஒன்றை இங்கே காண்கிறோம். செய்கின்ற தவம் எதுவானாலும் அது ஒருவனை வளரச் செய்வதாக இருக்க வேண்டும். அதாவது ஒருவன் வளர்வதற்கான ஆற்றலைதத் தரவேண்டும். இதுமுதல் நிபந்தனை.

அடுத்தது, தவம் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்க வேண்டும். இதனை ஸ்ரீசங்கரர், எவ்வாறு ஒரு விதை முளையை வெளிப்படுத்துகிறதோ, எவ்வாறு ஒரு தந்தை மகிழ்ச்சியுடன் மகனை உருவாக்குகிறானோ அவ்வாறு இறைவன் (தம்மிலிருந்து பிரபஞ்சத்தை வெளிப்படுத்துவதற்காக) வளர்ந்தார் (1. ஜகதங்குரமிவ பீஜமுச்சூனதாம் கச்சதி புத்ரமிவ பிதா ஹர்ஷேண)  என்று எழுதுகிறார்.

பாரதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்று இங்கே கூறப்படுகிறது. சிவபெருமானைக் கணவனாக அடைய எண்ணிய பார்வதி தவம் செய்தாள், அவரைப் பெற்றாள். மந்திரபூர்வமான ஆயுதங்களைப் பெற விரும்பிய அர்ஜுனன் தவத்தின்மூலமே அவற்றைப் பெற்றான். எந்த உயரிய முயற்சிக்கும் தவம் அடிப்படையாகிறது. தவத்தின் மூலம் செய்யப்படுகின்ற முயற்சிகளே அரியனவற்றைச் சாதிக்கிறது. தவம் பற்றி கீதை விரிவாக ஆராய்கிறது.

இறைவனின் தவம் எத்தகையது?

இறைவன் தவத்தால் உலகைப் படைத்தார். அது எத்தகைய தவம்?

ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்ய ஜ்ஞானமயம் தப:
தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாம ரூபமன்னம் ச ஜாயதே (9)

ய: - யார்; ஸர்வஜ்ஞ:- அனைத்தும் அறிந்தவர்; ஸர்வவித்- அனைவரையும் அறிந்தவர்; யஸ்ய- யாருடைய; தப:- தவம்; ஜ்ஞானமயம்- ஞானமயமானது; தஸ்மாத்- அவரிலிருந்து; ஏதத்- இந்த; ப்ரஹ்ம- பிரம்ம தேவர்; நாம- பெயர்கள்; ரூபம்- உருவங்கள்; அன்னம் ச- உணவு; ஜாயதே- தோன்றின.

9. இறைவன் அனைத்தும் அறிந்தவர், அனை
வரையும் தெரிந்தவர். அவரது தவம் ஞானமய
மானது. அவரிலிருந்தே பிரம்ம தேவரும் பெயர்களும்
உருவங்களும் உணவும் தோன்றின.

பொதுவாக தவம் என்றால் முயற்சியும் நோக்கமும் உடையது. அதாவது ஒரு லட்சியத்தை அடைவதற்காக குறிப்பிட்ட பயிற்சிகளைச் செய்கிறோம். ஆனால் இறைவன் உலகைப் படைத்ததற்கு எந்த முயற்சியோ நோக்கமோ இல்லை என்பதை 6-ஆம் மந்திர விளக்கவுரையில் கண்டோம். எனவே இறைவனின் தவம் வேறுபட்டது. அதனை ஞானமயமானது என்கிறது இந்த மந்திரம். இறைவன் <உலகைப் படைக்கிறார், காக்கிறார், ஒடுக்குகிறார். ஆனால் இவை எவற்றையும் சொந்த நோக்கத்திற்காக, சுய லாபத்திற்காக அவர் செய்யவில்லை. தெளிவாகச் சொல்வதானால், இறைவன் பற்றின்றி செயல்படுகிறார். இதனையே ஸ்ரீகிருஷ்ணர், செயல்கள் என் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. வினைப்பயனிலும் எனக்கு ஆசையில்லை (1. ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மஃபலே ஸ்பருஹா:- கீதை, 4.14.) என்கிறார். இவ்வாறு இறைவன் பற்றின்றி <உலகைப் படைத்து இயக்குவதாலேயே இந்த உலகம் இவ்வளவு அழகாக இருக்கிறது என்று வியக்கிறார் சுவாமி விவேகானந்தர். இறைவன் தன்னை நன்றாக மறைத்துக் கொண்டிருக்கிறார்; அவரது செயல் மகோன்னதமானதாக இருக்கிறது என்கிறார் அவர்.

இவ்வாறு பற்றின்றி செய்யப்படும் தவம் ஞான மயமான தவம் ஆகிறது. இத்தகைய தவத்திலிருந்து உலகம் தோன்றியது.

அக்ஷர-பரா வித்யை

முண்டக உபநிஷதத்தில் 1:1.4,5,9 மந்திரங்களில் அக்ஷர-பரா வித்யை கூறப்படுகிறது.

வித்யைகள் இறைநெறிச் சாதனைகள்; மிகவும் தகுதி வாய்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டியவை. எனவே அவை ரகசியமாகப் (3. குஹ்யா ஏவ ஆதேசா: - சாந்தோக்ய உபநிஷதம், 3.5.1) பாதுகாக்கப்பட்டன. குருவின் நேரடிப் பார்வையிலேயே சீடர்கள் இதனைப் பழகினர். காலப் போக்கில் தகுதி வாய்ந்தவர்கள் குறையக்குறைய வித்யைகள் பற்றிய அறிவும் அரிதாகி, இன்று ஏறக்குறைய மறைந்தே விட்டன.

அக்ஷர- பரா வித்யையின் முதற்பகுதி (4,5) அறிவுபற்றி பேசுகின்றன. இதில் சாதாரண அறிவும் ஆன்மீக அறிவும் அடங்கும். சாதாரண அறிவில் வானவியல், ஜோதிடம் போன்ற உலகியல் அறிவும் அடங்குகிறது என்பது கருத்தில் கொள்ள வேண்டியதாகும். அதாவது உலகியல் அறிவு சம்பந்தப்பட்டவையும் ஒரு வித்யையாகச் செய்யப்பட்டன. இந்த வித்யைகளில் சில செல்வத்திற்காகவும், சில முக்திக்காகவும், சில செயல்திறனுக்காகவும் செய்யப்படுகின்றன (1. தத்ர கானிசித் ப்ரஹ்மண <உபாஸனானி அப்யுதயார்த்தானி, கானிசித் க்ரமமுக்த்யர்த்தானி, கானிசித் கர்ம ஸம்ருத்தயர்த்தானி- பிரம்ம சூத்திரம், 1.1.12 முன்னுரையில்) என்று எழுதுகிறார் ஸ்ரீசங்கரர்.

இந்திய மனத்தின் ஓர் அடிப்படைப் பண்பை இங்கு நாம் காண்கிறோம். உலகியல் தேவைகளுக்கும் அகத்தையே நாடியது இந்திய மனம். அன்னியர்கள் பேராசை கொண்டு, படையுடன் வரும் அளவிற்கு நமது நாட்டில் செல்வ வளம் கொழித்ததற்கு மூலகாரணமாக இருந்தது இத்தகைய அகநாட்டம் தான். இத்தகைய வித்யைகளின் மூலம்தான் விஞ்ஞானம், மருத்துவம், வானவியல், ஜோதிடம் என்று உலகியல் துறைகளிலும் அரிய சாதனைகளை நிகழ்த்தியது நம் நாடு.

நம்மில் <உறங்கிக் கிடக்கின்ற ஆன்மா, அக நாட்டத்தின்மூலம் விழித்தெழும்போது ஆன்மீகத்தில் உச்சங்களை அடையலாம் என்பது போலவே உலகியலிலும் அரியவற்றைச் சாதிக்கலாம். இதையே சுவாமி விவேகானந்தர், வலிமையானவர்- வலிமையற்றவர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்று ஒவ்வொருவரின் உள்ளேயும் அந்த ஆன்மா உள்ளது; மகத்தானவர்களாக, மேலோர்களாக ஒவ்வொரு வரும் மாறுவதற்கான எல்லையற்ற வாய்ப்பும் எல்லையற்ற ஆற்றலும் அந்த ஆன்மாவில் உள்ளது.... உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து றறறதன்னுணர்வில் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும் எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும் என்று கூறுகிறார்.

அக்ஷர-பரா வித்யை என்பது செல்வத்தையும் செயல்திறனையும் ஆன்ம சக்தியின் வாயிலாக, இறையருளின் வாயிலாகப் பெறுவதற்கான வித்யையாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் உலகியல் அறிவு பற்றியும் (4,5), கடவுள் பற்றியும் (9) இதில் சொல்லப்பட்டுள்ளது.

இதி முண்டகோபநிஷதி ப்ரதம முண்டகே ப்ரதம: கண்ட:

இவ்வாறு முண்டக உபநிஷதத்தின் முதற்பகுதியில் முதல் அத்தியாயம் நிறைவுறுகிறது.

 
மேலும் முண்டக உபநிஷதம்! »
temple news
உலகம் சம்பந்தமானது சாதாரண அறிவு, கடவுளைப் பற்றியது உயர் அறிவு என்று முந்தின அத்தியாயத்தில் ... மேலும்
 
temple news
மணியோசை, போலவும், எண்ணெய் ஒழுக்குபோல் இடைவிடாமலும் ஓங்காரத்தை உச்சரிக்க வேண்டும். (1. தைல தாராம் ... மேலும்
 
temple news
3:2 இறையனுபூதிசாதாரண அறிவு உலக இன்பதுன்பங்களில் ஆழ்த்தி மீண்டும் மீண்டும் பிறவிக்கே வழிவகுக்கும். உயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar