Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news போகமும் துறவும்! ஆன்ம ஞானம் ஏன் அவசியம்? ஆன்ம ஞானம் ஏன் அவசியம்?
முதல் பக்கம் » முண்டக உபநிஷதம்!
ஓங்காரத்தை ஜபிப்பது எப்படி?
எழுத்தின் அளவு:
ஓங்காரத்தை ஜபிப்பது எப்படி?

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
03:06

மணியோசை, போலவும், எண்ணெய் ஒழுக்குபோல் இடைவிடாமலும் ஓங்காரத்தை உச்சரிக்க வேண்டும். (1. தைல தாராம் இவாச்சின்னம் தீர்க கண்டா நினாதவத் - சாண்டில்ய உபநிஷதம், 1.6)மணியோசை அமைதியிலிருந்து எழுந்து உயர்கிறது. பிறகு அமைதியில் கரைகிறது. அதுபோல் ஓங்காரத்தை உச்சரிக்கும் போதும் மென்மையாக ஆரம்பித்து படிப்படியாக ஒலியை அதிகரித்து மீண்டும் மென்மையாக்கி நிறுத்த வேண்டும். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உச்சரிக்க வேண்டும். ஒருமுறை உச்சரிக்கும்போது இடைவெளி வரக்கூடாது. என்பதைக் குறிப்பிடவே எண்ணெய் ஒழுக்கு உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஜபிப்பதன்மூலம் ஆன்ம தியானம் கைகூடுகிறது.

ஆன்மா எங்கே இருக்கிறது. என்பதற்கும் இந்த உபநிஷதம் ஒரு விடை கூறுகிறது. நாடிகள் கூடுமிடத்தில் ஆன்மா இருக்கிறது. நாடிகள் கூடும் இடம் என்பது இதயம் ஆகும். நூற்றொரு நாடிகள் இதயத்தில் கூடுவதாகக் கட உபநிஷதம் கூறுகிறது.(1. சதம் சைகா ச ஹ்ருதயஸ்ய நாட்ய - கட உபநிஷதம், 2:3.16)

இதயம் என்பது பிராணனின் இருப்பிடம் உணர்ச்சிகள். செயல்பாடுகள் என்று வாழ்க்கையின் அனைத்தும் இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை மூளை அனைத்துச் செயல்களின் மையமாக இருந்தாலும் நமது சாஸ்திரங்கள் இதயத்தையே மையமாகக் கொள்கின்றன. நான் என்று சொல்லும்போது சரி, ஆழ்ந்த மனக்கவலை, அளவற்ற சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது சரி, இதயத்தில் கைவைத்தே நாம் பேசுவது இங்கு நினைவுகூரத் தக்கது. இந்த இதயம் நாம் அறிந்த பவுதீக இதயம் அல்ல. இது உணர்ச்சி இதயம். இந்த இதயத்திலிருந்து நூற்றொரு நாடிகள் புறப்படுகின்றன. இவற்றின்மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன. அனுபவங்கள் பெறப்படுகின்றன.

இதயம் நாடிகள் போன்றவை சாதாரணக் கண்களாலோ கருவிகளாலோ அறியப்படுபவை அல்ல பிரார்த்தனை. தெய்வீக வாழ்க்கை,  ஆழ்நிலைச் சிந்தனைகள் போன்றவை மூலம் தூய்மையும் ஆற்றலும் பெற்ற மனத்தினால் மட்டுமே அறியத் தக்கவை.

ஆன்மக் காட்சி:

ஆரம்ப சாதனைகளாலும் (1:2. 12-13), ஆழ்ந்த சிந்தனையாலும் (2:1), பிராணவ தியானத்தாலும் ( 2:2.6) ஆன்மக் காட்சி அல்லது ஆன்ம ஆன்ம அனுபூதி வாய்க்கிறது. இந்த ஆன்மா யார்? எங்கும் நிறைந்த இறைவனே, அவர் நமது இதயத்தில் ஆன்மாவாக விளங்குகிறார்.

ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்யைஷ, மஹிமா புவி/
திவ்யே ப்ரஹ்மபுரே ஹ்யேஷ வ்யோம்ன்யாத்மா ப்ரதிஷ்ட்டித://

மனோமய: ப்ராணசரீர நேதா
ப்ரதிஷ்ட்டிதோஸன்னே ஹ்ருதயம் ஸன்னிதாய/
தத்விஜ்ஞானேன பரிபச்யந்தி தீரா
ஆனந்தரூபம் அம்ருதம் யத்விபாதி //7//

ய:- யார்; ஸர்வஜ்ஞ: - எல்லாம் அறிந்தவர்; ஸர்வவித் - அனைத்து அறிவு வடிவானவர்: ஏஷ: - இந்த; புவி - உலகம்: யஸ்ய - யாருடைய: மஹிமா - மகிமையோ, ஏஷ: ஆத்மா - இந்த ஆன்மா, திவ்யே - ஒளிமயமான: ப்ரஹ்மபுரே - இதயத்தினுள்; வ்யோம்னி - வெளியில்; ப்ரதிஷ்ட்டித: - நிலைபெற்றுள்ளது; மனோமய: - மனமாக; ப்ராண: - பிராணன்; சரீர: - உடம்பு; நேதா - வழிநடத்துபவர்: ஹ்ருதயம் - இதயத்தில்: ஸன்னிதாய - நிலைபெற்றவராக: அன்னே - உடம்பில்: ப்ரதிஷ்ட்டித: - உறைகிறார்: தத் - அவரை; தீரா - விழிப்புணர்வு பெற்றவர்கள்: விஜ்ஞானேன - புத்தியால்; பரிபச்யந்தி - அறிகிறார்கள்; யத் - யார்: ஆனந்தரூபம் - ஆனந்த வடிவினர்: அம்ருதம் - அழிவற்றவர்; விபாதி - ஒளிர்கிறார்.

7. இறைவன் எல்லாம் அறிந்தவர், அனைத்து
அறிவு வடிவானவர், ஆனந்த வடிவினர், அழி
வற்றவர், இந்த உலகம் யாருடைய மகிமையோ
அந்த இறைவன் ஒளிமயமான இதயத்தினுள் உள்ள
வெளியில் ஆன்மாவாக ஒளிர்கிறார், மனமாக
அமைந்து பிராணனையும் உடம்பையும் வழிநடத்து
கிறார். இதயத்தில் நிலைபெற்றவராக உடம்பு முழு
வதும் வியாபித்திருக்கிறார். விழிப்புணர்வு பெற்ற
வர்கள் தங்கள் புத்தியால் அவரை அறிகிறார்கள்.

இதயம் பற்றி முந்தின மந்திரம் குறிப்பிட்டது. இது தூய்மையும் ஆற்றலும் பெற்ற மனத்தால் மட்டுமே அறியத்தக்கது என்று அங்கே கண்டோம். இந்த இதயத்தினுள் வெளி ஒன்று உள்ளது. அதில் ஆன்மா உள்ளது.

இது எந்த இதயம்? லப்டப் என்று துடித்துக் கொண்டிருக்கின்ற பவுதீக இதயம் அல்ல இது. இது ஆன்மீக இதயம். இதற்கு மூன்று அடையாளங்களைச் சொல்கிறது. நாராயண ஸூக்தம். ஒன்று, தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் உள்ளது. பவுதீக இதயமும்  அதே தூரத்தில்தான் உள்ளது, ஆனால் அது சற்று இடது புறம் உள்ளது. ஆனால் ஆன்மீக இதயம் நடுவில் உள்ளது. இரண்டு, சுடர் வரிசையால் சூழப்பட்டுள்ளது. மூன்று, அந்த இதயம் பிரகாசிக்கிறது.

1. அதோ நிஷ்ட்ட்யா விதஸ்த்யாந்தே நாப்யாமுபரி திஷ்ட்டதி
ஜ்வாலமாலாகுலம் பாதீ விச்வஸ்யாயதனம் மஹத் - நாராயண ஸூக்தம், தைத்திரீய ஆரண்யகம். 4.10.13.7.

இந்த மூன்று அடையாளங்களும் பவுதீக இதயத்திற்குப் பொருந்தாது. இந்த ஆன்மீக இதயம்தான் இதயக்குகை. ஆனால் இதனை நாம் உணர்வதில்லையே! உணர்வதில்லை. ஆனாலும் அது எங்கே உள்ளது. இதுவே புத்தி, தீ: இதயத் தாமரை, மூன்றாம் கண், ஞானக் கண் என்றெல்லாம் சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

மிகப் பெரும்பாலோரிடம் இந்த ஆன்மீக இதயம் மலராமல் அரும்பாகவே உள்ளது. இதனால்தான் இது குகை, இருண்ட பகுதி, மறைவான இடம் என்றெல்லாம் கூறப்பட்டது. முதலில் அதை மலரச் செய்ய வேண்டும். உணர வேண்டும்.

இந்த இதயத்தின் உள்ளே உள்ளது ஒரு வெளி: தாமரை மொட்டுப் போன்ற இதயம் நாற்புறங்களிலும் நாடிகளால் குழப்பட்டு தொங்குகிறது. அதன் உள்ளே நுண்ணிய ஆகாசம் உள்ளது. அனைத்தும் அதில் நிலை பெற்றுள்ளன.

1. ஸந்ததம் சிலாபிஸ்து ஸம்பத்யாகோச ஸன்னியம் தஸ்யாந்தே
ஸுஷிரம் ஸூக்ஷ்மம் தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்ட்டிதம் - நாராயண ஸூக்தம், தைத்திரீய ஆரண்யகம், 4.10.13

சாந்தோக்ய உபநிஷதம் இதனை மிக அழகாகக் கூறுகிறது: இந்த உடம்பினுள் தாமரை போன்ற சிறு மாளிகை உள்ளது. அதனுள் அக வெளி உள்ளது. அதில் இருப்பதைத் தேட வேண்டும். ... (புறத்தில் காணப்படுகின்ற) வெளி எவ்வளவு பெரியதோ இதயத்தின் உள்ளே உள்ள வெளியும் அவ்வளவு பெரியது.

2. யதிதம் அஸ்மின் ப்ரஹ்மபுரே தஹரம் புண்டரீகம் வேச்ம தஹரோஸஸ்மின் அந்தராகாச: தஸ்மின் யதந்தஸ்தத் அன்வேஷ்ட்டவ் யம் .... யாவான் வா அயம் ஆகாச: தாவான் ஏஷ அந்தர்ஹ்ருதய: ஆகாச: - சந்தோக்ய உபநிஷதம் , 8.1.1,3

இந்த வெளியில் ஆன்மா உள்ளது.

அவரை எப்படி  அறிவது?

இரண்டு நிபந்தனைகள் இங்கே கூறப்பட்டுள்ளன.- 1. புத்தியால் அவரை அறிய வேண்டும். 2. விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். புத்தி என்பது பற்றி ஏற்கனவே கண்டோம். புத்தி அல்லது ஆன்மீக இதயம் மலர்ந்தவர்களால் மட்டுமே ஆன்மாவை அறிவதோ இறைவனை நாடுவதோ உண்மையில் இயலும்.

ஆன்மக் காட்சியின் பயன்:

பித்யதே ஹ்ருதய க்ரந்தி: சித்யந்தே ஸர்வஸம்சயா:
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்ட்டே பராவரே//8//

பர அவரே - உயர்ந்ததும் தாழ்ந்ததும்; தஸ்மின் - ஆன்மாவை; த்ருஷ்ட்டே - தரிசித்தால்; ஹ்ருதய க்ரந்தி: - மனக் குழப்பம்; பித்யதே - அகல்கிறது: ஸர்வ ஸம்சயா: - எல்லா சந்தேகங்களும்: சித்யந்தே - விலகுகின்றன; அஸ்ய - அவனது: கர்மாணி ச - வினைப்பயன்களும்: க்ஷீயந்தே - அழிகின்றன.

8. உயர்ந்தது, தாழ்ந்தது என்று அனைத்துமாக
விளங்குகின்ற ஆன்மாவைத் தரிசித்தால் மனக்
குழப்பங்கள் அகல்கின்றன: எல்லா சந்தேகங்களும்
விலகுகின்றன. வினைப்பயன்களும் அழிகின்றன.

ஆன்ம தரிசனத்தால் என்ன பயன்? ஒரே வரியில் சொல்வதனால் ஒருவன் இறைக் காட்சிக்கு அல்லது இறையனுபூதிக்குத் தகுந்தவன் ஆகிறான். இதனை மூன்று படிகளாக இந்த மந்திரம் கூறுகிறது.

1. மனக் குழப்பங்கள் அகல்கின்றன. மனம் தெளிவு பெறுகிறது. ஆன்ம ஒளியின் பிரகாசத்தால் மனத்தில் இருண்ட பகுதிகள் எதுவும் இல்லாமல் போய்விடுகின்றன. ஆழ்மனத்தில் (ண்தஞஞிணிணண்ஞிடிணிதண் ட்டிணஞீ) உள்ள தீய சம்ஸ்காரங்கள் வெளியேற்றப்படுகின்றன. நல்ல சம்ஸ்காரங்கள் இறையனு பூதிக்குச் சாதகமாகச் செயல்படுமாறு தூண்டப்படுகின்றன.

2. சந்தேகங்கள் விலகுகின்றன. ஆன்ம ஞானத்தின் பேரொளி வீசாமல் சந்தேகங்கள் விலகுவதில்லை. சந்தேகவாதி அழிகிறான். (

1. ஸம்சயாத்மா விநச்யதி கீதை, 4.40

என்கிறது கீதை. ஆன்மீக வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் சந்தேகங்கள் வருவது இயல்பு. சாஸ்திரங்களின் துணையுடனும், தூயவர்களின் உதவியுடனும் அவற்றை நிவர்த்தி  செய்துகொள்ளலாம். அப்படியும் எல்லா சந்தேகங்களும் விலகுவதில்லை. அவையும் விலக வேண்டுமானால் ஆன்ம தரிசனம் பெற வேண்டும் என்பதை இந்த மந்திரம் சுட்டிக்காட்டுகிறது.

3. வினைப்பயன்கள் அழிகின்றன. தீவிரமான ஜபம், தியானம், தவம் போன்றவற்றால் வினைப்பயனின் வேகம் கட்டுப்படலாம். ஆனால்  அந்த அனுபவத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. இதனை அன்னை ஸ்ரீசாரதா தேவி, வினைப்பயனை ஒருவன் அனுபவித்தே தீர வேண்டும். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. ஆனால், ஜபம் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, ஒருவனுக்கு முன்வினையின் படி காலை இழக்க வேண்டும் என்று இருந்தால் அவன் காலில் ஒரு முள்ளாவது குத்தவே செய்யும் என்று கூறுவார். ஆன்ம தரிசனத்தால் வினைப்பயன்களும் அழிந்து விடுகின்றன.

இறைவனை நோக்கிச் செல்வதில் இருந்த தடைகள் அனைத்தும் இவ்வாறு நீங்கப் பெற்றவன் இறைவனை நாடுகிறான்; இறையனுபூதி பெறுகிறான்.

இறையனுபூதிக்கு ஆன்ம அனுபூதி வேண்டும்:

ஹிரண்மயே பரே கோசே விரஜம் ப்ரஹ்ம நிஷ்கலம்/
தச்சுப்ரம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ் தத்யத் ஆத்மவிதோ விது: //9//

ஹிரண்மயே - பொன்னிறமான; பரே - மேலான; கோசே - உறையில்; விரஜம் - குறைகளற்ற; நிஷ்கலம் - பகுதிகளற்ற; ப்ரஹ்ம - இறைவன்; தத் - அவர்; சுப்ரம் - தூயவர்; ஜ்யோதிஷாம் - ஒளிகளுக்கெல்லாம்; ஜ்யோதி: - ஒளியானவர்: யத் தத் -யாரோ அவரை: ஆத்ம வித: - ஆன்மாவை அறிந்தவர்கள்: விது: - அறிகிறார்கள்.

9. பொன்னிறமாக ஒளிர்கின்ற மேலான உறையில்
இறைவன் உள்ளார். அவர் குறைகளற்றவர்.
பகுதிகள் அற்றவர், தூயவர், ஒளிகளுக்கெல்லாம்
ஒளியானவர் ஆன்மாவை அறிந்தவர்கள் அவரை
அறிகிறார்கள்.

இறையனுபூதிக்கான நிபந்தனை என்ன? ஆன்ம அனுபூதி, புத்தி அல்லது இதயம் இங்கே பொன்னிறமான உறையாகக் கூறப்படுகிறது. அதில் ஆன்மாவைக் கண்டு அறிந்தவர்கள் இறைவனைத் தரிசிக்கிறார்கள்.

ஆன்ம அனுபூதி: தன்மை:

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோஸயமக்னி:
தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி         //10//

தத்ர - அங்கே; ஸூர்ய: - சூரியன்; ந பாதி - ஒளிர்வதில்லை; சந்த்ர தாரகம் - சந்திரனும் நட்சத்திரங்களும்; ந - ஒளிர்வதில்லை; இமா: - இந்த; வித்யுத: - மின்னல்: ந பாந்தி - ஒளிர்வதில்லை: அயம் - இந்த; அக்னி: - அக்கினி: குத: - எங்கே: பாந்தம் - ஒளிர்கின்ற: தம் - அதனை: அனு ஏவ  - அனுசரித்தே: ஸர்வம் - எல்லாம்: பாதி - ஒளிர்கின்றன; இதம் ஸர்வம் - இந்த அனைத்தும் ; தஸ்ய - அதன்; பாஸா - ஒளியால்; விபாதி - ஒளிர்கின்றன.

10. அங்கே சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரனும்
நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை; மின்னல் ஒளிர்வ
தில்லை. இதில் அக்கினி எப்படி ஒளிர முடியும்?
ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற
அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன்
ஒளியால் ஒளிர்கின்றன.

ஆன்ம அனுபூதி என்பது ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது. அனைத்தையும் காண ஒரு விளக்கு தேவை. சூரியனைக் காண விளக்கு தேவையா? தேவையில்லை. ஏனெனில் சூரியனின் ஒளியால்தான் அனைத்தும் ஒளிர்கின்றன. அதுபோல் ஆன்ம ஒளியால்தான் நாம் அனைத்தையும் காண்கிறோம். உலகப் பொருட்களைக் காண்பதற்கு உதவுகின்றன சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தும் பிரகாசிப்பது ஆன்ம ஒளியால்தான். எனவே ஆன்ம ஒளியைக் காட்ட இந்த ஒளிகளால் இயலாது.

பொதுவாக ஒளி, காட்சி என்றெல்லாம் படிக்கும்போது அது சாதாரணமாக நாம் காண்கின்ற ஒளியைப் போன்றது. அதைவிடப் பேரொளியானது என்றெல்லாம் எண்ணிக் கொள்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல, பெட்ரோமாக்ஸ் விளக்கிலிருந்து வருகின்ற ஒளி போன்றதல்ல ஆன்ம ஒளி. அனைத்தையும் நாம் அறிந்துகொள்வது ஆன்ம ஒளியால்தான். அதன் காரணமாகவே அது ஒளி என்று கூறப்பட்டுள்ளது. என்று இதனை விளக்குகிறார் ஸ்ரீரமண மகரிஷி இந்த ஒளி ஒரு நிலையைக் குறிக்கிறது என்று கூறுகிறார். ஸ்ரீராமகிருஷ்ணர்; இந்த நிலையை இருளுக்கும் ஒளிக்கும் இடைப்பட்ட நிலை எனலாம். இந்த ஒளி நாம் காண்கின்ற ஒளி அல்ல, பவுதீக ஒளி அல்ல என்கிறார் அவர்.

ஆன்ம ஆனுபூதி, இறையனுபூதி என்பது ஓர் அனுபவம்; உணர வேண்டியது. ஒரு புறக் காட்சிபோல் அதனைக் காண முடியாது. அன்பு, இரக்கம், இன்பம் போன்றவற்றை யாரும் காண முடியாது; அனுபவிக்கவே முடியும். அதுபோல் ஆன்ம அனுபூதியையும் அனுபவிக்க முடியுமே தவிர காண முடியாது.

எனினும் மிக உயர்ந்த நிலைகளில் புறக் கண்களாலேயே இந்தக் காட்சிகளைக் கண்டதாக பல மகான்களின் வரலாறு தெரிவிக்கிறது. குறிப்பாக பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதா தேவி ஆகியோரின் வாழ்க்கையில் இதனை நாம் காண்கிறோம். அன்னையிடம் இதுபற்றி சீடர் ஒருவர் கேட்டபோது அன்னை, பொதுவாக இவை அகக் காட்சிகள்தான். ஆனால் ஒருமுறை நான் நேரடியாகவே கண்டேன் என்று பதில் கூறினார்.

இறையனுபூதி:

ஆன்ம அனுபூதி பெற்றவன் இறையனுபூதிக்குத் தகுதி பெறுகிறான். அந்த இறையனுபூதியின் தன்மை என்ன?

ப்ரஹ்மைவேதம் அம்ருதம் புரஸ்தாத் ப்ரஹ்ம
பச்சாத்ப்ரஹ்ம தக்ஷிணதச்சோத்தரணே
அதச்சோர்த்வம் ச ப்ரஸ்ருதம்
ப்ரஹ்மைவேதம் விச்வமிதம் வரிஷ்ட்டம்//11//

இதம் - இந்த ; புரஸ்தாத் - முன்னால்: பச்சாத் - பின்னால்; தக்ஷிணத: - வலது பக்கம்: உத்தரேண - இடது பக்கம்: அத: - கீழே: ஊர்த்வம் - மேலே: ப்ரஸ்ருதம் - எங்கும்: விச்வம் - பிரபஞ்சம்; வரிஷ்ட்டம் - மேலான: அம்ருதம் - அழிவற்ற: ப்ரஹ்ம ஏவ - இறைவனே.

11. முன்னால், பின்னால், வலதுபக்கம், இடது
பக்கம், கீழே, மேலே என்று பிரபஞ்சம் முழுவதும்
மேலான, அழிவற்ற  இறைவனே நிறைந்துள்ளார்.

இறைக்காட்சியின் தன்மை என்ன? எங்கும் இறைவனைக் காண்பது, இதனை, விஞ்ஞானம் என்று விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். விஞ்ஞானம் என்பது என்ன? இறைவனைச் சிறப்பாக அறிவது, விறகில் நெருப்பு உள்ளது என்ற அறிவுதான். என்ற நம்பிக்கைதான் ஞானம்;  அந்த நெருப்பில் சோறு சமைப்பது, உண்பது, அதனால் வலிமை பெறுவது விஞ்ஞானம், இறைவன் இருக்கிறார் என்று உணர்வில் உணர்வது ஞானம். அவருடன் பேசுவது, அவருடன் கலந்து ஆனந்தம் பெறுவது விஞ்ஞானம். இறைவனே உயிர்களாகவும் உலகமாகவும் ஆகியிருப்பதைத் தரிசிப்பது விஞ்ஞானம் என்கிறார் அவர். அந்த விஞ்ஞான நிலையை இந்த மந்திரம் விளக்குகிறது.

இதி முண்டகோபநிஷதி த்விதீய முண்டகே த்விதீய: கண்ட: //


3:1 நிழலும் நிஜமும்

ஆன்ம அனுபூதி பற்றி 2.2- இல் தொடங்கிய விளக்கம் இந்த அத்தியாயத்திலும் தொடர்கிறது.

ஆன்மா என்ற ஒன்று. மாறாத ஒன்று, இறைவனின் அம்சமான ஒன்று நம்மில் இருக்குமானால், அந்த ஆன்மாவே நாம் என்பது உண்மையானால் நமக்கு இன்பதுன்பங்கள் ஏன் வரவேண்டும்?

நாம் நிழலை நிஜம் என்று நம்புவதால் என்று இந்த அத்தியாயம் பதிலளிக்கிறது.

நிழல் எது? நிஜம் எது?

நிழல் - இதுதான் நான் என்று நாம் கருதிக் கொண்டிருக்கின்ற நான் = ஜீவன்

நிஜம் = உண்மை நான் = ஆன்மா

இதனை இரு பறவை உவமையின் மூலம் விளக்க முற்படுகிறது இந்த அத்தியாயம்.

நம்முள் இருவர் 1-2

த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா
ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே/
தயோரன்ய பிப்பலம் ஸவாத்வத்தி
அனச்னன் அன்யோ அபிசாகசீதி //1//

ஸயுஜா - இணைபிரியாத: ஸகாயா - ஒரேபோன்ற; த்வா - இரண்டு; ஸுபர்ணா: - பறவைகள்: ஸமானம் - ஒரே; வ்ருக்ஷம் - மரத்தில்; பரிஷஸ்வஜாதே - இருக்கின்றன; தயோ: - அவற்றுள்: அன்ய - ஒன்று: பிப்பலம் - பழத்தை; ஸ்வாது - ருசித்து; அத்தி - தின்கிறது; அன்ய - மற்றொன்று; அனச்னன் - தின்னாமல்; அபிசாகசீதி - பார்த்துக் கொண்டிருக்கிறது.

1. இணைபிரியாத, ஒரேபோன்ற இரண்டு
பறவைகள் ஒரே மரத்தில் அமர்ந்திருக்கின்றன.
அவற்றுள் ஒன்று பழத்தை ருசித்துத் தின்கிறது. மற்
றொன்று தின்னாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஸமானே வ்ருக்ஷே புருஷோ நிமக்னோ
ஸநீசயா சோசதி முஹ்யமான:/
ஜுஷ்ட்டம் யதா பச்யத்யன்யம் ஈசமஸ்ய
மஹிமானமிதி வீதசோக: //2//

ஸமானே - ஒரே வ்ருக்ஷே - மரத்தில்: புருஷ: - மனிதன்: நிமக்ன - மூழ்கி: அநீசயா - அறியாமையால்; முஹ்யமான: - மோக வசப்பட்டு: சோசதி - வருந்துகிறான்: ஜுஷ்ட்டம் - வழிபாட்டிற்குரிய: அன்யம் -மற்ற; ஈசம் - ஆன்மாவை: அஸ்ய - அதன்: மஹிமானம் - மகிமையை: யதா - எப்போது; பச்யதி - பார்க்கிறானோ; வீதசோக; இதி - கவலைகளிலிருந்து விடுபடுகிறான்.

2. ஜீவனும் ஆன்மாவும் ஒரே உடம்பினுள்
உள்ளனர். ஜீவன் அதாவது மனிதன் அறியாமையில்
மூழ்கி, மோக வசப்பட்டு வருந்துகிறான். வழி
பாட்டிற்குரிய தன் ஆன்மாவையும் அதன் மகிமை
யையும் அவன் எப்போது பார்க்கிறானோ அப்போது
கவலைகளிலிருந்து விடுபடுகிறான்.

உடம்பு, மனம், பிராணன், ஆன்மா என்ற பலவற்றின் தொகுதி மனிதன். இருபறவை - உவமையைப் பொருத்திப் பார்ப்போம்.

மரம் - உடம்பு
பழத்தைத் தின்னும் பறவை - ஜீவன் (மனம் + பிராணன்) = நிழல்.

பழத்தைத் தின்னாத பறவை = ஆன்மா = நிஜம்.

பொதுவாக நாம் நம்மை ஜீவனுடன் அதாவது மனத்துடனும் உடம்புடனுமே ஒன்றுபடுத்திக் காணப் பழகியுள்ளோம். அவை இரண்டும் நிழல், உண்மையற்றவை. மாறக் கூடியவை. இவை கொண்டுவரும் அனுபவங்களுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளும்போது இன்ப துன்பங்களுக்கு உள்ளாகிறோம்; பிறவிச் சுழலில் உழல்கிறோம்.

ஆனால் நம்முள் உள்ள ஆன்மா நிஜம், இறைவனிலிருந்து தோன்றிய பொறி. எனவே இறையம்சம் கொண்டது அதனுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளும்போது நாம் கவலைகளிலிருந்து விடுபடுகிறோம். நமது மகிமையில் திளைக்கிறோம்.

சுவாமி விவேகானந்தர் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுகின்ற உவமை இது. இந்த இரு பறவை உவமையைக் கூறும்போது அவர் பரவசத்திற்கே சென்றுவிடுகிறார். என்றுதான் சொல்ல வேண்டும். அவரது விளக்கத்தைக் காண்போம்.

உலகின் தத்துவங்களில் மிகச் சிறந்ததும் முழுமை பெற்றதுமான வெளிப்பாட்டையும் இந்துக்களின் சிந்தனை சாரத்தையும், முக்தி பற்றிய மனித குலத்தின் முழுக் கனவையும் வேறு எங்கு இவ்வளவு அழகிய மொழியில் இத்தனை அற்புத உவமையுடன் சொல்லி இருப்பதைக் காண முடியும்?

ஒரு மரத்தில் அழகிய இறகுகள் கொண்ட இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று மிகுந்த நேசம் பாராட்டுகின்றன. ஒன்று பழங்களைத் தின்கிறது. மற்றொன்று உண்ணாமல் கம்பீரமாக அமைதியாக உட்கார்ந்திருக்கிறது. கீழ்க்கிளையில் அமர்ந்திருக்கும் பறவை மாறிமாறி இனிப்பும் கசப்புமான பழங்களைத் தின்பதால் அதற்கேற்ப மகிழ்ச்சியும் வேதனையும் அடைகிறது. ஆனால் மேலே அமர்ந்திருக்கின்ற மற்ற பறவையோ அமைதியாக கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. அது இனிப்பையும் உண்ணவில்லை. கசப்பையும் தின்னவில்லை. எனவே சுகம் துக்கம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் மகிமையிலேயே ஆழ்ந்திருக்கிறது.

மனிதனின் நிலை இதுதான். வாழ்க்கை தரும் இனிப்பும் கசப்புமான பழங்களை உண்கிறான்: பணத்தை நாடி, புலனின்பங்களைத் தேடி, வாழ்க்கையின் நிலையற்ற இன்பங்களைத் தேடி, பைத்தியக்காரத்தனமாக, வெறித்தனமாக, இடையீடின்றி ஓடிக் கொண்டிருக்கிறான். சில இடங்களில், ஆன்மாவைத் தேர்ப்பாகனுக்கும், புலன்களைக் கட்டுக்கடங்காத வெறிபிடித்த குதிரைகளுக்கும் உபநிடதங்கள் ஒப்பிடுகின்றன.

1. ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ து
புத்திம் து ஸாரதிம் வித்தி மன: ப்ரக்ரஹமேவ ச
இந்த்ரியாணி ஹயானாஹுர் விஷயாம் ஸ்தேஷு கோசரான் - கட உபநிஷதம், 1:3. 3,4.

குழந்தைகள் ஒளிமயமான இன்பக்கனவுகளில் மிதப்பதும், பின்பு அவையனைத்தும் வீண் எனக் காண்பதும். வயதானவர்கள் தங்கள் கடந்தகாலச் செயல்களை அசை போடுவதும், எனினும் இந்த மாய வலையிலிருந்து வெளியேறிச் செல்ல முடியாமல் திண்டாடுவதும் - நிலையற்ற இன்பங்களை நாடி ஓடுகின்ற மனிதனின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. இதுதான் உலகம்.

எனினும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பொன்னான கணங்கள் வரவே செய்கின்றன. ஆழ்ந்த கவலைகளின் நடுவில், இல்லை இல்லை, பெருத்த மகிழச்சியின் நடுவில் சில நேரங்கள் வருகின்றன. சூரிய ஒளியை மறைத்துக் கொண்டிருக்கும் மேகத்திரள் விலக்குவது போல் அப்போது தோன்றுகிறது. அப்பால் உள்ள ஏதோ ஒன்றின் காட்சி நம்மையும் அறியாமல் கண நேரத்திற்கு நமக்குக் கிடைத்து விடுகிறது - அப்பால், புலனின்ப வாழ்க்கைக்கு அப்பால், அப்பால், இயற்கைக்கு அப்பால், அப்பால் இவ்வுலக மறுவுலக இன்பங்களாகிய கற்பனைகளுக்கு அப்பால், அப்பால், புகழ், பணம், பெயர், சந்ததி முதலிய அனைத்து ஆசைகளுக்கும் அப்பால், உள்ள ஒளியைக் கண நேரம் பெறுகிறோம். இந்தக் காட்சியில் கண நேரம் திகைத்து நிற்கிறான். மனிதன், இனிப்பும் கசப்புமான பழங்களை உண்ணாமல் தன்னுள்ளேயே நிறைவு கண்டு, ஆனந்தமாக, அமைதியாக, கம்பீரமாக வீற்றிருக்கும் அந்த மற்றொரு பறவையைப் பார்க்கிறான். கீதை கூறுவதுபோல்.

யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தச்ச மானவ:/
ஆத்மன்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே//

யார் ஆன்மாவின் மீது அன்பு செலுத்துபவனாய், ஆன்மாவைத் தவிர வேறொன்றும் வேண்டாதவனாய், ஆன்மாவிலேயே திருப்தி கொண்டவனாய் இருக்கிறானோ அவன் செய்வதற்கு என்ன வேலை இருக்கிறது?

ஏன் அடிமைபோல் வேலை செய்ய வேண்டும்? மனிதன் கண நேரம் அந்தக் காட்சி பெறுகிறான். ஆனால் அதை மறந்துவிடுகிறான். வாழ்வின் இன்பதுன்பமாகிய பழங்களை உண்கிறான். சில காலத்திற்குப் பிறகு ஒருவேளை மீண்டும் அந்தக் காட்சி அவனுக்குக் கிடைக்கிறது. அடிமேல் அடிகளைப் பெற்ற பின்னர் கீழ்ப்பறவை மேற்பறவையை நோக்கிச் செல்கிறது. பலமான அடி பெறுவதற்குப் பேறு பெற்றிருந்தால் தனது உயிருக்குயிராகவும் நண்பனாகவும் இருக்கும் மேற்பறவையின் அருகில், மிக அருகில் செல்கிறது. அருகில் செல்லச்செல்ல, மேற்பறவையிலிருந்து கிளம்புகின்ற ஒளி தனது இறகுகளையும் முழுக்காட்டிச் செல்வதை அது காண்கிறது. அதனை இன்னும் நெருங்க நெருங்க, ஆகா, மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் நெருங்கும்போது, தானே கரைந்து போவதுபோல் அது உணர்கிறது. மெள்ளமெள்ள அது முற்றிலுமாக மறைந்துவிடுகிறது. உண்மையில் கீழ்ப்பறவை வேறல்ல; மேலே அசைந்து கொண்டிருக்கும் இலைகளுக்கு இடையில் அமைதியாக, கம்பீரமாக வீற்றிருந்த அந்த மேற்பறவையின் பிரதிபிம்பமே அது, எல்லாம் மேற்பறவையின் மகிமையே, அதன் மகிமையில் கலந்து இதுவும் பயமின்றி இருக்கிறது. பூரண திருப்தியும் அமைதியும் கம்பீரமும் பெறுகிறது.

ஆன்ம தரிசனம் (3-9)

ஆன்மாவுடன் ஒன்றுபடுத்திக் கண்டால் மட்டுமே மனிதன் துயரங்களிலிருந்து விடுபட முடியும். ஒன்றுபடுத்திக் காண வேண்டுமானால் ஆன்ம தரிசனம் அவசியம். தொடரும் 7 மந்திரங்கள் ஆன்ம தரிசனம் பற்றி கூறுகின்றன.

ஆன்ம தரிசனத்தின் விளைவு 3-4

யதா பச்ய: பச்யதே ருக்மவர்ணம்
கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்மயோனிம்/
ததா வித்வான் புண்யபாபே விதூய
நிரஞ்ஜன: பரமம் ஸாம்யமுபைதி //3//

பச்ய: - பார்ப்பவன்; யதா - எப்போது: ருக்மவர்ணம் - பொன்னொளியும்; கர்த்தாரம் - தலைவர்; ஈசம் - ஆள்பவர்; ப்ரஹ்மயோனிம் - இறைவனுக்கான வழி: பச்யதே - பார்க்கிறானோ; ததா - அப்போது; வித்வான் - மகான்; புண்ய பாபே - புண்ணிய பாவங்களை; விதூய - உதறி; நிரஞ்ஜன - துன்பமற்ற; பரமம் - மேலான; ஸாம்யம் - சம நிலையை; உபைதி - அடைகிறான்.

3. பொன்னொளியுடன் ஒளிர்பவனும், தலை
வனும், ஆள்பவனும், இறைவனுக்கான வழியாக
வும் திகழ்கின்ற ஆன்மாவை எப்போது ஒருவன்
பார்க்கிறானோ அப்போது அந்த மகான் புண்ணிய
பாவங்களை உதறிவிட்டு துன்பமற்ற மேலான
சமநிலையை அடைகிறான்.

ப்ராணோ ஹ்யேஷ ய: ஸர்வபூதைர்விபாதி
விஜானன் வித்வான் பவதே நாதிவாதீ/
ஆத்மக்ரீட ஆத்மரதி: க்ரியாவான்
ஏஷ ப்ரஹ்மவிதாம் வரிஷ்ட்ட: //4//

ஏஷ: - இந்த: ப்ராண ஹி - பிராணனே; ஸர்வபூதை: - எல்லா உயிர்களிலும்; விபாதி - செயல்படுகிறது: ய - எந்த; வித்வான் - மகான்: விஜானன் - உணர்ந்து; நாதிவாதீ - அதிகம் பேசாதவனாக; பவதே - ஆகிறான்; ஆத்மக்ரீட; - ஆன்மாவில் களிப்பவனாக; ஆத்மரதி; - ஆன்மாவில் இன்பம் காண்பவனாக; க்ரியாவான் - வேலை செய்கிறான்; ஏஷ - இவன்; ப்ரஹ்மவிதாம் - ஆன்ம ஞானியரில்; வரிஷ்ட்ட -  சிறந்தவன்.

4. எல்லா உயிர்களிலும் செயல்படுவது பிராணனே
என்பதை உணர்பவன் தேவையற்றவற்றைப்
பேசுவதில்லை. ஆன்மாவில் களிப்பவனாக, ஆன்மா
வில் இன்பம் காண்பவனாக அவன் வேலை செய்
கிறான். ஆன்ம ஞானியரில் சிறந்தவன் அவனே.

திரை உள்ளது; திரைப்படம் அதில் அசைகிறது. தண்டவாளம் உள்ளது; ரயில் அதன்மீது ஓடுகிறது. ஒன்று அசையாமல் சாட்சியாக நிற்கிறது, மற்றொன்று அதன்மீது செயல்படுகிறது. உலகின் இயக்கம் இவ்வாறே நிகழ்கிறது. இறைவன் சாட்சிப்பொருளாக இருக்கிறார். இயற்கை, அதாவது பிராண சக்தி அவரது சன்னிதியில் செயல்படுகிறது. ஆன்மா சாட்சிப்பொருளாக நம்முள் இருக்கிறது. ஜீவன் செயல்படுகிறான். இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் அவனே காரணம்.

இதே ஜீவன் தன்னை ஆன்மா என்று உணரும்போது இயற்கையின் நிகழ்ச்சிகள் எதிலும் ஒட்டாமல் தனியாக நிற்க, சாட்சியாக இருக்க அவனால் முடிகிறது. அவன் ஆன்மாவின் இன்பம் காண்கிறான்.

ஆன்ம தரிசனத்திற்கான சாதனை: 5-6

ஆன்மாவைக் காண்பது எப்படி? தொடரும் 2 மந்திரங்கள் அதற்கான சாதனை முறைகளைக் கூறுகின்றன.

ஸத்யேன லப்யஸ்தபஸா ஹ்யேஷ ஆத்மா
ஸம்யக் ஜ்ஞானேன ப்ரஹ்மசர்யேண நித்யம்/
அந்த;சரீரே ஜ்யோதிர்மயோ ஹி சுப்ரோ
யம் பச்யந்தி யதய: க்ஷீணதோஷா:     //5//

ஏஷ: - இந்த: ஆத்மா - ஆன்மா: நித்யம் ஹி - தொடர்ந்த; ஸத்யேன - உண்மையால்; தபஸா - தவத்தால்: ஸம்யக் ஜ்ஞானேன - உறுதியான ஞானத்தால்; ப்ரஹ்மசர்யேண - பிரம்மச்சரியத்தால்; லப்ய ; - அடையப்படுகிறது; அந்த; சரீரே - உடம்பின் உள்ளே; ஜ்யோதிர்மய - ஒளிப்பொருளாக; சுப்ர; - புனிதமானதாக; யம் - எந்த; க்ஷீணதோஷா:- புனிதமானவர்கள்; யதய: - புலக்கட்டுப்பாடு உடையவர்கள்; பச்யந்தி - காண்கிறார்கள்.

5. உண்மை, தவம், உறுதியான ஞானம்,
பிரம்மச்சரியம் ஆகியவற்றைத் தொடர்ந்து பயிற்சி
செய்வதால் இந்த ஆன்மா அடையப்படுகிறது. இந்த
ஆன்மா உடம்பின் உள்ளே புனிதமான ஒளிப்
பொருளாக உள்ளது. புனிதமும் புலக்கட்டுப்பாடும்
உடையவர்கள் அதனைத் காண்கிறார்கள்.

இங்கே 4 சாதனைகள் கூறப்படுகின்றன.

உண்மை: விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல் பிடிவாதமாக உண்மை பேசுவது என்ற பொருளில் இதனைக் காணக் கூடாது. பிறர் மனத்தை நோகச்  செய்யாத உண்øமையே பேச வேண்டும்; அத்தகைய பேச்சை வாக்கினால் செய்கின்ற தவம் என்று வகைப்படுத்துகிறது. கீதை.

. அனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் .... வாங்மயம் தப உச்யதே - கீதை, 17.15

உண்மை பேச வேண்டும், இனிமையாகப் பேச வேண்டும். இனியதல்லாத உண்மையைப் பேசக் கூடாது. உண்மை அல்லாத இனியதையும் பேசக் கூடாது. இதுவே சான்றோர்கள் காலம் காலமாகக் கடைப்பிடிக்கின்ற தர்மமாகும் ( ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம்
ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: ஸனாதன: -- மனு, 4.138.)என்றே மனுவும் கூறுகிறார்.

உண்மை என்பதை, உண்மையான வாழ்வு என்ற பரந்த பொருளில் காண்கிறார் ஸ்ரீசங்கரர், உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். உண்மையற்றவற்றை விட வேண்டும் (ஸத்யேன அன்ருத த்யாகேன ம்ருஷா வதன த்யாகேன)என்கிறார் அவர். ஆன்மாவை அடைவதற்கு அனுகூலமானவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அனுகூலமாக இல்லாதவற்றை விட வேண்டும்.( ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம் -  அஹிர்புத்ன்ய சம்ஹிதை, 37.28,)

தவம்: மனத்திற்கும் புலன்களுக்கும் பயிற்சி அளித்தல், புற உலகை விட்டு அக உலகை நாடுமாறு மனத்தையும் புலன்களையும் ஒருமைப்படுத்துவது மிக உயர்ந்த தவம் ( மனஸச்ச இந்த்ரியாணாம் ச ஹி ஐகாக்ர்யம் பரமம் தப: - சாந்தி பர்வம், 250.4. )என்கிறது மகா பாரதம்.

உறுதியான ஞானம்: ஞானம் உறுதியானதாக இருக்க வேண்டும். ஆன்மா உண்மை, மற்ற எதுவும் உண்மையல்ல, நான் ஆன்மாவை நாடிச் செல்கிறேன். வேறு எதிலும் எனக்கு நாட்டமில்லை என்ற அறிவு எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும். இதில் எந்தச் சஞ்சலமும் கூடாது. இந்த உறுதியை அடிப்படையாகக் கொண்டே ஆன்மீக வாழ்வு அமைக்கப்படுகிறது.

பிரம்மச்சரியம்: ஒன்றன்கீழ் ஒன்றாக துளைகள் உள்ள ஒரு ஜாடியைக் கற்பனை செய்வோம். மேலே உள்ள துளைவழியாக வேகத்துடன் நீர் பாய வேண்டுமானால் கீழே உள்ள துளைகள் அடைபட்டிருக்க வேண்டும். தியானத்தில் மனம் மேலே உயர்த்தப்படுகிறது. அது முழுமையாக உயர் லட்சியங்களை நோக்கிச் செல்ல வேண்டுமானால் காமம் போன்ற கீழான உணர்ச்சிவேகங்களின் வழியாகச் செல்வதிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். எனவே பிரம்மச்சரியம் மிகவும் அவசியம்.

உண்மை, தவம், பிரம்மச்சரியம், போன்றவற்றின் விளைவாக நாம் பெறுவது புனிதம். மண்ணிலும் சரி, விண்ணிலும் சரி, மிக உயர்ந்த மிகவும் தெய்வீகமான ஆற்றல் புனிதமே என்கிறார் சுவாமி விவேகானந்தர். இவ்வாறு புனிதமும் புலக்கட்டுப்பாடும் பெற்றவர்கள் ஆன்மாவைக் காண்கிறார்கள்.

எங்கே?

உடம்பினுள். உடம்பினுள் உள்ள இதயக்குகைபற்றி ஏற்கனவே (2:2.7) கண்டோம். அங்கே ஆன்மாவை ஒளிப் பொருளாகக் காண்கிறார்கள்.

ஸத்யமேவ ஜயதே நான்ரிதம்
ஸத்யேன பந்தா விததோ தேவயான:/
யேனாக்ரமந்தி ரிஷயோ ஹி ஆப்தகாமா
யத்ர தத்ஸத்யஸ்ய பரமம் நிதானம் //6//

ஸத்யம் ஏவ - உண்மையே; ஜயதே - வெல்லும்; ந - அன்ரிதம் - உண்மையற்றது அல்ல: ஸத்யேன - உண்மையால்; தேவ யான; - ஆன்மீக வழி: பந்தா - பாதை; விதத: - அமைந்துள்ளது. யேன - எதன் வழியாக; ஆப்த காமா: - ஆசைகள் நிறைவேறப்பெற்ற; ரிஷய: - முனிவர்கள்; ஆக்ர மந்தி - போகிறார்கள்; யத்ர - எங்கே: தத் - அது: ஸத்யஸ்ய- உண்மையின்; பரமம் - மேலான; நிதானம் - இருப்பிடம்.

6. உண்மையே வெல்லும்; உண்மையற்றது
அல்ல. ஆன்மீகப் பாதை உண்மையாலேயே அமைந்
துள்ளது. ஆசைகள் நிறைவேறப் பெற்ற முனிவர்கள்
அதன் வழியாகவே செல்கிறார்கள். உண்மையின்
மேலான இருப்பிடம் அங்கேயே உள்ளது.

ஆன்ம தரிசனம் எங்கே வாய்க்கிறது? 7

ப்ருஹச்ச தத் திவ்யம் அசிந்த்யரூபம்
ஸூக்ஷ்மாச்ச தத் ஸூக்ஷ்மதரம் விபாதி/
தூராத் ஸுதூரே ததிஹாந்திகே ச
பச்யத்ஸு இஹைவ நிஹிதம் குஹாயாம் //7//

தத் - அது: ப்ருஹத் - பெரியது; திவ்யம் - ஒளிமயமானது: அசிந்த்யரூபம் - சிந்தனைக்கு எட்டாத வடிவம் உடையது; ஸூக்ஷ்மாத் - நுண்ணியவற்றுள்; ஸூக்ஷ்மதரம் - மிக நுண்ணியது; தத் - அது; விபாதி - ஒளிர்கிறது: தூராத் - தூரமானவற்றுள்: ஸுதூரே - அதிக தூரமானது; இஹ- இங்கே; அந்திகே ச -மிக அருகிலும்; பச்யத்ஸு - காண்பவர்களிடம்; இஹ ஏவ - இந்தப் பிறவியிலேயே, குஹாயாம் - இதயக்குகையில்; நிஹிதம் - உள்ளது.

7. இந்த ஆன்மா பெரியது. ஒளிமயமானது,
சிந்தனைக்கு எட்டாத வடிவம் உடையது, நுண்ணிய
வற்றுள் எல்லாம் நுண்ணியது, அது தூரமான
வற்றுள் அதிக தூரமானது, அதேவேளையில் இங்கே
மிக அருகிலும் இருக்கிறது. இதயக்குகையில் ஒளிர்
வதாக மகான்கள் அதனை இந்தப் பிறவியிலேயே
காண்கிறார்கள்.

இறைவன் என்ற மாபெரும் ஜோதியின் சுடரே ஆன்மாவாக நம்முள் உள்ளது. என்று 2:1.1 - இல் கண்டோம். இறைவன் என்ற நிலையில் எல்லாவற்றையும் கடந்து இருப்பதால் நம்மிலிருந்து மிகத் தொலைவில் இருப்பவராகக் கூறப்படுகிறார். அதே வேளையில், ஆன்மா என்ற நிலையில் நமது இதயக்குகையில் இருப்பதால் மிக அருகிலும்  உள்ளார்.

அந்த இதயக் குகையிலேயே ஆன்ம தரிசனம் வாய்க்கிறது. ஒளிப் பொருளாக அதனை மகான்கள் காண்கிறார்கள்.

ஆன்ம தரிசனம் என்பது ஏதோ மரணத்திற்குப் பின்னால் கிடைக்கப் பெறுகின்ற அனுபவம் அல்ல. வாழும் போதே பெறப்படும். அனுபவம் அது. அதை உணர்த்தவே இந்தப் பிறவியிலேயே என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்ம தரிசனம்: மூன்று நிபந்தனைகள்:

ந சக்ஷுஷா க்ருஹ்யதே நாபி வாசா
நான்யைர்தேவைஸ் தபஸா கர்மணா வா/
ஜ்ஞானப்ரஸாதேன விசுத்தஸத்வஸ்-
ததஸ்து தம் பச்யதே நிஷ்கலம் த்யாயமான://8//

சக்ஷுஷா - கண்களால்; ந க்ருஹ்யதே - கிரகிக்கப்படுவதில்லை; வாசா அபி - வாக்கினாலும்; அன்யை: - மற்ற: தேவை: - புலன்களால்; தபஸா - தவத்தால்; கர்மணா வா -கர்மங்களால்; ஜ்ஞான ப்ரஸாதேன - புத்தியின் தெளிவால்; விசுத்த ஸத்வ - தூய்மையும் நுண்மையும்  பெற்ற; தம் - அந்த ஆன்மாவை; த்யாயமான; - தியானித்து; தத:து - பிறகு; நிஷ்கலம் - பகுதிகள் அற்ற; பச்யதே - காண்கிறான்.

8. அந்த ஆன்மா கண்களாலோ, வாக்கினாலோ,
மற்ற புலன்களாலோ அறியப்படுவதில்லை; தவத்
தாலோ கர்மங்களாலோ அடையப்படுவதில்லை.
புத்தியின் தெளிவால் தூய்மையும் நுண்மையும்
பெற்ற மனத்தால் அதனைத் தியானிப்பவன் பகுதிகள்
அற்றதான அந்த ஆன்மாவைக் காண்கிறான்.

இங்கே ஆன்ம தரிசனத்திற்கான மூன்று நிபந்தனைகள் கூறப்படுகின்றன. இந்த நிபந்தனைகளின்மூலம், தவம் போன்ற சாதனைகளை எச்சரிக்கையுடன் அணுகுமாறு இந்த மந்திரம் அறிவுறுத்துகிறது.

1. புலன்களால் ஆன்மா அடையப்படுவதில்லை. ஏற்கனவே (2:2.1), இதனை நாம் விரிவாகக் கண்டோம். புலன்கள் புறவுலகை அறிவதற்கான கருவிகள். எனவே அகவுலக சம்பந்தமான எதையும் அவற்றால் அறிய இயலாது.

2. தவத்தாலோ கர்மங்களாலோ அடையப்படுவதில்லை.

தவத்தால் ஆன்மா அடையப்படுவதாக 3:1,5-ஆம் மந்திரம் கூறியது. தவத்தால் ஆன்மா அடையப்படுவதில்லை என்று இங்கே கூறப்படுகிறது. முரண்பாடுபோல் தோன்றுகின்ற இதனைப் புரிந்துகொள்வது அவசியம்.

பகவத்கீதை தவத்தை சாத்வீக தவம், ராஜச தவம், தாமச தவம் என்று மூன்று விதமாகப் பிரிக்கிறது. பாராட்டு மதிப்பு, புகழ் இவற்றிற்காக ஆடம்பரத்துடன் செய்யப்படுகின்ற தவம் ராஜசமானது, அது உறுதியற்றது. தற்காலிகமானது. முட்டாள்தனமாக தன்னைத் துன்புறுத்தியோ பிறரை அழிப்பதற்காகவோ, செய்யப்படுகின்ற தவம் தாமசமானது, இந்த இரண்டு வகைத் தவங்களும் மனிதனைக் கீழ் நிலைக்குத் தள்ளுகின்றன.

சாத்வீகத் தவம் மனிதனை இறைநெறியில் செலுத்துகிறது. இதற்கு நான்கு அடிப்படை நிபந்தனைகளை கீதை கூறுகிறது-1. உடம்பை வருத்தாமல் செய்வது. 2. பலனை விரும்பாதிருத்தல். 3. யோகத்தில் நிலைபெற்றிருத்தல். 4. ஆழ்ந்த சிரத்தை. இந்த நான்கு நிபந்தனைகளுடன் செய்யப்படுகின்ற தவம் ஆன்ம தரிசனப் பாதையில் ஒருவனை அழைத்துச் செல்கிறது. இவையின்றிச் செய்யப்படுகின்ற தவங்களால் ஆன்மாவை அடைய இயலாது.

இதுபோலவே செயல்களையும் மூன்றுவிதமாகக் கொண்டு சாத்வீகச் செயல் ஒருவனை இறைநெறியில் அழைத்துச் செல்கிறது என்கிறது, கீதை. பலனில் ஆசை வைக்காமல், பற்றின்றி, விருப்பு வெறுப்பு இன்றி, தனக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்வது சாத்வீகச் செயல் என்று அது விளக்குகிறது. அத்தகைய செயல் ஒருவனை இறைநெறியில் அழைத்துச் செல்கிறது. ஆசை வசப்பட்டு, தன்முனைப்புடன் மிகவும் பாடுபட்டு செய்வது ராஜசச் செயல். செயலின் விளைவையும் நஷ்டத்தையும் துன்பத்தையும் சொந்த ஆற்றலையும் எண்ணிப் பாராமல் மனமயக்கத்தால் செய்யப்படுவது தாமசச் செயல். இத்தகைய செயல் ஆன்மீகப் பாதையில் ஒருவனை அழைத்துச் செல்லாது.

3. எதனால் ஆன்ம தரிசனம் வாய்க்கிறது?

மூன்று படிகளாலான ஒரு பாதையை இந்த மந்திரம் காட்டுகிறது- 1. புத்தியின் தெளிவு. 2. தெளிந்த புத்தியால் தூய்மை பெற்ற மனம். 3. தூய மனத்துடன் செய்யப்படுகின்ற தியானம்.

1. புத்தியின் தெளிவு: அறிவு மூன்று நிலைகளில் செயல்படுகிறது - இயல்புணர்ச்சி (டிணண்tடிணஞிt) அறிவு (டிணtஞுடூடூஞுஞிt) உள்ளுணர்வு (டிணtதடிtடிணிண) இதில் உள்ளுணர்வே புத்தி எனப்படுகிறது. கற்றறிவு, கேட்டறிவு போன்ற எந்தப் புற உபகரணங்களின் துணையும் இன்றி உணர்வின் ஆழங்களிலிருந்து எழுகின்ற அறிவு இது. இது ஒருபோதும் பொய்பதில்லை. இதுவே உள்ளுணர்வு, இதுவே சாஸ்திரங்களில் புத்தி, தீ; இதயத் தாமரை, ஞானக் கண், நெற்றிக் கண் என்றெல்லாம் பேசப்படுகிறது. இந்த உள்ளுணர்வு விழிப்பதையே புத்தியோகம் என்று கீதை(2.49-58) கூறுகிறது.

இதயத் தூய்மையாலும் பிரார்த்தனையாலும், காயத்ரி போன்ற மந்திர ஜபங்களாலும் புத்தி விழிப்படைகிறது. புத்தி விழிப்புற்றவன் தன் இதயத்தில் பேரொளியைக் காண்கிறான். அதனால் அவனது அறியாமை அகல்கிறது என்று கீதை (10.11) கூறுகிறது.

விழிப்படைந்த புத்தியைத் தேரோட்டியாகக் கொண்டவனின் பயணமே தனது லட்சியத்தை அடைகிறது; அவன் இறைவனை அடைகிறான். விழிப்படையாத புத்தியைத் தேரோட்டியாகக் கொண்டவனின் பயணம் லட்சியத்தை அடைவதில்லை; அவன் உலகியலில் உழல்கிறான் என்று இதனை விளக்குகிறது கட உபநிஷதம் (1:3.7-9).

புத்தி விழிப்புறுவதே இங்கு புத்தியின் தெளிவு என்று கூறப்பட்டது.

2. தெளிந்த புத்தியால் தூய்மை பெற்ற மனம்: மனம் தூய்மை பெறுவது எப்படி? இதற்கு, ஆசைகளை விட வேண்டும். பற்று கூடாது. நல்லவற்றை நினைக்க வேண்டும். என்றெல்லாம் பல வழிகளைக் கூறுவதுண்டு, இவையெல்லாம் வழிகள்தான். ஆனால் எத்தனை ஆசைகளை விடுவது? எப்படி விடுவது? ஆசைகளை ஒவ்வொன்றாக விட்டுக் கொண்டிருந்தால் அதற்கே ஒரு பிறவி போதாது. எனவே இவையெல்லாம் வழிகள்தான் என்றாலும் சிறந்த வழிகள் அல்ல. சிறந்த வழியை இந்த மந்திரம் கூறுகிறது. புத்தியை விழிப்புறச் செய்ய வேண்டும். புத்தி விழிப்புற்றால் மனம் தானாக வசப்படுகிறது; தூய்மை பெறுகிறது. ஏனெனில் மனத்தைவிட ஆற்றல் வாய்ந்தது புத்தி ( மனஸஸ்து பரா புத்தி -கீதை, 3.42.) என்கிறது கீதை. எனவே புத்தி விழித்தெழும்போது மனம் தானாக வசப்படுகிறது; தூய்மை பெறுகிறது.

3. தியானம்: இவ்வாறு புத்தி விழிப்புற்று, அதனால் தூய்மை பெற்ற மனத்தை தியானத்தில் ஈடுபடுத்தும்போது ஆன்மக் காட்சி வாய்க்கிறது.

ஆன்ம தரிசனத்திற்கான கருவி மனம்: 9-10

ஏஷோஸணுராத்மா சேதஸா வேதிதவ்யோ
யஸ்மின் ப்ராண: பஞ்சதா ஸம்விவேச/
ப்ராணைச்சித்தம் ஸர்வமோதம் ப்ரஜானாம்
யஸ்மின் விசுத்தே விபவத்யேஷ ஆத்மா //9//

ஏஷ: - இந்த: அணு - நுண்ணிய: ஆத்மா - ஆன்மா: சேதஸா - மனத்தால்; வேதிதவ்ய: - அறிய வேண்டும்; யஸ்மின் - எங்கே; ப்ராண - பிராணன்; பஞ்சதா - ஐந்தாக; ஸம்விவேச - புகுந்துள்ளதோ; ப்ரஜானாம் - உயிரினங்களின்; ப்ராணை - புலன்கள்; சித்தம் -மனம்; ஸர்வம் - முழுவதும்; ஓதம் - வியாபிக்கப்பட்டுள்ளது; யஸ்மின் - எங்கே; விசுத்தே - தூய்மையான: ஏஷ: ஆத்மா - இந்த ஆன்மா: விபவதி - ஒளிர்கிறது.

9. நுண்ணியதான இந்த ஆன்மாவை மனத்தால்
தான் அறிய வேண்டும். உடம்பில் பிராணன் ஐந்து
விதமாகச் செயல்படுகிறது. உயிரினங்களின் மனம்
முழுவதும் புலன்களால் வியாபிக்கப்பட்டுள்ளது.
இந்த மனம் தூய்மை பெறும்போது ஆன்மா அங்கே
ஒளிர்கிறது.

அகவுலகம் சம்பந்தமான எதையும் சாதிப்பதற்கு நம்மிடம் உள்ள கருவி மனம் மட்டுமே. ஆன்மக் காட்சி பெறுவதற்கும் இங்கே அந்த மனமே கருவியாக வைக்கப்பட்டுள்ளது. எந்த மனம் ஆன்மாவைக் காட்ட வல்லது?

கட்டாயமாக சாதாரண மனம் அல்ல. முந்தின மந்திரங்களில் கூறியதுபோல் உண்மை, தவம், உறுதியான அறிவு, பிரம்மச்சரியம் போன்றவற்றால் புனிதம் பெற்ற மனம் (3:1.5) தெளிவு பெற்ற புத்தியால் தூய்மை பெற்ற மனம் (3:1.8). இத்தகைய மனம் தீபம் போன்றது, ஆன்மாவின் மூலைமுடுக்குகளை எல்லாம் காட்டக் கூடியது என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

ஆன்மக் காட்சிக்கான கருவி மனமாக இருந்தாலும் சாதாரண நிலையில் அது அந்தத் தகுதி வாய்ந்ததாக இல்லை. ஏனெனில் அது புலன்களால் வியாபிக்கப்பட்டுள்ளது. புலன்கள் புறவுலகிலிருந்து கொண்டு வருகின்ற அறிவால் நிறைந்துள்ளது. புத்தி விழிப்புறும்போது, அதன் ஒளியால் மனம் இந்த அறிவிலிருந்து விடுபடுகிறது. இதையே கீதை (10.11) புத்தி விழிப்புற்றவன் தன் இதயத்தில் பேரொளியைக் காண்கிறான். அதனால் அவனது அறியாமை அகல்கிறது என்று கூறுகிறது.

உடம்பும் மனமும் இரண்டு கருவிகள். மனத்தைத் தூய்மைப்படுத்துவதுபற்றி கண்டோம். உடம்பும் தகுதியானதாக இருக்க வேண்டும் என்பதை இந்த மந்திரம் கோடி காட்டுகிறது. உடம்பை எவ்வாறு தகுதியானதாக வைத்துக் கொள்வது? பிராணனைக் கட்டுப்படுத்துவதன்மூலம். பிராணன் (மேல் நோக்கிய இயக்கம்), அபானன் (கீழ் நோக்கிய இயக்கம்), வியானன் (எல்லா பக்க இயக்கம்), உதானன் (மரண வேளையில் உயிர் வெளியேற உதவுதல்), ஸமானன் (உணவு ஜீரணம், உணவை ரத்தம் போன்றவையாக மாற்றுதல்) என்று பிராணன் ஐந்துவிதமாக நமது உடம்பில் செயல்படுகிறது. பிராணனைக் கட்டுப்படுத்துவதன்மூலம் உடம்பையும் நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். எல்லையற்ற ஆற்றலின் கதவை இது நமக்குத் திறந்து விடுகிறது. உதாரணமாக ஒருவன் ஒருவேளை பிராணனை முற்றிலுமாக அறிந்து அதைக் கட்டுப்படுத்தி விட்டால் உலகில் எந்த சக்திதான் அவனுடையது ஆகாது? என்று கேட்கிறார் சுவாமி விவேகானந்தர்.

இவ்வாறு தெளிவு பெற்ற மனத்தின் ஆற்றல்பற்றி அடுத்த மந்திரம் கூறுகிறது.

யம் யம் லோகம் மனஸா ஸம்விபாதி
விசுத்தஸத்வ: காமயதே யாம்ச்ச காமான்/
தம் தம் லோகம் ஜயதே தாம்ச்ச காமான்ஸ்-
தஸ்மாத் ஆத்மஜ்ஞம் ஹ்யர்ச்சயேத் பூதிகாம: //10//

விசுத்த ஸத்வ - தூய்மையும் நுண்மையும் பெற்ற; மனஸா - மனத்தால்; யம் யம் - எந்தெந்த; லோகம் - உலகங்களை; ஸம்விபாதி - நினைக்கிறானோ; யாம் - எந்த; காமான் ச- பொருட்களை; காமயதே - விரும்புகிறானோ; தம் தம் - அந்தந்த; லோகம் - உலகங்களை, தாம் - அந்த; காமான் ச- பொருட்களை: ஜயதே - வெல்கிறான்; தஸ்மாத் - அதனால்; பூதிகாம: - செல்வத்தை விரும்புபவன்; ஆத்மஜ்ஞம் - ஆன்மஞானியை: அர்ச்சயேத் ஹி - போற்ற வேண்டும்.

10. தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால்
ஒருவன் எந்தெந்த உலகங்களை நினைக்கிறானோ
அந்தந்த உலகங்களை அடைகிறான்: என்ன பொருட்
களை விரும்புகிறானோ அந்தப் பொருட்களைப்
பெறுகிறான். அதனால் செல்வத்தை விரும்பு
பவன் ஆன்மஞானியைப் போற்ற வேண்டும்.

மனத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை - சாதாரண மனத்தால் அல்ல, தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால். அத்தகைய மனத்தைப் பெறுவதற்கு ஓர் எளிய வழி இங்கே கூறப்படுகிறது. -  ஆன்மாவை உணர்ந்த மகான்களைப் போற்றுதல், மகான்களின் அருளால் சாதிக்க இயலாதது எதுவும் இல்லை.

இதி முண்டகோபநிஷதி த்ருதீய முண்டகே ப்ரதம: கண்ட:

 
மேலும் முண்டக உபநிஷதம்! »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news
உலகம் சம்பந்தமானது சாதாரண அறிவு, கடவுளைப் பற்றியது உயர் அறிவு என்று முந்தின அத்தியாயத்தில் ... மேலும்
 
temple news
3:2 இறையனுபூதிசாதாரண அறிவு உலக இன்பதுன்பங்களில் ஆழ்த்தி மீண்டும் மீண்டும் பிறவிக்கே வழிவகுக்கும். உயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar