பதிவு செய்த நாள்
23
ஜூன்
2015
01:06
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை (வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ; பரஸ்தாத் தமேவ விதித்வா ஸதிம்ருத்யுமேதி நான்ய; பந்தா வித்யதேஸயனாய - சுவேதாஸ்வதர உபநிஷதம், 3.8) அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள் (ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா, சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5) என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்லாமல் , பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவி அழைத்தனர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோ கூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.
உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம் தான். இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.... ஆனால் அன்று போலவே இன்றும், அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப்பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.
வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள், புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும், அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்..... அவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள். அவ்வளவுதான்.
அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள், ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கிய ப்பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம் (யாக விவரங்கள்) ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி).
உபநிஷதங்கள்: உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.
வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள், அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கவுசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார். 14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின் படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.
உபநிஷதம் வேதம்
ஐதரேய, கவுசீதகி ரிக்
ஈச, கட, தைத்திரீய,
பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர,
மைத்ராயணீ, மஹாநாரயண யஜுர்
கேன, சாந்தோக்கிய சாம
ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய அதர்வண
மாண்டூக்ய உபநிஷதம்:
அதர்வண வேதத்தைச் சேர்ந்த உபநிஷதம் இது. இதனை அருளிய முனிவரின் பெயரால் இது மாண்டூக்ய உபநிஷதம் என்று அழைக்கப் பெற்றிருக்கலாம்.
மண்டூகம் என்றால் தவளை.
1. விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளில் நாம் மாறிமாறி சஞ்சரிப்பது பற்றி இந்த உபநிஷதம் கூறுகிறது. மூன்று நிலைகளிலும் மனம் தவளைபோல் தாவிக் குதிப்பதாகக் கொண்டு, இந்தப் பெயர் வழங்கியிருக்கலாம்.
2. தவளை ஆண்டில் 9 முதல் 10 மாதங்கள் சேற்றிலோ குளங்குட்டைகளில் அடியாழங்களிலோ புதைந்து கிடக்கும். மழைக்காலத்தில் மட்டுமே வெளியே வரவும் கத்தவும் செய்யும். அதுபோல் நீண்ட காலம் தனிமையில் தவ வாழ்க்கையில் ஈடுபடுகின்ற முனிவர்கள் அனுபூதி பெற்று குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வெளியே வந்து மற்றவர்களுக்கு அதைச் சொல்வதைக் கருத்தில் கொண்டும் மாண்டூக்ய உபநிஷதம் என்ற பெயர் வந்திருக்கலாம்.
மையக்கரு:
உலகம், உயிர்கள், இறைவன் என்று தனித்தனியாக எதுவும் கிடையாது. இருப்பவை அனைத்தும் ஒன்றே என்ற மிகவுயர்ந்த உண்மை இங்கே கூறப்படுகிறது. இந்த அனுபூதி நிலையை ஓங்கார மந்திரத்தின் வாயிலாக விளக்குகிறது. இந்த உபநிஷதம்.
மிகவுயர்ந்த உண்மை, ஆனால் மந்திரங்கள் வெறும் பன்னிரண்டு மட்டுமே எனவே ஒவ்வொரு மந்திரமும் மிக ஆழ்ந்த, மறைபொருளுடன் கூடிய கருவூலமாக உள்ளது. தகுந்த விளக்கங்கள் இன்றி இதனைப் புரிந்துகொள்வது கடினம். என்பதற்காகவே ஸ்ரீசங்கரரின் குருவிற்கு குருவாகிய ஸ்ரீகௌடபாதர் 215 சுலோகங்கள் கொண்ட மாண்டூக்ய காரிகை என்ற நூலை இயற்றி உள்ளார் ஸ்ரீசங்கரர் இதற்கும் சேர்த்தே விளக்கவுரை எழுதியிருக்கிறார்.
மொழிபெயர்ப்பு:
ஸ்ரீகௌடபாதர், ஸ்ரீசங்கரர், ஸ்ரீமத்வர் போன்றோர் இந்த உபநிஷதத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ளனர். ஸ்ரீசங்கரரின் விளக்கவுரையைத் தழுவி ஸ்ரீஆனந்தகிரி விரிவான விளக்கமும் தந்துள்ளார்.
இந்த மொழிபெயர்ப்பு, மாண்டூக்ய உபநிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன:
1. தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளவில்லை. இறைவன் என்ற மாபெரும் சக்தியுடன் நாம் தொடர்பு கொள்கிறோம். என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
2. காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.
சமஸ்கிருத மூலம், தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், திரண்டபொருள் விளக்கம் என்ற ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு வார்த்தை:
உபநிஷதங்களை நமக்கு அளித்த முனிவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி எதையும் கூறாமல், எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள் (இதி சுச்ரும தீராணாம் யே நஸ் தத் விசசக்ஷிரே - ஈசாவாஸ்ய உபநிஷதம் -10,13.) என்றே குறிப்பிடுகிறார்கள். அதாவது, இந்த உண்மைகள் தங்கள் திறமையால் பெறப்பட்டவை அல்ல, மகான்களின் அருளால் கிடைத்தவை என்று அவர்கள் கூறுவதுபோல் உள்ளது இது.
நாம் எத்தகைய மனப்பாங்குடன் உபநிஷதங்களை அணுக வேண்டும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருளை அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல. பிரார்த்தனைபூர்வமாக, உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மை பெற்று இறைவனை நோக்கி நாம் முன்னேறமுன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும் மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாக புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும்.
பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை, பொருள் புரியவில்லை என்பதற்காகச் சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.