Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மாண்டூக்ய உபநிஷதம் - ஒன்றென்றிரு! மனிதன் ஓங்காரமே! மனிதன் ஓங்காரமே!
முதல் பக்கம் » மாண்டூக்ய உபநிஷதம்
எல்லாம் இறைவனே!
எழுத்தின் அளவு:
எல்லாம் இறைவனே!

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2015
02:06

ஸர்வக்ம் ஹ்யேதத் ப்ரஹ்ம அயமாத்மா ப்ரஹ்ம
ஸோஸயமாத்மா சதுஷ்பாத் //2//

ஏதத் - இந்த; ஸர்வம் - அனைத்தும்; ப்ரஹ்ம ஹி - இறைவனே; அயம் - இந்த; ஆத்மா - ஆன்மா; ப்ரஹ்ம - இறைவனே; ஸ; - அந்த; அயம் - இந்த; ஆத்மா - ஆன்மா; சதுஷ்பாத் - நான்கு பரிமாணங்களை உடையது.

2. இவை அனைத்தும் இறைவனே, இந்த ஆன்மா
வும் இறைவனே. இந்த ஆன்மா நான்கு பரிமாணங்
களை உடையவை.

எதிலிருந்து ஒரு பொருள் உண்டாகிறதோ அதில் அந்தப் பொருளின் தன்மை இருக்கும். பாலிலிருந்து செய்யப்பட்ட இனிப்புகளில் பாலின் தன்மை இருக்கும். அதுபோல், இறைவனிலிருந்து தோன்றிய உலகமும் இறையம்சம் கொண்டதாகவே இருக்கும். அதனால்தான் அனைத்தும் இறைவனே என்று கூறப்பட்டது.

படைப்பில் காணப்படுகின்ற அனைத்தும் இறைவனே, இறையம்சம் கொண்டவையே என்று கூறும்போது நாமும் அதில் அடக்கம். எங்கும் நிறைந்த இறைவன் நம்மில் பிரகாசிக்கும்போது ஆன்மா என்று பெயர் பெறுகிறார். அதாவது நம்மில் உள்ள ஆன்மாவும் இறைவனும் ஒன்றே.

காண்கின்ற உலகம் இறைவனே. ஆன்மாவும் இறைவனே. அப்படியென்றால் உலகமும் ஆன்மாவும் இறைவனே. அதாவது, எல்லாம் இறைவனே.

இந்த மந்திரத்தில் உள்ள அயம் ஆத்மா ப்ரஹ்ம என்ற சொற்றொடர் மகா வாக்கியங்களுள் ஒன்றாகும்.

இனி, ஆன்மாவை விளக்க முற்படுகிறது உபநிஷதம்.

3 மனிதன் (3-7)

ஆன்மா நான்கு பரிமாணங்களை உடையது என்று 2- ஆம் மந்திரம் கூறியது.

அந்த நான்கு பரிமாணங்கள் எவை?

முதற் பரிமாணம் - வைசுவானரன் - விழிப்புநிலை

ஜாகரிதஸ்தானோ பஹிஷ்ப்ரஜ்ஞ; ஸப்தாங்க ஏகோ-
னவிம்சதிமுக; ஸதூலபுக் வைச்வானர; ப்ரதம: பாத; //3//

ப்ரதம: பாத: - முதற் பரிமாணம்; வைச்வானர; - வைசுவானரன்; ஸ்தான; - களம்; ஜாகரித; - விழிப்பு நிலை; ப்ரஜ்ஞ; - உணர்வு; பஹி; - புறமுகமானது; ஸப்த அங்க; - ஏழு அங்கங்கள்; ஏகோனவிம்சதி - பத்தொன்பது; முக; - வாய்கள்; ஸ்தூலபுக் - புற உலகை அனுபவிப்பவன்.

3. ஆன்மாவின் முதல் பரிமாணம் வைசுவானரன்
எனப்படுகிறது. இதன் உணர்வு புறமுகமாக உள்ளது.
ஏழு அங்கங்களும் பத்தொன்பது வாய்களும்
கொண்ட வைசுவானரன் விழிப்புநிலையில் புற
வுலகை அனுபவிக்கிறான்.

நாம் விழித்திருக்கின்ற நிலையில் வேலை செய்கிறோம். படிக்கிறோம். விளையாடுகிறோம். சிந்திக்கிறோம். இதையெல்லாம் செய்கின்ற, அதாவது விழிப்பு நிலையில் இந்த உலகை அனுபவிப்பவன் வைசுவானரன். அதாவது உலகை அனுபவிக்கின்ற நிலையில் நாம் வைசுவானரன் என்ற பெயர் பெறுகிறோம்.

வைசுவானரனுக்குச் சில அடையாளங்களை இந்த மந்திரம் கூறுகிறது. அவனுக்கு அங்கங்கள் 7, வாய்கள் 19,

7 அங்கங்கள் எவை?

சொர்க்கம் - தலை, சூரியன் - கண்கள், காற்று - பிராணன், வெளி - நடுப் பகுதி , தண்ணீர் - சிறுநீரகம், பூமி - காலங்கள்.

கண்ணுக்குத் தெரிகின்ற பூமி, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுலகமான சொர்க்கம்; காற்று, வெளி, தண்ணீர் போன்ற பஞ்ச பூதங்கள் (பஞ்ச என்றால் ஐந்து. பஞ்ச பூதங்கள் என்றால் ஐந்து அடிப்படை மூலங்கள். அவை: வெளி (ண்ணீச்ஞிஞு) காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி, படைப்பிற்கு இவை ஐந்தும் அடிப்படையாக உள்ளது என்பதை உலகின் பெரும்பாலான தத்துவப் பிரிவுகள் ஏற்றுக்கொள்கின்றன. இந்த அடிப்படைக் கருத்தைக் கண்டுபிடித்து, சிந்தனை உலகிற்கு வழங்கியது தத்துவ உலகிற்கு இந்தியாவின் மாபெரும் கொடைகளுள் ஒன்றாகும்.) ஆகியவை வைசுவானரனின் அங்கங்களாகக் கூறப்பட்டுள்ளன. புறப் பிரபஞ்சம் முழுவதையும் உள்ளடக்கிய ஓர் உருவம் இது. விழிப்பு நிலையில் நமது உருவம் இது என்கிறது இந்த மந்திரம். இதன் பொருள் என்ன?

நாம் புற உலகை அனுபவிப்பது நமக்குத் தெரிந்த நாம் காண்கின்ற நமது தூல உடம்பினால் ஆகும்.  

புறப் பிரபஞ்சமே நமது உடம்பாகக் கூறப்பட்டதன்மூலம் நமது தூல உடம்பு புறப் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

19. வாய்கள், வாய் என்பது அனுபவத்திற்கான வாசல். 19 வாய்கள் என்றால் 19 வாசல்கள்மூலம் நாம் புற உலகை அனுபவிக்கிறோம் என்பது பொருள்.

19 வாசல்கள் எவை?

கண் (பார்த்தல்), காது (கேட்டல்), மூக்கு (வாசனை அறிதல்), நாக்கு (சுவை அறிதல்), தோல் (உணர்தல்) ஆகிய அறிவுக் கருவிகள் (ஞானேந்திரியங்கள்) ஐந்து, வாய் (பேச்சு), கை (செயல்கள்), கால் (நடத்தல்), குதம் மற்றும் குறி ( கழிவு வெளியேற்றம்) ஆகிய செயற்கருவிகள் (கர்மேந்திரியங்கள்) ஐந்து, முக்கியப் பிராணன்கள் ஐந்து. (எங்கும் நிறைந்து, இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்ற சக்தி பிராணன் எனப்படுகிறது. அதே சக்தி நம்மில் நமது உடம்பையும் மனத்தையும் செயல்படுத்துகிறது. பத்துவிதமான செயல்களை பிராணன் நம்முள் நிகழ்த்துகிறது. இவற்றுள் முக்கியமான ஐந்து இங்கே குறிப்பிடப்படுகிறது. அவை: பிராணன் (மேல் நோக்கிய இயக்கம் ), அபானன் (கீழ்நோக்கிய இயக்கம்), வியானன் (எல்லா பக்க இயக்கம்) உதானன் ( மரண வேளையில் உயிர் வெளியேற உதவுதல்), சமானன் (உணவை ஜீரணித்தல், ஜீரணித்த உணவை ரத்தம் போன்றவையாக மாற்றுதல்.) மனம், புத்தி, நான் - உணர்வு (ஞுஞ்ணி), சித்தம். இந்த 19 கருவிகளின்மூலம் நாம் புற உலகை அனுபவிக்கிறோம்.

மனம், புத்தி, நான்- உணர்வு, சித்தம் ஆகிய நான்கும் மனத்தின் பல்வேறு நிலைகள் ஆகும். மனம் என்பது இங்கே உணர்வு மனத்தைக் (ஞிணிணண்ஞிடிணிதண் ட்டிணஞீ) குறிக்கிறது. நாம் கண், காது, போன்ற புலன்கள் வழியாக புறவுலகை அனுபவிப்பது இந்த மனத்தின் மூலமே.

மனத்தின் நிச்சயிக்கின்ற பகுதி புத்தி எனப்படுகிறது. அங்கே வருவது இவனா அவனா? என்று குழம்புவது உணர்வு மனம் இது அவன்தான் என்ற உறுதியை அளிப்பது புத்தி (மனோ நாம ஸங்கல்ப விகல்பாத்மிக அந்த: கரண வ்ருத்தி: புத்திர் நாம நிச்சயாத்மிக அந்த: கரண வ்ருத்தி; வேதாந்த சாரம், 66,65.)

அனுபவங்கள் எதுவும் வீணாவதில்லை. புலன்கள் வாயிலாக நாம் பெறுகின்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒரு பதிவாக மனத்தின் ஒரு பகுதியில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதுவே சித்தம் இது ஆழ்மனம் (ண்தஞஞிணிணண்ஞிடிணிதண் ட்டிணஞீ) என்றும் அழைக்கப்படுகிறது. உணர்வு மனம் ஒன்றை நிச்சயிக்க முடியாமல் குழம்பும்போது, சித்தத்திலுள்ள அனுபவங்களை ஒப்பிட்டு புத்தி ஒரு  முடிவிற்கு வருகிறது. அவனா இவனா? என்ற கேள்வி எழும்போது புத்தி ஆழ்மனத்தில் தகவல்களைத் தேடுகிறது. அவன் ஏற்கனவே நாம் கண்டவனாக இருந்தால் அந்தப் பதிவுகள் அங்கே இருக்கும். அதை வைத்து இது அவன்தான் என்று புத்தி நிச்சயம் செய்கிறது.

நாம் விழித்திருக்கும்போதும், கனவு காணும்போதும், தூங்கும்போதும் எந்த நிலையிலும் சரி நான் இருக்கிறேன். என்ற உணர்வு நம்மைவிட்டு நீங்குவதில்லை. அது நமது மனத்தின் பின்னணியில் எப்போதும் இருக்கும். இதுவே நான் உணர்வு (ஞுஞ்ணி). எந்த அனுபவத்திற்கும் அடிப்படையாக இருப்பது இது. இது இல்லாமல் எந்த அனுபவமும் இல்லை. இவ்வாறு 19 வாசல்கள் வழியாக நாம் புற உலகை அனுபவிக்கிறோம்.

நாம் பிரபஞ்சத்தில் ஓர் அங்கம். விழிப்பு நிலையில், இவ்வாறு தூலப் பிரபஞ்சத்தை அனுபவிக்கின்ற நிலையில், ஆன்மா வைசுவானரன் எனப்படுகிறது. இது நமது முதற் பரிமாணம்.

இரண்டாம் பரிமாணம் - தைஜஸன் - கனவுநிலை:

ஸ்வப்ன:ஸ்தானோ ஸந்த:ப்ரஜ்ஞ: ஸப்தாங்க ஏகோ-
னவிம்சதிமுக: ப்ரவிவிக்தபுக் தைஜஸோ த்விதீய; பாத; //4//

த்விதீய: - பாத: - இரண்டாம் பரிமாணம்; தைஜஸ: - தைஜஸன்; ஸ்தான; -களம்; ஸ்வப்ன; - கனவுநிலை; ப்ரஜ்ஞ; - உணர்வு; அந்த; - அகமுகமானது; ஸப்த அங்க; - ஏழு அங்கங்கள்; ஏகோனவிம்சதி - பத்தொன்பது; முக; - முகங்கள்; ப்ரவிவிக்தபுக் - மனவுலகை அனுபவிப்பவன்.

4. ஆன்மாவின் இரண்டாம் பரிமாணம் தைஜஸன்
எனப்படுகிறது. இதன் உணர்வு அகமுகமாக உள்ளது.
ஏழு அங்கங்களும் பத்தொன்பது வாய்களும்
கொண்ட தைஜஸன் கனவுநிலையில் மனவுலகை
அனுபவிக்கிறான்.

அடுத்ததாக வருவது கனவு நிலை. கனவு நிலையும் விழிப்பு நிலையைப் போன்றதே. ஒரே வித்தியாசம்: இங்கே புறவுலகம் இல்லை; அனுபவங்கள் அத்தனையும் மனவுலகிலேயே நிகழ்கிறது.

உடம்பும் மனமும் கருவிகள். அவற்றிற்கு ஓய்வு தேவை. உடம்பு ஓய்வெடுப்பது தூக்கம் எனப்படுகிறது. அப்போதும் மனம் தொடர்ந்து செயல்படுகிறது. ஆனால் நாம் புறவுலகை உணர்வதில்லையே? உணர்வதில்லை. ஏனெனில் புறவுலகை உணர்கின்ற உணர்வுமனம் தூக்கத்தில் ஆழ்கிறது. ஆனால் ஆழ்மனம் விழித்திருக்கிறது. அந்த மனம் ஒரு புதிய உலகத்தை உருவாக்குகிறது. அதுவே கனவு.

அங்கே தேரில்லை, இழுக்க மிருகங்கள் இல்லை, சாலைகள் இல்லை, அங்கே இன்பம் இல்லை. களிப்பு இல்லை, ஆனந்தம் இல்லை, அங்கே குளம் இல்லை, ஏரி இல்லை, நதிகளும் இல்லை, அவன் அனைத்தையும் உருவாக்குகிறான். ஏனெனில் அவனே அனைத்தையும் உருவாக்குபவன் (ந தத்ர ராத ந ரதயோகா ந பந்தானோ பவந்தி, அத ரதான் ரதயோகான் பத: ஸ்ருஜதே; ந தத்ர ஆனந்தா முத; ப்ரமுதோ பவந்தி; அத ஆனந்தான் முத; ப்ரமுத; ஸ்ருஜதே; ந தத்ர வேசாந்தா; புஷ்கரிண்ய; ஸ்ரவந்த்யோ பவந்தி; அத வேசாந்தான் புஷ்கரிணீ; ஸ்ரவந்தீ; ஸ்ருஜதே; ஸ ஹி கர்த்தா! - பிருஹதாரண்யக உபநிஷதம் 4.3.10) என்று கனவுலகத்தைப்பற்றி பிருஹதாரண்யக உபநிஷதம் கூறுகிறது. உடம்பும் உணர்வு மனமும் ஒய்வெடுக்கும்போது ஆழ்மனம் செயல்படுகின்ற நிலை இது. மனம் இங்கே தனக்கென்று ஓர் உலகை உருவாக்கி இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.

கனவுலகத்தை அனுபவிக்கின்ற நிலையில் ஆன்மா தைஜஸன் எனப்படுகிறது. இது நமது இரண்டாம் பரிமாணம்.

மூன்றாம் பரிமாணம் - பிராஜ்ஞன் - தூக்கநிலை: 5-6:

யத்ர ஸுப்தோ ந கஞ்சன காமம் காமயதே ந கஞ்சன
ஸ்வப்னம் பச்யதி தத் ஸுஷுப்தம் ஸுஷுப்தஸ்தான ஏகீபூத:
ப்ரஜ்ஞானகன ஏவானந்தமயோ ஹ்யானந்தபுக் சேதோமுக:
ப்ராஜ்ஞஸ்த்ருதீய: பாத: //5//

யத்ர - எப்போது; ஸுப்த: - தூங்குபவன்; கஞ்சன - எந்த; காமம் - ஆசைகளையும்; ந காமயதே - ஆசைப்படுவதில்லையோ; கஞ்சன - எந்த; ஸ்வப்னம் - கனவு; ந பச்யதி - காண்பதில்லையோ; தத் - அது; ஸுஷுப்தம் - தூக்க நிலை; த்ருதீய: பாத: - மூன்றாம் பரிமாணம்; ப்ராஜ்ஞ; - பிராஜ்ஞன்; ஸ்தான; - களம்; ஸுஷுப்த: - தூக்கம்; ஏகீ பூத; - அனுபவங்கள் ஒடுங்கிய நிலை; ப்ரஜ்ஞானகன; ஏவ - உணர்வு திரண்ட நிலை: ஆனந்தமய; - ஆனந்தவடிவினன்; ஆனந்தபுக் ஹி - ஆனந்தத்தை அனுபவிப்பவன்; சேதோமுக; - உணர்வின் வாசல்.

5. ஆசைகளோ கனவுகளோ எதுவும் இன்றி ஆழ்ந்து
தூங்குகின்ற நிலை ஆன்மாவின் மூன்றாம் பரிமாண
மாகும். இந்த நிலையை அனுபவிப்பவன்
பிராஜ்ஞன். இந்த நிலையில் அனுபவங்கள் எதுவும்
இல்லை. உணர்வு (ணீஞுணூஞிஞுணீtடிணிண) திரண்டு ஒரு திரளாக
உள்ளது; அதனால் இது விழிப்பு மற்றும் கனவு
நிலை உணர்வுகளின் வாசலாக உள்ளது. ஆனந்த
வடிவினனான பிராஜ்ஞன் இங்கே ஆனந்தத்தை
அனுபவிக்கிறான்.

மூன்றாவது வருவது ஆழ்ந்த தூக்கம். இங்கே விழிப்பும் இல்லை, கனவும் இல்லை, விழித்திருக்காவிட்டாலும், கனவு காணாவிட்டாலும் அந்த ஆழ்ந்த தூக்க நிலையை நாம் அனுபவிக்கிறோம். ஏனெனில் தூங்கி எழுந்த பிறகு நேற்று நன்றாகத் தூங்கினேன், மிகவும் ஆனந்தமாக இருந்தது என்று கூறுகிறோம். இவ்வாறு தூக்க நிலையை அனுபவிக்கின்ற ஆன்மா பிராஜ்ஞன் எனப்படுகிறது.

தூக்க நிலைக்கு இங்கே நான்கு அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன.

1. இந்த நிலையில் அனுபவங்கள் எதுவும் இல்லை. கண், காது போன்ற நமது புலன்கள், உணர்வுமனம், ஆழ்மனம் அனைத்தும் ஓய்வில் ஆழ்ந்துவிடுவதால் இங்கே புறவுலக அனுபவங்களும் இல்லை; மனவுலக அனுபவங்களும் அதாவது கனவும் இல்லை.

2. புறவுலகம், மனவுலகம் என்று எந்த உலகத்தின் அனுபவங்களும் இல்லாமல் மனம், ஆழ்மனம், புத்தி, சித்தம் ஆகியவை ஒடுங்கி இருக்கின்றன. எங்கே? நான் - உணர்வில், அனைத்தும் நான்- உணர்வில். ஒடுங்கிவிட்டதால் தனியான அனுபவங்கள் எதுவும் இல்லை. அதனால் இது அனைத்தும் திரண்ட நிலையாகக் கூறப்படுகிறது.

3. மனம், ஆழ்மனம் ஆகியவை ஒடுங்கிவிட்டாலும் நான் - உணர்வு இங்கு விழித்திருக்கிறது. இதன் பொருள். என்ன? நான் இருக்கிறேன். என் பெயர் ராமன் என்ற உணர்வு ஆழ்ந்த தூக்கத்திலும் நம்மை விட்டு விலகுவதில்லை. பத்து பேர் தூங்குகின்ற இடத்தில் ராமா என்று கூப்பிடும்போது, ராமன் சட்டென்று விழிப்பது இந்த நான்-உணர்வு விழித்திருப்பதன் காரணமாகத்தான்.

இவ்வாறு நான் - உணர்வில் ஒடுங்கியிருக்கின்ற மனம் வெளிப்படும்போது முதல் நிலையில் கனவும், மேலும் புறநிலையில் வரும்போது விழிப்பு நிலையும் அனுபவிக்கப்படுகின்றன. அதனால்தான் இது மற்ற இரண்டு நிலைகளின் வாசல் என்று கூறப்பட்டது.

4. ஆழ்ந்த தூக்க நிலையிலுள்ள ஒரே அனுபவம் ஆனந்தம். அதனால்தான் தூங்கி எழுந்ததும் நான் ஆனந்தமாகத் தூங்கினேன் என்று நம்மால் கூற முடிகிறது.

ஏஷ ஸர்வேச்வர ஏஷ ஸர்வஜ்ஞ ஏஷோஸந்தர்யாம்யேஷ யோனி;
ஸர்வஸ்ய ப்ரபவாப்யயௌ ஹி பூதானாம் //6//

ஏஷ; - இவனே; ஸர்வேச்வர; - அனைத்திற்கும் தலைவன்; ஸர்வஜ்ஞ; - அனைத்தும்அறிபவன்; அந்தர்யாமீ - உள்நின்று இயக்குபவன்; ஸர்வஸ்ய - அனைத்தின்; யோனி; - மூலகாரணம் ; பூதானாம் - உயிர்களின்; ப்ரபவ அப்யயௌ ஹி - தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணம்.

6. இவனே அனைத்திற்கும் தலைவன். இவனே
அனைத்தும் அறிபவன். இவனே அனைத்து உயிர்
களையும் உள்நின்று இயக்குபவன். அனைத்திற்கும்
மூலகாரணம் இவனே. உயிர்களின் தோற்றத்திற்கும்
ஒடுக்கத்திற்கும் இவனே காரணம்.

தூக்கநிலை இங்கு மேலும் விளக்கப்படுகிறது. புறவுலகம், அதிலிருந்து நாம் பெறும் அனுபவங்கள்; மனவுலகம், அதிலிருந்து நாம் பெறும் அனுபவங்கள் ஆகியவை சேர்ந்ததே நமது வாழ்க்கை. நான் - உணர்வு என்ற ஒன்று இருந்தால் மட்டுமே இந்த அனுபவங்கள் அனைத்தையும் நாம் பெற முடியும். உலகங்கள் எல்லாம் இருந்தாலும் நான் - உணர்வு இல்லையென்றால் அனுபவங்கள் எதுவும் இல்லை. அந்த நான் - உணர்வுக்கு அடிப்படையாக இருப்பது தூக்கநிலையை அனுபவிக்கின்ற நமது பரிமாணமாகிய பிராஜ்ஞன்.

ஓர் உதாரணத்தைக் காண்போம். காண்பவன் இருக்கலாம். எத்தனையோ அழகிய காட்சிகள் முன்னால் இருக்கலாம்; ஆனாலும் ஒளி இல்லையென்றால் எந்தப் பயனும் இல்லை. எனவே காண்பவன். காட்சி ஆகிய இரண்டிற்கும் அடிப்படையாக இருப்பது ஒளிதான். அதுபோலவே உலகம், உயிர்கள், அறிவு என்று எவ்வளவுதான் இருந்தாலும் நான் என்ற ஒன்று இல்லாமல் அவற்றை அறியவோ அனுபவிக்கவோ முடியாது. அதனால்தான் இங்கே நான்- உணர்வின் அடிப்படையான பிராஜ்ஞன், இத்தனை பெருமைகள் உடையதாகப் போற்றப்படுகிறது.

ஒவ்வோர் உயிரிலும் தலைமை நிலையில் இருப்பவன் பிராஜ்ஞன். ஏனெனில் பிராஜ்ஞனின் செயல்பாடான நான் உணர்வு இல்லாமல் யாரும் எதையும் உணரவோ அனுபவிக்கவோ முடியாது. இவ்வாறு அனைத்தையும் இயக்குபவனாக இருப்பதால் பிராஜ்ஞன் அனைத்திற்கும் தலைவன். அனைத்து உயிர்களையும் உள்நின்று இயக்குபவன்.

உலகம் இருக்கலாம், பல்வேறுவகை அறிவு இருக்கலாம். ஆனால் நான் - உணர்வு இன்றி எந்த அறிவையும் பெறவோ பயன்படுத்தவோ முடியாது. அதனால் பிராஜ்ஞன் அனைத்தையும் அறிபவன்.

உலகமும் உயிர்களும் நதியும் கடலும் மலையும் இருந்தாலும் நான் இல்லாமல் இவை எதனாலும் ஒருவனுக்குப் பயனில்லை. இந்த உலகம் இருக்கிறது. என்றால் அதற்கு, என்னைப் பொறுத்தவரை நானே காரணம். நான் இல்லாவிட்டால் எனக்கு உலகம் இல்லை. அதனால்தான் பிராஜ்ஞன் அனைத்திற்கும் மூல காரணம்.

விழிப்பு நிலையும் கனவும் எவ்வாறு நான் - உணர்வில் ஒடுங்கி, அதிலிருந்தே மீண்டும் வெளிவருகின்றன. என்பது 5- ஆம் மந்திர விளக்கத்தில் 2-3 பகுதியில் கூறப்பட்டது. வாழ்க்கையே பிராஜ்ஞனில் ஒடுங்கி, மீண்டும் அவனில் வெளிப்படுவதாக உள்ளது. அதனால்தான் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் இவனே காரணம் என்று கூறப்பட்டது.

நான்காம் பரிமாணம் - ஆன்மா:

நாந்த; ப்ரஜ்ஞம் ந பஹி: ப்ரஜ்ஞம் நோபயத: ப்ரஜ்ஞம் ந
ப்ரஜ்ஞானகனம் ந ப்ரஜ்ஞம் நாப்ரஜ்ஞம் அத்ருஷ்ட்டம்
அவ்யவஹார்யம் அக்ராஹ்யம் அலக்ஷணம் அசிந்த்யம்
அவ்யபதேச்யம் ஏகாத்மப்ரத்யய ஸாரம் ப்ரபஞ்சோபசமம்
சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே ஸ ஆத்மா ஸ
விஜ்ஞேய: //7//

அந்த; ப்ரஜ்ஞம் - அகமுக நிலை; பஹி: ப்ரஜ்ஞம் - புறமுக நிலை; உபயத; ப்ரஜ்ஞம் - இரண்டும் சேர்ந்த நிலை; ப்ரஜ்ஞான கனம் - உணர்வு திரண்ட நிலை; ப்ரஜ்ஞம் - உணர்வு நிலை; அப்ரஜ்ஞம் - உணர்வற்ற நிலை; ந - அல்ல; அத்ருஷ்ட்டம் - காண முடியாதது; அவ்யவஹார்யம் - செயல்களற்றது; அக்ராஹ்யம் - புரிந்து கொள்ள முடியாதது; அலக்ஷணம் - அடையாளங்கள் அற்றது; அசிந்த்யம் - சிந்தனைக்கு அப்பாற்பட்டது; அவ்யபதேச்யம் - விளக்க முடியாதது; ஏகாத்ம ப்ரத்யயஸாரம் - ஆன்ம உணர்வால் அறியக் கூடியது; ப்ரபஞ்ச உபசமம் - பிரபஞ்ச உணர்வு மறைந்தது; சாந்தம் - அமைதி நிலை; சிவம் - மங்கலமானது; அத்வைதம் - இரண்டற்றது; சதுர்த்தம் - நான்காம் பரிமாணம்; மன்யந்தே - கூறப்படுகிறது; ஸ; - அதுவே; ஆத்மா - ஆன்மா; ஸ; - அதையே; விஜ்ஞேய; - அறிய வேண்டும்.

7. நான்காம் பரிமாணம். அது அகமுக நிலை அல்ல.
புறமுக நிலை அல்ல, இரண்டும் சேர்ந்த நிலை
அல்ல. அது உணர்வு திரண்டநிலை அல்ல; உணர்வு
நிலை அல்ல; உணர்வற்ற நிலையும் அல்ல;
அதனைக் காண முடியாது. செயல்களற்ற, புரிந்து
கொள்ள முடியாத, அடையாளங்கள் இல்லாத,
சிந்தனைக்கு அப்பாற்பட்ட, விளக்க முடியாத நிலை
அது, அதனை ஆன்ம உணர்வால் மட்டுமே அறிய
முடியும். அங்கே பிரபஞ்ச உணர்வு இல்லை. அது
அமைதிமயமானது, மங்கலமானது, இரண்டற்றது,
இதுவே நான்காம் பரிமாணம், இது ஆன்மா,
இதையே அறிய வேண்டும்.

நான்காம் பரிமாணம் என்று கூறப்பட்டாலும் இது உண்மையில் முதல் மூன்று பரிமாணங்கள் சேர்ந்ததும் அதே வேளையில் அவற்றைக் கடந்ததுமான ஒரு நிலை ஆகும். நமது உண்மையான இயல்பு இதுவே, விழிப்பு நிலை, கனவு, தூக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் ஆன்மா இருக்கிறது. சூரியனின் சன்னிதியில் உலகம் இயங்குகிறது. ஆனால் எந்த இயக்கத்திலும் சூரியன் நேரடியாக ஈடுபடுவதில்லை. அதுபோலவே நமது அனைத்து செயல்பாடுகளும் ஆன்மா என்ற ஒன்றை அடிப்படையாக வைத்தே நிகழ்கின்றன.

நான்-உணர்வு என்ற ஒன்று இருக்கின்ற தூக்கத்தையே நமது அறிவால் சரியாகப் புரிந்துகொள்ளவோ விளக்கவோ இயலவில்லை. இதில், நான்- உணர்வும் அற்ற ஆன்ம நிலையை அறிவால் அறிவதோ, புரிந்துகொள்வதோ விளக்குவதோ சாத்தியமே அல்லாத ஒன்று, நமது அறிவின் எல்லைகள் குறுகியவை. ஆன்ம நிலையை உணரலாம். அனுபவிக்கலாம். ஆனால் அதனை நமது அறிவினால் அறியவோ சொற்களால் விளக்கவோ இயலாது. அதனை உணர்த்தவே உபநிஷதம் முரண்பாடுபோல் தோன்றுகின்ற இத்தகைய சொற்களால் அந்த நிலையைச் சுட்டுகிறது.

 
மேலும் மாண்டூக்ய உபநிஷதம் »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news
சாந்தி மந்திரம்: எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் ... மேலும்
 
temple news
முப்பொருள் உண்மை: நாம், நாம் வாழ்கின்ற உலகம், இரண்டிற்கும் அடிப்படையாக விளங்குகின்ற இறைவன் - இந்த ... மேலும்
 
temple news
உலகம், இறைவன் இரண்டும் ஓங்காரம் என்று முதல் மந்திரம் கூறியது. மனிதனும் ஓங்காரமே என்று கூறி இந்த ஐந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar