பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
12:07
உபநிஷதங்களின் பெயரில் இன்று பதிப்பில் உள்ளவை 200-க்கும் மேலானவை. முக்திகோபநிஷதம் 108 உபநிஷதங்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. விளக்கவுரையாளர்களில் முதன்மையாகக் கருதப்படும் ஆதிசங்கரர்(கி.பி. 788- 820) பத்து உபநிஷதங்களுக்கு மட்டுமே உரை எழுதியுள்ளார்; பிரம்ம சூத்திர விளக்கவுரையில் மேலும் சில உபநிஷதங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். ராமானுஜர் ( கி.பி. 1017-1137) மேலும் இரண்டு உபநிஷதங்களை விளக்கியுள்ளார். அவர்களால் எடுத்துரைக்கப்பட்டவைகளை பழமையானதாகவும், மதிப்புடையதாகவும் கொண்டு அதனை வரிசைப்படுத்திக் கூறுகிறோம்.
ஐத்தரேய உபநிஷதம், பிருஹதாரண்யக உபநிஷதம், சாந்தோக்கிய உபநிஷதம், ஈஸாவாஸ்ய உபநிஷதம், ஜாபால உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், கட உபநிஷதம், கவுஸீதகி உபநிஷதம், கேன உபநிஷதம், மாண்டூக்ய உபநிஷதம், மஹாநாராயண உபநிஷதம், முண்டக உபநிஷதம், பிரச்ன உபநிஷதம், ஸ்வேதாஸ்வதர உபநிஷதம், தைத்திரீய உபநிஷதம், வாஜ்ரசுகா உபநிஷதம் என்று அறிஞர்கள் இவைகளை பல விதங்களில் பிரித்துள்ளனர். பல அறிவாளிகள் வெவ்வேறு விதங்களில் அவற்றைப் பிரித்துள்ளனர். அவை உருவான காலத்திற்கு ஏற்ப சிலர் பிருஹதாரண்யக, சாந்தோக்ய, தைத்திரீய உபநிஷதங்களை கட மற்றும் ஸ்வேதாஸ்வதர உபநிஷதங்களுக்கு காலத்தினால் மிக முந்தியவை என்று கருதுகின்றனர். சிலர் இவைகளை அவைகளின் எழுத்து நடைக்கு அதாவது கட்டுரை, கவிதை வடிவம் என்பதற்கு ஏற்ப பிரித்துள்ளனர். இத்தகைய பிரிவு முறைகள் அவைகளைப் படிப்பதில் நமக்கு அதிகம் உதவுவதில்லை.
மேலே குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர மற்ற உபநிஷதங்கள் பிற்காலத்தில் எழுதப்பட்டவை. மேலும் அவை ஒரு குறிப்பிட்ட சமயப் பிரிவையோ, சமூகத்தையோ பரப்புவதற்காக எழுதப்பட்டிருக்கலாம். மக்களிடம் குறிப்பாக வைதீக சமூகத்திடம் மதிப்பையும், தகுதியையும், அடையாளத்தையும் பெறுவதற்காக தங்களது கருத்துகளுடன் உபநிஷதம் என்ற அடைமொழியையும் சேர்த்துக் கொண்டனர். குறிப்பிட்ட சமய வகுப்பை ஆதரிப்பதாக இருப்பினும், இவை பொதுவான சமயத்தையும், ஒழுக்க முறைகளையும் மக்களிடையே பரப்பி வேதாந்த கருத்தை பராமரிப்பதிலும் உதவியுள்ளன.
இந்த சிறிய உபநிஷதங்களை பொதுவாக கீழ்கண்ட வாறு வகுக்கலாம்.
அ) வேதாந்த உபநிஷதங்கள்
ஆ) சைவ உபநிஷதங்கள்
இ) சாக்த உபநிஷதங்கள்
ஈ) வைஷ்ணவ உபநிஷதங்கள்
உ) யோக உபநிஷதங்கள்
ஊ) சன்னியாச உபநிஷதங்கள்
வேதாந்த உபநிஷதங்கள் முக்கிய உபநிஷதங்களால் ஏற்கனவே கூறப்பட்ட பொதுக் கருத்துக்களைச் சார்ந்து எழுதப்பட்டுள்ளன. சைவ, சாக்த, வைஷ்ணவ உபநிஷதங்கள் முறையே சிவன், தேவி, விஷ்ணு போன்ற தெய்வங்களை வழிபடும் சமயப் பிரிவுகளைச் சார்ந்தவைகள். யோக உபநிஷதம் பதஞ்சலியின் யோக சூத்திரங்களைச் சார்ந்து ஹட யோகம் ராஜயோகம் ஆகியவற்றை விளக்குகின்றன. சன்னியாசத்தின் குறிக்கோள் மற்றும் செயல்முறைகளை சன்னியாச உபநிஷதம் எடுத்துக் கூறுகிறது.
சம்ஸ்கிருத விளக்கவுரைகள்:
உபநிஷதம் எளிதில் புரிந்துகொள்ள முடியாத, மறைபொருள், உபநிஷதங்களின் மொழி மிகப் பழமையானது. அவற்றின் பல கருத்துக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் உள்ள சம்ஹிதை மற்றும் பிராம்மணப் பகுதிகளிலுள்ள யாகத்தைப் பற்றிய விவரங்களாக இருப்பதினால் அவைகளை நம்மால் சரியாக புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே சரியான விளக்கவுரை இன்றி அவைகளை சரியாக புரிந்துகொண்டு ஒருமித்த ஒரு கருத்தை பெறுவது என்பது இயலாதது. ஆதிசங்கரரே இவைகளுக்கு முதலில் விளக்கவுரை எழுதினர். அவருடைய விளக்கவுரைகளுக்கு மேலும் விளக்கவுரைகளை ஆனந்த கிரி (13-ம் நூற்றாண்டு) போன்றவர்கள் எழுதினார்கள். இவை உபநிஷதங்களின் உண்மையான பேரறிவை திறக்கின்ற மதிப்புடைய புத்தகங்கள் ஆகும்.
ராமனுஜர் எந்த ஒரு உபநிஷதத்திற்கும் விளக்கவுரையை எழுதவில்லை. ஆனால் தனது வேதாந்த சங்கரஹம் என்ற நூலில் உபநிஷதங்களின் அறிய கருத்துக்களை விளக்குவதற்கு முயன்றுள்ளார். ரங்க ராமனுஜர் (16-ம் நூற்றாண்டு) முக்கியமான உபநிஷதங்களுக்கு விளக்கவுரையை எழுதியுள்ளார். மத்வர் ( 13-ம் நூற்றாண்டு) பழமையான 10- உபநிஷதங்களுக்கு சிறிய விளக்கவுரையை அளித்துள்ளார். அவைகளில் சிலவற்றிற்கு ராகவேந்திர தீர்த்தர் (17-ம் நூற்றாண்டு) மேலும் விளக்கவுரையை எழுதியுள்ளார்.
சில விளக்கவுரையாளர்கள் உபநிஷதங்களில் குறிப்பாக சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து விளக்கியுள்ளனர். ஆனால் ஈஸாவாஸ்ய உபநிஷதம் பிரம்மானந்த சரஸ்வதி, சங்கரானந்த (14-ம் நூற்றாண்டு), யுவத்தார்ய (11-ம் நூற்றாண்டு), வேதாந்த தேசிகர்(14-ம் நூற்றாண்டு) போன்ற பல அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மற்ற உபநிஷதங்களை அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. மத்வரின் விளக்கவுரையை சார்ந்து ஈஸ, கேன, கட, பிரச்ன, முண்டக மற்றும் மாண்டூக்ய உபநிஷதங்களுக்கு ராகவேந்திர தீர்த்தர் விளக்கவுரை செய்துள்ளார். பின்னாளில் உபநிஷத பிரம்ம யோகிந்திரர் பெரும்பான்மையான சிறிய உபநிஷதங்களுக்கு விரிவான விளக்கவுரையை தந்துள்ளார்.
உபநிஷதங்களின் தத்துவம்:
பிராம்மணம், ஆரண்யகம் போன்ற எண்ண அலைகளின் தொடர்ச்சியே உபநிஷதங்கள். இருப்பினும் அவைகள் சடங்குகளை விடுத்து உபாசனையையும் (தியானம்), ஞானத்தையும் (அறிவு) உபதேசிக்கின்றன.
உபநிஷதங்களின் தத்துவ பகுதிகளில் உலகத்தின் ஆதி காரணம், அதன் இயல்பு, அவற்றின் பரிமாணம் பற்றிய கருத்துகள் போதிக்கப்படுகின்றன. உலகத்தின் இந்த ஆதிகாரணமான ஆதிமூலத்தை பிரம்மம் என்று அழைக்கிறோம்.
இதற்கு மாறாக உடலும் மனமும் கொண்ட மனிதனுக்குள்ளே ஏதாவது நிரந்தரமான, நிலையான ஒன்று இருக்கிறதா என்று கேள்வி இணையாக விவாதிக்கப்படுகிறது. இதனை ஆன்மா என கூறுகிறோம்.
இந்த ஆன்மா ஒன்றா? பலவா? அளவில் அது எல்லைக்குட்பட்டதா? எல்லையற்றதா? அது பிரம்மனுடன் ஒன்றுபட்டதா வேறானதா? உபநிஷதங்கள் இந்த கேள்விகளை விவாதித்தாலும் ஒரேவிதமான பதில் இருப்பதாக தெரியவில்லை. பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் வைதீக வேதாந்த பிரிவுகள் மற்ற கருத்துக்களை ஒதுக்கிவிட்டு ஒரு கருத்தையே சரியானதாக எடுத்துக் கொண்டு இயங்குகின்றன.
இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயிரினங்களின் வாழ்க்கை முடிவைப் பற்றியும் உபநிஷதங்கள் கூறுகின்றன. ஒருவரின் உண்மை இயல்பைப் பற்றிய அறியாமையே பந்தத்திற்குக் காரணம் என்றும் சுயகட்டுப்பாடு, உண்மை பேசுதல் போன்ற நல்லொழுக்கங்களை கடைப்பிடிப்பதின் மூலம் அறியாமையை அகற்ற முடியும் என்பதையும் அவைகள் விளக்குகின்றன. அவைகளின் அறிவுரைகளின் சுருக்கமான தொகுப்பை சிறிது பார்ப்போம்.
பிரம்மம்:
காரணங்களுக்கெல்லாம் காரணமான இவ்வுலகின் ஆதி காரணத்தை பிரம்மம் என்று உபநிஷதங்கள் அழைக்கின்றன. ஆன்மா, ஸத், அக்ஷரம், ஆகாசம், பூமா என்று பலவிதங்களில் அது அழைக்கப்படுகின்றது. உலகம் பிரம்மத்திலிருந்து தோன்றி, காக்கப்பட்டு அதனிடமே மீண்டும் சென்று ஒடுங்குகிறது. பிரம்மமாகிய பரமாத்மா எங்கும் இருப்பவர். எல்லா ஆற்றல்களையும் கொண்டவர். அவர் உயர்ந்தவற்றிöல்லாம் உயர்ந்தவர் சிறியவற்றிலெல்லாம் சிறியவர், எல்லோருள்ளும் அந்தர்யாமியாக இருப்பவரும் அவரே, உப்பு தண்ணீரில் கரைந்திருப்பது போன்று இவ்வுலகில் அவர் உறைகிறார். அவருக்கு எவ்வித எல்லையோ தேவைகளோ கிடையாது. படைக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் அவரே ஆதிமூலமாகவும் இறைவனாகவும் இருக்கிறார். மற்றவர்கள் அவரை பார்க்கவோ, கேட்கவோ அறியவோ முடியாது. ஆனால் அவருக்கு எல்லாம் தெரியும், எல்லா உயர்ந்த குணங்களின் முழுமையின் வடிவம் அவர், பக்தர்களின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து அவைகளை நிறைவேற்றி வைப்பவர் அவரே, எல்லாவற்றின் அறுதியான குறிக்கோள் அவரே.
அவரைத் தியானிப்பதற்கு வசதியாக உபநிஷதங்கள் சிலசமயம் அவரை புருஷராக (மனித உருவில் வந்த தெய்வீக புருஷர்), பேரொளி பொருந்தியவராக, தங்க நிறம் கொண்டவராக, தங்கத்தைப் போன்று எல்லா அங்கங்களாலும் ஜொலிப்பவராக, மலர்ந்த சிவப்பு தாமரைப் போன்ற கண்களைக் கொண்டவராக வர்ணிக்கின்றன. நெருப்பு அவரது சிரம், சூரிய சந்திரர்கள் அவரது கண்கள், எட்டுத்திக்குகளும் அவரது செவிகள், வேதங்கள் அவரது பேச்சு, பூமி அவரது பாதம் என்று அவர் வர்ணிக்கப்படுகிறார். அவரது எங்கும் நிறைந்துள்ள பேரண்ட உருவத்தை விளக்கும் வகையில் சிலசமயம் அவர் ஆயிரம் சிரங்களையும், ஆயிரம் கண்களையும், ஆயிரம் பாதங்களையும் கொண்டவராக உருவகப்படுத்தப்படுகிறார். இவ்வாறு அவர் தியானத்திற்கு வசதியாக உருவகப்படுத்தப் படுகிறார். இவ்வாறு தியானத்திற்கு வசதியாக உருவகப்படுத்தப்பட்டுள்ள வடிவத்திற்கு ஔபனிஷத-புருஷர் (உபநிஷதங்களில் விளக்கப்பட்டுள்ள இறைவன்) என்று பெயர்.
ஆன்மா:
ஒருவன் இறந்தால், அதன் பிறகு அவனில் தொடர்ந்து வாழ்வது என்ன? அப்படி ஏதாவது ஒன்று இருக்கிறதா? எதனுடைய தூண்டுதலினால், ஆற்றலினால் மனிதனின் மனமும் புலன்களும் செயல்புரிகின்றன? முனிவர்களின் இத்தகைய கேள்விகள் மனித மனத்திலும், உடலின் உள்ளும் ஆன்மா என்ற உறையும் சக்தி ஒன்று இருப்பதை உறுதி செய்கின்றன.
உடல் பிறந்து அழியும்போது இந்த ஆன்மா பிறக்கவோ, இறக்கவோ செய்வதில்லை. அது பிறவாதது. என்றும் இருப்பது, அது உடல், புலன்கள், பிராணன் மனம், அகங்காரம் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டது. ஆன்மா என்றும் சுதந்திரமானது. இவையெல்லாமே ஆன்மாவினால் உயிரூட்டப்பட்டு அதற்காக தங்களது செயல்களை புரிகின்றன. இவைகளின் குறைகள், நிலையற்றத் தன்மை, இழப்பு, ஆகியவைகள் ஆன்மாவை ஒருபோதும் பாதிப்பதில்லை.
உடல் என்ற கூட்டுக்குள் ஆன்மாவானது அடைப்பட்டு தனது சுதந்திரத்தின் பெரும்பகுதியை இழந்து விட்டது. அந்த நிலையில் அது ஜீவாத்மன் அல்லது ஜீவன் என்று அழைக்கப்படுகிறது. கடந்த காலச் செயல்களின் விளைவான கர்மாவினால் ஆன்மா ஏன், எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்று பதிலளிக்கப்படுகிறது. ஆனால் என்று எவ்வாறு, முதன் முதலாக இந்த கர்மா என்ற சங்கிலி தோன்றியது என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஏனென்றால் உபநிஷதங்கள் உலகின் தோற்றத்தை என்றும் இருக்கின்ற, ஆதியும் அந்தமுமற்ற தொடர்ந்த ஒரு செயலாக கூறுகின்றன.
பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியில் அகப்பட்டு துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்கு சம்சாரம் என்று பெயர். சம்சாரம் என்ற பந்தத்திலிருந்து விடுதலை பெறுவது அதாவது, மோட்சம் என்பது மனித வாழ்க்கையின் குறிக்கோளாக கருதப்படுகிறது. இதனை ஞானம் என்கிற அறிவு மற்றும் பக்தி மூலமாக அடைய முடியும். இதற்காக உபாசனை அல்லது தியானம் பரிந்துரை செய்யப்படுகிறது. சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ள கர்மா அல்லது செயல் என்பதும் மோட்சத்திற்கு உதவும் வழியே.
படைப்பு:
பிரம்மம் உலகத்தின் அடிப்படையாகவும், ஆன்மா நமது உண்மை இயல்பாகவும் இருந்தாலும் நாம் வாழ்கின்ற இந்த உலகத்தை நம்மால் ஒதுக்கித் தள்ள முடியாது. நமது செயல் முறைகளுக்கு இவ்வுலகம் உண்மையானதே. மோட்சத்திற்கான நமது முயற்சிகளும் போராட்டங்களும் இவ்வுலகத்திலேயே நடைபெறுகின்றன. எனவே அதனைப்பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். உலகம் எவ்வாறு தோன்றியது, எப்படி தொடர்கிறது. அதன் அறுதியான முடிவு நிலை என்ன என்பது பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் ஆன்மா அல்லது ஸத் என்று அழைக்கப்படுகின்ற பிரம்மம் மட்டுமே இருந்தது. அது இரண்டற்ற ஒரே பொருள். அது பலவாக மாற விரும்பியது. எனவே தன்னிடமிருந்து ஆகாசம் (வானம் வெளி ஈதர்), வாயு (காற்று), அக்னி அல்லது தேஜஸ் (நெருப்பு), அப்பு (நீர்), பிருத்வி(பூமி) ஆகியவற்றைத் தோற்றுவித்தது. இவற்றின் பலவிதமான கலப்பினால் உலகமானது தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் படைப்பின் ஒவ்வொரு பகுதியிலும் பிரம்மம் அவைகளின் அந்தர்யாமியாக, அவைகளை கட்டுப்படுத்தும் உள்ளாற்றலாக நுழைந்தது.
மற்றொரு விளக்கத்தின்படி ஆதி பூதங்கள் மூன்று (தேஜஸ், அப்பு, பூமி,) அல்லது இரண்டு ரவி (சந்திரன், அல்லது பொருள்) பிராணன் (சூரியன் அல்லது நெருப்பு அல்லது சக்தி) இவைகளின் பல்வேறு சதவீத கலப்பினால் உலகம் உருவானது. உலகம் எப்போதும் பிரம்மத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இல்லை, இல்லை அது பிரம்மத்திடமிருந்து வேறுப்பட்டதே அல்ல.
பிரம்மத்திடமிருந்து தோன்றி வெளிப்பட்டாலும் உலகம் தொடர்ந்து அதிலேயே இருக்கின்றது. பிரளயத்தின் போது உலகம் மீண்டும் பிரம்மத்திடம் கலந்து மறைகிறது.
பிரம்மம் மற்றும் உலகத்தின் தொடர்புபற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உபநிஷதங்களில் உள்ளன. ஒரு கருத்தின்படி உலகம் பிரம்மத்தின் பரிணாமம் என்பதால் உலகமும் பிரம்மமே. இது சப்ரபஞ்சவாதம் என்று அழைக்கப்படுகிறது. மற்றொரு கருத்தின்படி உலகத்தின் தனியான இருப்பானது மறுக்கப்பட்டு பிரம்மம் மட்டுமே உள்ளது. இது நிஷ்பிரபஞ்சவாதம் என்றழைக்கப்படுகிறது.
பந்தமும் முக்தியும்:
உடல் என்ற மரத்தின் கிளைகளில் வசிக்கும் இரு பறவைகளாக ஜீவாத்மனும், பரமாத்மனும் ( பிரம்மம்) இருப்பதாக சில உபநிஷதங்கள் உருவகிக்கின்றன. முதல் பறவை கர்ம பலன்களான இனிப்பு, கசப்பு பழங்களை உண்டு இன்பத்தையும் துன்பத்தையும் மாறிமாறி அனுபவிக்கிறது. இரண்டாவதோ அமைதியாக, எவ்வித கலக்கமும் இன்றி, பழங்களை ஒருபோதும் தொடாமல் அரசனைப் போன்று அமைந்துள்ளது. ஜீவாத்மா பரமாத்மாவின் உயர்ந்த நிலையை அறிந்து மறுகணம் துன்பங்கள். கவலைகளிலிருந்து விடுபடுகிறது. எனினும் சுதந்திரமான ஆன்மா எப்படி ஜீவனாக மாறியது என்ற கேள்விக்கு விடையை உபநிஷதங்கள் கூறாவிட்டாலும், எந்தவித சாதனைகளினால் ஜீவன் தனது உண்மை நிலையை (பரமாத்மா) அடைய முடியும் என்பதை விளக்குகின்றன.
முதல் படியாக சாதகன் சில நல்லொழுக்க வழிகளை, பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். விசாரத்தின் மூலம் வேதச் சடங்குகள் நம்மை என்றும் இருக்கும் நிலையான உண்மைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்பதை உணர்ந்து அவைகளைத் துறந்து விட வேண்டும். புலன்களுக்கு இனிமையான பிரேயஸை ( லௌக்கத்தை) விட்டு உயர்ந்ததான ஸ்ரேயஸை (ஆன்மீகத்தை) அவன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். கெட்ட செயல்களை விட்டு, சுயக்கட்டுப்பாடு மூலம் தனது மனத்தை உள்முகமாகத் திருப்பி இதயத்திலிருக்கும் ஆன்மாவில் நிலைக்கச் செய்து தியானம் செய்ய வேண்டும். எல்லா உயிரினங்களிடத்தும் கருணை, இரக்கம் காட்ட வேண்டும். அவர்களுக்குத் தேவையானதை அளிக்க முயல வேண்டும். பேராசை கூடாது. எப்போதும் கவனத்துடன் உண்மையையே பேச வேண்டும். சாஸ்திரங்களில் கூறியுள்ளதைப் போன்று சரியான தர்ம வழியில் நடக்க வேண்டும். உபநிஷதங்களை படித்தல், தவம் செய்தல், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தல் ஆகியவை சாதனைகளில் மிக முக்கியமானவை.
பணிவுடன் தகுதியான குருவை நாடிச் செல்ல வேண்டும். அவரிடமிருந்து ஆன்மாவைப் பற்றி சரியான கேள்விகள் மூலமாகவும் அவருக்குச் சேவை செய்வதாலும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தகுதியுள்ள சீடனுக்கு, அவனைச் சோதித்த பிறகு, குருவானவர், ஆன்மீக ஞானத்தை அளிக்க வேண்டும் என்று உபநிஷதங்கள் பரிந்துரைக்கின்றன.
பின்னர் சீடன் மனைத்தையும் (சிந்தித்தல்) நிதித்யா சனத்தையும் (தியானம் ) பயிற்சி செய்து ஆன்ம அனுபூதி அடைய வேண்டும்.
ஆன்ம அனுபூதி பெற்ற சாதகன் எத்தகைய ஆன்மீக அனுபவத்தைப் பெறுகிறான்? எல்லா உயிர்களையும் தன்னுள்ளும் தன்னை எல்லா உயிர்களிலும் காண்கிறான். எனவே மற்றவர்களிடம் தனி விருப்பமோ அல்லது வெறுப்போ அவன் அடைவதில்லை. தனது ஒவ்வொரு எண்ணத்திற்கும் பின்னால் ஆன்மாவின், சுத்த உணர்வின் ஆற்றலை உணர்கிறான். உலகியலில் தன்னைக் கட்டிப் போட்டிருந்த இதய முடிச்சுக்கள் அவிழ்ந்து வீழ்வதைக் காண்கிறான். தனக்குள்ளே பேரானந்தத்தை அனுபவிக்கிறான். தனது கவனத்தை வெளிப்புறம் செலுத்தினாலும், அங்கேயும் ஆன்மாவின் பிரம்மத்தின் சக்தி வெளிப்பாட்டையே அவன் காண்கிறான்.
ஆன்ம அனுபூதியில் கிடைக்கும் பேரானந்தம் உலகியலில் கிடைக்கும் மிக உயர்ந்த ஆனந்தத்தை விட அளவிட முடியாத அளவு உயர்ந்தது. வாழ்க்கையில் எதற்காகவும் எந்த வித வருத்தமும் அவனிடம் இருப்பதில்லை. பேரானந்தத்தில் திளைத்தவாறு உலகில் அவன் வலம் வருகிறான். மற்றவர்களின் நன்மைக்காக தனது அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறான்.
இத்தகையவனே ஜீவன்முக்தன் (இவ்வுடலில் வாழும்போதே முக்தியைப் பெற்றவன்). அவன் தனது உடலை உகுத்தபின் என்ன ஆகிறான்?
ஒரு கருத்துப்படி அவனது தூல உடலும், சூட்சும உடலும் இறப்பின் போது சிதைந்து பஞ்சபூதங்களுடன் கலந்து விடுகிறது. நதியானது கடலில் கலப்பது போல அவன் பிரம்மத்துடன் கலக்கிறான். தனது தனித்துவத்தை இழந்து பிரம்மத்துடன் முழுமையாக ஒன்றிணைந்து விடுகிறான்.
பெரும்பாலான உபநிஷதங்கள் மற்றொரு கருத்தை கூறுகின்றன. அதன்படி ஜீவன் முக்தன் தனது இறப்பிற்கு பின்னால் ஒளிமயமான தேவயானம் அல்லது உத்தராயனம் என்ற வழியில் பிரம்மலோகத்திற்கு (சத்திய யோகம்) சென்று அங்கு எல்லையற்ற அமைதியையும் ஆனந்தத்தையும் பெற்று நிலையாக இருக்கிறான். அந்த வழியில் நெருப்பு, பகல், ஒளி, வீசும் பதினைந்து நாட்கள், உத்தராயனத்தின் ஆறு மாதங்கள், வருடம், சூரியன், சந்திரன், மின்னல் என்ற நிறுத்தங்கள் உள்ளன. இவையெல்லாம் அந்த நிறுத்தங்களின் பொறுப்பான தேவதைகள், கடைசி நிறுத்தமான மின்னல் பகுதியிலிருந்து ஜீவன் முக்தனை அமானவ புருஷர் அதாவது மனிதனல்லாத தெய்வீக புருஷர் பிரம்மலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
பிரம்மலோகம் என்பது நமக்குள்ளே கிடைக்கும் அனுபவமா அல்லது ஜீவாத்மா சென்றடையும் உண்மையான வேறு ஒரு உலகமா? பெரும்பாலான உபநிஷதங்களில் இதற்கான சரியான, தெளிவான விளக்கங்கள் இல்லை. சாந்தோக்ய உபநிஷதம் ( 8.5.3) இதனை பூமியிலிருந்து இருக்கும் மூன்றாவது உலகமாகக் கூறுகிறது. அங்கே அர மற்றும் ந்ய என்ற இரண்டு பெரிய ஏரிகள் உள்ளன. ஐராம்மதியா எனும் உணவு ரசத்தை சேகரித்து வைக்கும் சிறிய ஏரியும் உள்ளது. சோமசவனம் என்ற அரசமரமும், தங்கத்தாலான அரங்கத்தைக் கொண்ட அபராஜிதம் என்ற நகரமும் அங்கே உள்ளன. கவுசீதகி பிரம்மனோபநிஷதம் (1,3,4-5) மேலும் அழகான வர்ணனையை தருகிறது. விரஜா என்ற நதி அங்கே ஓடுகிறது. இந்திரன் மற்றும் பிரஜாபதி என்ற இரண்டு காவலர்கள் உள்ளனர். விசக்ஷனா என்ற சிம்மாசனமும் அமிதௌஜாஸ் என்ற படுக்கையும் உள்ளன. ஐநூறு தேவ கன்னிகைகள் ஜீவன் முக்தனை வரவேற்று உபசரிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியின் நுழைவாயிலும் பிரம்மத்தின் தெய்வீக மணமும் எண்ணங்களும் அவனுக்குள்ளே நுழைகின்றன.
பிரம்மலோகத்தை அடைந்த யாரும் மீண்டும் உலகியலுக்குத் திரும்புவதில்லை.
மரணத்திற்குப் பின்பு:
ஆன்மாவை, பிரம்மத்தை அனுபூதியில் உணராது இறந்தவர்களின் நிலை என்ன? உபநிஷதங்கள் இதனையும் விரிவாக விளக்குகின்றன.
சகாம கர்மங்கள் (ஆசையினால் செய்யப்படும் செயல்கள்) அல்லது கீழ்நிலை உபாசனைகளை செய்தவர்களது ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன. சிலர் சுவர்க்கத்திற்குச் சென்று தங்களது நல்ல செயல்களின் பலன்கள் முடியும் வரை அனுபவித்து விட்டுமீண்டும் இவ்வுலகத்திற்கு திரும்புகின்றனர். சுவர்கத்திற்குச் செல்லும் வழி தக்ஷிணாயனம் எனப்படும். தூமாதி மார்கம் என்ற புகை நிறைந்த வழியில் ஜீவாத்மன் சந்திரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. வழியிலே புகை, இரவு, இருண்ட பதினைந்து நாட்கள், தெற்குப் பகுதியின் ஆறு மாதங்கள் ஆகிய நிறுத்தங்கள் வருகின்றன. தங்களது புண்ணிய கர்மங்கள் தீர்ந்த பின்பு அவர்கள் வானம், மழை, தாவரங்கள், உயிரினங்கள் மூலமாக மீண்டும் பூமிக்கு வருகின்றனர்.
இந்த இரண்டு வழிகளையும் அறியாதவர்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பிறக்கின்றனர். சில சமயம் மனிதனின் கீழ் இனங்களான விலங்காகவும், புழுவாகவும் கூட பிறக்கின்றனர்.
உபநிஷதங்களில் அங்கும் இங்கும் என சில இடங்களில் கர்மம், மறுபிறப்பு ஆகியவைகள் விளக்கப்பட்டுள்ளன. நல்ல செயல்களை (புண்ணியம்) செய்பவர்கள் நல்ல பலன்களையும் கெட்ட செயல்களைச் (பாவம்) செய்பவர்கள் கெட்ட பலன்களையும் அடைகின்றனர். எனவே மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யக்கூடாது. என்று அவைகள் அறிவுறுத்துகின்றன.
வித்யை அல்லது உபாசனைகள்:
உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ள சாதனைகளுக்கு வித்யை அல்லது உபாசனை என்று பெயர். வேதச் சடங்குகளின் மேல் பக்தி கொண்டு முறையாகச் சடங்குகளைச் செய்து வருபவன் நாளடைவில் ஆன்ம தியானத்தில் லயித்து பிறகு ஆத்ம ஞானத்தைப் பெறுகிறான். (பேரறிவு அல்லது நேரடி அனுபவம்) ஏனெனில் அதுவே வாழ்க்கையின் முடிவான குறிக்கோள். அதுவே முக்திக்கும் ஒரே வழி.
உபாசனை இரண்டு வகைகளாகச் செய்யப்படுகின்றன. முதல் பிரிவில் சாதகன் வேதச் சடங்கின் சில பகுதிகளை கற்பனை செய்து சில கருத்துக்களை எண்ணுமாறு அறிவுறுத்தப்படுகிறான். உதாரணமாக பிருஹதாரண்யக உபநிஷத்தைப் பார்ப்போம். அதில் அசுவமேத யாகத்தில் பலிகொடுக்கப்பட வேண்டிய குதிரையைக் கற்பனை செய்து, அதனை உயிரினங்களுக்கு எல்லாம் அதிபதியான பிரஜாபதியாகக் கருதி தியானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அசுவமேத யாகத்தைச் செய்ய முடியாதவர்கள் கூட இதனை செய்ய முடியும். யாகம் செய்வதால் கிடைக்கும் அதேபலன்களை இது பெற்றுத் தருகிறது.
இரண்டாவது பிரிவில், நாமம் (பெயர்), வாக் (பேச்சு), பல (பலம்), மனஸ் (மனம்) ஆகியவைகளை பிரம்மமாகக் கருதி தியானம் செய்ய கூறப்படுகிறது. இதனை கற்பனையாகவோ அல்லது பிரம்மத்தின் சில ஒற்றுமை குணங்களை இவற்றில் எண்ணியோ தியானம் செய்ய வேண்டும். இத்தகைய உபாசனைகள் சாதகனின் மனத்தை சிறிது சிறிதாக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி ஆன்மீக அனுபவங்களை அளிக்கின்றன.
உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ள இத்தகைய உபாசனைகளின் எண்ணிக்கை 32. அவைகளில் முக்கியமானவற்றையும் அவை எந்த உபநிஷதங்களில் வருகின்றன. என்பதையும் கீழே கொடுத்துள்ளோம்.
வித்யை உபநிஷதம்
அக்ஷிபுருஷ வித்யை சாந்தோக்ய 4.15.1
அந்தராதித்ய வித்யை பிருஹதாரண்யக 5.52
பூம வித்யை சாந்தோக்ய 7.23, 24,25
தஹர வித்யை சாந்தோக்ய 8.1
காயத்ரி வித்யை சாந்தோக்ய 3.12.
மது வித்யை சாந்தோக்ய 3.1 முதல் 11.
பஞ்சாக்னி வித்யை சாந்தோக்ய 5.3, முதல் 10.
பிருஹதாரண்யக 6.2
பர்யங்க வித்யை கவுஸீதகி 1.
பிராணாக்னிஹோத்ர வித்யை பிருஹதாரண்ய 5.9
பிரதர்தன வித்யை கவுஸீதகி 3.
புருஷ வித்யை சாந்தோக்ய 3.16,17.
ஸத் வித்யை சாந்தோக்ய 6.2.1,2.
ஸம்வர்க வித்யை சாந்தோக்ய 4.3.
சாண்டில்ய வித்யை சாந்தோக்ய 3.14.
உத்கீத வித்யை பிருஹதாரண்யக 5.8.1.
உபகோசல வித்யை சாந்தோக்ய 4.10 முதல் 15.
வைஷ்வாரை வித்யை சாந்தோக்ய 5.11 முதல் 17.
சீடனின் தகுதியைச் சோதித்த பிறகே இந்த வித்தைகள் அவனுக்குத் பிரத்யேகமாக கற்றுத்தரப்பட்டன. எனவேதான் உபநிஷதங்களிலும், அவைகளின் விளக்கவுரைகளிலும் நமக்குக் கிடைக்கின்ற செய்திகள் குறைவாகக் காணப்படுகின்றன. பிற்காலத்தின் யோகப் பிரிவுகளுக்கு அவைகளே ஆதார மூலமாக இருந்திருக்க வேண்டும்.