பூவிரி சோலையில் உலவிடும் தென்றலே புயலென மாறுதல் போலே காவிரி கொள்ளிடம் இருகரை நடுவினில் கண்துயில் பொன் திருமாலே கூவியே அழைக்கும் பக்தர்கள் வாழ்வில் குறைகளும் பயங்களும் போக்க காவல்நற் தெய்வம் கருப்பன் என்றே காசினி இங்கு வருக!
முன்னோடி சப்பாணி உறங்காப் புளியடியான் முதலான படைகள் சூழ மின்னிடும் வாளது கையினில் ஏற்றியே மக்களைக் காக்க வேண்டி வெண்ணிறப் புரவி மீதுநீ ஏறியே வாயுவின் வேகம் கொண்டு கண்ணினை இமையது காப்பது போலவே கருப்பனே காக்க வருக!
ஓங்கியே கையில் ஒளிரும் வாளுடன் ஒருபெரும் புரவி ஏறி வேங்கையைப் போல வீறுடன் பாய்ந்து வினைகளை அகற்ற வேண்டி ராங்கியப் பதியினில் எழுந்த தெய்வமே ரங்கனே எங்கள் வாழ்வில் தீங்கெலாம் நீங்கிட திருவது சேர்ந்திட தீரனே இங்கு வருக!
கராமது கடித்திட கஜேந்திரன் துடித்திட காத்திட்ட ஆதி மூலம் வராதவோர் துன்பமும் வாழ்க்கையில் வரும்போது வந்தெமைக் காக்கும் மூலம் விராமதி வகையினர் வாழ்வது சிறந்தே விளங்கிட வந்த மூலம் இராங்கியப் பதியினில் கருப்பண்ணன் ஆதி இடர் நீக்க இங்கு வருக!
தனியாத துன்பமே தாக்கிடும் வேளையில் தயவுடன் உன்னை யழைத்தோம் மணியோசை கேட்கவே மத்தளம் முழங்கவே மன்னனே இங்கு வருக பிணியது நீக்கிட பயமது போக்கிட பிள்ளைகள் அழைத்த போது பணியாரம் பாச்சோறு பள்ளயப் பிரியனே பரியேறி இங்கு வருக!