1, 2, 3ம் திருமுறைகள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டது. சைவ சமயம் தழைக்க தோன்றிய சிவனடியார்களில் முக்கியமானவர் திருஞானசம்பந்தர். இவர் 7ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவரை முருகப்பெருமானின் அம்சம் என்பார்கள். இவர் சீர்காழி என்னும் திருத்தலத்தில் சிவபாதவிருதயருக்கும், பகவதியாருக்கும் மகனாக தோன்றியவர். ஒரு முறை சிவபாதவிருதயர் மூன்று வயதான சம்பந்தரை சீர்காழி தோணியப்பர் கோயில் குளக்கரையில் உட்கார வைத்து விட்டு நீராடச்சென்றார். அப்போது சம்பந்தர் பசியின் காரணமாக அழுதார். தெய்வக்குழந்தையான இவரது அழும் குரலைக்கேட்ட சிவன், பார்வதியிடம் குழந்தையின் அழுகையை நிறுத்த ஞானப்பால் ஊட்டுவாயாக என்று அருளினார். அன்னை பராசக்தி குழந்தையின் அருகே வந்தாள். வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மடி மீது அமர்த்திக் கொண்டாள். தமது திருமுலைப் பாலினைப் பொற்கிண்ணத்தில் ஏந்தினாள். அவரது கண் மலரிலே வழியும் நீரைத் துடைத்தாள். சிவஞான அமுதத்தைக் கலந்த பொற்கிண்ணத்தை அவரது கைகளிலே அளித்து பாலமுதத்தினை உண்பாயாக என மொழிந்தாள்.குழந்தையின் கையைப் பிடித்தவாறு பார்வதி தேவியார் பாலைப் பருகச் செய்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்தி ஆனந்தக் கண்ணீர் பூண்டது. திருத்தோணியப்பராலும் உமாதேவியாராலும் ஆட்கொள்ளப்பெற்ற குழந்தை ஆளுடைப் பிள்ளையார் என்னும் திருநாமம் பெற்றது.அமரர்க்கும் அருந்தவசியர்க்கும் அறிவதற்கு அரிய பொருளாகிய ஒப்பற்றச் சிவஞானச் செல்வத்தைச் சம்பந்தம் செய்ததனாலே சிவஞான சம்பந்தர் என்னும் திருநாமமும் பெற்றார். அப்பொழுதே சம்பந்தர் உவமையில்லாத கலைஞானத்தைப் பெற்று விளங்கும் பெருமகனானார். அன்றிலிருந்து ஞானசம்பந்தர் தமது ஒப்பற்ற ஞானத் திருமொழியினால் எல்லையில்லா வேதங்கட்கு மூலமாகிய ஓங்காரத்தோடு சேர்ந்த எழுத்தால் இன்பம் பெருகப் பாடத் தொடங்கினார்.