பதிவு செய்த நாள்
05
செப்
2011
04:09
திருஞானசம்பந்தர் பாடிய முதல் மூன்று திருமுறைகளில் மொத்தம் 4146 பாடல்கள் உள்ளது. முதல் திருமுறையில் 1469 பாடல்களும், இரண்டாம் திருமுறையில் 1331 பாடல்களும், மூன்றாம் திருமுறையில் 1346 பாடல்களும் அடங்கியுள்ளன.
அதில் முதல் திருமுறையில் பாடிய 1469 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
1. தோடுடைய செவியன்விடை யேறியோர்
தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து
ஏத்தஅருள் செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.
தெளிவுரை : தோடு என்னும் அணியை அணிந்துள்ள, உமாதேவியை இடப்பாகம் உடைய சிவபெருமான் இடபவாகனத்தில் ஏறி, தூய வெண்மதியைச் சூடி திருவெண்ணீறு மேனியில் பொலிய என் உள்ளத்தைக் கவர்ந்தவன். அப்பெருமான், ஒரு காலத்தில் நான்முகனுடைய வழிபாட்டினை ஏற்று அருள் செய்தவன். அவனே எனக்குக் காட்சி தந்தருளியவன். அவன் இவனே அல்லவா !
2. முற்றல்ஆமையிள நாகமோடுஏனம்
முளைக்கொம்புஅவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலி தேர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
கற்றல்கேட்டல்உடை யார்பெரியார்கழல்
கையால்தொழுது ஏத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.
தெளிவுரை : ஆமையோடு, நாகம் முதலானவைகளை ஆபரணமாகக் கொண்டு திருஓடு ஏந்தி பிச்சை கொள்ளும் சிவபெருமான், என் உள்ளத்தைக் கவர்ந்தவன். நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்களும், கேள்வி ஞானம் பெற்றவர்களும், திருத்தொண்டு செய்யும் பெருமக்களும் கரங்கூப்பி வணங்கி நிற்க இடபவாகனத்தில் காட்சி தரும் பெருமான் இவனல்லவா ?
3. நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர்
நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன்
உள்ளம்கவர் கள்வன்
ஊர்பரந்தஉல கின்முதலாகிய
ஓரூர்இது என்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.
தெளிவுரை : கங்கை தங்கும் சடையில் குளிர்ந்த வெண்ணிலவைச் சூடி, அழகிய வளைகள் கைகளிலிருந்து நழுவிச் செல்லுமாறு என் உள்ளத்தையும் மேனியையும் உருகச் செய்து கவர்ந்தவன் சிவபெருமான். உலகிலுள்ள ஊர்கள் யாவும் பிரளய காலத்தில் அழிந்தாலும், அழியாது எப்போதும் நிலவும் பிரமபுரத்தில் இருக்கும் பெருமான் இவனல்லவா !
4. விண்மகிழ்ந்தமதில் எய்ததும்அன்றி
விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க் கொன்றை
மலிந்தவரை மார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.
தெளிவுரை : வானத்தில் பரந்து சென்று துன்புறுத்தும் தன்மையில் மகிழ்ச்சி கொண்ட முப்புரக் கோட்டைகளை எரித்ததும் அன்றி, பிரமனுடைய கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்று என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அரவமும் கொன்றை மலரும் மார்பினில் பொலிய உமாதேவியை மகிழ்ந்து இடப்பாகத்தில் வைத்து பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா !
5. ஒருமைபெண்மைஉடை யன்சடையன்விடை
ஊரும்இவன் என்ன
அருமையாகஉரை செய்யஅமர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ள மதிந்ததோர்
காலம்இது என்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.
தெளிவுரை : ஒரே வடிவத்தில் பெண்ணுருவும் ஆணுருவும் கொண்டு இரு உருவங்களைக் காட்டுபவனாகி, சடைமுடியுடன் இடபத்தில் அமரும் சிவபெருமான் அருமையான உரைகளைக் சொல்லும் பொருட்டு எனது உள்ளம் அமர்ந்து என்னைக் கவர்ந்தவன். ஊழிக் காலத்திலும் அழியாத பெருமையுடைய பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா !
6. மறைகலந்தஒலி பாடலோடு ஆடலர்
ஆகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன்
உள்ளம்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர்
சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.
தெளிவுரை : வேத ஒலி முழங்க, பாடலுடன் ஆடலும் செய்து மழு ஏந்தி இருப்பவன் ஈசன். அவன் என்னுடைய கைகளில் உள்ள வளைகள் தாமே கழன்று விழும்படி என் உள்ளத்தைக் கவர்ந்து உருகச் செய்தவன். அடர்ந்த சோலைகள் திகழ்ந்து நறுமணம் வீச நிலவின் தன்மையுடைய பிரம்மபுரத்தில் மேவிய பெருமான் இவனல்லவா !
7. சடைமுயங்குபுன லன்அனலன்எரி
வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்குஅர வோடுஉழிதந்துஎனது
உள்ளம்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம்
பொன்னஞ்சிறகு அன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய
பெம்மான்இவன் அன்றே.
தெளிவுரை : சடையில் கங்கையும் கரத்தில் நெருப்பும் ஒளிதந்து பெருமை கொள்ளவும், நாகமானது இறுகப் பற்றி உடலின் மீது திரியவும் காட்சி தந்து என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான், உப்பங்கழி பொருந்திய சோலையில் அன்னப் பறவைகள் தம் பேடைகளுடன் கூடியுள்ள பிரமாபுரத்தில் இருப்பவன். அவன் இவனல்லவா !
8. வியர்இலங்குவரை உந்திய தோள்களை
வீரம்விளை வித்த
உயர்இலங்கைஅரை யன்வலிசெற்றுஎனது
உள்ளம்கவர் கள்வன்
துயர்இலங்கும்உல கில்பலஊழிகள்
தோன்றும்பொழுது எல்லாம்
பெயர்இலங்குபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.
தெளிவுரை : சினத்தின் வயப்பட்டு வீரத்தைக் காட்டும் வகையில் கயிலையைப் பெயர்த்த இலங்கை அரசனுடைய வலிமையை அழித்து எனது உள்ளத்தைக் கவர்ந்த ஈசன், வினையின் கன்மத்தைச் சேர்த்துத் துயரை விளைவிக்கும் இந்த உலகில் ஊழிக்காலத்திலும் அழியாமல் நிலைத்து நின்று தனது சிறப்பினை நல்கும் பதியாகிய பிரமபுரத்தில் மேவியவன். அவன் இவனல்லவா !
9. தாள்நுதல் செய்துஇறை காணியமாலொடு
தண்தாமரை யானும்
நீணுதல்செய்துஒழிய நிமிர்ந்தான் எனது
உள்ளம்கவர் கள்வன்
வாள்நுதல்செய்மக ளிர்முதலாகிய
வையத்தவர் ஏத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.
தெளிவுரை : திருவடியைக் காணத் திருமாலும் திருமுடியைக் காணப் பிரமனும் முயற்சி செய்ய, அவர்கள் செயல் பயனற்றவாகச் செய்யும் வகையில் நீண்டு வளர்ந்தவனாகிய ஈசன் எனது உள்ளத்தைக் கவர்ந்தவன். வாள்போன்ற நெற்றியை உடைய மகளிர் முதலாக உலகத்தவர் அனைவரும் ஏத்தப் பேணிக் காக்கும் பிரமாபுரம் மேவிய பெருமான் இவன் அல்லவா !
10. புத்தரோடுபொறி யில்சமணும்புறம்
கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
மத்தயானைமறுக அவ்உரிபோர்த்ததோர்
மாயம்இது என்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.
தெளிவுரை : புலன் உணர்வுகளை நீத்த புத்தரும் சமணரும் நன்னெறியில் அமையாத மாற்றுக் கருத்துக்களைக் கூறிடினும் பிச்சையேற்று எனது உள்ளத்தைக் கவர்ந்து, செருக்குற்ற யானையை அழித்து அதன் தோலைப் போர்வையாக்கிக் கொண்டு பின்னர் மாயை காட்டிப் பித்தனைப் போன்று பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா !
11. அருநெறியமறை வல்லமுனியகன்
பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் தன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம்
பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை
தீர்தல்எளி தாமே.
தெளிவுரை : மறைவல்ல பிரமன் பூசித்த பிரமாபுரம் மேவிய பெருமானை ஒன்றிய மனத்தினால் உணர்ந்து ஞானசம்பந்தன் உரைத்த திருநெறிய இத் தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவருடைய தொல்வினை எளிதாகத் தீரும்.
திருச்சிற்றம்பலம்
2. திருப்புகலூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
12. குறிகலந்தஇசை பாடலினான்நசை
யால்இவ்உலகு எல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மையனாய்எருது
ஏறிப்பலி பேணி
முறிகலந்ததொரு தோல்அரைமேல்உடை
யான்இடம்மொய்ம் மலரின்
பொறிகலந்தபொழில் சூழ்ந்துஅயலேபுயல்
ஆரும்புக லூரே.
தெளிவுரை : பேரின்பத்தை நோக்கமாகக் கொண்டு இசைப் பாடலில் பொருத்தும் ஒருவனாய் இந்த உலகில் நன்னெறியை இழைக்கும் விருப்பத்தினாலும் தன்மையினாலும் இடப வாகனத்தில் வீற்றிருந்தும், பிச்சையேற்றும் தோலாடையை உடையவனாகிய ஈசன் விளங்கும் இருப்பிடமானது நறுமணம் கமழும் நீர்நிலை சூழ்ந்த திருப்புகலூர் ஆகும்.
13. காது இலங்குகுழை யன்இழைசேர்திரு
மார்பன்ஒரு பாகம்
மாது இலங்குதிரு மேனியினான்கரு
மானின்உரி யாடை
மீதுஇலங்க அணிந்த தான்இமையோர்தொழ
மேவும்இடம் சோலைப்
போதும்இலங்குநசை யால்வரிவண்டுஇசை
பாடும்புகலூரே.
தெளிவுரை : ஒரு காதில் குழையை உடையவன்; பூணூல் இழையும் மார்பினன்; உமாதேவியார் ஒரு பாகத்தில் விளங்கும் திருமேனி யுடையவன்; யானையின் தோலை உரித்து மேலாடையாகக் கொண்டவன்; அத்தகைய ஈசன் தேவர்கள் எல்லாம் தொழுது வணங்க இருப்பிடமாகக் கொண்ட இடம் சோலைகள் விளங்க வண்டுகள் இசைபாடும் புகலூர் ஆகும்.
14. பண்நிலாவும்மறை பாடலினான்இறை
சேரும்வளை அங்கைப்
பெண்நிலாவஉடை யான்பெரியார்கழல்
என்றும்தொழுது ஏத்த
உள்நிலாவியவர் சிந்தையுள்நீங்கா
ஒருவன்இடம் என்பர்
மண்நிலாவும்அடி யார்குடிமைத்தொழில்
மல்கும்புக லூரே.
தெளிவுரை : பண் திகழும் வேதத்தினன்; முன்கையில் வளையணிந்த அழகிய கரத்தையுடைய உமையம்மையை இடப்பாகத்தில் உடையவன்; திருத்தொண்டர்களின் திருவடிகளைத் தொழுது போற்றும் சிந்தையுடையவர்களின் சிந்தையில் நீங்காது விளங்குபவன் ஈசன்; அவன் விளங்கும் இடமானது வேளாண்மைத் தொழில் வளரும் புகலூர்.
15. நீரின்மல்குசடை யன்விடையன்அடை
யார்தம்அரண் மூன்றும்
சீரின்மல்குமலை யேசிலையாக
முனிந்தான்உலகு உய்யக்
காரின்மல்குகடல் நஞ்சமதுஉண்ட
கடவுள்இடம் என்பர்
ஊரின்மல்கிவளர் செம்மையினால்உயர்வு
எய்தும்புகலூரே.
தெளிவுரை : நீரின் மேலதாகிய கங்கையைச் சடைமுடியில் கொண்டவன்; இடப வாகனத்தை உடையவன்; நன்மை யடைய மாட்டாதவர்களாகிய மூன்று கோட்டைகளை உடைய அசுரர்களை, மேரு மலையை வில்லாகக் கொண்டு முனிந்தவன்; உலகம் உய்தி பெறும் பொருட்டு பாற்கடலில் அமுதம் கடையும் போது தோன்றிய நஞ்சினை உண்டு ஊர்களில் திகழ்ந்து நல்லொழுக்கத்தினால் உயர்வு அடையும் புகலூர்.
16. செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர்
சேரும்அடி யார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத்து
என்றும்பணி வாரை
மெய்யநின்றபெரு மான்உறையும்இடம்
என்பர்அருள் பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ
ருந்தும்புக லூரே.
தெளிவுரை : தனது சிவந்த திருமேனியில் வெண்மை தோன்றுமாறு திருநீற்றைப் பூசுவர்; தன்னை வணங்கும் அடியாரிடம் மெள்ள மெள்ளச் சேர்ந்து நின்ற தீவினையைச் சிதறி வெளியேறுமாறு செய்வர்; தன்னைப் பணிந்து போற்றிப், பாடல்களால் துதி செய்யும் அடியார்பால் மெய்யாய் நின்றருளும் அப்பெருமான் உறையும் இடம், வாக்காலும் மனத்தாலும் பொய்மை கொள்ளாத மனத்தினர் பொருந்தி வாழும் புகலூர் ஆகும்.
17. கழலின்ஓசைசிலம் பின்ஒலியோசை
கலிக்கப்பயில் கானில்
குழலின்ஓசைகுறள் பாரிடம்போற்றக்
குனித்தார்இடம் என்பர்
விழவின்ஓசைஅடி யார்மிடையுற்று
விரும்பிப்பொலிந்து எங்கும்
முழவின் ஓசைமுந் நீர்அயர்வுஎய்த
முழங்கும்புக லூரே.
தெளிவுரை : ஒரு காலில் கழலொலியும் பிறிதொரு காலில் சிலம்பின் ஒலியும் எழுமாறு, குழலோசையைப் பூதங்கள் எழுப்ப நடனம் புரியும். சிவபெருமான் விளங்கும் இடமானது, திருவிழாக்களால் உண்டாகும் ஓசை அடியார்களை மகிழ்ச்சியுறுமாறு செய்கிறது. முழவின் ஓசை கடல் அலைகள் முழங்கும் ஓசையை வெல்லும் தன்மை கொண்டது புகலூர் ஆகும்.
18. வெள்ளம்ஆர்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல்
விளங்கும்மதி சூடி
உள்ளம் ஆர்ந்தஅடி யார்தொழுதேத்த
உகக்கும்அருள் தந்துஎம்
கள்ளம்ஆர்ந்துகழி யப்பழிதீர்த்த
கடவுள்இடம் என்பர்
புள்ளைஆர்ந்தவய லின்விளைவால்வளம்
மல்கும்புக லூரே.
தெளிவுரை : கங்கை பொருந்தி விளங்கும் சிவந்த சடை முடியின்மேல் பிறைமதி சூடிய ஈசன், பொருந்திய உள்ளத்தால் வணங்கிப் போற்றும் அடியவர்களுக்கு அவர்கள் மகிழுமாறு அருள்புரிபவன். அவன் எம் மருங்கும் மறைந்து நின்று துன்பத்தைத் தரும் மும்மலத்தை நீக்குபவன். அவனுடைய இடம் பறவைகள் தங்கும் நீர்வளம் நிலவளம் பெருகும் புகலூர் ஆகும்.
19. தென்னிலங்கையரை யன்வரைபற்றி
எடுத்தான்முடி திண்தோள்
தன்குலங்குவிர லால்நெரிவித்துஇசை
கேட்டுஅன்றுஅருள் செய்த
மின்இலங்குசடை யான்மடமாதொடு
மேவும்இடம் என்பர்
பொன்இலங்குமணி மாளிகைமேல்மதி
தோயும்புக லூரே.
தெளிவுரை : தென்னிலங்கையின் அதிபதியாகிய இராவணன் கயிலாயமலையைப் பெயர்த்தெடுக்கும் போது அம்மலையின் மீது எழுந்தருளியுள்ள ஈசன், மலையைப் பெயர்த்த அரக்கனுடைய முடியும் உறுதியான தோள்களும் நெரிய அடர்த்து, பின்னர் அவ்வரக்கன் பக்தியால் எழுப்பிய இசையில் மகிழ்ந்து அருள் புரிந்தான். அப்பெருமான் உமாதேவியுடன் மேவும் இடம் பொன்னும் மணியும் திகழும் மாளிகையின் மேல் குளிர்ந்த நிலவு தோயும் புகலூர்
20. நாகம் வைத்தமுடி யான்அடிகைதொழுது
ஏத்தும்அடி யார்கள்
ஆகம்வைத்தேபெரு மான்பிரமன்னொடு
மாலும்தொழுது ஏத்த
ஏகம் வைத்தஎரி யாய்மிகஓங்கிய
எம்மான்இடம் போலும்
போகம்வைத்த பொழி லின்நிழலால்மது
ஆரும்புக லூரே.
தெளிவுரை : நாகத்தைத் தரித்த ஈசன், தனது திருவடியைப் பணியும் அடியவர்களைத் தன்பால் பொருத்திக் கொள்பவன். அவன் பிரமனும் திருமாலும் போற்றுமாறு ஜோதி வடிவாய் வளர்ந்து ஓங்கியவன். அப்பெருமான் விளங்கும் இடமானது மகிழ்ச்சியைத் தரும் சோலைகள் திகழும் புகலூர் ஆகும்.
21. செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்
செப்பில்பொருள் அல்லாக்
கைதவத்தர் மொழி யைத்தவிர்வார்கள்
கடவுள்ளிடம் போலும்
கொய்துபத்தர்மல ரும்புனலும்கொடு
தூவித்துதி செய்து
மெய்தவத்தின்முயல் வார்உயர்வானகம்
எய்தும்புக லூரே.
தெளிவுரை : நல்ல தவம் செய்தவர்களும், நன்றாகத் தேர்ந்து அறியும் பாங்குடையவர்களும், சாக்கியர்கள் கூறும் மெய்ப்பொருள் இல்லாத மற்றும் வஞ்சித்துத் துன்பம் தரும் மொழிகளை மனத்தில் கொள்ள மாட்டார்கள். பக்தர்கள் நன்னீரால் பூசித்தும், மென் மலரால் அருச்சித்தும் தோத்திரம் செய்து மெய்த் தவத்தில் விளங்க உயர் வானகம் எய்துவர். அதற்கு இடமாக இறைவன் உள்ள இடம் புகலூர்.
22. புற்றில்வாழும்அர வம்அரைஆர்த்தவன்
மேவும்புக லூரைக்
கற்றுநல்லஅவர் காழிஉண்ஞானசம்
பந்தன்தமிழ் மாலை
பற்றியென்றும்இசை பாடியமாந்தர்
பரமன்அடி சேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழி யாப்புகழ்
ஓங்கிப்பொலி வாரே
தெளிவுரை : நாகத்தைத் தரித்தவனாகிய ஈசன் மேவிய புகலூரை, கல்வியில் தேர்ந்த ஊராகிய சீகாழியில் வாழும் ஞானசம்பந்தரின் திருப்பதிகத்தை விரும்பி எக்காலத்திலும் இசையுடன் பாடும் மக்கள் சிவபெருமான் திருவடியில் சேர்ந்து பொலிவார்கள். அத்தகையோர் குற்றம் இல்லாதவராகவும், குறைபாடு நீங்கியவராகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் பெருகும் புகழுடன் விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
3. திருவலிதாயம்(அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, திருவலிதாயம், சென்னை)
திருச்சிற்றம்பலம்
23. பத்தரோடுபல ரும்பொலியம்மலர்
அங்கைப்புனல் தூவி
ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழுது
ஏத்தஉயர் சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுஉறை
கின்றவலி தாயம்
சித்தம்வைத்தஅடி யார்அவர்மேல்அடை
யாமற்றுஇடர் நோயே.
தெளிவுரை : பக்தி செய்யும் அடியவர்களுடன், உடனிருந்து போற்றும் ஏனையோரும் வேத முறைப்படி மந்திரங்களைச் சொல்லி ஏத்த அதனை ஏற்ற பெருமான் நீங்காது உறையும் திருவலிதாயத்தை நினைக்கும் அடியவர்கள்பால் இடர்செய்யும் துன்பங்கள் இல்லை. இடர்நோய் என்பது பிறவி நோயையும் உணர்த்தும்.
24. படைஇலங்குகரம் எட்டுடையான்படிறு
ஆகக்கலன் ஏந்திக்
கடைஇலங்குமனை யிற்பலிகொண்டுஉணும்
கள்வன்உறை கோயில்
மடைஇலங்குபொழி லின்நிழல்வாய்மது
வீசும்வலி தாயம்
அடையநின்றஅடி யார்க்குஅடையாவினை
அல்லல்துயர் தானே.
தெளிவுரை : மழு, சூலம் முதலான படைகளைத் தரித்த எட்டுக் கரங்களையுடையவன். இது என்ன கொடுமை என்று பலரும் அஞ்சுமாறு பிச்சை ஏற்றவன். அவன் உறையும் கோயில் நீர்வளத்துடன் சோலைகளும் நிரம்பிய திருவலிதாயம் ஆகும். அத்தலத்தைச் சாரும் அடியவர்களுக்கு வினை இல்லை; துன்பமும் இல்லை.
25. ஐயன்நொய்யன்அணி யன்பிணிஇல்லவர்
என்றும்தொழுது ஏத்தச்
செய்யன்வெய்யபடை ஏந்தவல்லான்திரு
மாதோடுஉறை கோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்து<உயர்
கின்றவலி தாயம்
உய்யும்வண்ணம்நினை மின்நினைந்தால்வினை
தீரும்நலம் ஆமே.
தெளிவுரை : பெரியவன், நுண்ணியன், அண்மையில் இருப்பவன், பற்றற்றவர் தொழுது ஏத்திடச் செம்மையுறு சோதி வடிவினன்; யாராலும் வெல்ல முடியாத படையைத் தரித்திருப்பவன். அப்பெருமான் உமாதேவியுடன் விளங்குகின்ற இடம், உலகத்தோர் வணங்கப் பிணி தீர்த்து மேன்மைச் சிறப்பினைப் பெறும் திருவலிதாயம் ஆகும். இத்தலத்தை, ஆன்மா நற்கதி பெறும் விதத்தில் நினைக்க வேண்டும். அவ்வாறு ஒன்றிய சிந்தனையில் ஈடுபட்டால் வினை தீரும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.
26. ஒற்றைஏறதுஉடை யான்நடமாடியோர்
பூதப்படை சூழப்
புற்றின்நாகம்அரை ஆர்த்துஉழல்கின்றஎம்
பெம்மான்மட வாளோடு
உற்றகோயில்உல கத்துஒளிமல்கிட
உள்கும்வலி தாயம்
பற்றிவாழும்அது வேசரண்ஆவது
பாடும்அடி யார்க்கே.
தெளிவுரை : இடபத்தை வாகனமாக உடையவன்; நடனம் புரிபவன்; பூத கணங்கள் சூழ இருப்பவன்; நாகத்தை இடுப்பில் தரித்தவன். அத்தகைய பெருமான் உமையுடன் வீற்றிருக்கும் கோயில் உலகத்தின் பெருமையாவும் சேரத் திகழும் திருவலிதாயம் ஆகும். இறைவனைப் பாடித் துதி செய்யும் அடியவர்களுக்கு அதுவே சரணாலயமாகும்.
27. புந்திஒன்றிநினை வார்வினையாயின
தீரப்பொரு ளாய
அந்தியன்னதொரு பேரொளியான்அமர்
கோயில்அயல் எங்கும்
மந்திவந்துகடு வன்னொடும்கூடி
வணங்கும்வலி தாயம்
சிந்தியாதஅவர் தம்அடும்வெந்துயர்
தீர்தல்எளி தன்றே.
தெளிவுரை : சிந்தை ஒன்றி நினைப்பவரின் வினையாவும் தீரும் வகையாக மாலை நேரத்துச் செவ்வொளி போன்ற திருமேனியை உடைய ஈசன் அமர்கின்ற கோயில், பெண் குரங்கு ஆண் குரங்குடன் சேர்ந்து வணங்கும் திருவலிதாயம் ஆகும். அத்தகைய இடத்தைச் சிந்திக்காதவருடைய துன்பம் தீர்வது எளிதன்றே.
28. ஊன்இயன்றதலை யில்பலிகொண்டு உல
கத்துள்ளவர் ஏத்தக்
கான்இயன்றகரி யின்உரிபோர்த்துஉழல்
கள்வன்சடை தன்மேல்
வான்இயன்றபிறை வைத்தஎம்ஆதி
மகிழும்வலி தாயம்
தேன்இயன்றநறு மாமலர்கொண்டுநின்று
ஏத்தத் தெளிவு ஆமே !
தெளிவுரை : பிரம கபாலத்தை ஓடாகக் கொண்டு பிச்சையேற்று, உலகத்தோர் போற்றுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டு எக்காலத்திலும் சஞ்சாரம் (அசைதல்) புரிந்தும், தோற்றத்தை மறைத்து கள்வனாய்த் தனது சடைமுடியில் வெண்பிறை சூடிய எமது ஆதி மூர்த்தியாகிய ஈசன் மகிழும் திருவலிதாயம் என்னும் பதியை மாமலர் கொண்டு ஏத்தத் தெளிவு உண்டாகும்.
29. கண்நிறைந்தவிழி யின்அழலால்வரு
காமன்உயிர் வீட்டிப்
பெண்நிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய
பெம்மான்உறை கோயில்
மண்நிறைந்தபுகழ் கொண்டுஅடியார்கள்
வணங்கும்வலி தாயத்து
உள்நிறைந்தபெரு மான்கழல்ஏத்தநம்
உண்மைக்கதி யாமே.
தெளிவுரை : தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தவன் ஈசன், அவன் உமாதேவியைத் தனது இடப் பாகத்தில் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான். அப் பெருமானுடைய இருப்பிடம் உலகம் போற்றும் புகழ்மிக்க அடியவர்கள் வணங்குகின்ற திருவலிதாயம் ஆகும். எனவே அத் திருத்தலத்தில் உள்ள இறைவன் திருவடிமலர்களைத் துதிக்க முத்தியின் நிலை உண்டாகும்.
30. கடலின்நஞ்சம்அமுது உண்டுஇமையோர்தொழுது
ஏத்தநடம் ஆடி
அடல்இலங்கைஅரை யன்வலிசெற்றுஅருள்
அம்மான்அமர் கோயில்
மடல்இலங்குகமு கின்பலவின்மது
விம்மும்வலி தாயம்
உடல்இலங்கும்உயிர் உள்ளளவும்தொழ
உள்ளத்துயர் போமே.
தெளிவுரை : பாற்கடலைக் கடைந்து அமுதம் எதிர் பார்த்த நிலையில் நஞ்சு வெளிப்பட்டது. அதனையே அமுதமென உண்டு தேவர்களைக் காத்தவன் இறைவன்; நடனம் புரிந்து மகிழ்வித்தவன் வன்மையுடைய இலங்கையின் வேந்தனான இராவணனுடைய வலிமையை அடக்கி அருள் புரிந்தவன். அத்தகைய கடவுள் அமர்ந்து விளங்கும் இடம் பலா கமுகு முதலான மரங்கள் பெருகியுள்ள திருவலிதாயம் ஆகும். அத் திருத்தலத்தை உடலில் உயிர் உள்ள அளவும் தொழுது வணங்கிட மனத்துயர் நீங்கும்.
31. பெரியமேருவரை யேசிலையாமலை
உற்றார்எயில் மூன்றும்
எரியஎய்தஒரு வன்இருவர்க்குஅறி
வொண்ணாவடி வாகும்
எரியதாகியுற ஒங்கியவன்வலி
தாயம்தொழுது ஏத்த
உரியர்ஆகஉடை யார்பெரியார்என
உள்கும்உல கோரே.
தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு, தன்னை எதிர்த்துப் போர் செய்த அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கியவன் ஈசன். அவன், திருமாலும் பிரமனும் முயற்சி செய்தும் காண்பதற்கும் அறிவதற்கும் முடியாதவனாய், சோதி வடிவானவன். அத்தகையவனுக்குரிய வலிதாயம் என்னும் பதியை ஏத்திடும் அடியவர்கள் அவனுக்கே உரிமையுடையவர்கள் ஆவர். உலகத்தவர், அத்தகைய பெருமக்களைப் பெரியவர்களாக திருத்தொண்டர்களாகக் கருதுவர்.
32. ஆசியாரமொழி யார்அமண்சாக்கியர்
அல்லாதவர் கூடி
ஏசிஈரம்இல ராய்மொழிசெய்தவர்
சொல்லைப் பொருள் என்னேல்
வாசிதீரஅடி யார்க்குஅருள்செய்து
வளர்ந்தான்வலி தாயம்
பேசும்ஆர்வம்உடை யார்அடியார்எனப்
பேணும்பெரி யோரே.
தெளிவுரை : ஆசி வழங்கும் மங்கலச் சொற்களைச் சொல்லாதவர்களாகிய சமணரும் சாக்கியரும் மற்றும் புறம்பானவர்களும் சேர்ந்து குறை கூறி அன்பற்றவர்களாய் மொழியும் சொற்களை உறுதி பயக்கும் வார்த்தைகளாகக் கொள்ள வேண்டாம். குறைவு இன்றி அடியவர்களுக்கு அருள்செய்து கொண்டு ஓங்கி வளரும் ஈசனுடைய திருவலிதாயம் என்னும் பதியைப் போற்றும் விருப்பத்தை உடையவர்கள் அடியார் எனப் புகழப் பெறும் பெருமக்கள் ஆவர்.
33. வண்டுவைகும்மணம் மல்கியசோலை
வளரும்வலி தாயத்து
அண்டவாணன்அடி உள்குதலால்அருள்
மாலைத்தமிழ் ஆகக்
கண்டல்வைகும்கடற் காழியுள்ஞானசம்
பந்தன்தமிழ் பத்தும்
கொண்டு வைகிஇசை பாடவல்லார்குளிர்
வானத்துஉயர் வாரே.
தெளிவுரை : தேனை நுகரும் வண்டுகளும், நறுமணம் வீசும் மலர்களும் நிறைந்த சோலைகள் திகழும் திருவலிதாயத்தில் விளங்கும் ஈசனின் திருவடியை மனத்தில் பதித்திட இந்தத் தமிழ் மாலை அருளப் பெற்றது. தாழை மடல் ஓங்கும் சீகாழி நகர் ஞானசம்பந்தன் பாடிய இப் பத்துப் பாடல்களையும் ஏற்று இசையுடன் பாடுபவர்கள் இனிமையான தேவலோகத்தில் சிறந்திருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
4. திருப்புகலியும் திருவீழிமிழலையும் (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில் திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
34. மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
வாள்நுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்கள்ஏத்தப்
புகலிநி லாவிய புண்ணியனே
எம்மிறை யேஇமை யாதமுக்கண்
ஈச! என் நேச! இதுஎன் கொல்! சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
தெளிவுரை : கருமையான கூந்தலும் வாளைப் போன்ற நெற்றியும் மானின் விழியும் உடைய உமையை உடனாகி, மறையோர்கள் போற்றிடப் புகலிப் பதியில் உள்ள புண்ணியனே! எமது இறைவனே! இமையாத மூன்று கண்களையுடைய ஈசனே! எனக்கு நேசமானவனே! இது என்ன விந்தை! மெய்ம்மை நான்மறையோர் மேவும் திருவீழிமிழலையில் இருக்கும் விமானத்தில் திருப்புகலியில் உள்ள கோலத்தைக் காட்சி தருகின்றாய் !
35. கழல்மல்கு பந்தொடுஅம் மானைமுற்றில்
கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழில்மல்கு கிள்ளையைச் சொல்பயிற்றும்
புகலிநி லாவிய புண்ணியனே !
எழில்மல ரோன்சிரம் ஏந்திஉண்டோர்
இன்புறு செல்வம்இது என்கொல் சொல்லாய் !
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த
விண்ணிழி கோயில் விரும்பியதே.
தெளிவுரை : கழற்ச்சிக்காய், பந்து, அம்மானை முதலான விளையாடும் இளம் பெண்கள் தாம் விரும்பி வளர்க்கும் கிளிகளுக்குச் சொற்களைப் பயிற்றுவிக்கும் திருப்புகலியில் நிலவும் ஈசனே! பிரமனுடையஒரு தலையைக் கையில் ஓடாக ஏந்தி இன்புறும் செல்வமே! திருவீழிமிழலையின்கண் நின்காட்சியைத் தருகின்றனை! இது என்கொல்? இது திருக்காட்சியை வியந்து வினா வழி உரைத்தமையாகும்.
36. கன்னியர் ஆடல் கலந்துமிக்க
கந்துக ஆடை கலந்துதுங்கப்
பொன்இயல் மாடம் நெருங்குசெல்வப்
புகலிநி லாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாள்ஓர்பாகத்து
எம்இறை யே!இது என்கொல் சொல்லாய்
மின்இயல் நுண்ணிடை யார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
தெளிவுரை : கன்னியர்கள் பந்து விளையாட்டில் ஈடுபட்டு அதற்கு உரிய ஆடை தரித்து ஒளிமிக்க மேல் தளத்தில் சூழந்து இருக்கின்றனர். அத்தகைய செல்வம் நிறைந்த புகலியில் நிலவும் ஈசனே ! இனிய யாழின் இசை போன்று மொழி பேசும் உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டுள்ள எம் இறைவனே ! திருவீழிமிழலையின் திருக்கோயிலை விரும்பி இங்கு காட்சி தருவது என்கொல் !
37. நாகப ணம்திகழ் அல்குல்மல்கு
நல்நுதல் மான்விழி மங்கையோடும்
பூகவ னம்பொழில் சூழ்ந்தஅந்தண்
புகலிநி லாவிய புண்ணியனே
ஏகபெ ருந்தகை யாயபெம்மான்
எம்இறையே !இது என்கொல்சொல்லாய்
மேகம்உ ரிஞ்சுஎயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
தெளிவுரை : நாகத்தின் படத்தைப் போன்ற அல்குலும் நல்ல நெற்றியும் மான்விழியும் உடைய மங்கையர்களுடன் கமுகமரங்கள் சூழ்ந்துள்ள பிரமன் போற்றும் புகலியில் நிலவும் ஈசனே ! எல்லாமும் தாமே என்று ஏகம் ஆகிப் பெருந்தகையாய் விளங்கும் எம் இறைவனே! மேகங்கள் சூழும் விமானத்தில் விரும்பிப் பொலிவது என் கொல்! சொல்!
38. சந்துஅளறு ஏறுத டங்கொள்கொங்கைத்
தையலொ டும்தள ராதவாய்மைப்
புந்தியில் நான்மறை யோர்கள்ஏத்தும்
புகலிநி லாவிய புண்ணியனே
எந்தமை ஆளுடை ஈச! எம்மான்
எம்இறை யே ! இது என்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறுஅணி வார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
தெளிவுரை : சந்தனக் குழம்பைத் தமது மார்புகளில் தடவிய நங்கையர்களுடன், ஐம்புலன்களால் அரிக்கப்படாத உறுதிமிக்க வாய்மையை நெஞ்சில் பதித்த நான்கு மறையிலும் வல்லவர்கள் போற்றி வழிபடும் புகலியில் நிலவும் புண்ணியனே ! எம்மை ஆளாக உடைய ஈசனே ! எம்பெருமானே ! எம் இறைவனே ! திருவெண்ணீறு அணியும் அடியார்களையுடைய திருவீழிமிழலையில் இனிது அமர்ந்து இருப்பது என்கொல் !
39. சங்குஒளி இப்பி சுறாமகரம்
தாங்கி நிரந்து தரங்கம் மேன்மேல்
பொங்குஒலி நீர்சுமந்து ஓங்குசெம்மைப்
புகலிநி லாவிய புண்ணியனே
எங்கள்பி ரான்இமை யோர்கள்பெம்மான்
எம்இறை யேஇது என்கொல்சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
தெளிவுரை : சங்கு, அழகிய கிளிஞ்சில் மற்றும் சுறா, மகரம் யாவும் செறிந்துறையும் கடல் அலைகள் மேலும் மேலும் பொங்கிக் குளிர்ந்து ஒலித்துச் செம்மையுறும் புகலியின் நிலவும் புண்ணியனே ! எங்கள் தலைவனே ! இறைவனே ! தேவர்கள் போற்றும் கதிர்கள் பரவும் திருவீழிமிழலையில் நீர் விரும்பிப் பொலிந்தது என்கொல் ! சொல் !
40. காமன்எ ரிப்பிழம்பு ஆகநோக்கிக்
காம்பன தோளியொ டும்கலந்து
பூமரு நான்முகன் போல்வர் ஏத்தப்
புகலிநி லாவிய புண்ணியனே
ஈமவ னத்துஎரி யாட்டுஉகந்தி
எம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
தெளிவுரை : மன்மதன் எரியுமாறு தனது நெற்றிக் கண்ணால் நோக்கிய பின்னர், உமாதேவியைத் திருமணம் புரிந்து, மலர்மீது விளங்கும் நான்முகன் முற்றுமுள்ள மேலோர்களும் தொழுது ஏத்தப் புகலி நிலவும் புண்ணியனே ! இடுகாட்டில் கோரத்தாண்டவம் விழைந்த எம்பெருமானே ! மலர்கள் சூழும் குளிர்ந்த சோலைகள் பரந்த மிழலையில் விரும்பிக் காட்சி நல்கியது என்கொல்! சொல்?
41. இலங்கையர் வேந்துஎழில் வாய்த்ததிண்தோள்
இற்றுஅலற அவ்விரல் ஒற்றிஐந்து
புலங்களை கட்டவர் போற்றஅந்தண்
புகலிநி லாவிய புண்ணியனே
இலங்குஎரி ஏந்திநின்று எல்லியாடும்
எம்இறை யே! இது என்கொல்சொல்லாய்
விலங்கல்ஒண் மாளிகை சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
தெளிவுரை : இலங்கை வேந்தனாகிய இராவணனுடைய உறுதியான தோள்கள் துன்புறுமாறு தனது திருப்பாத விரலால் ஊன்றி, ஐம்புலன்களின் களைகளைக் கட்டி அடக்கிய திருத்தொண்டர்கள் போற்றப் புகலியில் நிலவும் புண்ணியனே ! திருக்கரத்தில் தீப்பிழம்பை ஏந்தி இரவில் நடனம் புரியும் எம் இறைவனே ! மலை போன்று உயர்ந்து ஒளி திகழும் மாளிகைகள் சூழ்ந்த மிழலையில் விரும்பித் திகழ்வது என்கொல் ! சொல்லுக !
42. செறிமுள ரித்தவிசு ஏறிஆறும்
செற்றுஅதில் வீற்றிருந் தானும்மற்றைப்
பொறியர வத்துஅணை யானும்காணாப்
புகலிநி லாவிய புண்ணியனே
எறிமழு வோடுஇள மான்கைஇன்றி
இருந்தபி ரான்இது என்கொல்சொல்லாய்
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
தெளிவுரை : தாமரை மலர்மேல் வீற்றிருந்து ஆறு வகையான <உட்பகைகளை வென்ற நான்முகனும், நாகத்தைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும் காண்பதற்கு அரியவனாகிப் புகலி நகரில் நிலவும் புண்ணியனே! நினக்குரிய மானும் மழுவும் தரிக்காமல் ஒருகாலத்தில் காட்சியுற்ற பாங்கில், மிழலையில் மீண்டும் அக்காட்சியைப் புரிந்தனை. இது என் கொல்! சொல்லுக!
43. பக்தர்க ணம்பணிந்து ஏத்தவாய்த்த
பான்மையது அன்றியும் பல்சமணும்
புத்தரும் நின்றுஅலர் தூற்றஅந்தண்
புகலிநிலாவிய புண்ணியனே !
எத்தவத் தோர்க்கும்இ லக்காய்நின்ற
எம்பெருமான் இதுஎன்கொல் சொல்லாய்
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
தெளிவுரை : பக்தர்கள் பணிந்து போற்றும் தன்மையிலும் சமணரும் புத்தரும் தூற்றவும் புகலி நகரில் நிலவும் புண்ணியனே ! பல வகையான தவநெறியில் உள்ளவர்களுக்கும் அவர்கள் அனைவரும் நோக்கி அடைய வேண்டிய இலக்காகி விளங்கும் எம்பெருமானே ! ஞானிகள் வாழும் வீழிமிழலையில் விரும்பி அமர்ந்தனை ! இது என்கொல் ! சொல்லாய் !
44. விண்ணிழி கோயில் விரும்பிமேவும்
வித்தகம் என்கொல் இதுஎன்றுசொல்லிப்
புண்ணிய னைப்புகலிந்நிலாவு
பூங்கொடி யோடுஇருந் தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி
நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணியல் பாடல்வல் லார்கள்இந்தப்
பாரொடு விண்பரி பாலகரே.
தெளிவுரை : புகலிப் பதியில் நிலவும் புண்ணியன், உமாதேவியுடன் இருப்பவன்; திருவீழிமிழலையில் உள்ள திருக்கோயிலில் காட்சி தந்தருளினன்; இது என்ன விந்தை என்று வினவி, நண்ணிய புகழும் நலந்தரும் கேள்வி ஞானமும், நான்கு வேதங்களும் கைவரப் பெற்ற ஞானசம்பந்தர் சொன்ன இவ்வரிய இசைப் பாடல்களைப் பாடுபவர்கள் இந்த உலகத்தில் மட்டும் அன்றி தேவலோகத்திலும் சிறந்து விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
5. கீழைத் திருக்காட்டுப் பள்ளி (அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
45. செய்யரு கேபுனல் பாயஓங்கிச்
செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழைஈன்று
கானல்எல் லாம்கமழ் காட்டுப்பள்ளிப்
பையரு கேஅழல் வாயவைவாய்ப்
பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
மெய்யரு கேஉடை யானைஉள்கி
விண்டவர் ஏறுவர் மேலுலகே.
தெளிவுரை : வயலருகே தண்ணீர் பாயவும், கயல்கள் துள்ளி ஆடவும், மருத நிலத்தின் மலர்கள் தேன் சொரியவும் கைக்கு எட்டும் அளவில் வாழைக் கனிகள் இருக்கவும், சோலையின் மணம் கமழும் திருக்காட்டுப் பள்ளி திகழ்கின்றது. ஐந்தலை நாகத்தைப் (ஆதிசேஷன்) படுக்கையாகக் கொண்ட திருமால், உமாதேவியைப் பாகமாக உடைய ஈசனைத் தியானித்து நெகிழ்ந்து இன்புற்றார். இதனைக் கருதுவார்க்கு <உயர்ந்த உலகம் கிட்டும்.
46. திரைகள்எல் லாமல ரும்சுமந்து
செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
கரைகள்எல் லாம்அணி சேர்ந்துஉரிஞ்சிக்
காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகள்எல் லாம்உணர்வு எய்திநல்ல
உத்தம ராய்உயர்ந் தார்உலகில்
அரவம்எல் லாம்அரை ஆர்த்தசெல்வர்க்கு
ஆட்செய அல்லல் அறுக்கலாமே.
தெளிவுரை : காவிரி ஆற்றின் நீர் அலைகள் எல்லா விதமான மலர்களையும் ஏற்றுச் சுமந்து தன்பால் தேக்கி; செழுமையான மணிகளும் முத்துக்களும் பொன்மணிகளும் வாரி வாய்க்கால்களின் வழியாக இருகரைகளும் மோதும்படி எடுத்துச் செல்கின்றன. அத்தகைய சிறப்புடைய ஊர் காட்டுப்பள்ளி. ஆங்கு உரை செய்யப்படுகின்ற பொருள்களை நன்றாக உணர்ந்து அவ்வழியே ஒழுகி உத்தமர்களாய் செல்வனாகிய அந்த ஈசனுக்கு அடியவர் ஆக, அல்லல் தீரும்.
47. தோலுடை யான்வண்ணப் போர்வையினான்
சுண்ண வெண்ணீறு துதைந்திலங்கு
நூலுடை யான்இமை யோர்பெருமான்
நுண்ணறி வால்வழி பாடுசெய்யும்
காலுடை யான்கரிது ஆயகண்டன்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி
மேலுடை யான்இமை யாதமுக்கண்
மின்னிடை யாளொடும் வேண்டினானே.
தெளிவுரை : புலித்தோலை உ<டையாகக் கொண்டவன்; யானையின் தோலை உரித்து அழகிய போர்வையாக ஆக்கிக் கொண்டவன்; ஒளிமயமான திருவெண்ணீறு பூசியவன்; விளங்கும் முப்புரி நூலைத் தரித்த மார்பினன்; தேவர்களின் தலைவன்; மெய்ஞ்ஞானத்தால் வழிபாடு செய்யத்தக்க திருப்பாதத்தை உடையவன்; கருமையான கண்டத்தை உடையவன். அத்தகைய ஈசன் விரும்பிக் காட்டுப்பள்ளியில் பொருந்தி இருப்பவன். அப்பெருமான் உமாதேவியாரை விருப்பத்தோடு தனது பாகத்தில் ஏற்றுக் கொண்டான்.
48. சலசல சந்துஅகி லோடும்உந்திச்
சந்தன மேகரை சார்த்திஎங்கும்
பலபல வாய்த்தலை ஆர்த்துமண்டிப்
பாய்ந்துஇழி காவிரிப் பாங்கரின்வாய்க்
கலகல நின்றுஅதி ரும்கழலான்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்கள் ஏத்தநின்ற
சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.
தெளிவுரை : சலசல என்னும் ஒலியுடன் சந்தனமும் அகிலும் உந்திச் சென்றாலும் சந்தனத்தைக் கரையில் சேர்த்து எல்லா இடங்களிலும் வாய்க்கால்களாகப் பரவும் காவிரியின் பக்கம் கலகல என்று ஒலி தரும் கழலை யுடையவனாகிய ஈசன் விழையும் காட்டுப் பள்ளியைப் போற்றும் திருத்தொண்டர்கள் மகிழ்ந்து ஏத்தும் சிவன் கழலைப் போற்றுவோம்.
49. தளையவிழ் தண்ணிற நீலநெய்தல்
தாமரை செங்கழு நீரும்எல்லாம்
களையவி ழும்குழ லார்கடியக்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளித்
துளைபயி லும்குழலி யாழ்முரலத்
துன்னிய இன்னிசை யால்துதைந்த
அளைபயில் பாம்புஅரை ஆர்த்தசெல்வர்க்கு
ஆட்செய அல்லல் அறுக்கலாமே.
தெளிவுரை : நீல நிறமுடைய நெய்தல் பூக்களும் தாமரை மலர்களும் பொய்கை நீரும், கூந்தலையுடைய மகளிரால் மணம் பரவும் தன்மையுடையவனாய் விரும்பப்படும் பெருமை பெற்றது காட்டுப்பள்ளி. அத்திருத்தலத்தில் குழலோசையும் யாழ் ஒலியும் இணைந்து சேர, அதனால் ஆட்கொள்ளப் பெற்ற பாம்பினை இடையில் பொருந்தச் செய்த செல்வனாகிய ஈசனுக்கு அடியவராக இருந்து திருத்தொண்டு செய்தால் துன்பம் இல்லை.
50. முடிகையி னால்தொடும் மோட்டுழவர்
முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்
கடிகையினால்எறி காட்டுப்பள்ளி
காதல்செய் தான்கரிது ஆயகண்டன்
பொடியணி மேனியி னானைஉள்கிப்
போதொடு நீர்சுமந்து ஏத்திமுன்னின்று
அடிகையி னால்தொழ வல்லதொண்டர்
அருவினை யைத்துரந்து ஆட்செய்வாரே.
தெளிவுரை : நாற்று முடிகளை வேர் அறுதல் கொள்ளாமல் பக்குவமாகக் கட்டியும், கரும்பின் கட்டிகளைக் கைகளால் வலிமையுடன் உடைத்தும் விளங்கும் உழவர்கள் நிறைந்த காட்டுப்பள்ளியை விழைந்து மேவும் ஈசன் கருமையான கண்டத்தை (கழுத்து) உடையவன். திருவெண்ணீறு தரித்த திருமேனி உடையவன். அவனை நினைத்து, மலரால் அருச்சித்து, நன்னீரால் பூசித்து, நல்லுரையால் ஏத்தி முன்னிருந்து திருவடியை வணங்கும் திருத்தொண்டர்கள் கண்களுக்குப் புலப்படாத வினையைக் களைந்து அடியவர் ஆவார்கள்.
51. பிறைஉடை யான்பெரி யோர்கள் பெம்மான்
பெய்கழல் நாள்தொறும் பேணிஏத்த
மறைஉடை யான்மழு வாள்உடையான்
வார்தரு மால்கடல் நஞ்சம்உண்ட
கறைஉடை யான்கனல் ஆடுகண்ணால்
காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறைஉடை யான்குறள் பூதச் செல்வன்
குரைகழ லேகைகள் கூப்பினோமே.
தெளிவுரை : பிறை மதியுடையவன்; பெரியோர்களுடைய தலைவன்; வேதங்களால் போற்றப் படுபவன்; மழுவுடன் வாளையும் ஆயுதமாக உடையவன்; ஓங்கி வளர்ந்து நெடியவனான திருமால் உறையும் பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அதனால் கண்டம் கருமையுற்றவன்; நெற்றியில் விளங்கும் நெருப்புக் கண்ணால் மன்மதனை எரித்தவன்; காட்டுப்பள்ளியில் எக்காலும் இன்றியமையாப் பொருளாக இருப்பவன்; குறள் தன்மை கொண்ட பூதங்களின் தலைவன்; அவனுடைய திருவடியைச் கைகளால் கூப்பித் தொழுதனம்.
52. செற்றவர் தம்அரணம் அவற்றைச்
செவ்வழல் வாய்எரி யூட்டிநின்றும்
கற்றவர் தாம்தொழுது ஏத்தநின்றான்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி
உற்றவர் தாம்உணர்வு எய்திநல்ல
உம்பர்உள் ளார்தொழுது ஏத்தநின்ற
பெற்றம ரும்பெரு மானை யல்லால்
பேசுவது மற்றொர் பேச்சிலோமே.
தெளிவுரை : பகைவர் தம் அரணாக இருந்து முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கி எக்காலத்திலும் நிலை பெற்றவனாகி, கற்றவர்கள் தொழுது போற்ற இருப்பவனாகிய ஈசன் விழைவது காட்டுப்பள்ளி. அதனை அடைந்தவர் இப்பிறவி எடுத்ததன் சிறப்பினை அறிந்தவராய், தேவர்களால் வணங்கப் பெறும் பெருமானை யல்லாது வேறு பேச்சுப் பேசுவது இல்லை.
53. ஒண்துவர் ஆர்துகில் ஆடைமெய்போர்த்து
உச்சிகொ ளாமை<உண் டேஉரைக்கும்
குண்டர்க ளோடுஅரைக் கூறைஇல்லார்
கூறுவ தாம்குணம் அல்லகண்டீர்
அண்டம றையவன் மாலும்காணா
ஆதியி னான்உறை காட்டுப்பள்ளி
வண்டுஅம ரும்மலர்க் கொன்றைமாலை
வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.
தெளிவுரை : காவி நிறத் துணியை ஆடையாக உடம்பில் போர்த்து உயர்வாகக் கொள்ளப்படாத உணவை உட்கொண்டு உரைப்பவர்களுடன் சேர்ந்து அரையில் ஆடை அற்றோர் கூறும் மொழிகள் நன்மையாகாது. மறைவனாகிய பிரமனும் திருமாலும் காணமுடியாத மூலப் பொருளாகக் காட்டுப்பள்ளியில் கொன்றை மாலையும் நீண்டு வளரும் சடைமுடியும் கொண்டு உறையும் அப் பெருமானுடைய திருவடியை வாழ்த்துவோமாக.
54. பொன்னியல் தாமரை நீலநெய்தல்
போதுக ளால்பொலி வெய்துபொய்கைக்
கன்னியர் தாம்குடை காட்டுப்பள்ளிக்
காதல னைக்கடல் காழியர்கோன்
துன்னிய இன்னிசை யால்துதைந்து
சொல்லிய ஞானசம் பந்தனல்ல
தன்னிசை யால்சொன்ன மாலைபத்தும்
தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.
தெளிவுரை : சிவந்த தாமரை மலர்களும் நீலநிற நெய்தல் மலர்களும் இணைந்து சிறப்பினை எய்தும் குளத்தில் கன்னிப் பெண்கள் குடைந்து நீராடும் காட்டுப் பள்ளியை விரும்பியவனை ஈசனை ஞான சம்பந்தர் பெருமான் இசையுடன் சொன்ன இத்திருப்பதிகத்தை இசைந்து ஏற்றுப் பாடுபவர்கள் புகழ் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
6. திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் (அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
55. அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கயல் ஆர்புனல் செல்வமல்கு
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்குஎரி ஏந்திஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
தெளிவுரை : வேதமும் அதன் அங்கங்களும் திருவாயால் ஓதவும், மறைவல்ல அந்தணர்கள் திருவடியைத் தொழுது போற்றவும், நிலவின் ஒளி தவழும் மாட வீதியுடைய திருமருகலில் நிலவும் அழகனே ! கயல் மல்கும் நீர்வளம் செல்வத்தைப் பெருக்க, சிறப்புகளைக் கொண்ட திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் கணபதி ஈச்சரத்தில் இரவில் திருக்கரத்தில் நெருப்பு ஏந்தி ஆடும் காட்சியை விரும்பித் தருவது எதன் பொருட்டு ! சொல்லாய் !
56. நெய்தவழ் மூவெரி காவல்ஓம்பு
நேர்புரி நூல்மறை யாளர்ஏத்த
மைதவழ் மாடம் மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்கள்ஏத்தும்
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூர்எரி ஏந்திஆடும்
கணபிதி ஈச்சரம் காமுறவே.
தெளிவுரை : நெய் சொரிந்து மூன்று வகையான வேள்வித் தீயைப் பேணி வளர்க்கும் அந்தணர்கள் ஏத்த, மேகம் தவழும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த திருமருகலில் வீற்றிருக்கும் அழகனே ! அவ்வேள்வி செய்தலைத் தவமாகப் போற்றும் நான்மறையாளர்கள் பாராட்டும் செங்காட்டங்குடியில் திருக்கரத்தில் பெரிய தீயை ஏந்தித் திருநடனம் புரிகின்ற கணபதி ஈச்சரத்தின்பால் விருப்பம் கொண்டு அக்காட்சியைப் நல்கினை ! அஃது எதன் பொருட்டு ? சொல்லாய்.
57. தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர்
தொகுமறை யோர்கள் வளர்த்த செந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கெள்செங் காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழல் ஆர்க்கஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே
தெளிவுரை : மான் தோலும் பூணூலும் மார்பில் பொலிய, மறையவர்கள் எழுப்பும் வேள்வித் தீயின் புகை மாட வீதிகளில் பரவுமாறு உள்ள திருமருகலில் வீற்றிருக்கும் அழகனே ! சேல்கள் நிறைந்த நீர் வளம் மிக்க வயல்களும் சோலைகளும் சூழ்ந்த செங்காட்டங்குடியில், திருவடியில் கழலொலி ஆர்க்க புரியும் திருநடனத்தை கணபதி ஈச்சரத்தில் விரும்பி நல்கினை ! இஃது எதன் பொருட்டு ? சொல்லாய் !
58. நாமரு கேள்வியர் வேள்விஒவா
நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயில்மேய
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழில் சேலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ்ந்து எல்லிஆடும்
கண்பதி ஈச்சரம் காமுறவே.
தெளிவுரை : நடுநிலை தவறாததும் பொலிவு மிக்கதும் ஆன கேள்வி ஞானத்தை உடையவர்களும், ஓய்தல் இன்றி வேள்வி புரியும் நான்மறை வல்ல அந்தணர்களும் வழிபாடு செய்ய, பெருமை இழையும் மணிக்கோயில் உள்ள திருமருகலில் நிலவும் அழகனே ! நல்ல மணம் தரும் பூம்பொழில் சோலை சூழ்ந்த செங்காட்டங்குடியில் விளங்கும் அழகிய சிறப்பினை மகிழ்ந்து இரவில் நடனம் புரிகின்றனை ! இக்காட்சியை கணபதி ஈச்சரத்தில் விரும்பிக் கொண்டனை ! இஃது எதன் பொருட்டு ? சொல்லாய்.
59. பாடல் முழவும் விழவும் ஓவாப்
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெடுங்கொடி விண்தடவு
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேஇடமாக ஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
தெளிவுரை : எல்லாக் காலங்களிலும் முழவின் ஒலியுடன் கூடிய இசைப்பாடலும் திருவிழாக்களும் நடைபெற, மறையவர்கள் போற்ற, வானத்தை எட்டும் அளவு உயர்ந்த மாடங்களை யுடைய திருமருகலில் நிலவும் அழகனே ! வளைந்த நெருக்கமான இலைகளையுடைய பெருமை மிக்க மலர்ச் சோலை சூழ்ந்த செங்காட்டங்குடியில் இடுகாட்டினை இடமாகக் கொண்டு ஆடும் கணபதி ஈச்சரத்தினை விரும்பியது யாது பற்றி சொல்லாய் !
60. புனைஅழல் ஓம்புகை அந்தணாளர்
பொன்னடி நாள்தொறும் போற்றிஇசைப்ப
மனைகெழு மாடம் மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயல் சேலைசூழ்ந்த
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கனைவளர் கூர்எரி ஏந்தி ஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
தெளிவுரை : சிறப்பிக்கப்படும் வேள்வித் தீயைத் தமது கையால் உபசரிக்கும் அந்தணர்கள் நின் திருவடியைத் தினந்தோறும் போற்றி வேத கீதத்தால் வணங்கித் திகழ, அத்தகையோரின் மாட மாளிகைகள் நிறைந்த திருமருகலில் நிலவும் அழகனே ! அரும்புகள் நிறைந்த சோலைகளும் தண் வயல்களும் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில், திரண்டு நெடிது ஓங்கி எரியும் நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தி ஆடும் கணபதி ஈச்சரத்தினை விரும்பியது எதன் பொருட்டு ? சொல்லாய் !
61. பூண்தங்கு மார்பின் இலங்கைவேந்தன்
பொன்நெடும் தோள்வரை யால்அடர்ந்து
மாண்தங்கு நூல்மறை யோர்பரவ
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்தங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்தங்கு தோள்பெயர்த்து எல்லிஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
தெளிவுரை : அணிகலன்கள் திகழும் மார்பினையுடைய இலங்கை வேந்தனின் ஒளி திகழும் நெடிய தோளை, அவன் எடுத்த மலையினாலேயே தண்டனையுறச் செய்து, மாட்சிமையுடைய முப்புரிநூலைத் தரித்த மறையவர்கள் வணங்க, மருகலில் நிலவும் அழகனே ! உயர்ந்து நிற்கும் பெருமையான மலர்ச் சோலை சூழ்ந்த சிறப்பு மிகுந்த செங்காட்டங்குடியில் அழகிய தோள்களை வீசி, இரவில் ஆடும் கணபதி ஈச்சரத்தின் காட்சியினைப் புலப்படுத்தினீர், எதன் பொருட்டு ? சொல்லாய் !
62. அந்தமும் ஆதியும் நான்முகனும்
அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்கள் ஓதுநாவர்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவிஏத்தும்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கந்தம்அ கில்புகை யேகமழும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
தெளிவுரை : திருவடியைத் திருமாலும் திருமுடியை நான்முகனும் காணவேண்டும் என்று முயற்சி செய்தும் அறிவதற்கு அரியவனாய் மந்திரமாக விளங்கும் வேதங்களை ஓதும் பெருமக்கள் திகழும் மருகலில் நிலவும் அழகனே ! இனிமை மிக்கவர்கள் பரவிப் போற்றும் சிறப்பினைக் கொண்ட செங்காட்டங் குடியில் அகிற் புகையின் மணங்கமழும் கணபதி ஈச்சரம் என்னும் திருக்கோயின்கண் விருப்பமுற்று காட்சி நல்குதல் எதன் பொருட்டு ? சொல்லாய் !
63. இலைமரு தேஅழ காகநாளும்
இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
நிலைஅமண் தேரரை நீங்கிநின்று
நீதர்அல் லார்தெழு மாமருகல்
மலைமகள் தோள்புணர் வாய்அருளாய்
மாசில்செங் காட்டங் குடியதனுள்
கலைமல்கு தோல்உடுத்து எல்லிஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
தெளிவுரை : வெற்றிலை பாக்குடன் சுக்கும் வாயில் மென்றும் மருதாணி இலையின் சாயம் பூசியும் நிலவும் சமணர் மற்றும் சாக்கியரை விலகி, மற்றும் கீழ்மை அற்றவர்கள் போற்றும் சிறப்பின் மிக்க மருகலில் உமாதேவியுடன் விளங்கும் ஈசனே, அருள்புரிவாய். குற்றமில்லாத செங்காட்டங்குடியில் மான்தோலை உடுத்து இரவில் நடனம் ஆடும் கணபதி ஈச்சரத்தில் விரும்பியது எதன்பொருட்டு?
64. நாலும் குலைக்கமுகு ஓங்குகாழி
ஞானசம் பந்த னலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடம் ஓங்கு
மருகலில் மற்றுஅதன் மேல்மொழிந்த
சேலும் கயலும் திளைத்த கண்ணார்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழல் ஏத்துபாடல்
சொல்லவல் லார்வினை இல்லையாமே.
தெளிவுரை : தொங்கி வளரும் குலைகளையுடைய கமுக மரங்கள் மிகுந்த சீகாழியின் ஞானசம்பந்தப் பெருமான், நலமும் பெருமை பெற்ற மாடமும் ஓங்கித் திகழும் மருகல் என்னும் கயலும் திளைத்த கண்மாய்கள் (மதகுகள் பொருந்திய கால்வாய்கள்) சிறப்புடன் விளங்கும் செங்காட்டங்குடியிலும் சூலப்படையுடன் விளங்கும் ஈசனின் திருவடியைப் போற்றி மொழிந்த பாடலைச் சொல்பவர்களுக்கு வினை இல்லை.
திருச்சிற்றம்பலம்
7. திருநள்ளாறும் திருவாலவாயும்(அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)
திருச்சிற்றம்பலம்
65. பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடகம்ஆடு நள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தை மார்கள்
துணைவ ரொடும்தொழுது ஏத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குகூடல்
ஆல வாயின்கண் அமர்ந்தவாறே.
தெளிவுரை : பாடகம் என்று சொல்லப் படுகின்ற அணியை மென்மையான திருப்பாதத்தில் அணிகலனாகக் கொண்ட உமா தேவியுடன், பிணங்கள் நிறைந்த காட்டினை இடமாகக் கொண்டு நடனம் ஆடும் நள்ளாறுடைய பெருமானே ! முன் கையில் சூடகம் என்று சொல்லப்படும் வளையலை யணிந்த மகளிர் தத்தமது கணவன்மார்களோடும் தொழுது போற்றி வாழ்த்த பொன் மாளிகைகள் நெருக்கமாக உடைய கூடல் நகரில் ஆலவாய் எனப்படும் கோயிலின்கண் அமர்ந்த பாங்கு என்கொல் ! சொல்லாய் !
66. திங்கள்அம் போதும் செழும்புனலும்
செஞ்சடை மாட்டுஅயல் வைத்துஉகந்து
நங்கண் மகிழுநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
பொங்குஇள மென்முலை யார்களோடும்
புனமயில் ஆட நிலாமுளைக்கும்
அங்கழ கச்சுதை மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
தெளிவுரை : திங்களையும் அழகிய கொன்றை மலரையும் வளமையான கங்கையையும் சிவந்த தன் சடைமுடியில் பொருந்துமாறு தனித்தனியே வைத்து மகிழ்ந்து நம் நெஞ்சத்திலும் இருந்து மகிழும் நள்ளாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமானே ! இளம் மகளிருடன் மயில்கள் ஆடும்போது நிலவு எழுந்து ஒளிபரப்பச் சத்சங்கத்தின் இருப்பிடமாக மண்டபங்களை யுடைய மாளிகைகள் நிறைந்த கூடலின்கண் அமர்ந்த விதம் என்கொல் ? சொல்லாய் !
67. தண்ணறு மத்தமும் கூவிளமும்
வெண்தலை மாலையும் தாங்கியார்க்கும்
நண்ணல்அ ரியநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும்
புகுந்துடன் ஏத்தப் புனைஇழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
தெளிவுரை : குளிர்ச்சியான ஊமத்தம் பூவும் வில்வ இதழும் வெண்மையான தலைகளை மாலைகளாகவும் தாங்கி, யாரும் அடைதற்கு அரியவனாய் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே, புண்ணியம் செய்தவர்களும், பெருந்தவம் செய்தவர்களும் சென்று போற்றச் சிறப்பாக விளங்கும் பெருமானின் பாடலைத் தொடுக்கும் ஆலவாயின்கண் அமர்ந்திருக்கும் அழகு என்கொல் ? சொல்லாய் !
68. பூவினில் வாசம் புனலில் பொற்புப்
புதுவிரைச் சாந்தினில் நாற்றத்தோடு
நாவினில் பாடநள் ளாறுடைய
நம்பெரு மன்இது என்கொல்சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
தரர்கணத் தோடும் சிறந்துபொங்கி
ஆவினில் ஐந்துஉகந்து ஆட்டும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
தெளிவுரை : பூவினில் நறுமணமும், நீரின் பொலிவும், சந்தனத்தின் மணமும், நாவினால் பாடுதலும் ஆகிய ஐம்பொறிகளுக்கும் சார்வாய் நள்ளாற்றில் வீற்று இருக்கும் பெருமானே ! தேவர், அசுரர், சித்தர், வித்யாதரர் முதலான கணத்தினரோடும் சிறந்து மேலோங்கி, பசுவின் வாயிலாகப் பெறப்படும் ஐந்து வகையான பொருள்களையும் உகந்து பூசனையாகக் கொள்ளும் மதுரையின் திருக்கோயிலில் அமர்ந்தவாறு என் கொல் ? சொல்லாய் !
69. செம்பொன்செய் மாலையும் வாசிகையும்
திருந்துபு கையும்அ வியும்பாட்டும்
நம்பும்பெரு மைநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய் !
உம்பரும் நாகர்உ லகம்தானும்
ஒலிகடல் சூழ்ந்த உலகத்தோரும்
அம்புத நால்கால் நீடும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
தெளிவுரை : பொன் மாலையுடைய அலங்காரமும், வாசிகை என்னும் திருவொலியும், அடர்ந்து பரவி மணக்கும் அகிற் புகையும், நைவேத்தியமும் இசைப் பாட்டும், அரனை வழிபடுபவர்களுக்கு அருள் நிலவும் என்னும் வாய்மையில் பக்தி சிரத்தையுடன் வழிபடும் நம்பிக்கைக்குரிய சிறப்பும் <உடைய நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே ! தேவருலகத்தாரும் நாகர் உலகத்தாரும் கடலால் சூழப்பட்ட இந்தப் பூவுலகத்தாரும் ஏத்த மேகங்கள் போன்று குளிர்ந்து நீண்ட நான்மாடக் கூடலில் அமர்ந்தவாறு என் கொல் ? சொல்லாய் !
70. பாகமும் தேவியை வைத்துக்கொண்டு
பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப்
புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகம்உ டையவர் சேரும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
தெளிவுரை : ஒரு பாகத்தில் உமாதேவியை வைத்துக் கொண்டு, நஞ்சினையும், அகன்ற படத்தையும் பிளந்த வாயையும் உடைய நாகமும் அணிகலனாகப் பூண்டு, நள்ளாற்றில் வீற்று இருக்கும் பெருமானே ! புண்ணியர் நின்னை மனத்தில் இருத்திப் போகத்தில் சேரும் பண்பினராய்த் திருமேனி உ<டையவர்கள் விளங்கும் கூடலின்கண் அமர்ந்தவாறு என்கொல் ? சொல்லாய் !
71. கோவண ஆடையும் நீறுப்பூச்சும்
கொடுமழு ஏந்தலும் செஞ்சடையும்
நாவணப் பாட்டுநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர்
பொன்னும் மணியும் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
தெளிவுரை : கோவணத்தை ஆடையாகக் கொண்டும், திருநீற்றை மேனியில் பூசியும் வளைந்த மழு ஆயுதத்தை ஏந்தியும், செம்மை திகழும் சடைமுடி கொண்டு பலவண்ணங்களை உடைய திருப்பாடல்களை நாவினால் இசைக்கத் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே ! பூப்போன்ற மென்மையான மேனியை உடைய இளம் மகளிர் பொன்னும் மணியும் திரளாகச் சேர்த்து கடை வீதியில் உலவும் கூடலின்கண் அமர்ந்தவாறு என்கொல் ? சொல்லாய் !
72. இலங்கை இராவணன் வெற்பெடுக்க
எழில்விரல் ஊன்றி இசைவிரும்பி
நலங்கொளச் சேர்ந்தநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்
புந்தியி லும்நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல் நல்லார்கள் அமரும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தாவாறே.
தெளிவுரை : இலங்கை வேந்தனாகிய இராவணன், திகழும் கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்கும் போது உயர்ச்சியை நல்கும் அழகிய விரலை அம்மலையின்மீது ஊன்றி, மற்றும் அவ் வரக்கனுடைய இசையை விரும்பி அவனுக்கு நலன்களைக் கொள்ளுமாறு அருள் புரிந்து நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! ஐந்து இந்திரிய வயம் மயங்கியும் அந்தந்த புலன்வழிச் சேராமல் பாதுகாத்தும் மனத்தால் நின்னை எக் காலத்திலும் சிந்தித்து மகிழும் பெருமையுற்ற நல்லோர்கள் அமரும் ஆலவாயின்கண் அமர்ந்தவாறு என்கொல்? சொல்லாய்!
73. பணியுடை மாலும் மலரினோனும்
பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல்அ ரியநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை
மாமுர சின்ஒலி என்றும்ஓவாது
அணிகிளர் வேந்தர் புகுதும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
தெளிவுரை : படம் விரித்துள்ள ஆதிசேடனைப் படுக்கையாக உடைய திருமால் பன்றி வடிவத்தில் பூமியைக் குடைந்து சென்றும், மலரின்மேல் உறையும் நான்முகன் அன்னப் பறவை வடிவத்தில் ஆகாயத்தில் பறந்து சென்றும் அடைய முடியாதவனாய்த் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே ! தேரில் பொருத்தப் பெற்றுள்ள மணிகளின் ஒலியும் புடைசூழும் படைகள் முழங்கும் சங்கொலியும், முரசொலியும் எக்காலத்திலும் ஓய்வின்றி அணிஅணியகாகப் பல நாட்டு வேந்தர்கள் சாரும் ஆலவாயின்கண் அமர்ந்தவாறு என்கொல் ? சொல்லாய் !
74. தடுக்குடைக் கையரும் சாக்கியரும்
சாதியில் நீங்கிய அத்தவத்தர்
நடுக்குற நின்றநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்
இரும்பலி இன்பினோடு எத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
தெளிவுரை : தாம் அமர்வதற்காக ஓலையினால் செய்த தடுக்கையுடைய சமணர்களும் மற்றும் சாக்கிய மதத்தினரும், மரபில் திரிந்த தவத்தினராய் அதிர்ந்து இருக்கத் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே ! திருவிழாக்கள் நடத்தியும் காத்தல் செய்ய வேண்டும் என்னும் குறிக்கோளில் இன்பம் பெருக எல்லாத் திசைகளிலும் பெருமையுறும் ஆலவாயின்கண் அமர்ந்தவாறு என்கொல் ? சொல்லாய் !
75. அன்புடை யானை அரனைக்கூடல்
ஆலவாய் மேவியது என்கொல்என்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
நயம்பெறப் போற்றி நலம் குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
இமையவர் ஏத்த இருப்பர்தாமே.
தெளிவுரை : அன்புடையவனாகிய அரனைக் கூடல் ஆலவாய் மேவியது என்கொல் என்று திருநள்ளாறு என்னும் பதியில் வீற்றிருக்கும் தலைவனை. விருப்பத்துடன் போற்றி எல்லோருடைய நலத்தையும் விளங்கச் செய்யும், பொன்னால் அழகு படுத்தப்படும் மாட மாளிகையுடைய சீகாழியின் அந்தணர் பெருந்தமையாம் ஞானசம்பந்தப்பெருமான் மொழிந்த, இன்பம் பெருக்கும் பாடல்கள் பத்தினையும் ஏற்றுப் பாடுபவர்கள், தேவர்களெல்லாம் போற்றுமாறு திகழ்வர்.
திருச்சிற்றம்பலம்
8. திருஆவூர்ப் பசுபதீச்சரம் (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர் (கோவந்தகுடி),தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
76. புண்ணியர் பூதியர் பூதநாதர்
புடைபடு வார்தம் மனத்தார்திங்கள்
கண்ணியர் என்றென்று காதலாளர்
கைதொழுது ஏத்த இருந்தஊராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி
விரைகமழ் சோலை சுலாவிஎங்கும்
பண்ணியல் பாடல்அ றாதஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.
தெளிவுரை : புண்ணியமூர்த்தி, செல்வம் உடையவர், பூதகணங்களின் தலைவர், அணுகிப் பக்கம் சார்பவரின் மனத்தில் பொருந்துபவர், திங்களைச் சூடியவர் எனப் பலவாறு அன்பர்கள் கை தொழுது ஏத்தும் ஊர், உயர்ந்த மாளிகைகளும் மாட வீதிகளும் மற்றும் மணம் கமழ் சோலைகள் பரந்து எல்லா இடங்களிலும் பண்ணிசை மேவும் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் ஆவூர். அத்தகைய ஊரில் விளங்கும் பசுபதீச்சரத்தை நாவானது பாடித் துதிக்கவேண்டும்.
77. முத்தியர் மூப்பிலர் ஆப்பின்உள்ளார்
முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்தியர் என்றென்று அடியர்ஏத்தும்
ஐயன்அ ணங்கொடு இருந்தஊராம்
தொத்துஇயலும் பொழில் மாடுவண்டு
துதைந்து எங்கும் தூமதுப் பாயக்கோயில்
பத்திமைப் பாடல்அ றாதஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.
தெளிவுரை : முத்தி தருபவர், முதுமை இல்லாதவர், மூன்று கண்களை உடையவர், தக்கன் புரிந்த தகாத வேள்வியை அழிக்கும் யானை போன்றவர் எனப் பலவாறு அடியவர்கள் போற்றும் தலைவன் உமாதேவியுடன் இலங்கும் இடம், பூங்கொத்துக்கள் விளங்கும் சோலைகளின் பக்கம் வண்டு படிந்து நல்ல தேனைச் சேர்க்க, அது பெருக்கெடுத்துப் பாயும் கோயில், பக்திப் பாடல்களை ஓயாது இசைக்கும் ஆவூரின்கண் மேவும் பசுபதீச்சரம் ஆகும். அதனை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.
78. பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார்
போம்வழி வந்துஇழிவு ஏற்றம்ஆனார்
இங்குஉயர் ஞானத்தர் வானோர்ஏத்தும்
இறையவர் என்றும்இ ருந்துஊராம்
தெங்குஉயர் சோலைசேர் ஆலைசாலி
திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்பும்ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.
தெளிவுரை : பொங்கி வரும் புனலாகிய கங்கையைத் திருமுடியில் வைத்தார், ஈசன், அவரை, மானிடராய்த் தோன்றி பிறவித் தளையிலிருந்து விடுபட்டு ஏற்றம் பெற்றவர்களும், உயர்ந்த ஞானிகளும், வானோரும் ஏத்துகின்றனர். யாண்டும் விளங்கும் தென்னை மரங்களும், கரும்பும் செந்நெலும் திளைக்க வயல்களும், நீர்நிலை பெருக்கும் பொய்கை(குளம்)களும் சேரத் தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் விரும்பும்படி அவ்வூர் உள்ளது. அத்தகைய ஊர் ஆவூர். அவ்வூரின் கண் விளங்கும் பசுபதீச்சரத்தை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.
79. தேவியோர் கூறினர் ஏறதுஏறும்
செலவினர் நல்குரவு என்னைநீக்கும்
ஆவியர் அந்தணர் அல்லல்தீர்க்கும்
அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம்
பூவியலும் பொழில் வாசம்வீசப்
புரிகுழ லார்சுவடு ஒற்றிமுற்றப்
பாவியில் பாடல்அ றாதஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.
தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாக வைத்து இருப்பவர்; இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து அடியவர்பால் சென்று காட்சி தருபவர்; வறுமை என்னைச் சாராதபடி காப்பவர்; உயிரைப் போன்றவர்; அந்தணர்; துயரைத் தீர்க்கும் தந்தையானவர். அப் பெருமான் அமர்ந்த ஊர் என்பது சோலைகள் பூவின் மணத்தைப் பரப்பவும் மகளிர் இசையுடன் பாடல்கள் ஒலித்துக் கொண்டு விளங்கும் ஆவூர்ப் பசுபதீச்சரம் ஆகும். அங்கு எழுந்தருளியுள்ள ஈசனை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.
80. இந்துஅணை யும்சடை யார்விடையார்
இப்பறிப்பு என்னை அறுக்கவல்லார்
வந்துஅணைந்து இன்னிசை பாடுவார்பால்
மன்னினர் மன்னி இருந்தஊராம்
கொந்துஅணை யும்குழ லார்விழவில்
கூட்டம் இடைஇடை சேரும்வீதிப்
பந்தணையும் விரலார் தம்ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.
தெளிவுரை : இளஞ் சந்திரனைச் செஞ்சடையில் அணிந்தவர். இடபத்தை வாகனமாக உடையவர், பிறவி என்னும் தளையிலிருந்து அறுத்து விடுவிப்பவர், திருக்கோயிலை நாடி வந்து இசையுடன் பாடும் தொண்டரிடம் பதிந்து பொருந்தி விளங்கும் ஊர் எனப்படுவது விழாக்காலங்களில் பூங்கொத்துக்களைக் கூந்தலில் அணிந்தும் கூட்டம் கூட்டமாகக் சேரும் மகளிர்கள் கொண்ட வீதிகளையுடைய ஆவூர் ஆகும். மேலும் அத்தகைய மகளிர் சுறுசுறுப்பான பந்தாட்டத்தை விரும்புவார்கள். அங்கு எழுந்தருளியுள்ள பசுபதீச்சரத்தை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.
81. குற்றம் அறுத்தார் குணத்தின்உள்ளார்
கும்பிடு வார்தமக்கு அன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
உறைபதி யாகும் செறிகொள்மாடம்
சுற்றிய வாசலின் மாதர் விழாச்
சொற்கவி பாடநி தானநல்கப்
பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.
தெளிவுரை : பாவச் செயல்களை நீக்கியவர்தம் உள்ளத்தில் உறைபவர்; தம்மை வணங்கும் அடியவர்களுக்கு விரும்பும் யாவையும் தருபவர்; இடபவாகனத்தை உடையவர்; நெற்றியில் கண்ணுடையவர்; இத்தகைய சிறப்புடைய பெருமான் உறைகின்ற இடம், நெருங்கிய மாடங்களை யுடைய வாயிலின் முன் திருவிழாக் காலங்களில் பெண்கள் மொழியலங்காரம் மிக்க இசைப் பாடல்களைப் பாடவும் அவற்றின் பரிசாகப் பொன்னும் மணியும் வழங்கும் கரங்களையுடையவர்கள் வாழும் ஆவூர் ஆகும். அத்தகைய வளம்மிக்க ஊரின்கண் எழுந்துள்ளது பசுபதீச்சரம். அதனை நாவானது பாடித்துதிக்க வேண்டும்.
82. நீறுடை யார்நெடு மால்வணங்கு
நிமிர்சடை யார்நினை வார்தம்உள்ளம்
கூறுடை யார்உடை கோவணத்தார்
குவலயம் ஏத்தஇ ருந்தஊராம்
தாறுடை வாழையில் கூழைமந்தி
தகுகனி யுண்டுமின் டிட்டுஇனத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.
தெளிவுரை : திருவெண்ணீற்று மேனியர்; உலகினை அளந்தவரான திருமாலால் வணங்கப் பெறுபவர்; தன்னை நினைத்து வணங்கும் அடியவர்தம் உள்ளத்தில் அங்கமாக வீற்றிருப்பவர்; கோவண ஆடையை உடையாகக் கொண்டவர். அத்தகைய பெருமான் உலகமெல்லாம் போற்றுமாறு விளங்கும் ஊரானது, மந்திகள் வாழைக் கனிகளை உண்டு மகிழ்ந்து இனத்தொடு மேவும் ஊர் ஆவூர். அவ்வூரின் கண் ஈசன் விளங்கும் பசுபதீச்சரத்தை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.
83. வெண்தலை மாலை விரவிப்பூண்ட
மெய்யுடை யார்விறல் ஆர்அரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த
மைந்தர்இ டம்வளம் ஓங்கிஎங்கும்
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்
கதியருள் என்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.
தெளிவுரை : வெண்மையான தலையும், மாலையும் கலந்து அணிந்த திருமேனியுடையவர்; வலிமை பொருந்திய அரக்கனின் தலையைத் துன்புறுமாறு செய்த அழகர். அவருடைய இடம் வளம் பெருகி, அவரைக் கருத்தில் பதித்து நற்கதி வேண்டும் என்று கைகூப்பித் தொழும் ஆவூர்ப் பசுபதீச்சரம் ஆகும். அதனை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.
84. மாலும் அயனும் வணங்கிநேட
மற்றுஅவ ருக்குஎரி யாகிநீண்ட
சீலம் அறிவரி தாகிநின்ற
செம்மையி னாரவர் சேரும்ஊராம்
கோல விழாவின் அரங்கதுஏறிக்
கொடிஇடை மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந்து ஏத்தும்ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.
தெளிவுரை : திருமாலும், பிரமனும் வணங்கித் தேடும் போது அவர்களுக்குப் புலப்படாமல் பின்னர் நீண்ட சோதி வடிவாய்த் தோன்றிய சீலம் மிக்கவர் சேரும் ஊரானது, விழாக் காலங்களில் பெண்கள் தம் துணைவருடன் சேர்ந்து இனிமையாக ஏத்தும் ஆவூர்ப் பசுபதீச்சரம் ஆகும். அதனை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.
85. பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
பேதைய ராம்சமண் சாக்கியர்கள்
தன்இய லும்உரை கொள்ளகில்லாச்
சைவர் இடந்தளவு ஏறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர்தாமும்
கனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.
தெளிவுரை : பின்னப்பட்ட சடையையுடைய சமணர்களும் சாக்கியர்களும் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்வனவற்றைப் பொருட்படுத்தாத சைவர்களுடைய இடமாவது, முல்லை மலர்ச் சோலை செறிந்த சுனையில் மாதரும் அவர்தம் துணைவரும் மூழ்கி நீராடி சிந்தையில் பதித்துப் பக்திப் பாக்களைப் பயிலும் ஆவூர்ப் பசுபதீச்சரம் ஆகும். அதனை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.
86. எண்திசை யாரும்வ ணங்கிஏத்தும்
எம்பெரு மானைஎ ழில்கொள்ஆவூர்ப்
பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்
பசுபதி ஈச்சரத்து ஆதிதன்மேல்
கண்டல்கண் மிண்டிய கானல்காழிக்
கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
கொண்டினி தாய்இசை பாடிஆடிக்
கூடும வர்உடை யார்கள்வானே.
தெளிவுரை : எண் திசையும் விரிந்து பரவிய மக்கள் வணங்கிப் போற்றும் எம்பெருமானை எழில் மிக்க ஆவூரில், வழிவழியாய்த் தொன்மைக் காலத்திருந்தே உரிமை பூண்ட தொண்டர்கள் போற்றித் துதிக்கின்றனர். அத்தகைய பெருமையுற்ற பசுபதீச்சரத்தின் இறைவன் மீது தாழை மடல்கள் வளரும் சோலையுடைய சீகாழியின் கவுணியர் கோத்திரத்தைச் சார்ந்த ஞானசம்பந்தர் சொன்ன இத் திருப்பதிகத்தை இனிதாய் இசையுடன் பாடியும் ஆடியும் கூடி விளங்கும் அடியவர்கள் சிறப்படைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
9. திருவேணுபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
87. வண்டார்குழல் அரிவையொடு
பிரியாவகை பாகம்
பெண்டான்மிக ஆனான்பிறைச்
சென்னிப் பெருமான்ஊர்
தண்டாமரை மலராள்உறை
தவளம்நெடு மாடம்
விண்தாங்குவ போலும்மிகு
வேணுபுரம் அதுவே.
தெளிவுரை : வண்டுகள் பொருந்திச் சுழன்று ரீங்காரம் செய்யும் மணம் மிகுந்த கூந்தலையுடைய நங்கையாகிய உமாதேவியோடு எக்காலத்திலும் பிரிந்து இல்லாதவாறு தனது இடப் பாகத்திலும் வரித்துத் தானே பெண்ணாகியவன் பிறைச் சந்திரனை முடியில் சூடினான். அவனுடைய ஊரானது திருமகள் உறையும் வெண்மையான உயர்ந்த மாட மாளிகைகள் உள்ள வேணுபுரம் ஆகும்.
88. படைப்புந்நிலை இறுதிப்பயன்
பருமையொடு நேர்மை
கிடைப்பல்கணம் உடையான்கிறி
பூதப்படை யான்ஊர்
புடைப்பாளையின் கமுகின்னொடு
புன்னைமலர் நாற்றம்
விடைத்தேவரு தென்றல்மிகு
வேணுபுரம் அதுவே.
தெளிவுரை : படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலும் புரிபவனாய், அதன் பயனாகிய முத்திப் பேற்றினை நல்குபவனாய், விளக்கமாகவும் நீதி நெறிகளைச் செம்மையாக வடிக்கும் வேதத்தை ஓதும் சிவகணங்களை உடையவனாய், பூதப் படை உடையவனாய் விளங்கும் பெருமானுடைய ஊரானது, பாக்கு மரங்களும் புன்னை மலரின் மணமும் மிகுந்து தென்றலாகிய இனிமை பொருந்திய வேணுபுரம் ஆகும்.
89. கடம்தாங்கிய கரியைஅவர்
வெருவஉரி போர்த்துப்
படம்தாங்கிய அரவக்குழைப்
பரமேட்டிதன் பழவூர்
நடம்தாங்கிய நடையார்நல
பவளத்துவர் வாய்மேல்
விடம்தாங்கிய கண்ணார்பயில்
வேணுபுரம் அதுவே.
தெளிவுரை : மதம் பெருந்திய யானையை அஞ்சுமாறு செய்து அடக்கி அதன் தோலை உரித்து, அந்த யானை ஏவிய தாருகாவனத்து முனிவர்கள் அஞ்சுமாறு போர்த்து அரவக்குழை யுடையனின் பழைமையான ஊரானது, நடனக்கலையில் வல்லவர்களும், பவளம் போன்ற செந்நிற இதழ்களை உடையவர்களும், விடத்தைப் போன்று தாம் கண்களால் ஈர்த்துத் தம்வழி மயங்கி நிற்கச் செய்யும் சக்தி மிகுந்த பார்வை உடையவர்களும் நிலவும் வேணுபுரம் ஆகும்.
90. தக்கன்றன் சிரம்ஒன்றினை
அரிவித்தவன் தனக்கு
மிக்கவ்வரம் அருள்செய்தஎம்
விண்ணோர்பெரு மான்ஊர்
பக்கம்பல மயில்ஆடிட
மேகக்முழவு அதிர
மிக்கம்மது வண்டார்பொழில்
வேணுபுரம் அதுவே.
தெளிவுரை : தக்கன் சிரம் அறுத்து அவன் வேள்வியைத் தகர்த்த வீரபத்திரக் கடவுளுக்கு அளவற்ற வரங்கள் அருளிய தேவர்கள் தலைவனாகிய எம்பெருமானது ஊரானது, மேகங்கள் முழவொலி போன்று அதிர்ந்தும் பக்கங்களில் மயில்கள் தோகை விரித்து ஆடவும், தேனை அருந்திய வண்டுகள் சோலைகளில் பொருந்தி இருக்கவும் உள்ள வேணுபுரம் ஆகும்.
91. நானாவித உருவால் நமை
ஆள்வான்நணு காதார்
வானார்திரி புரமூன்றுஎரி
யுண்ணச்சிலை தொட்டான்
தேனார்ந்தெழு கதலிக்கனி
உண்பான்திகழ் மந்தி
மேனோக்கிநின்று இறங்கும்பொழில்
வேணுபுரம் அதுவே.
தெளிவுரை : ஈசன் தன்னை நினைத்துத் தியானம் செய்யும் அடியவர்களின் விருப்பத்திற்கேற்றாவாறு உருவத்தை வெளிப்படுத்தி ஆள்பவன்; அப்பெருமானை அணுகாத அசுரர்களை அவர்களுடைய மூன்று கேட்டைகளுடன் எரியுண்ணுமாறு செய்து அழித்தவன். அவனுடைய ஊரானது வாழைக்கனியிலிருந்து பெருகும் தேனை உண்ணும் நோக்கில் குரங்குகள் அருந்திப் பின்னர் மரத்திலிருந்து பூமியை நோக்காது மேல் நோக்கியவாறு இறங்கி வரும் செம்மைப் பொழில் கொண்ட வேணுபுரம் ஆகும்.
92. மண்ணோர்களும் விண்ணோர்களும்
வெருமிம்மிக அஞ்சக்
கண்ணார்சலம் மூடிக்கடல்
ஓங்கவ்உயர்ந் தான்ஊர்
தண்ணார்நறும் கமலம்மலர்
சாயல்இள வாளை
விண்ணோர்குதி கொள்ளும்வியல்
வேணுபுரம்அதுவே.
தெளிவுரை : மண்ணுலகத்தவர்களும் விண்ணுலகத்தவர்களும் அதிர்ச்சியுற்று அஞ்சுமாறு, பிரளய காலத்தில் எல்லாம் நீரால் மூடுமாறு, கடல் பெருகி ஓங்கி இருக்கும் போதும் மேலோங்கி இருப்பவனது ஊரானது, குளிர்ந்த மணம் மிகுந்த தாமரை மலர்ச் சாயலுடைய இளம் வாளை மீன்கள் மேலே எழும்பித் துள்ளிக் குதிக்கும் இயல்புடைய வேணுபுரம் ஆகும்.
93. மலையான்மகள் அஞ்சவ்வரை
எடுத்தவ்வலி யரக்கன்
தலை தோளவை நெரியச்சரண்
உகிர்வைத்தவன் தன்னூர்
கலைஆறொடு சுருதித்தொகை
கற்றோர்மிகு கூட்டம்
விலையாயின சொல்தேர்தரு
வேணுபுரம் அதுவே.
தெளிவுரை : மலைமகளாகிய பார்வதிதேவியும் ஈசனும் கயிலை மலையில் வீற்றிருந்தபோது, பெருமாட்டி கலங்குமாறு மலையைப் பெயர்த்த இராவணன் வலிமையையும், தலையையும், தோளையும் கலங்கும்படி தனது கால் விரலின் நகத்தால் செய்தவன் ஈசன். அப் பெருமானுடைய ஊரானது, கலையொழுக்கத்துடன் வேதத்தையும் கற்றோர் மிகுந்திருக்க, மதிப்பு மிக்க சொற்களைப் பலரும் ஏற்று ஒழுகுமாறு செய்யும் சிறப்புடைய பெருமக்கள் வாழும் வேணுபுரம் ஆகும்.
94. வயம்உண்தவ மாறும்அடி
காணாது அலம் ஆக்கும்
பயனாகிய பிரமன்படு
தலையேந்திய பரனூர்
கயமேவிய சங்கம்தரு
கழிவிட்டுயர் செந்நெல்
வியன்மேவிவந்து உறங்கும்பொழில்
வேணுபுரம் அதுவே.
தெளிவுரை : வெற்றியைத் தரும் நற்றவத்தைச் செய்த திருமால் ஈசனின் திருவடியைக் காணுமாறு முயற்சி செய்தும் காண முடியவில்லை. பிரமனுடைய தலை ஒன்றினைக் கிள்ளி, தன் கையில் திருவோடாகக் கொண்டு சஞ்சலம் தருமாறு ஏந்தினான் அரன். சங்குகள் உப்பங்கழி வழியாகச் சென்று நெல் வயலில் வந்து தங்கும் நிலப்பகுதியுடைய வேணுபுரம் ஆகும்.
95. மாசுஏறிய உடலார்அமண்
குழுக்கள்ளொடு தேரர்
தேசு ஏறிய பாதம்வணங்
காமைத்தெரி யானூர்
தூசுஏறிய அல்குல்துடி
இடையார்துணை முலையார்
வீசுஏறிய புருவத்தவர்
வேணுபுரம் அதுவே.
தெளிவுரை : அழுக்கு மெய்யுடைய அமணரும், பௌத்தரும் ஒளி பொருந்திய திருவடியை வணங்கித் துதிக்கவும் அறியவொண்ணாதவானாகிய ஈசன் ஊரானது, ஆடை பொருந்திய மெல்லிடையும் அச்சமற்று நேர்கொண்டு வீசும் பார்வையும் <உடைய நங்கையர் மிக்க வேணுபுரம் ஆகும்.
96. வேதத்தொலி யானும்மிகு
வேணுபுரம் தன்னைப்
பாதத்தினின் மனம்வைத்தெழு
பந்தன்தன பாடல்
ஏதத்தினை இல்லாஇவை
பத்தும்மிசை வல்லார்
கேதத்தினை இல்லார்சிவ
கெதியைப்பெறு வாரே.
தெளிவுரை : வேதங்கள் எக் காலத்திலும் ஓதப்பட்டு, அவ்வொலியானது பரவி இருக்கும் வேணுபுரம் என்னும் நகரைப் போற்றி, ஈசன் திருவடிக் கமலத்தின்பால் மனத்தைப் பதித்து அதனால் எழப்பெற்ற ஞானசம்பந்தப் பெருமானுடைய திருப்பாடல்கள், தினையளவும் குற்றம் இல்லாதவை. எனவே இப்பதிகத்தை ஓதுபவர்கள் தினையளவும் துன்பம் இன்றி உலகத்தில் வாழ்வார்கள். பின்னர் சிவகதியாகிய முத்தி இன்பத்தைப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
10. திருவண்ணாமலை (அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை)
திருச்சிற்றம்பலம்
97. உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைம் முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை
வழுவாவண்ணம் அறுமே.
தெளிவுரை : உண்ணாமுலை என்னும் திருநாமம் தாங்கிய உ<மாதேவியோடு உறைகின்ற ஒப்பற்றவனாகிய ஈசன் அத்தேவியைத் தன் இடப்பாகத்தில் வரித்துப் பெண் ஆயினான். அப்பெருமானுடைய மலையாகிய திருவண்ணாமலை செல்வம் மிக்க மணிகளைக் கொண்டுள்ளது. அம் மலையிலிருந்து மண்ணில் பொருந்த வீழும் அருவியானது இளமுழவின் ஓசையைத் தருகின்றது. அத்தகைய அண்ணாமலையைத் தொழுபவர்தம் வினைகள் தவறாமல் அறுந்து வீழும்.
98. தேமாங்கனி கடுவன்கொள
விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகல் மிசை
சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில்
அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி
நினைவார்வினை இலரே.
தெளிவுரை : உயர்ந்த மாங்கனிகளை ஆண் குரங்கு பறித்துக் கொள்ளவும், அதனால் அசையும் மாங்கொம்புகள் மேகத்தைத் தொட்டு சிறிய நீர்த்துளிகளைச் சிதறும்படி செய்ய பெருமையான பசுக்கள் எருதுகளுடன் சாரும் சோலைகளையுடைய அண்ணாமலை அண்ணலின், பூப்போன்று மென்மையாயும் செம்மை தருவனவாயும் திகழும் திருவடியை நினைப்பவர்களுக்கு வினை இல்லை.
99. பீலிம்மயில் பெடையோடுறை
பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை
சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில்
அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி
தொழுவாரன புகழே.
தெளிவுரை : தோகை விரித்தாடும் மயில் தன் பெடையோடு உறையும் பொழிலும், முத்தும் மணியும் தரையில் பரவச் சிதறி ஒளி திகழவும், நீர்த்திரள் பொருந்திக் குளிர்ச்சி மலரவும் உள்ள இடம் அண்ணாமலை. அவ் அண்ணல், மார்க்கண்டேயனைக் காக்கும் பொருட்டுக் காலனை அழித்தவன். அப் பெருமானுடைய திருவடியை, வணங்குபவர் புகழ் பெறுவர்.
100. உதிரும்மயிர் இடுவெண்தலை
கலனாஉல கெல்லாம்
எதிரும்பலி உணல்ஆகவும்
எருதுஏறுவது அல்லால்
முதிரும் சடை இளவெண்பிறை
முடிமேல்கொள அடிமேல்
அதிரும்கழல் அடிகட்குஇடம்
அண்ணாமலை அதுவே.
தெளிவுரை : ஈசன், ஒரு காலத்தில் பிரமனுடைய ஒரு தலையைக் கொய்து மறக்கருணை ஆற்ற. அதுவே திருஓடு எனத் திருக்கரத்தில் சேர்ந்தது. அது பலியேற்கும் பிச்சைப் பாத்திரமாக அமைய எல்லோரும் எதிர்வந்து பிச்சை இட்டனர். அதனை உணவாகவும் இடபத்தை வாகனமாகவும் மற்றும் முதிர்ந்த சடையும் இளவெண் மதியும் முடியில் தரித்துத் திருவடியில் ஒலிக்கும் கழலினையுடைய அடிகளாகிய ஈசனுக்குரிய இடமாவது. அண்ணமலையே ஆகும்.
101. மரவம்சிலை தரளம்மிகு
மணிஉந்துவெள் ளருவி
அரவம்செய முரவம்படும்
அண்ணாமலை அண்ணல்
உரவம்சடை உலவும்புனல்
உடனாவதும் ஓரார்
குரவம்கமழ் நறுமென்குழல்
உமைபுல்குதல் குணமே.
தெளிவுரை : அழகிய ஒளி வீசும் முத்துக்களும் இரத்தினங்களும் மிகுந்திருக்கத் தூய்மையான அருவியின் ஒலி பரவுதலால் கலகலவெனச் சலனத்தையுடைய அண்ணாமலையின் அண்ணலாகிய ஈசன் பாம்பும் கங்கையும் தன் சடையில் பொலிவதையும் ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் <உமாதேவியுடனாய் விளங்கி இருப்பது மேன்மை தருவதாகும்.
102. பெருகும்புனல் அண்ணாமலை
பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி
அணிவார்அது பருகிக்
கருகும்மிடறு உடையார்கமழ்
சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக்கு
உறுநோய்அடை யாவே.
தெளிவுரை : பெருகும் புனலை யுடைய அண்ணாமலையார், கடலில் தோன்றிய நஞ்சைப் பருகும் வல்லமை உடையவர்; அந்த நஞ்சினைப் பருகியதன் விளைவாகக் கண்டம் கருமை நிறம் அடையப் பெற்றவர்; திருநீற்று மேனியர்; மணங்கமழும் சடையை உடையவர். அப்பெருமானுடைய திருவடியைப் போற்றி மனம் உருகி வழிபடும் அடியவர்களுக்கு பிறவி எடுக்கின்ற தன்மைத்தாகிய நோய் இல்லை. எத்தகைய பிணியும் இல்லை என உணர்த்துவதாயிற்று.
103. கரிகாலன் குடர்கொள்வன
கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்தலை
உதையுண்டுஅவை உருள
எரியாடிய இறைவர்க்குஇடம்
இனவண்டு இசைமுரல
அரியாடிய கண்ணாளொடும்
அண்ணாமலை அதுவே.
தெளிவுரை : கரிய கால்களையுடைய நரிகள் குடல்களைத் தின்றும், வெண்மையான மண்டை ஓட்டினை உருளும்படி கால்களால் உ<தைத்தும் ஆடிக் கொண்டிருக்கப் பேய்கள் ஆடும் இடுகாட்டில் திருக்கரத்தில் தீப்பிழம்பை ஏந்தி ஆடும் இறைவனுக்கு <உரிய இடம் என்பது கூட்டம் கூட்டமாக வண்டுகள் இசை எழுப்ப, ஈரமும் குளிர்ச்சியும் கலந்த கண்களையுடைய உமாதேவியுடன் விளங்கும் அண்ணாமலையாகும்.
104. ஒளிறூபுலி அதள்ஆடையன்
உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண
வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய
விகிர்தன்இரா வணனை
அளறூபட அடர்த்தான்இடம்
அண்ணாமலை அதுவே.
தெளிவுரை : ஒளிரும் புலியின் தோலை ஆடையாக <உடையவன்; உமாதேவி அச்சம் கொண்டதையொட்டி, பிளிர்ந்து வந்து எதிர்த்த மதயானையின் முகத்தைப் பிடித்தும் அதன் தோலை உரித்தும் திருவிளையாடல் நடத்தியவன்; யாவராலும் கணித்துக் கூற முடியாதவாறு வேறுபாட்டையுடையவன்; மலை எடுத்த இராவணனைச் சேற்றில் அழுந்துமாறு தண்டித்தவன். அப்பெருமானுடைய இடமாவது அண்ணாமலையே.
105. விளவார்கனி படநூறிய
கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை
கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய
அண்ணாமலை அண்ணல்
தளராமுலை முறுவல்உமை
தலைவனடி சரணே.
தெளிவுரை : விளா மரமாய் நின்றவனை மாய்த்த திருமாலும், தாமரை மலர்மேல் உறைந்து வேதத்தில் தோய்ந்த குறைவற்ற புகழையுடைய நான்முகனும் அளிவிட முடியாதபடி நெருப்புப் பிழம்பாகிய அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மையாகிய உமையின் தலைவன். அப்பெருமான் திருவடியையே சரணம் ஆகக் கொள்ள வேண்டும்.
106. வேர்வந்துற மாசுஊர்தர
வெயில்நின்று உழல்வாரும்
மார்பம்புதை மலிசீவரம்
மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின்
அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல்ல
கழல்சேர்வது குணமே.
தெளிவுரை : வேர்வை உண்டாகி அதனால் அழுக்குத் தோய வெயிலில் திரிபவரும் மரவுரியை மார்பு மறையாதவாறு தரித்துக் கொண்டு வருபவர்களாய், முற்றிய தன்மையில்லாத நிலையில் உரை செய்பவர்களுடைய மொழிகளை ஏற்க வேண்டாம். மழுப்படை தாங்கியுள்ள அண்ணாமலையாரின் நல்ல கழலை எண்ணித் துதிப்பது குணம் தரும்.
107. வெம்புந்திய கதிரோன்ஒளி
விலகும்விரி சாரல்
அம்புந்தீமூ எயில்எய்தவன்
அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயில்ஆலுவ
குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர்
அடிபேணுதல் தவமே.
தெளிவுரை : வெம்மை தரும் கதிரவனுடைய ஒளியும் அற்றுப் போகுமாறு மேகத்தில் திரிந்த மூன்று கோட்டைகளைச் செயலிழக்கச் செய்தவன் ஈசன். அவ் அண்ணாமலையானைப் பாடிய, குளிர்ந்த சீகாழியின் ஞானசம்பந்தன் தமிழாகிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லார்தம் திருவடி பேணுதல் பெருந்தவம் ஆகும்.
திருச்சிற்றம்பலம்
11. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
108. சடையார்புனல் உடையான்ஒரு
சரிகோவணம் உடையான்
படையார்மழு உடையான்பல
பூதப்படை உடையான்
மடமான்விழி உமைமாதுஇடம்
உடையான்எனை உடையான்
விடையார்கொடி உடையான்இடம்
வீழிம்மிழ லையே.
தெளிவுரை : சடையின்கண் பொருந்திய கங்கையை உடையவன்; சரிந்த கோவண ஆடை யுடையவன்; ஆயுதமாக விளங்கும் மழுவை யுடையவன்; பூதகணங்களைப் படை வீரர்களாக உடையவன்; மான் விழியன்ன உமை நங்கையை இடப்பாகத்தில் உடையவன்; என்னை ஆளாக உடையவன்; இடபத்தைக் கொடியாக உடையவன். அவனுடைய இடம் என்பது திருவீழி மிழலை ஆகும்.
109. ஈறாய்முதல் ஒன்றாய்இரு
பெண்ஆண்குணம் மூன்றாய்
மறாமறை நான்காய்வரு
பூதம்அவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொடு
எட்டுத்திசை தானாய்
வேறாய் உடன் ஆனான்இடம்
வீழிம்மிழ லையே.
தெளிவுரை : உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒடுங்குங்காலத்தில் அவற்றைத் தானே ஏற்று நின்று விளங்குவதால் முடிவுப் பெருளாகவும், அவ் உயிர்களை மீண்டும் தோன்றச் செய்யும் முதற் பொருளாகவும், தான் ஒருவனே ஆண் உருவிலும் பெண் உருவிலும் இரண்டாகத் தோன்றுபவனாகவும் மூன்று குணங்களாகவும், நான்கு வேதங்களாகவும், ஐந்து பூதங்களாகவும், ஆறு வகையான சுவைப் பொருளாகவும் ஏழு இசையாகவும் எட்டுத் திக்குகளாகவும் உடையவன் ஈசன். எல்லாம் தானேயாய் விளங்கும் இறைவன் அவ்வப் பொருளின் கண் இணைந்து உடனிருப்பவனாகவும், அவ்வப்பொருளில் கலவாமல் வேறாய் விளங்குபவனாகவும் இருப்பவன். அவன் வீற்றிருக்கின்ற இடமாவது திருவீழிமிழலை ஆகும்.
110. வம்மின்னடி யீர்நாள்மலர்
இட்டுத்தொழுது உய்ய
உம்மன்பினொடு எம்மன்புசெய்து
ஈசன்னுறை கோயில்
மும்மென்றுஇசை முரல்வண்டுகள்
கொண்டித்திசை எங்கும்
விம்மும்பொழில் சூழ்தண்வயல்
வீழிம்மிழ லையே.
தெளிவுரை : அடியவர் பெருமக்களே, வாருங்கள் ! புது மலர்களால் ஈசன் பாதத்தை அருச்சித்து வணங்கிப் போற்றி இவ்வுலகில் பிறவி எடுத்ததைப் பயனாக்கும் வகையில் உய்தல் வேண்டும். உமது அன்போடு எண் அன்பும் இணைந்து நிற்க விளங்கும் ஈசன் உறைகின்ற கோயில் (இடம்) திருவீழி மிழலை ஆங்கு. வண்டுகள் பூக்களில் அமர்ந்து நன்கு மலரச் செய்து இசைக்கப் பெருகி வளரும் சோலைகளும் நீர்வளம் சார்ந்த வயல்களும் உள்ளன.
111. பண்ணும்பதம் ஏழும்பல
ஓசைத்தமிழ் அவையும்
உள்நிறைதொர் சுவையும்உறு
தாளத்துஒலி பலவும்
மண்ணும்புனல் உயிரும்வரு
காற்றும்சுடர் மூன்றும்
விண்ணும்முழுது ஆனான்இடம்
வீழிம்மிழ லையே.
தெளிவுரை : இசையுடன் ஏழு சுரங்களில் எழுப்பப்படும் தமிழ்ப் பாடல் தாளத்தின் இயல்பு சேர, அப்பாடலுக்குள் பொதிந்து விளங்கும் <உயர்ந்த பொருளை உணர்ந்து மகிழும் சிறப்பும் மலர், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றுடன் சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய மூன்றும் சேர, அட்ட மூர்த்தியாக முழுமை பெற்று விளங்கும் இடம் திருவீழிமிழலை ஆகும்.
112. ஆயாதன சமயம்பல
அறியாதவன் நெறியின்
தாயானவன் உயிர்கட்குமுன்
தலையானவன் மறைமுத்
தீயானவன் சிவன்எம்இறை
செல்வத்திரு வாரூர்
மேயானவன் உறையும்இடம்
வீழிம்மிழ லையே.
தெளிவுரை : சைவத்தைத் தவிர பிற சமயங்கள் இறையுண்மையை ஆராயும் கொள்கை பொறாமையால் அவற்றால் அறியப்படாதவன். பல்வேறு சமயத்திற்கும் தோற்றுவாய் ஆகித் தாய்போல் காத்து அருள்பவன். எல்லா உயிர்களுக்கும் தோற்று வாயாக இருப்பவன். வேதத்தால் மொழியப்பெறும் மூன்று வகையான தீயாக விளங்குபவன். அத்தகையவன் எமது தெய்வமாகிய சிவபெருமான். அப்பெருமான் செல்வம் திகழும் திருவாரூரில் பொருந்தி இருப்பவன். அவன் உறையும் இடம் திருவீழி மிழலை ஆகும்.
113. கல்ஆல்நிழல் கீழாய் இடர்
காவாய்என வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன்
மறைபூட்டிநின்றுஉய்ப்ப
வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி
கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தான்இடம்
வீழிம்மிழ லையே.
தெளிவுரை : கல்லால மரத்தின் கீழிருந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்த பெருமானே ! எங்களைக் காப்பாற்றுக என்று தேவர்கள் எல்லாம் வணங்கி வேண்டி நிற்க, ஒளி திகழும் சூரிய சந்திரர்கள் தேர்சக்கரங்களாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும் திகழக் காற்றுப் போன்று வேகமாகச் செல்லும் எரிக்கும் தன்மையுடைய நெருப்பைக் கொள்ளுமாறு திருமாலாகிய அம்பினால் மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு அசுரர்களின் மூன்று கேட்டைகளையும் எரித்தான். அவனுடைய இடமாவது திருவீழிமிழலை.
114. கரத்தான்மலி சிரத்தான்கரி
உரித்தாயதொர் படத்தான்
புரத்தார்பொடி படத்தன்னடி
பணிமூவர்கட்கு ஓவா
வரத்தால்மிக அளித்தான்இடம்
வளர்புன்னைமுத்து அரும்பி
விரைத்தாதுபொன் மணிஈன்றுஅணி
வீழிம்மிழ லையே.
தெளிவுரை : ஈசன், பிரமனது ஒரு தலையைக் கையில் கபாலமாகக் கொண்டவன். யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன்; தன்னை எதிர்த்த மூன்று கோட்டைகளும் எரியுமாறு செய்து அதற்கு உள்ளிருந்து அவனுடைய திருவடியைப் பணிந்த மூவருக்கு ஓய்வில்லாத நித்தியப்பணி ஆற்றும் விதத்தில் வாயிற் காவலர் ஆகும் வரம் அளித்து வாழ்வித்தவன். அவனது இடமானது, புன்னை முத்துப் போல் அரும்பி பொன்தாதுக்களை ஈன்று அழகு சேர்க்கும் திருவீழிமிழலை ஆகும்.
115. முன்நிற்பவர் இல்லாமுரண்
அரக்கன்வட கயிலை
தன்னைப்பிடித்து எடுத்தான்முடி
தடந்தோள்இற வூன்றிப்
பின்னைப் பணிந்து ஏத்தப்பெரு
வாள்பே ரொடும் கொடுத்த
மின்னிற்பொலி சடையானிடம்
வீழிம்மிழ லையே.
தெளிவுரை : தனக்கு எதிராக முன்னிருந்து போர் புரிபவர் யாரும் இல்லாத இராவணன், ஈசன் திருஇருக்கையாகிய வடகயிலை மலையைப் பெயர்த்து (பிடித்து) எடுத்த போது, அவனுடைய அகன்ற வலிமையான தோள் துன்புறுமாறு தனது திருப்பாத விரலால் ஊன்றினான் சிவபெருமான். பின்னர் அவ் அரக்கன் பணிந்து ஏத்த, உயர்ந்த வாளும் பேரும் கொடுத்த மின் போன்று பொலியும் சடையை உடைய அப் பெருமானுடைய இடம் திருவீழிமிழலை ஆகும்.
116. பண்டுஏழ்உலகு உண்டான்அவை
கண்டானும் முன்அறியா
ஒண்தீஉரு ஆனான்உறை
கோயில்நிறை பொய்கை
வண்தாமரை மலர்மேல்மட
அன்னம்நடை பயில
வெண்தாமரை செந்தாதுஉதிர்
வீழிம்மிழ லையே.
தெளிவுரை : படைப்புத் தொழிலை உ<டைய பிரமனும், ஒருகாலத்தில் அவ் உலகங்களை உண்டு உமிழ்ந்த திருமாலும் நேரில் காண்பதற்கு அரியவனாய் சோதிப் பிழம்பாய் வடிவு கொண்ட ஈசன் உறைகின்ற கோயிலானது திருவீழிமிழலை ஆகும். அது நீர் நிறைந்த குளத்தில் வளமிக்க தாமரை மலர்மீது அன்னப் பறவை நடை பயிலவும் வெண்தாமரை செவ்விய பூந்தாதுகளைச் சிந்தவும் வளத்தைப் பெருக்கும் இயல்புடையது.
117. மசங்கல்சமண் மண்டைக்கையர்
குண்டக்குணம் இலிகள்
இசங்கும்பிறப்பு அறுத்தான்இடம்
இருந்தேன்களித்து இரைத்துப்
பசும்பொன்கிளி களிமஞ்ஞைகள்
ஒளிகொண்டுஎழு பகலோன்
விசும்பைப்பொலி விக்கும்பொழில்
வீழிம்மிழ லையே.
தெளிவுரை : மயக்கம் தரும் சொற்களைக் கூறும் சமணர்களின் சொற்களை நீக்கி, வினைவயத்தால் நேரும் பிறவித்தளை அறுத்தவனாகிய சிவபெருமான் உறையும் இடமாவது திருவீழிமிழலை ஆகும். அது, பசும்பொன் நிறமுடைய கிளிகளும், மயில்களும் விளக்கத் தேன்சொரியும் மலர்களும் குலுங்கக் கதிரவன் ஒளியைப் பெறும் உயர்ந்த சோலைகளை உடைய ஊர் ஆகும்.
118. வீழிம்மிழ லைம்மேவிய
விகிர்தன்தனை விரைசேர்
காழிந்நகர்க் கலைஞானசம்
பந்தன்தமிழ் பத்தும்
யாழின்இசை வல்லார்சொலக்
கேட்டார்அவர் எல்லாம்
ஊழின்மலி வினைபோயிட
உயர்வான்அடை வாரே.
தெளிவுரை : திருவீழிமிழலையில் பொருந்தி வீற்றிருக்கும் சிவபெருமானைப் பக்தி மணம் கமழும் சீகாழிப் பதியில் விளங்கும் ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த இனிய பதிகத்தை யாழில் அமைத்து இசையுடன் பாட வல்லவர்களும், வல்லார் சொல்லக் கேட்போரும் ஊழித்தோறும் மலிந்து துன்புறுத்தும் வினை களையப் பெற்று சிவபெருமானுடைய திருவடிப் பேற்றினை அடைந்து இன்புற்று விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
12. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம்,கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
119. மத்தாவரை நிறுவிக்கடல்
கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீள்முடிச்
சுவர்வண்ணனது இடமாம்
கொத்தார்மலர் குளிர்சந்தகில்
ஒளிர்குங்குமம் கொண்டு
முத்தாறுவந்துஅடி வீழ்தரு
முதுகுன்றுஅடை வோமே.
தெளிவுரை : மந்தர மலையை மத்தாகக் கொண்டும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டும், பாற்கடலைக் கடைந்த போது முதலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்ட, நெருப்பைப் போன்ற சிவந்த வண்ணம் உடையவனாகிய சிவபெருமானுடைய இடம் திருமுதுகுன்றம் ஆகும். ஆங்கு, மலர்க் கொத்துகளும் குளிர்ந்த சந்தனம், அகில் ஒளிரும் குங்குமப் பூ ஆகியவற்றைக் கொண்டு முத்தாறு மகிழ்ச்சியுடன் ஈசன் திருவடியை வணங்குகிறது. அத்தகைய சிறப்புடைய பதியை அடைந்து இறைவனைத் துதிப்போமாக.
120. தழைஆர்வட வியவீதனில்
தவமேபுரி சைவன்
இழைஆர்இடை மடவாளொடும்
இனிதாஉறை இடமாம்
மழைவான்இடை மழுவஅவ்எழில்
வாளைவாள்உகிர் எரிகண்
முழைவாள்அரி குமிறும்உயர்
முதுகுன்றுஅடை வோமே.
தெளிவுரை : தழைகள் நிறைந்த ஆல மர நிழலில் யோகீஸ்வரனாக இருந்து தவக்கோலத்தில் விளங்கும் சிவபெருமான், மெல்லிய இடையை உடைய உமாதேவியோடு இனிதாய் உறையும் இடமானது, மேகத்தில் இடி முழக்கம் நிகழ அவ்வொலியானது குகையில் இருக்கும் சிங்கத்தையும் கர்ச்சிக்குமாறு செய்யவல்ல திருமுதுகுன்றம் ஆகும். அங்கு சென்று இறைவனை வணங்கித் துதிப்போமாக.
121. விளையாததொர் பரிசில்வரு
பசுபாசவே தனைஒண்
தளையாயின தவிரவ்வரு
தலைவன்அது சார்பாம்
களையார்தரு கதிர்ஆயிரம்
<உடையவ்வவ னோடு
முளைமாமதி தவழும்முயர்
முதுகுன்றுஅடை வோமே
தெளிவுரை : உயிரானது பாசத்தால் கட்டப்பட்டுத் துன்பத்தில் ஆழ்தலை மீண்டும் விளையாதவாறு தவிர்க்கும் ஒளிமயமான தலைவனாகிய ஈசன் சார்ந்த இடமாவது, ஆயிரம் கதிர்களையுடைய சூரியனோடு பிறைச் சந்திரனும் தவழும் திருமுதுகுன்றம் ஆகும். அப்பதியை அடைந்து இறைவனைத் துதிப்போமாக.
122. சுரர்மாதவர் தொகுகின்னரர்
அவரோதொலை வில்லா
நரர்ஆனபல் முனிவர்தொழ
இருந்தான்இடம் நலமார்
அரசார்வர அணிபொற்கலன்
அவைகொண்டுபன் னாளும்
முரசார்வரு மணமொய்ம்புடை
முதுகுன்றுஅடை வோமே.
தெளிவுரை : தேவர்களும், தவசிகளும், கின்னரர் முதலானோரும், மக்கள் பிறவி யுடைய பல முனிவர்களும் தொழுமாறு வீற்றிருக்கும் இடமாவது திருமுதுகுன்றம். அது நலம் திகழும் அரசாட்சியை நல்கும் மன்னர்கள் பொன்னாலான அணிகலன்களைக் கொண்டு முரசு ஒலி ஆர்க்க வரும் சிறப்புடையது. அங்கு அடைந்து இறைவனைத் துதிப்போமாக.
123. அறையார்கழல் அந்தன்தனை
அயில்மூவிலை அழகார்
கறையார்நெடு வேலின்மிசை
ஏற்றான்இடம் கருதில்
முறையாயின பலசொல்லிஒண்
மலர்சாந்துஅவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழு
முதுகுன்றுஅடை வோமே.
தெளிவுரை : அந்தகாசுரன் தேவர்களைத் துன்புறுத்திய காலத்தில், தேவர்களுடைய வேண்டுகோளின்படி சிவபெருமான் பைரவமூர்த்தியை ஏவ, அப்பெருமான் முத்தலைச் சூலத்தால் அவ் அசுரனை மாய்த்தான். அவ்வாறு யாவராலும் போற்றித் துதி செய்யுமாறு உள்ள திருவடியை உடைய ஈசன் இடமாவது. திருமுதுகுன்றம் ஆகும். முறையாக ஓதும் வேதத்தால் பரவிப் பூக்களாலும் சந்தனம் முதலான வாசனைப் பொருள்களாலும் பூசை நடத்தி, அங்கு முறைப்படி முனிவர்கள் வணங்குகின்றனர். அத்தகைய இடத்தை அடைந்து ஈசனைத் துதிப்போமாக.
124. ஏவார்சிலை எயினன்னுரு
வாகிஎழில் விசயற்கு
ஓவாதஇன் னருள்செய்தஎம்
ஒருவற்குஇடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர்
தவமேமிக உடையார்
மூவாதபல் முனிவர்தொழு
முதுகுன்றுஅடை வோமே.
தெளிவுரை : வில்லும் அம்பும் ஏந்திய வேடன் உருவில் வந்து எழில் மிக்க அர்ச்சுனருக்கு எப்போதும் நிலைத்திருக்குமாறு அருள் செய்த எமது நாதனாகிய ஈசனுக்குரிய இடமானது உலகில் இறப்பில்லாதவர்களும் மீண்டும் பிறப்புக்கான வினையைக் கொள்ளாதவர்களும் ஆகிய மிகுந்த தவத்தை உடையவர்களும், இளமை நீங்காத பல முனிவர்களும் தொழுது போற்றும் திருமுதுகுன்றம் ஆகும். அங்குச் சென்று இறைவனை வணங்குவோமாக.
125. தழல்சேர்தரு திருமேனியர்
சசிசேர்சடை முடியர்
மழமால்விடை மிகஏறிய
மறையோன்உறை கோயில்
விழவோடுஒலி மிகுமங்கையர்
தகும்ஆடக சாலை
மழுவோடுஇசை நடமுன்செயு
முதுகுன்றுஅடை வோமே.
தெளிவுரை : தழல்போன்ற சிவந்த திருமேனியை உடையவர்; சந்திரனைச் சடைமுடியில் சூடியவர்; பெரிய இடபத்தின்மேல் ஏறிய மறையோன்; அவன் உறையும் இடமானது விழாக்கள் நடத்தியும், காலில் சலங்கை பூட்டி நடனம் புரியும் நடன சாலைகளும் முழவோசையும் இசைப்பாடலின் ஓசையும் முற்படும் திருமுதுகுன்றம் ஆகும். ஆங்கு சார்ந்து இறைவனைத் துதிப்போமாக.
126. செதுவாய்மைகள் கருதிவ்வரை
எடுத்ததிறல் அரக்கன்
கதுவாய்கள்பத்து அலறீஇடக்
கண்டான்உறை கோயில்
மதுவாயசெங் காந்தள்மலர்
நிறையக் குறை வில்லா
முதுவேய்கண்முத்து உதிரும்பொழில்
முதுகுன்றுஅடை வோமே.
தெளிவுரை : தனது வலிமையைத் தவறுதலாகக் கணித்துக் கயிலையை எடுத்த அரக்கனின் தாடைகள் பத்தும் அலறும்படி செய்த சிவபெருமான் உறையும் கோயிலானது. செங்காந்தன் மலர்கள் தேனைச் சொரியவும், மூங்கில்கள் முத்துக்களை உதிர்க்கவும் விளங்கும் சோலைகளையுடைய திருமுதுகுன்றம் ஆகும். அதனை அடைந்து துதிப்போமாக.
127. இயலாடிய பிரமன்னரி
இருவர்க்குஅறி வரிய
செயலாடிய தீயார்உரு
வாகிஎழு செல்வன்
புயல்ஆடுவண் பொழில்சூழ்புனல்
படப்பைத்தடத் தருகே
முயல்ஓடவெண் கயல்பாய்தரு
முதுகுன்றுஅடை வோமே.
தெளிவுரை : தமக்குள் உயர்ந்தவர் என்று தற்பெருமை கூறிய பிரமன், திருமால் ஆகிய இருவரும் அறிந்து கொள்வதற்கு அரியவனாய் நெருப்புப் பிழம்பாய் உருவாகி எழுந்த செல்வன், மேகம் பரவும் சோலைகளும் நீர்பரப்புகளும் கயல்பாயும் வயல்களும் திகழும் திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி இருக்க ஆங்கு சென்றடைந்து துதிப்போமாக.
128. அருகரொடு புத்தர்அவர்
அறியாஅரன் மலையான்
மருகன்வரும் இடபக்கொடி
உடையான் இடம்அலர்ஆர்
கருகுகுழல் மடவார்கடி
குறிஞ்சிஅது பாடி
முருகன்னது பெருமைபகர்
முதுகுன்றுஅடை வோமே.
தெளிவுரை : சமணரும் பௌத்த மதத்தினரும் அரனை அறியார். ஈசன், இமவான் மருகன், இடபக் கொடியை உடையவன். அவனுடைய இடமாவது, மலர் சூடிய கருங்கூந்தலை யுடைய பெண்கள் குறிஞ்சிப்பண் இசைத்து முருகனது பெருமையைப் புகலும் திருமுதுகுன்றம் ஆகும். அப்பதியை அடைந்து இறைவனைத் துதிப்போமாக.
129. முகில்சேர்தரு முதுகுன்றுடை
யானைம்மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞானசம்
பந்தனுரை செய்த
நிகரில்லா தமிழ்மாலைகள்
இசையோடுஇவை பத்தும்
பகரும்மடி யவர்கட்கு இடர்
பாவம்மடை யாவே.
தெளிவுரை : முகில் பொருந்தி விளங்கும் திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியுள்ள ஈசனை மிகப் பழமை பொருந்திய சிறப்புடைய புகலி நகரின் ஞானசம்பந்தப் பெருமான் உரைசெய்த நிகரில்லாத இந்தத் திருப்பதிகத்தை இடையோடு கூறும் அடியவர்களுக்குத் துன்பமும் இல்லை பாவமும் அணுகாது.
திருச்சிற்றம்பலம்
13. திருவியலூர் (அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
130. குரவம்கமழ் நறுமென்குழல்
அரிவையவள் வெருவப்
பொருவெங்கரி படவென்றதன்
உரிவைஉடல் அணிவோன்
அரவும்மலை புனலும்மிள
மதியும்நகு தலையும்
விரவும்சடை அடிகட்குஇடம்
விரிநீர்விய <லூரே.
தெளிவுரை : குரவம் என்னும் மலரின் மணம் கமழும் கூந்தலை உடைய உமாதேவி நடுங்குமாறு, யானையின் முகத்தைக் கிழித்து அதன் தோலை உரித்துப் போர்வையாய் அணிபவனாகிய சிவபெருமான், நாகம், கங்கை, இளைய பிறைச் சந்திரன் மற்றும் வெண்மையான மண்டை ஓடும் கொண்டுள்ளவன். அவனுடைய சடைமுடி பரந்துள்ளது. அத்தகைய அடிகளுக்கு உரிய இடமாக உ<ள்ளது நீர்வளம் மிக்க திருவியலூர்.
131. ஏறுஆர்தரும் ஒருவன்பல
உருவன்நிலை ஆனான்
ஆறுஆர்தரு சடையன்அனல்
உருவன்புரி உ<டையான்
மாறுஆர்புரம் எரியச்சிலை
வளைவித்தவன் மடவாள்
வீறுஆர்தர நின்றான் இடம்
விரிநீர்விய லூரே.
தெளிவுரை : இடப வாகனத்தில் அமர்ந்து காட்சி நல்கும் ஒப்பற்றவன்; பல வடிவங்களை உடையவன்; கங்கையைச் சடையில் கொண்டவன்; தீவண்ணம் போன்று சிவந்த திருமேனி உடையவன்; என்றும் நிலைத்து இருப்பவன்; அன்புடையவன்; நன்னெறியிலிருந்து மாறுபட்டு நின்ற மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரியுமாறு செய்தவன்; உமாதேவி பெருமையுடன் மகிழுமாறு விளங்கி நின்றவன்; அப்பெருமையுடன் மகிழுமாறு விளங்கி நின்றவன்; அப் பெருமானின் இடமாக உள்ளது நீர்வளம் மிக்க திருவியலூர் ஆகும்.
132. செம்மென்சடை அவைதாழ்வுற
மடவார்மனை தோறும்
பெய்ம்மின்பலி எனநின்றுஇசை
பகர்வார்அவர் இடமாம்
உம்மென்றுஎழும் அருவித்திரள்
வரைபற்றிட உரைமேல்
விம்மும்பொழில் கெழுவும்வயல்
விரிநீர்விய லூரே.
தெளிவுரை : செம்மையான மெல்லிய சடையுடன் அழகிய தோற்றம் கொண்டு தாருகாவனத்து முனிவர் தம் மனைகள்தோறும் சென்று பிட்சை ஏற்கும் சிவபெருமானுடைய இடமாவது, நீர்மல்கு சோலைகளும் மூங்கில்களும் வயல்களும் மருவித் திகழும் திருவியலூர் ஆகும்.
133. அடைவுஆகிய அடியார்தொழ
அலரோன்தலை யதனில்
மடவார்இடு பலிவந்துஉணல்
உடையான்அவன் இடமாம்
கடையார்தர அகில்ஆர்கழை
முத்தம் நிரைசிந்தி
மிடைஆர்பொழில் புடைசூழ்தரு
விரிநீர்விய <லூரே.
தெளிவுரை : புகலிடமாக அடியவர்கள் எல்லாம் தொழுது போற்ற, பிரமன் தலையைத் திரு ஓடாகத் தன் கரத்தில் ஏந்தி, தாருகாவனத்தில் உள்ள முனிவர்களின் பத்தினிப் பெண்களிடம் பிச்சை ஏற்றவன் சிவபெருமான். அவனுடைய இடமாவது அகிலும் மூங்கில்களிலிருந்து தோன்றிய முத்துக்களும் கடைவீதிகளில் பொலிந்து விளங்கும், செறிந்த பொழிலைச் சூழ்ந்த நீர் வளம் மிக்க திருவியலூர் ஆகும்.
134. எண்ணார்தரு பயனாய்அயன்
அவனாய்மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாய்உயர்
பொருளாய்இறை யவனாய்க்
கண்ணார்தரும் உருவாகிய
கடவுள்ளிடம் எனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழும்
விரிநீர்விய லூரே.
தெளிவுரை : நினைப்பவர்தம் எண்ணத்தில் பொருந்தும் பயனாகவும், படைப்புத் தொழில் புரிபவனாகவும், மிகுந்த ஞானமாகவும், இசையில் விளங்கும் வேதமாகவும், உயர்ந்த பேற்றைத் தரும் இறைவனாகவும். காட்சிக்கு இனிமை தரும் வடிவப் பொருளாகவும் உடைய கடவுளிடம் இடம், தேவர்களுடன் மண்ணுலகத்தவரும் தொழுது வணங்கும் நீர்வளம் மிக்க வியலூர் எனப்படுவதாகும்.
135. வசைவில்கொடு வருவேடுவன்
அவனாய்நிலை அறிவான்
திசைஉற்றவர் காணச்செரு
மலைவான் நிலைஅவனை
அசையப்பொருது அசையாவணம்
அவனுக்குயர் படைகள்
விசையற்குஅருள் செய்தான்இடம்
விரிநீர்விய லூரே.
தெளிவுரை : வளைந்து தோன்றும் வேடுவத் திருக்கோலத்தில் வந்து விசயனிடம் எல்லோரும் காணுமாறு போர் செய்து, பின்னர் அவனுக்குச் சிறப்பான படைக்கலன்களை அருள் செய்தவனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமானது, நீர்வளம் மிக்க வியலூர் ஆகும்.
136. மான்ஆர்அரவு உடையான்இரவு
உடையான்பகல் நட்டம்
ஊனார்தரும் உயிரான்உயர்
விசையான் விளை பெருள்கள்
தானாகிய தலைவன்னென
நினைவார்அவர் இடமாம்
மேல்நாடிய விண்ணோர்தொழும்
விரிநீர்விய லூரே.
தெளிவுரை : மானையும் அழகிய பாம்பையும் <உடையவன்; இரத்தல் தொழிலைக் கொண்டு பிச்சை ஏற்பவன்; நடனம் ஆடுபவன்; உடலின்கண் பரவி இருக்கும் உயிராவன்; உயர்வாக நினைத்துப் போற்றுபவர்கள்பால் இசைவுடன் விளங்குபவன், தோன்றும் பொருள் யாவற்றிலும் தானேயாய் இருந்து செய்பவன்; அத்தகைய முதன்மையானவன் என்று நினைக்கப்படும் ஈசன், விளங்கும் இடமாவது தேவர்கள் தொழுது போற்றும் நீர் வளம் மிக்க வியலூர் ஆகும்.
137. பொருவார்எனக்கு எதிர்ஆர்எனப்
பொருப்பை எடுத்தான்தன்
கருமால்வரை கரம்தோள்உரம்
கதிர்நீள்முடி நெரிந்து
சிரமாயின கதறச்செறி
கழல்சேர்திரு வடியின்
விரலால்அடர் வித்தான்இடம்
விரிநீர்விய <லூரே.
தெளிவுரை : தன்னை எதிர்த்துப் போர் புரிய யாரும இல்லை என்னும் அகந்தையால் கயிலையை எடுத்தான் இராவணன். அவனுடைய மலைபோன்ற தோள்களும். கரங்களும் ஒளி வீசும் கிரீடம் நெரிதலால் தலைகளும் துன்புறுமாறு, தனது வீரக் கழலணிந்த திருப்பாத விரலால் அம் மலையை அழுத்தித் தண்டனை செய்தான். அப்பெருமான் விளங்கும் இடம். நீர்வளம் மிக்க வியலூர் ஆகும்.
138. வளம்பட்டுஅலர் மலர்மேல்அயன்
மாலும்மொரு வகையால்
அளம்பட்டுஅறிவு ஒண்ணாவகை
அழலாகிய அண்ணல்
உளம்பட்டுஎழு தழல்தூணதன்
நடுவேஒரு உருவம்
விளம்பட்டுஅருள் செய்தான்இடம்
விரிநீர்விய லூரே.
தெளிவுரை : வளமான பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கும் திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும். அத்திருமாலும் ஈசனைக் காண் வேண்டும் என முற்பட்டு அது இயலாமையால் அயர்ந்து இருக்க, அறியவொண்ணாதபடி பேரழல் ஆகித் தோன்றினான் அப்பெருமான். பின்னர் அந்நெருப்புப் பிழம்பின் நடுவில் ஒப்பற்ற திருக்காட்சியை நல்கிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம், நீர்வளம் மிக்கவியலூர் ஆகும்.
139. தடுக்கால் உடல் மறைப்பார்அவர்
தவர்சீவர மூடிப்
பிடக்கேஉரை செய்வாரொடு
பேணார்நமர் பெரியோர்
கடல்சேர்தரு விடம்உண்டுஅமுது
அமரர்க்கு அருள் செய்த
விடைசேர்தரு கொடியான்இடம்
விரிநீர்விய லூரே.
தெளிவுரை : மரவுரியை ஆடையாக உடையவர்கள், பிடகத்திலிருந்து உரைப்பவர்கள் ஆகியவர்களைப் பெரியோர்கள் போற்றமாட்டார்கள். கடலில் தோன்றிய விடத்தை தான் அருந்தி, அமுதத்தைத் தேவர்களுக்கு அளித்து அவர்கள் நீண்ட காலம் வாழுமாறு அருள் செய்த இடபக் கெடியுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம், நீர்வளம் மிக்க வியலூர் ஆகும்.
140. விளங்கும் பிறை சடைமேல்உடை
விகிர்தன்விய லூரைத்
தளங்கொண்டதொர் புகலித்தகு
தமிழ்ஞானசம் பந்தன்
துளங்குஇல்தமிழ் பரவித்தொழும்
அடியார்அவர் என்றும்
விளங்கும்புகழ் அதனோடுஉயர்
விண்ணும்முடை யாரே.
தெளிவுரை : விளங்குகின்ற வெண்பிறைச் சந்திரனைச் சடையின் மீது தரித்துள்ள ஈசன், விகிர்தன். அப்பெருமான் வியலூரை இருப்பிடமாகக் கொண்டுள்ளதை ஞானசம்பந்தப் பெருமான் இசைத்த தமிழ்ப் பதிகமாகிய இப் பத்துப் பாடல்களையும் இசைத்து இறைவனை வணங்குபவர்கள், இம்மையில் செல்வமும் புகழும் சேர நலங்கள் யாவும் பெற்று தேவலோகச் சிறப்புகளையும் <உடையவராவர்.
திருச்சிற்றம்பலம்
14. திருக்கொடுங்குன்றம் (அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
141. வானில்பொலி வெய்தும்மழை
மேகம்கிழித்து ஓடிக்
கூனல்பிறை சேரும்குளிர்
சாரல்கொடுங் குன்றம்
ஆனில்பொலி ஐந்தும்அமர்ந்து
ஆடிஉலகு ஏத்தத்
தேனில்பொலி மொழியாளொடு
மேயான்திரு நகரே.
தெளிவுரை : வானத்தில் திகழும் மழை மேகம் குளிர்ந்த மழையைப் பொழிய விளங்கும் கொடுங்குன்றத்தில் பசுவிலிருந்து தோன்றும் ஐந்து பூசைப் பொருள்களையும் விரும்பி ஏற்று மகிழ்ந்து உமாதேவியோடு அந்நகரில் இருப்பவன் ஈசன்.
142. மயில்புல்குதண் பெடையோடுஉடன்
ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடும்குளிர்
சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர்
அனல்ஏந்திநின்று ஆடி
எயில்முன்பட எய்தான்அவன்
மேய்வஎழில் நகரே.
தெளிவுரை : ஆண் மயில் பெண் மயிலோடு சேர்ந்து ஆடவும், குயிலின் இசை பாடவும் உள்ள குளிர்ச்சி பொருந்திய சோலை <உடையது கொடுங்குன்றம். கூர்மையான வேலை மிக்க நெடிய வெஞ்சுடர் போன்ற நெருப்பைக் கரத்தில் ஏந்தி நின்று தாண்டவம் செய்து மூன்று கோட்டைகளை அழியுமாறு செய்த சிவபெருமான் இருப்பது அந்த எழில் நகர் ஆகும்.
143. மிளிரும்மணி பைம்பொன்னொடு
விரைமாமலர் உந்திக்
குளிரும்புனல் பாயும்குளிர்
சாரல்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொடு இளவெண்மதி
கெழுவும்சடை தன்மேல்
வளர்கென்றையு மதமத்தமும்
வைத்தான்வள நகரே.
தெளிவுரை : பிரகாசம் உடைய மாணிக்க மணிகளும், பொன்னும், நறுமணம் கமழும் மலர்களும் முற்பட நீர் பெருகும் குளிர்ந்த சாரலை உடையது கொடுங்குன்றம். அது கங்கையுடன் பிறை மதியும் நட்புடன் பொருந்தி இருக்குமாறு செய்து. கொன்றை மலரும் ஊமத்தை மலரும் சேரத் தன் சடையில் வைத்த ஈசனுடைய வளமையான நகர் ஆகும்.
144. பருமாமதி கரியோடுஅரி
இழியும்வரி சாரல்
குருமாமணி பொன்னோடுஇழி
அருவிக் கொடுங் குன்றம்
பெருமாஎயில் வரைவில்தரு
கணையில்பொடி செய்த
பெருமான்அவன் உ<மையாளொடு
மேவும்பெரு நகரே.
தெளிவுரை : பெருத்த மதம் பொருந்திய யானையும் சிங்கமும் உலவ, ஒளிமிக்க மணிகளும் பொன்னும் கொழிக்கும் அருவியைக் கொண்டது கொடுங்குன்றம். அது, போர் செய்த மூன்று கோட்டைகளை மேருமலையை வில்லாகக் கொண்டு எய்த கணையால் பொடி படுத்திய சிவபெருமான் உமாதேவியோடு விரும்பி இருக்கும் பெருமையான நகர் ஆகும்.
145. மேகத்துஇடி குரல்வந்துஎழ
வெருவில்வரை இழியும்
கூகைக்குலம் ஓடித்திரி
சாரல்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை
சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ
மேவும்பழ நகரே.
தெளிவுரை : மேகத்தில் முழங்கும் இடியோசை கேட்டு இருள் வாழ்க்கையுடைய கூகை (கோட்டான்) கள்பரந்து திரியும் தன்மை கொண்டது கொடுங்குன்றம். பாம்பும், பிறைச்சந்திரனும் சூடி உமாதேவியை இடப்பாகமாக உ<டைய பரமன், தேவர்கள் தொழப் பொருந்தி இருப்பது இப் பழநகர் ஆகும்.
146. கைம்மாமத கரியின்னினம்
இடியின்குரல் அதிரக்
கொய்ம்மாமலர்ச் சோலைபுக
மண்டும்கொடுங் குன்றம்
அம்மான்என உள்கித் தொழு
வார்கட்கருள் செய்யும்
பெம்மான்அவன் இமையோர்தொழ
மேவும்பெரு நகரே.
தெளிவுரை : யானையானது தனது இனமாக உள்ள மற்ற யானைகளின் இடி முழக்கம் போன்ற ஓசையைக் கேட்டு அவை நிலவும் மலர்ச் சோலசைகளைச் சாரும் பாங்குடையது கொடுங்குன்றம். அது, தந்தை என்றும், கடவுள் என்றும் கருதித் தொழுபவர்களுக்கு அருள் புரியும் பெருமான் மேவும் பெருமை மிக்க நகர் ஆகும்.
147. மரவத்தொடு மணமாதவி
மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில்
சூழ்தண் கொடுங்குன்றம்
அரவத்தொடும் இளவெண்பிறை
விரவும்மலர்க் கொன்றை
நிரவச் சடை முடிமேல் உடன்
வைத்தான்நெடு நகரே.
தெளிவுரை : மணம் தரும் வெண்கடம்பு, கருக்கத்தி, முல்லை மற்றும் அதனின் மிக்க குரவம் ஆகிய மலர்களையுடைய பொழில் சூழ்ந்தது குளிர்ச்சி மிக்க கொடுங்குன்றம். அது, பாம்பும், பிறைமதியும் கொன்றை மலரும் நிரவச் சடைமுடியின் சேர வைத்தவனாகிய ஈசனது நகராகும்.
148. முட்டாமுது கரியின்னின்
முதுவேய்களை முனிந்து
குட்டாச்சுனை அவைமண்டிநின்று
ஆடும்கொடுங் குன்றம்
ஒட்டாஅரக் கன்தன்முடி
ஒருபஃதுஅவை உடனே
பிட்டான்அவன் உமையாளொடு
மேவும்பொரு நகரே.
தெளிவுரை : யாராலும் தடுத்து நிறுத்துவதற்கு அரிய யானைக் கூட்டங்கள் முற்றிய மூங்கில்களை முறித்து, இயல்பாகவே ஆழம் உடைய சுனை நீரில் நின்று ஆடி மகிழும் தன்மை கொண்டது, கொடுங்குன்றம். அது, அன்பில்லாத அரக்கனான் இராவணனுடைய பத்துத் தலைகளையும் ஒடியுமாறு தெய்தவனான பரமன் உமாதேவியோடு மேவி விளங்கும் பெருமையான நகர் ஆகும்.
149. அறையும்மரி குரல்ஓசையை
அஞ்சி அடும்ஆனை
குறையும் மன மாகிம்முழை
வைகும்கெடுங் குன்றம்
மறையும்மவை உ<டையான்என
நெடியான்என இவர்கள்
இறையும்மறி வொண்ணாதவன்
மேயவ்வெழில் நகரே.
தெளிவுரை : வீறுகொண்டு அறைந்து கொல்லும் இயல்புடைய சிங்கம். அதன் குரலைக் கேட்டு அஞ்சிப் போராடும் தன்மையுடைய யானை, ஆகிய இருவகை விலங்குகளும் தமது இயல்பிலிருந்து மாறுபட்டுக் கொல்லுதலும் அஞ்சுதலும் ஆகிய குணத்தை நீக்கித் தத்தம் இடத்தில் வாழும் நெறியை உடையது கொடுங்குன்றம். அது, ஓதப்பெறும் வேதத்தை உடையவனாகிய பிரமனும், <உலகத்தை அளப்பதற்காக நெடிய உருவம் கொண்ட திருமாலும் சிறிதளவும் அறிய வொண்ணாதவனாகிய சிவபெருமான் விளங்கும் எழில் மிக்க நகர் ஆகும்.
150.மத்தக்களிறு ஆளில்வர
அஞ்சிம்மலை தன்னைக்
குத்திப்பெரு முழைதன்னிடை
வைகும்கொடுங் குன்றம்
புத்தரொடு பொல்லாமனச்
சமணர்புறம் கூறப்
புத்தர்க்கு அருள் செய்தான் அவன்
மேயபழ நகரே.
தெளிவுரை : மதம் பொருந்திய யானையும் யானியும் தமது இருப்பிடத்திலிருந்து வெளியே வருவதற்கு அச்சம் கொண்டு வாழும் தன்மையுடையது கொடுங்குன்றம். அது, பௌத்த சமண மதத்தினர் புறம்பாகக் கூறினும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கு வேண்டியவாறு அருள்செய்த ஈசன் விளங்கும் பழமையான நகர் ஆகும்.
151. கூனல்பிறை சடைமேல்மிக
உடையான்கொடுங் குன்றைக்
கானல்கழு மலமாநகர்
தலைவன்னல கவுணி
ஞனாத்துஉயர் சம்பந்தன
நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துஉலகு
ஏத்தும்எழி லோரே.
தெளிவுரை : வளைந்த பிறைச் சந்திரனைச் சடை மீது பெருமையாகத் தரித்துள்ளவனாகிய சிவபெருமானுக்கு உரிமையானது கொடுங்குன்றம். அதனை ஞானசம்பந்தப்பெருமான் நலங்கொள் தமிழாகத் தந்தருள, இப்பதிகத்தைப் பாடிப் போற்றுபவர்களின் குறைபாடுகள் யாவும் தீர்ந்து விலகும்; துன்பம் தீரும்; உலகத்தவர் பாராட்டும் சிறப்பையும் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
15. திருநெய்த்தானம் (அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
152. மையாடிய கண்டன்மலை
மகள்பாகமது உடையான்
கையாடிய கேடில்கரி
உரிமூடிய ஒருவன்
செய்யாடிய குவளைம்மலர்
நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமான்இடம்
நெய்த்தானம்எ னீரே.
தெளிவுரை : கரிய கண்டத்தை (கழுத்து) உடையவன். மலைமகளாகிய உமாதேவியைப் பாகமாக உடையவன்; தனது திருக்கரத்தால் யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட ஒப்பற்றவன்; நீர்வளம் மிக்க வயல்களில் திகழும் குவளை மலர் போன்ற விழியை உடைய தேவியோடு தானும் நெய்யால் அபிடேகம் கொள்பவன். அப்பெருமானுடைய இடமாவது நெய்த்தானம் ஆகும். அதனை உரைப்பீராக.
153. பறையும்பழி பாவம்படு
துயரம்பல தீரும்
பிறையும்புனல் அரவம்படு
சடைஎம்பெரு மான்ஊர்
அறையும்புனல் வருகாவிரி
அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில்
நெய்த்தானம்எ னீரே.
தெளிவுரை : தன்பால் உண்டான பழி நீங்கும்; பாவம் மற்றும் அதனால் நேரும் துன்பமும் தீரும். சடை முடியில் வெண்மையான பிறைச்சந்திரனும், கங்கையும், அரவும் (பாம்பும்) உடைய எமது பெருமானாகிய ஈசனது ஊரானது, காவிரியின் வடகரை மேல் நிறைந்த மாண்பினை உடைய மகளிர் விளங்கும் நெய்த்தானம் ஆகும். அதனை உரைப்பீராக.
154. பேயாயின பாடப்பெரு
நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு
பாகம்மிக உடையான்
தாயாகிய உலகங்களை
நிலைபேறுசெய் தலைவன்.
நேயாடிய பெருமான்இடம்
நெய்த்தானம்எ னீரே.
தெளிவுரை : பேயானது பாடிட, மகாபிரளயக் காலத்தில் நடனமாடும் சிவபெருமான், மூங்கில் போன்ற மெல்லிய தேளையுடைய உமாதேவிக்குத் தானே ஒரு பாகம் ஆனவன். எல்லா உலகங்களையும் அப்பெருமானுடைய இடம் நெய்த்தானம் என்று <உரைப்பீராக.
155. சுடுநீறணி அண்ணல்சுடல்
சூலம்மனல் ஏந்தி
நடுநள்ளிருள் நடமாடிய
நம்பன்னுறை இடமாம்
கடுவாள்இள அரவாடுஉமிழ்
கடல்நஞ் சம்அதுஉண்டான
நெடுவாளைகள் குதிகொள்ளு யர்
நெய்த்தானம்எ னீரே.
தெளிவுரை : சுடுதலால் தோன்றும் தீருநீற்றை அணியும் அண்ணல், ஒளி திகழும் சூலமும் நெருப்பும் திருக்கரத்தில் ஏந்தி நள்ளிருளில் நடமாடும் சிவபெருமான் ஆகும். அப்பெருமான் உறைகின்ற இடமாவது, அரவாகிய வாசுகி என்னும் பாம்பைத் கயிறாகக் கொண்டு ஆட்டிக் கடையும்போது உமிழ்ந்த கொடிய நஞ்சினை உண்டு விளங்கும் நெய்த்தானம் ஆகும். அதனை உரைப்பீராக.
156. நுகர்ஆரமொடு ஏலம்மணி
செம்பொன்னுரை உந்திப்
பகராவரு புனல்காவிரி
பரவிப் பணிந்து ஏத்தும்
நிகரால் மணல் இடுதண்கரை
நிகழ்வாயநெயத் தான
நகரான்அடி யேத்தந்தமை
நடைலயடை யாவே.
தெளிவுரை : நுகரும் மணம் மிக்க சந்தனம். ஏலம், மணிகள், பொன் ஆகியவற்றைப் பெருகும் நுரையால் உந்தி வரும் வெள்ளப் பெருக்கினை உடைய காவிரியானது. பணிந்து போற்றும் தன்மையில் மணலைக் கரை மருங்கில் சேர்க்கின்றது. அத்தகைய பெருமையுடைய நெய்த்தானத்திற்கு உரியவனாகிய ஈசன் திருவடியை வணங்கித் துதிக்கத் துன்பம் நம்மை அடையாது.
157. விடையார்கொடி உடையல்வணல்
வீந்தார்வெளை எலும்பும்
உடையார்நறு மாலைசடை
உடையார்அவர் மேய
புடையேபுனல் பாயும்வயல்
பொழில்சூழ்ந்தநெய்த் தானம்
அடையாதவர் என்றும்அமர்
உலகம்அடை யாரே.
தெளிவுரை : இடபக் கொவியை உடையவரும், எலும்பையும் கொன்றை மலரையும் மாலையாகக் கொண்டவரும் சடை முடியுடையவரும் ஆகிய ஈசன் விளங்கி நிற்கும் இடமாவது, பெருக்கெடுத்துப் பாயும் நீர்நிலைகளும் வயல்களும் சோலைகளும் சூழ்ந்த எக்காலத்திலும் அமர்ந்து விளங்கும் உலகமாகிய வீட்டு உலகத்தை அடைய மாட்டார்கள்.
158. நிழல்ஆர்வயல் கமழ்சோலைகள்
நிறைகின்றநெய்த் தானத்
தழலானவன் அனல்அங்கையில்
ஏந்திஅழ காய
கழலான்அடி நாளும்கழ
லாதேவிடல் இன்றித்
தொழலார்அவர் நாளும்துயர்
இன்றித்தொழு வாரே.
தெளிவுரை : கண்களுக்குக் குளிர்ச்சியான ஒளியைத் தருமாறு ஓங்கி வளர்ந்த வயல்களும், மணங் கமழும் சோலைகளும் நிறைகின்ற நெய்த்தானம் என்னும் நகருக்குரிய சோதியாக இருப்பவனான் சிவபெருமான் அழகிய திருக்கரத்தில் நெருப்பினை ஏந்தியவன். அப்பெருமானின் அழகிய திருவடியை நாள்தோறும் முறையாகத் தொழும் இயல்பினை உடையவர்கள் எந்நாளும் துயரின்றி மகிழ்ச்சியுடன் திகழ்வார்கள். அத்தகைய பெருமை மிக்க அடியவர்கள் ஏனையோராலும் தொழப்படும் சிறப்பு உடையவராவர்.
159. அறையார்கடல் இலங்கைக்கு இறை
அணிசேர்கயி லாயம்
இறையாரமுன் எடுத்தான்இரு
பதுதோள்இற ஊன்றி
நிறைஆர்புனல் நெய்த்தானனன்
நிகழ்சேவடி பரவக்
கறைஆர்கதிர் வாள்ஈந்தவர்
கழல்ஏத்துதல் கதியே.
தெளிவுரை : ஒலிக்கும் கடல் சூழ்ந்த இலங்கையின் வேந்தனான் இராவணன், பெருமை மிக்க கயிலைமலையைத் தனது உடல் பலத்தின் காரணமாகத் கையார முன்னர் எடுத்தான். அவனது இருபது தோள்ளும் நலியுமாறு தன் திருப்பாத விரலால் ஊன்றினான், நீறைவான நீர் வளம் கொண்ட நெய்த்தானத்தில் விளங்கும் சிவபெருமான். தமது செம்மையான திருவடியைப் போற்றி வணங்கி அவ் அரக்கனுக்கு சந்திகாசம் என்னும் வாளை ஈந்து அருள் புரிந்தவர். அப்பெருமான் அவர்தம் திருவடி மலர ஏத்துதல் நல்ல கதியாகும்.
160. கோலம்முடி நெடுமாலொடு
கொய்தாமரை யானும்
சீலம்மறி வரிதாய்ஒளி
திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீர்அவை
தூவித்தொழுது ஏத்தும்
ஞாலம்புகழ் அடியார்உடல்
உறுநோய்நலி யாவே.
தெளிவுரை : பன்றி வடிவத்தைத் தாங்கிய திருமாலும், தாமரை மலர்மீது உறையும் பிரமனும், சிவபெருமானுடைய பெருமையை அறிதற்கு அரியதாகிய பேரொளியாகத் திகழும் பெருமான் விளங்குவது நெய்த்தானம். விடியற்காலையில் மலரால் தூவி அருச்சனை செய்து தொழுது போற்றும் அடியவர்கள் உலகத்தாரால் போற்றப்படுவார்கள். அவர்களுக்கு உடற்பிணி இல்லை.
161. மத்தம்மலி சித்தத்துஇறை
மதிஇல்லவர் சமணர்
புத்தர்அவர் சொன்னம்மொழி
பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை
நெய்த்தானம்அது ஏத்தும்
சித்தம்உடை அடியார்உடல்
செறுநோய் அடை யாவே.
தெளிவுரை : தெய்வ சித்தத்தைத் துறந்த சமணர் மற்றும் பௌத்தர்தம் சொற்களைப் பொருட்படுத்தாமல் நெய்தானத்தில் வீற்றிருக்கும் பெருமானைப் போற்றி வணங்கும் தன்மையுடையவர்ரகள் உடற்பிணி அடைய மாட்டார்கள்.
162. தலமல்கிய புனல்காழியுள்
தமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழால்மிகு
நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்லிவை
பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி
சேர்வர்சிவ கதியே.
தெளிவுரை : திருத்தலச் சிறப்பு மிக்கவர், சீகாழியின் தமிழ் ஞானசம்பந்தர். நிலவுலகின் புகழால் மிருந்த நெய்த்தானத்தில் எழுந்தருளிய சிவபெருமானை நிகரில்லாத பல சிறப்புகளை உடைய பாடலாகிய அவர்தம் இத்திருப்பதிகத்தினை ஓதுபவர்கள் சிவகதி எனவும் உணர்த்தப் பெற்றது.
திருச்சிற்றம்பலம்
16. திருப்புள்ளமங்கை (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
163. பால்உந்தறு திரள்ஆயின
பரமன்பிர மன்தான்
போலும்திறல் அவர்வாழ்தரு
பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திறல் அறச்சாடிய
கடவுள்ளிடம் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை
அடையாவினை தானே.
தெளிவுரை : பாலின் திரட்சியைப் போன்று இனிமையானவன் பரமன். அவன் காலனுடைய வலிமையை இழக்கச் செய்தவன். அவனுடைய இடமாவது, பிரமனைப் போன்ற வேதத்தினை நாளும் ஓதும் சிறப்பினை உடைய அந்தணர்கள் வாழும் திருப்புள்ளமங்கை என்னும் பதியில் விளங்கும் ஆலந்துறையாகும். அதனைத் தொழுபவர்களை வினை அடையாது.
164. மலையான்மகள் கணவன்மலி
கடல்சூழ்ந்த தன்மைப்
புலையாயின களைவான்இடம்
பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோர் அவர்
கருதித்தொழுது ஏத்த
அலைஆர்புனல் வருகாவிரி
ஆலந்துறை அதுவே.
தெளிவுரை : கடல் சூழ்தலால் விளையும புலை மீசர் மணமானது மேலெழாதவாறு நறுமணத்தை நல்கும் பொழில் சூழ்ந்த திருப்புள்ளமங்மை என்னும் ஊரில், கல்வியிலும் ஒழுக்கத்திலும் மிக்க மறைவர்கள் மனதாரத் தொழுது ஏத்திட, காவிரியாறு அலைகøளுயுடைய தீர்க்கத்தைத் தருமாறு திகழும் ஆலந்துறை உள்ளது. அங்கு கோயில் கொண்டு இருப்பவன் மலைமகள் தலைவன் ஆவன்.
165. கறைஆர்மிடறு உடையான்கமழ்
கொன்றைச்சடை முடிமேல்
பொறைஆர்தரு கங்கைப்புனல்
உடையான்புள மங்கைச்
சிறைஆர்தரு களிவண்டுஅறை
பொழில்சூழ்திரு ஆலந்
துறைஆனவன் நரைஆர்கழல்
தொழுமின்துதி செய்தே.
தெளிவுரை : விடத்தை <உண்ட கறை தோய்ந்த மிடறு உடையவன், வாசனை பொருந்திய கொன்றை மலரைச் சடை முடிமேல் தரித்துக் கங்கையை <உடையவன். அவன் திருப்புள்ளமங்கையில் வண்டுகள் சூழும் பொழிலை உடைய திரு ஆலந்துறையில் விரும்பி இருப்பவன். அப்பெருமானுடைய மணம் மிகுந்த மலர்ப்பதத்தைத் துதி செய்து வணங்குமின்.
166. தணிஆர்மதி அரவின்னொடு
வைத்தான்இட மொய்த்தெம்
பணியாய்அவன் அடியார்தொழுது
ஏத்தும்புள மங்கை
மணிஆர்தரு கனகம்மவை
வயிரத்திர ளோடும்
அணிஆர்மணல் அணைகாவிரி
ஆலந்துறை அதுவே.
தெளிவுரை : குளிர்ச்சியான சந்திரன் பாம்புடன் சேர்ந்து இருக்குமாறு, தன் முடியில் வைத்திருப்பவனுடைய இடமாவது, அடியவர்கள் எல்லாம் மொய்த்து இருக்குமாறு கூடித்தொழுது ஏத்தும் திருப்புள்ளமங்கை. அவன் வீற்றிருக்கும் திருத்தலம், மாணிக்கம், பொன், வயிரம் யாவும் மணலொடு கொண்டு வரும் காவிரியின் இயல்பு கொள் ஆலந்துறை ஆகும்.
167. மெய்த்தன்னுறும் வினைதீர்வகை
தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்துஆர்அகில்
கொணர்காவிரி கரைமேல்
பொத்தின்னிடை ஆந்தைபல
பாடும்புள மங்கை
அத்தன்நமை ஆள்வான்இடம்
ஆலந்துறை அதுவே.
தெளிவுரை : வினைப் பயனால் இப் பிறவி வாய்க்கப் பெற்றதையொட்டி அவ் வினை தீரும் வகையாக வேண்டும். ஈசனைத் வணங்கித் தொழுவதற்கு ஏற்ற வகையில் காவிரியானது மலர்களையுமம் சந்தனத்தையும் கொண்டு வருகின்றது. அக்காவிரியின் கரையில் சார்ந்த மரப் பொந்துகளில் வாழும் ஆந்தைகள் பாடும் திருப்புள்ளமங்கையில் வீற்றிருக்கும். அத்தன் நம்மை ஆள்பவன். அவனுடைய திருக்கோயில் ஆலந்துறை.
168. மன்ஆனவன் உலகிற்குஒரு
மழையானவன் பிழைஇல்
பொன்ஆனவன் முதல்ஆனவன்
பொழில்சூழ்புள மங்கை
என்ஆனவன் இசைஆனவன்
இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம்
ஆலந்துறை அதுவே.
தெளிவுரை : உலகில் உள்ள பொருட்களில் பதிந்து ஒளிர்பவன்; மழையானவன்; குற்றமற்ற பொன் போன்று பிரகாசிப்பவன்; யாவற்றுக்கும் முதற்பொருளானவன்; பொழில் சூழ்ந்த திருப்புள்ளமங்கையில் எனக்கு ஆனவன்; பாடும் இசையானவன்; இளஞாயிறு போன்ற செம்மையான சோதி வடிவானவன். அவன் வீற்றிருக்கும் இடம் ஆலந்துரை ஆகும்.
169. முடிஆர்தரு சடைமேல்முளை
இளவெண்மதி சூடிப்
பொடியஆடிய திருமேனியர்
பொழில்சூழ்புள மங்கைக்
கடிஆர்மலர் புனல்கொண்டுதன்
கழலே தொழுது ஏத்தும்
அடியார்தமக்கு இனியான்இடம்
ஆலந்துறை அதுவே.
தெளிவுரை : திருமுடியில் விளங்கும் சடையில் இளமையான சந்திரனைச் சூடி, திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி, பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கையில் நீரும் மலரும் கொண்டு பூசித்து வணங்குபவர்களுக்கு இனியவனாக இருப்பவன் ஈசன். அவன் வீற்றிருக்கும் இடம் ஆலந்துறை ஆகும்.
170. இலங்கைமனன் முடிதோள்இற
எழில்ஆர்திரு விரலால்
விலங்கல்லிடை அடர்த்தான்இடம்
வேதம்பயின்று ஏத்திப்
புலன்கள்தமை வென்றார்புகழ்
அவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையான்இடம்
ஆலந்துறை அதுவே.
தெளிவுரை : இலங்கை மன்னன் தலைமுடியும் தோளும் நலியுமாறு அழகிய தனது திருப்பாத விரலால் மலைக்குக் கீழே துன்பம் கொள்ளத் தண்டித்தவன் இடமாவது, வேதம் நன்கு பயின்று, அதனை ஓதி, புலன்கள் ஐந்தினையும் வெற்றி கொண்டு ஆளும் தன்மையுடையவர்களாய், புகழ் கொள்ளும் பெருமக்கள் வாழும் திருப்புள்ளமங்கை ஆகும். அதில், கொன்றை மாலை அணிந்த சடையை உடையவனாகிய அவ் ஈசன் வீற்றிருப்பது ஆலந்துறை.
171. செறிஆர்தரு வெள்ளைத்திரு
நீற்றின்திரு முண்டப்
பொறிஆர்தரு புரிநூல்வரை
மார்பன்புள மங்கை
வெறிஆர்தரு கமலத்துஅயன்
மாலும்தனை நாடி
அறியாவகை நின்றான்இடம்
ஆலந்துறை அதுவே.
தெளிவுரை : நெருங்கி மேவி தூய்மை தரும் திருவெண்ணீற்றை திருநுதலில் தரித்து, முப்புரி நூல் மார்பில் திகழ விளங்குபவன் சிவபெருமான். அவன் தாமரை மலரின் மீது அமர்ந்துள்ள பிரமனும், திருமாலும் நாடிச் சென்றும் அறியாவகையில் திருப்புள்ளமங்கையில் நின்றான். அவன் இருப்பது ஆலந்துறை ஆகும்.
172. நீதிஅறி யாதார்அமண்
கையரொடு மண்டைப்
போதியவர் ஓதும்முரை
கொள்ளார்புள மங்கை
ஆதிஅவர் கோயில்திரு
ஆலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு
தன்மைபெறல் ஆமே.
தெளிவுரை : முறைமை அறியாத சமணர் மற்றும்ல பௌத்தர்கள் கூறும் உரைகளைக் கொள்ளாதவர்கள் வாழ்கின்ற திருப்புள்ளமங்கையில், மூலப்பொருளாக உடையவனுடைய கோயில் ஆலந்துறை ஆகும். ஆங்கு சென்று வணங்குபவர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களும் மற்றும் அவ்வினத்தைச் சார்ந்த கின்னரர் முதலானோரும் ஏத்திடும் சிறப்பைப் பெறுவார்கள்.
173. பொந்தின்னிடைத் தேனூறிய
பொழிலசூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி
ஆலந்துறை யானைக்
கந்தமல்லி கமழ்காழியுள்
கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி
ஆடத்தவம் ஆமே.
தெளிவுரை : பொழில்கள் சூழ்ந்த நிலையில் மரப்பொந்துகளில் தேன் ஊறும் வளம் மிக்கது திருப்புள்ளமங்கை. ஆங்கு, குளிர்ந்த நீர் வரும் காவிரி சூழ்ந்த இடம் ஆலந்துறை அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை, மணம் கமழும் சீகாழியில் மேவும் ஞானசம்பந்தப்பெருமான் இசைத்த சந்தம் பெருகும் இத்திருப்பதிகத்தைப்பாடி, அதன் வழி மனம் இலயித்துத் தன்னை மறந்து பக்திப் பரவசத்தால் ஆடும் நிலையுடையவர்கள், தவம் செய்து அதனால் பெறுகின்ற பயனை உடையவர்கள் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
17. திருஇடும்பாவனம் (அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில், இடும்பாவனம், திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
174. மனம்ஆர்தரு மடவாரொடு
மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனம்ஆர்தரு சங்கக்கடல்
வங்கத்திரள் உந்திச்
சினம்ஆர்தரு திறள்வாள்எயிற்று
அரக்கன்மிகு குன்றில்
இனமாதவர் இறைவர்க்குஇடம்
இடும்பாவனம் இதுவே.
தெளிவுரை : மனத்திற்கு இசைந்த மகளிரொடு மகிழும் இளைஞர்கள் மலர் தூவி இருக்க, அரக்கனுடைய குன்றளூரில் செல்வப் பெருக்கை நிலை நாட்டும் தனங்கள் பெருக, யோகிகளாகிய தவசிகள் இறைவனை ஏத்துகின்றனர். அந்த இடம் இடும்பாவனம் ஆகும்.
175. மலைஆர்தரு மடவாள்ஒரு
பாகம்மகிழ்வு எய்தி
நிலைஆர்தரு நிமலன்வலி
நிலவும்புகழ் ஒளிசேர்
கலைஆர்தரு புலவோர்அவர்
காவல்மிகு குன்றில்
இலைஆர்தரு பொழில்சூழ்தரும்
இடும்பாவனம் இதுவே.
தெளிவுரை : மலைமகளாகிய உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மகிழ்வெய்திய ஈசன், ஒளிமிகுந்த குன்றளூரில், அடர்த்தியான பொழில்கள் சூழ்ந்த தேவர்கள் தொழுது ஏத்துவது, விளங்கும் இடும்பாவனம் ஆகும்.
176. சீலம்மிகு சித்தத்தவர்
சிந்தித்து எழும்எந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்த்தரும்
உலகத்தவர் நலம்ஆர்
கோலம்மிகு மலர்மென்முலை
மடவார்மிகு குன்றில்
ஏலம்கமழ் பொழில்சூழ்தரும்
இடும்பாவனம் இதுவே.
தெளிவுரை : நல்லொழுக்கம், எளிமை, தூய்மை, தவம் முதலான நற்பண்புகள் செழிப்பாகக் கொண்ட, சீலம் மிகுந்த சிந்தனை யுடையவர்களின் மனத்தில் எழும் எந்தையாகிய ஈசன், உலகத்தவர் நலம் பெறுவதற்காக, அழகிய மகளிர் வாழும் குன்றளூரில் வாசனை பொருந்திய மலர்கள் சூழும் இடும்பாவனத்தில் கோயில் கொண்டுள்ளவன்.
177. பொழில்ஆர்தரு குலைவாழைகள்
எழில்ஆர்தரு போழ்தில்
தொழிலால்மிகு தொண்டர்அவர்
தொழுதுஆடிய முன்றில்
குழல்ஆர்தரு மலர்மென்முலை
மடவார்மிகு குன்றில்
எழில்ஆர்தரும் இறைவர்க்கு இடம்
இடும்பாவனம் இதுவே.
தெளிவுரை : பொழில்கள் நிறைந்த அந்தக் குன்றில் வாழை மரங்கள் குலைகள் ஈன்று அழகையும் வளத்தையும் தருவனவாகும். இறைபக்தி மேலீட்டால் பணி செய்யும் திருத்தொண்டர்கள் தொழுது ஆடி மகிழவும், மலர் சூடிய கூந்தலை உடைய மகளிர் மிகுந்து உடன் பணி ஆற்றும் எழில் மிக்கது, இடும்பாவனம். இதுவே இறைவனுக்கு உரிய இடமாயிற்று.
178. பந்தார்விரல் உமையாள்ஒரு
பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய
செழுநீர்வயல் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ்
குரவம்கமழ் குன்றில்
எந்தாய்என இருந்தான் இடம்
இடும்பாவனம் இதுவே.
தெளிவுரை : பந்தணையும் விரலி என்னும் திருநாமம் கொண்ட உமாதேவியை ஒரு பாகத்திலும், கங்கையைத் திருமுடியிலும் உடையவன் ஈசன். அவன், செந்தாமரை மலர்கள் விளங்கும் நீர்நிறைந்த வயல்களும் புன்னையும் குரவமும் கமழும் குன்றளூரில் இடும்பாவனம் திகழ எம் தந்தையாக வீற்றுள்ளான்.
179. நெறிதீர்மையர் நீள்வானவர்
நினையும் நினைவாகி
அறிநீர்மையில் எய்தும்அவர்க்கு
அறியும் அறிவு அருளிக்
குறிநீர்மையர் குணம் ஆர்தரு
மணல்ஆர்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரும்
இடும்பாவனம் இதுவே.
தெளிவுரை : ஒழுக்க நெறியின்கண் நின்று மேவும் இனிமை மிக்கவர்களும், உயர்ந்தவர்களாகிய வானவர்களும் நினைந்து போற்றும் நிலையில் நெஞ்சிற் பதியும் பொருளாகி, மெய்ஞ்ஞான நிலையால் அறிபவர்களுக்கு ஏற்ப உயர்ந்த ஞானத்தை அளித்து, அத்தகையவர்களுக்கு மெய்ஞ்ஞானப் பொருளாகி, உருவத் தோற்றத்தில் மகிழந்து அந்த நெறியில் அதற்கே உரிய குண விசேடத்தோடு மணம் பரப்பும் குன்றளூரில் நீர்பாயும் வயல்கள் நெருங்கிச் சூழ்ந்த இடும்பாவனத் தில் ஈசன் விளங்குகின்றான்.
180. நீறுஏறிய திருமேனியர்
நிலவும்முல கெல்லாம்
பாறுஏறிய படுவெண்தலை
கையில்பலி வாங்காக்
கூறுஏறிய மடவாள்ஒரு
பாகம்மகிழ் வெய்தி
ஏறுஏறிய இறைவர்க்குஇடம்
இடும்பாவனம் இதுவே.
தெளிவுரை : திருவெண்ணீறு பதியுமாறு மிக்கப் பூசிய திருமேனி உடையவர், கையில் கபாலம் ஏந்திப் பிச்சை கொண்டவர், உமாதேவியை ஒரு பாகமாக உடையவர், இடபத்தின் மீது ஏறியவர்; இத்தகைய தன்மையுடைய இறைவனுக்கு இடமாக உடையது இடும்பாவனம்.
181. தேர்ஆர்தரு திகழ்வாள் எயிற்று
அரக்கன்சிவ மலையை
ஓராதுஎடுத்து ஆர்த்தான்முடி
ஒருபஃதுஅவை நெரித்துக்
கூர்ஆர்தரு கொலைவாளொடு
குணநாமமும் கொடுத்த
ஏர்ஆர்தரும் இறைவர்க்குஇடம்
இடும்பாவனம் இதுவே.
தெளிவுரை : வானத்தில் தேர்மீது இவர்ந்து வந்து ஒளி போன்ற பற்களை உடைய அரக்கன், ஆராய்ந்து பார்க்காமல் கயிலை மலையைப் பெயர்த்து ஆராவாரம் செய்தான். அஞ்ஞான்று அவனது பத்துத் தலைகளையும் நெரியுமாறு செய்த இறைவன், பின்னர் அவ்வரக்கனின் இசையால் மகிழ்ந்து தெய்வத்தன்மை பொருந்திய வாட்படையும் இராவணன் என்னும் பெயரையும் நல்கினான். சிறப்புப் பொருந்திய அவ்ஈசன் விளங்கும் இடம் இடும்பாவனம்.
182. பொருள்ஆர்தரு மறையோர்புகழ்
விருத்தர்பொலி மலிசீர்த்
தெருள் ஆர்தரு சிந்தையொடு
சந்தம்மலர் பலதூ
மருளார்தரு மாயன்னயன்
காணார்மயல் எய்த
இருளார்தரு கண்டர்க்குஇடம்
இடும்பாவனம் இதுவே.
தெளிவுரை : உண்மைப் பொருள் விளக்கும் மறையை ஓதுபவர்களும், புகழ் மிக்க முதுபெரும் மாந்தர்களும் பொலிய, நன்றாகத் தெளிந்த சிந்தையால் மணம் பொருந்திய மலர்களால் ஈசனைப் பூசிக்கின்றனர். மருள் உற்ற திருமாலும், நான்முகனும் மயங்கிய தன்மையால் இறைவனைக் காண முடியாதவாறு ஆயினர். அத்தகைய ஈசன் கரிய கண்டத்தை உடையவன். அவனுக்கு இடமாக விளங்குவது இடும்பாவனம் ஆகும்.
183. தடுக்கைஉடன் இடுக்கித்தலை
பறித்துச் சமண் நடப்பார்
உடுக்கைபல துவர்க் கூறைகள்
உடம்புஇட்டுஉழல் வாரும்
மடுக்கண் மலர் வயல்சேர்செந்நெல்
மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவான்இடம்
இடும்பாவனம் இதுவே.
தெளிவுரை : தலை முடியைக் களைந்தும் காவியுடை கொண்டும் இருக்கும் சமணர்களும் பௌத்த மதத்தினரும் இடுக்கண் நீங்குமாறு செய்பவனாகிய ஈசன் இடம், மலர்களும் நெல் வயல்களும் நீர்நிலைகளும் மலிந்த இடும்பாவனம் ஆகும்.
184. கொடிஆர்நெடு மாடக்குன்ற
ளூரிற் கரைக்கோல
இடிஆர்கடல் அடிவீழ்தரும்
இடும்பாவனத்து இறையை
அடிஆயும்அந் தணர்காழியுள்
அணிஞானசம் பந்தன்
படியால்சொன்ன பாடல்சொலப்
பறையும்வினை தானே.
தெளிவுரை : அலங்காரத் தோரணங்களையுடைய நெடிய மாடமாளிகைகள் கொண்ட குன்றளூரில் எழுந்தருளியுள்ள இடும்பாவனத்து இறைவனை ஞானசம்பந்தப் பெருமான் அவ் அவர்க்குப் பொருந்தியபடி சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதிட வினை அழியும்.
திருச்சிற்றம்பலம்
18. திருநின்றியூர் (அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
185. சூலம்படை கண்ணப்பொடி
சாந்தம்கடு நீறு
பாலம்மதி பவளச்சடை
முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு
போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி
யூரின்நிலை யோர்க்கே.
தெளிவுரை : திருநின்றியூரில் நிலைபெற்றுள்ள ஈசனுக்குச் சூலம் படையாகவும், திருவெண்ணீறு சாற்றும் பொடியாகவும் உள்ளது; பவளம் போன்ற சிவந்த சடை முடியில் பால்போன்ற வெண்மையான சந்தரன் அழகுடன் விளங்குகின்றது; மார்க்கண்டேயன் உயிரைக் கவர வந்த காலனுடைய வலிமையைத் தனது திருப்பாதத்தால் போக்கிய பெருமையால், என்றும் குளுமை நிலைத்து விளங்குவதாகிறது.
186. அச்சம்மிலர் பாவம்மிலர்
கேடும்மிலர் அடியார்
நிச்சம்முறு நோயும்மிலர்
தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிடறு உடையார்நறுங்
கொன்றைநயந்து ஆளும்
பச்சம்முடை அடிகள்திருப்
பாதம்பணி வாரே.
தெளிவுரை : திருநின்றியூரில் எழுந்தருளியுள்ள ஈசனைப் பணியும் அடியவர்களுக்கு அச்சம் ஏற்படுவதில்லை; பாவ காரியங்களைச் செய்ய மாட்டார்கள்; கால பேதத்தாலும் மற்றும் காரிய பேதத்தாலும் அவ்வப் போது உடலுக்கு ஏற்படும் நோயும் இல்லை. அப்பெருமான், நஞ்சு அருந்திய கண்டத்தை உ<டையவராய் நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சூடியவர். அவர் அன்பு உடையவர்.
187. பறையின்னொலி சங்கின்னொலி
பாங்காரவும் ஆர
அறையும் மொலி எங்கும்மவை
அறிவார்அவர் தன்மை
நிறையும்புனல் சடைமேல்உடை
அடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லதுஎனது
உள்ளம்உண ராதே.
தெளிவுரை : நின்றியூரில் திருவிழாக்கள் நடைபெறுவதை யொட்டி எழும் வாத்தியங்களின் ஒலியும், சங்கின் ஒலியும் பாங்குடன் பொருந்தி எழ, அர, அர என்றும் சிவ, சிவ என்றும் பக்தர்கள் ஒலிக்கும் சிவ ஒலிகள் எல்லா இடத்திலும் பரவ, அவற்றை நன்கு அறியும் தன்மையுடையவர் நிறைந்த கங்கையைத் தன் சடைமேல் தரித்திருக்கும் ஈசன் ஆவார். அத்தகைய இறைவனை யல்லாது வேறு வகையான பொருளின் மீது என் உள்ளம் சாராது.
188. பூண்டவ்வரை மார்பில்புரி
நூலன்விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு
பாலம்மதி யதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு
நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழில்அல்லது
அறியார்அவர் அறிவே.
தெளிவுரை : நாகத்கை அணிகலனாகப் பூண்ட மலை போன்ற விசாலமான மார்பில் பூணூல் திகழவும், சடையில் நன்கு விரிந்த கொன்றை மலரும், பால் போன்ற சந்திரனும் தரித்து விளங்குபவன் பரமன். அப்பெருமான் , சோலை சூழ் நின்றியூரில் இருப்பவன். அவனைத் தொழுதால் அன்றி அப்பெருமானின் சிறப்பினை அறிய முடியாது.
189. குழலின்னிசை வண்டின்னிசை
கண்டுகுழில் கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில்
சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வலன் அங்கைஅது
ஏந்திஅனல் ஆடும்
கழலின்னொலி ஆடும்புரி
கடவுள்களை கண்ணே.
தெளிவுரை : புல்லாங்குழலின் வழி எழும் இசையானது, வண்டின் இசையாய்த் தோன்றுமாறு செய்ய, அதனை யொட்டிக் குயிலும் உடன் சேர்ந்து கூவி இசை எழுப்ப, அடர்த்தியான நிழலைத் தரும் சோலை சூழ்ந்த நின்றியூரில், நெருப்பைப் போன்று வலிமையான படையாகிய மழுவை ஒரு கரத்தில் ஏந்தி மற்றொரு கரத்தில் நெருப்பு ஏந்தி ஆடவும், நடனம் புரியும் திருப்பாதம் கழலின் ஒலி சேர்க்கவும், ஈசன் திகழ்கின்றான். அத்தகைய கடவுள் நமக்குப் பற்றுக் கோடாக உள்ளவன்.
190. மூரல்முறு வல்வெண்நகை
உடையாள்ஒரு பாகம்
சாரல்மதி அதனோடுடன்
சலவம் சடை வைத்த
வீரன்மலி அழகார்பொழில்
மிடையும்திரு நின்றி
யூரன்கழல் அல்லாதுஎனது
உள்ளம்உண ராதே.
தெளிவுரை : புன்முறுவல் விளங்கும் ஒளிதிகழ் உமாதேவியை ஒரு பாகத்திலும், சந்திரனும் கங்கையும் அழகிய சடைமுடியிலும் வைத்த சிவபெருமான் பொழில் சூழும் திருநின்றியூரன் ஆவான். அவனுடைய திருக்கழலை யல்லாது வேறு எதிலும் என் உள்ளம் சாராது.
191. பற்றிஒரு தலைகையினில்
ஏந்திப்பலி தேரும்
பெற்றிஅது வாகித்திரி
தேவர்பெரு மானார்
சுற்றிஒரு வேங்கைஅத
ளோடும்பிறை சூடும்
நெற்றிஒரு கண்ணார் நின்றி
யூரின் நிலை யாரே.
தெளிவுரை : ஒரு கரத்தில் பிரம கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாக ஏந்திப் பலி கொள்வதைத் தேர்ந்தெடுத்த பெற்றியில் திரிந்த தேவர் பெருமான். புலியின் தோலை ஆடையாகக் கொண்டும், சந்திரனைத் திருச்சடையில் சூடிக் கொண்டும், நெற்றியில் ஒரு கண் கொண்டு நின்றியூரில் நிலைபெற்றவர் ஆயினார்.
192. நல்லம்மலர் மேலானொடு
ஞாலம்மது உண்டான்
அல்லர்என ஆவர்என
நின்றும்அறி வரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி
யூரின்நிலை யார்எம்
செல்வர்அடி அல்லாதுஎன
சிந்தைஉண ராதே.
தெளிவுரை : அழகிய நல்ல மலராகிய தாமரை மலர் மேல் உறையும் பிரமனோடு, உலகத்தை உண்டு உமிழ்ந்தவனாகிய திருமாலும், காணவில்லை எனவும். காணப்பட்டான் எனவும் தமக்குள் விவாதம் செய்தும் அறிவரியவனாய் நெல் வயல் சூழ்ந்த நின்றியூரில் நிலைத்துள்ளார், ஈசன். அவரே எம் செல்வர். அப்பெருமானுடைய திருவடியை அல்லாது என் சிந்தை வேறொன்றினை உணராது.
193. நெறியில்வரு பேராவகை
நினையாநினை ஒன்றை
அறிவில்சமண் ஆதர்உரை
கேட்டும்மய ராதே
நெயில்லவர் குறிகள்நினை
யாதேநின்றி யூரில்
மறிஏந்திய கையான்அடி
வாழ்த்தும்மது வாழ்த்தே.
தெளிவுரை : நன்னெறியில் வருவனவற்றை அந்நெறியில் இருந்து மாறுபடாதவாறு உரைத்தலை நினையாத சமணர் போன்றோர் உரைகளைக் கேட்டு மயக்கம் கொள்ளாமல், நின்றியூரில் மழு ஏந்திய திருக்கரத்தை உடைய ஈசனைப் போற்றுவது மெய்யான வாழ்த்து ஆகும்.
194. குன்றம்மது எடுத்தான்உடல்
தோளும் நெரிவு ஆக
நின்றுஅங்கு ஒரு விரலால்உற
வைத்தான் நின்றி யூரை
நன்றுஆர்தரு புகலித்தமிழ்
ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை
வின்றிநிறை புகழே.
தெளிவுரை : கயிலாய மலையை எடுத்தவனாகிய இராவணன் உடலும் தோளும் நெரியுமாறு புரிந்து, ஒரு விரலால், பின்னர் நன்மை உறுமாறு செய்தான், அவன் வீற்றிருந்து அருளும் நின்றியூரை ஞானசம்பந்தப் பெருமான் இசைத்த எக்காலத்தும் குறைவுபடாத தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை உரைப்பவர்களுக்கு நிறை புகழ் உண்டாகும்.
திருச்சிற்றம்பலம்
19. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
195. பிறைஅணி படர்சடை முடிஇடை பெருகிய
புனல்உடை யவன்இறை
இறைஅணி வளைஇணை முலையவள் இணைவனது
எழில்உடை இடவகை
கறைஅணி பொழில்நிறை வயல்அணி கழுமலம்
அமர்கனல் <உருவினன்
நணைஅணி மலர்நறு விரைபுல்கு நலமலி
கழல்தொழல் மருவுமே.
தெளிவுரை : இறைவன், சடை முடியில் பிறைச் சந்திரனும், கங்கையும் <உடையவன். முன் கையில் வளையலை அணியாகப் பெற்ற உமாதேவியை எழிலுடன் இடப்பாகமாகக் கொண்டு, அடர்த்தியான சோலையும், நிறைவாய்ப் பயன் தரும் வயல்களும் அழகுடன் விளங்கும் கழுமல நகரில் வீற்றிருக்கும் தழல் உருவினன் அவன். அவனுடைய திருவடி நறுமணம் உடையதும் தேன் ததும்பும் மலர் போன்றதும் ஆகும். அத்தகைய திருவடியைத் தொழுது பற்றி இருக்க வேண்டும்.
196. பிணிபடுகடல்பிற விகள்அறல் எறிதுஉளது
அதுபெரு கியதிரை
அணிபடு கழுமலம் இனிதுஅமர் அனல்உரு
வினன்அவிர் சடைமிசை
தணிபடு கதிர்வளர் இளமதி புனைவனை
உமைதலை வனைநிற
மணியடு கறைமிட றனைநல மலிகழல்
இணைதொழல் மருவுமே.
தெளிவுரை : பிறவி என்பது கடல் போன்று பரந்து ஆசையாகிய பெரிய பெரிய அலைகளைக் கொண்டது. அது அனைவரையும் பிணித்துக் கட்டும் தன்மையுடையது. அதிலிருந்து நீங்குவதற்கு எளிய வழி உள்ளது. அது, அணி மிகுந்த கழுமலத்தில் இனிமையுடன் வீற்றிருக்கும் நெருப்புப் போன்ற செம்மேனியனாகவும், ஒளிரும் சடையின் மீது குளிர் இளஞ் சந்திரனைச் சூடியுள்ளவனாகவும் உள்ளவனாகிய உமாதேவியின் தலைவனை, நீல மணியைப் போன்ற கரிய கண்டம் உடைய ஈசனை, அவனது நலம் தரும் திருவடிகளைத் தொழுது அன்புடன் பற்றி நிற்றல் சிறந்ததாகும்.
197. வரியுறு புலிஅதள் உடையினன் வளர்பிறை
ஒளிகிளர்கதிர்பொதி
விரியுறு சடைவிரை புரைபொழில் விழஒலி
மலிகழு மலம்அமர்
எரியுறு நிறஇறை வனதடி இரவொடு
பகல்பர வுவர்தமது
எறியுறு வினைசெறி கதிர்முனைஇருள்கெட
நனினினை வெய்துமதே.
தெளிவுரை : ஈசன், வரிகளையுடைய புலித்தோல் உடையை உடையவன்; வளரும் பிறைச்சந்திரனும் ஒளியைக் கிளர்ந்து நல்கும் அடர்த்தியான சடை முடியும் உடையவன், அவ் இறைவன். அவன், திருவிழாக்களின் ஒலி மிகுந்த கழுமல நகரில் வீற்றுள்ளான். தீப்போன்ற சிவந்த திருமேனியனாகிய அப் பெருமானுடைய திருவடியை, இரவும் பகலும் போற்றி வணங்குபவர்களுக்கு, அவர் தம் துன்புறுத்தும் வினைகள், சூரியனைக் கண்ட இருள்போன்று கெடுவதற்கு, இறைவன்பால் பற்று உண்டாகும்.
198. வினைகெட மனநினை வதுமுடி கெனின்நனி
தொழுது எழு குலமதி
புனைகொடி இடைபொருள் தருபடு களிறினது
உரிபுதை உடலினன்
மனைகுட வயிறுடை யனசில வருகுறள்
படையுடை யவன்மலி
கனைகடல் அடைகழு மலம்அமர் கதிர்மதி
யினன் அதிர் கழல்களே.
தெளிவுரை : வினை யாவும் தீர்வதற்கு மனமானது இறைவனை நினைக்க வேண்டும். அது முடிய வேண்டும் என்றால், இளம் பிறை சூடி, உமாதேவியை இடமாகக் கொண்டு, யானையின் தேலை உரித்துப் போர்வையாக்கி, குடம் போன்ற பெரிய வயிற்றையுடைய பூதம் படையுடையவனாகிய, கழுமலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் ஒலிக்கும் திருவடியைத் தொழுது போற்ற வேண்டும்.
199. தலைமதி புனல்விட அரவுஇவை தலைமையது
ஒருசடையிடை யுடன்
நிலைமரு வவூர்இடம் அருளினன் நிழல்மழு
வினொடுஅழல் கணையினன்
மலைமரு வியசிலை தனில்மதில் எரியுண
மணமருவினன் நல
கலைமரு வியபுறவு அணிதரு கழுமலம்
இனிதுஅமர் தலைவனே.
தெளிவுரை : இளம்பிறை, கங்கை, விஷம் பொருந்திய பாம்பு இவற்றைத் தலைமையாகக் கொண்டவற்றை ஒப்பற்ற சடையின் இடையில் தத்தமது இயல்பான குணமான யாவும் நீங்கி விளங்குமாறு பொருந்தச் செய்தவன் ஈசன். அவன் ஒளிமிகும் மழுப்படையை உடையவன்; மேருமலையை வில்லாகவும், அக்னியைக் கணையாகவும் கொண்டு முப்புரத்தை எரியுமாறு செய்து அன்புடையவர்கள் நெஞ்சில் கலந்தவன். அவன், காடுகளைப் போன்ற அடர்த்தியான மரங்களுடைய அழகு வளர் கழுமல நகரில் இனிது வீற்றிருக்கும் தலைவனே.
200. வரைபொருது இழிஅரு விகள்பல பருகுஒரு
கடல்வரி மணலிடை
கரைபொரு திரைஒலி கெழுமிய கழுமலம்
அமர்கனல் உருவினன்
அரைபொரு புலிஅதள் உடையினன் அடிஇணை
தொழவரு வினைஎனும்
உரைபொடி படஉறு துயர்கெட உயர்உலகு
எய்தல்ஒரு தலைமையே.
தெளிவுரை : மலைகளைக் கடந்து, பெருகிப் பாயும் அருவிகள் பலவற்றைக் கொள்ளும் கடலின் கரைமேல் அலைகள் ஒலி எழுப்ப விளங்கும் கழுமலத்தின்கண் எழுந்தருளியுள்ள தீவண்ணன், அரையில் பொருந்திய புலித்தோல் ஆடை உடையவன். அவனது இணை படியைத் தொழுத ஞான்று, மக்கட் பிறவிக்கு வினை தான் காரணம் என்று சொல்லப்படும் சொல்லானது பொருள் அற்றதாகும். உற்ற துயரும் கெடும். உயர்ந்த உலகமாகிய சிவனடி சார்தல் உறுதி.
201. முதிர்உறு கதிர்வளர் இளமதி சடையனை
நறநிறை தலைதனில்
உதிர்உறு மயில்பிணை தவிர்தசையுடைபுலி
அதள்இடை இருள்கடி
கதிர்உறு சுடர்ஒளி கெழுமிய கழுமலம்
அமர்மழு மலிபடை
அதிர்உறு கழல்அடி களது அடிதொழும்அறிவு
அலதுஅறி அறியமே.
தெளிவுரை : தேன் சொரியும் மலர் நிறைந்த சடையை உடைய முடியில் முற்றிய கதிர்களை உமிழும் இளமதியைச் சூடியவன் ஈசன். அவன், புலித்தோலை உடுத்தி ஒளி மிகும் கழுமல நகரில் மழுப்படை ஏத்தி வீற்றிருப்பவன். அப்பெருமானின் ஒலிக்கும் திருவடியைத் தொழுது போற்றும் அறி பெற்றவர் ஆவோம். அதைத்தவிர வேறு யாதும் அறிய மாட்டோம்.
202. கடல்என நிறநெடு முடியவன் அடுதிறல்
தெறஅடி சரண்என
அடல்நிறை படைஅரு ளியபுகழ் அரவுஅரை
யினன்அணி கிளர்பிறை
விடநிறை மிடறுடை யவன்விரி சடையவன்
விடையுடை மிடறுடை யவன்விரி சடையவன்
விடையுடை யவன்உமை
உடன்உறை பதிகடல் மறுகுஉடைஉயர்கழு
மலவியன் நகரதே.
தெளிவுரை : கருமையான நிறமுடைய இராவணனுடைய முடியின் வலிமையை அழித்து, பின்னர் அவ் அரக்கன் சரணாகதியாய்த் திருவடியை வணங்கிய போது தெய்வப் படை அருளியவன் ஈசன். புகழ் மிக்க நாகத்தை அணிந்து, வளர்ந்து எழுச்சி கொளும் சந்திரனைச் சூடி, நஞ்சினைக் கழுத்தில் இருத்தி, விரிந்த சடை முடியும், இடப வாகனமும் கொண்டு, உமாதேவியுடன் விளங்கும் அத் தலைவன், கடல் பெருக்கெடுத்துப் பிரளயம் தோன்றும் காலத்திலும் நிலையாக உள்ள கழுமலம் என்னும் பதியில் உறைபவன்.
203. கொழுமலர் உ<றைபதி <உடையவன் நெடியவன்
எனஇவர் களும்அவன்
விழுமையை அளவறி கிலர்இறை விரைபுணர்
பொழில்அணி விழவுஅமர்
கழுமலம் அமர்கனல் உருவினன் அடிஇணை
தொழுமவர் அருவினை
எழுமையும் இலநில வகைதனில் எளிதுஇமை
யவர்வியன் உலகமே.
தெளிவுரை : வளமையான தாமரை மலரில் மேவும் பிரமனும், நெடியவனாகிய திருமாலும் ஈசனுடைய சிறப்பினைச் சிறிதளவும் அறியாதவராயினர். மணம் பொருந்திய சோலைகளும் திருவிழாக்களும் எப்போதும் விளங்கும் கழுமல நகரில் வீற்றிருக்கும் தீவண்ணனின் திருவடியைத் தொழுபவர்களுக்கு, வினையானது ஏழு பிறப்புக்களுக்கு இல்லை. தேவலோகத்தில் உள்ள அத்தனை பெருமையும் இந்த உலகத்தில் எளிதாக அமையும்.
204. அமைவன துவர்இழு கியதுகில்அணி உடை
யினர்அமண் உருவர்கள்
சமையமும்ஒரு பொருள் எனும்அடை சலநெறி
யனஅற உரைகளும்
இமையவர்தொழு கழுமலர் அமர்இறைவனது
அடிபரவுவர்தமை
நமையல வினைநலன் அடைதலில் உயர்நெறி
நனிநணு குவர்களே.
தெளிவுரை : துவர் ஆடையை உடைய பௌத்தர்களும் சமணர்களும் ஒன்றினைச் சொல்வதாகக் கூறுவது நிலைத்து நிற்காத நெறி. எனவே அதனை விடுத்து, தேவர்கள் தொழுது போற்றும் கழுமலத்தில் வீற்றிருக்கும் ஈசனைப் போற்றுபவர்கள், வருத்தம் தரும் வினைகளே நன்மை பயப்பனவாய் உயர்ந்த நெறியில் விளங்குவார்கள்.
205. பெருகிய தமிழ்விர கினன்மலி பெயர்அவன்
உ<றைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடல்அடை கழுமலம்
உறைவிடம் எனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழி
யனஒரு பதும்உடன்
மருவிய மனம்உடை யவர்மதி உடையவர்
விதியுடை யவர்களே.
தெளிவுரை : திருப்பதிகத்தால் இனிமை தரும் தமிழை விரும்பும் திருஞானசம்பந்தர், கருமையான நிறமுடைய கடலின் அலைகள் பொருந்தும் கழுமலமானது சிவபெருமான் உறைகின்ற இடமாகக் கொண்டு போற்றிப் பாடிய இத் திருப்பாடல்களை மனத்தால் பொருந்திப் பாடுபவர்கள் அறிவுடையார் ஆவார்கள். நல்விதியை உடையவர்களும் அவர்களே.
திருச்சிற்றம்பலம்
20. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
206. தடநிலவியமலை நிறுவியொர் தழல்உமிழ்
தருபட அரவுகொடு
அடல்அசுரரொடுஅம ரர்கள் அலைகடல்கடை
உழிஎழு மிகுசின
விடம் அடைதருமிட றுடையவன் விடைமிசை
வரும்அவன் உறைபதி
திடமலிதருமறை முறைஉணர் மறையவர்
நிறைதிரு மிழலையே.
தெளிவுரை : மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்கிற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்கள் ஒருபுறத்திலும், அசுரர்களண ஒருபுறத்திலும் பாற்கடலைக் கடைந்தபோது கொடிய விடம் எழ, அதனை மிடற்றில் தேக்கியவன், இடபவாகனத்தில் வரும் ஈசன் ஆவான். அப்பெருமான் உறைகின்ற பதி வேதத்தை முறையாகக் கற்றுணர்ந்த மறையவர்கள் வாழும் திருவீழிமிழலை யாகும்.
207. தரையொடு திவிதல நலிதருதகுதிறல்
உறுசலதரனது
வரையன தலைவிசை யொடுவரு திகிரியை
அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதிபொதிசடை
யவன்உறை பதிமிகு
திரைமலிகடல்மணல் அணிதரு பெறுதிடர்
வளர்திரு மிழலையே.
தெளிவுரை : பூவுலகத்தையும் விண்ணுலகத்தையும் நலிவடையச் செய்த வெண்மையான பலத்தை உடைய சலந்தராசுரனுடைய மலை போன்ற தலை அறுந்து விழுமாறு செய்த சக்கராயுதப் படையைத் திருமால் பெறுவதற்கு அருள் புரிந்தான் ஈசன். அப்பெருமான், புகழ் மிக்க கங்கையும் சந்திரனும் தன் சடை முடியில் இருக்கச் செய்தவன். அவன் உறைகின்ற பதியானது அலைகடல் மணல் மேட்டைப் போன்ற திட்டுகள் உடைய திருவீழிமிழலை ஆகும்.
208. மலைமகள் தனைஇகழ் வதுசெய்த மதியறு
சிறுமனவனது உயர்
தலையினொடு அழல்உரு வனகரம் அறமுனி
வுசெய்தவன் உறைபதி
கலைநில வியபுல வர்கள் இடர்களைதரு
கெடைபயில் பவர்மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய திகழ்பொழில்
வளர்திரு மிழலையே.
தெளிவுரை : உமாதேவியை மதியாமல் இழிவு செய்த மதியற்ற தட்சப் பிரமனுடைய தலையோடு அக்கினி தேவனுடைய கரங்களையும் அறுந்து வீழுமாறு சினம் கொண்டு தண்டித்த ஈசன் உறையும் நகரானது, கலைப் பண்பு நிலவும் புலவர்களும், பிறருடைய இடரைப் போக்கும் வகையில் கொடைமிக்க செல்வந்தர்களும் உடைய, உயர்ந்த மதில்களும் அதனைச் சூழ்ந்த சோலைகளும் உள்ள திருவீழிமிழலை யாகும்.
209. மருவபர்புரமெரி யினன்மடிதரஒரு
கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நல மலிதருகரன்உர
மிகுபிணம் அமர்வன
இருளிடை அடைஉற வொடுநட விசைஉறு
பரன்இனிது உறைபதி
தெருவினில் வருபெரு விழஒலிமலிதர
வளர்தரு மிழலையே.
தெளிவுரை : ஈசன், அன்பு துளியும் இன்றி தீங்கு செய்யும் தொழிலும் பகைமையும் உடைய மூன்று அசுரர்களின் கோட்டைகளும் எரிந்து அழியுமாறு, ஓர் அம்பினை ஏவும் பெரும் வலிமையுடையவன்; நல்லருள் யாண்டும் புரியும் கரங்களை யுடையவன்; இடுகாட்டில் நள்ளிரவில் நடம் பயில்பவன். அவன் இனிது உறையும் பதியானது விழாக்கள் பெருகும் திருவீழிமிழலை.
210. அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடும்
அடிஇணை இருவர்கள்
பணிதர அறநெறி மறையொடும் அருளிய
பரன்உறை விடம்ஒளி
மணிபொருவரு மரகத நிலமலிபுனல்
அணைதரு வயல்அணி
திணிபொழில் தருமணம் அதுநுகர் அறுபதம்
முரல்திரு மிழலையே.
தெளிவுரை : அழகு பெறும் ஆல் நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் தெளிவுறுமாறு அறநெறி புகன்ற இறைவன் உறைகின்ற இடமாவது, மாணிக்க மணிகளும் மரகத மணிகளும் விளங்க, நீர் வளம் பெருகும் வயல்களும், அழகிய சோலைகளும் பெருக, வண்டுகள் ஒலி எழுப்பித் தேனைப் பருகி மகிழும் பெற்றியை உடைய திருவீழிமிழலை ஆகும்.
211. வசையறு வலிவன சரஉரு வதுகொடு
நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகள்அணிவுறுதிறல்
அமர்மிடல் கொடுசெய்து
அசைவில படைஅருள் புரிதரும் அவன்உறை
பதியது மிகுதரு
திசையின் இனமலர்குல வியசெறிபொழில்மலி
தருதிரு மிழலையே.
தெளிவுரை : குற்றம் இல்லாத வலிமையுடைய வேடன் உருவம் தாங்கி உமாதேவியார் காணுமாறு, தவம் செய்து விசயனுடைய திறமையை அறியுமாறு காட்டும் வலிமை மிக்க போர் செய்து, அசைக்க முடியாத பாசுபதம் என்னும் படையை அருளிய சிவபெருமான் உறைகின்ற பதியானது, எல்லாத் திசைகளிலும் கொத்துக் கொத்தாக மலர் விளங்கும் பொழிலை உடைய திருவீழிமிழலை யாகும்.
212. நலமலிதருமறை மொழியொடு நதியுறு
புனல்புகை ஒளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன் மறையவன்
உயிரது கொளவரு
சலமலி தருமறலிதன்உயிர்கெடஉதை
செய்தஅரன் உறைபதி
திலகம் இதுஎனஉல குகள்புகழ்தருபொழில்
அணிதிரு மிழலையே.
தெளிவுரை : நலந்தரும் வேத மந்திரங்களை ஓதியும், புனிதமான தீர்த்தம் மற்றும் தூப தீபம், மலர், இவற்றால் பூசித்து ஆராதனை செய்து வழிபடும் மார்கண்டேயரின் உயிரைக் கொண்டு செல்வதற்காக வந்த வஞ்சனையுடைய எமனின் உயிர் கெடுமாறு திருப்பாதத்தால் உதைத்த சிவபெருமான் உறைகின்ற பதியானது, நகர்களுள் திலகம் போன்ற சிறப்புடையது என்று உலகத்தோரால் புகழப்படும் சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை ஆகும்.
213. அரன்உறை தருகழி லையைநிலைகுலைவது
செய்த தசமுகனது
கரம்இரு பதுநெரி தரவிரல்நிறுவிய
கழல்அடி உடையவன்
வரள்முரை உலகவை தருமலர் வளர்மறை
யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதருசிவன்உறை
பதிதிரு மிழலையே.
தெளிவுரை : தனது இருப்பிடமாகிய திருக்கயிலையைப் பெயர்த்து எடுத்த, பத்துத் தலைகள் உடைய இராவணனுடைய இருபது கரங்கள் துன்புறுமாறு திருப்பாத விரலால், அழுத்தியவன் ஈசன். அப்பெருமான், தன் திருஉளப் பாங்கின்படி அவ்வவர்க்கு உரியவாறு படைத்தல் தொழிலைச் செய்யும் பிரமன், தவறு செய்தபோது அவன் தலைகளுள் ஒன்றைக் கொய்து அதனைத் திரு ஓடாகக் கொண்டு பலியேற்றுத் திரிந்தவன். அத்தகைய சிவபெருமான் உ<றைகின்ற பதி, திருவீழிமிழலை.
214. அயனொடும் எழில்அமர் மலர்மகள் மகிழ்கணன்
அளவிடல் ஒழியஒர்
பயம்உறுவகை தழல் நிகழ்வதொர்படி உரு
வதுவர வரன்முறை
சயசய எனமிகு துதிசெயவெளியுரு
வியஅவன் உறைபதி
செயநில வியமதில் மதியதுதவழ்தர
உயர்திரு மிழலையே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் அளவிட முடியாதவாறு அச்சம் உற்று அயர்ந்து நிற்கும் வகையாய், சோதி உருவாகித் திகழ, வானத்தையும் கடந்து நின்றவனாய் யாவரும் போற்றித் துதி செய்யுமாறு விளங்கினான், பரமன். அவன் உறையும் பதி திருவீழிமிழலை.
215. இகழ்உருவொடுபறி தலைகொடும்இழிதொழில்
மலிசமண் விரகினர்
திகழ்துவர்உடை உடல் பொதிபவர்கெடஅடி
யவர்மிக அருளிய
புகழ்உடை இறைஉறை பதிபுனல் அணிகடல்
புடை தழுவியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு
திகழ்திரு மிழலையே.
தெளிவுரை : பிறரால் இகழப்படுமாறு வடிவத்தைக் கொண்டவராகிய சமண மற்றும் பௌத்தர்கள் நன்மைகளைப் பெறாமல் அயலே இருக்க, அடியவர்களுக்குப் பேரருள் புரியும் புகழ் உடைய இறைவன் உறையும் பதியாவது, நதிகள் யாவும் சேரும் கடல் சூழ்ந்த நிலவுலகில் திகழும் தேவநாந்தர்களுக்கு நிகராகக் கொடை மல்கும் பெருமக்கள் பொருந்தி விளங்கும் திருவீழிமிலையாகும்.
216. சினமலி கரிஉரி செய்தசிவன் உறைதிரு
திருமிழலையை மிகு
தனமனர் சிரபுர நகர்இறை தமிழ்விர
கனதுஉரை ஒருபதும்
மனமகிழ் வொடுபயில் பவர்எழில்மலர்மகள்
கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மகள் இசைதர இருநிலன்
இடைஇனிது அமர்வரே.
தெளிவுரை : மிகுந்த சினத்தோடு ஏவப்பட்ட யானையின் தோலை உரித்தவர் சிவபெருமான். அவர் உறைகின்ற திருவீழிமிழலையை, செல்வம் கொழிக்கும் மனத்தை யுடையவர் விளங்கும் சீகாழி நகர் இறைவனுடைய திருஞானசம்பந்தர் உரைத்த இத் திருப்பதிகத்தைப் பெருமகிழ்வுடன் ஓதுபவர்கள் எழில் மிக்க செல்வம் பெறுவர்; கல்வி ஞானமும் பெரும் புகழும் அடைவர்; இவ் உலகத்தில் இனிது மகிழ்ந்திருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
21. திருச்சிவபுரம் (அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம்,தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
217. புவம்வளி கனல்புனல் புவிகலை உரைமறை
திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியேர்திகழ்தரும்
உயிர்அவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன்
மலரது மருவிய
சிவனது சிவபுர நினைபவர் செழுநிலன்
இனிநிலை பெறுவரே.
தெளிவுரை : ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண், அறுபத்தி நான்கு கலைகள், உரைக்கும் வேதம், சத்துவ, ரஜோ, தாமசம் ஆகிய முக்குணங்கள் அமையும் நெறிமுறை யாவும் விண்ணுலகத்தில் விளங்கும் தேவர்கள் மற்றும் உயிர் வகைகளுக்கு அவ்வற்றின் வினைக்கு ஏற்ப, படைத்தல் அவன் சிவபெருமான் திருஉருவத்தை மனத்தில் பதித்தமையால் இத்தொழிலைச் செய்பவனாகிறான். இச் சிறப்புடன் சிவபுரத்தை நினைத்து வணங்குபவர்கள் செழுமையான இந்நிலவுலகில் இனிய நிலையைப் பெறுவார்கள்.
218. மலைபல வளர்தரு புவிஇடை மறைதரு
வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு
வகை நினைவொடு மிகும்
அலைகடல் நடுஅரி துயில்அமர்அரிஉரு
இயல்பரன் உறை பதி
சிலைமலி மதிள்சிவ புரநினைபவர்திரு
மகளொடு திகழ்வரே.
தெளிவுரை : மலைகள் வளர்ந்தோங்கும் புவியில் வேதங்களை வழிவழியாக ஓதும் மாந்தர்களும், தேவர்களும் மற்றும் எல்லா உலகங்களும் நிலைபெற்று இருக்க வேண்டும் என்ற நினைப்புடன் பாற்கடலின் நடுவே அரிதுயில் கொள்ளும் திருமால் உருவின் இயல்புடன் சிவன் உறையும் பதியாகிய சிவபுரத்தை நினைத்து வணங்குபவர்கள் பொருட் செல்வத்தை வளமுடன் பெற்றவர்கள் ஆவார்கள்.
219. பழுதிலகடல்புடை தழுவியபடிமுத
லிய உலகுகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்குலமலி
தருமள் உயிர்அவை யவை
முழுவதும் அழிவகை நினைவொடுமுதல்உரு
இயல்பரன் உறைபதி
செழுமணி அணிசிவ புரநகர் தொழுமவர்
புகழ்மிகும் உலகிலே.
தெளிவுரை : பழுது இல்லாத கடலால் சூழப்பட்ட இவ்உலகம் முதலாக எல்லா உலகங்களும், தேவர்கள் மற்றும் மக்கட் குலமும் பிரளய காலத்தில் அழியும் போது எல்லாவற்றையும் அவ்வவ் உயிர்களையும், தமது திருமேனியில் ஒடுங்குமாறு செய்து அவ் இயல்புடன் பரன் உறையும் பதியாகிய சிவபுரத்தை வணங்கித் தொழுபவர்கள், உலகில் புகழுடன் விளங்குவார்கள்.
220. நறைமலி தரும்அள றொடுமுகை நகுமலர்
புகைமிகு வளர்ஒளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும்
வழிபடும் அடியவர்
குறைவில பதம்அணை தரஅருள் குணம்உ<டை
இறைஉறைவன பதி
சிறைபுனல் அமர்சிவ புரமது நினைபவர்
செயமகள் தலைவரே.
தெளிவுரை : மணம்மிக்க சந்தனம், அரும்பு அவிழ்ந்த மலர், தூபம், தீபம், புனித நீர், இவ்வாறான அபிஷேகப் பொருள்களால் ஒன்றிய சிந்தையுடன் விதிப்படி வழிபடும் அடியவர்கள், குறைவற்ற சிவனடியை நல்கும் அருள்குணம் உடைய இறைவன் உறையும் வனப்பு மிகுந்த பதியாகிய நீர்ப் பொய்கையுடைய சிவபுரத்தை நினைத்து வணங்குபவர்கள் ஆவர். அத்தகையோர், யாவற்றிலும் வெற்றி பெறுவர்.
221. சினமலி அறுபகை மிகுபொறி சிதைதரு
வகைவளி நிறுவிய
மனன் உணர் வொடுமலர் மிசைஎழு தருபொருள்
நியதமும் உணர்பவர்
தனதுஎழில் உருவது கொடுஅடைதகுபரன்
உறைவது நகர்மதிள்
கனமருவியசிவ புரநினை பவர்கலை
மகள்தர நிகழ்வரே.
தெளிவுரை : சினம் மற்றும் ஆறுவகையான பகையாகிய காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் (பொறாமை) இவைகளையும் புலன்களின் நாட்டத்தினால் மனம் சிதையாமல் ஒருமுகப்படுத்தி, இதய மலரின்கண் எழுதுவதற்கும் எண்ணுவதற்கும் அரும் பொருளாகிய பரம்பொருளைத் தியானம் செய்து யாண்டும் ஒழுகுபவர்கள், எழில் உருவாக விளங்கும் பரன் <உறையும் நகராகிய சிவபுரத்தை நினைப்பவர் ஆவர். அத்தகையோர் மெய்ஞ்ஞானம் உற்றவர்கள்.
222. சுருதிகள் பலநல முதல்கலை துகள்அறு
வகைபயில் வொடுமிகு
உருவியல் உலகவை புகழ்தர வழிஒழுகு
மெய்உறு பொறிஒழி
அருதவ முயல்பவர் தனதுஅடிஅடைவகை
நினைஅரன் உறைபதி
திருவருள் சிவபுர நினைபவர்திகழ்குலன்
நிலன்இடை நிகழுமே.
தெளிவுரை : வேதங்களைக் குற்றமில்லாமல் நன்கு தெளிவாகப் பயின்று, அதனால் அகத்தின் அழகு பெருகவும், பொலிவு பெற்றுப் புகழும்படி அவ்வழி நின்று ஒழுகியம், மெய்முதலாகிய ஐம்புலன் வழி மனத்தைச் செல்லவிடாமல் காத்து அருந்தவத்தைக் கடைப்பிடித்தும் விளங்குபவர்கள், தனது திருவடியை அடையுமாறு திருஉளம் கொள்ளும் ஈசன் உறையும் பதியானது திருவருளைப் பொழியும் சிவபுரம் ஆகும். அப்பதியை நினைத்து வணங்குபவரின் குலமானது இவ்வுலகத்தில் திகழ்ந்திருக்கும்.
223. கதமிகு கருஉரு வொடுஉகிர் இடவட
வரைகண கணஎன
மதமிகு நெடுமுகன் அமர்வளை மதிதிகழ்
எயிறுஅதன் நுதிமிசை
இதம்அமர் புவியது நிறுவிய எழில்அரி
வழிபட அருள்செய்த
பதம்உடை யவன்அமர் சிவபுரம் நினைபவர்
நிலவுவர் படியிலே.
தெளிவுரை : சினம் மிகுந்த கருமையான வடிவம் கொண்டு நகங்கள் பதியுமாறு உயரமாகிய மலைகள் அதிர, மதம் பொருந்திய நீண்ட முகத்தில் இருக்கும் பிறை மதியைப் போன்ற பிரகாசமான பற்களின் நுனியின் மீது உலகத்தை இதமாகத் தாங்கிய எழில் மிகுந்த திருமால் வழிபட, அருள்புரிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவபுரத்தை நினைத்து வணங்குபவர், உலகத்தில் நலமுடன் விளங்குவர்.
224. அசைஉறு தவமுயல வினில்அயன் அருளினில்
வருவலி கொடுசிவன்
இசைகயிலையை எழு தருவகை இருபது
கரம்அவை நிறுவிய
நிசிசிரன் முடிஉடை தரஒரு விரல்பணி
கொளும்அவன் உறைபதி
திசைமலி சிவபுர நினைபவர்செழுநிலன்
இனிநிகழ் உடையரே.
தெளிவுரை : உடம்பினை வருத்திக் தவம் புரிந்து பிரமனிடம் பல வரங்களைப் பெற்றவன் இராவணன். அந்த வர பலத்தைக் கொண்டு புகழ் மிக்க கயிலை மலையைப் பெயர்க்குமாறு தனது இருபது கரங்களைப் பயன்படுத்திய அவ் அரக்கன் தலையைப் பிளவு படுமாறு திருப்பாத விரலால் அழுத்திய சிவபெருமான் உறையும் பதி, எல்லாத் திசைகளிலும் புகழைப் பெருக்கும் சிவபுரம் ஆகும். அப்பதியை நினைத்து வணங்குபவர் <உலகில் இனிய வாழ்க்கையை உடையவராவர்.
225. அடல்மலி படைஅரி அயனொடும் அறிவரி
யதொர்அழல் மலிதரு
சுடர்உருவொடு நிகழ் தரஅவர் வெருவொடு
துதியது செயஎதிர்
விடமலிகள நுதல் அமர்கணது உடைஉரு
வெளிபடும் அவனகர்
திடமலி பொழில் எழில் சிவபுரநினைபவர்
வழிபுவி திகழுமே.
தெளிவுரை : வலிமை மிக்க சக்கராயுதத்தை உடைய திருமாலும், பிரமனும் அறிதற்கு அரியதோர் சோதி வடிவாகித் தோன்றி, பின்னர் அவர்கள் அதிர்ந்து வணங்கித் துதி செய்த காலத்தில் விடம் அருந்தி (நீல) கண்டமும், நெற்றிக் கண்ணும் தோன்றுமாறு தமது காட்சியை வெளிப்படுத்திய ஈசன் திருநகர் அடர்த்தியான சோலைகள் சூழ்ந்த அழகிய சிவபுரம் ஆகும். அப்பதியை நினைத்து வணங்குபவர்களுக்கு அவர்கள் எண்ணியவாறு உலகம் வளத்துடன் திகழும்ற.
226. குணம்அறிவுகள் நிலை இலபொருள்உரைமரு
வியபொருள் களும்இல
திணம்எனும் அவரொடு செதுமதிமிகுசம
ணருமலி தமதுகை
உணல்உடை யவர்உணர் வருபரன்உறைதரு
பதிஉலகினில் நல
கணமருவியசிவ புரநினைபவர்எழில்
உருஉடை யவர்களே.
தெளிவுரை : குணம், அறிவு முதலான யாவும் நிலையற்றன என்னும் கொள்கையுடைய சமணர் முதலானோர்களுக்கு உணரப்படாதவனாகிய பரமன் உறையும் பதியானது, நலம் திகழ் அடியார் திருக்கூட்டம் மருவும் சிவபுரம் ஆகும். அதனை நினைத்து வணங்குபவர்கள் அழகிய வடிவத்தை அடைவார்கள்.
227. திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி
இணை பணிசிரபுர
நகர்இறை தமிழ்விரகனது உரைநலமலி
ஒருபது நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருஉரு நிகரில
கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி அடிமையின் மிகைபுணர்
தரநல மிகுவரே.
தெளிவுரை : சிவபுரத்தில் எழுந்தருளியுள்ள ஈசனின் இணையடி மலரைப் பணியும் சீகாழித் தலைவரான திருஞானசம்பந்தர் உரைத்த இத் திருப்பதிகத்தை நவில்பவர்கள், குலம், நிலம், நிறைந்த செல்வம், நல்ல அழகு தோய்ந்த வடிவம், நிகரில்லாத கொடைப்பாங்கு, வெற்றி, புகழ், உலகம் சிறக்குமாறு கொள்ளும் நன்மார்க்கம் ஆகியவற்றை நலமுடன் வாய்க்கப் பெறுவர். மேலும் பணி செய்வதற்குரிய ஏவலர்கள் மிகையான அன்புடன் வாய்க்கப் பெற்று தரத்தில் சிறப்புற்று விளங்குவர்.
திருச்சிற்றம்பலம்
22. திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
228. சிலைதனை நடுவிடை நிறுவியொர்சினமலி
அரவது கொடுதிவி
தலமலி சுரர்அசு ரர்கள்ஒலிசலசல
கடல்கடை உழிமிகு
கெலைமலி விடம்எழ அவர்உடல் குலைதர
அதுநுகர்பவன் எழில்
மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம்
அமர்தரு பரமனே.
தெளிவுரை : மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகவும் கொண்டு விண்ணுலகத்தின் தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மற்றொரு புறமும் இருந்து சலசல என்னும் ஒலி எழுமாறு பாற்கடலைக் கடையும்போது கொடிய விடமானது எழுந்தது. அது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அச்சமும் நடுக்கமும் கொடுத்தது. சிவபெருமான் அக்கொடிய நஞ்சினை அருந்திய பரமன். அவன், மலைபோன்ற பெரிய மதில்கள் சூழ்ந்த மறைக் காட்டில் வீற்றிருக்கின்றான்.
229. கரம்முத லியஅவ யவம்அவை கடுவிட
அரவது கொடுவரு
வரன்முறை அணிதரும் அவன்அடல்வலிமிகு
புலிஅதன் உடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை இமையவர்
புரம்எழில் பெறவளர்
மரநிகர் கொடை மனி தர்கள்பயில் மறைவனம்
அமர்தரு பரமனே.
தெளிவுரை : திருக்கரம் முதலாகத் திருமேனியில் உள்ள அவயவங்கள் யாவற்றினும், கடுமையான பாம்பு மற்றும் பிற அனைத்தையும் வரான் முறையுடன் அணிகலனாகச் சூடியவன், சிவபெருமான். அவன் வலிமை மிக்க புலியின் தோலை உடையாகக் கொண்டவன். இல்லை என்று யாசிப்பவர்களுடைய துன்பத்தைத் தீர்க்கவும், தேவலோகம் சிறப்புக் கொள்ளவும் செய்யும் கற்பக மரத்தை ஒத்த நற்பண்பு நிறைந்த மாந்தர்கள் விளங்கும் மறைக் காட்டியல் அப்பெருமான் வீற்றுள்ளான்.
230. இழைவளர் தருமுலை மலைமகள் இனிது உறை
தரும்எழில் உருவினன்
முழையினில் மிகுதுயில் உறும்அரிமுசிவொடும்
எழமுளரியொடு எழு
கழை நுகர்தருகிரி இரிதரு கயிலையில்
மலிபவன் இருள்உறும்
மழைதவழ் தருபொழில் நிலவிய மறைவனம்
அமர்தரு பரமனே.
தெளிவுரை : அழகிய ஆபரணங்களைத் தனங்களில் பொருந்துமாறு அணிந்த உமாதேவி இனிதாய் இடப் பாகத்தில் உறையுமாறு செய்த அழகிய வடிவம் கொண்டவன் சிவபெருமான். அப்பெருமான், குகையில் நீண்ட துயில் கொள்ளும் சிங்கம் தனது கொடூரத்தை நீக்கி எழவும், கரும்பை உணவாகக் கொள்ளும் யானையின் மதம் பொருந்திய உணர்வு கெடுமாறும் இனிய தன்மையுடைய திருக்கயிலையில் விளங்குபவன். அவன், இருண்ட மேகம் போன்று பொழிலை யுடைய மறைக்காட்டில் வீற்றிருக்கும் பரமன்.
231. நலமிகு திருஇத ழியின்மலர் நகுதலை
யொடுகன கியின்முகை
பலசுர நதிபட அரவொடு மதிபொதி
சடைமுடி யினன்மிகு
தலநில வியமனி தர்களொடு தவமுயல்
தருமுனி வர்கள்தம
மலம்அறு வகைமன நினைதரு மறைவனம்
அமர்தரு பரமனே.
தெளிவுரை : நலத்தின் மிக்க கொன்றை மலரும், தலை மாலையும், ஊமத்தை மலர், கங்கை, அரவம், இளம் பிறை மதி யாவும் சடை முடியில் தரித்து உள்ளவன், ஈசன். திருத்தலங்களில் வாயும் மாந்தர்களும் தலமுனிவர்களும் தத்தம் மலங்கள் அற்று வீழும்படி நினைக்குமாறு செய்யும் மறைக்காட்டில் அப்பெருமான் வீற்றுள்ளான்.
232. கதிமலி களிறது பிளிறிட உரிசெய்த
அதிகுணன் உயர்பசு
பதிஅதன் மிசைவரு பசுபதி பலகலை
அவைமுறை முறைஉணர்
விதிஅறி தருநெறி அமர்முனி கணனொடு
மிகுதவமுயல் தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர் மறைவனம்
அமர்தரு பரமனே.
தெளிவுரை : மிகுந்த சினத்துடன் வந்த யானை, பிளிறல் செய்து ஓலம் இடும்படி அதன் தோலை உரித்த சிறப்பான குண விசேடனாகியவன். ஈசன், அவன் பசுபதியானவன். அதற்கு மேலும், உயிரைப் பற்றியும் பதியைப் பற்றியும் நன்கு முறைப்படி சிந்தித்து உணர்ந்து, அதற்குரிய விதிகள் வழி நிற்கும் அறிஞர்களுடன் சேர்ந்து தவத்தை மேற்கொள்பவர்களும் அவற்றில் பாண்டித்தியம் பெற்ற அதி நிபுணர்களும் வழிபடும் திருமறைக்காட்டில் அப்பெருமான் வீற்றிருப்பவர்.
233. கறைமலிதிரிசிகை படைஅடல் கனல்மழு
எழுதர வெறிமறி
முறைமுறை ஒலிதம ருகம்உடைதலை முகிழ்
மலிகணி வடமுகம்
உறைதருகரன்உல கினில் உயர்ஒளிபெறு
வகை நினை வொடு மலர்
மறையவன் மறைவழி வழிபடு மறைவனம்
அமர்தரு பரமனே.
தெளிவுரை : மாற்றாரை அழிப்பதனால் உண்டாகும் குருதிக்கறை படர்ந்த திரிசூலம், நெருப்பை ஒத்த மழு, வெறித்த நோக்குடைய மான், முறையான ஒலி எழுப்பும் உடுக்கை, பிரம கபாலம், கூரிய ஆயுதம், வடவாக்கினி போன்ற சுவாலைமிகுந்த தீ ஆகியவற்றை உடையவன் ஈசன். உலகத்தில் புகழ் ஓங்கி நிற்குமாறு, தாமரை மலர் மீது விளங்கும் பிரமன், வேத விதிப்படி வழிபடும் மறைக்காட்டில், அப்பெருமான் வீற்றுள்ளான்.
234. இருநிலனது புனல் இடையடி தரஎரி
புகஎரி அதுமிகு
பெருவெளி யினில்அவி தரவளி கெடவியன்
இடைமழு வதுகெட
இருவர்கள் உடல்பொறை யொடுதிரி எழில்உரு
உடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம்
அமர்தரு பரமனே.
தெளிவுரை : பூமியானது (நிலம்) நீரிலும், அது தீயிலும், தீயானது வளியிலும், வளி வானிலும் ஒடுங்கும் நிலையில், திருமாலும் பிரமனும் சுமையாகிய உடலைக் கொண்டு திரிந்தனர். ஐம்பெரும் பூதங்களும் உடலைக் கொண்டு திரிந்தனர். ஐம்பெரும் பூதங்களும் ஒன்றின் ஒன்றாய் ஒடுங்கவும், அவற்றைத் தன்னில் ஒடுக்கவும் எழில் மிக்கவனாகிய ஈசன், வண்டுகள் ரீங்காரம் செய்யும் மறைக்காட்டில் வீற்றுள்ளான்.
235. சனம்வெரு வுரவரு தசமுகன் ஒருபது
முடியொடும் இருபது
கனமரு வியபுய நெறிவகை கழலடி
யில்ஒர் விரல் நிறுவினன்
இனமலி கணநிசி சரன்மகிழ்வுறஅருள்
செய்த கருணையன் என
மனமகிழ் வொடு மறை முறைஉணர் மறைவனம்
அமர்தரு பரமனே.
தெளிவுரை : நிலவுலக மக்கள் நடுங்குமாறு இராவணன் பத்துத் தலையும் வலிமை மிக்க இருபது தோள்களும் கொண்டு கயிலையைப் பெயர்த்தபோது அவ் அரக்கன் துன்புறுமாறு ஒரு விரலால் ஊன்றி, பின்னர் அவன் மகிழுமாறு நல்வரங்களைத் தந்தருளியவன் ஈசன். அக்கருணை வள்ளலாகிய பரமன், வேதங்கள் மகிழ்ச்சியுடன் முறையோடு வணங்கும் மறைக் காட்டில் அமர்ந்துள்ளவன்.
236. அணிமலர் மகள்தலை மகன்அயன் அறிவரி
யதொர் பரிசினல் எரி
திணிதரு திரள்உரு வளர்தர அவர்வெரு
வுறலொடு துதிசெய்து
பணியுற வெளியுறு வியபரன் அவன்உரை
மலிகடல் திரள்எழும்
மணிவளர் ஒளிவெயில் மிகுதரு மறைவனம்
அமர்தரு பரமனே.
தெளிவுரை : அழகு பொருந்திய தாமரை மலரில் திகழும் திருமகள் தலைவனாகிய திருமாலும், பிரமனும் அறியமுடியாதபடி சோதி வடிவாகிப் பெருகி வளர்ந்தவனாய், பின்னர் அவர்கள் பணிந்து துதி செய்தபோது வெளிப்பட்டுத் தோன்றித் திருக்காட்சி நல்கிய பரமன், ஒலி தரும் கடல் அலைகளும், மாணிக்கத்தை ஒத்த சுடர் ஒளிசேர் வெயிலும் தரும் மறைக்காட்டில் அமர்ந்துள்ளவன்.
237. இயல்அழிதர விதுசெலவுற இனமயில்
இறகுஉறு தழையொடு
செயல்மருவிய சிறுகட முடிஅடைகையர்
தலைபறி செய்து தவம்
முயல்பவர் துவர்பட முடல்மொழி பவர்அறி
வருபரன் அவன்அணி
வயலினில் வளைவள மருவிய மறைவனம்
அமர்தரு பரமனே.
தெளிவுரை : இயல்பாகிய வெப்பம் கெடுமாறு மயில் இறகால் செய்யப்பட்ட விசிறியைக் கொண்டு தண்மையைக் கொள்பவர்களும், தலையின் சிகை நீக்கித் தவக்கோலத்தைப் புனைந்தவர்களுமாகிய புறச் சமயத்தவர்களுக்கு அறிய மாட்டாதவனாகிய பரமன், அழகிய வயல்களில் சங்குகளின் வளப்பமாகிய முத்துக்கள் பரவிய மறைக்காட்டில் அமர்ந்துள்ளவன்.
238. வசைஅறு மலர்மகள் நிலவிய மறைவனம்
அமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள்
புகழ்வழி வளர்தரு
இசைஅமர் கழுமல நகர்இறைதமிழ்விர
கனதுஉரை இயல்வல
இசைமலி தமிழ்ஒரு பதும்வல அவர்உல
கினில் எழில் பெறுவரே.
தெளிவுரை : வசை இல்லாது திருமகள் வாசம் புரிந்து செல்வ வளம் பெருக்கும் மறைக்காட்டில் வீற்றிருப்பவன் ஈசன். அவனை, விருப்பத்துடனும் பக்தியுடனும் பல சாத்திரங்களைப் பயிலும் அறிஞர் பெருமக்களால் புகழ்ப்படுகின்ற பெருமைமிக்க கழுமல நாதனால் ஆட்கொள்ளப்பெற்ற திருஞானசம்பந்தர் போற்றி உரை செய்த இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள் எழில் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
23. திருக்கோலக்கா (அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கோலக்கா, சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
239. மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும்கீழ்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ
தெளிவுரை : மடைகளில் வாளை மீன்கள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கவும், மாதர்கள் குளத்தில் குடைந்து நீராடி மகிழவும் விளங்குகின்றது கோலக்கா என்னும் ஊர். அங்கு எழுந்தருளியுள்ள ஈசன், சடைமுடியும், இளம் பிறைமதியும், திருநீற்றின் பூச்சும், கோவண ஆடையும் கொண்டுளுள்ள வடிவம் உடையவன். இது என்கொல்
240. பெண்தான் பாகமாகப் பிறைச் சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதம் கையால் கூப்பவே
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே.
தெளிவுரை : ஈசன், உமாதேவியைப் பாகமாகவும், வெண்பிறைச் சந்திரனைத் தலையிலும் கொண்டவன். அப்பெருமான், கோலக்காவை இருப்பிடமாகக் கொண்டான். தேவர்கள் அவன் திருவடியைக் கூப்பித் தொழுது வணங்க, உலக நன்மையைக் கருதி நஞ்சை உண்டு பாதுகாத்தான்.
241. பூண்நல் பொறிகொள் அரவம் புன்சடை
கோணல் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே.
தெளிவுரை : அரவத்தை ஆபரணமாகப் பூண்டு, சடைமுடியில் வளைந்த பிறைச் சந்திரனைக் கொண்ட அழகனாகக் கோலக்காவில் விளங்கும் ஈசனைப் பெருமையோடு துதித்துப் பாடி, மறைவல்லவனாகிய அவனை நன்கு பூசித்துப் பேணுதல் செய்யப் பிணிகள் யாவும் நீங்கும்.
242. தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசேர் அங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.
தெளிவுரை : வினையாகிய தழுவைக் கொள்ளும் பாவத்தைப் போக்க வேண்டும் என்று வேண்டுபவர்களே ! திருக்கோலக்காவில் திருக்கரத்தில் மானும், மழுவும் ஏந்தி பூதப்படைகள் சூழ, விளங்கும் ஈசனை ஒழுக்கம் தவறாமல் துதித்து வாழ்வீர்களாக.
243. மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாப எரித்த எந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிறகப் பறையும் பாவமே.
தெளிவுரை : மயில்போன்ற வண்ணமிகு சாயலையுடைய உமாதேவியை ஒரு பாகமாக உடைய ஈசன், மும்மதில்களையுடைய கோட்டைகளை எரித்து அழித்தவன். அவன், குயில்கள் பாடிப் பொருந்தும் சோலை சூழ்ந்த கோலக்காவை நெஞ்சார நினைத்துப் போற்ற பாவம் விலகும்.
244. வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுள்எம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.
தெளிவுரை : கண்ணுக்குப் புலனாகாமல் திடீரென்று தாக்க வல்ல தீய வினைகள் அகற்ற வேண்டும் என்று வேண்டுபவர்களே ! மணம் மிக்க கொன்றை மலரைச் சென்னியில் சூடிய எம் அடிகளாகிய, விழாக்கள் பெருகும் கோலக்கா மேவியவனை அடைந்து அவனது திருவடியைப் பணிந்து வாழ்வீர்களாக.
245. நிழலார் சோலை நீல வண்டினம்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.
தெளிவுரை : நிழல் தரும் சோலைகளில் உள்ள மலர்களைச் சூழந்து கரிய வண்டுகள் புல்லாங் குழலை நிகர்த்த பண் இசைத்துப் போற்ற, கோலக்காவுள் ஈசன் மேவினன். அவன் திருவடியைத் தொழுபவர்களுக்குத் துயரம் இல்லை.
246. எறிஆர் கடல்சூழ் இலங்கைக் கோன்தனை
முறிஆர் தடக்கை அடர்த்த மூர்த்திதன்
குறிஆர் பண்செய் கோலக் காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.
தெளிவுரை : அலைகளைக் கரையில் எறிந்து வீசும் கடல் சூழந்த இலங்கைக் கோனாகிய இராவணனுடைய முறியும் தன்மையுடைய நீண்ட கைகளைத் துன்புறுத்தியவன். ஈசன். தன்னையே குறியாகக் கொண்டு பண்பாடிப் போற்றும் நெறியுடையவராய்க் கோலக்காவில் தொழுபவர்களுக்கு வினைகள் யாவும் நீங்கும். ஆதலால் அப்பெருமானை நெறி முறைப்படி வணங்குதல் வேண்டும்.
247. நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
ஆற்றல் அணைமே லவனும் காண்கிலாக்
கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.
தெளிவுரை : நறுமணம் கமழும் தாமரை மலர்மீது விளங்கும் பிரமனும், அரவணையில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலும் காண்கிலாதவனாகிக் காலனை உதைத்த அழகனான ஈசன் திருக்கோலக்காவை இடமாக உடையவன். அவனுடைய திருவடியை வணங்கி வாழ்வீர்களாக.
248. பெற்ற மாசு பிறக்கும் சமணரும்
உற்ற துவர்தோழ் உருவி லாளரும்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே.
தெளிவுரை : சமணர் மற்றும் குற்றமுள்ள நெறியுடைய பிறர், நன்மையைக் கொள்ள மாட்டார்கள். கோலக்காவில் மேவும் ஈசன்மீது பற்றுக்கொண்டு வணங்கிப் போற்றுபவர்களின் பாவம் நீங்கும்.
249. நலங்கொள் காழி ஞானசம் பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.
தெளிவுரை : ஞானப்பால் அருந்தி எல்லா நன்மைகளும் கைவரப்பெற்ற ஞானசம்பந்தர், திருத் தொண்டர்தம் குலங்களைக் கொண்டு விளங்கும் திருக்கோலக்காவில் உறையும் ஈசனைப் போற்றி நன்மைகள் யாவும் கொண்டு விளங்கும்படி இசைத்த இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், பாறை போன்ற வினை யாவும் நீங்கி ஓங்கி வாழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
24. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
250. பூவார் கொன்றைப் புரிபுன் சடைஈசா
காவாய் எனநின்று ஏத்தும் காழியார்
மேவார் புரமூன்று அட்டார் அவர்போலாம்
பாஆர் இன்சொல் பயிலும் பரமரே.
தெளிவுரை : கொன்றை மாலை சூடிப் புரிபுரியாக முறுக்கேறிய புல்லிய சடையுடைய ஈசா ! எம்மைக் காத்தருள் புரிவாய் எனத் தேவர்கள் நின்று தொழுது ஏத்த, பகைவர்களாகிய மூன்று அசுரர்களையும் கோட்டைகளுடன் அழத்த பரமர், பாடல்களில் விளங்கும் இன் சொற்களின் பொருள்களை ஏற்கும் காழிப் பதியில் உறை நாதனேபோலும்
251. எந்தை என்றுஅங்கு இமையோர் புகுந்துஈண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமலர் அவர்போலாம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.
தெளிவுரை : எமது தந்தை என்று தேவர்களால் போற்றப்பட்டு மாலை சாற்றி வழிபடும் காழிப் பதியின் நாதனாகிய ஈசன், திருநீற்று மேனியர், விமலர், பிரளய காலத்தில் நட்டம் பயிலும் நடன மூர்த்தியாவார்.
252. தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்
கான மான்கைக் கொண்ட காழியார்
வானம் ஓங்கு கோயில் அவர்போலாம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.
தெளிவுரை : தேனினும் இனிய மொழியுடைய ஞானாம்பிகையாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்து, மானைக் கரத்தேந்தியவர் காழியார். அப்பெருமான் ஆனந்தத் தாண்டவம் புரிபவர். அவர் இடங்கொண்டிருப்பது அவரை நிகர்த்து ஓங்கும் சிறப்புடைத்து.
253. மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்
நாணார் வாளி தொட்டார் அவர்போலாம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.
தெளிவுரை : காலனுடைய வெற்றி மாட்சிமையற்றது. ஈசனைத் தவிர பிறிதொன்றும் காணாத மார்க்கண்டேயர் உயிரைக் காக்கும் பொருட்டு, காலனை மாய்த்தவர், ஈசன் பேணிக்காத்தற்கு ஒவ்வாத முப்புர அசுரர்களை எரித்துப் பொடி படுத்துவதற்குச் சரம் தொடுத்தவர் அப்பெருமான். அவர் காழிநகரில் விளங்குபவர் போலும்.
254. மாடே ஓதம் எறிய வயல்செந்நெல்
காடே றிஇச்சங்கு ஈனும் காழியார்
வாடா மலராள் பங்கர் அவர்போலாம்
ஏடார் புரமூன்று எரித்த இறைவரே.
தெளிவுரை : கடலின் ஓதம், பக்கம் சார்தலால் அவ்வழியாகச் சங்குகள் போந்து செந்நெலுடன் பொருந்தி விளங்குகின்றன. குற்றம் புரிந்த முப்புர அசுரர்களை எரித்த இறைவர் வாடா மலர் போன்ற உமாதேவியாரைப் பாகமாக உடையவர். அவர் காழிப் பதியில் விளங்கும் ஈசனே போலும்.
255. கொங்கு செருநதி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.
தெளிவுரை : தேன் பெருகும் கொன்றை மலரும் கங்கையும் புனைந்த சடையுடைய ஈசன் அரவத்தை ஆடச் செய்பவராயும் விளங்கி, அரக்கர்தம் முப்புரங்களை எரித்தவர். அவர் காழிப்பதிநாதர் போலும்.
256. கொல்லை விடைமுன் பூதம் குனித்தாடும்
கல்ல வடத்தை உகப்பார் காழியார்
அல்ல இடத்து நடந்தார் அவர்போலாம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே.
தெளிவுரை : இடப வாகனத்தின் முன் பூத கணங்கள் குதித்து ஆடவும் செய்யும். தன்னை ஏற்காதவர்கள் இடத்திலும் மற்றும் வேற்றுமையின்றி எல்லா இடங்களிலும் வியாபித்து இருப்பவர் ஈசன். அவர் கல்லால மரத்தின் அடியிலும் <உகப்பவர். அவர் காழிப் பதியில் உறைபவர் போலும்.
257. எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற்கு இரங்கும் அவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே.
தெளிவுரை : மலையை எடுத்த அரக்கன் நெரியுமாறு விரலை ஊன்றி, சினத்தால் தண்டித்தார் ஈசன். பின்னர் அவ் அரக்கன் இசை எழுப்பித் துதி செய்ய இரக்கம் கொண்டு அருள் செய்தார். அவர் திருநீற்று மேனியராகிய காழியார் போலும்.
258. ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்
ஏற்றம் ஏறுஅங்கு ஏறும் அவர்போலாம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.
தெளிவுரை : ஆற்றல் மிக்கவர்களாகிய மும்மூர்த்திகளுள் இருவரான திருமாலும், பிரமனும் ஈசனுடைய தோற்றத்தைக் காணாதவர்கள். கூற்றுவனைத் திருப்பாதத்தால் மாய்த்த ஈசன், ஏற்றம் மிகுந்த இடப வாகனத்தில் ஏறி காழிப் பதியில் விளங்குபவர். அவர் உமையைப் பாகமாக உடைய காழியார் போலும்.
259. பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவர் அவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.
தெளிவுரை : பொருந்தாதவற்றைக் கூறும் சமணர், சாக்கியர் உரைகளைக் கொள்ளார் ஈசர். அவர் இருக்கு வேதத்தில் விளங்குபவர். அவர் உமையைப் பாகமாக உடைய காழியார் போலும்.
260. காரார் வயல்சூழ் காழிக் கோன்தனைச்
சீரார் ஞானசம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத்து இனிதா இருப்பரே.
தெளிவுரை : பசுமையான வயல் சூழந்த சீகாழித் தலைவனாகிய ஈசனைப் போற்றி, சீர் மிக்க திருஞானசம்பந்தர் சொன்ன இத் திருப்பதிகத்தை இவ் உலகமெல்லாம் பரவுமாறு ஓதி வழிபடுவர்கள் அழகிய வானுலகில் இனிமையாக இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
25. திருச்செம்பொன்பள்ளி (அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
261. மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத்து ஈசன் கழல்களை
மருவா தவர்மேல் மன்னும் பாவமே.
தெளிவுரை : மருவார் குழலி என்னும் திருநாமம் தாங்கிய உமாதேவியைப் பாகமாகக் கொண்டுள்ளவர் திருவார் செம்பொன் பள்ளியார் என்னும் திருநாமம் பூண்ட ஈசன். அவர் நீல கண்டத்தை உடையவர். அப் பெருமான் திருக்கழல்களைச் சாராதவர்பால் விளையும் பாவம் தீராது.
262. வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடைஎம் மீசனைச்
சேரா தவர்மேல் சேரும் வினைகளே.
தெளிவுரை : மார்பில் கச்சு அணிந்துள்ள உமாதேவியைப் பாகமாக உடைய சீரார் செம்பொன்பள்ளி மேவிய சடை முடியுடைய எம் ஈசனை நினைத்து வணங்காதவர்பால் வினை சேரும். இது ஈசன் திருவடியை நினைத்துத் தொழுதல் வேண்டும் என உணர்த்தியது.
263. வரைஆர் சந்தோடு அகிலும் வருபொன்னித்
திரைஆர் செம்பொன் பள்ளி மேவிய
நரைஆர் விடைஒன்று ஊரு நம்பனை
உரையா தவர்மேல் ஒழியா ஊனமே.
தெளிவுரை : மலைப் பகுதியில் உள்ள சந்தனத்தையும் அகிலையும் அலைகளின் மூலம் காவிரியானது கொணர்ந்து செம்பொன்பள்ளியில் சேர்க்கும். அத்திருத்தலத்தில் வெள்ளை இடபத்தில் ஊர்ந்து காட்சி நல்கும் பரமனைப் போற்றித் துதிக்காதவர்களிவம் உள்ள குறைகளை தீராது. குறை தீர இறைவனைப் போற்ற வேண்டும் என்பது தெளிவுபடுத்தப் பெற்றது.
264. மழுவாள் ஏந்தி மாதோர் பாகமாய்ச்
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
எழிலார் புரிபுன் சடைஎம் இறைவனைத்
தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.
தெளிவுரை : மழுவையும், வாளையும் ஏந்தி, <உமா தேவியைப் பாகமாகக் கொண்டு செழுமை மிக்க செம்பொன்பள்ளி மேவிய சடையுடைய எம் இறைவனைத் தொழுபவர்களுக்குத் துயரம் இல்லை.
265. மலையான் மகளோடு உடனாய் மதில்எய்த
சிலைஆர் செம்பொன் பள்ளி யானையே
இலைஆர் மலர்கொண்டு எல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே.
தெளிவுரை : மலையரசன் மகளாகத் தோன்றிய பார்வதி தேவியை உடனாகியும், முப்புரங்களின் கோட்டை மதில்களை எரிக்க மேருவை வில்லாகக் கொண்டவனாகவும் உள்ள செம்பொன்பள்ளி மேவிய சிவனை, இலையும், மலரும் கொண்டு இரவும் பகலும் ஒன்றிய மனத்தினராய் வணங்கிட, வினைகள் யாவும் நீங்கும்.
266. அறைஆர் புனலோடு அகிலும் வருபொன்னிச்
சிறைஆர் செம்பொன் பள்ளி மேவிய
கறைஆர் கண்டத்து ஈசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே.
தெளிவுரை : திரைகள் மிக்க நீரில், அகில் சேரப் பெருகி வரும் காவிரியின் கரையில் விளங்கும் செம்பொன் பள்ளியில் வீற்றிருக்கும் நீலகண்டத்து ஈசன் கழல்களை, முழு மனத்துடன் வணங்க, வினைகள் யாவும் நீல்லாது நீங்கும்.
267. பையார் அரவுஏர் அல்கு லாளொடும்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கைஆர் சூலம் ஏந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவாத வினைகளே.
தெளிவுரை : விஷம் பொருந்திய அரவத்தை ஒத்த அல்குலை யுடைய உமாதேவியோடு செம்மை மிக்க செம்பொன்பள்ளி மேவிய, திருக்கரத்தில் சூலம் ஏந்திய கடவுளாகிய ஈசனைக் காயத்தால் வணங்க வினைகள் சாராது.
268. வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
தேனார் செம்பொன் பள்ளி மேவிய
ஊனார் தலையில் பலிகொண்டு உழல்வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே.
தெளிவுரை : பிறைத் திங்களைச் சடையில் வைத்துத் தேன்போன்ற இனிமை மிக்க செம்பொன் பள்ளிமேவிய ஈசன், பிரம கபாலத்தை ஓடாக ஏந்திப் பலி கொண்டான். அவன் திருக்கழலைப் பணிந்து வாழ்வீராக.
269. காரார் வண்ணன் கனகம் அனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடைஎன் நிமலனை
ஓரா தவர்மேல் ஒழியா ஊனமே.
தெளிவுரை : கார்வண்ணனாகிய திருமாலும், பொன் வண்ணனாகிய பிரமனும் செம்பொன்பள்ளி மேவிய கங்கையைச் சடையில் தரித்த என் நிமலனாகிய ஈசனைத் தேர்ந்து அறியாதவர்கள், அப்பெருமானை நினையாதவர்களிடம் உள்ள குறைபாடுகள் தீராது. ஈசனை நினைத்த ஞான்று ஊனமானது கதிரோனைக் கண்ட பனி போல் நீங்கும் என்பதாம்.
270. மாசார் உடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா என்ன நில்லா இடர்களே.
தெளிவுரை : உடம்பின்மீது மாசு உடையவர்கள் முதலானோர் பொருந்தாதவற்றைப் பேசித் திரிந்தாலும், ஒளி மிக்க செம்பொன்பள்ளி மேவிய ஈசனே என்று வணங்கித் துதிக்க, இடர்கள் யாவும் நீங்கும்.
271. நறவுஆர்புகலி ஞான சம்பந்தன்
செறுஆர் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமாறு இசையால் பாடல் இவைபத்தும்
உறுமா சொல்ல ஓங்கி வாழ்வரே.
தெளிவுரை : தேன் பெருகும் புகலியின் ஞான சம்பந்தன் வயல்கள் திகழும் செம்பொன்பள்ளி மேய ஈசனைப் போற்றி உயிர்கள் நின்று அறியுமாறு பாடிய இத் திருப்பதிகத்தை உள்ளம் பொருந்துமாறு சொல்ல, வளமுடன் ஓங்கி வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
26. திருப்புத்தூர் (அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்,சிவகங்கை மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
272. வெங்கள் விம்மு வெறிஆர் பொழில்சோலை
திங்க ளோடு திளைக்கும் திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியார் அவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.
தெளிவுரை : தேன் சொரியும் மலர்களை உடைய மணம் பொருந்திய அடர்ந்த சோலையானது, நிலவைப் போன்று தண்மையுடன் விளங்கும் திருப்புத்தூர், எங்கள் மேலான இறைவன் கங்கையைச் சடையில் தாங்கி இருக்கும் இடம் ஆகும்.
273. வேனல் விம்மு வெறிஆர் பொழில்சோலைத்
தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர்
ஊனம் இன்றி உறைவார் அவர்போலும்
ஏன முள்ளும் எயிறும் புனைவாரே.
தெளிவுரை : வேனிற் காலத்தில் மலரும் மணம் பொருந்திய அடர்ந்த சோலையில் தேனும் அதை நுகரும் வண்டும் திளைத்துப் பெருகும் இயல்புடையது திருப்புத்தூர். அங்கு எழுந்தருளியுள்ள ஈசன், திருமால் வராகவதாரம் கொண்ட பின்னர், அப்பணி நிறைவடைந்ததும் சினம் தணியாதவராய்ச் செருக்குற்று நிற்க, அதனை அடக்கும் முகத்தான் ஏனத்தின் முள்ளும் பல்லும் அகற்றி அதனைத் தான் அணிந்து ஆபரணமாகக் கொண்டார். அவர் அடியவர்களுக்குக் குறைவின்றி அருள் புரியும் இறைவனே போலும்.
274. பாங்கு நல்ல வரிவண்டு இசைபாடத்
தேன்கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்
ஓங்கு கோயில் உ<றைவார் அவர்போலும்
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.
தெளிவுரை : தேன் சொரியும் கொன்றை மலர்கள் பெருகித் திகழ விளங்கும் திருப்புத்தூரின் கண் வரிவண்டுகள் எல்லாப் பக்கங்களிலும் சார்ந்து இசை பாடுகின்றன. ஆங்கு, புல்லிய சடையின் கண் திங்கள் சூடிய ஓங்கி வளர்கின்ற அத் திருக்கோயிலில் உறைபவர் போலும்.
275. நாறவிண்ட நறுமா மலர்கவ்வித்
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை உடையார் அவர்போலும்
ஏறுகொண்ட கொடிஎம் இறையாரே.
தெளிவுரை : மணம் வீசி மலரும் அழகிய மலர்களில் உள்ள தேனை, வண்டுகள் கவ்விப் பருகும் சிறப்புடையது திருப்புத்தூர். இடபக் கொடி உடைய எம் இறைவர் ஆங்கு ஊறிய வாழ்க்கை உடையவர் போலும்.
276. இசைவி எங்கும் எழில்சூழ்ந்து இயல்பாகத்
திசைவி ளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசைவி ளங்கப் படித்தார் அவர்போலும்
வசைவி ளங்கும் வடிசேர் நுதலாரே.
தெளிவுரை : எழில் மிக்கதாய்ப் புகழ் விளங்கவும், நாற்புறமும் சோலைகள் விளங்கவும் திகழ்வது திருப்புத்தூர். ஆங்கு, அழகிய நுதலில் பிறையைக் கொண்ட வடிவினராகிய ஈசன் அன்புடன் விளங்குபவராய்ப் பற்றி அருள் புரியப் பழகியவர் போலும்.
277. வெண்நி றத்த விரையோடு அலர்உந்தித்
தெள்நி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒள்நி றத்த ஒளியார் அவர்போலும்
வெண்நி றத்த விடைசேர் கொடி யாரே.
தெளிவுரை : வெண்மையான மணம் நிறைந்த வண்ண மலர்களை உந்தித் தள்ளித் தெளிந்த நீர் பாயும் தன்மையுடையது திருப்புத்தூர். ஆங்கு, வெண்மையான இடபக்கொடியை உடையவரும் ஒளிப் பிழம்பாகி ஒளி தருபவரும் ஆகிய பெருமானே போலும்.
278. நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்துஎங்கும்
செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
தையல் பாக மகிழ்ந்தார் அவர் போலும்
மையுண் நஞ்ச மருவு மிடற்றாரே.
தெளிவுரை : நெய்தல் காட்டும் ஆம்பல் மலரவும், மருத வயல்கள் மல்கிப் பெருகவும் திருப்புத்தூர் விளங்கி மேவும். ஆங்கு, நீலகண்டராய் ஈசன் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்தார் போலும்.
279.கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத்
திருக்கொள் செம்மை விழரார் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவர் அவர் போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.
தெளிவுரை : வான்வெளி யாவிலும் மணம் கமழும் பொழில்களை உடையதும், நற்செல்வமாகிய சிவனடிப் பேற்றை நல்கும் செம்மையான திருவிழாக்களை உடையதுமான ஊர், திருப்புத்தூர் என்னும் பதியாகும். இராவணனைத் தமது விரலால் அழுத்தி, அவனை வருத்திய இறைவர் அங்கு வீற்றிருப்பவர் போலும்.
280. மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமான் அவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.
தெளிவுரை : மயில்கள் எல்லா இடங்களிலும் சூழ்ந்து இருக்க, தெருக்களில் மகிழ்ந்து உலாவுகின்ற பெருமையுடையது திருப்புத்தூர். பிரமனும் திருமாலும் அறிய முடியாமல் ஓங்கி வளர்ந்தவனாக ஈசன் ஆங்கு விளங்கி நின்று வாழ்கின்றான் போலும்.
281. கூறைபோர்க்கும் தொழிலார் அமணகூறல்
தேறல் வேண்டா தெளியின் திருப்புத்தூர்
ஆறு நான்கும் அமர்ந்தார் அவர்போலும்
ஏறு கொண்ட கொடிஎம் இறையாரே.
தெளிவுரை : சமணர் முதலான பிறர் கூறும் சொற்களைக் கொள்ள வேண்டாம். நான்கு வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் ஆகிய ஈசன் திருப்புத்தூரில் இடபக் கொடி உடையவராய் வீற்றிருப்பவர் போலும்.
282. நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே.
தெளிவுரை : வேதத்தில் மேம்பட்டவராகிய ஞானசம்பந்தர், செல்வராகிய ஈசன் உறையும் திருப்புத்தூர் என்னும் பதியைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லார் தமக்குத்தாமே உ<ண்டாக்கிக் கொள்ளும் துன்பமும் இல்லை; பிறரால் சூழப்பெறும் இடையூறும் இல்லை.
திருச்சிற்றம்பலம்
27. திருப்புன்கூர் (அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
283. முந்தி நின்ற வினைகள் அவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிகள் அவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
தெளிவுரை : முந்தி நின்று, விளைவினைத் தருகின்ற வினைகள் நீங்கிப் போவதற்கு, நெஞ்சமே ! சிவன் பொருந்தியுள்ள திருப்புன்கூர் என்னும் பதியைச் சிந்தனை செய்வாயாக. ஆங்கு உறையும் ஈசன் மணம் கமழும் புன்சடையுடன் விளங்கும் அடிகள் போலும்.
284.மூவர் ஆய முதல்வர் முறையாலே
தேவர் எல்லாம் வணங்கம் திருப்புன்கூர்
ஆவர் என்னும் அடிகள் அவர்போலும்
ஏவின் அல்லார் எயில்மூன்று எரித்தாரே
தெளிவுரை : பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும், ஈசன் திருஉளப்பாங்கின்படி தம்தம் பணி ஆற்றுபவர். யாவர்க்கும் முதல்வராயும், தேவர்களால் வணங்கப் பெறுபவராயும் சரம் தொடுத்துப் பகைவரின் மூன்று கோட்டைகளை எரித்த ஈசன், திருப்புன்கூர் என்னும் பதியில் உறையும் இறைவனே போலும்.
285. பங்க யங்கள் மலரும் பழனத்துச்
செங்க யல்கள் திளைக்கும் திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையார்அவர் போலும்
எங்கள் உச்சி உறையும் மிறையாரே.
தெளிவுரை : பொய்கையில் தாமரை மலர்களும் கயல்களும் திளைக்க விளங்கும் இடமாவது திருப்புன்கூர். கங்கை தங்கும் சடையுடன் ஆங்கு உறைபவர் எங்கள் மேலான இறைவனே போலும்.
286. கரைஉலாவு கதிர்மா மணிமுத்தம்
திரைஉ லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
உரையின் நல்ல பெருமான் அவர்போலும்
விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே.
தெளிவுரை : கரைகளில் மாணிக்கம் போன்ற கதிர் மணிகளும் வயல்களில் முத்துக்களும் உடைய சிறப்பு உடைய பதி திருப்புன்கூர். மணம் பொருந்திய திருவடி உடைய பெருமானாய் அடியவர்க்கு நல்லவராய் இனிமை பெருக்கும் ஈசன், ஆங்கு உறைபவரே போலும்.
287. பவள வண்ணப் பரிசார் திருமேனி
திகழும் வண்ண முறையும் திருப்புன்கூர்
அழகர் என்னும் அடிகள் அவர்போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே.
தெளிவுரை : பவள வண்ணம் போன்ற திருமேனி உடையவராய் புகழும்படியான செஞ்சடை கொண்டு விளங்கும் ஈசன், திருப்புன்கூரில் உறையும் அழகர் என்னும் அடிகள் போலும்.
288. தெரிந்து இலங்கு கழுநீர் வயல்செந்நெல்
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
பொருந்தி நின்ற அடிகள் அவர்போலும்
விரிந்து இலங்கு சடைவெண் பிறையாரே.
தெளிவுரை : நல்ல நீர்வளமும், செந்நெல் வளமும் மிக்க உடையது திருப்புன்கூர். அங்கு விரிந்து பரந்த சடையில் வெண்பிறை சூடிய ஈசன், பொருந்தி உறைபவரே போலும்.
289. பாரும் விண்ணும் பரவித் தொழுதுஏத்தும்
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
ஆர நின்ற அடிகள் அவர்போலும்
கூர நின்ற எயில்மூன்று எரித்தாரே.
தெளிவுரை : மண்ணுலகத்தவர்களும் தேவர்களும் பரவித் தொழுது போற்றும்படி தேர்கள் செல்லுமாறு அகன்ற வீதிகளையும் திருவிழாக்களையும் உடையது திருப்புன்கூர். அங்கு, மிகுதியாய்ச் சென்று இடரைச் செய்த மூன்று மதில்களையும் எரித்த ஈசன் பொருந்தி உள்ளனர் போலும்.
290. மலைய தனார் உடைய மதில்மூன்றும்
சிலைய தனால் எரித்தார் திருப்புன்கூர்த்
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
மலைய தனால் அடர்த்து மகிழ்ந்தாரே.
தெளிவுரை : சண்டை செய்யும் கீழ்மையுடைய முப்புரத்தின் கோட்டைகளையும், அவ்வசுரர்களையும், மேருடை வில்லாகக் கொண்டு எரித்தவர் திருப்புன்கூர் மேவும் ஈசன். அப்பெருமான், அரக்கனாகிய இராவணனுடைய தருக்கினை அவன் பெயர்த்த மலையைக் கொண்டு அடக்கியவர்.
291. நாடவல்ல மலரான் மாலுமாய்த்
தேடநின்றார் உறையும் திருப்புன்கூர்
ஆடவல்ல அடிகள் அவர்போலும்
பாடல் ஆடல் பயிலும் பரமரே.
தெளிவுரை : நான்கு திசைகளும் அறிந்து நாடு அதற்குரிய நான்கு முகங்களை உடைய பிரமனும், திருமாலும் காணுதற்கு இயலாமல் தேடுமாறு செய்து திருவிளையாடல் புரியும் ஈசன், பாடலும் ஆடலும் பயிலும் திருப்புன்கூர் நாதன் போலும்.
292. குண்டு முற்றிக் கூறை இன்றியே
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல்கொளேல்
வண்டு பாட மலர்ஆர் திருப்புனகூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே.
தெளிவுரை : அறிவின் மயக்கம் உற்றவர்களாகிய வேற்றுச் சமயத்தவர்கள் கூறும் மொழிகளைப் பெருட்டாகக் கொள்ள வேண்டாம். வண்டுகள் இசைக்க மலர்கள் மலர்ந்து மணம் தரும் திருப்புன்கூர் இறைவனைத் தொழுது போற்றுமின்.
293. மாடமல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்
நாட வல்ல ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே.
தெளிவுரை : திருப்புன்கூர் என்னும் பதியுறை ஈசனைப் போற்றி மாட மாளிகைகளும், நெடிய மதில்களும் சூழ்ந்த காழியின் ஞானசம்பந்தர் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதி வாழ்மின்.
திருச்சிற்றம்பலம்
28. திருச்சோற்றுத்துறை (அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
294. செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்பன் என்னாது அருளே துணையாக
ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்று
அப்பர் சோற்றுத் துறைசென்று அடைவோமே.
தெளிவுரை : உலகத்தில், இவ்வாழ்க்கையின் பயனாக அடையக் கூடிய சிற்றின்பத்தில் திளைக்காது, சமநிலையால் ஒப்ப நோக்கி, ஈசன் அருளைத் துணையாகக் கொண்டு வாழ வேண்டும். அத்தகைய தன்மையை ஒளியுடைய வெண்ணீறு அணிந்த பெருமான் ஒப்புவர். நெஞ்சமே ! ஈசன் விளங்கும் சோற்றுத்துறை சென்று அவன் தாள் மலரை வணங்கி நற்கதி அடைக.
295. பாலு நெய்யும் தயிரும் பயின்றாடித்
தோலு நாலும் துதைந்த வரைமார்பர்
மாலும் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலும் சோற்றுத் துறை சென்றுஅடைவோமே.
தெளிவுரை : பாலும், நெய்யும், தயிரும் முதலான அபிடேகப் பொருள்களால் பூசிக்கப்படும் ஈசன் புலித் தோலையும் மான் தோலையும் உ<டுத்தி பூணூல் தரித்த மார்பினர். சோலையில் மயில்கள், தம்மை மறந்து ஆடும் எழில் உடைய சோற்றுத்துறை சென்று இறைவனை வணங்கித் துதித்து நற்கதி அடைவேமாக.
296. செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
தைய லாளொர் பாகம் ஆயஎம்
ஐயர் சோற்றுத் துறைசென்று அடைவோமே.
தெளிவுரை : சிவந்த திருமேனியும் சடையும் உடையவர்; இடப வாகனத்தில் ஊர்ந்து வருபவர்; கையில் சூலத்தைக் கொண்டிருப்பவர்; வீரக்கழல் அணிந்த பாதத்தை உடையவர்; இடுகாட்டில் ஆடுபவர்; உமாதேவியை ஒரு பாகமாக உடைய எம் தலைவர். அவர் வீற்றிருக்கும் சோற்றுத்துறை சென்று நற்கதி அடைவோமாக.
297. பிணிகொள் ஆக்கை ஒழியப் பிறப்புளீர்
துணிகொள் போர்ஆர் துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேயவார் பொழில்
அணிகொள் சோற்றுத் துறைசென்று அடைவோமே.
தெளிவுரை : பிணியைக் கொள்ளும் உடலை விட்டுவிட வேண்டும் என்பதன் பொருட்டு, இப்பிறவியைப் பெற்றுள்ளவர்களே ! துணிந்து ஆற்றும் போர்ப் படையாய் விளங்கும் மழுவேந்திய ஈசன். நீலகண்டத்தை உடையவர். அவர்தம் நீண்ட பொழிலை உடைய சோற்றுத்துறை சென்று வணங்கி நற்கதியை அடைவோமாக.
298. பிறையும் அரவும் புனலும் சடைவைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையும் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்றுத் துறைசென்று அடைவோமே.
தெளிவுரை : பிறைச் சந்திரனும், அரவும், கங்கையும் சடையில் வைத்து, வேதம் புகன்று, மயானத்தை இடமாகக் கொண்டு உறையும் செல்வராகிய இறைவன் விளங்கும் காவிரி நீர் பாயும் சோற்றுத்துறை சென்று இறைவனை வழிபட்டு நற்கதி அடைவோமாக.
299. துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்காடு அரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகொள் சோற்றுத் துறைசென்று அடைவோமே.
தெளிவுரை : உடுக்கையும் முழவும் ஒலிக்க, வெண்பொடி பூசிச் சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டுப, தாளமும் பாடலும் முறையாகப் பயின்றாடும் ஈசன் விளங்கும் சோற்றுத்துறை சென்று நற்கதி அடைவோமாக.
300. சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடிஆடிப் பரவு வார்உள்ளத்து
ஆடி சோற்றுத் துறைசென்று அடைவோமே.
தெளிவுரை : மார்க்கண்டேயரைக் காக்கும் பொருட்டுக் காலனை மாய்த்தும், தலையோட்டினை மாலையாய் அணிந்தும் விளங்கும் ஈசன், தன்னைப் போற்றி வாழ்த்துபவர்; உள்ளத்தில் மகிழ்ந்து இருப்பவர். அப்பெருமான் வீற்றிருக்கும் சோற்றுத் துறை சார்ந்து நற்கதி அடைவோமாக.
301. பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகம் கலந்த நுதலினார்
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல் சோற்றுத் துறைசென்று அடைவோமே.
தெளிவுரை : ஈசன், உமாதேவியைப் பாகமாக உடையவர்; பிறையைச் சென்னியில் சூடியவர்; நெற்றியில் கண்ணுடையவர்; பின்விளைவை ஆராய்ந்து பார்க்காமல் அரக்கன் மலையைப் பெயர்க்க, தனது திருப்பாத விரலால் ஊன்றி, அவ் அரக்கனின் செருக்கை அடக்கியவர். அத்தகைய அண்ணல் விளங்கும் சோற்றுத்துறையை நாடிச் சென்று நற்கதி அடைவோமாக.
302. தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்
எழில்ஆர் சோற்றுத் துறைசென்று அடைவோமே.
தெளிவுரை : திருமாலும், பிரமனும் தன்னைக் காணாதவராய்த் துயர்கொண்டு வருந்தி நிற்க, அத்துயர் நீங்கும் பொருட்டுத் தழல் உருவாய் ஓங்கி ஈசன் அருள் செய்தான். அவ் இறைவன் விளங்கும் விழாக்கள் நடைபெறும் திருவீதிகளையும் வேத முறைப்படி பூசனைகளும் திகழும் சோற்றுத்துறை சென்று வணங்கி நற்கதி அடைவோமாக.
303. கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
ஓதம் ஓத்தை உணராது எழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென்று அடைவோமே.
தெளிவுரை : புறச் சமயத்தார் கூறும் சாரமற்ற உரைகளை ஏற்காமல் ஈசன் திருப்பதத்தை மனத்தில் தேக்கி எழுகின்ற நெஞ்சமே ! சைவ நெறிப்படி நின்று ஒழுகி அவர்தம் சிந்தையானது விரும்புகின்ற தோற்றத்தில் காட்சி தரும் முதல்வன் வீற்றிருக்கும் சோற்றுத்துறை சென்று நற்கதி அடைவோமாக.
304. அந்தண் சோற்றுத் துறைஎம் மாதியைச்
சிந்தை செய்ம்மின் அடியார் ஆயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே.
தெளிவுரை : அழகிய குளிர்ச்சி பொருந்திய சோற்றுத் துறையில் எழுந்தருளிய எம் ஆதி முதல்வனைச் சிந்தித்துப் போற்றுமின். அது அடியார் ஆகும் சிறப்பு நல்கும். மேலும் சந்தம் மல்கிய ஞானசம்பந்தரின் இத்திருப்பதிகத்தை ஓதுதல் வழிபாடு ஆகும்.
திருச்சிற்றம்பலம்
29. திருநறையூர்ச் சித்தீச்சரம் (அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
305. ஊர்உ லாவு பலிகொண்டு உலகேத்த
நீர்உ லாவு நிமிர்புன் சடைஅண்ணல்
சீர்உ லாவு மறையோர் நறையூரில்
சேரும் சித்தீச் சரம்சென்று அடைநெஞ்சே.
தெளிவுரை : பிரம கபாலத்தை ஓடாகக் கொண்டு ஊர்களில் திரிந்து பிச்சையேற்று, கங்கையைச் சடை முடியில் வைத்து உலகத்தவர்கள் வணங்கும்படி சீர்மிக்க மறைகள் போற்றும் ஈசன் நறையூரில் எழுந்தருளியுள்ளான். அவன் திருக்கோயில் கொண்டுள்ள சித்தீச்சரத்தை, நெஞ்சமே நினை.
306. காடு நாடும் கலக்கப் பலிநண்ணி
ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
வீடும்ஆக மறையோர் நறையூரில்
நீடும் சித்தீச் சரமே நினைநெஞ்சே.
தெளிவுரை : காடுகளிலும் நாடுகளிலும் கலந்து ஓடும் கங்கையைச் சடையில் வைத்தவன் முத்திப் பேறு வாய்க்கச் செய்தவன், இறைவன். அவன் நிலவும் மறைவல்ல நறையூரில் உள்ள சீத்தீச்சரத்தை நெஞ்சே நினை.
307.கல்வியாளர் கனகம் மழல்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரில்
செல்வர் சித்தீச் சரம் சென்று அடைநெஞ்சே.
தெளிவுரை : பொன்போன்ற தழல் வண்ணத் திருமேனி உடைய ஈசன், சடையில் கங்கையை ஏற்று கல்வியில் வல்ல அறிஞர்கள் மிக்க, சந்திரனைப் போன்ற குளிர்ந்த பொழில் சூழ்ந்த நறையூரில் நிலவும் சித்தீச்சரத்தில் வீற்றிருப்பவன். நெஞ்சே, அவனை நினை.
308. நீடவல்ல நிமிர்புன சடைதாழ
ஆடவல்ல அடிகள் இடமாகும்
பாடல் வண்டு பயிலு நறையூரில்
சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
தெளிவுரை : நீண்டு விரிந்த சடையானது தாழ திருநடம் புரியும் ஈசன் இடமாவது, வண்டுகள் பாடும் சிறப்புடைய நறையூரில் நிலவும் சித்தீச்சரம் ஆகும். நெஞ்சே, இதனைத் தெளி.
309. உம்ப ராலும் உலகின் னவராலும்
தம்பெ ருமைஅ ளத்தற்கு அரியானூர்
நண்பு உலாவு மறையோர் நறையூரில்
செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
தெளிவுரை : தேவர்களாலும், உலக மக்களாலும் அளவிட்டுச் செல்லுதற்கு அரியவனாகிய ஈசன் விளங்குவது, நட்புடன் விளங்கும் மறையவர்கள் மிகுந்த நறையூரில் நிலவும் சித்தீச்சரம் ஆகும். நெஞ்சே, இதனைத் தெளி.
310. கூர்உ லாவு படையான் விடையேறி
போர்உ லாவு மழுவான் அனலாடி
பேர்உ லாவு பெருமா னறையூரில்
சேரும் சித்தீச் சரமே இடமாமே.
தெளிவுரை : கூர்மையான சூலப் படையான்; இடப வாகனம் உடையவன்; மழுப் படை கொண்டவன்; நெருப்பைக் கரத்தில் ஏந்தி ஆடியவன்; பெரும் புகழை உடையவன். அவனுடைய இடமாவது நறையூரில் பொருந்திய சித்தீச்சரம் ஆகும்.
311. அன்றி நின்ற அவுணர் புரம்எய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
மன்றில் வாச மணமார் நறையூரில்
சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
தெளிவுரை : பகையாய் நின்ற மூன்று அசுரர்களின் புரங்களை வெற்றிகொண்டவன், மேருமலையை வில்லாகக் கொண்ட ஈசன். அவன் விரும்பி விளங்குவது நறுமணம் கமழும் நறையூரில் நிலவும் சித்தீச்சரம். இதனை நெஞ்சே தெளி.
312. அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்புமூர்
பரக்கும் கீர்த்தி யுடையார் நறையூரில்
திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
தெளிவுரை : இராவணனுடைய வலிமை அழியுமாறு விரலால் மலையை ஊன்றும் பெருமான் விரும்புகின்ற ஊர், விரிந்த புகழையுடையவர் விளங்கும் நறையூர். ஆங்கு செல்வம் கொழித்து ஓங்கும் சித்தீச்சரத்தை நெஞ்சே ! தெளி.
313. ஆழி யானு மலரில் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
சூழ நேட எரியாம் ஒருவன்சீர்
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.
தெளிவுரை : சக்கரப் படையுடைய திருமாலும், மலரில் உறைபவனாகிய பிரமனும் ஓர் ஊழிக் காலம் வரை தேடிச் சென்றும் உணரதவராய்த் திரிய, பின்னர் எரியாகித் தழல் வடிவாகி நின்ற ஈசன் சீர் கொண்டு வீற்றிருப்பது சித்தீச்சரம். இதனை நெஞ்சே ! நினை.
314. மெய்யின் மாசர் விரிநுண் துகில்இலார்
கையில் உண்டு கழறும் உரைகொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச் சரமே தவமாமே.
தெளிவுரை : வேற்றுச் சமயத்தார் கூறும் உரைகளைக் கொள்ளாதீர். உய்ய வேண்டுமானால் நறையூரில் இருந்து அருள் பாலிக்கும் இறைவன் மேவும் சித்தீச்சரத்தை எண்ணுதல், செய்யும் தவமாகும்.
315. மெய்த்து உலாவு மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி
அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே.
தெளிவுரை : மெய்ம்மை விளங்க மறையவர் உ<லவும் நறையூரில் நிலவும் சித்தன் மேவும் சித்தீச்சரத்தை, உயர் காழி நாதனாகிய ஈசனின் திருவடியைத் தரித்த ஞான சம்பந்தன் பாடிய பத்தும் பாடப் பாவம் தீரும்.
திருச்சிற்றம்பலம்
30. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
316. விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின்று அலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலின் நகர்தானே.
தெளிவுரை : மார்கண்டேயருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்காலம் பதினாறு ஆண்டுகள் என்பதன் விளைவாய்ச் சிவனடி பொருந்திய உயிரைக் கவருமாறு போந்த, கூற்றுவனை உதைத்த ஈசன் சேரும் பதியாவது தாமரை மலர்களும், தேன் சொரியும் மலர்ச் சோலைகளும் சூழும் புகலி நகர்.
317. ஒன்னார் புரமூன் றும்எரித்த ஒருவன்
மின்னார் இடையா ளொடும்கூ டியவேடம்
தன்னால் உறைவா வதுதண் கடல்சூழ்ந்த
பொன்னார் வயல்பூம் புகலிந் நகர்தானே.
தெளிவுரை : பகைவருடைய புரங்கள் மூன்றும் எரித்த ஒருவனாகிய ஈசன், மின்னலைப் போன்ற இடையுடைய உமாதேவியோடு கூடிய வடிவத்துடன் உறையும் இடம், குளிர்ந்த கடம் சூழ்ந்து, ஒளிமிக்க பொன் போன்ற நெற்கதிர்கள் விளங்கும் வயல்களை உடைய அழகிய புகலி ஆகும்.
318. வலியில் மதிசெஞ் சடைவைத் தமணாளன்
புலியின் னதள்கொற்டு அடைஆர்த் தபுனிதன்
மலியும் பதிமா மறையோர் நிறைந்துஈண்டிப்
பொலியும் புனல்பூம் புகலிந் நகர்தானே.
தெளிவுரை : ஒளி வலிமை குன்றிய பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் சூடிய மணாளனாகிய ஈசன், புலியின் தோலை இடையில் அணிந்த புனிதன். அவன் நயந்து விளங்கும் பதியாவது, மறையவர்கள் நிறைந்தும் சேர்ந்தும் வேதங்களை ஓத, தூய்மையான தீர்த்த மகிமையுடன் விளங்கும் புகலி நகர் ஆகும்.
319. கயல்ஆர் தடங்கண் ணியொடும் மெருதேறி
அயலார் கடையில் பலிகொண் டஅழகன்
இயலால் உறையும் மிடம்எற் திசையோர்க்கும்
புயல்ஆர் கடல்பூம் புகலிந் நகர்தானே.
தெளிவுரை : உமாதேவியோடு இடப வாகனத்தில் ஏறி அருள் புரிபவன் ஈசன். அவன் தாருகாவனத்தில் மேவிய முனிவர்களின் மனைவாயிலில் நின்று பலி ஏற்றவன். அவ் அழகன், எண் திசையோர்க்கும் அன்பின் உரிமையோடு இடம், மேகம் தவழும் கடல் விளங்கும் அழகிய புகலி நகர் ஆகும்.
320. காதார் கனபொன் குழைதோ டதுஇலங்கத்
தாதுஆர் மலர்தண் சடையே றமுடித்து
நாதான் உறையும் மிடமா வதுநாளும்
போதுஆர் பொழில்பூம் புகலிந் நகர்தானே.
தெளிவுரை : காதில் கனமான பொன்குழையும், தோடும் ஆபரணமாகத் திகழ, தேன் சொரியும் மலரைக் குளிர்ந்த சடையில் தரித்து ஈசன் உறையும் இடமாவது நாள்தோறும் மலரும் பொழிலை உடைய அழகிய புகலி நகர் ஆகும்.
321. வலம்ஆர் படைமான் மழுவேந் தியமைந்தன்
கலம்ஆர் கடல்நஞ்சு அமுதுஉண் டகருத்தன்
குலம்ஆர் பதிகொன் றைகள்பொன் சொரியெத்தேன்
புலம்ஆர் வயல்பூம் புகலிந் நகர்தானே.
தெளிவுரை : வலிமை பொருந்திய சூலப்படை, மான், மழு ஏந்திய அழகன், பாற்கடலில் இருந்து தோன்றிய நஞ்சினை அமுதமெனும் பண்பு கொள்ளுமாறு உண்டவன். அவனுடைய அழகான பதி, பொன் போன்ற கொன்றை மலர்கள் தேன் சொரியத் திசைகள்தோறும் வயல்கள் சூழ்ந்த அழகிய புகலி நகர் ஆகும்.
322. கறுத்தான் கனலான் மதில்மூன் றையும்வேலச்
செறுத்தான் திகழும் கடல்நஞ்சு அமுதாக
அறுத்தான் அயன்றன் சிரம்ஐந் திலும்ஒன்றைப்
பொறுத்தான் இடம்பூம் புகலிந் நகர்தானே.
தெளிவுரை : ஈசன், கனலான், சினமுற்றான், மும்மதில்களைச் செறுத்தான், கடல்நஞ்சை அமுதாக மாற்றி அதன் நச்சுத் தன்மையை அறுத்தான்; பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் களைந்து, கபாலமாக ஏந்திச் சுமந்து பலியேற்றான். அவன் விளங்கும் இடம் புகலி நகரே.
323. தொழிலால் மிகுதொண் டர்கள்தோத் திரம்சொல்ல
எழிலார் வரையால் அன்றுஅரக் கனைச்செற்ற
கழலான் உறையும் மிடம்கண் டல்கண் மிண்டிப்
பொழிலால் மலிபூம் புகலிந் நகர்தானே.
தெளிவுரை : பணி செய்யும் இயல்புடைய திருத்தொண்டர்கள் தோத்திரப் பாடல்களைச் சொல்ல, எழில் மிக்க, கயிலை மலையால் இராவணனைத் தண்டித்த ஈசன் உறையும் இடம், நெருங்கிய தாழைகள் மலிந்த அழகிய புகலி நகர் ஆகும்.
324. மாண்டார் சுடலைப் பொடிபூ சிமயானத்து
ஈண்டா நடமா டியஏந் தல்தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரியாய் அரவுஆரம்
பூண்டா னகர்பூம் புகலிந் நகர்தானே.
தெளிவுரை : சுடலையில், மாண்டவர்களின் சாம்பலைப் பூசி நடனமாடிய ஈசன், திருமால், பிரமன் ஆகிய இருவரும் காண இயலாதபடி நீண்ட வடிவினனாய்ச் சோதிப் பிழம்பாகி, பாம்பினை ஆபரணமாகப் பூண்டான். அவனுடைய நகர் புகலியே.
325. உடையார் துகில்போர்த்து உழல்வார் சமண்கையர்
அடையா தனசொல் <லுவர்ஆ தர்கள் ஓத்தைக்
கிடையா தவன்றன் நகர்நன் மலிபூகம்
புடையார் தருபூம் புகலிந் நகர்தானே.
தெளிவுரை : சமண நெறி உடையவர்கள், மேல் நிலை அடைவதற்கு ஒவ்வாத சொற்களைக் கூறுவர். கீழ்மையான அவர்கள் கூற்றினை ஏற்காமல் உள்ளவனாகிய ஈசன் உறையும் நகர், கமுக மரங்கள் பொலியும் புகலி ஆகும்.
326. இரைக்கும் புனல்செஞ் சடைவைத் தஎம்மான்தன்
புரைக்கும் பொழில்பூம் புகலிந் நகர்தன்மேல்
உரைக்கும் தமிழ்ஞான சம்பந் தன்ஒண்மாலை
வரைக்கும் தொழில்வல் லவர்நல் லவர்தாமே.
தெளிவுரை : பாய்ந்து செல்லும் நீராகிய கங்கையை எம்தலைவன், தன் அழகிய சடையில் வைத்தவன். அப்பெருமானுடைய, உயர்ந்த பொழில் விளங்கும் புகலிநகர்மேல் புகழ்ந்து உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் திருப்பதிகத்தைத் தம் அளவில் வரைப் படுத்திப் பயில வல்லவர், நல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
31. திருக்குரங்கணில்முட்டம் (அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில் முட்டம்,திருவண்ணாமலை மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
327. விழுநீர் மழுவாள் படையண் ணல்விளங்கும்
கழுநீர் குவளைம் மலரக் கயல்பாயும்
கொழுநீர் வயல்சூழ்ந் தகுரங் கணில்முட்டம்
தொழுநீர் மையர்தீ துறுதுன் பம்இலரே.
தெளிவுரை : கங்கை, மழு, வாள் படை ஆகியன விளங்க, நீரில் குவளை மலரவும், கயல் பாயும் வளமான் நீர் மிக்க வயல்களும் சூழ்ந்த குரங்கணில்முட்டம் என்னும் ஊரில் ஈசன் கோயில் கொண்டுள்ளான். அப் பெருமானைத் தொழும் சிறப்புடையவர், தீமையைத் தரும் துன்பம் இல்லாது இருப்பர்.
328. விடைசேர் கொடியண் ணல்விளங் குயர்மாடக்
கடைசேர் கருமென் குளத்துஓங் கியகாட்டில்
குடைஆர் புனல்மல் குகுரங் கணில்முட்டம்
உடையான் எனைஆள் உடைஎந் தைபிரானே.
தெளிவுரை : இடபக் கொடியை அண்ணலாகிய ஈசன், உயர் மாட மாளிகைகளின் கடைப் பக்கம், வனம்மிகுந்து, நீர் மல்கும் குரங்கணில்முட்டத்தில் உடையவன். அவன் என்னை ஆளாக உடைய என் தந்தையும் தலைவனும் ஆவன்.
329. சூலப் படையான் விடையான் சுடுநீற்றான்
காலன் தனைஆ ருயிர்வவ் வியகாலன்
கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணில்முட்டத்து
ஏலம் கமழ்புன் சடைஎந் தைபிரானே.
தெளிவுரை : சூலத்தைப் படையாக உடையவன்; இடபவாகனத்தைக் கொண்டவன்; திருவெண்ணீற்றைத் தரித்தவன்; காலனாகிய கூற்றுவன் உயிரைக் கவர்ந்து காலனுக்குக் காலன் ஆனவன்; அழகிய பொழில் சூழ்ந்த குரங்கணில்முட்டத்தில் மணம் மிக்க சடையுடன் விளங்கும் என் தந்தை அவன் என் தலைவன்.
330. வாடா விரிகொன் றைவலத்து ஒருகாதில்
தோடுஆர் குழையா னலபா லன்நோக்கிக்
கூடா தனசெய் தகுரங் கணில்முட்டம்
ஆடா வருவார் அவர்அன் புடையாரே.
331. இரைஆர் வளையா ளையொர்பா கத்தடக்கிக்
கறைஆர் மிடற்றான் கரிகீ றியகையான்
குறைஆர் மதிசூ டிகுரங் கணில்முட்டத்து
உறைவான் எமைஆ ளுடை ஒண் சுடரானே.
தெளிவுரை : மணிகட்டின் பொருந்திய வளையை அணிந்த உமாதேவியைத் தனது மேனி பாகத்தில் அடக்கியவன் நீலகண்டம் உடையவன். யானையைத் தனது திருக்கரத்தால் மாய்த்துக் கொன்றவன், ஈசன். அப் பெருமான் குறை பொருந்திய பிறை மதியைச் சூடிக் குரங்கணில்முட்டத்தில் உறைபவன். அவன் எம்மை ஆளுடைய ஒண்சுடர்.
332. பலவும் பயனுள் ளனபற் றும்ஒழிந்தோம்
கலவம் மயில்கா முறுபே டையொடுஆடிக்
குலவும் பொழில் சூழ்ந் தகுரங் கணில்முட்டம்
நிலவும் பெமுõ னடிநித் தநினைந்தே.
தெளிவுரை : தோகை விரித்த மயில், விரும்பும் பெண் மயிலுடன் மகிழ்ந்து ஆடிக் குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில்முட்டம் நிலவும் ஈசன் திருவடியை நித்தமும் நினைந்ததன் பயன், பலவாகும். அதனைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் பற்றற்ற நிலை அடைந்தோம் என்பது ஆகும்.
333. மாடுஆர் மலர்கொள் றைவளர் சடைவைத்துத்
தோடுஆர் குழைதான் ஒருகா தில்இலங்கக்
கூடார் மதில்எய் துகுரங் கணில்முட்டத்து
ஆடார்அரவம் மரை யார்த்து அமர்வானே.
தெளிவுரை : செல்வத்தை நிகர்த்த மலராகிய கொன்றையைச் சடை முடியில் வைத்து, ஒரு காதில் தோடும், மற்றொரு காதில் குழையும் அணிந்து விளங்கி, நன்நெறி யுடைய தேவர்களுடன் கூடிப் பொருந்தி நிற்காதவர்களாகிய மூன்று அசுரர்களுடைய கோட்டை மதில்களை எரித்துப் பொடியாக்கிக் குரங்கணில்முட்டத்தில், சிவபெருமான் ஆடுகின்ற அரவத்தை அரையில் பொருத்தி அமர்பவன்.
334. மையார் நிறமே னிஅரக் கர்தம் கோனை
உய்யா வகையால் அடர்த்துஇன் னருள்செய்த
கொய்யார் மலர்சூ டிகுரங் கணில்முட்டம்
கையால் தொழுவார் வினைகாண் டல்அரிதே.
தெளிவுரை : கரிய நிற மேனியுடைய இராவணன் எந்த வகையாலும் தப்ப முடியாதபடி தண்டனை செய்து, பின்னர் இன்னருள் செய்தான் ஈசன். அவன், அன்பர்கள் மனம் விரும்புமாறு கொய்து சாற்றும் மலர்களைச் சூடி, குரங்கணில்முட்டத்தில் வீற்றிருக்கின்றான். அவனை இரு கைகளாலும் கூப்பித் தொழுபவர்களுக்கு வினை இல்லை.
335. வெறிஆர் மலர்த்தா மரையா னொடுமாலும்
அறியா துஅசைந்துஏத் தஓரார் அழல்ஆகும்
குறியா நிமிர்ந்தான் தன்குரங் கணில்முட்டம்
நெறியால் தொழுவார் வினைநிற் ககிலாவே.
தெளிவுரை : மணம் கமழ் தாமரை மலர்மேல் உள்ள பிரமனோடு திருமாலும் அறியாது அயர்ந்து நிற்கவும் பின்னர் போற்றித் துதிக்க, நினைப்பதற்கு அரிய தீப்பிழப்பின் வடிவாகி ஓங்கினான். அப்பெருமான் விளங்கும் இடம், குரங்கணில்முட்டம். ஆங்கு, கோயில் கொண்டு விளங்குபவனை, நெறிமுறையோடு தொழுபவர்கள் வினையானது நிற்காது.
336. கழுவார் துவரா டைகலந் துமெய் போர்க்கும்
வழுவாச் சமண்சாக் கியர்வாக்கு அவைகொள்ளேல்
குழுமின் சடைஅண் ணல்குரங் கணில்முட்டத்து
எழில்வெண் பிறையான் அடிசேர் வதுஇயல்பே.
தெளிவுரை : துவராடையை மெய்யில் போர்த்துத் தம் கொள்கையில் மாறுபாடு இன்றி சமணர்களும், சாக்கியர்களும் உள்ளனர். அவர்கள் கூறும் சொற்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம். மின்னலைப் போன்று பளிச்சென்று சிவப்பான சடையுடைய அண்ணல் ஆகும் பெருமான், அழகிய பிறையணிந்து குரங்கணில்முட்டத்தில் உள்ளான். அவன் திருவடியின்பால் மனத்தைப் பொருத்தி வணங்குவது உயிர்களுக்கு இயல்பாக இருக்கு வேண்டிய பண்பு ஆகும்.
337. கல்ஆர் மதில்காழியுள் ஞான சம்பந்தன்
கொல்ஆர் மழுஏந் திகுரங் கணில்முட்டம்
சொல்ஆர் தமிழ்மா லைசெவிக்கு இனிதாக
வல்லார்க்கு எளிதாம் பிறவா வகைவீடே.
தெளிவுரை : கற்களால் கட்டப்பெற்ற மதில்களை உடைய சீகாழியை உள்ளத்தில் தேக்கிக் கொண்ட ஞானசம்பந்தன், மழுப்படை ஏந்திய ஈசன் விளங்கும் குரங்கணில்முட்டம் பற்றி சொல்லில் சிறந்த தமிழ் மாலையாகச் சொன்ன இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிமையாகச் சொல்லவும், கேட்டு மகிழவும் உள்ளவர்களுக்குப் பிறவாமை என்னும் பேறு வாய்க்கும்; முத்தி இன்பம் எளிதாய் வரும்.
திருச்சிற்றம்பலம்
32. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
338. ஓடே கலன்உண் பதும்ஊ ரிடுபிச்சை
காடே இடமா வதுகல் ஆல்நிழற்கீழ்
வாடா முலைமங் கையும்தா னும்மகிழ்ந்து
ஈடா <உறைகின் றஇடை மருதுஈதோ.
தெளிவுரை : திருவோடு கொண்டு, ஊர் இடும் பிச்சை ஏற்று அதனையே உண்கலனாகக் கொண்டும் இடுகாட்டை இருப்பிடமாகவும், ஆல் நிழற் கீழ் குருமுகமாக இருந்தும் விளங்கும் ஈசன், உமாதேவியும் தானும் மகிழ்ந்து பெருமையாக உறைகின்ற இடைமருது இதுவோ !
339. தடம்கொண் டதொர்தா மரைப்பொன் முடிதன்மேல்
குடம்கொண்டு அடியார் குளிர்நீர் சுமந்தாட்டப்
படம்கொண் டதொர்பாம்பு அரைஆர்த் தபரமன்
இடங்கொண்டு இருந்தான் தன்இடை மருதுஈதோ.
தெளிவுரை : பெருமை மிக்க தாமரை மலரைத் தரித்த திருமுடியின் மேல், குடத்தினால் நீர் முகந்து குளிர்ந்த நீரை ஆட்டி அபிடேகம் செய்ய ஏற்று, அரவத்தை அரையில் கட்டிய பரமன் வீற்றிருக்கும் இடைமருது இதுவோ !
340. வெண்கோ வணங்கொண்டு ஒருவெண் தலையேந்தி
அம்கோல் வளையா னையொர்பா கம்அமர்ந்து
பொங்கா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எங்கோன் உறைகின் றஇடை மருதுஈதோ.
தெளிவுரை : ஒளிதிகழ் வேதத்தைக் கோவணமாகக் கொண்டு, பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி, அழகிய வமையல்களைத் திரட்சியாக உடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு இனிது இருந்து விளங்கும் ஈசன் பொங்கி வரும் காவிரியின் அழகிய கரையின்மேல் உறைகின்ற இடைமருது இதுவோ !
341. அந்தம் மறியா தஅரும் கலம்உந்திக்
கந்தம் கமழ்கா விரிக்கோ லக்கரைமேல்
வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன்
எந்தை உறைகின் றஇடை மருதுஈதோ.
தெளிவுரை : ஆதியும் அந்தமும் அறியப்பட முடியாதவன் ஈசன், அரியதாக விளங்கும் அணிகலன்களைத் தமது அலைகளாய் உந்திக் கொண்டு வரும் காவிரியின் மணம் பொருந்தி வீசும் அழகிய கரையின் மேல் விளங்குபவன்; வெண்பொடி பூசிய வேதமுதல்வன். அவன் என் தந்தை அப்பெருமான் உறைகின்ற இடைமருது இதுவோ !
342. வாசம் கமழ்மா மலர்ச்சோ லையில்வண்டே
தேசம் புகுந்துஈண் டியொர்செம் மையுடைத்தாய்ப்
பூசம் புகுந்துஆ டிப்பொலிந்து அழகாய
ஈசன் உறைகின் றஇடை மருதுஈதோ.
தெளிவுரை : வாசம் கமழும் சிறப்பான மலர்களைக் கொண்டு விளங்கும் சோலையில் வண்டுகள் பெருமையுடைதாய் விளங்க, பூசத் திருநாளில் மகிழ்ந்து பொலிந்து ஈசன் உறைகின்ற இடைமருது இதுவோ !
343. வன்புற்று இளநா கம்அசைத்து அழகாக
என்பிற் பலமா லையும்பூண்டு எருதேறி
அன்பிற பிரியா தவளோ டும்<உடனாய்
இன்புற்று இருந்தான் தன்இடை மருதுஈதோ.
தெளிவுரை : புற்றின்கண் விளங்கும் கொடிய நாகத்தை தரித்து, எலு<ம்பு மாலையை அழகாகப் பூண்டு, இடபவாகனத்தில் ஏறி, அன்பு பிரியாதவளாகிய உமாதேவியோடு உடனாகிய இருந்து இன்புற்று வீற்றிருக்கும் ஈசனுடைய இடைமருது இதுவோ !
344. தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்திப்
போக்கிப் புறம்பூ சல்அடிப் பவருமால்
ஆர்க்கும் திரைக்கா விரிக்கோ லக்கரைமேல்
ஏற்க இருந்தான் தன்இடை மருதுஈதோ.
தெளிவுரை : காவிரி ஆறு தேக்கு, வேங்கை, பலா மரங்களை அடித்துக் கொண்டு வந்து கரையில் இரு பக்கங்களிலும் சேர்க்கும். அவ்வாறு நிகழ்வதால் உண்டாகும் ஒலி ஆர்க்க அழகிய கரைமேல் வீற்றிருக்கும் ஈசனுடைய இடைமருது இதுவோ !
345. பூவார் குழலார் அகில்கொண் டுபுகைப்ப
ஓவாது அடியார் அடியுள் குளிர்ந்துஏத்த
ஆவா அரக்கன் றனைஆற் றல்அழித்த
ஏவார் சிலையான் தன்இடை மருதுஈதோ.
தெளிவுரை : மென்மையான மலர் சூடும் கூந்தலையுடைய மகளிர் அகிற் புகைகொண்டு விளங்க, அடியவர்கள் சற்றும் ஓய்தல் இன்றி இடையறாது. திருவடியை நெஞ்சில் இருத்தி மகிழ்ந்து ஏத்த, வரையெடுத்த இராவணனுடைய வலிமை யழித்த பெருமை மிக்க கயிலை நாதனின் இடைமருது இதுவோ!
346. முற்றா ததொர்பால் மதிசூ டுமுதல்வன்
நற்றா மரையா னொடுமால் நயந்துஏத்தப்
பொற்றோ ளியும்தா னும்பொலிந்து அழகாக
எற்றே உறைகின் றஇடை மருது ஈதோ.
தெளிவுரை : இளவெண்மதி சூடும் முதல்வன், பிரமனும் திருமாலும் விரும்பி ஏத்தி வழிபட, உமாதேவியும் தானும் பொலிந்து எவ்வளவு அழகாக உறைகின்றான் ! அந்த இடைமருது இதுவோ !
347. சிறுதே ரரும்சில் சமணும் புறம்கூற
நெறியே பலபத் தர்கள்கை தொழுதுஏத்த
வெறியா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எறிஆர் மழுவா ளன்இடை மருதுஈதோ.
தெளிவுரை : சில சமணர்களும் பௌத்தர்களும் நன்னெறிக்குப் புறம்பானவற்றைக் கூற, நன்னெறியின் பாற்பட்டுப் பலவகையால் அன்பு செய்யும் பக்தர்கள் கைதொழுது வணங்கி நிற்க, ஆவேசத்தோடு நீர் பெருகி வரும் காவிரியின் கரையில் விளங்கும், எறிந்து தாக்கும் மழுப்படையை ஆளும் ஈசன் இடைமருது இதுவோ !
348. கண்ணார் கமழ்க ழியுள்ஞா னசம்பந்தன்
எண்ணார் புகழ்எந் தைஇடை மருதின்மேல்
பண்ணோடு இசைபா டியபத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத் தினில்வீற்று இருப்பாரே.
தெளிவுரை : கண்ணுக்கும் கருத்துக்கும் பொருந்தி விளங்கும் காழியை உள்மகிழும் ஞானசம்பந்தன் எண்ணத்தில் மிளிரும் புகழ் மிக்க எந்தையாகிய ஈசன் இருக்கும் இடைமருதின் மேல், பண்ணோடு பாடிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் தேவர் உலகத்தில் வீற்றிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
33. திருஅன்பில்ஆலந்துறை (அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில், திருச்சி மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
349. கணைநீடு எரிமால் அரவம் வரைவில்லா
இணையா எயில்மூன் றும்எரித் தஇறைவர்
பிணைமா மயிலும் குயில்சேர் மடஅன்னம்
அணையும் பொழில்அன் பில்ஆலந் துறையாரே.
தெளிவுரை : நீண்டு எரிதரும் அக்கினிக் கடவுள், திருமால், ஆகியோரைத் கணையாகவும், அரவத்தை நாணாகவும், மேரு மலையை வில்லாகவும் இணைத்து, முப்புரங்களை எரித்த இறைவர் மயில்கள் தம் பெடையுடன் மகிழ்ந்தும், குயில்கள் இசைத்தும், அன்னப் பறவைகள் சேர்ந்தும் உள்ள பொழில் சூழ் அன்பில் என்கின்ற பதியில் விளங்கும் ஆலந்துறையில் இருப்பவர்.
350. சடைஆர் சதுரன் முதிரா மதிசூடி
விடைஆர் கொடியொன்று உடைஎந் தைவிமலன்
கிடைஆர் ஒலிஓத்து அரவத்து இசைகிள்ளை
அடைஆர் பொழில்அன் பில்ஆலந் துறையாரே.
தெளிவுரை : ஈசன், சடையை உடையவன்; ஆற்றல் உடையவன்; இளைய பிறை மதிசூடி இடபக் கொடியுடைய எந்தை; விமலன், அப்பெருமான், மாந்தர், கூட்டமாக இருந்து வேதங்களை இசையுடன் ஓத, அவ் ஒலியைக் கேட்ட கிளிகள் இசைக்க விளங்கும் பொழில் சூழ் அன்பில் ஆலந்துறையில் மேவியுள்ளவர்.
351. ஊரும் மரவம் சடைமேல் உறவைத்துப்
பாரும் பலிகொண்டு ஒலிபா டும்பரமர்
நீருண் கயலும் வயல்வா ளைவராலோடு
ஆரும் புனல்அன் பில்ஆலந் துறையாரே.
தெளிவுரை : ஊரும் அரவத்தைச் சடையில் இருக்குமாறு செய்து, கபாலம் ஏந்திப் பலியேற்று ஒலி செய்யும் பரமன், கயல், வாளை, வரால் ஆகிய மீன்வகைகள் நீர் நிறைந்த வயங்களில் விளங்கப் பெருகும், அன்பில் ஆலந்துறையில் மேவியுள்ளவர்.
352. பிறையும் மரவும் முறவைத் தமுடிமேல்
நறையுண்டு எழுவன் னியுமன் னுசடையார்
மறையும் பலவே தியர்ஓ தஒலிசென்று
அறையும் புனல்அன் பில்ஆலந் துறையாரே.
தெளிவுரை : பிறைச்சந்திரனும் அரவும் பகை நீங்கி ஒரு தன்மையில் அமையுமாறு வைத்துள்ள முடிமேல், மணம் கொண்டு எழும் நெருப்பை ஒத்துச் சிவந்த சடையை உடைய ஈசனார், வேத விற்பன்னர்கள் பலர், மறைகள ஓத, அவ்வொலியானது நீர்மல்கு ஒலிசேர் அன்பில் ஆலந்துறை சேர, மேவி இருப்பவர்.
353. நீடும் புனல்கங் கையும்தங் கமுடிமேல்
கூடும் மலையாள் ஒருபா கம்அமர்ந்தார்
மாடும் முழவம் மதிர்அம் மடமாதர்
ஆடும் பதிஅன் பில்ஆலந் துறையாரே.
தெளிவுரை : கங்கையை முடிமேலும், மலையரசன் மகளாகிய உமாதேவியை இடப்பாகத்திலும் வைத்த இறைவர், முழவு ஒலிக்க இளமை யுடைய மாதர்கள் நடனம் ஆடும் பதியாகிய அன்பில் ஆலந்துறை மேவி இருப்பவர்.
354. நீறுஆர் திருமே னியர்ஊ னம்இலார்பால்
ஊறுஆர் சுவையா கியஉம் பர்பெருமான்
வேறுஆர் அகிலும் மிகுசந் தனம்உந்தி
ஆறுஆர் வயல்அன் பில்ஆலந் துறையாரே.
தெளிவுரை : ஈசன், திருநீறு பூசிய திருமேனி உடையவர்; குற்றமற்ற மனத்தினர்தம் நற்சுவையானவர்; தேவர்தம் தலைவர். அவர், அகிலும் சந்தன மரங்களும் உந்திவரும் ஆற்றின் நீர் பாயும் வயல்கள் விளங்கும் அன்பில் ஆலந்துறையில் இருப்பவர்.
355. செடியார் தலையில் பலிகொண்டு இனிதுண்ட
படியார் பரமன் பரமேட் டிதன்சீரைக்
கடியார் மலரும் புனல்தூ விநின்று ஏத்தும்
அடியார் தொழும்அன் பில்ஆலந் துறையாரே.
தெளிவுரை : குற்றமுடைய ஒரு சிரத்தைக் கொய்து அதன் ஓட்டில் (பிரமகபாலம்) பலிகொண்ட முறைமையுடைய பரமன், பரமேட்டியின் சீரைப் போன்று மணத்துடன் மலரும் நீரும் சொரிந்து அடியவர்களால் தொழப்பெறும் அன்பில் ஆலந்துறை மேவியவர்.
356. விடத்தார் திகழும் மிடறன் நடமாடி
படத்தார் அரவம் விரவும் சடைஆதி
கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரைஆர
அடரத்துஆர் அருள்அன் பில்ஆலந் துறையாரே.
தெளிவுரை : விடத்தை மிடற்றில் தேக்கி, நடனம் ஆடி, படம் எடுத்து ஆடும் அரவத்தையும் சடைமுடியையும் உடையவனாகிய ஆதிமுதல்வன், இராவணனைக் கயிலைமலை நன்று அழுந்துமாறு செய்து தண்டித்துப் பின்னர் பொருந்திய அருள் புரிந்து, அன்பில் ஆலந்துறை மேவியவரே.
357. வணங்கிம் மலர்மேல் அயனும் நெடுமாலும்
பிணங்கி அறிகின் றிலர்மற் றும்பெருமை
கணங்கும் முகத்தம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் நிகழ்அன் பில்ஆலந் துறையாரே.
தெளிவுரை : தாமரை மலர்மேல் விளங்கும் அயனும், நெடியவனாகிய திருமாலும், பிணங்கும் நெறியால், ஈசனைத் தேடிக் காணாதவர்களாய் அயர்ந்து நிற்க, பின்னர் வணங்கிப் போற்ற, நெடுஞ் சோதி வடிவாய் நின்ற பெருமை யுடையவனாகிய ஈசன், உமையை ஒரு பாகம் கொண்டு திகழும் அன்பில் ஆலந்துறை மேவி இருப்பவர்.
358. தறிஆர் துகில்போர்த்து உழல்வார் சமண்கையர்
நெறியா உணரா நிலைக்கே டினர்நித்தல்
வெறியார் மலர்கொண்டு அடிவீ ழும்அவரை
அறிவார் அவர்அன் பில்ஆலந் துறையாரே.
தெளிவுரை : செம்மையான பொருளை உணராத சமணர் கேட்டினையுடையவர். மணம் பொருந்திய மலர்கொண்டு தனது அடி போற்றும் அடியவர்களை அறியும் ஈசன், அன்பில் ஆலந்துறை மேவியுள்ளவர்.
359. ஆரவுஆர் புனல்அன் பில்ஆலந் துறைதன்மேல்
கரவா தவர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
பரவுஆர் தமிழ்பத்து இசைபா டவல்லார்போய்
விரவுஆ குவர்வா னிடைவீ டுஎளிதாமே.
தெளிவுரை : ஒலிபெருகக் கலித்து ஓடும் புனல் பெருகும் அன்பில் ஆலந்துறையின் மேல், கரத்தல் குணம் இல்லாத காழிப்பதியின் ஞானசம்பந்தன் பரவிப் பாடிய இத்திருப்பதிகத்தை இசையாகப் பாடவல்லவார்கள், வானுலகத்தில் நன்கு விளங்குவார்கள்; முத்திப் பேறும் எளிதாகக் கூடும்.
திருச்சிற்றம்பலம்
34. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
360. அடல்ஏ றுஅமரும் கொடியண்ணல்
மடல்ஆர் குழலா ளொடுமன்னும்
கடல்ஆர் புடைசூழ் தருகாழி
தொடர்வார் அவர்தூ நெறியாரே.
தெளிவுரை : ஈசன், இடபவாகனம் அமர்பவர்; இடபக் கொடியை உடைய அண்ணல்; பூப்போன்ற மென்மையான் சூழலை உடைய உமாதேவியோடு சீகாழியில் விளங்கும் அவரைத் தொழுது வழிபடுபவர், தூய நெறியினர் ஆவார்.
361. திரைஆர் புனல்சூ டியசெல்வன்
வரைஆர் மகளோடு மகிழ்ந்தான்
கரைஆர் புனல்சூழ் தருகாழி
நிரைஆர் மலர்தூ வுமின்இன்றே.
தெளிவுரை : அலைகளையுடைய கங்கையைச் சூடிய செல்வன், மலைமகளாகிய உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருப்பவன். அவன் வீற்றிருக்கும் புனல் சூழ்ந்த காழியை மலர்தூவிப் போற்றிப் பரவுமின்.
362. இடிஆர் குரல்ஏ றுடைஎந்தை
துடிஆர் இடையா ளொடுதுன்னும்
கடிஆர் பொழிசூழ் தருகாழி
அடியார் அறியார் அவலம்மே.
தெளிவுரை : இடிமுழக்கம் போன்ற குரலையுடைய இடபத்தையுடைய என் தந்தை. துடிபோன்ற அமைப்புடைய இடையையுடைய உமாதேவியோடு சேர்ந்து விளங்கும் மணம் பொருந்திய பொழில் சூழ் சீகாழியில் விளங்க, அவரை வணங்கும் அடியவர்கள் அவலம் அடையாதவர்களாவர்.
363. ஒளிஆர் விடமுன் டஒருவன்
அளிஆர் குழல்மங் கையொடு அன்பார்க்
களிஆர் பொழில்சூழ் தருகாழி
எளிதாம் அதுகண் டவர்இன்பே.
தெளிவுரை : விடத்தை உட்கொண்ட ஒருவன், வண்டு ஒலித்துச் சூழும் கூந்தலை உடைய உமாதேவியோடு பொழில் சூழ் காழியில் அன்பாய் இருக்க, அத் திருக்காட்சியைக் காண்பவர்கள் இன்பம் உறுவர்.
364. பனிஆர் மலர்ஆர் தருபாதன்
முனிதான் உமையோ டுமுயங்கிக்
கனிஆர் பொழில்சூழ் தருகாழி
எளிதாம் அதுகண் டவர்ஈடே.
தெளிவுரை : குளிர்ந்த மலர் போன்ற திருவடியையுடைய ஈசன், உமையோடு இணைந்து கூடிக் கனிதரும் பொழில் சூழ்ந்த சீகாழியில் இனிது விளங்க, அத்திருக்காட்சியைக் கண்டு தரிசித்தவர்கள் இனிதே பெருமை யுற்றவர்கள் ஆவர்.
365. கொலைஆர் தரும்கூற் றம்உதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதுஏத் தியாகாழி
தலையால் தொழுவார் தலையாரே.
தெளிவுரை : கொலைத் தன்மையுடைய கூற்றுவளை உதைத்து, மலை மகளாகிய தேவியுடன் மகிழ்ந்தான். சிவபெருமான். ஞானிகள் தொழுது போற்றுக் காழியில் விளங்கும் அப்பெருமானைத் தலை வணங்கித் தொழுபவர்கள் சிறப்படைவர்.
366. திருவார் சிலையால் எயில்எய்து
உருவார் உமையோடு உடன்ஆனான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவா தவர்வான் மருவாரே.
தெளிவுரை : மேருமலையை அழகிய வில்லாகக் கொண்டு, முப்புரங்களின் கோட்டைகள் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, மேன்மையான உமா தேவியை உடனாகக் கொண்டு, அடர்ந்த பொழில் சூழ்ந்த காழியில் விளங்கும் ஈசனைக் காணாதவர்களுக்குச் சிறப்பு இல்லை.
367. அரக்கன் வலிஒல் கஅடர்த்து
வரைக்கும் மகளோ டுமகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ டுநினைந்தே,
தெளிவுரை : இராவணனுடைய வலிமையைக் கெடுமாறு தண்டித்து, மலைமகளாகிய உமாதேவியோடு மகிழ்ந்து விளங்கிய ஈசன், ஊற்று நீர் பெருக்கும் சீகாழியில் மேவி இருக்கின்றான். அப்பெருமானை மனத்தில் கொண்டு, ஏராளமான மலர்களால் தூவிப் போற்றுக.
368. இருவர்க்கு எரியா கிநிமிர்ந்தான்
உருவில் பெரியா ளொடுசேரும்
கருநல் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே.
தெளிவுரை : திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும், தீப்பிழம்பாகி வளர்ந்தோங்கிய ஈசன், உமாதேவியோடு சேர்ந்து கரிய கடல் சூழ் காழிப் பதியில் விளங்க, அதனைச் சாரும் மக்கட்கு வினை நீங்கி மாயும்.
369. சமண்மாக் கியர்தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோடு உடன்அன் பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.
தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் குறை மொழியைச் சொன்னாலும், அதனை ஏற்காதவனாய் உமாதேவியுடன் அன்பு சேர விளங்கும் காழிப்பதி யுடையவனை, மலர்தூவிப் போற்றுவது நற்றொண்டாகும்.
370. நலமா கியஞா னசம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வான் அடைவாரே.
தெளிவுரை : மன்னுயிர்களுக்கு நலத்தை அளிப்பவராகிய ஞானசம்பந்தன், காழிப்பதியை நிலையாக உடைய ஈசன்பால் பாடிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் சிறப்பு அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
35. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
371. அரைஆர் விரிகோ வணஆடை
நரைஆர் விடைஊர் திநயந்தான்
விரைஆர் பொழில்வீ ழிம்மிழலை
உரையால் <உணர்வார் உயர்வாரே.
தெளிவுரை : அரையில் கோவண ஆடையும், வெள்விடை ஊர்தியும் நயந்த, மணம் பொருந்திய பொழில் சூழ் வீழிமிழலையின் நாதனை, நல்லுரை கொண்டு போற்றியும், தியானம் செய்தும் வழிபடுபவர்கள், உயர்நிலை அடைவார்கள்.
372. புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமுநெஞ்சே.
தெளிவுரை : அழகுடன் பொருந்திய சடைமுடியில் ஒலி செய்து ஆர்க்கும் கங்கைய வைத்த ஈசனை, வீழிமிழலையில் தரிசித்து வினை இன்மை எனும் சிறப்பைக் கொள்ளாமலும், அப் பெருமானை நினைத்துப் போற்றி வணங்காமலும் இருக்கும் நெஞ்சம் ஒரு நெஞ்சம் ஆகுமா ?
373. அழவல் லவர்ஆ டியும்பாடி
எழவல் லவர்எந் தைஅடிமேல்
விழவல் லவர்வீ ழிம்மிழலை
தொழவல் லவர்நல் லவர்தொண்டே.
தெளிவுரை : பக்திப் பெருக்கால் அழுதும், ஆடியும், பாடியும் எழும் தொண்டர்கள், ஈசன் திருவடியைப் போற்றி ஆனந்தப் பரவசம் கொண்டு பேரின்பத்தில் திளைத்துத் திருவீழிமிழலையில் எழுந்தருளியுள்ள நாதனைத் தொழுவார்கள். அவர்கள் வல்லவர்கள்; நல்லவர்கள், தொண்டில் சிறந்தவர்கள்.
374. உரவம் புரிபுன் சடைதன்மேல்
அரவம் மரைஆர்த் தஅழகன்
விரவும் பொழில்வீ ழிம்மிழலை
பரவும் மடியார் அடியாரே.
தெளிவுரை : வலிமையுறும் சடையிலும் அரையிலும் அரவத்தைக் கொண்ட அழகனாகிய பொழில் சூழ் வீழிமிழலை நாதனைப் பரவித் தொழுபவரே அடியார்கள் ஆவர்.
375. கரிதா கியநஞ் சணிகண்டன்
வரிதா கியவண்டு அறைகொன்றை
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே.
தெளிவுரை : நஞ்சை அருந்தியதால் கண்டம் கரியதாகிய ஈசன், வண்டு சூழும் கொன்றை மரங்கள் சூழ் வீழிமிழலையில் விளங்க, அவனை உரிமையோடு நினைத்துத் தொழுபவர்கள் உயர்ந்த நிலை பெறுவர்.
376. சடைஆர் பிறையான் சரிபூதப்
படையாள் கொடிமே லதொர்பைங்கண்
விடையான் உறைவீ ழிம்மிழலை
அடைவார் அடியார் அவர்தாமே.
தெளிவுரை : ஈசன், சடையில் வெண்பிறை சூடியவன்; கூட்டமாக உள்ள பூதப்படை கொண்டவன்; இடபக் கொடியை உடையவன். அப்பெருமான் உறையும் வீழிமிழலையை அடைந்து, அவனடி பணிபவரே அடியவர்கள் ஆவர்.
377. செறிஆர் கழலும் சிலம்புஆர்க்க
நெறிஆர் குழலா ளொடுநின்றான்
வெறிஆர் பொழில்வீ ழிம்மிழலை
அறிவார் அவலம் மறியாரே.
தெளிவுரை : உறுதி மிக்க வீரக்கழலும் சிலம்பும் ஒலிக்க சுருண்ட குழலையுடைய உமாதேவியுடன் விளங்கும் ஈசன், மணம் பொருந்திய சோலைசூழ் வீழிமிழலையில் மேவ, நன்கு அறிந்து அப்பெருமானை வழிபடுபவர்கள் வாழ்வில் துன்பத்தைச் சற்றும் அடையாதவர்கள் ஆவர்.
378. உளையா வலிஒல் கஅரக்கன்
வளையா விரல்ஊன் றியமைந்தன்
விளைஆர் வயல்வீ ழிம்மிழலை
அளையா வருவார் அடியாரே.
தெளிவுரை : அழிவைத் தரும் வலிமை படைத்த இராவணனுடைய ஆற்றல் குன்றுமாறு விரல் ஊன்றிய ஈசன் திருவீழி மிழலையில் வீற்றிருக்க, அப்பெருமானை அன்புடன் மனம் தழுவிப் போற்றுபவர்களே அடியவர் ஆவர்.
379. மருள்செய்து இருவர் மயலாக
அருள்செய் தவனார் அழலாகி
வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.
தெளிவுரை : திருமாலும், பிரமனும் அஞ்ஞானத்தால் மருட்சி அடைந்து மயங்கி நிற்க, நெருப்புப் பிழம்பாகி வெருளும்படி செய்து அருள் புரிந்த ஈசன் விளங்கும் வீழிமிழலையில், தெளிந்த மனத்தினராய்ப் போற்றித் துதிப்பவர்தம் தீவினை, தேய்ந்து அழியும்.
380. துளங்கும் நெறியார் அவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புனல் லமண்தேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினைஓய்வே
தெளிவுரை : பக்தி நெறியில் உறுதிப்பாடி இல்லாமல் அசைவை யுடைய புறச்சமயத்தவர்களின் மொழிகள ஏற்றுக் கொள்ள வேண்டாம். வீழிமிழலையில் விளங்கும் ஈசனாரை உள்ளத்தில் பதித்துத் துதிபர்பவர்களுடைய வினை அசைவுற்று நீங்கும்.
381. நளிர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
குளிர்ஆர் சடையான் அடிகூற
மிளிர்ஆர் பொழில்வீ ழிம்மிழலை
கிளர்பா டல்வல்லார்க்கு இலைகேடே.
தெளிவுரை : குளிர்ச்சி பொருந்திய காழியின் ஞான சம்பந்தன், குளிர்ந்த கங்கையைச் சடையில் தரித்தவனாகிய ஈசன் அடிபோற்றி, மிளிர்பொழில்சூழ் வீழிமிழலையைப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களுக்குக் கெடுதியானது எக்காலத்திலும் இல்லை.
திருச்சிற்றம்பலம்
36. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
382. கலைஆர் மதியோடு உரநீரும்
நிலைஆர் சடையார் இடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோடு
அலைஆர் புனல்சே ரும்ஐயாறே.
தெளிவுரை : கலையுடைய சந்திரனும் மிகுதியாக உள்ள கங்கையும் சடையில் தரித்து விளங்கும் ஈசன் திகழும் இடமாவது, மலையில் தோன்றும் முத்துக்களும், சிறப்பான மணிகளும். சந்தன மரங்களும் காவிரியில் அடித்துக் கொண்டு சேரும் வளம் மிக்க ஐயாறு ஆகும்.
383. மதிஒன் றியகொன் றைவடத்தான்
மதிஒன் றஉதைத் தவர்வாழ்வு
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதிஅம் பயில்கின் றஐயாறே.
தெளிவுரை : ஈசன், சந்திரனையும் கொன்றை மாலையையும் முடியில் சூடியவன்; வீரபத்திரக் கோலத்தில் தக்கன் யாகத்தை அழித்த போது, சந்திரனைக் காலால் மிதித்துத் தேய்த்தவன். சந்திரமண்டலம் அருகில் சேரும்படி உயர்ந்த மாடங்களையுடைய திங்கள் தவழும் ஐயாறு, அப்பெருமான் வீற்றிருக்கும் இடம் ஆகும்.
384. கொக்கின் னிறக்கின் னொடுவன்னி
புக்க சடையார்க்கு இடமாகும்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதுஐயாரே.
தெளிவுரை : உருத்திராக்க மாலையை நன்கு அணிந்தும், கொக்கிறகும் நெருப்பும் கொண்டுள்ள சடைமுடியுடையவராகிய ஈசனுக்குத் தேவர்களெல்லாம் வணங்கும் ஐயாறு இடமாகும்.
385. சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ரும்ஐயாறே.
தெளிவுரை : மும்மதில்களை எல்லையாகக் கொண்டு தீங்கிழைத்த மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, நீலகண்டனாக உள்ள இறைவர் விரும்பும் கோயிலானது, மக்கள் கண்களுக்குப் புலனாகாமல் தேவர்கள் துதிக்கும் ஒலி திகழும் ஐயாறு ஆகும்.
386. உமையாள் ஒருபா கமதாகச்
சமைவார் அவர்சார் விடம்ஆகும்
அமைஆர் உடல்சோர் தரமுத்தம்
அமையா வரும்அந் தண்ஐயாறே.
தெளிவுரை : உமாதேவி ஒரு பாகத்தில் விளங்க, ஈசன் சார்ந்து இருக்கும் இடமாவது, மூங்கில்கள் முற்றி வெடிக்க, அதிலிருந்து முத்துக்கள் அழகோடு வரும் அழகிய குளிர்ச்சி பொருந்திய ஐயாறு ஆகும்.
387. தலையில் தொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் கும்ஐயாறே.
தெளிவுரை : தலையில் பூங்கெத்துக்களை மாலையாக அணிந்தும், மானைத் திருக்கரத்தில் ஏந்தியும் விளங்கும் ஈசன் சேரும் இடமாவது, நிலைத்த மனத்தினராய் நித்தம் மலர்கொண்டு வணங்கும் சிறப்புப் பொருந்திய ஐயாறே.
388.வரம்ஒன் றியமா மலரோன்றன்
சிரம்ஒன் றைஅறுத் தவர்சேர்வாம்
வரைநின்று இழிவார் தருபொன்னி
அரவம் கொடுசே ரும்ஐயாறே.
தெளிவுரை : தெய்வப் பேறுடைய பிரமனுடைய சிரம் ஒன்றை அறுத்த ஈசனார் சேர்கின்ற இடமாவது மலையிலிருந்து வீழும் பொன்னி நதியின் ஒலி திகழும் ஐயாறே.
389. வரைஒன் றதுஎடுத் தஅரக்கன்
சிரம்அங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ரும்ஐயாறே.
தெளிவுரை : மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனுடைய சிரத்தையும், அங்கத்தையும் நெரித்த ஈசனார் சேர்கின்ற இடமாவது, மணம் பொருந்திய மலர்களைத் திரைகள் மூலமாகக் கரையில் சேர்க்கும் ஐயாறே.
390. சங்கக் கயனும் அறியாமைப்
பொங்கும் கடரா னவர்கோயில்
கொங்கில் பொலியும் புனல்கொண்டு
அங்கிக்கு எதிர்காட் டும்ஐயாறே.
தெளிவுரை : சங்கைக் கையில் உடைய திருமாலும் அறியமாட்டாதவராய்ப், பூக்கும் நெருப்புப் பிழம்பாய் விளங்கும் ஈசனார் திருக்கோயில், தேன் எனச் சுவையுடைய நீர்கொண்டு வேள்வி முதலான சுபச் செயல்களுக்கு அர்க்கியம் அர்ப்பணம் காட்டும் ஐயாறே.
391. துவர்ஆ டையர்தோல் உடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோடு
அவர்தாம் அணைஅந் தண்ஐயாறே.
தெளிவுரை : துவர் ஆடையுடைய வஞ்சனையாளர் கூறும் மொழிகளை நாடாது, தவமுனிவர்களும் பிரமனும் சார்ந்து விளங்கும் இடம் ஐயாறே.
392. கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலம்ஆர் தருஞா னசம்பந்தன்
அலைஆர் புனல்சூழும் ஐயாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே.
தெளிவுரை : கலை ஞானியர் ஒலி செய்யும் காழியில் நலம் சிறக்கப் புரியும் ஞானசம்பந்தன். நீர் சூழும் ஐயாற்றைப் பற்றி உரைத்த இத் திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்களின் துயர் வீழ்ச்சி அடையும்.
திருச்சிற்றம்பலம்
37. திருப்பனையூர் (அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர், திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
393. அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவன்ஊராம்
நிரவிப் பலதொண் டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.
தெளிவுரை : அரவம் பொருந்திய சடையில் சந்திரனும் ஊமத்தை மலரும் விரவிப் பொலிகின்ற ஈசனின் ஊர். பல தொண்டர்கள் யாண்டும் இருந்து, தினமும் தொழுது சிறப்புக் கொள்ளும் பனையூர் ஆகும்.
394. எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்த் தவன்ஊராம்
கண்ணின்று எழுசோ லையில்வண்டு
பண்நின்று ஒலிசெய் பனையூரே.
தெளிவுரை : ஒன்றிய மனத்தினராய், ஈசனை நினைத்து வழிபடும் தொண்டர்களின் உள்ளத்தில் பொருந்தி நின்று, அவர்கள் துயரை அகற்றி, அடையும் மகிழ்ச்சியையும் தானே ஏற்று, அத் தொண்டர்களுக்கு இருவினையும் ஒத்த பாங்குடையதாக வைத்து, மீளவும் பிறக்கும் இயல்பை நீக்கி அருள் நல்குபவனுடைய ஊரானது, தேன் சொரியும் மலர்ச்சோலையில் வண்டுகள் இசை பாடும் பனையூர் ஆகும்.
395. அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறைஒன்று உடையான்ஊர்
சிலர்என் றும்இருந்து அடிபேணப்
பலரும் பரவும் பனையூரே.
தெளிவுரை : மலர்களால் போற்றி அர்ச்சனை செய்யப்படுகின்ற சிவந்த சடை முடியில் மலரும் பிறைச் சந்திரனை உ<டைய ஈசனது ஊர், அணுக்கத் தொண்டர்களாக விளங்கும் அடியவர்களும், திருத்தொண்டர்களும் எல்லாக் காலங்களிலும் இருந்து திருவடியைப் பேணிப் பரவி வழிபடும் பனையூர் ஆகும்.
396. இடிஆர் கடல்நஞ் சமுதுஉண்டு
பொடிஆ டியமே னியினான் ஊர்
அடியார் தொழமன் னவர்ஏத்தப்
படியார் பணியும் பனையூரே.
தெளிவுரை : அலைகளால் கரையை இடித்து மோதும் கடலில் இருந்து தோன்றிய நஞ்சை அமுதமாக ஏற்று உட்கொண்டு, வெண்பொடியாகிய திருநீற்றைப் பூசிய மேனியை உடையவனின் ஊரானது, அடியவர்களும், மன்னவர்களும் தொழுது போற்றவும், உலகத்தில் உள்ள பிற மாந்தர்களும் வணங்கும் பனையூர் ஆகும்.
397. அறைஆர் கழல்மேல் அரவுஆட
இறைஆர் பலிதேர்ந் தவன்ஊராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறைஆர் ஒலிசெய் பனையூரே.
தெளிவுரை : ஒலிக்கும் கழலும் அரவமும் ஆட, கையில் திருவோடு ஏந்தி, பிட்சாடன மூர்த்தித் திருக்கோலம் பூண்டு பலி கொண்டவனுடைய ஊரானது, உலகத்தில் சிறப்பாகச் செய்யப்படும் பெருமையான விழாக்கள் விளங்க, ஒலிப்பறை முழங்கும் பனையூர் ஆகும்.
398. அணியார் தொழவல் லவர்ஏத்த
மணிஆர் மிடறுஒன்று உடையான்ஊர்
தணிஆர் மலர்கொண்டு இருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே.
தெளிவுரை : ஈசனைத் தொழுது போற்ற வல்லவர்கள் அவனுக்கு அண்மையில் உள்ளவர் ஆவர். அத்தகையோர் விளங்க, நீலகண்டத்தை உடையவனாகிய ஈசன் இருக்கும் ஊரானது, குளிர்ந்த நீரும் பூக்களும் கொண்டு இருவேளையும் பணிந்து வழிபடும் அடியார்கள் நிலவும் பனையூர் ஆகும்.
399. அடையா தவர்மூ எயில்சீறும்
விடையான விறல்ஆர் கரியின்தோல்
உடையான் அவன்எண் பலபூதப்
படையான் அவன்ஊர் பனையூரே.
தெளிவுரை : முப்புரத்து அசுரர்களைச் சினந்து அழக்கும் இடப வாகனனாகிய ஈசன், வலிமை மிக்க யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன். அப்பெருமான் பூத கணங்களைப் படையாகக் கொண்டவன். அவனுடைய ஊர் பனையூர் ஆகும்.
400. இலகும் முடிபத்து உடையானை
அலல்கண்டு அருள்செய் தஎம்அண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவன்ஊர் பனையூரே.
தெளிவுரை : சிறுமை யுடைய பத்துத் தலைகளையுடைய இராவணன் மலையின் கீழ் அடையும் துன்பத்தைக் கண்டு, இரக்கம் கொண்டவராய் அருள் செய்த எம் அண்ணலாகிய ஈசன், உலகத்தில் எல்லாக் காலங்களிலும் உயிர்கள், நீர், நிலம் மற்றும் உள்ள அனைத்துக் கண்டவர். அவர் ஊர் பனையூர் ஆகும்.
401. வரம்உன் னிமகிழ்ந்து எழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமால் அறியாத
பரமன் னுறையும் பனையூரே.
தெளிவுரை : ஈசனின் பெருங் கருணையால் வரங்கள் பல பெற்று, அதை நினைத்து மகிழ்ச்சி கொண்டு வணங்கித் தொழும் அன்பர்காள் ! சிரம் தாழ்த்தி வணங்கும் பிரமனும், திருமாலும் அறியாத பரமன் உறையும் ஊர் பனையூர் ஆகும்.
402. அழிவல் லமண ரொடுதேரர்
மொழிஅல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினான்ஊர்
பழிஇல் லவர்சேர் பனையூரே.
தெளிவுரை : சமணர்களும், பௌத்தர்களும் உயர்ந்த மொழி யல்லாதனவற்றைச் சொன்ன போதிலும் குறையற்ற செம்மை வழங்கும் ஈசனது ஊர், பழியில்லாதவர்கள் விளங்கும் பனையூர் ஆகும்.
403. பார்ஆர் விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொல்மா லைகள்பத்தும்
ஊர்ஊர் நினைவார் உயர்வாரே.
தெளிவுரை : பூவுலகத்தில் சிறப்புடைய பனையூர் மேல், சீரார் தமிழ் ஞானசம்பந்தன் <உரைத்த, எக்காலத்திலும் சிறந்து விளங்கும் சொல் மாலையாகிய இத்திருப்பதிகத்தை மிகுதியாக நினைத்து ஓதுபவர்கள் உயர்வு அடைவர்.
திருச்சிற்றம்பலம்
38.திருமயிலாடுதுறை (அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
404. கரவுஇன் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம்ஒன் றியசெஞ் சடையான் வாழ்
வரமா மயிலா டுதுறையே.
தெளிவுரை : தலை மாலை பூண்ட செஞ்சடையண்ணல் வீற்றிருக்கும் மயிலாடுதுறையில், அடியவர்கள் வஞ்சனை இன்றி நன்மலர்களைக் கொண்டு இரவும் பகலும் தூவித் தொழுகின்றனர்.
405. உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதிஎன்பர்
குரவம் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.
தெளிவுரை : குரவம், சுரபுன்னை, வன்னி ஆகிய மலர்கள் விளங்கும் மயிலாடுதுறையானது வலிமையான கொடிய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட பரமன் உறையும் பதியாகும்.
406. ஊனத்து இருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண்டு அடிபேணும்
தேன்ஒத்து இனியான் அமரும்சேர்
வானம் மயிலா டுதுறையே.
தெளிவுரை : அஞ்ஞானம் என்னும் இருள் ஆன்மாவை ஊனப்படுத்துகிறது. அஃதாவது, ஆன்மாவானது உயிரானது, ஈசனோடு பொருந்தி மகிழ்ந்து உறைவதற்கு அஞ்ஞானம் தடையாக உள்ளது. அது நீங்க வேண்டுமானால் ஞானப் பொருள் கொள்ள வேண்டும். அது, தேனை ஒத்து இனிமை தரும் பதியாகிய ஈசன் அடிபோற்றுவதால் உண்டாகும். அவ் ஈசன் அமர்ந்துள்ள இடம், உயர்ந்த தன்மையில் விளங்கும் மயிலாடுதுறை.
407. அஞ்சுஒண் புலனும் மவைசெற்ற
மஞ்சள் மயிலா டுதுறையை
நெஞ்சுஒன் றிநினைந்து எழுவார்மேல்
துஞ்சும் பிணிஆ யினதானே.
தெளிவுரை : ஐந்து புலன்களின் வழி செல்லும் ஆசையை அழித்தவன் இறைவன். மயிலாடுதுறையில் அப் பெருமான் வீற்றுள்ளான். அப் பெருமானை ஒன்றிய சிந்தனையால் வணங்குபவர்களிடம் உள்ள பிணிகள் யாவும் மறையும்.
408. தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணிஆர்ந் தவருக்கு அருள்என்றும்
பிணியா யினதீர்த்து அருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே.
தெளிவுரை : குளிர்ந்த சந்திரனைச் செஞ்சடையில் தரித்தவன் ஈசன். அவன், தன்னை அடைந்து வழிபடுபவர்களுக்கு அருள்புரிபவன். அவன் மயிலாடுதுறையில் வீற்றிருந்து பிணிகளைத் தீர்த்து அருள் செய்யும் மணி போன்றவன்.
409. தொண்டர் இசைபா டியும்கூடிக்
கண்டு துதிசெய் பவன்ஊராம்
பண்டும் பலவே தியர்ஓத
வண்டார் மயிலா டுதுறையே.
தெளிவுரை : தொண்டர்கள் பக்தியாகக் கூடி இருந்து இசைப் பாடல்களைப் பாடி, ஈசனைக் கண்டு தரிசித்து மகிழ்கின்றனர். அப்பெருமான் உறையும் ஊரானது இதே போன்று முற்காலத்திலும் பல வேதவிற்பன்னர்கள் கூடி இருந்து ஓதிய மயிலாடுதுறை ஆகும்.
410. அணங்கோடு ஒருபா கம்அமர்ந்து
இணங்கி அருள்செய் தவன்ஊராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலா டுதுறையே.
தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு, அக் கருணைத் தாயின் அருள் பாங்கின்படியும் அடியவர்தம் வேண்டுதலின்படியும் இணங்கி அருள் புரிபவன் ஈசன், அப்பெருமான், நுண்மையாய் ஆயும் முப்புரிநூல் அணிந்த பெருமக்கள் கூடி வணங்கும் மயிலாடுதுறையில் வீற்றிருப்பவன். எனவே அது அவனுடைய ஊர் ஆகும்.
411. சிரம்கை யினில்ஏந் திஇரந்த
பரம்கொள் பரமேட் டிவரையால்
அரங்கஅவ் அரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலாடுதுறையே.
தெளிவுரை : பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலி கொண்ட ஈசன், <உமாதேவி தன்பால்பற்றிச் சூழுமாறு சேர, அதற்குக் காரணமாகிய அரக்கனின் வலிமை குறையும்படி வரையால் அடர்த்தினான். அப்பெருமான் வீற்றிருப்பது மயிலாடுதுறை.
412. ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்
கோலத்து அயனும் மறியாத
சீலத்தவனூர் சிலர் கூடி
மாலைத் தீர்மயி லாடுதுறையே.
தெளிவுரை : பூமியை உண்டு உமிழ்ந்த திருமாலும் அழகிய பிரமனும் அறியாதவாறு ஓங்கியும், மறைந்தும் இருந்த ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, மயக்கத்தைத் தீர்க்கும் பெற்றியை உடைய மயிலாடுதுறை.
413. நின்று<உண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மை<உயர்ந்த
வென்றி அருளான் அவன்ஊரான்
மன்றல் மயிலா டுதுறையே.
தெளிவுரை : சமணரும், பௌத்தரும் உயர் பொருளை அறியாதவாராய் இருக்க, வெற்றியைத்தரும் அருமை <உடையவனாகிய ஈசன் உறைவது மணம் கமழும் மயிலாடுதுறை ஆகும்.
414. நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலால் உரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவைஉற்று உணர்வார்க்கே.
தெளிவுரை : நயம் மிக்கவர் விளங்கும் காழியின் ஞான சம்பந்தன், மயலைத் தீர்க்கும் மயிலாடுதுறையின்மேல் ஈசன் திருவருளால் உரை செய்த இத் திருப்பதிகத்தை உணர்ந்து ஓதுபவர்களுக்கு எல்லா உயர்வும் உண்டாகும்.
திருச்சிற்றம்பலம்
39. திருவேட்களம் (அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம் (சிதம்பரம் நகர்),கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
415. அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்
ஆர்அழல் அங்கை அமர்ந்திலங்க
மந்தமுழவம் இயம்ப
மலைமகள் காண நின்றாடிச்
சந்தம் இலங்கு நகுதலை கங்கை
தண்மதியம் மயலேததும்ப
வெந்தவெண் ணீறுமெய்பூசும்
வேட்கள நன்னகராரே.
தெளிவுரை : ஆதியும் அந்தமும் ஆகிய அண்ணல். நெருப்பை அழகிய கரத்தில் கொண்டு முழவு ஒலிக்க, கபாலமும் கங்கையும் குளிர்ச்சி பொருந்திய சந்திரனும் மயங்கித் திளைக்க, மலைமகள் கண்டு மகிழுமாறு நின்று ஆடுகின்றார். அவர் திருநீற்றை மெய்யில் பூசி வேட்கள நகரில் இருப்பவர்.
416. சடைதனைத் தாழ்தலும் ஏறுமுடித்துச்
சங்கவெண் தோடு சரிந்திலங்கப்
புடைதனில் பாரிடம் சூழப்
போதருமாறு இவர் போல்வார்
உடைதனில் நால்விரற் கோவணஆடை
உண்பதும் ஊரிடு பிச்சைவெள்ளை
விடைதனை ஊர்தி நயந்தார்
வேட்கள நன்நகராரே.
தெளிவுரை : ஈசன், சடையைத் தாழ முடித்துக் காதில் வெண்குழையும் தோடும் விளங்கவும், பூதங்கள் நாலா பக்கங்களிலும் சூழ்ந்திருக்கு வருபவர். இவரது உடை கோவணம். இவர் ஊர் இடுகின்றி பிச்சையை ஏற்று உண்டு, இடபத்தைத் தனது வாகனமாக விரும்பியவர். இவரே வேட்களம் என்னும் நன்நகரில் இருப்பவர்.
417. பூதமும் பல்கண மும்புடைசூழப்
பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்
சீதமும் வெம்மையும் ஆகிச்
சீரொடு நின்றஎம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை
உள்ளம் கலந்து இசையால்எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா
வேட்கள நன் நகராரே.
தெளிவுரை : பூதம் மற்றும் பல கணங்களும் புடைசூழவும், பூவுலகமும் விண்ணுலகமும், உடன் சேர்ந்து பொருந்துமாறும் தாமே ஆகும் சிறப்புடன் இருக்கும் ஈசன் எம் செல்வர். அவர் காட்சிக்கும் கருத்துக்கும் இனிமையும் குளிர்ச்சியும் தரும் கடல் சூழ்தரும் சோலையைப் போன்று, உள்ளத்தில் கலக்கும் இசையால் எழும் வேத வேள்விகள் ஓய்வில்லாது விளங்கும் வேட்கள நகரில் உள்ளவரே.
418. அரைபுல்கும் ஐந்தவை ஆடல்அரவம்
அமையவெண் கோவணத் தோடுஅசைத்து
வரைபுல்கு மார்பில் ஓர்ஆமை
வாங்கி அணிந் தவர்தாம்
திரைபுல்கு தெண்கடல் தண்கழி ஓதம்
தேனலங்கானலில் வண்டுபண்செய்ய
விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
வேட்கள நன்கராரே.
தெளிவுரை : ஈசன், ஐந்து தலைகளையுடைய அரவு இடையில் ஆட, ஒளிமிக்க கோவணம் அணிந்து ஆடி, மாலைபோன்று வலிமையான திரண்ட மார்பில் ஆமையை அணிந்து இருப்பவர். அவர், அலைகள் கொண்ட தெளிந்த கடலில் உப்பங்கழி ஓதம் விளங்க, இருமருங்கும் தேன் மலர்ச் சோலைகளில் வண்டுகள் இனிய பண்களை இசைக்கும் சிறப்பு பொருந்திய வேட்களம் என்னும் நன்நகரில் உள்ளவர்.
419. பண்ணுறு வண்டறை கொன்றைஅலங்கல்
பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
பெண்ணுறு மார்பினர் பேணார்
மும்மதில் எய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்தவெண் திங்கள்
கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண்ணிற மால்விடை அண்ணல்
வேட்கள நன்னகாரரே.
தெளிவுரை : வண்டுகள் இசைபாடும் கொன்றை மாலையணிந்தும், பால்போன்ற திருவெண்ணீறு பூசி வெண்ணூல் திகழ, உமாதேவியை இடப்பாகத்தில் கொண்ட பெருமான், நன்னெறியை பேணிக்காதவர்களான முப்புர அசுரர்களை அழித்தவர். அவர், நெற்றியில் ஒரு கண்ணும், வெண்பிறைச் சந்திரனும் சூடி உள்ளவர்; தேவர்கள் தொழுது போற்ற, வெண்மையான இடப வாகனத்தை உடையவர். அவர் வேட்கள நகரில் இருப்பவரே.
420. கறிவளர்குன்றம் எடுத்தவன் காதல்
கண்கவர் ஐங்கணை யோன்உடலம்
பொறிவளர் ஆரழல்உண்ணப்
பொங்கிய பூதபுராணர்
மறிவளர் அங்கையர் மங்கையொர் பங்கர்
மைஞ்ஞிற மான்உரி தோலுடை ஆடை
வெறிவளர் கொன்றைஅம் தார்ஆர்
வேட்கள நன்நகராரே.
தெளிவுரை : மிளகுச் செடிகள் பெருகி வளரும் கோவர்த்தன மலையை எடுத்து, பசுகூட்டங்களுடன் மக்களையும் பாதுகாத்த திருமாலின் புதல்வனாகிய ஐந்து மலர்கணைகளை யுடைய மன்மதனை, நெற்றிக் கண்ணிலிருந்து எழும் நெருப்புப் பொறியால் எரித்தவர், ஈசன். அப்பெருமான், மானைத் திருக்கரத்தில் ஏந்தியவர்; உமாதேவியை ஒரு பாகமாக உடையவர்; கரிய மானின் தோலை உரித்து அதனை ஆடையாகக் கொண்டவர்; மணம் பெருக்கும் கொன்றை மலரை அழகிய மாலையாகச் சூடியவர். அவரே வேட்கள நகரில் இருப்பவர்.
421. மண்பொடிக் கொண்டுஎரித் தோர்சுடலை
மாமலை வேந்தன் மகள்மகிழ
நுண்பொடிச் சேர நின்றாடி
நொய்யன செய்யல் உகந்தார்
கண்பொடி வெண்தலை யோடுகை÷ந்திக்
காலனைக் காலால் கடிந்துஉகந்தார்
வெண்பொடிச் சேர்திரு மார்பர்
வேட்கள நன்நகராரே.
தெளிவுரை : பிரளய காலத்தில் யாவற்றையும் எரித்துப் பொடியாக்கி, அந்தச் சாம்பலைப் பூசி, உமாதேவி மகிழுமாறு நடனம் புரிந்து நுட்பத்தைச் செய்ய விரும்பியவர், ஈசன். அவர், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவர்; காலனைக் காலால் உதைத்தவர்; திருநீற்றை மார்பில் அணிபவர். அவர் வேட்களம் என்னும் நகரத்தில் உள்ளவரே.
422. ஆழ்தரு மால்கடல் நஞ்சினை உண்டார்
அமுதம் அமரர்க்கு அருளிச்
சூழ்தரு பாம்புஅரை ஆர்த்துச்
சூலமோடு ஒண் மழுவேந்தித்
தாழ்தரு புன்சடை ஒன்றினை வாங்கித்
தண் மதியம்மய வேததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார்
வேட்கள நன்நகராரே.
தெளிவுரை : திருமால் பள்ளிகொண்டுள்ள பாற்கடலில் தோன்றிய நஞ்சினைத் தாமே ஏற்று உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு அருள் செய்து, பாம்பை அரையில் கட்டி, சூலமும் மழுவும் கரத்தில் ஏந்தி தாழும் சடை யொன்றில் குளிர்ந்த சந்திரனை இன்ப மயக்கம் உறுமாறு சூடி, கங்டகடயத் தம் திருமுடியில் ஏற்றுக் கொண்டவர் ஈசன். அவர் வேட்களம் என்னும் நகரில் இருப்பவரே.
423. திருவொளி காணிய பேதுறு கின்ற
திசைமுகனும் திசைமேல் அளந்த
கருவரை யேந்திய மாலும்
கைதொழ நின்றதும் அல்லால்
அருவரை ஒல்க எடுத்த அரக்கன்
நாடெழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெருவுற ஊன்றிய பெம்மான்
வேட்கள நன்நகராரே.
தெளிவுரை : ஈசனுடைய பேரொளியாகிய திருமேனியைக் காண விரும்பியவர்கள் திசைமுகனாகிய பிரமனும், திசைகளுக்கும் மேலாக மூவுலகத்தையும் அளந்து, கோவர்த்தனகிரியைக் கையில் ஏந்திய திருமாலும் ஆவர். அவர்கள் இருவரும் கைதொழுது நிற்கின்றனர். அருமையான கயிலையை எடுத்த அரக்கனின் விரும்பத்தக்க தோள்கள் கீழே அழுந்துமாறும் அச்சம் கொள்ளுமாறும் விரலால் உன்றியவன் அப் பெருமான். அத்தகைய பெருமை உடையவர் வேட்கள நன்நகரில் இருப்பவரே.
424. அந்த மண் தோய்துவர் ஆர்அமண்குண்டர்
யாதும்அல்லார்உரை யேஉரைத்துப்
பொய்த்தவம் பேசுவதல்லால்
புறன்உரை யாதொன்றும் கொள்ளேன்
முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
மூரிவல் லானையின் ஈருரிபோர்த்த
வித்தகர் வேத முதல்வர்
வேட்கள நன்நகராரே.
தெளிவுரை : செம்மண் தோய்த்துத் துயர் ஆடை அணியும் அமணர்கள் கூறும் பயனற்ற உரைகள், பொய்த் தவத்தையே பேசும். எனவே அதனை யான் ஏற்றுக் கொள்வதில்லை. முத்துப் போன்ற வெண்மை யான முறுவல் புரியும் உமாதேவி அஞ்சுமாறு வலிமையான கொடிய யானையைப் பிளந்து சாய்ந்து, அதன் தோலைப் போர்த்துக் கொண்ட வித்தக தேவ முதல்வர் வேட்கள நன்நகரில் உள்ள ஈசன் ஆவர்.
425. விண்ணியல் மாடம் விளங்குஒளிவீதி
வெண்கொடிஎங்கும் விரிந்துஇலங்க
நண்ணிய சீர்வளர் காழி
நற்றமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணி னல்லாள்ஒரு பாகம் அமர்ந்து
பேணிய வேட்கள மேல்மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள்
பழியொடு பாவம் இலாரே.
தெளிவுரை : உயர்ந்த மாட மாளிகைகளும், தூய்மையான ஒளிமிக்க வீதிகளும், சாந்தமும் அமைதியும் காட்டும் வெண்ணிறக் கொடிகளும் எல்லா இடங்களிலும் விரிவாகத் திகழச் சீர் மிகுந்து வளரும் காழியின் நற்றமிழ் ஞானசம்பந்தன், பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு அமர்ந்து காத்தருளும் வேட்கள நகரின்மேல் மொழிந்த இசைப் பாடல்களைப் பாட வல்லவர்கள், பழியும் பாவமும் அற்றவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
40. திருவாழ்கொளிபுத்தூர் (அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
426. பொடிஉடை மார்பினர் போர்விடை ஏறிப்
பூதகணம் புடைசூழக்
கொடி உடை ஊர்திரிந்து ஐயம்
கொண்டு பலபல கூறி
வடிவுடை வாள்நெடும் கண்ணுமை பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமலர் இட்டு
கறைமிடற்றான்அடி காண்போம்.
தெளிவுரை : திருநீறு அணிந்த மார்பினர், ஈசன். பூதகணங்கள் புடைசூழப் போர்த்தன்மையுடைய வீரம் பொருந்திய இடப வாகனத்தில் ஏறி, ஊர்ஊர் திரிந்து பிச்சை கொண்டவர் அவர். அப்பெருமான் பிச்சை கொள்ளும்போது பலர் பலவாகக் கூறினும், உமாதேவியை ஒரு பாகம் கொண்டு வாழ்கொள புத்தூரில் மேவியுள்ளவர். நீலகண்டனாகிய அப்பெருமான் திருவடியை மணம் பொருந்திய உயர்ந்த மலர்களால் போற்றித் தரிசனம் செய்வோம்.
427. அரைகெழு கோவண ஆடையின் மேல்ஓர்
ஆடரவம் மசைத்து ஐயம்
புரை கெழு வெண்தலை ஏந்திப்
போர்விடை ஏறிப் புகழ
வரைகெழு மங்கையது ஆகமொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரைகமழ் மாமலர் தூவி
விரிசடை யான்அடி சேர்வோம்.
தெளிவுரை : கோவண ஆடை அரையில் திகழ, மேல் ஆடும் அரவத்தைக் தரித்தவன் ஈசன். அபபெருமான், பிரமனது தலையைத் திருஓடாகக் கைக்கொண்டு பிச்சை யேற்றவன்; போரில் வெற்றி கொள்ளும் வீரமிக்க இடபத்தை வாகனமாகக் கொண்டவன்; மலையரசன் மகளாகிய பார்வதி தேவியைத் தனது திருமேனியில் பாகமாகக் கொண்டவன்; வாழ்கொளி புத்தூரில் மேவியுள்ளவன்; விரிந்த சடையுடைய அப்பெருமான் திருவடியை மணம் கமழ் மலர்களால் அர்ச்சித்து வணங்குவோம்.
428. பூண்நெடு நாகம் அசைத்து அனல்ஆடிப்
புன்தலை அங்கையில் ஏந்தி
ஊண்இடு பிச்சைஊர் ஐயம்
உண்டி என்று பலகூறி
வாள்நெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தாள்நெடு மாமலர் இட்டுத்
தலைவன தாள்நிழல் சார்வோம்.
தெளிவுரை : நீண்டு வளர்ந்த நாகத்தை ஆபரணமாகப் பூண்டும், அனலைக் கரத்தில் ஏந்தியும் ஆடிப் பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சை ஏற்கும் பாவனையில் பல சொற்களைக் கூறி, வாளைப் போன்று கூரிய நோக்குடைய கண்களைக் கொண்ட உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன், வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருக்கும் இறைவன். அவ் இறைவனின் தாளினை மலர்களால் போற்றி வணங்கி அடைக்கலம் ஆவோம்.
429. தார்இடு கொன்றையொர் வெண்மதி கங்கை
தாழ்சடை மேல் அவை சூடி
ஊர்இடு பிச்சைகொள் செல்வம்
உண்டி என்று பலகூறி
வார்இடு மென்முலை மாதொரு பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கார்இடு மாமலர் தூவிக்
கறைமிடற் றான்அடி காண்போம்.
தெளிவுரை : கொன்றை மாலை, வெண்மதி, கங்கை ஆகியவற்றைச் சடைமேல் சூடி, ஊரில் பிச்சை இடுமாறு பலவற்றைக் கூறி, உமையை ஒரு பாகம் உடையவன் வாழ்கொளிபுத்தூரில் உள்ளவன். அவனடியை, மலர் தூவிப் போற்றிக் காண்போம்.
430. கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
காதிலொர் வெண்குழையோடு
புனமலர் மாலை புனைந்து ஊர்
புகுதி என்றே பலகூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமலர் ஏய்ந்தன தூவி
எம்பெரு மானடி சேர்வோம்.
தெளிவுரை : பொன்போன்ற பெருமை மிக்க கொன்றை மாலை விளங்கவும், காதில் வெண்குழையும் அணிந்து, காட்டு மலர்களையும் புனைந்து சூடி ஊரில் பிச்சை கொள்ளுமாறு பல கூறி, உமாதேவியை ஒரு பாகம் கொண்டு, வாழ்கொளி புத்தூரில் உள்ளவன் ஈசன். அர்ச்சனை செய்வதற்குரிய மலர்களால் அப்பெருமான் திருவடியைப் போற்றிச் சரணடைவோம்.
431. அளைவளர் நாகம் அசைத்து அனல்ஆடி
அலர்மிசை அந்தணன் உச்சிக்
களைதலை யில்பலி கொள்ளும்
கருத்தனே கள்வனே என்னா
வளையொலி முன்கை மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தளைஅவிழ் மாமலர் தூவித்
தலைவன தாளிணை சார்வோம்.
தெளிவுரை : புற்றில் வளரும் நாகத்தையும், அனலையும் அசையுமாறு ஆடி, பிரமனின் கபாலத்தைக் கரத்தில் ஏந்தி, வளையலை அணிந்த உமா தேவியை ஒரு பாகத்தில் கொண்டுள்ள ஈசன், வாழ்கொளிபுத்தூரில் உள்ளவன். அப்பெருமானை என் கருத்திற்கிசைந்த தலைவனே ! உள்ளம் கவர்ந்த கள்வனே ! என்று போற்றி, நன்கு விரிந்த மலர்களால் திருவடியை அர்ச்சனை செய்து சார்ந்திருப்போம்.
432. அடல்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
அழிதலை அங்கையில் ஏந்தி
உடல்இடு பிச்சையோடு ஐயம்
உண்டிஎன்று பலகூறி
மடல்நெடு மாமலர்க் கண்ணயொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தடமலர் ஆயின தூவித்
தலைவன தாள்நிழல் சார்வோம்.
தெளிவுரை : அடர்ந்த காதுகளை உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தும், தலையோட்டைக் கையில் ஏந்திப், பிச்சை, ஐயம், உண்டி தருவீர் எனப் பலவாறு கூறியும், நீண்ட இதழ்களை யுடைய மலர்க் கண்களைக் கொண்ட உமாதேவியைப் பாகம் வைத்தவன், வாழ்கொளிப்புத்தூரில் வீற்றிருக்கும் ஈசன். அப்பெருமானைப் பெருமை மிக்க மலர்களால் தூவி வழிபட்டு அவன் தான் நிழல் சார்வோம்.
433. உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன்
ஒளிர் கடகக் கை அடர்த்து
அயல்இடு பிச்சையோடு ஐயம்
ஆர்தலை என்றுஅடி போற்றி
வயல்விரி நீல நெடுங்கணி பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவித்
தாழ்சடை யான்அடி சார்வோம்.
தெளிவுரை : உயர்ந்த கயிலை மலையை எதிர் கொண்டு எடுத்த அரக்கனின், ஒளிமிக்க கடகம் பூண்ட கரங்களை அடர்த்துப் பலி யேற்று, நீல நெடுங்கண்ணியுடைய உமாதேவியைப் பாகம் கொண்டு, வாழ்கொளி புத்தூரில் வீற்றிருப்பவன் ஈசன். அப்பெருமானை மலர் தூவிப் போற்றி அடிசார்ந்து இருப்போம்.
434. கரியவநான்முகன் கைதொழுது ஏத்தக்
காணலும் சாரலும் ஆகா
எரிஉரு வாகிஊர் ஐயம்
இடுபலி உண்ணிஎன்று ஏத்தி
வரியர வல்குல் மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரிமலர் ஆயின தூவி
விகிர்தன சேவடி சேர்வோம்.
தெளிவுரை : கரியவனாகிய திருமாலும், நான்முகனும் கை தொழுது ஏத்தி, காண்பதற்கும், சார்ந்து நெருங்குவதற்கும் ஆகாத எரியும் தீப்பிழம்பாடி, பிரமகபாலம் கொண்டு பிச்சை யேற்று, உமாதேவியை ஒரு பாகம் கொண்டவன், வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருக்கும் ஈசன். அப்பெருமானை மலர்கொண்டு தூவிப் போற்றி, அடி சேர்வோம்.
435. குண்டுஅமணர்துவர்க் கூறைகள் மெய்யில்
கொள்கையினார் புறம்கூற
வெண்தலை யில்பலி கொண்டல்
விரும்பினை என்று விளம்பி
வண்டுஅமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கள் மாமலர் தூவத்
தோன்றிநின்றான் அடி சேர்வோம்.
தெளிவுரை : மெய்ம்மையுடைய கொள்கை யில்லாதவர்கள் புறம் கூறி நிற்கப் பலி கொள்வதை விரும்பினை எனக்கூறித் தொண்டர்கள் <உமைபாகனாகிய நின்னை, வாழ்கொளிபுத்தூர் மேயவன் எனப் போற்றுகின்றனர். அத்தகைய ஈசன் திருவடி சேர்வோம்.
436. கல்லுயர் மாக்கடல் நின்று முழங்கும்
கரைபொரு காழி மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின்
நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார்
துயர்கெடுதல் லெளி தாமே.
தெளிவுரை : கடல் அலைகள் முழங்கிக் கரையைச் சாரும் மூதூர் ஆகிய காழிப் பதியின் நான்கு மறைகளிலும் <உயர்ந்த நாவன்மை கொண்ட நற்றமிழ் ஞானசம்பந்தன், சூலம், மழு, வாள் ஆகியவற்றில் வல்லமையுடன் விளங்குபவனாகிய ஈசன் வளர், வாழ்கொளிபுத்தூரைப் பற்றிச் சொல்லிய பாடல்களைச் சொல்ல வல்லவர்களுக்குத் துயரானத எளிதில் தீரும்.
திருச்சிற்றம்பலம்
41. திருப்பாம்புரம் (அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம், திருவாரூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
437. சீர்அணி திகழ்திரு மார்பில்வெண் ணூலர்
திரிபுரம் எரிசெய்த செல்வர்
வார்அணி வனமுலை மங்கையோர் பங்கர்
மான்மறி ஏந்திய மைந்தர்
கார்அணி மணிதிகழ் மிடறுடை அண்ணல்
கண்ணுதல் விண்ணவர் ஏத்தும்
பார்அணி திகழ்தரு நான்மறை யாளர்
பாம்புர நன்னக ராரே.
தெளிவுரை : ஈசன், அழகு திகழ் திருமார்பில் வெண்ணூல் பூண்டவர்; திரிபுரத்தை எரித்து செல்வர்; வனப்பு மிகுந்த தனங்களையுடைய உமாதேவியை ஒரு பங்காகக் கொண்டவர்; இளமையான மானைக் கரத்தில் ஏந்திய அழகர்; கரிய அழகிய மணி போன்று திகழும் கழுத்தை உடையவர்; நெற்றியில் கண்ணுடையவர். அவர், தேவர்கள் போற்றி வழிபடும், நான் மறையில் வல்லவர்கள் திகழும் பாம்புர நகரில் விளங்குபவர்.
438. கொக்கிறகோடு கூவின மத்தம்
கொன்றையோடு எருக்கணி சடையர்
அக்கினொடு ஆமை பூண்டுஅழகாக
அனலது ஆடும்எம் மடிகள்
மிக்கநல்வேத வேள்வியுள் எங்கும்
விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
பாம்புர நன்னகராரே.
தெளிவுரை : கொக்கின் இறகு, வில்வம், ஊமத்தம்பூ, கொன்றை மலர், எருக்கம் பூ ஆகியன பஅணியும் சடையை உடையவர் ஈசன். உருத்திராக்கமும் ஆமையும் தரித்து ஒரு கரத்தில் நெருப்பை ஏந்தி ஆடுகின்ற அடிகள் அவர். அப்பெருமான், தேவர்கள் மணம் மிக்க மலர்களைத் தூவிப் போற்றவும், பூதகணங்கள் பாடித் துதிக்கவும், வேத முறையில் நல்ல வேள்விகள் ஆற்றவும் உள்ள பாம்புர நகரில் மேவி இருப்பவர்.
439. துன்னலின் ஆடை உடுத்துஅதன் மேல்ஓர்
சூறைநல்லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட்டுஆடிப்
பித்தராய்த் திரியும்எம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளு
மாமலை யாட்டியும் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன்னகராரே.
தெளிவுரை : பொருந்திய ஆடை உடுத்தி, அதன்மேல் காற்றை ஆகாரமாக உடைய அரவத்தைச் சுற்றி, முறுக்கிய சடைகள் தாழ்ந்து விழுமாறு ஆடி, பித்தர் போத் திரியும் எம்பெருமான், பிரகாசிக்கும் மாமலர்கள் தூவிப் போற்றி, நான்கு மறைகளையும் சொல்ல உமாதேவியுடன் விளங்குபவர். அவர் பாம்புர நன்நகரில் இருப்பவர்.
440. துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச்
சுடர்விடு சோதி எம் பெருமான்
நஞ்சுசேர் கண்டம் உடையஎன் நாதர்
நள்ளிருள் நடம்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயில்ஆட
மாட மாளிகை தன்மேல் ஏறிப்
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்
பாம்புர நன்னகராரே.
தெளிவுரை : தோற்றமும் மறைவும் இல்லாத சுடர்மிகு சோதியாகிய எம்பெருமான், கண்டத்தில் நஞ்ச பொருந்திய தலைவர்; நள்ளிருளில் நடம்புரியும் நம்பர். அவர், மேகம் சூழ் சோலையில் மாமயில்களும், மாட மாளிகைகளில் பஞ்சு போன்ற மென்மையான பாதங்களை உடைய பாவையர்களும் ஆடல் பயிலும் பாம்புர நகரில் இருப்பவர்.
441. நதியதன் அயலே நகுதலை மாலை
நாள்மதி சடைமிசை அணிந்து
கதியது பாகக் காளிமுன் காணக்
கானிடை நடம்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி
செய்தவர் ஒத்தொலி ஓவாப்
பதியதுவாகப் பாலையும் தாமும்
பாம்புர நன்னகராரே.
தெளிவுரை : கங்கையும் தலை மாலையும் கொண்டு பிறைச் சந்திரனைச் சடைமிசைச் சூடி, இடுகாட்டில் காளியானவள் காணுமாறு நடம் புரிந்த ஈசன், விதி வழுவாது வேதியர்கள் வேள்வியாற்ற, அவ் வேதத்தின் ஒலியானது ஒய்வின்றி ஒலிக்கும் பதியெனும் பாம்புர நகரில் உமாதேவியுடன் விளங்குகின்றார்.
442. ஓதிநான்கு உணர்வார்க்கு உணர்வுடை ஒருவர்
ஒளிதிகழ் உருவம் சேர் ஒருவர்
மாதினை இடமா வைத்தஎம் வள்ளல்
மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ அருள் என்று அமரர்கள் பணிய
அலைகடல் கடைய அன்று எழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தஎம் பரமர்
பாம்புர நன்னகராரே.
தெளிவுரை : சிவனுடைய திருநாமத்தை ஆத்மார்த்தமாக ஓதுபவர்களின் நெஞ்சத்தில் ஊறி நிற்கும் ஒப்பற்ற ஒருவராகி, சோதி வடிவாய் விளங்குபவர் ஈசன். அவர், உமாதேவியை இடப்பாகத்தில் வைத்த எம் அண்ணல்; இளமை பொருந்திய மான் ஏந்திய கரத்தை உடைய அழகர். ஆதி முதல்வனே ! அருள்வாயாக ! எனத் தேவர்கள் பணிய, அலைகடலில் கடைய, அதில் எழுந்த பொருளான பிறைச் சந்திரனைச் சடையில் வைத்த பரமர், பாம்புர நகரில் விளங்கும் ஈசன்.
443. மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து
மலரவற்கு ஒருமுகம் ஒழித்து
ஆலின்கீழ் அறம்ஓர் நால்வருக்கு அருளி
அனலது ஆடும்எம் அடிகள்
காலனைக் காய்ந்து தம்கழல்அடியால்
காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக்கு அருள்கள் செய்தஎம்அடிகள்
பாம்புர நன்னகராரே.
தெளிவுரை : திருமாலுக்குச் சக்கரப் படையை நல்கி, பிரமனுக்குரிய ஐந்து முகங்களுள் ஒன்றினைக் களைந்து நான்முகம் <உடையவனாகச் செய்து, சனகாதி முனிவர்களுக்குக் கல்லால மரத்தின்கீழ் அறம் <உணர்த்தி, நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தி ஆடுகிறவர் எம் அடிகள். அவர் வீரக்கழல் அணிந்த தம் திருப்பாதத்தால் உதைத்து அழித்து, மன்மதனை நெற்றிக் கண்ணால் நோக்கி எரித்துச் சாம்பலாக்கி, பாலகனாகிய <உபமன்யுவுக்கு பாற்கடல் ஈந்து அருள் புரிந்த அடிகள். அவர் பாம்புர நகரில் இருப்பவர்.
444. விடைத்தவல்அரக்கன் வெற்பினை எடுக்க
மெல்லிய திருவிரல் ஊன்றி
அடர்ந்தவன் தனக்குஅன்று அருள்செய்த அடிகள்
அனலது ஆடும்எம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுனல்ஆட
வந்துஇழி அரிசிலின் கரைமேல்
படப்பையில் கொணர்ந்து பருமணி சிதறும்
பாம்புர நன்னகராரே.
தெளிவுரை : குற்றம் புரியும் வலி அரக்கன் கயிலை மலையைப் பெயர்தெடுக்க, அதனைத் தனது மென்மையான திருப்பாத விரலால் ஊன்றியவன் ஈசன். தகாத செயலைச் செய்தவனுக்கும் அன்று அருள் செய்த அவ் அடிகள், அனலைக் கரத்தில் ஏந்தி ஆடுபவர், இளம் நங்கையர்கள் அரிசில் ஆற்றில நீராடக் கரையில் உள்ள தோட்டங்களில் மணிகள் சிதறி மல்கும் பாம்புர நகரில் அப்பெருமான் விளங்குபவர்.
445. கடிபடுகமலத்து அயனொடு மாலும்
காதலோடு அடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யும்
தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடை அமரர் முனிகணத் தவர்கள்
முறைமுறை அடிபணிந்த ஏத்தப்
பிடியது வாகப் பாவையும் தாமும்
பாம்புர நன்னகராரே.
தெளிவுரை : மணம் திகழ தாமரை மலரின்மேல் <உறையும் பிரமனோடு, திருமாலும், விருப்பத்துடன் அடியும் முடியும் தேடிச் செல்ல, தீமை தரும் வினைகளைத் தீர்த்து அருள் புரியும் எமது செல்வர், தீவண்ணம் உடையவர். அப்பெருமான், தேவர் தலைவர்களும், முனிகணத்தவர்களும் முறைப்படி திருவடியைப் பணிந்து ஏத்த, இவ்வுலகின்கண், தேவியும் தானும் திகழ விளங்குவது பாம்புர நகர்.
446. குண்டர்சாக் கியரும் குணமிலாதாரும்
குற்றுவிட்டு உடுக்கையர் தாமும்
கண்டவாறு உரைத்துக் கால்நிமிர்ந்து உண்ணும்
கையர்தாம் உள்ளவாறு அறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நன்னகராரே.
தெளிவுரை : சாக்கியர், மற்றும் பேணும் நற்குணங்கள் இல்லாதவர்களும், நின்று கொண்டு கையில் உணவை ஏந்தி <உண்பவர்களும், உண்மைப் பொருளை உள்ளவாறு அறியமாட்டார்கள். மலைமகள் நடுக்கம் கொள்ளுமாறு வீரத்துடன் யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட ஈசர், பாம்புர நன்நகரில் வீற்றிருந்து முற்காலத்தில் செய்த பாவங்களைத் தீர்ப்பவர் ஆவர்.
447. பார்மலிந்து ஓங்கிப் பருமதில் சூழ்ந்த
பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந்து அழகார் கழனிசூழ்மாடக்
கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந்து ஓங்கு நான்முறைஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந்து அழகார் செல்வமது ஓங்கிச்
சிவனடி நண்ணுவர்தாமே.
தெளிவுரை : உலகில் மிக ஓங்கிய அகன்ற மதில் சூழ்ந்த பாம்புர நகரில் பொருந்திய ஈசனைப் போற்றி நீர்வளம் மிக்க வயல்களும், மாடமாளிகைகளும் <உடைய பழைமையான கழுமல நகரில், கவுணியர் கோத்திரத்தில் <உதித்த நான்மறைகளில் வல்லவரும், அன்பின் மிக்கவருமாகிய ஞானசம்பந்தர் <உரைத்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், சிறப்பும் செல்வமும் ஓங்கி வாழ்ந்து சிவனடியை நண்ணுவர்.
திருச்சிற்றம்பலம்
42. திருப்பேணுபெருந்துறை (அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை, தஞ்சாவூர் மாவட்டம்)
448. பைம்மா நாகம் பன்மலர் கொன்றை
பன்றிவெண் கொம்புஒன்று பூண்டு
செம்மாந்து ஐயம் பெய்க என்றுசொல்லிச்
செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மான்நோக்கிய அந்தளிர்மேனி
அரிவையோர் பாகம் அமர்ந்த
பெம்மானல்கிய தொல்புகழாளர்
பேணு பெருந்துறையாரே.
தெளிவுரை : படம் கொண்ட நாகம், கொன்றை மலர், பன்றியின் வெண்மையான கொம்பு ஆகியவற்றைப் பூண்டு, கம்பீரமாக பிச்சையேற்கும் தொழிலை ஆற்றிய செல்வர், பரமன் ஆவர். அழகி மானின் நோக்கும், தளிர் மேனியும் உடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர் அப்பெருமான். அவர் பெரும்புகழ் நல்கும் பெருமக்கள் பேணும் பெருந்துறையில் உள்ளவர்.
449. மூவரும் ஆகி இருவரும் ஆகி
முதல்வனுமாய் நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப்
பல்கண நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு
தண்மதின் மூன்றும் எரித்த
தேவர்கள் தேவர் எம்பெருமானார்
தீதில் பெருந்துறை யாரே.
தெளிவுரை : பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் முத்தொழில்களைச் செய்யும் நிலையில் வேறு வேறாகக் காட்சியில் தோன்றினாலும், ஈசன் அவ்இயலில் இருந்து ஒன்றி விளங்குபவன். அவனே சிவனும் சக்தியென இரண்டாய் விளங்குபவன். அவன் யாவற்றையும் தம்பால் ஒடுக்கவல்ல பரசிவனாய் ஏகனாகியவன். பல்கணத்தவர்களும் பணிந்து பாவங்களைத் தீர்த்தும் நல்வினைகளக் கைக் கொண்டும் விளங்க, மேருமலையை வில்லாலாகக் கொண்டு முப்புரங்களை எரித்த, தேவதேவராகிய எம்பெருமான், தீமையே இல்லாத பெருந்துறையில் இருப்பவர்.
450. செய்பூங் கொன்றை கூவிள மாலை
சென்னியுள் சேர்புனல் சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமை பாகம்
கூடியோர் பீடுடை வேடர்
கைபோல் நான்ற கனிகுலை வாழை
காய்குலையில் கமுகு ஈனப்
பெய்பூம் பாளை பாய்ந்து இழி தேறல்
பில்கு பெருந்துறை யாரே.
தெளிவுரை : புனையப்பட்ட கொன்றை மற்றம் வில்வ மாலை அணிந்து தலையில் கங்கை தரித்து, <உமாதேவியை ஒரு பாகத்தில் கூடி இருக்குமாறு வைத்துப் பெருமை மிக்க வடிவம் கொண்டவர் ஈசன். அவர், வாழைக் குலையும் கமுகமும் ஈனும், தேன் வழியும் பெருந்துறையில் உள்ளவரே.
451. நிலனொடு வானும் நீரொடு தீயும்
வாயுவும் ஆகிஓர் ஐந்து
புலனொடு வென்று பொய்மைகள் தீர்ந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்கும் தான்அலது இன்றி
நன்குஎழு சிந்தையர் ஆகி
மலனொடு மாகம் இல்லவர் வாழும்
மல்கு பெருந்துறை யாரே.
தெளிவுரை : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவர் ஈசர், அவர், ஐம்புலன்களின் ஆசைகளை அடக்கி வென்ற, பொய்ம்மை தீர்ந்த புண்ணியர்; திருவெண்ணீறு பூசியுள்ள திருமேனியர். நல்லன விளைந்தாலும், தீங்கு நேரிட்டாலும், ஈசனை யன்றி வேறு எப்பொருளும் நினைப்பதற்கில்லை என்ற உறுதியான சிந்தையுடையவர்களாகி, ஆணவம், கன்மம், மாலை ஆகிய குற்றங்களை அகற்றி வாழ்பவர்கள் பெருகி மல்கும் பெருந்துறையில் அப்பெருமான் வீற்றிருக்கின்றார்.
452. பணிவாய் உள்ள நன்கு எழு நாவின்
பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ளம் இலாத
சுமடர்கள் சோதிப்பு அரியார்
அணிஆர் நீலம் ஆகிய கண்டர்
அரிசில் உரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்
மல்கு பெருந்துறையாரே.
தெளிவுரை : ஈசன்பால் எக் காலத்திலும் பணிவாக விளங்கிப் பணிந்து பக்திமை பெருக நாவினால் போற்றும் பக்தர்கள் உள்ளனர். அறியாமை சிறிதும் இல்லாதவர்களாய், இறை நெறிக்குப் புறம்பாகச் செய்யாதவர்களாய் உள்ளனர். அவர்கள் துன்பங்கள் வரப்பெற்றுச் சோதனைக்கும் ஆளாவது இல்லை. அழகு மிக்க நீலகண்டராகிய பெருமான் தேன்கமழும் சிறப்புடைய அரிசில் ஆற்றங்கரையில் விளங்கும் பெருந்துறையில் இருப்பவர்.
453.எண்ணார் தங்கள் மும்மதிள்வேவ
ஏவலம் காட்டிய எந்தை
விண்ணோர்சாரத் தண்ணருள் செய்த
வித்தகர் வேதமு தல்வர்
பண்ணார் பாடல் ஆடல் அறாத
பசுபதி ஈசனோர் பாகம்
பெண்ஆண் ஆய வார்சடை அண்ணல்
பேணு பெருந்துறை யாரே.
தெளிவுரை : ஈசனையும், நற்றவத்தின் மேன்மையினையும், சிறிதும் நெஞ்சத்தில் கொள்ளாத அசுரர்களுடைய மூன்று கோட்டைகள் எரியுமாறு அம்பின் வலிமையைக் காட்டிய எந்தை, தேவர்கள் சார்ந்து போற்ற, இனிமையாக அருள் செய்யும் வித்தகர், வேத முதல்வர்; அப்பெருமான் பண் பெருகும் பாடலும் ஆடலும் மல்கிப் பெருகும் பெருந்துறையில், அழகிய சடையும், உமாதேவியை ஒரு பாகமும் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் ஒப்பற்ற பதியாய், பெண்ணும் ஆணும் கலந்து விளங்கும் அர்த்தநாரியாய் விளங்குபவர்.
454. விழைஆர்உள்ள நன்குஎழுநாவில்
வினைகெட வேதம்ஆறு அங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றால்
பெரியோர் ஏத்தும் பெருமான்
தழைஆர் மாவின் தாழ்கனி உந்தித்
தண்ணரசில் புடை சூழ்ந்து
குழைஆர் சோலை மென்னடை அன்னம்
கூடு பெருந்துறை யாரே.
தெளிவுரை : பிழை இல்லாமலும் விருப்பம் மிக்கும் வினை நீங்குமாறு, வேதமும் அதன் ஆறு அங்கங்களையும் ஓதவல்ல பெரியோர்கள் ஏத்தும் பெருமானாக விளங்கும் ஈசன், மாங்கனியைத் தரும் சோலைகளை உடைய அரிசிலாற்றின் கரையில் நடை பயிலும் அன்னப் பறவை கூடும் பெருந்துறையில் வீற்றிருப்பவர்.
455. பொன்னங் கானல் வெண்திரை சூழ்ந்த
பொருகடல் வேலி இலங்கை
மன்னன்ஒல்க மால்வரை ஊன்றி
மாமுரண்ஆகமும் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னம் கன்னிப் பேடையொடு ஆடி
அணவு பெருந்துறை யாரே.
தெளிவுரை : அழகிய சோலைகளும், வெண்மையான நுரைகளுடன் கூடிய அலைகள் கரைகளில் மோதும் கடலை நாற்புறங்களிலும் வேலியாகக் கொண்ட இலங்கையின் மன்னனாகிய இராவணன் கெடுமாறு, பெருமை மிக்க கயிலை மலையைத் தம் விரலால் ஊன்றி, அவன் உடலும் தோளும் வாட்டியவர் ஈசர். பின்னர், அவ் அரக்கன் வணங்கிப் போற்றி செய்ய, அருள் செய்தவர் அவர். சூலப்படை கொண்டுள்ள மூர்த்தியாகிய அப்பெருமான், அன்னப்பறவைகள் தம் பேடைகளுடன் மகிழந்து கூடும் பெருந்துறையில் வீற்றிருப்பவரே.
456. புள்வாய் போழ்ந்து மாநிலம் கீண்ட
பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வாழ் அல்லி மேலுறை வானும்
உணர்வரி யான்உமை கேள்வன்
முள்வாய் தாளின் தாமரை மொட்டின்
முகமலரக் கயல் பாயக்
கள்வாழ் நீலம் கண்மலர் ஏய்க்கும்
காமர் பெருந்துறை யாரே.
தெளிவுரை : கொக்கு வடிவம் கொண்ட அசுரனின் வாயைப் பிளந்து மாய்த்தவனும், பூமியைத் தோண்டிச் செல்பவராக அவதாரம் கொண்டவனும், ஆகிய திருமாலும், தாமரை மலரின் அகத்தில் <உள்ள இதழில் <உறையும் பிரமனும் உணர்வதற்கு அரியவனாகிவன் ஈசன். அப்பெருமான் உமாதேவியின் நாயகன். அவர், தாளில் முள் பொருந்திய தாமரை மலரின் மொட்டு போன்ற நீண்ட முகம் மலரவும், கயல் போன்ற கண்கள் நீலமலர்போல் மலரவும் விளங்கும் மாதர்கள் மகிழும் பெருந்துறையில் வீற்றிருப்பவரே.
457. குண்டும் தேரும் கூறைகளைந்தும்
கூப்பிலர் செப்பிலர் ஆகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு
மிண்டுசெயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்தலை சூலம்
தாங்கிய தேவர் தலைவர்
வண்டும் தேனும் வாழ்பொழற்சோலை
மல்கு பெருந்துறை யாரே.
தெளிவுரை : சமணர்களும், பௌத்தர்களும் ஈசனை வணங்கிலர்; அவன் திருநாமத்தைக் கூறிலர். தன் முனைப்புக் கொண்டு அறிவற்ற தன்மையில் செய்யும் தொல்லைக்கு ஆட்பட்டு இடர்ப்பாடானதைச் செய்யாது மெய்யடியார்கள் இறைவனை விரும்பி ஏத்துகின்றனர். அவர், தண்டும், பாம்பும், கபாலமும், சூலமும் தாங்கியுள்ள தலைவர், அப்பெருமான் வண்டும் தேனும் மல்கும் சோலை சூழ்ந்த பெருந்துறையில் இருப்பவரே.
458. கடைஆர் மாட நன்கு எழு வீதிக்
கழுமலவூரன் கலந்து
நடைஆர் இன்சொல் ஞானசம்பந்தன்
நல்லபெருந்துறை மேய
படைஆர் சூலம் வல்லவன் பாதம்
பரவிய பத்து இவை வல்லார்
உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி
உலகினில் மன்னுவர் தாமே.
தெளிவுரை : வாயில்கள் பொருந்திய மாட மாளிகைகள் விளங்கும் வீதிகள் உள்ளது கழுமல நகர். அவ் ஊரினாராகிய திருஞானசம்பந்தர், ஒழுக்கமும் இனிமையும் சேர்ந்த சொற்களால் நன்மை திகழும் பெருந்துறை மேவிய சூலப்படையுடைய ஈசன்பால் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதினார். இதனை நன்கு உரைக்க வல்லவர்கள், எல்லா செல்வமும் உடையவர்களாய், அருட் செல்வம் மிக்கு விளங்குமாறு, உள்ளமும் ஈசன் பால் ஒன்ற இருக்க உலகில் சிறந்து விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
43. திருக்கற்குடி (அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை, திருச்சி மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
459. வடம்திகழ் மென்முலையாளைப்
பாகம் தாக மதித்துத்
தடம்திரை சேர்புனல் மாதைத்
தாழ்சடை வைத்த சதுரர்
இடம் திகழ் முப்புரி நூலர்
துன்பமொடு இன்பம்அது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும்
கற்குடி மாமலை யாரே.
தெளிவுரை : உயர்வான யாவும் <உடைய உமாதேவியைத் தனது உடம்பில் ஒரு பாகத்திலும், நீர் நிலைகளில் சேரும் கங்கை என்னும் மங்கையைச் சடை முடியிலும் வைத்துள்ளவர், எல்லாவற்றிலும் வல்லவராகிய ஈசன், அவர், முப்புருட நூலை அணிந்தவர். ஈசனுக்குத் துன்பம் என்பதும் இல்லை; அவர் இன்பமாகக் கருதுவதும் எதுவும் இல்லை. எல்லாம் கடந்தவராகிய ஈசன் விருப்பத்தோடு கற்குடியில் உள்ள பெருமையான மலையின்கண் வீற்றிருப்பவர்.
460. அங்கம்ஒரு ஆறுடை வேள்வி
ஆன் அருமறை நான்கும்
பங்கம்இல் பாடலோடு ஆடல்
பாணி பயின்ற படிறர்
சங்கமதுஆர் குற மாதர்
தங்கையில் மைந்தர்கள் தாவிக்
கங்குலின் மாமதி பற்றும்
கற்குடி மாமலை யாரே.
தெளிவுரை : அருமையாகப் போற்றப்படுகின்ற வேதமும், அதன் ஆறு அங்கமும், வகுத்தவாறு வேள்வியும், குறை வில்லாத பாடலும், ஆடலும், தாளமும் பயில் விளங்குபவர் ஈசன். சங்குகளால் ஆகிய வளையல் களை அணிந்துள்ள குறவர்குல மாதர்களின் கரங்களில் திகழும் மைந்தர்கள், மேகத்தில் இருக்கும் நிலவைத் தொடுவதற்குத் தாவுகின்றனர். அத்தகைய பெருமைக்குரிய கற்குடி மலையில் ஈசன் வீற்றிருக்கிறார்.
461. நீர்அக லம்தரு சென்னி
நீடிய மத்தமும் வைத்துத்
தாரகை பின்னொளி சூழ்ந்த
தண்மதி சூடிய சைவர்
போர் அகலம்தரு வேடர்
புனத்திடை இட்ட விறகில்
கார்அகி லின்புகை விம்மும்
கற்குடி மாமலை யாரே.
தெளிவுரை : பரந்த கங்கை நீரைச் சடையில் கொண்டுள்ள ஈசன், நீளமான ஊமத்தம் மலரைச் சூடியவர். விண்மீனின் ஒளி திகழும் குளிர்ந்த சந்திரனைத் தரித்த சைவர். போர் செய்யும் பாங்குடைய வேடர்கள், மேகத்தைப் போன்று அகிற்புகை எழுப்பிப் பெருமை கொள்ளும் கற்குடி மலையில் அப்பெருமான் வீற்றிருப்பவர்.
462. ஒருங்குஅளி நீஇறைவா என்று
உம்பர்கள் ஓலம்இடக் கண்டு
இருங் களம் ஆர விடத்தை
இன்னமுது உண்ணிய ஈசர்
மருங்கு அளியார் பிடி வாயில்
வாழ் வெதிரின் முளை வாரிக்
கருங்களி யானை கொடுக்கும்
கற்குடி மாமலை யாரே.
தெளிவுரை : உடலும், உள்ளமும் நடுங்குமாறு தோன்றிய கொடிய விடத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள், இறைவா ! நீரே எம்மைக் காத்து அருள்வீராக என்று இறைஞ்சி ஓலம் இட, அவ் விடத்தைப் பெருமையான் கண்டத்தில் ஆரப் பொருந்த வைத்து உட்கொண்டவர் ஈசர். அவர், அன்பின் மிக்க பெண் யானைகளின் வாயில், மூங்கில்களை உணவாகக் கொடுக்கும் ஆண் யானைகள் நிலவும் கற்குடி மாமலையில் விளங்குபவர்.
463. போர்மலி திண்சிலை கொண்டு
பூதக ணம்புடை சூழப்
பார்மலி வேடுரு வாகிப்
பண்டு ஒருவர்க்கு அருள் செய்தார்
ஏர்மலி கேழல் கிளைத்த
இன்னொளி மாமணி எங்கும்
கார்மலி வேடர் குவிக்கும்
கற்குடி மாமலை யாரே.
தெளிவுரை : போர்த் தொழில் மிக்க உறுதியான வில்லைக் கரத்தில் கொண்டு, பூதகணங்கள் புடைசூழ உலகத்தில் தோற்றம் பெறும் வேடுவ வடிவம் தாங்கி, அர்ச்சுனருக்கு அருள் புரிந்தவர் ஈசர், அழகிய பன்றிகள் பெருகி, இருக்க, சிறப்பான மணிகளைக் குவித்துச் செல்வர் பெருக்கும், கரிய நிறமுள்ள வேடர்கள் சூழும் கற்குடி மாமலை அவர் இடமாகும்.
464. உலந்தவர் என்புஅது அணிந்தே
ஊர்இடு பிச்சையர் ஆகி
விலங்கல்வில் வெங்கன லாலே
மூஎயில் வேல முனிந்தார்
நலம்தரு சிந்தையர் ஆகி
நாமலி மாலையி னாலே
கலந்தவர் காதலில் வாழும்
கற்குடி மாமலை யாரே.
தெளிவுரை : எலும்பு மாலை அணிந்து, கபாலத்தைக் கைக் கொண்டு பிச்சையேற்பவராகி, மலையை வில்லாகவும் நெருப்பைக் கணையாகவும் கொண்டு முப்புரங்களை எரியுமாறு செய்தவர் ஈசன். அவர் நலத்தைத் தரும் பக்திச் சிந்தனையுடையவர்களாய் நாவினால், விரும்பித் தோத்திரப் பாடல்களை அன்பு ததும்பும் நெஞ்சினராய்க் கூறும் அடியவர்கள் வாழும், கற்குடி மாமலையில் வீற்றிருப்பவர்.
465. மான்இடம் ஆர்தரு கையர்
மாமழு ஆரும் வலத்தர்
ஊனிடை ஆர்தலை யோட்டில்
உண்கல னாக உகந்தார்
தேனிடை ஆர்தரு சந்தின்
திண்சிறை யால்தினை வித்திக்
கானிடை வேடர் விளைக்கும்
கற்குடி மாமலை யாரே.
தெளிவுரை : ஈசன், மானைக் கையில் கொண்டுள்ளனர், சிறப்பான மழுப்படையை உடைய வலிமை மிக்கவர்; பிரமகபாலம் ஏந்தி அதனை உணவு கொள்ளும் பாத்திரமாக மகிழ்ந்து ஏற்றவர். தேன் கூடுகள் மிகுந்துள்ள சந்தன மரங்களையுடைய கானில் தினை வித்துக்களை விதைக்க, விளைச்சலைத் தருகின்ற கற்குடி மாமலையில் அப்பெருமான் வீற்றிருக்கின்றார்.
466. வாள்அமர் வீர நினைந்த
இராவணன் மாமலை யின்கிழ்த்
தோள்அமர் வன்தலை குன்ற
தொல்விரல் ஊன்று துணைவர்
தாள்அமர் வேய் தலை பற்றித்
தாழ்கரி விட்ட விசைபோய்க்
காளமது ஆர்முகில் கீறும்
கற்குடி மாமலை யாரே.
தெளிவுரை : வீரத்தின் சிறப்பினைக் காட்டுவதாக நினைத்து மலையைப் பெயர்த்த இராவணனைக் கீழே அழுத்தி, அவன் தோளும் தலையும் குன்றுமாறு விரலை ஊன்றியவர் ஈசர். அப்பெருமான், மூங்கிலின் நுனிப்பகுதியைப் பற்றி இழுத்துப் பின்னர் அதனை விட்டுவிட, அதன் விசையானது வேகமாகச் சென்று கரிய மேகத்தைக் கிழிக்கும் தன்மையுடைய கற்குடி மலையில் வீற்றிருப்பவர்.
467. தண்டுஅமர் தாமரை யானும்
தாவிஇம் மண்ணை அளந்து
கொண்டவ னும்மறி வொண்ணாக்
கொள்கையர் வெள்விடை ஊர்வர்
வண்டிசை யாயின பாட
நீடிய வார்பொழில் நீழல்
கண்டு அமர் மாமயில் ஆடும்
கற்குடி மாமலை யாரே.
தெளிவுரை : தண்டு உடைய தாமரை மலரின்மேல் அமர்ந்த பிரமனும், நெடிய வடிவெடுத்து இவ்வுலகத்தை மூவடியாக அளந்து தனதாக்கிக் கொண்ட திருமாலும், அறிய வொண்ணாத குறிப்பில் உள்ளவர் ஈசன். அவர் வெண்மையான இடப வாகனத்தில் ஊர்பவர். அவர், வண்டுகள் இசை பாடவும், நீண்ட பொழிலின் நிழலில் கண்டு இனிது விளங்கும் மயில்கள் ஆடவும் உள்ள கற்குடி மலையில் வீற்றிருப்பவர்.
468. மூத்துவர் ஆடையி னாரும்
மூக கடுப்பொடி யாரும்
நாத்துவர் பொன்மொழி யார்கள்
நயமில ராமதி வைத்தார்
ஏத்துஉயர் பத்தர்கள் சித்தர்
இறைஞ்ச அவர்இடம் எல்லாம்
காத்தவர் காமரு சோலைக்
கற்குடி மாமலை யாரே.
தெளிவுரை : முற்றிய காலி உடையை புறச் சமயத்தினர், நாவானது துவர்ப்பு கொள்ளுமாறு பொய்ம்மொழியை உரைப்பவர் ஆவர். அவர்கள் மென்மை யற்றவர்கள். அவ்வாறு இன்றி ஈசரைப் பக்தி செய்யும் மதி உடையவர்கள், அவரை ஏத்தி உயர்வடைவார்கள். அவர்கள் சித்தர்கள் ஆவர். அத்தகையோரின் இடர் யாவும் தீரும். இவர் ஏத்த விளங்குபவர் கற்குடி மலையில் வீற்றிருப்பவர்.
469. காமரு வார்பொழில் சூழும்
கற்குடி மாமலை யாரை
நாமரு வண்புகழ்க் காழி
நலந்திகழ் ஞானசம் பந்தன்
பாமரு செந்தமிழ் மாலை
பத்திவை பாடவல் லார்கள்
பூமலி வானவ ரோடும்
பொன்னுல கில்பொலி வாரே.
தெளிவுரை : அணிபெறும் அழகிய நெடிய சோலை சூழும் கற்குடி மலையில் எழுந்தருளியுள்ள பெருமானை, நாவானது மணக்கும் வள்ளன்மையுடைய காழியின் புகழும் நலமும் திகழும் ஞானசம்பந்தர் பாக்களில் சிறந்த செந்தமிழ்ப் பாடல்களைப் பாட, அதனை ஓத வல்லவர்கள் தேவலோகத்தில் சிறந்து விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம்
44. திருப்பாச்சிலாச்சிராமம் (அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி, திருச்சி மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
470. துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ
ஆரிடமும் பலி தேர்வர்
அணிவளர் கோலம் எலாம்செய்து பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல் செய்வ தோஇவர் மாண்பே.
தெளிவுரை : ஒற்றைக் கீற்றுடைய சந்திரன் வளர்ந்து ஒளி கொண்டு விளங்க, அதனைச் சுடர் விடும் சடை முடியில் தரித்துப் பாம்புகள் பொருந்துமாறு ஏற்றுப் பூத கணங்கள் சூழ்க கையில் கபாலம் ஏந்தி, இவர், இன்னார் என்று கருதாமல் எல்லோரிடமும் பலியேற்பவர், ஈசன், இவர், அழகிய திருக்கோலம் புனைந்து, பாச்சில் ஆச்சரமத்தில் உறைகின்ற நீலகண்டர். இவரோ இந்த நங்கையை முயலகன் என்னும் நோயால் வாடுதல் அடைந்து மயல் கொள்ளுமாறு செய்வது ! இதுவோ இவர் மாண்பு !
471. கலைபுனை மான்உரி தோல்<உடை ஆடை
கனல்சுட ரால்இவர் கண்கள்
தலைஅணி சென்னியர் தார்அணி மார்பர்
தம் மடிகள் ளிவர்என்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்துஅமர்பாச்சில்
ஆச்சிரா மத்து உறை கின்ற
இலைபுனை வேலரோ ஏழையை வாட
இடர் செய்வதோ இடர் ஈடே.
தெளிவுரை : கலைமானின் தோலை ஆடையாகக் கொண்டு சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய முச்சுடர்களைக் கண்களாகவும், சுடர்மிகும் சென்னியும்யுடைய ஈசன், மாலை அணிந்த மார்பினர். இவர் அலைகளையுடைய நீர்வளம் மிக்க பூம்பொழில்கள் சூழும் பாச்சில் ஆச்சிரமத்தில் வேல்கொண்டு உறைகின்றவர். இவரோ இந்த நங்கை வாடுமாறு இடர் செய்வது ! இதுவோ இவருக்குப் பெருமை தருவது !
472. வெஞ்சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை
வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சுஅடை கண்டர் நெஞ்சு இடமாக
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சுஅடை மாளிகை சூழ்தரு பாச்சில்
ஆச்சிரமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
சிதைசெய்வ தோஇவர் சீரே.
தெளிவுரை : ஈசன், வெம்மையான நெருப்பைக் கரத்தில் ஏந்தி ஆடுபவர்; பிரளய காலத்தில் கரிய இருளில் தலை மாலையை விரும்பி இருப்பவர்; வெண்மையான முப்புரி நூல் பூணும் மார்பினர்; நஞ்சு பதியப் பெற்ற கழுத்தை உடையவர்; அப்பெருமான் பக்தர்களின் நெஞ்சினை இடமாகக் கொண்டு விரும்பி அருள் புரிவர். மேகம் சூழ்ந்து அடையுமாறு உயர்ந்த மாட மாளிகைகள் சூழ்ந்த பாச்சில் ஆச்சிரமத்தில் உறைகின்ற செஞ்சுடர் வண்ணத்தராகிய ஈசன், இப்பெண் வாடிச் சிதையுமாறு செய்வதோ ! இவருக்கும் இதுவோ சிறப்புத் தரும் !
473. கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
கனதரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை அணிந்து அழகாய
புஞிதர்கொ லாம்இவர் என்ன
வனமரி வண்பொழில் சூழ்தரு பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
மனமலி மைந்தரோ மங்கைழை வாட
மயல் செய்ய தோஇடர் மாண்பே.
தெளிவுரை : பெருமையுடைய கொன்றைமலர் மாலை விளங்கப் பெருமை தரும் தூய பிறைச் சந்திரனைத் தரித்து, மற்றும் புனங்களில் உள்ள எருக்கம், ஊமத்தம் முதலான மலர்களைச் சூடி, அழகாக மேவும் புனிதர் இவர்தான் என்று வியந்து போற்றி மகிழுமாறு உள்ளவர், பொழில் சூழ் பாச்சில் ஆச்சிரமத்தில் உறைகின்ற மைந்தர் ஈசர். இத்தகைய மைந்தரோ மங்கையை வாடுமாறு மயல் செய்வது ! இதுவோ இவருடைய மாண்பு.
474.மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந்து ஆடி
வளர்சடை மேல் புனல் வைத்து
மேந்தை முழாக்குழல் தாளமொர் வீணை
முதிரஓர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
சாந்துஅணி மார்பரோ தையலை வாடச்
சதுர்செய்வதோ இவர் சார்வே.
தெளிவுரை : மாந்தர்கள் விரும்பியவாறு பசுக்களிலிருந்து கிடைக்கப்பெறும் பால், நெழ் முதலான பூசைப் பொருள் ஏற்று அபிடேகம் கொண்டு மகிழ்பவர் ஈசன், இவர், சடை முடியில் கங்கையை வைத்தவர்; மோந்தை, முழவின் வகை, தாளம், வீணை முதலான இசைக் கருவிகள் இயங்கவும் வாயினால் பாடியும் மகிழும் அகன்ற விழிகளையுடைய பூதகணங்கள் விளங்கும் பாச்சில் ஆச்சிரமத்தில் உறைகின்றவர். சந்தனம் அணிந்துள்ள மார்பினராகிய இவரோ நங்கையை வாடச் செய்வது ! இதுவோ இவர் சார்வு !
475. நீறுமெய்பூசி நிறைசடைதாழ
நெற்றிக்கண் ணால் உற்று நோக்கி
ஆறது சூடி ஆடரவு ஆட்டி
ஐவிரல் கோவண ஆடை
பால்தரு மேனியர் பூதத்தர் பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட
இடர் செய்வதோ இவர் ஈடே.
தெளிவுரை : திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசியவர், நிறைந்த சடையுடையவர், மன்மதனை நெற்றிக்கண்ணால் உற்று நோக்கியவர், கங்கையைச் சூடியவர், ஆடுகின்ற அரவத்தை ஆட்டுபவர், ஐவிரற்கிடை அளவு கோவண ஆடை உடையவர், பால் போன்ற தூய திருமேனியர், பூதப்படை உடையவர், ஈசன். இவர் இடபவாகனத்தை உடையவர். பாச்சில் ஆச்சிரமத்தில் உறைகின்ற இப்பெருமான் இப் பெண்ணை வாடுமாறு செய்வதோ ! இதுவோ இவர் பெருமை !
476. பொங்கு இள நாகம்ஒரு ஏக வடத்தோடு
ஆமைவெண்ணூல் புனைகொன்றை
கொங்கு இள மாலை புனைந்துஅழகாய
குழகர் கொலாம் இவர் என்ன
அங்கு இள மங்கையோர் பங்கினர்பாச்சில்
ஆச்சிரா மத்து உறை கின்ற
சங்கு ஒளி வண்ணரோ தாழ்குழல்வாடச்
சதிர் செய்வதோ இவர் சார்வே.
தெளிவுரை : சீறி வரும் இள நாகம், ஆமையோடு, வெண்ணூல், கொன்றை மலர், மற்றும் தேன் சொரியும் மாலைகள் புனைந்து அழகுடன் விளங்கும் ஈசர், உமாதேவியைப் பாகமாக உடையவர். இவர் பாச்சில் ஆச்சிரமத்தில் சங்கின் ஒளி வண்ணத்துடன் தாழ்ந்த சடையுடையவராய் உறைகின்றவர். இவர் இந்த நங்கை வாடுமாறு சதி செய்வதோ ! இதுவோ இவருக்குச் சார்வு !
477. ஏவலத்தால்விச யற்குஅருள் செய்து
இராவண னைஈடு அழித்து
மூவரி லும்முத லாய்நடு வாய
மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர் களும்பர வும்எழில் பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
சிதைசெய்வ தோஇவர் சேர்வே.
தெளிவுரை : பாசுபதம் என்னும் வலிமையான அத்திரத்தினை விசயற்குத் தந்து அருள் செய்தும், இராவணனுடைய பெருமையைச் சிதைத்தும் மும்மூர்த்திகளுள் தலைமை யுடையவராயும், பிரமன் திருமால் ஆகியோர் தேடிச்செல்லும் காலத்தில் இடைநின்ற நடுநாயகமாகவும் உள்ளவர் ஈசன். இங்கு மயல் கொண்டு வாடி, நோயால் பீடிக்கப்பட்டுள்ள இப்பெண், அத்தகைய பெருமை மிக்க மூர்த்தியை யல்லாது வேறு ஒருவரையும் அறியாதவள் அப்பெருமானுடைய திருநாமத்தையே கூறுபவள். இவ்வாறு இருக்க, எல்லோரும் போற்றிப் பரவும் நங்கையை வாட விடுவதோ ! இதுவோ இவரைச் சேர்ந்தவர்கள் அடையக்கூடிய பயன் !
478. மேலது நான்முகன் எய்தியது இல்லை
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியது இல்லை
எனஇவர் நின்றதும் அல்லால்
ஆலது மாமதி தோய்பொழில் பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வ தோஇவர் பண்பே.
தெளிவுரை : நான்முகன் அன்னப் பறவை வடிவம் தாங்கி மேலே உயரப் பறந்து சென்று, ஈசனார் முடியைக் கண்டதும் இல்லை; பூமியைக் குடைந்து சென்று நீலவண்ணனாகிய திருமால் ஈசன் திருவடியைக் கண்டதும் இல்லை; இவர்கள் இருவரும் திகைத்து நின்றவர் ஆயினர். நிலவைத் தொடும் உயர்ந்த ஆலமரங்கள் சூழ பாச்சில் ஆச்சிரமத்தில் உறைகின்ற பால் போன்ற வெண்மை நிறத்தவராகிய இவ் ஈசனோ, இந்த நங்கையை வாடுமாறு துன்பம் செய்வது ! இதுவோ இப் பெருமானுடைய பண்பு !
479. நாணொடு கூடிய சாயின ரேனும்
நகுவர் இவர்இரு போதும்
ஊணொடு கூடிய உள்கு நகையால்
உரைகள் அவைகொள வேண்டா
ஆணொடு பெண்வடிவு ஆயினர் பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
பூண்நெடு மார்பரோ பூங்கொடி வாடப்
புனைசெய் வதோஇடர் பொற்பே.
தெளிவுரை : நாணம் முதலான நற்பண்புகளை இழந்தவராய்ப் பயனற்ற மொழிகளைக் கூறி உணவு கொள்வதையே நோக்கமாக உடையவர்கள் சொற்களை ஏற்க வேண்டாம். ஆண் வடிவம் பெண் வடிவம் ஆகி பாச்சில் ஆச்சிரமத்தில் உறைகின்ற நெடிய மார்பில் அணிகலன்கள் கொண்ட ஈசரோ, இந்த நங்கை வாடுமாறு செய்வது ! இதுவோ இவரது மேலான குணம் !
480. அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
ஆச்சிரா மத்துஉறை கின்ற
புகைமலி மாலை புனைந்துஅழ காய
புனிதர்கொ லாம்இவர் என்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
தகைமலி தண்தமிழ் கொண்டுஇவை ஏத்தச்
சாரகி லாவினை தானே.
தெளிவுரை : உள்ளம் நிறைந்த அன்புடன் திருத்தொண்டர்கள் வணங்க, ஆச்சிரமத்தின் உறைகின்ண ஈசரே, புனிதர் என்று புகலிடமாக விளங்கும் தமிழ் மாலை சாற்றிய நற்றமிழ் ஞானசம்பந்தரின் இத் திருப்பதிகத்தை ஓதுபவர்களிடம் வினை சாராது.
திருச்சிற்றம்பலம்
45. திருவாலங்காடு (அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
481. துஞ்சவரு வாரும் தொழுவிப் பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப் பாரு முனைநட்பாய்
வஞ்சப் படுத்த ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு
அஞ்சும்ப ழையனூர் ஆலங்காட்டு எம் மடிகளே.
தெளிவுரை : பரமர், இரவு துயிலும் போது கனவில் தோன்றி காட்சி தருபவர், தொழுமாறு செய்பவர். மனமானது வழுவிச் சென்றாலும் என் நெஞ்சுகள் புகுந்து என்னை நினைக்கச் செய்பவரும் அவர். வஞ்சமாக ஒருவனுடைய வாழ்நாளைக் கொண்டதை அறிந்த தன்மை கேட்டுத் துறந்தவர்தம் நிலையுணர்ந்து அஞ்சும் பழையனூரின் ஆலங்காட்டில் விளங்குபவர் எம் பெருமைக்குரிய தலைவர்.
482. கேடும் பிறவியும் ஆக்கி னாரும் கேடிலா
வீடு மாநெறி விளம்பினார்எம் விகிர்தனார்
காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லிக் கணப்பேயோடு
ஆடும் பழையனூர் ஆலங் காட்டெம் மடிகளே.
தெளிவுரை : கெடுதி செய்யும் தன்மையும், அதன் வாயிலாகப் பிறவி கொள்ளுதலும், கெடுதியை நீக்கி முத்திப் பேறும் அதற்குரிய நெறிகளும் வழங்குபவர் ஈசன். அவர், சுடுகாட்டில், இருளில் பேய்க் கணத்தவரோடு பழையனூர் ஆலங்காட்டில் ஆடும் அடிகள். அவர் எம் தலைவர்.
483. கந்தம் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி
வெந்த பொடிநீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்
கொந்தண் பொழிற்சோலை அரவில்தோன்றிக் கோடல்பூத்து
அந்தண் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.
தெளிவுரை : நறுமணம் கமழும் கொன்றை மலர்சூடி, நெருப்புக் கனலைக் கரத்தில் ஏந்தி திருவெண்ணீறை நன்றாக விளங்குமாறு பூசும் இறைவர், நெருங்கிய பூங்கொத்துகள் உள்ள சோலைகளில் அரவத்தைப் போன்று நுனிப்பகுதியில் பூக்கள் மலர்ந்து பூத்து விளங்கும் பழையனூர் ஆலங்காட்டில் உள்ளவர் எம் தலைவர்.
484. பால மதி சென்னி படரச் சூடிப் பழியோராக்
காலன் உயிர் செற்ற காலனாய் கருத்தனார்
கோலம் பொழிற் சோலைப் பெடையோடுஆடி மடமஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.
தெளிவுரை : இளைய சந்திரனைத் தலையில் படருமாறு சூடிப் பழிச் சொல்லை நினையாமல் மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த எமனுடைய உயிரைக் கவர்ந்த கால வல்லமையுடைய கருத்தராகியவர் ஈசர், அழகிய சோலைகளில் ஆண் மயில் தனது பேடையோடு மகிழ்ச்சியுடன் உலவும் பழையனூர் ஆலங்காட்டில் உள்ளவர் எம் தலைவர்.
485. ஈர்க்கும் புனல்சூடி இளவெண் திங்கள் முதிரவே
பார்க்கும் அரவம்பூண்டு ஆடிவேடம் பயின்றாரும்
கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்து
ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.
தெளிவுரை : நீராடுகின்றவர்தம் பாவங்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டு, புண்ணியர்கள் ஆக்கும் நீராகிய கங்கையைச் சூடி, இளமையான ஒரு கலையுடைய பிறைச் சந்திரன் முற்றிப் பூரணமாகத் திகழும் தன்மையைப் பார்க்கின்ற அரவத்தைப் பூண்டு, நடனம் புரிபவர் ஈசர். அப்பெருமான் அத் திருக்கோலத்தில் திருநடனம் புரிபவர் கார்காலத்தில் மலரும் முல்லைக் கொடிகள் குருந்த மரத்தில் படர்ந்து ஏறித் தேனில் பரவும் நிலையை உடைய பழையனூர் ஆலங்காட்டில் உள்ளவர் எம் தலைவர். இங்கு நடராசப் பெருமான் நடனக் காட்சி உணர்த்தப்படுதல் காண்க.
486. பறையும் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துஉறையு மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்டு
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் மடிகளே.
தெளிவுரை : பறை, குழல், யாழ் இவற்றைப் பூதகணங்கள் வாசிக்க, வேதங்கள் ஓதி மயானத்தில் உறைகின்றவர் ஈசர். அவர், சந்திரனும் கங்கையும் சடையில் கொண்டு பெண் வண்டுகள் ஒலிக்கும் பழையனூர் ஆலங்காட்டில் விளங்கும் தன்மையர்.
487. நுணங்கு மறைபாடி ஆடிவேடம் பயின்றாரும்
இணங்கு மலை மகளோடு இருகூறு ஒன்றாய் இசைந்தாரும்
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல்ஏத்தும் வாழ்த்தும் கேட்டு
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் மடிகளே.
தெளிவுரை : நுட்பமான, உயர்ந்த கருத்துக்களைக் கூறும் வேதம் பாடும் திருக்கோலத்தை ஏற்றவரும், உமாதேவியுடனாகிய நிலையில் இருவேறு தனித்தனி கூறாக இன்றி, ஒரே கூறாக அர்த்தநாரியாக இசைந்துள்ள வரும், திருத்தொண்டர்களை வணங்கிப் போற்றும் சிறுத்தொண்டரால் ஏத்தியும் வாழ்த்தியும் கூறும் பக்தி மொழிகளைக் கேட்டும் விளங்குகின்ற ஈசன், தெய்வத் தன்மை பொருந்தும் பழையனூர் ஆலங்காட்டில் இருப்பவரே.
488. கணையும் வரிசிலையும் எரியும்கூடிக் கவர்ந்துஉண்ண
இணைஇல் எயில்மூன்றும் எரித்திட்டார்எம் மிறைவனார்
பிணையும் சிறுமதியும் கலையும்எல்லாம் கங்குல்சேர்ந்து
அணையும் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.
தெளிவுரை : தீமைக்கு வேறெதனையும் இணையாகச் சொல்ல முடியாத கொடிய தன்மை யுடைய மூன்று கோட்டைகளையும், அதன் அசுரர்களையும் வில், அம்பு, நெருப்பு, ஆகியவற்றால் எரித்துச் சாம்பலாக்கியவர். எம் இறைவனாகிய ஈசர். எல்லாவகையான மான்களும் இரவில் சேர்ந்து விளங்கும் பழையனூர் ஆலங்காட்டில் உள்ள அவர், எம் தலைவர்.
489. கவிழமலை தரளக் கடகக் கையால் எடுத்தான் தோள்
பவழ நுனை விரலால் பையஊன்றிப் பரிந்தாரும்
தவழும்கொடி முல்லை புறவம்சேர நறவம்பூத்து
அவிழும் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.
தெளிவுரை : கயிலை மலையைக் கவிழுமாறு முத்துக் கடகத்தைப் பதித்த கையால் எடுத்த இராவணனைத் தனது பவழம் போன்ற சிவந்த விரல் நுனியால் மெல்ல ஊன்றி, பின்னர் பரிந்து நல்வரங்களை நல்கியவர், ஈசன். முல்லை மலர்கள் பூத்துக் குலுங்கும் பழையனூர் ஆலங்காட்டில் அப்பெருமான் உள்ளார். அவர் எம் தலைவர்.
490. பகலும்இர வும்சேர் பண்பினாரு நண்பு ஓராது
இகலும் இருவர்க்கும் எரியாய்த் தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும்வழி பாடுவல் லார்க்கு என்றும் தீயபோய்
அகலும் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.
தெளிவுரை : வெண்மை பரவும் பகல் ஒளி போன்ற நிறத்தை உடையவர் பிரமன்; இருளை ஒத்த கரிய நிறத்தை உடையவர் திருமால்; இவர்கள் இருவரும் தத்தமக் குரியதான மகிமையாகிய படைத்தல், காத்தல் ஆகிய தொழில் முறையும், மும்மூர்த்தி எனப்படும் பெருமையும், தந்தை, புதல்வர் எனும் உறவு முறையும் கருத்தில் கொள்ளாது, தமக்குள் பேதம் ஏற்பட்டுப் பகை கொள்ளலாயினர். அதனை அளவிடுவதற்கு உரிய செயலாக, ஈசனைக் காண முற்பட்டனர். ஆங்கு, தீப் பிழம்பாகத் தோன்றி உயர்ந்தவர், வழிபாடு செய்ய வல்லவர்களுக்குத் தீமையான யாவும் களைந்து, நன்மைகளை அளிக்கும் பழையனூர் ஆலங்காட்டில் விளங்கும் அடிகள்.
491. போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.
தெளிவுரை : நன்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பேசிப் பொழுதை வீணாக்கியும், வயிற்றுப் பசி மிகுந்திருந்தால் பகலெல்லாம் <<உணவு கொள்பவர்களும் புற நெறியினர். பிறவிகள்தோறும் ஒட்டி வருகின்ற வினைகள் கெடுமாறு ஈசனைப் போற்றி வழிபடுவர்கள் தீமையின்றித் திளைத்திருப்பார்கள். அவ்வாறு செய்தருள்பவர் பழையனூர் ஆலங்காட்டில் <உறையும் எம் தலைவர்.
492. சாந்தம் கமழ் மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
ஆந்தன் பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளை
வேந்தன் அருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
சேர்ந்த இடமெல்லாம் தீர்த்தமாகச் சேர்வாரே.
தெளிவுரை : சந்தன மரங்கள் கமழப் பரவும் சண்பை நகர் ஞானசம்பந்தன், குளிர்ந்த நீரும், அழகும் உடைய பழையனூர் ஆலங்காட்டில் மேவும் எம் அடிகளைப் போற்றி, அப்பெருமானுடைய திருவருளால் விரிவாகப் பாட்டிசைத்த இத்திருப்பதிகத்தைப் பாடவல்லவர்கள், செல்லும் இடங்கள் தோறும் புனிதமாகிய தீர்த்தமாக விளங்கிப் பிறர் பாவங்கள் தாமாகவே தீரும் என்பது குறிப்பால் <உணர்த்தப்பட்டது.
திருச்சிற்றம்பலம்
46. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்
493. குண்டைக் குறட்பூதம் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலான் ஆடும்வீரட் டானத்தே.
தெளிவுரை : பருத்துக் குட்டையான பூத கணங்கள் குழுமி இருக்க, கெண்டை மீன்கள் உடைய கெடில நதியின் வடக்குப்பக்கத்தில் வண்டுகள் மருள் என்னும் பண்ணில் பாட்டு இசைக்க, பொன் போன்ற வண்ணம் உடைய விரிந்த கொன்றை மாலைகள் சூடித் திருக்கரத்தில் அனலை ஏறந்தி, ஈசன் வீரட்டானத்தில் நடம் புரிகின்றார்.
494. அரும்பும் குரும்பையும் அலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோடு உடன்கை அனல்வீசிச்
கரும்புஉண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பும் அதிகையுள் ஆடும்வீரட் டானத்தே.
தெளிவுரை : மென்மையான மார்பகங்களும், இனிமையான மொழியும் உடைய <உமாதேவியோடு, கரத்தில் நெருப்பு ஏந்தி அனல் வீசவும், வண்டுகள் பரந்து சூழ்ந்து தேன் உண்ணும் கொன்றை மலரைச் சூடி ஒளி விடும் சடை தாழ்ந்து விளங்க, யாவரா<லும் விரும்பப்படுகின்ற ஈசன், திருவதிகையுள் வீரட்டானத்தில் நடம்புரிகின்றார்.
495. ஆடல் அழல் நாகம் அரைக்குஇட்டு அசைத்து ஆடப்
பாடல் மறைவல்லான் படுதம் பலிபெயர்வான்
மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
வேடம் பலவல்லான் ஆடும் வீரட் டானத்தே.
தெளிவுரை : ஆடி அசைந்துகொண்டு இருக்கும் கொடிய விடம் உள்ள நாகத்தை ஆபரணமாகக் கொண்டு, பாடுகின்ற மறையில் வல்லவனாகிய பரமன், படுதம் என்று சொல்லப்படும் கூத்தினை ஆடிப் பலியேற்று, வானத்தில் உள்ள சந்திரனைத் தொடும் உயர்ந்த மாட மாளிகைகளை உடைய அதிகையுள், வீரட்டானத்தில் இருந்து, பல்வேறு வடிவங்களைப் புனைய வல்லவனாகி, தடம் புரிகின்றான்.
496. எண்ணார் எழில்எய்தான் இறைவன் அனல்ஏந்தி
மண்ணார் முழவுஅதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவநின்று ஆடும்வீரட் டானத்தே.
தெளிவுரை : நன்மையை எண்ணிப் பாராது முரண்பட்டு நின்ற மூன்று அசுரர்களையும், அவர்களுடைய கோட்டை மதில்களையும் எரியுமாறு செய்தவர் இறைவன். அப்பெருமான், கரத்தில் அனலை ஏந்தி, முழவு ஒலி அதிர, இளமையான பிறைச் சந்திரனைச் சூடிப் பண்கள் தோய்ந்த வேதங்களைப் பாடவும், தேவர்கள் போற்றித் தொழவும், அதிகையில் <உள்ள வீரட்டானத்தில் நடம் புரிபவர்.
497. கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
திருநின்று ஒரு கையால் திருவாம் அதிகையுள்
எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ
விரியும் புனல்சூடி ஆடும்வீரட் டானத்தே.
தெளிவுரை : இறந்தவர்களை ஊர்ப்புறத்தில் எரித்துச் சாம்பலாக்கப்படும் இடுகாட்டில், நெருப்பை ஏந்தித் திருமகள் நின்று இணையும் திருவாகும் அதிகையுள், வீரட்டானத்தில் இறைவன், சுடர்விடும் சடை தாழுமாறு கங்கையைத் தரித்து நடம் புரிபவர்.
498. துளங்கும் சுடர்அங்கைத் துதைய விளையாடி
இளங்கொம் பனசாயல் உமையோடு இசைபாடி
வளங்கொள் புனல்சூழ்ந்த வயல்ஆர் அதிகையுள்
விளங்கும் பிறைசூடி ஆடும்வீரட் டானத்தே.
தெளிவுரை : சுடர்விட்டு அசைந்து எரியும் நெருப்பினைக் கரத்தில் நெருக்கமாகப் பதித்துத் திருவிளையாடல் புரிந்து, இளமையான மெல்லிய கொம்பு போன்ற சாயலையுடைய உமாதேவியோடு இசைபாடி, ஒளிதிகழ் பிறைச் சந்திரனைச் சூடி, நீர்வளம் பெருகிச் சூழந்த வயல்களையுடைய அதிகையுள், வீரட்டானத்தில் ஈசன் நடம் புரிபவர்.
499. பாதம் பலர்ஏத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்
கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வன்நின்று ஆடும்வீரட் டானத்தே.
தெளிவுரை : பரமனாகிய பரமேட்டி பூத கணங்கள் புடை சூழ விளங்குகின்றார். பரமன் திருவடியைப் பலரும் போற்றி நிற்கின்றனர். புலித் தோலை உடையாகக் கொண்டு விளங்கும் முதல்வனின் ஆட்டத்திற்கு உமாதேவி இனிய இசைகொண்டு பாடுகின்றார். கெடில நதியின் வடப் பக்கத்தில் உள்ள வீரட்டானத்தில் ஈசன் நடனக் காட்சியை நல்குகின்றார்.
500. கல்லார் வரைஅரக்கன் தடந்தோள் கவின்வாட
ஒல்லை அடர்ந்துஅவனுக்கு அருள்செய்து அதிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் தலைசூடி
வில்லால் எயில்எய்தான் ஆடும்வீரட் டானத்தே.
தெளிவுரை : கல்போன்ற உறுதியான மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனுடைய பெரிய தோளின் அழகு குலையுமாறு, விரைவாகத் தண்டித்தும், பின்னர் அவ் அரக்கன் வணங்கிப் போற்றித் துதிக்க, அருள் புரிந்தும் விளங்குபவர் பரமன். அவர், பற்கள் நன்கு விளங்கியும் பிளந்த வாயை உடையதும் ஆகிய மண்டை ஓடுகளை மாலையாகச் சூடுபவர். வில்லேந்தி முப்புரங்களை எரித்தவர். அப்பெருமான், அதிகையுள் உள்ள வீரட்டானத்தில் நடம் புரிபவர்.
501. நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
பொடியாடு மார்பானைப் புரிநூல் உடையானைக்
கடிஆர் கழுநீலம் மலரும் மதிகையுள்
வெடிஆர் தலையேந்தி ஆடும்வீரட் டானத்தே.
தெளிவுரை : திருமாலும், பிரமனும் நிமிர்ந்து அழகாகத் தீப்பிழம்பாக ஓங்கிய ஈசனைக் காண்பதற்கு இயலாதவர் ஆயினர். அப்பெருமான், திருநீறு அணிந்த மார்பினர்; முப்புரிநூல் அணிந்துள்ளவர்; அவர் மணம் மிக்க நிலப் பூக்கள் மலரும் அதிகைப் பதியின் வீரட்டானத்தில் பிரம கபாலம் ஏந்தி நடம் புரிபவர்.
502. அரையோடு அலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோடு உடன்ஏந்தி உடைவிட்டு உழல்வார்கள்
உடையோடு உரைஒவ்வாது உமையோடு உடன்ஆகி
விரைதோய் அலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே.
தெளிவுரை : உணவின் வகைக்கு ஏற்றம் கொடுத்துக் குண்டிகையும் கரைக்குடுக்கையும் ஏந்தி உள்ளவர்கள் உலகில் உழல்பவர்கள் ஆவர். அவர்கள் உரைகள் ஏற்கத் தகாதன. உமாதேவியோடு வீற்றிருக்கும், மணம் பரவும் மலர்களை மாலையாக உடைய பரமன், வீரட்டானத்தில் நடம் புரிகின்றார். அப்பெருமானை வணங்குதல் வேண்டும்.
503. ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழும் துணையாக நினைவார் வினைஇலரே.
தெளிவுரை : கொன்றை மலர் மணம் பரப்பும் சீகாழிப்பதியின் ஞானசம்பந்தர், தெளிந்த நீர்மிகும் கரைகளில் நாணல்கள் செழித்து ஓங்கும் அதிகைப் பதியில் உள்ள வீரட்டானத்தில் விளங்கும் பரமனைப் போற்றிப் பாடிய இத் தமிழ் மாலையை ஓதி, அதனையே, ஈசனைப் போன்று வாழும் துணையாகப் பற்றி நினைப்பவர்கள், வினையில்லாதவர்கள் ஆவர்.
திருச்சிற்றம்பலம்.