கோவிலில் பூஜை நடப்பதை மணியடித்து தெரிவிப்பது வழக்கம். சிவ பூஜையில் நந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட மணியும், பெருமாள் பூஜையில் சங்கு, சக்கரம், கருடன் பொறிக்கப்பட்ட மணியும் இடம் பெற்றிருக்கும். நைவேத்யம், தீபாராதனை நேரத்தில் வேகமாக மணி ஒலிப்பதன் மூலம் தெய்வீக சக்தி எங்கும் பரவும். கடவுளின் முன் பிரசாதம் படைக்கும் போது, கடவுளே... இந்த உணவு பொருள் எல்லாம் உன் அருளால் கிடைத்தவை என்பதை அறிவிக்கும் விதத்தில் மணி ஒலிக்கப்படுகிறது. கவனச்சிதறல் ஏற்படாமல் மனம் முழுமையாக வழிபாட்டில் ஈடுபடவும் மணியோசை துணை செய்கிறது. மணியுடன் சேர்ந்து பல்வேறு வாத்தியங்களும் இசைக்கப்படும். இதனால், தேவையற்ற பேச்சோ, அமங்கல சொற்களோ காதில் விழ வாய்ப்பு இல்லாமல் போகும்.