முருகனின் முதல்படை வீடு திருப்பரங்குன்றம். இந்தக் கோயில் மலையைக் குடைந்து கட்டப்பட்டுள்ளது. வடதிசையிலிருந்து தெற்கு நோக்கினால் கயிலாய மலை போலவும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கினால் பெரிய யானை படுத்திருப்பது போலவும், மேற்கிலிருந்து கிழக்காக திரும்பினால் சிவலிங்கமாகவும் இந்த மலை காட்சியளிக்கும். இங்கு விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, அம்பிகை ஆகிய தெய்வங்களை ஒரே கருவறையில் தரிசிக்கலாம். முருகனின் இடப்புறத்தில் கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். இவர் திருமண விருந்தான பொங்கலையும், கரும்பையும் சுவைத்தபடி இருப்பது வேறெங்கும் இல்லாத காட்சி. இங்குள்ள சிவனை சத்திய கிரீஸ்வரர் என்றும், விஷ்ணுவை பவளக்கனிவாய்ப்பெருமாள் என்றும் அழைப்பர். இவர்கள் எதிரெதிர் சந்நிதியில் உள்ளனர்.