புகழ்பெற்ற ஞானி ஒருவரை ஒருமுறை சிலர் சந்தித்தார்கள். நாங்கள் எல்லோரும், புண்ணிய யாத்திரை சென்று எல்லா புனித நதிகளிலும் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும்! என்று அவரை அழைத்தார்கள். ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை. ஆனால், எனக்காக ஓர் உதவி செய்யமுடியுமா? என்று கேட்டார். என்ன செய்ய வேண்டும்? கட்டளை இடுங்கள் அய்யா! என்றார்கள் பணிவோடு. பாகற்காய் ஒன்றை அவர்களிடம் தந்த ஞானி, பெரிதாக ஒன்றும் செய்யவேண்டாம். நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்தப் பாகற்காயையும் அதில் கழுவி எடுத்துவிட்டு, என்னிடம் திரும்பக் கொண்டு வந்து விடுங்கள்! என்றார். வணங்கி விடைபெற்று யாத்திரை செய்யச் சென்றவர்கள், ஞானி கூறியதுபோலவே பாகற்காயை எல்லா புனித நதிகளிலும் கழுவிவிட்டு திரும்ப எடுத்துவந்து அவரிடம் தந்தனர்.
பாகற்காயை வாங்கிய ஞானி, அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கினார். புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்! இப்பொழுது சாப்பிட்டுப் பாருங்கள் தித்திக்கும்! என்று ஆளுக்கு ஒரு துண்டைத் தந்தார். ஆர்வமுடன் வாங்கியவர்கள் அதனை வாயில் போட்டு மென்ற வேகத்தில் அவர்கள் முகம் மாறியது. தித்திக்கும் என்றீர்கள்... ஆனால் பயங்கரமாய்க் கசக்கின்றதே...! திகைப்போடு ஞானியிடம் கேட்டார்கள். அமைதியாகப் புன்னகைத்த ஞானி சொன்னார், பார்த்தீர்களா! பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலவே நாம் நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல் எத்தனை புனிதஸ்தலங்களுக்குச் சென்றாலும், புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும் என்ன பயன் வந்துவிடப் போகிறது? மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் பின் செயலிலும் வருவதே இனிதாகும்!