அது கி.பி. 1036-ம் வருடம்! கங்கையில் இருந்து சுமந்து வரப்பட்ட புனித நீரை, ராஜேந்திரன் பெற்று அந்தணர்கள் கையில் தர, பக்திப்பெருக்கோடு குடமுழுக்கும் நடந்தேற, அதன்பிறகு, கங்கைகொண்ட சோழபுரத்தின் பெரிதனினும் பெரிதான கங்கை கொண்ட சோழீச்சுவரரின் நிழலில் இருந்தே தெற்காசியாவின் அடுத்த 400 ஆண்டுகால வரலாறு எழுதப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் ஆண்மையின் மிடுக்கென்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பெண்மையின் நளினம். தஞ்சை பெரிய கோயில் பிரமாண்டம் என்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பேரழகு. கற்களால் வரையப் பட்ட அழகோவியமாக பார்த்துப் பார்த்து வார்க்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் சோழீஸ்வரர் பிரகதீஸ்வரர் பெருவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்தக் கோயிலைக் கட்டிய சிற்பியின் பெயர் குணவன். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சுந்தரமல்லப் பெருந்தச்சனின் மாணவன். தஞ்சை பெரிய கோயில் கட்டுமானத்தில் குணவனின் திறமையையும் திட்டமிடலையும் கண்டு வியந்து நித்த வினோத பெருந்தச்சன் என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தான் ராஜராஜன். அந்த நித்த வினோத பெருந்தச்சன் தான் கங்கை கொண்ட சோழீச்சுவரத்தின் தலைமைச் சிற்பி. இலத்திச் சடையன், சீராளன் போன்ற தேர்ந்த கலைஞர்கள் வினோதனுக்கு துணை நின்றார்கள். கங்கை கொண்ட சோழபுரத்தின் நடுவில் கிழக்கு நோக்கி 6 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ளது இந்தக் கற்றளி. மொத்தம் இரண்டு வாயில்கள் உண்டு. சிதைவுக்குள்ளாகி சரிந்து கிடக்கும் மொட்டை கோபுர பாதை யே இக்கோயிலுக்கான பிரதான வழியாக இருந்தது.
சுமார் 86-க்கு 86 அடி அடிபீடமிட்டு 214 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டது தஞ்சை பெரிய கோயில். இக்கோயிலைக் காட்டிலும் பெரிதாக எழுப்பத் திட்டமிட்டே 100-க்கு 100 அடி என இக்கற்றளிக்கான அடிபீடம் அமைக்கப்பட்டது. ஆனால் 186 அடியே கோபுரம் உயர்த்தப்பட்டது. தான் எழுப் பும் கோயில், தன் தந்தை எழுப்பியதை விட பெரிதாக இருந்தால், வரலாற்றில் அவரின் புகழ் மங்கிவிடும் என்ற நோக்கிலேயே இக்கற்றளியின் உய ரத்தைக் குறைத்தான் ராஜேந்திரன் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கோபுரத்தின் உயரத்தைக் குறைத்த ராஜேந்திரன், சோழீஸ்வரரை தன் தேடலுக்கு ஏற்றவாறு பிரமாண்டமானவராக அமைத்தான். 13 அடி, 3 அங்குலம் உயரம். இந்த ஈசனின் உடல் போர்த்த 9 முழ அங்கவஸ்திரம் வேண்டும். இந்தக் கற்றளிக்கான கற்கள் பெரம்பலூருக்கு அருகில் உள்ள சிற்றளி, பேரளி கிராமங்களில் இருந்து பெயர்த்து கொண்டுவரப்பட்டுள்ளன.
ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோயிலுக்கும், கங்கை கொண்ட சோழீச்சுவரத்துக்கும் கட்டமைப்பில் சில வேறுபாடுகள் உண்டு. தஞ்சைக் கற்றளி நான்கு பக்க கோபுர விமான அமைப்பைக் கொண்டது. கங்கை கொண்ட சோழீச்சுவரம் எண் பக்க வடிவ திராவிட கட்டடக் கலை நுட்பத்தில் வடிக்க ப்பட்டிருக்கிறது. கோயிலின் சிற்பங்கள் அனைத்தும் சைவத் திருமறைகள் சொல்லும் செய்திகளைக் காட்சிப்படுத்துகின்றன.
அக்காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றியடையும் தருணத்தில், வெற்றிச் சின்னமாக சிற்பங்களையும் மணிமுடிகளையும் கொண்டு வருவது வழக்கம். ராஜேந்திரன் வெற்றி பெற்ற தேசங்களில் இருந்து கொண்டு வந்த அற்புத சிற்பங்கள் பலவும் கங்கை கொண்ட சோழீச்சுவரத்தில் நிறுவப் பட்டுள்ளன. சாளுக்கியத்தில் இருந்து போர் வெற்றிச் சின்னமாகக் கொண்டு வரப்பட்ட 20 கரங்கள் கொண்ட துர்கை. ஒரே கல்லிலான நவகிரக சிற்பங்கள் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சூரியனை தாமரை வடிவில் சித்திரித்து, சுற்றிலும் கிரகங்கள் அமர்ந்திருக்கும் இச்சிற்பத்தை போன்ற வடிவம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை. இங்கு வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களில் திறன் வாய்ந்த சிற்பிகளின் கரங்கள் நர்த்தனமாடியுள்ளன. ஒவ்வொரு சிற்பத்திலும் ஒவ்வொருவித தனித்தன்மை.
சிற்ப சாஸ்திரம் குலையாமல் வடிவமைக்கப்பட்ட தில்லை ஆடவல்லான் சிற்பம் கலையின் உச்சம். முப்பரிமாணத்தில் எங்கிருந்து பார்த்தாலும் நம்மைப் பார்த்து புன்னகைத்தவாறு நிற்பதைப் பார்க்கும்போது, உடம்பு சிலிர்க்கிறது. இங்கிருக்கும் நர்த்தன விநாயகர் தன் ஏழு பாகங்களிலும் ஏழு விதமான ஒலியாக எழும்புகிறார். அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தின் நளினம் வியக்கவைக்கிறது. அச்சிற்பத்தில் உயிர்ப்பும் உணர்ச்சியும் ததும்புகிறது. கருவறையின் உள்ளே, சுற்றுப்புற பிராகாரத்தில் கோடையில் குளிர்ச்சியாகவும் குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்குமாறு சந்திரகாந்தக் கற்கள் கொண்டு வடிவமைத்துள்ளார்கள். சிற்பக்கலையின் உச்சமென இக்கோயிலை அடையாளம் காட்டலாம்.
இந்தக் கோயில் முழுதும் அற்புதம் ததும்பும் புதுமைகள் காட்சியாக இருக்கின்றன. விமானத்தில் உச்சியில் 34 அடி குறுக்களவு கொண்ட பெருங்கல் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. விமானமே லிங்கத்தின் வடிவில் அமைந்திருக்கிறது. 600 அடி நீளம், 450 அடி அகலத்தில் இக்கோயிலின் மதில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நின்றபடி எதிரிகளோடு போரிட முடியும். இரண்டடுக்கு மாட வரிசையுடன் திருச்சுற்று அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள நந்தி, செங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் செய்நேர்த்தியிலும், அளவிலும் தஞ்சை பெரியகோயில் நந்தியை போன்றிருக்கிறது. நந்திக்கு வலது புறத்தில் 27 அடி குறுக்களவுள்ள சிங்கமுகக் கிணறு ஒன்று அமைந்துள்ளது. சிங்கத்தின் வயிற்றுக்குள் நுழைகிறது வாயில். 50 படிக்கட்டுக்களைக் கொண்ட இந்த கிணற்றையும் கங்கை நீரைக் கொண்டு புனிதப் படுத்திய பிறகே நீர் நிரப்பினான் ராஜேந்திரன்.
உட்கோயிலின் நீளம் 340 அடி. 100 அடி அகலம். இதன் உள்ளே பிரமாண்டமான மகா மண்டபமும் அர்த்த மண்டபமும் அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் மட்டும் 140 தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலின் தூண்கள், விமானங்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டதாக இருக்கின்றன. சிற்ப மேன்மையில் தஞ்சை பெரிய கோயிலை விஞ்சி நிற்கிறது. கங்கை கொண்ட சோழீச்சுவரம்.