வைதீக சம்பிரதாயத்தின்படி தீட்டு, சூதகம் போன்ற நாட்களில் கோயிலிற்கு நுழைதல் கூடாது. பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் தெரிந்தும், தெரியாமலும் இம்மாதிரியான அபவித்திர செயல் செய்ய வாய்புண்டு. அதை நிவர்த்தி செய்து, கோயில் பவித்திரத்திற்காக நடைபெறும் ஒரு உத்ஸவமே பவித்திரோத்ஸவம் எனப்படும். இந்த உத்ஸவம் கோயில் சுத்தி மற்றும் புண்யாஹவாசனம் போன்று அன்று. இது சம்பரோஷணத்தை காட்டிலும் சிறந்த நிகழ்ச்சியாகும்.
பவித்ரோத்ஸவம் திருமலையில் 15-16 நூற்றாண்டு வரைக்கும் நடைபெற்றதாக சான்றுகள் உள்ளன. பாதியில் நின்று போன இந்த உத்ஸவம் கி.பி. 1962 ஆம் ஆண்டு முதல் தேவஸ்தானத்தினர் மேற்கொண்டு நடத்துகின்றனர். இது மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் உத்ஸவமாகும். ஒவ்வொரு வருடமும் சிராவண (ஆவணி) மாதம் தசமி, ஏகாதசி, த்வாதசி நாட்களில் கல்யாண மண்டபத்தில் இது நடைபெறும். முதல் நாள் பவித்திரம் சமர்ப்பித்தல், ஹோமங்கள், உபயநாச்சிமார்களுடன் திருமலையப்ப ஸ்வாமிக்கு அபிஷேகங்கள் நடைபெறும். இரண்டாம் நாள் கோயிலில் உள்ள அனைத்து விக்ரஹங்களுக்கும் பவித்திரம் சமர்ப்பிப்பர். மூன்றாம் நாள் பூர்ணாஹுதி நடைபெறும். மூன்று நாட்களும் உபயநாச்சிமார்களுடன் திருமலையப்ப ஸ்வாமி திருமலை திருமாட வீதிகளில் திருவீதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.