ராமபிரான் 11ஆயிரம் ஆண்டுகள் மண்ணுலகில் வாழ்ந்து வைகுண்டம் திரும்ப ஆயத்தமானார். அயோத்தியில் ஓடும் சரயுநதியில் இறங்கி அனைத்து மக்களையும் தன்னோடு அழைத்துக் கொண்டு புறப்பட்டார். அப்போது ராமனோடு செல்ல விரும்பாமல் தனித்து நின்றவர் அனுமன் மட்டுமே. ராமர் அனுமனிடம், மாருதியே! நீ வைகுண்டம் கிளம்பவில்லையா? என்று அழைத்தார். வைகுண்டத்தில் அமிர்தம், ஆனந்தம், சுகம் எல்லாம் இருந்தாலும் ராமநாமம் இல்லையே. ராமானந்தம் இல்லாத வைகுண்டத்தை விட பூலோகமே எனக்கு பிடித்திருக்கிறது. இங்கு ராமநாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், என்று பதிலளித்தார். அதனால், இன்றும் ராமாயண பாராயணம் செய்யும் இடத்தில் ஒரு பலகையை அனுமனுக்காகப் போட்டு வைப்பது வழக்கம். நம் கண்ணுக்குத் தெரியாமல் சூட்சும வடிவில் அவர் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். துõதனாக, வீரனாக, மதியுக மந்திரியாக விளங்கினாலும், ராமரின் திருவடிகளைத் தாங்கி நிற்பதில் தான் அனுமனுக்கு அலாதியான மகிழ்ச்சி.