பதிவு செய்த நாள்
01
நவ
2017
01:11
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண லிங்கத்தை வைத்து வழிபடுவார்கள். நர்மதை ஆற்றில் தோன்றும் பாண லிங்கங்கள் உளுந்தளவு முதல் பெரும் பாறை அளவுக்கும் கிடைப்பதாகக் கூறுவர். நீரில் சுழற்சியின் காரணமாக நீள் உருண்டையாகத் திகழும் பாண லிங்கங்கள். நர்மதை நதிக்கரையில் சோணபுரத்தை ஆட்சி செய்து வந்தவன் வாணாசுரன், சிறந்த சிவபக்தன், அவன் கோட்டையைச் சிவபெருமானே காவல் செய்தார் என்றால், அவனது சிவபக்தி எத்தகையதாக இருந்திருக்கும்?!
திருஅஞ்சைக்களம் தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலைக்கு அழைத்துவர சிவபெருமான் அனுப்பியது இவனைத்தான். இதை, ‘வரமலி வாணன் மத்த ஆனையோடு வந்தெதிர் கொள்ள ’ எனும் நொடித்தான் மலை பதிகத்தின் வரிகளில் இருந்து அறியலாம். இந்த வாணாசுரன் தினமும் ஆயிரம் சிவலிங்கங்களை வைத்து பூஜிப்பான். பூஜை முடிந்ததும் லிங்கங்களை நர்மதை நதியில் விட்டுவிடுவான். அப்படி அவன் நர்மதையில்விட்ட லிங்கங்கள் அனந்த கோடி என்பார்கள். அவையே இப்போது பாண லிங்கங்களாக வெளிப்படுகின்றன என்பது நம்பிக்கை. நர்மதையில் கிடைக்கும் பாண லிங்கங்களைக் காசிக்குக் கொண்டுசென்று கங்கையில் நீராட்டிப் பூசித்து எடுத்துவருவது விசேஷம். பாண லிங்கங்களை வீட்டில் வைத்து பூஜிப்பது, பல கோடி நன்மைகளைப் பெற்றுத் தரும். அந்த வீட்டைத் துயரங்களும் தீய சக்திகளும் அண்டவே அண்டாது. பிரதோஷம், திங்கட்கிழமை, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் போன்ற தினங்களில் பாண லிங்கத்துக்கு அபிஷேகங்கள் செய்து, வில்வம் சமர்ப்பித்து, சிவபுராணம் போன்ற துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவதால், நமது மனக்கிலேசங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.