சிவன் அக்னி மலையாகத் தோன்றிய திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையைச் சுற்றிலும் எட்டு லிங்கங்களாக அருள்கிறார். அஷ்டதிக் பாலகர்களில் ஒவ்வொருவரும் ஒரு லிங்கத்தை வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது.
இந்திர லிங்கம்: அண்ணாமலையார் கோயிலின் ராஜ கோபுரத்தின் அருகில், கிழக்கு திசையில் அமைந்திருப்பது இந்திர லிங்கம். இந்திரன் வழிபட்ட லிங்கம் என்பதால் இந்தப் பெயர் உண்டானது. ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய சன்னிதி இது. சுக்கிரன், சூரியனுக்கு உரிய திசைக்கோயில் என்பதால் இங்கு வணங்கினால் அரச போக வாழ்வை அடையலாம். அக்னி லிங்கம்: தென்கிழக்கு திசையில் அமைந்து இருக்கிறது இந்த கோயில். சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மூர்த்தி. சந்திரனுக்கு அக்னி வடிவில் காட்சியளித்த லிங்கமே இங்கு குளிர்ந்து அக்கினி லிங்கமாகக் காட்சியளிக்கிறதாம். சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்துக்கு அருகில் உள்ள இந்த கோயிலுக்கு வந்த இறைவனை வழிபட்டால் மனச் சஞ்சலங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
யம லிங்கம்: தென்திசை அதிபதியான யமன் வழிபட்ட லிங்கம் இது. கிரிவலம் சென்ற யமனுக்குச் சிவபெருமான் தாமரை மலரில் லிங்கமாகத் தோன்றி அருளினார். இந்த கோயிலுக்கு இறைவனை வழிபடுவதால் ஆயுள் பலம் உண்டாகும். வீண் விரயங்கள் நீங்கும். விருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய மூர்த்தி இவர்.
நிருதி லிங்கம்: தென்மேற்கு திசையின் அதிபதி நிருதி பகவானுக்கு நிருதீஸ்வரராக காட்சி அளித்த ஈசன் இங்கு அருள்கிறார். இவரை வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. மேஷ ராசிக்காரர்களின் பிரார்த்தனைத் தலம் இது. ராகு பகவான் இந்தத் திசைக்கு அதிபதி என்பதால் இங்கு வழிபட்டால் மன அமைதியைப் பெறலாம்.
வருண லிங்கம்: வருண பகவானுக்கு ஈசன் நீர் வடிவ லிங்கமாக தரிசனம் அருளிய தலம் இது. மேற்கு திசையில் அமைந்திருக்கும் இந்த லிங்கத்தை வணங்கினால் அந்தத் திசையின் அதிபதியான சனி பகவானின் அருளைப் பெறலாம். தீராத நோய்களைத் தீர்த்துவைக்கும் இடம் இது. மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் இவரை வழிபட்டு வாழ்வில் சகல வளங்களையும் பெறலாம். வாயு லிங்கம்: வடமேற்கு திசையில் அமைந்திருக்கும் கோயில் இது. பஞ்ச கிருதிக்கா என்ற தேவலோக மலரின் வாசமாகத் தோன்றிய ஈசன் வாயு பகவானை இங்கு ஆட்கொண்டாராம். கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தலம் இது. இங்கு வந்து வணங்குபவர்களுக்கு, வடமேற்கு திசையின் அதிபதியான கேது பகவான் சகல யோகங்களையும் அளிப்பார். குபேர லிங்கம்: செல்வங்களை இழந்த குபேரன், இந்த இடத்தில்தான் அண்ணாமலையாரைத் தரிசித்து வணங்கி, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றார் என்கிறது புராணம். இந்த லிங்க மூர்த்தியை வழிபடுவதால் குபேர யோகம் ஸித்திக்கும்; குரு பகவானின் திருவருள் கிட்டும்; தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய சுவாமி இவர்.
ஈசான்ய லிங்கம்: வடகிழக்கு திசையில் சுடலையின் அருகில் அமைந்துள்ளது. நந்தீஸ்வர பகவான் வணங்கிய மூர்த்தி இவர். ஈசனைத் தவிர எதுவுமே சாஸ்வதமில்லை என்பதை உணர்த்தும் ஞான சன்னிதி இது. இந்தத் திசையின் அதிபதி புதன் என்பதால் இங்கு வணங்கினால் கலைகளில் தேர்ச்சி பெறலாம். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய சன்னிதி இது.