பதிவு செய்த நாள்
01
பிப்
2018
05:02
தாய் தெய்வ வழிபாடே மிகப் பழமையான வழிபாடாகும். இதுவே பின்னாளில் கொற்றவை வழிபாடாக தமிழகத்தில் நிலை பெற்றது. சிவபெருமான் எட்டு வீரச்செயல்கள் புரிந்து தீய சக்திகளை வதம் செய்தார் என்பது சிவ புராணம் ஆகும். அதே போன்று தேவியும் அசுர சக்திகளை அழிக்க எடுத்த ஏழு உன்னத வடிவங்களை தேவி மகாத்மியம் புகழ்ந்து பாடுகிறது. சப்த மாதர்கள் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது. சண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண், பெண் இணைவில் பிறக்காமலும் அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகள்.
பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி இந்திராணி, சாமுண்டி - முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
பிராம்மி(பிராம்மணி): சப்த மாதர்களில் முதலாவதாக உள்ள தேவி பிராம்மி. படைப்புக் கடவுளான பிரம்மாவின் அம்சமானவள். எனவே பிரம்மனைப் போன்று நான்கு முகங்கள் நான்கு கைகள், எட்டுக் கண்கள் உடையவள். நான்கு கரங்களில் ஒன்று அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று வரத ஹஸ்தமாகவும் உள்ளன. பின்னிரு கைகளில் ஜபமாலையும் கிண்டியும் பிரம்மனுக்கு உள்ளது போன்றே உள்ளன. ஜடா மகுடத்துடன் பீதாம்பரம் உடுத்தி அன்ன வாகனத்தில் எழுந்தருளுவாள். குழந்தை வரம் அருளுபவள். சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி கோயிலின் மூலவர் பிராம்மி தேவியேயாவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள். ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை, படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால் ஞாபக மறதி நீங்கி விடும். ஐ.ஏ.எஸ். வங்கிப்பணி, அரசுப்பணி முதலான தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்து வந்தால் வெற்றி நிச்சயம்.
மகேஸ்வரி: அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சத்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பவள். இவளை வழிபட்டால் கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள். இவளது வாகனம் ‘ரிஷபம்’ ஆகும். இவள் ஐந்து முகங்களையும், மூன்று கண்களையும் கொண்டிருப்பாள் என தத்துவநிதி, விஷ்ணு தர்மோத்திர புராணம் என்பவற்றில் கூறப்பட்டுள்ளது. தத்துவநிதி, இவளுக்கு பத்து கரங்கள் காணப்படுமெனவும் அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையில் இருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. வெள்ளை ஆடை உடுத்தும் இத்தேவி கலங்கின மனதை அமைதியடையச் செய்வாள்.
கவுமாரி: கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக் கடவுள். ஈசனும், உமையாளும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக் கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி. இவளுக்கு சீடி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்டதிக்கிற்கும் அதிபதி இவளே. இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். சிவப்பு நிற ஆடை அணிந்து நீண்ட வேலாயுத மேந்தி இருப்பாள். சேவற்கொடியுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளும் கவுமாரியை உஷ்ண சம்பந்தமான நோய்கள் அகல வழிபடுகிறார்கள்.
வைஷ்ணவி: அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாகக் கொண்டவள். வளமான வாழ்வு தருபவள். சகல சவுபாக்யங்கள், செல்வவளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாகத் தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியம். விஷ்ணுவின் சக்தியான இவள் நீல நிறமானவள் விஷ்ணுவுக்குரிய ஆபரணங்களை அணிந்து விஷ்ணுவைப் போன்ற அருள் பொழியும் தாமரைக் கண்களைக் கொண்டவள். விஷக்கடிகள் குணமாகவும், தோல் தொடர்பான பிணிகள் நீங்கவும் வைஷ்ணவியை வழிபடுகிறார்கள்.
வராஹி: பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குபவள். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. சப்தகன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருக பலமும் தேவ குணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களைத் தாங்கிக் காப்பவள். பிரளயத்திலிருந்து உலகத்தை மீட்டவளாகச் சொல்லப்படுகிறாள். எருமையை வாகனமாக உடையவள். தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாகக் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோரின் வாழ்வில் சிக்கல்கள் தடைகள், தீராத பகைகள் தீரும். கறுப்பு நிறமானவள். மகாவிஷ்ணு வராஹ அவதாரம் (பன்றி) எடுத்துப் பாதாள உலகம் சென்று பூமாதேவியை மீட்டு வந்தார். இதனால் பூவராஹன் எனப்பட்டார். சிவபெருமான் அந்தகாசுரனுடன் போர் புரியும்போது வராகமூர்த்தி, வராகி அம்மனாகப் பெண் உருக் கொண்டு சிவனின் வெற்றிக்கு வித்திட்டாள். எனவே பகை நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் வேந்தர்கள் வெற்றி வேண்டி, வழிபட்டுச் செல்லும் தேவியாக வராஹி அம்மன் போற்றப்படுகிறாள்.
இந்திராணி: இந்திரனின் அம்சம். கற்பக மலர்களைக் கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவள். மணமாகாத ஆண் இவளை வழிபட்டால், மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண் வழிபட்டால் மிகப் பொருத்தமான கணவனையும் அடைவார்கள். இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிறமேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயக்கரம் காட்டுவாள். மகேந்திரி எனும் பெயரையும் கொண்டவள். இவளது வாகனமாகவும் கொடியாகவும் யானை இடம் பெற்றிருக்கும். வெள்ளை யானையின் மீது வலம் வருவாள். சத்ரு பயம் நீங்க இத்தேவியை வழிபடும் வழக்கம் உள்ளது.
சாமுண்டி தேவி: ஈஸ்வரனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியாவாள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தவள். பதினாறு கைகள் அவற்றில், பதினாறு விதமான ஆயுதங்கள் முன்று கண்கள், செந்நிறம், யானைத்தோல் ஆடை அணிந்திருப்பவள். சப்த கன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே. உடலுக்கும் ஆத்மாவுக்கும் ஏற்படும் துயரங்களை நீக்கும் அதிதேவதையாக சாமுண்டா தேவி போற்றப்படுகிறாள். அக்னி கிரீடத்துடன் கூடிய இவ்வம்மையே மாரியம்மன் உள்பட பல்வேறு கிராம தேவதையாக உள்ளாள்.