லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள்.சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை. ‘துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே‘ என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும். கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் . பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும்.
பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ,ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை. பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது ‘ என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார். லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப்பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின் அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.