முன்னொரு காலத்தில் வெள்ளத்தால் உலகம் அழியும் நிலை ஏற்பட்டது. அப்போது பிரம்மா சிவனிடம், “உலகம் அழிந்து மீண்டும் தோன்றியதும், படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது? என கேட்டார். சிவன், “நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்று செய்து அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமான சிருஷ்டி பீஜத்தை (படைப்புக்குஉரிய மூலப்பொருள்) அதனுள்வை. அதன் மீது தேங்காயை வைத்து, மாவிலையால் அலங்காரம் செய். அது வெள்ளத்தில் சாயாமல் இருக்க ஒரு உரியில் வை. வெள்ளத்தில் கும்பம் தெற்கு நோக்கி செல்லும். எங்கு தங்குகிறதோ நான் அங்கு எழுந்தருள்வேன்,” என்றார்.
இதன் படியே கும்பம் ஒரு இடத்தில் தங்கியது. கும்பத்திலிருந்து விழுந்த மாவிலை வன்னி மரமாயிற்று. அப்போது சிவன் வேடனாக தோன்றி, கும்பத்தின் மீது அம்பு தொடுத்தார். கும்பத்தின் மூக்கு சிதைந்து, அமுதம் நாலாபுறமும் பரவியது. அமுதத்தோடு கலந்த வெண்மணல் சிவலிங்கம் ஆயிற்று. இவரே “கும்பேஸ்வரர்” என்றும், இத்தலம் “கும்பகோணம்” என்றும் பெயர் பெற்றது.