கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல் கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் ராமானுஜர் 12 ஆண்டுகள் தங்கி கைங்கர்யம் செய்தார். இது ராமானுஜரின் அபிமான தலம் ஆகும். பஞ்சமர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்ததும் இத்திருத்தலத்தில்தான். ராமானுசர் தன் 80 ஆவது வயதில் இங்கிருந்து கிளம்பி ஸ்ரீரங்கம் செல்ல முடிவெடுத்தபோது, அவரைப் பிரிய மனமில்லாமல் அவரது சீடர்கள் வேதனையுற்றனர். உடனே ராமானுசர் ஒரு சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை சிலையாக வடிக்கச் செய்து, அதனுள் தமது தெய்வீக சக்திகளைப் பாயச் செய்தார். பின்பு சக்தியூட்டிய அந்த சிலையை தன் சீடர்களிடம் ஒப்படைத்து “உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணி இந்தச் சிலையை கண்டு மகிழ்ந்து அமைதி பெறுங்கள்” என்று அளித்தார். இந்தச் சிலை, ‘தமர் உகந்த திருமேனி’ என்றழைக்கப்பட்டு, இன்றளவும் மேல்கோட்டையில் வழிபடப்படுகிறது.