ஒருமுறை நவக்கிரகங்களில் ஒன்றான சனி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய ஆயத்தமானார். இதனால், நாட்டில் கடும்பஞ்சம் உருவாகும் என்பதை, ஜோதிடர்கள் மூலம் அறிந்த தசரத சக்கரவர்த்தி, சனீஸ்வரனுடன் போருக்குப் புறப்பட்டார். சூரிய மண்டலத்திற்கு மேலே இருக்கும் நட்சத்திரமண்டலத்திற்கு சென்றார். சனீஸ்வரர் அவரிடம், “ தசரத சக்கரவர்த்தியே! வாரும்! உம் தவபலத்தையும், வீரத்தையும் பாராட்டுகிறேன். வேண்டும் வரத்தை தருகிறேன்,” என்றார்.அவரிடம் தசரதர், “சனீஸ்வரரே! ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்ல வேண்டாம்,” என்று வேண்டிக்கொண்டார். சனீஸ்வரரும் சம்மதித்து அருள்புரிந்தார். அப்போது அவரைப் போற்றி தசரதர் பாடிய சனி ஸ்தோத்திரம் புகழ்பெற்றதாகும்.