காசி, ராமேஸ்வரத்திற்கும் ராமாயண காலத்தில் இருந்தே தொடர்புண்டு. காசியில் விஸ்வ நாதர் பாணலிங்கமாகவும், ராமேஸ்வரத்தில் ராமநாதர் மணல் லிங்கமாகவும் இருக்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள அனுமலிங்கத்திற்கு பெருமைப்படுத்தும் விதத்தில் முதல் பூஜை நடக்கிறது. இந்த லிங்கத்திற்கு ‘காசி லிங்கம்’ என்றே பெயர். ராமர் வழிபட்டதால் ராமேஸ்வரத்தில் சுவாமி ‘ராமநாதர்’ எனப்படுகிறார். காசி விஸ்வநாதருக்கு தினமும் இரவு நடக்கும் சப்தரிஷி பூஜையின் போது ஏழு அர்ச்சகர்கள் பூஜை செய்வர். அப்போது ‘ராம்’ என பொறித்த தங்க வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வர். காசியில் இறக்கும் உயிர்களின் காதில், சிவன் ராமநாமம் ஜபித்து, மோட்சம் அளிக்கிறார். இதை ‘இறக்க முக்தி காசி! தரிசிக்க முக்தி ராமேஸ்வரம்’ என்று குறிப்பிடுவர். ராமேஸ்வரத்தில் நீராடி ராமநாதரைத் தரிசித்த பின்னரே காசி யாத்திரையை பக்தர்கள் நிறைவு செய்வர். 2399 கி.மீ, தூரத்திலுள்ள இந்த இரண்டையும் ‘காசி – ராமேஸ்வரம்’ என்று இணைத்துச் சொல்லும் வழக்கம் புராண காலத்தில் இருந்து தொடர்கிறது.