பதிவு செய்த நாள்
23
ஜன
2012
05:01
(பதின்மூன்றாவது மணிமேகலைக்கு அறவணர் ஆபுத்திரன் திறம் கூறிய பாட்டு)
அஃதாவது: மன்னுயிர்ப் பசி கெட மணிமேகலை அமுத சுரபியைக் கையிலேந்தியமை கண்ட அறவணவடிகளார் ஆபுத்திரன் திறம் அறவணர் தன்பால் கேள் என்று தீவ திலகை என்னும் தெய்வம் கூறிற்று என மணிமேகலை தமக்கு அறிவித்ததனை நினைவு கூர்ந்து அத் தெய்வப் பாத்திரத்தைப் பெற்ற ஆபுத்திரன் வரலாற்றை மணிமேகலைக்கு அறிவித்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.
இதன்கண்- தண்டமிழ் ஆசான் சாத்தனார் ஆபுத்திரன் பிறப்பையும் வைதிக சமயத்துப் பார்ப்பனர் அருள் சிறிதுமிலராய் வேள்விக் களத்திலே கொன்று ஊன் தின்னும் பொருட்டு நெடுநில மருங்கின் மக்கட்கெல்லாம் பிறந்த நாள் தொட்டுஞ் சிறந்த தன் தீம்பால் அறந்தரும் நெஞ்சோடு அருள் சுரந்தூட்டும் ஆவைக் கட்டி வைத்திருத்தலையும், அது கண்டு அருள் கெழுமிய உள்ளம் உடைய சிறுவனாகிய ஆபுத்திரன் அவ்வாவினைக் காப்பாற்றத் துணிந்து அப் பார்ப்பனர் அறியாவண்ணம் நள்ளிருளிலே கைப்பற்றிக் கொண்டு போதலையும், அதனைத் தேடிச் சென்ற அந்தணர் ஆபுத்திரனைத் தொடர்ந்து போய்க் கண்டு அவனைக் கோலாற் புடைத்து அவன் பிறப்பினார் புலைச் சிறுமகன் வாய்தந்தன கூறி வைதலையும்;
ஆபுத்திரன் அவர்தம் இருடிகள் பிறப்பு முறை கூறி எள்ளி நகைத்தலையும் பார்ப்பனர் அவனை ஊரைவிட்டுத் துரத்தி விடுதலையும் அந்தணர் சேரியில் அவன் பிச்சைப் பாத்திரத்திலே கல்லிடுகின்ற கொடுமையையும், பின்னர் ஆபுத்திரன் மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் தக்கண மதுரை சென்று சிந்தா தேவியின் செழுங்கலை நியமித்து முன்றிலை இருப்பிடமாகக் காணார் கேளார் கான்முடப்பட்டோர், பேணுக ரில்லோர் பிணி நடுங் குற்றோர் முதலிய இன்னோரன்ன ஓடுதலைமடுத்துக் கண்படை கொள்ளுதலையும் கற்போர் உளமுருகக் கட்டுரைத் துள்ளனர். இக்காதை புத்தர் அறிவுறுத்த அறநெறி நிற்பான் ஒருவனுடைய வரலாறாகலின் மிகவும் சிறந்ததொரு காதையாகத் திகழ்கின்றது.
மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய
ஆபுத்திரன் திறம் அணி இழை! கேளாய்
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சி
தென் திசைக் குமரி ஆடி வருவோள்
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை
ஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகி
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க 13-010
தாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு ஓர்
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர
நாவான் நக்கி நன் பால் ஊட்டி
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்
குழவி ஏங்கிய கூக் குரல் கேட்டுக்
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே
காதலி தன்னொடு கைதொழுது எடுத்து 13-020
நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை! என
தம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி
மார்பிடை முந்நூல் வனையாமுன்னர்
நாவிடை நல் நூல் நன்கனம் நவிற்றி
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்
நாத் தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின்
அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின்
புக்கோன் ஆங்குப் புலை சூழ் வேள்வியில்
குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பிக் 13-030
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்று ஆங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆத் துயர் கண்டு
நெஞ்சு நடுக்குற்று நெடுங் கணீர் உகுத்து
கள்ள வினையின் கடுந் துயர் பாழ்பட
நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும்
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி
அல்லிடை ஆக் கொண்டு அப் பதி அகன்றோன்
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி
அடர்க் குறு மாக்களொடு அந்தணர் எல்லாம் 13-040
கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி
ஆ கொண்டு இந்த ஆர் இடைக் கழிய
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலைச் சிறு மகனே! போக்கப்படுதி என்று
அலைக் கோல் அதனால் அறைந்தனர் கேட்ப
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக்
கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்துக்
காட்டிடை நல் ஆக் கதழ்ந்து கிளர்ந்து ஓட
ஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்
நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின் 13-050
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை
முது மறை அந்தணிர்! முன்னியது உரைமோ?
பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ் 13-060
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்
நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்
ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேசகம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ
நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து? என
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் 13-070
ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழியாட்டி மறை முறை எய்தி
குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை
யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு? என
மா மறையாட்டி வரு திறம் உரைக்கும்
வாரணாசி ஓர் மா மறை முதல்வன்
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்
பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி 13-080
காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தெற்கண் குமரி ஆடிய வருவேன்
பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க்
காவதம் கடந்து கோவலர் இருக்கையின்
ஈன்ற குழவிக்கு இரங்கேனாகித்
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்
செல் கதி உண்டோ தீவினையேற்கு? என்று
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன்
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் 13-090
புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன் என
ஆபுத்திரன் பின்பு அமர் நகை செய்து
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன்னர்த் தோன்றிய
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர்
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ?
சாலிக்கு உண்டோ தவறு? என உரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே 13-100
தாதை பூதியும் தன் மனை கடிதர
ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும்
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான் சென்று எய்தி
சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து
அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத்
தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர்
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி 13-110
காணார் கேளார் கால் முடப்பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து
கண்படைகொள்ளும் காவலன் தான் என் 13-115
ஆபுத்திரன் தோற்றம்
1-10: மாபெரும்..........நீங்க
(இதன் பொருள்) அணி இழை மா பெரும் பாத்திரம் மடக் கொடிக்கு அருளிய ஆபுத்திரன் திறம் கேளாய்-மகளிர்க் கெல்லாம் அணிகலனாகத் திகழுகின்ற மணிமேகலாய்! நீ ஏந்திய மாபெருஞ் சிறப்புடைய இவ்வமுதசுரபியை நினக்கு வழங்கிய ஆபுத்திரன் என்னும் அவ்வறவோனுடைய வரலாறும் பண்பாடுமாகிய இயல்பெலாம் கூறுவேன் கேட்பாயாக!; வாரணாசி ஓர்மறை ஓம்பாளன் ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்- வாரணாசி என்னும் மூதூரில் மறை நூல்களைப் பிறர்க்கு ஓதுவிக்குமாற்றால் அவை இறந்துபடாமல் காத்தற்றொழிலை மேற்கொண்ட மறை நூலாசிரியன் அபஞ்சிகன் என்னும் பெயருடையான் ஒரு பார்ப்பனன் இருந்தனன்; பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து கொண்டோன் பிழைத்த தண்டம் அஞ்சி-அவன் மனைவியாகிய சாலி என்பவள் தனது கற்பென்னும் திட்பத்தைத் தன் நிறையுடைமையாற் காக்கும் காவலின் எல்லையைக் கடந்து ஒழுகுமாற்றால், தன் கணவனுக்குப் பொருந்தா தவளாய்ப் பிழை செய்து விட்டமையாலுண்டாகும் தண்டனைக்கு அஞ்சி அதற்குக் கழுவாயாக; தென் திசைக்குமரி ஆடிய வருவோள்-தென் திசையின் கண்ணதாகிய கன்னியாகுமரித் துறையில் நீராடுதற் பொருட்டு வருபவள்; சூல் முதிர் பருவத்துத் துஞ்சு இருள் இயவு இடை-தான் எய்தியிரு த சூலானது முதிர்ந்த பருவத் திலே ஊர் மக்கள் துயிலுதற் கியன்ற நள்ளிருள் யாமத்திலே தான் செல்லும் வழியிலே கருவுயிர்த்து; ஈன்ற குழவிக்கு இரங்காளாகி-பழியஞ்சித் தான் ஈன்ற மகவிற்கும் இரங்காதவளாய்; தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க- பிறர் பார்வைக்குக் காணப்படாத மறைவிடமானதொரு தோட்டத் தினூடே அம் மகனைப் போகட்டுப் போக என்க.
(விளக்கம்) மணிமேகலை ஆபுத்திரன் திறம் அறவணன் றன்பாற்கேள் என்று தீவதிலகை கூறிற்றென்பதை ஞாபகவேதுவாகக் கொண்டு ஈண்டு அறவணர் ஆபுத்திரன் திறம் கேள் என்று கூறத் தொடங்குகின்றார் என்க. மடக்கொடிக்கு என்றது உனக்கு என்னும் துணையாய் நின்றது. வாரணாசி-ஓர் ஊர், (காசி). மறை எழுதாக்கிளவியாதலின் பிறர்க்கு ஓதுவித்து அஃது இறந்து படாமற் காப்பவள் (உபாத்தி) என்பார் மறை ஓம்பாளன் என்றார். ஆரணம்- மறை. பார்ப்பனி என்பது சாதியைக் குறியாமல் மனைவி என்னும் பொருட்டாய் நின்றது. பார்ப்பனரில் பார்ப்பான் கணவன் என்னும் பொருளினும் பார்ப்பனி மனைவி என்னும் பொருளினும் வழங்கும் இதனை என் கணவனும் மாற்றாளும் என்னும் பொருளில் பார்ப்பானொடு மனையாள் என்மேற் படாதன இட்டு ஏற்பன கூறார் எனவரும் மாலதி கூற்றானுமறிக.(சிலப்-9:7-8) இந் நூலினும், பார்ப்பான்றன்னொடு கண்ணிழந்திருந்த இத்தீத்தொழிலாட்டி எனவரும் கோதமை கூற்றினும் அஃதப் பொருட்டாதலறிக.(6-132-3)
காப்பு- கற்புக்காப்பு. கடைகழிதலாவது எல்லை கடந்து ஒழுகுதல். தண்டம்- நகரத்திலுண்டாகும் துன்பம். குமரி- கன்னியாகுமரி. ஆடிய-ஆட பருவத்து என்றது பருவம் வந்துற்றபொழுது என்றவாறு. ஈன்ற குழவிக்கு இரங்காளாகி என்றது, பழக்கஞ்சி ஈன்ற குழவிக்கும் இரங்காளாகி என்பதுபட நின்றது. பிறர் பார்வைக்குத் தோன்றாத்துடவை என்க. துடவை-தோட்டம்.
அக் குழவியை ஆகாத்தோம்பலும் இளம்பூதி என்னும் அந்தணன் எடுத்துப் போதலும்
11-20: தாயில்............எடுத்து
(இதன் பொருள்) தாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு-தாயில்லாமையாலே பாலுண்ணாத அக் குழவி ஒழியாது கூப்பிடுகின்ற துயரமான அழுகை யொலியைச் செவியுற்று; ஓர் ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர்தீர நாவான் நக்கி-ஒரு கறவைப் பசு வந்து அவ்விடத்தே அக் குழவியின் துன்பந்தீரும்படி தனது நாவினாலே நக்கியும்; நல் பால் ஊட்டி-நல்ல பாலை அதன் வாழிற் பிலிற்றி ஊட்டியும்; எழு நாள் போகாது புறங்காத்து ஓம்ப-ஏழு நாள் காறும் அதற்குப் புறம் போகாமல் அயலகலே நின்று பாதுகாவா நிற்ப; வயனங் கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்- வயனங்கோடு என்னும் ஊரில் உறையும் ஒரு பார்ப்பனன்; இயவு இடை வருவோன்-அத் தோட்டத் தயலிலே கிடந்த வழி மேலே வருபவனும்; இளம்பூதி என் போன்-இளம்பூதி என்னும் பெயரையுடையவனும் ஆகிய அவ்வந்தணன்; குழவி ஏங்கிய கூக்குரல் கேட்டு துன்பமொடு கழுமிய கண்ணீர் உகுந்து-அக் குழவி ஏங்கி அழுத கூக்குரலைக் கேட்டுத் துன்பத்தோடு கலந்த கண்ணீரைச் சொரிந்து; ஆங்கு ஆமகன் அல்லன் என் மகன் என்றே-ஆங்குக் காணப்பட்ட ஆவின் மகனாகான், இனி இவன் என் மகனே ஆவான் என்று சொல்லி, காதலி தன்னொடு கைதொழுது எடுத்து-தன்னுடன் வந்த தன் மனைவியோடே அணுகிக் கடவுளை நினைந்து கை கூப்பித் தொழுது அன்புடன் அம் மகவை எடுத்தக் கொண்டு; என்க.
(விளக்கம்) தாயில்லாமையால் பாலுண்ணாத குழவி என்க. அதன் துயர்-அக் குழவியின் பசித்துயர். வயனங்கோடு-ஓர் ஊர். இயவு- வழி. துன்பமொடு கழுமிய கண்ணீர் என மாறுக. இஃது அன்பு என்னும் மெய்ப்பாடு. ஆமகன் அல்லன் என் மகன் என்றே காதலி தன்னொடு கைதொழுதெடுத்து என்னப் பாட்டிடைவைத்த குறிப்பால் இவர்கள் மகப்பேறில்லாதவர் என்பதும், இறைவனே இம் மகவினை அருளினன் என்று மகிழ்ந்து எடுத்துப் போயினர் என்பதும் பெற்றாம் மேல் வருவனவும் இக் கருத்தை வலியுறுத்தல் காணலாம்.
இளம்பூதியும் மனைவியும் அக் குழவியைப் பேணி வளர்த்தல்
21-26: நம்பி............அறிந்தபின்
(இதன் பொருள்) நம்பி பிறந்தான் நம் கிளை பொலிக என மகப் பேறில்லாத நமக்கு இறைவனருளாலே ஆண் மக்களுள் சிறந்த நம்பி பிறந்தனன் இவன் வழியாக நம் மரபு இனி வழி வழிச் சிறந்து பொலிவதாக என்று பெரிதும் மகிழ்ந்து; தம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி- தம்மூர்க்குப் போய்த் தம் சுற்றத் தாரோடு கூடி; மார்பிடை முந்நூல் வனையா முன்னர்-அம் மகவின் மார்பிலே பூணுநூல் புனைவதற்கு முன்னரே; நாவிடை நன்னூல் நன்கனம் நவிற்றி-நாவிடத்திலே நன்மை தரும் மெய்ந்நூற் பயிற்சியை நன்றாகச் செய்வித்து. ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்- மறை நூலையுடைய அந்தணர்க்குப் பொருந்திய கலைகள் அனைத்தையும்; நாத்தொலைவு இன்றி-நாவினாலே பிறர்க்குத் தோல்வியுறாத வண்ணம் நன்கனம் அறிந்தபின்-அவன் நன்றாகக் கற்றுத் தெளிந்த பின்னர் என்க.
(விளக்கம்) கிளை-மரபு. முந்நூல்- பூணுநூல். நன்னூல்- மறைகளும் உறுப்பு நூல்களும். நாவினால் பிறர்க்குத் தோலாதவாறு கற்றறிந்தபின் என்க. இத்தகைய இவனுடைய தோலாத நாவன்மையை இக் காதையிலேயே 63 ஆம் அடி முதலாக 69 அடியீறாகவும், 93 ஆம் அடி தொடங்கி 98 ஆம் அடியீறாகவும் வருகின்ற இவ்வாபுத்திரன் கூற்றால் நன்குணரலாம்.
இனி, அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் நாத்தொலைவின்றி நன்கனம் அறிந்தபின் என்றமையால் ஒத்துக்களில் அந்தணர்க்கு ஒவ்வாதனவும் பலவுளவாக அவற்றை யெல்லாம் ஓதாமல் அந்தணர்க்கு ஒத்தவற்றையே நன்கு பயின்றான் ஒவ்வாதனவற்றை நாத்தொலைவில்லாமைக்கே அறிந்தான் எனவும் நுண்ணிதிற் பொருள் காண்க. இனி,
அந்தணர் என்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (30)
எனவரும் அருமைத் திருக்குறளானே அந்தணர் இயல்பும் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவார்க்குப் பொருந்தாதன சாலப்பல வேதத்துள் இருத்தலும் அறிக.
ஓதலந்தணர்க்கு ஓவ்வா வொழுக்கமும் ஆபுத்திரன்றன் அருள்மிகு செயலும்
27-37: அப்பதி............கரந்தாங்கு
(இதன் பொருள்) அப்பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின் புக்கோன்-ஒரு நாள் ஆபுத்திரன் வயனங்கோடு என்னும் அவ்வூரின்கண் தான் வாழும் பார்ப்பனச் சேரியின்கண் தனக்கியன்ற ஏது நிகழ்ச்சி காரணமாக ஒரு பார்ப்பனன் இல்லிற் புகுந்தவன்; ஆங்குப் புலைசூழ் வேள்வியில் குரூஉத் தொடைமாலை கோட்டிடை சுற்றி வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பி-அவ்விடத்தே அப் பார்ப்பனர்கள் தாம் மறு நாள் ஊன்தின்றற்கு ஏதுவாக வேள்வி செய்வதாக ஒரு சூழ்ச்சி செய்து நிகழ்த்தும் வேள்விக் களத்திலே கொன்று தின்பதற்காக நிறமிக்க மலர்மாலை தனது கொம்பின்கண் சுற்றப்பட்டுத் தன்னைக் கொல்பவரும், தான் பெரிதும் அஞ்சுதற்குக் காரணமாகியவரும் கொடிய பகைவருமாகிய அப் பார்ப்பனர்க்குப் பெரிதும் அஞ்சி உய்தி காணாமல் வெய்தாக மூச்செறிந்து வருந்தி; கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி வலை இடைப்பட்ட மானே போன்று கொலைத் தொழிலையே மிகுதியாகச் செய்கின்ற வேடர் வில்லற்கு அஞ்சி ஓடிப் போய் அவர் வளைத்த வலையில் அகப்பட்டுக் கொண்ட மான் போல; அஞ்சி நின்று அழைக்கும் அத்துயர் கண்டு-அஞ்சி அவராற் கட்டப்பட்ட வேள்வித்தூண் மருங்கே நின்று அம்மா! அம்மா! என்று இடையறாது கதறி அழைக்கின்ற ஓர் ஆவினது துன்ப நிலையைக் கண்டு; நெஞ்சு நடுங்குற்று தனது அருளுடைய நெஞ்சம் நடுங்கி; நெடுங்கண் நீர் உகுத்து நெடிய தன் கண்ணால் துன்பக் கண்ணீர் சொரிந்து; கள்ள வினையால் கடுந்துயர் பாழ்பட நள் இருள் கொண்டு நடுங்குவன் வண்ணம் களவாடிப் போகுமொரு செயலாலே இதனுடைய கொடிய துன்பம் இல்லையாம்படி இதனை இற்றை நாள் கள்ளிரவின் இருளிலே யான் கைப்பற்றிக் சென்று உய்விப்பேன் என்னும் கருத்துடையவனாய் அக் கருத்தைப் பிறர் அறியா வண்ணம் மறைத்துக் கொண்டு; என்க.
(விளக்கம்) புக்கேன் என்றது ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள காரணத்தால், தானே சென்று புகுந்தவன் என்பதுபட நின்றது. அந்தணன் என்றது இகழ்ச்சி; என்னை? அந்தணர்க்கொவ்வாப் புலைசூழ் வேள்வி செய்யத் தலைப்பட்டவன் ஆதலின் என்க. புலை சூழ்தலாவது புலால் உண்ணும் புன்மையைக் கடவுள் வழிபாடு போலக் காட்டி மறைத்தல். அதன் புன்மை தெரித்தோதுவார் புலை சூழ் வேள்வி எனத் தகுதியான அடைமொழி புணர்த்தார். குரூஉ-நிறம். வேள்விக்களத்திற் கொல்லும் உயிரினங்கட்கு மாலை சூட்டித் தூப முதலியன காட்டுதல் மரபு. அம் மரபுப்படி மாலைசூட்டி வேள்வித்தூணிற் கட்டப்பட்டுப் பார்ப்பனரைக் காணுந்தோறும் அஞ்சி அஞ்சிக் கதறுகின்ற ஆ எனவும் வலையிடைப் பட்ட மான் போன்று அஞ்சி அழைக்கும் ஆ எனவும் தனித்தனி கூட்டுக.
பகை என்றது பார்ப்பனரை. புலம்பி- வருந்தி. நவிலுதல்- மிகுதியாகச் செய்தல்.
கள்ளவினை- களவு செய்தல். ஆபுத்திரன் சிறுவன் ஆதலானும் அந்த ஆவினைக் காப்பாற்றுதற்கு வேறு வழி காணாமையானும் இதனைக் கள்ளவினை செய்தேனும் காப்பாற்றுவல் என்று துணிந்தனன்.
இனி, பிறர் உடைமையா யிருப்பதியாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதும் கருத்தன்றோ களவென்னும் காரறிவாண்மை; இச் செயல் தீவினையே ஆகும். ஆவின் துயர்களைதல் நல்வினையே ஆயினும் அந் நல்வினையின் பொருட்டு ஒரு தீவினை செய்தல் அறவோர்க்கு ஆகாதாம் பிறவெனின்; அற்றன்று, அதற்கு விடையாகக் கீழே வருகின்ற இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் கூறும் நுண்ணுரையைக் கூர்ந்து நோக்குக. அஃதாவது,
களவு என்னுஞ் சொற்கேட்டுக் களவு தீதென்பதூஉம், காமம் என்னுஞ் சொற் கேட்டுக் காமம் தீதென்பதூஉம் அன்று; மற்று அவை நல்ல ஆமாறும் உண்டு; என்னை? ஒரு பெண்டாட்டி தமரோடு கலாய்த்து நஞ்சுண்டு சாவல் என்னும் உள்ளத்தளாய் நஞ்சு கூட்டி வைத்து விலக்குவாரை இல்லாத போழ்து உண்பல் என்று நினைவிடத்து, அருள் உடையான் ஒருவன் அதனைக் கண்டு, இவள் இதனை உண்டு சாகாமல் கொண்டு போய் உகுப்பல் என்று அவளைக் காணாமே கொண்டுபோய் உகுத்திட்டான். அவளும் சனநீக்கத்துக்கண் நஞ்சுண்ட சாவான் சென்றாள்; அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள், அவன் அக்களவினான் அவளை உய்யக் கொண்ட மையின் நல்லூழிற் செல்லும் என்பது. மற்றும் இது போல்வன களவாகா, நன்மை பயக்கும் என்பது
எனவரும். இவர் காட்டும் இவ்வமைதி ஈண்டும் நன்கு பொருந்துதல் உணர்ந்து கொள்க.(இறையனார் களவியல் சூத்திரம்1. உரை)
பார்ப்பனர் ஆபுத்திரனைத் தொடர்ந்து போய் அலைத்தலும் ஆவின் செயலும்
37-48: ஆங்கொரு..............கிளர்ந்தோட
(இதன் பொருள்) ஆங்கு ஒரு புடை ஒதுங்கி அல் இடை ஆக் கொண்டு அப்பதி அகன்றோன் கல் அதர் அத்தம் கடவா நின்றுழி-அவ்வேள்விக் களத்தின் பக்கத்திலேயே ஓரிடத்தே பிறர் தன்னை அறியாவண்ணம் ஒதுங்கி இருந்து அற்றை நாள் இரவின் இடையாமத்தே அவ்வாவினைக் கைப்பற்றிக் கொண்டு அவ்வூரை விட்டுப் போகின்றவன், அதனோடு பருக்கைக் கற்களையுடைய அருவழியிலே செல்லும் பொழுது; அந்தணர் எல்லாம் அடர்க்குறு மாக்களொடு கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி அப் புலைசூழ் வேள்வி நிகழ்த்தும் அறவோராகிய பார்ப்பனமாக்கள் எல்லாம் தமக்கு வேண்டிய கூட்டமான சிற்றினமாக்களோடு விரைந்து சென்று அவ் வருநெறியின் கண்ணே செல்கின்ற ஆபுத்திரனை அவன் கைப்பற்றிச் செல்லும் ஆவினோடு ஒரு சேர வளைத்துக் கொண்டு; ஆ கொண்டு ஆர் இடை கழிய நீ மகன் அல்லாய்-ஏடா வேள்விப் பசுவைக் களவாடிக் கொண்டு இவ்வாறு அருநெறியிலே போதற்கு நீ கீழ் மகன் அல்லையே! இளம்பூதியின் மகனாகிய நீ இவ்வாறு செய்தற்கு; நிகழ்ந்தது உரையாய்- காரணமாய் உனக்கு வந்தது யாது? அதனைச் சொல்!; புலைச் சிறுமகனே போக்கப் படுதி- புலையன் சிறு மகனே! சொல்லாயேல் இப்பொழுதே எங்களால் உயிர் போக்கப் படுவாய்! சொல்! என்று சொல்லி; அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப- பிறரை அடித்து அலைக்கும் கைக் கோலாலே பலரும் புடைத்து வினவாநிற்ப; நல் ஆ-அது கண்ட நல்ல அந்தப் பசுவானது; நின்று ஆட்டி அலைக்கும் அந்தணர் உவாத்தியை-அங்ஙனம் அலைப்பவருள் தலைவனாக நின்று ஆபுத்திரனை மிகவும் வருத்துகின்ற அப் பார்ப்பனர் உவாத்தி யாயனை; கோட்டினில் குத்திக் குடர் புய்த்து-தன் கொம்பினாலே வழிற்றிலே குத்திக் குடரை அறுத்துச் சரித்துவிட்டு; கதழ்ந்து கிளர்ந்து காட்டிடை ஓட- விரைந்து துள்ளிக் கொண்டு காட்டினூடே புகுந்து ஓடி மறைய என்க.
(விளக்கம்) ஆங்கு-அவ் வேள்விக் களத்தில். அல்-இரவு. பதிவயனங்கோடு. கடம்-அருநெறி. நீசமகன் என்றும் பாடம். நீ மேலோனாகிய இளம்பூதி மகனாயிருந்தும் கீழ் மகன் செய்வது செய்தாய் அதற்குக் காரணம் சொல். நிகழ்ந்தது ஈண்டுக் காரணமாக நிகழ்ந்தது என்பது படநின்றது. ஐகாரம்:அசை.
புலைச்சிறுமகன் என்றது புலையன் மகனே என்று வைதபடியாம். சொல்லாயாயின் உயிர் போக்கப்படுதி என்று அச்சுறுத்தியவாறு. அலைக்கோல்-அடிக்கும் கோல். நின்று ஆட்டி அலைக்கும் உவாத்தி என்று மாறுக.
புய்த்தல் ஈண்டு அறுத்தல். அதன் செயல் நன்றி பேணியதாக முடிதலின் நல்லா என்றார். கிளர்தல்-துள்ளுதல்.
ஆபுத்திரன் அப் பார்ப்பனருக்கு அறிவுரை கூறுதல்
49-56: ஆபுத்திரன்..............உரைமோ
(இதன் பொருள்) ஆபுத்திரன்றான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் அது கண்ட ஆபுத்திரன்றானும் அப்பொழுது அப் பார்ப்பனர்க்கு நல்லறிவு கூறுபவன்;முதுமறை அந்தணர்- மிகவும் பழைய மறை நூலுக்குரியவர் ஆகின்ற அருளுடைய அந்தணர்களே!; நோவன செய்யன்மின்- பிறவுயிர்கள் துன்புறுதற்கியன்ற தீய செயல்களைச் செய்யாதே ஒழியுங்கோள்!; விடுநிலம் மருங்கின் படுபுல் ஆர்ந்து- மக்கள் பயிர் செய்யாது கைவிட்ட நிலத்திலே தாமே தோன்றுகின்ற புற்களை மேய்ந்து தன்னை ஓம்பிக் கொண்டு அப்பாலும்; மக்கட்கு எல்லாம் பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால்-உலகிலே வாழும் நம் போன்ற மாந்தர் அனைவருக்கும் அவரவர் பிறந்தநாள் தொடங்கி அவர் வாழும் நாள்காறும் அவர் உணவினுள் தலைசிறந்த உணவாகிய தனது பருதற்கினிய பாலை; அறம் தரும் நெஞ்சோடு அருள் சிறந்து ஊட்டும்-அறம் என்பது இஃதே என்று நம்மனோர்க்கெல்லாம் காட்டித் தருமொரு நன்னர் நெஞ்சத்தோடு அருளோடு தானே சுரந்து நம்மைப் பருகச் செய்யும்; இதனோடு இந்தப் பசுவினிடத்தே; வந்த செற்றம் என்னை-நுமக்குண்டான பழம் பகைதான் யாது?; முன்னியது உரைம்-இப்பசுவைக் கொன்றொழிப்பதற்கு நீங்கள் நிலைத்ததற்குக் காரணம் கூறுங்கோள்! என்றான் என்க.
(விளக்கம்) நொடிவன- கூறுவன. விடு நிலம்-மாந்தர் பயிர் செய்யாமல் விடப்பட்ட நிலம். படுபுல்-தாமே தோன்றும் புல், என்றது ஆவிற்கு யாம் உணவிடவேண்டா என்றவாறு. பிறந்த நாள் என்றது மக்கள் பிறந்த நாளை. மக்கள் பிறந்த நாள் தொட்டும் என்றவும்மை சிறப்பு. இறக்கு நாள்காறும் பால் உணவு கோடல் கூற வேண்டா என்பது தோன்ற, பிறக்கு நாள் தொட்டும் என்றொழிந்தான். பாலினும் சிறந்த வுண்வின்மையால் சிறந்தபால் என்றான். தானும் தன்னுடம்பைப் பிறர் உதவியின்றிப் பேணிக் கொண்டு தன் பாலாலே பிறரை ஊட்டும் இச் செயல் முழுதும் அறமே ஆதலின் ஆக்கள் நெஞ்சம் அறத்தை மக்கட்குக் காட்டும் நெஞ்சம் என்று பாராட்டினன். இதனொடும் பட நின்றது முதுமறை அந்தணிர் என்றது இகழ்ச்சி. உரையும் என்னும் ஏவற்பன்மை ஈற்றுயிரும் மெய்யும் கெட்டு ஓகாரம் பெற்று முடிந்தது. நிகழ்ந்தது உரையாய் என்றார்க்கு, முன்னியது உரைமோ என்று மறுமொழி தந்தவாறு. முன்னியது கொலை செய்தலை ஆதலின், அக் கொலையினின்றும் உய்யக் கொள்ளும் அருளே என் செயற்குக் காரணம் என இதனால் அவர் வினவிற்கு விடையிறுத்தானாதலும் உணர்க. என்றான் என ஒரு சொல் பெய்க.
பார்ப்பனர் ஆபுத்தரனை இகழ்தல்
57-62: பொன்..................இகழ்தலும்
(இதன் பொருள்) பொன் அணி வலங் கொள் நேமி சக்கரக்கை மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய அருமறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை-ஏடா! திருமகளே மார்பில் அணிந்திருக்கின்றவனும், அசுரர்களை வெற்றி கொள்ளுதற்கியன்ற நேமி என்னும் சக்கரப்படையை ஏந்திய கையையுடையவனும் நிலையுதலுடைய உயிர்கள் தோன்றுதற்குக் காரணமானவனும் ஆகிய திருமாலின் மகனாகிய நான்முகன் பார்ப்பனராகிய எமக்கே சிறந்துரிமை யுடையனவாம்படி ஓதியருளிய அறிதற்கரிய எம்முடைய நல்ல மறை நூல்களின் அருமை பெருமைகளை அறியாமையாலே எம்முடைய வேள்வித் தொழிலே நீ குறிப்பாக இகழ்ந்து கூறுகின்றாய்; தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ ஆமகன் ஆதற்கு ஒத்தனை கேள்- நிலையின்றிச் சுழலும் நெஞ்சத்தையுடைய சிறியோனாகிய நின் பெயராகிய ஆபுத்திரன் என்பதற்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கின்றனை எற்றாலெனின் கேள்; அறியா நீ-அந்தணராகிய எம்மியல்பறியாத மடவோனே; நீ மகன் அல்லாய்- நீ தானும் மக்கட் பிறப்பினை என்பதால் ஐயமில்லை என்று அவன் பிறப்பைப் பற்றி இகழ்தலும்-இகழாநிற்றலும் என்க.
(விளக்கம்) நேமிச்சக்கரம் எனக் கூட்டி இரு பெயரெட்டாகக் கொள்க. முதல்வன்- காரணன். திருமால் தானே உயிரும் உலகுவாய் விரிகின்றான் என்பது வைணவசித்தாந்தம் ஆதலின் அஃது அப் பொருட்டாயிற்று. இதனை,
..............இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏமமார்ந்த நிற்பிரிந்தும்
மேவல்சான்றன எல்லாம்
சேவல்(கருடன்)ஓங்கு உயர்கொடி யோயே
எனவரும் பரிபாடலானும்(4:33-5) உணர்க. அல்லதூஉம்,
மம யோனிர் மஹத்ப்ரஹ்ம ததமின்கர்ப்பம் ததாம்யகள்
ஸம்ப்பவ: ஸர்வபூதானாம் ததோபவதி பாரத
எனவும்,
ஸர்வயோனிஹு கௌந்தேய மூர்த்தய: ஸம்ப்பவந்தியா:
தாஸாம் ப்ரஹ்ம மஹ
த்யோனிரஹம் பீஜப்ரத: பிதா
எனவும் வரும் பகவத் கீதையானும் உணர்க.(குணாத்ரய, சுலோ 3-4)
மகன்- நான்முகன். அருமறை நன்னூல்-வேதநூல். தெருமரல் சுழற்சி. சிறியை- சிறுமையுடையை. என்றது, ஆறறிவுடையையல்லை ஐயறிவே உடையை என்றவாறு. ஐந்தறிவேயுடைமையின் ஆமகன் ஆதற்கு ஒத்தனை என்றிகழ்ந்த படியாம். மாவும் மாக்களும் ஐயறி வுயிரே என்னும் தொல்காப்பியமும் நினைக. நீ மகனல்லாய் என்றது விலங்கே என்னும் அவர் கருத்தை வலியுறுத்தற் பொருட்டு தக்க இன்ன தகாதன இன்னவென்று ஓக்க உன்னலராயின் உயர்ந்துள மக்களும் விலங்கே என நிகழும் கம்பநாடர் வாக்கும்(வாலி-112) ஈண்டு ஒப்பு நோக்கத்தகும் நோக்கத்தகும்
ஆபுத்தரன் பார்ப்பனர் பிறப்பு முறை கூறப் பழித்தல்
63-69: ஆன்மகன்................அகத்தென
(இதன் பொருள்) நான் மறை மாக்கள்-அது கேட்ட(ஆபுத்திரன்) நான்கு மறைகளையும் உயை மாக்களே கேளுங்கோள்!; அசலன் ஆன் மகன் சிருங்கி மான் மகன் விரிஞ்சி புலிமகன்-அசல முனிவன் ஆவின் வயிற்றிற் பிறந்தவன் என்றும், சிருங்கி முனிவன் மான் வழிற்றில் பிறந்தவன் என்றும் விரிஞ்சி முனிவன் புலி வயிற்றில் பிறந்தவன் என்றும் நீவிரே கூறுவரே இவர் பிற்க; புரையோர் போற்றும் கேச கம்பளன் நரி மகன் அல்லனே- நுங்களில் யர்ந்தோராற் போற்றிப் புகழப்படுகின்ற கேசகம் பள முனிவன் விலங்குகளுள் வைத்து இழிகுணமுடைய நரி வயிற்றிற் பிறந்தவன் என்பீரே அவன் அங்ஙனம் பிறந்தவன் அல்லன் என்னவும் துணிவீரோ? ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று-இங்கு யான் எடுத்துக் கூறிய இவரை எல்லாம் நீவிர் நுங்குலத்தைச் சேர்ந்த அறவோர் கூட்டத்தினர் என்று சொல்லி; ஓங்குயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால்- மிக மிக உயர்ந்த பெரிய சிறப்புடையராய் புகழ்ந்து கூறுவதும் உண்டன்றோ!; ஆவொடு வந்த-ஆவோடு தொடர்புடையதாகி வந்ததனால்; அழிகுலம் நன்னூலகத்து உண்டோ-இழிந்த குலமாம் என்று நுங்கள் நான்மறைகளினூடே எங்கேனும் ஓதிக்கிடக்க நீயிர் கண்டதுண்டேயோ!; என-என்று அவரைத் திறம்படப் பழித்துக் கூறாநிற்ப என்க.
(விளக்கம்) அசலன் ஆன்மகன் என்றும் இங்ஙனமே பிறவற்றையும் மாறுக. அசலமுனிவன் முதலிய நுங்குல முதல்வர் பலர் விலங்கின மக்கள் என்று நும் நன்னூலே கூறுகின்றன; அவரை நீயிரும் வானளாவப் புகழ்தலும் புகழ்கின்றீர். அறந்தரும் நெஞ்சத்து அருள் சுரந்தூட்டும் ஆமகன் ஆயினால் என்ன கெட்டுப் போயிற்று. இழிந்த நரிமகனும்கூட ஒருவன் உங்கள் குலத்துள்ளானல்லனோ அவனை மிகவும் புகழ்வீரே! உங்கள் மறை நூலில் ஆமகன் இழிகுலத்தான் என்று கூறியிருப்பதாகவும் தெரிந்திலது என்று ஈண்டு நாத்தொலைவில்லாத அந்நல்லோன் திறம்படச் சொல்லம்பு தொடுத்தல் கண்டு மகிழ்க. நீங்கள் கற்ற நூலும் மெய்ந்நூலன்றென்றும் நீவிரும் மக்கள் அல்லீர் என்றும் ஒருசேரப் பழிப்பான், நான்மறை மாக்õள் என்றும் நன்னூல் என்றும் திறம்பட எடுத்தோதினான்; இவை இகழ்ச்சி தம்மையிகழ் வாரைத் தாமவரின் முன்னிகழ்க! எனவரும் (நாவடி) சான்றோர் வாக்கிற்கும்,
பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளும்
திறன்றெரிந்து கூறப் படும் (186)
என நிகழும் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் திருவாக்கிற்கும் இதனினும் காட்டில் சிறந்த எடுத்துக்காட்டு வேறெந்த இலக்கியத்தினும் காண்டலரிது.
இருடி கணம்-துறவோர் கூட்டம்
ஓரந்தணன் ஆபுத்திரன் வரலாறு கூறி இகழ்தல்
70-81: ஆங்கவர்..............இழந்தேன்
(இதன் பொருள்) ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன்-அவ்வாறு ஆபுத்திரன் தன் சொல்லாலே சுடப்பட்ட பார்ப்பனர்களுள் வைத்து ஒரு பார்ப்பனன்; உரைக்கும்- ஏனைய பார்ப்பனர்க்குக் கூறுவான்; ஈங்கு இவன் பிறப்பு யான் அறிகுவன் என-ஈங்குள்ளாருள் வைத்து இவ்வாபுத்திரன் பிறப்பினை யான் நன்கு அறிகுவேன்! நமரங்காள் கேண்மின் என்று தோற்றுவாய் செய்து கொண்டு சொல்லுபவன்; நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் வடமொழியாட்டி- யான் பண்டொருநாள், வழி நடை வருத்தத்தாலே இளைத்த மெய்யினையுடையவளும் பார்ப்பனியும்; மறைமுறை எய்தி குமரி பாதம் கொள்கையின் வணங்கி-தீ வினைக்கு வேதத்திலே கூறப்பட்ட கழுவாய் செய்யும் விதியின்படி சென்று குமரியில் நீராடி ஆண்டெழுந்தருளிய குமரித் தெய்வத்தின் திருவடிகளை வணங்க வேண்டும் என்னும் தன் கோட்பாட்டிற்கியைய அங்ஙனமே நீராடி வணங்கி மீண்டு வருபவளும்; தமரின் தீர்த்த சாலி என்போள் தனது சுற்றத்தார் தொடர்பற்றுத் தமியள் ஆனவளும் சாலி என்னும் பெயருடையவளுமாகிய ஒருத்தியை வழியிலே கண்டு; நின் ஊர் யாது ஈங்கு வரவு என் என நின்னுடைய ஊர் யாது தமியையாய் இங்கே வருதற்குக் காரணம் யாது? என்று யான் வினவ; மாமறையாட்டி- சிறந்த மறையோர் குலத்தவளாகிய அச் சாலிதானும்; வருதிறம் உரைக்கும்-தான் அவ்வாறு வருதற்கியன்ற காரணத்தைக் கூறுவாள்; வாரணாசி-ஐய! என்னூர் வாரணாசியாம்; யான் ஓர் மாமறை முதல்வன் ஆரண உவாத்தி அரும்பெறல் மனைவி-அளியேன் அவ்வூரில் வாழும் சிறந்த மறைகளை ஓதிச் சிறந்தவனும் மறை ஓதுவிக்கும் உவாத்திமைத் தொழிலையுடையவனும் ஆகிய ஒரு பார்ப்பனனுக்கு அரும்பேறாக வாய்த்த மனைவியாகி வாழ்ந்திருந்தேன்; பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகிக் காப்புக் கடைகழிந்து-பார்ப்பனர்க்குப் பொருந்தாத தன்மையினையுடைய தீயொழுக்கந் தலைப்பட்டு ஒழுகி மகளிர்க்கு இன்றியமையாத கற்புக்காவலன் எல்லையைக் கடந்தமை காரணமாக; கணவனை இழந்தேன்-கணவனோடு வாழும் வாழ்க்கையை இழந்தொழிந்தேன்;(என்றாள்) என்க.
(விளக்கம்) நடவை- நடைவழி. நல்கூர் மேனி-இளைத்த உடம்பு. வடமொழியாட்டி-பார்ப்பனி. மறைமுறை- வேதத்தில் தீவினைக்குக் கழுவாயாகக் கூறப்பட்ட விதி. குமரி-ஒரு தெய்வம். கொள்கை-குமரி நீராடித் தீவினையைத் தீர்க்கவேண்டும் என்னும் கோட்பாடு. தமர்-சுற்றத்தார். சாலி- பெயர். மறையாட்டி- பார்ப்பனி. அரும் பெறல் மனைவியாகப் பாராட்டப்பட்டிருந்தேன் எனக் கழிந்ததற் கிரங்கிக் கூறினள் என்பது கருத்து. காப்பு- கற்புக்காப்பு. எனவே கற்பொழுக்கத்தில் வழுவி என்றாளாயிற்று. கணவனாற் கைவிடப்பட்டமையால் கணவனை இழந்தேன் என்றவாறு.
இதுவுமது
82-91: எறிபயம்.................இவனென
(இதன் பொருள்) எறிபயம் உடைமையின்-ஆறலை களவர் அலைப்பர் என்னும் அச்சமிருத்தலாலே; இரியல் மாக்களோடு- என்போல நிலைகெட்டு ஆறு செல் ஏதின் மாக்களொடு கூடி; தென் கண் குமரி ஆடிய வருவேன்-தமிழகத்துத் தென் கோடியிலுள்ள குமரித்துறையில் நீராடற் பொருட்டு வரும் யான்; பொன் தேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க் காவதம் கடந்து- பொன்னாலியன்ற தேரையுடைய பாண்டியனுடைய கொற்கை என்னும் பெரிய பட்டினத்தைக் கடந்து ஒரு காததூரம் வந்துழிக் கருவுயிர்த்து; கோவலர் இருக்கையின்-அவ்விடத்திருந்த ஆயர்சேரியின் மருங்கே; தோன்றாத்துடவையின்- மறைவிடமா யிருந்ததொரு தோட்டத்தின்கண்; ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி இட்டனன் போந்தேன்-ஐயனே! யானீன்ற மகவிற்கு ஒரு சிறிதும் இரக்கங் கொள்ளாமல் போகட்டு வந்தேன்; தீவினையேற்குச் செல்கதி உண்டோ-இத்தகைய மாநெருந் தீவினையைத் துணிந்து செய்த எனக்கு இனி எரி நிரையமேயன்றிப் பிறிதொரு புகலிடமும் உளதாகுமோ? இதுதான் என் வரலாறு என்று சொல்லி; அல்லல் உற்று அழுத அச் சாலி ஈங்கு இவன்- பெரிதும் துன்பமுற்று அழுத அவள் மகன் ஈன்று போகட்டுப் போன மகனே இங்கு ஆவினைக் களவு கொண்டு வந்த இவன்; சொல்லுதல் தேற்றேன்-இவ் வரலாற்றை இதுகானும் யான் பிறர்க்குச் சொல்லுதலைத் துணிந்திலேன்; எற்றாலெனின்; சொல் பயன் இன்மையின்-அங்ஙனம் சொல்லின் அச் சொல்லால் இவனுக்குப் பழி பிறத்தலன்றிப் பிறிதொரு பயனும் இன்மையாலே; இவன் புலை மகன்-இவன்றான் புன்றொழிலாற் பிறந்த கீழ் மகன் ஆதலில்; புல்லல் ஓம்பன்மின்-இவளை யாரும் தீண்டுதலும் பேணுதலும் செய்யாதொழிமின்; என-என்று அப்பார்ப்பனன் கூறாநிற்ப என்க.
(விளக்கம்) எறி பயம்-ஆறலைகள்வர் எறிவர் தோன்றும் அச்சம் எறிதல்-துன்புறுத்துதற் கியன்ற புடைத்தல் வெட்டுதல் கொல்லுதல் முதலியவற்றிற்குப் பொதுப் பெயர். இவற்றில் ஏதேனும் செய்வர் என்பது பற்றிப் பொதுச் சொல்லாற் கூறினன். இரியன் மாக்கள் என்றது நிலைகெட்டுத் திரியும் வறியோரை. இவர், தீர்த்த மாடும் துறைகட்கும் திருவிழா நிகழும் திருப்பதிகட்கும் திரள்திரளாகச் செல்லும் வழக்கமுடையராதலின் இரியன் மாக்களொடு வருவேன் என்றாள் என்க.
ஆடிய-ஆடற்பொருட்டு. செழியன்- பாண்டியன். கொற்கை-பாண்டியர் தலைநகரமாகிய ஒரு பட்டினம். கோவலர் இருக்கை-ஆய்ச்சேரி.
அளியன் இவள், ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பாடில்லை: ஒரோஒவழி அவர் காணின் இம் மகவு உய்தலும் கூடும் என்று கருதி அவள் தாய்மையுள்ளம் கோவலர் இருக்கையில் இட்டுப்போகத் துணிந்தது போலும். செல்கதி-புகலிடம். தீவினையேற்கு என்றது, இத்தகைய மாபெருந் தீவினையைத் துணிந்து செய்த எனக்கு என்பதுபட நின்றது. அவள்-அச் சாலி என்பவள். சொல்லுதல் தேற்றேன்- சொற்பயம் இன்மையின் என இப் பார்ப்பனன் கூறும் மொழிகள்,
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் (200)
எனும் அறத்தின் வழிப்பட்டதே போன்று இவ்வருமைத் திருக்குறளையும் நினைவுறுத்துகன்ற தாயினும் அவ்வறத்தைக் கடைப்பிடியாகக் கொள்ளாமல் ஈண்டுக் கூறியதே அவன் அறவோன் அன்மையை எடுத்துக் காட்டுவதாகவும் அமைதலறிக.
புல்லல்-புல்லாதே கொண்மின். ஒம்பன்மின்-பாதுகாவா தெழிமின்; இங்ஙனமன்றி, புல்லலோம்பன்மின் என்பதனை ஒரு சொன்னீர்மைத்தாக்கி, தீண்டலைச் செய்யாதொழிக என்பாருமுளர்.
ஆபுத்திரன் நகைத்து மீண்டும் அசதியாடுதல்
92-99: ஆபுத்திரன்.....நிற்ப
(இதன் பொருள்) ஆபுத்திரன் பின்பு அமர்நகை செய்து-அது கேட்ட ஆபுத்திரன் மீண்டும் கேட்போர் விரும்பும்படி இனிதாக நகைத்து மாமறை மாக்காள் வருங்குலம் கேண்மோ- பெரிய மறைநூல்களையுடைய மாக்களே நீயிர் பிறந்துவந்த நுங்கள் பார்ப்பனக் குலத்தின் வரலாறு அறியீர் போலும் ஆயிற் கூறுவல் கேளுங்கோள்!; முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய- பழைய வேத முதல்வனாகிய பிரமன்பால் உங்கள் குலத்திற்கு முதன் முதலாகப் பிறந்த; அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் -அரிய மறைகட்கு முதல்வராகிய பார்ப்பனராகிய வதிட்டனும் அகத்தியனும்; கடவுள் கணிகை காதல் அம் சிறுவர்- நாடகக் கணிகையாகிய திலோத்தமையின் வயிற்றிற் பிறந்து அவரால் அன்பு செய்யப்பட்ட தேவ கணிகையின் மக்கள் என்று நுங்கள் நூல் கூறுகின்றதே; புரிநூல் மார்பீர் பொய் உரை ஆமோ-முப்புரி நூலையுடைய பார்ப்பனரே அந் நூலுரை பொய்யுரையாகி விடுமோ! சாலிக்குத் தவறு உண்டோ- சாலிக்கு மட்டும் அவ்வொழுக்கம் தவறாகிவிடுமோ; என உரைத்து நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப-என்று சொல்லி நான்கு வேதங்களையும் ஓதும் மாக்களாகிய அப் பார்ப்பனரை எள்ளி நகைத்து நிற்ப; என்க.
(விளக்கம்) அமர்நகை- கண்டோர் விரும்பத் தகுந்த இனிய நகை முறுவலித்து நகுதலும் அளவே நகுதலும் பெருகச் சிரித்தலும் என நகை மூவகைப்படுமாதலின் இவற்றுள் அளவே நகுதலை, அமர்நகை என்றார் எனினுமாம். ஈண்டு அமர்நகை செய்து எனவும் நகுவனன் நிற்ப எனவும் ஈரிடத்தே கூறப்பட்ட நகை இரண்டனுள் முன்னது எள்ளல் பொருளாகப் பிறந்ததாம். அதுதானும் தான் பிறரை எள்ளி நகுதலும் பிறரால் எள்ளிப்பட்டவழித் தான் நகுதலும் என இரண்டு வகைப்படும் ஆகலின் இது பிறரால் எள்ளப்பட்ட வழித் தான் நக்கபடியாம்! இனி, பின்னது பிறர் பேதைமை பொருளாகப் பிறந்தகையாம். என்னை? அப் பார்ப்பனன் கூறும் பழி தனக்கு முண்மையறியாமை பற்றிப் பிறந்தலான் என்க. இவற்றை
எள்ளல் இளமை பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப
எனவரும் தொல்காப்பியத்தானும் அதற்குப் பேராசிரியர் வகுத்த உரை விளக்கத்தானும் உணர்க( மெய்ப்-4)
மாமறை மாக்காள் என்றது, அவர் தம் அறிவின்மை கருதியதாம் கடவுட்கணிகை- தேவகணிகை. அருமறைமுதல்வ ரந்தணர் என்றது இகழ்ச்சி.
புரிநூல் மார்பீர் என்றான், மெய்ந்நூல் கற்றிலீர் என்றிடித்தற்கு. ஆமோ என்புழி வினா ஆகாது என அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்தி நின்றது.
இனி, பார்ப்பனக்குல முதல்வராகிய வதிட்டனும் அகத்தியனும் கடவுட் கணிகைக் காதலஞ் சிறுவர் ஆதலை, நீலகேசியில் வேதவாதச் சருக்கம் 3 ஆம் செய்யுட்குச் சமய திவாகரர் புங்கன் மரபில் முதன்மையுடையவனாகிய வதிட்டனே அகத்தியனே...........என்றிவருள் வதிட்டனும் அகத்தியனும் பிரமன் திலோத்தமை என்னும் தேவகணிகையைக் கண்டகாலத்துக் கலயத்துப் பிறந்தனர்............இங்ஙனமே நுங்கள் வேத வழிப்பட்ட நூல்கள் கூறிக் காண்டுமன்றே என வோதியுள்ளமையானும் உணர்க.
ஆபுத்திரன் மதுரையை எய்துதல்
100-108: ஓதல்...............வதிந்து
(இதன் பொருள்) ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே தாதை பூதியும் தன் மனை கடிதர-ஆபுத்திரன் பிறப்பு முறை கேட்டமை யானும் அவன் வேதத்தையும் வேள்வியையும் வேதியரையும் ஒரு சேரப் பழித்து நகுதலாலும் இவன் வேதம் ஓது தலையுடைய பார்ப்பனருக்குப் பொருந்தியவன் அல்லன் என்று கருதி வளர்ப்புத் தந்தையாகிய இளம்பூதியும் தன் இல்லத்திற்கு வாராதபடி விலக்கி விட்டமையாலே; அந்தணர் உறைதரும் கிராமம் எங்கணும்-பார்ப்பனர் வாழும் ஊர்களிலே சென்று பிச்சை ஏற்பானாக, அங்கே வாழுகின்ற அந்தணர் தாமும்; ஆகவர் கள்வன் என்று கடிஞையிற் கல் இட-இவன் வேள்விப் பசுவைக் களவாடிய கள்வன் என்று இகழ்ந்து அவன் பிச்சைக் கலத்திலே உணவிடாமே கற்களை இடாநிற்றலாலே; சென்று மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் தக்கண மதுரை தான் எய்தி- அவ்வூர்களின்றும் போய்த் தமது தாளாண்மையாலே ஈட்டிய மிக்க செல்வத்தாலே வருந்தோம்புதல் முதலிய அறங்களைச் செய்து புகழாலே விளங்கிய கொழுங்குடிச் செல்வர் மிக்கு வாழா நின்ற தென்னாட்டின் தலைநகரமாகிய மதுரையை அடைந்து; சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்து அந்தின் முன்றில்- மாந்தருடைய மனத்தின்கண் ஞான விளக்காக நின்று திகழும் தெய்வமாகிய கலைமகள் எழுந்தருளியிருத்தலாலே கலை நியமம் என்னும் அழகிய திருக்கோயிலின் வாயிலாகிய அவ்விடத்தேயுள்ள; அம்பலப் பீடிகைத் தங்கினன் வதிந்து-ஊரம்பலமாகிய மேடையிலே தங்கியவன் அவ்விடத்தையே உறைவிடமாகக் கொண்டுறைந்து என்க.
(விளக்கம்) ஓதல்-ஓதற்றொழிலையுடைய. ஒரு பார்ப்பான் ஆபுத்திரன் பிறப்பு வரலாறு கூறி இவன் புலைச்சிறுமகன் இவனைப் புல்லல்; ஓம்பன்மின்! என்று கூறினமையானும், அவனே பார்ப்பனரை இகழ்ந்தமையானும் இவன் நம்மனோர்க்கு ஒவ்வான் என்று தாதையாகிய இளம்பூதி இனி எம்மில்லம் புகுதாதே கொள்! என்று விலக்கினன் என்றவாறு.
அந்தணனாலேயே வளர்க்கப்பட்டமையின் கிராமங்களிலேயும் அந்தணர் சேரியிலே பிச்சை ஏற்கலானான்மன்! மற்று இவன் ஏனையோ ரில்லத்தே பிச்சை ஏற்றிருப்பின் இக்கொடுமை செய்யார் என்று இரங்குவார் நூலாசிரியர் அந்தணர் உறைதரும் கிராமம் எங்கணும்கடிஞையிற் கல்லிட என்றார். அவர் அங்ஙனம் கொடுமை செய்தற்குரிய காரணத்தையும் தெரித்தோதுவார் ஆகவர் கள்வன் என்று கல்லிட என்றார். ஈண்டு ஆ என்றது வேள்விக்குப் பலியிடுதற்குரிய பசு என்பதுபட நின்றது, என்னை? பிறர் ஆவைக் கவர்ந்திருப்பின் அவர் இது செய்யாராகலின். கடிஞை- பிச்சை ஏற்கும் ஓடு. எத்தகைய வன்கண்ணருஞ் செய்யத் துணியாத கொடுஞ் செயல் இது. இதனை,
நினைத்த திதுவென்றந் நீர்மையை நீக்கி
மனத்த தறிந்தீவார் மாண்டார்-புனத்த
குடிஞை யிரட்டுங் குளிர்வரை நாட
கடிஞையிற் கல்லிடுவா ரில்
எனவரும் பழமொழி வெண்பாவானும் அறிக (246)
செல்வத்து விளங்குதலாவது ஈதலாற் பெரும்புகழ் எய்துதல் வடமதுரையும் உளதாகலின் தக்கண மதுரை என்று தெரித்தோதினர் தக்கணம்- தென்றிசை. வடக்கினும் ஒரு மதுரையுண்மையை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தில்(16:46-7) ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ என வரும் அடிகட்கு வரைத்த உரையின்கண் ஐயையும் மாதரியும் இந்த மதுரையில் இவ்வாயர்பாடியில் யாம் பெற்ற இந் நல்லமுதம் உண்கின்ற இந்த நம்பி அந்த மதுரையில் ஆயர் பாடியில் அசோதை பெற்ற அந்த நல்லமுதம் உண்ணும்.........கண்ணனோ தான் என வரைதலானும் உணர்க. சிந்தா விளக்கு-கலைமகள். கலைநியமம்- கலைத் தொழிலாற் சிறப்புற்ற கோவிலுமாம். அந்தில்-அவ்விடத்தே: அசைச் சொல்லுமாம். தங்கினவன் அதனையே உறைவிடமாகக் கொண்டு வதிந்து என்க.
ஆபுத்திரன் அறச்செயலும் அமைதி நிலையும்
108-115: அத் தக்கணப் பேரூர்-அந்தத் தென்றமிழ் நாட்டுத் தலைநகரமாகிய மாமதுரையின்கண் வதிகின்ற அவ் வாபுத்தின்றானும் மடிந்திராமல்; ஐயக் கடிஞை கையின் ஏந்தி- ஒரு பிச்சைப் பாத்திரத்தைக் கையின்கண் ஏந்தி; மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி-குற்றமற்ற அறச் சிறப்பினையுடைய கொழுங் குடிச் செல்வருடைய மனைகள் தோறும் ஊக்கத்துடனே சென்று சென்று மிகுதியாக உணவினைப் பிச்சை ஏற்று வந்து; காணர் கேளார் கால்முடப்பட்டோர் பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர் யாவரும் வருக என்று இசைத்து அம்பலத்துச் சென்று ஆங்கு இவன் வருகைக்காகக் காத்திருக்கின்ற குருடரும் செவிடரும் கால் முடம்பட்டோரும் தம்மைப் பாதுகாப்பவர் இல்லாத வலியற்ற வறியோரும்; பல்வேறு பிணிகளும் பற்றி நலியப் பெரிதும் வருந்துவோரும் ஆகிய இன்னோரன்ன மக்கட் கூட்டத்தை அணுகி வருக! வருக! என்று இனிதாக அழைத்து; உடன் ஊட்டி-அனைவரையும் ஒருங்கே உணவூட்டி; உண்டு ஒழி மிச்சில் உண்டு-அவர் உண்டபின் எஞ்சிய உணவினைத் தான் உண்டு; காலவன் ஓடு தலை மடுத்துக் கண்படை கொள்ளும்-ஆருயிர் காவலனாகிய அவ்வருளறச் செல்வன் இரவு வந்துறுதலும் தன் பிச்சைக் கலமாகிய திருவோட்டினையே கவிழ்த்துத் தலையணையாகக் கொண்டு பேரமைதியோடு துயிலுவான் என்றார் என்பதாம்.
(விளக்கம்) இவ் வாபுத்திரன் பவுத்தத் துறவோர்க் கெல்லாம் தலைவரம்பாகக் காட்டப்பட்டவன். இதனைப் போன்று சாந்துணையும் வாழுபவர் வாழ்வாங்கு வாழ்பவர் என்பது கூறாமலே அமைவதாம்.
இனி இவ்வாபுத்திரன்றானே ஏற்போனாகவிருந்தும் ஓவாதே ஒல்லும் வகையால் வீழ்நாள் படாமை நன்றாற்றி வாழுந் திறமுணர்க. மற்று இவ்வாறு வாழ்ந்த இவ்வாபுத்திரன்றானும் மீண்டும் பிறப்புற்றான் என்பராலோ எனின் அதுதானும் புத்தர் அறத்திற்குப் பெரிதும் பொருந்துவதேயாம் என்னை? புத்தரே தமக்குக் கைவந்த வீட்டினையும் வேண்டாது கைவிட்டுப் பிறர்க்கமுயலும் பொருட்டுப் பல்வேறு பிறப்புகளிலே பிறந்துழன்றார் என்பராதலால் இதனை வீடும் வேண்டா விறல் என்னும் பெருநிலை என்று கொள்க.
ஈண்டு அறவணவடிகளார் ஆபுத்திரன் திறம் அறிவித்தலும் குறிப்பாக நீயும் அவனேபோல வாழுதி என்று அறஞ்செவியுறுத்த படியாம் என்க. ஓடுதலைமடுத்துக் கண்படை கொள்ளுதலிலே அவனது வீடுபேறும் உளது என்றும் உணர்தல் வேண்டும். பிச்சை ஏற்பவனைக் காவலன் என்று கட்டுரைத்த ஆசிரியர் திறம் சாலவும் வியக்கற் பாற்று.
இனி, இக் காதையை -ஆயிழை கேளாய் சாலி கழிந்து அஞ்சி வருவோள் குழவியை இட்டுநீங்க ஆவந்து அணைந்து ஓம்ப பூதி எடுத்துப் பெயர்ந்து நவிற்ற புக்கோன் ஆத்துயர் கண்டு உற்றுஉகுத்துக் கரந்து ஒதுக்கி கொண்டு கடவாநின்றுழி அந்தணர் அகப்படுத்திக் கேட்ப நல்லா, குத்திப் புய்த்துறுத்து ஓட, ஆபுத்திரன் உரைப்போன் உரைமோ என அந்தணரிகழ்தலும் ஆபுத்திரன் உண்டோ என அந்தணன் உரைக்கும் புல்லல் ஓம்பன்மின் என ஆபுத்திரன் நகுவனன் நிற்ப பூதி கடிதர கிராமம் எங்கணும் கல்லிட காவலன் மதுரை சென்று ஊட்டி உண்டு கண்படைகொள்ளும் என இயைத்திடுக.
ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை முற்றிற்று.