பதிவு செய்த நாள்
23
ஜன
2012
05:01
(பதினான்காவது மணிமேகலைக்கு அறவணர் அமுத சுரபியென்னும் பாத்திரஞ் சிந்தாதேவி ஆபுத்திரற்குக கொடுத்தவண்ணம் கூறிய பாட்டு)
அஃதாவது: அறவணவடிகள் மணிமேகலை கையில் ஏந்திய அமுதசுரபி என்னும் அரும்பெறற் பாத்திரம் ஆபுத்திரனுக்குக் கிடைத்த வரலாற்றைக் கூறுமாற்றால் எஞ்சிய ஆபுத்திரன் வரலாற்றோடு அம் மாபெரும் பாத்திரத்தின் தெய்வத்தன்மையையும் அறிவித்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.
இதன்கண்-ஓடுதலை மடுத்துக் கண்படை கொண்டிருந்த அவ் வாபுத்திரனிடம் ஒரு மாரி நடுநாளிலே வழி நடந்திளைத்து வந்தோர் வந்து வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்று கூறக் கேட்ட பொழுது அவ் வள்ளற் பெருமகன் ஆற்றுவது காணானாகி மாபெருந்துயருற்று மயங்குதலும் அப்பொழுது அவன் நிலைக்கிரங்கிய அருண்மிகு கலைத்தெய்வமாகிய சிந்தாதேவி அவனெதிர் தோன்றி ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய் நாடுவறங் கூரினும் இவ்வோடு வறங் கூராது என்று சொல்லி அமுதசுரபி என்னும் அரும்பெறற் பாத்திரத்தை அவன் கையிற் கொடுத்து மறைதலும் அப்பொழுது ஆபுத்திரன் அத்தெய்வத்தை ஏத்தும் அழகும்; அந்நாள் தொடங்கி அமுதசுரபியைக் கொண்டு மன்னுயிர் ஓம்பும் திறமும், இவன் செய்த அறமிகுதியாலே இந்திரன் பாண்டு கம்பளம் துளங்குதலும், இந்திரன் ஒரு முதுபார்ப்பனக் கோலத்தோடு உன் தானப்பயன் பெரிது; அதனைப் பெறுக!; என அது கேட்ட ஆபுத்திரன் இந்திரன் எள்ளி வெள்ளை மகன்போல் விலாவிறச் சிரித்து, தன் அறச் செயலாலே தான் பெறுகின்ற இன்பத்திற் கீடாக உன் வானுலகத்தே யாதுனது என வினாதலும், இகழப்பட்ட இந்திரன் ஆபுத்திரன் அவ்வறஞ் செய்தற்கு இடனில்லாதபடி உலகத்தை வளப்படுத்துதலும் வளம்பெற்றுழி இவ்வுலகம் எய்திய இழிதகவும் ஆபுத்திரன் அறஞ் செய்தற் கிடனின்றி அலமருதலும் சாவக நாட்டிலே வற்கடமெய்தி மன்னுயிர் மடியும் செய்தி கேட்டு அந் நாட்டிற்குச் செல்ல மரக்கல மேறி விரைதலும், மரக்கலம் மணிபல்லவத்தின் மருங்கே நிறுத்தப்பட்டுழி இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் ஏறுமுன் மரக்கலம் போய்விடுதலும், மணிபல்லவத்திலே தமியனாகிய ஆபுத்திரன் தான்மட்டும் உண்டுயிர் வாழ்தலை வெறுத்து அமுதசுரபி அறவோர் கைப் படுவதாக என வேண்டி நீர் நிலையில் விட்டுப் பின் உண்ணா நோன்போடுயிர் துறத்தலும் பிறவும் இனிதாகக் கூறப்படுகின்றன.
ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகை
பூங் கொடி நல்லாய் புகுந்தது கேளாய்
மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ
துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும்
ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த
கேள் இது மாதோ கெடுக நின் தீது என
யாவரும் ஏத்தும் இருங் கலை நியமத்துத் 14-010
தேவி சிந்தாவிளக்குத் தோன்றி
ஏடா! அழியல் எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது
வாங்குநர் கைஅகம் வருந்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது என்றே
தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும்
சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!
வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர் களைவாய்! எனத் 14-020
தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி
ஆங்கு அவர் பசி தீர்த்து அந் நாள் தொட்டு
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின்
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும்
தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ
பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப
ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன்
பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி 14-030
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும்
ஆர் உயிர் முதல்வன் தன் முன் தோன்றி
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன்
ஈண்டுச் செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் 14-040
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர் நல் நாட்டுக்கு
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்
திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை
உண்டிகொல்லோ உடுப்பனகொல்லோ
பெண்டிர்கொல்லோ பேணுநர்கொல்லோ
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன்? என்றலும்
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு
இரப்போர்க் காணாது ஏமாந்திருப்ப 14-050
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும்
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க! என
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்கண்ணோன்
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும்
பன்னீராண்டு பாண்டி நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது
வசித் தொழில் உதவ மா நிலம் கொழுப்பப்
பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின்
ஆர் உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி 14-060
விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும்
நடவை மாக்களும் நகையொடு வைகி
வட்டும் சூதும் வம்பக் கோட்டியும்
முட்டா வாழ்க்கை முறைமையது ஆக
ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி
ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்
யார் இவன்? என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை
இருந்தாய் நீயோ! என்பார் இன்மையின்
திருவின் செல்வம் பெருங் கடல் கொள்ள 14-070
ஒரு தனி வரூஉம் பெருமகன் போல
தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்
ஊன் உயிர் மடிந்தது உரவோய்! என்றலும்
அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி
அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து என
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி
கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின் 14-080
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்துத்
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன்
இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும்
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்
மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம்
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன்
சுமந்து என் பாத்திரம்? என்றனன் தொழுது 14-090
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின்
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன்
அருள் அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர்
உளர்எனில் அவர் கைப் புகுவாய் என்று ஆங்கு
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி
அந் நாள் ஆங்கு அவன் தன்பால் சென்றேன்
என் உற்றனையோ? என்று யான் கேட்பத்
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்
குண திசைத் தோன்றி கார் இருள் சீத்துக்
குட திசைச் சென்ற ஞாயிறு போல 14-100
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு
சாவகம் ஆளும் தலைத் தாள் வேந்தன்
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்தான் என் 14-104
உரை
ஆபுத்திரன் பசியால் நலிந்து நள்ளிரவிலே வந்து தன்னை இரந்தவர்க்கு ஆற்றுவது காணாமல் ஆரஞர் எய்துதல்
1-8: ஆங்கவற்கு.................எய்த
(இதன் பொருள்) பூங்கொடி நல்லாய்- பூங்கொடி போன்று நற்பண்புகள் மலர்ந்து திகழுகின்ற நன்மையையுடைய மணிமேகலாய்!; ஆங்கு அவற்கு ஒருநாள் அம்பலப் பீடிகை புகுந்தது கேளாய்- அவ்வாறிருந்த அந்த ஆபுத்திரனுக்கு ஒருநாள் அவனிருந்த அவ்வம்பலப்பீடிகையிடத்தே நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியைக் கூறுவேன் கேட்பாயாக!; மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து-கார்ப்பருவத்தே மழை பெய்து கொண்டிருந்த ஒரு நாளினது இரவின் இடையாமத்தே செறிந்த இருள் பொருந்தியிருக்கும் பொழுதில்; ஆர் இடை உழந்தோர் அருவிழியிலே நடந்து வருந்தியவர் சிலர்; அம்பலம் மரீஇ ஆபுத்திரன் ஓடு தலைமடுத் துறங்கிக்கிடந்த அம்பலத்தை அடைந்து; துயில்வோன்றன்னைத் தொழுதனர் ஏத்தி-உறங்குபவனை எழுப்பிக் கைகூப்பித் தொழுது புகழ்ந்து; வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும்-ஐயனே இப்பொழுது எம்மை எமது வயிறே சுடுதற்குக் காரணமான பெரிய பசி கொல்லுகின்றது ஆற்றுவே மல்லேம் என் செய்தும்! என்று கூறுதலும்; ஏற்று ஊண் அல்லது வேற்று ஊண் இல்லோன் பகலிலே இரந்து உண்ணும் உணவையுடையனாதலன்றி இரவிலே வேறு உணவு சிறிதும் தன்பாலில்லாத அளியன் அவ்வாபுத்திரன் என் செய்வான்!; ஆற்றுவது காணான் ஆரஞர் எய்த அவர் தம் வயிற்றுப் பசித் தீயைத் தணித்தற்குரிய வழியொன்றும் காணமாட்டாமையால் பொறுத்தற்கரிய துன்பத்தை யடையா நிற்ப என்க.
(விளக்கம்) ஆங்கு என்றது முன்னர் ஓடு தலைமடுத்துக் கண்படை கொள்ளும் என்றதனைச் சுட்டி அவ்வாறிருக்கும் அவனை என்பதுபட நின்றது. கார்ப்பருவத்து ஒருநாள் என்னாது மழைபெய்து கொண்டிருந்த கார்ப்பருவத்து ஒருநாள் என்பது தோன்ற மாரி நடுநாள் என்றார். மரீஇ-மருவி. துயில்வோனை எழுப்பி என்றொரு சொல் பெய்க. மலைக்கும் கொல்லும்; இருள்மயக்கத்து-இருள் பொருந்தியபொழுதில், ஆற்றுவது அவர் பசியைத் தணிக்கும் வழி. அஞர்-துன்பம். அருளுடைய நெஞ்சத்தனாகலின் தானே அருந்துயர் எய்தினன். இங்கு,
இன்னா திரக்கப் படுத லிரந்தவர்
இன்முகப் காணு மளவு (குறள்-224)
எனவும்,
சாதலி னின்னாத தில்லை யனிததூஉம்
ஈத லியையாக் கடை (குறள்-230)
எனவும், வருந் திருக்குறள்கள் நினைக்கத்தகும்
ஆபுத்திரன் முன் சிந்தாதேவி என்னும் தெய்வம் தோன்றுதல்
9-16: கேளிது...........கொடுத்தலும்
(இதன் பொருள்) ஏடா இது கேள்!-ஏடா ஆபுத்திரனே! யான் கூறுமிதனைக் கேள்! ஆழியல்-வருந்தாதே கொள்!; நின் தீது கெடுக-நின் துயரம் நினக்கினி இல்லையாகுக!; எழுந்து இது கொள்ளாய் என-எழுந்து இதனை ஏற்றுக்கொள்வாய்! என்னும் அருளுரையோடு அவன்கண் முன்னே!; யாவரும் ஏத்தும் இருங்கலை நியமித்துச் சிந்தா விளக்கு தேவி தோன்றி-அமரரும் முனிவரும் மாந்தரும் ஆகிய எல்லாரும் எப்பொழுதும் வாழ்த்தி வணங்கும் பெருமையுடைய பெரிய கலை நியமம் என்னும் திருக்கோயிலிலே உறைகின்ற கலைமகளாகிய சிந்தா விளக்கு என்னும் தெய்வம் அவ் வள்ளலின் முன்னர் அருளுருவங் கொண்டு எருந்தருளி வந்து; நாடு வறங் கூரினும் இவ்வோடு வறங் கூராது- நாடுகளில் வற்கடமிகனும் மிகும் இவ்வோடு எஞ்ஞான்றும் வற்கடமுறாமல்; வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது தான் தொலைவு இல்லாத் தகைமையது-ஏற்போர் கைகளைத் தான் வழங்கும் உணவின் பொறையாலே துன்புறுத்துதல் அல்லாமல் தன்னுள்ளே ஒரு பொழுதும் உணவு அறுதல் இல்லாததொரு தெய்வத்தன்மையுடையது காண்; என்று-என்று சொல்லி; தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும்-தன் திருக்கையிலிருந்த ஒரு பாத்திரத்தை அவ்வாபுத்திரன் கையிற் கொடுத்து மறைந்தருளுதலும் என்க.
(வளக்கம்) மாதோ: அசைச்சொல். கலைத்தெய்வமாகலின் அவன் துயர் தான் பொறாமல் செவ்வியறிந்து தானே எளிவந்து ஈண்டு ஆபுத்திரன் கையில் பாத்திரமீந்து போகின்றது. இச் செவ்வியும் இத் தெய்வத்தின் திருவருளும் கற்போர் உள்ளத்தைக் கனிந்துருகச் செய்தலுணர்க.
கலைத்தெய்வத்தைத் தெய்வமும் முனிவரும் சான்றோரும் ஆகிய யாவரும் தொழுவர் ஆதலின் யாவரும் ஏத்தும் என்றார். சிந்தா விளக்கு-உள்ளத்திற் சுடர்விடும் அறிவு; அத் தெய்வம் அறிவிற்குரிய தெய்வமாகலின் அழகிய இப்பெயர் பெறுவதாயிற்று. அறிவை வளர்க்கும் நகரமாதலின் அங்குக் கலைமகட்குத் திருக்கோயி லெடுக்கப்பட்டிருந்தமை நம்மனோர்க்கும் உவகையளிப்பதாகவே யுளது.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த சால்புடைய அந் நகரத்தின் மாண்பு இதனானும் சிறப்புறுதலறிக.
ஆபுத்திரன் கலைத்தெய்வத்தை உளங்கனிந்தேத்துதல்
17-21: சிந்தா..................வணங்கி
(இதன் பொருள்) சிந்தா தேவி செழுங்கலை நியமித்து நந்தா விளக்கே நரமிசைப் பாவாய்-அம் மாபெரும் பாத்திரத்தைப் பெற்ற அவ்வாபுத்திரன் அளப்பரும் உவகை எய்தியவனாய் அருள் மிகும் அத் தெய்வத்தை வாழ்த்துபவன், உள்ளக் கோயிலிலே எழுந்தருளி உலகம் புரக்கும் தெய்வத்திருவே! சான்றோர் கைகுவித்து வணங்கி யுய்தற்பொருட்டுக் கலை வளத்தாலே கவினுற்றுத் திகழுகின்ற இத்திருக்கோயிற் படிவத்தேயும் எழுந்தருளிய அவியாத பேரொளிப் பிழம்பே! சான்றோரின் தூய செந்நாவின்கண் எழுந்தருளி உலகிற்கு உறுதிப்பொருளை உணர்த்தும் தெய்வப் பாவையோ!; வானோர் தலைவி மண்ணோர் முதல்வி ஏனோர் உற்ற இடர் களைவாய் என-அமரர் தலைவியே நிலவுலகத்து வாழ்கின்ற மாந்தர்வாழ்விற்கும் முதல்வியே அறிவின் தெய்வமாகிய நீயே அருண் மிகுதியாலே உலகின்கண் ஆற்றா மாக்களின் அருந்துயராகிய பசிப்பிணியையும் அகற்றுவாயாயினை, வாழ்க நின் திருவடி மலர்கள் என்று; தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி-தான் தன் கைகளைத் தலைமேற் குவித்துக் கும்பிட்டு அத் தலைமைத் தெய்வத்தைத் தரைமிசை வீழ்ந்து வணங்கிய பின் என்க.
(விளக்கம்) நந்தா விளக்கு- அவியாத விளக்கு. அவள் அறிவுப் பேரொளியாகலின் அவியாத விளக்கு என்றான். தெய்வங்களுக்கும் நீ தெய்வமாவாய் என்பான் வானோர் தலைவி என்றான். மண்ணுலகத்து மாந்தரும் அறம்பொருள் இன்பங்களாகிய உறுதிப்பொருள் களையுணர்ந்து வாழ்வாங்கு வாழவைக்கும் தெய்வம் நீயே என்பாள் மண்ணோர் முதல்வி என்றான். ஏனோர் என்றது, அவள் திருவருளை நாடாது உணவினையே நாடி ஏக்கற்று நிற்கும் ஆற்றாமாக்களை. இடர்-அவர்தம் வயிறுகாய் பெரும்பசி. பசி களையும் தொழில் திருமகளுடையதாம். நின் பேரருள் காரணமாக நின்னருளை நாடாத ஏனையோர் இடர் களைதற்கு நீ எளிவந்து அதற்கு ஒப்பற்ற கருவியாகிய இம் மாபெரும் பாத்திரத்தை நல்கினை ஆதலின் நீ ஏனோர் இடரும் களைவாயாயினை வாழ்க நின்றிருவருள் என்று வாழ்த்தியபடியாம்.
ஆபுத்திரன் அமுதசுரபி கொண்டு ஆருயிர் ஓம்புதல்
22-27: ஆங்கவர்...................ஒலிப்ப
(இதன் பொருள்) ஆங்கு அவர் பசி தீர்த்து-முன்னர் அவ்விடத்தே வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என் செய்கோம் என்று இரந்து நின்ற ஆற்றாமாக்களின் அரும் பசியை அவர் வேண்டியாங்கு அவ்வமுதசுரபி சுரந்த உணவை வழங்கித் தீர்த்து; அந்நாள் தொட்டு வாங்கு கை வருந்த மன்னுயிர் ஓம்பலின்-அந்த நாள் முதலாக இடையறாது ஏற்கும் இரவலர் ஏந்திய கைகள் வருந்துமளவிற்கு உணவு வழங்கி நிலைபெற்ற உயிரினங்களை யெல்லாம் பாதுகாத்து வருதலாலே; மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் உடன் தொக்கு ஈண்டி சூழ்ந்தன விடாஅ-மாந்தரும் விலங்களும் மரத்திலுறைகின்ற பறவையினங்களும் ஆகிய பல்வேறுயிரினங்களும் ஒருங்கே கூடி ஆபுத்திரனைச் சூழ்ந்து கொண்டு விடாதனவாய் ஆரவாரித்தலாலே, பழுமரத்தின் ஈண்டிய பறவையின்-பழுத்த மரத்தின்கட் கூடி ஆரவாரிக்கின்ற பறவையின் ஆரவாரம் போல; எழூஉம் இழும் என் சும்மை இடை இன்று ஒலிப்ப- அவ்விடத்தினின்றும் எழுகின்ற இம்மென்னும் கேட்டற்கினிய பேரொலி இடையறாது ஒலியா நிற்ப என்க.
(விளக்கம்) ஆங்கு அவர் என்றது முன்பு ஆரிடையுழந்து ஆங்குவந்து பசிமலைக்கும் என்று கூறிய இரவலரை. வாங்கு கை-ஏற்கின்ற இரவலர் கைகள். அவை இடுகின்ற உணவின் பொறையால் வருந்தும்படி வழங்கினன் என்றவாறு. மக்களே அன்றி விலங்குகளும் பறவைகளும் உணவு வேண்டி வருதலின் அவற்றுக்கும் ஏற்றவுணவினை அம் மாபெரும் பாத்திரம் சுரந்தளித்தலின் மன்னுயிர் அனைத்தையும் ஓம்பினன் என்க. எழூஉம்-எழகின்ற. சும்மை- பேராரவாரம். இடையறாது ஒலிக்குமாறு அறஞ் செய்தானாக என்று அறத்துமுடித்திடுக.
பழுமரத்தீண்டிய பறவையின் எழூஉம் இழுமென் சும்மை என்னுமிதனோடு
பழுமர முள்ளிய பறவையின் யானுமவன்
இழுமென் சும்மை இடனுடை வரைப்பின்
எனவும் (நெருநரா-64-65)
ஆர்கெழு குறடுசூட் போன்றவன்
சீர்கெழு வளமனை திளைத்து மாசனம்
கார்கெழு கடலெனக் கலந்த வல்ல தூஉம்
பார்கெழு பழுமரப் பறவை யொத்தவே
எனவும் (சீவக-828) வரும் பிறசான்றோர் கூற்றும் நோக்குக.
தேவேந்திரன் பாண்டு கம்பளம் துளங்குதலும் ஆபுத்திரனைக் காண அவன் அந்தணனாகி வருதலும்
28-35: ஈண்டு.......................கொள்கவென
(இதன் பொருள்) ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் பாண்டு கம்பளம் துளக்கியது ஆகலின்-இங்கே கடல் சூழ்ந்த நிலவுலகத்திலே இவ்வாறு இவ்வாபுத்திரன் செய்கின்ற பேரறச் செயலானது வானுலகத்தே அமரர் கோமான் வீற்றிருக்கின்ற பாண்டு கம்பளம் என்னும் இருக்கையைக் குலுக்கியதனாலே அத் தேவேந்திரன் தனக்கியன்ற கடமையை அவ்வாருயிர் முதல்வனுக்குச் செய்யும்பொருட்டு; ஓர் வளைந்த யாக்கை மறையோன் ஆகி தண்டு கால் ஊன்றித் தளர்ந்த நடையின்-ஒரு கூன் விழுந்த யாக்கையையுடைய முதிய பார்ப்பனனாக உள்வரிக் கோலங் கொண்டு கைத் தண்டையே காலாக ஊன்றி நடக்கின்ற தளர்ச்சியுற்ற நடையையுடையவனாய்; மா இரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் ஆருயிர் முதல்வன் தன்முன் தோன்றி- மிகவும் பெரிய நிலவுலகத்திலே உடம்பிலே நிலைபெற்றிருக்கின்ற உயிரினங்களை எல்லாம் உண்டி கொடுத்துப் பாதுகாக்கின்ற அரிய உயிர் முதல்வனாகிய ஆபுத்திரன் முன்னர் வந்து நின்று; உன் பெருந்தானத்து இந்திரன் வந்தேன் நின் கருத்து யாது உறுபயன் கொள்க என- நீ செய்துள்ள பேரறங் காரணமாக நின்னைக் காண்டற்குத் தேவேந்திரனாகிய யான் இவ்வுள்வரிக் கோலத்தோடு நின்பால் வந்துளேன் காண்! இத்தகைய பேரறத்தைச் செய்தற்குக் காரணமான நின் கருத்துத் தான் யாது? அவ்வறத்தினால் உனக்கு மிகவும் பயன் விளைந்துளது அப் பயனை நீ கருதுமாற்றல் கைக் கொள்ளக் கடவை, நீ கருதியதனை இன்னே கொள்க! என்று அறிவியா நிற்ப என்க.
(விளக்கம்) நிலவுலகத்தே ஏதேனும் பேரறம் செய்வோர் உளராய் விடத்தே அத்தகைய அறவோர் உளராதலை இந்திரனுடைய இருக்கை அசையுமாற்றால் அவனுக்கு அறிவுறுத்தும் என்பதும், அங்ஙனம் இருக்கை யசைதற்குக் காரணமான அறவோரைச் சென்று கண்டு அவர் விரும்புவன அளித்து அவரை மகிழ்வித்தல் வேண்டும் என்பதும், நிலவுலகில் அறவோர்க்கு ஏதேனும் இடையூறு நிகழ்ந்துழியும் அவனிருக்கை அசைந் தறிவுறுத்தும் என்பதும் அப்பொழுதும் இந்திரன் அவ்வறவோர்க்கெய்திய இடையூறு களைதற்கு ஆவன செய்தல் வேண்டும் என்பதும் இந் நிகழ்ச்சியான் அறியப்படும். இக் கொள்கை பவுத்த சமயத்தவர்க்கும் சமண சமயத்துக்கும் பொதுவானதொரு கொள்கை என்பது இந் நூலாலும் சமண நூலாகிய சீபுராணத்தாலும் அறியப்படும் என்ப.
இந்திரன் அறவோர்க் கெல்லாம் அரசனாகலின் வானுலகத்தேயன்றியும் நிலவுலகத்தும் அறவோர் திறத்திலே அவன் அருளாட்சி செய்யும் கடப்பாடுடையன் என்பது இவ்விருசமயத்தவர்க்கும் கொள்கைபோலும்.
இனி, இந்திரன் இந்நிலவுலகத்து ஏனையமாந்தர் தன்னைக் காணாமைப் பொருட்டு முதுபார்ப்பனனாக உள்வரிக் கொலங் கொண்டு வந்தனன் என்க. என்னை? உள்வரிக் கோலம் பூண்டு வந்துழியும் அவன் ஆபுத்திரனை அணுகியவுடன் இந்திரன் வந்தேன் எனத் தன்னைத்தானே அறிவித்தலால் அவன் வேற்றுருக்கோடலில் பயன் ஏனையோர் காணாமையே என்பது பெற்றாம்.
இனி, நிலவுலகத்திலே நூறு வேள்வி செய்தவனே இந்திரப் பதவி பெறுதற்குரியவன் என்றும் அத்தகைய அறவோர் உளராயவழி அவன் தன்பதவியை இழப்பான் என்பதை அறிந்து அத்தகைய அறவோர் உருவாகாதபடி பார்த்துக்கோடலும் அவன் தன் பதவியைப் பேணிக் கொள்ளும் உபாயமாம். ஈண்டும் ஆபுத்திரன் அறம்பெருகி வருவதாலே தன்பதவி பறிபோம் என்னும் அச்சத்தாலே அவ்வறத்தைத் தவிர்க்கவே இந்திரன் வந்து பயன் கொள்ளுமா றிரக்கின்றனன் என்று கோடலே பெரிதும் பொருத்தமாம். என்னை? இது பொருளுடைமையோர்க்குரியதோர் இயற்கையான புன்செயல் என்பது இந் நிலவுலகத்துப் பெருநிதிக் கிழவர்பாலும் காணப்படுதலானும் இந்திரன் அறத்தை உவப்பவனாயின் ஆபுத்திரன்பாற் செற்றங்கொண்டு அவனறம் நிகழாவண்ணம் அவனைப் பகைத்துச் செயல்புரியுத் தலைப்படான் ஆகலானும், அவன் கொள்கைக்காக அவனைப் பெரிதும் போற்றுதலே செய்திருத்தல் வேண்டுமன்றோ? ஆகவே செல்வத்திற் கியன்ற அழுக்காறும் பதவிபேணும் கருத்துமே மேலே அவன்செயலால் புலப்படுதல் நுண்ணிதின் உணர்க.
இனி, அவன் இருக்கையாகிய பாண்டுகம்பளம் அவனைத் துளக்குவதற்கும், இனி இப் பதவி உனக்கில்லை என்பதன் அறிகுறியாகக் கோடலே பொருத்தமாம். இந்திரன் யாரேனும் நிலவுலகில் அருந்தவஞ் செய்யத் தலைப்பட்டால் அவர் தவத்தை அழிக்க முற்படுகின்ற செயலும் இக் கருத்தையே வலியுறுத்துவதாகும். இவ்வரலாறு செல்வத்திற்கியன்ற தொரு சிறுமைக்கே எடுத்துக்காட்டாகும் என்றுணர்க.
இந்திரன் வந்தேன் யாது நின்கருத்து உன்பொருந்தானத்துறுபயன் கொள்கென இந்திரன் ஆபுத்திரனை இரப்பதும் தன்பதவிக்கு வரத்தக்க செல்வர்க்குக் கைக்கூலி கொடுத்து அவரைத் திசைமாற்றி விடுகின்ற புன்செயலே அன்றிப் பிறிதில்லை என்றுணர்க. இப் புன்மை கண்டன்றோ ஆபுத்திரன் விலாவிறச் சிரிக்கின்றான். இங்ஙனம் நுண்ணிதின் உணராக்கால் அவன் நகைப்பு அவனை வெள்ளமகனாகவே செய்துவிடும் என்க.
ஆபுத்திரன் இந்திரன் பேதைமை கண்டு பெருகச் சிரித்தல்
34-43: வெள்தள.........வேந்தே
(இதன் பொருள்) வெள்ளைமகன் போல் விலா இற நக்கு ஈங்கு எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன்-உண்டி கொடுத்து உயிரோம்பும் பேரறத்தைத் தடை செய்ய நயந்து முயலுகின்ற இந்திரனுடைய பேதைமையை நினைந்து அமர் நகை செய்யும் இயல்புடைய அவ்வாபுத்திரன்றானும் பேதை மகன் ஒருவன் சிரிப்பது போன்று விலா வென்பு இறும்படி வாய் விட்டுப் பெருகச் சிரித்து இவ்விடத்திலே அவ்விந்திரனை இகழ்ந்து போமையா! போம்!! என்று சொல்லித் தான் பெறுகின்ற பேரின்பத்தையும் தனக்கு வழங்குதற்கு யாதுமில்லாத இந்திரனுடைய நல்குரவினையும் அவனுக்கு விளங்க விதந்தெடுத்துக் கூறுபவன்; ஈண்டுச் செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் காண்தகு நும் கடவுளர் அல்லது-இந் நிலவுலகத்திலே வாழுங் காலத்தே இம்மைச் செய்தது மறுமைக்காகும் என்னும் பண்ட மாற்றறிவோடு செய்த நல்வினையின் பயனாகிய ஊதியத்தை நுகர்ந்திருத்தலைக் கண்டிருக்கும் சிறப்பினையுடைய நும் குடிகளாகிய மரப்பாவை போன்ற அவ்வமரரை அல்லது; அறஞ் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் யாவரும் இல்லா- நெஞ்சத்தருள் சுரந்து அறத்தின் பொருட்டே அறஞ் செய்கின்றவரும் ஆற்றா மாக்கள் அரும பசி களைந்து அவர்தம் அல்லல் களைந்து பாதுகாக்கும் வள்ளன்மையுடையோரும் தங்கருமமாகிய தவத்தைச் செய்வோரும் பவத்திறம் அறுகெனப் பற்றறுத்தற்கு முயல்பவரும் ஆகிய இத் திறத்து மெய்ந்நெறி வாழ்க்கையுடையோருள் ஒருவரேனும் இல்லாத; தேவர் நல் நாட்டுக்கு இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே- தேவர் வாழுகின்ற அழகிய நாட்டை முறை செய்து காப்பாற்றும் தலைவனாகிய பெரிய வெற்றியையுடைய வேந்தரே கேட்டருள்க! என்றான்; என்க.
(விளக்கம்) வெள்ளை மகன்- அறிவிலி சிரிப்பிலே பொழுது போக்குதல் சிறியவர்க்கியல்பு. சான்றோர் நகைப்புழியும் அளவாகவே நகைப்பர். பேதையரே வெடிச் சிரிப்புச் சிரிப்பர். முன்னைக்காதையில் ஆபுத்திரன் பின்பு அமர் நகைசெய்து(92) என்றது அவனுக்கு இயற்கையான நகைப்பாம். ஈண்டு இந்திரன் பேதைமை சாலப் பெரிதாகிய காரணத்தால் விலாவிற்ச் சிரித்தல் வேண்டிற்று.
இனி இந்திரன் அறவோனுக்குரிய பேரின்பம் வழங்க விரும்பியே தானத்துறபயன் கொள்க என்றலின் இச் செயல் பேதைமையுடைய தாய் நகை பிறப்பித்தற் கிடனாகாதாம் பிறவெனின் அற்றன்று;
எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் ( தொல் - சூ-1168)
என்பதன்றே இன்பத்திலக்கணம் ஈண்டு ஆபுத்திரனுக் கின்பமாவது யாதென இந்திரன் தேவனாயிருந்தும் அறியமாட்டாமையும், ஆற்றா மாக்கள் அரும்பசி களையும் ஆபுத்திரன் கொடுப்பதற்கு அழுக்காறு கொண்டு அவ்வறத்தை நிகழாமற் றடுத்தற்கு முயலுதலும் மாபெரும் பேதமையே. இது செய்பவர் மக்களாயின் அவன் அமர் நகையே செய்திருப்பன். அவன்றானும் அமரர்கோமான் ஆயதனால் அவன் விலாவிற நகல் இயல்பே என்க. ஈண்டு,
வாமனனாகி வந்து மண்ணிரந்த மாலுக்குக் கொடேல் என்று தடுத்த வெள்ளியை மாவலி நீ பெரும்பேதை காண்! வெள்ளி என்னும் பெயர் நினக்குச் சாலவும் பொருந்துமென்று இகழ்ந்து,
எடுத்தொருவ ருக்கொருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கழகி கோதகைவில் வெள்ளி!
கொடுப்பது விலக்குகொடி யோய்உனது சுற்றம்
உடுப்பதுவு முண்பதுவு மின்றிவிடு கின்றாய்
எனவும்,
வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ வென்சில இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்
எனவும் வரும் கம்பநாடர் திருவாக்கும், இவற்றிற்கும் முதலாக நின்ற தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும் (196)
எனவும்
நல்லா றெனினும் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று (222)
எனவும் வரும் பொன் மொழிகளும் நினைவுகூர்வார்க்கு இந்திரன் பேதைமையும் அவன் செய்யும் தீவினையும் நன்கு விளங்கும். இத்தகைய பேதைமை கண்டு அம் மேலோன் விலாவிற நகைத்தது, சாலவும் பொருத்தமே என்க.
வெள்ளை மகன்போல் என்னும் உவமை இயல்பாக அவன் வெள்ளை மகனல்லாமையை விளக்கி நின்றது.
விலாவிறநக்கு என்றது பெருகச் சிரித்து என்பதுபட நின்றது. சிரித்துச் சிரித்து விலாவொடிந்து போயிற்று என்னும் வழக்கு இக் காலத்தும் உளதாதலறிக.
எள்ளினன்: முற்றெச்சம் எடுத்துரை செய்வோன் என்றது அவன் பேதைமைக்குரிய காரணங்களை விதந்து கூறுபவன் என்றவாறு. நுகர்ந்திருத்தலைக் காண்டகு சிறப்பு என்றது அச் செயல் இழிதகவுடையது என்றிகழ்ந்தபடியாம்.
இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிகரே
ஆகிய அவர் செய்ததுதானும் அறமன்று ஒரு வணிகத் தொழிலே என்பான் ஈண்டுச் செய்த அறம் என்னாது செய்வினை என்றும் தேவர் என்னாது கடவுளார் என்றும் ஓதினன். எமக்காயின் அவர்வணிகரே என்பதுதோன்ற நுங்கடவுளர் என்றான்.
இனி, அறஞ் செய்மாக்கள் முதலிய செய்ந்நெறி வாழ்க்கையோர் யாவரும் இல்லாத நாட்டை நன்னாடு என்றது இகழ்ச்சி. இங்ஙனம் இகழ்ந்தவன் அவனைப் பெருவிறல் வேந்தே என்றது இகழ்ச்சி மேலிகழ்ச்சியாம்.
ஆபுத்திரன் யான் எய்தும் இன்பத்தினும் சிறந்த இன்பம் நின்னுலகத்தில் யாதுமில்லை எனலும், சினந்த இந்திரன் அவனை ஒருத்தற்குச் செய்யும் செயலும்
44-54: வருந்தி................அளித்தலும்
(இதன் பொருள்) தேவர்கோன்- அமரர் கோமானே! ஈதொன்று கேள்! என் தெய்வக் கடிஞை வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர் திருந்து முகம் காட்டும்-இதோ என் கையிலிருக்கின்ற தெய்வத்தன்மையுடைய பிச்சைக் கலமாகிய அமுதசுரபி என்னும் இத் திருவோடு என்பால் பசியினாலே வருந்தி வருபவருடைய பொறுத்தற்கரிய பசித்துன்பத்தைப் போக்கி இன்பத்தாலே திருத்த மெய்திய அவருடைய முகத்தை எனக்குக் காட்டுங்காண்! அக் காட்சியால் யான் எய்தும் பேரின்பம் சாலவும் பெரிது; உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ ஈங்கு அளிப்பன யாவை- பெரியீர்! நீவிர் நும் பொன்னாட்டில் இன்பப் பொருளாகக் கொண்டாடுகின்ற நுமது உணவாகிய அமிழ்தமோ! அல்லது நீயிர் உடுத்துகின்ற பொன்னாடைகளோ! அல்லது நீயிர் கூடி மகிழும் அரம்பையராகிய ஆடன் மகளிரோ! அல்லது நுமக்காவன செய்யும் பணயாளரோ! அல்லது இன்னோரன்னவை பிறவோ எனக்கு இத்தகு பேரின்பந் தாற்பாலவை அவற்றுள் ஒன்று கூறுக!; என்றலும்-என்று அவ்வறவோன் வினவியவளவிலே; ஆயிரம் கண்ணோன்-ஓராயிரம் கண்களையுடைய அத் தேவேந்திரன் அவன்பால் உட்பகை கொண்டவனாய்; அவன் பொருட்டால் அவ்வறவோனை ஒறுக்கும் பொருட்டு; புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு இரப்போர்க் காணாது ஏமாந்திருப்ப-ஆருயிர் ஓம்பும் அவ்வறவோன் தன் அங்கைப் பாத்திரம் இரப்போர்க்குப் பொருந்துகின்ற உணவாயகிய ஆருயிர் மருந்தைச் சுரந்து வழங்குவதாக இருப்பவும் அவனுக்குத் தம் திருந்து முகங் காட்டிய பேரின்பம் செய்வோராகிய இரவலரைக் காணப் பெறாமையாலே அப் பேரின்பம் பெறாமல் ஏமாந்திருக்கும்படியாக; நீள் நீலம் அடங்கலும் நிரப்பு இன்று எய்திய-அவனுறைகின்ற நெடிய இந் நாவலந்தீவு முழுவதும் வறுமை சிறிதும் இன்றி இருக்குமொரு நிலைமை அடையும் வண்ணம்; பரப்பு நீரால் பல்வளம் சுரக்க என- தன்னுடைய முகில்கள் குறையும் மிகையுமின்றிப் பொழிந்து பரப்புகின்ற நீரினாலே பல்வேறு வளங்களையும் பெருக்குக என்று முகில்களுக்குப் பணிக்குமாற்றாலே; உல கோர்க்கு ஓங்கு உயர் பெருஞ்சிறப்பு அளித்தலும்-இந் நாவலந் தீவில் வாழுகின்ற மாந்தர்க்கெல்லாம் பண்டொரு காலத்தும் பெற்றிராத மிகவும் உயர்ந்த செல்வப் பேறாகிய பெருஞ் சிறப்பை வழங்கிவிடா நிற்றலாலே; என்க.
(விளக்கம்) புரப்போன்-ஆபுத்திரன். இரப்போரே தம்திருந்து முகத்தாலே ஆபுத்திரனுக்குப் பேரின்பம் செய்தலின் அவ்வின்பத்திற்கு அவன் ஏக்கற்றிருக்க இதுவே வழியாம் நம்மை இகழ்ந்தமைக்கு அவனை ஒறுத்தல் அவனை ஏமாந்திருப்ப வைத்தல் என்றுகருதி இந்திரன் இவ்வாறு செய்தான் என்க. அவ்வறவோன் பொருட்டால் இவ்வுலகினர்க்கு நலமே எய்துவதாயிற்று என்பது தோன்ற நூலாசிரியர் அவன் பொருட்டால் ஆயிரம் கண்ணோன் ஓங்குயிர் பெருஞ்சிறப்பு உலகோர்க்கு அளித்தான் என்றார்.
இனி, ஆயிரங்கண்ணிருந்தும் யாதுபயன்? அவ்வறவோனுடைய அருள் நிரம்பிய உள்ளத்தைக் கண்டு மகிழ அகக்கண் ஒன்றேனும் இலன் என்றிகழ்தற்கு ஆயிரங்கண்ணோன் என்று கண்களை விதந்தெடுத்தோதினர். சுரக்க என்று முகில்களைப் பணிக்குமாற்றால் என இசை யெச்சம் வருவித் தோதப்பட்டது.
நிரப்பு- நல்குரவு. இன்றி என்னும் வினை எஞ்சிகரம் இன்று என உகரமாயிற்று செய்யுளாதலின். எய்திய செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். நீணிலம் என்றதும் உலகோர் என்றதும் நாவலந்தீவு என்னும் துணையாம் என்னை? உலகின் பகுதியையும் உலகம் என்னும் வழக்குண்மையை மாயோன்மேய காடுறை யுலகமும் எனவரும் தொல்காப்பியத்தினும்( பொருள- சூ-5) காண்க.
இனி, இக் காதையிலேயே சாவக நன்னாட்டுத் தண்பெயல்மறுத்தலின் ஊனுயிர் மடிந்தது (70-75) எனவருதலின் ஈண்டு நீணிலம் என்பதற்கும் உலகம் என்பதற்கும் நாவலந் தீ வெனவே பொருள் கூறல் வேண்டிற்று. ஆயின் பாண்டிநாடெனலே சாலும் பிறவெனின்! அற்றன்று நாவலந் தீவின் ஏனைப்பகுதியில் வற்கடம் நிகழ்ந்திருப்பின் ஆபுத்திரன்றானே அங்குச் சென்றிருப்பன், அது பொருளன்றென்க. அவன் அல்லது அப் பகுதியில் உள்ளவர் அவன்பால் வருதலும் கூடுமாகலின் மரக்கலமேறிச் செல்லுதலின் யாமுரைத்ததே நல்லுரை என்று கொள்க.
வறுமையில் வழி வையக மெய்தும் சிறுமை
55-64: பன்னீ...............முறைமையதாக
(இதன் பொருள்) பாண்டி நல் நாடு பன்னீராண்டு மன்னுயிர் மடிய மழை வளம் இழந்தது-இங்ஙனம் இந்திரன் சிறப்புச் செய்தற்கு முன்னர்ப் பாண்டியனுடைய நல்ல நாடானது பன்னிரண்டு ஆண்டுகள் தன்பால் வாழும் உயிரினம் இறந்து படும்படி மழை வளம் பெறாமல் வற்கடமுற்றுக் கிடந்தது இப் பொழுது; வசித் தொழில் உதவ மாநிலம் கொழுப்ப-இந்திரன் ஆணையாலே மழை பெருக்கி உதவி செய்தலாலே; பாண்டி நாட்டோடு பெரிய இந் நாவலந் தீவு முழுவதுமே செல்வச் செழிப்புற்றமையாலே; உயிர் பசிப்பு அறியாப் பான்மைத்து ஆகலின்- உயிரினம் சிறிதும் பசிப்பணியை அறியாத தொரு தன்மையைப் பெற்றமையாலே; ஆர் உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி-அரிய உயிர்களைப் பாதுகாக்கும் ஆபுத்திரன் உரையும் அம்பலப் பீடிகையிடத்தே இரவலரும் பிறவுயிரும் குழுமி உண்பதனாலே யுண்டாகும் மகிழ்ச்சி ஆரவாரம் நாளுக்கு நாள் அடங்கி இல்லையாகி; விடரும் தூர்ததரும் விட்டேற் றாளரும் நடவை மாக்களும் நகையொடு வைகி அதற்கு மாறாகத் தீயொழுக்கமுடைய கயமாக்களும் பரத்தைமை ஒழுக்கமுடையயோரும் கல்லெறிந்தன்ன இன்னாச் சொல் கூறு கின்றவரும் வாளாது ஊர் சுற்றித் திரியுமாக்களும் வந்து சிரிப்பொலியோடு குழுமி; வட்டும் சூதும் வம்பக் கோட்டியும் முட்டாவாழ்க்கை முறைமையது ஆக- வட்டுருட்டலும் சூதுப்போராடுதலும் வறுமொழி பேசி மகிழ்வோர் குழுமி ஆரவாரித்தலும் ஆகிய புன்னெறியாளர் குறையின்றி வாழ்கை நடத்தும் முறைமையையுடையதாகி விட்டமையாலே; என்க.
(விளக்கம்) பண்டு பன்னீராண்டு வற்கடமுற்றுக்கிடந்த பாண்டியனாடு இப்பொழுது மாநிலங்கொழுத்தலாலே உயிர் பசிப்பறியாப் பான்மைத் தாகலின் உயிர் ஓம்புநன் பீடிகை ஊணொலி ஒடுங்கியதாகி விடர் முதலியோர் முட்டாவாழ்க்கை நிகழ்த்தும் முறைமையதாகி விட்டமையாலே என்க.
இதனால், மாந்தர் உடலோம்பதற்கியன்ற தொழில் ஏதும் செய்ய வேண்டாதபடி இந்நிலவுலகம் ஏதேனும் ஒரு தெய்வத்தாலே வனமுடையதாக்கி விடப்பட்டால் அப்பொழுது இவ்வுலகத்தே மாந்தர் வாழ்க்கை எத்துணைக் கீழ்மையுடையதாகி விடும் என்பதை இந்நூலாசிரியர் மிகவும் நுண்ணிதாக எண்ணிப்பார்த்து இவ்வாறிருக்கும் என்று இங்குக் கூறிக் காட்டும் புலமை வித்தகம் எண்ணி இறும்பூது கொள்ளற்பாலதம் இனி,
இரப்பாரை இல்லாயி னீர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று (குறள்-1058)
என்னும் அருமையான திருக்குறளைப் பாடிய தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்தாமும் இங்ஙனம் ஓருலகத்தைத் தமது கூர்த்த அகக்கண்ணிற் கற்பனை செய்து பார்த்து அத்தகையதோர் உலகம் மக்கள் வாழ்தற்கு ஒருசிறிதும் தகுதியுடையதாக இராது எண்றுணர்ந்தே இத் திருக்குறளைப் பாடியருளினர் என்பதில் ஐயமில்லை. இதனால் உலகில் இரப்போர் என்றென்றும் இருத்தல் வேண்டும் என்று அத் தெய்வப்புலவர் கருதினர் என்று கருதிவிடுதல் அறியாமையேயாம். ஆயின் அவர் கருத்துத் தான் என்னை எனின்? உலகம் உள்ளதுணையும் இரப்பவரும் இருக்கவே செய்வர், நும்கடன் இரவாமல் முயன்று வாழ்வதேயாம். இரப்பார்க்கு ஈதலும் நும் முதற் கடன் என்பதே அத் தெய்வப்புலவர் கருத்தாம் என்றுணர்க.
இற்றைநாளினும் செல்வச்செழிப்பு மிக்கதாகவும் இரவலர் இல்லையாகச் செய்யப்பட்டதும் ஆகிய நாட்டில் மாந்தர் வாழ்க்கைப்பண்பாடு வீழ்ச்சி யெய்திய காரணத்தால் தற்கொலைகளும் மனக்குழப்பமும் பித்துப் பிடித்தலும் ஏனைய நாட்டினும் மிக்குவருவனவாக யாம் செய்தித்தாள்களிற் காணுஞ் செய்திகள் ஈண்டுக்காட்டிய சான்றோர் கருத்துகளுக்கு அரணாதல் நுண்ணிதின் அறிந்து கொள்க.
வசித்தொழில்- மழையின் தொழில். பசிப்பு- பசிப்பிணி. ஆருயிர் ஓம்புநன்-ஆபுத்திரன் ஊண்ஒலி- உண்பார் செய்யும் ஆரவாரம்.
விடர்- பிறர்க்குத் தீங்கு செய்வோராகிய கயவர். இவர் செயல்விடம் போலுதலின் விடர் எனப்பட்டார் என்னை?
ஈங்கு விடந்தலையில் எய்தும் இருந்தேளுக்கு
வாய்ந்த விடங்கொடுக்கில் வாழுமே- நோக்கரிய
பைங்கணர விற்குவிடம் பல்லளவே துச்சனர்க்
கங்கமெல் லாம்விடமே யாம் (நீதிவெண்பா-18)
எனவருஞ் செய்யுளும் நோக்குக.
தூர்த்தர்- பரத்தர் தூர்த்தரும் தூர்ப்பாரலர் (நீதிநெறி விளக்கம்) என்புழியும் அஃதப் பொருட்டாதலுணர்க. விட்டேற்றாளர் கல்லெறிந்தன்ன இன்னாச் சொல்பேசும் கயவர். நடவை-நடைவழி. நாடு கொழுப்ப உயிர் பசி அறியாப் பான்மைத்தாகலின் பீடிகை ஒலி ஒடுங்கியதாகி வைகி இத்தகைய வாழ்க்கை முறைமையதாக என இயைக்க.
ஆபுத்திரன் ஊர்தொறும் உண்போர் வினவிச் செல்லல்
65-75: ஆபுத்திரன்.................என்றலும்
(இதன் பொருள்) ஆபுத்திரன் தான் அம்பலம் நீக்கி ஊர் ஊர் தோறும் உண்போர் வினா அய்-ஆபுத்தின்றானும் இரப்போர் யாரையும் காணப் பெறாமையாலே அவ்வம்பலத்தினின்றும் புறப்பட்டு ஊர்தோறும் ஊர்தோறும் சென்று இரவலர் உளரோ என அவ்வூர்களில் வாழ்வோரை வினவிய வழி; யாவரும் யார் இவன் என்றே இகழ்ந்தாங்கு- வியத்தகுமிவனுடைய வினாவைக் கேட்ட ஊர் மாக்கள் இங்ஙனம் வினவும் இவன்றான் யாவனோ? பித்தேறியவனோ பேய் பிடிக்கப்பட்டவனா? என்றென்று தத்தம் வாய் தந்தன கூறி இகழ்ந்துழி; அருந்து ஏமாந்த ஆருயிர் முதல்வனை-இவ்வாறு பிறர் அருந்துதல் கண்டின்புறுமின்பத்திற்குப் பெரிதும் ஏக்கற்றிருக்கின்ற ஆருயிர்க் கெல்லாம் முதல்வனாந் தகுதியுடைய அவ்வாபுத்திரனை; இருந்தாய் நீயோ என்பார் இன்மையின்-ஐய இங்கிருக்கின்ற நீ ஆபுத்திரனேயோ? என்று வினவி உவப்பார் ஒருவரேனும் இந்நீணிலத்தே இல்லாமையாலே; திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள ஒரு தனி வரூஉம் பெருமகன் போலத் தானே தமியன் வருவோன் தன் முன்-ஆகூழாலே தான் பெற்ற திருத்தகு செல்வத்தைப் பெரிய கடல் கொண்டு விட்டமையாலே தான் மட்டும் உய்ந்து கரையேறி வருமொரு பெருந்தகை வணிகனைப் போலத் தான் மட்டும் தமியனாக ஒரு வழியிலே வருகின்ற அவ்வறவோன் முன்னர்; மா நீர் வங்கம் வந்தோர் வணங்கி- வேற்று நாட்டிலிருந்து கடலிலே மரக்கலம் ஏறி வந்திறங்கி வருகின்ற வணிகருள் இவனைப் பண்டறிவுடையோர் சிலர் கண்டு கை குவித்து வணங்கி; உரவோய்-ஆருயிர் ஓம்பும் ஆற்றலமைந்த அறவோய்!; சாவக நல் நாட்டுத் தண் பெயல் மறுத்தலின் ஊண் உயிர் மடிந்தது என்றலும்- யாம் சென்றிருந்த சாவகம் என்னும் நல்ல நாட்டிலே நீண்ட காலமாகக் குளிர்ந்த மழை பெய்யா தொழிந்தமையாலே உடம்பெடுத்த உயிரினம் இறந்தொழிந்தது கண்டீர்! என்றறிவியா நிற்ப; என்க.
(விளக்கம்) உண்போர் வினவிவருவோர் உலகத்தின்மையாலே இங்ஙனம் வினவுபவன் பித்தேறியவனோ பேய் பிடிக்கப்பட்டவனோ இன்னன் என்றறிகிலேம் என வினவப்பட்டோர் இகழ்ந்தனர் என்றவாறு இகழ்ந்தாங்கு இகழ்ந்துழி. அருந்து அருந்தல்: தொழிற் பெயர் விகுதிதொக்கது. இந்திரனாலும் வரவேற்கும் மாபெருஞ் சிறப்புடைய ஆபுத்திரனை இப்பொழுது நீயோ இங்கிருந்தனை என்று வினவுவார் காமும் இலராயினர் என்றிரங்கியவாறு. திருவின் செல்வம் என்றது சிறப்புடைய செல்வம் என்றவாறு. திருத்தகு செல்வத்தோடு கடலில் வந்துழிச் செல்வத்தைக் கடல் கொள்ளத் தான் மட்டுமே தமியனாய் வருகின்ற வணிகனைப் போல என்க. என்னை? அங்ஙனம் வருமியல்புடையோர் வணிகரே யாதலின். இங்ஙனம் தகுதி பற்றி உரைகூறினாம். ஏக்கற்று வருதற்கு வணிகன் உவமை. செல்வம் ஈண்டு அருள் அறமாகிய செல்வத்திற் குவமை வருவோன்:பெயர்: ஆபுத்திரன். வங்கம்-மரக்கலம். வணங்கி என்றமையால் இவனைப் பண்டறிந்தவர் என்பது பெற்றாம் ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப் பசியை மாற்றுவார் ஆற்றலிற் பின் (குறள் 225) என்பது பற்றி ஆபுத்திரனை உரவோய்! என்று விளித்தனர் உரவு-ஆற்றல். இங்ஙனம் விளித்தார் நின் ஆற்றல் இப்பொழுது அந் நாட்டிற்குப் பெரிதும் பயன்படும் என்னும் தமது கருத்துக் குறிப்பால் தோற்றுவித்தற்கு.
ஆபுத்திரன் மரக்கலமேறி ஆருயிர் ஓம்பச் செல்லுதல்
76-84: அமரர்................போதலும்
(இதன் பொருள்) அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி-இந்திரனுடைய கட்டளையினாலே ஏற்றுண்ணும் இரவன்மாக்களைப் பெறாமையாலே காதலனைப் பெறாமல் கன்னியாகவே இருந்து வறிதே மூப்பெய்தினாளொரு மகளைப் போன்று வறிதே காலங் கழியப் பெறுகின்ற என்னுடைய தெய்வப் பாத்திரமாகிய அமுதசுரபியைக் கைக்கொண்டு; ஆங்கு அந்நாட்டுப் புகுவது என் கருத்து என- நீயிர் கருதியாங்கு அச் சாவக நாட்டிற் புகுந்து ஆருயிர் ஓம்ப வேண்டும் என்பதே என் கருத்தும் என்று அவர்கட்கு உவகை மொழிந்து பின்னர்; மகிழ்வுடன் மாக்களொடு வங்கம் ஏறி பெரிய மகிழ்ச்சியோடே சென்று வேற்று நாட்டிற்குச் செல்லும் மக்களோடே மரக்கலத்திலேறிச் செல்லும் பொழுது; கால் விசை கடுக்க கடல் கலக்குறுதலின் நீர் வழங்கும் வங்கம் மால் இதை வீழ்ந்து-காற்றினது வேகம் மிகுதலாலே இயங்குகின்ற அம் மரக்கலமானது தன் பெரிய பாய்களை இறங்கி; மணிபல்லவத்தீவினது துறையிலே ஒரு நாள் தங்குவதாயிற்று; தான் ஆங்கு இழிந்தனன்- ஆபுத்திரன் மரக்கலத்தினின்றும் அம் மணிபல்லவத் தீவின்கண் இறங்கி இருந்தனனாக; வல் இருள் இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து-அற்றை இரவின்கண் செறிந்த இருளையுடைய இடை யாமத்தே காற்று விசை தணிந்து அமைதியுற்றமை கண்ட அம் மரக்கலத்து நீகான் தரையிலிறங்கிய ஆபுத்திரன் ஏறினன் என்று கருதியவனாய்ப் பாய் விரித்துச் செல்ல வேண்டிய திசை நோக்கிச் செலுத்துதலாலே; வங்கம் போதலும்-அம் மரக்கலம் போய் விட்டமையாலே என்க.
(விளக்கம்) குமரிமூத்தல்-மணமின்றிக் கன்னிப்பெண் தமியளாகவே மூத்துவிடுதல். பயனின்றி வறிதே காலங் கழித்தமைக்குவமையாக இங்ஙனம் கூறினர். தனக்கும் பிறர்க்கும் பயனின்றிக் கிடத்தல் பற்றித் தானுமகிழாமல் காதலனை மகிழ்வியாமலும் வறிதே காலம் போக்கும் குமரி மூத்தாளை உவமை எடுத்தார்; இவ்வாறே ஆசிரியர் திருவள்ளுவனாரும்,
அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று (குறள்-1007)
என ஓதுதலும் உணர்க.
கால்-காற்று. மால் இதை- பெரிய பாய். இழிந்தோன்:ஆபுத்திரன் நீகான்- மரக்கலம் இயக்குபவன். இனித் திண்ணை மெழுகிற்று என்றாற் போல வங்கத்தையே வினைமுதலாகக் கூறினுமாம். இருளில் போனமையால் ஆபுத்திரன் அது போனமை அறிந்திலன் என்பதும் அறிந்தாம்.
ஆபுத்திரன் உண்ணா நோன்பின் உயிர்பதிப் பெயர்த்தல்
85-95: வங்கம்......................பெயர்ப்புழி
(இதன் பொருள்) வங்கம் போய பின்-இவ்வாறு மரக்கலம் சென்ற பின்னர்; வருந்து துயர் எய்தி- பெரிதும் வருந்தி அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்-அம் மணிபல்லவத்தீவகத்தே மாந்தர் ஒருவரும் வாழ்வோர் இல்லாமையாலே; மன்னுயிர் ஓம்பும் இம் மாபெரும் பாத்திரம் என் உயிர் ஓம்புதல் யான் பொறேன்- நிலை பெற்ற எண்ணிறந்த உயிர்களைப் பாதுகாக்கும் பெருஞ்சிறப்பமைந்த இவ்வமுத சுரபியானது என்னுடைய உயிரைப் பாதுகாக்குமளவிற்றாகச் சிறுமையுறு வதனை யான் பொறுத்துக் கொள்ள வல்லேன் அல்லேன்; தவந்தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன்-முற்பிறப்பிற் செய்த நல்வினை தீர்ந்துவிட்ட பக்கலிலே ஒப்பற்ற பெரிய துயரத்தை நுகர்ந்தொழிந்தேன்; ஒழிந்திடுக; பாத்திரம் சுமந்து என் என்றனன் தொழுது-இந் நிலையிலே இத் தெய்வப் பாத்திரத்தைச் சுமந்து கொண்டு வாளாதுயிர்வாழ்தலிற் பயன் என்னை? என்று கருதியவனாய் அப் பாத்திரத்தைத் தொழுது; கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியில் விடுவோன் ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என-ஆண்டுக் கிடந்த கோமுகி என்னும் பெயரையுடைய பொய்கை நீரிலே முழுகவிடுபவன் தெய்வப் பாத்திரமே நீ ஓரியாண்டிற்கு ஒரு முறை ஒரு நாள் மட்டும் நீரின் மேலெழுந்து தோன்றுவாயாக! என்றும், ஆங்கு அருள் அறம் பூண்டு ஆருயிர் ஓம்புநர் உளர் எனின் அவர் கைப் புகுவாய் என்று அப்பொழுது ஈண்டு யாரேனும் அருளறத்தை மேற்கொண்டு அரிய உயிர்களைப் பாதுகாக்கும் நன்னர் நெஞ்சம் உடையோர் இவ்விடத்தே வந்திருப்பாராயின் அத் திருவுடையோர் கையிலே சென்று எய்துவாயாக வென்றும் வேண்டுதல் செய்து விட்ட பின்னர்; ஆங்கு உண்ணா நோன்போடு உயிர்பதிப் பெயர்ப்புழி அவ்விடத்திலேயே உண்ணா நோன்புடனே வடக்கிருந்துயிர் விடுகின்ற செவ்வியிலே; என்க.
(விளக்கம்) வருந்துதற்குக் காரணமான துன்பம் எனினுமாம். அங்கு-அம் மணிபல்லவத்தீவில் இதனால் அத் தீவு மக்கள் வாழ்தவில்லாத வறுந்தீவு என்பது பெற்றாம்.
ஈத்துவத்தற் கிடமின்மையாலே அவ்வின்னாமையோடு உயிர் சுமந்து வாழ்தல் யான் பொறுக்ககிலேன் என்றவாறு. ஈண்டு,
சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை (குறள்-230)
எனவரும் அருமைத் திருக்குறளுக்கு இவ்வாபுத்திரன் தலைசிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்தலுணர்க.
தவம் என்றது நல்வினையை. பாத்திரம் சுமந்து என்? என மாறுக. உண்ணாநோன்பினால் உயிர் துறத்தலை வடக்கிருத்தல் என்று கூறுப.
ஆபுத்திரன் மாறிப் பிறந்தமை கூறுதல்
96-104: அந்நாள்............தானென்
(இதன் பொருள்) அந் நாள் ஆங்கு யான் அவன்பால் சென்றேன் மணிமேகலாய் கேள் அவன் உயிர்பதிப் பெயர்க்கின்ற அதே நாளிலே அத் தீவகத்திலே அறவோன் ஆசனம் தொழச் சென்ற யான் அவனிடத்தே சென்றேனாக; என உற்றனையோ என்று கேட்ப-அவனை நோக்கி நீ இங்ஙனம் உயிர் நீத்தற்குக் காரணமாக எய்திய இடுக்கண் என்னையோ? என்று வினவ; தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்-அவன்றானும் தனக்கு வந்துற்ற துயரங்கள் பலவற்றையும் தானே எனக்கு எடுத்துக் கூறினன் காண்!; குலதிசைத் தோன்றிக் கார் இருள் சீத்துக் குடதிசைச் சென்ற ஞாயிறு போல-நங்காய்! அவ்வறவோன்றானும் கீழ்த்திசையிலே தோன்றித் தன் பேரொளியாலே உலகைக் கவிந்து மூடிய கரிய இருளைப் போக்கி உயிர்கட்குத் துயர் துடைத்து இன்பம் வழங்கியவாறே மேற்றிசையிலே சென்று மறைந்த ஞாயிற்று மண்டிலம் போன்று தான் தோன்றிய நாள் தொடங்கி அருளறமே பூண்டு ஆருயிர்க் கொல்லாம் உண்டி கொடுத்து அருந்துயர் களைந்து பேரின்பம் வழங்கியவாறே மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு மன்னுயிர் தாங்கும் தணியாக் கருத்தொடு- மணிபல்லவத்தீவகத்தே தன்னுயிர் தங்கியிருந்த உடம்பினைப் போகட்டுப் பின்னரும் உலகிலே உடம்பொடு நிலைபெற்ற உயிரினங்களைப் பாதுகாக்கும் தணியாத ஆர்வமுடைய கருத்துடனே போய்; ஆங்கு அவன் சாவகம் ஆளும் தலைத்தாள் வேந்தன் ஆவயிற்று உதித்தனன்-அவ்வாபுத்திரன் தான் கருதிச் சென்ற அந்தச் சாவக நாட்டை ஆட்சி செய்கின்ற தலைசிறந்த முயற்சியையுடைய மன்னவன் நாட்டில் ஓர் ஆவினது வயிற்றிலே கருவாகி மக்கள் உருவத்தோடே பிறந்தனன் காண்! என்று அறவண வடிகள் மணிமேகலைக்கு அறிவித்தனர் என்பதாம்.
(விளக்கம்) அந்நாள்-ஆபுத்திரன் உயிர் நீக்கும் நாள். யான் புத்த பீடிகையைத் தொழச் சென்றேன் என்றாராகக் கூறிக் கொள்க. தன் உற்றன-தனக்கு வந்துற்ற துன்பங்கள்.
ஞாயிறு-ஆபுத்திரன் தோற்றத்திற்கும் செயற்கும் மறைவிற்கும் உவமை. காரிருள் சீத்து என்றுவமைக்குக் கூறிய அடைமொழியைப் பொருட்கும் ஏற்றிப் பொருந்துமாறு அவனது அருளறச் செயலும் விரித்துக் கூறப்பட்டது.
அவாவின் வழித்தாக வழி முறைத் தோற்றம் வரும் ஆகலின் சாவக நாடு சென்று ஆங்கு ஆருயிர் ஓம்பும் கருத்தோடு இறந்தமையாலே அந் நாட்டிலே சென்று பிறந்தனன் என்றும் தன்னை வளர்த்த ஆனினத்தின் பாற் பேரன்புடையனாயிருந்தமையின் ஆவயிற்றிற் பிறந்தான் என்றும் அப் பிறப்பிலே செய்த நல்வினைப் பயனாக மன்னனுக்கு அணுக்கராகிய முனிவருடைய பசு வயிற்றிற் பிறந்து மன்னனும் ஆயினன் என இதன் கண் குறிப்புப் பொருள் தோற்றுவித்தமையும் அறிக.
இனி இக் காதையை-அவற்குப் புகுந்தது கேளாய்! உழந்தோர் ஏத்தி மலைக்கும் என்றலும் இல்லோன் அஞர் எய்த கெடுக தீது என விளக்குத் தோன்றி அழியல் கொள்ளாய் என்றே கொடுத்தலும் தலைவியை வணங்கி பசிதீர்த்து ஓம்பலின் சும்மை ஒலிப்ப இந்திரன் கம்பளம் துளங்கியது ஆகலின் ஊன்றி ஆகித்தோன்றிக் கொள்கென, நக்கு உரைப்போன் வேந்தே காட்டும் கடிஞை யாவை அளிப்பன என்றலும், புரப்போன் இருப்ப உலகோர்க்கு அளித்தலும் நாடு கொழுப்ப பீடிகை முறைமையதாக நீங்கி ஏமாந்த முதல்வனை நீயோ என்பார் இன்மையின் வருவோன் முன் வந்தோர் வணங்கி மடிந்தது என்றலும் புகுவது என் கருத்தென ஏறி இழிந்தனன் வங்கம் போதலும் துயர் எய்தி இன்மையின் பொறே என் என விடுவோன் புகுவாய் என்று பெயர்ப்புழி சென்றேன் கேட்ப உரைத்தனன் உடம்பிட்டு வேந்தன் ஆவயிற்றுதித்தனன் என்றியைத்திடுக.
பாத்திர மரபு கூறிய காதை முற்றிற்று.