பதிவு செய்த நாள்
23
ஜன
2012
05:01
(பதினைந்தாவது மணிமேகலை பாத்திரங் கொண்டு பிச்சைக்கும் பெருந்தெரு போய பாட்டு)
அஃதாவது அறவணர்பால் ஆபுத்திரன் வரலாறும் அவன் சிந்தாதேவி அருளிய அமுதசுரபியைப் பெற்று ஆருயிர் ஓம்பியதும் அமுதசுரபியின் மாண்பும் பிறவும் கேட்டறிந்த பின்னர் அமுதசுரபியை அங்கை ஏந்தி அதன்பால் ஆருயிர் மருந்து ஒழிவின்றிச் சுரத்தற் பொருட்டு முதன் முதலாக, பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை யேற்றல் பெருந்தகவுடைத்து என்னும் கொள்கையுடையவளாய்ப் பிக்குணிப் கோலத்தோடு பெருந்தெருவிலே பிச்சை ஏற்றற்குச் சென்ற செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.
இதன்கண்-ஆபுத்திரனை நாவான் நக்கிப் பாலூட்டி ஏழு நாள்காறும் புறம் போகாமனின்று புரந்த பசு அந் நல்வினைப் பயனாலே சாவக நாட்டிலே மண்முகன் என்னும் மாமுனிவன்பால் எய்திய பொற் கோடும் பொற் குளம்பும் உடைய தாய்க் கண்டோ ரெல்லாம் கைதொழு தேத்தும்படி ஈனா முன்னமே இன்னுயிர்க் கெல்லாம் தான் முலை சுரந்தூட்டி அருளறம் பேணா நின்ற செய்தியும்; அம் மாமுனிவன் அப் பசுவின் வயிற்றிலே பொன் முட்டையிலே மழை வளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும் உயிர் காவலன் ஒருவன் வந்து பிறப்பான் என்று தன் இருத்தியால் அறிந்து கூறியதும் ஆகிய இச் செய்திகளையும் அறவணர் மீண்டும் மணிமேகலைக்குக் கூறி, அப் பசுவின் வயிற்றில் புண்ணிய மிகுதியாலே ஆபுத்திரன் பொன் முட்டையினூடே மக்கள் உருவிலே கருவாகி வளர்ந்து பிறத்தலும் ஆபுத்திரன் மீண்டும் பிறந்த அப்பொழுது உலகின்கண் புத்தபிரான் பிறக்கும்போதுண்டாகும் நன்னிமித்தமெல்லாம் நிகழ்ந்த செய்தியும் உலகத் துள்ளோர் வியப்புறுதலும் துறவோர் கந்திற்பாவையின்பாற் சென்று அந் நன்னிமித்தங்கட்குக் காரணம் வினாதலும் அஃது அறவணர்பாற் கேட்டறிமின் என்றதும் அவரெல்லாம் தம்பால் வந்து கேட்ட செய்தியும் கூறி மணிமேகலையை அறஞ்செய்யப் பணித்தலும் அவள் பிச்சை ஏற்கப் பெருந்தெரு அடைந்ததும், காயசண்டிகை ஆதிரை மனையகத்திலே ஏற்க வேண்டும் எனலும் பிறவும் கூறப்படும்.
இன்னும் கேளாய் இளங்கொடி மாதே!
அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆத்
தண்ணென் சாவகத் தவள மால் வரை
மண்முகன் என்னும் மா முனி இடவயின்
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது
தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி
ஈனாமுன்னம் இன் உயிர்க்கு எல்லாம்
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த
ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து 15-010
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும்
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும்
குடர்த் தொடர் மாலை பூண்பான் அல்லன்
அடர்ப் பொன் முட்டை அகவையினான் என
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தற்காத்து அளித்த தகை ஆ அதனை
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்
ஆங்கு அவ் ஆ வயிற்று அமரர் கணம் உவப்பத்
தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு 15-020
ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன்
பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து
மண்அகம் எல்லாம் மாரி இன்றியும்
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது
போதி மாதவன் பூமியில் தோன்றும்
காலம் அன்றியும் கண்டன சிறப்பு என 15-030
சக்கரவாளக் கோட்டம் வாழும்
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய
அந்தில் பாவை அருளும் ஆயிடின்
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும்
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன்
ஆங்கு அவன் தன் திறம் அறவணன் அறியும் என்று
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள்
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் 15-040
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி
மக்களை இல்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப
அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின்
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன் தான்
துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ?
அறக் கோல் வேந்தன் அருளிலன்கொல்லோ
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும்
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம்
அலத்தல்காலை ஆகியது ஆய் இழை! 15-050
வெண் திரை தந்த அமுதை வானோர்
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு
வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும்
அறன் ஓடு ஒழித்தல் ஆய் இழை! தகாது என
மாதவன் உரைத்தலும் மணிமேகலை தான்
தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு
பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும்
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க் குறுமாக்களும்
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் 15-060
கொடிக் கோசம்பிக் கோமகன் ஆகிய
வடித் தேர்த் தானை வத்தவன் தன்னை
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய
உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன்
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றி
பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர 15-070
மண மனை மறுகில் மாதவி ஈன்ற
அணி மலர்ப் பூங் கொம்பு அகம் மலி உவகையின்
பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை ஏற்றல் பெருந் தகவு உடைத்து எனக்
குளன் அணி தாமரைக் கொழு மலர் நாப்பண்
ஒரு தனிஓங்கிய திருமலர் போன்று
வான் தருகற்பின் மனை உறை மகளிரின்
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள்? அவள் மனை இம் மனை
நீ புகல்வேண்டும் நேர் இழை! என்றனள் 15-080
வட திசை விஞ்சை மா நகர்த் தோன்றித்
தென் திசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை
மாதவன் தன்னால் வல் வினை உருப்ப
சாவம் பட்டு தனித் துயர் உறூஉம்
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும்
காயசண்டிகை எனும் காரிகை தான் என் 15-086
உரை
அறவண அடிகள் மணிமேகலைக்கு ஆபுத்திரனைப் புரந்தருளிய ஆன் அந் நல்வினைப்பயனாலே சாவகத்தீவிற்றோன்றினமை கூறுதல்
1-8: இன்னும்..........ஊட்டலும்
(இதன் பொருள்) இளங் கொடி மாதே இன்னும் கேளாய்- இளைய பூங்கொடி போலும் மெல்லியல்புடைய மணிமேகலையே அருளறத்தின் மாண்பினை யுணர்த்தும் செய்திகள் இன்னும் சிலவுள அவற்றையும் கூறுவேம் கேட்பாயாக! அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆ பண்டு சாலி என்னும் வடமொழியாட்டி ஈன்ற குழவிக் கிரங்களாகிக் கோவலர் சேரி மருங்கிலே ஒரு தோட்டத்திலே போகட்டுப் போன குழவியாகிய அவ்வா புத்திரனைப் பால் சுரந்தூட்டி ஏழு நாள் காறும் புறம் போகாது நின்று பாதுகாத்த அறந்தரு நெஞ்சத்து அந்த நல்ல ஆவானது அவ்வறங் காரணமாக மாறிப் பிறந்த பிறப்பிலே; தண் என் சாவகத்துத் தவளமால் வரை- எப்பொழுதும் தண்ணென்று குளிர்ந்திருக்கின்ற சாவக நாட்டின் கண்ணதாகிய தவள மால் வரை என்னும் மலையிடத்தே தவஞ் செய்திருந்த; மண்முகன் என்னும் மாமுனி இடவயின் தான் சென்று எய்தி- மண்முகன் என்னும் பெயரையுடைய சிறந்த முனிவருடைய தவப்பள்ளியின்; பொன்னின் கோட்டது பொன் குளம்பது தன் நலம் பிறர் தொழ ஆவயிற்றிற் புகுந்து கருவாகி- பொன்னாலியன்ற கோடுகளையும் பொன்னாலியன்ற குளம்புகளையும் உடையதாகத் தனது அழகினைக் கண்ட துணையானே இது தெய்வத்தன்மையுடைய தென்று யாவரும் கை குவித்துத் தொழத்தகுந்ததாக ஆவாகவே பிறப்பெய்தி வளர்ந்து; ஈனா முன்னம்-தான் கன்றீன்பதற்கு முன்னரே; தான் முலை சுரந்து தன்பால் ஊட்டலும்-தன் அறந்தரு நெஞ்சம் காரணமாகத் தானே தனது முலை சுரக்கப் பெற்றுப் பிலிற்றாநிற்ப தன் தீம்பாலைப் பிறவுயிர்கட்கு ஊட்டா நிற்ப என்க.
(விளக்கம்) யாதானும் ஓர் அறத்தின்கண் ஆற்றுப் படுத்துபவர் அவ்வறத்தினைப் பல்லாற்றானும் அறிவுறுத்தியவழிக் கேட்போர்க்கு அதன்கண் ஊக்கம் மிகுத லியல்பாதல் பற்றித் தேவர்க்கும் மக்கட்கும் ஒத்த அறங்கூறிய அறவண அடிகளார் மீண்டும் அறப்பயனை அறிவுறுத்துபவர் இத்தகைய நல்லறஞ் செய்த நம்பியாகிய ஆபுத்திரன் மீண்டும் தனது அறந்தரு நெஞ்சத்திற்கேற்பவே நிற்பிறப்பெய்தி மீண்டும் அவ்வற நெறியே பற்றி ஒழுகும் செய்தியைக் கூறத்தொடங்கு பவர் தொடக்கத்தே முற்பிறப்பிலே அவனைப் பாலூட்டிப் பாதுகாத்த ஆவானது மீண்டும் கண்டோர் கைதொழத் தகுந்த வியத்தகு ஆவாகவே தோன்றி ஈனாமுன்னரே பால் சுரந்தூட்டிய செய்தியையும் ஆருயிர்கள் அன்புளஞ் சிறந்தவழி மாறிப் பிறக்கும் பிறப்பினும் அவ்வன்புத் தொடர்பாலே அணுக்கராகவே பிறத்தலுமாகிய இச் செய்திகளை அவள் கேட்டல் அவட்கு ஆக்கமாம் என்னும் கருத்தாலே இன்னும் கேளாய் என்று தொடங்குகின்றனர். இன்னும் கேளாய்! என்றது இவற்றைக் கேட்டல் உனக்கு இன்றியமையாதாம் எனபதுபட நின்றது.
அந்நாள் என்றது ஆபுத்திரன் சாலிவயிற்றிற் பிறந்தபோது அவள் அக்குழவியைத் தோன்றாத்துடவையிலிட்டுச் சென்ற நாளைச் சுட்டிகின்றது
தவளமால் வரை என்றது, தவளமலை என்னும் பெயருடைய மலை என்றவாறாம். இனி, பனிபடர்ந்து வெண்மையாக விளங்குமொரு பெரிய மலை என்பது பொருளாகக் கோடலுமாம். மாமுனி இவ் வயின் சென்றெய்த என்றாரேனும் அம்முனிவனுடைய நல்லாவின் வயிற்றிற்பிறந்து என்பது கருத்தாகக் கொள்க. என்னை? பொன்னின் கோட்டது பொற் குளம்புடையதாய்ப் பிறர் தொழத்தோன்றி ஈனா முன்ன முலை சுரந்தூட்டலும் எனப் பாட்டிடை வைத்த குறிப்பாலே பசு வயிற்றுப் பிறந்து வளர்ந்து ஈனா முன்னமே பால் சுரந்தூட்டியது என்பது பெற்றாமன்றே
தன் நலம்- தனது அழகு
மண்முக முனிவன் தனது அவதிஞானத்தால் ஆபுத்திரன் அப் பசுவின் வயிற்றில் மக்கள் வடிவுடன் பிறப்பான் என்று முன்னரே அறிந்து கூறுதல்.
9-14: மூன்று...........வயினானென
(இதன் பொருள்) மூன்று காலமும் தோன்ற நன்குணர்ந்த ஆன்ற முனிவன்-இத்தகு பசுவிற்குரியவனும், மூன்று காலத்து நிகழ்ச்சிகளும் தன்னுள்ளே தோன்றும் வண்ணம் மெய்ப் பொருளையுணர்ந்தவனும் ஆன்றவிந்து அடங்கியவனுமாகிய அம் மண்முக முனிவன் அந்த அவதி ஞானத்தாலே உணர்ந்து அதன் வயிற்று அகத்து-அப் பசுவினுடைய திருவயிற்றிலே கருவாகி; மழைவளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும் உயிர் காவலன் ஒருவன் வந்து தோன்றும்-இச் சாவக நன்னாட்டிலே மழை தன்னாற் பிறக்கும் வளங்களைச் சுரந்து வழங்குமாறும் ஈண்டு நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாத்தற்கும் ஆருயிர்க் காவலன் ஒருவன் வந்து பிறந்தருளுவன்; குடர்த்தொடர் மாலை பூண்பான் அல்லன் பொன் அடர் முட்டை அகவயினான் என- அவ்வாருயிர்க் காவலன் இப் பசுவின் வயிற்றிலே மகனாகப் பிறக்குங் காலத்தே கன்று பிறத்தல் போலாதல் மகன் பிறத்தல் போலாதல் குடரின் தசைத் தொடராலியன்ற மாலை பூண்டு பிறவான் பொன் தகட்டாலே இயன்றதொரு முட்டையின் அகத்திருப்பவனாகப் பிறந்தருளுவன் என்று முற்படவே பிறர்க்குக் கூறிபடியே என்க.
(விளக்கம்) சாவக நாடு முன்னரே மழை வளங் கரத்தலின் மன்னுயிர் மடிந்து வற்கடமுற்றுக் கிடத்தலாலே இந் நாட்டில் இற்றைக் கிருக்கும் இன்னலெலாம் தீர இப் பசுவின் வயிற்றிலே ஓருயிர் காவலன் வந்து தோன்றுவான் எனவும், இப் பசு ஏனைய பசுக்கள் போலாது பொற்கொம்பும் பொற் குளம்பும் உடையதாகப் பிறந்தாற் போன்று இதன் வயிற்றிற் பிறக்குங் காவலனும் குடர்மாலை பூண்டு பிறவாமல் பொன் முட்டையினூடு உருவாகி வந்து பிறப்பான் எனவும் அம் முற்றுணர்வுடைய முனிவன் முற்படவே கூறினர் என்பது கருத்து. அடர் தகடு.
அகவயினான்- உள்ளிடத்துள்ளான்
ஆபுத்திரன் சாவக நாட்டில் ஆவயிற்றுப் பிறத்தல்
15-21: பிணி........கேணீ
(இதன் பொருள்) பிணி நோய் இன்றியும் பிறந்து அறஞ் செய்ய மணிபல்லவத்திடை மன்னுயிர் நீதோன்- தன்வயமாகப் பிணித்துக் கொண்டு துன்புறுத்துகின்ற நோய் யாதொன்றும் தன்னுடம்பில் இல்லாமல் இருக்கவேயும், ஈதலியையாமை காரணமாக எய்திய மாபெருந்துயர் பெறாமல் உண்ணா நோன்பின் உயிர்பதிப்பெயர்த்து மாறிப் பிறந்தேனும் அறஞ் செய்யக் கருதி மணிபல்லவத் தீவினிடத்தே உடம்பிலே நிலைபெற்றிருந்த தன்னுயிரைத் தறுத்தவனாகிய அவ்வாபுத்திரன்; தன் காத்து அளித்த தகை ஆ அதனை ஒல்கா உள்ளத்து ஒழியானாதலின் கைவிடப்பட்ட குழவியாகிய தன்னை அறந்தரு நெஞ்சத்தோடு அருள் சுரந்தூட்டிப் பாதுகாத்த பெருந்தகைமையுடைய அந்த ஆவின்பால் நன்றியுடைமையால் நினைவு கூர்தலில் ஒரு பொழுதுந் தளர்ந்திலாத நெஞ்சமுடையனாயிருந்தமையாலே; ஆங்கு அவ்ஆவயிற்று -மண்முகமுனிவன் றவப்பள்ளியிலே மாறி ஆவாகவே பிறந்துள்ள அவ்வாவினது திருவயிற்றிலே; தீங்கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு ஒருதான் ஆகி அமரர்கணம் உவப்ப உலகு தொழத் தோன்றினன்-இனிய கனிகளைடைய நாவன் மரம் ஓங்கிய இந்தப் பெருஞ்சிறப்புடைய தீவகத்திலே வள்ளன்மைக்குத் தான் ஒருவனே தலை சிறந்தவனாகித் தேவர் கூட்டங்கள் பெரிதும் மன மகிழவும் இந்நிலவுலகத்து மாந்தர் எல்லாம் கைகூப்பித் தொழவும் சாலி வயிற்றில் மகனாகப் பிறந்தனன்; பிறந்த பெற்றியை நீ கேள்-அவ் வள்ளற் பெரியோன் சாவக நாட்டில் ஆவயிற்றிற் பிறந்த தன்மையும் கூறுவல் நீ கேட்பாயாக!; என்றார் என்க.
(விளக்கம்) ஏனைய மாந்தரெல்லாம் பிணிப்பட்டு வருந்தி இறப்பதே இயல்பு- மற்று இவன் அவ்வாறிறந்தானல்லன். ஈதற்கிடமின்மையாலே அந்நிலை சாதலினுங்காட்டில் இன்னா நிலையாக இருந்தமையாலே அது பொறாது வடக்கிருந்து தானே உயிரை நீத்தனன். அங்ஙனம் இறந்துழி மாறிப் பிறக்கும் பிறப்பிலேனும் ஈத்துவக்கும் சூழ்நிலை எய்தும் என்னும் கருத்தோடிறந்தானாதலின், அத்தகையதொரு சூழ்நிலையையுடைய நாட்டிலே மகனாகப் பிறந்தான். பண்டு தனக்கு வளர்ப்புத் தாயாகிய ஆவின்பால் பேரன்புடையனாதலின் அதன் வயிற்றிலே அதனை நற்றாயாகவே கொண்டு பிறந்தான் என்றறிவுறுத்த படியாம்.
இதனால் உயிர்கள் மாறிப் பிறக்கும் பொழுது அவ்வவை செய்த வினைகட் கேற்பவும் குறிக்கோளுக்கு ஏற்ற சூழ் நிலையிலேயும் பற்றுடையோர் தொடர்புடையனவாகவே பிறக்கும் என்பதும் பௌத்தர் மெய்க்காட்சி என்பதறியலாம். இக் கொள்கை மறுபிறப்புண்டென்னும் கொள்கையுடைய பிற சமயவாதிகட்கும் ஒத்ததொரு கொள்கையே ஆதலும் அறியற்பாற்று.
ஒற்கா- தளராத ஒருதானாகி-தானே தலைசிறந்தவனாகி நல்லோர் பிறப்பினை அமரரும் மாந்தரும் ஒருசேர உவப்பர் என்பது தோன்ற அமரர் கணம் உவப்ப உலகு தொழத் தோன்றினன் என்றார். பண்டு சாலி வயிற்றிற் றோன்றினன் அப் பெரியோன் இப் பிறப்பில் சாவக நாட்டில் பிறந்த பெற்றியும் கேள் நீ எனச் சுட்டுச் சொல் வருவித்தோதுக.
பெரியோன்- ஆபுத்திரன்; பெற்றி- தன்மை.
சாவகத்திலே ஆபுத்திரன் ஆவயிற் றுதித்தபொழுது உலகில் தோன்றிய அற்புத நிகழ்ச்சிகள்
23-30: இருதிள...............சிறப்பென
(இதன் பொருள்) இருதிள வேனில் எரிகதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்ற பின்-பருவங்களுள் வைத்துக் காண்டற்கினிய இளவேனிற் பருவத்திலே ஞாயிற்று மண்டிலம் இடபவிராசியிலிருக்கும் வைகாசித் திங்களிலே நாண்மீன்களுள் வைத்துக்கார்த்திகை முதலாகப் பதின்மூன்று மீன்கள் கழிந்தபின்; மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்- நாண் மீன்களுள் வைத்து நடுவு நிற்றலையுடைய விசாக நன்னாளிலே; போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து- புத்தபிரான் பிறந்த நாள் என்னும் புகழோடு பொருந்திய சிறப்புடைய பொழுதிலே; மண்ணகம் எல்லாம் மாரியின்றியும் புண்ணிய நல்நீர் போதொடு சொரிந்தது- நிலவுலகத்திலே எவ்விடத்தும் மழையில்லாதிருக்கவேயும் ஆகாய கங்கையாகிய புண்ணியமுடைய நல்ல நீரானது கற்பக மலர்களோடு விரவி மழை போலப் பொழியா நின்றது; போதி மாதவன் பூமியில் தோன்றும் காலம் அன்றியும் சிறப்புக் கண்டனவென- அரசமரத்தின் நீழலிற் பொருந்தியிருந்து மெய்க்காட்சி எய்திச் சிறந்த தவத்தையுடைய புத்த பெருமான் பிறந்த காலத்தே இங்ஙனம் அற்புதம் தோன்றுவதல்லது இக்காலத்தும் அவ்வற்புதக் காட்சிகள் நம்மாற் காணப்பட்டன; ஆகவே இதற்குமொரு காரணமுளதாதல் வேண்டுமென்று கருதியவராய் என்க.
(விளக்கம்) இருதிள..............பொருந்தி என்னு மளவும் இந்த மூன்றடிகளும் 11 ஆங் காதையினும் 40-42 ஆம் அடிகளில் முன்னும் இங்ஙனமே வந்தமை நினைக. இந் நூலாசிரியர் பிறாண்டும் முன்பு கூறிய பொருள்களே மீளவுங் கூற நேர்துழி அச் சொற்றொடர்களை மீண்டும் நிலை பிறழாது ஓதும் வழக்கமுடையவராதலைப் பல்வேறிடங்களில் காணலாம். இவ்வடிகட்கு விளக்கம் 11 ஆம் காதா 40-42 ஆம் அடிகட்குக் கூறியவற்றையே கொள்க.
மாரியின்றியும் புண்ணிய நன்னீர் போதொடு மாரி போன்று சொரிந்தது என்றவாறு. புண்ணிய நன்னீர் என்றது ஆகாய கங்கையை போது-கற்பகமலர். ஆகாய கங்கை கற்பகப் போதொடு சொரிந்த அற்புதம் புத்தர்பிரான் பிறந்த பொழுது நிகழ்ந்ததொரு அற்புதம் என்பர். புத்த பெருமான் பிறப்பு நிகழாத இப்பொழுதும் அந்த அற்புதம் காணப்படுதலாலே இதற்குக் காரணமான நிகழ்ச்சி ஒன்று ஏதேனும் நிலவுலகல் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்று ஊகித்து மாதவர் அது பற்றி ஆராயத்தலைப்பட்டனர் என்பது கருத்து.
போதி மாதவன்-புத்தன்.போதி மாதவன் பூமியிற் பன்முறை பிறத்தண்டாகலின் அவன் பிறக்கும்பொழுதெல்லாம் இத்தகு அற்புதம் நிகழும் என்பது பௌத்தர் துணிபு.
சிறப்புக் கண்டன என-என மாறிச் சிறப்புக்கள் காணப்பட்டன என (32) வியந்து என வியையும்.
அறவணர், அற்புத நிகழ்ச்சி பற்றி மாதவர் கந்திற்பாவையை வினவினர் என்றும் அத் தெய்வம் அவரை எல்லாம் என்பாலேவியது என்றும் மணிமேகலைக்கு அறிவித்தல்
31-39: சக்கர.................வருத்தியது
(இதன் பொருள்) சக்கரவாளக் கோட்டம் வாழும் மிக்க மாதவர் வியந்து விரும்பி- இந்நகரத்துச் சக்கரவாளக் கோட்டத்தே யுறை கின்ற பெரிய தவமுடைய துறவோர் எல்லாம் பெரிதும் வியப்பெய்தி அதற்கியன்ற காரணத்தை அறிதற்கு விரும்பி; நெடுநிலைக்கந்து உடை பாவைக் கடவுள் எழுதிய அந்தில் பாவை அருளும் ஆயிடின் அறிகுவம் என்றே-நெடிது நிற்கும் நிலையினையுடைய தூணிலே கடவுள் படிமம் எழுதப்பட்ட அவ்விடத்திலே சென்று அப் பாவை அறிவிக்குமானால் அறிவேம் என்று துணிந்து; செறி இருள் சேறலும்- செறிந்த இருளையுடைய நள்ளிரவிலே அங்குச் சென்றிருப்ப; மணிபல்லவத்திடை மன்னுயிர் நீத்தோன் சாவகத்து தணியா உயிர் உய உதித்தனன்-அவர் கருத்தறிந்த அக் கந்திற்பாவை தானும் அறவோரே கேண்மின் மணிபல்லவத் தீவின்கண் தன்னுடம்பிலே நிலை பெற்ற தன்னுயிரை ஈதலியையாமையில் நீத்தவனாகிய ஆபுத்திரன் சாவக நாட்டிலே பசிப்பிணி தணியப்பெறாது பெரிதும் வருந்தும் உயிர்கள் உய்யும்பொருட்டுப் பிறப்பெய்தினன் அவ்வறவோன் பிறப்பினாலேதான் இவ்வற்புதம் நிகழ்வதாயிற்று; அவன் திறம் அறவணன் அறியும் என்று- மேலும் அவ்வாபுத்திரன் செய்தியெல்லாம் அறவணவடிகள் கந்திற் பாவை; என் நாவை வருத்தியது- என்னுடைய நாவையும் வருந்துமாறு செய்து விட்டது காண்; என்றார் என்க.
(விளக்கம்) மாதவர், ஈண்டுப் பௌத்தத் துறவோர். கந்திற்பாவையினது பக்கலிலே சென்றிருப்போர்க்கு அது தன் தெய்வக் கிளவியின் திப்பிய முரைக்கும் ஆகலின் சென்று வினவிலும் என்னாது சேறலும் என்றொழிந்தார். சேறலும்- செல்லலும் நீத்தோன்: பெயர்; ஆபுத்திரன். தணியா- பசித்துன்பம் தணியாத: பெயரெச்சத் தீறு கெட்டது. உய் உய்ய. அறவணன் அறியும் என்று அக் கந்திற் பாவை கூறிவிட்டமையாலே அவரெல்லாம் என்பால் வந்து வினவ அவர்க்கெல்லாம் யான் ஆபுத்திரன் திறம் பல முறை கூறல் வேண்டிற்று என்பது தோன்றப் பாவை என்னாவையும் வருத்தியது என்றார் இறந்தது தழீஇய எச்சவும்மை தொக்கது செய்யுள் விகாரம்.
ஆபுத்திரன் அரசனாயின்மை கூறல்
39-45: இதுகேள்.......................அவன்றான்
(இதன் பொருள்) இதுகேள், மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி மணிமேகலாய்! ஆவயிற்றுப் பிறந்த அவ்வாபுத்திரன் வரலாற்றில் எஞ்சிய இதனையும் கேட்பாயாக! சாவகம் என்னும் அந்த நாட்டை ஆளுகின்ற அரசனாகிய பூமிசந்திரன் என்பான் இவ்வற்புத நிகழ்ச்சியை அறிந்து அம்மகவினை வளர்க்கின்ற மண்முகன் என்னும் அறத்தலைவன் தவப்பள்ளியை எய்தி அவ்வறவோனுடைய திருந்திய அடிகளில் வீழ்ந்து வணங்கி; மக்களை இல்லேன்-அடிகேள்! அடியேன் மக்கட் பேறில்லேன்! என்று தன் குறை கூறிக் குறிப்பாலே இரந்து நிற்ப அவ்வறவோன் அம் மகவினை அவ்வரசனுக்கு வழங்கினனாக; மாதவன் அருளால் புதல்வனைப் பெற்றேன் என்று அவன் வளர்ப்ப- மகவைப் பெற்ற அம் மன்னவன்றானும் இந்த மாதவருடைய பேரருளாலே பெரிதும் வருந்தாமலே அருமந்த மகனைப் பெறுவேனாயினேன் என்று மகிழ்ந்து அம் மகவினைக் கொடுபோய் வளர்த்தமையாலே; அவன்பால் அரைசு ஆள் செல்வம் இருந்தமையாலே; அவன்றான்-அவனால் வளர்க்கப்பட்ட அவ்வாபுத்திரன்றானும் உரிய பருவத்திலே; நிரை தார் வேந்தன் ஆயினன்- நிரல்பட்ட மலர்மாலை யணிந்து செங்கோல் ஓச்சும் அரசனும் ஆயினன் காண்! என்றார் என்க.
(விளக்கம்) இதுவும் கேள் எனல் வேண்டிய எச்ச உண்மை தொக்கது. இது என்றது அவன் வரலாற்றில் எஞ்சிய விதுவும் என்பதுபட நின்றது.
மண்- ஈண்டுச் சாவகநாடு. மக்களியில்லேன் என்று பாட்டிடை வைத்த குறிப்பினாலே அம் மாதவன் அம் மகவினை வழங்கினன் என்பது பெற்றாம். என்று மகிழ்ந்து வளர்ப்ப என்க. அரைசாள் செல்வம் படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்னும் ஆறுவகை உறுப்புகள். அவன்றான் வேந்தன் ஆயினன் என மாறுக. அவன்:ஆபுத்திரன்
அறவணவடிகள் மணிமேகலை இனிச் செய்யக்கடவ அறம் இஃதென அறிவுறுத்துதல்
46- 55: துறக்க...........உரைத்தலும்
(இதன் பொருள்) துறக்க வேந்தன் துய்ப்பு இலன் கொல்லோ அறக்கோல் வேந்தன் அருள் இலன் கொல்-வானவர் கோமான் ஈண்டுச் செய்யும் வேள்வியின் வாயிலாய்த் தான் நுகரும் அவி உணவு நுகர்தல் இலனாயினனோ? அன்றி அறம் பிறழாத செங்கோல் வேந்தனாகிய சோழமன்னன் உயிர்களின்பாற் றான் செலுத்தும் அருளைச் செலுத்துதல் இலன் ஆயின்னோ? அன்றி பிறவாற்றாலோ யாம் காரணம் அறிகின்றிலேம் ஆயினும்; காவிரி நீர் சுரந்து புரந்து பரக்கவும்-காவிரியாறானது தன்னியல்பு பிறழாவண்ணம் வழக்கம் போலவே நீர் சுரந்து உயிரினங்களைப் பாதுகாத்துப் பாய்ச்சும் நீர் நாடெங்கணும் பரவாநிற்கவே; நலத்தகை இன்றி நல்உயிர்க்கு எல்லாம் அலத்தற் காலை ஆகியது- நலமுறும் தகுதி இல்லாமல் இந் நாட்டிலே வாழும் நன்மையுடைய உயிர்கட்கெல்லாம் துன்புறுதற்குரிய வற்கடம் நிலவாநின்றது; ஆயிழை- மகளிரிக்கெல்லாம் அணிகலனாகத் திகழுகின்ற மணிமேகலாய்! சூழ்நிலை இவ்வாறிருத்தலாலே; வெள் திரை தந்த அமுதை வானோர் உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு- வெள்ளிய அலைகளையுடைய திருப்பாற் கடல் வழங்கிய அமிழ்தத்தில் வானோர் தாமுண்டு எஞ்சி யிருந்ததனைப் பிறவுயிர் உண்ணுதல் தவிர்த்து வாளாது வைத்தாற் போன்று ; வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும் அறன் ஓடு ஒழித்தல் தகாது என மாதவன் உரைத்தலும் வற்கடம் பாவியிருக்கின்ற இந்நாட்டிலே வாழும் உயிர்களின் மாபெருந்துன்பமாகிய பசிப்பிணியைத் தீர்த்துய்விக்கும் தெய்வத் தன்மையுடைய பேரறத்தின் திருவுருவமாகத் திகழுகின்ற அமுதசுரபியாகிய இத் திருவோட்டின் செயல் நிகழாவண்ணம் அதனை வாளாது வைத்திருத்தல் நம்மனோர்க்குத் தகாது காண் என்று சிறந்த தனவொழுக்கமுடைய அறவணவடிகள் அறிவுறுத்தா நிற்றலும் என்க.
(விளக்கம்) சோழ நாட்டிலே வழக்கம் போலவே காவிரி நீர் முட்டின்றிப் பெருகிவந்து யாண்டும் பரவிப்பாயவும் இந் நாட்டிலே இப்பொழுது வற்கடம் நிலவுகின்றது; இதற்குரிய காரணம் யாமறிகிலேம் என இம்மாதவர் இயம்புகின்றனர். ஈண்டுக் கதை நிகழ்ச்சிக்கு வற்கடம் இன்றி அமையாதாக; அவ் வற்கடத்திற்குச் செங்கோல் நிலைதிரிந்ததாகக் கூறுதல் வேண்டும். இப்புலவர் பெருமான் சோழனுக்கும் பழிபிறவாவண்ணம் இம்முனிவரைப் பேசவைத்திருக்கின்ற நுணுக்கம் நினைந்தின்புற்ற பாலதாம்.
இனி, மழையில்லாமல் நிலவுலகில் வற்கடம் நிகழ்தற்குரிய காரணங்களுள் இரண்டனை மட்டும் இவர் ஈண்டு எடுத்துக் கூறிய இவற்றுள் யாதொன்று யாம் அறிகின்றிலேம் என்னுமாற்றால் ஈண்டு அக் குறை இரண்டனையுமே யாமறிகின்றிலேம் ஆயினும் வற்கடம் மட்டும் நிகழ்தல் கண்கூடாகத் தெரியவருகின்றது என்கின்றனர்.
வற்கடம் நிகழ்தற்கு மழையின்மையே காரணம்; மழை பெய்கின்றது. யாற்றுநீர் யாண்டும் பரவவும் காண்கின்றோம். என்றதனால் மழை காலந்தவறி மிகுதியாகவும் காலத்திலே பெய்யாமலும் போவதால் இவ்வற்கடம் நிகழ்வது போலும் இங்ஙனம் ஆதற்கு, இந்திரன் தனக்குச் செய்ய வேண்டிய வேள்வியை இம் மன்னவன் காலத்திலே செய்யாது விடுகின்றான் என்று செய்யும் குறும்பு என்னலாம், என்று ஒருதலை துணிந்து, மற்று அரசன் அறக்கோல் வேந்தன் ஆதலால் அவன் அருளிலன் ஆவனோ ஆகான் எனக் கூறினார் போலவும் பொருள்படுதல் அறிக.
வேள்வியைப் பௌத்தர்கள் வெறுப்பவர் ஆதலின் தனக்கு அவி சொரியாமையாலே ஆயிரங் கண்ணோன் செய்த குறும்பே இவ் வற்கடத்திற்குக் காரணம் என இம்முனிவர் ஒருதலை துணிந்து கூறுகின்றனர் என்க.
இனி, இக்கருத்தை வலியுறுத்தற்குப் போலும் அத்துறக்க வேந்தன் உண்டொழி மிச்சிலைப் பிறவுயிருண்ணுதலை ஒழித்துப் பாதுகாத்து வைத்தான் எனவும் அவ்வாறு நீ பல்லுயிரோம்பும் அமுதசுரபியை ஒழித்தல் தகாது எனவும் இதனானும் இந்திரனுக்கு ஓரிழுக் குரைத்தமை உணர்க.
வறன் ஓடு உலகு- வற்கடம் பரவுகின்ற உலகம்: அறன் ஓடு- உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் அறஞ் செய்தற் கருவியாகிய அமுதசுரபி. அலத்தற் காலையில் உண்டி கொடுத்துயிர் ஓம்புதலே இப்பொழுது நின் கடமையாகும் என்பதனை அறவணவடிகள் இதனால் வற்புறுத்தபடியாம்.
மணிமேகலைக்கு பிக்குணிக் கோலத்துப் பெருந்தெருவில்
பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்லுதல்
55-69: மணிமே..................பரிவெய்தி
(இதன் பொருள்) மணிமேகலைதான் தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி-அதுகேட்ட மணிமேகலையும் பெரிதும் மகிழ்ந்து தாயாராகிய மாதவியோடும் சுதமதியோடும் அவ்வடிகளார் திருவடிகளிலே வீழ்ந்து அவரைப் பற்பல நன்றியும் புகழும் நவின்று வாழ்த்திய பின்னர்; கைக் கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு-தான் பண்டு செய்த நற்றவத்தாலே தன் கையிலே கொண்டு ஏந்திய அமுதசுரபியாகிய கடவுட்டன்மையுடைய அத் திருவோட்டினோடு; பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு அடைத்தலும்-தவக்கோலந் தாங்கியவளாய் அப் பூம்புகார் நகரத்துப் பெரிய தெருவிலே செல்லாநிற்றலும்; ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க்குறுமாக்களும் மெலித்து உகுநெஞ்சின் விடரும் தூர்த்தரும் கொடிக் கோசம்பிக் கோமகனாகிய வடித்தேர்த்தானை வத்தவன் தன்னை மணிமேகலையைப் பிக்குணிக் கோலத்திலே கண்டதும் பெரிதும் ஆரவாரஞ் செய்து ஒருங்கே குழுமிய அவ்வூர்ச் சிறுவர்களும் நெஞ்சம் நெகிழ்ந்துருகுகின்ற கயமாக்களும் பரத்தரும் கொடியுயர்த்திய கோசம்பி நகரத்தை ஆளும் கோமகனாகிய வடித்த தேர்ப்படையையுடைய வத்தவநாட்டு மன்னன் உதயணகுமரனை உஞ்சை நகரத்தரசன் பிரச்சோதனன்; வஞ்சஞ் செய்துழி- வஞ்சகச் செயலாலே சிறைக்கோட்டத்திலிட்ட பொழுது; வான்தளை விடீஇய- பெரிய தளையினின்றும் உதயணனை விடுவித்தற் பொருட்டு; உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் உருவுக்கு ஓவ்வா உறுநோய் கண்டு-உஞ்சை மாநகரத் தெருவிலே மாறுவேடம் புனைந்து வந்து தோன்றிய அமைச்சனாகிய யூகி என்னும் பார்ப்பனன் தான் மேற்கொண்டுள்ள உருவத்திற்குப் பொருந்தாதபடி பித்தேறினான் போலவும் பேயேறினான் போலவும் வாய்தந்தன பேசி வருந்தும் வருத்தத்தைக் கண்டு; பரிவுறு மாக்களின்-அவனைச் சூழ்ந்துகொண்டு அவன் நிலைக்கு வருந்தி நின்ற மாந்தர் போன்று; தாம் பரிவெய்தி-தாமும் மணிமேகலையின் உருவிற் கொவ்வாநிலைக்குப் பெரிதும் இரக்கம் எய்தி என்க.
(விளக்கம்) தாயர் என்றது, மாதவியையும் சுதமதியையும், கடவுட்கடிஞை- தெய்வத்தன்மையுடைய பிச்சைக்கலன். அஃதாவது, அமுதசுரபி. பிக்குணி- பௌத்தர்களுள் பெண்பால் துறவி. இங்ஙனம் கூறுவது அச் சமயத்தார் மரபு.
மெலித்து- மெலிந்து என்பதன் விகாரம். மணிமேகலையின் பண்டைய செல்வ நிலைமையையும் இற்றை நாள் அவள் பிச்சை புக்க நிலையையும் கருதி அவள் பொருட்டு நெஞ்சிளகி உருகினர் என்றவாறு. குறுமாக்கள்- சிறுவர்.
கோசம்பி- வத்தவநாட்டுத் தலைநகரம். வத்தவன்- வத்தநாட்டு மன்னனாகிய உதயணன். உதயணனைப் பிரச்சோதன மன்னன் யானைப் பொறியினாலே வஞ்சித்துச் சிறைப்பிடித்துச் சிறையிலிட்டனன்.
உதயணன் அமைச்சனாகிய யூகியந்தணன் மாறுவேடம் புனைந்து கொண்டு பிரச்சோதனனுடைய தலைநகரமாகிய உஞ்சை நகரத்தின் தெருவிலே பித்தன் போல நடித்துச் சென்றான். அப்பொழுது அந்நகர மாந்தர் அவனைச் சூழ்ந்து கொண்டு அவனுருவிற்கொவ்வாத நோய் உடையனாதற்கு இரங்கி நின்றார். அவர் போன்று ஈண்டும் நகரமாக்கள் மணிமேகலையின் உருவிற் கொவ்வாத நிலை கண்டு இரங்கினர் என உவமம் எடுத்தோதியபடியாம். யூகிக்கு உஞ்சைமாக்கள் பரிவுற்றமையை-உதயணகுமார காவியத்தில் உஞ்சைக் காண்டத்தில் 72 ஆம் செய்யுள் முதலாக, 83 ஆஞ் செய்யுள் ஈறாக வருகின்ற செய்யுள்களால் உணர்க.
இதுவுமது
67-70: உதய ................கூர
(இதன் பொருள்) உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த மதுமலர்க்குழலாள் வந்து தோன்றி-சின்னாள் முன்னர் நங்கோமகனாகிய உதயகுமரனுடைய நெஞ்சத்தை முழுவதும் நவர்ந்துகொண்டு பிறர் யாரும் அறியாதபடி இந்நகரத்தினின்றும் மறைந்துபோன தேன்துளிக்கும் மலர்க் கூந்தலையுடைய இம் மணிமேலை மீண்டும் பிறர் யாம் காணாதபடியே இப்பெருந் தெருவினூடே வந்து நம்மனோர்க்குக் கண்கூடாகத் தோன்றி; பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது- பிச்சை ஏற்றற்குரிய திருவோட்டைக் கையில் ஏந்தி நிற்குமிக் காட்சி; திப்பியம் என்றே சிந்தை நோய் கூர-ஒரு தெய்வத்தன்மை யுடைத்து என்று அவள் நிலைக்குப் பெரிதும் நெஞ்சழிந்து துன்புறா நிற்ப என்க.
(விளக்கம்) ஊர்க்குறுமாக்களும் விடரும் தூர்த்தரும் உதயகுமரன் மணிமேகலையைத் தேரில் ஏற்றி வருவல் என்று எட்டிகுமரனுக்குச் சூண்மொழிந்து போனவன் வறிதே மீண்டமையும் அற்றை நாளிலிருந்து மணிமேகலையை அந்நகரத்தே யாரும் அறியாதபடி மணிமேகலா தெய்வம் எடுத்துப் போன செய்தியும் அறியாமையாலே அவள் எங்கோ மாயமாய் மறைந்துவிட்டனள் என்று வியப்புற்றிருந்தாராக, மீண்டும் அவள் வான்வழியாக வந்திறங்கிமையாலே அவள் வருகையும் காணாராயிருந்தவர், பொள்ளென அவள் பிக்குணிக் கோலத்தோடு பிச்சைப்பாத்திரம் ஏந்திப் பெருந்தெருவில் வந்துற்றமை ஆகிய அவள் செயலெல்லாம் பெரிதும் வியக்கத்தக்கவா யிருத்தலின், உதயகுமரன் உளங் கொண்டொளித்தமையும் பின்னர் வந்து தோன்றினமையும் அவள் பிச்சைப்பாத்திரம் ஏந்தினமையும் ஆகிய அனைத்துமே திப்பியம் என்று வியந்தனர். மேலும் அவள் கோவலன் மகளாய் மாபெருஞ் செல்வத்தினூடே வளர்ந்தமை யாவரும் அறிகுவர் ஆதலினானும் அவளுடைய இளமைக்கும் அழகுக்கும் சிறிதும் பொருந்தாத வண்ணம் பிச்சைபுக்கமை கருதி அனைவருமே அவட்கிரங்கிச் சிந்தை நோய் கூர்ந்தனர் என்பது கருத்து
திப்பியம்-ஈண்டு வியப்பு என்னும் பொருண்மேனின்றது
மணிமேகலை அமுதசுரபியின்கண் முதன் முதலாகப் பத்தினிப் பெண்டிர் இடும் பிச்சை ஏற்றல் வேண்டும் எனலும் காயச்சண்டிகை ஆதிரைபால் ஏற்றிடுக எனலும்
71-80: மணமனை..................என்றனள்
(இதன் பொருள்) மணமனை மறுகின் மாதவி ஈன்ற அணி மலர்ப் பூங்கொடி- திருமணஞ் செய்துகொண்டு இல்லறம் பேணுவோர் இனிது வாழுகின்ற மங்கல மனைகளையுடைய அப்பெருந்தெருவிலே பிச்சைப்பாத்திரம் ஏந்திச் சென்றவளாகிய மாதவி பெற்ற அழகிய மலர்கணிரம்பிய பூங்கொடி போல் வாளாகிய மணிமேகலை தனக்கு அணுக்கமாக நிற்கின்ற மடந்தை ஒருத்தியை நோக்கி; அகமலி உவகையின் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந்தகவு உடைத்து என அன்புடையோய் இத் திருவோட்டில் முதன் முதலாகப் பிச்சை ஏற்குங்கால் விருந்தினரைக் கண்டபொழுதே உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியோடே கொணர்ந்து கற்புடை மகளிர் அன்போடு இடுகின்ற உணவை ஏற்பதே பெருந்தன்மை யுடையதாகும். என்று கூறாநிற்ப; குளன் அணி தாமரைக் கொழுமலர் நாப்பண் ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று- அங்ஙனம் வினவிய மணிமேகலையின் குறிப்பறிந்து கூறும் அம் மடந்தை அன்னாய் கேள்! குளத்தினூடே யாண்டும் மலர்ந்து அதனை அழகு செய்கின்ற தாமரையினது கொழுவிய மலர்களின் நடுவே தான் தமியே அனைத்து மலரினுங்காட்டில் உயர்ந்து திகழாநிற்குமொரு அழகிய தாமரை மலரைப் போன்று; வான் தரும் கற்பின் மனையுறை மகளிரில்- மழை பெய்விக்கும் தெய்வத்தன்மை யுடைய கற்பென்னும் திட்பத்தோடு இம் மங்கல மனைகளிலே இருந்து இல்லறம் பேணும் மகளிருள் வைத்து; ஆதிரை நல்லாள் தான் தனியோங்கிய தகைமையள் அன்றோ-ஆதிரை என்னுய் பெயரையுடைய நங்கைதான் தனிச் சிறப்புடையளாய் உயர்ந்திருக்கின்ற பெருந்தகைமை உடையாள் என்பதை நீ யறியாயோ?அறிந்திருப்பாய் அல்லையோ? நேரிழை மகளிர்க்கெல்லாம் அணிகலனாகத் திகழுகின்ற தவச்செல்வியே கேள்; இம் மனை அவள் மனை நீ புகல் வேண்டும்-இதோ அணித்தாக இருக்கின்ற இம் மங்கல மனையே அவள் வாழும் மனையாகும் ஆகவே நீ முதன் முதலாக அம் மனை முன்றிலிலே பிச்சை புகுதல் வேண்டும்; என்றனள்-என்று அறிவித்தனள்; என்க.
(விளக்கம்) மணமனை என்றது திருமணஞ் செய்துகொண்டு மணமக்கள் இல்லறம் ஓம்பும் மனை என்றவாறு. அகமலி உவகையின் என்றது விருந்தினர் வரப்பெற்றோம் என்று உளம் நிறைந்த மகிழ்ச்சியோடு என்பதுபட நின்றது. ஈண்டு
முகத்தா னமர்ந்தினது நோக்கி அகத்தானாம்
இனசோ லினதே அறம் (93)
எனவரும் திருக்குறளையும் நினைக.
பண்புடன் இடூஉம் என்புழி பண்பு என்றது அன்பு என்க. என்னை?
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (45)
எனவரும் திருக்குறட் கருத்தினை நோக்குக.
பத்தினிப் பெண்டிர் இடும் பிச்சை ஏற்றல் பெருந்தகைமை என்று மணிமேகலை கூறியதன் குறிப்பு அத்தகைய பத்தினிப் பெண்டிர் உறையும் மனை யாது நீ அறிகுவையோ அறிதியாயின் கூறுதி என்பதே யாம். இக் குறிப்பறிந்து அம் மடந்தை கூறுகின்றாள் என்க.
இனி, அவள் கூறும் உவமையழகு நினைந்து நினைந்து மகிழற் பாலதாம். இங்கு இம் மனைகளுள் வாழும் மகளிர் எல்லாருமே பத்தினி மகளிரேயாவர் ஆயினும் அவருள்ளும் தலைசிறந்து திகழுபவள் ஆதிரை என்பவளே! என்றிறுத்தபடியாம்.
வான்தரு கற்பு- வேண்டும் பொழுது மழை பெய்விக்கத் தகுந்த தெய்வக்கற்பு. வான்- மழைக்கு ஆகுபெயர். ஈண்டு
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)
எனவரும் திருக்குறள் நினைக்கப்படும்
புகல்- பிச்சைபுகல். இம் மனைபுகல் வேண்டும் என்றது நின் கருத்து அதுவாயின் இந்த மனையிற் புகுதுக! என்பதுபட நின்றது. அதுவும் சேய்த்தன்றென்பாள் இம் மனை எனச் சுட்டினாள்.
காயசண்டிகை வரலாறு
81-86: வடதிசை..............தானென்
(இதன் பொருள்) வடதிசை விஞ்சை மாநகர்த் தோன்றித் தென்திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை-அவ்வாறு ஆதிரை மனையை மணிமேகலைக்கு அறிவித்தவள் யாரோ எனின், வடதிசையின் கண்ணுள்ள விச்சாதரர் நகரங்களுள் வைத்துக் காஞ்சனபுரம் என்னும் பெரிய நகரத்திலே பிறந்து வைத்தும் தென்திசையில் உள்ள பொதியமலை மருங்கில் ஒரு சிறிய யாற்றினது நீரடை கரையிடத்தே; வல்வினை உருப்ப- தான் முற்பிறப்பிலே செய்த தீவினை உருத்துவந்தூட்டுதலாலே; மாதவன் தன்னால் சாவம்பட்டுத் தனித்துயர் உறூஉம் சிறந்த தவத்தையுடைய துறவோன் ஒருவனாலே சாவம் இடப்பட்டு மாபெருந்துன்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமான; வீவுஇல் வெம்பசி வேட்கையொடு திரிதரும் காயசண்டிகை என்னும் காரிகை-ஒரு பொழுதும் அழிதலில்லாத வெவ்விய பசித்துன்பத்தோடும் அதனைத் தணிக்கும் பேரவாவோடும் அந்நகரத் தெருக்களிலே இடையறாது சுற்றித் திரிகின்ற காய சண்டிகை என்னும் வித்தியாதர மகளே யாவாள் என்பதாம்.
(விளக்கம்) காயசண்டிகை என்னும் இவ் விச்சாதரி இக் காப்பியக்கதைக்கு இன்றியமையாத ஓருறுப்பாவாள். ஆதலில் நூலாசிரியர் இவள் வரலாற்றை ஈண்டு விதந்தெடுத்து விளம்பினர். இவள் வரலாறு மேலும் விளக்கமாகக் கூறப்படும் ஆதலின் ஈண்டுச் சுருக்கமாகவே சொல்லிவைத்தனர்.
விஞ்சைமாநகர்- விச்சாதரருடைய பெரிய நகரம். தனித்துயர் பெருந்துன்பம். காரிகை- பெண்.
இனி இக்காதையை- மாதே கேளாய்! நல்லாய் எய்தி ஊட்டலும் மண்முகமுனிவன் ஒருவன் தோன்றும் அவன் பொன் முட்டை அகவையினான் என, மன்னுயிர் நீத்தோன் ஒழியானாதலின் சாவகத்துதித்தனன் நீர் சொரிந்தது, மாதவர் வியந்து அறிகுவம் என்று சேறலும் பாவை அறவணன் அறியுமென்று ஈங்கென் நாவை வருத்தியது. இதுகேள்! மண்ணாள் வேந்தன் இல்லேன் பெற்றேன் என்று வளர்ப்ப அவன்பால் செல்வம் உண்மையின் அவன் வேந்தன் ஆயினன். அலத்தற் காலை ஆகியது. அறன் ஓடு துயர் கெடுக்கும் ஒழித்தல் ஆயிழை தகாது என மணிமேகலை ஏந்திக் கடிஞையொடு தெரு அடைதலும் மாக்களும் தூர்த்தரும் ஒளித்த குழலாள் தோன்றி ஏந்தியது திப்பியம் என்று நோய் கூர; கொம்பு ஏற்றல் தகவுடைத்தென இம் மனை அவள் மனைபுகல் வேண்டும் என்றனள் (அவள் யாரெனின்) வடதிசைத் தோன்றிவினை உருப்பத் துயர் உறூஉம் பசி வேட்கையொடு திரிதரும் காயசண்டிகை எனும் காரிகை, என இயைத்திடுக.
பாத்திரம் கொண்டு பிச்சைபுக்க காதை முற்றிற்று.