துவாபரயுகத்தின் முடிவில் கிருஷ்ணர் பூலோகத்தை விட்டு கோலோகம் கிளம்பியதும் கலிகாலத்தின் வீரியம் அதிகரித்தது. கலியின் கொடுமையில் இருந்து மக்கள் தப்பித்து தர்ம நெறியில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் வியாசர் வேதங்களைத் தொகுத்து வழங்கினார். தன்னுடைய சீடர்களில் பைலருக்கு ரிக்வேதத்தையும், வைசம்பாயனருக்கு யஜுரையும், ஜைமினிக்கு சாமவேதத்தையும், ஸுமந்துவுக்கு அதர்வணத்தையும் உபதேசித்தார். ஆனால், இந்த நான்கும் எழுத்து வடிவம் பெறாமலேயே இருந்தது. குரு உபதேசமாக காதால் கேட்டு வந்ததால் வேதத்திற்கு ‘எழுதாக்கிளவி’ (எழுதப்படாத சொல்) என்ற பெயர் ஏற்பட்டது. ‘வியாச’ என்ற சொல்லுக்கு ‘ பகுத்து வைப்பது’ என்பது பொருள். வேதத்தைப் பகுத்து கொடுத்ததால் வேத ஆசிரியர் வியாசர் எனப்பட்டார். ‘கிருஷ்ணத்வைபாயனர்’ என்பதே வியாசருடைய நிஜப்பெயர்.