பதிவு செய்த நாள்
09
ஆக
2018
04:08
ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று(ஆக.,11) விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
விரதம் சரி... அது என்ன கதை? எதற்காக அதைச் சொல்ல வேண்டும்? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.
இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்.. அரற்றினாள்.. தவித்தாள்.. தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.
இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.
ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது. அக்னி தேவனே நீராடிய தினம் இது என்பது நம்பிக்கையாக உள்ளது. ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டபோது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்த நொடியே அக்னிதேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல் அவனை சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்துக் கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. அதனால் அக்னி தீர்த்தம் எனப்பெயர் வந்தது. அக்னி நீராடிய கடலில் நீராடுவோர் பாவங்கள் தீரும் என ஆசியளித்தாள் சீதாதேவி.
இன்னும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன் உள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவி போல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசையன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களைச் செய்வதும் விசேஷமானது.
தீர்த்தம் அதிகமுள்ள திருத்தலம்: ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம். இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்ததால் இத்தலத்திற்கு சேதுக்கரை என்று பெயர் இருந்தது. பின்னாளில் ராமேஸ்வரம் என்னும் கோயில் பெயர் ஊருக்கு சூட்டப்பட்டது. சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே. மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோயிலுக்குள் உள்ளன. ராமேஸ்வரம் சென்றும் குளிக் காதது போல என்றொரு சொல்வழக்கு ஒன்றுண்டு. வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்காவிட்டாலும், இங்கு புனிதநீராடுவது அவசியம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. சீதாதேவி தன் கற்பை நிரூபிக்க அக்னியில் புகுந்தாள். அவளது கற்புக்கனல் அக்னி பகவானையே சுட்டது. ஒரு கற்புக்கரசியை சுட்ட பாவத்தை தீர்க்க, அக்னி பகவான் ராமேஸ்வரம் கடலில் நீராடினார். இதனால், இங்குள்ள கடல் அக்னிதீர்த்தம் எனப்படுகிறது. இங்கு ஆடிமாதத்தில் அம்பிகை பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடை பெறுகிறது. தீர்த்த நீராடலுக்கு பெயர் பெற்ற ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தலமாக இருப்பதால் ஆடிஅமாவாசையும் இங்கு சிறப்பு.
தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை, தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசைகள், முன்னோரை நினைவு கூர முக்கியமான நாட்கள். முன்னோர் வழிபாட்டை, ஆடி அமாவாசையன்று, காலையே துவங்கி விட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்க வேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசிர்வாதம் செய்வதாக ஐதிகம். அமாவாசையின் முக்கியத்துவம் பற்றிய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்... குருஷேத்ர யுத்தத்திற்கு முன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக, சகாதேவனிடம் ஜோதிடம் கேட்க சென்றான் துரியோதனன். போரில் வெற்றி பெற வேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும்... எனக் கேட்டான். தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், பூரண அமாவாசை அன்று போரை துவங்கினால் வெற்றி உறுதி... என்றார். துரியோதனனும், அதே நாளில் களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது, கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து, அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்தார். இதைப்பார்த்த சூரியனும், சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக வந்தனர். நாங்கள் இருவரும் ஒன்றாக சேரும் நாள்தான் அமாவாசை; ஆனால், நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களே... இது முறையானதா? என்றனர்.
அதற்கு கிருஷ்ணன், இப்போது, நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே, இன்று தான் அமாவாசை... என, சமயோசிதமாக பதில் சொல்லி விட்டார். சகாதேவன் சொன்னபடி களபலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய் விட்டது. இதனால், நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது. ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல, தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை, நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.
ஆடி அமாவாசை அற்புதக்காட்சி: அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோயிலைப் பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கயிலைதரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடிஅமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய மாதர்பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில் இங்கு கோயில் பிரகாரத்தில் ஐயாறப்பா என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் காணலாம்.