Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

17. உலகவறவி புக்க காதை 19. சிறைக்கோட்டம் அறக் கோட்டமாக்கிய ...
முதல் பக்கம் » மணிமேகலை
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
04:01

(பதினெட்டாவது மணிமேகலை அம்பலமடைந்தமை சித்திராபதி உதயகுமரனுக்குச் சொல்ல அவன் அம்பலம் புக்க பாட்டு)

அஃதாவது- மாதவியும் மணிமேகலையும் பவுத்தப் பள்ளி புக்கமை கேட்டுத் தணியாத் துன்பந் தலைத்தலை மேல்வர மனம் வெந்திருந்த சித்திராபதி மணிமேகலை பிச்சைப் பாத்திரம் ஏந்தி உலகவறவியினூடு சென்றேறிய செய்தி கேட்டவுடன் பழங்கரும்புண்ணக வயின் தீத்துறு செங்கோல் சென்று சுட்டாற் போன்று பெரிதும் வருந்தி, அவள்பால் இடங்கழி காமமோடிருந்த இளவரசனாகிய உதயகுமரன்பாற் சென்று மணிமேகலையைக் கைப்பற்றித் தேரிலேற்றி வருமாறு ஊக்குவித்தமையால் உதயகுமரன் மணிமேகலையைக் கைப்பற்றி வருங் கருத்தோடு அவளிருக்கின்ற உலகவறவி என்னும் அம்பலத்திற் சென்று புகுந்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- சித்திராபதியானவள் மணிமேகலை பிக்குணிக் கோலத்தோடு பிச்சைப் பாத்திரம் ஏந்தி உலகவறவியினூடு சென்றேறினள் என்ற செய்தி கேட்குக் கொதித்த உள்ளமொடு வெய்துயிர்த்துக் கலங்கித் தன்னோர் அனைய கூத்தியன் மடந்தையர்க் கெல்லாம் கூறும் பரிவுரைகளும், மணிமேகலை ஏந்திய பிச்சைக் கடிஞையைப் பிச்சை மாக்கள் பிறர் கைக்காட்டி உதயகுமரனால் அவளைப் பொற்றேர்க் கொண்டு போதேனாகின் யான் இன்னள் ஆகுவல் என்று சூளுரைத்துக் குறுவியர் பொடித்த முகத்தோடு இளங்கோவேந்தன் இருப்பிடங் குறுகும் காட்சியும், ஆங்கு அரசிளங்குமரன் திருந்தடி வணங்கி நிற்றலும் மணிமேகலையைக் கைப்பற்றமாட்டாத தனது ஏக்கறவு தோன்ற அவன் மணிமேகலையின் தாபதக் கோலம் தவறின்றோ என நலம் வினவுவான் போல வினவுதலும், சித்திராபதியும் உதயகுமரனும் தம்முட் சொல்லாட்டம் நிகழ்த்துதலும், உதயகுமரன் மணிமேகலையின்பாற் கண்ட தெய்வத்  தன்மைகளைச் சித்திராபதிக்குக் கூறி அவளைக் கைப்பற்ற நன்கு துணியானாதலும்; அது கண்ட சித்திராபதி அவ்விறைமகனைத் தன் வயப்படுத்தும் பொருட்டுச் சிறுநகை எய்திச் செப்புகின்ற அவளது பேச்சுத் திறங்களும், அவள் வயப்பட்ட அரசிளங்குமரன் உலகவறவி சென்று புகுதலும் ஆங்கு மணிமேகலையை அவன் வினவும் வினாக்களும், அதற்கவள் கூறும்விடைகளும் மணிமேகலை சம்பாபதி கோயிலுட்புகுந்து காயசண்டிகை வடிவங்கொண்டு மீண்டு வருதலும் மணிகேலை கோயிலுட் கரந்திருக்கின்றனள் என்று கருதிய உதயகுமரன் கோயிலுட்புகுந்து அவளைத் தேடுதலும்; காணாமல் திகைத்துச் சம்பாபதியாகிய தெய்வத்தை நோக்கிக் கூறுஞ் செய்தியும் சூளுறவும் பிறவும் இலக்கியவின்பம் பொதுள இயம்பப்பட்டுள்ளன.

ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அகவயின்
தீத் துறு செங் கோல் சென்று சுட்டாங்குக்
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி
விதுப்புறு நெஞ்சினள் வெய்து உயிர்த்துக் கலங்கித்
தீர்ப்பல் இவ் அறம்! என சித்திராபதி தான்
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்
கோவலன் இறந்த பின் கொடுந் துயர் எய்தி
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
நகுதக்கன்றே! நல் நெடும் பேர் ஊர்
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது!  18-010

காதலன் வீய கடுந் துயர் எய்திப்
போதல்செய்யா உயிரொடு புலந்து
நளி இரும் பொய்கை ஆடுநர் போல
முளி எரிப் புகூஉம் முது குடிப் பிறந்த
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர் தம்
கைத்தூண் வாழ்க்கைக் கடவியம் அன்றே
பாண் மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல்
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும்
நறுந் தாது உண்டு நயன் இல் காலை
வறும் பூத் துறக்கும் வண்டு போல்குவம்  18-020

வினை ஒழிகாலைத் திருவின் செல்வி
அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்
தாபதக் கோலம் தாங்கினம் என்பது
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே?
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்தக்
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையைப்
பிச்சை மாக்கள் பிறர் கைக் காட்டி  18-030

மற்று அவன் தன்னால் மணிமேகலை தனைப்
பொன் தேர்க் கொண்டு போதேன் ஆகின்
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர்
மனைஅகம் புகாஅ மரபினன் என்றே
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகையுயிர்த்து
வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழக்
குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள்  18-040

கடுந் தேர் வீதி காலில் போகி
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறைப்
பவழத் தூணத்து பசும் பொன் செஞ் சுவர்த்
திகழ் ஒளி நித்திலச் சித்திர விதானத்து
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து
துளங்கும் மான் ஊர்தித் தூ மலர்ப் பள்ளி
வெண் திரை விரிந்த வெண் நிறச் சாமரை
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச  18-050

இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தித்
திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன்
மாதவி மணிமேகலையுடன் எய்திய
தாபதக் கோலம் தவறு இன்றோ? என
அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப
ஒரு தனி ஓங்கிய திரு மணிக் காஞ்சி
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
நாடகம் விரும்ப நல் நலம் கவினிக்
காமர் செவ்விக் கடி மலர் அவிழ்ந்தது
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய  18-060

விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர்ப்
பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது
வாழ்க நின் கண்ணி! வாய் வாள் வேந்து! என
ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன்
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன்
மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது
ஓவியச் செய்தி என்று ஒழிவேன் முன்னர்
காந்தள் அம் செங் கை தளை பிணி விடாஅ
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம்
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த  18-070

முத்துக் கூர்த்தன்ன முள் எயிற்று அமுதம்
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப
விருந்தின் மூரல் அரும்பியதூஉம்
மா இதழ்க் குவளை மலர் புறத்து ஓட்டிக்
காய் வேல் வென்ற கருங் கயல் நெடுங் கண்
அறிவு பிறிதாகியது ஆய் இழை தனக்கு என
செவிஅகம் புகூஉச் சென்ற செவ்வியும்
பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவை என்
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு என்று
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர்ப்  18-080

பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றிச்
செங்கோல் காட்டிச் செய் தவம் புரிந்த
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள்
தெய்வம்கொல்லோ? திப்பியம்கொல்லோ?
எய்யா மையலேன் யான்! என்று அவன் சொலச்
சித்திராபதி தான் சிறு நகை எய்தி
அத் திறம் விடுவாய் அரசு இளங் குருசில்!
காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன
தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்?
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி  18-090

ஆயிரம் செங் கண் அமரர் கோன் பெற்றதும்
மேருக் குன்றத்து ஊரும் நீர்ச் சரவணத்து
அருந் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய
பெரும் பெயர்ப் பெண்டிர்பின்பு உளம் போக்கிய
அங்கி மனையாள் அவரவர் வடிவு ஆய்த்
தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம்
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில்?
கன்னிக் காவலும் கடியின் காவலும்
தன் உறு கணவன் சாவுறின் காவலும்
நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது  18-100

கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல் அரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச்
செருக் கயல் நெடுங் கண் சுருக்கு வலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப்
பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மையின் பிணித்துப் படிற்று உரை அடக்குதல்  18-110

கோன்முறை அன்றோ குமரற்கு? என்றலும்
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து
விரை பரி நெடுந் தேர்மேல் சென்று ஏறி
ஆய் இழை இருந்த அம்பலம் எய்தி
காடு அமர் செல்வி கடிப் பசி களைய
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போலத்
தீப் பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப்
பாத்திரம் ஏந்திய பாவையைக் கண்டலும்
இடங்கழி காமமொடு அடங்காண் ஆகி
உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என்  18-120

நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி
நோற்றூண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்? என
தானே தமியள் நின்றோள் முன்னர்
யானே கேட்டல் இயல்பு எனச் சென்று
நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது?
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன்
தன் அடி தொழுதலும் தகவு! என வணங்கி
அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்  18-130

இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும்
தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல்
நன்றி அன்று! என நடுங்கினள் மயங்கி
கேட்டது மொழியேன் கேள்வியாளரின்
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின்
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு  18-140

பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ
கேட்டனை ஆயின் வேட்டது செய்க! என
வாள் திறல் குருசிலை மடக்கொடி நீங்கி
முத்தை முதல்வி முதியாள் இருந்த
குச்சரக் குடிகை தன் அகம் புக்கு ஆங்கு
ஆடவர் செய்தி அறிகுநர் யார்? எனத்
தோடு அலர் கோதையைத் தொழுதனன் ஏத்தி
மாய விஞ்சை மந்திரம் ஓதிக்
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய்
மணிமேகலை தான் வந்து தோன்ற  18-150

அணி மலர்த் தாரோன் அவள்பால் புக்குக்
குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப்
பிச்சைப் பாத்திரம் பெரும் பசி உழந்த
காயசண்டிகை தன் கையில் காட்டி
மாயையின் ஒளித்த மணிமேகலை தனை
ஈங்கு இம் மண்ணீட்டு யார் என உணர்கேன்?
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின்
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்!
இன்னும் கேளாய் இமையோர் பாவாய்!
பவளச் செவ் வாய்த் தவள வாள் நகையும்  18-160

அஞ்சனம் சேராச் செங் கயல் நெடுங் கணும்
முரிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனைக்
கவை முள் கருவியும் ஆகிக் கடிகொள
கல்விப் பாகரின் காப்பு வலை ஓட்டி
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
புதுக் கோள் யானை வேட்டம் வாய்ந்தென
முதியாள்! உன் தன் கோட்டம் புகுந்த
மதி வாள் முகத்து மணிமேகலை தனை
ஒழியப் போகேன் உன் அடி தொட்டேன்
இது குறை என்றனன் இறைமகன் தான் என்  18-172

உரை

மணிமேகலை பிக்குணிக் கோலங் கொண்டு அம்பலம்புக்க செய்திகேட்ட சித்திராபதியின் சீற்றமும் செயலும்

1-9: ஆங்கது................கூறும்

(இதன் பொருள்) சித்திராபதிதான்-முன்னரே தீவகச் சாந்தி செய்தரும் நன்னாள் மணிமேகலையோடு மாதவி வாராமையாலே தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர நெஞ்சம் புண்ணாகியிருந்த சித்திராபதியாகிய மாதவியின்தாய்; ஆங்கு அது கேட்டாங்கு மணிமேகலை பிச்சைப் பாத்திரம் ஏந்திப் பிக்குணிக் கோலத்தோடு உலகவறவியினூடு சென்றேறினள் என்னும்  அப்பொழுது நிகழ்ந்த செய்தியைக் கேட்டவளவிலே; கரும்புண் அகவயின் தீதிறு செங்கோல் சென்று சுட்டாங்கு-பழம் பெரும் புண்ணினூடே தீயினுட் செருகிப் பழுக்கக் காய்ச்சிய சிவந்த சூட்டுக்கோல் புகுந்து சுட்டு வருத்தினாற் போன்று அச் செய்தி முன்னரே புண்பட்டிருந்த தன்னெஞ்சத்தை ஆற்றவும் வருத்தியதனாலே; கொதித்தவுள்ளமொடு குரம்பு கொண்டேறி விதுப்புற நெஞ்சினள் வெய்து உயிர்த்துக் கலங்கி- வெம்மிய நெஞ்சத்தோடு எல்லையைக் கடந்துயர்ந்து துடிதுடிக்கின்ற நெஞ்சத்தையுடையவளாகி வெய்தாக நெடுமூச் செறிந்து கலக்கமுற்று; இ அறம் தீர்ப்பல் என-மணிமேகலை மேற்கொண்ட இவ் வறத்தை ஒழித்து அவளை மீட்பல் என்று துணிந்து; கூத்தியல் மடந்தையர்க்கெல்லாம் கூறும்-அத் தெருவில் உறைகின்ற நாடகக் கணிகை மகளிர் அங்கு வந்து குழுமியவர்களை நோக்கிக் கூறுவாள் என்க.

(விளக்கம்) சித்தராபதி முன்பே நெஞ்சம் புண்ணாகி மாதவி மணிமேகலை இருவர் பெரிதும் வருந்தி யிருப்பளாதலின் இப் பொழுது மணிமேகலையும் பிக்குணியாகிய செய்தி ஆற்றொணாத்துயர் செய்தலியல்பே ஆகலின் அதற்கேற்ப உவமை தேர்ந்துரைப்பவர் கரும் புண் அகவயின் தீத்துறு செங்கோல் சென்று சுட்டாங்கு என்றினிதின் ஓதினர். சுட்டாங்கு-சுட்டாற்போல. சுட்டாங்கு அச் செய்தியாற் சுடப்பட்டுக் கொதித்த என்றவாறு. குரம்பு கொண்டேறுதல்-அணையிடப் பட்டிருந்து பின்னர் அவ்வணையையும் உடைத்துக் கொண்டு செல்லுதல். எனவே ஈண்டுச் சித்திராபதி முன்னர்த் துன்பத்தைத் தன்னுள் அடக்கி யிருந்த ஆற்றைலையும் அழித்து இத் துயரம் மிக்கெழுந்த தென்பார் இங்ஙனம் உவமை கூறினர். குரம்பு-அணைக்கட்டு. விதுப்புறு நெஞ்சு-இதற்கேதேனுஞ் செய்ய வேண்டும் என்று முனைப்புற்றுத் துடிக்கும் நெஞ்சம்.

கூத்தியன் மடந்தையர்க் கெல்லாம் கூறும் என்ற குறிப்பால் அப் பொழுது அவள் எய்திய இன்னல் நிலைக்கு இரங்கி அங்குக் கூத்தியல் மகளிர் வந்து குழுமினர் என்பது பெற்றாம்.

தீர்ப்பல் இவ்வறம் என்றது சித்திராபதியின் உட்கோள். கூத்தியல் மடந்தையர்- நாடகக் கணிகை மகளிர்.

சித்திராபதியின் சூள் உரை

7-15: கோவலன்.............அல்லேம்

(இதன் பொருள்) கோவலன் இறந்தபின் மாதவி கொடுந்துயர் எய்திய மாதவர் பள்ளியுள் அடைந்தது- நமரங்காள் எல்லீரும் கேளுங்கள்! கோவலன் என்னும் வணிகன் மாமதுரை சென்று கொலையுண்டிறந்த பின்னர் மாதவியாகிய என் மகள் கொடிய துன்ப மெய்திச் சிறந்த தவத்தோர்க்கே உரிய பவுத்தருடைய தவப் பள்ளியிலே புகுந்த செயலானது, நகுதக்கன்று நம்மனோர்க்கெல்லாம் நகத் தகுந்ததொரு செயலேயாயிற்று; நல்நெடும் பேரூர் இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது- நன்மையுடைய நெடிய பெரிய இப் பூம்புகார் நகரத்தே ஆடலும் பாடலும் அழகுமாகிய கலையைப் பேணி வாழுகின்ற இந் நாடகக் கணிகையர் செயலும் நமக்கு இன்றியமையாத தகுதியுடைய தொன்றே என்று நம்மைப் பாராட்டும் கலையுணர்வுடையோர்க்கெல்லாம் நம்மை இகழும் மொழியைத் தோற்றுவிப்பதாகவும் ஆயிற்றுக் கண்டீர்!; காதலன் வீய கடு துயர் எய்தி போதல் செல்லா உயிரொடு புலந்து- யாமெல்லாம் தம் காதலன் இறந்துபட்ட பொழுதே கடிய துயரத்தை அடைந்து தானே போயொழியாத தம் உயிரினது புன்மை கருதி அதனொடு பிணங்கி; நளி இரும் பொய்கை ஆடுநர் போல முளி எரி புகூஉம் முதுக்குடிப் பிறந்த பத்தினிப் பெண்டிர் அல்லேம்-குளிர்ந்த பெரிய நீர் நிலையில் புகுந்து நீராடுவார் போன்று வேகின்ற ஈமத்தீயிலே புகுதுமியல் புடைய பழைய உயர் குடியிலே பிறந்த பத்தினிப் பெண்டிரல்லமே என்றாள் என்க.

(விளக்கம்) கோவலன் என்றது யாரோ ஒரு வணிகனாகிய கோவலன் என்பதுபட நின்றது. என்னை? நகர நம்பியர் பலர். நம்மைக் காமுற்று வருபவர் ஆவர். அவருள் ஒருவனாகக் கருதிக் கோவலன் இறந்தமை பற்ற மாதவி ஒரு சிறிதும் கவலாதிருக்க வேண்டியவள் என்பதுபட அவனது அயன்மை தோன்ற வாளாது கோவலன் என்றாள் என்க. நம்மனோரால் நகுதக்கதொன்று. பேரூரின்கண் கலைப்பொருள் பற்றி இவர் வாழ்க்கையும் தக்கது என்று நம்மைப் பாராட்டும் கலையுணர் பெருமக்களுக்கு எள்ளுரை ஆயது என்று நுண்ணிதிற் கூறுக.

முதுக்குடிப் பிறந்தோர், காதலன் இறப்பின் அப்பொழுதே தானே போகும் உயிரே தலையாய பத்தினிப் பெண்டிர் உயிரியல்பாகும், அங்ஙனம் போகாத உயிரைப் புலந்து இடையாய பத்தினிப் பெண்டிர் முளியெரி புகுவர். கடையாய பத்தினிப் பெண்டிர் நோன்பு மேற்கொள்வர். மாதவி அம் முதுக்குடிப் பிறந்தாள் அல்லள் ஆகவும் அவர் செய்வது செய்தாள். இச் செயல் பத்தினிப் பெண்டிர்க்காயின் புகழும் மதிப்பும் தரும். நம்மனோர் செய்யின் நம்மனோரில் எஞ்சியோர்க்கு நகைப்பையும் முதுக்குடிப் பிறந்தோர்க்கு எள்ளல் உரையையுமே தோற்றுவிக்கும் என்று கூறுகின்றனள் என்க.

காதலர் இறந்தவழிப் பத்தினிப் பெண்டிர் நிலையை ஊரலர் தூற்றிய காதையில் மாதவியும் திறம்பட ஓதினமை ஈண்டு நினைவிற் கொள்க.

சித்திராபதி கணிகையரியல்பு கூறல்

15-24: பலர்..........அன்றே

(இதன் பொருள்) பலர் தம் கைத்து ஊண் வாழ்க்கை கடவியம் அன்றே!- நமரங்காள்! யாமெல்லாம் நம்மைக் காமுற்று வருகின்ற நகர நம்பியர் பலருடைய கைப்பொருளைக் கவர்ந்துண்ணும் வாழ்க்கையையே கடமையாகக் கொண்டுளேமல்லமோ!; பாண் மகன் பட்டுழிப் படூஉம் யாழ்இனம் போலும் பான்மையில் இயல்பினம்-இனி யாமெல்லாம் நம்மைக் காமுற்று வருவோன் ஒருவன் இறந்தொழிந்தானாயின் என்னாவோம் எனின் பாணன் இறந்தபொழுது அவன் பயின்ற யாழ் முதலிய இசைக் கருவி தம்மைப் பயிலவல்ல கலைவாணர் பிறர் கையிலே பட்டு அவராலே பயிலப்படுமாறுபோல நமக்கு வேண்டுவன செய்து நம்மொடு பயிலத் தகுந்த பிற காமுகர் பாலேம் ஆகும் இயல்பினம் அல்லமோ? அன்றியும்; நறுந்தாது உண்டு நயன்இல் காலை வறும் பூ துறக்கும் வண்டும் போல்குவம்-ஏன்? நம்மைக் காமுற்று வருபவன் செல்வனாந்துணையும் அவனை நயந்து செல்வம் இன்றி நல்குரவுடையனாய பொழுதே நாம் கைவிட்டு விடுவதனால் யாம் நறிய தேன் உள்ள துணையுமிருந்து அஃதொழிந்த பொழுது அந்த வறும்பூவைத் திரும்பிப் பாராமல் மீண்டுமொரு தேன் பொதுளிய மலரை நாடிச் செல்லும் வண்டினத்தையும் ஒப்பாகுவம் அல்லமோ? வண்டென நம்மை நாம் தாழ்த்திக் கூறிக் கொள்வானேன்?வினையொழி காலை திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர் துறப்பேம் வினையொழிகாலைத் திருவின் செல்வி அனையேம் ஆகி- ஆகூழ் ஒழிந்த விடத்தே தன்னாதரவிற் பட்டவரைக் கைவிட்டகன்று பிறரிடம் போகும் திருமகளாகிய தெய்வத்தைப் போலவே யாமும்; ஆடவர் துறப்பேம்- பொருளின்றி நல்குரவுற்றாரை அப் பொழுதே துறந்துவிடுவோ மல்லமோ! இத்தகைய இயல்புடைய நாடகக் கணிகையராகிய யாம்; தாபதக் கோலம் தாங்கினம் என்பது- யாரோ ஒரு காமுகன் இறந்துபட்டான் என்று துறவுக் கோலம் பூண்டேம் என்னும் இச் செய்தி உலகில் வாழும்; யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே- எத்தகையோரும் எள்ளி நகையாடுதற் கியன்ற தொரு செய்தியே யாகும் என்பது தேற்றம் என்றாள் என்க.

(விளக்கம்) பலர்- செல்வர் பலர். கைத்து-கைப்பொருள். பான் மையில் யாம் பாண்மகன் பட்டுழிப் படூஉம் யாழினம் போலும் இயல்பினம் என மாறுக. பான்மை- இயல்பு. இஃதென் சொல்லியவாறோ வெனின் பயிற்சிமிக்க பாணனுடைய யாழ் அவன் இறந்துழித் தான் அழிவின்றியே பயிற்சிமிக்க பிறபாணர் கையதாய்த் தன் தொழிலைச் செய்யுமாறுபோல யாமும் நமது பிறப்பியல்பினாலே நம்மொடு பயிலும் செல்வர்பாற் பயிலுதலும்; அவன் இறந்துபடின் துயரமின்றி அத்தகு பிறசெல்வர்பாற் பயிலுவோம், இதுவே நமக்கியல்பான பண்பு. இத்தகைய பண்புடைய யாம் ஆயிரவருள் ஒருவனாகக் கருதப்படுகின்ற ஒரு காமுகச் செல்வன் இறந்தான் எனத் துறவுக் கோலம் பூண்பது உலகில் அனைவராலும் எள்ளி நகைத்தற் குரியதொரு செயலேயாம் என்றவாறு. இது பொதுவிற் கூறப்பட்டதேனும் முன்பு கோவலன் இறந்தபின் கொடுந்துயர் எய்தி மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது நகுதக்கன்றே என்றதனை ஏதுவும் எடுத்துக் காட்டுங் கூறி மாதவி செயலைப் பழித்த படியாம்.

இனிக் கோவலன்  தன் மனைவி சிலம்பை விற்குமளவிற்கு நல்குர வெய்தினான் ஆகலின் அவனை மாதவியே கைவிடற்பால ளாவாள் அத்தகையோன் தானே அவளைத் துறந்தமை கருதின் அவள் மகிழவே வேண்டும். அவளஃதறியாது கடுந்துயர் எய்தி மாதவர் பள்ளியுள் அடைவது எத்துணைப் பேதைமைத் தென்றற்கு யாம் நறுந்தாதுண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் அல்லமோ என்றாள். இவ்வாறு செய்வது இழிதகவுடைத்தென்று எண்ணற்க. திருவின் செல்விகூட நம்மோரனைய இயல்பினளே என்று தம் குலத்திற்கும் ஒரு சிறப்புக் கூறுவாள் யாம் திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம் என்றனள். ஈண்டு இவள் இராமவதாரத்திற் கம்பர் காட்டும் கொடுமனக் கூனி போலவே காணப்படுதல் இவளுடைய மொழித் திறத்தில் வைத்துணர்க.

சித்திராபதியின் சினஞ்சிறந்து செப்பிய வஞ்சினமொழி

25-36: மாதவி...........சாற்றி

(இதன் பொருள்) மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி போது அவிழ்செவ்வி பொருந்துதல் விரும்பிய- நத்தம் குலவொழுக்கங் கடந்த அறிவிலியாகிய அந்த மாதவி பெற்ற மணிமேகலையென்னும் பெயரையுடைய பூங்கொடி அரும்பி இதழ்விரித்து மலருகின்ற புத்தம் புதிய செவ்வியிலே அம் மலரினகத்தே அமர்ந்து புதுத் தேன் பருகுதற்குப் பெரிதும் அவர்க்கொண்ட;(அலமருகின்றது ஒரு மணிவண்டு நமரங்காள்! அவ்வண்டினை நீயிர் அறியீர் போலும் எதிர்பார்த்துத் திரிகின்ற அவ்வண்டு) உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்- உதயகுமரன் என்னும் பெயரையுடைய உலகத்தையே ஆளுமொரு சிறப்பான வண்டு கண்டீர்! அவ் வண்டின்; சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த-உறுதி குலையாத உள்ளமாகிய திருவாயினாலே நன்கு ஆரப் பருகும்படி; கைக் கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையைப் பிச்சைமாக்கள் பிறர்கைக் காட்டி- யான் கைப்பற்றிக் கொண்டு அந்த மணிமேகலை தன் செங்கையி லேந்தியிருக்கின்ற பிச்சைக் கலத்தை இயல்பாகப் பிச்சை ஏற்கும் இரவலர் கையிடத்தாகும்படி பறித்து வீதியிலே வீசிப் போகட்டு; மற்று அவன்றன்னால் மணிமேகலை தனைப் பொன் தேர் கொண்டு போதேன் ஆகின்-முன் யான் கூறிய அவ்வுதிய குமரனாலேயே அவளை அவனது பொன்னாலியன்ற தேரிலே ஏற்றுவித்துக் கொண்டு வருவேன் காண்! அங்ஙனம் வாராதொழிவேனாயின்; சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி வடுவொடு வாழும் மடந்தையர் தம் ஓர் அனையேன் ஆகி நம்மனோரில் குடிக்குற்றப்பட்டுத் தலையிலே செங்கலை ஏற்றிச் சுமக்கச் செய்து நாடக அரங்கினை நாட்டவர் காணச் சுற்றி வந்தமையாலே தமக்குண்டான பழியோடு உயிர் சுமந்து வாழுமகளிரோடு ஒரு தன்மையுடையேனாய்; அரங்கக் கூத்தியர் மனையகம் புகா மரபினன் என்று வஞ்சினம் சாற்றி-உலகினர் மதிப்பிற்குரியராக இனிது வாழுகின்ற நாடகக் கணிகையர் வாழ்கின்ற இல்லம் புகாத முறைமையினையுடைய இழிதகைமையுடையேன் ஆகுவன் இது வாய்மை! என்று பலரும் கேட்கச் சூண்மொழி சொல்லி; என்க.

(விளக்கம்) பூம்புகார் நகரத்தே வாழ்கின்ற நாடகக் கணிகையர் மரபினுள்ளும் சித்திராபதியின் குடி பெரிதும் சிறப்புடைய குடி என்பதனை

தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திரன் சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதவிழ் புரிகுழன் மாதவி    (அரங்கேற்று-1-7)

எனவும்,

மங்கை மாதவி வழிமுதற் றோன்றிய
அங்கர வல்குலும்     (6-2-4-5)

எனவும் வரும் சிலப்பதிகாரத்தானும் அறியப்பட்டது

அத்துணைச் சிறப்பான குடிப் பெருமையை இம் மாதவி தாபதக்கோலந் தாங்குமாற்றால் கெடுத் தொழிந்தாள் என்பது அவள் உட்கோள் ஆகும். மேலும் அவள் அக் குலக் கொழுந்தாகிய மணிமேகலை என்னும் மலர்பூங் கொம்பினை அது மலர்ந்துள்ள செவ்வியில் பிக்குணிக் கோலம் பூட்டிப் பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்ல விடுத்த செயலை எண்ணுந்தோறும் அவள் சினம் தலைத் தலைப் பெருகி வருகின்றது. அவளுக்கும் குடிப்பழி வந்துற்றதைக் காணவே, (தம்முள்ளும் சித்திராபதி குடியினாற் பெரிதும் தனக்கு மதிப்புண்டென்று செருக்குற்றிருந்த வட்கும் பழிவந்துற்றமை கண்டு உள்ளுள்ளே உவத்தற்கே ஏனைய கணிகையர்) அரங்கக் கூத்தியர் எல்லாம் ஒருங்கு குழுமி நிற்கின்றனர். ஆதலால் அளியள் அச் சித்திராபதி அம் மகளிர் முன் தன் குடிப்பழி தீர்த்தற்குத் தான் செய்யப் போவது இன்னது என்று சீற்றஞ் சிறக்கப் பேசும் இப் பேச்சுக்கள் பெரிதும் இயற்கை நவிற்சியே ஆதலறிக.

இனி, மாதவியின்பா லுண்டான வெறுப்பினாலே என் மகள் என்னாது அவளை ஏதிலாள் போன்று மாதவி என்றமையும் உணர்க மணிமேகலை தவறிலள்; அவள் தாய் பூட்டிய கோலத்தை ஏற்றனள் என்னுங் கருத்துடையளாதலின் அவளை மணிமேகலையாகிய வல்லி என்றும், அவ் வல்லி புதிதலரும் பூவின்கட் பொருந்திக் காமத் தேனுகர ஓர் உலகாள் வண்டு காத்திருக்கின்றது என்றும் கூறுமிக்கூற்றுத் தன் செருக்கை மீண்டும் நிலைநாட்டுதற் பொருட்டுத் தன் குடிப்பெருமை கூறியவாறு.

பிச்சைப் பாத்திர மேந்திப் பெருந் தெருப்புக்காளொரு கணிகை மகளை உலகாள் வேந்தன் மகன் ஒருவன் விரும்புதலும் உளதாமோ? என்று ஐயுறுவார் அக் கணிகையருட் பலர் உளராகலாமன்றே, அவர் தம் ஐயந் தீர்ப்பாள் அவ் வண்டு, சிதையாவுள்ளம் உடைய வண்டு என்றாள். அவ் வேந்தன் மகன் அவளைப் பெறுதற் பொருட்டு யான் ஏவிய அனைத்தும் செய்குவன் என்பது தோன்ற மற்றவன்றன்னால் மணிமேகலையைப் பொற்றேர்க் கொண்டு போதுவல் கண்டீர்! என்றாள்.

மணிமேகலை பிச்சைப் பாத்திரம் ஏந்தியதாலே வந்த இழிவொன்று மில்லை. அவள் தானும் என் வழிக்குடன்பட்டு வருவாள் என்பது தோன்ற பிச்சைப் பாத்திரம் பிறர் கைக் காட்டிப் பொற்றேர்க் கொண்டு போதுவல் என்றாள். இனி சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் என்பதனாலும்( சிலப்- 14:146) பதியிலாரிற் குடிக் குற்றப் பட்டாரை ஏழு செங்கற் சுமத்தி ஊர் சூழ்வித்தல் மரபு எனவரும் அடியார்க்கு நல்லார் விளக்கத்தாலும் அக் காலத்தே அவ் வழக்க முண்மை புலனாகும்.

வடுவொடு வாழும் கணிகையர் ஏனைய கணிகையர் மனையகம்புகுதல் கூடாதென்னும் விதியுண்மையும் இவள் கூற்றாற் பெற்றாம்.

சித்திராபதி உதயகுமரன் அரண்மனை எய்துதல்

37-42: நெஞ்சு...........குறுகி

(இதன் பொருள்) நெஞ்சு புகை உயிர்த்து- சினத்தீப் பற்றி எரிதலாலே நெஞ்சினின்றும் புகைபோன்று வெய்தாக உயிர்ப் பெறிந்து அவ்விடத்தினின்றும் அரண்மனை நோக்கிச் செல்லுபவள் செல்லும் பொழுதே; மாண்பொடு வஞ்சக் கிளவி தேர்ந்து மன்னவன் மகனைத் தன் வழிப்படுத்தற்கு அவனுடைய மாட்சிமையோடு பொருந்துகின்ற வஞ்சக மொழிகளை இன்னின்னவாறு பேசுதல் வேண்டும் என்று தன்னெஞ்சத்தே ஆராய்ந்து கொண்டு; செறிவளை நல்லார் சிலர் புறஞ் சூழ- தன் குற்றேவற் சிலதியருள்ளும் திறமுடையார் ஒரு சிலரே தன்னைச் சூழ்ந்துவாரர் நிற்ப; குறுவியர் பொடித்த கோலவான் முகத்தள்-குறிய வியர்வை நீர் அரும்பியுள்ள அழகிய ஒளி படைத்த முகத்தையுடைய அச் சித்திராபதி; கடுந்தேர் வீதி காலின் போகி விரைந்து-தேர்களியங்குகின்ற வீதி வழியே காலாலே கடுகிச் சென்று; இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி- இளவரசனாகிய உதயகுமரன் உறைகின்ற இடத்தை அணுகி என்க.

(விளக்கம்) நெஞ்சத்தே சினத்தீ பற்றி எரிதலின் அங்கிருந்து வருகின்ற உயிர்ப்பைப் புகை என்றே குறிப்புவம மாக்கினர். தான் வயப்படுத்த வேண்டிய மன்னிளங் குமரன் பெருந்தகைமைக் கேற்பவே பேச வேண்டுதலின் வஞ்சக் கிளவியாயினும் மாண்புடையவே தேர்ந்து கொள்ளல் வேண்டிற்று. மன்னன் மகன்பாற் செல்ல வேண்டுதலின் திறமுடைய ஒரு சில பணிமகளிரையே தேர்ந்து அவர் தற்சூழச் சென்றாள் என்றவாறு. சித்திராபதி தானும் ஊர்வசி வழித் தோன்றியவள் ஆதலின் அவள் முகம் அந்த முதுமைக் காலத்தும் அழகும் ஒளியும் உடைத்தாகவே இருந்தது. அம் முகத்திற் பொடித்த குறு வியரும் அவட்கு ஓரணியே தந்தது என்பார் குறுவியர் பொடித்த கோலவாள் முகத்தள் என்று விதந்தோதினர். காலிற்போகி- காற்றுப் போல விரைந்து சென்று எனினுமாம்.

உதயகுமரன் இருக்கை வண்ணனை

43-51: அரவ.................ஏத்தி

(இதன் பொருள்) அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் தருமணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறை-நறுமணத்தினன்றி வேறிடஞ் செல்லுதலில்லாத இயல்புடைய வண்டினங்களும் தேனினங்களுமே இசை முரன்று திரிகின்ற புதுவதாகக் கொணர்ந்து பரப்பிய மணலையுடைய அழகின் பிறப்பிடமாகிய ஒரு பக்கத்திலே; பவழத்தூணத்துப் பசும் பொன் செஞ்சுவர்த் திகழ் ஒளி நித்திலச் சித்திரவிதானத்து விளங்கு ஒளி பரந்த-பவழங்களாலியன்ற தூண்களையும் பசிய பொன்னாலியன்ற சிவந்த சுவரின்கண் விளங்குகின்ற ஒளியும் முத்தினாலியன்ற சித்திரச் செயலமைந்த மேற்கட்டியினின்றும் விளங்குகின்ற ஒளியும் யாண்டும் பரவப்பெற்ற; பளிங்கு செய் மண்டபத்து- பளிங்கினாலே அழகுறச் செய்யப் பெற்றதொரு மண்டபத்தினூடே இடப்பட்ட; துளங்கு மான் ஊர்தித் தூமலர்ப்பள்ளி-ஒளிதவழுகின்ற பொன்னானும் மணியானுஞ் செய்த அரிமான்கள் சுமந்திருக்கின்ற தூய மலர்கள் பரப்பப்பட்ட பள்ளியின் மேல் வெள் திரை விரிந்த வெள்நிறச் சாமரை கொண்டு இருமருங்கும் கோதையர் வீச- வெள்ளிய பாற்கடலின் அலைகள் போல விரிந்து புரள்கின்ற வெண்ணிறமான சாமரைகளைச் செங்கையிலேந்தி அக் கட்டிலின் இரண்டு பக்கத்தேயும் அழகிய மங்கல மகளிர் நின்று வீசாநிற்ப; இருந்தோன் திருந்து அடி பொருந்தி வீற்றிருந்த அரசிளங்குமரனாகிய உதயகுமரன் அழகிய திருவடியிலே வீழ்ந்து வணங்கிச் சித்திராபதி; நின்று ஏத்தி எழுந்து கை கூப்பித் தொழுது நின்று பாராட்ட என்க. 

(விளக்கம்) அரவம்-இசைமுரற்சி. வண்டு தேன் சுரும்பு மிஞிறு தும்பி என்பன வண்டுகளின் வகைகள். அவற்றுள் வண்டும் தேன் என்பனவும் நறுமணங்கமழும் மலர்களிலன்றிப் பிற மலர்களிற் செல்லா என்பது பற்றி அவ் விரண்டனையும் ஓதினர் என்பர். இதனைச் சீவக சிந்தாமணியில்(892) மிஞிற்றில் சுரும்பு சிறத்தலின் அதனை முற்கூறினார்..........இவை எல்லா மணத்திலுஞ் செல்லும்; மதுவுண்டு தேக்கிடுகின்ற வண்டுகாள்! மதுவுண்டு தேக்கிடுகின்ற தேன்காள்! என்க. இவை நல்ல மணத்தே செல்லும் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் நல்லுரையாலறிக.

தருமணல்- கொணர்ந்து பரப்பிய புதுமணல். ஞெமிர்தல்-பரப்புதல். திரு அழகு. நாறுதல்- தோன்றுதல். இனி, புதுமணல் பரப்பிய இடம் திருப்பாற்கடல்போற் றிகழ்தலின் திருமகள் பிறக்கும் பாற்கடற் பரப்புப் போலுமோரிடத்தே எனினுமாம்.

பவழத்தால் தூணிறுத்திப் பசும்பொன்னாற் சுவரியற்றப் பட்டிருத்தலின் செவ்வொளி திகழா நிற்ப, வெண்ணிற முத்துப் பந்தரின் கீழ் இயற்றப்பட்ட பளிக்கு மண்டபம் என்க. இது மண்டபத்துள்ளமைந்த பள்ளியறை என்க.

துளங்கும் மானூர்தி என்றார் மான்களும் மணியினும் பொன்னினும் இயன்றவை என்பது தோன்ற. துளங்கும்- ஒளிதவழ்கின்ற. மான்-அரிமான், சிங்கம். நான்கு சிங்கங்கள் சுமந்து நிற்பது போன்று அவற்றைக் கால்களாக அமைத்துச் செய்த பள்ளிக் கட்டில் என்க. அரசன் மகன் கட்டிலாதலின் அரிமான் சுமந்த கட்டில் வேண்டிற்று. திரை போல விரிந்த சாமரை என்க. கோதையர் என்றார் அவரது இளமை தோன்ற. இவர் பணி மகளிர். அடி பொருந்தி-அடியில் வீழ்ந்து வணங்கி. அரசரை வணங்குவோர் கொற்றங் கூறி வாழ்த்துதல் மரபு ஆதலின் ஏத்தி என்றது வாழ்த்தி என்றவாறாயிற்று.

உதயகுமரன் சித்திராபதியின்பால் மணிமேகலை நிலை என்னாயிற் றென்று வினாதலும் அவள் விடையும்.

52-63: திருந்து..................வேந்தென

(இதன் பொருள்) திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கவன் சித்திராபதியின் வருகை கண்டு தன் அழகிய பற்கள் தோன்று மளவில் இதழ் திறந்து சிறிதே சிரித்த உதயகுமரன் அவள் முகம் நோக்கி; மாதவி மணிமேகலையுடன் எய்திய தாபதக் கோலம் தவறு இன்றோ என-முதியோய் நின் மகள் மாதவி தன் மகளோடு ஒரு சேர மேற்கொண்ட பிக்குணிக் கோலம் பிழையின்றி நன்கு நடைபெறுகின்றதோ? என்று நாகரிகமாக வினவா நிற்ப; வாழ்க நின் கண்ணி அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப ஒரு தனி ஓங்கிய திருமணிக் காஞ்சி- மாதவி பெறுதலாலே ஒப்பற்ற பெருஞ் சிறப்போடு உயர்ந்து விளங்குகின்ற அழகிய மணிமேகலை தானும் இப்பொழுது; பாடல் சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய நாடகம் விரும்ப நல்நலம் கவினிக்காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது- புலவர்களால் பாடப்பெற்ற இசைப்பாடல்களோடு கூடிய நாடக நூலின்கண் உயர்ந்து திகழ்கின்ற ஆடற்கலை தானே தன்னைப் பெரிதும் விரும்பி வரவேற்கும்படி ஆடல் பாடல் அழகு என்னும் அழகிய மூன்று பண்புகளானும் நன்மைகள் நிரம்பிப் பேரழகெய்தி, காதல் பிறக்கும் செவ்வியையும் விளக்கத்தையும் உடையவளாய் நெஞ்சமாகிய நறுமலர் நன்கு தளையவிழப் பெற்றனள்; உதயகுமரன் என்னும் ஒரு வண்டு உணீஇய விரைவொடு வந்தேன்-அந் நாண் மலரிற் பொதுளிய நறுந்தேனை உதயகுமரன் என்னும் பெயரையுடைய ஒப்பற்ற வண்டு பருக வேண்டும் என்னும் குறிக்கோளுடனேயே அடிச்சி ஈண்டு விரைந்து வந்துளேன்; வாள் வாய் வேந்து-வாள் வென்றி வாய்ந்த வேந்தர் பெருமானே; வியன் பெருமூதூர் பாழ்மம் பறந்தலை அம்பலத்து ஆயது-ஆயினும் அம் மலர் இப்பொழுது மாதவி ஏவலாலே அகன்ற பெரிய பழைய இப் பூம்புகார் நகரத்தே பாழ்பட்ட இடமாகிய நன்காட்டின்கண் உலக வறவியென்னும் அம்பலத்தே சென்றுளது என்றாள் என்க.

(விளக்கம்) ஒரு காரியத்தில் தோல்வியுற்றிருப்பவர் அக் காரியத்துத் துணை செய்தவரைக் கண்ட பொழுது சிறிது நகைப்பது இயல்பு. அவ்வியல்பு தோன்ற உதயகுமரன் எயிறிலங்கு மளவே நக்கனன் என்றார். சித்திராபதி கூற்றின் வெளிப்படைப் பொருளே ஈண்டு உரையில் விரித்து வரையப்பட்டது. சித்திராபதி அங்குள்ள பணி மாந்தர்க்கும் பொருள் விளங்காத வகையில் உதய குமரனுக்கு மட்டுமே பொருள் தெளிவாகப் புலப்படும்படி கூறுகின்ற வித்தகம் பெரிதும் வியக்கத் தகுந்ததாம்.

சித்திராபதி தன் கூற்றின் பொருளை மறைத்தல் வேண்டி அதனையே சிலேடை வகையாலே வேறுவாய்பாட்டாற் கூறுகின்றாள். ஆகவே அவள் கூற்றிற்கு-அரிதாகவே காணப்படுகின்ற சிறப்பையுடைய குருக்கத்தி என்னும் பூங்கொடி ஒன்று அழகிய காஞ்சிப் பூவை மலர்ந்துளது. அங்ஙனம் மலர்ந்துள்ள அவ் வற்புத நிகழ்ச்சியைப் புலவர் பாடுஞ் சிறப்புடைய இப் பாரத கண்டத்திலே அமைந்த நாடுகளில் வாழ்கின்ற மாந்தர் எல்லாம் கண்டுகளிக்க விரும்புமாறு அக் காஞ்சிப்பூத்தானும் நாளரும்பாயிருந்தது; மண முதலிய நலங்களோடே அழகுடையதாய் நன்கு மலர்ந்துளது; அம் மலரிற்றேன் தெய்வத்தன்மையுடையதாக இருத்தல் வேண்டும் ஆகலின் அம் மலரின் திப்பியத் தேனை எங்கள் இறை மகனாகிய வண்டே உண்ண வேண்டும்; என்று கருதி இவ் வற்புத நிகழ்ச்சியைக் கூறவே யான் விரைந்து வந்தேன் என்பதே அவள் ஆண்டுள்ளோர் அறியும்படி கூறிய செய்தியாம்.

இதன் கண்-குருகு-குருக்கத்தி; மாதவி. கருவுயிர்ப்ப-மலரைத் தோற்றுவிக்க; ஈன. மணிக்காஞ்சி-அழகிய காஞ்சி மரம்(மாதவி மகள்) மணிமேகலை என்பவள். பாடல்-இசைப் பாடல்-இயல் பாடல்; பரதம்- பரதகண்டம்; பரதநூல். நாடகம்-கூத்து-நாட்டில் வாழ்வோர். நன்னலம்- நல்ல அழகு; அழகிய பெண்மை நலம். காமர் செவ்வி-காதல் தோன்றும் செவ்வி; அழகிய செவ்வி. கடிமலர் அவிழ்தல்- மணமுடைய மலர் மலர்தல். திருமணம் புரிதற்கியன்ற பூப்புப் பருவம் அடைதல்.

மணிமேகலையை மலராக உருவகித்தமைக்கும் அவளை மலராகவே கூறியதற்கும் உதயகுமரனை வண்டாகக் கூறியது பொருந்துதலும் உணர்க.

உதயகுமரன் அவள்பால் இடங்கழி காமமுடையாள் என்பதனை அவள் முன்பே அறிவாள் ஆதலின் அவள் உலகவறவியில் இருக்கும் பொழுதே சென்று கைப்பற்றுக, இன்றேல் வேறிடங்கட்குப் போதலும் கூடும் என்று அவனை ஊக்குவாள் யான்  விரைவொடு வந்தேன் என்றாள். முன்போல அவள் பகவனத்தாணையால் பன்மரம் பூக்கும் மலர் வனத்தில் இல்லை, இப்பொழுது அச்சஞ் சிறிதுமின்றிக் கைப்பற்றி வரலாம் என்பாள் அது பாழ்ம் பறந்தலை அம்பலத்தாயது என்றாள். நீ வேந்தன் என்பாள் வாய்வாள் வேந்தே என்பாள் வாய்வாள் வேந்தே என்றாள். இம்முறை நீ வெற்றியொடு மீள்குவை என்பாள் நின் கண்ணி வாழ்க! என்றாள்.

மணிமேகலையின்பால் காதல் கொண்டு கைகூடாமையால் ஏக்கற்றிருக்கும் உதயகுமரனின் உள்ளம்

63-80: ஓங்கிய...........முன்னர்

(இதன் பொருள்) ஓங்கிய பவுவத்து உடைகலப்பட்டோன் வான் புணை பெற்றென-அலைகள் உயர்ந்த பெரிய கடலின்கண் தான் ஊர்ந்து வந்த மரக்கலம் உடையக் கடலின் மூழ்கி உயிர் துறக்கும் நிலையை யடைந்தவொருவன் அவ்விடத்திலேயே தான் உய்ந்து கரையை எய்துதற் கேற்ற சிறப்புடைய தெப்பத்தைக் கண்டு அதனைத் தவறவிடாமல் கைப்பற்றுதல் போன்று; மணிமேகலையின்பால் தனக்குண்டான காமக்கடலை நீந்த மாட்டாது உயிர் துறக்கும் நிலையிலிருந்த உதயகுமரன் அச் சித்திராபதியின் வாயிலாய் இனி மணிமேகலையைக் கைப்பற்றி உய்யலாம் போலும் என்னும் உறுதி கொண்ட உள்ளத்தவனாய்; மற்று அவட்கு உரைப்போன்-அச் சித்திராபதிக்குக் கூறுவான்!; இஃது மேவிய பளிங்கின் விருந்தின் பாவை ஓவியச் செய்தி என்று ஒழிவேன் முன்னர்-மூதாட்டியே கேள்! பளிக்கறையினுள்ளிருந்து புறத்தே தோற்றிய மணிமேகலையின் உருவத்தை யான் கண்ணுற்ற பொழுது இவ்வுருவம் அதற்குத் தகந்த பளிங்கின் கண் ஓவியப் புலமைமிக்கோன் ஒரு வித்தகன் தன்கைத்திறம் தோன்ற இதுகாறும் யாரானும் வரையப்படாததொரு புதுமையோடு வரையப்பட்டதொரு பெண்ணோவியம் என்றே எண்ணிப் பெரிதும் அவ்வோவியன் தன்னுள்ளத்தே கருதிய அழகின் சிறப்பினை யானும் கருதிப்பார்த்து அஃது ஓர் ஓவியச் செயலே என்று அவ்விடத்தினின்றும் புறப்படுகின்ற பொழுது என் கண் முன்னரே; காந்தளம் செங்கைத் தளைபிணி விடா ஏந்து இள வனமுலை இறை நெரித்ததூஉம்-அங்ஙனம் கருதப்பட்டு நின்ற அம் மணிமேகலையின் செங்காந்தள் மலர் போன்ற சிவந்த கைகள் விரலாலே ஒன்றனோடொன்று பிணித்துக் கொண்ட பிணிப்பினை விடாவாய் அவளுடைய அணந்த இளைய அழகிய முலையிரண்டனையும் ஒரு சேரச் சிறிது நெரித்த செய்கையும்; அன்றியும், ஒளிர்பவளத்துள் ஒத்து ஒளி சிறந்த முத்து கூர்த்து அன்ன முள் எயிற்று அமுதம் அருந்து ஏமாந்த ஆர் உயிர் தளர்ப்ப-அவளுடைய ஒளியுடைய பவளம் போன்று சிவந்த திருவாயினுள்ளே தம்முள் நிரல்பட்டு ஒத்து வெள்ளொளியினாலே சிறப்புற்ற முத்துக்கள் தமக்கியல்பான வட்ட வடிவத்தைப் பெறாமல் கூர்த்திருந்தாற்போன்று கூரிய அவளதுவாலெயிற்றின் ஊறுகின்ற அமிழ்தினும் இனிய நீரைப் பருகுதற்கு ஏக்கற்று நிற்கின்ற உய்தற்கரிய என் உயிர் தழைக்கும்படி; விருந்தின் மூரல் அரும்பியதூஉம்-புதுமையுடையதொரு புன்முறுவல் பூத்த செய்கையும் ஆகிய இவற்றைக் கண்டு; ஆய் இதழ்க்குவளை மலர் புறத்து ஓட்டிக் காய் வேல் வென்ற கருங்கவல் நெடுங்கண்- அழகிய இதழையுடைய கருங்குவளைப் பூவை அழகாலே வென்று புறங் கொடுத்தோடச் செய்து பின்னரும் பகைவர் உரங்கிழித்து வருத்தி அவர்தங் குருதியாற் சிவந்த வேற்படையையும் வென்ற கரிய கயல்மீன் போன்ற நெடிய அவளுடைய கண்கள் தாமே; ஆயிழை தனக்கு அறிவு பிறிது ஆகியது எனச் செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும்- நம்மையுடைய மணிமேகலைக்கு இப்பொழுது அறிவு வேறுபட்டது காண் என்று மறைவாக அறிவுறுத்தற்கு அவளுடைய செவிமருங்கே ஓடி மீண்டும் மற்றொரு செவிக்குக் கூறுதற்குச் சென்றதொரு செய்கையும் ஆகிய இச் செயல்களாலே; பளிங்கு புறத்து எறிந்த பவளப்பாவை- பண்டு அப் பளிக்கறையானது தன்னகத்திருந்து புறத்தே வீசிய பவளப்பாவை போல்வாளாகிய அம் மணிமேகலை; உயிர்க்காப்பு இட்டு என் உளம் கொண்டு ஒளித்தாள் என்று இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர்-என்னுடைய ஆருயிர் உடம்பை விட்டுப் போகாமைக்கும் ஒரு பாதுகாப்பினைச் செய்து வைத்து என்னுடைய நெஞ்சத்தை மட்டும் கவர்ந்து கொண்டு கரந்தொழிந்தாள் என்று செயலறவு கொண்டு, அற்றை நாளிரவு இப் பள்ளிக் கட்டிலின் மேல் எப்படியும் இவ்விரவு கழிந்தால் அவள் என்கையகத் தாள் ஆகுவள் என்னும் நம்பிக்கையோடு துயிலின்றித் தனித்துச் சிந்தனையிலாழ்ந்திருந்தேனாக! அப்பொழுது என் கண் முன்னர்; என்க.

(விளக்கம்) மணிமேகலையை மன்னவன் மகன் மலர்வனத்தே சென்று கைப்பற்றிச் சென்றவன் யாண்டும் அவளைக் காணப் பெறானாய் ஆங்கொருசார் சுதமதியை வினவி நின்ற பொழுது பளிக்கறையுட் புக்கிருந்த மணிமேகலையுருவம் புறத்தே தெரிந்ததனை ஓவியச் செய்தி என்றே கருதி அவ்வோவியத்தின் அழகிலீடுபட்டு அதனைக் கூர்ந்து நோக்கி அதனை இயற்றிய ஓவியனுடைய கலையுள்ளத்தைப் பாராட்டி மீளக் கருதியபொழுது உள்ளிருந்த மணிமேகலையின் பால் நிகழ்ந்த மெய்ப்பாடுகள் ஈண்டு அவனாற் சித்தராபதிக்குக் கூறப்படுகின்றன.

மணிமேகலா தெய்வம் எடுத்துப் போனமையால் அவள் நிலையறியாத உதய குமரன் அற்றை நாள் இரவு பெருந்துய ரெய்தி, கங்குல் கழியிலென் கையகத்தாள் என்றிருந்தவன் மற்றை நாள் தொடங்கி அற்றை நாள்காறும் அவளைக் காணப் பெரிதும் முயன்றும் காணப் பெறாமையாலே இனித் தன் உயிர்க்கு உய்தியில்லை போலும் என்று துயர்க் கடலுள் மூழ்கி யிருந்தான் என்பது தோன்ற இப் புலவர் பெருமான் இவனை உடைகலப் பட்டோனாகவும் சித்திராபதியை வான்புணையாகவும் ஓதும் நுண்மை யுணர்க.

இனி, அம் மணிமேகலை, இளவன முலை நெரித்ததும் மூரல் அரும்பியதும் கண்ணினது மருட்சியும் அவள் தன்பால் தீராக்காதலுடையாள் என்பதை நன்கு அறிவித்து விட்டமையின், அதுபற்றி அவன் உயிர் வாழ்கின்றான் ஆதலின் அச் செயல்களால் என் உயிர் போகாமல் காப்பிட்டு வைத்தாள் என்றான். மீண்டும் தன் னெஞ்சத்தை முழுதும் கவர்ந்து கொண்டவை தாமும் அச் செயல்களே யாதலால் உயிர்க்குக் காப்பிட்டு என்னுடலில் நிறுத்தி அதற்குத் துணையாகிய உள்ளத்தைக் கவர்ந்து கொண்டு போயினள் என்கின்றான். ஈண்டு

மணிமேகலை மூரல் அரும்பியதும் அவள் கண்களின் மிளிர்ச்சியும் பிறவும் அவள் உதய குமரனைப் பெரிதும் காதலிக்கின்றனள் என்பதற்குக் குறிப்பறிவுறுத்துவனவாகவும், அவள் அவனாற் பற்றற்கரியளானமையால் மீண்டும் அச் செயல்களே அவனுக்குப் படர்மெலிந்திரங்கற்குக் காரணமாகவும் ஆயபடியறிக.

இனி மணிமேகலை நம்பாற்படுவாள் என்னுங் கருத்தாலே அவனுடலில் உயிர் தங்குவதாயிற்று. வழிநாள் முதற் கொண்டு அற்றை நாள் காறும் அவளைப் பற்றிய செய்தி யாதொன்றும் அறியப்படாமையால் காமம் என்னும் கரை காணாத கடலைக் கையானீந்திக் கொண்டு இனி உய்வேனோ மாட்டேனோ என்னும் ஐயுறவோ டிருந்தவனுக்குச் சித்திராபதி வான்புணையாயினள். ஆயவட்கு மணிமேகலையின் மனநிலை இன்னது என இவ்விளவரசன் இயம்புதல் இன்றியமையாதாயிற்று. என்னை? மணிமேகலை உடன் படுவளோ படாளோ என்னும் ஐயம் அவட்கிருத்தல் இயல்பாகலின். அது தீர்தற்கு இது கூறினன் என்க.

இனி மணிமேகலை உலகவறவி புக்கமையால் கைப்பற்றுதற்கு எளியளாயினும் அவளைக் கைப்பற்றுதற்குத் தடையாயிருக்கின்றதோரச் சத்தை அவ்வரசிளங் குமரன் இனிச் சித்திராபதிக்குக் கூறுகின்றனன்.

இளவரசனின் எய்யா மையலும் சித்திராபதியின் சிறுநகையும்

81-89: பொன்றிகழ்.........செப்பின்

(இதன் பொருள்) பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டி- பொள்ளெனப் பொன் போன்று விளங்குகின்ற திருமேனியையுடைய ஒரு நங்கை வந்து நின்று எனக்குச் செங்கோன்மையினின்றும் பிறழ்வதனாலே மன்னர்க்குண்டாகும் இழிதகைமையை எடுத்துக்காட்டி; அங்கு அருந்தவம் புரிந்த அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள்-ஆங்குப் பவுத்தருடைய தவப்பள்ளியிற் சேர்ந்து ஆற்றுதற்கரிய தவத்தை மேற்கொண்டிருக்கின்ற மணிமேகலை திறத்திலே நீ நினைக்கின்ற நினைவுகளை மறந்தொழிக என்று கூறி அப்பொழுதே மறைந்தொழிந்தனள் காண்; தெய்வம் கொல்லோ திப்பியம் கொல்லோ-அங்ஙனம் தோன்றி எனக்கு அறிவுரை கூறியது யாதேனும் ஒரு தெய்வமோ? அல்லது, அம் மணிமேகலைக் கெய்திய தெய்வத் தன்மையாலே நிகழ்ந்ததோர் அற்புத நிகழ்ச்சியேயோ!!; யான் எய்யா மையலேன் என்று அவன் சொல-யான் இற்றை நாள் காறும் அந் நிகழ்ச்சிக்குரிய காரணம் யாதொன்றும் அறியமாட்டாமல் மயங்கியே இருக்கின்றேன் காண்!; என்று அவ்வரசிளங்குமரன் கூற; சித்திராபதி தான் சிறு நகை எய்தி அரசிளங்குரிசில் அத்திறம் விடுவாய்-அது கேட்ட சித்திராபதி புன்முறுவல் பூத்து மன்னவன் மகனாகிய எங்கள் இளவரசே! அந் நிகழ்ச்சி தலைக்கீடாகச் சிறிதும் கவலாதே கொள்!; தேவர்க்கு ஆயினும் காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன செப்பின் சிலவோ- மக்களாகிய நம்மனோர் கிடக்கத் தேர்களுக்குக் கூடக்காமமாகிய கள்ளுண்டு களித்தற்குக் காரணமான இவ்விளையாட்டிடையே உண்டாகும் இத்தகைய மயக்கக் காட்சிகள் ஒரு சிலவோ ஆயிரம் நிகழ்தலுண்டு காண்! என்றாள் என்க.

(விளக்கம்) பொன் திகழ் மேனி ஒருத்தி என்றான் அவள் இன்னள் என்று அறியாமையினாலே. ஈண்டு உதயகுமரன் கூறுவது-அவன் மணிமேகலையை மலர்வனத்திலே கைப்பற்ற முயன்று செவ்வி பெறாமல் வறிதே மீண்ட. அற்றை நாள் இரவு மணிமேகலா தெய்வம் கங்குல் கழியில் என் கையைத்தாள் என எண்ணமிட்டுக் கொண்டு பொங்கு மெல்லமளியிற் பொருந்தாது உறுதுய ரெய்தி இருந்தோன் முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே! கோல் நிலை திரிந்திடின் கோணிலை திரியும்.........அவத்திறம் ஒழிக. என்றறிவுறுத்து மறைந்த நிகழ்ச்சியை (துயிலெழுப்பிய காதை-5-14)

ஈண்டு அவன் பொன்திகழ் ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த அங்கவடன் திறம் அயர்ப்பா யென்றனள் தெய்வம் கொல்லோ திப்பியம் கொல்லோ எய்யா மையலேன் என்று சித்திராபதிக்குக் கூறியது. இங்ஙனமாதலின் அவளைக் காமுறாது விடுவதோ அன்றிக் காமுற்று மீண்டும் கைப்பற்ற முயல்வதோ இரண்டனுள் யாது செய்யற்பாலது என்று துணியாமைக்குக் காரணமான மயக்கத்தோடிருக்கின்றேன் என்பது குறிப்பாகத் தோன்றும்படி கூறியதாம். என்னை? அவன்றானும்

..................நன்னுதன் மடந்தையர்
மடங்கெழு நோக்கின் மதமுகம் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத் திளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா உள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்த     (சிலப்-23; 35-40)

விழுக்குடிப் பிறப்புடையோன் ஆதலானும், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் ஆதலானும் அப் பெரியோன் தனது அச்சத்தையே இதனால் சித்திராபதிக்குப் பொதுவாகச் சொல்லிக் காட்டுகின்றான் என்று கொள்க.

ஆயினும் சித்திராபதி தனது சிறு நகையாலேயே அவ் வச்சத்திற் செம்பாதியைத் தவிர்த்து எஞ்சிய பாதியைச் சொல்லாலே தவிர்த்து விடுகின்ற அவள் சொற்றிறம் பெரிதும் வியத்தற்பாலதாம்.

இப்படி ஆயிரம் ஆயிரம் மயக்கக் காட்சிகள் காமக்கள்ளாட்டாடுவாரிடையே காணப்படும். இத்தகைய மயக்கக் காட்சிகள் தேவர்களுக்குக் கூட ஏற்படும் ஆதலின் அத்திறம் விடுவாய் அரசிளங்குரிசில் என இம் முது கணிகை அவ்வச்சத்தை மிகமிக எளிதாகவே பேசி எடுத்தெறிந்து தவிர்க்கும் இவள் நுண்ணறிவை எண்ணி எண்ணி இறும்பூது கொள்கின்றோம்.

ஈண்டு, இராவணன் காம மயக்க முதிர்ச்சியாலே சீதையை உருவெளித் தோற்றமாக உள்ளத்திலே படைத்துக் கொண்டு சூர்ப்பனகையை அழைத்து இந் நின்றவளாங் கொல் நீ இயம்பிய சீதை? என்று வினவுதலும் அவள் தானும் காமக்கள்ளாட்டிடை மயக்குற்று இராமனை உருவெளித் தோற்றத்தே காண்பவள் சூழ்நிலையையும் மறந்து போய் வந்தான் இவனாகும் அவ் வல்வில் இராமன் என்று விடை கூறுதலும் அது கேட்ட இராவணன் அவளைச் சினந்து மண்பாலவரோ நம்மை மாயை விளைப்பர்! பேதாய்! நின் விடைக்குப் பொருள் என்னென்றுரப்புதலும் அதற்கவள்

ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடலின்றி
ஆன்று முளதாம் நெடிதுஆசை கனற்ற நின்றாய்க்கு
ஏன்றுன் எதிரே விழிநோக்கும் இடங்கள் தோறும்
தோன்றும் அனையாள் இது தொன்னெறித் தாகும்

என்றும் இன்னோரன்ன காமக்கள்ளாட்டிடை மயக்குற்றனவாகிய மருட்காட்சிகள் என்றும் அறிவுறுத்தல் ஒப்புநோக்கற் பாலதாம்.

சித்திராபதி அவன் போதைமைபற்றி ஈண்டுச் சிறுநகை தோற்றுவிக்கின்றாள். இந் நகைப்பு வாய்மையன்று நடிப்பு.

சிலவோ என்புழி ஓகாரம் எதிர்மறையாய் அதன் மறுதலைப் பொருளை வற்புறுத்து நின்றது. அஃதாவது சிலவல்ல எண்ணிறந்தனவுள என்றவாறு. உதயகுமரன் மணிமேகலை மூரலரும்பியமையால் என் ஆருயிர் தளிர்த்த தென்றமையால் அவனைக் காமக் கள்ளாடினானாகவே கூறினள் என்க.

காமக் கள்ளாட்டிடை மயங்கிய தேவர்க்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்

90-97: மாதவன்...............குருசில்

(இதன் பொருள்) மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி ஆயிரஞ் செங்கண் அமரர் கோன் பெற்றதும்- பெரிய தவவொழுக்கத்தே நின்ற கவுதமமுனிவருடைய பத்தினியாகிய அகலிகையின் பால் காமத்தால் மயக்குற்றுப் பற்பல நாள் மாபெருந் துன்பம் எய்தி ஆயிரம் சிவந்த கண்களை அமரர் கோமானாகிய இந்திரன் எய்திய செய்தியும்; மேருக்குன்றத்து ஊரு நீர்ச் சரவணத்து அருந்திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய பெரும் பெயர்ப் பெண்டிர் பின்பு உளம் போக்கிய அங்கி மனையாள் மேருமலையுச்சியினின்று ஊர்ந்து வருகின்ற அருவி நீர் நிரம்பிய சரவணப் பொய்கைக் கரையிடத்தே தவம் புரிபவராகிய அரிய ஆற்றலமைந்த முனிவர் எழுவருக்கும் பொருந்திய வாழ்க்கைத் துணைவியராகிய பெரிய புகழையுடைய பத்தினிப் பெண்டிரின்பால் காமுற்றுத் தன் நெஞ்சத்தை அவர்பால் போகவிட்டுப் பெரிதும் துன்பமுற்ற நெருப்புக் கடவுளின் மனைவியாகிய சுவாகை என்னும் தெய்வமகள்; அவண்-தன் கணவன் காம நோயால் கடுந்துயரெய்திய அவ்விடத்தே; தங்கா வேட்கை தனை-அத்தீக் கடவுளின் அறிவின் எல்லையிலே தங்காமல் மாற்றார் மனைவியர் பாற் சென்ற அவனது காமவேட்கையை; அவர் அவர் வடிவாய் தணித்ததூஉம்-அவ்வேழு முனிவர் மனைவிமாருள் ஒவ்வொருவர் வடிவத்தையும் தானே எடுத்துக் கொண்டு வந்து அவனைப் புணர்ந்து ஆற்றுவித்து அவனை உய்வித்த செய்தியும் ஆகிய தேவர்க்கும் எய்திய காமக் கள்ளாட்டு மயக்கச் செய்திகளை; வாள் திறல் குரிசில்- வாட் போரிற் பேராற்றல் வாய்ந்த இளவரசனே நீ; கேட்டும் அறிதியோ- நீ தானும் கற்றறிந்திருப்பாய் இல்லையாகிற் கேட்கும் அறிந்திருப்பாய் அல்லையோ! என்றாள் என்க.

(விளக்கம்) மாதவன்- கவுதம முனிவன். மடந்தை-அகலிகை. மடந்தையை நுகரும் பொருட்டு என்க. ஆயிரஞ் செங்கண் என்றது இடக்கரடக்கு.

ஊருநீர்-ஊர்ந்துவரும் அருவிநீர் சரவணம்- நாணற்புதர் சூழ்ந்த தொரு நீர்நிலை. சரவணத்துக் கரையிடத்தே தவஞ் செய்யும் முனிவர் என்றவாறு. அணங்கு- பெண்டு என்னும் பொருட்டாய் நின்றது. பெரும் பெயர்-புகழ். அங்கி- நெருப்புக்கடவுள். மனையாள் என்றது அவன் மனைவியாகிய சுவாகை என்பாளை. அவரவர் வடிவு-அம் முனிவர் பத்தினிமார் ஒவ்வொருவருடைய வடிவத்தையும் என்க. ஈண்டுக் கூறப்படும் இக்கதை, (அங்கி மனையாள் அம் முனிவர் மனைவிமார் வடிவத்தை எடுத்துக் கொண்டு வந்து ஒவ்வொரமையத்து அங்கியின் காம வேட்கையைத் தணித்த கதை) வியாச பாரதத்தில் ஆரணிய பருவத்தில் 224-6 ஆம் அத்தியாயத்தில் காணப்படுகின்ற தென்பர். 

தேவர்கள் தாமும் காமக் கள்ளாட்டிடை மயக்குற்று முறை பிறழ்ந்தொழுகினர். நீ மணிமேகலையின்பாற் கொண்ட காமம் நின் செங்கோன்மைக்குப் பொருந்தியதொரு காமமே; பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றி இவ்வொழுக்கம் செங்கோன்மைக்குப் பொருந்தாது என்பதுபட நினக்குச் செங்கோல் காட்டினளாகக் கண்டதாகக் கூறிய காட்சியும் மயக்கக் காட்சியே காண் என்று அவனுக்கு இனிச் சித்திராபதி செங்கோல் காட்டுகின்றாள்.

சித்திராபதி மணிமேகலையை உதயகுமரன் கைப்பற்றி வருதல் செங்கோன் முறைமையே யாம் எனத் தேற்றுரை பகர்தல்

68-102: கன்னி................அல்லள்

(இதன் பொருள்)  கன்னிக் காவலும் கடியிற் காவலும் தன்உறு கணவன் சாவுறின் நாவலும் நிறையின் காத்து- மன்னவன் மகனே! இடையிருள் யாமத்து நின் முன்னர்ப் பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டி அவள் திறம் அயர்ப்பாய் என்று கூறி மறைந்தனள் என்குதி இதுவும் காம மயக்கத்தே தோன்றியதொரு மருட்காட்சியே காண், எற்றாலெனின், நின்னாற் காமுறப்படுகின்ற மணிமேகலை யார்? அவள்தான் கன்னிமைப் பருவத்தினும் அடுத்துவருகின்ற திருமணத்தின் பின்னிகழும் கற்பொழுக்கந் தலைநிற்கும் நெடிய பருவத்தினும் ஓரோஓ வழித் தம்மைப் பொருந்திய கணவர்க்குச் சாக்காடு வந்துற்றக்கால் பின்னிகழுகின்ற கைம்மை கூர் பருவத்தினும்; நிறையின் காத்து-தமது நெஞ்சத்தைத் தங்குடிக்குரிய பண்பாகிய நிறை என்னும் ஆற்றலாலே புறம் போகாமற் காவல் செய்து; பிறர் பிறர் காணாது- தம்மழகைப் பிற ஆடவர் கண்டு காமுறாவண்ணம் கரந்தொழுகி; தெய்வமும் பேணாது- தங்கணவரைத் தொழுதலன்றித் தெய்வங்களையும் பேணித் தொழாமல் வாழ்தற்குரிய; பெண்டிர்தம் குடியில் பிறந்தாள் அல்லள்- பத்தினிப் பெண்டிருடைய உயர்ந்த குடியிலே பிறந்த குலமகள் அல்லளே; என்றாள் என்க.

(விளக்கம்) கன்னி- பெதும்பைப்பருவம் எய்தியும் திருமணம் நிகழப் பெறாத இளம் பெண். கடி- திருமணம். கடியிற் காவலாவது- கணவனோடு இல்லறம் நிகழ்த்தும் பருவம். சாவுறின் என்றது கணவன் மணநாள் தொடங்கி எந்த நாளினும் சாதலுண்டாகலின் ஊழ்வினை காரணமான அவ்வாறு மிக்க இளமையிலேயே கணவனுக்குச் சாவு நேர்ந்துழி என்பதுபட நின்றது. என்னை? கணவன் நூறாண்டு வாழ்ந்து சாவுறுமிடத்து மனைவிக்குக் கற்புக் காவல் கூற வேண்டாமையின் சாவுறின் என்றது கணவன் இளம்பருவத்திலேயே இறந்துபடின் என்றவாறே யாம் என்க.

நிறையாலல்லது கற்புப் பிறிதோராற்றானும் காக்கப் படுவதல்லாமையின் நிறையிற் காத்து என்று கருவியையும் விதந்தோதினள் ஈண்டு,

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை      (57)

எனவரும் திருக்குறளையும் கொண்டோ னல்லது தெய்வம் பேணாப் பெண்டிர் என்புழி,

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனம் பெய்யு மழை

எனவரும் திருக்குறளையும் நினைவு கூர்க.                (55)

இதுவுமது

103-111: நாடவர்....................என்றலும்

(இதன் பொருள்) நாடு அவர் காண நல் அரங்கு ஏறி-நாட்டில் வாழும் காமுகர் எல்லாம் கண்டு களிக்கும்படி இலக்கண முறைப்படி அமைக்கப் பெற்ற அழகிய நாடக அரங்கின் கண் நூல் விதித்த முறையாலே ஏறி; ஆடலும் பாடலும் அழகும் காட்டி-தாம் பயின்றுள்ள கூத்தின் சிறப்பையும் பாடல்களின் இனிமையையும் தமக்கியற்கையாகவும் செயற்கையாகவும் எய்திய அழகின் சிறப்பினையும் நன்கு தெரிவுறக் காட்டு மாற்றாலே; சுருப்பு நாண் கருப்புவில் அருப்புக்கணை தூவ-அக் காமுகர் நெஞ்சத்திலே காமவேள் தன் வண்டுகளாலியன்ற நாணைத் தனது கரும்பாகிய வில்லிலேற்றித் தனக்கியன்ற மலரம்புகளை எய்து நெகிழ்விக்கப் பெற்றனவாகிய; கண்டோர் நெஞ்சம்- தம்மைக் கண்ட அக் காமுகருடைய நெஞ்சமாகிய மீன்களை; செருக்கயல் நெடு கண் சுருக்கு வலைப்படுத்துக் கொண்டு- ஒன்றனோடொன்று எதிர்ந்து போர் புரிகின்ற இரண்டுகயற் கொண்டைகளை யொத்த நெடிய தம் கண்ணாகிய சுருக்கு வலையை வீசி அகப்படுத்துச் சுருக்கி எடுத்துக்கொண்டு சென்று; அகம் புக்கு-தம்மில்லத்தே புகுந்து, பண் தேர் மொழியில் பல பயன் வாங்கி- தம்முடைய பண்பேன்றினினம செய்யும் மொழிகளாலே அவரை வயப்படுத்து அவரிடத்தே தாம் பெறக்கிடந்த பயன்கள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்ட பின்னர்; வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை-வறும் பூத்துறக்கும் வண்டு போல அவரைத் துறந்துவிடுகின்ற கொள்ளைச் செயலையுடைய பரத்தை மகளிரைத் தாமும்; பான்மையின் பிணித்து-அவர்தம் குடிக்கியன்ற பண்போடு ஒழுகும்படி கட்டுப்பாடு செய்து; படிற்று உரை அடக்குதல்-அவர் கூறுகின்ற மாயப் பொய்ம் மொழிகள் செல்லாதன வாகும்படி அடக்கிவைத்தல்; குமரற்குக் கோல் முறை அன்றோ அரசிளங்குமரனாகிய நினக்கே யுரிய செங்கோல் முறைமை யாகாதோ? என்றாள் என்க.

(விளக்கம்) நாட்டவர் என உயிர் முதல்வரு மொழியாயின் நெடிற்றொடர் இரட்டுதலே பெரும்பான்மை, சிறுபான்மை இரட்டாது புணர்தலும் உண்மையின் நாடவர் எனப் புணர்ந்தது; காடக மிறந்தார்க்கே யோடுமென் மனனே என்புழிப் போல.

நாட்டில் வாழும் காமுக ரெல்லாம் காண என்றவாறு. பத்தினி மகளிர் பிறர் பிறர்க் காணாது வாழ்வர் என்று முற்கூறியதும் நினைக. நல்லரங்கு என்றது. நூன் முறைப்படி யமைந்த ஆடலரங்கினை. அஃதாவது:-ஏழிகோ லகலத்தினையும் எண்கோல் நீளத்தினையும் ஒரு கோல் உயரத்தினையும் வாய்தல் இரண்டனையும் உடைய அரங்கென்ப.( சிலப்-3:101-5)

ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையில் நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த கலைகள் பிறவும் பலவுள வேனும் அவற்றுள்ளும் இவையே தலை சிறந்து திகழ்தல் பற்றி ஆடலும் பாடலும் அழகும் காட்டி என்று இம் மூன்றனையே விதந் தெடுத்தோதினள்; ஆசிரியர் இளங்கோவடிகளார் தாமும் கணிகையரை எண்ணென் கலையோர், எனவும்,(14:166) எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற..............மடந்தையர் (22-13-8-26) எனவும் ஓதுவரேனும் அவற்றுள்ளும் இவை சிறந்தமைபற்றி, ஆடலும் பாடலும் அழகு மென்றீக் கூறிய மூன்றின் ஒன்று குறை படாமல் என விதந்தெடுத் தோதினமையு முணர்க.

சுருப்பு நாண், கருப்புவில், அருப்புக் கணை என்பன மென்றொடர் வன்றொடராயின அல்வழிப் புணர்ச்சியாகலின், தூவ என்னும் வினைக்குத் தகுதியால் காமவேள் என்னும் வினைமுதல் வருவித்தோதுக சுருக்கு வலை- விரித்து வீசப்பட்டு இழுக்குங்கால் தானே சுருங்கிக் கொள்ளும் ஒருவகை வலை. கண்வலை என்க. வலை என்றமையால் நெஞ்சமாகிய மினைப் படுத்து என்க. பண்தேர் என்புழி தேர் உவமவுருபின் பொருட்டு. பல பயன்- பலவகைப்பட்ட செல்வங்கள்.

நறுந்தாதுண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல் குவம் என இவள் இக் காதையிலே கூறினள் ஆதலின் அது நம்மனோர் நினைவின்கண் நிற்கும் என்னுங் கருத்தால் ஈண்டு வாளாது வண்டிற்றுறக்கும் கொண்டி மகளிர்- என்றார். கொண்டி மகளிர்- என்றது, பட்டி மகளிர்; வேசையர் பான்மையிற் பிணித்து என்றது அவர் குடி யொழுக்கம்பற்றி நடக்கும்படி கட்டுப்படுத்தி வைத்து என்றவாறு. படிற்றுரை- வஞ்சகமொழி; பொய்யுமாம், ஈண்டு மணிமேகலை துறவுக்கோலம் பூண்டு அதற்கேற்பப் பேசும் பேச்செல்லாம் வறும் பொய்ம்மொழி. அங்ஙனம் பொய் பேசி மக்களை வஞ்சியாமற் செய்வது செங்கோன் முறையே என்பாள் கோன் முறையன்றோ குமரற்கு என்றாள். குமரற்கு என்றது முன்னிலைப் புறமொழி. கீழ்மக்கள் மேன்மக்களோடு உரையாடுங்கால் இங்ஙனம் முன்னிலைப்புறமொழியாகக் கூறுதல் ஓர் ஒழுக்கமாம். இதனை இற்றை நாளினும் உலகியலில் காணலாம்.

ஈண்டு, உதயகுமரன் அறவோனாதலின் அவன் மணிமேகலையை அணுகும்பொழுது அவள் பேசும் துறவோர் மொழிகளைக் கேட்டு அஞ்சி வாளாது மீளாமைப் பொருட்டுக் கொண்டி மகளிரைப் பான்மையிற் பிணித்துப் படிற்றுரை அடக்குதல் உனக்குரிய அறமே என்கின்றாள்.

மேலும், நீ பொன்றிகழ் மேனி யொருத்தி தோன்றி நீ அவள் திறம் அயர்ப்பாய் என்று கூறி மறைந்தது என்கின்றாய், அது தெய்வமும் அன்று அம்மொழி திப்பயமும் அன்று, அக் காட்சி வறிய உருவெளித்தோற்றம் போல்வதொரு மருட்காட்சி என்று இதனால் அவனைத் திறம்படத் தேற்றினாளுமாதலறிக.

உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து மணிமேகலையைக் கைப்பற்றி வருதற்கு உலகவறவி நோக்கி விரைதல்

112-118: உதய..............காண்டலும்

(இதன் பொருள்) உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து விரைபரி நெடுந்தேர் மேல் சென்று ஏறி- சித்திராபதியின் திறமிக்க தேற்றுரைகளைக் கேட்ட உதயகுமரனுடைய உள்ளம் தன்னிலையினின்று அவள் காட்டிய நெறியின் மேலதாய்த் திரிந்து விட்டமையாலே அவள் கூறியபடியே மணிமேகலையைக் கைப்பற்றி அவள் கூறும் படிற்றுரைகள் அடக்கி அவள் குடிக்கியன்ற வொழுக்கத்தே நிறுத்தத் துணிந்து அப்பொழுதே விரைந்து செல்லும் இயல்புடைய குதிரைகளைப் பூட்டி நிறுத்தப்பட்ட தனது நெடிய தேரின் மேற் சென்று ஏறி; ஆயிழை இருந்த அம்பலம் எய்தி- விரைந்து போய் மணிமேகலை இருந்த உலக அறவி என்னும் ஊரம்பலத்தே சென்று அவ்விடத்தே; காடு அமர் செல்வி கடிப் பசி களைய -காட்டிலே வீற்றிருக்கின்ற கொற்றவையாகிய காளி தன்னருள் நீழலிலே வாழுகின்ற கூளிகளுக்குற்ற பசிப் பிணியை அகற்றுதற் பொருட்டு; ஓடு கைக் கொண்டு நின்று ஊட்டுகள் போல-ஒரு திருவோட்டினைக் கைக் கொண்டு அவற்றினிடைய நின்று தன்தருளாலே அவ்வோட்டிலே கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் சுரக்கின்ற உணவினை அக் கூளிகட்கு வழங்குகின்ற அவ்விறைவியேபோற் றோற்றந்தந்து; தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோறு ஈத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும்- தீய பசியாலே வருந்துகின்ற ஆற்றாமாக்கட் கெல்லாம் அமுதசுரபியிலே இடையறாது சுரவா நிறை வளமான சோற்றுத் திரளையை அள்ளி அள்ளி வழங்குபவளாய் அமுதசுரபியென்னும் அரும் பெரும் பாத்திரத்தை அங்கையில் ஏந்தி நிற்கின்ற கொல்லிப் பாவை போன்ற மணிமேகலையைக் கண் கூடாகக் கண்ட வளவிலே என்க.

(விளக்கம்) உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து என்றமையால் அவன் மணிமேகலா தெய்வம் கோன்முறை காட்டி, தவத்திறம் பூண்டோன் தன் மேல் வைத்த அவத்திறம் ஒழிக என்றறிவுறுத்தமை கேட்டு அஞ்சி மணிமேகலையைக் கைப்பற்றுங் கொள்கையைக் கைவிட்டு அவள் பால் உண்டான தன் இடங்கழி காமத்தைக் கைவிடமாட்டானாய்ப் பெரிதும் துன்புழந்தான். அங்ஙன மிருந்தவன் முன்பு கைவிட்டிருந்த செயலைச் செய்வதென உள்ளம் பிறழ்ந்தான் என்பது பெற்றாம்.

ஈண்டுச் சித்திராபதி இவ்வாறு மருட்காட்சி காமங்கதுவப் பெற்றார்க்குத் தோன்றுதல் இயல்பு காண்! என்று கூறியதனால் அவள் கூற்றை வாய்மை என்றே கொண்டு விட்டான் என்க. அவன் உள்ளத்தின் விதுப்புரவினை விரைபரி நெடுந்தேர் ஏறி அம்பல மெய்தினான் என்பதனால் அறிவுறுத்தார்.

மணிமேகலைக்குக் காடு அமர் செல்வியும், இரவன் மாக்கட்குக் கூளியும் உவமை. காடமர் செல்வி- காளி. கடி-கூளி; பேய். பாவை- கொல்லிப்பாவை போன்ற மணிமேகலை.

மணிமேகலையைக் கண்ட உதயகுமரன் எண்ணித் துணிதல்

119-127: இடங்கழி.....கேட்ப

(இதன் பொருள்) இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி- பண்டு மலர்வனத்திலே மணிமேகலையின் காதற் குறிப்பை கண்டு வைத்து அவள்பால் தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி அறந்தோர் வனம் என்றஞ்சி மீண்டவன் இப்பொழுது ஊரம்பலத்தே கண்டமையாலே தன்கட்டுக் கடங்காது வரம்பு கடந்து அவள்பாற் செல்கின்ற காமமுடையவனாகியும் உயர் குடிப் பிறப்புடையோன் ஆதலின் தன்னுள்ளே எண்ணித் துணிபவன்; யானே- வாயிலாவாரையின்றி யானே; தானே தமியள் நின்றோள் முன்னர் சென்று-அவள் தனித்து நிற்கின்ற செவ்வி நோக்கி அவள் முன்னிலையிலே சென்று; உடம்போடு என்தன் உள்ளகம் புக்கு என் நெஞ்சம் கவர்ந்த வஞ்சகக் கள்வி- உன் உடம்போடு என் கண் வழியாக என் உள்ளத்தினூடு புகுந்து என் நெஞ்சம் முழுவதையும் கவர்ந்து கொண்ட கள்வியாகிய நீ; நோற்று ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி ஏற்று ஊண் விரும்பிய காரணம் என் என கேட்டல் இயல்பு என துணிந்து- நோன்பு மேற் கொண்டு பட்டினி விட்டுண்ணும் வாழ்க்கையினாலே உடம்பும் உள்ளமும் சுருங்குவதற்குக் காரணமான தவவொழுக்கத்தைத் தாங்கிய பிச்சை ஏற்றுண்ணும் உணவினை விரும்பியதற்குக் காரணந்தான் என்னையோ? என்று வினவத் தெரிந்து கொள்ளுதலே முறையாகும் என்று தன்னுள் ஆராய்ந்து துணிந்து அங்ஙனமே அவள் தமியளாய் நிறை செவ்வியின் அவள் முற்சென்று; நல்லாய் என்கொல் நல் தவம் புரிந்தது நங்கையே இத்தகைய கள்வியாகிய நீ எற்றிற்குத் தவம்புரியத் தொடங்கியது; செல்லாய்-அதற்குரிய காரணத்தை எனக்குக் கூறுவாயாக; என்று உடன் கேட்ப-என்று அப்பொழுதே மணிமேகலையை வினவா நிற்ப என்க.

(விளக்கம்) இடங்கழி காமமொடு அடங்கானாகியும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. என்னை? அடங்கானாகியும் எண்ணித் தன்னியல்பிற் கேற்ற செயலே செய்தலன்றி அவளைக் கைப்பற்றுதன் முதலிய மிகை ஏதுஞ் செய்திலாமை அவன் துயர்குடிச் சிறப்பிற்குச் சான்றாய் நிற்றலின் என்க. பிறர் பொருளைக் களவாடியவரை அரசன் வினவுதல் கோன் முறைமையே யாகலின் கள்வி அதற்கு மாறாகித் தவம் புரிந்தது என் என்று வினவுதல் தனக்கு இயல்பு என்று துணிந்த படியாம்.

உதயகுமரன் தன்னுள்ளத்தை அவள் கவர்ந்தமை முன்பு சித்திராபதிக்குக் கூறுமாற்றாலே பெற்றாம். அருந்தே மாந்த ஆருயிர் தளிர்ப்பத் தன்னைக் கண்டுழி அவள் விருந்தின் மூரலரும்பி வைத்தும் அதற்கியைய வொழுகாமல் அவள் தவம் புரிந்தது அடாது என்பதே அவன் ஈண்டு எடுத்துக் காட்டுகின்ற குற்றம். மற்று அவள் தவம் புரிவதே குற்றம் என்பது அவன் கருத்தல்லாமை யுணர்க. உடம்போடு......யானே கேட்ட லியல்பெனத் துணிந்தானாகலின் அதனை வழிமொழிந்து அவ்வாறே கேட்டனன் என்று கூறிக்கொள்க. அல்லது-அவ்வாறு தன்னுட்டுணிந்து சென்று அவை யெல்லாம் அவள்-நெஞ்சறியுமாதலின் நல்லாய் என்கொல் தவம் புரிந்தது சொல்லாய் என்னுமளவே வினவினன் எனக்கோடலுமாம். என்னை? அவள் முன்னிலையினின்று அது கூற அவன் நாத்துணிதலரிதாகலின் இங்ஙனம் வினவவும் அவன் துணிந்தமையின் அருமை தோன்ற அத் துணிவை விதந்து துணிந்து கேட்ப என்றார். நல்லாய் என்று விளித்தான் அதனினும் சிறந்த விளிச்சொல் பிறிதொன்று காணமாட்டாமையின்.

மணிமேகலையின் உள்ளத்தினியல்பும் செயலும்

128-133: என்னமர்..........மயங்கி

(இதன் பொருள்) ஈங்கு இவன் என் அமர் காதலன் இராகுலன்-அவ் வேந்தன் மகன் வினவிய சொற்களைக் கேட்ட மணிமேகலை இங்கு வந்து இவ்வாறு என்னை வினவுவான் முற்பிறப்பிலேயும் என்னைப் பெரிதும் காதலித்து என் கணவனாயிருந்த இராகுலனே ஆதலின்; இவன்றன் அடிதொழுதலும் தகவு என வணங்கி இவனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கித் தொழுவதும் எனக்குத் தகுதியே யாம் என்று தன்னுட் கருதியவளாய் அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கி; நெஞ்சம் அறைபோய் அவன் பால் அணுகினும் ஈங்கு இவன் இறைவளை முன் கை பற்றினும் என் பேதை நெஞ்சம் என்னைக் கீழறுத்துப் போய் அவனிடத்தே அணுகினும் அணுகுக! அல்லது இவன்றானும் அடிப்பட்டு வந்த அன்புடைமை காரணமாக ஆற்றானாய் மூட்டுவாயையுடைய வளையலணியத் தகுந்த என் முன்னங்கையைப் பற்றிக் கொள்ளினும் கொள்ளுக!; தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல் நன்றியன்று என்று நடுங்கினள் மயங்கி-முற்பிறவிதொட்டு அடிப்பட்டு வருகின்ற என் காதலனாகிய இவனுடைய மொழிக்கு மாறு கூறல் நல்லறமன்று என்று நினைந்து தானும் அக்காமத்தாலேயே மயக்க மெய்தி என்க.

(விளக்கம்) மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் உவவனமருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரனவன் உன் இராகுலன், ஆங்கு அவனன்றியும் அவன் பாலுள்ளம் நீங்காத் தன்மை நினக்கும் உண்டு என்றறிவித்தமையால் தன் முற்பிறப்பிற் கணவனாக இருந்த இராகுலனே இவன் என்றும் அவ்வன்புத் தொடர்ச்சியாகிய ஏது நிகழ்ச்சியே இப்பிறப்பினும் இவனுக்கு, என்னைக் காட்டுவித்தது என்றும் அவ்வாறே அவன்பால் என்னெஞ்சமும் நீங்காத் தன்மைத்தாகின்றது, என்று கருதி அவன்பாற் பரிவுள்ளங் கொண்டவளாய்க் கணவனைக் கற்புடை மகளிர் தொழுமாறே தொழுதவள், இவ்வுண்மை இவனறியானாயினும் அப் பழவினை வலியால் இவன்பால் என்னெஞ்சம் அறை போகின்றது; போயிற் போதுக! அங்ஙனமே அப் பழவினையா லுந்தப்பட்டு வந்த இவன் என் கையைப் பற்றுதலும் கூடும், பற்றினும் பற்றுக. தன் னெஞ்சறிவது பொய்யற்க என்னும் அறம்பற்றிக் கணவனாகிய இவனை வணங்குவல் அப்பாலும் அவன் வினாவிற்கும் விடை கூறுவல் என்று மணிமேகலை ஈண்டு மயங்குகின்றனள் என்றுணர்க.

இனி, தொன்று காதலன் ஆயினும் இவன் பிறப்பறுத்தற்கியன்ற நல்வினை செய்திலன், தான் செய்த நல்வினையே பிறப்பறுத்தற்கியன்ற தொரு நன்னெறியில் தன்னைச் சேர்ப்பித்துளது என்றறிந்துள ளாகலின் ஈண்டு இரண்டு பேரறங்கள் தம்முள் எதிர்ந்து போரிடுதலானே அவள் உள்ளம் மயங்கி இவற்றுள் பழைய அன்பு நெறியே வென்று மீண்டும் தன்னை அவன்பாற் படுத்துப் பறவிப் பெருங்கடலுள் வீழ்த்து விடுமோ என்றையுற்று அச்சமெய்தி நடுங்கினள் என்பது கருத்தாகக் கொள்க.

என் அமர்காதலன்- என்னை விரும்பிய கணவன். தொன்று பழைமையான. நன்றி- நல்லறம். நடுங்கினள்: முற்றெச்சம்.

மணிமேகலை உதயகுமரன் வினாவிற்கு விடை இறுத்தல்

134-142: கேட்டது..........செய்கென

(இதன் பொருள்) கேட்டது மொழிவேன் நீ கேள்வியாளரின் தோட்ட செவியை ஆகுவை ஆம் எனின்- வேந்தன் மகனே! நீ என்னை வினவிய காரணத்தை யான் இப்பொழுது கூறுவல் நீதானும் கேள்வியை விரும்பிக் கேட்டுப் பயின்ற பயன்பெற்றுச் சிறந்த கேள்வியாளர் போன்று அறக் கேள்விகளாலே நன்கு துளைக்கப்பட்ட செவிகளை உடையையாயிருப்பாய் ஆயின்(யான் கூறும் காரணம் நினக்கும்பயன் தருவதாகுமானால்) மக்கள் யாக்கை இது பிறத்தலும் மூத்தலும் பிணப்பட்டு இரங்கலும் இறத்தலும் உடையது பெருமானே! யான் எடுத்துக் கொண்டிருக்கின்ற மக்களுடைய பிறந்த பின்னர்க் கணந்தோறும் மூத்தலையும் பல்வேறு பிணிகளின்பாற் பட்டுத் துன்புறுதலையும் என்றேனுமொரு நாள் இறத்தலையும் உடையதாகும்; இடும்பைக் கொள்கலம்-துன்பத்தை நிரப்பி வைத்துள்ள தொரு மட்பாண்டம் போன்றது; என உணர்ந்து-என்று நன்குணர்ந்து கொண்டமையாலே; மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்-அப் பிறவிப் பெருங்கடலினின்று உய்ந்து கரையேறுதற்குரிய அறங்களுள் வைத்துத் தலைசிறந்த நன்மை யுடையதாகிய அருளறத்தை மேற்கொள்ளுதலைப் பெரிதும் விரும்பினேன், இதுவே இந் நற்றவத்தை யான் செய்தற்குரிய காரணமாகும்; மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்குப் பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ- நாற்பெரும் படையும் மண்டி வருதற்கிடமான போரின்கண் பகைவரைக் கொன்றழிக்கும் பேராற்றலுடைய பெருமானை ஒத்த களிற்றியானை போன்ற தறுகண்மையுடைய வீரர்களுக்கு என் போன்ற மெல்லியன் மகளிர் கூறுதற்குரிய பேரறிவும் உளதாகுமோ! இல்லையாகலின் பெருமான் வினாவிற்கு மட்டுமே விடை இறுத்துள்ளேன்; கேட்டனையாயின்-யான் கூறிய விடையைச் செவியேற்றருளினையாயின்; வேட்டது செய்க என- இனிப் பெருமான் விரும்பியதனைச் செய்தருள்வாயாக! என்று விடை கூறிய பின்னர் என்க.

(விளக்கம்) என் கொல் நற்றவம் புரிந்தது? என்பதே உதயகுமரன் வினாவாதலின் அதற்கு விடை கொடாது மறுத்தல் நன்றியன்று என்றுட்கொண்டு விடை கூறத் தொடங்கும் மணிமேகலை கேட்டதற்கு விடை தருதல் என கடமையாகலின் அதற்கு விடை தருவேன் என்பாள் கேட்டது மொழிவேன் என்று தொடங்கி; என் விடைக்குப் பொருளுணர்வாய் எனின் நீ நன்கு அறவரைகளைப் பலகாலும் கேட்டுப் பயின்றடிப்பட்ட செவிகளை உடையை ஆதல் தேற்றம் என்பாள். நீ கேள்வியாளரின் தோட்ட செவியை ஆகுவை என்றாள். உணர்ச்சி உணர்வோர் வலித்தேயாகலின் அத்தகைய வலி நினக்குளதாகும் எனின் நன்று இன்றெனினும் கேட்டதற்கு விடை கூறுதல் என் கடமை யாதலின் மொழிவேன் என்றாள்.

பிறத்தல் முதலியவாக எண்ணிறந்த துயரங்களுக்குக் கொள்கல மாகும் மக்கள் யாக்கையாகிய இஃதென்று யான் நன்கனம் உணர்ந்து கொண்டமையே நற்றவம் புரிதற்குக் காரணமாம், என்பதே மணிமேகலை இறுத்த விடையாகும்.

யான் மெல்லியல்புடைய எளிய பெண் மகள். நீயோ மண்டமர் மூருக்கும் களிறனையை ஆதலின் நீ இப்பொழுது என் திறத்திலே ஏது வேண்டுமாயினும் செய்யக் கூடும். நீ இனி வேட்டது செய்க, நின்னைத் தடுப்பார் யாருமிலர் என்பதுபட உலகின் மேல் வைத்துக் களிறனை யார்க்குப் பெண்டிர் கூறும் பேரறிவுண்டோ வேட்டது செய்க என்றாள்.

மிக்க நல்லறம் என்றது அருளுடைமையை, அதனையன்றிப் பிறவிப் பெருங் கடலைக் கடத்தற்குப் பிறிதொரு வழியில்லையாகலின் அதனை அங்ஙனம் விதந்துரைத்தாள் என்னை?

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு       (247)

எனவும்,

நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினும் அஃதே துணை      (242)

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களையும் நோக்குக.

இதுவே பவுத்த சமயக் கோட்பாடாகும். பண்டைக் காலத் தமிழ்த் திறவோர் மெய்க் காட்சியும் இதுவே யாகும் என்றுணர்க. இவ்வறத்தினை ஆசிரியர் தொல்காப்பியனார் மக்கள் வாழ்க்கையின் வெற்றியாகக் கருதி வாகைத் திணையின் பாற்படுத்தி அருளொடு புணர்ந்த அகற்சி என்றொரு துறையாக அமைத்து வைத்தனர்.(வாகை-சூ-21)

கேட்டனையாயின் வேட்டது செய்க, என்றது நீ யாது செய்யினும் யான் மேற்கொண்ட அறத்தினின்றும் பிறழேன் காண்! என்னுங் குறிப்பெச்சப் பொருள் பயந்து நின்றது.

உதயகுமரன் முன்னிலையினின்றும் மணிமேகலை தற்காத்தற் பொருட்டு விரைந்து கொற்றவை கோயிலுட் புகுந்து வேற்றுருக் கொண்டு வெளிப்படுதல்

142-150: வாட்டிறல்..............தோன்ற

(இதன் பொருள்) மடக்கொடி வாள் திறல் குரிசிலை நீங்கி இவ்வாறு விடையிறுத்த இளம்பூங்கொடி போல்வாளாகிய மணிமேகலை வாட் போராற்றல் மிக்க இடங்கழி காமத்தானாகிய இவன் முன் யான் இனி நிற்றலும் தகாதென வுட்கொண்டு பொள்ளென அவ்விடத்தினின்றும் நீங்கி; முத்தை முதல்வி முதியாள் இருந்த குச்சரக் குடிகை தன் அகம் புக்கு ஆங்கு முன்னைப் பழைமைக்கும் முன்னைப் பழைமையுடைய முழுமுதலாகிய இறைவி எழுந்தருளியிருக்கின்ற குச்சரக்குடிகையினுட் புகுந்து ஆங்குச் சிறிது பொழுது நின்று ஆராய்பவள்; ஆடவர் செய்தி அறிகுநர் யார் என-காமம் கைமிகின் மடலேறுதலும் பிறிதும் ஆகும் இயல்புடைய இத்தகைய ஆடவர் தக்கது இன்னது தகாததின்னது என்று ஆராய்ந்து துணிந்து ஒன்றனைச் செய்யும் இயல்புடையாராகார் ஆதலின் அரசன்மகன் விழுக்குடிப் பிறப்பினன் ஆயினும் இக் காமச்சூழ்நிலையில் அவன் இது செய்வான் இது செய்யான் என்று யாரே துணிந்து கூறவல்லுநர் இங்ஙன மாகலின் யாம் நமதறிவுடைமையால் இவனிடமிருந்து தப்புதலே நன்றென்று தன்னுட்கொண்டு; தோடுஅலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி-அக் குச்சரக் குடிகையில் எழுந்தருளிய இதழ் விரிந்து நறுமணங்கமழும் மலர்மாலை சூட்டப்பெற்றுள்ள காவற் றெய்வமாகிய சம்பாபதியைக் கைகூப்பித் தொழுது வாழ்த்தி; மாயவிஞ்சை மந்திரம் ஓதி- மாய வித்தையின் பாற்பட்ட வேற்றுருக் கொள்ளுதற்கியன்ற மந்திரத்தை மனத்தினுள் உருவேற்றி; காயசண்டிகையெனும் காரிகை வடிவாய் மணிமேகலை வந்து தோன்ற-ஆண்டுப் பலரானும் அறியப்பட்டிருந்த விச்சாதரியாகிய காயசண்டிகையின் உருவத்தை எடுத்துக் கொண்டு முன்பு தன் முன்னிலையிலே நின்று நீங்கிக் குடிகையுட் புக்க அம் மணிமேகலையே மீண்டும் அக் குடிகையுணின்றும் வெளிப்பட்டுத் தோன்றா நிற்ப என்க.

(விளக்கம்) முந்தை, முத்தை என வலித்தல் விகாரம் எய்தியது-முந்தை முதல்வியாகிய முதியோள் என்க. அவளாவாள் சம்பாபதி என்னும் காவற்றெய்வம் குச்சரக் குடிகை- கூர்ச்சர நாட்டினர் கட்டுகின்ற கலைத்தொழின் முறையாலே கட்டப்பெற்ற சிறிய கோயில்; மண்டபமுமாம். மணிமேகலை தற்காத்துக் கொள்ள முயலுதலின் காவற்றெய்வத்தைத் தன்னைக் காத்தருள வேண்டிக் கைதொழுதவாறாம். காமம் காழ்கொளின் ஆடவர் மடலேறுதல் முதலிய வன்செயலும் செய்வர், இறந்துபடுதலும் செய்வர், அத்தகையோர் யாது செய்யார்? மனம் போனவாறே ஏதும் செய்வர். மடலேறாப் பீடு மகளிர்க்கே உரித்து. ஆகவே யானும் ஒல்லும் வகையால் அவன் வன்செயலுக்கு ஆளாகாது தப்புவதே அறிவுடைமை என்னும் இத்துணைக் கருத்துந் தோன்ற ஆடவர் செய்தி அறிகுநர் யார்? என ஆடவரை மட்டும் தனித்தெடுத்தோதினள்.

இனி ஆடவர் காமங் காழ்கொளின் அத்தகையராதலை,

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறு மடல்          (குறள், 1133)

எனவருந் திருக்குறளானும்,

கடலே றியகழி காமம் பெருகின் கரும்பனையின்
மடலே றுவர் மற்றும் செய்யா தனசெய்வர் மாநிலத்தே  
                  (களவி-உரைமேற்-79)

எனவரும் பாண்டிக் கோவையானும்,

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமங்காழ் கொளினே (17)

எனவரும் குறுந்தொகையானும் உணர்க.

இனி மகளிர் காமங்காழ் கவுளின் இவ்வாறு மிகை செய்யாப் பீடுடையர் என்பது பற்றி ஆடவர் செய்தி என்று ஆடவரை மட்டும் பிரித்தோதினள். மகளிர் அங்ஙனம் மிகை செய்யார் என்பதனை

கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்

எனவரும் அருமைத் திருக்குறளாலு முணர்க.

தோடலர்கோதை: அன்மொழித் தொகை; சம்பாபதி.

உண்மை வடிவத்தை மறைத்து வேறுருவந் தருதலால் வேற்றுருக் கொள்ளும் மந்திரத்தை மாயவிஞ்சை மந்திரம் என்றார். 

மணிமேகலையைக் காணாமல் மன்னன் மகன் அலமருதல்

151-158: அணிமலர்............கிடப்பேன்

(இதன் பொருள்) அணிமலர்த் தாரோன் அவள்பால் புக்கு- விரைந்து தன் முன்னிலையினின்றும் கோயிலினுட் புகுந்த மணிமேகலை வரவினை எதிர்பார்த்து நின்ற அழகிய மலர்மாலையணிந்த அவ்வரசிளங்குமரன் பாத்திரமேந்தி வெளிவருகின்றவள் பாற் சென்று அவள் மற்றொருத்தியாதல் கண்டு, பிச்சைப் பாத்திரத்தை இவள் கையிற் கொடுத்துவிட்டு மணிமேகலை கோயிலினுள் கரந்திருக்கின்றாள் என்று கருதியவனாய்; குச்சரக்குடிகைக் குமரியை மரீஇ-தானும் அக் குச்சரக் குடிகையாகிய கோயிலுட் புகுந்து மணிமேகலையைத் தேடி அவளை யாண்டும் காணானாகி ஆங்கெழுந்தருளிய சம்பாபதியைத் தொழுது கூறுபவன்; இமையோர் பாவாய் பிச்சைப் பாத்திரம் பெரும்பசியுழந்த காயசண்டிகை தன் கையில் காட்டி- தேவர்கட்குந் தெய்வமாகிய சம்பாபதியே கேள்! தன் கையிலிருந்த பிச்சைக் கலத்தை நாளும் ஆனைத் தீ நோயாலே ஆற்றொணாத பெரிய பசித்துன்பத்தே கிடந்துழன்ற காயசண்டிகை என்பவள் கையிலே கொடுத்துவிட்டு; மாயையின் ஒளித்த மணிமேகலைதனை தான் கற்ற மாயவித்தையாலே ஈண்டுக் கரந்துறைகின்ற மணிமேகலையை; ஈங்கு இம்மண்ணீட்டு யார் என உணர்கேன் இங்கே நிறைந்துள்ள சுதையாலியன்ற மகளிர் உருவங்களுள் வைத்து மணிமேகலையின் உருவம் யாது என்று யான் எவ்வண்ணம் அறிந்து கொள்ளமாட்டுவேன்! அறிகின்றிலேன் ஆதலாலே; ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின்-அவ்விடத்திலே நிற்கின்ற உருவமே உன்னால் தேடப்படுகின்ற மணிமேகலையின் உருவமாகும் என்று நீயே எனக்குக் காட்டியருளாயாயின்; பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்- நீ உளம் இரங்கி அங்ஙனம் காட்டுதற்குப் பல நாள் கழியினும் யான் நின் திருமுன்பே வரங்கிடப்பேன் காண்! என்றான் என்க.

(விளக்கம்) அணிமலர்த்தாரோன்: உதயகுமரன். அவள் என்றது காயசண்டிகை வடிவத்தில் வந்த மணிமேகலையை. கையிற் பாத்திரம் ஏந்தி வருதல் கண்டு மணிமேகலையே வருகின்றாள் என்று கருதி அணுகியவன் அவள் காயசண்டிகையாதல் கண்டு மணிமேகலை தன் கைப் பாத்திரத்தை இவள்பாற் கொடுத்துத் தான் கோயிலினுள்ளே மறைந்துறைகின்றனள் என்று கருதித் தானும் அவளைத் தேடிக் கோயிலினுள் புகுந்தான் என்பதே கருத்தாகலின் அதற்கியன்ற சொற்கள் இசை யெச்சத்தால் வருவித்தோதப்பட்டன.

குமரி: சம்பாபதி. மரீஇ- மருவி; அணுகி என்றவாறு. மண்ணீடு- சுண்ணச்சாந்தா லியற்றிய சிற்ப உருவம். மணிமேகலையை இச் சிற்ப உருவங்களினூடே யார்? என அறிகின்றிலேன் என்றமையால் மணிமேகலையின் எழிலும் அங்குள்ள சிற்பங்களின் அழகும் ஒன்றற்கொன் றுவமை யாகி இருவழியும் சிறப்பெய்துதல் உணர்க. இறைவி கோயிலாகலின் அம் மண்ணீடுகள் மகளிர் உருவங்களாதலும் இயல்பாதல் உணர்க.

இனி, யார் என்னும் வினைக்குறிப்பு மணிமேகலைதனை யார் என உணர்கேன் என உயர்திணைக்கண் வந்ததாயினும் ஐயப்புலப் பொதுச் சொல் மண்ணீடு என்பதாம். ஆகவே அஃறிணைப் பொதுச் சொல்லாகிய யார் என உணர்கேன் என்பது திணைவழுவாம் ஆதலின். இம் மண்ணீடுகளின் உருவங்களுள் வைத்து மணிமேகலை யுருவம்யாது என்றறிகேன் என்பதை கருத்தாகலின் திணை வழுவமைதியாகக் கொள்க. ஆங்கவள் இவள் என்றதும் நின்னால் தேடப்படும் மணிமேகலை யுருவம் இஃதாம் என்று காட்டியருளாயாயிடின் என ஐயப்புலப் பொதுச் சொல்லாகாமல் உயர்திணைச் சொல்லாற் கூறியதனையும் திணைவழுவமைதியாகவே கொள்க.

நான் யார் என ஞானங்கள் யார் என்புழியும் இவ்வழுவுண்மையும் அதனை அமைத்துக் கொண்டமையும் உணர்க. பாடு கிடப்பேன்- வரங்கிடப்பேன் பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு என் புழியும்(சிலப்-9-15) அஃதப் பொருட்டாதல் அடியார்க்கு நல்லார் உரையானும் அறிக.

உதயகுமரன் சம்பாபதி திருமுன் தன்னிலை கூறிக் குறையிரத்தல்

159-172: இன்னும்...............தானென்

(இதன் பொருள்) இமையோர் பாவாய்- தேவர்கட்கும் தெய்வமாகிய சம்பாபதியே; இன்னும் கேளாய்!-அடியேன் உற்ற குறையோ பெரிது அதனைக் கூறுவல் வெறாமல் திருச்செவியேற்றருள்வாயாக!; பவளச் செவ்வாய் தவள் வாள் நகையும் அஞ்சனஞ் சேராச் செங்கயல் நெடுங்கணும்-அம் மணிமேகலை தானும் தன்னுடைய பவளம் போன்று சிவந்த வாயின்கண் நிரல் பட்டிருக்கின்ற வெள்ளிய ஒளி தவழும் எயிறுகளும் மை தீட்டப் பெறாத சிவந்த கயல்மீன் போன்ற நெடிய கண்ணும்; முரிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்- வளைந்து கடைப்பகுதி நெரியும்படி விரிந்து கட்டப்பட்ட வில்லினை ஒத்த புருவமும் ஆகிய தனது இம் மூன்றுறுப்புகளே நிரலே; குவி முன் கருவியும் கோணமும் கூர்நுனைக் கவைமுள் கருவியும் ஆகிக் கடிகொள-இரும்பாலியன்ற நுனி குவிந்துள்ள முள்ளாகிய கருவியும் தோட்டி என்னும் கருவியும் கூர்த்த நுனியையுடைய கவர்ந்துள்ள முள்ளையுடைய பரிக்கோல் என்னும் கருவியும் ஆகிய களிறடக்குங் கருவிகளாகக் கொண்டு அவை காவலைச் செய்ய; கல்விப்பாகரின் காப்புவலை ஓட்டி- தான் கற்ற கலைகளாகிய பாகராலே காத்தலையுடைய அரணகத்தே என்னைப் புகுவித்து; வல்வாய் யாழின் மெல்லிதின் விளங்க நாவன்மையுடைய தனது வாயாகிய யாழினாலே என் நெஞ்சமாகிய யானையின் சினந் தவிர்ந்து நெகிழ்ச்சியுடையதாய்த் திகழும்படி; முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டி-மெய்யறிவு கெழுமிய பழைய மொழிகளை எடுத்துக் கூறக் காட்டி; புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென- புதுவதாகப் பற்றப்பட வேண்டிய களிற்றியானை யென்றனைத் தான் கைப்பற்ற கோடவற்குத் தான் மேற்கொண்ட வேட்கைத் தொழில் தனக்கு வாய்ப்புடைத்தாயிற் றென்னுஞ் செருக்கினோடு; முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த மதிவாள் முகத்து மணிமேகலைதனை-எல்லார்க் கடவுளர்க்கும் முதிய முதல்வியாகிய உன்னுடைய திருக்கோயிலுட் புகுந்து கரந்திருக்கின்ற திங்கள் போன்ற திருமுகத்தைடைய அம் மணிமேகலையைக் கைப்பற்றிக் கொண்டு அவளுடன் போவதல்லது; ஒழியப் போகேன்-அவளையன்றி யான் தமியேனாய் மீண்டுப் போவேனல்லேன் காண்!; உன் அடி தொட்டேன்-யான் உன் திருவடிகளைத் தொட்டு உறுதி கூறுகின்றேன்; இது குறை என்றனன்-இதுவே நீ நிறைவேற்றித் தருதற்குரிய என்னுடைய குறை காண் என்று கூறினன் அவன் யார் எனின்?; இறைமகன் சோழ மன்னன் மகனாகிய உதயகுமரன்; என்பதாம்.

(விளக்கம்) பாடு கிடப்பேன் என்றவன் அங்ஙனம் பாடு கிடத்தற்குக் காரணம் கூறுவேன் கேள் என்பான், இன்னுங்கேள் என்றான்; புதுக்கோள் யானை என்று உதயகுமரன் தன் நெஞ்சத்தையே கூறிக் கொள்கின்றான். பழக்கப்படாத யானையைக் குவிமுட் கருவியும் தோட்டியும் பரிக்கோலுமாகிய கருவிகளைப் பயன்படுத்தி அடக்கிப் பின்னரும் அப் புதிய யானையின் நெஞ்சத்தை நெகிழ்த்துத் தம் வயப் படுத்துதற்கு யாழிசையை எழுவி வயப்படுத்துக் கொள்வார். அங்ஙனமே அவள் தனது வாணகையாகிய குவிமுட் கருவியாலும் கண்ணாகிய தோட்டியாலும் புருவமாகிய பரிக்கோலாலும் என்னெஞ்சத்தை அடக்கிப் பின்னும் பாகர் அப் புது யானை தப்பி யோடிப் போகா வண்ணம் அதனைத் தம் குறிப்பின் வழி இயங்குதற்கு அதற்கு அரண் செய்யுமாறு போலே இவள் தனது கலையாகிய அரணிட்டு அவ்வரணகத்தே என்னெஞ்சத்தை இயக்குகின்றாள் என்பான் கல்விப்பாகரில் காப்புவலை ஓட்டி என்றான்; காப்பாகிய வலையகத்தே புகுவித்து என்றவாறு. ஈண்டு வலை என்றது அரண் என்னும் பொருளதாய் நின்றது.

நகை-எயிறு. நகை கண் புருவம் என்னும் மூன்றற்கும் நிரலே குவிமுட் கருவியும் கோணமும் கவைமுட் கருவியும் உவமைகள்.

கோணம்-தோட்டி(அங்குசம்) கோணந்தின்ற வடுவாழ் முகத்த என்புழியும்(மதுரைக்-592) அஃதப் பொருட்டாதலறிக. கவைமுட் கருவி-பரிக்கோல். கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றி என்புழியும்(முல்லைப்-35) அஃதப் பொருட்டாதலறிக. கல்வி-ஈண்டுக் கலை. அவளது கலையழகு தன்னை அவள் வழிப்படுத்தலின் அதனை யானையைப் பழக்கி அரணுள்ளே புகுவிக்கும் பாகராக உவமஞ் செய்தான். காப்புவலை:இருபெய ரொட்டு. வல்வாய்-தன் சொற் கேட்பாரைத் தன்வழிப் படுத்தல்வல்ல நாநலம்.

முதுக்குறை முதுமொழி என்றது மெய்யறிவு கொளுத்தும் அறவுரையை. அஃதாவது, பிறத்தலும்..............புரிந்தேன் என மணிமேகலை எடுத்தியம்பிய காரணக் கிளவியாகிய அறவுரை. அவ்வுரை பிடக நூலிற் புத்த பெருமானாற் கூறப்பட்ட மொழியே ஆதலின் முதுக்குறை முதுமொழி என்றான். யாழிசைக்கு யானை வயப்படும் இயல்புடைத்து என்பதனை காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு எனவரும் கலியானும்(செய்-2) உணர்க. காமத்தையே மிகுவித்தலின் அவற்றை யாழிசையாக உவமித்தான் என்னெஞ்சத்தை அவள் முழுதும் தன்வயப்படுத்திக் கொண்டாள் என்பதுபட அவட்குப் புதுக்கோள் யானை வேட்கை பலித்தது என்கின்றான். உன்னடி தொட்டேன் என்பது ஒரு சூளுரை. அடிதொடு கடன் இவை எனவரும்( சிலப்-வேட்டுவவரி) இளங்கோ பொன் மொழியும் காண்க.

அருளாயாயிடின் பாடு கிடப்பேன் என்பது சூள்மொழி. வேட்டம் வாய்த்தென உன்றன் கோட்டம் புகுந்தாள் என்றது இனி இப் புத்தி யானை நம்மையகன்று போகாது என்னும் நம்பிக்கையால் இப்பொழுது குறும்பு செய்யத் தொடங்கி விட்டாள் என்றவாறு. அதற்கேற்பவே யானும் அவளையன்றித் தனியேனாய்ப் போகவல்லேன் ஆயினேன். ஆகவே அவளைக் காட்டித் தருதி; தாராயாயிடின் பன்னாளாயினும் பாடு கிடப்பேன் என்கின்றான்.

இது குறை என்றான்-இக்குறை தீர்த்தருள யான் நின்னை வணங்கி வரங்கேட்கின்றேன் என்றற்கு. இறை மகன் என்று விதந்தார் இறைமகன் தன்னை விரும்பி இத் துணை அலமரலுறவும் மணிமேகலை தான் மேற் கொண்ட தவநெறியிற் பிறழாத அவளுடைய திட்பம் விளங்கி நம்மனோர்க்குப் புலப்படுதற் கென்க.

இனி இக் காதையை, சித்திராபதி உயிர்த்துக் கலங்கித் தீர்ப்பல் என்று மடந்தையர்க் கெல்லாங் கூறும்; கூறுபவள் சாற்றித் தேர்ந்து போகிக் குறுகி ஏத்த, நக்கவன் தவறின்றோ என, அவள் குருகு உயிர்ப்ப ஓங்கிய காஞ்சி மலர் அவிழ்ந்தது வண்டு உணீஇய வந்தேன் அம்பலத் தாயது வாழ்க என, உரைப்போன் நெரித்ததூஉம் அரும்பிய தூஉம் கண்சென்ற செவ்வியும் எறிந்த பாவை காப்பிட்டு ஒளித்தாள் என்று இருந்தேன் முன்னர் ஒருத்தி தோன்றி, காட்டி அயர்ப்பாய் என்றனள் எய்யா மையலேன் என்று சொல, சித்திராபதி நகை எய்தி அடக்குதல் கோன்முறை அன்றோ குமரற்கென, உதயகுமரன் பிறழ்ந்து ஏறி எய்திப் பாவையைக் காண்டலும் அடங்கானாகி, கள்வி ஏற்றூண் விரும்பிய காரணம் என்? எனக் கேட்டல் இயல்பெனச் சென்று கேட்ப, இவன் காதலன், அடி தொழுதலும் தகவு என வணங்கி மயங்கிக் கேட்டது மொழிவேன் உணர்ந்து புரிந்தேன் பெண்டிர் கூறும் அறிவுண்டோ என நீங்கிப் புக்குச் செய்தி அறிகுநர் யார் எனத் தொழுது ஏத்தி வந்து தோன்ற, தாரோன் அவள்பால் புக்குப் (பின்) குமரியை மரீஇ அருளாயாயிடின் கிடப்பேன், பாவாய் கேளாய் மணிமேகலைதனை ஓழியப் போகேன் அடி தொட்டேன் இது குறை என்றனன் (அவன் யாரெனின்)இறைமகன் என இயைத்திடுக.

உதயகுமரன் அம்பலம் புக்க காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar