பதிவு செய்த நாள்
30
ஜன
2012
04:01
(பத்தொன்பதாவது மணிமேகலை காயசண்டிகை வடிவாய்ச் சிறைக் கோட்டம் புக்குச் சிறைவீடு செய்து அறக் கோட்டமாக்கிய பாட்டு)
அஃதாவது: சம்பாபதி முன்பு மணிமேகலை ஒழியப் போகேன் பன்னாளாயினும் பாடு கிடப்பேன், உன்னடி தொட்டு உறுதி கூறுகின்றேன் என விஞ்சினஞ் சாற்றியவுடன் அங்குச் சித்திரத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டுறைகின்ற ஒரு தெய்வம் நீ ஆராய்ச்சியின்றி வஞ்சினங் கூறினை என்று கூறக்கேட்ட உதயகுமரன் அத் தெய்வம் பேசியதனையும் பண்டு தன் முன் பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டிய தனையும் மணிமேகலை ஏந்திய அமுதசுரபியின் தெய்வத் தன்மையையும் ஒரு சேர எண்ணிப் பெரிதும் வியப்பெய்திப் பின்னும் மணிமேகலையின் செயல்களைப் பார்த்தே அவளைப்பற்றி நன்கு தெரிதல் வேண்டும் என்று கருதி, அவ்விடத்தினின்றும் அகன்று போய்பின் மணிமேகலை தன்னுருவோடு திரியின் மன்னன் மகன் நம்மைத் தொடர்வான் என்று அஞ்சிக் காயசண்டிகையின் வடிவத்தோடிருந்தே ஆற்றாமாக்கட்கு ஆற்றுந்துøணாயகி உண்டி கொடுத்து உயிரோம்புவள் சிறைக்கோட்டம் புகுந்து ஆங்குச் சிறைப்பட்டுக்கிடப்போரைக் கணடிரங்கி அவர்க்கெல்லாம் உண்டி வழங்கா நிற்ப, ஒரே பாத்திரத்தால் எண்ணிறந்த உயிர்க்கு உண்டி வழங்கும் அவ்வற்புதங் கண்டு வியந்து இச் செய்தியைக் காவலர் அரசனுக்கு அறிவிப்ப அவனும் அவளை அழைப்பித்து வினவி அவளது தெய்வத் தன்மையை வியந்து நின் திறத்திலே யான் செயற்பால துண்டாயிற் கூறுக! என்று வேண்டினனாக அது கேட்ட மணிமேகலை அங்குச் சிறைப்பட்டு வருந்துவோரையெல்லாம் விடுதலை செய்து அதனை அறக்கோட்டம் ஆங்குக என்று வேண்ட, அரசனும் அவள் வேண்டுகோட் கிணங்கிச் சிறையோர் கோட்டத்தை அறவோர் கோட்டமாகச் செய்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.
இதன்கண் சோழமன்னன் விளையாடும் பூம்பொழில் வண்ணனை அக் காலத்து அரசர் வாழ்க்கைச் சிறப்பினைக் கண்கூடாகக் காட்டும் சொல்லோ வியமாகத் திகழ்கின்றது.
மணிமேகலையின் அறச்செயல் கண்டு வியந்த அரசன் அவளை நீ யார்? இத்தெய்வத் தன்மையுடைய திருவோடு நினக்கு எவ்வாறு கிடைத்த தென்று அருள்புரி நெஞ்சோடு வினவுதலும், அதற்கு மணிமேகலை இரட்டுற மொழிதலாகத் தன்னை விஞ்சை மகள் என்றறிவித்துப் பின்னர் மன்னனை மனமார வாழ்த்துதலும் இப்பாத்திரம் அம்பலமருங்கோர் தெய்வந் தந்தது திப்பியமானது யானைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது என அவன் தன்னைக் காயசண்டிகையாகவே கருதுதற் பொருட்டுக் கூறும் விடைகளும், பின்னர் அரசன் யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு என்று வினாதலும், அவள் வேண்டுகோளும் கற்போர் உளமுருக்கும் பான்மையனவாகக் கூறப்பட்டுள்ளன.
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி
மது மலர்த் தாரோன் வஞ்சினம் கூற
ஏடு அவிழ் தாரோய்! எம் கோமகள் முன்
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்
உதயகுமரன் உள்ளம் கலங்கி
பொதி அறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றே
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் 19-010
பை அரவு அல்குல் பலர் பசி களையக்
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்
முத்தை முதல்வி அடி பிழைத்தாய் எனச்
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்
இந் நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின்
பின் அறிவாம் எனப் பெயர்வோன் தன்னை
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப
மாலை நெற்றி வான் பிறைக் கோட்டு
நீல யானை மேலோர் இன்றிக் 19-020
காமர் செங் கை நீட்டி வண்டு படு
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின்
நகர நம்பியர் வளையோர் தம்முடன்
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்பப்
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி
பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போய பின்
உறையுள் குடிகை உள்வரிக் கொண்ட
மறு இல் செய்கை மணிமேகலை தான் 19-030
மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிடலீ யான்!
காய்பசியாட்டி காயசண்டிகை என
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர்
மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என
முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த
அமுதசுரபியை அங்கையின் வாங்கிப் 19-040
பதிஅகம் திரிதரும் பைந் தொடி நங்கை
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம்
விருப்பொடும் புகுந்து வெய்து உயிர்த்துப் புலம்பி
ஆங்குப் பசியுறும் ஆர் உயிர் மாக்களை
வாங்கு கைஅகம் வருந்த நின்று ஊட்டலும்
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இப்
பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்
யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி 19-050
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன்
அடியில் படியை அடக்கிய அந் நாள்
நீரின் பெய்த மூரி வார் சிலை
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள்
சீர்த்தி என்னும் திருத் தகு தேவியொடு
போது அவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக்
கொம்பர்த் தும்பி குழல் இசை காட்டக்
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்செய்ய
வரிக் குயில் பாட மா மயில் ஆடும்
விரைப் பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் 19-060
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு
மட மயில் பேடையும் தோகையும் கூடி
இரு சிறைக் விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன
ஒரு சிறைக் கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும்
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னைப்
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையைச்
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்திப்
பைங் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் 19-070
அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த
பிணவுக் குரங்கு ஏற்றி பெரு மதர் மழைக் கண்
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல்
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும்
பாசிலை செறிந்த பசுங் கால் கழையொடு
வால் வீ செறிந்த மராஅம் கண்டு
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என
தொடி சேர் செங் கையின் தொழுது நின்று ஏத்தியும்
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்
நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர் 19-080
பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர்
தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர்
குழலொடு கண்டம் கொளச் சீர் நிறுப்போர்
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர்
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர்
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர்
நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைவோர்
பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் 19-090
ஆங்கு அவர் தம்மோடு அகல் இரு வானத்து
வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து
குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும்
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்
பொருந்துபு நின்று திருந்து நகை செய்து
குறுங் கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும்
பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும்
வம் எனக் கூஉய் மகிழ் துணையொடு தன்
செம்மலர்ச் செங் கை காட்டுபு நின்று
மன்னவன் தானும் மலர்க் கணை மைந்தனும் 19-100
இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்
எந்திரக் கிணறும் இடும் கல் குன்றமும்
வந்து வீழ் அருவியும் மலர்ப் பூம் பந்தரும்
பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க் கேணியும்
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும்
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண் தமிழ் வினைஞ்அர் தம்மொடு கூடிக்
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினைப் 19-110
பவளத் திரள் கால் பல் மணிப் போதிகைத்
தவள நித்திலத் தாமம் தாழ்ந்த
கோணச் சந்தி மாண் வினை விதானத்துத்
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின்
பைஞ் சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால்
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி 19-120
முறம் செவி யானையும் தேரும் மாவும்
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த
தலைத் தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர்
சிலைக் கயல் நெடுங் கொடி செரு வேல் தடக் கை
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலி கெழு தடக் கை மாவண்கிள்ளி!
ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி!
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை!
கேள் இது மன்னோ! கெடுக நின் பகைஞர் 19-130
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம்
மா நகர்த் திரியும் ஓர் வம்ப மாதர்
அருஞ் சிறைக்கோட்டத்து அகவயின் புகுந்து
பெரும் பெயர் மன்ன! நின் பெயர் வாழ்த்தி
ஐயப் பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்
ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ! என்றலும்
வருக வருக மடக்கொடி தான் என்று
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் 19-140
வாயிலாளரின் மடக்கொடி தான் சென்று
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய! எனத்
தாங்கு அருந் தன்மைத் தவத்தோய் நீ யார்?
யாங்கு ஆகியது இவ் ஏந்திய கடிஞை? என்று
அரசன் கூறலும் ஆய் இழை உரைக்கும்
விரைத் தார் வேந்தே! நீ நீடு வாழி!
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர்
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை!
வானம் வாய்க்க! மண் வளம் பெருகுக!
தீது இன்றாக கோமகற்கு! ஈங்கு ஈது 19-150
ஐயக் கடிஞை அம்பல மருங்கு ஓர்
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என
யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு? என்று
வேந்தன் கூற மெல் இயல் உரைக்கும்
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்குமது வாழியர்! என
அருஞ் சிறை விட்டு ஆங்கு ஆய் இழை உரைத்த
பெருந் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் 19-162
உரை
வஞ்சினங் கூறிய மன்னவன் மகனுக்கு ஆண்டுச் சித்திரத்திலே நிற்குந் தெய்வம் கூறுதல்
1-6: முதியாள்...........கூறலும்
(இதன் பொருள்) மதுமலர்த் தாரோன் முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி- தேன்பிலிற்றும் மலர்மாலையணிந்த திருவடிகளை மனம் மொழி மெய் என்னும் மூன்று கருவிகளானும் வழிபாடு செய்து சூண் மொழிந்தவளவிலே; வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரம் ஒன்று தெய்வம் சிற்பப்புலமை மிக்க வித்தகர்களாலே இயற்றப்பட்டதும் விளக்கமான கலைத் தொழிற்றிறமமைந்ததுமாகிய ஒரு சித்திரத்திலே பொருந்தியுறை வதுமாகி ஒரு தெய்வம் தனது தெய்வக்கிளவியாலே; ஏடு அவிழ்தாரோய் எம் கோமகள் முன் நாடாது துணிந்து நாநல் கூர்ந்தனை என-இதழ்விரிந்த மலராற் புனைந்த மலர் மாலையணிந்த மன்னவன் மகனே! நீ தானும் எம்மிறைவி திருமுன்னின்று சிறிதும் ஆராயாமல் துணிவுற்று வாளாது வஞ்சினம் கூறி நாநலமிழந்து வறுமையுற்றனை காண்! என்று; கூறலும் கூறக் கேட்டலும் என்க.
(விளக்கம்) முதியாள் என்றது சம்பாபதியை. திருந்தடி-இலக்கணத்தாற் செவ்விதாக வமைந்த திருவடி; தாரோன்: உதயகுமரன் மும்மை- மன மொழி மெய்கள். வஞ்சினம்- சூண்மொழி; அஃதாவது அருளாயாயிடின் பன்னாளாயினும் பாடுகிடப்பேன் என்று கூறியதாம்.
நாநல் கூர்தல்-நாநலமிழத்தல்; பயனில மொழிதல். எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு எனவரும் திருக்குறட் கருத்தை யுள்ளுறுத்து நாடாது துணிந்து நாநல் கூர்ந்தனை எனத் தெய்வம் கூறியவாறாம். ஒன்று தெய்வம்- பொருந்தியுறையும் தெய்வம்.
உதயகுமரனின் மருட்கை
7-19-: உதய...............தன்னை
(இதன் பொருள்) உதயகுமரன் உள்ளம் கலங்கி பொதியறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி-உதயகுமரன் தன் துயரத்தினின்றும் தப்புதற்குப் பிறிதொரு வழியும் காணமாட்டாமை யாலே பொதியறை என்னும் கீழறைக்கண் அகப்பட்டவர் போன்று உடம்பு மெலிந்து வருந்தி மயங்குபவன்; அங்கு செங்கோல் காட்டி அவள் தன் திறம் அயர்ப்பாய் என்ற தெய்வமும் திப்பியம்-யாம் நமது பள்ளியறைக்கண் அவளையே எண்ணித் துயிலாதிருந்த பொழுது பொன்னிற் பொலிந்த நிறத்தோடு தோன்றி எனக்குச் செங்கோல் முறைமையை எடுத்துக் காட்டித் தவத்திறமுடைய அம் மணிமேகலையை மறந்துவிடு என்று கூறிய தெய்வக் காட்சியும் தெய்வத் தன்மையுடைத்தா யிருந்தது; பைஅரவு அல்குல் பலர் பசி களையக் கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்-அன்றியும் பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய அம் மணிமேகலை ஆற்றாமாக்கள் அரும்பசி களைதற்குக் கருவி யாகத் தன் கையிலேந்தியிருந்த பிச்சைக்கலன் தானும் தெய்வத்தன்மை யுடைத்தாயிருந்தது; முத்தை முதல்வி அடி பிழைத்தாய் எனச் சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் சம்பாபதி திருமுன் திருந்தடி தொட்டுச் சூளுரைத்துப் பிழை செய்தொழிந்தாய் என்று வித்தகரியற்றிய இச் சித்திரங் கூறுகின்ற இவ்வடித்துரை தானும் தெய்வத்தன்மையுடைய தாகவே; உளது; இந்நிலை எல்லாம் பின் இளங்கொடி செய்தியில் அறிவோம் எனப் பெயர்வோன் தன்னை- மருட்கை விளைக்கின்ற இத் தெய்வத்தன்மைகளுக்கெல்லாம் காரணம் இனி அந்த மணிமேகலையின் செயல்களை யாம் ஆராய்ந்தறிந்து கொள்ளக்கடவேம் என்று கருதியவனாய் அவ்விடத்தினின்றும் போகின்ற உதய குமரனை என்க.
(விளக்கம்) திப்பியம்- தெய்வத் தன்மையால் நிகழ்வது; மக்கட் டன்மைக்கப்பாற்பட்ட நிகழ்ச்சி என்பது கருத்து. செங்கோல் காட்டிய தெய்வம் என்றது மணிமேகலா தெய்வத்தை. பையரவல்குல்; அன்மொழித்தொகை; மணிமேகலை பலர் பசியை ஒரே பாத்திரம் உணவு சுரந்தூட்டுவது திப்பியம் என்றவாறு. சித்திரம்- ஈண்டுச் சிற்பம், ஓவியம் எனினுமாம். இந்நிலை என்றது இவ்வாறு மருட்கை விளைத்தற்குக் காரணமான நிலைமைகள். செய்தி- செய்கை.
உதயகுமரன் காமத்துயருழந்துயிர்த்தல்
17-28: அகல்வாய்.............போயபின்
(இதன் பொருள்) அகல்வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண பகல் அரசு ஓட்டிய பணை எழுந்து ஆர்ப்ப-அகன்ற இடத்தையுடைய நிலவுலகத்தை விலக்குதற்கரிய இருள் விழுங்கிவிடும்படி ஞாயிறாகிய அரசனைப் புறங்காட்டி ஓடச் செய்து உலகின்கண் வெற்றி முரசின் முழக்கம் எழுந்து ஆரவாரியாநிற்ப; மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு நீல யானை- மாலைப் பொழுதாகிய நெற்றியினையும் வெள்ளிய பிறையாகிய மருப்பையுமுடைய நீலநிறம் பொருந்திய இரவாகிய யானையானது; மேலோர் இன்றி-தன்னையடக்குபவராகிய பாகர் யாருமில்லாமல்; காமர் செங்கை நீட்டி- விருப்பமாகிய தன் செவ்விய கையை உலகிலே நீட்டி; வண்டுபடு பூநாறு கடாஅஞ் செருக்கி வண்டுகள் மொய்த்தற்குக் காரணமான ஏழிலைப்பாலை மலரினது மணம்கமழ் தலாகிய மதத்தாலே செருக்குற்று; கால் கிளர்ந்து காற்றைப் போல விரைந்து; நிறை அழி தோற்றமொடு தொடர் தன்னைக் கண்டோருடைய மனத்திட்பம் அழிதற்குக் காரணமான தோற்றத்தோடு தொடரா நிற்பவும்; முறைமையின்-இசை நூல் முறைப்படியே; நகர நம்பியர் விளையோர் தம்முடன் மகரவீணையினை கிளை நரம்பு வடித்த இளிபுணர் இன்சீர் எஃகு உளம் கிழிப்ப-பூம்புகார் நகரத்தே வாழுகின்ற மேன்மக்களுள் வைத்து இளமையுடைய ஆடவர் தங் காதலியரோடு களித்திருந்து மகரயாழின்கண் கிளைநரம்புகளை வருடி எழுப்பிய இளி முறையாலே கூட்டப்பெற்ற இனிய தாளவறுதியுடைய பண்ணாகிய வேலானது பாய்ந்து ஊடுருவிப் புண் செய்யப்பட்டு; பொறாஅ நெஞ்சில் புகை எரிபொத்தி பறா அக்குருகின் உயிர்த்து அவன் போயபின்-உண்டாகின்ற துன்பத்திற்கு ஆற்றாது அலமருகின்ற தனது நெஞ்சத்திலே புகையுடைய காமத்தீப் பற்றித் தீய்த்தலாலே கொல்லுலைக்கண் துருத்தியுயிர்க்கு மாறு போலே வெய்தாக நெடுமூச்செறிந்து அவ்வரசன் மகன் அவ்விடத்தினின்றும் அகன்று போயபின்பு என்க.
(விளக்கம்) பெயர்வோன்றன்னை நீல யானை தொடர இன்சீர் எஃகுளம் கிழிப்ப உயிர்த்து அவன் போயபின் என இயையும்.
அகல்வாய்-அகன்ற இடத்தையுடைய. இனி ஞாலத்தை அகல்வாய் இருள் உண்ண என மாறி வாயை இருண்மேலேற்றலுமாம். பகலரசு-ஞாயிறு. மாலை முரசு முழங்குதல் உண்மையின் இரவு என்னும் நீல யானை தன் பகையாகிய பகலரசனை வென்று(மாலை முரசாகிய தனது) வெற்றி முரசம் முழங்கும்படி அவன் ஆட்சி செய்த ஞாலத்தை எல்லாம் இருளாகிய தன்வாய் விழுங்காநிற்பக் காம விருப்பம் என்கின்ற தன் கையை நீட்டிச் செருக்கி (உதயகுமரனுடைய) நிறையழி தோற்றமொடு அவனைத் தொடரவும் இன்சீராகிய எஃகு உளம் கிழிப்பவும் அது பொறாஅத நெஞ்சிற் (காமமாகிய) புகையெரி மூள ஆற்றாது உயிர்த்து அவன் போயபின் என்க.
இரவை யானையாக உருவகித்தலின் மாலையை அதன் நெற்றியாகவும் பிறையை மருப்பாகவும் இருளை நிறமாகவும் உருவகித்தனர்.
இரவு உலகில் காமத்தை உண்டாக்குதலின் அதனை அதன் கையாக உருவகித்தார். ஏழிலைப்பாலை மலர் இரவில் மலரும் போலும். ஆகவே அம் மலர் யானையின் மதநாற்றம் போலும் நாற்றமுடையதாதல் பற்றி அந் நாற்றத்தை அந்த யானை பொழியும் மாநாற்றமாக உருவகித்தார். ஏழிலைப்பாலை மலர் யானைமதம் நாறுமியல்புடைத் தென்பதை
பாத்த யானையிற் பதங்களிற் படுமத நாறக்
காத்த வங்குச நிமிர்ந்திடக் கால்பிடித் தோடிப்
பூத்த வேழிலைப் பாலையைப் பொடிப்பொடி யாகக்
காத்தி ரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததோர் களிறு
எனவரும் இராமாவதாரச் செய்யுளானும்( வரைக்-6) உணர்க.
முறைமையின்-நூல் முறைமையாலே. நகர நம்பியர் என்றது, நகரத்துப் பெருங்குடி மக்களாகிய இளைஞர்களை. இவர்கள் தங் காதலிய ரோடிருந்து யாழ்வருடிப் பாடுகின்ற இசை உதயகுமரன் காமநோயை மிகுவித்தலின் இன்சீர் எஃகு என்றார். இன்சீர் என்றது அன்மொழித் தொகையாய்ப் பண் என்னும் பெயர்ப் பொருட்டாய் நின்றது. இனிய தாளவறு தியையுடைய பண் என்றவாறு.
எரி-காமத்தீ. பொத்தி-மூண்டு. பறாஅக்குருகு- கொல்லன் உலைக்களத்துத் துருத்தி; வெளிப்படை, பாயா வேங்கை பறவாக் கொக்கு என்பன போல. அவன்: உதயகுமரன்.
உதயகுமரன் போனபின் மணிமேகலை உட்கோளும் செயலும்
29-38: உறையுள்........ஆமென
(இதன் பொருள்) உறையுள் குடிகை உள்வரிக்கோலம் கொண்ட மறு இல் செய்கை மணிமேகலைதான்- சம்பாபதி எழுந்தருளியிருக்குமிடமாகிய குச்சரக் குடிகையினின்றும் காய சண்டிகையாக உள்வரிக்கோலம் பூண்ட குற்றமில்லாத நல்லொழுக்கத்தையுடைய அம் மணிமேகலை தானும் தான் இனிச் செய்யக்கடவதென்னென்று தன்னுள்ளே ஆராய்பவள்; மாதவி மகளாய் மன்றம் திரிதரின்- மாதவி மகளாகிய யான் எனக்குரிய உருவத்தோடே இவ்வுலக வறவியாகிய பாதுகாவலற்ற இவ்வம்பலத்தே இவ்வாறு திரிவேனாயின்; மன்னவன் மகன் கைவிடலீயான்- வேந்தன் மகன் நம்மைக் கைவிட்டுப் போவானல்லன், ஆகவே அவனிடத்தினின்றும் யான் தப்புதல் வேண்டின்; காயசண்டிகை காய் பசியாட்டி என ஊர் முழுதும் அறியும் உருவம் கொண்டே- காயசண்டிகை என்னும் அவ் விச்சாதரி இடையறாது வயிறு துன்புறுத்துதற்குக் காரணமான ஆனைத் தீ நோயுடையாள் என்று இப் பூம்புகார் நகரத்தில் வாழ்வோரெல்லாம் நன்கு அறிகுவர் ஆதலால் என்னுருக்கரந்து யான் இப்பொழுது மேற்கொண்டிருக்கும் இக் காயசண்டிகை யுருவத்தோடேயே எப்பொழுதும் புறஞ் சென்று; ஆற்றாமாக்கட்கு ஆற்றுந்துணை ஆகி ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் மேற் சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே பசித்துயரம் பொறாமல் வருந்துகின்ற இரவன்மாக்கள் பசியை மாற்றி அவரை ஆற்றாவாராக்குதற் பொருட்டு இல்லந்தொறும் சென்று பிச்சை ஏற்றலும் அப் பிச்சையுண்டியை ஆற்றாமாக்கட்கு வழங்குதலும் பிச்சை ஏற்போர்க்குரிய கடமைகளாகும் என்றும், அவ்வாறு இரப்பவர் தாமும் காணாரும் கேளாரும் முதலியவராக அவ்வாற்றாமாக்கள் இருக்குமிடத்தே சென்று அவ்வுணவினை வழங்கிப் பேணுதல் மிகவும் சிறந்த நல்வினையாகும் என்றும்; நூல் பொருள் உணர்ந்தோர்- பிடக நூலின் பொருளை ஐயந்திரிபற உணர்ந்த சான்றோர்; நுனித்தனர்- கூறுந் துணர்ந்துரைத்தனர் ஆதலின்; அம் என-அங்ஙனம் செய்தலே இப்பொழுது நமக்கியன்ற செயலாகும் என்று துணிந்து என்க.
(விளக்கம்) இப் பகுதியில் மணிமேகலை தனக்கும் தன்னாலே பிறர்க்கும் சிறிதும் இடர் வாராமைக்கும் ஆற்றாமாக்கட்கு ஆற்றுந் துணையாய் அவர்க்கெல்லாம் இன்பஞ் செய்தற்கும் சூழ்கின்ற இச் சூழ்ச்சி பெரிதும் நுணுக்க முடையதாதலுணர்க. இங்ஙனம் சூழவல்ல அறிவை எதிரதாக் காக்கும் அறிவு என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் போற்றிக் கூறுவர்
எதிரதாக் காக்கும் மறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய் (429)
என்பது செந்தமிழ் மறை
ஆனைத் தீப்பசியை ஆற்றுதற் பொருட்டுக் காயசண்டிகை இடையறாது அந் நகரத்திலே பிச்சை ஏற்றத் திரிந்தமையாலே அவளை ஊர் முழுதும் அறியும். அவள் அவ்வூரை விட்டுப் போய் விட்டமை மணிமேகலை மட்டும் அறிகுவள். அவ்வூரிற் பிறர் யாரும் அறியாமையின் அவ்வுருவங் கொண்டு திரிந்தால் தன்னை எல்லாரும் காயசண்டிகை என்றே கருதுவர்; மன்னவன் மகனும் நாளடைவில் தன்னை மறந்தொழிவான் என்றுட் கொண்ட படியாம்.
பிச்சை ஏற்பது தானும் பிறர் பொருட்டே ஏற்றல் வேண்டும், ஏற்போர் ஒல்லும் வகையால் அவ்வாற்றானும் ஓவாத அறவினை செய்தல் வேண்டும், தம் பொருட்டு ஏற்றல் தீவினையாம் என்னு மிவ்வறங்கள் பிடகநூல் கூறும் அறங்கள் போலும் என்னை? இவ்வறம் நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் என்றமையால் ஈண்டு நூலெனப்படுவது பிடக நூல்களே யாதலின் என்க.
இரப்போர்க்கு ஏற்றலும் இடுதலும் கடன் ஆகலின் யாம் இடுவது கண்டும் அயிர்ப்பாரிலர் என்று துணிவாள் அவர் மேற் சென்றளித்தல் விழுத்தகைத்து என்று நூலோர் நுனித்தனர் என்று நினைந்தனள் என்க.
நுனித்தல்- நுணுக்கமாக அறிதல். ஆம் என-என்று அறுத்துக் கண்ணழித்து இங்ஙனம் செய்தலே இப்பொழுதைக்கு நமக்குத் தகதி யாம் என்று கருதி என்று பொருள் விரித்திடுக.
மணிமேகலை சிறைக்கோட்டம் புகந்து உண்டி கொடுத்து உயர் அறம் பேணல்
39-46: முதியாள்.....................ஊட்டலும்
(இதன் பொருள்) முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த அமுதசுரபியை அங்கையின் வாங்கி- சம்பாபதியின் கோயிலாகிய குச்சரக்குடிகையின் உள்ளே தான் கொடுபோய் வைத்திருந்த அமுதசுரபி என்னும் தெய்வத்தன்மையுடைய திருவோட்டினை எடுத்துத் தன் அழகிய கையிலே ஏந்தி; பதி அகம் திரிதரும் பைந்தொடி நங்கை- காயசண்டிகை வடிவத்தோடே அந் நகரத்தினூடே இரவலரை நாடித் தான் வேண்டியாங்கு இயங்குகின்ற அம் மணிமேகலை நல்லாள்; அதிர் கழல் வேந்தன் அடிபிழைத்தாரை ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக் கோட்டம் விருப்பொடும் புகுந்து-ஒலிக்கின்ற வீரக்கழல் கட்டிய சோழ வேந்தன் தன் திருவடியின் கீழிருந்தும் அறியாமையாலே பிழை செய்த மாக்களை அப் பிழைக்குத்தகத் துன்புறுத்தும் தண்டம் காரணமாகப் பிழை செய்த அம் மாக்கள் புக்குறைகின்ற சிறைக்கோட்டத்தினுள்ளே உண்டி கொடுத்து அவர் உறுபசி களைதற்குப் பெரிதும் விரும்பிப் புகுந்து; ஆங்கு வெய்து உயிர்த்துப் புலம்பி பசிஉறு மாக்களை-அச் சிறைக் கோட்டத்தில் துன்பத் தாலே வெய்தாக நெடுமூச்செறிந்து பசியாலும் வருந்தியிருக்கின்ற அரிய உயிரையுடைய மாக்களை இனிதிற்கூவியழைத்து; வாங்கு கையகம் வருந்த நின்று ஊட்டலும்-அம் மக்கள் ஏந்துகின்ற கைகள் பொறையால் வருந்துமாறு மிகுதியாக அமுதசுரபியினின்றும் உணவுகளை நிரம்பப்பெய்து உண்ணச் செய்யுமளவிலே என்க.
(விளக்கம்) முதியாள்: சம்பாபதி. கோட்டத்து அகவயினிருந்த அமுத சுரபியை வாங்கி என்றமையால்-முன்னர்க் காயசண்டிகை வடிவாய்ப் பாத்திரம் ஏந்தி வந்து தோன்றியவள் மன்னவன் மகன் போயபின் மீண்டும் கோயிலுட் புகுந்து வைத்த பாத்திரத்தை இன்னது செய்வல் என எண்ணித் துணிந்த பின் எடுத்தாள் என்பது பெற்றாம்.
வாங்கி-எடுத்து. பைந்தொடி: மணிமேகலை. பசியால் வருந்துவோர் சிறைக் கோட்டத்துள் மிக்கிருப்பர் என்னும் கருத்தால் சிறைக் கோட்டத்துப் புகுந்தபடியாம்.
அதிர்கழல்-ஒலிக்கின்ற வீரக்கழல். பகைவர் உள்ளம் நடுங்குதற்குக் காரணமான வீரக்கழல் எனினுமாம். வேந்தன் அடிபிழைத்தார் என்றது- நாட்டினிற் செங்கோன் முறையினில்லாமல் குற்றம் புரிந்த மாந்தரை, ஒறுத்தல்-துன்புறுத்துதல் உறுசிறை: வினைத்தொகை. ஆருயிர் என்றார் துன்புழித் தொறும் காதலிக்கப் படுமருமையுடைத்தாதல் பற்றி.
கோட்டங் காவலர் வியந்து கோவேந்தனுக் கறிவிக்கச் செல்லுதல்
47-50: ஊட்டிய................ஏகி
(இதன் பொருள்) கோட்டங் காவலர்-கோவேந்தனுடைய சிறைக் கோட்டத்தைக் காவல் செய்கின்ற அரசியற் பணியாளர் மணிமேகலை அச் சிறைக் கோட்டத்தே புகுந்து பசியால் வருந்துகின்ற மாந்தரையெல்லாம் அழைத்து அமுதூட்டி நிற்கும் காட்சியைக் கண்ணுற்று; ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து-என்னே! இஃது என்னே! எண்ணிறந்த மாந்தர்க் கெல்லாம் இவள் அவரவர் வேண்டியவுணவினை ஏற்போர் கையகம் வருந்துமாறு வழங்கும் கருவி இவள் கையிலேந்திய திருவோடு ஒன்று மட்டுமே யாகவுளது, இக்காட்சி பெரிதும் வியக்கத் தக்கது என்று மருண்டு; கோமகன் தனக்கு இப் பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்-யாம் நம்மரசர் பெருமானுக்கு இத் திருவோடு உணவு தருகின்றதும் அவ்வுணவினை ஆர்வத்தோடு நின்றூட்டுவதுமாகிய இவ்வற்புதம்; யாப்புடைத்தாக-திருச்செவியோடு தொடர்புடையதாகும்படி; இசைத்தும் என்று ஏகி- சென்று கூறுவேம் என்று துணிந்து போய் என்க.
(விளக்கம்) பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் ஆகிய இவ்வற்புதக் காட்சியை என்று வருவித்தோதி யாப்புடைத்து என்னும் ஒருமையோடியைக்க அன்றி: பன்மை ஒருமை மயக்கம் எனினுமாம் இசைத்தும்-கூறுவேம்.
(51-ஆம் அடிமுதலாக, 116 ஆம் அடியீறாகச் சோழ மன்னனுடைய பொழில் விளையாட்டு வண்ணனையாக ஒரு தொடர்)
சோழமன்னன் உரிமையோடு சென்று பூம்பொழிலிற் புகுந்து விளையாடுதல்
51-60: நெடியோன்................சிறந்தும்
(இதன் பொருள்) நெடியோன் குறள் உருவு ஆகி- திருமால் தேவர்கள் வேண்டுகோட்கிணங்கிக் காசிபன் என்னும் முனிவன் பத்தினியாகிய அதிதி என்பவள் வயிற்றில் குறிய உருவமுடையவனாகப் பிறந்து மாவலியின் வேள்விக் களத்திலே சென்று; நிமிர்ந்து தன் அடியில் படியை அடக்கிய அந்நாள்- பேருருக் கொண்டு தனது ஒரே திருவடியில் இந் நிலவுலகத்தை எல்லாம் அடக்கி அளந்து தனதாக்கிக் கொள்ளும் பொருட்டுப் பண்டொரு காலத்தே மூன்றடி மண்ணிரந்த நாளிலே; நீரின் பெய்தமூரிவார் சிலை மாவலி மருமான்-ஆசிரியனாகிய வெள்ளிதடுக்கவும் இல்லை என்னாமல் அவ் வாமனன் இரந்த மண்ணை நீர் வார்த்து வழங்கிய வள்ளன்மையையும் அமரர் முதலியோரையும் வெல்லுதற்கியன்ற பெரிய நெடிய விற்படையையும் உடைய புகழாளனாகிய மாவலியின் வழித்தோன்றலாகிய மன்னவனுடைய; சீர்கெழு திருமகள் சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு-கற்புடைமையாலே புகழ் பொருந்திய செல்வமகளாகிய சீர்த்தி என்னும் திருப்பெயரையுடைய திருமகளை ஒத்த தன் பெருந்தேவியோடு; போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன்(மாவண்கிள்ளியாகிய சோழமன்னவன்)- நாளரும்புகள் இதழ் விரிக்கின்ற தனது பூம்பொழிலிலே புகுந்தானாக; புக்கு கொம்பர்த் தும்பி குழல்இசை காட்ட பொங்கர் வண்டு இனம் நல் யாழ் செய்ய குயில் வரி பாட மாமயில் ஆடும்-புகுந்து அப் பொழிலினூடு ஒரு சார் மலர்ந்த கொம்புகளிலே தேன் தேர்கின்ற தும்பிகள் தமது முரற்சியாலே வேய்ங் குழலின் இன்னிசையைக் செய்யாநிற்பவும் அப் பொழிலிடத்துப் பல்வேறு வகைப்பட்ட வண்டுகள் யாழின் இசைபோன்று இனிதாக முரலா நிற்பவும் குயில்கள் இனியமிடற்றுப் பாடலைப் பாடா நிற்பவும் நீலமயில்கள் விறலியர் போன்று கூத்தாடுகின்ற; விரைப் பூம்பந்தர் கண்டு உளம் சிறந்தும்- நறுமணம் கமழ்கின்ற மலர்க்கொடிகளாலியன்ற ஆடலரங்கு போன்ற பந்தரின் எழில் கண்டு உள்ளத்தில் உவகைமிக்கும்; என்க.
(விளக்கம்) ஈண்டுக் கூறப்படுகின்ற சோழமன்னனை மாவண்கிள்ளி என்பர். இக் காதையில் 127 ஆம் அடியில் வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி என்றோதுதல் காண்க. பிறிதோர் இடத்தில் நெடுமுடிக்கிள்ளி என்றலின் கிள்ளி என்பதே இவன் பெயர் என்று தெரிகின்றது. இவனைக் கிள்ளி வளவன் என்றும் கூறுப.
இக் கிள்ளியின் மனைவியின் பெயர் சீர்த்தி என்பதாம். இவளைப் புலவர் பெருமான் ஈண்டு நான்கு அடிகளாலே விதந்தெடுத்துப் பாராட்டி நம்மனோர்க்கு அறிவிக்கின்றனர். இவ்வடிகளாலே இக் கோப்பெருந் தேவி புகழப்படுகின்றாளேனும் அது வஞ்சப் புகழ்ச்சியேயாம். அவளை அரக்கி என்றிகழ்வதே நூலாசிரியர் குறிப்பாகும். இவள் பின்னர் மணிமேகலைக்குச் செய்யும் கொடுமை இரக்க மென்றொரு பொருளிலாத நெஞ்சினராகிய அரக்கர் செய்தற்கியன்ற செயலாக இருத்தலின் அவளுடைய குலம் அரக்கர் குலம் என்பதை அறிவுறுத்தவே புலவர் இவ்வாறு வஞ்சப் புகழ்ச்சியாகப் பாராட்டுகின்றனர். இந் நுணுக்க முணராக்கால் ஈண்டு நீளதாக அவளைப் புகழ்வது மிகைபடக் கூறலாய் முடியும் என்க.
மாவலி தேவர்களுக் கிடுக்கண் செய்ய அது பெறாத தேவர் திருமாலிடத்தே தஞ்சம் புக்கனர். அவர் இடுக்கண் தீரத் திருமால் குறள் உருவாகிச் சென்று மாவலியின்பால் மூவடி மண்ணிரந்தான்; திருமாலின் சூழ்ச்சியை அறிந்த வெள்ளி கொடாதே என்று தடுத்தான்; அவனை இகழ்ந்து நீர்வார்த்த நில மீந்தான். அம் மாவலியின் இவ் வள்ளன்மைச் சிறப்புக் குறிப்பாகத் தோன்றுதற்கே நீரிற் பெய்த என்றார். அவனுடைய ஆற்றற் சிறப்பை வில்லிற் கேற்றி மூரிவார் சிலை மாவலி என்றார்.
மாவலி மருமான்- மாவலி மரபிற்றோன்றிய ஓரரசன். அவள் அரக்கர் மரபிற் பிறந்தவள் என்றறிவித்தலே புலவர் கருத்தாகலின் அவள் தந்தை பெயர் கூறாது மாவலி மருமான் மகள் என்றொழிந்தார். திருமகள் என்றது செல்வ மகள் எனவும் திருத்தகு தேவி என்றது திருமகள் எனத் தகுந்த தேவி எனவும் வெவ்வேறு பொருள் காண்க. மாவலி மரபு மன்னர் பாணவரசர் எனவும் கூறப்படுவர். அவராவார் வாணகப்பாடி முதலிய இடத்தை ஆட்சி செய்தவர். போது- நாளரும்பு. அன்றலரும் அரும்பு என்றவாறு. கொம்பர் மலர்க்கொம்பு. தும்பி வண்டு என்பன அவற்றின் வகை. யாழ்: ஆகுபெயர் வரியையுடைய குயிலுமாம். மா- சிறப்புமாம். விரை நறுமணம்.
இதுவுமது
91-70: புணர்...........என்றும்
(இதன் பொருள்) புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு மடமயிற் பேடையும் தோகையும் கூடி- தன்னோடு புணரும் காதற்றுணையாகிய பெடையன்னம் பிரியப் பெற்றுப் பொய்கையின்கண் தனத்திருக்கின்ற அன்னச் சேவலொடு தோகையையுடைய ஆண் மயிலும் அதன் புணர் துணையாகிய மடப்பமுடைய பெடையும் தம்முட் கூடி; ஆங்கு இருசிறை விரித்து எழுந்து உடன் கொட்பன-அவ் விடத்தே தம்மிரு சிறகுகளையும் விரித்தெழுந்து ஒரு சேரச் சுற்றி வருபவற்றை; ஒரு சிறைக் கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி-ஓரிடத்தே கண்டபொழுது உள்ளத்தே பெரிதும் மகிழ்ந்து; மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும்-நீலமணி போன்ற நிறமுடைய மாயவனும் அவன் தமையனாகிய பலதேவனும் நப்பின்னைப் பிராட்டியும் ஒருங்கு கூடி ஆடிய குரவைக் கூத்தையே ஒக்கின்றது இப் பறவைகள் கூடி ஆடுகின்ற இக் காட்சி என்று நெடும் பொழுது அவ்வழகை நோக்கி நின்றும்; கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை பாங்கு உற இருந்து பல்பொறி மஞ்ஞையை-கோங்க மரத்திலே மலர்ந்திருக்கின்ற ஒரு மலரின் மேலே பொருந்துமாறு அதனயலே நிற்கின்ற மாமரத்திலே காய்த்துத் தூங்குகின்ற முகஞ் சிவந்த கனியையும் அதன் பக்கத்திலே கோங்கங் கொம்பிலே அமர்ந்திருக்கின்ற பலவாகிய புள்ளிகளையுடைய மயிலையும் ஒருங்கே நோக்கி; செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்திப் பைங்கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும்- சிவந்த பொன்னாலியன்றதொரு தட்டிலே இனிய பாலைப் பெய்து கையிலேந்தித் தான் வளர்க்கின்ற பசிய கிளிக்கு ஊட்டுவாளொர நங்கையைக் காண்பது போல்கின்றது இக்காட்சி என்று அக்காட்சியை நயந்து நோக்கியும்; என்க.
(விளக்கம்) புணர்துணை-புணர்ந்து மகிழ்தற்குக் காரணமான பெடையன்னம். துணை நீங்கிய அன்னம் என்றது சேவலன்னத்தை. இது பலதேவனுக்குவமை. தோகை-ஆண்மயில் இது ;நீலமணி வண்ணனாகிய மாயவனுக்கும் அதன் பெடை நப்பின்னைப் பிராட்டிக்கும் உவமைகள்.
குரவை-கை கோத்தாடும் ஒரு வகைக்கூத்து.
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவை என்பதனோடு
மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர
ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதேத்தத்
தாதெருமன் றத்தாடும் குரவையோ தகவுடைத்தே
எனவரும் சிலப்பதிகாரமும்(17) நினைவு கூரற்பாலதாம்.
மலர்ந்த கோங்கமலர்க்குப் பொன்னாலியன்ற தட்டும் அம் மலர்மேற் பொருந்தத் தூங்கும் மாங்கனிக்குப் பைங்கிளியும் அவற்றின் மருங்கே மரக்கிளையிலமர்ந்திருக்கின்ற மயிலுக்குப் பாவை(பெண்)யும் உவமைகள். பைங்கிளி என்ற குறிப்பாலும் காயென்னாது கனி என்றதனாலும் முகஞ்சிவந்த கனி என்று கொள்க. கனிந்த முகம் கிளியின் அலகிற்கும் பசிய ஏனைய பகுதி கிளியின் உடலிற்கும் உவமைகளாக நுண்ணிதிற் கண்டு கொள்க.
இனி இவ்வுவமையோடு
வண்டளிர் மாஅத்துக் கிளிபோல் காயகிளைத்துணர்
எனவும்,(அகம்-37)
சேடியல் வள்ளத்துப் பெய்தபால் சிலகாட்டி
ஊடுமென் சிறுகிளி யுணர்ப்பவள் முகம்போல
............................................
கடிகயத் தாமரைக் கமழ்முகை கரைமாவின்
வடிதீண்ட வாய்விடூஉம் வயலணி நல்லூர!
எனவும் வரும்(கலி-72) பிற சான்றோர் கூற்றுக்களும் நோக்கத் தகுவனவாம்.
இதுவுமது
71-78: மணி................ஏத்தியும்
(இதன் பொருள்) மணி மலர்ப் பூம்பொழில் அகவயின்-அழகிய மலர்களையுடைய பூம்பொழிலினுள்ளிடத்தே; பெருமதர் மழைக்கண் மடவோர்க்கு இயற்றிய மாமணி ஊசல்- பெரிய மதர்த்த குளிர்ந்த கண்ணையுடைய உரிமை மகளிர் ஏறி ஆடுதற் பொருட்டு இயற்றப்பட்ட சிறந்த மணிகள் பதித்த பொன்னூசலின் மேல்; கடுவன் இருந்த பிணவுக் குரங்கு ஏற்றி ஊக்குவது கண்டு நகை எய்தியும்-ஆண் குரங்கு தன் பக்கலிலே இருந்த தன் காதலியாகிய பெண் குரங்கை ஏற்றி வைத்து ஆட்டுவதனைப் பார்த்து நகைத்தும்; பாசிலை செறிந்த பசுங்கால் கழையொடு வால் வீசெறிந்த மராஅங் கண்டு- பசிய இலைகள் செறிந்திருக்கின்ற பிச்சை நிறமான தண்டினையுடைய மூங்கிலோடு வெள்ளிய நாண் மலர் செறிய மலர்ந்து நிற்கின்ற வெண்கடப்ப மரத்தினையும் ஒரு சேரக் கண்டு இக் காட்சியானது; நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என-நெடுமாலாகிய மாயவன் தன் தமையனாகிய பலதேவனோடு நிற்பவனுடைய தோற்றத்தை நினைவூட்டுகின்றது என்று இறையன்பு கொண்டு; தொடி சேர் செங்கையின் தொழுது நின்று ஏத்தியும்-வீர வலையங் கிடந்த தனது சிவந்த கைகளைக் குவித்து நின்று வாழ்த்தியும் என்க.
(விளக்கம்) மணிமலர்-அழகிய மலர். பிணவுக் குரங்கு-பெண் குரங்கு. பிணவு என்னும் சொல் குரங்கிற் பெண்ணிற்கு வந்தமை தொல்-மரபி-58 ஆம் சூத்திரத்தே ஒன்றிய என்று இலேசாற் கொள்க.
மடவோர் என்றது உவளகத்து மகளிரை. மணி கூறியதனால் மணி பதித்த பொன்னூசல் என்க. கடுவன்-ஆண் குரங்கு. குரங்குகள் மக்கள் செய்வதனைப் பார்த்தவழி அது போலத் தாமும் செய்யும் இயல்புடையன ஆதல் ஈண்டு நினைக. நெடியோன்-மாயவன். மாயவனுக்கு இலை செறிந்த பச்சை மூங்கில் உவமை. வெள்ளிய மலர் செறிந்த வெண்கடம்பு பலதேவனுக்குவமை. இதனோடு ஒருகுழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும் எனவரும் கலியடியையும்(26) நோக்குக. பச்சைமூங்கிலும் வெண்மலர் செறிந்த மராஅமும் ஓரிடத்தே சேர்ந்து நிற்குங் காட்சி மாயவனும் பலதேவனும் ஓரிடத்தே நிற்குங் காட்சி போறலின் அக் கடவுளர்பால் அன்புடைமையின் கைகூப்பித் தொழுதனன் என்றவாறு. தொடி-வீரவலையம்.
அரசனோடாடும் அரிவையரியல்பு
79-92: ஆடல்..............அயர்ந்து
(இதன் பொருள்) ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிப்போர் நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர்-கதை தழுவாமல் இசைப்பாட்டின் தாளத்திற் கேற்பக் கால்பெயர்த்திட்டாடுமியல்பினையுடைய ஆடற் கலையினோடு பாட்டின் பொருள் புலப்படக் கை காட்டி அவிநயிக்கும் இசைக்கலையும் நாடக வழிக்குப்பற்றி இயற்றப்பட்ட அகப்பொருட் பனுவல்களின் உள்ளுறையும் இறைச்சியுமாகிய நுண்பொருளை நுணுக்கமாக உணர்ந்து கூறும் இயற் கலையுமாகிய மூன்று கலைகளையும் கூர்ந்துணர்ந்தவரும்; பண் யாழ் நரம்பின் பண்ணுமுறை நிறுப்போர்-எழிசைகளையுமுடைய யாழின் நரம்புகளை வருடிப் பண்களை நூன் முறைப்படி எழுவி இசைக்க வல்லாரும்; தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர்-தோற் கருவிகளுள் தலையாய மத்தளத்தின் இருமுகத்தினும் இசைகூட்டி அடித்தலை நன்குணர்ந்தவரும்; குழிலொடு கண்டம் கொளச் சீர் நிறுப்போர்-வேய்ங் குழலின் இசையோடு தமது மிடற்றிசை பொருந்தும்படி பாடி தாளத்தாலே அளப்பவரும்; பழுகிய பாடல் பலரொடு மகிழ்வோர்-இலக்கணம் நிரம்பி இன்பம் கெழுமிய பண்களைப் பலர் கேட்ப அரங்கிலிருந்து பாடிக் கேட்போர் பலரும் மகிழ்தல் கண்டு அவரினுங் காட்டிற் பெரிதும் மகிழுபவரும்; ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்-அறுந்த மாலையினின்றும் உதிர்ந்த முத்துக்களை அழகுறக் கோப்பவரும்; ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்-ஈரமின்றி உலர்ந்த சந்தனச் சுண்ணத்தை வியர்வொழிய மார்பிலே அப்புவோரும்; குங்குமம் கொங்கையின் வருணம் இழைப்போர்-குங்குமத்தைக் கொண்டு முலைகளுக்கு வண்ணந் தீற்றுவோரும்; அம் செங்கழுநீர் ஆய்இதழ் பிணைப்போர்-அழகிய செங்கழுநீரினது அழகிய மலரை மாலையாகத் தொடுப்பவரும்; நல் நெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர்-இயற்கையழகுமிக்க நெடிய தம் கூந்தலை நறுமணப் புகையிலே மூழ்குவிப்பவரும்; பொன்னின் ஆடியின் பொருந்துபு நிற்போர்-திருமகள் போன்று தமது நிழல் நிலைக்கண்ணாடியிலே பொருந்தும்படி அதனெதிரே தமதழகைக் கண்டு நிற்பவரும் ஆகிய; ஆங்கவர் தம்மொடு-இன்னோரன்ன கலை நலமிக்க மகளிர் பலரோடுங் கூடி; அகல் இரு வானத்து வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து-அகன்ற பெரிய வானுலகத்து வாழும் அமரர் கோமானாகிய இந்திரன் அரம்பையரோடு சென்று கற்பகப் பொழிலில் விளையாடுமாறு போலப் பூம்பொழிலிற் புகுந்து விளையாடல் செய்து என்க.
(விளக்கம்) ஆடல்-தாளத்திற்கேற்ப அடிபெயர்த்து ஆடும் நடனம் அவிநயம்-பாடலின் பொருள் தோன்றக் கை காட்டி வல்லபஞ் செய்தல். நாடகக் காப்பியம்-அகப்பொருட்பனுவல். என்னை? இது நாடக வழக்கும் உலக வழக்குந் தழுவி இயற்றப்படுஞ் செய்யுள் ஆதலின் நாடகக் காப்பியம் என்றார். நுனித்தல்-உள்ளுறையும் இறைச்சியும் குறிப்புமாகிய செய்யுட் பொருளைக் கூர்ந்துணர்ந்து கூறுதல். என்னை?
கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மார்ந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே
என்பவாகலின் (தொல்-மெய்ப்-சூ-27) நன்னூல் அறிவோர் என்னாது நுனிப்போர் என்றார். எனவே ஈண்டு இயல் இசை நாடகம் என்னும் முத்திறத்துத் தமிழ்க்கலையும் வல்ல மகளிரும் கூறப்பட்டமையிறிக.
தண்ணுமை- மத்தளம். கண் என்றது அதன் இரண்டு முகங்களையும். எறி-எறிதல்; முழக்குதல். கண்ணெறி என்பதனை நெறி எனக் கண்ணழித்துக் கண்களில் இசை கூட்டும் நெறி எனினுமாம். என்றது இரண்டு கண்களினும் சுதி கூட்டும் முறை என்றவாறு. என்னை?
இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய்
நடப்பது தோலியற் கருவி யாகும்
என்பது முணர்க.(சிந்தா- செய்=675-நச்சி=உரை)
குழல்- வேய்ங்குழல். கண்டம்-மிடறு. குழலிசையோடு மிடற்றிசை பொருந்தப் பாடித் தாளத்தால் அளந்து அறுதி செய்வோர் என்க.
பழுநிய-நிரம்பிய; முற்றிய. பாடல்-இசைப் பாடல்; உருக்கள் ஆரம்-மாலை. பரிந்த முத்து-அறுந்துதிர்ந்த முத்து. விளையாட்டாகலின் ஆரம் அறுந்து உதிரும் முத்துக் கோக்கும் மகளிரும் வேண்டிற்று. ஈரம் புலர்ந்த சாந்தம்- சந்தனச் சுண்ணம். ஆடுங்கால் வியர்வை யொழியச் சுண்ணம் அப்புவோர் என்றவாறு. கூந்தலை நறுமணப் புகையில் மூழ்குவிப்போர் என்க. கூந்தலில் விரையூட்டி நீரின் மூழ்கி விளையாடுவோர் எனினுமாம். பொன்னின்- திருமகள் போல. இவரும் இன்னோரன்ன பிற மகளிரும் என்பார் ஆங்கவர் தம்மொடு என்றார். வேந்தன்-இந்திரன் வேந்தன் தீம்புனலுலகமும் என்புழி அஃதப் பொருட்டாதலறிக. விளையாட்டயர்ந்து- விளையாடி என்னும் ஒரு சொன்னீர்மைத்து.
பூம்பொழிலின் இயல்பு
93-99: குருந்தும்.............நின்றும்
(இதன் பொருள்) குருந்தும் தளவும் திருந்து மலர்ச்செருந்தியும் முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்-அவ் விளையாட்டில் இளைப்புழிக் குருந்த மர நிழலினும் செம்முல்லைப் பூம்பந்தரின் கீழும் அழகிய மலரையுடைய செருந்தி மரத்தின் நீழலினும் மணம் பரவுகின்ற முல்லைப் பூம்பந்தரின் கீழும் கருவிள மரச்சோலையினூடும்; பொருந்துபு நின்று-சேர்ந்து நின்றும்; திருந்து நகை செய்தும்- விளையாட்டின் வெற்றி தோல்வி பற்றி ஒருவரோடுடொருவர் அழகிய புன்முறுவல் செய்தும்; குறுங்கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும் பிறழ்ந்துபாய் மானும் இறும்பு அகலா வெறியும்-குறிய கால்களையுடைய கீரியும் நெடிய செவியையுடைய முயலும் பொள்ளெனத் தம்மைக் கண்டவுடன் திசைமாறி ஓடுகின்ற மானும் குறுங்காட்டைவிட்டு அகலாமல் நிலைத்து வாழுகின்ற யாடும் ஆகிய உயிரினங்களைக் கண்டுழி; வம் எனக் கூஉய்-இங்கு வாருங்கள் என்று தன் விளையாட்டுத் தோழரை யழைத்து; மகிழ்துணையொடு தன் செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்றும்-அவ்விடத்தே தோழியரோடு விரைந்து வந்துற்ற தான் மகிழ்தற்குக் காரணமான வாழ்க்கைத் துணைவியாகிய சீர்த்தி என்னும் பெருந்தேவியோடு சேரநின்று அவற்றை அவர்க்குத் தன் செந்தாமரை மலர் போன்ற சிவந்த கையாலே காட்டி மகிழ்ந்து நின்றும் என்க.
(விளக்கம்) விளையாட்டயர்ந்து இளைத்துழி என்க. தளவு-செம்முல்லை. செருந்தி-ஒரு மரம். தளவு முல்லை என்பன அவை படர்ந்த பந்தர்க்கு ஆகுபெயர். பொங்கர்-சோலை. விளையாடுவோர் அணிவகுத்துத் தம்முள் மாறுபட்டு நின்று ஆடி வென்றாலும் தோற்றாலும் அவை பற்றிப் பேசி நகுதல் இயல்பாகலின் திருந்து நகை செய்தும் என்றார். திருந்து நகை-எள்ளல் முதலிய குற்றமற்ற நகை எனினுமாம், உடலும் உள்ளமும் ஆக்கமுற்றுத் திருந்துதற்குக் காரணமான நகை எனினுமாம்.
குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும் எனவும் பாய்மானும் அகலா வெறியும் எனவும் வருவனவற்றுள் முரண்அணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுவித்தல் உணர்க.
நகுலம்-கீரி. இறும்பு-குறுங்காடு. வெறி-யாடு. வம்மென மாதரைக் கூஉய், வரவழைத்து அவர்களில் மகிழ் துணையோடு நின்று அவையிற்றை இன்னின்ன என்று சொல்லிக் கையாற் சுட்டிக் காட்டி என்றவாறு. காட்டுபு-காட்டி.
பிற விளையாட்டிடங்கள்
100-109: மன்னவன்..............விளையாடி
(இதன் பொருள்) மன்னவன்றானும்-இவ்வாறு மாதரார் குழுவினோடு விளையாட்டயர்ந்து அவரோடு காட்சி பல கண்டு நின்ற அரசன் பின்னரும்; மலர்க்கணை மைந்தனும் இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்-அவ்வுரிமை மகளிரேயன்றி, காமவேளும் ஆடற்கு இனிய இளைமையுடைய வேனிலரசனும் இளைமையுடைய தென்றலாகிய செல்வனும் உடங்கியைய மாலைப் பொழுதில் மெல்லென ஆடுபவன்; எந்திரக் கிணறும் கல் இடும் குன்றமும் வந்து வீழ் அருவியும் மலர்ப்பூம்பந்தரும்-வேண்டும்பொழுது நீரை நிரப்பவும் வேண்டாத பொழுது கழிக்கவும் ஆகிய பொறியமைக்கப் பெற்ற கிணறுகளின் மருங்கும் கல்லிட்டுக் கட்டப் பெற்ற செய்குன்றுகளின் மருங்கும் வேண்டும் பொழுது வந்து வீழ்கின்ற நீர்வீழ்ச்சியின் மருங்கும் மலர்க் கொடிகள் படர்ந்த நறுமணங்கமழும் பல்வேறு மலர்ப் பந்தரினூடும்; நீர்ப்பரப்பு பொங்கையும் கரப்பு நீர்க்கேணியும் நன்னீர்ப் பரப்பினையுடைய நீர் நிலையின் கரைகளிடத்தும் ஒளித்து உறை இடங்களும்-தேடுவார்க்கு அகப்படாமல் கரந்திருத்தற் கியன்ற இடங்களினூடும்; பளிக்கறைப் பள்ளியும் பளிங்காலியன்ற மண்டபங்களாகிய தங்குமிடங்களும் ஆகிய யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி- பல் வேறிடங்களினும் திரிந்து இருந்தும் மெல்லென விளையாடுதலைச் செய்து என்க.
(விளக்கம்) 55 ஆம் அடி தொடங்கி, 78- தொழுது நின்றேத்தியும் என்பது முடிய மன்னவன் மகளிரொடு பூம்பொழிலிற் புகுந்து முற்பகலில் ஆங்காங்குச் சென்று அதனழகு கண்டு கண்டு மகிழ்தலும், 79 ஆம் அடி தொடங்கி 95 ஆம் அடிகாறும் மன்னவன் ஆடற்கூத்தியர் முதலிய கலைநலம் மிக்க மகளிரோடு மரநீழலினும் சோலையினூடும் இளைப்பாறி இருந்து பல்வேறு கலையின்பம் துய்த்திருத்தலும், நண்பகல் நிகழ்ச்சிகள் என்றும், 96 ஆம் அடி தொடங்கி 106 ஆம் அடி முடிய அம் மன்னவன் அம் மகளிரொடு தென்றற் காற்றை இனிது நுகர்ந்தவாறே யாங்கணும் மெல்லத் திரிந்தும் தாழ்ந்தும் ஆடிய மென்மையான நிகழ்ச்சிகள் என்றும் நிரலே கூறப்பட்டிருத்தல் குறிக் கொண்டு நோக்குக. ஏன்? இவன் உதயகுமரனுடைய தந்தையாகலின் அவன் முதுமைப் பருவத்திற் கேற்ப ஈண்டுக் கூறப்படுவன எல்லாம் காட்சி காண்டலும் வாளாது உலாப் போதலுமாகவே கூறல் வேண்டிற்று.
மாலைப் பொழுதிலே மகளிரொடு ஆடுதற்கியன்ற வேட்கையும் அவ்விளவேனிற் பருவமும் மெல்லிய தென்றற் பூங்காற்றும் யாண்டுந் திரிதரும் மன்னனுக்குப் பேருதவி செய்தலின் அவற்றையும் அவனுடைய விளையாட்டுத் தோழர்களாகவே குறிப்புவமஞ் செய்தார்.
இளவேனில்-சித்திரையும் வைகாசியும் ஆகிய இரண்டு திங்களுமாம். இப் பருவம் அழகு மாலையிலேதான் பெரிதும் மாண்புற்றுத் திகழும். பூந்தென்றலும் பிற்பகலிலேதான் இனிதாக இயங்கும். இவற்றைப் பட்டறிவால் உணர்க.
எந்திரக்கிணறு............பளக்கறைப் பள்ளியும் எனவரும் இப் பகுதியோடு
அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்
தண்பூங் காவும் தலைத்தோன் றருவிய
வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும்
இளையோர்க் கியற்றிய விளையாட் டிடத்த
சித்திரப் பூமி வித்தகம் நோக்கி
எனவரும் பெருங்கதைப் பகுதி(1-33:3-7) ஒப்புநோக்கற் பாலதாம்.
எந்திரக்கிணறு-வேண்டுங்கால் நீர் நிரப்பவும் வேண்டாதபொழுது கழிக்கவும் பொறி பொருத்தப்பட்ட கிணறு.
கல்இடும் குன்றம் என மாறுக-கல்லிட்டுக் கட்டப்பட்ட செய்குன்றம் என்க. இக் குன்றத்தின் இயல்பினை
வெள்ளித் திரண்மேல் பசும்பொன் மடற்பொதிந்து
அள்ளுறு தேங்கனிய தாம்பொற் றிரளசைந்து
புள்ளுறு பொன்வாழைக் கானம் புடையணிந்த
தெள்ளுமணி அருவிச் செய்குன்றம் சேர்ந்தார்
எனவரும் சூளாமணி யானும்(1946) உணர்க.
சுரப்பு நீர்க்கேணி- நீருண்மை தெரியாமல் மறைக்கப்பட்டுள்ள கேணி
ஒளித்துறை இடம்-வழியும் எதிர்முட்டும் கிளை வழியும் பலப்பல வாக ஒளிந்து விளையாடற் பொருட்டுச் செய்யப்பெற்ற வழிகள். இவற்றில் களைவழி போலத் தோன்றுவன உள்ளே சென்றால் அடைபட்டிருக்கும். இவ் வழியினூடும் கிளை வழிகள் பல காணப்படும். இவ் வழிகளினூடே சென்று ஒளிந்திருப்பாரைக் கண்டுபிடித்தல் அரிது. ஆதலின் ஒளிந்து விளையாடும் இத்தகைய இடத்தையே ஈண்டு ஒளித்துறை இடம் என்றார். பள்ளி-தங்குமிடம்.
திரிந்தும் தாழ்ந்தும் என எண்ணும்மை விரித்தோதுக.
பைஞ்சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்தில் இந்திர திருவன் சென்றினிதேறுதல்
107-119: மகத................ஏறலும்
(இதன் பொருள்) மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்- மகதநாட்டுப் பிறந்த மணித்தொழில் வித்தகரும் மராட்டநாட்டுப் பிறந்த பொற் கம்மாளரும் அவந்திநாட்டுப் பிறந்த இரும்புசெய் கொல்லுத் தொழிலாளரும் யவனநாட்டுப் பிறந்த மரங்கொல் தச்சுத் தொழிலாளரும்; தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடி-குளிர்ந்த தமிழ் வழங்கும் நாட்டிலே பிறந்த தொழில் வித்தகரோடு கூடி; கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை- மன்னன் கருத்தைத் தெரிந்துகொண்டு இனிதாக இயற்றப்பட்ட காண்போர் கண்ணைக் கவருகின்ற கலையழகு மிளிரும் தொழிற் சிறப்பமைந்ததாய்; பவளத் திரள்கால் பல்மணிப் போதிகை தவள நித்திலத் தாமம் தாழ்ந்த கோணச்சந்தி மாண்வினை விதானத்து-பவளத்தாலியற்றிய திரண்ட தூண்களையும் ஒன்பது வகையான மணிகளும் பதிக்கப்பட்ட போதிகைகளையும் வெள்ளிய முத்துமாலைகள் தூங்காநின்ற மூலைகளாகிய மூட்டுவாய்களையும், மாட்சிமை பெற அமைத்த மேற்கட்டியினையும் உடையதாய்; தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் பொன்னாலே கூரை வேயப் பெற்றதுமாய்ப் பல்வேறு வகைப்பட்ட கலையழகோடு கூடி; பைஞ்சேறு மெழுகா பசும்பொன் மண்டபத்து-பசிய ஆப்பியாலே மெழுகப்படாமல் பசிய பொற்றகட்டாலே தளமிடப்பட்ட மண்டபத்தின்கண்; இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்-தேவேந்திரன் போன்ற பெரிய செல்வச் சிறப்புடைய அச் சோழ மன்னன் இனிது சென்று ஏதுமளவிலே என்க.
(விளக்கம்) இப் பகுதியோடு
யவனத் தச்சரும் அவந்திக் கொல்லரும்
மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும்
பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்
கோசலத் தியன்ற வோவியத் தொழிலரும்
வத்த நாட்டு வண்ணக் கம்மரும்
எனவரும் பெருங்கதைப் பகுதி(1.58:40-44) ஒப்பு நோக்கற் பாலதாம்.
இதனால் மகதவினைஞர் என்றது அந்நாட்டு மணிவினைஞரை என்பது பெற்றாம். கம்மர்- வண்ணவினைஞர் எனவும் ஈண்டு மராட்டியர் அத்தொழிலில் சிறப்புடையர் எனவும் கொள்க. கொல்லர்-இரும்புத் தொழிலாளர். தச்சர்-மரங்கொல் தச்சர்.
பல நாட்டுக் கலைத்திறமும் ஒருங்கே திகழ வேண்டும் என்னும் கலையுணர்வு காரணமாக மகத முதலிய பிறநாட்டு வினைஞரும் வரவழைக்கப்பட்டுத் தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூட்டி வினை செய்விக்கப்பட்டனர் என்பது கருத்து.
திரள்கால்-திரட்சியுடைய தூண். போதிகை-தூணின் மேல் பொருத்தப்பட்டு உத்தரத்தைத் தாங்குமோருறுப்பு. பன்மணிப்போதிகை என்றதனால் இவ்வுறுப்புப் பொன்னாலியற்றப்பட்டுப் பல்வேறு மணிகளும் பதிக்கப்பட்டிருந்தன என்பது பெற்றாம்.
தவளநித்திலத் தாமம்-வெள்ளிய முத்துமாலைகள். கோணச் சந்தி-மூலையாகிய மூட்டுவாய். விதானம் சுடு மண்ணோடு முதலியவற்றால் வேயப்படாமல் பொன்னாலியன்ற ஓட்டால் வேயப்பட்ட கூரையையுடைய மண்டபம் என்க. பைஞ்சேறு என்றது-ஆப்பியை. ஆப்பியால் மெழுக வேண்டாது பசும்பொற் றளமிடப்பட்ட மண்டபம் என்பது கருத்து.
இந்திரதிருவன்-இந்திரன் போன்ற பெருஞ் செல்வமுடைய சோழமன்னன்.
கோட்டங் காவலர் செயல்
117-130: வாயிலுக்கு..................பகைஞர்
(இதன் பொருள்) வாயிலுக்கு இசைத்து-மன்னவன் இருக்குமிடம் வினவி அப் பசும் பொன் மண்டபத்திற்கு வந்தெய்திய சிறைக் கோட்டங் காவலர் தம் வரவினை வாயில் காவலருக்கு அறிவிக்குமாற்றால்; மன்னவன் அருளால்-அரசனுடைய கட்டளை பெற்றமையால் மண்டபத்துள்ளே புக்கு; சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி-தூரிய இடத்திலேயே அவன் திருவடி நோக்கி நிலத்தில் வீழ்ந்து வணங்கியதல்லாமலும் அவன் திருவருள் நோக்கம் தம்மிசை வீழ்ந்த செவ்வியினும் நிலத்தில் வீழ்ந்து வணங்கிக் கூறுபவர்; வாழி எங்கோ-வாழ்க எங்கள் கோமான்!; எஞ்சா மண் நசைஇ இகல் உளம் துரப்ப-ஒரு பொழுதும் குறையாத மண்ணை விரும்பிப் பிறரைப் பகைக்கும் ஊக்கமானது செலுத்துதலாலே; வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி- வஞ்சி மாநகரத்தினின்னும் வஞ்சிப் பூமாலையைச் சூடி; முறம் செவி யானையும் தேரும் மாவும் மறம்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த-முறம் போன்ற செவிகளையுடைய யானைப் படையும் தேர்ப்படையும் குதிரைப் படையும் மறப்பண்புடைய நெடிய வாள் முதலிய படைக்கல மேந்தும் போர் மறவரும் ஆகிய நாற் பெரும் படைகளுஞ் செறிந்த; தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர்-தலைமைத் தன்மை பொருந்திய தூசிப்படையோடு வந்து போர் செய்து முற்பட்டு வந்தவராகிய சேர மன்னனும் பாண்டிய மன்னனும் ஆகிய முவேந்தர் இருவரையும்; செருவேல் தடக்கை ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால்- போர் வேல் ஏந்திய பெரிய கையையும் ஆத்திப்பூவாற் றொடுக்கப்பட்ட மாலையினையும் உடைய நங்கள் இளைய வேந்தனை ஏவுமாற்றாலே; காரியாற்று சிலை கயல் நெடுங் கொடி கொண்ட- காரியாற்றின்கண் பொருது வென்று அவருடைய விற் கொடி மீன் கொடி ஆகிய அடையாளக் கொடியிரண்டையும் ஒரு சேரக் கைப்பற்றிக் கொண்ட; காவல் வெள்குடை வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி-குடிமக்கட்குத் தண்ணிழல் செய்து பாதுகாக்கும் வெண்கொற்றக் குடையையும் பகைவரைக் கொன்று நூழிலாட்டுதற்கியன்ற வலிய பெரிய கையையும் பெரிய வள்ளன் மையையும் உடைய கிள்ளிவளவனாகிய நங்கள் கோமான்; ஒளியொடு ஊழிதோறு ஊழி வாழி-புகழோடு ஊழி பலப்பல இனிது வாழ்க; மன்னவர் பெருந்தகை இது கேள்-வேந்தர் வேந்தே எளியேம் விண்ணப்பமிதனைத் திருச்செவி ஏற்றருள்க; நின் பகைவர் கெடுக- நின்னுடைய பகைவர் கெட்டொழிக! என்று வாழ்த்தி முன்னிலைப் படுத்திக் கூறுபவர், என்க.
(விளக்கம்) வாயிலுக்கு-வாயில் காவலருக்கு. மன்னவன் அருள் என்றது அவனது கட்டளையை. சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி என்றது மன்னவன் கட்டளை பெற்று அவனைக் காணச் செல்வோர் அவன் தம்மை நோக்கினும் நோக்காமல் பொது நோக்குடையவனாயிருப்பினும் ஏழு கோல் தொலைவிற்கு இப்பாலே திருவடிநோக்கித் தொழுது நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்து நிற்பர். பின்னர் மன்னவன் தம்மைச் சிறப்பாக நோக்குமாற்றால் செவ்வி பெறப்பொழுதும் மீண்டும் நிலத்தில் வீழ்ந்து வணங்கி யெழுந்தே தாம் கூற வேண்டிய செய்தியைக் கூறுதல் மரபு. இம் மரபு தோன்றச் சேய் நிலத்திலே வணங்கியதன்றி மீண்டும் செவ்வி பெற்ற பொழுதும் வணங்கினர் என்றவாறு. இம் மரபுண்மையை
இருந்த மன்னவற் கெழுகோ லெல்லையுட்
பொருந்தல் செல்லாது புக்கவ ளிறைஞ்ச
வண்ணமும் வடிவு நோக்கி மற்றவன்
கண்ணி வந்தது கடுமை சேர்ந்ததென்
றெண்ணிய இறைவன் இருகோல் எல்லையுள்
துன்னக் கூஉய் மின்னிழை பக்கம்
மாற்றம் உரையென மன்னவன் கேட்ப
இருநில மடந்தை திருமொழி கேட்டவட்
கெதிர்மொழி கொடுப்போன் போல விறைஞ்ச
எனவரும் பெருங்கதையாலு முணர்க. (1.47:53-61)
செவ்வியின் வணங்கி என்றது அவன் தம்மைக் குறிக் கொண்டு நோக்கும் செவ்வி பெற்ற பொழுது மீண்டும் வணங்கி என்றவாறு. வணங்கி என்பதனை முன்னும் கூட்டுக.
வஞ்சி சேரமன்னர் தலைநகரம். வஞ்சி சூடி என்றதனால் பாண்டியன் சேரன்பாற் சென்று அவனொடும் அங்கிருந்தே வஞ்சி சூடி வந்தான் என்பது பெற்றாம். சிலையென்றொழியாது கயலும் கூறினமையின் மலைத்துத் தலைவந்தோர் சேரனும் பாண்டியனும் என்பது பெற்றாம். வஞ்சிப்பூச் சூடி என்க. மாற்றார் நிலத்தைக் கவரும் கருத்துடைய மன்னர் வஞ்சிப் பூச்சூடிச் செல்வது மரபு, இதனை
வஞ்சி தானே முல்லையது புறனே
எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே
எனவரும் கொல்காப்பியத்தானும்(புறத்திணை-சூ.7) அறிக.
ஈண்டும் ஆசிரியர் தொல்காப்பியனார் மொழியை எடுத்துப் பொன் போல் போற்றி எஞ்சா மண்ணசைஇ எனப் பொதிந்து வைத்திருத்தலு முணர்க.
வயவர்-போர் மறவர்; தார்ச் சேனை- தூசிப்படை. இளங்கோன் என்றது கிள்ளிவளவன் தம்பியாகிய நலங்கிள்ளியை. காரியாறு சோணாட்டின்கண் ஒரு யாறு. இதற்குத் திருத்தொண்டர் மாக்கதையில் திருநாவுக்கரசர் வரலாற்றில் வருகின்ற திருக்காரிக் கரை என்பதனை (செய்யுள் 343) எடுத்துக்காட்டுவாருமுளர். வடதிசைக்கண்ணதாகக் கூறப்படும் இக்காரி(க்கரை) இவ்வரலாற்றோடு பொருந்துமா? என்று ஆராய்ந்து காண்டற்குரியதாம் மற்று, ஈண்டுக் காரியா றென்றதே இக்காலத்தே கோரையாறென்று வழங்கப்படுகின்றது என்று ஊகிக்கவும் இடனுளது. இந்த யாறு மன்னார்குடி திருத்தருப்பூண்டிக் கூற்றங்களினூடு பாய்கின்றது. மலைத்துத் தலைவந்தோர் பாண்டியனும் சேரனுமாதலின் இங்ஙனம் ஊகிக்கின்றாம்.
அளியும் தெறலும் தோன்ற வெண்குடையும் வலிகெழுதடக்கையும் கூறினர். அவனது வள்ளன்மைச் சிறப்புத் தோன்ற மாவன் கிள்ளி என்றார்.
கோட்டங் காவலர் கோவேந்தனுக்குக் கூறல்
131-138: யானை................என்றலும்
(இதன் பொருள்) யானைத் தீ நோய்க்கு அயர்ந்து மெய் இம்மாநகர்த் திரியும் ஓர் வம்ப மாதர்-யானைத் தீ என்னும் நோயாற் பற்றப்பட்டு அது செய்யும் துயர்க்கு ஆற்றாமல் உடம்பு வாடி இரத்தற் பொருட்டு இப் பெரிய நகரத்தில் தெருக்கள் தோறும் திரிகின்ற இந்நகரத்திற்குப் புதியவளாகிய ஓர் இரவன் மகள்; அருஞ்சிறைக் கோட்டத்து அகவயின் புகுந்து- தப்புதற் கரிய நமது சிறைக் கோட்டத்தினுள்ளே புகுந்து; பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி-பெரிய புகழையுடைய அரசே நின் திருப்பெயரை எடுத்துக் கூறி வாழ்த்தி; ஐயப்பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்- பிச்சைப் பாத்திரம் ஒரோஒவொன்றனைக் கைக் கொண்டு நின்று தன்னைச் சூழ்ந்து கொள்கின்ற ஆற்றாமாக்கள் அனைவர்க்கும் வேண்டுமளவுண்ணும்படி உண்டி வழங்குகின்றனள். இஃதோர் அற்புதமிருந்தவாறு அறிந்தருள்க என்று சொல்லி; வாழி எங்கோ மன்னவ என்றலும்- வாழ்க எங்கள் கோமானாகிய மன்னவனே என்று வாழ்த்தா நிற்ப என்க.
(விளக்கம்) வம்பமாதர் என்றார் அவள் இந்நாட்டினள் அல்லள் புதியவள் என்பது தோன்ற. அவளை ஊர் முழுதும் அறியுமெனினும் அரசன் அறிதற்கு ஏதுவின்மையின், இங்ஙனம் பிச்சை ஏற்றுத் திரிவாள் ஒருத்தி என அறிவித்தனர். பிச்சை ஏற்பவள் ஆகலின் அவளால் தீமையொன்றும் நிகழாதென்று யாங்கள் அவளைத் தடுத்திலம் என்பது தோன்ற, அருஞ்சிறைக் கோட்டத்தகவயிற் புகுந்து என்றார். அவள் தானும் அரசன்பால் நன்மையே நினைப்பவள் என்பது தோன்ற, நின் பெயர் வாழ்த்தி என்றார். நின்பெயர் வாழ்த்தி என்றது சோழமன்னன் மாவண்கிள்ளி நீடூழி வாழ்க என்று வாழ்த்தினள் என்றவாறு.
ஐயப்பாத்திரம்- பிச்சைக்கலம். ஒரு பாத்திரத்தைக் கொண்டே தன்னைச் சூழ்ந்து மொய்த்துக் கொள்வோர்க்கெல்லாம் உண்டி வழங்குகின்றாள், இஃதோர் அற்புதம் இருந்தவாறு அரசர் பெருமான் அறிந்தருள்க என்று வியப்பறிவித்தபடியாம்.
மன்னவன் வியந்து வரவேற்றல்
139-145: வருக.............கூறலும்
(இதன் பொருள்) அரசன் அருள்புரி நெஞ்சமொடு மடக்கொடி வருக வருக என்று கூறலின்-அவ்வற்புதம் கேட்டு வியப்புற்ற அரசன்றானும் அத்தகையாட்கு நம்மால் ஓல்லும் வகை அருளல் வேண்டும் என்னும் ஆர்வமுடைய நன்னர் நெஞ்சத்தோடு அந்நல்லாள் ஈண்டு வருக! வருக! என்று இருமுறை இயம்பாநிற்றலின்; வாயிலாளரின் மடக்கொடிதான் சென்று-அரசனுடைய வரவேற்பை அறிவித்த வாயிலாளரோடு மணிமேகலை தானும் அரசன் திருமுன் சென்று; ஆய்கழல் வேந்தன் அருள் வாழிய என-அழகிய வீரக்கழல் கட்டிய திருவடியையுடைய அரசர் பெருமானுடைய அருளுடைமை நெடிது வாழ்க! என்று வாழ்த்தா நிற்ப; அரசன் தாங்க அரும் தவத்தோய் நீ யார்? ஏந்திய இ கடிஞை யாங்கு ஆகியது என்று கூறலும்-அது கேட்டு மகிழ்ந்த அம் மன்னவன் தாங்குதற் கரிய தவவொழுக்கத்தையுடைய நங்காய்! நீ யார்? நின் கையிலேந்திய தெய்வத்தன்மையுடைய இத் திருவோடு நின் கையில் எவ்வண்ணம் வந்துற்றது? என்று வினவுதலும் என்க.
(விளக்கம்) வருக வருக என்று இருமுறை அடுக்கிக் கூறியது மன்னனுடைய ஆர்வமிகுதியைக் காட்டும். விரைந்துபோய் அத்தகைய வியத்தகு நங்கையை விரைந்து இங்கு அழைத்து வம்மின் என வாயிலாளர்க்குக் கட்டளையிட்டபடியாம். வாயிலாளர்-ஈண்டுக் கோட்டங் காவலர்.
எளியளாகிய என்னை அழைத்தமைக்குக் காரணமான நின் அருள் வாழிய என்று வாழ்த்தியவாறு. அருளறமே அனைவரும் பேணற்பாலதாகலின் நின்பால் அவ்வருளறம் நிலைத்து வாழ்க என்று வாழ்த்தினள் எனக் கோடலுமாம்.
மணிமேகலை காயசண்டிகை வடிவக்தினும் பிக்குணிக் கோலமே பூண்டிருத்தலின் அவள் வரலாறறியாத மன்னவன் அவளைத் தாங்கருந் தவத்தோய் என்று விளித்தான். தவத்தால் இருத்தி பெற்றார்க்கன்றி இத்தகைய அற்புதச் செயல் நிகழ்த்தலாகாமையின் இங்ஙனம் இனிதின் விளித்தான். மேலும் ஒரு பாத்திரத்தாலே பல்லுயிர் ஓம்புகின்றனள் என்று கேட்டிருந்தமையின் இங்ஙனம் அற்புதம் விளைக்கும் இப் பாத்திரம் எங்ஙனம் நின்னுடையதாகியது என்றும் வினவினன். கூறலும் என்றது வினவலும் என்பதுபட நின்றது.
மணிமேகலை மன்னன் வினாவிற்கும் விடை கூறுதல்
145-154: ஆயிழை...........இதுவென
(இதன் பொருள்) ஆயிழை கூறும்-அது கேட்டு மணிமேகலை கூறுவாள்; விரைத்தார் வேந்தே நீ நீடூழி வாழி- மணமிக்க ஆத்தி மாலையையுடைய அரசே நீ நீடூழி காலம் வாழ்வாயாக!; யான் விஞ்சை மகள் விழவு அணி மூதூர் வஞ்சம் திரிந்தேன்-யான் ஒரு வித்தியாதரமகளாவேன், திருவிழாக்களாலே நாடோறும் அழகுறுகின்ற பழைய இம் மாநகரத்தின்கண் யான் இதுகாறும் என்னை இன்னன் என யாருக்கும் அறிவியாமல் வஞ்சித்தே திரிந்தேன் காண்; பெருந்தகை வாழிய-என்னைப் பொருளாக மதித்தழைத்த நின் பெருந்தகையை வாழ்க!; வானம் வாய்க்க- நின்னாட்டின்கண் மழைவளம் வாய்ப்புடைய தாகுக!; மண் வளம் பெருகுக- நின்னுடைய நாட்டின்கண் வளம்பலவும் பெருக!; கோமகற்குத் தீது இன்றாக-இங்கே பெருமானுக்குச் சிறிதும் தீமை இல்லையாகுக; ஈது ஐயக்கடிஞை என் கையிலேந்திய இப் பாத்திரம் யான் ஏற்றுண்ணும் பிச்சைப் பாத்திரமாகும்; அம்பலமருங்கு ஓர் தெய்வம் தந்தது-இது தானும் உலகவறவியின் பக்கத்திலே ஒரு தெய்வத்தால் வழங்கப்பட்டது; திப்பியம் ஆயது-அக் காரணத்தாலே தெய்வத்தன்மை யுடையது மாயிற்று; ஆனைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது-ஆனைத்தீ நோய் என்னும் கொடிய நோய் காரணமாகத் தோன்றிய உய்தற்கரிய பெரும் பசியையும் இது தீர்த்திருக்கின்றது காண்; அப்பாலும் ஊண் உடை மாக்கட்கு இது உயிர் மருந்து என- பசிப்பிணியாலே உடலும் உடைந்து வருந்தி ஆற்றாமாக்கட்கு இப் பாத்திரம் அப்பிணி தீர்த்து உயிர் தந்து ஓம்புமொரு மருந்துமாகும் காண்! என்று கூறாநிற்ப என்க.
(விளக்கம்) விஞ்சை மகள்- வித்தியாதரமகள்; மந்திரத்தாலே வேற்றுருக் கொண்டிருக்கும் மகள்-என இருபொருளும் தோன்றுதலுணர்க.
வஞ்சந்திரிந்தேன்- என்னை இன்னள் என அறிவியாமல் இதுகாறும் வஞ்சகமாகவே திரிந்தேன் எனவும் வஞ்சமாக உருவந்திரிந்தேன் (உருவம் மாறுபட்டேன்) எனவும் இதற்கும் இருபொருள் காண்க. இனி, கோமகற்கு ஈங்குத் தீது இன்றாக என்றதும்-அரசனாகிய நின்னுடைய மகனும் என் பழைய கணவனுமாகிய உதயகுமரனுக்கு இங்கே தீங்கு நிகழாமைப் பொருட்டே வஞ்சம் திரிந்தேன் எனவும் ஒரு பொருள் தோன்றுமாறும் உணர்க.
நின் மகனுக்கும் தீதின்றாக என்று வாழ்த்தியவாறும் ஆயிற்று, கோமகன்- கோவாகிய மகன்; அரசனாகிய நின் மகன் உதயகுமரன் என இருபொருளும் காண்க.
அம்பலமருங்கில் ஆபுத்திரனுக்குத் தெய்வந்தந்தது எனவும் எனக்குத் தெய்வந்தந்தது எனவும் இரட்டுற மொழிந்தமையும் காயசண்டிகையின் ஆனைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது எனவும் ஆனைத்தீ நோயின் அரும்பசியையும் கெடுத்த அற்புதமுடையது எனவும் பிறர் அயிராவண்ணம் இருபொருள்படுமாறும் உணர்க.
வேண்டுகோளாகிய வினாவும் விடையாகிய வேண்டுகோளும்
155-162: யான்.................வேந்தென்
(இதன் பொருள்) வேந்தன் இளங்கொடிக்கு யான் செயற்பாலது என் என்று கூற-அது கேட்ட அரசன் மணிமேகலையை நோக்கி இளமை மிக்க நினக்கு யான் செய்யத் தகுந்த உதவி யாது? என்று வினவா நிற்ப; மெல்லியல் உரைக்கும்-அது கேட்ட மணிமேகலை அரசனுக்குக் கூறுவாள்:- சிறையோர் கோட்டம் சீத்து அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என அரசே நீ எனக்குச் செய்யும் உதவியும் உளது காண்! அஃதாவது சிறையிடப்பட்டோர் உறைகின்ற அச் சிறைக்கோட்டத்தை அவ்விடத்தினின்றும் இடித்து அகற்றிப் பின்னர் அவ்விடத்தைத் துறவறத்தோர் உறையும் தவப்பள்ளியாக அமைக்கும் அதுவே, பெருமான் நீடூழி வாழ்க! என்று சொல்லி வாழ்த்தா நிற்ப; அரசு ஆள் வேந்து- செங்கோன்மை பிறழாது அரசாட்சி செலுத்தும் அக் கிள்ளிவளவன்றானும் இளங்கொடி கூறியாங்குச் செய்குவல் என்றுடம்பட்டு; அருஞ்சிறைவிட்டு தன் அடிபிழைத்துத் தண்டனை பெற்றிருந்தோரை எல்லாம் தப்புதற்கரிய அச் சிறைக் கோட்டத்தினின்றும் வீடு செய்து; ஆங்குக் கறையோரில்லாச் சிறையோர் கோட்டம்-அவ்விடத்திலே கறை வீடும் செய்யப்பட்டமையின் தண்டனை பெற்ற அரசிறைக் கடனாளரும் இல்லாதொழிந்த சிறையோர் உறையும் அக் கோட்டத்தை; ஆயிழை உரைத்த பெருந்தவர் தம்மால் பெரும் பொருள் எய்த-மணிமேகலையாலே கூறப்பட்ட பெரிய தவத்தையுடைய அறவோரைப் பேணுமாற்றால் எய்தும் அற முதலிய பெருமையுடைய உறுதிப் பொருளை எய்த விரும்பி; அறவோர்க்கு ஆக்கினன்-அத் துறவோர் உறையுளாக மாற்றியருளினன் என்பதாம்.
(விளக்கம்) இளங்கொடி: மணிமேகலை யான் செயற்பாலது என் என்றது உனது அருளறம் தழைத்தற்கு அரசனாகிய யான் செய்யத் தகுந்த அறக்கடமை என்னை? என்றவாறு. மணிமேகலை தான் மேற்கொண்டுள்ள அருளறத்தின் பாற்பட்ட சிறைக்கோட்டஞ் சீத்தலையே தனக்குச் செய்யும் உதவியாகக் கூறியபடியாம்.
சிறைக் கோட்டஞ் சீத்தலாவது தன்னடி பிழைத்துத் தண்டனை பெற்றாரை எல்லாம் விடுதலை செய்துவிடுதல். அடிபிழைத்தாரும் அரசிறை இறுக்காதவரும் ஆகிய இருவகையாரையும் வீடு செய்தான் என்பது தோன்றக் கறையோர் இல்லாச் சிறைக் கோட்டம் என்று விதந்தார். கறை-அரசிற்கு இறுக்கக்கடவ பொருள். இதனால் சிறைவீடும் கறை வீடும் செய்து அருள் அறத்தைத் தனக்காகும் முறையில் அவ் வேந்தனும் மேற் கொண்டனன் என்பது பெற்றாம். அரசற்கியன்ற அருளறம் இத்தகையனவாதலை
சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதும்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்
இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும்
உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென
யானை யெருத்தத் தணிமுர சிரீஇக்
கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன்
எனவும், (சிலப்-23: 126-133)
சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணும்
கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மென
எனவும்; (சிலப்-28:203-204) பிற சான்றோர் ஓதுமாற்றானும் உணர்க.
பெருந்தவர் தம்மால் பெரும்பொருள் என்றது அவர்க்கு உண்டியும் உறையுளும் வழங்கும் நல்வினைப் பயனாக எய்தும் அறம் பொருள் இன்பம் வீடு முதலிய உறுதிப் பொருள்களை. அத்தகைய நல்வினையால் அத்தகைய உறுதிப்பொருள் எய்துதலை இக் காவியத்தில் மணிமேகலையும் மாதவியும் சுதமதியும் முற்பிறப்பிலே அறவோர்ப் பேணிய நல்வினை அவர்கட்கு இப்பிறப்பிலே எய்தி ஆக்கஞ் செய்யுமாற்றானும் அறிக இக்கருத்தோடு
சிவஞானச் செயலுடையோர் கையில் தானம்
திலமளவே செய்திடினும் நிலமலைபோல் திகழ்ந்து
பவமாயக் கடலின் அழுந் தாதவகை யெடுத்துப்
பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத்
தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்
சரியைகிரி யாயோகந் தன்னினுஞ் சாராமே
நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி
நாதனடிக் கமலத்தை நணுகுவிக்குந் தானே
என வரும் சிவஞான சித்தியார்ச் (சுபக்-278) செய்யுள் ஒப்பு நோக்கற் பாலதாம்.
இனி இக் காதையை
தாரோன் வஞ்சினம் கூறத் தெய்வம் கூறலும் கலங்கி வருந்திப் பெயர்வோன்றன்னைத் தொடரக் கிழிப்ப உயிர்த்துப் போய பின் மணிமேகலை நுனித்தனரா மென்று வாங்கிப் புகுந்து ஊட்டலும் காவலர் வியந்து இசைத்துமென்றேகி, திருவன் சென்றேறலும் இசைத்து வணங்கி; சுரந்தனள் என்றலும், வருக வருக என்றரசன் கூறலும் மடக்கொடி சென்று வாழிய என நீ யார் யாங்காகியது இக் கடிஞை என அரசன் கூறலும் ஆயிழை உரைக்கும்; வாழி விஞ்சைமகள் யான் திரிந்தேன் வாழிய வாய்க்கப் பெருகுக தீதின்றாக ஐய கடிஞை தந்தது ஆயது கெடுத்தது மருந்து என வேந்து விட்டு ஆக்கினன் என இயைத்திடுக.
சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை முற்றிற்று.