Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

19. சிறைக்கோட்டம் அறக் கோட்டமாக்கிய ... 21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை
முதல் பக்கம் » மணிமேகலை
20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளாலெறிந்த காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
04:01

(இருபதாவது மணிமேகலை காய சண்டிகை வடிவெய்த, காயசண்டிகை கணவனாகிய காஞ்சனன் என்னும் விச்சாதரன் வந்து காய சண்டிகை யாமெனக் கருதி அவள் பின்னிலை விடா உதயகுமரனைப் புதையிருட்கண் உலகவறவியில் வாளாலெறிந்து போன பாட்டு)

அஃதாவது: மணிமேகலையின் பால் இடங்கழி காம முடையவனாகிய உதயகுமரன் மீண்டும் அவளைக் கைப்பற்றித் தன் பொற்றேரி லேற்றிவரத் துணிந்து பின்னிலை விடானாகி முயலுங்கால் காயசண்டிகையின் கணவனாகிய விச்சாதரன் காயசண்டிகை வடிவினின்ற மணிமேகலை உதயகுமரனோடு நெருங்கிச் சொல்லாடுதல் கண்டும் அவள் தன்னைப் பொருட்படுத்தாமை கண்டும் உதய குமரனுக்கும் தன்மனைவியாகிய காயசண்டிகைக்கும் காமத் தொடர்பிருத்தல் வேண்டும் என்று ஐயுற்று அது தெளிதற்குக் கரந்திருந்தானாக, மணிமேகலையே காய சண்டிகையாக மாற்றுருவங் கொண்டிருக்கின்றாள் என்றுணர்ந்த அம் மன்னன் மகன் அவள் செய்தி யறிகுவல் என நள்ளிரவிற் றமியனாய் வந்து உலகவறவியினூடு புகுவானை அவ் வித்தியாதரன் வாளால் வெட்டி வீழ்த்திச் சென்ற செய்தி கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- மணிமேகலையின் விருப்பப்படி மன்னவன் கொடுஞ்சிறைக் கோட்டத்தே புத்தருக்குக் கோயிலமைத்தும் அறவோர்க்குப் பள்ளிகளமைத்தும் அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும் அமைத்துக் கட்டுடைச் செல்வக்காப்புடையதாகச் செய்த செய்தியும்; உதயகுமரன் மணிமேகலையின் பால் இடங்கழி காமத்தனாய் மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் அவள் அம்பலத்தினின்றும் நீங்கிய செவ்வியிற்பற்றி என் பொற்றேர் ஏற்றி அவள் கற்ற விஞ்சையும் கேட்டு அவள் கூறும் அஞ்சொலறிவுரையும் கேட்டு ஆற்றவும் மகிழ்வல் என்று துணிந்து உலகவறவியிற் சென்று ஏறுதலும், காய சண்டிகை வடிவந்தாங்கி நிற்கும் மணிமேகலையைக் காயசண்டிகை யென்றே எண்ணி அவள் மருங்கே சென்று ஒரே பாத்திரத்தினின்றும் உணவினை வாரி வாரி அவள் எண்ணிறந்தோர்க்கு வழங்கும் அற்புதச் செய்தி கண்டு இறும்பூதெய்தி அவளை அணுகி அப் பாத்திரத்தின் வரலாறு வினவுதலும் பழைமைக் கட்டுரை பல பாராட்டிய வழியும் அவள் அவனை விழையாவுள்ளத்தோடு அவ்விடத்தினின்றும் நீங்கி ஆங்கு வந்த உதயகுமரன் பாற் சென்று அவனுக்கு மக்கள் யாக்கையின் இழிதகைமை அறிவுறுத்தற் பொருட்டு அப்பொழுது அவ்வழிச் சென்ற நரை மூதாட்டியைக் காட்டி அவள் உறுப்புகளின் தன்மைகளைச் சுட்டிக்காட்டி

தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனென

செவியறிவுறுத்துதலும், அங்ஙனம் அறிவுறுத்துவாளேனும் அவள் அவன்பாற் காமக் குறிப்புடையளாகவே இருத்தலும் காய சண்டிகையின் கணவன் தன் மனைவி தன்னைச் சிறிதும்  பொருட்படுத்தாது ஏதிலானோடு காதன் மொழி பேசுகின்றாள் என்று கருதிக் கடுஞ்சின முடையனாய்ப் பின்னும் அவள் நிலை அறிதற்கு அம்பலத்தில் ஒரு சார் புற்றடங்கு அரவெனப் புகுந்து கரந்துறைதலும்-அரண்மனைக்குச் சென்ற அரசன் மகன் மணிமேகலையின் நிலைமை அறிதற்கு மீண்டும் ஆயிழை யிருந்த அம்பல மணைந்து வேகவெந்தீ நாகங்கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல விச்சாதரன் கரந்துறைகின்ற உலக வறவியினூடு புகுதலும் அவன்றானும் இவன் காயசண்டிகையின் பாலே வந்தனன் என்று துணிந்து வெகுண்டு உதயகுமரன் பின் சென்று அவனுடைய மணித்தோள் துணியும்படி வாளால் எறிந்து காயசண்டிகை என்று கருதிய மணிமேகலையைக் கைப் பற்றிச் செல்லுதலும் அப்பொழுது கந்திற்பாவை அவனுக்குக் கூறுகின்ற ஊழ்வினை விளைவுகளும்; உண்மையறிந்த விச்சாதரன் கன்றிய நெஞ்சொடு விண்வழியே தன்னூர் நோக்கிப் போதலும் பிறவும் கற்போர்க்கு மருட்கைச் சுவை பற்பல விடங்களிலே தோன்றும்படி கூறப்படுகின்றன.

அரசன் ஆணையின் ஆய் இழை அருளால்
நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்
தீப் பிறப்பு உழந்தோர் செய் வினைப் பயத்தான்
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போலப்
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டு உடைச் செல்வக் களிப்பு உடைத்து ஆக
ஆய் இழை சென்றதூஉம் ஆங்கு அவள் தனக்கு
வீயா விழுச் சீர் வேந்தன் பணித்ததூஉம்  20-010

சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
கேட்டனன் ஆகி அத் தோட்டு ஆர் குழலியை
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே
மதுக் கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய  20-020

உலக அறவியின் ஊடு சென்று ஏறலும்
மழை சூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக்
கழை வளர் கான் யாற்று பழப் வினைப் பயத்தான்
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம்
ஈர் ஆறு ஆண்டு வந்தது வாராள்
காயசண்டிகை! எனக் கையறவு எய்தி
காஞ்சனன் என்னும் அவள் தன் கணவன்
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து
பூத சதுக்கமும் பூ மரச் சோலையும்
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும்  20-030

தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை
மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டு ஆங்கு
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய
வான வாழ்க்கையர் அருளினர்கொல்? எனப்
பழைமைக் கட்டுரை பல பாராட்டவும்
விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி
உதயகுமரன் தன்பால் சென்று
நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி   20-040

தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய்
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ
நரைமையின் திரை தோல் தகையின்று ஆயது
விறல் வில் புருவம் இவையும் காணாய்
இறவின் உணங்கல் போன்று வேறாயின
கழுநீர்க் கண் காண் வழுநீர் சுமந்தன
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ
நிரை முத்து அனைய நகையும் காணாய்
சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து போயின  20-050

இலவு இதழ்ச் செவ் வாய் காணாயோ நீ
புலவுப் புண் போல் புலால் புறத்திடுவது
வள்ளைத் தாள் போல் வடி காது இவை காண்
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன
இறும்பூது சான்ற முலையும் காணாய்
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி
வீழ்ந்தன இள வேய்த் தோளும் காணாய்
நரம்பொடு விடு தோல் உகிர்த் தொடர் கழன்று
திரங்கிய விரல்கள் இவையும் காணாய்  20-060

வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்
ஆவக் கணைக்கால் காணாயோ நீ
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல்
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன்! என
விஞ்சை மகளாய் மெல் இயல் உரைத்தலும்  20-070

தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள்
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும்
மதுக் கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டி
பவளக் கடிகையில் தவள வாள் நகையும்
குவளைச் செங் கணும் குறிப்பொடு வழாஅள்
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து இழை
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி
மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள்
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன்  20-0810

காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன்
ஆங்கு அவள் உரைத்த அரசு இளங் குமரனும்
களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான்
வளை சேர் செங் கை மணிமேகலையே
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இவ்
வம்பலன் தன்னொடு இவ் வைகு இருள் ஒழியாள்
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து  20-090

வான்தேர்ப் பாகனைப் மீன் திகழ் கொடியனை
கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை
உயாவுத் துணையாக வயாவொடும் போகி
ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆய் இழை இருந்த அம்பலம் அணைந்து
வேக வெந் தீ நாகம் கிடந்த
போகு உயர் புற்று அளை புகுவான் போல
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த  20-100

ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன்
ஈங்கு இவன் வந்தனன் இவள்பால் என்றே
வெஞ் சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத்
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன்
சுரும்பு அறை மணித் தோள் துணிய வீசி
காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம்
போகுவல் என்றே அவள்பால் புகுதலும்
நெடு நிலைக் கந்தின் இடவயின் விளங்கக்  20-110

கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்
அணுகல் அணுகல்! விஞ்சைக் காஞ்சன!
மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள்
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி
வானம் போவழி வந்தது கேளாய்
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால் வரை மீமிசைப் போகார்
போவார் உளர்அனின் பொங்கிய சினத்தள்
சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம்
விந்தம் காக்கும் விந்தா கடிகை   20-120

அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள்
கைம்மை கொள்ளேல் காஞ்சன! இது கேள்
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை
ஆர் உயிர் உண்டதுஆயினும் அறியாய்
வெவ் வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன!
அவ் வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ
விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் 20-129

உரை

அரசன் ஆணையாலே சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கப்படுதல்

1-8: அரசன்...............ஆக

(இதன் பொருள்) ஆயிழை அருளால் அரசன் ஆணையின்- மணிமேகலையின் அருளுடைமை காரணமாகவும், அவள் வேண்டுகோட் கிணங்கிய அரசன் இட்ட கட்டளை காரணமாகவும்; நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம்-தன்னுள் உறைபவர்க்கு நரகம் போன்று பெருந்துயர் செய்கின்ற கொடிய சிறையாகுந் தன்மையை நீக்கப்பெற்ற பின்னர் அக் கட்டிடமே; தீப்பிறப்பு உழந்தோர் செய்வினைப் பயத்தால் யாப்பு உடை நல்பிறப்பு எய்தினர்- போல-உம்மைச் செய்த தீவினையின் பயனாகத் தீய பிறப்பிற் பிறந்து அத் தீமையின் பயனை நுகர்ந்து கிடந்தவர் இம்மையிற் செய்த நல்வினைப் பயன் காரணமாக மீண்டும் அந் நன்மையோடு தொடர்புடைய நற்பிறப்பை எய்தி நன்மையே செய்கின்ற மாந்தர் போன்று; பொருள்புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்-மெய்ப்பொருளையே விரும்புகின்ற பேரறிவுடைய புத்தபெருமானுடைய திருக்கோயிலும்; அருள்புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்-எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோராகிய துறவுடையோர் உறைகின்ற தூய தவப்பள்ளியும்; அட்டில் சாலையும்-ஆருயிர் மருந்தாகிய உண்டி சமைக்கின்ற மடைப்பள்ளியும்; அருந்துநர் சாலையும்-உணவுண்ணுபவர்க்கு வேண்டிய அறக்கோட்டமும் என்னும் பகுதிகளாக; கட்டு உடை செல்வக் காப்பு உடைத்து ஆக-கட்டப்பட்டு, இவற்றிற்கின்றியமையாத செல்வமாகிய காவலையும் உடையதாகத் திகழ் என்க.

(விளக்கம்) நிரயம்-நரகம். நரகம் போன்று மன்னுயிரை வருத்தும் கொடிய சிறைக்கோட்டம். ஆயிழை அருளாலும் அரசனுடைய ஆணையாலும் இப்பொழுது மன்னுயிர்க்குப் பேரின்பம் தருகின்ற துறக்கம் போலத் திருக்கோயிலும் தவப்பள்ளியும் மடைப்பள்ளியும் உண்ணும் மண்டபமும் ஆகிய பல பகுதிகளாகக் கட்டுதலுடைத்தாய் மேலும் இவற்றிற்கு வேண்டிய செல்வமாகிய காவலையும் உடைய அறக்கோட்டமாகத் திகழ்ந்தது என்றவாறு.

தீப்பிறப்பு-பிறருக்குத் தீமையே செய்யும் இயல்புடைய பிறப்பு. முற்செய் வினையால் தீப்பிறப்பிற் பிறந்துழந்தோர் இப்பிறப்பிற் செய்த நல்வினையால் நற்பிறப்பு எய்தினவரைப் போல, முன்பு நரகத் துன்பத்தைச் செய்யும் சிறைக்கோட்டம் இப்பொழுது துறக்கவின்பத்தைத் தருமிடமாக மாறியது என்க.

ஒரோவழி மணிமேகலை ஒரு நாள் அதன்கட் புகுந்து ஆற்றாமாக்கட் கெல்லாம் உண்டி கொடுத்து உயிர் ஓம்பிய நல்லறம் நிகழ்தற்கிடமாயிருந்தமையால் அவ்வறத்தின் பயனாக அச் சிறைக் கோட்டம் அறக் கோட்டமாக மாறியது கண்டீர் என்னும் ஒரு குறிப்பும் அதற்குக் கூறிய உவமையாலே கொள்ளக் கிடந்தமையும் நுண்ணிதின் உணரலாம்.

பொருள் புரி நெஞ்சின் புலவோன் என்றது புத்தபெருமானை பொருள்- மெய்ப்பொருள். அறவோர் என்றது அருளறம் பூண்ட பவுத்தத் துறவோரை.

அட்டிற்சாலை-மடைப்பள்ளி. அருந்துநர்சாலை என்றது உண்ணுமிடத்தை. இவை யெல்லாம் மன்னுயிர்க்கின்பங் தருமிடங்களாதலறிக.

செல்வக்காப்பு- செல்வமாகிய காவல். அஃதாவது அவ்வறக்கோட்டத்தில் இறைவனுக்குப் பூசனையும் அறவோர்க்கும் பிறர்க்கும் உண்டியும் நிகழ்தற்கு அரசன் விட்ட முற்றூட்டாகிய செல்வத்தையே ஈண்டுச் செல்வக்காப்பு என்றார் என்றுணர்க.

உதயகுமரன் செயல்

9-19: ஆயிழை...............எழுந்து

(இதன் பொருள்) மதுக் கமழ் தாரோன்-தேன்மணங் கமழுகின்ற ஆத்திப்பூமாலை யணிந்த அரசிளங் குமரனாகிய உதயகுமரன்; ஆயிழை சென்றதூஉம்-அரசன் அழைப்பிற்கிணங்கி மணிமேகலை அவன் திருமுன் சென்ற செய்தியையும் வீயா விழுச்சீர் வேந்தன் ஆங்கு அவள் தனக்கு பணித்ததூஉம் இறவாத பெரும்புகழையுடைய அரசன் அவ்விடத்தே அம் மணிமேகலைக்குத் தான் செய்யக்கடவது என்? என்று வினவிய செய்தியையும்; சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்- மணிமேகலை விரும்பியபடியே அரசன்றானும் சிறையோர் கோட்டம் என்னும் பெயரையே அகற்றி அவ்விடத்தை அருள் கெழுமிய நன்னர் நெஞ்சமுடைய துறவோர் உறையும் அறக்கோட்டமாக அமைத்த செய்தியையும்; கேட்டனன் ஆகி-பிறர் கூறக் கேள்வியுற்றவனாகி; அத் தோட்டு ஆர் குழலியை-என்னை இவ்வண்ணஞ் செய்து மற்றொரு நெறியிலே செல்லுகின்ற அம் மணிமேகலையை; மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்- சான்றோர் என்னை இகழ்ந்தாலும் அரசனே என்னை ஒறுத்தாலும்; பொதியில் நீங்கிய பொழுதில் சென்று பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி-அம்பலத்தினின்றும் அயலே செல்லும் செல்வியில் சென்று கைப்பற்றிக் கொணர்ந்து என்னுடைய பொற்றேரிலே ஏற்றி; கற்று அறிவிச்சையும் கேட்டு அவள் உரைக்கும் முதுக் குறை முதுமொழி கேட்குவன்-அவள் இங்ஙனம் மாயம் பல செய்தற்கெனக் கற்றறிந்திருக்கின்ற வித்தைதான் யாது என்று கேட்டபின் அவள் கூறுகின்ற அறிவுசான்ற முதுமொழிகளையும் கேட்பேன்; என்று மனங்கொண்டு எழுந்து-என்று தன் நெஞ்சினுள்ளே துணிந்துடனே எழுந்து போய் என்க.

(விளக்கம்) ஆயிழை: மணிமேகலை. வீயா-இறவாத பணித்த தூஉம்-அவள் பொருட்டுப் பணிமாக்கட்குக் கட்டளையிட்டதூஉம் எனலுமாம். தோடு ஆர் குழலி, தோட்டார் குழலி என விகாரம். மதியோர்-அறிவுசான்றோர். பற்றினன் கொண்டு-பற்றிக்கொண்டு. ஊரம்பலத்தே புகுந்து கைப்பற்றுதல் முறைமையன் றென்பது கருதிப் பொதியில் நீங்கிய பொழுதற் பற்றிக் கொள்வேன் என் றுட்கொண்ட படியாம். ஈண்டுக் காமம் காழ் கொண்டவழி ஆடவர் மடலேறுவர், உயிரும் விடுவர் என்பதற்கு உதயகுமரன் அவளைக் கைப்பற்றுதல் பற்றித் தன்னை மதியோர் எள்ளினும் எள்ளுக, மன்னவன் காயினும் காய்க! என்று துணிதல் சிறந்த எடுத்துக் காட்டாகும். இது காதலின் பொருட்டு மடலேறுதற் கொத்ததொரு துணிவே என்க. என்னை? வாய்மையான காதலுக்கு இடையூறெய்தின் சாதலன்றி வேறுய்தியின்மையால்.

மணிமேகலையின் அருமைப்பாடு கருதிப் பொற்றேர் ஏற்றிக் கொடுவருவல் என்றான். ஒரே பாத்திங்கொண்டு பலரை யுண்பித்தற்கும் வேற்றுருக் கோடற்கும் யாண்டுக் கற்றனை என்று கேட்டறிகுவலென்பான் கற்றறிவிச்சையும் கேட்டு என்றான். மற்று அவள் இப் பொழுதும் முதுக்குறை முதுமொழி கூறாதிராள். அக்கூற்று என் கருத்திற்கு முரணுமாயினும் அவற்றை அவள் கூறக்கேட்குங்கால் என் அருந்தேமாந்த ஆருயிர் தளிர்க்குமாதலின் அவற்றையும் கேட்டிடுவேன் என்கின்றான். முதுக்குறை முதுமொழி என்றது முன்னம் அவள் தான் தவந்தாங்கியதற்குக் காரணமாக மக்கள் யாக்கையினியல்பு கூறியதை நினைந்து கூறியபடியாம்(18:134-138) ஈண்டு அவற்றை இகழும் குறிப்புடன் முதுக்குறை முதுமொழி என்கின்றான். எழுந்து சென்றென்க.

காயசண்டிகையின் கணவன் செயல்

20-31: பலர்..............திரிவோன்

(இதன் பொருள்) பாவை பலர் பசி களைய ஒதுங்கிய உலகவறவியின் ஊடு சென்று ஏறலும்-மணிமேகலை ஆற்றாமாக்கள் பலருடைய அரும்பசியையும் ஒருசேரக் களைந்து மகிழ்வித்தற் பொருட்டுப் புகுந்த உலகவறவியாகிய அம்பலத்தினூடு சென்று புகுதாநிற்ப; காஞ்சனன் என்னும்- காஞ்சனன் என்னும் பெயரையுடைய (காயசண்டிகையின் கணவனாகிய) விச்சாதரன்; மழை சூழ் குடுமிப் பொதியிற் குறைத்து கழைவளர் கான்யாற்று- முகில் தவழுகின்ற உச்சியினையுடைய பொதியமலை மருங்கில் மூங்கில்கள் தழைத்து வளருதற்கிடனான காட்டியாற்றின் படுகரிலே; பழவினைப் பயத்தால்-ஊழ்வினை காரணமாக; மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் ஈர் ஆறு ஆண்டு வந்தது-விருச்சிக முனிவன் என் காதலிக்கு இட்ட சாபம் கட்டி நிற்கும் பன்னீராட்டைக் காலமும் கழிந்து உய்திக் காலமும் வந்துற்றது; காயசண்டிகை வாராள்- காயசண்டிகையோ இன்னும் வந்திலள்; எனக் கையறவு எய்தி-அவட் கென்னுற்றதோ என்று வருந்தி; ஓங்கிய மூதூருள் வந்து இழிந்து-அவள் இருந்த உயர்ந்த புகழையுடைய பழைய நகரமாகிய பூம்புகாரிலே வான்வழியே வந்திறங்கி பூதசதுக்கமும் பூமலர்ச்சோலையும் மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் தேர்ந்தனன் திரிவோன்- பூதநிற்கும் நாற்சந்தியினும் பூவையுடைய பூம்பொழிலிடத்தும் ஊர்மன்றங்களினும் ஊரம்பலத்தினும் சென்று சென்று அவளைத் தேடித் திரிகின்றவன், என்க.

(விளக்கம்) பலர்-ஆற்றாமாக்கள் பலருடைய. பாவை: காயசண்டிகை வடிவங்கொண்டுள்ள மணிமேகலை. ஊடு-உள்ளே. மழை-முகில். குடுமி-உச்சி. பொதியிற் குன்றம்- பொதியின் மலை. ஈர் ஆறு ஆண்டு என்றது, ஈர் ஆறாம் ஆண்டு என்பதுபட நின்றது. அஃதாவது- பன்னிரண்டாம் ஆண்டின் இறுதியும் வந்தது என்றவாறு. அவ்விறுதி அச் சாப வீடு பெறும் நாளாதலின், அவள் சாப வீடு பெற்றிருப்பள் அங்ஙனமாயின் அவள் உடனே ஈண்டு வந்திருப்பளே வாராமைக்குக் காரணம் என்னோ என்று ஐயுற்றுக் கையற வெய்தினன் என்பதாம். அவள் என்னும் சுட்டுப் பெயரை விளக்கத்தின் பொருட்டு இயற்பெயராக்கி உரை கூறப்பட்டது.

புகழான் ஓங்கிய மூதூர் என்க. அஃதாவது- பூம்புகார் நகரம். பூதசதுக்கம்- பூதநிற்குமிடமாகிய நாற்சந்தி. இதனியல்பை

தவமறைந் தொழுகுந் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகு மலவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்கும் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்

எனவருஞ் சிலப்பதிகாரத்தால்(5:128-134) இனிதினுணர்க.

மன்றம்-மரத்து நிழலில் ஊர் மக்கள் கூடுமிடம். பொதியில் என்றது உலகவறவியை. தேர்ந்தனன்: முற்றெச்சம்.

காஞ்சனன் காயசண்டிகை வடிவந்தாங்கிய மணிமேகலையைக் காயசண்டிகை என்றே கருதி அவள் மருங்கு சென்று பழைமைக் கட்டுரை பல பாராட்டுதல்.

31:37: ஏந்திள..............பாராட்டவும்

(இதன் பொருள்) ஏந்திள வனமுலை-காயசண்டிகை வடிவந்தாங்கி உலகவறவியினூடு சென்று பாத்திர மேந்தி மணிமேகலை யானவள்; மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டு-ஆற்றாமாந்தர் பலருடைய பசி நோயையும் உணவீந்து மாற்றுபவளைக் காயசண்டிகையாகவே கண்டு வியந்து; ஆங்கு-அவளிடம் அணுகி அன்புடையோய்!; இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்- இற்றைநாள் நீ நின் கையிலேந்திய பிச்சைப் பாத்திரம் ஒன்றே ஆகவும் அதனூடிருந்து நீ வழங்கும் உணவினை உண்பவரோ எண்ணிலராயிருக்கின்றனர் இந் நிகழ்ச்சி கண்டு யான் பெரிதும் வியப்புறுகின்றேன் காண்! ஆனைத்தீ நோய் அரும்பசி களைய வான் வாழ்க்கையர் அருளினர் கொல் என-இத்தகு தெய்வத்தன்மையுடைய அரும்பெறற் பாத்திரத்தை நினக்குச் சாபத்தாலே எய்திய ஆனைத்தீநோய் காரணமாக நீ எய்துகின்ற தீர்த்தற்கரிய பசி நோயின் துன்பத்தைக் கண்டிரங்கி அதனை நீக்கும் பொருட்டு வானுலகத்தே வாழும் தேவர்கள் வழங்கினரோ? இது நீ தனது பழைய காதலன்பு தோன்றுதற்குக் காரணமான பொருள் பொதிந்த மொழிகள் பலவற்றையும் கூறி நலம் பாராட்டா நிற்பவும் என்க.

(விளக்கம்) இன்று என்றது இற்றை நாள் வியத்தகு நிகழ்ச்சி யொன்றனைக் காணுகின்றேன்! என்பதுபட நின்றது.

வான வாழ்க்கையர்-தேவர்கள். இப் பாத்திரம் தெய்வத் தன்மையுடைத்தாகலின் இது தெய்வத்தாலேயே வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் என ஊகித்து வினவுவான், வான வாழ்க்கையர் அருளினர் கொல் என்று வினவியவாறு. பழைமை- பழைதாகிய காதற்கேண்மை. பாராட்ட-நலம் பாராட்ட, நலம், ஈண்டு பெறலரும் பேறு பெற்றிருத்தலாம்.

மணிமேகலை அவனை இன்னாள் என அறியாளாய் உதயகுமரன்பாற் சென்று அறஞ்செவியறிவுறுத்துதல்

38-40: விழையா................காட்டி

(இதன் பொருள்) விழையா உள்ளமொடு அவன் பால் நீங்கி-தன் அறச்செயலிலே கருத்தூன்றியிருந்த மணிமேகலை தன்னை அணுகிய காஞ்சன்னையாதல் அவன் கூறிய கட்டுரையையாதல் சிறிதும் விரும்பாத நெஞ்சத்தனளாய் அவனிடத்தினின்றும் விலகி; உதயகுமரன்றன்பாற் சென்று-தன் பழைய கணவனாகிய உதயகுமரனைத் தெருட்டி நன்னெறிப் படுத்தும் கருத்துடையவளாய் அவனை விழைத்த மூதாட்டி உள்ளத்தோடு அவ்வரசிளங்குமரனை அணுகி; நகர மூதாட்டி ஒருத்தியைக் காட்டி-அவ்வுலகவறவியிலே உறை வாள் ஒரு நரைத்து முதிர்ந்த கிழப்பருவத்தாளைச் சுட்டி காட்டிக் கூறுபவள்

(விளக்கம்) அவன்பால்-காஞ்சனனிடத்தினின்றும். ஆற்றாமாக்களுள் ஒருத்தியாக ஆங்குறைவாளி ஒரு நரை மூதாட்டியைக் காட்டி என்க. அவனுக்கு நல்லறிவு கொளுத்துவான் கூறுபவள் என்க. இவை இசையெச்சம்.

மக்கள் யாக்கையின் இழிதகைமை

41-66: தண்ணறல்...........உணங்கல்

(இதன் பொருள்) தண் அறல் வண்ணம் திரிந்து வேறு ஆகி மன்னவன் மகனே! இம் மூதாட்டியின் கூந்தல் தானும் பண்டு குளிர்ந்த கருமணல் போன்ற நிறமுடையதாகத் தான் இருந்திருத்தல் வேண்டும், இப்பொழுதோ அக் கருநிறம் முழுவதும் மாறுபட்டு அதற்கு முரண்பட்டதாகி; வெண்மணல் போன்ற நிறமுடைய கூந்தலாகி விட்டதனைக் காண்பாயாக!; பிறைநுதல் வண்ணம்- எண்ணாட் பக்கத்துப் பிறைத்திங்கள் போலும் பேரழகுடையது என்று பாராட்டப்படுகின்ற மகளிரின் நுதலின் தன்மை; நரைமையின் திரைதோல் தகைமை இன்றாயது நீ காணாயோ-அவ்வெண்மை நிறத்தோடும் திரைந்த தோலோடும் சிறிதும் அழகில்லாததாகியதனை நீ இவள்பால் கண்டிலையோ?; விறலவில் புருவம் இவையும் இறவின் உணங்கல் போன்று வேறு ஆயின காணாய்- வெற்றிதருகின்ற வில் என்று பாராட்டப்படுகின்ற புருவங்களாகிய இவை தாமும் இறாமீன் வற்றல் போன்று சுருண்டு அருவருப்புண்டாக்குவனவாய் மாறுபட்டுத் தூங்குகின்றவற்றையும் காண்பாயாக!; கழுநீர்க்கண் காண் வழுநீர் சுமந்தன- கருங்குவளை மலர் போன்று கவினுடையன என்று பாராட்டப் பெற்ற கண்களைப் பார்! பீளையும் நீரும் சுமந்திருக்கின்றன; குமிழ்மூக்கு இவைகாண் உமிழ்சீ ஒழுங்குவ-குமிழம்பூப் போன்ற மூக்கின் துளைகளாகிய இவற்றை நோக்குதி உமிழுகின்ற அருவருக்கத் தகுந்த சீயைத் துளிக்கின்றன; நிரை முத்து அனைய நகையும் காணாய்- நிரல்பட அமைத்த முத்துகள் என்று பாராட்டப்படுகின்ற பற்களின் இயல்பையும் ஈண்டுக் கண்டறிதி; சுரைவித்து ஏய்பபப் பிறழ்ந்து வேறு ஆயின-சுரையினது விதை போன்று நிரந்திரிந்து நிலையும் பிறழ்ந்து வேறுபட்டன; நீ இலவு இதழ் செவ்வாய்- நீ இலவமலர் போன்று சிவந்த வாய் என்று பாராட்டப்படுகின்ற சிவந்த வாய்; புலவுப் புறத்திடுவது காணாயோ-புலால்நாற்றத்தைப் புறமெங்கும் பரப்புவதனைக் கண்டிலையோ?; வள்ளைத் தாள்போல் வடிகாது இவை காண் உள் ஊண் வாடிய உணங்கல் போன்றன-வள்ளைக் கொடி போன்று வடிந்த அழகிய காதுகள் எனது வண்ணிக்கப் படும் காதுகளாகிய இவற்றை நோக்குதி உள்ளிருந்த ஊன் உலர்ந்துபோன வற்றிலைப்போல்கின்றன அல்லவோ?; இறும்பூது சான்ற முலையும் காணாய்-காமுகர்க்கு எப்பொழுதும் வியத்தற் குரியவாகிய இம் மூலைகளினியல்பையும் ஈண்டுக் கண்டுணர்தி வெறும்பை போல வீழ்ந்து வேறு ஆயின-உள்ளீடற்ற தோற்பைகள் போன்று தொங்கி அருவருப்புத் தரும் வேறு தன்மை யுடையன வாயினவன்றோ?; இளவேய்த் தோளும் காணாய்-இளமையுடைய பச்சைமூங்கில் போன்றன என்று பாராட்டப்படும் தோள்களையும் காணுதி; தாழ்ந்து ஒசி தெங்கின் மடல் போல் திரங்கி வீழ்ந்தன-சரிந்து ஒசிந்த தென்னை மட்டை போன்று சுருங்கித் தூங்குகின்றனவன்றோ; நரம்பொடு விடுதோல் உகிர்த்தொடர் கழன்று திரங்கிய விரல்கள் இவையும் காணாய்-நரம்பும் அவற்றோடு தொடர்பற்ற தோலுமாய் நகத்தின் வரிசையும் கழன்று வற்றியிருக்கின்ற விரல்களாகிய இவற்றின் இயல்பையும் காண்பாயாக; வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை தாழைத் தண்டின் உணங்கல் காணாய்-வாழைத் தண்டே போல்வன இவை என்று வண்ணிக்கப்படுகின்ற துடையிரண்டும் தாழைத் தண்டின் வற்றல் போல்கின்றன அவற்றின் இயல்பையும் அறிதி; நீ ஆவக்கணைக்கால்-நீ தானும் அம்புக் கூடு போன்ற அழகுடையன என்னும் கணைக்காலிரண்டும்; மேவிய நரம்போடு என்பு புறங்காட்டுவ காணாயோ-தமக்குப் பொருந்திய நரம்போடு எலும்புகளையும் புறத்தார்க்கும் காட்டுவன ஆதலைக் காண்கின்றிலையோ?; தளிர் அடி வண்ணம் முளிமுதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்-தளிர்போன்ற மெல்லிய அடிகளின் தன்மை உலர்ந்த முதிர்ந்த தெங்கினின்றும் உதிர்ந்தகாயாகிய நெற்றின் தன்மை யுடையனவாதலை; நீ காணாயோ நீ கண்கூடாகக் காண்கின்றிலையோ என்றாள் என்க.

(விளக்கம்) அறல்-கருமணல் . நரைமை-வெண்மை திரை தோல் வினைத்தொகை. தகை-அழகு. விறல்-வெற்றி. இறவின் உணங்கல்-இறாமீன்வற்றல். கழுநீர்-மலர்க்கு ஆகுபெயர் வழுவும் நீரும் என்க வழு-பீளை. குமிழ்-குமிழம்பூ-மூக்கின்றுளைகளைச் சுமந்தன எனப் பலவறி சொல்லாற் கூறப்பட்டது. நகை-பல். ஏய்ப்ப: உவமஉருபு. புலவு-புலால் நாறுகின்ற. இறும்பூது-வியப்பு.வெறுந் தோற்பை என்க. தாழைத் தண்டின் வற்றல்-உலர்ந்து சுருங்கிய தாழைத் தண்டென்றவாறு. ஆவம்-அம்புக்கூடு. என்பு-எலும்பு. தெங்கின் காய் உணங்கல் என்றது, தென்னை நெற்றினை.

இதுவுமது

68-80: பூலினும்-காணாயோ

(இதன் பொருள்) மன்னவன் மகன்-வேந்தன் மகனே!; தொல்லோர்-முன்னையோர்; புலால் பூவினும் சாந்தினும்-மகளிரின் யாக்கையின்கண் இத்தகைய புலால் நாறுமியற்கையை கறிய மணங்கமழும் மலர்களானும் சாந்தம் முதலிய நறுமணம் பொருள்களாலும் ஒல்லுந்துணையும்; மறைத்துத் தூசினும் மணியினும் யாத்து வகுத்த வஞ்சம் தெரியாய்-மறைத்து விட்டு மேலும் அதன் விகாரங்கள் அழகிய ஆடைவகைகளையும் மணி முதலியவற்றாலியன்ற அணிகலன்களையும் அழகாக அணிந்து வைத்து அதனைக் கண்டோர் காமுறும்வண்ணம் அழகுடையதாய் யாப்புறுத்திய வஞ்சகச் செயலையும்; ஆராய்ந்து தெரிந்து கொள்வாயாக; என-என்று சொல்லி மெல்லியல் விஞ்சை மகளாய் உரைத்தலும்-மணிமேகலை காயசண்டிகையாய் நின்று செவியறிவுறுத்தலும் என்க.

(விளக்கம்) ஈண்டு மணிமேகலை அவன்பால் முற்பிறப்பினின்றும் அடிப்பட்டு வருகின்ற அன்பு காரணமாக அவனுக்கும் மெய்யறிவு கொளுத்தித் தான் செல்லும் நன்னெறிக்கண் ஆற்றுப்படை செய்வான் யாக்கையின் இயல்பினை விதந்தெடுத்துச் செவியறிவுறுத்தியபடியாம்.

யாக்கையின் தன்மையை உள்ளவாறு உணர்ந்தாலன்றி அதன்கண் பற்று அறாது, இவ்வாறு யாக்கையின் இழிதகைமையை இடையறாது சிந்தித்துப் பற்றறுத்தல் வேண்டும் என்பது புத்தருடைய அறிவுரையாகும். இங்ஙனம் சிந்தித்தலை அசுப்பாவனை என்று பவுத்த நூல்கள் கூறும் இந்நூலினும்

அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத்
தனித்துப் பார்த்தப் பற்றறுத் திடுதல் 

என வருதலறிக(30:254-5)

இனி ஈண்டு, பூவினும்.....தெரியாய் எனவருமிப் பகுதியோடு

கூராரும் வேல்விழியார் கோலா கலங்க ளெல்லாம்
தேராத சிந்தையரைச் சிங்கி கொள்ளு மல்லாமல்
நேராயு ணிற்கு நிலையுணர்ந்து நற்கருமம்
ஆராய் பவருக்கு அருவருப்ப தாய்விடுமே

எனவும்

வால வயதின் மயக்கு மடந்தையருங்
கால மகன்றதற்பின் கண்டெவரு மேயிகழ
நீலநறுங் குழலு நீடழகு நீங்கியவர்
கோலதொரு கையூன்றிக் கொக்குப்போ லாயினரே

எனவும்,

கிட்டா தகன்மின் கிடப்பதிற் பொல்லாங் கென்(று)
இட்டா ரலரேல் இலங்கிழையார் தம்முடம்பிற்
பட்டாடை மேல்விரித்துப் பாதாதி கேசாந்த
மட்டாய் மறைத்துவரு மார்க்கமது வென்கொண்டோ

எனவும்,

வீசிய துர்க்கந்தம் வெளிப்படுத்தும் மெய்யிலெனக்
கூசி மறைப்பதன்றேற் கோற்றொடியார் அங்கமெங்கு
நாசி மணக்க நறுங்குங் குமசுகந்தம்
பூசி முடித்தல்பசி போக்கும் பொருட்டேயோ

எனவும்,

மாற்றரிய தமூத்தை வாய்திறக்கு முன்னமெழு
நாற்ற மறைக்கவன்றேல் நாவழித்துப் பல்விளக்கிக்
கோற்றொடியார் நன்னீருங் கொப்புளித்துப் பாகுசுருள்
தீற்றுவது மென்குதலை தீர்க்குமருந் தென்றேயோ

எனவும்,

பட்டாடை சாத்திப் பணிமே கலைதிருத்தி
மட்டா யவயங்கண் மற்றவைக்கு மேற்குவண்ணம்
கட்டாணி முத்தும் கனகமணிப் பூடணங்கள்
இட்டால் அலதவருங் கென்னோ வியலழகே

எனவும் அசுபபாவனைக்கு அற்புதமாக வந்த இச் செய்யுள்களையும் ஒப்பு நோக்கி உணர்க.  (மெய்ஞ்ஞான விளக்கம். நீருப-14-9)

விஞ்சை மகளாய்-காயசண்டிகையாய்

காஞ்சணன் உட்கோளும் கரந்துறைவும்

71-81: தற்பாரா..... விஞ்சையன்

(இதன் பொருள்) தன் பாராட்டும் என் சொல் பயன் கொள்ளான் காயசண்டிகை வடிவத்தோடு நின்று உதயகுமரனுக்கு முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டிய மணிமேகலையின் செயலைக் கண்ட காஞ்சனன் காயசண்டிகையே இங்ஙனம் ஆயினன் என்றுட் கொண்டவனாய்! என்னே! இஃதென்னே! இவன்தான் தன்னை யான் அன்புடன் பாராட்டிக் கூறுகின்ற சொற்களின் யான் அன்புடன் பாராட்டிக் கூறுகின்ற சொற்களின் பயனைச் சிறிதும் கருத்துட் கொள்கின்றிலள்; பிறன் பின் செல்லும் பிறன் போல நோக்கும்-கணவனாகிய என் கண் காணவே பிறனொருவன் பின்னேயே செல்கின்றாள் என்னை நோக்குழியும் ஏதிலானை நோக்குமாறு போலவே நோக்குகின்றனள்; மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி-தேனமணங் கமழும் ஆத்திப்பூமாலை அணிந்திருக்கின்ற இவ்வரசன் மகனுக்கு இவள் அறிவுரை கூறுவாள் போன்று அறிவுசான்ற பழமொழிகள் பலவற்றை எடுத்துக் கூறுகின்றாளாயினும்; பவளக் கடிகையின் தவள வாள நகையும் குவளைச் செங்கணும் குறிப்பொடு வழாஅள்-பவளத்துணுக்குகள் போன்ற தன் வாயிதழ்களின் மேலே தவழ்கின்ற வெள்ளிய எயிற்றின் ஒளி தவழ்கின்ற புனமுறுவல் பூப்பதனானும் குவளை மலர் போன்ற தன் சிவந்த கண்களிலே காமப் பண்பு ததும்பக் காதற் குறிப்பிற் சிறிதும் வழுவாமல் நோக்குகின்ற நோக்கமுடைமையானும்; ஈங்கு இவன் காதலன்-இந் நகரத்தின்கண் இம் மன்னவன் மகன் இவளுக்குக் காதலன் ஆயினன் என்பது தேற்றம்; ஆகலின் ஏந்திழை ஈங்கு ஒழிந்தனள் என-இங்ஙனமிருத்தலாலே தான் காயசண்டிகை தனக்கெய்திய சாபம் தீர்ந்தபின்னரும் தனக்குரிய விச்சாதர நாட்டை வெறுத்து இந் நகரத்திலேயே தங்கினள் என்று கருதியவனாய்; இகழ் எரி பொத்தி-மன்னன் மகன்பா லெழுந்த பகைமை காரணமாகத் தன்னெஞ்சத்தே வெகுளித் தீமூண்டெரியா நிற்ப; காஞ்சனன் என்னும் பெயரையுடைய ஒளிமிக்க வாளையுடைய அவ்விச்சாதரன்; மற்று அவள் இருந்த மன்றப் பொதியிலுள் புற்றடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன்-அக் காயசண்டிகை பண்டு வதிந்த மன்றயாகிய ஊரம்பலத்தினூடு ஒருசார் புகுந்து புற்றினுள்ளே அடங்கியிருக்கும் பாம்பு போலே தன்னை யாரும் அறியாவண்ணம் கரந்துறைவானாயினன் என்க.

(விளக்கம்) தன் என்றது, காயசண்டிகையை, பிறன் பின் செல்லும் என்றது. கணவனாகிய என்னைக் கண்டு வைத்தும் ஏதிலாள் பின் செல்கின்றாள் என்பதுபட நின்றது.

பிறன்போல் என்றதும், கணவனாகிய என்னை ஏதிலானை நோக்குவது போல் போக்குகின்றாள் என்பதுபட நின்றது. மன்னவன் மகனும் இவள்பால் காதலுடையனாதலின் தன்னை மலர் மாலை முதலியவற்றால் அழகு செய்து கொண்டு வந்துள்ளான் போலும் என்னும் தனது ஐயந்தோன்ற உதயகுமரனை மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகன் என்றான். இதன்கண் காயசண்டிகை தன்னைக் கைவிட்டு அவனைக் காதலித்தற்குக் காரணமான சிறப்பிது என்பது தோன்ற, பிறன் என்னாது மன்னவன் மகன் என்ற நுணுக்கம் உணர்க எடுத்துக் காட்டியும் எனல் வேண்டிய இழிவு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. பேசுவது ஞானம் இடை பேணுவது காமம் என்று கனல்வான், வாணகையும் செங்கணும் குறிப்பொடு வழாஅள் என்றான். ஈண்டுக் குறிப்பாவது வெள்ளையுள்ளத்தோடு நேரிட்டு நோக்காமல் கள்ளவுள்ளத்தோடு பாராதாள் போன்று பார்த்தல். ஈண்டு மணிமேகலை அவன்பாற் காதல்புடையள் ஆதலின் தன் காதல் அவனுக்குத் தோன்றாமைப் பொருட்டுக் கள்ளத்தோடே நோக்கினள் என்பது இக் காஞ்சனன் கூற்றால் யாமும் உணர்கின்றோமல்லமோ!

ஈங்கு இவன் அவட்குக் காதலன் என்பது தேற்றம் என அறுத்து முடித்திடுக. காதலன் என்றது இகழ்ச்சி. ஏந்திழை: காயசண்டிகை. இவள் என்னும் பொருட்டாய் நின்றது. இகல்-பகைமை; ஆகு பெயராய்ச் சினத்தைக் குறித்து நின்ற தெனினுமாம்.

மன்றப் பொதியில்: இருபெயரொட்டு. அவள்: காயசண்டிகை. அரவம் தன்னைப் பிறர் அறியாவகை உறையுமிடத்தே கரந்துறையும் இயல்பிற்று ஆதலும் நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும் என்பதனாலுமுணர்க. பின்னர் அவன் செயலுக்கியன்ற கருவியும் அவன் பாலிருந்தமை தோன்றக் கதிர்வாள் விஞ்சையன் என்று விதந்தார் என்னை? படை கொண்டார் நெஞ்சம் நன்றூக்காதாகலின் படையுண்மையையும் விதந்தோதினர்.

உதயகுமரன் உட்கோளும் செயலும்

82-93: ஆங்கவள்.........போகி

(இதன் பொருள்) ஆங்கு அவள் உரைத்த அரசிளங்குமரனும் அவ்விடத்திலே மணிமேகலையாலே அறிவுரை கூறப்பட்ட மன்னவன் மகனாகிய இளமைமிக்க உதயகுமரன்றானும்; களையா வேட்கை கையுதிர்க் கொள்ளான்-ஊழ்வினையின் புணர்ப் பாதலாலே தன்னறிவினாலே சிறிதும் நீக்கலாகாத கழிபெருங்காம வேட்கை காரணமாக அவளைக் காயசண்டிகை என்றே கருதிக் கைவிட்டொழிய மாட்டானாகித் தன்னுள்ளே ஆராய்ந்து துணிபவன்; வளைசேர் செங்கை மணிமேகலையே-மாணிக்கத்தானும் பொன்னானுமியன்ற வளையல்கள் அவாவிச் சேர்தற்கியன்ற அழகிய சிவந்த கைகளையுடைய மணிமேலை தானே மாயவிஞ்சையின் காயசண்டிகை ஆய்மனம் மயக்குறுத்தனள் தான் கற்றுள்ள வேற்றுருக் கோடற்கியன்ற மாய மந்திரத்தாலே காயசண்டிகை வடிவந்தாங்கியவளாகிப் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி என் முன் வந்து தன் முதுக்குறை முதுமொழிகளாலே என் மனத்தைப் பின்னும் மயக்குவித்தனள் ஆதல் வேண்டும் அம்பல மருங்கில் அயர்ந்து அறிவு உரைத்த இவ்வம்பலன் தன்னொடு வைகிருள் ஒழியாள்-உலகவறவியின்கண் இவளைக் காயசண்டிகை என்று கருதி நெஞ்சம் வருந்தி அறிவுரை கூறிய இப் புதியவனோடு இற்றை நாள் இருள்மிக்க இவ்விரவினைக் கழித்தற்கொருப்படாள்; இங்கு இவள் செய்தி-யான் மணிமேலையே என்று கருதுகின்ற இவளுடைய செயலை; இடையாமத்து இருள் வந்து அறிகுவன் எனமனங் கொண்டு எழுந்து-இற்றைக்கு நள்ளிரவிலே இருளினூடே வந்து ஒற்றி இவள் யார் என நன்கு அறிந்து கொள்வேன் என்றுட் கொண்டு அவ்விடத்தினின்றும் பெயர்ந்து; வான தேர்ப்பாகனை மீன்திகழ் கொடியனைக் கருப்பு வில்லியை அருப்புக்கணை மைந்தனை தன்னை இடையறாது வருத்துபவனும் வானத்தே இயங்குந் தென்றல் தேரினையும் மீன் எழுதப்பட்டு விளங்கும் கொடியையும் கரும்பாகிய வில்லையும் மலராகிய அம்புகளையும் உடைய ஆற்றல் மிக்கவனுமாகிய காம வேளையே; உயர்வுத் துணையாக-தன் ஆராய்ச்சிக் குற்ற துணைவனாகக் கொண்டு வயாவொடும் போகி-மிக்க காம வேட்கையொடு தன் மாளிகைக்குச் சென்று; என்க.

(விளக்கம்) அவள்: மணிமேகலை; உரைத்த-உரைக்கப்பட்ட கையுதிர்க் கொள்ளல்-கைவிட்டொழிதல் தன் மனக்கண்ணாலே மணிமேகலையின் செங்கையில் மணியானும் பொன்னானுமியன்ற வளையல்களையும் செறித்து அதன் அழகைச் சுவைப்பவன் அது தோன்ற வளைசேர் செங்கை மணிமேகலை என்றான். இங்ஙனம் கற்பனையாகச் சுவைப்பது காமுற்றோரியல்பு. மணிமேகலையே என்புழி ஏகாரம் தேற்றப் பொருட்டு: பிரிநிலைப் பொருளும் பயந்து நின்றது. மாயவிஞ்சை-வேற்றுருக் கொள்ளுதற்கியன்ற மந்திரம்.

மணிமேகலையாயின் இரவில் இப் புதியவனோடு தங்கியிராள் என்றவாறு. இஃது ஐயந்தீர்தற்குக் கருவி கூறியவாறாம். வம்பலன் புதியவன். வைகு இருள்-தங்கிய இருளையுடைய இரவு. வைகறை எனல் ஈண்டைக்குப் பொருந்தாது. இவள் என்றது, தனக்கு ஐயப்புலமாகிய இவள் என்றவாறு. அறிகுவன் என்றது ஐயமற அறிவேன் என்றவாறு.

காம வேள் இடையறாது தன்னோடிருந்து தன்னை ஊக்குதலின் அவனையே துணையாகக் கொண்டு சென்றான் என்றார்; பிறிதொரு துணை பெறாது தனியே சென்றாள் என்பது கருத்து. உயாவுத்துணை-வினாவிக்காரியந் தெரிதற்கியன்ற துணைவன். வயா-ஈண்டுக் கழிபெருங் காமவேட்கை.

உதயகுமரன் நள்ளிரவில் ஊழ்வலியாலே உலகவறவியினூடு சென்றேறுதல்

94-101: ஊர்துஞ்ச.........புகுதலும்

(இதன் பொருள்) ஊர்துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து முதூரின்கண் வாழும் மக்களையுள்ளிட்ட உயிரினமெல்லாம் உறங்கிக் கிடக்கின்ற இரவின் இடையாமத்திலே அவ்வரசிளங் குமரன் தான் கருதியாங்குப் பிறிதொரு துணையும் நாடாது தான் மட்டுமே தமியனாய்த் தன் மாளிகையினின்றும் எழுந்து, வேழம் வேட்டு எழும் வெம்புலி போல -யானையை புடைத்துத்தினன் அவாவிச் செல்லுகின்ற வெவ்விய புலி பதுங்கிச் செல்லுமாறு போலே தன் செலவினைப் பிறர் அறியாவண்ணம் கரந்து சென்று; கோயில் கழிந்து வாயில் நீங்கி ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து-அரண்மனையினின்றும் புறப்பட்டு வாயில் காவலரும் காணா வண்ணம் பெருவாயிலையுங் கடந்து போய் மணிமேகலை இருந்த அம்பலத்தை அணுகி; வேகவெந்தீ நாகம் கிடந்த போகு உயர் புற்று அளை புகுவான் போல-விரைந்து கொல்லும் வெவ்விய நச்சுப் பாம்பு கரந்து கிடக்கும் மிகவும் உயர்ந்துள்ள புற்றின்கண் அமைந்ததொரு பெரிய வளையினூடு புகுபவனைப் போன்று; ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த ஊழ் அடியிட்டு அதன் உள் அகம் புகுதலும்-தன் வரவினை அறிவுறுத்தா நிற்பவும் தன் வருகையைப் பிறர் அறியாதிருக்கும் முறைமையாலே ஒலியவித்து அடிபெயர்த்து அவவம்பலத் துள்ளே புகுமளவிலே என்க.

(விளக்கம்) போகித் தன் பள்ளியிலே கிடந்தவன் தான் கருதிய வண்ணமே ஊர்துஞ்சியாமத்து ஒரு தனி எழுந்து என்க. வாள் வேல் முதலிய படைக்கலத்தின் துணையுமின்றிச் சென்றமை கருதித் தனி எழுந்தான் என்னாது ஒருதனி எழுந்து என்று தனிமையை விதந்தார். தன் வருகையைத் தான் வேட்கும் வேழமும் அறியாவண்ணம் போதலும் அஞ்சாது போதரும் வேட்கையொடு போதலும் நள்ளிரவிற் போதலும் ஆகிய பொதுத்தன்மைகள் பலவும் கருதி வேழம் வேட்டெழும் வெம்புலியை உவமம் கொண்டனர். கோயிலையும் வாயிலையும் பிறர் அறியாவண்ணம் கடந்து நீங்குதலின் அருமை தோன்ற அவற்றைத் தனித்தனி எடுத்தோதினர், ஆயிழை: மணிமேகலை.

முன்னம் காஞ்சனன் அவளிருந்த மன்றப் பொதியிலுட் புற்றடங் காவிற் புக்கொளிந்தடங்கினன் என்றதனை மீண்டும் நினைவுறுத்தியது. வேண்டாகூறி வேண்டியது முடித்தல் என்னும் உத்தி. என்னை? வேகவெந்தீ நாகம் கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல என்புழிப் பயில்வோர் நெஞ்சத்தே அவலச் சுவை இரட்டிப்பாதல் நுண்ணிதின் உணர்க.

சாந்தலர் உறுத்தவும் அஃதுணராது அடியிடுதலை ஒளியின்றிச் செல்வோர் செல்லும் முறைப்படி மெத்தென்று இட்டுச் சென்றனன் என்றிரங்குவார். சாந்தலர் உறுத்த ஊழ் அடியிட்டு என்றார். இப்பொருட்கு உறுத்தவும் எனல் வேண்டிய எச்சவும்மை தொக்கதாகக் கொள்க.

இனி, ஊழ் தானே அவனை அவ்வாறு செலுத்த அடியிட்டுப் புகுதலும் என்னும் பொருளும் தோன்ற ஊழடியிட்டு என இரட்டுற இயம்பினர்.

சாந்தலர் உறுத்த என்றது காஞ்சனன் அவன் வரவினைச் சந்தனத்தின் நறுமணத்தாலறிந்தனன் எனற்குக் குறிப்பேதுவாய் நின்றது. ஈண்டு உதயகுமரன் தன் வருகையைப் பிறர் அறியாவண்ணம் செல்ல வேண்டும் என்னும் கருத்தினனாய்ச் சென்றானேனும் அவன் வரவினைக் காஞ்சனனுக்கு அறிவுறுத்தும் கருவியொன்றனை அவன்பாலே அவனது ஊழ்வினை கூட்டி வைத்திருந்தமையை எண்ணுங்கால்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்   (குறள்-380)

எனும் திருக்குறளும் நம் மெண்ணத்தின்கண் முகிழ்ப்பதாம்

காஞ்சனன் உதயகுமரன் வாளால் எறிதல்

102-109: ஆங்கு............புகுதலும்

(இதன் பொருள்) ஆங்கு முன் இருந்த அலர்தார் விஞ்சையன் அம்பலத்தினூடே முன்னரே காயசண்டிகையின் செயலை ஒற்றியறிதற்குக் கரந்திருந்த மலர்ந்த மாலையையுடைய வித்தியாதரனாகிய காஞ்சனன் உதயகுமரனுடைய வரவு கண்டவுடன்; ஈங்கு இவன் இவள்பால் வந்தனன் என்றே இவ்வம்பலத்தின்கண் இம் மன்னவன் மகன் காயசண்டிகையின் பொருட்டே வந்துள்ளான் என்று ஐயமறத் துணிந்தவனாய்; இருந்தோன் வெம்சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத் தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென எழுந்து பெரும்பின் சென்று அவன் சுரும்பு அறை மணித்தோள் துணிய வீசி கரந்திருந்த அக் காஞ்சனன் வெவ்விய வெகுளியையுடைய நாகப்பாம்பு நச்சுப்பற்கள் நிமிரும்படி தன் பெரிய வெகுளியோடே சீறி எழுந்து தனது படத்தை விரித்தாற் போன்று பெரிதும் சினந்தெழுந்து உதயகுமரனை முதுகுப்புறமாகப் பெரிதும் அணுகிச் சென்று அவனுடைய வண்டுகள் முரலும் மலர் மாலையணிந்த அழகிய தோள் துணிபடும்படி தன் கதிர்வாளால் வெட்டி வீழ்த்திப் பின்னர்; காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம் போகுவல் என்று அவள்பால் புகுதலும்-தன் மனைவியாகிய காயசண்டிகைக் கைப்பற்றிக் கொண்டு வான் வழியே என்னூர்க்குப் போவேன் என்று கருதியவனாய்க் காயசண்டிகை வடிவத்தோடிருந்த மணிமேகலையிருந்த இடத்தை நோக்கிப் போகுமளவிலே என்க.

(விளக்கம்) ஊழ்-முறைமை; ஊழ்வினையுமாம் விஞ்சையன்-விச்சாதரனாகிய காஞ்சனன். இவன்-இளவரசன் மகன் இவள்பால் வந்தனன் என்றது இடக்கரடக்கு வீசிவிட்டுப் பின்னர் என்க அவள்பாற் புகுதலும் என்புழி அவள் என்றது காயசண்டிகை வடிவிலிருந்த மணிமேகலையை

கந்திற்பாவை காஞ்சனனுக்குக் கூறுதல்

110-121: நெடுநிலை...............அடங்கினள்

(இதன் பொருள்) நெடுநிலைக்கந்தின் இடவயின் விளங்க கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்-நெடிதாக உயர்ந்து நிற்கும் தூணில் ஓரிடத்தே விளக்கமாகக் கடவுள் தன்மையோடு பண்டு மயனாற் பண்ணிய பாவையின்கண் நீங்காது நிற்கும் தெய்வம் அக் காஞ்சனனுக்குக் கூறுகிறது. விஞ்சைக் காஞ்சன அணுகல் அவள் மணிமேகலை............மறந்து உரு எய்தினள் அணுகல்- விச்சாதரனே! அவளை அணுகாதே கொள்! அங்கிருப்பவள் நின் மனைவியாகிய காயசண்டிகையல்லன், பின்னே யாரோ வெனின்; மணிமேகலை-மணிமேகலை என்னும் பிக்குணிகாண்! அவளை அணுகாதே கொள்! அவள் காயசண்டிகையின் உருவத்தைத் தான் கரந்துறையும் உருவமாக மேற்கொண்டிருக்கின்றனள் காண்!; காயசண்டிகை தன் கடும்பசி நீங்கி வானம் போவுழி-இனி நின் காதலியாகிய காயசண்டிகை தன் சாபம் நீங்குழி இவளிட்ட ஆருயிர் மருந்தாயுண்டு தான் உழந்த கடிய பசியாகிய ஆனைத் தீ நோய் நீங்கி வான் வழியே நும்மூர் நோக்கிப் போகும் பொழுது; வந்தது கேளாய்-அவளுக்கு வந்த துன்பச் செய்தியைக் கூறுவேன் கேட்பாயாக!; அந்தரஞ் செல்வோர் வான் வழியே செல்லுமியல்புடைய வானவரும் முனிவரும் பிறரும் யாவரேனும்; அந்தரி இருந்த விந்தமால் வரை மீமிசைப் போகார்-கொற்றவையாகிய இறைவி எழுந்தருளியிருக்கும் விந்தமலையின் உச்சிக்கு நேர் மேலே பறந்து செல்லார், அதனை வலங் கொண்டு விலகியே செல்வார்காண்!; போவார் உளர் எனின் இச் செய்தி யறியாமல் யாரேனும் அவ் விந்தத்தின் உச்சிக்கு மேலே பறந்து செல்வார் உளராய பொழுது; விந்தம் காக்கும் விந்தாகடிகை பொங்கிய சினத்தள்-அவ் விந்த மலையினைக் காத்திருக்கின்ற விந்தாகடிகை என்னும் தெய்வம் மிகுந்த சினங்கொண்டவளாய்; சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம் அவருடைய நிழலையே பற்றியிழுத்து அவரைத் தன் வயிற்றினூடே போகட்டுக் கொள்ளும்; அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள்-காயசண்டிகையும் தன் அறியாமை காரணமாக அவ் விந்த மலையுச்சிக்கு மேலாகச் சென்று அவ் விந்தா கடிகையின் வயிற்றிலே அடங்கி யொழிந்தனள் காண்! என்று அறிவித்து என்க.

(விளக்கம்) விளங்க என்றது எதிர்கால நிகழ்ச்சிகள் விளங்க வேண்டி என்றவாறுமாம். கடவுள்-கடவுட்டன்மையோடு; கடவுட்டச்சன் எழுதிய பாவை எனலுமாம். விந்தாகடிகை என்பது அந்தரியின் மற்றொரு பெயர் என்பாருமுளர். விந்தாகடிகை வாங்கி வயிற்றிடூஉம் என்க அவள்: விந்தாகடிகை அடக்கினள் என்றது அவ்வாற்றாலிறந்தாள் என்றவாறு.

காஞ்சனன் கருத்தழிந்து தன்னூர்க்குச்  செல்லுதல்

122-129: கைம்மை..........படர்ந்தென்

(இதன் பொருள்) காஞ்சன கைம்மை கொள்ளேல்-காஞ்சனனே! இவள் மனைவி யல்லளாகலின் நின் நெஞ்சத்தே சிறுமை கொள்ளாதொழிக; விஞ்சைக் காஞ்சன- விச்சாதரனாகிய காஞ்சனனே இன்னு மொன்று கூறுவல்; இது கேள்-இதனையும் கேட்பாயாக!; உதயகுமாரனை ஊழ்வினை வந்து இங்கு ஆருயிர் உண்டது ஆயினும்-உதயகுமரனாகிய இவ்வரசிளங்குமரனை அவன் முற்பிறப்பிலே செய்த பழவினையே செவ்வியுற்று வந்து இவ்விடத்திலே அவனது அரிய உயிரைத் பருகியது, அங்கனமிருப்பினும்; அறியாய் வெவ்வினை செய்தாய்-நீ தானும் நன்கு ஆராய்ந்தறியாமல் தீவினை யொன்றனை ஈண்டுச் செய்தொழிந்தமையின்; அவ்வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்-அத்தீவினை தானும் நின்னை விட்டகலாமல் அவ்வாறே செவ்வி பெற்றுத் தன் பயனை ஊட்டுதற்கு நின்பால் விட்டகலாமல் அவ்வாறே செவ்வி பெற்றுத் தன் பயனை ஊட்டுதற்கு நின்பால் வந்துறாமற் போகாது; என்று இவை தெய்வம் கூறலும்-என்று அறிதற்கரிய இச் செய்திகளை அக் கந்திற்பாவை யிடத்துறையும் தெய்வமானது கூறா நின்றவளவிலே; கன்றிய நெஞ்சில் கடுவினை உருத்து எழ-முன்னம் உதயகுமரனைச் சினந்த தன் நெஞ்சினுள்ளே தான் அறியாமல் செய்த கொலையாகிய இக் கொடிய தீவினையானது சினந்தெழுந்து சுடா நிற்ப; விஞ்சையான் எழுந்து விண் விலங்கு படர்ந்து போயினன்- விச்சாதரனாகிய அக் காஞ்சனன் பெரிதும் வருந்தி மேலே உயர்ந்தெழுந்து வானினூடே குறுக்காக இயங்கித் தன்னூர் நோக்கிச் சென்றனன்; என்பதாம்.

(விளக்கம்) கைம்மை என்றது சிறுமை என்னும் பொருட்டாய்த் தனக்குரியளல்லாதாளைக் கைப்பற்றக் கருதிய தீயகருத்தின் மேனின்றது. நினக்கு அறிவருந்தும் சினம் காரணமாக ஆராயாது தீவினை செய்தனை ஆகலின் அது தன் பயனை ஊட்டாது கழியாது என்பதுபட அறியாய் வெவ்வினை செய்தாய் அவ்வினை நின்னையும் அகலாது ஆங்குறும் என்று கந்திற்பாவை அறிவுறுத்துகின்றது என்னை?

அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை (குறள்-315)

எனவும்,

இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னுமை
வேண்டும் பிறன்கட் செயல்    (குறள்-316)

எனவும் வரும் அறங்களை அறிதற்கியன்ற அறிவு பெற்றிருந்தும் அறியாயாய் வெவ்வினை செய்தொழிந்தாய் என்றிரங்கிக் கழறியபடியாம். இத் தீவினை சிந்தாயின்றிச் செய்வினை அல்லாமையை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க. என்னை? ஓருயிரைக் கொல்ல வேண்டும் என்பதே அவன்கருத்தாகலின்; ஆகவே சிந்தை இன்றெனிற் செய்வினை யாவதும் எய்தாது என்னும் அவர் சித்தாந்தத்தோடு இது முரணாமையு மறிக. கன்றிய-சினந்த. கடுவினை-கொலை. விலங்கு-குறுக்காக.

இனி, இக் காதையினை-கோட்டம் காப்புடைத்தாக; தாரோன் கேட்டு எழுந்து சென்று ஏறலும், கணவன் கையறவெய்தி வந்து இழிந்து தேர்ந்து திரிவோன் கண்டு பழமைக் கட்டுரை பல பாராட்டவும் நீங்கி சென்று காட்டி காணாயோ நீ இவையும் காணாய் தகை இன்றாயது. வேறாயின சுமந்தன ஒழுக்குவ வேறாயின தொல்லோர் வகுத்த வஞ்சம் தெரியாய் என மெல்லியல் உரைத்தலும் கொள்ளான் செல்லும் நோக்கும் காட்டி வழாஅள் ஆதலின் ஒழிந்தனளென ஒளித்தடங்கினன் விஞ்சையன் குமரனும் மணிமேகலையே ஆய் ஏந்தி மயக்குறுத்தனள் இருளொழியாள் வந்தறிகுவனென எழுந்து போகி யாமத்து எழுந்து கழிந்து நீங்கி அணைந்து புகுதலும் விஞ்சையன் எழுந்து சென்று வீசிப்புகுதலும் பாவை உரைக்கும் விஞ்சையன் எழுந்து படர்ந்து போயினன் என முடித்திடுக.

உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar