Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை 23. சிறைவிடு காதை
முதல் பக்கம் » மணிமேகலை
22. சிறைசெய் காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
04:01

(இருபத்திரண்டாவது மணிமகலை பொருட்டால் மடிந்தான் உதயகுமரனென்பது மாதவர் வாய்க் கேட்ட மன்னவன் மணிமேகலையை மந்திரியாகிய சோழிகவேனாதியாற் காவல் கொண்ட பாட்டு)

அஃதாவது-உதயகுமரன் கொலையுண்ட செய்தியை அவன் தந்தையாகிய சோழ மன்னனுக்கு அறிவித்த முனிவர்கள் அவன் வருந்தாமைப் பொருட்டு அவன் கொலையுண்ட காரணத்தையும் கூற, அது கேட்ட மன்னவன் வருத்தமும் சினமும் தவிர்ந்து மணிமேகலையைச் சிறையிட்ட செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்-சம்பாபதி கோயிலை விடியற் காலத்தே வழிபாடு செய்ய வந்த மக்கள் உதயகுமரன் கொலையுண்ட செய்தியைச் சக்கரவாளத்தில் இருந்த மாதவருக்கெல்லாம் அறிவித்தனராக; அது கேட்ட அத் துறவோர் மணிமேகலையின்பால் சென்று நிகழ்ந்தவற்றை எல்லாம் தெரிந்துகொண்டு அரசன்பால் சென்று மனக்கினதாக வாழிய வேந்தே! என விளித்து இன்றேயல்ல எனத் தொடங்கி அந்நகரத்தின்கண் கன்றிய காமக் கள்ளாட் டயர்ந்து பத்தினிப் பெண்டிர்பாற் சென்றணுகியும் நற்றவப் பெண்டிர் பின்னுளம் போக்கியும் தீவினையுருப்ப உயிரீறு செய்தோர் பாராள் வேந்தே பண்டும் பலரால் எனத் தோற்றுவாய் செய்து பண்டைக் காலத்தில் அந்நகரத்தின்கண் காவிரியில் நீராடி வருகின்ற பார்ப்பனி மருதி என்பவளை அரசன்மகன் ஒருவன் கண்டு காமுற்று அவளை அழைக்க மருதி மனங்கலங்கி மண்திணி ஞாலத்து மழை வளந் தரூஉம் பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகாஅர் என அக் குற்றத்தைத் தன் மேலதாக்கிக் கொண்டு சதுக்கப்பூதத்தின் முன்னிலையில் சென்று யான் செய்குற்றம் யான் அறிகில்லேன் யான் பிறனுளம் புக்கேன் அதற்குக் காரணம் என்னை? என அழுது அத் தெய்வத்தை வினவுதலும் அதற்கு அத் தெய்வம் அவளுக்குக் கூறுகின்ற மறுமொழியும், விசாகை என்னும் பத்தினியின் வரலாறும், விசாகை தருமதத்தனுக்குக் கூறுகின்ற அறிவுரைகளும், ககந்தன் மகன் மற்றொருவன் விசாகைக்குப் பூமாலை சூட்டுதற்கு முயலுதலும், பூமாலையோடு உயர்த்திய அவன் கை மீண்டும் தாழ்த்த இயலாது போக, அதனால் அவன் செயலை அறிந்த அரசன் மகன் என்றும் நோக்காமல் அவனை வாளால் எறிந்து கொன்ற செய்தியும் ஆக அம் மாதவர் தம்முள் ஒரு மாதவன் கூற்றாக வருவனவும் மீண்டும் அம் மாதவன் உதயகுமரனுடைய இடங்கழி காமம் காரணமாக மணிமேகலையை நிழல் போலத் தொடர்ந்ததும் காயசண்டிகையின் கணவன் உதயகுமரனைக் கொன்றமையும் அரசனுக்கு எடுத்துக் கூறி இவை எல்லாம் ஊழ்வினையின் செயல் என அம் மன்னவன் உதயகுமரன்பால் வெறுப்புற்றவனாய் உதயகுமரன் உடலை ஈமத்து ஏற்றி மணிமேகலையையும் காவல் செய்க என்று சோழிக வேனாதி என்னும் கோத்தொழிலாளனுக்குக் கட்டளையிடுதலும் பிறவுமாகிய செய்திகள் பலவும் பயில்வோர் உளமுருகக் கூறப்படுகின்றன.

கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப
நெடு நிலைக் கந்தில் நின்ற பாவையொடு
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப
சா துயர் கேட்டுச் சக்கரவாளத்து
மாதவர் எல்லாம் மணிமேகலை தனை
இளங்கொடி! அறிவதும் உண்டோ இது- என
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும்
ஆங்கு அவள் தன்னை ஆர் உயிர் நீங்கிய
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து  22-010

மா பெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து
கோயில் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதிபோல
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய!
வேலும் கோலும் அருட்கண் விழிக்க!
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி!
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம்
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே!
இன்றே அல்ல இப் பதி மருங்கில்
கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து  22-020

பத்தினிப் பெண்டிர்பால் சென்று அணுகியும்
நல் தவப் பெண்டிர்பின் உளம் போக்கியும்
தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர்
பார் ஆள் வேந்தே! பண்டும் பலரால்
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
தன் முன் தோன்றல் தகாது ஒழி நீ எனக்
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
இந் நகர் காப்போர் யார்? என நினைஇ
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்குறக்
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன்  22-030

இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுதல் இல்லோன்
ககந்தன் ஆம் எனக் காதலின் கூஉய்
அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும்
ககந்தன் காத்தல்! காகந்தி என்றே
இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு ஈங்கு
உள்வரிக் கொண்டு அவ் உரவோன் பெயர் நாள்
தெள்ளு நீர்க் காவிரி ஆடினள் வரூஉம்  22-040

பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
நீ வா என்ன நேர் இழை கலங்கி
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
முத் தீப் பேணும் முறை எனக்கு இல் என
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்   22-050

கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன்
வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்
பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீ எனச் சேயிழை அரற்றலும்
மா பெரும் பூதம் தோன்றி மடக்கொடி!
நீ கேள் என்றே நேர் இழைக்கு உரைக்கும்
தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை என்ற அப்  22-060

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!
பிசியும் நொடியும் பிறர் வாய்க் கேட்டு
விசி பிணி முழவின் விழாக் கோள் விரும்பி
கடவுள் பேணல் கடவியை ஆகலின்
மடவரல்! ஏவ மழையும் பெய்யாது
நிறை உடைப் பெண்டிர் தம்மே போல
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய் இழை!
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்  22-070

கட்டாது உன்னை என் கடுந் தொழில் பாசம்
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம்
பின்முறை அல்லது என் முறை இல்லை
ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால்
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என
இகந்த பூதம் எடுத்து உரைசெய்தது அப்
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன்
தாதை வாளால் தடியவும் பட்டனன்
இன்னும் கேளாய் இருங் கடல் உடுத்த  22-080

மண் ஆள் செவத்து மன்னவர் ஏறே!
தருமதத்தனும் தன் மாமன் மகள்
பெரு மதர் மழைக் கண் விசாகையும் பேணித்
தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக்
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர்
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு
ஒத்தனர் என்றே ஊர் முழுது அலர் எழ
புனையா ஓவியம் புறம் போந்தென்ன
மனைஅகம் நீங்கி வாள் நுதல் விசாகை
உலக அறவியினூடு சென்று ஏறி   22-090

இலகு ஒளிக் கந்தின் எழுதிய பாவாய்!
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என
மா நகருள்ளீர்! மழை தரும் இவள் என
நா உடைப் பாவை நங்கையை எடுத்தலும்
தெய்வம் காட்டித் தௌத்திலேன் ஆயின்
மையல் ஊரோ மன மாசு ஒழியாது
மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன்
இப் பிறப்பு இவனொடும் கூடேன் என்றே
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின்  22-100

தருமதத்தனும் தந்தையும் தாயரும்
பெரு நகர் தன்னைப் பிறகிட்டு ஏகி
தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என
நா உடைப் பாவையை நலம் பல ஏத்தி
மிக்கோர் உறையும் விழுப் பெருஞ் செல்வத்துத்
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின்
தருமதத்தனும் தன் மாமன் மகள்
விரி தரு பூங் குழல் விசாகையை அல்லது
பெண்டிரைப் பேணேன் இப் பிறப்பு ஒழிக! எனக்
கொண்ட விரதம் தன்னுள் கூறி   22-110

வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி
நீள் நிதிச் செல்வன் ஆய் நீள் நில வேந்தனின்
எட்டிப் பூப் பெற்று இரு முப்பதிற்று யாண்டு
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு
என் செய்தனையோ இரு நிதிச் செல்வ?
பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் என்பது
கேட்டும் அறிதியோ? கேட்டனைஆயின்
நீட்டித்திராது நின் நகர் அடைக! எனத்  22-120

தக்கண மதுரை தான் வறிது ஆக
இப் பதிப் புகுந்தனன் இரு நில வேந்தே!
மற்று அவன் இவ் ஊர் வந்தமை கேட்டு
பொன் தொடி விசாகையும் மனைப் புறம்போந்து
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்
அல்லவை கடிந்த அவன்பால் சென்று
நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள்
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன
ஆறு ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என்
நாறு ஐங் கூந்தலும் நரை விராவுற்றன  22-130

இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ?
உளன் இல்லாள! எனக்கு ஈங்கு உரையாய்
இப் பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன்
அப் பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன்
இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது
வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத் துணை ஆவது
தானம் செய் என தருமதத்தனும்
மாமன் மகள்பால் வான் பொருள் காட்டி  22-140

ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம்
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால்
குமரி மூத்த அக் கொடுங் குழை நல்லாள்
அமரன் அருளால் அகல் நகர் இடூஉம்
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண்
கொடி மிடை வீதியில் வருவோள் குழல்மேல்
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச்
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறந் தாழ்ந்த
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி  22-150

தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செங் கை
நீலக் குஞ்சி நீங்காது ஆகலின்
ஏறிய செங் கை இழிந்திலது இந்தக்
காரிகை பொருட்டு எனக் ககந்தன் கேட்டுக்
கடுஞ் சினம் திருகி மகன் துயர் நோக்கான்
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்
ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ! என்று   22-160

மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்
வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன்
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து
நன்று அறி மாதவிர்! நலம் பல காட்டினிர்
இன்றும் உளதோ இவ் வினை? உரைம் என
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப
தீது இன்று ஆக செங்கோல் வேந்து! என
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில்
கடியப் பட்டன ஐந்து உள அவற்றில்  22-170

கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளாது ஆகும் காமம் தம்பால்
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள்
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே!
தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்
சே அரி நெடுங் கண் சித்திராபதி மகள்
காதலன் உற்ற கடுந் துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்
மற்று அவள் பெற்ற மணிமேகலை தான்  22-180

முற்றா முலையினள் முதிராக் கிளவியள்
செய்குவன் தவம் என சிற்றிலும் பேர் இலும்
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள்
ஆங்கு அவள் அவ் இயல்பினளே ஆயினும்
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும்
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின்
காயசண்டிகை தன் கணவன் ஆகிய  22-190

 வாய் வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என
ஆங்கு அவன் தீவினை உருத்தது ஆகலின்
மதி மருள் வெண்குடை மன்ன! நின் மகன்
உதயகுமரன் ஒழியானாக
ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து
காயசண்டிகை தன் கணவன் ஆகிய
வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்
விஞ்சை மகள்பால் இவன் வந்தனன் என  22-200

வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்
சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி
யான் செயற்பாலது இளங்கோன் தன்னைத்
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்சையன்
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றுஎனின் இன்றால் சூ
மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர்  22-210

துயர் வினையாளன் தோன்றினான் என்பது
வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம்
ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி
கணிகை மகளையும் காவல் செய்க என்றனன்
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என்  22-215

உரை

சக்கரவாளத்து முனிவர் செயல்

1-10: கடவுள்............ஒளித்து

(இதன் பொருள்) கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப-கடவுள் தன்மையுடைய ஞாயிற்று மண்டிலம் குணகடலில் தோன்றி உலகத்தைக் கவ்வியிருக்கின்ற கரிய இருளை அகற்றுகின்ற நாட்காலத்தே யெழுந்து; நெடுநிலைக் கந்தின் நின்ற பாவையொடு? முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்-நெடிய நிலைத்தூணின்கண் உறைகின்ற துவதிகன் என்னும் தெய்வத்தோடு சம்பாபதியின் திருக்கோயிலையும் வழிபாடு செய்கின்றவர்; உதயகுமரற்கு உற்றதை உரைப்ப-உதயகுமரன் கொலையுண்டு கிடந்தமையைக் கண்டு வந்து தமக்குக் கூறுதலாலே; சக்கர வாளத்து மாதவர் எல்லாம்-சக்கரவாளக் கோடத்தில் உலகவறவியின்கண் உறைகின்ற துறவோர் எல்லாம்; சாதுயர் கேட்டு அரசிளங்குமரன் இறந்தமையால் உண்டான பெருந்துயரம் தரும் செய்தியைக் கேட்டு; மணிமேகலையை அணுகி இளைய பூங்கொடி போல்வாய் இந்நிகழ்ச்சியை நீ அறிந்ததும் உண்டோ என்று வினவ; ஆங்கு அவள் தன்னை ஆர் ,உயிர் நீங்கிய வேந்தன் சிறுவனோடு வேறு இடத்து ஒளித்து-அம் மணிமேகலையையும் அரிய உயிர் நீங்கிய உதயகுமரன் உடம்பையும் வெவ்வேறிடத்து மறைத்து வைத்த பின்னர்; என்க

(விளக்கம்) கடவுள் மண்டிலம் என்றது கடவுள் தன்மையுடைய ஞாயிற்று மண்டிலத்தை என்னை? அம் மண்டிலம் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய இறைமைத் தொழில் மூன்றையும் செய்தலான் என்க. கந்தின் நின்ற பாவை-கந்திற் பாவை மேனின்ற தெய்வம். முதியோள்: சம்பாபதி. சாதுயர்-சாவினால் துயர்தரும் செய்தி. மணிமேகலைதனை அணுகி என்க. இது-இந் நிகழ்ச்சி மெய்யுணர்வு பெற்று மேனிகழ்வனவற்றை அறிந்தவள் ஆதலின் ஆஞ்சாமல் பட்டாங்குக் கூறினள் என்பார் துளங்காது உற்றதை உரைத்தலும் என்றார். வேறிடத்து என்றது வெவ்வேறிடத்து என்பதுபட நின்றது. அவளுக்குப் பிறரால் துன்பம் நிகழாமைப் பொருட்டும் அச் செய்தி பரவாமைப் பொருட்டும் சிறுவன் உடம்பையும் அவளையும் ஒளித்து வைத்தனர் என்பது குறிப்பு.

துறவோர் மன்னன்பால் செல்லுதல்

11-18: மாபெரும்.......வேந்தே!

(இதன் பொருள்) மாபெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து கோயில் மன்னனை குறுகினர் சென்று- மிகப் பெரிய அரண்மனையைக் காக்கும் வாயில் காவலருக்குத் தம் வரவினைக் கூறி அவர் வாயிலாய் மன்னவனுடைய உடம்பாடு பெற்று அரண்மனையினுள்ளே புகுந்து அரசனை அணுகிச் சென்று வாழ்த்துபவர்; வேந்தே ஈங்கு உயர்ந்து ஓங்கு உச்சி உவாமதி போல நவந்து ஓங்கு வெள் குடை மண்ணகம் நிழல் செய-அரசே நின் திருஓலக்கத்தின் மிக உயர்ந்து உச்சியில் அமைந்த முழுத் திங்கள் போன்று விளங்குகின்ற நினது வெண்கொற்றக்குடை இந் நிலவுலகம் முழுவதும் தண்ணிழல் செய்வதாக; வேலும் கோலும் அருள் கண் விழிக்க- நின்னுடைய வெற்றி வேலும் செங்கோலும் உயிர்களின் பால் அருளோடு நோக்குவனவாக; நீ ஏந்திய திகிரி தீது இன்றி உருள்க-நீ ஏந்தியிருக்கின்ற ஆணைச்சக்கரம் தடையின்றி உருள்வதாக; நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் மனக்கு இனிதாக வாழிய-பெருமானே நினக்கென்று பால்வரை தெய்வம் வரையறைப்படுத்திய நின் அகவையாகிய ஆண்டுகள் எல்லாம் நீ நின் மனத்திற்கு இனிதாக நன்கு வாழ்ந்திருப்பாயாக என்று வாழ்த்தி; என்க.

(விளக்கம்) (9) மாதவர் ஒளித்து இசைத்து சென்று வாழ்த்துபவர் வேந்தே குடை நிழல் செய, வேலும் கோலும் விழிக்க, திகிரி உருள்க நீ வாழிய என்று இயைத்திடுக. நினக்கென்ப பால்வரை தெய்வம் வரைந்த ஆண்டுகள் என்க. மனக்கு-மனத்திற்கு.

துறவோர் அச் செய்தி கேட்டு அரசன் அதிர்ச்சி எய்தாமலும் சினவாமலும் அமைதி செய்தற்பொருட்டு நயம்பட உரைசெயத் தொடங்குதல்

19-24: இன்றே............பலரால்

(இதன் பொருள்) இன்றே அல்ல-இன்று மட்டுமல்ல; பார் ஆள் வேந்தே நிலவுலகத்தைச் செங்கோன் முறை பிறழாது ஆளுகின்ற அரசனே! இப் பதி மருங்கில்-இப் பூம்புகார் நகரத்திலேயே; கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து-முதிர்ந்த காமமாகிய கள்ளையுண்டு களித்து ஆடி; பத்தினிப் பெண்டிர் பால் சென்று அணுகியும் நல் தவப் பெண்டிர் பின் உளம் போக்கியும்-கற்புடைய மகளிரிடத்தே காம நோக்கத்துடனே சென்றும் நல்ல தவ ஒழுக்கத்தை மேற்கொண்டுள்ள மகளிரின் பின் தம் நெஞ்சத்தைச் செலுத்தியும்; தீவினை உருப்ப உயிர் ஈறு செய்தோர் பண்டும் பலர்-தமது ஊழ்வினை உருத்து வந்து தம் பயனை ஊட்டுதலாலே தம்முயிர்க்குத் தாமே இறுதியைத் தேடிக் கொண்டோர் பண்டைக் காலத்திலும் பலர் ஆவர்; என்க.

(விளக்கம்) கன்றிய காமம்-முதிர்ந்த காமம். போலித் தவமும் உண்மையால் அதனினீக்குதற்கு நற்றவம் என்றார். இன்றே யல்ல என்றது இன்றும் அத்தகையார் உளர் எனக் குறிப்பால் உணர்தற் பொருட்டு. ஆல்: அசை.

இதுவுமது

25-32: மன்மருங்கு.............கூஉய்

(இதன் பொருள்) மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் தம்முன் தோன்றல் தகாது ஒழி நீ என-வேந்தருடைய குலத்தை ஒழித்த பரசு என்னும் படைக்கலத்தையுடைய திருமாலாகிய பரசுராமன் முன்னிலையிலே காணப்படுதல் கூடாது ஆதலின் அவன் முன் தோன்றாது ஒழி நீ என்று; கன்னி ஏவலின் காந்த மன்னவன்-காவல் தெய்வமாகிய சம்பாபதி கட்டளை யிட்டமையால் காந்தன் என்னும் பெயரையுடைய வேந்தன்; இந் நகர் காப்போர் யார் என நினைஇ-அவ்வாறு யான் இந் நகரத்தை விட்டு நீக்கினேனானால் இந்த நகரத்தைப் பாதுகாப்பவர் யார் என்று தனக்குள் சூழ்ந்து; நாவலம் தண் பொழில் நண்ணார் நடுக்குற-இந் நாவலந் தீவில் பகைவர் அஞ்சி நடுங்குதற்குக் காரணமான வீரத்தோடு; காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்-கற்புக் காவலையுடைய கணிகை ஒருத்தியின்பால் தனக்குப் பிறந்த மகனும் பகைவர் சினந்து போர் செய்யினும் மறங்குறையாதவனும் ஆகிய; காந்தன் ஆம் என காதலின் கூஉய்-ககந்தன் செங்கோலோச்சுதற்குத் தகுந்தவனாவான் என்று துணிந்து மகனன்பினோடு அவனை அழைத்து; என்க.

(விளக்கம்) மன்மருங்கு-அரசர் குலம் மழுவாள்-பரசு என்னும் படை; நெடியோன்-திருமால்; என்வே பரசுராமன் என்றாயிற்று கன்னி என்றது கொற்றவையை; காந்த மன்னவன்-சோழர் குலத்து ஒரு மன்னன் நினைஇ-நினைத்து; நண்ணார்-பகைவர்; காவற் கணிகை ஒன்வன்றனக்கே உரிமை பூண்டு ஒழுகும் காமக்கிழத்தி, களத்தாடும் கூத்தி என்பாரும் இராக்கிடை வேசை என்பாரும் உளர். ஈண்டு அவ்வுரை போலி. எஞ்சுதல்-மறங்குறைதல்; அஃதாவது புறங்கொடுத்தல். ககந்தன் காந்தனக்கும் காமக் கிழத்திக்கும் பிறந்த மகன் ஆதலின் மகவன்போடு அழைத்தான் என்பது கருத்து.

ககந்தன் மகன் மருதியைக் காமுறுதல்

33-44: அரசாள்................கலங்கி

(இதன் பொருள்) அரசாள் உரிமை நின்பால் இன்மையின் பரசுராமன் நின்பால் வந்து அணுகான்-மைந்தனே! நாட்டை ஆளுகின்ற உரிமை நினக்கில்லாமையாலே பரசுராமன் உன்னோடு போர் செய்தற்கு வருவானல்லன்; யான் அமரமுனிவன் தனாது துயர்நீங்கு கிளவியின் தோன்று அளவும் ககந்தன் காத்தல்-யான் சென்று கடவுள் தன்மையுடைய அகத்தியருடைய வரமாகிய என் துன்பம் நீங்குதற்குக் காரணமான அருளுரை பெற்று மீண்டு வருமளவும் ககந்தன் இந் நாட்டினைப் பாதுகாப்பாயாக என்று சொல்லி; காகந்தி என்று இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு-இந் நகரத்திற்கும் காகந்தி நகரம் என்று ஒரு பெயருஞ் சூட்டி; ஈங்கு உள்வரிக் கொண்டு அவ்வுரவோன் பெயர் நாள்-இந் நகரத்தினின்றும் மாறுவேடம் புனைந்து கொண்டு அறிவு சான்ற அக் காந்த மன்னன் இந் நகரத்தை விட்டுச் சென்ற பின்னர் ஒரு நாள்; காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்-காவிரிக் கரையின்கண் அக் ககந்த மன்னனுடைய இளைய மகன்; தெள்ளுநீர் காவிரி ஆடினன் வரூஉம் பார்ப்பனி மருதியை-தெளிந்த நீரையுடைய காவிரியாற்றின்கண் நீராடி வருகின்ற பார்ப்பனியாகிய மருதி என்பவளைக் கண்ணுற்று பாங்கோர் இன்மையின் யாப்பறை என்று எண்ணினன் ஆகி நீ வா என்ன-அவள் பக்கத்திலே யாரும் இல்லாமையால் அவள் அழகில் மயங்கி இவள் கற்பு என்னும் திட்பம் இல்லாதவள் என்று கருதியவனாய் நங்காய்! இங்கு வருவாயாக என்று தன் காமம் தோன்றும் இன்மொழியாலே அழையா நிற்ப; நேரிழை கலங்கி-அழகிய அணிகலன் அணிந்த அப் பார்ப்பனி அது கேட்டு நெஞ்சு கலங்கி; என்க.

(விளக்கம்) காமக்கிழத்தி வயிற்றிற் பிறந்த மகனாதலின் அரசாள் உரிமை இலன் என்றவாறு ஆகவே நீ அரசன் குலத்தை வேராறுப்பேன் என்பதே அவன் கொண்ட சூள் ஆதலின் நின்னை அணுகான் என்பது குறிப்பு. கடவுள் முனி என்றது கடல் குடித்தமையாலும் இமையத் திறைவனோடு துலையொக்க வீற்றிருத்தலாலும் இன்னோரன்ன அவன் சிறப்பினைக் குறித்தபடியாம். ஆடினள்: முற்றெச்சம். பாங்கோர்-பக்கத்திலிருப்பவர். பாங்கோர் இன்மையின் என்றது அவளை யாப்பறை என்று நினைத்தற்கும் வானென்றழைத்தற்கும் ஏதுவாக நின்றது. நீவா என்று தன் காமம் தோன்ற அழைக்க என்க. நேரிழை: மருதி.

மருதியின் மாண்புறு செயல்

54-56: மண்திணி.............அரற்றலும்

(இதன் பொருள்) மண்திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகா அர் மண்ணாகிய அணுச் செறிந்த இந் நிலவுலகத்தில் பெய்யென்று சொல்லி மழை பெய்விக்கும் தெய்வத்தன்மையுடைய கற்பென்னும் திட்பமுடைய மகளிராயின் கணவர் நெஞ்சில் புகுவதன்றி மற்றையோர் நெஞ்சில் காமப் பொருளாகப் புலப்படார்; பிறன் உளம் புக்கேன்-அளியேன் பிறன் நெஞ்சத்தில் காமப் பொருளாகப் புகுந்தேன்! ஆயின் என் கற்பென்னாயிற்று?; புரிநூல் மார்பன் முத்தீ பேணும் முறை எனக்கு இல் என மா துயர் எவ்வமொடு மனை அகம் புகாஅள்-இனி முப்புரி நூல் அணிந்த மார்பினையுடைய பார்ப்பனன் வளர்க்கின்ற வேள்வித் தீயைக் காவல் செய்யும் தகுதி எனக்கு இல்லையாயிற்று என்று மிகவும் பெரிய துன்பத்தோடு தன் இல்லத்தின்கண் புகாமல்; பூத சதுக்கம் புக்கனள் மயங்கி-பூதம் நிற்கும் சதுக்கத்தையடைந்து காரணம் தெரியாமல் மயங்கி அச் சதுக்கத்தில் எழுந்தருளி இருக்கின்ற தெய்வமாகிய பூதத்தை நோக்கிக் கூறுபவள்; கொண்டோன் பிழைத்த குற்றம் தான் இலேன் கண்டோன் நெஞ்சில் காப்பு எளிது ஆயினேன்-தெய்வமே! யான் என் கணவன் திறத்திலே செய்த குற்றம் ஒன்றேனும் இலேன் அங்ஙனமிருப்பவும் என்னைக் கண்ட ஏதிலேன் ஒருவன் நெஞ்சினும் புகுந்து கரந்திருத்தற்குரிய எளியள் ஆயினேன்; வான் தரும் கற்பின் மனை அறம் பட்டேன்யானோ தருதற்கியன்ற கற்பொழுக்கத்தோடு இல்லறத்தின் கண் ஒருவனுக்கு வாழ்க்கைத் துணையாய்ப் புகுந்தேன்; யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்-யான் அங்ஙனம் பிறன் உளம் புகுதற்குரியதாகச் செய்த குற்றம் ஒன்றினையும் யான் அறிகின்றிலேன்; பூத சதுக்கத்து தெய்வம் நீ பொய்யினை கொல்லோ எனச் சேயிழை தன்மையுடையாய் இப்பூத சதுக்கத்துக் கண்கண்ட தெய்வமாக எழுந்தருளியிருந்த நீ இப்பொழுது இல்லை ஆயினையோ என்று சொல்லி அப் பார்ப்பினி அழா நிற்ப என்க.

(விளக்கம்) மண் என்றது மண்ணின் துகளை. மழை வளம் தருதல் பெய்யென்று ஏவுமளவிலே மழை பெய்விக்கும் தெய்வத்தன்மை மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம் பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகாஅர் என்னும் இவ்வடிகள் வேறெங்கும் காணப்படாத அரியாதொரு கற்பிலக்கணமாகத் திகழ்தல் உணர்க. இத்தகைய இலக்கணம் பிற மொழிக்கண்ணும் காண்டல் அரிது போலும், பிறனுளம் புக்கமையால் யான் கற்புடையேன் அல்லேன் போலும் கற்பிலேன் ஆதற்குரிய குற்றம் யான் என் நெஞ்சறியச் செய்திலேனே என்று இப் பார்ப்பினி அரற்றுதல் அவள் சிறப்பினை நன்கு விளக்குகின்றது.

சதுக்கப் பூதம் அல்லவை செய்வோரை அறைந்துண்ணும் இயல்புடையது. அது வாய்மையாயின் கற்பில் பிழைத்த என்னை அஃது அறைந்து உண்டிருத்தல் வேண்டும்; அல்லது யான் கற்புடையேன் ஆயின் என்னை நீ வா என்று அழைத்த அரசன் மகனை அறைந்து கொன்றிருத்தல் வேண்டும். இரண்டும் நிகழாமையின் அத் தெய்வம் இப்பொழுது ஈண்டில்லை போலும் என்னும் கருத்தினால் பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத் தெய்வம் நீ என்றாள்; பொய்யிளை இல்லையாயினை.

மருதி முன்னிலையில் சதுக்கப் பூதம் தோன்றி அவள் வினாவிற்கு விடையிறுத்தல்

57-97: மாபெரும்........இல்லை

(இதன் பொருள்) மாபெரும் பூதம் தோன்றி நீ கேள் என்று நேரிழைக்கு உரைக்கும்-அவ்வாறு மருதியின் முன்னர் மிகப் பெரிய உருவத்தோடு சதுக்கப் பூதம் தோன்றி மடப்பமுடைய நங்காய்! நீ யான் கூறுவதனைக் கேட்பாயாக என்று அம் மருதிக்குக் கூறும்:-தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் எனப் பெருமழை பெய்யும் என்ற-தனக்கென்ப பிறிதொரு தெய்வம் கொண்டு தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு நாள் தோறும் துயிலெழும் பொழுதே அவன் திருவடிகளைத் தொட்டுக் கை கூப்பித் தொழுது எழுகின்ற கற்புடையவள் பெய் என்று பிணிக்கு மளவிலே பெரிய முகில் மழை பெய்யும் என்று திருவாய் மலர்ந்தருளிய; அப் பொய்யில் புலவன் பொருள் உரைதேறாய்-அந்தத் தெய்வப் புலமைத் திருவள்ளுவருடைய பொருள் பொதிந்த அறிவுரையைப் பயின்றிருந்தும் அதன் பொருளைத் தெளியாயாய் நீ; பிறர்வாய் பிசியும் நொடியும் கேட்டு விசி பிணிமுழவின் விழாக்கோள் விரும்பி கடவுள் பேணல் கடவியை ஆகலின்-ஏதிலார் கூறுகின்ற பிசியையும் நொடியையும் கேட்டு வாய்மை என்று கருதி அவரோடு கூடி வலித்துக் கட்டிய வார்க்கட்டினையுடைய முழவு முழங்குகின்ற திருவிழாக் கொள்ளும் காட்சியைப் பெரிதும் விரும்பிப் பிற தெய்வங்களையும் வழிபடுகின்ற செயலை ஒரு கடப்பாடாகக் கைக்கொண்டுள்ளனையாதலின்; மடவரல் ஏவ மழையும் பெய்யாது-மடப்பம் வருதலையுடைய நீ இப்பொழுது ஏவினால் மழையும் நின் ஏவல் கேட்டுப் பெய்யாது; நிறை உடைப் பெண்டிர் தம்மே போல பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை-மேற்கூறிய கற்பு நிறைவினையுடைய மகளிர் போல நின்னை நினைக்கும் பிறருடைய நெஞ்சத்தைச் சுடுகின்ற அத் தெய்வத் தன்மையும் நின்பால் இல்லை காண்; என்க.

(விளக்கம்) சதுக்கப் பூதம்-இதன் வரலாற்றைச் சிலப்பதிகாரம் 5: 128 ஆம் அடி முதலியவற்றால் உணர்க. இது தவம் மறைந்து ஒழுகும் தன்மையிலாளர் முதலிய அறுவகையினரைத் தன் பாசத்தால் கட்டிப் புடைத்துண்ணும் ஆதலால் அப் பூதம் கற்பிறந்தவளாகிய தன்னையும் தன்பால் தவறு செய்த ககந்தன் மகனையும் புடைத்துண்ணாமையின் நீ பொய்த்தனையோ என்று பழித்தமையின், அது பொறாத அத் தெய்வம் உரைத்தது என்று மாதவர் மன்னனுக்குக் கூறுகின்றனர் என்றுணர்க. இதன்கண் பொய்யில் புலவன் என்றது திருவள்ளுவரை; இப் புலவர்,

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை   (குறள், 55)

எனவரும் திருக்குறளைப் பொன்னே போல் போற்றியெடுத்து இக் காப்பியத்துள் முழுமையாக அமைந்திருத்தலும், வள்ளுவரைப் பொய்யில் புலவன் எனவும் அவர் உரையைப் பொருளுரை எனவும் பாராட்டியிருத்தலும் பண்டைக் காலத்தே திருக்குறள் பெற்றிருந்த நன்மதிப்பை நன்கு வெளிப்படுத்திக் காட்டும். பிசி-பிதிர் இக் காலத்தே புதிர் என்பதுமது. நொடி-விடுகதை. விழாக் கோள்-திருவிழாக் காணல். கடவியை-கடப்பாடாக உடையை மடவரல்: முன்னிலைப் புறமொழி. நிறை-கற்பு. கற்புடையாரைக் காமுகக்கயவர் நினைக்கும் பொழுதே அவர் நெஞ்சே அவரைச் சுடும். நீ கணவனை யன்றியும் வேறு தெய்வங்களையும் தொழுதல் உண்டாதலின் உனது கற்புடைமை அந்தக் தெய்வத் தன்மையை இழந்து விட்டது. இக் காரணத்தால் கற்புக் குறைபடினும் நீ அலவலைப் பெண்டிர் அல்லை ஆகலின் நின்னை என் பாசம் கட்டா தொழிந்தது என்று அத் தெய்வம் மருதிக்கு அமைதி கூறியபடியாம். மேலே ககந்தன் மகனைக் கட்டாமைக்கு அமைதி கூறுகின்றது.

இதுவுமது

68-77: ஆங்கவை.........செய்தது

(இதன் பொருள்) ஆங்கு அவை ஒழிகுவை ஆயின்-இவ்விரு வகை ஒழுக்கங்களையும் கை விடுவாயாயின்; ஆயிழை ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது-பார்ப்பனியே உயர்ந்த பெரிய வானத்தின் கண்ணதாகிய மழையும் நின் ஏவலன்படி ஒழுகுவதாம்; பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போல என் கடுந்தொழிற் பாசம் உன்னைக் கட்டாது-தாம் விரும்பியபடி தீய வழிகளிலே ஒழுகுகின்ற அவலைப் பெண்டிரைக் கட்டுவது போலக் கடிய தொழிலையுடைய என்னுடைய கயிறு உன்னைக் கட்டாது; மன்முறை எழுநாள் வைத்து அவன் வரூஉம் பின் முறை அல்லது என்முறை இல்லை-அரசன் தீவினையாளரை ஏழு நாள்களுள் ஒறுத்தல் வேண்டும் ஆதலின் அரசனுக்குரிய ஏழு நாளையும் இடையில் வைத்துப் பார்த்து அரசன் தன் முறையில் வழுவின் பின் யான் முறை செய்வதல்லது யான் ஏழு நாள் கத்துள் அவனை ஒறுப்பது என் முறையில்லை; ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியைக் கேட்டு வாளால் ககந்தன் கடிதலும் உண்டு என-இற்றை நாளிலிருந்து ஏழுநாள் அகவையின் இளைய பூங்கொடி போல்வாய் நின்னிடத்தே நின்றும் மீட்க மாட்டாத நெஞ்சத்தின்கண் மயக்கத்தையுடைய தன் மகன் செய்த பிழையை வினவித் தெரிந்து தான் தன் வாளாலேயே அவனைக் ககந்த மன்னன் எறிந்து தொலைத்தலும் உண்டாகும் என்று சொல்லி; இகந்த பூதம் எடுத்து உரை செய்தது. தீவினையைக் கடந்த அப் பூதம் இங்ஙனம் காரணம் எடுத்துக் கூறி மருதிக்கும் அறிவுறுத்தியது; என்க.

(விளக்கம்) ஆங்கு அவை என்றது பிசியும் நொடியும் கேட்டலும் பிற கடவுளைப் பேணலும் ஆகிய அவற்றை என்றவாறு. அவற்றைக் கை விட்டால் நிதானும் தெய்வங்களாலும் தொழத் தகுந்த கற்புடைத் தெய்வமாகத் திகழ்வாய். தம் மனம் விரும்பியபடி நடக்கும் பெண்டிரைக் கட்டுமாறு போல என் கயிறு உன்னைக் கட்டாது என்றவாறு. கட்டிக் கொள்ளுதலால் கடுந்தொழில் பாசம் எனப்பட்டது . மன்முறை-அரசன் செய்யும் முறைமை. எழு நாள் வைத்துப் பார்த்து அவன் வழுவுமாயின் அதன் பின் எனக்கு முறையாவதல்லது அதற்குள் எனக்கு முறை செய்யும் கடமை இல்லை என்பது கருத்து. ககந்த மன்னன் ஏழு நாள்களினூடேயே தன் மகன் செய்த பிழையின் பொருட்டுத் தன் வாளால் வெட்டிக் கொல்லுவான் என்று மருதியின் பொருட்டு அத் தெய்வம் அமைதி கூறுதல் உணர்க.

மாதவர் பின்னும் ஒரு பத்தினிப் பெண்ணின் வரலாறு கூறுதல்

77-87: அப்பூதம்..............அலரெழ

(இதன் பொருள்) அப் பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் தாதை வாளால் தடியவும் பட்டனன்-அந்தச் சதுக்கப் பூதம் சொன்னவாறே ஏழு நாள் அகவையுள் அவ்வாறே அவ்வரசிளங் குமரன் தன் தந்தையாகிய ககந்தனது வாளால் வெட்டுண்டொழிந்தான்; இருங்கடல் உடுத்த மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே இன்னும் கேளாய்-பெரிய கடலை ஆடையாக உடுத்துள்ள இந் நிலவுலகத்தை ஆளுகின்ற செல்வத்தையுடைய அரசர்களுக்கெல்லாம் ஏறுபோல்வாய் இன்னுமொன்று கேட்பாயாக; தருமதத்தனும் தன் மாமன் மகள் பெருமதர் மழைக் கண் விசாகையம்-தருமதத்தன் என்பவனும் அவன் மாமன் மகளாகிய பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையுடைய விசாகை என்பவளும்; திப்பிய ஓவிய கைவினை கடந்த கண்கவர் வனப்பினர்-தெய்வத் தன்மையுடைய ஓவியப் புலவர்களின் வனப்பினர்-தெய்வத் தன்மையுடைய ஓவியப் புலவர்களின் கைத் தொழிகளையும் கடந்த கண்டோர் கண்ணைக் கவருகின்ற அழகுடையராய் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகுதலால் அவ்வூரின்கண்; தெய்வம் காட்டும் யாழோர் மணவினைக்கு ஒத்தனர் என்றே-பால்வரை தெய்வத்தால் காட்டப்படுகின்ற கந்தருவமணமாகிய களவொழுக்கத்தின்கண் மனமொத்தவராய் ஒழுகுகின்றனர் என்று; மைத்துனன் முறைமையால்-தருமதத்தன் விசாகைக்கு மைத்துனன் முறைமையுடையன் ஆதலால்; ஊர்முழுது அலர்ஏழ-கொடிதறி பெண்டிர் தூற்றுதலாலே நகர் முழுவம் பழிச்சொல் எழாநிற்ப; என்க.

(விளக்கம்) நாளால்-நாளின்கண். தடியவும்-என்புழி உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை; மதர்க்கண், மழைக்கண் எனத் தனித்தனி கூட்டுக. தருமதத்தனும் விசாகையும் வனப்பினர் எனக் கூட்டுக. தெய்வம் காட்டும் யாழோர் மணவினை எனக் கூட்டுக; அஃதாவது களவுப் புணர்ச்சி. அப் பழிச் சொல்லைக் கேட்போர் நம்புவதற்கு மைத்துனன் முறைமை என்றது ஏதுவாயிற்று. ஊர்: ஆகு பெயர், அலர் பழிச் சொல்.

விசாகையின் செயல்

88-100: புனையா..........அடைந்தபின்

(இதன் பொருள்) வாள் நுதல் விசாகை புனையா ஓவியம் புறம் போந்தென்ன மனையகம் நீங்கி உலக அறவியின் ஊடு சென்று ஏறி-ஒளி படைத்த நெற்றியையுடைய அவ் விசாகை என்பவள் அப் பழிச் சொல் யொறாளாய் வண்ணம் தீட்டப் பெறாத பெண் ஓவியம் ஒன்று இடம் பெயர்ந்து சென்றாற்போல் இல்லத்தை விட்டுப் புறப்பட்டுப் போய் ஊரம்பலத்தினுள் புகுந்து சென்று; இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய் நீ உலகர் பெரும்பழி ஒழிப் பாய் என-விளங்குகின்ற ஒளியையுடைய தூணின்கண் பண்ணப் பட்ட தெய்வப் பாவையே நீ இவ்வுலகத்தவர் நம்புதற்குக் காரணமான பெரிய இப் பழியைத் தீர்த்தருளுவாய் என்று வேண்டா நிற்ப; நாவுடைப்பாவை மாநகர் உள்ளீர் இவள் மழைதரும் என நங்கையை எடுத்தலும்-அவ் வேண்டுகோட் கிணங்கிய செந்நாவுடைய அக் கந்திற்பாவைதானும் அந் நகரத்திலுள்ளோர் அனைவர்க்கும் செவியிற்படும்படி பெருங்குர லெடுத்துப் பெரிய நகரத்தில் வாழும் மக்களே கேண்மின், இவ் விசாகை பெய்யெனப் பெய்யும் பெரு மழை; பழித்தற்குரியள் அல்லள் என்று மகளிருள் சிறந்த மாபெரும் பத்தினியாகிய விசாகையின் புகழை உயர்த்திக் கூறுதலும்; தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின் மையல் ஊர் மனமாசு ஒழியாது-அது கேட்ட பின்னும் அவ் விசாகை யான் இவ்வாறு தெய்வத்தின் வாயிலாக யான் பழியற்றிவள் இவ்வூரிலுள்ள மாந்தர்களின் மனத்திற் படர்ந்த என் பழிச் சொல் தீராதன்றோ இன்னும் என் நிறையின் சிறப்பினை இவ்வூர் மாக்கள் நன்கு உணர்தற் பொருட்டு; இப் பிறப்பு இவனொடும் கூடேன் மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன் என்று-இந்தப் பிறப்பின்கண் தருமதத்தனோடு யான் சேர்கிலேன், மைத்துனனாகிய அவனுக்கு மலையாளாக என்னுடைய மறுபிறப்பின்கண் ஆகுவேன் என்று நற்றாய் தனக்கு நல்திறம் சாற்றி-தன்னை ஈன்ற தாய்க்குத் தனது நல்ல உறுதி மொழியை எடுத்துக் கூறி;மற்று அவள் கன்னி மாடத்து அடைந்தபின்-அவ் விசாகையானவள் கன்னி மாடத்திற்குச் சென்ற பின்னர்; என்க

(விளக்கம்) புனையா ஓவியம்-வண்ணம் தீட்டப் பெறாது வடிவம் மட்டும் எழுதி விடப்பட்ட ஓவியம் செய்யாக் கோலத்தோடிருத்தலில் இங்ஙனம் கூறினர். ஊடு சென்றேறி-உள்ளே புகுந்து சென்று ஒளிப்பாவாய், கந்தின் எழுதிய பாவாய் எனத் தனித்தனி கூட்டுக. இவள் மழைதரும் என்றது இவள் பெய்யென மழை பெய்யும் அத் துணைக் கற்பென்னும் திட்பம் உடையவள் என்று பாராட்டிய படியாம். நாஉடைப்பாவாய் என்றது கந்திற் பாவையை. எடுத்தல்-உயர்த்திக் கூறுதல். ஊர்: ஆகு பெயர். மாசு-பழிச்சொல். இவன்: தருமதத்தன் நற்றாய்-ஈன்ற தாய்; திறம்-உறுதிச் சொல். அவள் : விசாகை; கன்னிமாடம்-கன்னியாகவே யிருந்து காலம் போக்குதற்குரிய மாடம்.

தருமதத்தன் செயல்

101-110: தரும..........கூறி

(இதன் பொருள்) தருமதத்தனும் தந்தையும் தாயரும் தாழ்தரு துன்பம் தலைஎடுத்தாய் என நாவுடைப் பாவையை நலம்பல ஏத்தி-அப் பழிக்கு அஞ்சிய பெரிதும் வருந்தி இருந்த தருமதத்தனும் அவன் தந்தையும் தாயரும் ஆகிய அக் குடும்பத்தினர் கீழ்மையைத் தருகின்ற துன்பக் கடலினின்றும் எம்மைக் கரை யேற்றினாய் என்று நன்றி கூறச் செந்நாவுடைய கந்திற்பாவையை வணங்கி அதன் புகழ் பலவற்றையும் கூறி வணங்கிய பின்னர்; பெருநகர் தன்னை பிறகு இட்டு ஏகிமிக்கோர் உறையும் விழுப்பெரும் செல்வத்து தக்கண மதுரை தான் சென்று அடைந்தபின்-தாம் வாழுகின்ற பெரிய நகரமாகிய காவிரிப்பூம் பட்டினத்தைத் துறந்து சென்று சான்றோர் உறைகின்ற மாபெரும் செல்வத்தை உடைய தென் மதுரைக்குப் போய்ச் சேர்ந்தபின்; தருமதத்தனும் தன் மாமன் மகள் விரிதரு பூங்குழல் விசாகையை அல்லது பெண்டிரைப் பேணேன்-தருமதத்தன் தானும் தன்னுடைய மாமன் மகளாகிய இதழ்விரிகின்ற மலரையுடைய கூந்தலையுடைய விசாகையை மாறிப் பிறந்து வாழ்க்கைத் துணையாகக் கொள்வதல்லது பிற மகளிரை விரும்புகிலேன் ஆதலின்; இப் பிறப்பு ஒழிக என கொண்ட விரதம் தன்னுள் கூறி-இப் பிறப்பு இங்ஙனமே ஒழிவதாக என்று தன் கருத்துள் கொண்ட உறுதி மொழியைத் தன் நெஞ்சத்துள் கூறித் திண்ணிதாக்கிக் கொண்டு; என்க.

(விளக்கம்) தாயர்-நற்றாயும் செவிலித் தாயரும் எனப் பலராகலின் பன்மை கூறினார். பெருநகர் என்றது காவிரிப்பூம்பட்டினத்தை. பிறகிட்டு ஏகி என்றது பின்னே கிடக்க விட்டுப், போகி என்றவாறு. தாழ்தரு துன்பம்-தாழ்வைக் கொடுக்கின்ற துன்பம். பாவையைத் தொழுது நன்றி கூறி ஏத்தி என்க. மிக்கோர் உறைவதாகிய விழுப்பெரும் செல்வம் எனினுமாம். உத்தர மதுரையும் உண்டாகலின் தக்கண மதுரை என்றார். தான்: அசை தருமதத்தனும் என்புழி உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. விசாகை மறு பிறப்பில் தனக்கு மனையாள் ஆவேன் என உறுதி கூறியதற்குடம்பட்டுத் தருமதத்தனும் அங்ஙனமே தன்னுள் உறுதி செய்துகொண்டான் என்றவாறு.

இதுவுமது

111-122: வாணிக..............புகுந்தனன்

(இதன் பொருள்) வாணிக மரபின் வருபொருள் ஈட்டி நீள்நிதி செல்வனாய்-தான் பிறந்த குலத் தொழிலாகிய வாணிகத் தொழில் முறையின்படி அத் தொழிலைச் செய்து அதன் ஊதியமாக வருகின்ற பொருள்களைத் தொகுத்து மேன்மேலும் வளர்கின்ற பொருளையுடைய கொழுங்குடிச் செல்வனாகி; நீள் நில வேந்தனின் எட்டிப்பூப் பெற்று இருமுப்பதிற்று யாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்-நெடிய நீலவுலகத்தை ஆளுகின்ற பாண்டிய மன்னனால் எட்டிப்பட்டம் வழங்கப் பெற்று அதற்குரிய பொற்பூவினையும் விருதாகப்பெற்று இவ்வாறு அறுபது ஆண்டு அகவை காறும் பொருந்திய செல்வத்தினாலே மிகவும் உயர்ந்தவனாய் விளங்கினன் அப்பொழுது; அந்தணாளன் ஒருவன் சென்று இருநிதிச் செல்வ ஈங்கு என் செய்தனை பார்ப்பனன் ஒருவன் அத் தருமதத்தன்பால் சென்று பெரிய நிதியை உடைய வணிகர் பெருமானே இத்துணைப் பெரும் செல்வத்தோடு இந் நகரத்திருந்து உன் வாழ்நாளை வீழ்நாளாகக் கெடுத்தொழிந்ததல்லது வேறு புத்தேள் உலகம் புகாஅர் என்பது கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின்-கற்புடை மனைவியை இல்லாத ஆடவர் தமியராய் இருந்து நூல்களில் கூறப்படுகின்ற பல்வேறு அறங்களையும் செய்தாலும் அமரர் வாழும் மேனிலையுலகில் புகமாட்டார் என்னும் இவ்வறிவுரையை நீ கேள்வி மாத்திரையானும் கேட்டறிந்த தில்லையோ இல்லையெனின் இப்பொழுதேனும் யான் கூறுவதனைக் கேட்டாய் அல்லையோ கேட்டாயெனின்; நீட்டித்து இராது நின்நகர் அடைக என-நீ இந்நகரத்தின்கண் நின்னகவை முதிரும்படி காலந்தாழ்த்திராமல் நின்னுடைய நகரத்திற்குச் சென்று கற்புடையாள் ஒருத்தியைக் கடிமணம் செய்து கொள்க என்று கூறா நிற்ப; தக்கண மதுரை தான் வறிது ஆக இப் பதிப் புகுந்தனன்-அது கேட்ட தருமதத்தன் நெஞ்சு கலங்கி அத் தென் மதுரை நல்கூரும்படி அதனை விட்டு இப் பூம்புகார் நகரத்தை யடைந்தான், என்க.

(விளக்கம்) வாணிக மரபாவது கொள்வது மிகையும் கொடுப்பது குறையுமாகாமல் பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பேணி வாணிகம் செய்தல். இதனை

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்        (குறள்-120)

என்பதனாலும் உணர்க. எட்டிப்பூ-எட்டிப்பட்டம் பெற்ற வணிகர்க்கு அதற்கறிகுறியாகக் கொடுக்கும் பொற்பூ. எட்டி காவிதிப்பட்டம் தாங்கி(பெருங், 2.3:144) எட்டி காவிதி என்பன தேயவழக் காகிய சிறப்புப் பெயர்(தொல். தொகை. சூ. 12) என்பது நச்சிவிளக்கம். இருமுப்பதிற்றியாண்டு-அறுபதாட்டைப் பருவம். ஈங்கு என் செய்தனையோ இருநிதிச் செல்வ என்றது இருநிதி பெற்றிருந்தும் திருமணம் கொள்ளாமலும் மகப்பேற்றை யிழந்தும் நின் வாழ்நாளைக் கெடுத் தொழிந்தனை என்று இரங்கியதனைக் குறிப்பாக உணர்த்தி நின்றது. புத்தேள் உலகம்-தேவருலகம். காலம் நீட்டித்திராது-காலம் தாழ்த்திராது. அவனால் மதுரை நகரமே சிறப்புற்றிருந்தமையின் அவன் நீங்கினமையால் மதுரை வறிதாயிற்று என்றவாறு. இப்பதி இந்த நகரம்.

இதுவுமது

122-132: இருநில...........உரையாய்

(இதன் பொருள்) இரு நில வேந்தே-பெரிய நிலவுலகத்தை ஆளும் அரசனை; மற்று அவள் இவ்வூர் வந்தமை கேட்டு பொற்றோடி விசாகை நல்லாள் மனைப்புறம் போந்து நாணாள் பல்லோர் நரப்பண்-பொன்னால் இயன்ற வளையலையுடைய அவ்விசாகை நல்லாளும் தன் இல்லத்தினின்றும் புறத்தே வந்து நாணம் இலாளாய்ப் பலர் கூடிய கூட்டத்தினுள்; அல்லவை கடிந்த அவன் பால் சென்று-அறம் அல்லாதவற்றைச் செய்யாதொழிந்த தருமதத்தன்பால் சென்று மைத்துன!; நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன-நெருங்கிய உறவினேம் ஆகிய நாம் ஒருவரை யொருவர் இப்பொழுது இன்னார் என அறிந்து கொள்கிலேம் நம்மிருவரையும் முற்காலத்தே ஒருவரைக் கண்டு ஒருவர் மயங்குமாறு செய்த ஆண்மையழகும் பெண்மையழகும் எவ்விடத்துச் சென்று மறைந்தனவோ அறிகின்றிலேம்; ஆறைந்து இரட்டியாண்டு உனக்கு ஆயது என் நாறு ஐங்கூந்தலும் நரை விராவுற்றன- அறுபதாட்டைப் பருவம் உனக்கும் வந்துற்றது என்னுடைய நறுமணங்கமழும் ஐம்பாலாகிய கூந்திலின் கண்ணும் நரைமயிர் கலந்து தோன்றுகின்றன; இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ உளன் இல்லாள் எனக்கு ஈங்கு உரையாய்-நம்முடைய இளமையும் காம வேட்கையும் இப்பொழுது எங்குச் சென்று மறைந்தனவோ நீ அறிவாயெனின் உள்ளத்தின்கண் திட்பம் இல்லாதோய் எனக்கும் இங்கு அறிவிப்பாய்; என்க.

(விளக்கம்) பொற்றொடியாகிய விசாகை நல்லாளும் என இயைத்துக் கொள்க. இனி, விசாகைதானும் நல்லாளாயிருந்தும் நாணாளாய் என இயைப்பினுமாம். நம்முள் நாம் அறிந்திலம் என்றது நம்முடைய யாக்கைகள் அத்துணை மாறுபட்டிருக்கின்றன என்ற வாறாம். மம்மர்-மயக்கம். வனப்பு ஆண்மை வனப்பும் பெண்மை வனப்பும் ஆதலின் ஒளித்தன எனப் பன்மை முடிபேற்றது. யாண்டகவை உனக்கு ஆயது என்க. யானும் அத்துணை முதிர்ந்துளேன் என்பாள் நாறைங் கூந்தலும் நரை விரவுற்றன என்றாள். இருவருடைய இளமையும் காமமும், என்க. உளன் ஆகுபெயராய் அதன் உறுதி மேல் நின்றது.

விசாகை தருமதத்தனுக்கு அறிவுரை கூறுதல்

133-142: இப்பிறப்பு..............பலவால்

(இதன் பொருள்) இப் பிறப்பாயின் யான் நின் அடி அடையேன் அப் பிறப்பு யான் நின் அடித் தொழில் கேட்குவன்-சூளுறவு செய்து கொண்ட இப் பிறப்புடையேனாகவே இனி யான் நின்னுடைய அடிச்சியாக நின்பால் எய்துகிலேன் இம்மை மாறி மறுமையாகிய அப் பிறப்பின்கண் யான் நீ ஏவிய குற்றேவலைச் செய்யும் நின் வாழ்க்கைத் துணைவி ஆகுவன் ஐய இவ்வுலகின்கண்; இளமையும் நில்லா-யாக்கையும் நில்லா வளவிய வானபெரும் செல்வமும் நில்லா மாந்தரிடத்துத் தோன்றுகின்ற இளமைப் பருவங்களும் அழியாமல் நில்லா அங்ஙனமே யாக்கைகளும் நிற்கமாட்டா வளமிக்க மிகப்பெரிய செல்வங்களும் நிற்கமாட்டா; புத்தேள் உலகம் புநதல்வருந் தாரார்-ஒருவனுக்கு அவனுடை மக்களும் மேனிலையுலகத்தைத் தருவாரல்லர் மிக்க அறமே விழுத்துணை ஆவது-யாவரேனும் அவரவர் செய்த மிகுந்த நல்வினையே அவரவர்க்குப் பொன்றுங்காலத்தே பொன்றாது துணையாவதாம் ஆதலால் இனி நீ; தானம் செய்என தருமதத்தனும் மாமன் மகள் பால் வான் பொருள்காட்டி-அறம் செய்வாயாக என்று அறிவுறுத்த அது கேட்ட தருமதத்தனும் மாமன் மகளாகிய விசாகைக்குத் தான் ஈட்டிக் கொணர்ந்த பெரும் பொருள் குவையைக் காட்டி; ஆங்கு அவன் அவளுடன் செய்த நல்லறம் ஓங்கு இருவானத்து மீனினும் பல வால்-அப்பொழுதிலிருந்து அத் தருமதத்தன் அவ் விசாகை நல்லாளுடன் இருந்து அப் பொருளால் செய்த நன்மை தருகின்ற அறங்கள் உயர்ந்த பெரிய வானத்திலே தோன்றுகின்ற மீன்களினும் காட்டில் சாலப் பலவாம்; என்க.

(விளக்கம்) இப் பிறப்பாய்-இப் பிறப்பாகவே இனி இப் பிறப்பாயின் யான் என்க கண்ணழிப்பாரும் உளர்; அப் பிறப்பு-மறுபிறப்பு. அடித்தொழில் கேட்குவன் என்றது, நினக்கு மனைவியாகுவேன் என்றவாறு. இளமையும் காமமும் நில்லா என்பதற்கு நாமே சான்றாயினேம். அங்ஙனமே யாக்கையும் செல்வமும் நிலையா என்பது கருத்து. மணந்து கொண்டு மகப்பே றெய்தக் கருதி வந்துள்ள அவன் கருத்தறிந்து நம் இளமையும் காமமும் ஒழிந்தன. அதுவேயுமன்றிப் புத்தேளுலகம் புதல்வர் தருவார் என்னும் நின்கருத்துப் பிழையாம் என்பது தோன்றப் புத்தேளுலகம் புதல்வரும் தாரார் என்றாள். உம்மை இழிவு சிறப்பு மிக்க அறமே விழுத்துணையாவது என்னும் இதனோடு

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை    (குறள், 36)

எனவரும் திருக்குறளையும் நினைக

விசாகை நல்லாளும் அவன்பாற் சென்று தானம் செய்யெனக் கூற என இயையும். வானத்து மீன்-வீண்மீன்

ககந்தன் மூத்த மகனின் அடாச் செயல்

143-154: குமரி............ஆகலின்

(இதன் பொருள்) குமரி மூத்த அக் கொடுங்குழை நல்லாள் அமரன் அருளால் அகன் நகர் இடூஉம் படுபழி நீங்கி-கன்னியாகவே இருந்து மூத்தவளாகிய அந்த வளைந்த குழை அணிந்த அவ் விசாகைதானே பண்டு கந்திற் பாவையாகிய தெய்வத்தின் திருவருளால் புகாரின் அகநகரத்தில் வாழ்கின்ற மாக்கள் தன்மேலேற்றிய பெரும்பழி நீங்கிய பின்பு ஒரு நாள்; பல்லோர் நரப்பண் கொடிமிடை வீதியில் வருவோள் குழல் மேல்-பல மகளிர் நடுவே கொடி செறிந்த பெரிய வீதியின்கண் வருகின்ற வளுடைய கூந்தலின் மேலே; மருதி பொருட்டான் மடிந்தோன் தம்முன் காமம் காழ்கொள் கருகிய நெஞ்சினன்-முன்பு பார்ப்பனியாகிய மருதி காரணமாகக் கொலையுண்டவனுடைய தமையனாகிய ககந்த மன்னன் மகன் காமமாகிய தீ முதிர்ந்து கடுதலாலே கருகிய நெஞ்சை உடையவனாய்; தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என-நம் பண்டைத் தமிழ்ச் சான்றோர் உயர்த்துக் கூறிய களவு மணம் இதுவேயாம் எனச் சொல்லிக் கொண்டு தன் தலையில்; சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த விரிபூமாலை வாங்கி-சுருண்ட கரிய தலை மயிரினைச் சுற்றி முதுகிலே தூங்கவிட்டிருந்த மலர்ந்த மலர் மாலையைக் கையால்; எல்லவிழ் தாரோன் விரும்பினன் மாலை வாங்க-ஒளி விரிக்கின்ற பொன்மாலை யணிந்த அம் மன்னன் மகன் பெரிதும் விரும்பித் தன் தலையில் மாலையைக் கையில் ஏந்துதற்கு; ஏறிய செங்கை நீலக்குஞ்சி நீங்காதாகலின்-தலையில் ஏறிய அவனது சிவந்த கையானது கரிய அவனது மயிர் முடியினின்றும் நீங்காமல் நிலைபெற்று விடுதலின்; என்க.

(விளக்கம்) குமரிமூத்தல்-கன்னியாகவே இருந்து முதிர்ந்துவிடுதல்; அமரன்: கந்திற்பாவை. அகநகர்: ஆகுபெயர். படுபழி-மிக்கபழி தம்முன்-தமையன்.காமத்தீ முதிர்ந்து சுடுதலால் கருகிய நெஞ்சினன் என்க. பித்தை-ஆண்மகன் தலைமயிர் விரும்பினன்: முற்றெச்சம் தொல்லோர் என்றது பழங்காலத்துத் தொல்காப்பியர் முதலியோரை. மணம்-களவு மணம். இடுவான்-இட. குஞ்சி-ஆடவன் தலைமயிர். வருவோள் குழல் மேல் இடுவான் வேண்டி மாலை வாங்க ஏறிய கை நீங்காதாகலால் என இயைக்க.

இதுவுமது

155-161: ஏறிய............கூறலும்

(இதன் பொருள்) ஏறிய செங்கை இழிந்திலது இந்தக் காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு-தன் மகனுடைய தலையில் ஏறிய சிவந்த கை இறங்காததற்கு இந்த விசாகையின் கற்புடைமையே காரணம் எனக் ககந்த மன்னன் கேள்வியுற்று; கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான் மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்-கடிய வெகுளி முறுகுதலாலே மகன் இறந்துபடுதலால் வருகின்ற துன்பத்தையும் ஒரு பொருளாகக் கொள்ளாதவராய் அம் மைந்தனையும் தனது வாளாலேயே வெட்டிக் கொன்றனன். இவையெல்லாம் இந் நகரத்திலே நிகழ்ந்த பழையவரலாறாம்; ஊழிதோறு ஊழி உலகம் காத்து வாழிய எம் கோ மன்னவ என்று-பல்லூழி காலம் இவ்வுலகத்து மன்னுயிரைப் பாதுகாத்து வாழ்வாயாக எங்கள் கோமானாகிய அரசனே என்று சொல்லி; மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்-அத் துறவோரில் வைத்து ஒரு துறவி இவற்றைக் கூறா நிற்றலும்; என்க.

(விளக்கம்) செங்கை இழிந்திலது என்னும் இதனையும் இங்ஙனம் இழியாமைக்கு இந்தக் காரிகையின் கற்பே காரணம் என்பதனையும் அறிந்தோர் கூறக்கேட்டு என்க. சினந்திருகி-சினம்முறுகி. மகன் துயர்-மகன் உறுதுயர் எனவும் மகனால் தனக்குவரும் துயர் எனவும் இருபொருளில் மயங்கிற்று மைந்தன் தன்னை என்றது இம் மைந்தனையும் என்பதுபட நின்றது.

சோழ மன்னன் அத் துறவியை வினவுதல்

162-168: வீயா..........உரைக்கும்

(இதன் பொருள்) வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டனன் இவற்றை எல்லாம் கெடாத பெரும் புகழையுடைய அச் சோழ மன்னன் கூர்ந்து கேட்டனன் அங்ஙனம் கேட்டவன் அத் துறவோரை நோக்கி; நன்றறி மாதவிர்-நன்மையை நன்கு அறிந்த பெரிய தவத்தையுடையீர்; இன்றே யல்ல என்று எடுத்து உரைத்து நலம் பல காட்டினிர் இன்றும் உளதோ இவ்வினை உரைம் என-நீவிர் உரை தொடங்குங்கால் இன்று மட்டுமல்ல என்று தொடங்கிக் கூறுமாற்றால் அரசியல் நன்மையும் கற்புடை மகளிர் நன்மையும் ஆகிய நலங்கள் பலவற்றை எடுத்துக் காட்டலானீர் அங்ஙனமாயின் இன்றும் நிகழ்ந்துளதோ இத்தகைய நிகழ்ச்சி, உளதாயின் கூறிக் காட்டுமின் என்று வென்றி நெடுவேல் வேந்தன்கேட்ப-வெற்றியையுடைய வேலேந்திய அவ்வரசன் வினவுதலாலே; மாதவர் தம்முள் ஓர் மாதவன்-அத் துறவோரில் வைத்து ஒரு துறவோன்; தீது இன்றாக வேந்து செங்கோல் என-தீங்கின்று அரசர் பெருமானுடைய செங்கோன்மை நிகழ்வதாக என்று வாழ்த்தி; உரைக்கும்-சொல்வான்; என்க. 

(விளக்கம்) வீயாத என்பதன்கண் ஈற்றுயிர் மெய் கெட்டது. விழுச்சீர்-பெரும்புகழ் அங்ஙனம் கேட்டவன் என்க. இன்றே அல்ல என்றமையால் இன்றுமுளது என்பது போதருதலின் இன்றும் உளதோ இவ்வினை என்று அரசன் வினவினான். உரையும் என்பதன் ஈற்றுயிர் மெய் கெட்டு உரைம் என நின்றது. உரைக்கும்-சொல்லுவான்.

(இது முதலாக (169) (204) மாதவன் உரைத்தலும் என்பதிறுதியாக ஒரு மாதவன் உதயகுமரன் கொலையுண்டமையை அரசனுக்கு அறிவிப்பதாக ஒரு தொடர்)

துறவி கூற்று

169-179: முடிபொருள்..........அடைந்தனள்

(இதன் பொருள்) நீள் நில வேந்தே-நெடிய உலகத்தை ஆளுகின்ற அரசனே! இன்றும் அத்தகைய நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்துளது கூறுவல் கேட்டருளுக; முடி பொருள் உணர்ந்தோர்-மெய்ப்பொருளை யுணர்ந்த சான்றோர்கள்; முதுநீர் உலகில் கடியப்பட்டன ஐந்து உள-கடல் சூழ்ந்த இந் நிலவுலகத்தின்கண் விலக்கப்பட்டனவாகிய தீவினைகள் ஐந்துள்ளன அவையாவன: கள்ளுண்டல் பொய் மொழிதல் களவு செய்தல் காமமாடுதல் என்பனவாம்; அவற்றில்-அவ்வைந்தனுள்ளே; கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளாதாகும் காமம்-கள் பொய் களவு கொலை ஆகிய நான்கு தீவினைகளையும் தன்பால் உடையதாம் காமம் என்னும் அத் தீவினை; தம்பால் ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என-ஆதலால் தம்மிடத்தே அத்தகைய வற்றால் நிகழும் தீவினைகளையும் ஒரு சேர நீக்கினவர்களே ஆவர் என்று அறிந்து; நீங்கினர் அன்றே நிறைதவ மாக்கள் அக் காமத்தைக் கைவிட்டு நீக்கினோரே நிறைந்த தவ ஒழுக்கமுடைய சான்றோராவர்; நீக்காரன்றே தாங்கா நகரம் தன்னிடை உழப்போர்-அக் காமத்தை நீங்காதவர்தாம் துயரம் பொறுக்கொணாத நகரத்தில் வீழ்ந்து உழல்வோர் ஆவர்; சித்திராபதி மகள் சே அரி நெடுங்கண் மாதவி-சித்திராபதியின் மகளாகிய செவ்வரியோடிய நெடிய கண்ணையுடைய மாதவி என்னும் நாடகக் கணிகை; காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள்-தன் காதலனாகிய கோவலன் எய்திய கடிய கொலைத் துன்பத்தைக் கேட்டு நெஞ்சு பொறாதவளாய்; மாதவர் பள்ளியுள் அடைந்தனள்-பெரிய தவத்தையுடைய அறவண வடிகள் தவப்பள்ளியின்கண் தஞ்சம் புகுந்தனள்; என்க.

(விளக்கம்) முடிபொருள்-மெய்ப் பொருள். முதுநீர்-கடல் காமத்தீவினை உடையார்பால் கள்ளுண்டலும் பொய் கூறுதலும் களவு கோடலும் கொலை செய்தலும் ஆகிய நான்கு தீவினைகளும் ஒருதலையாகவுளவாம் என்றவாறு. எனவே காமமே ஏனையவற்றிற்கும் காரணமாம் ஆகவே தம்பால் காமத் தீவினை நிகழாதவாறு விலக்கியவர் எல்லாத் தீவினைகளையும் ஒரு சேர விலக்கியவர் ஆவார். இவ்வுண்மையை யுணர்ந்து காமத்தைத் துவர விலக்கியவரே நிறைந்த தவமுடையோர் ஆவர்; விலக்காதவர் நரகத்தில் வீழ்வர் என்றவாறு. நீங்கார் நரகிடை உழப்போர் எனவே நீங்கினவர் துறக்கத்தும் விட்டுலகத்தினும் புகுந்தின்பம் எய்துவர் என்பது அருத்தாபத்தியால் பெற்றாம் காதலன்: கோவலன். கடுந்துயர்-கொலைப்பட்ட துன்பம். கேட்டுப் பொறாளாய் என்க. அடைந்தனள் என்றது தஞ்சம் அடைந்தனள் என்பதுபட நின்றது.

இதுவுமது

180-188: மற்றவன்.........காரிகை

(இதன் பொருள்) மற்று அவள் பெற்ற மணிமேகலை தான் முற்றாமுலையினள் முதிரா கிளவியள்-அம் மாதவி பெற்ற மணிமேகலை தானும் முதிராத முலையினையும் மழலை மாறாத மொழியினையும் உடைய இளமையுடையவளாய் இருந்தும்; தவம் செய்குவன் என சிற்றிலும் பேரிலும் ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள்-யானும் தவம் செய்வேன் எனத் துணிந்து சிறிய குடில்களிலும் ஊரம்பலத்தை அடைந்தனள்; ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும்-அம்வம்பலத்தின்கண் அம் மணிமேகலை அவள் மேற்கொண்ட அத் தவ ஒழுக்கத்தின்கண் பிறழாதவளாகவே யிருந்துழியும்; அவளை நீங்கான் நிழல்போல் யாங்கணும் காரிகை பொருட்டால் காமம் நிழலைப் போல எவ்விடத்தும் தொடர்பவன் அவளுடைய பேரழகு காரணமாகத் தன் நெஞ்சத்தே காமம் முதிர்ச்சியடைதலால்; ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்-நிறைந்த இருளையுடைய நள்ளிரவினும் பழியஞ்சானாய் அவள் துயிலுகின்ற அம்பலத்தினூடும் புகுந்தனன்; காரிகை காயசண்டிகை வடிவாயினள்-அம்மணிமேகலை தானும் அவனுக்ககப்படாமல் தன் வடிவத்தைக் கரந்து காயசண்டிகை என்னும் மற்றொருத்தியின் வடிவத்தை மேற்கொண்டிருந்தாள்; என்க

(விளக்கம்) இம் மாதவன் நின்மகன் என்னும் உண்மையை முற்படக் கூறிவிட்டால் பின்னர் அவன் செய்த பிழை கூறும் செவ்வி பெறுதல் அரிதென்பது கருதி யாரோ ஒருவனுடைய ஒழுக்கத்தைக் கூறுபவன் போல முற்பட அவன் செய்த பிழையை மன்னன் உளம் கொள்ளும் வண்ணம் ஓதி வருகின்ற நுணுக்கம் நினைந்து நினைந்து இன்புறற் பாலதாய் இருத்தலுணர்க. முற்றாமுலையினள் என்றது அவன் காமம் காழ் கொள் ஏதுக்கூறியபடியாம் மணிமேகலை காமுறுதற்குரியள் அல்லள் என்பது தோன்றுதற்கு ஆங்கு அவள் அவ்வியல்பின்ளேயாயினும் என்றான். காரிகை-அழகு ஆரிருளும் எனல் வேண்டிய இழிவு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது(188) காரிகை: மணிமேகலை. காயசண்டிகை வடிவாயினள் என்றது அவன் கையில் அகப்படாமைப் பொருட்டு அவ்வடிவாயினள் என்றவாறு.

இதுவுமது

189-193: காயசண்டிகை...............ஆகலின்

(இதன் பொருள்) காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் காயசண்டிகை என்னும் விச்சாதரி ஒருத்தியும் அவ்வம்பலத்திலிருக்கின்றாளாதலின்; காயசண்டிகை தன் கணவனாகிய வாய்வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி-அக் காய சண்டிகையின் கணவனாகிய ஏறு தப்பாத வாளையுடைய விச்சாதரன் ஒருவன் அவளைக் காண்டற் பொருட்டு அச் செவ்வியில் அம்பலத்தில் வந்து; இவன் ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் என மணிமேகலையின் பொருட்டு வந்தவனைக் கண்டு இவன் இவ்வம்பலத்திற்கு என் மனைவியாகிய காயசண்டிகையின் பொருட்டே வந்தான் போலும் என்று பிழைபடக் கருதி; ஆங்கு அவன் தீவினை உருத்தது ஆகலின்-அப்பொழுது அவனுடைய பழவினையும் தன் பயனை ஊட்டுதற்கு உருத்து வந்ததாதலால்; என்க.

(விளக்கம்) காயசண்டிகையும் ஆங்கு உளன் என்றது காயசண்டிகை சென்றுவிட்ட செய்தி இத் துறவிக்குத் தெரியாதாகலின் புலவர் பெருமான் அவன் கூற்றாக அங்ஙனம் கூறியது புலமை நுணுக்கங்களுள் ஒன்றாகும். மேலும் அவள் அந் நகரத்திருந்த செய்தியை அரசன் அறியானாதலே இயல்பாதலின் அவள் இருந்தமையும் உணர்த்துதல் வேண்டிற்று; இதுவும் ஒரு நுணுக்கமாம். வாய்வாள்-ஏறு தப்பாதவாள். விஞ்சையன் என்றது காஞ்சனனை. தோன்றி என்றது மனைவியைக் காணும் பொருட்டு வந்து என்பதுபட நின்றது. இவள் பொருட்டால்-இடக்கரடக்கு. ஈண்டும் இவன் எனச் சுட்டுப் பெயரால் கூறினார். அவன் என்பதும் அது.

இதுவுமது

194-204: மதிமருள்.............உரைத்தலும்

(இதன் பொருள்) மதிமருள் வெண்குடை மன்ன நின்மகன்-முழு வெண் திங்கள் போன்ற கொற்றவெண் குடையையுடைய மன்னனே நின்னுடைய மகனாகிய; உதயகுமரன் ஒழியானாக ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி-உதயகுமரன் தானும் நீங்கானாக அம் மணிமேகலையை ஊரம்பலத்தின்கண் ஏற்றி; ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து-உயர்ந்த இருளையுடைய நள்ளிரவிலே இவனையும் ஆங்குச் செலுத்தி; காயசண்டிகை தன் கணவனாகிய வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்-காயசண்டிகையின் கணவனாகிய வாய்க்கும் வாளையுடைய விச்சாதரனையும் அவ்விடத்திற்கு அழைத்து; விஞ்சை மகள்பால் இவன் வந்தனன் என வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி-நின் மனைவியாகிய காயசண்டிகையின் பொருட்டே இவன் மனைவியாகிய காயசண்டிகையின் பொருட்டே இவன் இப்பொழுது இங்கு வந்தான் என்னும் ஒரு பிழையான எண்ணத்தைத் தோற்றுவித்து முன்னமே இவன் செயலை ஆராய்தல் பொருட்டு வஞ்சமாகக் கரந்திருந்த அவ் விச்சாதரனுடைய நெஞ்சத்தையும் கலக்கிவிட்டு; ஆங்கு அவன் தன் கைவாளால் அம்பலத்து ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி-அவ்விடத்தே அவ் விச்சாதரனுடைய கையிலிருந்த வாளினாலேயே அவ்வலம்பலத்தினூடேயே ஈங்குக் கூறப்பட்ட நின் மகனை வெட்டுவித்தொழிந்தது என்று சொல்லி வாழ்க நின் செங்கோல் என்று வாழ்த்தி; மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் அத் துறவியருள் வைத்துச் சொல்வன்மையுடைய ஒரு துறவி உதயகுமரன் கொலையுண்ட செய்தியை அரசனுக்கு அறிவுறுத்தலும்; என்க.

(விளக்கம்) (169) முடிபொருள் என்று தொடங்கி (193) ஆங்கவன் தீவினை உருத்ததாகலின் என்பது வரையில் இம் மாதவன் கூறிய செய்தியின் சுருக்கம் வருமாறு-வேந்தே காமம் ஏனைய தீவினைகுக்கும் காரணமாம் அதனை விலக்கியவரே துறவோராவர். காமம் காழ் கொண்டவர் நரகத்  துன்பத்தை நுகர்வது இயற்கை. இன்று இந் நகரத்தில் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியைக் கேள்! மணிமேகலை தவம் செய்யத் துணிந்து பிச்சையேற்றுண்டு ஊரம்பலததில் உறைந்தாள். அவள் அழகு மிக்கவள். அதனால் காமம் காழ் கொண்டு அவள் நிழல் போல எவ்விடத்தும் நீங்காதவனாய் நள்ளிரவிலே அம்பலத்திற்கும் வந்துவிட்டான்; அவள் அவனுக்கஞ்சிக் காயசண்டிகை வடிவம் கொண்டிருந்தாள். காயசண்டிகையின் கணவனும் மனைவியைக் காண அந் நள்ளிரவில் வந்தான் அவன் இவனைக் கண்டு தன் மனைவியின் பொருட்டே இவன் வந்தனன் என்று கருதும்படி அவனுடைய தீவினையும் அப்பொழுது செவ்வி பெற்றிருந்ததாகலின் என்று சொல்லுமளவும் நின்மகன் என்றாதல் உதயகுமரன் என்றாதல் குறிப்பிடாமல் அவன் இவன் என்னும் சுட்டுப் பெயராலேயே கூறி வந்தமையின் அவ்வரசன் தெரிந்து கொண்ட செய்தி இங்ஙனம் துணிந்து வந்தமையின் அவ்வரசன் தெரிந்து கொண்ட செய்தி இங்ஙனம் துணிந்து தவமகளை இடங்கழி காமத்தோடு விடாது தொடர்ந்து இரவினும் அம்பலத்தினும் துணிந்து புகும் தீயவன் ஒருவன் இந் நகரத்தில் இருக்கின்றான் என்பதேயாம்.

இச்செய்தி கேட்ட மன்னவன் நெஞ்சத்தில் அத்தகைய தீவினை செய்தவன் யாவன் என அறியும் அவாவும் அங்ஙனம் செய்தவனைக் கண்டுபிடித்து ஒறுக்கவேண்டும் என்னுமளவிற்குச் சினமும் உண்டாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அம் மாதவனோ அவன் யார் என்று இன்னும் கூறவில்லை. இவ்வாற்றால் மன்னவனுடைய அறிவு தடுமாறி இருக்குமன்றோ? இத் தடுமாற்றத்தைப் புலவர் பெருமான் அவன் குடையைப் பாராட்டுவார்போல மதிமருள் வெண்குடை மன்ன என இரட்டுறக் கூறியுள்ள நயமுணர்க. மதிமருள் என்றது திங்கள் போன்ற என வெண்குடைக்கு உவமாயிற்று. இது கேட்ட அரசன் மதிமருண்டிருப்பதும் இயற்கையே. இன்னும் தீவினையுருத்தாகலின் என ஏதுக் கூறி நின்மகன் உதயகுமரன் ஒழியானாக அவளை அம்பலத்தேற்றி இவனை ஆங்கு உய்த்து விஞ்சையனையும் அழைத்து இவன் நின்மனைவி பால் வந்தனன் எனக் காட்டி அவன் மனத்தையும் கலக்கி என்னுமளவும் உதயகுமரன் எழுவாய் போன்று கூறி வருதலால் ஈண்டும் அவன் தன் மகனே என்று அரசன் துணிதற்கு இடமில்லாமை உணர்க. இவ்வாறு இம் மாதவன் உதயகுமரன் ஐயப்புலத்தில் வைத்து அவன் செய்த பெருந்தீவினையைத் தெளிடுவுபடக் கூறிய பின்னர் மேலே கூறிய முடிக்கும் பொழுதுதான் அரசன் கொலையுண்டவன் தன்மகன் என்றுணரும்படி கூறி முடித்த நயம் உணர்ந்து மகிழ்க.

அரசன் செயல்

205-215: சோழிக..................வேந்தென்

(இதன் பொருள்) (205) அணிகிளர் நெடுமுடி அரசு ஆள் வேந்து-அழகு மிகுகின்ற நெடிய முடியினையுடைய அரசாட்சியைச் செய்கின்ற வேந்தனாகிய அச் சோழ மன்னன் தானும் இற்றை நாள் இத் தீவினை செய்தவன் தன் மகனாகிய உதயகுமரனே யென்பதும் அவன்றானும் விஞ்சையானால் கொலையுண்டான் என்பதும் நன்குணர்ந்த பின்னர்த் தன் தானைத் தலைவனாகிய சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி-சோழிக ஏனாதியினுடைய முகத்தை நோக்கிக் கூறுபவன்; இளங்கோன் தன்னை யான் செயற் பாலது தான் செய்ததனால் விஞ்சையன் தகவு இலன்-தானைத் தலைவனே இத்தகு தீவினை செய்த இளவரசனாகிய உதயகுமரனை யானே செய்ய வேண்டிய செங்கோன் முறைமை ஒன்றனை யான் செய்தற்கிடனிலாது தானே செய்து விட்டதனால் அவ் விச்சாதரன் பெருந்தகைமை இலன் ஆயினான் அது கிடக்க; மாதவர் நோன்பும் இன்று மடவார் கற்பும் இன்று காவலன் காவல் இன்று எனின்-சிறந்த தவத்தை மேற்கொண்ட துறவோருடைய நோன்பும் இல்லையாம் மடப்பமுடைய மகளிருடைய கற்பறமும் இல்லையாம் அரசனுடைய காவல் இல்லையாயின்; மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர் துயர்வினையாளன் தோன்றினன் என்பது கன்றையிழந்த ஒரு பசுவின் துயர்தீர்தற் பொருட்டுத் தன் அரும்பெற்ற புதல்வனைத் தேராழியின் கீழ்க்கிடத்திக் கொன்று செங்கோன் முறை செய்த மனுவேந்தனுடைய மரபின்கண் இத்தகைய துன்பம் தருகின்ற தீவினையாளன் ஒருவன் பிறந்தான் என்னும் இப் பழிச்சொல்; வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம்-எம்மோரனைய பிற மன்னருடைய செவியில் சென்று புகுவதற்கு முன்நு; ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி ஈங்குக் கொலையுண்ட உதயகுமரன் உடம்பையும் ஈமத்தீயில் இட்டொழித்து; கணிகை மகளையும் காவல் செய்க என்றனன்-அந் நாடகக் கணிகை மகளாகிய மணிமேகலையையும் காவலின்கண் வைத்திடுக என்று கட்டளையிட்டனன் என்பதாம்.

(விளக்கம்) ஏனாதி என்பது படை மறவருள் சிறந்தோர்க்கு அரசனால் வழங்கப்பெறும் ஒரு பட்டப்பெயராம். இதனை மாராயம் பெற்ற நெடுமொழியானும்(தொல் புறத் சூ. 8) என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியார்

போர்க் கடலாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
கார்க்கடல் பெற்ற கரையன்றோ-போர்க்கெல்லாம்
தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே
ரேனாதிப் பட்டத் திவன்

என்று காட்டிய மேற்கோளாலும் உணர்க. சோழிக ஏனாதி என்றமையால் சோழ மன்னனால் ஏனாதிப்பட்டம் வழங்கப்பட்டவன் என்பது பெற்றாம். யான் செய்ய வேண்டிய கொலைத் தண்டனையை ஏதிலனாகிய தான் செய்தமையால் அவ் விஞ்சையனும் ஒரு தவறு செய்தான் என்பதுபடத் தகவிலன் என்றான். இன்று என்பதனை நோன்பும் இன்று கற்புமின்றி என இரண்டிடத்தும் கூட்டுக. மகனை முறை செய்த மன்னவன் என்றது மனுநீதிச்சோழனை இதனை

வாயிற் கடைமணி நடுநா நடுங்க
வாவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன்
அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே  (சிலப் 20: 53-6)

எனவரும் கண்ணகி கூற்றாலும் உணர்க. அம் மாதவனால் கூறப்பட்ட ககந்தன் மக்கள் இருவரையும் கொள்ளாது விடுத்தான். என்னை? அவ்விருவரும் குலப்பிறப்பினர் அல்லராகலின், அக் கருத்துத் தோன்ற ஓர் துயர்வினையாளன் என்றான். வேந்தர் என்றது எம்மோரனைய பிறவேந்தர் என்றவாறு. இதனை

எம்மோ ரன்ன வேந்தற் குற்ற
செம்மையி னிகந்தசொற் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை யுறுக வீங்கென

என வரும் சிலப்பதிகாரத்தினோடு 25: 95-97 ஒப்பு நோக்குக. கணிகை மகள் என்றான் கண்டோரெல்லாம் காமுறுதற்குரியவள் என்பது தோன்ற. அவ்வாறு பிறர் காமுற்றுக்கெடாமலும் வேந்தன் மகன் கொலையுண்டமைக்கு காரணம் இவளென்று கருதி மணிமேகலைக்கு நகர மக்கள் கேடுசூழாமலும் பாதுகாத்தல் தன் கடமை யாதலின் மணிமேகலையையும் காவல் செய்தல் வேண்டிற்று. இனி, மணிமேகலையையும் வெறுத்து அவளைக் கணிகை மகள் என்று கூறிக் காவல் செய்வித்தான் எனக் கருதுவாருமுளர். அங்ஙனம் கருதின் மணிமேகலையை அரசன் வெறுத்தற்குத் தன் மகன் கொலையுண்டமையன்றிப் பிறிதொரு காரணம் இன்மையின் அவ்வரசனுக்கே இழுக்காதலை அவர் நோக்கிற்றிலர்.

இக்காதையை-மண்டிலம் சீப்பப் புரிந்தோர் உரைப்பக் கேட்டு மாதவரெல்லாம் மணிமேகலையை நோக்கி, இதனை நீ அறிவதுமுண்டோ என, அவள் உரைத்தலும் அவளைச் சிறுவனோடு வேறிடத் தொளித்து இசைத்துச் சென்று குறுகி ஒரு மாதவனுரைத்தலும், கேட்டு வேந்தன் உரையும் என ஒரு மாதவன் உரைக்கும்; அங்ஙனம் உரைக்கும் மாதவன் ஏத்தி உரைத்தலும் வேந்து காவல் செய்கென்றனன் என, இயைத்திடுக.

சிறைசெய் காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar