பதிவு செய்த நாள்
30
ஜன
2012
04:01
(23. மணிமேகலை சிறைவீடு செய்த இராசமாதேவி குறைகொண்டிரப்பச் சீலங்கொடுத்த பாட்டு)
அஃதாவது அரசன் கட்டளைப்படி சோழிக வேனாதியால் சிறையிடப்பட்ட மணிமேகலை தன் மகனைக் கொன்றவள் என்னும் செற்றத்தால் இராசமாதேவி அரசன்பால் சென்று வஞ்சகமாய் மணிமேகலையைப் பெரிதும் மதிப்பவள் போலப் பேசி மணிமேகலையைத் தன்பால் இருக்கும்படி அரசன்பால் வேண்டி அவளை அச் சிறையினின்றும் மீட்டுக் கொணர்ந்து தன் பாதுகாவலில் வைத்து அவளுக்குப் பித்தேற்றுதற்குரிய மருந்தூட்டியும் கல்லாத இளைஞன் ஒருவனை விடுத்து மணிமேகலை கற்பினை யழிக்கச் சொல்லியும் நோய் கொண்டாள் என்று பொய் சொல்லிப் பல்வேறு வகையில் மணிமேகலையைத் துன்புறுத்த முயன்று பார்த்தும் அவற்றிற்கெல்லாம் மணிமேகலை தான் பெற்றுள்ள மந்திரங்களின் உதவியால் சிறிதும் தீங்கின்றி இருப்பாளாக; அது கண்ட இராசமாதேவி மணிமேகலை தெய்வத் தன்மையுடையவள்; அஃதறியாது அவளுக்குக் கேடு சூழ்ந்தமையின் தனக்கு இன்னும் என்னென்ன துன்பங்கள் வருமோவென்றஞ் சியவளாய் அவள்பால் சென்று யான் என்மகனை இழந்த துன்பம் காரணமாக இவ்வாறு பல தீங்குகளைச் செய்து விட்டேன் அவற்றைப் பொறுத்தருள வேண்டும் என்று சொல்லி மணிமேகலையை அவள் விருப்பம்போல ஒழுக விட்டுவிட்ட செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.
அரசனுடைய சிறைக் கோட்டத்தினின்றும் இராசமாதேவி விடுவித்துக் கொண்டமையின் இது சிறைவிடுகாதை எனும் பெயர் பெற்றது.
இனி, இதன்கண் மணிமேகலையின்பால் செற்றம் கொண்ட இராசமாதேவி மணிமேகலையைச் சிறை மீட்டுக் கொணர்ந்து மணிமேகலைக்குச் செய்யும் வஞ்சகச் செயல்களும், அச் செயல்களுக்கு மணிமேகலை மந்திரவலிமையால் சிறிதும் துன்புறாதிருத்தலும் அது கண்ட இராசமாதேவி அஞ்சி நடுங்குதலும், மணிமேகலை இராசமா தேவிக்குத் தன் முற்பிறப்பினையும் உதயகுமரன் முற்பிறப்பினையும் அறிவுறுத்துதலும், உதயகுமரன் கொலையுண்டமைக்குரிய பழவினை இன்னது என அறிவுறுத்துதலும், மணிமேகலை இராசமாதேவி செய்த வஞ்சகச் செயல்களினின்றுந் தப்பிய வகை கூறுதலும் காமம் முதலியவற்றால் ஏற்படுகின்ற துன்பங்களை எடுத்துக் கூறி உயிர்களின்பால் அன்பு செலுத்துக என்று இராசமாதேவிக்கு நல்லறிவு கொளுத்துதலும் மகன் துயர் நெருப்பாக மனம் விறகாக இராசமாதேவியின் அகம் சுடுகின்ற வெந்தீயை அவித்துக் குளிரச் செய்தலும் அரசன்தேவி நன்றியுடையளாய்த் தொழுது அடிவீழ் முயல்பவளை மணிமேகலை தடுத்து நீ தொழுதல் கூடாது என் காதலன் தாய் அல்லையோ நீ; மாபெருந் தேவி என்று எதிர் வணங்குதலும் பிறவும் இனிதாகக் கூறப்படுகின்றன.
மன்னவன் அருளால் வாசந்தவை எனும்
நல் நெடுங் கூந்தல் நரை மூதாட்டி
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும்
திரு நிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும்
கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும்
பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள்
இலங்கு அரி நெடுங் கண் இராசமாதேவி
கலங்கு அஞ்அர் ஒழியக் கடிது சென்று எய்தி
அழுது அடி வீழாது ஆய் இழை தன்னைத்
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி 23-010
கொற்றம் கொண்டு குடி புறங்காத்து
செற்றத் தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும்
தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து
செருப் புகல் மன்னர் செல்வுழிச் செல்க என
மூத்து விளிதல் இக் குடிப் பிறந்தோர்க்கு
நாப் புடைபெயராது நாணுத் தகவுடைத்தே
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று
என் எனப் படுமோ நின் மகன் மடிந்தது?
மன்பதை காக்கும் மன்னவன் தன் முன்
துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின் 23-020
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று
அம் சில் ஓதி அரசனுக்கு ஒரு நாள்
பிறர் பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன்
கரும்பு உடைத் தடக் கைக் காமன் கையற
அரும் பெறல் இளமை பெரும்பிறிதாக்கும்
அறிவு தலைப்பட்ட ஆய் இழை தனக்குச்
சிறை தக்கன்று செங்கோல் வேந்து! எனச் 23-030
சிறப்பின் பாலார் மக்கள் அல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது
அறிந்தனைஆயின் இவ் ஆய் இழை தன்னைச்
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல
என்னோடு இருப்பினும் இருக்க இவ் இளங்கொடி
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று
அங்கு அவள் தனைக் கூஉய் அவள் தன்னோடு
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு
அறிவு திரித்து இவ் அகல் நகர் எல்லாம்
எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே 23-040
மயல் பகை ஊட்ட மறு பிறப்பு உணர்ந்தாள்
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆகக்
கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய்
வல்லாங்குச் செய்து மணிமேகலை தன்
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்துப்
புணர் குறி செய்து பொருந்தினள் என்னும்
பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை என்றே
காணம் பலவும் கைந் நிறை கொடுப்ப
ஆங்கு அவன் சென்று அவ் ஆய் இழை இருந்த
பாங்கில் ஒரு சிறைப்பாடு சென்று அணைதலும் 23-050
தேவி வஞ்சம் இது எனத் தௌந்து
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி
ஆண்மைக் கோலத்து ஆய் இழை இருப்ப
காணம் பெற்றோன் கடுந் துயர் எய்தி
அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார்
நிரயக் கொடு மகள் நினைப்பு அறியேன் என்று
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின்
மகனை நோய் செய்தாளை வைப்பது என்? என்று
உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என
பொய்ந் நோய் காட்டிப் புழுக்கறை அடைப்ப 23-060
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப
ஐயென விம்மி ஆய் இழை நடுங்கி
செய் தவத்தாட்டியைச் சிறுமை செய்தேன்
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன் நேர் அனையாய்! பொறுக்க என்று அவள் தொழ
நீலபதி தன் வயிற்றில் தோன்றிய
ஏலம் கமழ் தார் இராகுலன் தன்னை
அழற்கண் நாகம் ஆர் உயிர் உண்ண
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் 23-070
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு?
பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை
உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?
உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது
அவ் உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி!
எவ் உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்
மற்று உன் மகனை மாபெருந்தேவி 23-080
செற்ற கள்வன் செய்தது கேளாய்
மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல் துணிசெய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை
நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி
விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ? எனின்
பூங் கொடி நல்லாய்! புகுந்தது இது என
மொய்ம் மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா
தெய்வக் கட்டுரை தௌந்ததை ஈறா
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து 23-090
மற்றும் உரை செயும் மணிமேகலை தான்
மயல் பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன்
அயர்ப்பதுசெய்யா அறிவினேன் ஆயினேன்
கல்லாக் கயவன் கார் இருள் தான் வர
நல்லாய்! ஆண் உரு நான் கொண்டிருந்தேன்
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது?
அந்தரம் சேறலும் அயல் உருக் கோடலும்
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில்
காதலற் பயந்தோய்! கடுந் துயர் களைந்து 23-100
தீது உறு வெவ் வினை தீர்ப்பதுபொருட்டால்
தையால்! உன் தன் தடுமாற்று அவலத்து
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய்
ஆள்பவர் கலக்குற மயங்கிய நல் நாட்டுக்
காருக மடந்தை கணவனும் கைவிட
ஈன்ற குழவியொடு தான் வேறாகி
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி
புதல்வன் தன்னை ஓர் புரி நூல் மார்பன்
பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க
ஆங்கு அப் புதல்வன் அவள் திறம் அறியான் 23-110
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும்
நீர் நசை வேட்கையின் நெடுங் கடம் உழலும்
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓடக்
கான வேட்டுவன் கடுங் கணை துரப்ப
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி
பயிர்க் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி
உயிர்ப்பொடு செங் கண் உகுத்த நீர் கண்டு
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும்
கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி
கடாஅ யானைமுன் கள் காமுற்றோர் 23-120
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ?
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந் துயர்
இள வேய்த் தோளாய்க்கு இது என வேண்டா
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும்
கற்ற கல்வி அன்றால் காரிகை! 23-130
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்
திருந்து ஏர் எல் வளை! செல் உலகு அறிந்தோர்
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர்
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என
ஞான நல் நீர் நன்கனம் தௌத்து
தேன் ஆர் ஓதி செவிமுதல் வார்த்து
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக 23-140
அகம் சுடு வெந் தீ ஆய் இழை அவிப்ப
தேறு படு சில் நீர் போலத் தௌிந்து
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி
ஆங்கு அவள் தொழுதலும் ஆய் இழை பொறாஅள்
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை
காதலற் பயந்தோய் அன்றியும் காவலன்
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என் 23-147
உரை
மன்னவன் ஏவலின்படி வாசந்தவை என்னும் முதியவள் இராசமாதேவியின் பால் சென்று ஆற்றுவித்தல்
1-10: மன்னவன்..........வாழ்த்தி
(இதன் பொருள்) மன்னவன் அருளால்-சோழ மன்னனுடைய அருளை முன்னிட்டுக் கொண்டு அரண்மனையின்கண்; அரசற்காயினும் குமரர்க்காயினும் இருநில கிழமை தேவியர்க்கு ஆயினும்-அரசர்களுக்கேனும் மக்களுக்கேனும் பெரிய நிலத்தை ஆளும் உரிமை பூண்ட பட்டத்துத் தேவியருக்கேனும் ஏதேனும் துன்பம் வந்த காலத்தில் சென்று அத் துன்பத்தைத் தீர்த்தற்கு; கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும்-பொருள் பொதிந்த சொற்களை விரித்துக் கூறியும் தான் கற்ற அறிவுரைகளை எடுத்து விளக்கியும்; பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள்-அவர்கள் உற்ற துன்பத்தைத் துடைக்கவல்ல பயன் பொருந்திய மொழியையுடையவளாகிய; வாசந்தவை எனும் நல்நெடும் கூந்தல் நரை மூதாட்டி- வாசந்தவை என்னும் பெயரையுடைய அழகிய நெடிய கூந்தல் நரைத்துள்ள முதியவள்; இலங்கு அரிநெடும் கண் இராசமாதேவி கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி-விளங்குகின்ற செவ்வரியோடிய நெடிய கண்ணையுடைய இராசமாதேவிக்குத் தன் மகன் இறந்தமையால் உண்டான நெஞ்சு கலங்குதற்குக் காரணமான துன்பம் தீர்தற்பொருட்டு விரைந்து உவளகத்தே சென்று; அழுது அடி வீழாது-ஏனைய மகளிரைப் போல அழுதுகொண்டு அடியில் வீழாமல்; ஆயிழை தன்னை தொழுது முன்னின்று-இராசமாதேவியைக் கை குவித்துத் தொழுது அவள் முன்னிலையின் நின்றவாறே; தோன்ற வாழ்த்தி-தன் வருகை தோன்றுமாறு சிறப்பாகத் தேவியை வாழ்த்திக் கூறுபவள்; என்க.
(விளக்கம்) மன்னவன் அருளால் என்றது இராசமாதேவிக்கு ஆறுதல் கூறுதல் வேண்டும் என்னும் கருத்து அரசனுக்குண்மையைக் குறிப்பால் உணர்ந்துகொண்டு என்றவாறு. எனவே இவள் முற்பட அரசனுக்கு ஆறுதல் கூறவேண்டாமையும் பெற்றாம். நரையையுடைய மூதாட்டி என்க. அரசர்க்கு, தேவியர்க்கு என்பதற்கேற்பக் குமரர்க்கு தருப்பையில் கிடத்தி.....விளிதல் என்பதனோடு ஓடன் மரீஇய பீடின் மன்னர், நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்தவர் தீது மருங்கறுமார், அறம்புரி கொள்கை நான்முறை முதல்வர், திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி, மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர் என வரும் புறப்பாட்டு (13) ஒப்பு நோக்கப்படும் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தாரே துறக்கம் பெறுவர் என்பது நச்சினார்க்கினியர்(தொல் அகத் 44) உரை என்னெனப் படுமோ என்றது இகழ்ச்சி. நின்மகன் பொருட்டு நீ துன்பங்கொள்ளுதலை அரசன் காணின் நாணுவன் ஆதலால் நீ துன்பங்கொள்ளேல் என்பது குறிப்பு. இக் குறிப்பு பெரிதும் நுணுக்கமுடையத்தாய் இராசமாதேவி துன்பம் மறத்தற்கு ஏதுவாதலும் உணர்க.
அரசியின் வஞ்சகச் செயல்
21-30: கையாற்று............வேந்தென
(இதன் பொருள்) கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து-மகன் இறந்தமையால் பெரிதும் துன்பமுற்றுக் கையாற்றுக் கிடக்கும் என் நெஞ்சத்தைப் பிறர் அறியாவண்ணம் என்னுள்ளேயே மறைத்து அடக்கிக்கொண்டு பொய்யாகத் துன்புறாதவள் போன்று நடிக்கும் ஒழுக்கத்தைக் கைக்கொண்டு அதனால் என் வஞ்சம் புறத்தே தோன்றா வண்ணம்; மணிமேகலையை வஞ்சம் செய்குவன் என்று அம்சில் ஓதி-என் மகன் கொலையுண்டமைக்குக் காரணமான மணிமேகலையை வஞ்சித்து ஒறுக்குவன் என்று துணிந்து அழகிய சில பகுதியையுடைய கூந்தலையுடைய இராசமாதேவி தன்னுள் துணிந்து; அரசனுக்கு-தன் கணவனாகிய மன்னனுக்குச் செவ்வி பெற்ற ஒரு நாளில் கூறுபவள்; பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து-பிறர் தன்னை விரும்பிப் பின் வாராமைக்குரிய மணிமேகலையின் தவவேடத்தைக் கண்டு; அறிவு திரிந்தோன் அரசியல் தானிலன்-தனதறிவு பிறழ்ந்துபோன நம் மகன் நம் அரசியலுக்கு ஏற்புடையான் அலன் ஆதலின் அவனைப் பற்றி யான் கவல்கிலேன்; கரும்புடை தடக்கை காமன் கையற அரும்பெறல் இளமை பெரும் பிறிதாகும்-கருப்பு வில்லையுடைய பெரிய கையையுடைய காமவேளும் செயலற்றுத் திகைக்கும்படி அரிய பேறாகிய தனது இளமைப் பருவத்தைக் கொண்டடொழிதற்குக் காரணமான; அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்கு சிறைதக்கன்று செங்கோல் வேந்து என-மெய்யறிவு கைவரப்பெற்ற மணிமேகலை நல்லாளுக்குச் சிறைக் கோட்டம் தகுதியான இடம் அன்று செங்கோன்மையுடைய வேந்தர் பெருமானே இஃது என் கருத்தாம் என்று நயம்பட நவிலா நிற்ப; என்க.
(விளக்கம்) கையாற்றுள்ளம்-மகன் இறந்துபட்டமையால் துன்பம் மிகுந்து செயலற்றுக் கிடக்கும் நெஞ்சம். பொய்யாற்றொழுக்கம்-வஞ்சக ஒழுக்கம். அஞ்சிலோதி-இராசமாதேவி, அரசியல் தானிலன் ஆதலின் அவன் இறந்தமை பற்றி யானும் வருந்துகிலேன் என்பது குறிப்பு. பெரும்பிறிதாக்குதல்-சாகச் செய்தல்; பெரும் பிறிது சாவு. இளமையின் குறும்பு நிகழாவண்ணம் நன்கு அடக்கி விட்டாள் எனத் தான் மணிமேகலையைப் பெரிதும் மதிப்பாள் போல அதற்கேற்ற சொல் தேர்ந்து கூறுகின்றாள். அறிவு-மெய்யறிவு. ஆயிழை-மணிமேகலை. தக்கன்று-தகுதியுடையது அன்று. நீ இத்தகைய தவறு செய்தல் தகாது என்று இடித்துக் கூறுவாள் செங்கோல் வேந்து என்றாள்.
அரசன் செயல்
31-34: சிறப்பின்..............இறைசொல்
(இதன் பொருள்) மன்னர்க்குச் சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் என்பது-அரசர்க்கு அரசியல் இலக்கணமாகிய சிறப்பின் பாற்பட்ட மக்களே மக்கள் எனக் கொள்ளத் தகுந்தவர் அச் சிறப்பில்லாதவர் தம் மக்களாயினும் மக்களாகக் கருதாமல் மறக்கும் பகுதியின் பாற்படுவர் என்று சான்றோர் சொல்லுவர் இவ்வுண்மையை; அறிந்தனை ஆயின் இவ்வாயிழை தன்னை செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறைசொல்-யான் அறியுந்துணை நீயும் அறிந்திருப்பாயாயின் சிறைக் கோட்டத்திலிடப் பட்ட மணிமேகலையை நீயே செறிந்துள்ள சிறையினால் உண்டாகும் துன்பத்தைத் தீர்த்திடுக என்று அம் மன்னவன் அவள் கருத்துக்கிசைந்து கூறா நிற்ப; என்க.
(விளக்கம்) சிறப்பு-அரசாட்சிக்கு வேண்டிய சிறப்பிலக்கணம் ஏனையோர் தம் மக்களாயிருந்தாலும் மக்களாகக் கொள்ளப்பட்டார். அறிந்தனை ஆயின் என்றது என்னைப் போல அறிந்திருப்பதுண்டாயின் நன்று என்றவாறு. இதனானும் அரசன் மணிமேகலையைச் சிறை செய்தது அவளைப் பாதுகாத்திற் பொருட்டே என்பதறியலாம். தாய்மையுள்ள மாகலின் இவ்வாறு இராசமாதேவி கருதுதல் அரிது என்பது தோன்ற இங்ஙனம் கூறினான். இவ்வாறு பிறர் கருதாமல் அவளுக்குத் தீங்கியற்ற முற்படுவர் என்பது கருதியே யானும் அவளைச் சிறையிலிட்டுப் பாதுகாத்து வருகின்றேன் என்பது இதன்கண் குறிப்பெச்சப் பொருளாய் நின்றது. தன் விருப்பம் போலத் திரிய ஒண்ணாதபடி செறிய அடைபட்டுக் கிடப்பதனால் உண்டாகும் சிறைத்துன்பம் என்றவாறு. தீர்க்க என்றதன் ஈற்று உயிர்கெட்டது; விகாரம் அவனது இறைமைத் தன்மை விளங்குதலின் அக் கருத்துத் தோன்ற அரசன் என்னாது இறை என்றார்.
இராசமாதேவியின் வஞ்சகச் செயல்கள்
35-41: என்னோடு..............ஊட்ட
(இதன் பொருள்) என்னோடு இருப்பினும் இருக்க இவ்விளங்கொடி-பெருமானே நன்று, அங்ஙனமே செய்வல் சிறைவீடு செய்த பின்னர் மணிமேகலை என்னோடு உவளகத்தில் இருப்பினும் இருந்திடுக. அதனை விரும்பாது இவ்விளமையுடைய பிக்குணி; தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று-தன் தவவேடத்திற்கு இயையத் தனது பிச்சைப் பாத்திரத்தை ஏந்தித் தன் விருப்பப்படி போயினம் போகுக அவளைத் தடுப்பவர் யாரும் இல்லை என்று மன்னவன் மதிக்கும்படி கூறி; கொங்கு அவிழ் குழலாள் அங்கு அவள் தனை கூஉய் அவள் தன்னோடு கோயிலுள் புக்கு-நறுமணம் கமழும் கூந்தலையுடைய இராசமாதேவி அவ்விடத்தேயே மணிமேகலையைச் சிறைவீடு செய்வித்துத் தன்பால் அழைத்து அவளோடு தனது மாளிகையிலே புகுந்த பின்னர்; அறிவு திரித்து இ அகநகர் எல்லாம் எறிதரு கோலம் யான் செய்குவல் என்று-இம் மணிமேகலைக்குப் பித்தேற்றி இவள் அறிவைப் பிறழ்வித்து இந்த அகநகரத்தில் வாழுகின்ற மாந்தரெல்லாம் இவளை அடிக்கத் தகுந்ததொரு வண்ணத்தை யான் இவளுக்குச் சென்று விடுவல் என்று துணிந்து; மயல் பகை ஊட்ட-பித்துண்டாக்குகின்ற இயற்கைக்கு மாறான மருந்தை வஞ்சகமாக ஊட்டிவிடா நிற்ப; என்க.
(விளக்கம்) என்னோடு உவளகத்தில் இருப்பினும் இருக்க என்றவாறு இளங்கொடி: மணிமேகலை. ஓடு-பிச்சைப் பாத்திரம். கூஉய்-கூவி; அழைத்து கொங்கவிழ் குழலாள்: இராசமாதேவி அகநகர்-ஆகு பெயர். எறிதரும் என்புழி தரும் பகுதிப் பொருட்டு. கோலம்-தன்மை பகை-பகையான மருந்து
இதுவுமது
41-50: மறுபிறப்பு............அணைதலும்
(இதன் பொருள்) மறு பிறப்பு உணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக-மறு பிறப்பினையும் அறிந்துள்ள அறிவுவன்மையுடைய மணிமேகலை அம் மருந்து காரணமாக யாதொன்றினையும் மறத்தல் இல்லாத இயற்கை அறிவோடு பண்டு போல விளங்காநிற்ப அதுகண்ட இராசமாதேவி; கல்லா இளைஞன் ஒருவனை கூஉய் வல்லாங்கு செய்து-கல்லாக் கயவன் ஒருவனை மழைத்து ஏடா! உன்னால் இயலுமளவும் ஏதெனினும் செய்து; மணிமேகலை தன் இணைவளர் இளமுலை ஆகத்து புணர்குறி செய்து-மணிமேகலையினுடைய ஒன்றற்கு ஒன்று இணையாக வளருகின்ற இளைய முலைகளையுடைய உயர்ந்த அழகிய உடம்பின்கண் நீ புணர்ந்ததற்குரிய அடையாளங்களைச் செய்துவிட்டு; பொருந்தினள் என்னும் பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை என்று மணிமேகலை உன்னைக் காமுற்றுப் புணர்ந்தாள் என்னும் தன்மையையுடைய திட்பமான மொழிகளை நகரமாந்தர் பலருக்கும் கூறிப் பழி தூற்றுவாயாக என்று கற்பித்து; காணம் பலவும் கைநிறை கொடுப்ப-இத்தீச் செயலுக்கு அவன் உடன்படும் பொருட்டுக்கைக் கூலியாகப் பொற்காசுகள் பலவற்றையும் அவன் கை நிறையும்படி கொடுத்து ஏவ; ஆங்கு அவன் சென்று அ ஆயிழை இருந்த பாங்கில் ஒருசிறைப்பாடு சென்று அணைதலும்-அக் கய மகனும் அம் மணிமேகலை இருந்த பக்கத்தில் ஒரு புறமாகச் சென்று சேர்தலும்; என்க.
(விளக்கம்) மறு பிறப்புணர்ந்தாள் என்றது மணிமேகலையின் அறிவுப் பெருமையைக் குறிப்பாக உணர்த்தி அவ்வறிவாற்றலால் மருந்தின் ஆற்றலை அடக்கிப் பண்டு போலவே யிருந்தாள் என்பதற்குக் குறிப்பேது வாய் நின்றது. ஈண்டு இவ்வரசியின் இவ்விழிதகவு குறித்தே சாத்தனார் இவளைப் பண்டே அரக்கர் குலப்பாவை என்று அறிவுறுத்தினர் என்றுணர்க, இம் மருந்து நோய் உண்டாகுதலின் பகைமருந்து எனப் பட்டது. பகை: ஆகு பெயர். அயர்ப்பது-மறப்பது. பித்தேறியவர் ஒன்றை நினைத்து அதைச் சொல்லி முடிப்பதற்குள் அதனை மறந்த மற்றொன்றனைப் பேசுவர் ஆதலின் பித்தேறாமையை அதன் பண்புக் கேற்றி அயர்ப்பது செய்யா அறிவு என்றார். தீவினை செய்தற்கு உøம்படல் வேண்டிக் கல்லாக் கயமகனை அழைத்தாள் என்க. வல்லாங்குச் செய்து என்றது வலிந்துபுணர்க. வலிமையினால் அவளை வலிந்து பற்றிய புணர்க எனல் வேண்டியவள் தான் பெண்ணாகலின் இடக்கரடக்கி, வல்லாங்குச் செய்து என்றாள். ஆகத்துப் புணர்குறி பான்மை-முறைமை. கட்டுரை-கட்டிக் சொல்லும் பொய்ம்மொழி. காணம்-பொற்காசு. கைநிறை கொடுப்ப: விகாரம் இருந்த பாங்கு இருந்த பக்கம். ஒரு சிறைப்பாடு-ஒரு புறத்தில்
மணிமேகலையின் செயல்
51-60: தேவி.............அடைப்ப
(இதன் பொருள்) ஆயிழை-மணிமேகலை; இது தேவி வஞ்சம் எனத் தெளிந்து-ஆடவர் வரலாகா இடத்தில் இங்ஙனம் ஒரு முடலையாக்கையின் வருதற்குக் காரணம் இராசமாதேவியின் வஞ்சமே என்று நன்கு தெரிந்துகொண்டு; நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி ஆண்மைக் கோலத்து இருப்ப-நாவினால் ஓதுகின்ற மந்திரத்தை அஞ்சாமல் ஓதி அக் கயவனும் அஞ்சத் தகுந்த முடலையாக்கை ஆடவன் உருக்கொண்டு மணிமேகலையும் இருத்தலாலே; காணம் பெற்றோன் கடுந்துயர் எய்தி-கைக்கூலி பெற்ற அக் கயமகன் அங்கிருந்த ஆடவன் உருவத்தைக் கண்ணுற்று இவனால் நமக்குத் தீங்கு உண்டாகுமோ என்னும் அச்சத்தால் பெருந்துன்பமடைந்து; அரசர் உரிமையில் ஆடவர் அணுகார்-மன்னருடைய உரிமை மகளிர் இருக்கும் உவளகத்தில் இத்தகைய ஆடவர் அணுகுதல் இலர் ஆகவும் இங்கு ஒருவன் இருக்கின்றான்; நீராய் கொடுமகள் நினைப்பு அறியேன் என்று அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின்-நரகத்தில் வீழ்தற்குரிய அரசியாகிய இக் கொடும் பாவியின் கருத்து யாதென்று யான் அறிகின்றிலேன் யாதாயினும் ஆகுக யான் இங்கு இரேன் என்று துணிந்து அகநகரத்தைக் கைவிட்டு அக் கயமகன் ஓடிப்போன பின்னரும்; மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று-நம் மகனைக் கொலையுண்ணும் அளவிற்குக் காமநோய் செய்து விட்டவளை இவ்வாறு இன்புற்றிருப்ப விட்டு வைத்திருப்பது என்ன பேதைமை என்று செற்றங்கொண்டவளாய்; உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என பொய் நோய் காட்டி புழுக்கு அறை அடைப்ப-பிற மகளிர்க்குத் தன் தீவினையை மறைத்தற்பொருட்டு மணிமேகலை பிழைக்க முடியாத நோயையுடையளாய் உண்ணுதலையே கைவிட்டாள் என்று சொல்லி ஏனைய மகளிர்க்குத் தான் படைத்த பொய் நோயை மெய்போலக் கூறிக் காட்டிய புழுக்கமிக்க நிலவறையிலிட்டு அடைத்து வைப்ப என்க.
(விளக்கம்) அரசர் உரிமையில் ஆடவர் அணுகார் என்பது பற்றி உவளகத்தில் தான் இருக்குமிடம் நோக்கி ஆடவன் ஒருவன் வருதல் கண்டு இதுவும் தேவியின் வஞ்சம் என்று அவன் தன்னைக் காணு முன் அவன் கண்டு அஞ்சத்தகுந்ததோர் ஆணுருவம் கொண்டு மணிமேகலையிருந்தாள் என்பது பாட்டிடைவைத்த குறிப்பினால் பெற்ற பொருள் என்னை? காணம் பெற்றோன் அவ்வாடவனைக் கண்டு கடுந்துயர் எய்தி என்றமையால். கடுந்துயர் எய்துதற்குக் காரணம் அவ்வாடவன் உருவத்தைக் கண்டு இவன் அஞ்சினான் என்பதன்றிப் பிறிதில்லையாகலின் என்க. நிரயக்கொடுமகள் நினைப்பு அறியேன் எனப் பாட்டிடை வைத்தமையால் இராசமாதேவி இவ்வாறு முருட்டுயாக்கை ஆடவரை யழைத்து அவரொடு காமக்களியாட்டம் செய்யும் வழக்க முடையாள் போலும் ! என்னையும் அது குறித்தே அழைத்திருப்பாள் என்றஞ்சி ஓடிப்போனான் என்க. அங்ஙனம் ஓடியவன் கயவனாகலின் ஊர்முழுதும் தூற்றியும் இருப்பன். ஈண்டு,
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு (குறள், 204)
எனவும்
அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான் (குறள், 1076)
எனவும் வரும் திருக்குறள்கள் நினைக்கப்படும்
இராசமாதேவியின் கழிவிரக்கம்
61-66 : ஊண்.......தொழ
(இதன் பொருள்) அந்த வாள் நுதல்-புழுக்கறையில் இடப்பட்ட ஒளியுடைய நுதலை உடைய மணிமேகலை-ஊண் ஒழி மந்திரம் உடைமையின் மேனி வருந்தாது இருப்ப-உணவின்றியும் நீண்ட நாள் இருத்தற்குரிய மந்திரம் தன்பால் இருத்தலால் அதனை யோதிச் சிறிதும் திருமேனி வாடாமலும் மனம் வருந்தாமலும் மகிழ்ந்திருப்ப; ஆயிழை ஐயென விம்மி நடுங்கி-இராசமாதேவி ஐயென்று பெரிதும் வியந் அத்தகையாளுக்கு அறியாது செய்துவிட்ட தன் தீவினையால் யாது நிகழுமோவென்றும் அச்சத்தால் உளம் விம்மி அழுது நடுங்கி மணிமேகலையை நோக்கி அந்தோ; என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது செய்தவத்தாட்டியை சிறுமை செய்தேன்-யான் பெற்ற செய்தவத்தாட்டியை சிறுமை செய்தேன்-யான் பெற்ற மகனுக்கு எய்திய துன்பத்தைப் பொறுக்க ஒண்ணாமல் செய்கின்ற தவவொழுக்கத்தை முழுவதும் ஆளுகின்ற தெய்வத் தன்மையுடைய உனக்குத் தீமை செய்தொழிந்தேனே என்று கழிவிரக்கம் கொண்டவளாய்; பொன் ஏர் அனையாய்-பொன் போலும் அழகுடையாய்; அறியாமையால் செய்த என் பிழையைப் பொறுத்தருளுக என்று அவ்விராசமாதேவி கைகூப்பித் தொழாநிற்ப; என்க.
(விளக்கம்) ஊண்-உணவு: வாணுதல்: மணிமேகலை. ஐ-வியப்பு ஒன்றனைக் கண்டு வியப்போர் ஐயென்று வாயாற் சொல்லி வியத்தலும் உண்டு ஐ வியப்பாகும் என்பது தொல்காப்பியம், ஆயிழை: இராசமாதேவி, செய்தவத்தாட்டியை: முன்னிலைப் புறமொழி. சிறுமை-துன்பம். ஏர்-அழகு. பொன் போன்ற அழகுடையாய் என்க. பொறுக்க என்பதன் ஈற்றுயிர் கெட்டது. அவள்: இராசமாதேவி.
மணிமேகலை இராசமாதேவிக்குக் கூறும் அறிவுரை
67-75: நீலபதி.................யாரே
(இதன் பொருள்) நீலபதி தன் வயிற்றில் தோன்றிய ஏலம் கமழ்தார் இராகுலன் தன்னை அழல்கண் நாகம் ஆர் உயிர் உண்ண விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள்-முற்பிறப்பிலே நீலபதி என்னும் அரசியின் வயிற்றில் பிறந்த ஏலமணம் கமழும் மலர்மாலையையுடைய இராகுலனை(இப் பிறப்பில் உதயகுமரனாகப் பிறந்தானை) தீப்போன்ற கண்ணையுடைய நாகப் பாம்பு அரிய உயிர் உண்டற்குக் கண் விழித்தமையைப் பொறேனாய் (அவன் மனைவி இலக்குமியாயிருந்த யான்) என் உயிரைத் தீக்குளித்துச் சுட்ட அந்த நாளிலே; இளங்கோன் தனக்கு யாங்கு இருந்து அழுதனை-இப் பிறப்பில் உன் வயிற்றிற் பிறந்து அரசிளங் குமரனாகிய இவனுக்கு எவ்விடத்தில் இருந்து நீ அழுதாய் கூறுதி பூங்கொடி நல்லாய்-பூங்கொடி போலும் அழகுடைய அரசியே! இப்பொழுது; பொருந்தாது செய்தனை-அழுகின்ற நீ தானும் பொருத்தமின்றி அழுகின்றாய், எற்றால் எனின்; உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ-இப்பொழுது கொலையுண்ட நின் மகனுடைய உடல் அழிந்தமை கண்டு அழுதாயோ அல்லது அவன் உயிர் போயிற்று என்று அழுதாயோ இவற்றுள் எது பற்றி அழுதாலும் அறியாமையே யாம், என்னை? உடற்கு அழுதனையேல் உன் மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டில் இட்டனர் யாரே-கண் கண்ட உடல் பற்றியே நீ அழுதிருத்தல் வேண்டும் அதற்கு அழுதால் நீ பெற்ற உன் மகன் உடம்பை எடுத்துப் போய்ச் சுடுகாட்டில் ஈமத்தீயிலேற்றி அழித்தது உங்களையன்றி வேறு யார்? ஆகவே நீங்களே அழித்துவிட்டு அழுதல் எற்றிற்கு என்றாள்; என்க.
(விளக்கம்) முற்பிறப்பில் உன்மகன் நீலபதி என்னும் அரசி மகனாய் இராகுலன் என்னும் பெயரோடு இருந்தான்; அவனுக்கு இலக்குமி என்னும் பெயரோடு யான் மனைவியாய் இருந்தேன்; இராகுலன் திட்டிவிடம் என்னும் பாம்பின் பார்வையால் இறந்தான்; அப்போது யான் தீயிற்பாய்ந் திறந்தேன் முற்பிறப்பில் இறந்த மகனுக்கு அழாத நீ அங்ஙனமே இப் பிறப்பில் இறந்தவனுக்கு மட்டும் அழுவதேன்? அன்றியும் நீ பெற்றது அவன் உடலை மட்டுமே; அவ்வுடலைத் தீயிலிட்டுச் சாம்பர் ஆக்குவானேன்? ஆக்கியபின் அழுவானேன்? இவ்வாற்றால் நீ பொருந்தாது செய்தனை என்று அறிவுறுத்தபடியாம்.
அழற்கண்-தீப்போலும் நஞ்சையுடைய கண். விழித்தல்-அவன்மேல் விழித்துக் கொல்லுதல். யாங்கிருந்தழுதனை என்னும் வினா அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்து நின்றது.
இதுவுமது
76-79: உயிர்க்கு.............வேண்டும்
(இதன் பொருள்) உயிர்க்கு அழுதனையேல்-உயிர் போனதற்கு அழுதேன் என்பாயாயின் அதுவும் பொருத்தமின்று என்னை? உயிரை நீ ஈன்றாயுமல்லை கண்டாயுமல்லை ஆதலின்; செயப்பாட்டு வினையால் உயிர் புகும் புக்கில்-தன்னால் செய்யப்பட்ட பழவினைக்கேற்ப போனவுயிர் சென்று புகும் உடம்பாகிய இடம்; தெரிந்து உணர்வு அரியது-எவ்விடத்தது என்று அறிந்து கொள்ளுதல் நம்மனோர்க்கு அரியதாம்; ஆய்தொடி அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின்-கோப்பெருந்தேவியே நின்னால் பெறப்படாத தேனும் உயிரிடத்தே யான் பெரிதும் அன்புடையேன் ஆதலால் அழுகின்றேன் என்பாயாயின் அதுவும் பொருத்தமின்று. என்னை? எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்-உயிர்களில் வேற்றுமையின்மையால் உடம்பைவிட்டுப் போகின்ற உயிர் எல்லாவற்றிற்கும் நீ இவ்வாறு அழுதல் வேண்டும், அங்ஙனம் செய்கின்றலை ஆதலான் என்றாள்; என்க
(விளக்கம்) உயிரை அன்றும் காணாய் இன்றும் காணாய் என வரும்(கபிலரகவல்) பிற்றை நாள் செய்யுள் இதனைப் பின்பற்றி வந்தது உயிர் அவ்வவற்றின் வினைக்கேற்பத்தாமே பிறந்தும் இறந்தும் சுழல்வன அது பற்றி நீ அழுதல் பேதைமை.
இதுவுமது
80-90: மற்றுன்.................உரைத்து
(இதன் பொருள்) மா பெரும் தேவி மற்று உன் மகனை செற்றகள் வன் செய்தது கேளாய்-கோப்பெருந்தேவியே! உன் மகனாகிய உதயகுமரனைச் சினந்து கொன்றவன் காஞ்சனன் என்னும் விச்சாதரன் ஆவான். அவன் அங்ஙனம் செய்ததற்குரிய காரணமாகிய தீவினையை யான் கூறுவல் கேட்டருளுக; மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணி செய்தாங்கு உருத்து எழும் வல்வினை-உன் மகன் இராகுலனாய் இருந்த முற்பிறப்பிலே அடிசிற்கலங்கள் சிதைந்துபோம்படி வழுக்கி அவற்றின் மேல் வீழுந்த தன் மடைத் தொழிலாளனை வாளால் உடல் துணியும்படி எறிந்து கொன்றமையால் உருத்து வந்த அக் கொடிய தீவினையானது; நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி-நஞ்சு விழி படைத்த நாகப்பாம்பினால் அப் பிறப்பிலேயே அவனது நல்ல உயிரைக் கவர்ந்ததோடு அமையாமல்; விஞ்சையன் வாளால் வீட்டியது-நின் மகனாகப் பிறந்த இப் பிறப்பினும் தொடர்ந்து வந்து விச்சாதரன் ஒருவன் வாளினாலே கொன்றொழித்தது காண்; இது நீ எங்ஙனம் அறிந்துகொண்டாயோ என்று என்னை வினவுதல் கூடும், அங்ஙனம் வினவுவாயாயின்; பூங்கொடி நல்லாய் புகுந்தது இது என-மலர்க்கொடி போலும் அழகுடைய மாபெருந்தேவியே! யான் அறிந்து கொள்ள நிகழ்ந்த நிகழ்ச்சி இது, அதனைக் கூறுவேன் கேள் என்று தொடங்கி; மெய்ம் மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா தெய்வக் கட்டுரை தெளிந்ததை ஈறா உற்றத்தை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து செறிந்த மலரையுடைய பூம்பொழிலாகிய உவவனத்திற்கு மலர் கொய்யும் பொருட்டுத் தான் சுதமதியோடு கூடிப் புகுந்தது முதலாக உலகவறவியின்கண் கந்திற்பாவைமேனிற்கின்ற துவதிகன் என்னும் தெய்வம் உதயகுமரன் கொலையுண்ட பின்னர் எடுத்துக் கூறிய பொருள் பொதிந்த மொழிகளால் தான் தெளிந்தது ஈறாக நிகழ்ந்தவற்றை எல்லாம் ஒன்றும் ஒழியாமல் எடுத்துக் கூறி என்க.
(விளக்கம்) செற்றகள்வன் என்றது சினந்த காஞ்சனனை உதயகுமரன் அறியாவண்ணம் பின்புறத்தே நின்று உயிர் கவர்ந்தான் ஆகலின் அவனைக் கள்வன் என்று உருவகித்தாள். செய்தது என்றது செய்ததற்குரிய காரணத்தை என்பதுபடநின்றது. மடைக்கலம்-அட்டிற்கலம். மடையன்-மடைத்தொழில் செய்பவன்; உண்டி சமைப்பவன். நஞ்சுவிழி அரவு-திட்டிவிடம். வீட்டியது-கொன்றது. யாங்கு-எவ்வாறு. புகுந்தது-நிகழ்ந்தது. பூம்பொழில் என்றது உவவனத்தை. தெய்வக் கட்டுரை-கந்திற்பாவை கூறிய பொருள் பொதிந்தசொல், தெளிந்ததை என்புழி ஐகாரம் சாரியை. ஈறாக என்பதன்கண் ஈற்றுயிர்மெய் தொக்கது. எல்லாம் என்பது எஞ்சாமைப்பொருட்டு. ஒழிவின்று என்பதில் குற்றியலிகரம் குற்றியலுகரமாயிற்று; செய்யுளாகலின்.
இதுவுமது
91-99: மற்று..............கொண்டிலேன்
(இதன் பொருள்) மணிமேகலைதான் மற்றும் உரை செய்யும்-பின்னர் அம் மணிமேகலை மேலும் சொல்லுகின்றாள்; மயல் பகை ஊட்டினை மறுபிறப்பு உணர்ந்தேன் அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன்-தேவியே! நீதானும் அறிவினை மயக்கப் பித்தேற்றும் பகை மருந்தினை எனக்கு ஊட்டினை யானோ மறுபிறப்பு உணருமளவிற்கு அறிவாற்றல் உடையேன் ஆகலின் பித்துடையார் போன்று தன்னைத்தான் மறந்திடாத நல்லறிவு உடையேனாயிருந்தேன்; நல்லாய் -நன்மை மிக்க அரசியே நின் ஏவலால்; கல்லாக் கயவன் கார் இருள் தான் வர நான் ஆண் உரு கொண்டிருந்தேன்-கல்லாத கயவன் ஒருவன் கரிய இருளின்கண் என்பால் வரும் பொழுது யான் ஆணுருக் கொண்டு தப்பினேன்; மாண் இழை செய்த வஞ்சம்-மாட்சிமையுடைய அணிகலன் அணிந்த இராசமாதேவியே! நீ பொய் நோய் காட்டி என்னைப் புழுக்கறையில் இட்ட வஞ்சகச் செயலினின்றும்; பிழைத்தது-யான் உயிர் தப்பியது; ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ-யான் உணவில்லாமலும் உயிரோடிருத்தற்குரிய மந்திரம் உடையேனாய் இருந்ததனாலன்றோ? அஃதின்றேல் இறந்து படுதல் தப்பாது; அந்தரம் சேறலும் அயல் உருக்கோடலும் சிந்தையில் கொண்டிலேன்-இவ்வாறன்றி நின் பாதுகாப்பினின்றும் வான் வழியே சென்று தப்பவும் வேற்றுருக் கொண்டு தப்பவும் யான் எண்ணுகிலேன் எனின்; என்க
(விளக்கம்) நல்லாய்: விளி மந்திரமுடைமையினன்றோ பிழைத்தது என்றது அஃதில்லையானால் இறந்தொழிவேன் என்பதுபட நின்றது. அந்தரம்-வானம் அயல் உருக்கோடல்-வேற்றுருக் கொள்ளுதல். இவற்றால் நின்னை விட்டு யான் போதல் கூடும்; ஆயினும் அவ்வாறு போவதற்கு யான் நினைந்திலேன் என்று சொல்லி மேலே அதற்கும் காரணம் கூறுகின்றாள் என்க.
இதுவுமது
99-103: சென்ற........கேளாய்
(இதன் பொருள்) தையால்-நங்கையே நின்னிடத்தினின்றும் ஓடிப்போதற்கு யான் நினையாமைக்குக் காரணம் கூறுவேன் கேள்; சென்ற பிறவியின் காதலன் பயந்தோய் கடுந்துயர் களைந்து தீது உறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டு-முற்பிறப்பிலே எனக்குக் காதலனாய் இருந்தவனை அவனது மறுபிறப்பின்கண் ஈன்ற தாய் அல்லையோ நீ? இவ்வாற்றால் எனக்கு மாமியாகிய உனக்கு வந்த கடுந்துன்பத்தைப் போக்கி மேலும் தீமை வருவதற்குக் காரணமான தீவினைகளை நின்னிடத்திருந்து ஒழிக்க வேண்டும் என்னும் என் விருப்பமே அதற்குக் காரணமாம், இதுகாறும் கூறியவற்றால்; உன் தன் தடுமாற்று அவலத்து எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் உன்னுடைய மனம் தடுமாறுதற்குக் காரணமான துன்பத்தையுடைய அறியாமையாகிய மயக்கத்தைக் கைவிட்டு இனி யான் கூறுகின்ற இனிய அறிவுரைகளைக் கேட்டருளுக; என்க.
(விளக்கம்) காதலன் என்றது இராகுலனை. பயந்தோய்-ஈன்றோய் மகன் இறந்தமையால் வந்த துன்பமாகலின் கடுந்துயர் என்றாள். இனி தீவினை செய்யாமல் தீர்க்கவேண்டுமென்னும் விருப்பம் காரணமாக என்க. தையால்: விளி. எய்யா மையல்-அறியாமைக்குக் காரணமான மயக்கம்.
மணிமேகலை காமம் முதலியவற்றால் வரும் தீவினைகளை விளக்குதல்
104-111: ஆள்பவர்....................நீத்தும்
(இதன் பொருள்) ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு காருக மடந்தை-நாட்டை யாளும் அரசர் கொடுங்கோன்மையால் கலக்குறப்பட்டு அறம் தலைதடுமாறிய நல்ல நாட்டின்கண் பண்டு இல்லறம் நடத்திய நங்கை ஒருத்தி தன்; கணவனும் கைவிட கணவனாலும் கைவிடப்பட்டு ஈன்ற குழவியொடு தான் வேறு ஆகி மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி-தான் ஈன்ற குழவியையும் கைவிட்டுத் தான் தமியளாய்ப் பிரிந்து போய் மயங்கி மனம் போனதொரு திசையிலே போய் ஆங்கோர் ஊரின்கண் வரைவின் மகளாய் வாழ்கின்ற காலத்திலே; புதல்வன் தன்னை ஓர் புரிநூல் மார்பன் பதியோர் அறியா பான்மையின் வளர்க்க-அவள் கைவிட்ட குழந்தையை ஒரு பூணுநூல் அணிந்த மார்பையுடைய ஒரு பார்ப்பனன் அவ்வூர்வாழ் மாந்தர் அறியாததொரு முறைமையாலே தன் பிள்ளை போல வளர்த்துவிட; ஆங்கு அப் புதல்வன் அவ்வாறு வளர்க்கப்பட்ட அம்மகன்; அவள் திறம் அறியான்-தன் தாயிருந்த ஊருக்கு ஒரு காரியத்தை முன்னிட்டுச் சென்றவன் அங்குப் பொது மகளாய் வாழ்க்கை நடத்திய தன் தாயைப் பொதுமகள் என்றே நினைத்து; தான் புணர்ந்து-அவளைப் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும்-பின்பு தாயென்றறிந்து அத் தீவினை பொறாமல் அவன் தன் உயிரை விட்டதும் என்க.
(விளக்கம்) ஆள்பவரால் கலக்குற மயங்கிய நாடு என்க. இது மடந்தையைக் கணவன் கைவிடவும் குழவியை அவள் பிரிந்து போதற்கும் ஏதுவாய் நின்றது. குழவியொடு: உருபுமயக்கம் வரையாளாய்-கற்பொழுக்கத்தை வரைந்து கொள்ளாது வலை மகளாய் என்க. பதியோர்-ஊரிலுள்ளோர். அவள்திறம்-அவள் தன் தாயென்னும் செய்தி. புணர்ந்தபின் அறிந்து என்க. இது காமத்தின் தீமைக்கு ஒன்று காட்டியவாறு.
இதுவுமது
112-119: நீர்நசை.............கண்ணி
(இதன் பொருள்) வாள் தடம் கண்ணி-வாள்போலும் நீண்ட பெரிய கண்ணையுடைய அரசியே; நீர்நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும் சூழ்முதிர் மடமான்-நீரை விரும்பும் வேட்கையினாலே நெடிய காட்டின்கண் நீர்நிலை தேடித் திரிகின்ற சூல் முதிர்ந்த இளைய மானினது; வயிறு கிழித்து ஓட கானவேட்டுவன் கடுங்கணை துரப்ப மான்மறி விழுந்தது கண்டு-வழிற்றைக் கிழித்து அப்பாலும் ஓடும்படி அக் காட்டில் வாழுகின்ற வேடன் ஒருவன் கடிய அம்பினைச் செலுத்துதலாலே அப் பெண்மான் விழுந்ததனைக் கண்டு ;மனம் மயங்கி நெஞ்சு கலங்கி; பயிர்க்குரல் கேட்டு அதன் பான்மையனாகி-அம் மான் தன் இனத்தை யழைக்குங் குரலைக் கேட்டு அதன் அருகிலே சென்று பார்த்து; உயிர்ப்பொடு செங்கண் உகுந்த நீர் கண்டு-சாகின்ற அந்த மான் நெட்டுயிர்ப்பெறிதலோடு துன்ப மிகுதிபால் தனது சிவந்த கண்ணினின்றுஞ் சொரிந்த நீரைப் பார்த்து; ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும்-அதன் மேல் அம்பு செலுத்திய வேடன் தான் செய்த அத் தீவினைக் காற்றாமல் ஒப்பற்ற தன்னுயிரையே துறந்த செய்தியை கேட்டும் அறிதியோ-நீ கேள்வி வாயிலாகவேனும் அறிவாயோ என்றாள்; என்க.
(விளக்கம்) நசை-வேட்கை-நச்சுதலாலே உண்டாகும் விருப்பம் மான் மறி-அம் மானின் சூலிலிருந்த குட்டிமான் எனினுமாம். ஓட்டி எய்தோன் என்றது சுட்டுப்பெயர் மாத்திரையாய் நின்றது. இது கொலையின் தீமைக்கு ஒன்று காட்டியவாறு.
இதுவுமது
120-130: கடாஅ...........காரிகை
(இதன் பொருள்) கள் காமுற்றோர்-கள்ளை விரும்பிப் பருகியவர் கடாஅ யானைமுன் விடாஅது சென்று அதன் வெள் கோட்டு வீழ்வது-மதம் பொருந்திய யானை முன் அணுகுதலை அக் களிப்புக் காரணமாக விலக்காமல் சென்று அந்த யானையின் வெள்ளிய கொம்பினால் குத்துண்டு சாவது; உண்ட கள்ளின் அறிதியோ-அழகுடைய அரசியே! நீ கண்டிருக்கின்றாயோ; பொய் ஆற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர்-வஞ்சகமாக ஒழுகும் ஒழுக்கத்தைப் பொருள் என்று கருதியவர்; கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ-கையறுதலுக்குக் காரணமான துன்பமாகிய கடலில் அழுந்துதலன்றி உய்ந்ததும் இவ்வுலகில் உளதாகுமோ? ஆகாது காண்; இளவேய் தோளாய்க்கு-பச்சை மூங்கில் போன்ற தோளையுடைய இராசமாதேவியாகிய உனக்கு; களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந்துயர் இது என வேண்டா-வயலில் ஏர் உழுது வாழ்வதை வெறுத்துக் களவுத் தொழிலையே ஏர்த் தொழிலாகக் கொண்டு வாழுகின்ற மாக்கள் எய்துகின்ற கடிய துன்பத்தின் தன்மையை இத்தகையது என்று யான் கூறியும் காட்ட வேண்டுமோ; மன்பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை-நிலைபெற்ற பெரிய இவ்வுலகத்தின்கண் வாழுகின் மாந்தர்களுக்கு இங்குக் கூறப்பட்ட காமம், கொலை, கள், பொய், களவு ஆகிய ஐந்தும்; துன்பம் தருவன- பெரிய துன்பங்களை உண்டாக்கும் ஆதலால்; துறத்தல் வேண்டும்-இவற்றைத் துவர விட்டொழித்தல் வேண்டும்; அங்ஙனம் ஒழியாவிடின். கற்ற கல்வி காரிகை அன்று-அவர் கற்ற கல்வியானது அவர்க்கு அழகாகாது என்றாள்; என்க.
(விளக்கம்) கடாஅயானை-மதங்கொண்ட யானை. கள் காமுற்றோர்-கள்ளை விரும்பி உண்டு களித்தோர் கள்ளுண்டு களித்தவர் அறிவு கெடுதற்கு ஒன்று காட்டுவாள் மதயானையின் முன்சென்று அதன் கொம்பால் குத்துண்டு சாதலைக் கூறினாள், பொய்யாற்று ஒழுக்கம்-பொய் கூறி அந் நெறியில் ஒழுகுதல்; கள்வேர் வாழ்க்கை-களவுத் தொழிலை உழவுத் தொழில் போல மேற்கொண்டு ஒழுகும் வாழ்க்கை. கைப்பொருள் வவ்வம் களவேர் வாழ்க்கைக் கொடியோர் என்பது பெரும்பாணாற்றுப்படை(40-45). இங்கு இவை-இங்கு எடுத்துக் காட்டப்பட்ட காமம் முதலிய ஐந்து துன்பம் தருவன ஆதலால் துறத்தல் வேண்டும் என்க. காரிகை அன்று என மாறுக.
ஞான நன்னீர்
131-139: செற்றம்...........வார்த்து
(இதன் பொருள்) மல்லன் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்-வளம் பொருந்திய பெரிய இந் நிலவுலகத்தில் வாழ்வாங்கு வாழ்பவர் என்று சொல்லத் தகுந்தவர் யாரெனின் தமதுள்ளத்தின்கண் வெகுளி தோன்றாமல் முழுதும் அடக்கியவரும் நன்மை தீமைகளை முழுவதும் ஆராய்ந்தறிந்தவரும்; அல்லன் மக்கட்கு இல்லது நிரப்புநர்-வறுமையால் அல்லல் உறும்மாக்கட்கு அவர்பால் இல்லாத பொருள்களை வழங்கி அக் குறையைத் தீர்த்து விடுபவரும் ஆவார்; திருந்து ஏர் எல்வளை-திருத்தமான அழகையும் ஒளியையும் உடைய வளையலையணிந்த கோப்பெருந்தேவியே; செல் உலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்-இனித் தாம் செல்லுதற்குரிய மேனிலையுலகிற்கு நெறியறிந்தோர் யாரெனின் பசியினால் துன்புற்றுத் தம்பால் வந்தடைந்த வறியோருடைய ஆற்றுதற்கரிய அப் பசியைத் தீர்த்தவரே யாவர்; துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர்-பிறவித் துன்பத்தை அறுத்து உய்தற்குரிய தெளிந்த பொருளையறிந்தவர் யாரெனின்; மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்-உயிர்களிடத்தெல்லாம் அன்பு செலுத்துதலில் ஒழியாத சான்றோர்களே யாவர்; என ஞான நன்னீர் நன்கனம் தெளித்து தேன் ஆர் ஓதி செவி முதல் வார்த்து-என்று சொல்லிமெய்யறிவாகிய நல்ல தண்ணீரை நன்றாக அவள் துன்ப நெருப்பின் மேல் தெளித்தும் வண்டுகள் பொருந்திய கூந்தலையுடைய அவ்வீராசமாதேவியின் செவியினுள்ளே வார்த்தும் என்க.
(விளக்கம்) செற்றம்-வெகுளி. அல்லல் மாக்கள்-துன்புறும் வறியவர்-செல்லுலகு-இனிச்செல்ல வேண்டிய மேனிலையுலகு. துன்பம் அறுத்தல்-பிறவித் துன்பத்தைப் போக்குதல் துணிபொருள்-தெளிந்த மெய்ப்பொருள், ஞானமாகிய நீர் என்க. தேன்-வண்டு, செவிமுதல் செவியில்.
மணிமேகலையை இராசமாதேவி தொழுதலும் அதனை மறுத்து மணிமேகலை தானே தொழுதலும்
140-147: மகன்.........வணங்கினளென்
(இதன் பொருள்) மகன் துயர் நெருப்பா மனம் விறகாக அகம் சுடு வெந்தீ ஆயிழை அவிப்ப-தன் மகனாகிய உதயகுமரன் கொலையுண்டமையா லுண்டான துன்பமே நெருப்பாகவும் தன் மனமே அந்நெருப்புப் பற்றி எரியும் விறகாகவும் இராசமாதேவியின் உள்ளுள்ளே சுட்டெரிக்கின்ற வெவ்விய அத் துன்பநெருப்பினை மணிமேகலை அவித்துவிடுதலாலே இராசமாதேவி; தேறுபடு சில் நீர் போல தெளிந்து மாறுகொண்டு ஓரா மனத்தினள் ஆகி-தேற்றாங் கொட்டை தீற்றப்பட்ட கலத்தின்கண் உள்ள சிறிய நீர் தெளிவது போலத் தெளிவடைந்து மணிமேகலையைப் பகைமைக்குணம் கொண்டு ஆராயாத அன்புடைய மனத்தையுடையவளாய்; ஆங்கு அவள் தொழுதலும் ஆயிழை பொறாஅள் தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை-அப்பொழுது அவ்விராசமாதேவி மணிமேகலையைக் கைகூப்பித் தொழா நிற்றலும் அது கண்ட மணிமேகலை மனம் பொறாளாய்த் தானே கை கூப்பித் தொழுது நின்று பாராட்டிக் கோப்பெருந்தேவியே நீ என்னைத் தொழுவது தகுதியன்று ஏனெனில்; காதலன் பயந்தோய் அன்றியும் காவலன் மாபெரும் தேவி என்று எதிர் வணங்கினள்-நீ என் கணவனை ஈன்ற தாய் அல்லையோ அல்லாமலும் எல்லா மக்களாலும் தொழத்தகுந்த கோப்பெருந்தேவியும் ஆவாய் ஆதலின் என்று சொல்லித் தொழுகின்ற அரசியின் முன்னர்த் தலை வணங்கி நின்றாள் என்பதாம்.
(விளக்கம்) மகன் இறந்தமையால் உண்டான துன்பம் என்க. அகம் உள்ளிடம் ஆயிழை: மணிமேகலை. தேறு-தேற்றாங்கொட்டை. கலத்தின் நீர் என்பதுபடச் சின்னீர் என்றார். மாறு-பகைமை காதலன் என்றது உதயகுமரனை.
இனி, இதனை மூதாட்டி அருளால் சென்றெய்தி தொழுது முன்னின்று வாழ்த்தி, மன்னவன்றன் முன் துன்பங்கொள்ளேல் என்று போயபின் அஞ்சிலோதி கரந்து அடக்கிக் கொண்டு மறைத்து, மணிமேகலையை வஞ்சஞ் செய்குவல் என்று ஒருநாள் அரசனுக்கு சிறைதக்கதன்று என தீர்க்க என்று இறைசொல், குழலாள் அவளைக் கூஉய்ப் புக்கு, செய்குவல், என்று ஊட்ட அறிவினளாக; கொடுப்ப அணைதலும், இருப்ப, போயபின், அடைப்ப, இருப்ப, அவள் தொழ, மணிமேகலை ஒழிவின்றுரைத்து மற்றும் உரை செய்யும்: அங்ஙனமுரை செய்பவள் அவிப்ப, அவள் தொழுதலும், ஆயிழை பொறாஅளாய், மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினளென இயைத்துக் கொள்க.
சிறைவிடுகாதை முற்றிற்று.