வரலட்சுமி விரதத்தன்று இதை சுமங்கலிகளிடம் சொன்னால் நன்மை உண்டாகும். பத்ரசிவன் என்ற மன்னரின் மனைவி கரசந்திரிகா. இவர்களுக்கு சியாமபாலா என்னும் மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தனக்கு ஒரு மகன் இருந்தால் அரண்மனை யிலேயே இருப்பானே என கரசந்திரிகா கவலைப்பட்டாள். வரலட்சுமி விரதம் இருந்தால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பதை கரசந்திரிகாவிடம் தெரிவிக்க வயதான சுமங்கலி கோலத்தில் மகாலட்சுமி வந்தாள். விரத மகிமை தெரியாத கரசந்திரிகா ’எனக்கு புத்தி சொல்ல நீ யார்?’ என்று கூறி அவமானப் படுத்தினாள்.
உடனே மகாலட்சுமி அவளது மகள் சியாமபாலா வீட்டுக்குச் சென்று நடந்ததை தெரிவித்தாள். மூத்த சுமங்கலியை அவமதித்த தன் தாய்க்காக சியாமபாலா மன்னிப்பு கேட்டதோடு விரதம் மேற்கொண்டாள். அதன் பயனாக செழிப்புடன் வாழ்ந்தாள். ஆனாலும் அவளது தாயின் செல்வம் குறைய தொடங்கியது. இந்நிலையில் சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அனுப்பினாள். அக்குடத்தின் மீது கரசந்திரிகா கையை வைத்ததும் பொற்காசுகள் கரியாக மாறின. பிறகு சியாமபாலாவின் மூலம் கரசந்திரிகா விரதமகிமையை உணர்ந்து நற்பலன் பெற்றாள்.