Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

9. கனாத்திறம் உரைத்த காதை மதுரைக் காண்டம் (11. காடுகாண் காதை) மதுரைக் காண்டம் (11. காடுகாண் காதை)
முதல் பக்கம் » சிலப்பதிகாரம்
10. நாடுகாண் காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
03:01

அஃதாவது - கோவலனும் கண்ணகியும் கனைசுடர் கங்குல் கால் சீயாமுன்னர் ஊழ்வினை உண்ணின்று செலுத்துதலாலே மாடமதுரை நகர்க்குச் செல்லும்பொருட்டுக் காவிரியின் வளங்கெழுமிய வடகரை வழியாகக் குடதிசை நோக்கிப் போகும் பொழுது காவிரி நாட்டின் கவினும் வளமும் கண்டு கண்டுவந்து தலமூதாட்டியாகிய கவுந்தியடிகளாரையும் வழித்துணையாய்ப் பெற்றுச் செல்வதனைக் கூறும் பகுதி என்றவாறு.

வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்ப
ஏழகத் தகரும் எகினக் கவரியும்   5

தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து,  10

பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி,
புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து  15

அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப்  20

பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவினும்
சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்என
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு,  25

மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி,
கலையி லாளன் காமர் வேனிலொடு
மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்   30

இலவந் திகையின் எயில்புறம் போகி,
தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து,  35

காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண்
இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க  40

மதுரை மூதூர் யாதுஎன வினவ,
ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்குத்,
தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்,  45

உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர் என்னோ உறுக ணாளரின்
கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன,
உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான்  50

மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன்.
பாடகச் சீறடி பரல்பகை உழவா
காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ
உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர்  55

மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர்
அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போதுமின் என்ற  60

காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
அடிகள் நீரே அருளிதிர் ஆயின்இத்
தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்என,
கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ:  65

வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,
மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்  70

கையறு துன்பம் காட்டினும் காட்டும்,
உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்,
மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும்.  75

கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ.
வயல்உழைப் படர்க்குவம் எனினே ஆங்குப்
பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி
நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின்  80

கலங்கலும் உண்டுஇக் காரிகை, ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக்
குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும்,  85

குறுநர் இட்ட குவளைஅம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்,
எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில்  90

பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை  95

நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன,
தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்
காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகெனப்  100

பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்,
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்  105

குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும்  110

ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும்  115

கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்,
உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய  120

கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக்
கருங்கை வினைஞரும் களமருங் கூடி  125

ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்,
கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து
சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்  130

வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்,  135

அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்,
தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும்,
பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டுஆங்கு  140

ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்,
உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு
மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை
இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து  145

மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை அன்றியும்,
பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்,  150

பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகிப்
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்:  155

ஆற்றுவீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக்
குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட  160

இலங்குஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளிப்
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்,
பண்டைத் தொல்வினை பாறுக என்றே
கண்டுஅறி கவுந்தியொடு கால்உற வீழ்ந்தோர்  165

வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்,
கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்:  170

ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்  175

அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன்  180

பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி
இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்  185

சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளி
ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது  190

போதார் பிறவிப் பொதிஅறை யோர்எனச்
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்
காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு
ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா,  195

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது என்நா,
ஐவரை வென்றோன் அடியிணை அல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்,
அருள்அறம் பூண்டோ ன் திருமெய்க்கு அல்லதுஎன்  200

பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது,
அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா,
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதுஎன்
தலைமிசை உச்சி தான்அணிப் பொறாஅது  205

இறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு அல்லது
மறுதிர ஓதிஎன் மனம்புடை பெயராது
என்றவன் இசைமொழி ஏத்தக் கேட்டுஅதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி
நிவந்துஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கிப்  210

பவம்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து,
கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று
நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி  215

மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும்
தீதுதீர் நியமத் தென்கரை எய்திப்
போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி
வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்  220

காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
ஆர்எனக் கேட்டுஈங்கு அறிகுவம் என்றே,
நோற்றுஉணல் யாக்கை நொசிதவத் தீர்உடன்
ஆற்றுவழிப் பட்டோ ர் ஆர்என வினவ,என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர்   225

பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்என,
உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ ? கற்றறிந் தீர்எனத்,
தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க,  230

எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை
முள்உடைக் காட்டின் முதுநரி ஆகெனக்
கவுந்தி இட்ட தவம்தரு சாபம்
கட்டியது ஆதலின், பட்டதை அறியார்
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு  235

நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்
செய்தவத் தீர்நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீ ரோஎன,   240
 
அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்எனச்
சாபவிடை செய்து, தவப்பெருஞ் சிறப்பின்  245

காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்
முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன்.

(கட்டுரை)

முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்  5

ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்  10

பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்  15

ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று.   20

(வெண்பா)

காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.

உரை

1 - 10 : வான்கண் ......... கழிந்து

(இதன்பொருள்:) வான்கண் விழியா வைகறை யாமத்து - உலகிற்குச் சிறந்த கண்ணாகத் திகழும் கதிரவன் தோன்றி விளங்குதலில்லாத வைகறை என்னும் யாமத்திலே; மீன் திகழ் வெள்மதி விசும்பின் நீங்க - விண் மீன்களோடு அழகுபெற்று இயங்காநின்ற வெள்ளிய திங்களானது வானத்தினின்று மேற்றிசையிற் சென்று மறைந்து விட்டமையாலே; கார் இருள் நின்ற கடைநாள் கங்குல் - அந்த நாளின் இறுதிப் பகுதியிலே கரிய இருள் நிற்றற்குக் காரணமான இரவின்கண்; வினை ஊழ் கடைஇ உள்ளம் துரப்ப - இவன் முற்பிறப்பிலே செய்த தீவினையானது முறையானே வந்து உள்ளத்தூடிருந்து செலுத்தி ஓட்டுதலானே; ஏழகத்தகரும் எகினக் கவரியும் தூமயிர் அன்னமும் துணை எனத் திரியும் - ஆட்டுக்கிடாயும் எகினம் என்னும் கவரிமானும் தூய மயிரையுடைய அன்னமுமாகிய இவை தம்முள் இனமல்லவாயினும் பழக்கங் காரணமான ஓரினம் போன்று தம்முட் கேண்மை கொண்டு திரிதற்கிடனான; தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின் நீள் நெடுவாயில் நெடுங்கடை கழிந்து - செய்யும்பொழுதே தாளோடுகூடச் செய்யப்பட்ட அழகு பொருந்திய சிறப்பினையுடைய மிகவும் பெரிய கதவினையுடைய நெடிய இடைகழியைக் கடந்து சென்று; ஆங்கு அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து - அவ்விடத்தே அழகு மிகுகின்ற பாப்பணையின்மீதே கிடந்து அறிதுயில் கொண்டுள்ள நீலமணி நிறத்தையுடைய திருமாலினது கோயிலை வலஞ் செய்து அவ்விடத்தினின்றும் போய்; என்க.

(விளக்கம்) 1 - வான்கண் - சிறந்த கண்; அஃதாவது உயிர்களின் கண்ணுக்குக் கண்ணாகும் சிறப்புடைய கண் என்றவாறு. எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண்ணாவான் இவனேயன்றோ? எனவரும் வில்லிபுத்தூரார் வாக்கும் நோக்குக. (பாரதம் - அருச்சுனன் தவஞ்செய்) விழித்தல் ஈண்டுத் தோன்றுதல். இது முன்னைக் காதையில் கனைசுடர் கங்குல் கால் சீயாமுன் என்றதனையே காதையியைபு தோன்ற வழிமொழிவார் செய்யுளின்பந் தோன்ற மற்றொரு வாய்பாட்டாலோதிய படியாம். 2- மீன் -அசுவினி முதலிய நாண் மீன்கள் - மதி நீங்குதலாலே இருள் நின்ற கங்குல் என்றவாறு. கடைநாள் - நாள்கடை எனற்பாலன முன்பின் மாறி நின்றன. கடைக்கண் என்பது போல. அற்றை நாளின் இறுதியாகிய கங்குற் பொழுது என்றவாறு. 4. வினை ஊழ் கடைஇ என மாறுக. ஊழ்-முறை. கடைஇ-செலுத்தி - கடவி. துரப்ப - ஓட்ட. 5. ஏழகத்தகர் - ஆட்டுக் கிடாய். தகர் - ஆட்டின் ஆண்பாற் பெயர், மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் யாத்த என்ப யாட்டின் கண்ணே என்பது தொல்காப்பியம் (மரபியல் -48) எகினம் - கவரிமான். ஏழகம் பெண்யாட்டின் பாலும் எகினம். நாய் முதலியவற்றிலும் செல்லாமைக்கு ஏழகத்தகர் என்றும் எகினக் கவரி என்றும் தெரித் தோதியவாறாம். 6 - துணையெனத் திரியும் என்றமையால் துணையல்லாமை போதரும். தாள் - கதவு நிற்றற் கியன்றவுறுப்பு. இதனைக் குருத்து என்றும் வழங்குப. வலிதாதற் பொருட்டுக் குயிற்றுங்கால் தாளோடு குயிற்றப்பட்டது என்றவாறாம். வாயில்: ஆகுபெயர் - கதவு. தகை - அழகு. பெருமையுமாம். வேற்றூர் செல்பவர் கோயில் முதலியன எதிர்ப்படும் பொழுது அவற்றை வலஞ் செய்து போதல் மரபு.

6. அறிதுயில் - யோக நித்திரை. தூங்காமற் தூங்குதல் என்பது மது. 10 - மணிவண்ணன் - திருமால்.

இனி வான்கண்...... கங்குல் என்பதற்கு அடியார்க்கு நல்லார் கூறும் விளக்கம்கணித நூலுக்குப் பொருந்தாது என்ப. ஆயினும், பின்னும் அவற்றை ஆராய்வார் பொருட்டு அவர்கூறியாங்கே ஈண்டுத் தருவாம் அது வருமாறு:

என்பது அந்தச் சித்திரைத் திங்கட் புகுதி நாள் - சோதி. திதி மூன்றாம் பக்கம். வாரம் - ஞாயிறு. இத்திங்களிருபத் தெட்டில்சித்திரையும் பூரணையும் கூடிய சனிவாரத்திற்கொடியேற்றி நாலேழ் நாளினும் என்பதனான் இருபத்தெட்டு நாளும் விழா நடந்து கொடியிறக்கி வைகாசி யிருபத்தெட்டினிற் பூருவபக்கத்தின்பதின் மூன்றாம் பக்கமும் சோமவாரமும் பெற்ற அனுடத்தில் நாட்கடலாடி ஊடுதலின் வைகாசி இருபத்தொன்பதில் செவ்வாய்க் கிழமையும் கேட்டையும் பெற்ற நாசயோகத்து நிறைமதிப் பதினாலாம் பக்கத்து வைகறைப் பொழுதினிடத்து நிலவுபட்ட அந்தரத்திருளிலே என்றவாறு எனவரும்.

இந்திர விகாரம் ஏழனையுங் கடத்தல்

11-14 : பணை ...........போகி

(இதன்பொருள்:) ஓங்கிய ஐந்துபணை பாசிலைப் போதி அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி - உயர்ந்த ஐந்து கிளைகளையும் பசிய இலையினையும் உடைய அரைமரத்தினது அழகிய நீழலின்கண்ணிருந்து அறங்களை யுணர்ந்தவனாகிய புத்தபெருமான் திருவாய் மலர்ந்தருளிய பிடகநூற் பொருள்களை; அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும் - சாரணர் கேட்போர் உளத்தே பதியுமாறு உலகமாக்கள் பலருக்கும் செவியறிவுறுத்து மிடங்களான; இந்திர விகாரம் ஏழு உடன் போகி - புத்தாலயத்தின் மருங்கே இந்திரனாலியற்றப்பட்ட அரங்குகள் ஏழனையும் ஒருங்கே வலத்தே வைத்து அவ்விடத்தினின்றும் சென்றென்க.

(விளக்கம்) 11 - பணை - கிளை. புத்த பெருமான் பலகாலம் தவஞ் செய்தும் பெறமாட்டாத மெய்யுணர்வை ஓர் அரைமர நீழலிலிருந்த பொழுது பெற்றனர் என்ப. அவ்வரை மரத்திற்கு ஐந்து கிளைகளிருந்தன என்பது வரலாறு. ஈண்டு அடிகளார் கூறுவதும் அவ்வரை மரத்தையேயாம். பணையைந் தோங்கிய பாசிலைப் போதி என்னும் துணையும் அநவோன் என்பதற்கு அடைமொழியாம். இவ்வடை மொழிகளால் அறவோன் என்பது - புத்த பெருமானை என்றுணர்ந்தாம். இவ்வரை மரத்தைப் பவுத்தர்கள் மஹாபோதி என்று சிறப்பித்துக் கூறி அத்திசை நோக்கி வணங்கா நிற்பர். புத்த பெருமானை அறவோன் என்றும் அவன் திருவாய் மலர்ந்தருளிய பிடக நூலைத் திருமொழி என்றும் உளமாரப் பாராட்டிக் கூறுவது அடிகளாருடைய சான்றாண்மைக்கும் நடுவுநிலைக்கும் சிறந்த சான்றுகளாம்.

இனி, 13 - புத்தர் அறங்களை உலகெங்கணும் சென்று மக்கட்குச் செவியறிவுறுத்தும் தொண்டர்களை அந்தரசாரிகள் என்பது மரபு. இவர்கள் பவுத்தரில் (இருத்தி) சித்தி பெற்றவர் என்பர். இவர்தாம் இருத்தியின் ஆற்றலால் விசும்பின்கண் ஏறி வேண்டுமிடங்கட்குச் செல்லுவர்; ஆங்காங்கு நிலத்திலிறங்கி அறங் கூறுவர் எனவும் இன்னோரன்ன வியத்தகு செயல்கள் பிறவுமுடையர் எனவும் கூறுவர். இதனை, சாதுசக்கரன்மீவிசும்பு திரிவோன் ....... தரும சக்கர முருட்டினன் வருவோன் எனவும் (மணிமே - 10 - 24 -6) நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச் சலத்திற் றிரியுமோர் சாரணன் தோன்ற எனவும் (மணி -24: 46-7) வருவனவற்றா லுணர்க. அறைந்தனர்: முற்றெச்சம். அறைந்து சாற்றும் என்க. அறைந்து சாற்றுதல் - கேட்போர் உளத்திற் பதியுமாறு கூறுதல். பிடக நூலோதி அறிவுறுத்தும் எனினுமாம். விகாரம் - அறங்கூறும் இடம். விகாரம் - கையாற் கருவியாற் பண்ணாது மனத்தால் நிருமித்தல் என்பாரு முளர். புகார் நகரத்தே புத்தசைத்திய மருங்கே ஏழு விகாரங்கள் இருந்தமையை,

பைந்தொடி தந்தை யுடனே பகவன்
இந்திர விகாரம் ஏழுமேத் துதலின்

எனவரும் மணிமேகலையானு முணர்க. (26-54-5)

ஐவகை நின்ற அருகத் தானம்

15 - 25 : புலவூண் ............... வலங்கொண்டு

(இதன்பொருள்:) புலவு ஊண் துறந்து பொய்யா விரதத்து அவலம் நீத்து அறிந்து அடங்கிய கொள்கை மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய - புலால் உணவைத் துவரக் கடிந்து பொய் கூறாமையாகிய நோன்போடு பொருந்தி அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் முதலிய இழுக்குகளை அறவொழித்துப் பொருள்களினியல்பை உள்ளவாறு ஆராய்ந்தறிந்து; பொறிகள் புலன்களின்பாற் செல்லாது அடங்குதற்குக் காரணமான கோட்பாட்டை யுடையராகி மெய்ப்பொருளினது வகையை யுணர்ந்த சீரியோர் குழுமியுறைதற் கிடனான; அருகத் தானத்து - அருகன் கோயின் மருங்கில்; ஐவகை நின்ற ஐந்து சந்தியும் தம்முடன் கூடிவந்து தலைமயங்கி - ஐந்து வகைப்பட்ட பரமேட்டிகளும் உறைதலாலே; ஐந்தாகிய சந்திகளும் ஒன்றுகூடி வந்து பொருந்தியிருக்கின்ற; வான் பெரு மன்றத்து - மிகவும் பெரியதாகிய மன்றத்திடத்தே; பொலம்பூம் பிண்டி நலம் கிளர் கொழுநிழல் - அருகன் ஆணையாலே பூக்கும் பொற்பூவையுடைய அசோகினது அழகு மிகுகின்ற வளமான நீழலின்கண்ணே; நீர் அணி விழவினும் நெடுந்தேர் விழவினும் - அருகக் கடவுளை நீரினால் திருமுழுக்காட்டி அழகு செய்கின்ற விழாக்காலத்தும் நெடிய தேரோடுதற் கியன்ற திருவிழாக் காலத்தும்; சாரணர் வருந்தகுதி உண்டு ஆம் என - அறமறிவுறுத்தும் சாரணர்கள் வரத்தகும் என்று கருதி; உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட - இல்லறத்தே நின்றே தமக்குக் கூறிய நோன்புகளைக் கடைப்பிடித் தொழுகுகின்ற சாவகர் எல்லாம் ஒருங்குகூடி அவர் வந்தக்கால் அமர்ந்திருந்து அறமுரைத்தற் பொருட்டு அமைத்திட்ட; ஒளி இலகு சிலாதலம் தொழுது வலங் கொண்டு - ஒளிமிக்குத் திகழா நின்ற சந்திரகாந்தக் கல்லாலியன்ற மேடையினை வலஞ்செய்து தொழுது சென்று என்க.

(விளக்கம்) 15 - சமண் சமயத்தார்க்குத் தலையாய அறம் கொல்லாமையே ஆகும் ஆதலின் கொலைக்குரிய காரணங்களிற்றலையாய புலவூண் துறத்தலை விதந்து முற்பட வோதினர். பவுத்தர்க்கும் கொல்லாமையே தலைசிறந்த அறமாயினும் அவர் விலையூன் உண்ணும் வழக்கமுடையவர் ஆதலின் அவர் திறத்தே கூறுதல் ஒழிந்து அடிகளார் ஈண்டு அவ்வறத்தினை விதந்தோதுவாராயினர் என்க.

16 - அவலம் - துன்பம்; துன்பத்திற்குக் காரணமான அழுக்காறு முதலியவற்றைக் குறித்து நின்றது. ஆகு பெயர். 17 - மெய்வகை யுணர்தலாவது - பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து நின்ற உண்மையை யுணர்தல். இதனைக் காட்சி என்ப. இதனை,

மானொத்த நோக்கி மருந்தென்றவை மூன்றினுள்ளும்
ஞானத்தின் நன்மை கேட்குவை யாயினக்கால்
ஊனத்தை யின்றி யுயிராதிய உள்பொருள்கள்
தானற் குணர்தல் இதுவாம் அதன்தத்துவமே

எனவரும் நீலகேசியால் (117) அறிக. இவை காண்டல் முதலிய பல்வேறு அளவைகளால் அறியப்படுவன ஆதலின் மெய்யுணர்ந்த என்னாது மெய்வகை உணர்ந்த விழுமியோர் என்றார்.

விழுமியோர் - சீரியோர். அமண் சமயத்து ஐவகைச் சான்றோரும் தனித்தனி வாழும் ஐந்து தெருக்களும் வந்து கூடுமிடமாகலின் சந்தி ஐந்தும் தம்முடன் கூடிவந்து தலைமயங்கிய மன்றம் என்றார். ஐவகைச் சான்றோர் ஆவார், அருகர் சித்தர் ஆசாரியர் உபாத்தியாயர் சாதுக்கள் என்போர் என்க. வேதத்தின் பொருள் உணரப்படும் மன்றமாகலின் வான்பெருமன்றம் என்றார். பொலம்பூ - பொற்பூ; பொன் போன்றபூ அன்று. பொன்னேயாகிய பூ என்க. 22 - நீரணி விழவு - திருமுழுக்கு விழவு. அயனம்சங்கிரமம் புதுப்புனலாட்டு முதலியனவுமாம். சாரணர் - அறங்கூறிச் சமயம் பரப்பும் தொண்டு பூண்ட சான்றோர். உலக நோன்பிகள் - உலக வழக்கொடு பொருந்தி இல்லற மேற்கொண்டு சமயநெறிபற்றிய நோன்புகளையும் மேற்கொள்பவர். இவரைச் சாவக நோன்பிகள் என்பர். இலகு ஒளிச் சிலாதலம் என்றமையால் சந்திர காந்தக் கல்லாலியன்ற மேடை என்பது பெற்றாம்.

இடைகழி, இலவந்திகை காவிரி வாயில் கடைமுகம் முதலியவற்றைக் கடந்து போதல்

26 - 33 : மலைதலைக்கொண்ட ........... கடைமுகங் கழிந்து

(இதன்பொருள்:) மலைதலைக் கொண்ட பேர் யாறுபோலும் உலக இடை கழி ஒருங்கு உடன் நீங்கி - மலையிடத்தே தொடங்குமிடமாகிய தலையையுடையதொரு பேரியாறு போலும் உலகத்து மாந்தர் எல்லாரும் போக்குவரவு செய்தற்கமைந்த ஊர்ப்பொது வாயிலை அக்காலத்தே போவாரொடு கலந்து போய் அதனையும் விட்டு நீங்கி; கலையிலாளன் மன்னவற்கு காமர் வேனிலொடு மலய மாருதம் இறுக்கும் - உருவமிலியாகிய காமவேள் என்னும் குறுநிலமன்னன் முடிமன்னனாகிய சோழ மன்னனுக்கு யாண்டு தோறும் செலுத்தக்கடவ இறைப் பொருளாகிய வேனிற் பருவத்தையும் தனது பொதியிலிடத்துப் பிறக்கின்ற இளந்தென்றலையும் கொணர்ந்து செலுத்துமிடமாகிய; பல்மலர் அடுக்கிய நல்மரப்பந்தர் இலவந்திகையின் எழில்புறம் போகி - பல்வேறு மலர்களையும் நாள்தோறும் அடுக்கித் தளம் படுக்கப்பட்ட அழகிய மரநிழலையுடைய இலவந்திகை எனப்படும் அரசனும் உரிமையும் ஆடுதற்கியன்ற இளவேனில் மலர்ப்பூம் பொழிலினது மதிற்புறத்திலே போய்; காவிரித் தண்பதத் தாழ் பொழில் உடுத்த பெருவழி வாயில் கடைமுகம் கழிந்து - காவிரிப் பேரியாற்றின்கண் மாந்தர் நீராட்டுவிழவிற்குச் செல்லுதற்கியன்ற இருமருங்கும் தழைத்துத் தாழ்ந்துள்ள பூ மரச்சோலை சூழ்ந்த பெரிய வழிமேற் சென்று நீராட்டு வாயிலாகிய திருமுகத்துறை யிடத்தையும் கடந்து போய்; என்க.

(விளக்கம்) கங்கையும் காவிரியும் போன்ற பேரியாறுகள் மலையிடத்தே தோன்றுவனவாம். உலகவிடை கழியாகிய பெருவழிக்கு அத்தகைய ஆறு உவமை. உலக இடைகழி உலகத்து மாந்தர்க்குப் பொதுவாகிய ஊர்வாயில் நகர்க்கு இடையே கழிந்து ஊர்ப்புறத்தே விடுதலின் அப் பெயர்த்தாயிற்று. இல்வாயில் அரண்மனையினது கோபுர வாயிலினின்றும் புறப்பட்டு இருமருங்கும் நிரல்பட்ட மாட மாளிகையினிடையே சென்று நகர்க்குப் புறத்தே வெளியிற் கலத்தலின் மலையிடைத் தோன்றி அலைகடலிலே கலக்கும் பேரியாற்றை உவமை கொள்வதாயிற்று.

28. கலை - உடம்பு - அஃதிலாதான் ; (அநங்கன்) காமவேள் என்க. சோழமன்னன் எல்லாப் பருவங்களையும் ஆள்பவனாதலின் அவற்றுள் ஒன்றாகிய வேனிலை யாளுமரசனாகிய காமவேள் அவனுக்குத் திறை செலுத்தும் குறுநில மன்னனாயினன் என்க. காமவேள்  அப்பருவத்தையும் அதன்கண் விளையும் தென்றலையும் கொணர்ந்து திறையாக இறுக்கும் இடமாகிய இலவந்திகை என்க இலவந்திகை நீர் நிலையாற் சூழப்பட்ட பூம் பொழில். இது சோழமன்னன் உரிமையோடு இளவேனிலின்பத்தையும் தென்றல் இன்பத்தையும் நுகர்ந்து விளையாடுமிடமாகலின் அடிகளார் இத்துணை அழகாக இயம்புகின்றனர். அரசனும் உரிமையு மாடு மிடமாகலின் மதில் சூழ்ந்த இடமாயிற்று. இலவந்திகையின் எயிற்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குளர் என மணிமேகலையினும் (3 : 45 - 6) கூறப்படுதலுணர்க.

32 - தழைத்துத் தாழ்ந்த பொழில் என்க. தண்பதப் பெருவழி காவிரியில் நீராடற்குச் செல்லும் பொருட்டு அமைக்கப்பட்ட பெருவழி என்க. அமைக்கப்பட்டதாகலின் இருமருங்கும் அழகிய பூம்பொழிலும் உடைத்தாயிற்று. 33 - காவிரி வாயில் - காவிரியில் இறங்கு துறை. முகக்கடை என்பது கடைமுகம் என முன்பின் மாறி நின்றது.

இனி கடைமுகம் கழிந்தென்றார்; காலையில் நாள் நீராடுவோர் பிறர் முகநோக்காது போதற்கு மறைந்து கழிவர்; இவரும் அவ்வாறு கழிந்தாரென்றற்கு; என்பர் அடியார்க்கு நல்லார். எனவே, கோவலன் கண்ணகியோடு உறுகணாளர் போன்று போதற்கு நாணிப் பிறர் காணாமைப்பொருட்டுக் காரிருள் நின்ற கடைநாட் கங்குலில் ஆண்டுச் செல்வோர் தம்முகம் நோக்கலில்லாத தண்பதப் பெருவழியே சென்று காவிரியின் நீராடுதுறையிடத்தையும் நடந்தான் என்பது கருத்தாயிற்றென்க

காவதங் கடக்கு முன்னரே கண்ணகி மதுரைமூதூர் யாதென வினவுதல்

34 - 43 : குடதிசைக் கொண்டு ........... நக்கு

(இதன்பொருள்:) குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து - அப்பால் மேற்றிசையை நோக்கிச் செல்லுதலை மேற்கொண்டு வளவிய நீரையுடைய காவிரியானது பெரிய வடகரைக் கண்ணதாகிய மலர்ந்த பெரிய பொழிலினூடே நுழைந்துபோய்; காவதம் கடந்து - ஒரு காவதத் தொலைவழியை நடந்துபோய்; பூமரப் பொதும்பர் கவுந்திப்பள்ளி பொருந்தி ஆங்கண் - மலர் நிறைந்த சோலையினூடே யமைந்த கவுந்தியடிகளார் உறைகின்ற தவப்பள்ளியை எய்திய பொழுது அவ்விடத்தே; நறும்பல் கூந்தல் இறும்கொடி நுசுப்போடு அடி இனைந்து வருந்தி குறும்பல வுயிர்த்து - நறிய ஐவகைக் கூந்தலையுடைய கண்ணகிதானும் இனி இது முரியும் எனத் தகுந்த கொடிபோலும் நுண்ணிடையும் மெல்லடிகளும் வழிநடை வருத்தத்தால் மிகவும் வருந்தாநிற்றலாலே இளைப்புற்றுக் குறிதாகப் பன்முறை உயிர்த்து; முள் எயிறு இலங்க முதிராக் கிளவியின் மதுரை மூதூர் யாது என வினவ - கோவலனை நோக்கித் தன் முட்கள் போன்று கூர்த்த எயிறுகள் விளங்கும்படி தனது பவளவாய் திறந்து பெரும! உதோ எதிர் தோன்றுகின்ற ஊர்களுள் வைத்து மதுரை என்னும் அப்பழைய ஊர்தான் யாதோ? என்று தனது பெண்மைப் பண்புதோன்ற வினவாநிற்ப; நாறு ஐங்கூந்தல் நம் அகல் நாட்டு உம்பர் ஆறு ஐங் நாதம் நணித்து என நக்கு - அதுகேட்ட கோவலன் அவட்குப் பெரிதும் இரங்கி நாறைங் கூந்தலையுடையோய் நந்தம் அகன்ற சோழநாட்டிற்கு அப்பால் ஆறைங் காவதமேகாண்! அம்மதுரை இனி அணித்தேயாம் என்று கூறிநகைத்து; என்க.

(விளக்கம்) 34 - குடதிசை நோக்கிப் போதலை மேற்கொண்டு போந்து என்க. வான் பொய்ப்பினும் தான் பொய்யாது புனல் பரந்து பொன்கொழிக்கும் ஆதலின் கொழும்புனற் காவிரி என்றார். மலர்ப்பொழில் உளவாதற்கேற்ற கோடுஆதல் தோன்றப் பெருங்கோடு என்றார். மலர்ப் பொழிலின் வளந்தோன்ற நுழைந்து காவதங் கடந்து என்றார். காவதமளவும் மலர்ப்பொழில் நுழைந்தே கடந்தனர் என்க. காவதம் - ஒரு நீட்டலளவை. இறும் நுசுப்பு கொடி நுசுப்பு எனத் தனித்தனி கூட்டுக. காண்போர் இஃது இப்பொழுதே இறும் என்றிரங்குதற்குக் காரணமான நுண்ணுசுப்பு என்றவாறு. நுசுப்பும் அடியும் இணைந்து வருந்தி என்க. வருத்தத்தின் மிகுதி தோன்ற இணைந்து வருந்தி என மீமிசைச் சொல்லாலோதினர். நுசுப்புத் துவண்டியை அடி கொப்புளங்கொண்டு வருந்த எனினுமாம். இனைய வருந்த எனத் திரித்துக் கொள்க. நறும்பல் கூந்தல்: அன்மொழித் தொகை. இளைபுற்றுக் குறும்பல வுயிர்த்து என்க. பல உயிர்த்து - பலவாகிய உயிர்ப்புக்களை உயிர்த்து. தனது வருந்தந் தோன்றாமைப் பொருட்டு வினவுங்கால் சிறிது புன்முறுவலுடன் இனிதாக வினவினள் என்பது தோன்ற முள்ளெயிறு இலங்க எனவும் தனக்கியல்பான முதிராக் கிளவியின் எனவும் விதந்தோதினர்.

கண்ணகி தனது பேதைமைகாரணமாக எதிரே தோன்றும் ஊர்களுள் வைத்து மதுரை மூதூர் ஒன்றாதல் கூடும் என்று வினவிய படியாம். இவ்வினாவைக் கேட்ட கோவலன் துயரம் கடலளவு பெருகியிருக்கும் என்பது கூறவேண்டா; அப் பெருந்துன்பத்தை அவளறியாமல் மறைப்பான் நகைத்தனன் என்க. என்னை? அதனை அடுத்தூர்தற்கும் அந்நகையே யன்றிப் பிறி தொன்றுமில்லையாகலின் என்க. ஈண்டு,

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்  (குறள் - 621)

எனவரும் அருமைத் திருக்குறளையும் நினைக. ஆறைங்காதம் என்றது அவட்கு ஐந்தாறு காதம் என்றாற்போல அண்ணிதெனத் தோன்றற் பொருட்டு என்க.

கவுந்தியடிகளாரைக் கண்டடி தொழுதல்

44 - 49 : தேமொழி ............... கருதியவாறென

(இதன்பொருள்:) தேமொழி தன்னொடும் - அங்ஙனம் வினவிய இனிய மொழியையுடைய அக் கண்ணகியோடும் கோவலன் அப் பூமரச் சோலையினூடே புகுந்து; சிறை அகத்து இருந்த காவுந்தி அடியையைக் கண்டு அடி தொழலும் - தவவொழுக்கமாகிய சிறைக் கோட்டத்தினுள் அடங்கி ஆங்கண் பள்ளிக்கண்ணிருந்த கவுந்தியடிகளாரைக் கண்டு அவருடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி நிற்ப; உருவும் குலனும் உயிர்பேரொழுக்கமும் பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர் - அழகும் உயர்குடிப் பிறப்பும் நல்லொழுக்கமும் அருகக் கடவுள் திருவாய்மலர்ந்தருளிய மெய்ந்நூலிற் கூறப்பட்ட நோன்புகளிற் பிறழாமையும் ஆகிய இவற்றையெல்லாம் ஒருதலையாக உடைய மேன்மக்களாகிய நீவிர்; உறுகணாளரின் கடை கழிந்து இங்ஙனம் கருதிய ஆறு என்னோ - தீவினையாளர் போன்று நுங்கள் இல்லந்துறந்து இவ்வாறு வருதற்குக் காரணந்தான் யாதோ? என்று அவர் நிலைக்குப் பரிந்து வினவாநிற்ப; என்க.

(விளக்கம்) 44. சிறை - தவவேலி என்னும் அடியார்க்கு நல்லார் உரை ஆற்றவும் இனிதாம். இனித் தவப்பள்ளியிடத்தே யிருந்த எனினுமாம். 45 - காவுந்தி; நீட்டல் விகாரம். ஐயை - ஐயன் என்பதன் பெண்பாற் சொல் - தலைவி என்னும் பொருட்டு.

இனி, கவுந்தியடிகளார் இவரை முன்னர் அறிந்தவரல்லர். அங்ஙனமாகவும், இவர் கோலனையும் கண்ணகியையும் நோக்கிய அளவானே அவர் உருவும் குலனும் உயர் பேரொழுக்கமும் திருமொழி பிறழா நோன்பும் உடைய கொழுங்குடிச் செல்வர் மக்களாவார் என்னும் உண்மைகளை அவ்விருவருடைய மெய்ப்பாடுகளைக் கண்டே ஊகத்தாலறிந்து கூறியவாறாம். இங்ஙனமன்றி இக்கவுந்தியடிகளார் தமது தவ முதிர்ச்சியினாலே முக்காலமும் அறிந்து கூறினார் அல்லர். அடியார்க்கு நல்லார்க்கும் இதுவே கருத்தாதல் பின்னர்க் காட்டுவாம்.

உடைமை குலம் ஒழுக்கம் என்னும் இவற்றிற்கும் இன்னோரன்ன பிறபண்புகட்கும் மெய்ப்பாடுண்டு என்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார் மெய்ப்பாட்டியலின்கண் (12) ஆங்கவை ஒருபாலாக ...... அவையலங் கடையே என அறிவுறுத்த நூற்பாவானும் உணர்க.

48. உறுகணாளர் - பிறவுயிர்க்குத் துன்பஞ் செய்யும் தீவினையாளர். இனி, இதற்கு மிடியாளர் என்பது பொருளாயினும் அப்பொருள் ஈண்டுச் சிறவாமை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க. கடை கழிந்து இவ்வாறு வரக் கருதியவாறு என்க.

கோவலன் விடை

50 - 51 : உரையாட்டில்லை ......... வேட்கையேன்

(இதன்பொருள்:) உறுதவத்தீர் உரையாட்டு இல்லை - மிக்க தவத்தையுடைய பெரியீர்! தங்கள் வினாவிற்கு மறுமொழி கூறும் நிலையில் யான் இப்பொழுது இல்லை. ஆயினும்; அவ் வினாத் திறத்திலே யான் கூறற்பாலதும் ஒன்றுண்டு, அஃதியாதெனின், யான் மதுரைமூதூர் வரை பொருள் வேட்கையேன் - யான் மதுரையாகிய பழைய நகரத்தே சென்று எங் குலத்தார்க்கு நூல்களில் விதிக்கப்பட்ட வாணிகத் தொழிலைச் செய்து பொருளீட்ட வேண்டும் என்னும் வேட்கையை உடையேன் ஆதலின், இங்ஙனம் வர நேர்ந்தது என்பதேயாம் என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) உருவு முதலிய சிறப்பினையுடையீர் உறுகணாளர் போன்று கடைகழிந்து வரக் கருதியதற்குக் காரணம் என்னையோ? என்று வினவிய அடிகளார்க்குக் கோவலன் நேரிய விடை கூறவேண்டின், சலம்புணர் கொள்கைச் சலதியோடாடிக் குலந்தரு வான்பொருட் குன்றம் தொல்லைத்தேன் அவ்விலம்பாடு நாணுத்தரும் ஆதலின், மதுரை மூதூர் சென்று உலந்த பொருளீட்டும் வேட்கையேன், ஆதலின், இவ்வாறு வந்தேன் என்றே கூறவேண்டும். ஆயினும், அவற்றை அவர்க்குக் கூறுவது மிகையும் நாணுத் தருவதும் பயனில கூறலும் ஆதல் பற்றி உரையாட்டில்லை என்னும் ஒரு சொல்லினுள் அவற்றை யெல்லாம் திறம்பட அடக்கிச் சொல்லற் பாலதாகிய காரணத்தை மட்டும் கூறுகின்ற தன்மை அவன் நுண்ணறிவைப் புலப்படுத்துதல் காண்க.

கவுந்தியடிகளின் பரிவுரைகள்

52 - 61 : பாடகச்சீறடி ............... கைதொழுதேத்தி

(இதன்பொருள்:) இவள் பாடகச் சீறடி பரல்பகை உழவா - அது கேட்ட அடிகளார் கண்ணகியைக் கூர்ந்து நோக்கியவராய் இவளுடைய மெல்லிய சிறிய அடிகள் தம்மை உறுத்துகின்ற பருக்கைக் கற்களாகிய பகை செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாவே! காடு இடை இட்ட நாடு - நீயிர் செல்லக் கருதிய மதுரைக்குச் செல்லும் வழியோ எனின் செல்லுதற்கரிய காடும் நாடும் இடையிட்ட நெடுவழியாகும்; இவள் செவ்வி நீர் கடத்தற்கு அரிது - இவளுடைய தன்மையை நோக்கின் அவற்றைக் கடத்தற்கு அஃது ஏற்றதன்று ஆதலால் நீங்கள் கடத்தல் அரிதேயாம்; உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் - அதுவேயுமன்றி நுங்கள் குடிப்பிறப்பிற்கும் இச்செலவு உரியதாகாது இவ்வளவோடு இச்செலவினை ஒழிமின் என்று யாம் ஒழிப்பவும் ஒழிகின்றிலீர் ஆகவே; அறிகுநர் யார் - இனி நுங்கட்கியன்ற ஊழ்வினை என் செய்யுமோ? அதனை யாரே அறியவல்லுநர்; அது நிற்க; மறவுரை நீத்த மாசு அறு கேள்வியர் அறவுரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த - அழுக்காறு அவா வெகுளியாகிய இவற்றோடு இவற்றின் காரியமாகிய இன்னாச் சொல்லையும் துவர நீத்த சிறப்போடு மனத்தின் மாசு அறுதற்குக் காரணமான அருகன் அருளிச்செய்த மெய்ந்நூற் கேள்வியையுமுடைய சான்றோரை அடுத்து அவர்பால் அறவுரைகளைக் கேட்டுணர்ந்து அவ்வுணர்ச்சிக்குத் தகநின்று வாலறிவனாகிய இறைவனை வழிபாடு செய்தற் பொருட்டு; யானும் தென் தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரைக்கு ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின் யானும் தெற்கின் கண்ணதாகிய தமிழ்நாட்டின் தலைநகரமாய்த் தன்கண் வருவார் தம் வினையைத் தீர்க்குந் தெய்வத் தன்மையுடைய அம் மதுரைமாநகர்க்குப் போதல் வேண்டும் என முன்னரே ஒருப்பட்ட உள்ளம் உடையேனாதலாலே; போதுவல் என்ற -யானும் வருகின்றேன் நீயிரும் வம்மின் என்றருளிச் செய்த; காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி - கவுந்தி யடிகளைக் கைகூப்பித் தொழுது நாவால் வாழ்த்தி; என்க.

(விளக்கம்) 52. மதுரைக்குச் செல்வதெங் கருத்தென்ற கோவலன் சொற்கேட்டு அடிகளார் வழியினதருமையும் கண்ணகியின் மென்மையும் கருதிக் கூறுகின்றார். பாடகம் - ஒருவகைக் காலணி. சீறடி பெரிதும் மெல்லியன ஆதலின் பரற்பகை உழவா என்றவாறு. பரல் துன்புறுத்துவன வாகலின் பரற்பகை உழவா என்றவாறு. பரல் துன்புறுத்துவன வாகலின் பகை என்றார். காடு செல்லுதற்கரிய காடு என்பதுபட நின்றது. இவள் செவ்வி கழிதற்கு ஏற்றதன்றாகலின் கழிதல் அரிது என்க. 54-5. உரியதன்றீங் கொழிகென வொழியீர் ஆதலின், இஃது ஊழினது செயலாதல் வேண்டும் அது யாது செய்யுமோ யார் அறியவல்லுநர் என்றிரங்கியபடியாம்.

56. மறவுரை - இன்னாச் சொல். அதனை நீத்த எனவே அதற்கு முதலாகிய அழுக்காறு அவா வெகுளி யாகியவற்றையும் நீத்தமை கூற வேண்டாவாயிற்று. மாசு - மனமாசு. அல்லது ஐயமும் திரிபுமாகிய குற்றங்கள் தீர்ந்த மெய்க் கேள்வியர் எனினுமாம். 57. அறிவன்-அருகன். 58. தெற்கின் கண்ணதாகிய தமிழ் வழங்கும் நல்ல நாட்டுத் தலைநகரமாகிய மதுரை, தீது தீர் மதுரை எனத் தனித்தனி கூட்டுக. கோவலன் கண்ணகியாகிய இருவருடைய பழவினைகள் தீர்தற்கு இடனான மதுரை எனவும் ஒரு பொருள் தோன்றி, தீதுதீர் மதுரை என்பது வாய்ப்புள்ளாகவும் அமைந்தமை யுணர்க.

கோவலன் மகிழ்ச்சி

62-63 : அடிகள் .................. என

(இதன்பொருள்:) அடிகள் நீரே அருளுதிர் ஆயின் - அடிகளே நீரே இவ்வாறு எமக்கு வழித்துணையாதற் கமைந்து அருளிச் செய்வீராயின்; இத் தொடி வளைத் தோளி துயர் தீர்த்தேன் என - இவ் வளையலணிந்த தோளையுடையாளுடைய துயரெல்லாம் இப்பொழுதே தீர்த்தேனாயினேனன்றோ! என்று மகிழ்ந்து கூறாநிற்ப என்க.

(விளக்கம்) இங்ஙனம் சிறந்ததொரு வழித்துணை பெறாதவழித்தன் பொருட்டு அவளும் அவள் பொருட்டுத் தானுமாக வழி நெடுக வருந்துவதன்றி மகிழ்தற்கிட னின்மையால் அதுபற்றிப் பெரிதும் தன்னுட் கவன்றிருந்த கோவலன் அடிகளார் வழித்துணையாக யானும் போதுவல் போதுமின் என்றருளக் கேட்டவுடன் அத்துன்பச் சுமையெலாம் ஒருங்கே வீழ்த்தி அயாவுயிர்த்துக் கூறும் இம்மொழிகள் பெரிதும் இயற்கை நவிற்சியாய் இன்புறுத்துதல் உணர்க. அடிகள் வழித் துணையாகும் பேறு தாம் வருந்தியும் பெறற்கரிய தொரு பேறாகலின் அத்தகைய பேற்றினை அவரே எளிவந்தருளிய அருமையைப் பாராட்டுவான் அடிகள் நீரே அருளுதிராயின் என்பது யாம் வேண்டியும் பெறற்கரிய தொன்றனை எமக்கு எளி வந்து அருளுதிராயின் என்பதுபட நின்றது. வழித்துணையினும் மிகச் சிறந்த துணை பெற்றேம் என்பது தோன்ற அடிகள் என்றான். தீர்த்தேன் : தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாயிற்று.

நீயிரே இது செய்வீராயின் என்றது ஒரு வழக்கு என்றார் அடியார்க்கு நல்லார்.

கவுந்தியடிகள் வழியினது ஏதங் கூறுதல்

64 - 75 : கோவலன் ............ பகை யுறுக்கும்

(இதன்பொருள்:) கோவலன் கொண்ட இந் நெறிக்கு யாங்கும் ஏதம் தருவன பல காணாய் கேண்மோ - அதுகேட்ட அடிகளார் கோவலனைப் பரிந்து நோக்கிக் கோவலனே யாம் போவதாக வுட்கொண்ட இக் காவிரியின் வடகரையாகிய இவ்வழியின்கண் செல்வார்க்கு வருத்தம் தருவன எவ்விடத்தும் பலவுள்ளன அவற்றை நீயறியாய் ஆதலின் யான் கூறுவல் கேட்பாயாக; வெயில் நிறம் பொறா மெல்லியல் கொண்டு பூ பயில் தண்தலை படர்குவம் எனின் - வெயிலினது வெப்பத்தைப் பொறுக்கமாட்டாத தளிர் நிறத்தையுடைய மெல்லியல்பு வாய்ந்த இவளை அழைத்துக்கொண்டு அவ் வெயில் நுழையாத மலர்கள் மிக்க இவ் வடகரைப் பொழிலினூடே புகுந்கு செல்குவேம் என்பாயாயின்; மண்பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியைச் சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் - அவ்விடத்தே நிலம் பிளக்கும்படி இடங் கொண்டு வீழ்ந்த வள்ளிக்கிழங்கை அகழ்ந்து கொண்ட குழிகளைச் சண்பக மரங்களினின்றும் உதிர்ந்து நிரப்பிய பூந்துகள் உகுகின்ற பழம் பூக்கள்; பொய் அறைப் படுத்து - பொய்க் குழிப்படுத்து; போற்றா மாக்கட்கு - அவற்றை அறிந்து தம்மைக் காவாது இயங்குகின்ற மாக்களுக்கு; கையறு துன்பம் காட்டினும் காட்டும் பின்பு செயலறுதற்குக் காரணமான பெருந்துன்பத்தைத் தோற்றுவித்தல் செய்யினும் செய்யும்காண்! உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும் - அவ்வாறு துன்பந்தரும் உதிர்ந்த பழம்பூவினாலியன்ற பொய்க்குழியை மிதியாமைப் பொருட்டு நிலனோக்கி விழிப்புடன் செல்வோரை முதிர்ந்து தேனொழுகும் பலாப்பழங்கள் அவரெதிர் கோட்டின்கண் தூங்குவன பகைபோலத் தலையின்கண் மோதினும் மோதும்; மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து பலவின் செஞ்சுளை பரல் பகை உறுக்கும் - இனி அவற்றிற்கஞ்சி வெள்ளிடைப் போவோமாயின் ஆங்கு மஞ்சள் இஞ்சி முதலியவை தம்முட் டறைலமயங்கிய தோட்டங்களிற் பாத்திதோறும் சருகின் மறைந்துள்ள அவற்றின் வன்முளைகளும் அத்தோட்டத் தொழிலாளர் தின்று கழித்த பலாவினது சிவந்த சுளையின்கண்ணவாகிய காழாகிய பருக்கைகளும் இவள் மெல்லடிக்குப் பகையாய் உறுத்தினும் உறுத்தும் என்றார் என்க.

(விளக்கம்) 64 - கோவலன்; விளி. காணாய் என்றது நீ முன்னர் இவ்வழியிற் சென்றிராய் ஆதலின் கண்டிராய் என்பதுபட நின்றது. இந் நெறி என்றது முன்னர் (35) வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து காவதம் கடந்து, என்றமையால் வடகரை வழிஎன்பது பெற்றாம்.

66-7. வெயிலைத் தனது நிறம் பொறாமைக்குக் காரணமான இம்மெல்லியல் என்க. நிறம் - திருமேனி. வெயில் நிறம் பொறாமெல்லியல் என்றது பயில் பூந்தண்டலைப் படர்தற்குக் குறிப்பேதுவாய் நின்றது. 89 - பொங்கர் - பழம்பூ. அஃதப் பொருட்டென்பது (72) உதிர்பூஞ் செம்மலின் என்பதனாலும் பெறுதும். குழியின் பெருமை தோன்ற (68) மண்பக வீழ்ந்த கிழங்கு அகழ்குழி என்றார். குழியை நிறைத்த பொங்கர், தாதுசோர் பொங்கர், சண்பகப் பொங்கர் எனத் தனித்தனி கூட்டுக. பொய்யறைப்படுத்து - மேலே மறைக்கப்பட்டு உட்பொய்யாகிய குழி. கையறுதுன்பம் - செயலறுதற்குக் காரணமான பெருந்துன்பம் - அவையாவன கான் முரிதல் முதலியன. காட்டுதல் - காணச்செய்தல். (72) செம்மல் - பழம்பூ (வாடியுதிர்ந்த பூ.) 73. முதிர் தேம்பழம் - முற்றிய இனிய தெங்கம் பழம் எனினுமாம். முட்டினும் முட்டுவர் என்னும் பாடத்திற்கு, கழிவோரை வினை முதலாகக் கொள்க. மஞ்சள் இஞ்சி முதலிவற்றின் வன்முளைகளும் பலவின் பரலும் உறுத்தும் என்றவாறு. அரில் - பிணக்கம். வலயம் - பாத்திகள். பாத்திகளில் தொழில் செய்வோர் பலவின் செஞ்சுளையைத் தின்று கழித்துப் போகட்ட பரல் என்க. பரல் - ஈண்டுக் காழ். உறுத்தும் என்றமையால் அடிகளை உறுத்தும் எனவும் அடியினது மென்மைக்கு இவற்றின் வன்மை முரணாகலின் அவற்றைப் பகை என்றும் ஓதினர். 

இதுவுமது

76 - 81 : கயனெடுங் ............. காரிகை

(இதன்பொருள்:) கயல் நெடுங் கண்ணி கேள்வ - கயல்போலும் நெடிய கண்களையுடைய இப் பெருந்தகைப் பெண்ணாற் காதலிக்கப்பட்ட கேள்வனே இன்னும் கேட்பாயாக! வயலுழைப் படர்குவம் எனின் - இத் துன்பங்கட்கு அஞ்சி இவ்வழியை விடுத்து வயல் வழியே போகக்கடவேம் என்பேமாயின்; ஆங்குப் பூநாறு இலஞ்சி நீர்நாய் பொருகயல் ஓட்டிக் கௌவிய நெடும் புற வாளை மலங்கு மிளிர் செறுவின் விலங்கப் பாயின் - அவ்வழியிடத்தும் மருங்கிலுள்ள தாமரை முதலிய மலர்மணங் கமழா நின்ற குளங்களிலே மீன் வேட்டமாடுகின்ற நீர்நாயானது தம்முள்ளே போரிடுகின்ற கயல்மீன்கள் அஞ்சியோடும்படி ஓட்டித் தன் வாயாற் கௌவிய நெடிய முதுகையுடைய வாளைமீன் அதன் வாயினடங்காமற் றுள்ளி அயலிலுள்ள மலங்குகள் பிறழ்ந்து மிளிருகின்ற கழனியின்கண் நாம் செல்லும் வழிக்குக் குறுக்காகப் பாயுமாயின்; இக்காரிகை கலங்கலும் உண்டு - இவள் நெஞ்சம் துணுக்குற்றுக் கலங்குதலும் உளதாம் என்றார் என்க.

(விளக்கம்) 76. கண்ணகியின் பெருந்தகைப் பண்பெல்லாம் அவள் அழகிய கண்களிடத்தே மெய்ப்பாடாகத் தோன்றுதலாலே இத்தகைய சிறப்புடைய குலமகளாலே காதலிக்கப்பட்டமையே கோவலனுக்குப் பெரும் பேறாம் என்பது கருதி அடிகளார் வாளா கோவலன் என விளியாது கயல் நெடுங்கண்ணி காதற் கேள்வ! என்று விதந்து விளித்தனர். 78. தம்முட் போரிடுங் கயல் மீன்கள் வெருவி ஓட ஒட்டி என்க. 79. நீர் நாய்-நீரினும் நிலத்தினும் வாழும் ஒருவகை விலங்கு. இது நீரின் கண் வாழும் உயிரினங்களை வேட்டமாடி உயிரோம்புதல் பற்றி நீர் நாய் எனப்பட்டது போலும். இஃதுருவத்தாற் கீரியைப் போல்வதாம். இது மீன்களுள் வைத்து வாளை மீனையே பெரிதும் விரும்பி வேட்டமாடும் போலும், ஆதலால் சங்க நூல்களுள், வாளை மேய்ந்த வல்ளெயிற்று நீர் நாய் எனவும் (அகம்-9) நாளிரை தரீஇய எழுந்த நீர் நாய் வாளையோ டுழப்ப எனவும், (அகம் - 336) பொய்கை நீர்நாய் புலவுநா றிரும்போத்து வாளை நாளிரை தேரும் எனவும் (அகம் - 389) ஒண் செங்குரலித் தண்கயங் கலங்கி வாளைநீர்நாய் பெறூஉம் எனவும் (புறம் - 264) வரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூரன் எனவும், (குறுந்தொகை - 364) பிற சான்றோரும் ஓதுதலறிக. 80. மலங்கு - ஒருவகை மீன்; பாம்பு போன்ற வுருவமுடையது. இக்காரிகை என்றது கண்ணகியை. (77 - 81) இதனாற் கூறியது அச்சம் என்னும் பெண்மைப் பண்பு மிக்க இக்காரிகை மீனிரை தேரும் நீர்நாய் காணினும் தம்முட் பொருங்கயல்கள் உகளக் காணினும் வாளை பாயக்காணினும் மலங்கு மிளிரக் காணினும் பெரிதும் அஞ்சி நெஞ்சங் கலங்குவள் என்பதாம்.

இதுவுமது

81 - 85 : ஆங்கண் ............ கொள்ளவுங் கூடும்

(இதன்பொருள்:) ஆங்கண் கரும்பின் தொடுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்பு சூழ் பொய்கைத் தூநீர் கலக்கும் - அஃதன்றியும் அவ்விடத்தே வளர்ந்துள்ள கரும்பின்கண் வண்டுகள் இழைத்துள்ள பெரிய தேனடைகள் காற்றினாலே சிதைவுற்றுழி அவற்றின் கண்ணுள்ள தேன் ஒழுகி வண்டுகள் சூழ்தற்குக் காரணமான தாமரை முதலியவற்றையுடைய நீர்நிலையினது தூய நீரோடு சென்று கலந்துவிடும்; அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் - ஆதலான் அதனை அறியாமல் தணியாத நீர் வேட்கையால் நீயிர் நுமது குடங்கையான் முகந்துகொண்டு பருகவும் கூடும்; என்றார் என்க.

(விளக்கம்) கரும்பலாற் காடொன்றில்லாக் கழனி சூழ் வழியாகலின் 82 - கரும்பிற் றொடுத்த பெருந்தேன் என்றார். தேன் : ஆகு பெயர்; தேனடை. தேனடை சிதைந்துழி அதன்கண்ணுள்ள தேன் ஒழுகித் தூநீர்க்கலக்கும் என்றவாறு. குடங்கையின் நொண்டு கொள்ளல் இருவர்க்கும் ஒக்குமாகலின், பழையவுரையில், இவள்.... பருகவும் கூடும் எனக் கூறியது பொருந்தாது. சமண் சமயத் துறவியாகிய அடிகளார் அச்சமய நூலுள் தேன் உண்ணல் கடியப்பட்டமையின். அறியாமையால் நும்மால் நீரென்று அதனொடு கலந்ததேன் உண்ணப்படும் ஆதலால் அஃதோர் ஏதம் என்று அறிவித்த படியாம். அச்சமயத்தார் தேன் உண்டல் கூடாதென்பதனை,

பெருகிய கொலையும் பொய்யுங் களவொடு பிறன்மனைக்கண்
தெரிவிலாச் செலவுஞ் சிந்தை பொருள்வயிற் றிருகும் பற்றும்
மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி
ஒருவின புலைசு தேன்கள் ஒழிகுத லொழுக்க மென்றான்

எனவரும் யசோதரகாவியத்தானும், (236)

தேனைக் கொலைக் கொப்ப தென்றாய் நமஸ்தே

எனவரும் தோத்திரத்திரட்டு முதலியவற்றாலு முணர்க. மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

அறிவஞர் எய்தி - அறிவு மயங்கி. 86. குடங்கை - ஐந்து விரலுங் கூட்டி உட்குழிக்கப்பட்ட கை. நொள் என்னும் முதனிலையிற் பிறந்த நொண்டு என்னும் எச்சம் முகந்து என்னும் பொருட்டு. இது மொள்; மொண்டு எனவும் வழங்கும்.

இதுவுமது

86 - 93 : குறுநரிட்ட ......... ஒண்ணா

(இதன்பொருள்:) குறுநர் இட்ட குவளைஅம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை - கழனிகளிற் களைபறிப்பார் பறித்து வரம்பிலிட்ட குவளைப்பூவுடனே புள்ளிகளையும் வரிகளையும் உடைய வண்டினம் மதுவுண்ட மயக்கத்தாலே போகவறியாமல் அப்பூவுள் ளொடுங்கிக் கிடக்கின்ற கிடக்கையை; நீர் நெறி செல் வருத்தத்து அஞர் எய்தி அறியாது ஆங்கு அடியிடுதலும் கூடும் - நீவிர் வழிநடந்ததனாலுண்டான துன்பம் காரணமாக உணர்வு மயங்கி அறியாமல் அவற்றின்மேல் அடியிடவும் கூடும்; அன்றியும்; எறிநீர் அடைகரை இயக்கந் தன்னின் -யாம் அலை எறிகின்ற நீரையுடைய பெருவாய்க்காலினது நீரடைகரையின் மேற் செல்லும்பொழுது; பொறி மாண் அலவனும் நந்தும் போற்றாது ஊழ் அடி ஒதுக்கத்து உறுநோய் காணின் - அக்கரையிடத்தே புள்ளிகளாலே அழகுற்றுத் திகழும் நண்டும் நத்தையும் ஆகிய சிற்றுயிர்கள் இருக்குமிடங்களை நோக்கி ஒதுங்கி நடத்தலின்றி யாம் நமக்கியல்பாயாமைந்த முறையானே நடக்குமிடத்தே அவற்றின் மேலடியிட்டு நடத்தலும் கூடும், அவ்வழி அச்சிற்றுயிர்கள் நம்மாலுறுகின்ற துன்பத்தை நாம் காணின்; தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா - நமக்குச் சிறுமையைத் தருகின்ற அக் கொலைத் துன்பம் நம்மால் பொறுக்கவும் கூடாதாம் என்றார்; என்க.

(விளக்கம்) 86 - குறுநர் - பறிப்போர். குறுநரிட்ட கூம்பு விடுபன் மலர் (பெரும்பாண் - 295.) என்புழியும் அஃதப் பொருட்டாதல் அறிக. 87 பொறியையும் வரியையும் உடைய வண்டினம் என்க. நீர்-நீவிர். தமக்கு நெறி செல்வருத்தமும் அறிவஞர் எய்துதலும் இன்மை தோன்ற நீர் அஞர் எய்தி அறியாதபடி யிருத்தலுங் கூடும் என்றார். என்னை? அவர் தாமும் சிறந்த தவவொழுக்க முடையாராகலின் வில்லின தெல்லைக் கண்ணால் நோக்கி மெல்லடிகள் பரவி நல்லருள் புரிந்துயிர்க் கண் (யசோதர காவியம் - 4) நடப்பவர் ஆகலின் என்க.

90. எறிநீர் அடைகரை என்றமையின் பெருவாய்க்காலினது கரை என்பது பெற்றாம். அக்கரையின்மேல் நண்டு நந்து முதலியன மறைந் துறைதலுண்மையின் நுமக்கு இயல்பாகிய நடை என்பார் ஊழடி ஒதுக்கம் என்றார். எனவே தமக்கு அவ்வகை இயக்க மின்மையும் கூறினாராயிற்று.

கோவலன் கண்ணகி ஒதுக்கத்தால் சிற்றுயிர் உறுநோய் காணுதல் தமக்கு முண்மையின்; உறுநோய் காணில் தாழ்தருதுன்பம் தாங்கவும் ஒண்ணாது எனப் பொதுவினோதினார். தாழ்ச்சியைத் தருகின்ற தீவினையால் வருந்துன்பம் என்க. இதனால் அந்நெறிக்கண் நீயிர் அறியாமல் கொலைத் தீவினையாகிய ஏதம் எய்துதலும் கூடும் என்றறிவுறுத்தவாறு. இவற்றின் கருத்து - இத்தகைய தீவினைகள் நிகழாவண்ணம் குறிக்கொண்டு நடமின் என்று அறங் கூறுதலாம். ஈண்டு,

அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை ( குறள் - 315)

எனவரும் திருக்குறள் நினையற்பாலதாம்.

இயக்கம் என்பதனை ஆகுபெயராக்கி வழி என்பர் அடியார்க்கு நல்லார். 91 - அலவன் - நண்டு நந்து - நத்தை, இனஞ்செப்பித் தவளை முதலிய சிற்றுயிரும் கொள்க. உறுநோய் : வினைத்தொகை; மிக்க நோய் எனினுமாம். காணில் அவற்றின் பால் இரக்கங் காரணமாகவும் நம் அறியாமை காரணமாகவும் நமக்குண்டாகும் துன்பம் என்றவாறு. தீவினை காரணமாக வருந்துன்பமாகலின் தாழ்தரு துன்பம் என்றார். தாழ்தலைத் தருகின்ற துன்பம் என்க.

இக்கொலைப் பாவம் ஒன்றானும் கழுவப்படாது; அதுவேயுமின்றி மறுமைக்கண் நரகத்திலுறும் துன்பமும் நம்மால் தாங்கலா மளவிற்றன்று என்பதனான் (தாங்கவும் என்பதன்கண்) உம்மை எச்சவும்மை யாயிற்று என்பர் அடியார்க்கு நல்லார்.

இதுவுமது

94 - 97 : வயலும் ............. குறுகாதோம் பென

(இதன்பொருள்:) வயலும் சோலையும் அல்லது யாங்கணும் அயல்படக் கிடந்த நெறி ஆங்கு இல்லை - இத்தகைய துன்பங்கட்குக் காரணமான வயல்வழியும் முற்கூறப்பட்ட துன்பங்கட்குக் காரணமான சோலைவழியும் அல்லது இவற்றிற்கு வேறாகக் கிடக்கும் வழி இனி யாம் செல்லக்கடவ அவ்விடத்தே இல்லை; நெறியிருங்குஞ்சி நீ குறி அறிந்து வெய்யோளொடு அவை அவை குறுகாது ஓம்பு என - ஆதலால் யாம் செல்லும்பொழுது நெறித்த குஞ்சியையுடையோய்! நீ அத்தகைய துன்பந்தருமிடங்களைக் குறிப்பான் அறிந்து அவ்வத்துன்பம் வாராதபடி நின்னை விரும்பிய நின் மனைவியோடே விழிப்புடன் நடப்பாயாக! என அறிவுறுத்த பின்னர் என்க.

(விளக்கம்) 95 - இனிச் செல்லக் கடவ வழியாகலின் ஆங்கு எனச் சேய்மைச் சுட்டாற் கூறினார். இத்துணையும் அடிகளார் தம் பள்ளியிடத் திருந்தே கூறியபடியாம். 96 - நெறியிருங்குஞ்சி; அன்மொழித் தொகை; விளி. நீ வெய்யோளொடு செல்லுங்கால் நுமக்கு அவை அவை குறுகாது ஓம்பு என்றவாறு. வெய்யோள் - நின்னை விரும்பியவள்; நின்னால் விரும்பப் படுபவள் என இரு பொருளும் பயந்து நின்றது. குறி-யாங் கூறிய குறிப்பு. அவையவை எனும் அடுக்குப் பன்மைபற்றி வந்தது. அறிவு அஞர் எய்துதலாலே அறியாமல் பொய்யறையில் அடியிட்டு வீழுதல் முதலிய துன்பமும், வண்டினம் நண்டு முதலியவற்றின் மேல் அடியிடுதலாலே வருந் தீவினைத் துன்பமும் என இருவேறுவகைத் துன்பமும் வாராதபடி செல்லுக என்றறிவுறுத்த படியாம்.

பள்ளியினின்றும் கவுந்தியடிகள் புறப்படுதல்

98 - 101 : தோமறு ............ புரிந்தோர்

(இதன்பொருள்:) காவுந்திஐயை - இவ்வாறு கோவலனுக்கு அறிவுறுத்த கவுந்தியடிகளார்; தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் கைப்பீலியும் கொண்டு - அவர்களோடு மதுரைக்குச் செல்லும் பொருட்டுக் குற்றமற்ற கடிஞையும் தோளிலிடும் உறியும் கையின்கட்கொள்ளும் மயிற்பீலியும் முதலியவற்றைக் கொண்டு; மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆக என - ஐந்தெழுத்தாலியன்ற மறைமொழிக்குப் பொருளாகிய தெய்வமே நமக்கு வழித்துணையாகுக! என்று இறைவனை நினைந்து போற்றிப் புறப்பட; பழிப்பு அருஞ்சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் - அங்ஙனம் புறப்பட்ட அடிகளாரோடு பிறராற் பழித்தல் அரிய ஒழுக்கத்தோடு வழிச்செலவினை மேற்கொண்ட கோவலனும் கண்ணகியும்; என்க.

(விளக்கம்) தோம் - குற்றம். அஃதாவது துறந்தோர் கைக்கொள்ளலாகா எனக் கடியப் பட்டவை. கடிஞை - இரத்தற் கலம். அறுவை - உறி - ஆடை யன்மை தோன்ற, அறுவை என்றொழியாது சுவன் மேலறுவை என்றார். மொழி - மறைமொழி - அஃதாவது ஐந்தெழுத்து மந்திரம். அவையாவன - அ, சி, ஆ, உ, சா என்பன.

இனிக் கொண்டென்பதனைக் கொள்ளவெனத் திரித்து அடிகளார் கடிஞை முதலியவற்றைக் கைக்கொள்ள அதுகண்டு இவர், நமக்கு வழித்துணை ஆக எனக் கருதி மகிழ்ந்து அவரோடு வழிப்படர் புரிந்த கோவலனும் கண்ணகியும் எனினுமாம்.

காவிரி நாட்டின் சிறப்பு

102 - 111 : கரியவன் ............ ஒலித்தல் செல்லா

(இதன்பொருள்:) கரியவன் புகையினும் புகைக் கொடி தோன்றினும் விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் - உலகின்கண் மழைவறங் கூர்தற் பொருட்டுக் கோள்களில் வைத்துச் சனிக்கோள் இடபம் சிங்கம் மீனம் என்னும் இவற்றினோடு மாறுபடினும் விசும்பின்கண் தூமக்கோள் தோன்றினும் விரிந்த ஒளியையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக்கண்ணே பெய நினும்; கால் பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடுஞ் சூன்முதிர் கொண்மூ பெயல் வளம் - சுரப்ப - பருவக்காற்றுத் தாக்குதற்கியன்ற உயர்ச்சியையுடைய குடகமலையினது உச்சியிடத்தே கடிய முழக்கத்தையுடைய இடியேற்றோடு சூன்முதிர்ந்த பருவ முகில் தனது பெயலாகிய வளத்தை நிரம்ப வழங்குதலானே; குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு - அக் குடகமலையிற் பிறந்த கொழுவிய பல்வேறு பண்டத்தோடு; கடுவரல் காவிரிப் புதுநீர் - விரைந்து வருதலையுடைய காவிரிப் பேரியாற்றினது புதுப்புனல் வெள்ளமானது; கயவாய் நெரிக்கும் கடல் வளன் எதிர - பெரிய புகுமுகத்தைக் குத்தியிடிக்கும் கடல் தன்கட் பிறந்த கொழுவிய பல பண்டத்தோடு வந்து எதிர்கொள்ளுதலாலே தேங்கி; வாய்த்தலை ஓவிறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது - வாய்த்தலைக்கிட்ட கதவின்மீதெழுந்து குதித்தலானே எழுகின்ற அப் புதுப்புனல் ஒலியல்லது; ஆம்பியும் கிழாரும் வீங்கு இசை ஏத்தமும் நீர் ஓங்கு பிழாவும் ஒலித்தல் செல்லா - ஆம்பியும் கிழாரும் மிக்க வொலியையுடைய ஏத்தமும் நீரை முகந்து கொண்டு உயர்கின்ற பிழாவும் என்று கூறப்படுகின்ற நீரிறைக்கும் கருவிகள் ஒருநாளும் ஒலித்தல் இல்லாத என்க.

(விளக்கம்) 102. கரியவன் என்பது சனிக்கோளின் பெயர்களுள் ஒன்று. மைம்மீன் என்பதும் அப்பொருட்டு. புகைதல், ஈண்டு உலகத்தைச் சினந்து ஒழுகுதல் மேற்று. அஃதாவது, உலகில் மழை வறங் கூர்தற்கியன்ற நெறியிலியங்குதல். அடியார்க்கு நல்லார் சனிக்கோள் இடபம் சிங்கம் மீனம் என்னும் இராசிகளில் இயைந்தொழுகின் உலகின்கண் மழைவளம் மிகும் எனவும், இவற்றோடு அக்கோள் மாறுபட்டியங்கின் மழைவறங்கூரும் எனவும் கருதுபவர் என்பது அவருரையால் விளங்கும். இன்னும், கோள்களின் இயக்கம் மழைவளமுண்டாதற்கும் அது வறந்து வற்கடம் உண்டாதற்கும் காரணமாம் என முன்னோர் கருதினர் என்பதனை, இதனானும், இங்ஙனமே,

மைம்மீன் புகையினும் தூமந் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
.............. ................. ................. ................
பெயல் பிழைப்பறியாது  (புறநா - 117)

எனவும்,
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர் பூட்ட (புறம் - 35)

எனவும்,
வசையில் புகழ் வெண்மீன்
திரை திரிந்து தெற்கேகினும்
.............. .......... ..........
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்யினுந் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி  (பட்டினப்பாலை - 1-6)

எனவும், வரும் சான்றோர் செய்யுள்களாலுமுணர்க.

இனி, மழை வறங்கூர்தற்கு ஏற்பக் கோள்க ளியங்குமிடத்தும் செங்கோல் மன்னர் தம் நாட்டில் மழைவறங் கூர்தலில்லை எனவும், மழை வளம் மிகுதற்கியன்ற நெறியில் கோள்களியங்கினும் கொடுங்கோன் மன்னர் நாட்டில் மாரி வறங்கூரும் எனவும் நம்முன்னோர் கருதுவர். இக் கருத்தினை யாம் பட்டினப்பாலைக்கு எழுதிய உரையின்கண் 1-7. விளக்கங்களால் உணர்க. ஈண்டுரைப்பின் உரை விரிதலஞ்சி விடுத்தாம்.

கரியவன் புகையினும்....காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஓவிறந் தொலிக்கும் என்று ஈண்டு அடிகளார் இயம்பியது சோழ மன்னனின் செங்கோன்மையைக் குறிப்பாகச் சிறப்பித்த படியாம். என்னை? ஆசிரியர் கபிலர் தாமும், மைம்மீன் புகையினும்....கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கிப் பெயல் பிழைப்பறியாது எனவும், திருவள்ளுவனார்,

இயல்புளிக் கோலோச்சும் மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு  (குறள் - 545)

எனவும், இந்நூலாசிரியர் தாமும், காவேரி! கருங்கயற் கண் விழித்தொல்கி நடந்த வெல்லா நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி! எனவும் ஓதுமாற்றானும் அறிக.

புகைக்கொடி - தூமக்கோள், கோள்கள் வட்டம் சிலை நுட்பம் தூமம் (புகை) என்னும் நான்கினும் (தூமக்கோள்) எனவரும் பழையவுரையினால் பழந்தமிழறிஞர் வானநூலறிவு புலப்படும். நிவப்பு: ஆகுபெயர். உயர்ந்த (உச்சி) குவடு. மலைப்பிறந்த தாரம் - தக்கோலந்.......சாதியோடைந்து (5-26) என்பன. கடல் வளம் ஓர்க்கோலை சங்கம் ஒளிர் பவளம் வெண்முத்தம் நீர்ப்படும் உப்பினோடைந்து என்ப.

108-கடுவரல் - விரைந்து வரும் வருகை. ஓ -மதகு நீர் தாங்கும் பலகை. இனி ஓவுதல் இறந்து ஒலிக்கும் எனலுமாம். ஒழிவின்றி ஒலிக்கும் என்றவாறு. ஆம்பி - பன்றிப் பத்தர். கிழார் - பூட்டைப் பொறி. ஏத்தம் ........ பிழா - இடா. நீரிறைக்கும் கூடை. இவை பிறநாட்டில் நீரிறைக்கும் கருவிகள். சோணாட்டில் இக்கருவிகள் வேண்டப்படாமையின் இவற்றின் ஒலி இல்லையாயிற்று. இதனால் சோணாட்டின் நீர்வளம் கூறியபடியாம்.

நீர்ப்பறவைகளின் ஆரவாரம்

112 - 119 : கழனிச் செந்நெல் .............. ஓதையும்

(இதன்பொருள்:) கழனிச் செந்நெல் கரும்பு சூழ் மருங்கில் பழனப் பைம்பூந் தாமரைக் கானத்து - அங்ஙனம் காவிரிப் புதுப்புனல் ஒலியல்லது நீரிறைக்குங் கருவிகளின் ஒலி ஒருபொழுதும் ஒலித்தலில்லாச் சிறப்புடைய கழனிகளிடத்தே செந்நெற்பயிரும் கரும்புகளும் சூழ்ந்த மருதத்து நீர்நிலைப் பரப்பின்கண் செழித்தோங்கிய பூவையுடைய பசிய தாமரைக் காட்டின்கண்; கம்புள் கோழியும் கனைகுரல் நாரையும் செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும் கானக்கோழியும் நீர்நிறக் காக்கையும் உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் - சம்பங்கோழியும் மிக்கொலிக்கும் குரலையுடைய நாரையும் சிவந்த காலினையுடைய அன்னமும் பசிய காலினையுடைய கொக்கும் கானாங்கோழியும் நீரில் நீந்துமியல்புடைய நிறமிக்க நீர்க் காக்கையும் உள்ளானும் குளுவையும் கணந்துட் புள்ளும் பெருநாரையும் பிறவுமாகிய நீர்ப்பறவைகள் பலவும் செய்கின்ற; வெல் போர் வேந்தர் முனை இடம் போல - வெல்லும் போர்த் தொழிலையுடைய பகையரசர் இருவர் தம்முட் போரிடுதற்கமைந்த போர்க்களத்திலெழும் ஒலிபோல; பல்வேறு குழூஉக் குரல் பரந்த வோதையும் - பலவேறு வகைப்பட்ட கூறுபட்ட ஒலிகள் ஒன்றுகூடிப் பரவிய ஒலியும் என்க.

(விளக்கம்) 13. பழனம் - ஊர்ப் பொது நிலம். 114 - கம்புட் கோழி - சம்பங் கோழி. கனைகுரல் - மிக்கொலிக்கும் குரல்; ஒலிக்கும் குரலெனினுமாம். செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும் என்புழி இயற்கை நவிற்சியும் முரணும் ஆகிய அணிகள் தோன்றி இன்பஞ் செய்தலறிக. கானக் கோழி - இக்காலத்தார் கானாங்கோழி என்பதுமிது. காட்டுக் கோழி எனல் ஈண்டைக்குப் பொருந்தாது. நீர்க் காக்கை நிறக்காக்கை எனத் தனித்தனி யியைக்க. நிறம் - இயல் பென்பாருமுளர். ஊரல் - நீர் மேலூர்தலினால் குளுவைக்கு ஆகுபெயர். புள்ளு - கணந்துட்புள். புதா - பெருநாரை. மரக்கானாரை என்பதுமிது. புதா என்றே பெருங்கதையினும் காணப்படுகின்றது. இதனைப் போதா என்பதன் விகாரம் என்பர் அடியார்க்கு நல்லார். பல்வேறு பறவைகளின் பலவேறு வகைப்பட்ட ஒலிகளும் கூடி ஒலித்தலின் குழூஉக்குரல் என்றார். போர்க்களத்தினும் பல்வேறு மொழி பேசுவோர் ஒலி கூடியொழுத்தலின் முனையிடத்தொலி உவமையாயிற்றென்க. கம்பநாடரும் பல்வேறு மொழிபேசு மாக்கள் கூடியவிடத்தில் பிறக்கும் ஒலிக்கு இங்ஙனமே,

ஆரிய முதலிய பதினெண் பாடையிற்
பூரிய ரொருவழி புகுந்த போன்றன
ஓர்கில கிளவிக னொன்றொ டொப்பில
சோர்வில விளம்புபுட் டுவன்று கின்றது  (பம்பா - 14)

உவமை எடுத்தோதுதலும் நோக்குக.

காவிரி நாட்டின் உணவு வளம்

120 - 126 : உழாஅ ........... ஒலியேயன்றியும்

(இதன்பொருள்:) உழாநுண் தொளி உள்புக்கு அழுந்திய - உழவரால் உழப்படாமல் வழியிடத்தே எருதுகளும் உழவரும் பிறரும் இயங்குதலானே பட்ட நுண்ணிய சேற்றினுட் சென்று அழுந்திச் சேறு படிந்ததும்; கழாஅ மயிர் யாக்கைச் செங்கண் காரான் - உடையவராற் குளியாட்டப்படாத மயிரையுடைய உடம்பையும் சிவந்த கண்களையும் உடையதுமாகிய எருமை; சொரிபுறம் உரிஞ்ச - தனது அச் சேற்றினது உலர்ந்த பொருக்கினையுடைய முதுகினை உராய்தலானே; புரி நெகிழ்பு உற்ற குமரிக் கூட்டின் - வைக்கோற்புரி தேய்ந்து அற்றுப் போன அழியாத நெற்கூட்டினின்றும் சரியாநின்ற; கொழும்பல் உணவு - வளவிய பலவேறு வகைப்பட்ட உணவுகளாகச் சமைக்கப்படுகின்ற பழைய; கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய - கவரித் தொங்கல் போன்று விளைந்து கிடக்கின்ற புதிய செந்நெற்கதிரின் மேலே சொரியாநிற்ப; கருங்கை வினைஞரும் களமரும் கூடிநின்று ஒருங்கு ஆர்க்கும் ஒலியே அன்றியும் - அவ்வழியே செல்லும் வழிய கையினையுடைய உழு தொழிலாளரும் வேளாளரும் அந்நிகழ்ச்சியைக் கண்டு மேற்செல்லாமல் அவ்விடத்திலேயே கூடிநின்று ஒருங்கே ஆரவாரிக்கும் பேராரவாரமும் அஃதல்லாமலும் என்க.

(விளக்கம்) உழாஅநுண் தொளி - மாவும் மாக்களும் இயங்கும் வழியிடத்தேயுள்ள குழியில் உண்டான சேறு என்றவாறு. இத்தகைய சேறு மிகவும் நுண்ணிதாயிருத்தல் இயல்பாகலின் நுண்தொளி என்றார். இத்தகைய சேற்றைக் காணின் எருமை பெரிதும் மகிழ்ந்து அதன்கட் படுத்துப் புரளுதல் இயல்பு. அஃது ஆர்வத்துடன் தானே புகுந்து அழுந்திற் றென்பது தோன்ற, தொளியுட்புக்கு அழுந்திய காரான் என்றார். காரான் - எருமை. அதன் வளம் தோன்றச் செங்கட்காரான் என்றார். எனவே அது சேற்றினுட் புக்கழுந்தியது மாட்டாமையாலன்று மகிழ்ச்சியாலோம் என்பது பெற்றாம்.

இனி, அவ்வெருமை எழுந்தபின்னர் அவன் முதுகிற் படிந்த சேறு உலர்ந்து பொருக்கானமையின் சொரிபுறம் என்றார். சொரிபுறம் - பொருக்குடைய முதுகு இதற்குத் தினவையுடைய முதுகு என்பர் பழையவுரையாசிரியரிருவரும், எருமை உராய்தற்குக் காரணம் தினவு அன்று அப்பொருக்கினை உதிர்ப்பதேயாம் என்க. சேற்றில் வீழ்ந்த எருமையை உடையவர் கழுவிவிடுவர். அவை மிகுதியாக விருத்தலின் இது கழுவப்படாது விடப்பட்டது என்பது கருத்து.

காவிரி நாட்டினர் நெல்லை வைக்கோலின் மேலிட்டுப் புரிச் சுற்றிக் கூடு செய்து பாதுகாப்பது வழக்கம். அவ்வழக்கம் இக்காலத்தேயும் உளது.

இத்தகைய நெற்கூட்டினை இக்காலத்தார் நெற்சேர் என்று வழங்குப. 123. குமரிக் கூடு - நுகராது விடப்பட்ட நெற்கூடு. இக்கூடு கழிந்தயாண்டில் விளைந்த நெற்கூடாம். இது குமரிக் கூடாகவே அந்நாடானது உண்டுதண்டா மிகுவளத்தது என்பது பெற்றாம். மற்று அந்த யாண்டின் விளைந்த நெற்கதிர்தானும் பெரிதும் வளமுடைத் தென்பது தோன்ற, கவரிச் செந்நெல் என்றார்.

125. கருங்கை - வலிய கை. கருங்கை வினைஞர் கருங்கைக் களமர் என இருவருக்கும் இயைக்க. தொழில் செய்து வலிமிக்க கை எனவும், இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைக்கும் வலிமையுடைய கைகள் எனினுமாம். வினைஞர் என்றது கூலியாட்களை. களமர் - நெற்களத்திற் குரிமையுடைய வேளாண் மாந்தர். வினைஞர் - பறையர் பள்ளர் முதலாயினார் எனவும், களமர் உழவர் கீழ்க்குடி மக்கள் எனவும் அடியார்க்கு நல்லார் கூறுவர். களமர் - உழுகுடி வேளாளர் என்பது அரும்பதவுரை.

கடைசியர் விருந்திற் பாணி

127 - 131 : கடிமலர் .......... விருந்திற் பாணியும்

(இதன்பொருள்:) செங்கயல் நெடுங்கண் சில் மொழிக் கடைசியர் - சிவந்த கயல்மீன் போன்ற நெடிய கண்களையும் சிறுமையுடைய மொழிகளையும் உடைய உழத்தியர்; கடிமலர் களைந்து - இரவிற் சூடிய நறுமணமலர்களை அகற்றி; முடிநாறு அழுத்தி - உழவர் முடிந்து போகட்ட நாற்று முடியின்கண் நாற்றை நறுக்கித் தமது கோண்டையிலே செருகிக் கொண்டு; தொடிவளைத் தோளும் ஆகமும் சேறு தோய்ந்து ஆடும் கோலமொடு வீறுபெறத் தோன்றி - வளைந்த வளையலையுடைய தோளினும் முலையிடத்தும் சேறு தோயப்பெற்ற கோலத்தோடு அழகுறத் தோன்றி; வெங்கள் தொலைச்சிய - வெவ்விய கள்ளைப் பருகித் தொலைத்ததனால் அறிவு மயங்கப்பெற்று; பாடுகின்ற பண்ணொடு பொருந்தாத விருந்தின் பாணியும் - புதுமையுடைய பாட்டொலியும்; என்க.

(விளக்கம்) கடிமலர் - மண முடைய மலர். அம்மலர் கழிந்த இரவிற்றங் கணவரொடு கூடற் பொருட்டுச் சூடப்பட்டதாகலின் அவற்றைக் களைதல் வேண்டிற்று. முடி - நாற்றுமுடி. நாற்று முடியை நறுக்கிக் கொண்டையிலே சூட்டிக் கோடல் உழத்தியர் வழக்கம்.

இனி, தாம் நாற்று நடும் வயலிற் களையாகும் கடிதற்குரிய குவளை தாமரை முதலிய மலர்களைக் களைந்தகற்றி அவ்விடத்தே முடியின்கண் நாற்றை அலகாக்கி அழுத்தி (நட்டு) எனலுமாம். நாற்று நடுங்கால் அவற்றின் தோகை சேற்றை வாரி வீசுதலின் தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றி என்றவாறு. தளிர்மேனியில் கரிய சேறு புள்ளிகளாக அமைதலின் அவைதாமும் அழகு செய்தலின் அவ்வழகோடு தோன்றி என்க.

இனி, அடியார்க்கு நல்லார் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடுதல் - களித்து ஒருவர் மேல் ஒருவர் சேற்றை இறைத்துக் கோடல். வீறு பெறத் தோன்றலாவது - முலைமேற் றெறித்த சேறு கோட்டு மண் கொண்டாற் போன்றிருத்தல். வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல்-ஏரிய வாயினு மென்செய்யும் - கூரிய, கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலம், கோட்டுமண் கொள்ளா முலை (முத்தொள்ளாயிரம்) என்றாற் போல என விளக்குவர். சின்மொழி என்புழிச் சின்மை சிறுமையின் மேற்று. இழிந்த மொழி என்றவாறு. சிலமொழி எனலுமாம். இங்ஙனம் உழத்தியர் பாடும் பாட்டினைப் பெருமுளை என்பாருமுளர். பண்ணொடு படாதேயும் தமது குரலினிமையினால் புதுமையுண்டாகப் பாடுதலின் விருந்திற் பாணி என்றார் எனலுமாம்.

ஏர்மங்கலப் பாடல்

132 - 135 : கொழுங்கொடி ........... ஏர்மங்கலமும்

(இதன்பொருள்:) விளங்கு கதிர் கொழுங் கொடி அறுகையும் குவளையும் கலந்து தொடுத்த விரியல் சூட்டி - பொன்னிறம் பெற்றுத் திகழ்கின்ற செந்நெற் கதிரோடே அறுகம்புல்லையும் குவளை மலரையும் விரவித் தொடுத்த மாலையை மேழியிலே சூட்டி; பார் உடைப்பனர்போல் - நிலத்தை இரண்டாகப் பிளப்பவர் போன்று; பழிச்சினர் கைதொழ - கடவுளை வாழ்த்துவோர் வாழ்த்துக்கூறிக் கைகூப்பித் தொழாநிற்ப; ஏரொடு நின்றோர் ஏர்மங்கலமும் - பொன்னேர் பூட்டிநின்ற உழவர் எருதுகளைத் தூண்டி யோட்டுங்கால் பாடும் ஏர்மங்கலப்பாட்டின் ஆரவாரமும் என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறப்படும் உழவர் பொன்னேர் பூட்டி உழுபவர், அவர்தாம் கழனிகளை வறலில் (நீர்பாய்ச்சாத கழனி) உழுவது தோன்ற, பார் உடைப்பனர் போல் என்றார். நீர்கால் யாத்த கழனியாயின் பார் கிழிப்பனர் போல் என்பர். உடைப்பனர் போல் என்பது வறலுழுவார்க் கன்றிச் சேற்றில் உழுவார்க்குப் பொருந்தாமையுணர்க. கழனிகளை நீர்பாயாமுன் பலசால் உழுது மண்ணைக் கிளரி வெயிலில் நன்கு உலர்த்துதல் மரபு. அங்ஙனம் உலர்த்திய நிலம் நன்கு பணைத்து விளையும். இதனை,

தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும் (குறள் - 1038)

எனவரும் திருக்குறளானும் உணர்க.

பொன்னேர் - ஒருயாண்டின் தொடக்கத்தே உழுதொழிலுக்குக் கால் கொள்வோர் முதன் முதலாக நன்னாளிற் பூட்டும் ஏர் என்க. பொன்னாராகலின் விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டி, கடவுளை வாழ்த்துவோர்; வாழ்ந்த உழுவோர் ஏர்பிடித்து நின்றார் என்க. பழிச்சினர் - வாழ்த்துவோர். அவர் உழுவோரின் முதியவர் என்க. ஏர் மங்கலம் - ஏருழுவோர் கடவுளை வாழ்த்திப் பாடும் பாட்டு.

முகவைப் பாட்டு

136 - 137 : அரிந்துகால் ............. முகவைப் பாட்டும்

(இதன்பொருள்:) அரிந்து கால் குவித்தோர் - நெல்லையரிந்து போர்வு செய்தோர்; அரி கடா உறுத்த பெருஞ் செய்ந் நெல்லின் - சூட்டைக் கடாவிடுதல் செய்த பின்னர் அந்நெல்லை முகந்து தூற்றுபவர் பாடுகின்ற; முகவைப்பாட்டும் - முகவைப்பாட்டொலியும் என்க.

(விளக்கம்) கால் - இடம். அரி - அரிந்து போட்ட சூடு; (கூறு). முகவைப்பாட்டு - பொலிபாடுதல். நெல்லின் மிகுதி தோன்றப் பெருஞ் செய்ந்நெல் என்றார். பொலியை முகந்து தூற்றுவார் பாடுதலின் முகவைப் பாட்டு எனப் பெயர் பெற்றது.

கிணைப் பொருநர் பாட்டு

138-139 : தென்கிணை.................இசையும்

(இதன்பொருள்:) தெண்கிணைப் பொருநர் - தெளிந்த ஓசையையுடைய தடாரியினையுடைய கிணைவர்; செருக்குடன் எடுத்த - கள்ளுண்ட செருக்கோடு தோற்றுவித்த; மண் கணை முழவின் மகிழ் இசை ஓசையும் - மார்ச்சனையையுடைய திரண்ட முழவினது கேட்டோர் மகிழ்தற்குக் காரணமான இசையினது ஒலியும் என்க.

(விளக்கம்) இது கனவழி வாழ்த்து என்னும் ஒரு புறப்பொருட்டுறை; இதனை, தண்பணை வயலுழவனைத் தெண்கிணைவன் திருந்து புகழ் கிளர்ந்தன்று எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவானும் (186)

பகடுவாழ் கென்று பணிவயலு ளாமை
அகடுபோ லங்கட் டடாரித் - துகடுடைத்துக்
குன்றுபோற் போர்விற் குருசில் வளம்பாட
இன்றுபோ மெங்கட் கிடர்

எனவரும் அதன் வரலாற்று வெண்பாவானும் உணர்க.

கிணை - தடாரி - ஒருவகைத் தோற்கருவி.

கோவலன் கண்ணகியிருவரும் கவுந்தியடிகளாரோடு காவிரி நாட்டின்கண் உண்டாகும் பல்வேறு ஒலிகளையும் கேட்டும் பல வேறிடங்களையும் கண்டும் வழிநடை வருத்தந்தோன்றாமல் இனிதே செல்லுதல்.

140 - 141 : பேர்யாற்றுக் ............ கொள்ளார்

(இதன்பொருள்:) பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு - பெரிய அக்காவிரி யாற்றினது நீரடைகரையிலே ஈண்டுக் கூறப்பட்ட இனிய ஒலிகளை முறையே கேட்டு அவற்றின் புதுமையாலே மகிழ்ந்து; ஆர்வ நெஞ்சமொடு அவலம் கொள்ளார் - மேலும் சேன்று அத்தகைய புதுமைகளைக் கேட்க ஆர்வமுறுகின்ற நெஞ்சத்தோடே வழி நடத்தலால் உண்டாகும் துன்பத்தைக் காணாதவராய் என்க.

(விளக்கம்) காவிரிப் பேரியாற்றின் கரைவழியே செல்லும் பொழுது தமக்குப் புதுமையான நீர்ப்பறவைகளின் ஆரவாரமும் பிறவுமாகிய இசைகளைக் கேட்பதனால் நெஞ்சம் பெரிதும் மகிழ்ந்து செல்லுதலின் அவர்க்கு வழிநடை வருத்தம் புலப்படாதாயிற்று. அங்ஙன மாதல் மனத்திற்கு இயல்பு. இதனை, ஒன்றொழித்து ஒன்றையுன்ன மற்றொரு மனமுமுண்டோ எனவரும் கம்பர் மணிமொழியானும் உணர்க.

(119) பரந்த வோதையும், (124) ஆர்க்கும் ஒலியும், (131.) விருந்திற் பாணியும், (135) ஏர்மங்கலமும், (137) முகவைப் பாட்டும் (139) முழவின் மகிழிசை யோதையும், என்னுமிவற்றைப் பேர்யாற்றடைகரை மருங்கே வழிநெடுக நீர்மையுறக் கேட்டலாலே மேலும் வழிச் செலவின் மேல் ஆர்வ நெஞ்சமுடையராய் அவலங் கொள்ளாராய் (155) பன்னாட்டங்கிச் செல்நாள் என மேலே சென்றியையும்.

காவிரி நாட்டின் மங்கல மறையோர் இருக்கை

142 - 147 : உழைப்புலி ............ இருக்கையன்றியும்

(இதன்பொருள்:) புலி உழைக் கொடித் தேர் உரவோன் கொற்றமொடு - புலியைத் தன்னிடத்தே வரையப்பட்ட கொடியை யுடைய தேரையுடைய ஆற்றல்மிக்க சோழமன்னனுக்கு வெற்றியையும்; மழைக் கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில் - அவன் நாட்டு வளத்திற்குத் தலைசிறந்த காரணமாகிய மழைக்குச் சூலையும் தோற்றுவிக்கின்ற வேள்வித் தீ விளங்காநின்ற அமரர்க்கு உணவு சமைக்கும் மடைப்பள்ளியாகிய வேள்விக்களத்திலே; மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை - பார்ப்பனரால் உண்டாக்கப்பட்ட அவியினது நறுமணங்கமழும் புகை; இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து - இறை உயர்ந்த மாடமாளிகையிடமெங்கும் போர்த்தலானே; மஞ்சு சூழ் மலையின் மாணத்தோன்றும் - முகிலாற் சூழப்பட்ட மலைகள் போன்று மாட்சிமையுடன் தோன்றாநின்ற; மங்கல மறையோர் இருக்கை அன்றியும் - உலகிற்கு மங்கலமுண்டாக்கும் அப் பார்ப்பனருடைய இருப்பிடங்களாகிய ஊர்களும் அவைகளே யன்றியும்; என்க.

(விளக்கம்) புலி உழைக்கொடி எனமாறுக. உழை - இடம். புலிக் கொடித்தேர் உரவோன் என்றமையால் சோழமன்னன் என்பது பெற்றாம். சோழமன்னனின் வெற்றிக்கு அவன் செய்யும் அறமே காரணம் என்பார் அறங்களுட் சிறந்த வேள்வியை அவன் கொற்றத்திற்கு ஏதுவாக்கினார். மற்று, மழைக்குக் கருவைத் தோற்றுவிப்பது ஆவுதி நறும்புகை என்றது அப்புகை தானும் நீராவியாகி முகிலாதல் பற்றிக் கூறியவாறு, இனி, வேள்வியறம் மழையை உண்டாக்கும் ஆதலின் மழைக் கருவுயிர்க்கும் ஆவுதி நறும்புகை என மற்றொரு பொருளும் தோற்றி நிற்றல் நுண்ணிதின் உணர்க. இதனால் நீராவியே முகிலாகின்ற தென்னும் பண்டைத் தமிழர் பூதநூலறிவும் புலப்படுதல் உணர்க.

இனி, மறையோர் அமரர்க்கு அவியுணவு சமைக்குமிட மாகலின் வேள்விக்களத்தை அட்டில் என்றார். அட்டில் - மடைப்பள்ளி. இறை - இல்லின துறுப்பினுள் ஒன்று. இக்காலத்தார் இறப்பு என்பர். மறையோரது செல்வச்சிறப்புத் தோன்ற அவர் இருக்கையை இறையுயர் மாடம் என்று விதந்தார். மஞ்சு - முகில். ஆவுதி நறும்புகைக்கு முகில் உவமை. மாடத்திற்கு மலையுவமை. மங்கலம் - ஆக்கம்.

காவிரிப்பாவையின் புதல்வர் பழவிறல் ஊர்கள்

148 - 155 : பரப்புநீர் ............. ஒருநாள்

(இதன்பொருள்:) நீர் பரப்பு காவிரிப்பாவை தன் புதல்வர் - சோழ நாட்டின்கண் புனல்பரப்பும் காவிரி யென்னும் நங்கையின் மக்களும்; இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழ விடை விளைப்போர் - இரவலருடைய சுற்றத்தையும் உலகுபுரக்கும் வேந்தருடைய வெற்றியையும் தாம் செய்கின்ற உழவுத் தொழிலாலே தோற்றுவிப்போருமாகிய வேளாண்மாந்தர் வாழ்கின்ற; பொங்கழி - தூற்றாத பொலியாகிய நெற்குவியல்கள்; ஆலைப் புகையொடும் பரந்து - கருப்பாலையின்கண் பாகு காய்ச்சுவதனால் எழுகின்ற புகையாலே பரக்கப்பட்டு; மங்குல் வானத்து மலையில் தோன்றும் - இருட்சியையுடைய முகில் தவழ்ந்த மலைகளைப்போலத் தோன்றுதற் கிடனான; பழ விறல் ஊர்களும் - பழைய வெற்றியையுடைய ஊர்களும் ஆகிய; ஊர் இடையிட்ட நாடு உடன் கண்டு இவ்விருவகை யூர்களையும் இடையிட்ட காவிரி நாட்டினது கவினெல்லாம் கண்களிக்க ஒருசேரக் கண்டு இனிதே செல்பவர்; காவதம் அல்லது கடவாராகி - ஒருநாளில் ஒருகாவதத் தொலையைக் கடந்து செல்வதன்றி மிகுதியாகச் செல்லாதவராகி; தங்கி - இடையிடையே தங்குதற்கேற்ற ஊர்களிலே தங்கித் தங்கி இளைப்பாறி; பல்நாள் செல்நாள் ஒரு நாள் - இவ்வாறு பலநாள் செல்லாநின்ற நாளிலே ஒருநாள்; என்க.

(விளக்கம்) குடக மலையிற் பெய்தநீரைக் கொணர்ந்து சோழநாட்டிற் பரப்பும் காவிரி என்க. காவிரிநீரி கங்கை நீராதலின் கங்கையின் புதல்வரைக் காவிரியின் புதல்வர் என்றார் எனவரும் பழையவுரை வேண்டா கூறலாம். வாழி அவன்றன் வளநாடு வளர்க்குந் தாயாகி ஊழியுய்க்கும் பேருதவியொழியாப் வாழி காவேரி என்றாங்கு ஈண்டும் அவ்வளநாட்டுழவரைக் காவிரிப் பாவைதன் புதல்வர் என்றார் என்க. இரவார் இரப்பார்க் கொன்றீவர் கரவாது - கைசெய் தூண்மாலையவர் (குறள் - 1035) என்பது பற்றி இரப்போர் சுற்றம் விளைப்போர் என்றார். ஈண்டு விளைத்தல் உணவு முதலியவற்றால் போற்றி வளர்த்தல்; இனி, பலகுடைநீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர். அலகுடை நீழலவர் (குறள் - 1034) என்பதுபற்றிப் புரப்போர் கொற்றம் விளைப்போர் என்றார் எனினுமாம். இத்திருக்குறளுக்கு ஆசிரியர் பரிமேலழகர் இரப்போர்.... விளைப்போர் என்னும் இவ்வடிகளையே எடுத்துக் காட்டுதலும் அறிக. படைப்புக் காலந்தொட்டுச் சோழநாடு வெற்றியாற் சிறப்புற்று வருதலான் அதற்குக் காரணமான ஊர்களைப் பழவிறலூர்களும் என்றார். அந்நாடுதானும் கண்டு தண்டாக் கட்கின் பத்ததாகலின் அதன் கவினெல்லாங் காண்டல் அரிதென்பது தோன்ற ஊரிடையிட்ட நாடுடன் கண்டு என்றார்.

151 - பொங்கழி - தூற்றாப் பொலி என்பது பழையவுரை. இனி அழி வைக்கோல் என்னும் பொருட்டாகலின் பரிய வைக்கோற் போர்வுகள் ஆலைப்புகை தவழப் பட்டு மங்குல் வானத்து மலையிற் றோன்றும் எனக் கோடலே நேரியவுரையாம். ஆலை - கரும்பு பிழியும் பொறி. அதன்கட் கருப்பம்பாகு காய்ச்சுதலாலெழும் புகையை ஆலைப்புகை என்றார். அப்புகை முகில்போற் றிரளும் என்பதனால் அதன் மிகுதி கூறினாராயிற்று. இவர்தாமும் இதுகாறும் நடை மெலிந்தோரூர் நண்ணி யறியாராகலின் அரிதின் நடந்து காவதமே கடப்பாராயினர். பன்னாட்டங்கி என்றது வழிநடையா லிளைப்புற்ற விடத்திலெல்லாம் தங்கி என்பதுபட நின்றது.

சாரணர் வருகை

156 - 163 : ஆற்றுவீ ............ சாரணர் தோன்ற

(இதன்பொருள்:) ஆற்றுவீ அரங்கத்து வீற்று வீற்றாகிக் குரங்கு அமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து - அக்காவிரிப் பேரியாற்றை நடுவிருந்து மறைக்கின்ற திருவரங்கத்தின் பக்கலிலே தனித்தனியாக வளைந்த மூங்கில் வேலியாற் சூழப்பட்ட மரம்பயில் அடுக்கத்து மாவும் பலாவு முதலிய பயன்மிகு மரங்கள் மிகுந்த செறிவினூடே; வானவர் உறையும் பூநாறு ஒருசிறை - தேவர்களும் தங்கியிருத்தற் கவாவும் மலர்மணம் கமழாநின்ற ஓரிடத்தே; பட்டினப்பாக்கம் பெரும் பெயர் ஐயர் ஒருங்கு உடன் இட்ட இலங்கு ஒளிச் சிலாதல மேலிருந்தருளி - வான் பெரு மன்றத்துப் பிண்டி நீழற்கண்ணே உலக நோன்பிகளுள் வைத்துப் பெரிய புகழையுடைய சமயத் தலைவர்கள் பலரும் ஒருங்குகூடிச் சாரணர் வரூஉந் தகுதியுண்டாநெனக் கருதி இட்டு வைத்த ஒளிதிகழ்கின்ற சந்திரகாந்தக் கல்லாலியன்ற மேடையின்மீ தமர்ந்தருளி; பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத் தருமஞ் சாற்றும் சாரணர் - அருகக் கடவுளாற் செய்யப்பட்ட மூன்றுவகை அதிசயங்களும் தப்பாத மெய்ந்நூலின்கண் அமைந்த அறிவொழுக்கங்களை யாவரும் கேட்டுணரும்படி திருவாய்மலர்ந்தருளுகின்ற சாரணர்; பட்டினப்பாக்கம் விட்டனர் நீங்கா தோன்ற - அப்பட்டினப்பாக்கத்தை விட்டு நீங்கி வந்து கவுந்தியடிகள் முதலிய இவர்கள்முன் தோன்ற என்க.

(விளக்கம்) இதன்கண் கூறியது - கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி மூவரும் மதுரை நோக்கிக் காவிரியின் வடகரை வழியே செல்பவர் திருவரங்கத்தின் மருங்கே சென்றனராக. அப்பொழுது அவ்வடகரையிலுள்ள அழகிய ஒரு பூம்பொழிலிடத்தே அவர் முன் சாரணர் வந்து தோன்றினர். அச்சாரணர் தாம் யாவரெனின் பட்டினப்பாக்கத்தே வான்பெரு மன்றத்தே பொலம்பூப் பிண்டி நலங்கிளர் கொழுநிழல் நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும் சாரணர் வரூஉந் தகுதியுண்டாமென உலக நோன்பிகள் ஒருங்குடனிட்ட இலகொளிச் சிலாதல த்தின் மேலிருந்து அறங்கூறுஞ் சாரணரே யாவர் என்றவாறு. அச்சாரணர் அப்பட்டினப் பாக்கத்தை விட்டு வேறிடங்களுக்கு அறங்கூறச் செல்பவர் கவுந்தியடிகள் முதலியோர் முன் தோன்றினர் என்றவாறு.

154 - ஆற்றுவீ யரங்கம் - காவிரியாற்றினிடைக் கிடந்த மலர்மிக்க திருவரங்கம் எனினுமாம். அரங்கம் என்பது ஆற்றிடைக் குறையே யாயினும் அவ்வரங்கத்தின் இருபுறமும் அமைந்த கரைகளும் ஆகுபெயரான் அரங்கம் என்றே கூறப்படும், ஆகவே, இவர்கள் காவிரியின் வட கரையிலே அரங்கத்தின் மருங்கே செல்லும்பொழுது வடகரையிடத்தே பூநாறுமொரு சிறை சாரணர் தோன்றக் கண்டனர் என்பது கருத்தாகக் கொள்க. அரங்கம் என்றது திருவரங்கத்தை.

156 - வீற்று வீற்றாக என்பது வேறுவேறாக என்னும் பொருட்டு. இதற்கு இப்பொருள் கொள்ளாமல் வீறு என்பதற்கு மற்றொன்றற்கில்லாத சிறப்பு என்னும் பொருளுமுண்மையின் அடியார்க்குநல்லார் வேறிடத்தில்லாத தன்மைத்தாய் எனப் பொருந்தாவுரை கூறினர். என்னை, வீற்று வீற்றாம் என்னும் அடுக்கிற்கு அப்பொருள் பொருந்தாமை யுணர்க. இனி, காவிரி முதலிய யாற்றின் படுகரிலே தனித் தனியாக வேலிகோலப்பட்ட சோலைகள் உளவாதலை இக்காலத்தும் காணலாம். இங்ஙனம் தனித்தனியே அமைந்த சோலையையே ஈண்டு ஆற்று வீயரங்கத்து (மருங்கில்) வீற்று வீற்றாகி (தனித்தனியே) குரங்கமை உடுத்த அடுக்கத்து (ஒன்றன்கண்) பூநாறொரு சிறை.... சாரணர் என்புழி அடிகளார் கூறினர் என்றுணர்க.

157 - குரங்கமை உடுத்த அடுக்கம் மரப்பயிலடுக்கம் எனத் தனித் தனி கூட்டுக. குரங்கமை - வளைந்த மூங்கில். இங்ஙனம் கூறுதலே அமையும். வளைந்த மூங்கின் முள்ளால் வளைக்கப்பட்ட வேலி என்னல் மிகை; மூங்கில் வேலி எனவே அமையும் என்க. 158 - வானவர் உறையுந்தகுதியையுடைய சிறை; பூநாறு சிறை எனத் தனித்தனி யியையும். 160 -பெரும் ஐயர் என்றது உலக நோன்பிகளுள் வைத்துப் பெரிய புகழையுடைய தலைவர்களை. இவர்கள் நன் முயற்சியாலே இடப்பட்ட சிலாதலம் என்க.

162 - அதிசயம் - சகசாதிசயம் , கர்ம சயாதிசயம், தெய்விகாதிசயம் என மூன்று வகைப்படும் என்ப. வாய்மை - மெய்ந்நூல். அஃதாவது ஈண்டு ஆருகத சமயவாகமம். 163. தருமம் - நல்லொழுக்கம்.

சாரணர் பட்டினப்பாக்கத்தை விட்டு நீங்கி ஈண்டு வந்து இவர் முன்தோன்ற என்க. சாரணர் - சமணத்துறவிகளுள் யாண்டுஞ் சென்று தமது சமயத்தைப் பரப்பும் நற்றொண்டினை மேற்கொண்டவர். அவர், தல சாரணர், சல சாரணர், பல சாரணர், புட்ப சாரணர், தந்து சாரணர், சதுரங்குல சாரணர், சங்க சாரணர், ஆகாச சாரணர் என எண்வகைப் படுவர் என்ப.

கவுந்தியடிகள் முதலிய மூவரும் சாரணத் தலைவனை வணங்குதல்

164 - 169 : பண்டைத் தொல்வினை ............. கொள்ளான்

(இதன்பொருள்:) கண்டு அறி கவுந்தியொடு - அறங்கூறும் அச்சாரணர் வருகையைக் கண்கூடாகக் கண்டறிந்த கவுந்தி அடிகளாரோடு கோவலனும் கண்ணகியும்; பண்டைத் தொல்வினை பாறுக என்று - யாம் முன்செய்த பழவினை யெல்லாம் கெட்டொழிக என்னும் கருத்துடையராய்; காலுற வீழ்ந்தோர் அச்சாரணர் திருவடியிலே தம் முடிதோய வீழ்ந்து வணங்கினாராக அங்ஙனம் வணங்கியவர்; வந்த காரணம் வயங்கிய கொள்கைச் சிந்தை விளக்கில் தெரிந்தோனாயினும் - அங்கு வருதற்குரிய அவர்தம் பழவினையையும் அவ்வினை மேலும் அவர்க்கு ஊட்டும் துன்பங்களையும், அச்சாரணருள் வைத்துத் தலைவன் விளங்கிய கோட்பாட்யுடைடைய தனது அவதி ஞானத்தாலே நன்கு தெரிந்தவனாயினும்; ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய வீரனாகலின் - விருப்பும் வெறுப்பும் தன்னை விட்டுப் போகும்படி துவர நீக்கிய ஆண்மையாளனாகலின்; விழுமம் கொள்ளான் - அவர்க்குத் தான் வருந்தானாகி என்க.

(விளக்கம்) கவுந்தியொடு கோவலனும் கண்ணகியும் சாரணர் காலுற வீழ்ந்து வணங்கினர் என்க. காலுற வீழ்ந்தோர், பெயர். வீழ்ந்தோராகிய கோவலனும் கண்ணகியும் என்க. காரணம் - அவர் முற்பவத்தே செய்த வினையும் அதன் செயலும். எல்லாம் ஊழின்படியே நிகழ்தலின் அங்ஙனம் நிகழ்தலியற்கை என்று கண்டு அவர் இப்பொழுது எய்தும் துயர்க்கும் இனி எய்த விருக்கும் துயர்க்கும் தம் அருள்காரணமாக வருந்துதலே இயல்பாகவும் தமது மெய்யுணர்வு காரணமாக அவலங் கொள்ளாராயினர் என்பது கருத்து. ஆர்வமும் செற்றமும் நீக்கிய வீரனாகலின் அவற்றின் காரியமாகிய வேண்டுதலும் வேண்டாமையும் இலனாய் விழுமம் கொள்ளானாயினன் என்பது கருத்து. சாரணருள் வைத்துத் தலைவன் காலுற வீழ்தலின் முன்னர்ச் சாரணர் தோன்ற என்றவர், ஈண்டுச் சிந்தை விளக்கிற் றெரிந்தோன் என்றும் விழுமம் கொள்ளான் என்றும் ஒருமைப் பாலாற் கூறினர். சிந்தை விளக்கு என்றது - அவதிஞானத்தை. அஃதாவது முக்கால நிகழ்ச்சியையும் அறியும் அறிவு.

சாரணத் தலைவர் கவுந்தியடிகட்குக் கூறுதல்

170 - 175 : கழிபெரு ......... உயிர்கள்

(இதன்பொருள்:) கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி - (கோவலனும் கண்ணகியும் அறியாவண்ணம் அச்சாரணத் தலைவன் கவுந்தி அடிகளாரை நோக்கி அவர் குறிப்பாக வுணருமாறு) மிகவும் பெரிய தவச்சிறப்பினையுடைய கவுந்தியே! வல்வினை ஒழிக என ஒழியாது ஊட்டும் - முற்செய்த வலிய பழவினையானது எத் தகையோரானும் ஒழிக்க ஒழியாததாய்த் தன் பயனை நுகர்விக்கும் என்னும் வாய்மையினையும்; இட்டவித்தின் எதிர்ந்து வந்து எய்தி - மேலும் அப்பழவினை தானும் விளைநிலத்திட்ட வித்துப் போலத் தான் செவ்விபெற்றுழி உருத்துவந்து தனது பயனை; ஒட்டுங்காலை - ஊட்டுதற்கு முந்துறும் பொழுது; ஒழிக்கவும் ஒண்ணா - அதனை எத்தகைய சூழ்ச்சியானும் தவிர்க்கவும் முடியாது என்னும் வாய்மையினையும்; காணாய் - இவர்கள் வாயிலாய்க் காட்சி யளவையான் கண்டு கொள்ளக்கடவாய்; கடுங்கால் நெடுவெளி இடும் சுடர் என்ன உடம்பிடை நில்லா உயிர்கள் - கடிய காற்றையுடைய நெடிய வெளியிடத்தே ஏற்றி வைத்த விளக்குப் போன்று ஞெரேலென அப்பழவினை வந்து மோதியபொழுது அவிந்தொழிவதன்றித் தாம் எடுத்த உடம்போடு கூடி நிற்க மாட்டாவாம்; என்றான் என்க.

(விளக்கம்) ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை என்றது முன்னர்க் கவுந்தியடிகளார் கோவலனை நோக்கி உரியதன்று ஈங்கு ஒழிக என்று அறிவுறுத்ததனையும் அதுகேட்டும் அவர் ஒழியாராயினமையும் சிந்தை விளக்கிற் றெரிந்து உலகியன் மேலிட்டோதிய படியாம். வல்வினை என்றது ஒழிகென என்றமையால் கொடிய தீவினை என்னும் பொருட்டாய் நின்றது. என்னை? நல்வினை வந்தூட்டுங் காலை ஒழிகென்பார் யாருமிலர் ஆகலின் என்க.

கழிபெருஞ் சிறப்புடைய தவத்தோர் ஒழிக எனினும் ஊழ்வினை ஒழியாதென்பது தோன்றுதற் பொருட்டு முன்னர் ஒழிக என்ற கவுந்தியைக் கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி! என்று விளித்த படியாம். இனி, இட்ட வித்தின் எதிர்ந்து வந்து ஒட்டுங்காலை அவ்வினையைச் செய்தவர் பிறிதொரு சூழ்ச்சியான் ஒழிக்கவும் ஒண்ணா என்பது கருத்தாகக் கொள்க, ஈண்டு.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்  (380)

எனவரும் திருக்குறளும்,

உறற்பால நீக்கல் உறுவர்க்கு மாகா  (பழவினை -4)

எனவரும் நாலடியும் நினைவுகூர்தற் குரியனவாம்.

இனி, கோவலன் கொலையுண்ணலும் கவுந்தியடிகள் உண்ணா நோன்பின் உயிர்பதிப் பெயர்த்தலும் சிந்தை விளக்கிற் றெரிந்தமையால் அவற்றை வெளிப்பட வுரையாது குறிப்பாக கடுங்கால் நெடு வெளியிடும் சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் எனப் பன்மையாலுலகின் மேலிட்டோதினன் என்க.

இனி, வல்வினை என்பது நல்வினை தீவினை என்னும் இரண்டற்கும் பொதுவாகக் கொள்வாருமுளர்.

விளக்கு உவமித்தார் : நினைவற அழிவதற்கும், புக்குழிப் புலப் படாமைக்கும்; என்பர் அடியார்க்கு நல்லார்.

அருகக் கடவுளின் மாண்பும் ஆகமத்தின் சிறப்பும்

176 - 191 : அறிவன் ............ பொதியரை யோரென

(இதன்பொருள்:) அறிவன் - இயல்பாகவே எல்லாப் பொருளையும் அறியும் வாலறிவினையுடையோனும்; அறவோன் - அறஞ் செய்தலையே தொழிலாக வுடையோனும்; அறிவு வரம்பு இகந்தோன் - யாவர் அறிவிற்கும் அப்பாற்பட்டவனும்; செறிவன் - எல்லா வுயிர்கட்கும் இன்பமாயிருப்பவனும்; சினேந்திரன் - எண்வகை வினைகளை வென்றவனும்; சித்தன் - செய்யக்கடவ வெல்லாம் செய்து முடித்தவனும்; பகவன் - முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்பவனும்; தரும முதல்வன் - அறங்கட்கெல்லாம் காரணமானவனும்; தலைவன் - எல்லாத் தேவர்க்கும் தலைவனானவனும்; தருமன் - அறவாழி அந்தணனும்; பொருளன் - மெய்ப்பொருளானவனும்; புனிதன் - தூயவனும்; புராணன் - பழையவனும்; புலவன் - யாவர்க்கும் அறிவாகவுள்ளவனும்; சினவரன் - வெகுளியைக் கீழ்ப்படுத்தியவனும்; தேவன் - தேவர்க்கெல்லாம் முதல்வனும்; சிவகதி நாயகன் - வீட்டுலகிற்குத் தலைவனும்; பரமன் - மேலானவனும்; குணவதன் - குணவிர தங்களையுடையவனும்; பரத்தில் ஒளியோன் - மேனிலையுலகில் ஒளிப்பிழம்பானவனும்; தத்துவன் - மெய்யுணர்வானவனும்; சாதுவன் - அடக்கமுடையோனும்; சாரணன் - வானத்தே வதிபவனும்; காரணன் - உயிர்கள் வீடுபேற்றிற்குக் காரணமானவனும்; சித்தன் - எண்வகைச் சித்திகள் கைவரப் பெற்றவனும்; பெரியவன் - எல்லாவற்றானும் பெரியவனும்; செம்மல் - பெருந்தகை யுடையோனும்; திகழ் ஒளி - விளங்குகின்ற அறிவு ஒளியாயிருப்பவனும்; இறைவன்- எப்பொருளினும் தங்குகின்றவனும்; குரவன் - நல்லாசிரியனும்; இயல்குணன் - இயல்பாகவமைந்த நற்குணமுடையோனும்; எங்கோன் - எம்முடைய தலைவனும்; குறைவு இல் புகழோன் - எஞ்ஞான்றும் குறையாத புகழையுடையோனும்; குணப்பொருட் கோமான் - நற்குணங்களாகிய செல்வத்தையுடையவனும்; சங்கரன் - இன்பஞ் செய்பவனும்; ஈசன் - செல்வனும்; சுயம்பு - தானே தோன்றியவனும்; சதுமுகன் - எத்திசையையும் ஒருங்கே காண்பவனும்; அங்கம் பயந்தோன் - அங்காகமத்தை அருளிச் செய்தவனும்; அருகன் - யாவரானும் வழிபடப்படுபவனும்; அருள் முனி - யாவர்க்கும் வீடு நல்கும் முனைவனும்; பண்ணவன் - கடவுளும்; எண்குணன் - எட்டுக் குணங்களையுடையவனும்; பாத்து இல் பழம்பொருள் - பகுத்தற்கரிய முழுமுதலானவனும்; விண்ணவன் - அறிவு வெளியிலிருப்பவனும்; வேதமுதல்வன் - மூன்றாகமங்கட்கும் ஆசிரியனும்; விளங்கு ஒளி - மெய் விளங்குதற்குக் காரணமான ஒளியாயிருப்பவனும், ஆகிய அருகப்பெருமான்; ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது - அருளிச்செய்த ஆகமமாகிய விளக்கொளியைப் பெற்றாலல்லது; பிறவிப் பொதியறையோர் - பிறவியாகிய சிறையிடைப்பட்ட மாந்தர்; போதார் - அதனினின்றும் வீடுபெறுதல் இலர் என - என்று செவியறிவுறுத்தா நிற்ப என்க.

(விளக்கம்) 176 - அறவோன் - எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவன். 177 - செறிவான் - அலைவில்லாதவன் எனினுமாம். எண்வகை வினைகளாவன - ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம், அந்தராயம் எனுமிவை. சித்தன் - கன்மங்களைக் கழுவினவன் என்றுமாம்.

178 - முதல்வன் - காரணன், 179 - ஆகமத்தின் பொருளாயுள்ளவன் எனினுமாம். 180-சிவகதி-வீடுபேறு. 181-குணவதன் என்புழி வதம் - விரதம். அவை அநுவிரதம், குணவிரதம், சிக்கை விரதம் என மூவகைப்படும். அவற்றுள்: குணவிரதம் - திக்குவிரதம், தேசவிரதம், அநர்த்த தண்ட விரதம் என மூன்று வகைப்படும் என்ப. 181 - பரத்தில் - மேனிலை உலகின்கண். 183- சித்தன் - எண்வகைச் சித்திகளையும் உண்டாக்கினவன் என்பாருமுளர். 186 - சயம்பு - ஓதாதுணர்ந்தவன் என்றவாறு.

188 - எண்குணமாவன: அநந்த ஞானம், அநந்த வீரியம், அநந்த தரிசனம், அநந்த சுகம், நிர்ந்நாமம், நிராயுஷ்யம், அழியா வியல்பு என்னுமிவை. பாத்து - பகுப்பு, பாத்தில் பழம் பொருள் - ஓட்டமற்ற பொன்னை யொப்பான் என்றுமாம். 189. அங்காகமம், பூர்வாகமம், பகுசுருதியாகமம் என ஆகமம் மூன்று வகைப்படும்.

191 - பிறவியாகிய பொதியறை என்க. பொதியறை - புறப்படற்குரிய வாயிலுமில்லாத அறை. இதனைப் புழுக்கறை என்றும் கூறுப.

சாரணர் அறவுரை கேட்ட கவுந்தியடிகளார் மகிழ்ந்து கூறுதல்

192 - 208 : சாரணர் ........... இசைமொழி யேத்த

(இதன்பொருள்:) சாரணர் வாய்மொழி கேட்டு - இங்ஙனம் அருளிச்செய்த சாரணப் பெரியார் மெய்ம்மொழியைக் கேட்ட; தவமுதல் கவுந்திகை - தவவொழுக்கத்திற்குத் தலைசிறந்த முதல்வியாகிய கவுந்தியடிகளார் அன்பினாலே நெஞ்சம் நெகிழ்ந்து; தன் கை தலைமேற் கொண்டு - தம் கைகளைக் குவித்துத் தலைக்கு மேலேறக் கொண்டு நின்று கூறுபவர்; ஒரு மூன்று அவித்தோன் ஓதிய திருமொழிக்கு அல்லது என் செவியகம் திறவா - பெரியீர்! காமவெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் துவரக் கெடுத்தவனாகிய இறைவனால் அருளிச் செய்யப்பட்ட மெய்யறிவாகிய திருமொழியைக் கேட்பதற்கல்லது, பிறரால் ஓதப்பட்ட மயக்குரைகளைக் கேட்டற்கு அடிச்சியேனுடைய செவிகள் திறக்கமாட்டாவாம்; என் நா காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு நாமமல்லது நவிலாது - அடிச்சியேனுடைய நாவானது காமனுடைய செயலை வென்றவனாகிய அக்கடவுளுக்கியன்ற ஓராயிரத்தெட்டுத் திருப்பெயர்களைத் தழும்ப வோதிமகிழ்வதல்லது பிறிதொரு கடவுளின் பெயரை ஒருபொழுதும் ஓதமாட்டாது; என் கண் ஐவரை வென்றோன் அடியிணை யல்லது கைவரைக் காணினும் காணா - அடிச்சியேனுடைய கண்கள் தாமும் ஐம்பொறிகளையும் அடர்த்து வென்றவனாகிய நங்கள் அருகக்கடவுளுடைய திருவடிகளைக் கண்டு களிப்பதல்லது; பிறிதொரு கடவுளின் அடியிணை என் கையகத்தே வந்திரு பினும் காணமாட்டாவாம்; என் பொருள் இல் யாக்கை அருள் அறம் பூண்டோன் திருமெய்க்கு அல்லது பூமியில் பொருந்தாது - அடிச்சியேனுடைய பயனற்ற யாக்கையானது அருள் என்னும் தலையாய அறத்தையே குறிக்கோளாகக் கொண்ட அக்கடவுளுடைய உருவத் திருமேனியை வணங்கற் பொருட்டன்றிப் பிறிதொரு கடவுளை வணங்கற்கு நிலத்தின்கண் பொருந்தாது; அருகர் அறவோன் அறிவோற்கு அல்லது என் இருகையும் கூடி ஒருவழிக் குவியா - ஆருகதத் துறவோர்க்கு அறத்தைக் கூறுவோனாகிய அவ்வாலறிவனைத் தொழுதற் பொருட்டன்றி அடிச்சியேனுடைய இருகைகளும் தம்முட் கூடித் தலைமேலே ஒருங்கே குவியமாட்டாவாம்; என் தலைமிசை உச்சிதான் மலர்மிசை நடந்தோன் மலர் அடி அல்லது அணிப் பொறாஅது - அடிச்சியேனுடைய தலையினுச்சி தானும் தாமரைப் பூவின்மீதே நடந்தவனாகிய அக்கடவுளுடைய மலர்போன்ற அழகிய திருவடிகளை அணிகலனாக அணியப் பொறுப்பதல்லது பிறிதோரணிகலனையும் அணியப் பொறுக்கமாட்டாது; என்மனம் இறுதியில் இன்பத்து இறைமொழிக்கு அல்லது மறுதர ஓதி புடை பெயராது - அடிச்சியேனுடைய நெஞ்சமானது கடையிலா வின்பத்தையுடைய நம் மிறைவன் திருவாய் மலர்ந்தருளிய ஆகமங்களைப் பன்முறையும் ஓதி ஓதி இன்பத்தாலே நெகிழ்வதல்லது; எஞ்ஞான்றும் பிற சமயநூல்களை ஓதி நெகிழமாட்டாது; என்று அவன் இசை மொழி ஏத்த - என இவ்வாறு கூறி அவ்வருகக் கடவுளுடைய புகழையுடைய மொழிகளாலே அக்கடவுளை வாழ்த்தா நிற்ப; என்க.

(விளக்கம்) 193 - காவுந்திகை - கவுந்தியடிகள். காவுந்தியும் எனப் பாடந் திருத்துவாருமுளர். 194 - ஒரு மூன்று - காம வெகுளி மயக்கம்: ஈண்டு,

காம வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய்  (குறள் - 310)

எனவரும் திருக்குறள் நினைக்கப்படும்.

196. காமத்தின் குறும்பு தன்பா னிகழாமற் செய்தலையுட் கொண்டு காமனை வென்றோன் என்றோதியபடியாம்.

198 - ஐவர் - மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகள்-இகழ்ச்சியால் அஃறிணை உயர்திணையாயிற்று. ஐந்தவித்தான் என வரும் திருக்குறளை ஒப்பு நோக்குக.

199. கடவுட் டொழுது வரமிரப்போர் கண்முகிழ்த்து இருகையும் விரித்துநின்று இரப்பரன்றே? அங்ஙனம் விரிந்த கையகத்து வேறு கடவுள் தன் திருவடியை வலிய வந்து வைப்பினும் அவற்றையும் என்கண் காணா என்றவாறு.

200. அருளறம் பூண்டோன் - அருகன். திருமெய் என்றது ஈண்டுத் திருக்கோயிலிலுள்ள இறைவனது உருவத் திருமேனியை,

201. பொருள் இல் யாக்கை - பொய்ப் பொருளானியன்ற - யாக்கை எனினுமாம். வணங்கற் பொருட்டுப் பூமியிற் பொருந்தாது என்க.

202 - அருகர், ஈண்டு ஆருகதத் துறவோர், அறிவோன் - அறிவுடையவன்.

207. மறுதர வோதுதல் - மீண்டு மீண்டு ஓதுதல். 208 - அவன் - அவ்விறைவன்.

சாரணர் கவுந்தியை வாழ்த்தி வான்வழிப் போதலும்
கவுந்தி முதலியோர் அவணின்றும் போதலும்

208 - 213 : கேட்டதற்கு .......... போந்து

(இதன்பொருள்:) கேட்டு அதற்கு ஒன்றிய மாதவர் - கவுந்தி கூறிய இசைமொழியைக் கேட்டு அக் கேள்வியாலே ஒருமையுற்ற மனத்தையுடைய பெரிய தவத்தையுடைய அச்சாரணர்; உயர்மிசை ஓங்கி ஒருமுழம் நிவந்து ஆங்கு - அவர்கள் இருந்தறங்கூறிய உயரிய அம்மேடையினின்றும் தமது தவவாற்றலாலே ஒரு முழம்வானத்தே உயர்ந்து அவ்விடத்தேயே நின்று; கவுந்தி பவந்தரும் பாசம் கெடுக என்று - கவுந்தியே! நினக்குப் பிறப்பைத் தருகின்ற பற்றறுவதாக! என்றுகூறி வாழ்த்திப் பின்னர்; நீள்நிலம் நீங்கி அந்தரம் ஆறாப் படர்வோர் - நெடிய நிலத்தின் மேலதாகிய வழிமேற் செல்லுதலைத் தவிர்த்து வான்வழியே செல்லாநிற்ப அங்ஙனம் செல்கின்ற சாரணர் போந்திசை நோக்கி; தொழுது பந்தம் அறுக எனப் பணிந்தனர் போந்து - கை குவித்துத் தொழுது நுந் திருவருளாலே எளியேங்கள் பற்றற்றொழிவதாக! என வேண்டிப் பின்னர் நிலத்தின்மிசை அத்திசை நோக்கி வீழ்ந்து வணங்கியவராய்க் கவுந்தி முதலிய மூவரும் அவ்விடத்தினின்றும் போந்து என்க.

(விளக்கம்) 208 - இசை மொழி ஏத்தக் கேட்டு அம் மொழிக்கு ஒன்றிய மாதவர் என்க. மொழிக்கு ஒன்றுதலாவது - இசை மொழிக்குப் பொருளாகிய இறைவனோடு கலத்தல். என்றது, கவுந்தியடிகள் இறைவன் இசைமொழி கூறுங்கால் அப்பொருளோடொன்றிச் சாரணர் மெய்ம் மறந்து தியான நிலையை எய்தி விட்டனர் என்றவாறு. அவ்வாறு நிகழ்தல் இறையன்பு மிக்கார்க்கியல்பு. 209 - உயர் மிசை சிலாவட்டம் - கல்லாலியன்ற உயர்ந்த மேடை உயிர்மிசையினின்றும் ஒரு முழம் ஓங்கி நிவந்து நின்று என்க. ஓங்கிப் பின் நிவந்து அந்தரம் ஆறாப்படர்வோர் எனினுமாம். படர்வோர் - பெயர். 213 - பந்தம் பற்று. மேற் பவந்தரு பாசம் என்றதை வழிமொழிந்தபடியாம். பந்தம் அறுகென - என்றது அதுவே யாம் வேண்டும் வரமுமாம் என்பது பட நின்றது. என்னை?

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்  (குறள் - 362)

என்பது தமிழ் மறையாகலின்.

கோவலன் முதலியோர் ஓடமேறிக் காவிரியின் தென்கரை சேர்தல்

214 - 218 : காரணி ............. இருந்துழி

(இதன்பொருள்:) கார் அணி பூம்பொழில் காவிரியாற்று நெடுந்துறை நீரணி மாடத்து - முகிலை அணிந்த அழகிய பொழிலை யுடைய அக்காவிரி மாற்றினது நீண்டதொரு ஓடத்துறையின்கண் பள்ளி யோடத்திலேறி; மாதரும் கணவனும் மாதவத்தாட்டியும் - காதன்மிக்க கண்ணகியும் அவள் கணவனாகிய கோவலனும் பெரிய தவத்தையுடைய கவுந்தியடிகளும் ஆகிய மூவரும் அக் காவிரியாற்றைக் கடந்துபோய்; தீதுதீர் நியமத் தென்கரை எய்தி - தன்னை வலம்வந்து கைதொழுவார் தம் தீவினையைக் கெடுக்கும் சிறப்புடைய திருக்கோயிலையுடைய தென்கரையைச் சென்றெய்தி; ஓர் போதுசூழ் கிடக்கைப் பூம்பொழில் இருந்துழி - ஆங்குள்ளதொரு மலர்கள் சூழ்ந்து கிடக்கின்ற பூம் பொழிலிடத்தே சென்று இளைப்பாற விருக்கின்ற பொழுது என்க.

(விளக்கம்) 214. பொழிலினது வளம் தெரிப்பார் காரணி பூம்பொழில் என்றார். 215 - பேர்யாற்று நெடுந்துறையில் நீரணி மாடத்திலேறி யாற்றைக் கடந்து போய்த் தென்கரை எய்தி என்க. 217 - தீது - வலம் வந்து தொழுவார்தம் தீவினை. நியமம் - கோயில். நியமம் கூறினார் அதுதானும் நாட்டு மக்கள் வந்து நீராடும் பெருந்துறை என்றற்கு.

216. மாதர் காதல் என்னும் பொருட்டாகலின் அப்பண்பிற் றலைசிறந்தவள் என்பது நினைவூட்டற் பொருட்டு வாளா கண்ணகி என்னாது மாதரும் என்றார். அவளது பெருந்தகைமைக்கேற்ப ஊழாற் கூட்டுவிக்கப்பட்ட வழித்துணையின் மாண்பையும் ஈண்டும் நம்மனோர்க்கு நினைவூட்டுவார் வாளா கவுந்தியும் என்னாது மாதவத் தாட்டியும் என்றார். என்னை? அவரது துணைச் சிறப்பு அடுத்துத் தானே விளங்குமாகலின் என்க. மற்றுக் கோவலனுக்குக் கண்ணகிக்குக் கணவனாம் சிறப்பொன்றுமே உண்மையின் அவனையும் அச்சிறப்புத் தோன்றக் கணவனும் என்றோதினர்.

வம்பப்பரத்தையும் வறுமொழியாளனும்

219 - 224 : வம்பப்பரத்தை ...... வினவ

(இதன்பொருள்:) வம்பப்பரத்தை வறுமொழியாளனொடு கொங்கு அலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர் - புதுவதாகப் பரத்தமைத் தொழிலில் புகுமொரு பரத்தைமகளும் அவளைக் காமுற்றழைத்தேகும் வறுமொழியாளனாகிய கல்லாக் கயமகன் ஒருவனும் கண்ணகி முதலியோர் இளைப்பாற விருந்த நறுமணம் பரப்புமப் பூம்பொழிலிற் புகுந்து அவர்க்கு அணுக்கராய்ச் சென்றவர்; ஈங்குக் காமனும் தேவியும் போலும் இவர் ஆர் எனக் கேட்டு அறிகுவம் என்றே - இவ்விடத்தே வந்திருக்கின்ற காமவேளையும் அவன் மனைவியாகிய இரதிதேவியையுமே ஒக்கின்ற பேரழகு வாய்ந்த இவர்தாம் யார் என்று கேட்டு அறியக்கடவேம் என்று தம்முட் கூறிக்கொண்டு, அடிகளாரை நோக்கி; நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் ஆற்றுவழிப்பட்டோர் ஆர் என வினவ - விரதங்களை மேற்கொண்டு பட்டினிவிட் டுண்ணுதலாலே உடம்பு மெலிந்த துறவியீரே! நும்மோடு கூடி வழிவந்த இவர்தாம் யாரோ என்று வினவா நிற்ப என்க.

(விளக்கம்) வம்பப் பரத்தை - புதுவதாகப் பரத்தமைத் தொழிலிற் புகுந்த பரத்தை என்க. எனவே இளம்பரத்தை என்பதுமாயிற்று. வறுமொழி - பயனில்லாத மொழி. வறுமொழியாளன் - எனவே கல்லாக் கயமகன் என்றாராயிற்று.

220. குறுகினர் - குறுகி - ஏதிலார்பால் குறுகிச் செல்லுதலும் ஒரு கயமைத் தன்மை. அவர் கடிந்து ஒதுக்குமளவில் கண்ணகி முதலியோர்க்கு அணுக்கராய்ச் சென்றனர் என்பார், குறுகினர் சென்றோர் என்றார்.

223. நோற்றுண்டலால் பயன் யாக்கை நொசிதலேயன்றிப் பிறிதொன்றுமில்லை என்னும் கருத்துத் தோன்றுமாறு, நோற்றுணல் யாக்கை நொசி தவத்தீர் என்றான். யார் - ஆர் என மருவிற்று.

கவுந்தியடிகள் வறுமொழியாளனையும் வம்பப்பரத்தையையும் சபித்தல்

224 -234: என்மக்கள் ............. பட்டதை யறியார்

(இதன்பொருள்:) கண்ணகியையும் கோவலனையும் மிகைப்பட அணுகிநின்று இவ்வாறு தம்மை வினவிய அவ்விருவரையும் நோக்கி அடிகளார்; இவர் எம்மக்கள் காண்மின்! மானிட யாக்கையர் - நீவிர் கூறிய காமனும் இரதிதேவியும் அல்லர். இவர்தாமும், மக்கள் யாக்கை உடையர் ஆதல் கண்டிலிரோ? அதுநிற்க அவர்; பரிபுலம்பினர் - வழிவந்த வருத்தத்தால் பெரிதும் இளைப்புற்றிருக்கின்றனர்; பக்கம் நீங்குமின் - ஆதலால் அவரை அணுகி வருத்தாதே கொண்மின்; அவர் பக்கலினின்றும் விலகிப் போமின் என்று கூறாநிற்ப; அதுகேட்ட அவ்விருவரும், கற்று அறிந்தீர் உடன்வயிற்றோர்கள் ஒருங்கு உடன்வாழ்க்கை கடவதும் உண்டோ என - நூல்களையுங் கற்று அவற்றின் பயனையும் அறிந்த பெரியீரே! ஒரு தாய் வயிற்றில் உடன்பிறந்தவர்தாம் கொழுநனும் மனைவியுமாய் ஒருங்குகூடி வாழக்கடவது என்று நீர் கற்ற நூல்களிற் சொல்லிக் கிடப்பதும் உண்டோ? உண்டாயின் சொல்லுக! என்று கூறி அடிகளை இகழாநிற்ப; கண்ணகி தீ மொழி கேட்டுச் செவி அகம் புதைத்துக் காதலன் முன்னர் நடுங்க - கண்ணகி நல்லாள் இவ்விகழ்ச்சி மொழியைக் கேட்டலாலே தன் செவிகளைக் கையாற் பொத்தித் தன் காதலன் முன்னர் நடுங்காநிற்ப; கவுந்தி - அதுகண்ட கவுந்தியடிகளார்; இவர் என் பூங்கோதையை எள்ளுநர் போலும் முள் உடைக்காட்டில் முதுநரி ஆக என - இக் கயமாக்கள் என் பூங்கோதை போல்வாளை இகழ்கின்றனர். இத்தீவினை காரணமாக இவர்தாம் துடக்கு முட்களையுடைய காட்டில் நுழைந்து திரியும் ஓரிகளாகி உழலக்கடவர் எனத் தம் நெஞ்சினுள்ளே; இட்டது - இட்ட சாபமானது; தவந்தரு சாபம் ஆதலின் கட்டியது - தவத்தின் விளைவாகிய சாபமாதலாலே அவரைத் தன் வயப்படுத்தி அவர்பால் தன் பயனை விளைவிப்பதாயிற்று. ஆகவே, அவர்தாம் ஞெரேலென அவ்விடத்தே காணப்படாராயினர்; பட்டதை அறியார் - இவ்வாறு நிகழ்ந்த நிகழ்ச்சியை அறியாதவராயினும் என்க.

(விளக்கம்) 221 - அழகினால் காமனும் தேவியும் போல்கின்றார் இவர் யார் எனத் தம்முட் கூறியதனை அடிகளார் கேட்டமையின், இவர் என் மக்கள் காணீர் என்நவர் மீண்டும் நீயிர் கருதுகின்ற அமரர்கள் அல்லர் என்பார் மானிட யாக்கையர் என்றனர். அப்பரத்தையும் வறுமொழியாளனும் மிகையாகக் கண்ணகிக்கும் கோவலனுக்கும் அணுக்கராய் வந்து நிற்றலால் அவர் பரிபுலம்பினர் பக்கம் நீங்குமின் என்றார். நீயிர் அத்துணை அணுக்கராய் நிற்றல் அவர்க்குப் பின்னும் வருத்தம் விளைவிக்கும் என்பது குறிப்பு.

227. அவன்றான் வறுமொழியாளன் ஆதலின் உடன் வயிற்றோர் ......... கற்றறிந்தீர் என வறுமொழி கூறி வறிதே வினவுதலும் அறிக. கற்றறிந்தீர் என்றநிகழ்ச்சி. தவத்தாற் கழிபெருஞ் சிறப்புடைய கவுந்தியடிகளாரை இவ்வாறு இகழும் மொழியைக் கேட்கப் பொறாளாய்க் கண்ணகி தன் செவியகம் புதைத்துக் கணவன் பக்கலிலே நோக்கி நடுங்குகின்றாள் என்க.

231. எள்ளுநர் போலும் என்புழி போலும்; ஒப்பில்போலி. என் பூங்கோதை என்றது யான் அணியத் தகுந்த பூங்கோதை போலும் சிறப்புடைய இக்குலமகளை என்பதுபட நின்றது. அடிகள் மனத்தால் நினைத்திட்ட சாபம் ஆதலால், அக்கயவர்கட்கு நிகழ்ந்தது இன்னதென்றறியாராயினர். பட்டதை - நிகழ்ந்ததனை.

கண்ணகியும் கோவலனும் அக்கயவர்க்கிரங்கிச் சாபவிடை செய்தருள வேண்டுதல்

235 - 240 : குறுநரி ............. உரையீரோவென

(இதன்பொருள்:) நறுமலர்க் கோதையும் நம்பியும் குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு நடுங்கி - நறிய மலர் மாலையையுடைய கண்ணகியும் ஆடவருட் சிறந்த கோவலனும் குறிய இரண்டு நரிகள் நீளிதாகியகுரலாலே ஊளையிடுகின்ற ஒலியைக் கேட்டமையாலே இஃது அடிகளாரின் சாபத்தின் விளைவு என்றறிந்து அவர்க்கெய்திய அக்கேட்டிற்குத் தாம் அஞ்சி நடுங்கி; நெறியின் நீங்கியோர் நீர் அலகூறின் அறியாமை என்று அறிதல் வேண்டும் - நல்லொழுக்கத்தினின்றும் நீங்கிய மக்கள் தாம் நீர்மையல்லாத தீ மொழிகளைக் கூறினும் அதற்குக் காரணம் அவர்க்கியல்பான அறியாமையே ஆகும் என்று மெய்யறிவுடையோர் அறிதல் வேண்டுமன்றோ! அங்ஙனம் அன்றி அடிகளார் சபித்தமை இரங்கத்தக்கதாம் என்றுட் கொண்டு பின்னர் அடிகளாரை நோக்கி; செய் தவத்தீர் திருமுன் பிழைத்தோர்க்கு - செய்து முற்றிய தவத்தையுடையீர் தம் மேலான முன்னிலையிலே பிழை செய்த இவ்வறிவிலிகட்கு; உய்திக்காலம் உரையீர் ஓ என - இக் கடிய சாபம் நீங்கி உய்தற்கும் ஒரு காலத்தைத் திருவாய் மலர்ந்தருள வேண்டும் என்று கூறி இரவா நிற்ப என்க.

(விளக்கம்) அடிகளார் நினைவு மாத்திரத் தானிட்ட சாபம் தவந்தரு சாபமாகலின் உடனே பலித்தலாலே அப்பரத்தையும் வறுமொழியாளனும் மாயமாகத் தம்முருவ மாறி நரிகளாய் ஊளையிட, அதுகண்ட கண்ணகியும் கோவலனும் தமது ஆராய்ச்சி யறிவுகாரணமாகக் கருதலளவையால் இவ்வரிய நிகழ்ச்சிக்குக் காரணம் அடிகளார் இட்ட சாபமேயாம் பிறிதன்றென்று துணிந்தனர் என்க. அவர் இழி பிறப்புற்றமைக்குத் தாமும் காரணமாகி விட்டமை கருதியும் அறியாமையால் அவர்க்குற்ற துயர்க் கிரங்கியும் அம்மேன்மக்கள், அஞ்சியும் இரங்கியும் நடுங்கினர் என்க. கூவிளி - நரியின் குரல். இக்காலத்தே இதனை ஊளையிடுதல் என்பர்.

இனி, அரும்பதவுரையாசிரியர், பின்பு அறிந்தபடி அவர் கண் முன்னே நரியான படியாலும் (முன்பு அவர்) பொல்லாங்கு கூறினமையானும், அவ்விடத்து இவரல்லது வேறு சாபமிடவல்லார் இல்லை யாகலானும் இச்சாபம் இவராலே வந்த தென்று இவர் அறிந்தார். அறிந்து உய்திக்காலம் உரையீரோ என்றார் என விளக்குவர்.

நெறியினீங்கியோர் நீரல கூறினும் அறியாமை யென்றறிதல் வேண்டும் என்னுந் துணையும் அவருட்கோள். பின்னதை அடிகட்குக் கூறினர் என்பர் அடியார்க்கு நல்லார்.

இனி, இந்நிகழ்ச்சியால் ஊழ்வினை என்பது முற்பிறப்பிலே செய்வது மட்டும் அன்று, நொடிப் பொழுதைக்கு முன் செய்ததூஉம் ஊழ்வினையேயாம் என்பதும், மற்று ஊழ்வினை தான் ஒரு பிறப்பிற் செய்ததும் அவர் தம் மறுப்பிறப்பிற்றான் உருத்து வந்தூட்டும் என்று நினையற்க! ஒரு நொடிப் பொழுதைக்கு முன் செய்தது மறுநொடிப் பொழுதிலே உருத்து வந்தூட்டுதலும் உண்டு என ஊழினது இயல் பொன்றனை இளங்கோ அடிகளார் மிகவும் நுண்ணிதாக வுணர்த்தினாராதலு முணர்க.

கவுந்தியடிகள் சாபவிடை செய்தருளுதல்

241 - 245 : அறியாமையின் ............. விடைசெய்து

(இதன்பொருள்:) அறியாமையின் இன்று இழிபிறப்பு உற்றோர் -இவ்வேண்டுகோள் கேட்ட அடிகளாரும் அதற்கு இணங்கியவராய்த் தமது மனம் மொழி மெய் என்னும் முப்பொறிகளானும் துன்பம் வரும் என்பதனை அறியாமையாலே தம் வாய் தந்தன கூறி இற்றைநாள் இழிந்த பிறப்பாகிய நரிகளான; இவர் இங்கு உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப் பன்னிருமதியம் படர்நோய் உழந்தபின் - இவ்விருவரும் ஈண்டு உறையூரினது மதிற்புறத்தே அமைந்த காவற் காட்டின் ஒருபக்கத்தே நரிகளாகவே திரிந்து பன்னிரண்டு திங்கள் முடியும் துணையும் தமக்கெய்திய நிலையினை நினைத்தலாலே வரும் துன்பத்தையும் நுகர்ந்த பின்னர்; முன்னை உருவம் பெறுக எனச் சாபவிடை செய்து - பழைய மாக்கள் உருவத்தைப் பெறுவாராக வென்று அச்சாபத்தினின்றும் விடுதலைக் காலமும் கூறியருளி என்க.

(விளக்கம்) கண்ணகியும் கோவலனும் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக் காலம் உரையீர் ! என்று அடிகளாரை வேண்டிய காலத்தே அடிகளார் எற்றே இவர்தம் பெருந்தகைமை? எனத் தம்முள் வியந்திருப்பர் என்பதும் அம்மேன்மக்களைப் பற்றிய நன்மதிப்பு அடிகளார் உளத்தே பன்மடங்கு மிகுந்திருக்கும் என்பதும் மிகையாகா. ஆதலானன்றே அடிகளாரும் ஒரு சிறிதும் தயக்கமின்றியே சாபவிடை செய்யத் தொடங்குபவர் தாமும் அவர்க்கிரங்குவாராய் அறியாமையின் இன்று இழிபுறப்புற்றோர் எனக் கண்ணகியும் கோவலனும் தம்முட் கருதியவாறே அவர் நீரல கூறியது அவர் தம் அறியாமை யென்றே தாமும் அறிந்தவாறோதினர். ஆயினும், அக்கயவர் தாம் அடிகளார் திறத்தன்றித் தம்மால் பாதுகாக்கப்பட்ட கண்ணகி திறத்தே பிழை செய்தலின் அடிகளார் அதனைப் பொறுத்தல் கூடாதாயிற்று. என்னை தீயவர் பிறர்க்கின்னா செயக்கண்டும் பொறுத்தல் பொறையன்று கோழைமையே ஆம் ஆதலின் என்க.

அடிகளார் அக்கயவர் செய்த பிழைக்கு அவர் பன்னிரண்டு திங்கள் துன்புறுதல் சாலும் எனக் கருதியது அடிகளார் அருளுடைமைக்கு அறிகுறியாதலுணர்க. இங்கு கடிதோச்சி மெல்ல எறிக என்னும் வள்ளுவர் அருள்மொழி நம் நினைவில் முகிழ்க்கின்றது.

இனி, பன்னிரு மதியம் படர் நோயுழந்தபின் என்றது, அவர் தாம் சாபத்தால் நரிகளாயினும் ஏனைய நரிகள் போலாது யாம் இன்னம் இன்னபிழை செய்து இவ்விழி பிறப்புற்றேம் என்னும் நினைவுடையராய் அந்நினைவு காரணமாகத் துன்புற்றபின் என்றவாறு. இங்ஙனம் இளங்கோவடிகளார் உளத்தில் ஆழ்ந்திருக்கும் பொருளை அவர் படர் நோய் என்பதனாற் கண்டாம். படர்நோய் - நினைவினால் எய்தும் துன்பம். முன்னையோர் இந்நுண்பொருள் காணாதொழிந்தார். அவ்வாறு படர் நோயுழக்க வேண்டும் எனக் கவுந்தியடிகளார் கருதியதற்குக் காரணம் அப்பட்டறிவு காரணமாக அவர் பின்னும் அத்தகைய பிழை செய்யாதிருத்தற் பொருட்டாம். என்னை; ஒறுத்தலின் பயனும் அதுவே யாகலின். இதனை,

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து  (குறள் - 561)

எனவரும் வள்ளுவர் வாய்மொழியினும் காணலாம்.

ஈண்டு அடியார்க்கு நல்லார் இன்று இழிபிறப்புற்றோரென்றது நெடுங்காலந் தவஞ் செய்து பெற்ற மக்கட் பிறப்பை ஒரு வார்த்தையினிழந்து இழிபிறப்புற்றா ரென்றவாறு என்று வரைந்த விளக்கம் பொருந்தாது. என்னை? முற்பிறப்பில் நெடுங்காலம் தவம் செய்தோரும் இத்தகைய கயமாக்களாகவும் பிறப்பர் என்பது அறிவொடு பொருந்தாதாகலின் என்க.

இனி, அவர் யாகாவாராயினும் நாகாக்கப்படல் வேண்டும் என்பதாயிற்று என்றலும்,

ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும்
போக்கப் படுக்கும் புலைநகரத் துய்ப்பிக்கும்
காக்கப் படுவன விந்திய மைந்தினும்
நாக்கல்ல தில்லை நனிவெல்லு மாறே  (வளையாபதி).

என எடுத்துக்காட்டலும் இனியனவாம்.

கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி மூவரும் உறையூரை எய்துதல்

245 - 248 : தவப்பெருஞ் சிறப்பின் ........... புரித்தென்

(இதன்பொருள்:) தவப்பெருஞ் சிறப்பின் காவுந்தி ஐயையும் - தவத்தாலே மிக்க சிறப்பையுடைய கவுந்தியடிகளாரும்; தேவியும் கணவனும் - கண்ணகியும் கோவலனுமாகிய மூவரும்; முன்முறம் செவி வாரணம் சமம் முருக்கிய புறஞ்சிறை வாரணம் புரிந்து புக்கனர் - முன்னொரு காலத்தே முறம் போன்ற செவியையுடைய யானையைப் போரிலே கெடுத்த பக்கத்தே சிறகுகளையுடைய கோழியின் பெயரமைந்த நகரத்தின்கண்ணே விருப்பத்தோடு புகுந்தனர் என்க.

(விளக்கம்) இங்ஙனம் சாபமிடவும் அதனினின்று வீடு செய்யவும் இயன்ற இத்தகைய தவப் பெருஞ் சிறப்பிற் கவுந்தி என்றவாறு.

247 - முறம் செவி - முறம் போன்ற செவி. வாரணம் - யானை புறஞ்சிறை வாரணம் என்றது கோழியை. கோழி என்பது உறையூருக்கு ஒரு பெயர் இப்பெயர்க்குரிய வரலாறும் தெரித்துதோதுவார், வாளா கோழி என்னாது முறஞ் செவிவாரணம் முன் சமமுருக்கிய புறஞ்சிறை வாரணம் என விரித்தார். இதன் கட்கூறிய வரலாறு வருமாறு :

முற்காலத்தே ஒரு கோழி யானையை எதிர்ந்து போரிற் புறங்கொடுத்தோடச் செய்தது. இந்நிகழ்ச்சியைக் கண்ட சோழமன்னன் இந் நிலத்திற்கு ஒரு சிறப்புண்டென்று கருதி அவ்விடத்தே தன் தலைநகரை அமைத்துக் கொள்பவன் அந்நகர்க்குக் கோழி என்றே பெயர் சூட்டினன் என்பதாம். அந்நகர் தம் நாட்டின் தலைநகருள் ஒன்றாதலான் அதனைக் காணவேண்டும் என்னும் அவாவோடு புகுந்தனர் என்பார் புரிந்து புக்கார் என்றார்.

வாரணம் என்னும் பலபொருளொரு சொல் முறஞ்செவி வாரணம் என்றமையால் யானை என்றும், புறஞ்சிறை வாரணம் என்றதனால் கோழி என்றும் ஆயிற்று.

இனி, அந்நகரம் அமைக்கும் பொழுது கழுத்தும் புறத்தே சிறகுகளுமுடைய கோழியுருவம் பெற அமைத்தலின் புறம்பே சிறையையுடைய கோழி என்றார் என்பாருமுளர். இதற்கு - புறஞ்சிறை என்றது புறஞ்சேரிகளை என்க. இருபுறத்தும் சேரிகள் அமைந்த கோழி என்னும் நகர் என்க.

இனி, இக்காதையை, வைகறை யாமத்து, நீங்கக் கடைஇத் துரப்பக் கழிந்து, கழிந்து போகித் தொழுது வலங்கொண்டு, நீங்கிப் போகிக் கழிந்து, நுழைந்து, கடந்து பொருந்தி (பொருந்த) ஆங்கு, வருந்தி உயிர்த்து வினவ, நணித்தென நக்கு, கண்டு தொழலும், என்னோ? கருதியவாறு என, வரை பொருள் வேட்கையேன், (என) கழிதற்கு அரிது, ஒழிகென ஒழியீர், யானும் போதுவல் போதுமின் என்ற காவுந்தி ஐயையை ஏத்தி, தீர்த்தேன் என, காணாய்! படர்குவம் எனினே காட்டும், முட்டும், உறுக்கும், படர்குவம் எனினே, கலங்கலுமுண்டு. கொள்ளவும் கூடும்; இடுதலும் கூடும்; தாங்கவும் ஒண்ணா. ஓம்பு என அறுவையும் பீலியும் கொண்டு துணை ஆகெனப் படர் புரிந்தோர், ஓதையும் ஒலியே யன்றியும் விருந்திற் பாணியும், ஏர்மங்கலமும் முகவைப்பாட்டும் இசையோதையும் கேட்டு, மறையோர் இருக்கை யன்றியும் ஊர்களும் கண்டு கடவாராகி, ஒருநாள் சாரணர் தோன்ற, வாய்மொழி கேட்டுத்திறவா! நவிலாது. காணா; பொருந்தாது குவியா பொறாஅபுடை பெயராது என்று ஏத்த - கெடுகென்று படர்வோர்த் தொழுது போந்து. போகி எய்தி இருந்துழிச் சென்றோர் வினவ நீங்குமின் புலம்பினர் என வாழ்க்கை கடவது முண்டோ எனக் கேட்டுப் புதைத்து நடுங்க முதுநரி ஆக என, அறியார் கேட்டு நடுங்கி உரையீரோ என ஒதுங்கி உழந்தபின் பெறுக என, விடைசெய்து, புரிந்து புறஞ்செவி வாரணம் புக்கனர் என வினையியைபு காண்க.

இது நிலைமண்டில ஆசிரியப்பா.

நாடுகாண் காதை முற்றிற்று.

கட்டுரை

1-20 : முடியுடை ................. முற்றிற்று

(இதன்பொருள்:) முடியுடை வேந்தர் மூவருள்ளும் - முத்தமிழ் நாட்டை ஆளும் முடியையுடைய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவேந்தருள் வைத்து; தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர் - வீரவளை விளங்காநின்ற பெரிய கையினையுடைய சோழர் தம் குலத்திற் பிறந்த வேந்தருடைய; அறனும் - அறங்காக்கின்ற சிறப்பும், மறமும் - மறச் சிறப்பும்; ஆற்றலும் - வன்மைச் சிறப்பும்; அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும் - அவ்வேந்தருடைய பழைய நகரமாகிய பூம்புகார் அருட்பண்பினாலே ஏனைய நகரங்களினுங் காட்டில் மேம்பட்டுத் திகழும் சிறப்பும்; விழவு மலி சிறப்பும் - அந்நகரின் கண் பல்வேறு கடவுளர்க்கும் திருவிழா மிக்கு நிகழும் சிறப்பும்; விண்ணவர் வரவும் - ஆங்கு வருகின்ற தேவர்களின் வரவும்; அவர் உறை நாட்டு ஒடியா இன்பத்துக் குடியும் - அவ்வேந்தர் செங்கோலேந்தி வதிகின்ற அச்சோழ நாட்டின்கண் வாழுகின்ற கெடாத இன்பத்தையுடைய குடிமக்களின் மாண்பும்; கூழின் பெருக்கமும் - உணவுப் பொருளின் வளமும்; அவர்தம் தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும் - அவ்வேந்தருடைய கடவுட்டன்மை யுடைய காவிரிப் பேரியாற்றினது தீமையைத் தீர்க்கின்ற சிறப்பும்; பொய்யாவானம் புதுப்புனல் பொழிதலும் - அவர் திறத்தே எஞ்ஞான்றும் பொய்தலில்லாத முகில் புதிய நீரைப் பெய்கின்ற சிறப்பும்; அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் - ஆடலரங்கினது இயல்பும் கூத்தாட்டின் இயல்பும் தூக்கினது இயல்பும் கண்கூடு முதலிய வரிக்கூத்தினியல்பும்; பரந்து இசை மெய்திய பாரதி விருத்தியும் - ஆடற் கலைகளுள் வைத்து உலகெலாம் விரிந்து புகழ் படைத்துள்ள பாரதி விருத்தியாகிய பதினோராடல்களின் இயல்பும்; திணைநிலை வரியும் இணைநிலை வரியும் - திணைநிலை என்னும் வரிப்பாடலியல்பும் சார்த்துவரி என்னும்பாடலினியல்பும்; அணைவு உறக்கிடந்த , யாழின் பகுதியும் - இவையெல்லாம் தம்மொடு பொருந்தக் கிடந்த பல்வேறு யாழ்களினியல்பும்; ஈரேழ் சகோடமும் - அவற்றுள்ளும் தலைசிறந்த பதினான்கிசைக் கோவையாகிய யாழினது சிறப்பும்; இடநிலைப்பாலையும் - இடமுறைப் பாலைப்பண்ணின் இயல்பும்; தாரத்தாக்கமும் தான் தெரிபண்ணும் - தாரம் என்னும் இசையினால் ஆக்கிக் கொள்ளும் பாலைப் பண்களின் இயல்பும் அவற்றின் வழியே தோற்றுவிக்கின்ற நால்வகைப் பெரும்பண் திறப்பண்களின் இயல்பும், ஊரகத்து ஏரும் - புகார் மூதூரின் அழகும்; ஒளியுடைப் பாணியும் - உழத்தியர் பாடும் நிறமிக்க பாடல்களும்; என்று இவை அனைத்தும் - என்று கூறப்பட்ட இப்பொருள்கள் எல்லாவற்றோடும்; பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் - ஈண்டு சொல்லாதொழிந்த ஏனைய பொருள்கள் பலவும் கூறிவைத்த வைப்போடு கூடித் தோன்றாநின்ற தனிக்கோள் நிலைமையும் - அடிகளாருடைய ஒப்பற்ற உட்கோளின் தன்மையும்; ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று. ஒருபடியாக நோக்கிக் கிடந்த முதலாவதாகிய புகார்க் காண்டம் முற்றியது என்க.

(விளக்கம்) இந்நூலின் பதிகத்தை அடுத்துள்ள உரைபெறு கட்டுரையும் ஈண்டு இக்காண்டத் திறுதியிலுள்ள இக்கட்டுரையும் இங்ஙனமே எஞ்சிய இரண்டு காண்டங்களின் இறுதியிலுள்ள கட்டுரையிரண்டும் நூலிறுதியிலமைந்த நூற்கட்டுரை என்பதும் இளங்கோவடிகளாரால் செய்யப்படாதன. பிற்காலத்தே பிறராற் பாடிச் சேர்க்கப்பட்டன என்று கருதுதற் கிடனுளது. உரைபெறு கட்டுரை அடிகளாராற் செய்யப்பட்ட தன்றென்பதற்கு ஆங்குக் காரணம் கூறினாம். இக்கட்டுரையகத்தே அடிகளார் இந்நூலில் ஓரிடத்தேனும் கூறப்படாத சகோடம் என்னும் சொல் புணர்க்கப் பட்டிருத்தலும் இதுவும் அடிகளாராற் செய்யப்பட்டதில்லை என்பதற்கு ஓரகச் சான்றாகும். இன்னும் இவற்றைப் பற்றிய எமதாராய்ச்சி முடிவை இந்நூலினது ஆராய்ச்சி முன்னுரையிற் கண்டுணர்க.

இக்கட்டுரைக்கண் (14) ஈரேழ் தொடுத்த சகோடமும் - என்பதற்குப் பதினான்கு இசைகளை இணை நரம்பாகத் தொடுத்த ஒலியோடு கூடிய யாழ் எனப் பொருள் கோடலே பொருந்தும். சகோடம் என்ற சொற்குப் பொருள் ஒலியோடு கூடியது என்பதேயாம். எனவே, ஈரேழ் சகோடமும் என்பதற்கு பதினான்கிசையோடு கூடிய ஒரு யாழ் என்பதே பொருளாகும். இத்தொடர் பன்மொழித் தொகையாய்ச் செம்முறைக் கேள்வி என இளங்கோவடிகளாராற் கூறப்படுகின்ற யாழைக் குறிப்பதாயிற்று. பிற்காலத்தே சகோடம் என்பதே பெயர் போல வழங்கப் பட்டதாதல் வேண்டும். அடிகளார் காலத்தே இதனைச் செங்கோட்டியாழ் என்றே வழங்கினர் என்று தெரிகிறது.

1 - முடியுடைவேந்தர் மூவர் - சோழர் பாண்டியர் சேரர்.

3. அறன் - அறங்காவற் சிறப்பு -அது, அறவோர் பள்ளியும் அறனோம்படையும் (5: 179) என்பன முதலியவற்றாற் கூறப்பட்டது.

4. மறன் - மறச்சிறப்பு. அதனை இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை கொடுவரி யொற்றி (5 : 97 - 8) என்பது முதலியவற்றாலறிக. ஆற்றல் - போராற்றலுடைமை. அதனை, அமராபதி காத்து அமரனிற் பெற்றுத் தமரிற்றந்து தகைசால் பிறப்பிற் பூமியிற் புணர்த்த ஐவகை மன்றத் தமைதியும் என்பது (6: 14-17) முதலியவற்றாலறிக. பழவிறன் மூதூர்ப் பண்பு. பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகார் என்பது (மங்கல வாழ்த்து - 15 - 16) முதலியவற்றாலறிக. 5. விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் இந்திரவிழ வூரெடுத்த காதையிற் காண்க. குடியும் கூழின் பெருக்கமும் மனையறம் படுத்த காதை, நாடுகாண் காதை முதலியவற்றிற் காண்க. காவிரியின் சிறப்பைக் கானல் வரியினும் நாடுகாண் காதையினும் பிறாண்டும் காண்க பொய்யாவானம் புதுப்புனல் பொழிதலும் என்பதனை உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு மழைக் கருவுயிர்க்கும் ..... ஆவுதி நறும்புகை என்பதன்கண் (10 : 142-44) காண்க. 16-அரங்கும் ஆடலும் அரங்கேற்று காதைக்கட் காண்க. 11. பாரதி விருத்தி, பதினோராடல் இவற்றை, (6) கடலாடு காதைக்கட் காண்க. 12-13. திணைநிலை வரி, இணைநிலை வரி, யாழின் றொகுதி, கானல் வரியிற் காணப்படும். 14. ஈரேழ் சகோடமும் - அரங்கேற்று காதையினும் பிறாண்டும். இடநிலைப் பாலை, தாரத்தாக்கம் தான்தெரிபண், அரங்கேற்றுகாதை, வேனிற் காதைகளிற் காண்க. 16. ஊரகத்தேர், காவிரிப்பூப்பட்டினத்தின் அழகு, இந்திரவிழவூர் எடுத்த காதையினும் பிறாண்டுங் காண்க. ஒளியுடைப் பாணி உழத்தியர் பாடும் விருந்திற் பாணி ஏர் மங்கல முதலிய இவற்றை நாடுகாண் காதையிற் காண்க. பிறபொருள் வைப்பு - யாண்டும் காணலாம். ஒரு பரிசு - ஒரு தன்மை.

வெண்பாவுரை

காலையரும்பி .............. புகார்

(இதன்பொருள்:) வேலை அகழால் அமைந்த அவனிக்கு - கடலாகிய அகழோடு அமைந்துள்ள இந்நிலவுலகாகிய தெய்வ மகளின்; மாலை - இலகு பூண்முலைமேலணிந்த முத்துமாலை என்னும்படி; புகழால் அமைந்த புகார் - உலகுள்ள துணையும் அழியாத புகழாலே அமைந்துள்ள பூம்புகார் நகரமானது; காலை அரும்பி மலரும் கதிரவனும் - விடியற் காலத்தே தோன்றி ஒளியால் விரிகின்ற ஞாயிறு போன்றும்; மாலை மதியமும் போல் - அந்தி மாலைப் பொழுதிலே தோன்றுகின்ற திங்கள் போன்றும்; வாழி அரோ - வாழ்வதாக என்பதாம்.

(விளக்கம்) புகார் நகரம் புகழுருவத்தோடு உலகுள்ள துணையும் வாழ்க என்றவாறு. புகழால் அமைந்த புகார் என்பதற்கு மங்கல வாழ்த்துக் காதையில் நாக நீணகரொடு நாக நாடதனொடு போக நீள் புகழ்மன்னும் புகார் நகர் என்பதற்கு யாம் கூறிய விளக்கத்தை ஈண்டும் கூறிக் கொள்க.

புகார்க் காண்டம் முற்றிற்று.

 
மேலும் சிலப்பதிகாரம் »
temple news
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்
 
temple news
1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar