Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

10. நாடுகாண் காதை 12. வேட்டுவ வரி
முதல் பக்கம் » சிலப்பதிகாரம்
மதுரைக் காண்டம் (11. காடுகாண் காதை)
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
04:01

அஃதாவது - பூம்புகார் நகரத்திருந்து முந்தை ஊழ்வினை கடைக்கூட்டுதலாலே கோவலன் கதிரவன் தோன்று முன்னமே கண்ணகியோடு இழந்த பொருளீட்டவெண்ணிப் புறப்பட்டவன் வழியிலே காவுந்தியடியைக் கண்டடிதொழுது, அவர் தம்மை வழித்துணையாகவும் பெற்று வருபவன், அந்நெறியில் ஏதந்தருவன இவை இவை என அறிவுறுத்திய கவுந்தியடிகளாரின் மொழி போற்றி, அவரோடும், தன் காதலியோடும் கழனிச் செந்நெற்கரும்பு சூழ் பழனத்தாமரைப் பைம்பூங் கானத்தே பறவைகள் பாடும் பாட்டும், கருங்கைவினைஞரும் களமரும் கூடி ஆரவாரிக்கும், ஆரவாரமும், சின்மொழிக் கடைசியர் கள்ளுண்டு களித்துப்பாடும் விருந்துறு பாடலும், ஏர்மங்கலப் பாட்டும், முகவைப் பாட்டும், கிணைஞர் செய்யும் இன்னிசைமுழ வொலியும், பிறவும் ஆங்காங்குக் கேட்டும் வழியில் அந்நாட்டின் கவினுறு வளம்பலவும் கண்டுமகிழ்ந்தும் மங்கலமறையோர் இருக்கையும், பிறவுமுடைய ஊரிடையிட்ட நாடுடன் கண்டு, நாட்கொரு காவதமன்றி நடவாமல் பன்னாட்டங்கிச் செல்பவன், உறையூர் புக்கு மறுநாள் அங்கிருந்து மதுரை நோக்கிச் செல்லும் காலத்தே அவ்வழியிற் கண்டனவும், அம் மதுரைமா நகரத்துப் புறஞ்சேரி புக்கதும், ஆங்கு இடைக்குல மடந்தை மாதரியின்பால் கவுந்தியடிகளார் கண்ணகியை அடைக்கல மீந்ததும், கோவலன் பின்பு மதுரைமூதூர் கண்டு மீண்டமையும், மறுநாள் கோவலன் சிலம்பு விற்கச்சென்று ஊழ்வினை உருத்து வந்தூட்டலாலே ஆங்குக் கள்வனெனப்பட்டுக் கொலையுண்டதும், அச் செய்தி கேட்டுக் கண்ணகி கொதித்தெழுந்து ஊர் சூழ்வந்து, அரசவை யேறி வழக்குரைத்ததும், அவ் வழக்கில் பாண்டியன் உயிர்நீத்ததும், அவன்றேவி உயிர்நீத்ததும், பின்னரும் கண்ணகி சினந்தணியாளாய், வஞ்சினம்கூறி மதுரை நகரந் தீயுண்ணச் செய்ததுவும், மதுரைமா தெய்வம் வந்து தோன்றி, கண்ணகிக்குக் கட்டுரை கூறித் தீவீடு செய்ததுவும், கண்ணகி மேற்றிசைவாயிலிற்புகுந்து வையையின் ஒருகரை வழியாக அத்திசை நோக்கிச் செல்வாள் நெடுவேள் குன்றத்தடிவைத்தேறி நின்ற பதினாலாம்நாளெல்லையில் அமரர் கோமான் தமர் அவளெதிர் வந்து, புகழ்ந்தேத்தி அவள் கணவனையும் காட்டி வரவேற்க வானவூர்தியில் ஏறிக் கோவலனோடு கண்ணகி விண்ணகம்புக்கதும் பிறவுமாகிய செய்தியைக் கூறும் பகுதியென்றவாறு. இவையெல்லாம் மதுரையில் நிகழ்ந்தமையால் இது மதுரைக்காண்டம் என்னும் பெயர் பெற்றதென் றுணர்க.

11. காடுகாண் காதை

அஃதாவது - கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளாரும் உறையூரினின்றும் புறப்பட்டு மதுரை நோக்கிச் செல்பவர் பாண்டியனாட்டகத்தே புக்கு ஆங்கு ஊரிடையிட்ட காடு பல கண்டு சென்றதும் ஆங்குக் கண்டனவும் கேட்டனவும் பிறவும் கூறும் பகுதி யென்றவாறு.

திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்  5

அந்தி லரங்கத் தகன்பொழி லகவயிற்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு
அன்றவ ருறைவிடத் தல்கின ரடங்கித்
தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று  10

வைகறை யாமத்து வாரணங் கழிந்து
வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற
வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர்
இளமரக் கானத் திருக்கை புக்குழி
வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை  15

ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள  20

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி  25

முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று
இடியுடைப் பெருமழை யெய்தா தேகப்
பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத்
தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி  30

மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்
மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்  35

பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்  40

வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு  45

நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய  50

செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்
தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும்
கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின்  55

வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத்
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீயெனக் கோவலற் குரைக்கும்
கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி  60

வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்  65

பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை தன்னுடன்
அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந்
நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று  70

கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்
வலம்படக் கிடந்த வழிநீர் துணியின்
அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும்  75

பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும்
வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும்
நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும்
கானமும் எயினர் கடமுங் கடந்தால்
ஐவன வெண்ணெலும் அறைக்கட் கரும்பும்  80

கொய்பூந் தினையும் கொழும்புன வரகும்
காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும்
வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்  85

அம்மலை வலங்கொண் டகன்பதிச் செல்லுமின்
அவ்வழிப் படரீ ராயி னிடத்துச்
செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும்
தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு
கடம்பல கிடந்த காடுடன் கழிந்து   90

திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி   95

விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்
பவகா ரணி படிந் தாடுவி ராயிற்   100

பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்
இட்ட சித்தி எய்துவி ராயின்
இட்ட சித்தி எய்துவிர் நீரே
ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின்
ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது  105

சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலம் செய்தால்
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப்
பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற்
கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத்   110

தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி
இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும்
இம்மையு மறுமையும் இரண்டும் இன்றியோர்
செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ்
வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்  115

உரைத்தார்க் குரியேன் உரைத்தீ ராயின்
திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும்
கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப்
புதவம் பலவுள போகிடை கழியன
ஒட்டுப் புதவமொன் றுண்டதன் உம்பர்  120

வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி
இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தாற்
பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும்
உரையீ ராயினும் உறுகண் செய்யேன்
நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்மெனும்  125

உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின்
கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்
அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும்
ஒருமுறை யாக உளங்கொண் டோதி  130

வேண்டிய தொன்றின் விரும்பினி ராடிற்
காண்டகு மரபின வல்ல மற்றவை
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின்
உள்ளம் பொருந்துவி ராயின் மற்றவன்  135

புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்
தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளிணை
ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி
மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின்
காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்கு  140

அந்நெறிப் படரீ ராயின் இடையது
செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த
ஊரிடை யிட்ட காடுபல கடந்தால்
ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம்
நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி   145

இடுக்கண் செய்யா தியங்குநர்த் தாங்கும்
மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி
நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல்
தாள்தொழு தகையேன் போகுவல் யானென
மாமறை யோன்வாய் வழித்திறம் கேட்ட  150

காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும்
நலம்புரி கொள்கை நான்மறை யாள
பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கில்லை
கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்  155

இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பிற் காணா யோநீ
வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு
யாவது முண்டோ எய்தா அரும்பொருள்
காமுறு தெய்வங் கண்டடி பணிய   160

நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்
என்றம் மறையோற் கிசைமொழி யுணர்த்திக்
குன்றாக் கொள்கைக் கோவலன் றன்னுடன்
அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப்
பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட்  165

கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும்
வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப
இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின்
புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று
நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக்  170

கானுறை தெய்வம் காதலிற் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவனென
வயந்த மாலை வடிவில் தோன்றிக்
கொடிநடுக் குற்றது போல ஆங்கவன்
அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து  175

வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்
கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன்
மாதவி மயங்கி வான்துய ருற்று
மேலோ ராயினும் நூலோ ராயினும்  180

பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச்
செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும்  185

தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து
துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின்
மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச்
சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன்  190

பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென
மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென
வியத்தகு மறையோன் விளம்பின னாதலின்
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ்
ஐஞ்சி லோதியை அறிகுவன் யானெனக்  195

கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்
வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன்
புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்
என்திறம் உரையா தேகென் றேகத்   200

தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந் தாங்கு
அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து
மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத்
தீதியல் கானஞ் செலவரி தென்று
கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும்  205

மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக்
குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை
ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது
மாரி வளம்பெறா வில்லேர் உழவர்  210

கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக்
கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும்
விழிநுதற் குமரி விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி   215
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென்.

உரை

உறையூரின்கண் எழுந்தருளிய அருகன் சிறப்பு

1-9 : திங்கள் ............ அடங்கி

(இதன் பொருள்) அடுக்கிய மூன்று திங்கள் திருமுக்குடைக் கீழ் - மூன்று முழுத்திங்கள் மண்டிலங்களை ஒன்றன் மேல் ஒன்றாக உயர்த்து அடுக்கிவைத்தாற் போலும் அழகு திகழாநின்ற சந்திராதித்தம், நித்தியவினோதம், சகலபாசனம் என்னும் மூன்று குடைகளின்கீழ்; செங்கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து - சிவந்த கதிர்களைப் பரப்பும் இளஞாயிற்றினது ஒளியினுங்காட்டில் சிறந்து விளங்கும் ஒளியோடே; கோதை தாழ் பிண்டிக் கொழு நிழலிருந்த - பிற அசோகுபோலாது மாலையாகவே மலர்ந்து தூங்காநின்ற கடவுட்பண்புடைய அசோக மரத்தினது நீழலின்கண் வீற்றிருந்த; ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி - (உறையூரிற் புகுந்த காவுந்தியடிகளாரும் கண்ணகியும் கோவலனும் ஆகிய மூவரும்) தனக்கு முன்னர்ப் பிறிதுயாதும் தோன்றுதல் இல்லாமையைத் தனக்குத் தோற்றமாகவுடைய மெய்யறிவனாகிய அருகக் கடவுளை அன்புடன் மனமொழி மெய்களாலே வழிபாடு செய்த பின்னர்; மாதவத்தாட்டியும் அந்தில் கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம் - கவுந்தி அடிகளார் அவ்விடத்தே அவ்வருகன் கோயிலைச் சார்ந்த தவப்பள்ளியில் உறைகின்ற துறவோர்க்கெல்லாம்; அரங்கத்து அகன் பொழில்வயின் - திருவரங்கத்தே அகன்ற பூம் பொழிலிடத்தே தமக்குச் சாரணர் அறிவுறுத்தருளிய; தகைசால் நன்மொழி - அழகுமிக்க மெய்ம் மொழியை; மாண்பு உற மொழிந்து - அவர்கள் மாட்சிமை எய்தும் பொருட்டுச் செவியறிவுறுத்தருளி; ஆங்கு - அவ்விடத்தேயே; அவர் உறைவிடத்து அன்று அல்கினர் அடங்கி - அம் மூவரும் தங்குதற்குரியதோரிடத்தே அற்றைநாளிரவி லினிதே தங்கியிருந்து என்க.

(விளக்கம்) 1. அருகக் கடவுள் முக்குடைக்கீழ் எழுந்தருளியிருப்பின் என்பது சைன நூற்றுணிபு. அக்கடவுளின் குடைக்கு மூன்று முழுத்திங்கள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கப்பட்டவை உவமை. இஃதில் பொருளுவமை - அடுக்கிய மூன்று திங்களின்-என மாறி இன்னுருபு பெய்துரைக்க. உறழ்பொருட்டாகிய அவ்வுருபு தொக்கது என்பது அடியார்க்கு நல்லார் கருத்து. கோதை தாழ் பிண்டி என்றது - அருகனுக்கு நிழல் தரும் அசோக மரம் ஏனைய அசோக மரங்கள் போலாது மலருங் காலத்தே மாலையாகவே மலரும் என்னும் கருத்துடையதாம். ஆதியில் தோற்றம் என்றது தனக்கு முன்றோன்றியது யாது மில்லாத தோற்றம் என்றவாறு. இனி, தனது தோற்றத்திற்கு முதல் இல்லாத தோற்றமுடையான் என்றுமாம்; அஃதாவது நித்தியன் என்றவாறு. அறிவன் - வாலறிவன். இயல்பாகவே பாசங்களில்லாத மெய்யறிவினை யுடையான் என்ற படியாம். கந்தன் - நிக்கந்தன்: விகாரம். 6. அந்தில் - அவ்விடத்தே. அசைச் சொல்லுமாம்.

அரங்கத்துச் சாரணர் கூறிய தகைசால் மொழி என்றது - நாடு காண் காதையில்,

கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய்
ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்ந்துவந் தெய்தி
ஒட்டுங் காலை யொழிக்கவு மொண்ணா
கடுங்கால் நெடுவெளி விடுஞ்சுட ரென்ன
ஒருங்குட னில்லா உடம்பிடை உயிர்கள்

எனச் சாரணர் கவுந்திக்குச் செவியறிவுறுத்த மொழிகளை. இவை சொல்லானும் பொருளானும் இனியவாகிப் பெரும் பயன்றருவன வாதலின் அவற்றைத் தகைசா னன்மொழி என அடிகளார் வியந்தார். என்னை? இப் பெருங்காப்பியத்தின் கருப்பொருள் மூன்றனுள் இச் செவி யறிவுறூஉம் ஒன்றாதலுமறிக. மாதவத்தாட்டியும் என்புழி உம்மை சிறப்பும்மை. என்னை? அங்ஙனம் செவியறிவுறுத்தலே அவர்க்கு அறமாகலின் என்க. அவர்க்கு அறமாதல் தோன்றும் பொருட்டே அடிகளார் கவுந்தியும் என்னாது மாதவத்தாட்டியும் என விதந்தார். மாண்புற என்றது - அத் துறவோர் மாண்புறுதற் பொருட்டு எனவும் தன் மொழி மாண்புற எனவும் இருபொருளும் பயந்து நின்றது.

9. இல்லறத்தார் துறவோர் பள்ளியில் இரவிற்றங்குதல் மரபன்று என்பது அடியார்க்கு நல்லார் அவரெனக் கடவுளரைச் சுட்டின், அவருறைவிடம் கந்தன் பள்ளியா மாதலானும் ஆண்டு அடங்காமை சொல்ல வேண்டாவாகலானும் அவரென்றது சாவகரை என்னும் விளக்கத்தாற் பெற்றாம். ஆயினும் அவர் என்னும் சுட்டு, சாவகரைச் சுட்டிற்று என்றதும் பொருந்தாது. முன்னர் இயற்பெயர் கூறாதவிடத்தே சுட்டுப் பெயர் மட்டும் வருதலும் அது தானும் அப்பெயரைச் சுட்டும் என்பதும் பொருந்தாது. இனி, அவர் உறைவிடம் என்பதற்கு அக் கவுந்தி முதலிய மூவரும் தாம் உறைதற்குரியதோரிடத்தே தங்கினர் என்பதே அடிகளார் கருத்தாமென்க.

அல்கினர்: முற்றெச்சம். வழிவரு வருத்தம் தீர அவர் இனிது உறங்கினமை தோன்ற அல்கினர் அடங்கி என்றார்.

அடிகளாரும் கண்ணகியும் கோவலனும்
உறையூரினின்றும் மதுரைக்குச் செல்லுதல்

10 - 14 : தென்திசை ........ புக்குழி

(இதன் பொருள்) தென்திசை மருங்கில் செலவு விருப்புற்று - வைகறையாமத்தே துயிலெழுந்து மேலும் தாம் செல்ல வேண்டிய தென்றிசையிலே சென்று அப்பாலுள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்தலில் விருப்பமுடையராகி; வைகறையாமத்து வாரணம் கழிந்து - அவ் வைகறைப் பொழுதிலேயே உறையூரைக் கடந்து அப்பால் தென்றிசை நோக்கிச் செல்பவர், வெய்யவன் விளங்கித் தோன்ற - தாம் புறப்பட்ட வைகறையாமமும் கழிந்து கீழ்த் திசையிலே தோன்றிய கதிரவன்றானும் வானினுயர்ந்து தனது வெயில் முறுகுதலாலே வெப்பமுடையனாய் விளங்குதலாலே; வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர் இளமரக்கானத்து இருக்கை புக்குழி - அத்துணைப் பொழுதும் வருந்தாது நடந்தவர் தாம் வளமுடைய நீரையுடைய அம் மருத நிலப்பரப்பினிடையே ஒரு பெரிய பொய்கைக் கரையிடத்தே அழகுற்றுத் திகழாநின்ற ஓர் இளமரச் சோலையினூடே வழிப்போக்கர் தங்குதற்கென அமைக்கப்பட்டிருந்த இருப்பிடத்தைக் கண்டு இளைப்பாறுதற் பொருட்டு அதன்கட் சென்று புகுந்த பொழுது என்க.

(விளக்கம்) 10. கண்ணகி முதலிய மூவரும் தமதியல்பிற் கேற்ப மெல்லென நடந்து தமக்குப் புதியனவாகிப் பேரின்பம் பயக்கும் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து ஒரு நாளைக் கொருகாவதமே நடந்து இடையிடையே தங்கித்தங்கி இளைப்பாறி வருகின்றார் ஆதலின் பின்னரும் வழிநடந் தின்புறுதற்கண் வேட்கை பெரிதும் உடையராயிருந்தமை தோன்ற அடிகளார் தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று என இனிதின் ஓதுவாராயினர். வைகறையாமத்து வாரணம் கழிந்து என்றது அவர் நாடோறும் செலவு மேற்கொள்ளும் பொழுதும் அதுவே என்பது குறிப்பாக நம்மனோர்க் கறிவுறுத்துவதுமுணர்க. வைகறையாமத்திலேயே வழிச் செலவை மேற்கொண்டு விடியற்காலமாதற்கு முன்னரே அப் பேரூரை விட்டுச் சென்றனர் என்பது கருத்து. 11. வாரணம் என்றது உறையூரை. 12. குணதிசை வெய்யவன் விளங்கித் தோன்ற என்றது அவர் தாம் புறப்பட்ட அவ் வைகறைப் பொழுதும் அடுத்து வந்த விடியற் பொழுதினும் பெரும் பகுதி கழியுந்துணையும் நடந்து வெயில் முறுகி வெப்ப முறுதலாலே இளைப்பாறி இருத்தற் பொருட்டு அவர் இளமரக் கானத்து இருக்கை புக்கமைக்கு ஏதுவாய் நின்றது. இதுவே இளங்கோவடிகளாரின் கருத்தாகும். இக் கருத்தினை, கதிரவன் முதலிய பிறபெயராற் குறியாமல் அவனை வெய்யவன் என்னும் பெயராற் குறித்து விளக்கினர் என்க. வெய்யவன் விளங்கித் தோன்ற என்றது அவ்வெய்யவன்றானும் தனது வெப்பத்தால் சிறிது முறுகித் தோன்றிய அளவிலே என்றவாறு. முன்னை யுரையாசிரியர் யாரும் அடிகளார் நெஞ்சத்து ஆழ்ந்திருக்கும் இக் கருத்துணராது போயினர். இக் கருத்துணராது விடின் வைகறைப் பொழுதிலே வழிச் செலவை மேற் கொண்டவர் கதிரவன் தோன்று மளவிலே இளமரக் கானத்திருக்கை புகுதற்கேதுவின்மை யுணர்க. 13. உறையூரை அடுத்துள்ள அத் தென்றிசையினும் சோழ நாடுண்மையின், அவ் வழியினும் வளநீர்ப் பண்ணையும் வாவியும் உளவாயின. மேலும், அவ்வாவிக் கரையில் வழிப்போக்கர் நீருண்டு இளைப்பாறி இருத்தற் பொருட்டே அறவோரா லியற்றப் பட்டது அச் சோலை என்பதும் புலப்பட வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்த இளமரக் கானத்து இருக்கை என்றார். அவ்விருக்கை, வழிப்போக்கர் தங்கி இளைப்பாறுதற்கியன்ற இடமாதலானன்றே தென்றிசையினின்றும் வடதிசை நோக்கிச் செல்லும் வழிப்போக்கனாகிய மாமறை முதல்வனும் அப்பொழுது அங்கு வந்து புகுகின்றான் என்க.

மாங்காட்டு மறையோன் வரவு

(15 -முதல் 31 -முடிய ஒரு தொடர்)

15 - 22 : வாழ்க ...... வாழி

(இதன் பொருள்) வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை - கோவலன் முதலிய மூவரும் அந்த இளமரச்சோலை புகுந்துழி அவ்விடத்தே (31) மாமுது மறையோன் வந்து - சிறந்த பழைய மறைகளை நன்கு ஓதியுணர்ந்தவனாகிய அந்தணன் ஒருவன் தென்றிசையினின்றும் வடதிசைச் செலவை மேற் கொண்டவன் அவ்விளமரக் கானத்திருக்கையுட் புகுந்து வாழ்க எங்கள் அரசனாகிய அரசருள்வைத்துத் தலைசிறந்த பெருந்தகைமையுடையவன்; உலகம் ஊழிதோ றூழிகாக்க - இவ்வுலகத்தை ஊழிகள் பலவும் அவனே காத்தருள்வானாக; அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி வடிவேல் எறிந்த வான் பகை பொறாது - பண்டொருகாலத்தே தனது பெருமையினது அளவினை ஏனைய மன்னர்க்குக் காட்டுபவன் காலால் தன்னை மிதித்துக்காட்டியதூஉ மன்றித் தான் பொங்கி எழுந்த காலத்தே தனது வடித்த வேலைத் தன்மீதெறிந்து அடங்கச் செய்ததூஉமாகிய பழைய பகைமையைப் பொறுக்கமாட்டாமல்; கொடுங்கடல் - வளைந்த கடலானது சினந்தெழுந்து; பஃறுளி ஆற்றுடன் பல்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொள்ள - பஃறுளியாறென்னும் பேரியாற்றோடு பலவாகிய பக்கமலைகளையும் உடையதாகிய குமரி மலையையும் விழுங்கித் தன் வயிற்றுட் கொண்டமையாலே; வட திசைக் கங்கையும் இமயமும் கொண்டு - வடதிசைக்கண்ணவாகிய கங்கைப் பேரியாற்றையும் இமயமலையையும் கைப்பற்றிக் கொண்டு அவ் வடவாரியமன்னர் தன் ஏவல் கேட்ப; தென்திசை ஆண்ட தென்னவன் வாழி -செந்தமிழ் நாட்டின் தென்றிசையை ஆட்சி செய்த பாண்டியமன்னன் நீடூழி வாழ்வானாக எனவும் என்க.

(விளக்கம்) 17. தன் பகையரசர்க்குத் தன் பெருமை கூறுபவன் இத் தென்கடல் எத்துணைப் பெரிது அத்துணைப் பெரிது கண்டீர் என்பவன் கடலைக் கையாற் சுட்டிக் காட்டாமல் கடலினது கடவுட்டன்மையை நினையாமல் அக் கடல் வடிம்பினைத் தன் காலால் மிதித்துக் காட்டினன் எனவும், அது பொறாதாயிற்று எனவும் கருதுக. அதனைப் பொறாமல் அக் கடல் பொங்கி வந்த பொழுதும் அதனை வணங்காமல் தனது வேலை எறிந்து அது சுவறிப் போம்படியும் செய்தான்; ஆகவே இவ்வாறு நெடுங்காலமாக வளர்ந்த பெரும்பகை என்பார் (18) வான்பகை என்றார். கடலை மிதித்து நின்ற பாண்டியனை வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்பர். கடல் சுவற வேலெறிந்தவனை உக்கிரகுமார பாண்டியன் எனத் திருவிளையாடற் புராணங்கூறும். மேலே வருவன சிலவும் இவன் செயலாகவே அப் புராணங்கூறா நிற்கும்.

19. கடல் கொண்ட பஃறுளியாற்றிற்கு ஈடாக வடதிசைக் கங்கை யாற்றினையும், குமரிமலைக் கீடாக இமயமலையையும் கைக்கொண்டனன் எனக் கூறியபடியாம். கங்கையும் இமயமும் கொண்டு என்றவர் மீண்டும் தென்றிசை யாண்ட தென்னவன் என்றது, கங்கை நாட்டையும் இமய மலையையும் ஆட்சி செய்த வடவாரியரை வென்று அடிப்படுத்து அவர் தாம் தன்னேவல் வழி நிற்பத் தனக்குரிய தென்னாட்டை ஆட்சி செய்தவன் என்றவாறு.

இனி அடியார்க்கு நல்லார் (கடல் கோட்பட்ட) நிலக்குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமாநாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னுமிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னன் என்பர்.

23 - 31 : திங்கட்செல்வன் .............. வந்திருந்தோனை

(இதன் பொருள்) திங்கள் செல்வன் திருக்குலம் விளங்க - இருள் கழிந்து ஒளிப்புகழ் பரப்புகின்ற திங்களாகிய செல்வனுடைய சிறந்த குலமாகிய அப் பாண்டியர் குலத்தின் புகழ் பெரிதும் விளக்கமுறும்படி; செங்கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரள் ஒளி பொங்கு மார்பில் பூண்டோன் வாழி - சிவந்த கண்கள் ஓராயிரமுடைய தேவர் கோமான் பூட்டிய தனது பேராற்றல் பிறர்க்கு விளங்குதற்குக் காரணமான ஆரத்தை ஒளி மிக்க தனது மார்பிலே எளிதாகப் பூண்டவனாகிய பாண்டியன் நீடூழி வாழ்வானாக; இடியுடைப்பெருமழை முதல்வன் சென்னி முடிவளை உடைத்தோன் என்று எய்தாது ஏக - இடியையுடையபெரிய முகில்கள் தாமும் தந்தலைவனாகிய இந்திரன் தலையிலணிந்த முடியணியை ஆழிப்படையால் உடைத்தவன் இவன் என்று கருதி அவன் நாட்டின்கண் மழை பெய்யாமல் வறிதே செல்லக் கண்டு; மழை பிணித்து - அம் முகில்கள் விலங்கிட்டுத் தடுத்துத் தன்னாட்டின்கண்; பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப - தப்பாத விளைவும் ஏனைய வளங்களும் உண்டாகும்படி மழை பெய்வித்து; ஆண்ட மன்னவன் வாழ்க என - அருளாட்சி செய்தருளிய மன்னவன் நீடூழி வாழ்க! எனவும்; தீது தீர் சிறப்பின் தென்னனை - குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய அப் பாண்டிய மன்னனை வாயார வாழ்த்திக் கொண்டிருந்தவனைக் கண்டு என்க.

(விளக்கம்) 23. பாண்டிய மன்னர் திங்கட்புத்தேளின் மரபினர் என்பது நூல் வழக்கு. திருக்குலம் என்புழித் திரு சிறப்புப் பொருள் குறித்து நின்றது. தேவராரம் பூண்டமைதானும் பாண்டிய மன்னர் மரபிற்கு ஒரு புகழாய் முடிந்தமையின் குலம் விளங்க ..... ஆரம் பூண்டோன் என்றான். 24 செங்கண் ஆயிரத்தோன் என்றது ஆயிரஞ் செங்கண்ணுடையோன் என்றவாறு. அவன் இந்திரன் என்க. இந்திரன் தானிட்ட ஆரத்தின் பொறையாற்றாது பாண்டியன் அழிந்தொழிக என்னும் கருத்தினாலே பாண்டியனுக்குப் பொறை மிக்கதோர் ஆரத்தைப் பூட்டினனாக, அதனைப் பாண்டியன் மிகவும் எளிதாகவே பூண்டு விளங்கினன், ஆதலின் அஃது அவனுக்குப் புகழாயமைவதாயிற்றென்க. 25. ஒளி பொங்கு மார்பில் என மாறுக. 26. வளை - ஆழிப்படை: (சக்கராயுதம்). 27. பெருமழை - பெரிய முகில். பிணித்தலருமை தோன்ற இடியுடைப் பெருமழை என்று விதந்தான். 28. விளையுள் - விளைச்சல்.

இனி, இப் பெருங் காப்பியத்தில் சோழ மன்னனை மங்கல வாழ்த்துப் பாடலில் வாழ்த்தித் தொடங்கிய இளங்கோவடிகளார் ஈண்டு மதுரைக் காண்டத்தைத் தொடங்குபவர் மாமறை முதல்வன் ஒருவன் வாயிலாகப் பாண்டியனை மனமார வாழ்த்தித் தொடங்கும் நுணுக்கமும், மேலும், இக் காண்டத்துள் கோவலன் கொலையுண்டமைக்குக் காரணம் அவனது பழவினையே அன்றிப் பாண்டிய மன்னனின் கொடுங்கோன்மை யன்று என்று குறிப்பாக வுணர்த்துவார் அம் மன்னனைத் தந்திருவாயானும் (30) தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி என்று முன் மொழிந்து கோடல் என்னும் உத்தி வகையாலே அருளிச் செய்திருப்பதூஉம் கருத்தூன்றி யுணர்ந்து மகிழற்பாலனவாம். அவமதிப்பும் ஆன்றமதிப்பும் இரண்டு மிகைமக்களான் மதிக்கற்பால என்பதற்கேற்ப ஈண்டுத் தீதுதீர் சிறப்பின் தென்னனைப் புகழ்ந்து வாழ்த்துவான் மாமுதுமறையோன் ஆயினவாறு முணர்க. 31. வந்திருந்தோன் : பெயர்.

(32. முதலாக 56. முடியக் கோவலன் வினாவிற்கு அவ்வந்தணன் கூறும் விடை.)

32 - 34 : யாது நும்மூர்.......உரைப்போன்

(இதன் பொருள்) கோவலன் - கோவலன் அணுகி; நும் ஊர் யாது ஈங்கு வரவு என் எனக் கேட்ப - பெரியீர்! நும்முடைய ஊர் யாது? இங்கு நீயிர் வருதற்குரிய காரணம் என்னையோ? என்று இனிதின் வினவ; குன்றாச்சிறப்பின் மாமறையாளன் - எக்காலத்தும் குறைதலில்லாத சிறப்பினையுடைய பெரிய மறைகளையுணர்ந்த அவ் வந்தணன்றானும் அவன்வினாக்கனிற் பின்னதற்கு விடையாக வருபொருள் உரைப்போன் - தான் அங்கு வருதற்கியன்ற காரணமாகிய பொருளை முதற்கண் கூறுபவன் என்க.

(விளக்கம்) 32. ஈங்கு வரவு என் என மாறுக. வருதற்குரிய காரணம் என் கொலோ? என்று வினவியபடியாம். கோவலன் வினாக்களிரண்டனுள் பின்னதே சிறப்புடைத்தாகலின் அதனை அவ் வந்தணன் முற்படக் கூறுகின்றான் என்க. 34. வருபொருள் - தான் வருதற்குக் காரணமாகிய பொருள்.

திருவமர் மார்பன் கிடந்தவண்ணம்

35 - 40 : நீலமேகம் ............... வண்ணமும்

(இதன் பொருள்) நெடும் பொன் குன்றத்து - உயர்ந்த பொன் மலையின் மீது; நீல மேகம் பால் விரிந்து அகலாது படிந்தது போல - நீலநிறமுடைய முகில் ஒன்று பக்கங்களிலே விரிந்து பரவாமல் படிந்து கிடந்தாற்போன்று; விரித்து எழுதலை ஆயிரம் அருந்திறல் உடை - படம் விரித்து எழுந்த தலைகள் ஓராயிரமும் கிட்டுதற்கரிய ஆற்றலும் உடைய; பாயல் பள்ளி - பாப்பணையாகிய படுக்கைமீது; பலர் தொழுது ஏத்த - அமரரையுள்ளிட்ட பலரும் தன்னைக் கண்டு வணங்கிப் பராவியுய்தற் பொருட்டு; விரிதிரைக் காவிரி வியன் பெரு துருத்தி - விரிகின்ற அலைகளையுடைய காவிரிப் பேரியாற்றிடைக் குறையாகிய திருவரங்கத்திலே; திருஅமர் மார்பன் கிடந்த வண்ணமும் - திருமகள் விரும்பியுறைகின்ற திருமார்பினையுடைய திருமால் கிடந்தருளிய திருக்கோலத்தையும்; என்க.

(விளக்கம்) நீலமேகம் நெடிய பொன்மலையின் மிசை அங்ஙனம் கிடத்தல் அரிதாகலின் இவ்வாறு அடைபுணர்த் தோதினன். நீலமேகம் - திருமாலுக்குவமை. ஆயிரம் குவடுகளையுடைய பொற் குன்றம் எனப் பொருளுக்குப் புணர்த்த ஆயிரந்தலையை உவமைக்குங் கொள்க. அருந்திறல் என்பதனை அன்மொழித் தொகையாகக் கொண்டு அருந்திறலையுடைய பாம்பு என்க; அஃதாவது ஆதிசேடன். பலர் என்றது அமரர் முதலிய பலரும் என்பதுபட நின்றது. ஆற்றிடைக்குறைகளுள் வைத்துத் திருவரங்கம் பெரிதாதல் கருதி வியன்பெருந் துருத்தி என்றார். துருத்தி - ஆற்றிடைக்குறை (அரங்கம்). திரு - திருமகள். திருவமர்மார்பன் - திருமால். கிடந்தவண்ணம் - அறிதுயில் கொண்டு கிடக்கின்ற அழகென்க.

செங்கண் நெடியோன் நின்றவண்ணம்

41 - 51 : வீங்குநீ ரருவி ...... வண்ணமும்

(இதன் பொருள்) வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை - மிகவும் பெருகி வீழாநின்ற கொடிவழித் தீர்த்தம் முதலிய பேரருவிகளையுடைய திருவேங்கடம் என்னும் பெயரையுடைய மலையினது குவடுகளுள் வைத்து மிகவும் உயர்ந்த குவட்டின் மேலே; இருமருங்கு ஞாயிறும் திங்களும் விரிகதிர் விளங்கி - இரண்டு பக்கங்களினும் ஞாயிற்றினின்றும் திங்களினின்றும் விரிகின்ற ஒளிகளாலே விளக்கமெய்தப் பெற்ற; ஓங்கிய இடை நிலைத்தானத்து - உயர்ந்துள்ள அவ்விரண்டு ஒளிமண்டிலங்கட்கும் நடுவண் உளதாகிய ஓரிடத்தே; நல்நிற மேகம் - நல்ல நீலநிறமமைந்த ஒருமுகிலானது; மின்னுக் கோடி உடுத்து - தனது மின்னலாகிய புதிய ஆடையை உடுத்து, விளங்கு வில் பூண்டு - ஒளிதிகழும் தனது இந்திரவில்லையும் அணிகலனாக வணிந்து கொண்டு நின்றாற்போல; பகை அணங்கு ஆழியும் பால் வெள் சங்கமும் நகை பெறு தாமரைக் கையில் ஏந்தி - தனதிருமருங்கினும் பகைவரை வருத்துகின்ற ஆழிப்படையையும் பானிறச் சங்கினையும் அழகு பெறுகின்ற செந்தாமரை மலர்களை யொத்த தன் திருக்கைகளிலே ஏந்திக்கொண்டு; நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு - அழகுதிகழ்கின்ற கவுத்துவமணி மாலையைத் தனது திருமார்பிலே அணிந்துகொண்டு; பொலம் பூவாடையில் போலிந்து தோன்றிய - பொற்பூவாடையை யுடுத்துப் பொலிவுற்றுத் தேவர் முதலிய பலரும் தொழுதுய்தற் பொருட்டு வெளிப்பட்டுத் தோன்றியருளிய; செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - சிவந்த திருக்கண்களையுடைய அந்தத் திருநெடுமாலினது; நின்றருளிய திருக்கோலத்தையும் என்க.

(விளக்கம்) நன்னிற மேகம் இடைநிலைத்தானத்து உடுத்துப் பூண்டு நின்றது போல நெடியோன் உச்சிமீமிசை ஏந்திப் பூண்டு பொலிந்து தோன்றிய நின்றவண்ணமும் என இயையும். இது மயக்க நிரனிறை. உச்சிமீமிசை: ஒருபொருட் பன்மொழி; சிறப்பின்கண் வந்தன.

இனி இதன்கண் மேகம் நெடியோனுக்கும் மின்னுக்கொடி பொன்னாடைக்கும் இந்திரவில் ஆரத்திற்கும் ஞாயிறு ஆழிக்கும் திங்கள் சங்கிற்கும் இடைநிலைத்தானம் மலையினுச்சிக்கும் உவமை என்க. முன்னர்த் திருவரங்கத்திற்குக் கூறிய 38. பலர் தொழுதேத்த என்னும் ஏதுவை ஈண்டும் கூறிக்கொள்க. முன்னர்க் கிடந்த வண்ணத்திற்குத் தகத் திருவமர் மார்பன் எனவும் ஈண்டுநின்ற வண்ணத்திற்குத்தக, செங்கண் நெடியோன் எனவும் அடிகளார் சொற்றிறம் தேர்ந்தோதுதலறிக.

45. கோடி - புத்தாடை. வில் - இந்திரவில். ஞாயிற்றுக்கும் திங்களுக்குமிடை நின்ற மேகம் நிறங்கெடுதல் இயல்பாகலின் அங்ஙனம் கெடாத நிறமுடைய மேகம் ஒன்றுண்டாயின் அந்த மேகம் என்பார் நன்னிறமேகம் என்றார்.

இனி, குன்றாச் சிறப்பின் மாமறையாளன் என அடிகளாராற் சிறப்பித்தோதப் பெற்ற இந்த அந்தணன்றானும் ஈண்டுத் திருவரங்கத்துத் திருமால் கிடந்தவண்ணத்தையும் திருவேங்கடத்துச்சிமீமிசை அந்தச் செங்கண் நெடுமால் நின்ற வண்ணத்தையும் இறையன்பு காரணமாகத் தன் அகக்கண்களிற் கண்டவாறு கூறியபடியாம் என்று நுண்ணிதிற் கண்டு கொள்க பண்டும் இன்றும் இறையன்புமிக்கோர் இத்துணைச் சிறப்பாகவே இறைவன் திருக்கோலங்களைக் கண்டுமிக்க வல்லுவநராவார். அக் காட்சிகளை இலங்கியங்களிலே அவர் கண்ட வண்ணமே கண்டு மகிழும் பேறு அத்தகைய இலக்கியங்களை ஆர்வத்தோடு ஓதுகின்ற திருவுடையார்க்கும் என்றென்றும் உண்டாதல் தேற்றமாம். மற்றுத் திருவரங்கத்திற்கும் திருவேங்கடத்திற்கும் சென்று புறக்கண்களால் மட்டும் காண்பவர் காட்சி இவற்றின் வேறாம் என்பது வெளிப்படை.

இனி இம் மாமறை முதல்வன் நம்மனோர் செவியுஞ் சிந்தையும் குளிர இறைவனுடைய திருக்கோலங்களை ஓதுமாற்றானே அவனது இறைபன்பின் பெருக்கந்தானும் நம்மனோர்க்கும் புலப்படுதலுமுணர்க.

அந்தணனின் இறையன்பின் றிறம்

52 - 53 : எங்கண் ....... வந்தேன்

(இதன் பொருள்) என்கண் காட்டு என - அடியேனுடைய இந்தக் கண்கள் தாம் எமக்குக் காட்டுதி ! எமக்குக் காட்டுதி ! என்று; என் உளம் கவற்ற - என்னெஞ்சத்தை இடையறாது வருத்துதலாலே; வந்தேன் (56) இது என் வரவு - அக் கண்களின் விருப்பத்தை நிறைவேற்றுதலின்றியமைகலேனாய் ஈண்டு வந்தேன்காண்! இதுவே என் வரவிற்குரிய காரணம் கண்டாய்; என்றான் என்க.

(விளக்கம்) 52 - என் கண் காட்டு என்று என்னுளம் கவற்ற என்னும் இம் மாமறையோன் மொழி இறையன்பு மிக்க சான்றோர் தம் மனநிலையை மிகவும் திறம்பக் காட்டுதலுணர்க அவைதாம் அம் மறையோனை ஐய! அவ்வண்ணங்களைக் காணாத கண் என்ன கண்ணோ? காட்டுதி காட்டுதி என்று பன்முறையும் அவனை வருந்தின என்பது தோன்ற என் கண் உளம் கவற்ற என்றான். ஈண்டு அவனுளம் இடையறாது இவ்வண்ணங்களைச் சென்று காண்டலாலே அக் கண்கள் எம்மையும் கொண்டு போதி என வருத்தின என்றவாறு. ஈண்டுத் தன் கொழுநன்பால் தன்னெஞ்சு சென்று விடுதலாலே அவனைக் காணாதமைகிலாக் கண்ணுடைய தலைவி அந்நெஞ்சை நோக்கி,

கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று  (குறள் - 1244)

என்று கூறியது நமது நினைவிற்கு வருகின்றது.

53 - 57 : குடமலை ....... கேட்டு

(இதன் பொருள்) குடமலை மாங்காட்டு உள்ளேன் - ஐய! என் ஊர் யாதென வினவினையல்லையோ கூறுவல் யான் குடகமலைச் சாரலகத்தமைந்த மாங்காடு என்னும் ஊரின்கண் உறைகின்றேன் காண்: தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் -யான் வருகின்ற வழியிலமைந்த பாண்டியனாட்டிலமைந்த சிறப்புகள் பலவற்றையும் அம் மன்னனுடைய கொடை அளி முதலிய செயல்களையும் கேட்டலோடன்றி; கண்மணி குளிர்படக் கண்டேன் ஆதலின் - என் கண்ணற் பாவைகள் குளிரும்படி கண்டு வந்தேனாதலாலே; வாழ்த்தி வந்திருந்தேன் என - அம் மன்னனை நெஞ்சார வாழ்த்தி வந்து ஈங்கிருந்தேன் என்று; தீததிறம் புரிந்தோன் - தன்குலத் தொழிலாகிய வேள்விபலவும் செய்துயர்ந்த அவ்வந்தணன்; செப்பக் கேட்டு - தனவினாக்களுக்கு விடையிறுப்ப அவற்றை இனிதாகக் கேட்டு என்க.

(விளக்கம்) 57 - தீத்திறம் - வேள்வி. வேளாப் பார்ப்பனரும் உளராதலின் அவரின் வேறுபடுத்தற்குத் தீத்திறம் புரிந்தோன் என விதந்தார். முத்தீயின் திறத்து மணம் புரிந்தோன் என்னும் அடியார்க்கு நல்லார் உரை சிறவாமையுணர்க. இவை கோவலன் வினவிற்கு விடையாதலின் அப்பொருள் தோன்றச் செப்ப என்றார். செப்பு - விடை. செப்பும் வினாவும் வழ அல் ஓம்பல் என்புழி (தொல். சொல். 13.) அஃதப் பொருட்டாதலறிக. 

கோவலன் அம் மாங்காட்டு மறையோனை
வழித்திறம் வினாதல்

(58 - முதலாக 149 - முடிய வழித்திறங் கேட்ட கோவலனுக்கு மாமறையோன் வழித்திறங் கூறுவதாய் ஒருதொடர்)

58 - 59 : மாமறை ............. உரைக்கும்

(இதன் பொருள்) மாமறை முதல்வ - கோவலன் மீண்டும் அவ்வந்தணனை நோக்கிச் சிறந்த மறைகட்கு எல்லாம் தலைமையுடையோய்! நின் ஊரும் வரவின் காரணமும் அறிந்து மகிழ்ந்தேன் அது நிற்க, இனி; நீ மதுரைக்குச் செந்நெறி கூறு என அத்தென்னவன் தலைநகரமாகிய மதுரைக்குச் செல்லும் வழிகளுள் வைத்துச் செவ்விய வழியை எமக்குக் கூறுதி என்று வேண்ட; கோவலற்கு உரைக்கும் - அம் மறையோன் அவனுக்குக் கூறாநிற்பன்; அது வருமாறு :- என்க.

(விளக்கம்) கேட்டு மதுரைச் செந்நெறி கூறு என்றது - கேட்டு மகிழ்ந்து இனி, நீ கண்மணி குளிப்பக்கண்டு வந்த அத்தென்னவன் தலைநகரமாகிய மதுரைக்கியாங்களும் செல்லுதல் வேண்டும் ஆதலின் அதற்குச் செல்லும் நெறிகளுள் நல்லதொரு நெறியை எங்கட்குக் கூறு என்பது தோன்ற நின்றது. செந்நெறி - செவ்விய நெறி.

மறையோன், வழியின் கொடுமை குறித்து இரங்குதல்

60 - 97 : கோத்தொழிலாளரொடு ............ தன்னுடன்

(இதன் பொருள்) கோத்தொழிலாளரொடு - நடுவு நிலையிற் பிறழ்ந்து உள்ளங் கோடிய அமைச்சர் முதலிய அரசியற் றொழிலாளரோடே கூடி; கொற்றவன் கோடி - அரசன்றானும் நாள்தோறும் நாடி முறை செய்யாது கோல் கோடநிற்றலாலே; வேந்து இயல் இழந்த வியன் நிலம் போல - அரசியலை இழந்து கேடெய்திய அகன்ற நிலத்தைப்போல; வேனலம் கிழவனோடு வெங்கதிர் வேந்தன் - தனக்குரிய அறுவகை அமைச்சர்களுள் வைத்து வெப்பமிக்க முதுவேனில் என்னும் கொடிய அமைச்சனோடு கூடிக்கொண்டு வெவ்விய ஒளியையுடைய ஞாயிறு என்னும் வேந்தனானவன்; தான் நலம் திருக - பண்டுதான் செய்த நலங்களைத் தானே அழித்தலாலே; முல்லையும் குறிஞ்சியும் தன்மையில் குன்றி - முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தமக்குரிய பண்புகள் குறையப்பெற்று; முறைமையில் திரிந்து - தங்கண் வாழும் உயிர்கட்குக் தாம் வழங்கும் முறைமையையுடைய நலங்களை வழங்காமல் மாறுபட்டு; நல்லியல்பிழந்து - நல்லியற்கை வளங்கெட்டு; நடுங்கு துயர்உறுத்து - அவை அஞ்சிநடுங்குதற்குக் காரணமான துன்பத்தையே மிகுவித்து; பாலை என்பதோர் படிவம் கொள்ளும் காலை - அவ்விரண்டும் பாலை நிலம் என்று கூறப்படும் ஒரே நிலமாகின்ற வடிவை மேற்கொள்ளா நின்ற இம் முதுவேனிற் காலத்திலே; காரிகை தன்னுடன் எய்தினிர் - இம் மெல்லியனல்லாளோடு நீயிர் மதுரைக்குப்போக ஒருப்பட்டு ஈண்டு வந்துளீர் அல்லிரோ ! என்றான் என்க.

(விளக்கம்) 60 - கோத்தொழிலாளரொடு என்புழி ஒடுவுருபு கோடுதற் றொழிலில் உடனிகழ்ச்சிப் பொருட்டாய் நின்றது. கொற்றவனும் கோடி எனல் வேண்டிய இழிவு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. கோடி - கோட எனச் செயவெ னெச்சமாக்குக. கோத்தொழிலாளர் - அமைச்சர் முதலியோர். வேத்தியல் -மென்றொடர் வேற்றுமைக்கண் வன்றொடராயிற்று: அரசினது இயல்; அஃதாவது - செங்கோன் முறைமை என்க.

இனி வேத்தியலிழந்த வியனிலம் போல என்றது - அரசியலிழக் தமையாலே அந்நாடு கேடுற்றாற் போல என்றவாறு. இதனை -

கோணிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியு நீடிப்
பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி
ஆணையில் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்

எனவரும் சிந்தாமணியானும் (255)

முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்  (குறள் - 559)

என்றற் றொடக்கத்துத் திருக்குறள்களானும் உணர்க.

62. வேனலங் கிழவன் - என்றது ஈண்டு முதுவேனிலை. வேந்தன்றான் என்புழி: தான் அசைச்சொல் லெனினுமாம். வெங்கதிர் வேந்தன் கார்ப்பருவ முதலிய அமைச்சரோடு கூடித் தான் செய்த நலங்களைத் தானே திருக என இசையெச்சத்தால் விரித்தோதுக. வெங்கதிர் வேந்தன் நலந்திருகக் காரணம் தீய அமைச்சனாகிய முதுவேனிலோடு கூடினமையேயாம் திருகுதல் - அழித்தல். தன்மை முல்லைக்கும் குறிஞ்சிக்கும் இயல்பாயமைந்த பண்புகள். அவையிற்றை முல்லைப் பாட்டினும் குறிஞ்சிப் பாட்டினும் காண்க. நல்லியல்பு என்பது மது. இரண்டு திணைகளும் திரிந்து பாலை என்னும் ஒரே திணையாகி விடும் காலம் என்பான் பாலையென்பதோர் படிவம் கொள்ளும் என்றான். இத்தகைய காலத்தே வந்தனிர் என்றது, நீங்கள் இங்ஙனமொரு பாலை நிலவழியைக் கடந்தே மதுரைக்குப் போதல் வேண்டும் என்பது தோன்றக் கூறியவாறாம். பின்னரும் கண்ணகியை நோக்கியவன் இத் தவ மூதாட்டியும் நீயும் ஒரோவழி அவ்வழியைக் கடந்து போதல் கூடும், இக் காரிகை அவ்வழியைக் கடத்தல் அரிது என்பது தோன்ற, காலை எய்தினிர் எனப் பொதுவனோதாது காரிகை தன்னுடன் எய்தினிர் என விதந்து கூறினான். இது கண்ணகியின் மென்மையையும் அவ்வழியின் கொடுமையையுந் தூக்கிக் கூறியவாறென்க. காலை - காலம்.

இனி. அடிகளார் 60. கோத்தொழிலாளரொடு என்பது தொடங்கி .... 66 - பாலையென்பதோர் படிவம் கொள்ளும் என்னும் துணையும் கூறிய சொல்லும் பொருளும் - மதுரைக்கும் இவர்க்கு நிகழவிருக்கும் போகூழினது செயலுக்கும் ஒரு வாய்ப்புள்ளாகவும் அமையும்படி ஓதியுள்ளமை கூர்ந்துணரற்பாலதாம். என்னை ? அங்கு வளையாத செங்கோல் வளையும்படி மன்னன் தன்னரண்மனைப் பணியாளன் சொற் கேட்டலும் காவலருள் கல்லாக்களிமகன் தம்முள் முதியோர் சொற்கேளாது வாளாலெறிதலும் அவ்வழி மாமதுரை வேறொரு படிவம் கொள்ளலும் நினைக.

மறையோன் கூறும் வழித்திறம்

67 - 73 : அறையும் ........... கவர்க்கும்

(இதன் பொருள்) அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்த - பாறையும் துறுகலும் அரிய வழிமயக்கமும் பேய்ததேருமாகிய இவை யான் கூறிய முறையாலே கிடக்கின்ற; இந் நெடும்பேர் அத்தம் நீங்திச் சென்று - இந்த நீண்ட பெரிய பாலைப் பரப்பிற் செல்லும் தொலையாத வழியை நடந்து தொலைத்து அப்பாற் சென்று; கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் - ஆங்கெதிர்ப் படுகின்ற கொடும்பாளூர் நெடுங்குளம் என்னும் இரண்டூர்களுக்கும் இடைக்கிடந்த கோட்டகத்துட் புகுந்து சென்றக்கால்; பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத்து அரு நெறி கவர்க்கும் - இளம்பிறையைத் தலைமிசைக் கண்ணகியாகச் சூடிய பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமான் தன் றிருக்கையிலேந்திய முக்கூறாக அறுக்கப்பட்ட சூலப்படையினது தலைகளைப் போன்று கடத்தற்கரிய அவ்வழி மூன்று கிளைகளாகப் பிரிந்து போகும்; என்றான் என்க.

(விளக்கம்) அறை - பாறைக்கல். பொறை - சிறிய மண்மலை. துறுகல கொணர்ந்து இட்டது போன்ற கற்பாறை. வழியோ அன்றோ என்று மயங்குதற்குக் காரணமான இடைவழியை ஆரிடைமயக்கம் என்றார். ஆரிடை - அறிதற்குரிய நடுவிடம். இனி ஆரிடை - அரிய வழி; ஆவது ஆறலைப்போரும் ஊறு செய் விலங்கு முடைத்தாய் ஏற்றிழிவும் கவலைச் சின்னெறியுமாயிருப்பது, என்பர் அடியார்க்கு நல்லார் இவ்வுரை பரஞ்சேரி இறுத்தகாதைக்கண் கோள்வல்..... எங்கணும் போகிய இசையோ பெரிதே (5 - 10) என்பதனோடும் மாறுபடும் என்க.

69. நிறைநீர் வேலி என்றது பேய்த்தேரை என்னும் பழையவுரை சிறந்த வுரையாகும். என்னை? பாலையென்பதோர் படிவங்கொண்ட நிலத்து நெறியாகலின் இகழ்ச்சி தோன்ற அடிகளார் பேய்த்தேரையே அங்ஙனம் கூறினர் என்பதே நுண்ணியவுரையாம். இங்ஙனமன்றி இதற்கு நிறை த நீர்க்கு வேலியாகிய ஏரிக்கரை என்பார் உரை போலியென்க. பேய்த்தேரானது மயங்கியவர்க்கு மிகப்பெரிய நீர்நிறைந்த பொய்கை போன்று அலைகளுடனே தோன்றுதலியல்பாதல் கண்டுணர்க. 71. கொடும்பை - கொடும்பாளூர், நெடுங்களம் என்பதும் ஊர்ப்பெயர். இவையிரண்டும் இணைப்பெயர் பெற்ற ஊர்கள் என்பர். இவ்வாறு இணைப்பெயர் பெற்ற ஊர்கள் இக்காலத்தும் இணைத்தே பெயர் கூறப்படுதல் காணலாம். கோட்டகம் என்பது ஊர்களின் நிலப்பரப்பிற்குப் பெயர். அஃது இக்காலத்தும் கோட்டகம் என்றே வழங்கப்படுகின்றது. 70. நீந்திச்சென்று .......... புக்கால் என்றது கடந்து செல்லல் அரிது என்பது பட நின்றது. 72. பிறை முடிக்கண்ணிப் பெரியோன் - சிவபெருமான்; பிறவாயாக்கைப் பெரியோன் என முன்னர்க் கூறியதும் நினைக. 72. அறைவாய் - அறுக்கப்பட்டவாய். சூலத்து - சூலத்தைப்போல. எனவே அவ்வழி மூன்றாகக் கவர்க்கும் என்றாராயிற்று.

மானின்று விளிக்கும் கானமும் எயினர் கடமும்

74 - 79 : வலம்படக்கிடந்த ......... கடந்தால்

(இதன் பொருள்) வலம்படக் கிடந்த வழி நீர் துணியின் - ஐய! அம் மூன்று வழிகளுள் வைத்து நீங்கள் வலப்பக்கத்தே கிடந்த வழிமேற் செல்லநினைந்து செல்வீராயின்; அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும் பொரி அரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும் திரங்கிய வரிபுறம் மரல் கரிகிடக்கையும் - விரிந்த தலையினை யுடைய வெண்கடம்பும் உலர்ந்த தலையினையுடைய ஓமையும் தண்டுலர்ந்து வற்றிய மூங்கிலும் நீரின்றி வற்றிற்திரங்கிய வரிகளையுடைய புறத்தையுடைய மரல் கரிந்து கிடக்கின்ற இடங்களும்; மரன் நீர் நசைஇ வேட்கையின் நின்று விளிக்கும் - உழைமான் கரிந்த அம் மரற் புல்லைத்தின்று பின்னர் நீர்பருக விரும்பி யாண்டும் திரிந்து பார்ததும் நீர் பெறமாட்டாமையால் அந்நீர் வேட்கை மிக்கு இளைப்புற்று நின்று உளைதற்கிடனான; கானமும் - காட்டையும்; எயினர் கடமும் கடந்தால் - இடையிடையே பாலைநிலமாக்கள் குடியிருக்கும் ஊர்களையும் கடந்துசென்றால் அவற்றிற்கும் அப்பால்; என்க.

(விளக்கம்) வலம்படக்கிடந்த நெறி செவ்விய நெறியன்று என்பது தோன்ற நீர்துணியீன் என்றான். மராம் - வெண்கடம்பு. ஓமை உழிஞ்சில் - பாலைநிலத்து மரங்கள். அலறுதல் உலறுதல் இரண்டும் ஒருபொருட் பன்மொழி. பொரியரை - பொருக்குடைய அடிமரம். புல்முளி மூங்கில் தண்டிற்கு ஆகுபெயர். மான் செய்யும் ஒலியை உளைத்தல் என்பது மரபுபோலும். எயினர் - பாலைநிலமாக்கள். கடந்தால் என்பது கடத்தலரிது என்பதுபட நின்றது. இப்பகுதியில் அடிகளார் முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றரிந்த பாலையினது தன்மையை இயற்கை நவிற்சியணியாக வோதயிருக்கும் அழகு நினைந்து மகிழற்பாலதாம்.

தென்னவன் சிறுமலை

80 - 85 : ஐவனவெண்ணெல் ............. தோன்றும்

(இதன் பொருள்) ஐவன வெள் நெலும் அறைக்கண் கரும்பும் - மலைச்சாரலிற் பயிராகும் ஐவன நெல் எனப்படும் வெண்மை நிறமுடைய நெல்லினது பயிரும்; அறுத்துத் துணிக்கும் கணுக்களையுடைய முதிர்ந்த கருப்பஞ்சோலையும்; கொய்பூந் தினையும் -கொய்யும் பருவத்தையுடைய அழகிய தினைகளையுடைய புனங்களும்; கொழும்புன வரகும் - கொழுவிய கொல்லைகளிலே பயிர் செய்யப்பட்ட வரகுப் பயிர்களும்; காயமும் - வெள்ளங்காயமும்; மஞ்சளும் - மஞ்சட் கிழங்கும்; ஆய்கொடிக் கவலையும் - அழகிய கொடியையுடைய கவலையும்; வாழையும் கமுகும் தாழ் குலைத் தெங்கும் - வாழையும் கமுகும் தாழ்ந்த குலைகளையுடைய தெங்கந் தோட்டமும்; மாவும் பலாவும் சூழ் அடுத்து - மாமரங்களும் பலா மரங்களும் தன்னை அடுத்துச் சூழ்தலையுடைய; தென்னவன் ஓங்கிய சிறுமலை திகழ்ந்து தோன்றும் - பாண்டியனுக்குரிய உயர்ந்த சிறுமலை என்னும் பெயரையுடைய மலை நன்கு விளங்கித் தோன்றுங்காண் என்றான் என்க.   

(விளக்கம்) எயினர் கடத்தைக் கடந்த பொழுதே தென்னவன் சிறுமலை தோன்றும், அம் மலைதான் இத்துணை வளமுடைத்தென்று அறிவுறுத்தபடியாம்: ஐவனம் - மலைச்சாரலில் பயிராகும் ஒருவகை நெல். அதன் நிறம் வெண்மையாதலின் வெண்ணெல் எனத் தெரித்தோதினார். அறைகண் - வரையறையையுடைய கணுக்களையுடைய கரும்பு எனினுமாம். கண் - கணு. தினைக்கதிர் காண்டகு வனப்புடைத்தாகலின் பூந்தினை என்றார். புனம் - கொல்லை. காயம் - வெண்காயமுமாம். வாழை கமுகு தெங்கு மூன்றும் புல் ஆகலின் ஒருசேர வோதினர். மாவும் பலாவும் மரங்கள் தன்னை அடுத்துச் சூழ இடையிலே ஓங்கிய சிறுமலை எனவும் தென்னவன் சிறுமலை எனவும் தனித்தனி யியைக்க. சிறுமலை என்பது அதன் பெயர். (சிறிய மலை என்னும் பொருளில்லை) என்க.

இச் சிறுமலையை அடிகளார் இயற்கை நவிற்சியாக வோதிய அழகும் நினைந்தின்புறற் பாலதாம்.

திருமால் குன்றம்

86 - 91 : அம்மலை .............. செல்விராயின்

(இதன் பொருள்) அம்மலை வலம் கொண்டு அகன் பதிச் செல்லுமின் - அச் சிறுமலையை நுமக்கு வலப்பக்கத்தே வைத்து இடம் பக்கத்து வழியிற்சென்று நீயிர் செல்லக் கருதிய அகன்ற மதுரைமா நகரினை அடையக்கடவீர்; அவ்வழிப் படரீராயின் - ஈண்டுக் கூறப்பட்ட அவ் வலப்பக்கத்து வழியாகச் செல்லா தொழியின், இடத்து - சூலம்போலக் கவர்த்த வழிகளிலே இடப்பக்கத்து வழிமேல் செல்லுதிராயின்; சிறைவண்டு செவ்வழிப் பண்ணின் அரற்றும் தடம் தாழ் வயலொடு - சிறகுகளையுடைய வண்டுகள் தேன் தேர்பவை செவ்வழிப் பண் போன்று இசை முரலுதற் கிடமான ஏரிகளும் அவற்றின் நீர் பாயுமளவிற்குத் தாழ்ந்து கிடக்கின்ற வயல்களும் இடையிடையே; தண் பூ காவொடு - குளிர்ந்த பூம்பொழில்களும்; கடம்பல கிடந்த காடுடன் கழிந்து - அருநெறிகள் பலவும் தம்முட்கிடந்த காட்டு வழியையும் கடந்து சென்று; திருமால் குன்றத்துச் செல்குவீராயின் - அப்பால் எதிர்ப்படுகின்ற திருமால் குன்றத்தின்கட் செல்வீராயின்; என்க.

(விளக்கம்) இதுகாறும் கூறியது சூலம் போல மூன்றாகக் கவர்க்கும் என்ற வழிகளுள் வைத்து வலப் பக்கத்து வழியினியல்பு இனி ஈண்டு 87. இடத்து என்றது அவற்றுள் இடப்பக்கத்தே கிடந்த வழியை என்க. இடத்து வழி மேல் 91. செல்குராயின் என்றியையும். இவ் வழி முன்னையினும் சிறந்த வழி என்பது தோன்றச் செவ்வழிப் பண்ணின் சிறை வண்டரற்றுதற் கிடனான நீர்ப்பூக்களும் கோட்டுப் பூ கொடிப்பூ முதலியனவும் நிரம்ப மலர்ந்துள்ள தடமும் தாழ் வயலும் தண் பூங்காவு முடைத்திது என்றான். சிறைவண்டரற்றுதல் தடமுதலிய மூன்றற்கும் பொது. இங்ஙனம் கூறவே இவ்வழி நீரும் நிழலுமுடைய இனிய நெறி என்றுணர்த்தினானாம். செவ்வழிப்பண்-நாற்பெரும் பண்களுள் ஒன்று. தடங்களில் மலரும் தாமரை மலரிற்றாதூதும் வண்டுகள் அக் காலைப் பொழுதிற்குரிய பண்ணாகிய செவ்வழிப்பண் பாடும் என்றான். என்னை? அப்பண் அப்பொழுதிற்குரிய பண் என்பதனை,

மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவெமர் மறந்தனர்  (புறம்)

என்பதனானுமுணர்க.

தடம் - ஈண்டு ஏரி, அதன் நீர்பாய்தல் வேண்டுமாகலின் தாழ் வயல் எனல் வேண்டிற்று. கடம் - காட்டகத்துநெறி. அம் மாமறையோன் வைணவ சமயத்தினன் என்பது முன்னரும் கண்டாம். ஈண்டும் திருமால் குன்றத்தைக் கூறியவன் இங்குள்ள வியத்தகு செய்திகள் பலவும் விரித்தோதுகின்றனன். வழித்திறங் கூறுபவன் இறையன்பு மேலீட்டாலே ஈண்டு மிகையாகக் கேட்போர்திறம் நோக்காது விரித்தோதுகின்றனன். இங்ஙனம் கூறுவது இறையன்புடையார்க்கியல்பு என்பதுணர்த்தவே அடிகளாரும் அவன் பேசுமளவும் பேச விடுகின்றனர். ஆசிரியர் கம்பநாடரும் பித்தரோடு கடவுட்பத்தரையும் ஒரு தன்மையராக்கி பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும். பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ என்பர். ஈண்டு இவ்வந்தணன் கூற்றுக் கேட்டற்கினியன ஆயினும் பன்னப் பெறுபவை அல்ல. இவன் கூற்றைப் பொறுமையோடு கேட்டிருந்த கவுந்தியடிகளாரும் இவன் பேதுறவு பொழிந்தனன் ஆதலின் அவை பன்னப் பெறுபவை அல்ல என்னும் கருத்துடையார் ஆதலை அவர் கூற்றான் உணரலாம்.

61. திருமால் குன்றம் - அழகர் மலை. மேலே இம் மறையோன் கூறுவன மருட்கையணிக்கு எடுத்துக் காட்டாகுந் தன்மையனவாம்.

பெருமால் கெடுக்கும் பிலமும் புண்ணிய சரவணம் முதலிய பொய்கைகளும்

92 - 103 : பெருமால் ............ எய்துவீர் நீரே

(இதன் பொருள்) ஆங்கு பெரும் மால் கெடுக்கும் பிலம் உண்டு - அவ்விடத்தே மாந்தர்க்கியல்பாயுள்ள பெரிய மயக்கத்தைத் தீர்த்து நன்கு தெளிவிக்கின்ற முழைஞ்சும் ஒன்றுளது கண்டீர்! ஆங்கு விண்ணோர் ஏத்தும் வியத்தகுமரபின் - கடவுட்டன்மையுடைய அம் முழைஞ்சே யன்றியும் அம் முழைஞ்சினூடே அமரரும் தொழுதேத்துஞ் சிறப்புடைய வியக்கத்தகுந்த கடவுட்டன்மையுடைய; புண்ணிய சரவணம் பவகாரணியொடு இட்ட சித்தி யெனும் பெயர் போகி - அவைதாம் நிரலே புண்ணிய சரவணம் பவகாரணி இட்டசித்தி என்னும் தம் பெயர்கள் திசையெங்கும் பரவப்பெற்று; தமது முட்டாச் சிறப்பின் விட்டு நீங்கா விளங்கிய பொய்கை மூன்றுஉன - முட்டுப்பாடில்லாத கடவுட்டன்மையி னின்றும் ஒருபொழுதும் விட்டு நீங்காமல் விளங்கிய மூன்று நீர்நிலைகள் (தீர்த்தங்கள்) இருக்கின்றன; ஆங்கு - அப் பொய்கைகளுள் வைத்து; புண்ணிய சரவணம் பொருந்துவிராயின் - நீவிர் புண்ணிய சரவணத்தின் கண் நீராடுவிராயின; விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர் - தேவேந்திரன் அருளிச் செய்த ஐந்திரவியாகரணம் என்னும் சிறந்த இலக்கணநூல் அறிவினை உடையீர் ஆவீர்; பவ காரணியில் படித்து ஆடுவீராயின்; அஃதன்றிப் பவகாரணி என்னும் பொய்கை நீரின் முழுகி ஆடுவீராயின் பவகாரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர் - இப் பிறப்பிற்குக் காரணமாகிய நுங்கள் பழம்பிறப்புகளை உணர்வீர்; இட்டசித்தி எய்துவிர் ஆயின - அஃதேயன்றி இட்டசித்தி யென்னும் பொய்கைக்கண் நீராடுவீராயின்; நீர் இட்டசித்தி எய்துவிர் - நீவிர் நினைந்தன வெல்லாம் கைவரப்பெறுகுவீர்; என்றான் என்க.

(விளக்கம்) 92. பெருமால் - மிக்கமயக்கம். காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களுள் ஏனைய இரண்டிற்கும் காரணம் ஆதல்பற்றி பெருமால் என்றான். மால் கெடுக்கும் எனவே காமவெகுளி மயாகம் எனும் மூன்றன் நாமமும் கெடுத்து வீடுபேறு பயக்கும் என்றானாயிற்று. என்னை?

காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய்

எனவரும் திருக்குறளும் (360) நோக்குக. பிலம் - (மலைக்குகை) முழைஞ்சு.

97. ஆங்கு - அவற்றுள். 98. பொருந்துதல் - நீராடுதல். 99. விழுநூல் - ஐந்திரவியாகரணம் என்னும் வடமொழியிலக்கண நூல். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என வருதலும் காண்க. (தொல் - பாயிரம்) விழுநூல் எய்துவிர் என்புழி எய்துதல் உணர்தன் மேற்று. மேலே பழம் பிறப்பெய்துவிர் என்பதுமது. நீராடுமாற்றால் இலக்கண முணர்தலும். பழம் பிறப்புணர்தலும்; பவுராணிகமதம். இவை நினைவின்றிப் பெறும்பே றென்பர் அடியார்க்குநல்லார்.

இனி ஈண்டு இம் மறையோனாற் கூறப்படும் இவையெல்லாம் வைதிக நெறிபற்றிய பவுராணிகர் கொள்கைகளே என்றும் அவற்றின் பேதைமையை விளக்கவே அடிகளார் இம் மறையோனை ஒரு கருவியாகக் கொள்கின்றனர் என்றும் கோடலே பொருந்தும் என்க. இவையெல்லாம் பேதைமையே என்பதனைப் பின்னர்க் கவுந்தியடிகளார் மறுப்புரைக்கண் அடிகளார் அறிவுறுத்தலு மறிக.

101. பவம் - பிறப்பு; பாவம் எனக்கொண்டு பாவத்தால் வரும் பிறப்புகளை எனலுமாம் எனவரும் அடியார்க்குநல்லார் (இரண்டாவதாகக்) கூறும் உரை பொருந்தாது. என்னை? வரும்பிறப்பு என்பது பழம்பிறப் பென்பதனோடு இயையாமையினானும், மேலும் புண்ணியமும் பிறப்பிற்குக் காரணமாகலானும் என்க. 103. இட்டம் - விருப்பம் - ஆகுபெயராய் விரும்பிய பொருள் மேனின்றது. சித்தி - பேறு. அணிமா முதலிய எட்டுவகைச் சித்திகளை எனினுமாம்.

பிலம் புகுவார்க்கு எய்தும் நலங்கள்

104 - 111: ஆங்கு ........... தோன்றி

(இதன் பொருள்) ஆங்குப் பிலம் புக வேண்டுதிராயின் - அத்தகைய பிலத்தினூடே புகுந்து மேற்கூறப்பட்ட பேறுகளை எய்தக் கருதி நீவிரும் அந்தப் பிலத்தினூடே புகுவதனை விரும்புவீராயின்; ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது - மிகவும் உயர்ந்த அத் திருமலைக்கண் எழுந்தருளியுள்ள முதல்வனாகிய திருமாலைக் கைகுவித்துத் தொழுது; அவன்றன் சேவடி சிந்தையில் வைத்து - அவ்விறைவனுடைய சிவந்த திருவடிகளை நெஞ்சத்திலே இடையறாது நினைந்து; வந்தனை மும்முறை மலை வலம் செய்தால் - வணக்கத்தோடே மூன்றுமுறை அத்திருமலையை வலம் (வருதர்; அங்ஙனம்) செய்தால்; நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன் தலை - நிலம் கூறுபடும்படி அறுத்துத் தாழ்ந்த சிலம்பென்னும் ஆற்றினது அகன்ற கரைக் கண் நிற்கின்ற கடிமலர் அவிழ்ந்த கன்னிகாரத்து - புதிய நாளரும்புகள் மலர்ந்து மணம்பரப்புகின்ற தோங்கமரத்தின் நீழலிலே; புயல் ஐங்கூந்தல தொடிவளைத் தோள் ஒருத்தி - முகில் போன்ற ஐம்பாலாகிய கூந்தலையும் தொடியையும் வளையலையும் உடைய தோளையுடைய வரையரமடந்தை ஒருத்தி; பொலம் கொடி மின்னின் தோன்றி - பொற்கொடி போல மின்னல் தோன்றுமாறு ஞெரேலென நூல்கள் முன்னர்த்தோன்றி நின்று; என்க.

(விளக்கம்) சிலம்பாறு - அந்த யாற்றின் பெயர். கன்னிகாரம் - கோங்கு. தொடி - ஒருவகை வளையல்: தொடியும் வளையலும் என்க. ஒருத்தி - ஒரு வரையர மடந்தை; இயக்கி என்பாருமுளர்.

வரையரமடந்தையின் வினாக்கள்

112 - 117: இம்மைக்கு.............கதவெனும்

(இதன் பொருள்) இவ்வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் - நும்மை நோக்கி யான் இத் திருமலையின் அடிக்கண் உறைகுவேன் வரோத்தமை என்பது என் பெயராகும்; நீயிர் இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும் - நீவிர் இம்மையில் இன்பமாவதும் இம்மைமாறிய மறுமையில் இன்பமாவதும்; இரண்டும் இன்றி ஓர் செம்மையில் நிற்பதும் - இவையிரண்டிடத்துமன்றி எக்காலத்தும் ஒரே தன்மையுடைய தொரு நடுவு நிலையுடைத்தாகிய அழிவின்றி நிற்பதும் ஆகிய பொருள்கள் யாவை? செட்புமின் - இவற்றிற்கு விடை கூறுமின்; உரைத்தார்க்கு உரியேன்-இவற்றிற்கு நுங்களில் விடைகூறியவர் யாவர் அவர்க்கு யான் ஏவிய தொழில் செய்தற்குரியவள் ஆகுவன் கண்டீர்! உரைத்தீராயின் - இவற்றிற்கு விடைகூறுவீராயின்; திருத்தக்கீர்க்கு -அத்தகைய பாக்கியமுடைய நுமக்கு; கதவு திறந்தேன் எனும் - இப்பொழுதே இப் பிலத்தினது கதவைத் திறப்பேன் என்று அறிவிப்பாள்; என்றான் என்க.

(விளக்கம்) இம்மைக்கின்பமாவது - ஈதல்; பொருளுமாம். மறுமைக்கு இன்பமாவது - அறம்; செம்மையில் நிற்பது - வீடுபேறு. இனி இம்மைக்கின்பம் புகழ் என்பாருமுளர். திறந்தேன்: காலமயக்கம்; விரைபொருட்கண் வந்தது; என்னை?

வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார் புலவர்

என்பது இலக்கணமாகலான் என்க.

118-123: கதவந்திறந்து..............பொருளெனும்

(இதன் பொருள்) அவள் கதவம் திறந்து காட்டிய நல் நெறி - நீவிர் விடைகூறின், அவ்வரோத்தமை அப் பிலத்தினது கதவைத் திறந்து அவள் காட்டிய நல்லவழியாகிய; போகு இடைகழியன புதவம் பலவுள - நெடிய இடைகழியின் கண்ணவாகிய கதவுகள் இருமருங்கும் பல உளவாம்; ஒட்டுப்புதவம் ஒன்றுண்டு - அக்கதவுகளைக் கடந்து சென்றால் ஓரிடத்தே இரட்டைக்கதவையுடைய வாயில் ஒன்றுளதாம்; அதன் உம்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி - அவ்வாயிலின் உச்சியில் ஓவியத்தே வரையப்பட்டதொரு பூங்கொடி போல்வாளாகிய வரையரமடந்தை. உருவங்கொண்டு நுங்கள் முன்தோன்றி; எனக்கு ஈங்கு இறுதி இல் இன்பம் உரைத்தால் - நீவிர் இவ்விடத்தே முடிவில்லாத இன்பமாவது யாது என்பதற்கு விடைகூறின; நீர் பேணிய பொருள் பெறுதிர் போலும் எனும் -நீங்கள் விரும்பிய பொருளை ஒருதலையாகப் பெறுகுவிர் என்று அறிவிப்பாள் என்றான் என்க.

(விளக்கம்) 119. போகு இடைகழியன புதவம் பலவுள என்றமையால் -அப் பிலத்தினூடே செல்லும் நெறியின் இருமருங்கும் நீண்ட இடைகழிகள் பல உள என்பதும் அவை கதவுகளை யுடையனவாயிருக்கும் என்பதும் பெற்றாம். இடைகழி - இடையிலே பிரிந்து செல்லும் வழி. ஒட்டுப்புதவம் - இரட்டைக் கதவுடைய ஒரு வாயில்; ஆகுபெயர் இதனால் எஞ்சிய வாயில்கள் ஒற்றைக் கதவுடையன என்பதும் பெற்றாம். அதன் உம்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி என்றது. அவ் வாயிலின் மேலே ஓவியத்தில் எழுதப்பட்ட பூங்கொடி போல்வாளாகிய ஒருத்தி உருவங்கொண்டு வந்து தோன்றி என்றவாறு. இனி உவமை மாத்திரமாகவே கொண்டு கூறினும் அமையும். இறுதியில் இன்பம் வீட்டின்பம். போலும்; ஒப்பில் போலி. பேணிய பொருள் - விரும்பிய பொருள்.

இதுவுமது

123-127: உரையீராயினும்............... பெயரும்

(இதன் பொருள்) உரையீராயினும் உறுகண் செய்யேன் - அங்ஙனம் கூறியவள் பின்னரும் நும்மை நோக்கி, இதற்கு விடை தெரியாமையாலே நீயிர் விடை கூறீராயினும் யான் நுமக்குச் சிறிதும்துன்பம் செய்கிலேன்; நும் நெடுவழிப்புறத்து நீக்குவல் எனும் நும்மை நீயிர் செல்ல வேண்டிய வழியின் கண்ணே தடையின்றிச் செல்ல விடுவேன் போமின் என்பாள்; உரைத்தார் உளர் எனின் - அவள் வினாவிற்கு விடை கூறியவர் உளராயவிடத்து; உரைத்தமூன்றின்-முற்கூறப்பட்ட புண்ணிய சரவணம் முதலிய மூன்று பொய்கை கட்கியன்ற; கரைப்படுத்து ஆங்குக் காட்டினள் பெயரும் - கரையின் கண் நும்மைக் கொடுபோய் விடுத்து அவற்றை இஃதின்னதெனக் கூறிக்காட்டி மீள்வாள் என்றான் என்க.

(விளக்கம்) 124-127. இஃது, அம் மறையோன் அங்குத் தோன்றும் வரையர மடந்தை நுமக்கு இன்னல் செய்யாள், பின்னும் உதவியே செய்குவள், அவட்கு நீவிர் அஞ்சவேண்டா என்றறிவுறுத்தவாறாம்.

126. மூன்றின் - புண்ணிய சரவண முதலிய மூன்று பொய்கைகளின். 127. கரைப்படுத்தலாவது - கரையிற் கொடுபோய் விடுதல். காட்டினன்: முற்றெச்சம்.

இதுவுமது

128 -132 : அருமறை...........மற்றவை

(இதன் பொருள்) அருமறை மருங்கின் எழுத்தின் ஐந்தினும் எட்டினும் வருமுறை மந்திரம் இரண்டும் - ஓதவும் உணரவும் அரிய வேதவழிப்பட்ட சமய நெறிபற்றி எழுத்தினுள் வைத்து ஐந்தெழுத்தானும் எட்டெழுத்தானும் வருகின்ற முறைமையினையுடைய இரண்டு மந்திரங்களையும்; ஒருமுறையாக உளங்கொண்டு ஓதி - ஒரே தன்மையனவாக நுமது நெஞ்சத்தே நினைந்து அன்புடன் ஓதி; வேண்டியது ஒன்றின் விரும்பினர் ஆடின - நீவிர் விரும்பியதொரு பொய்கைக்கண் ஆர்வமுடையீராய் ஆடுவீராயின்; மற்றவை காண்தகு மரபின அல்ல - அவற்றால் நீயிர் எய்தும் பயன் தவஞ் செய்வோரும் காணத்தகும் முறையினையுடையவல்லவாம் சான்றான் என்க.

(விளக்கம்) ஈண்டு இம் மாமறை முதல்வன் எழுத்து ஐந்தினும் எட்டினும் இயன்ற மந்திரம் என்றவை சைவசமயத்துத் தருவைந் தெழுத்தும், வைணவ சமயத்துத் திருவெட்டெழுத்து மந்திரமும் ஆதல் வேண்டும்; இவ்விரண்டும் வைதிக சமயமேயாதலால் அருமறை மருங்கின்; ஐந்தினும் எட்டினும் இரண்டையும் வேற்றுமை பாராட்டாமற் கூறினன் எனல் வேண்டும்; அல்லது வைணவ சமயத்தார்க்கே ஐந்திலியன்ற மந்திரமுளதாயின் ஆராய்ந்து கொள்க. இனிக் கேட்குநர் சமண்சமயத்தினராதலால் நுங்கள் மந்திரத்தை ஓதி நீராடினும் அமையும் என்னும் கருத்தால் அங்ஙனம் கூறினன் எனக் கோடலுமாம். இங்ஙனம் கொள்வார்க்கு அக்காலத்தே சமயம் பற்றிப் பகைமை இன்மைக்கு இஃதொரு சான்றாதலு முணர்க.

133 - 139: மற்றவை............கேகுமின்

(இதன் பொருள்) மற்று அவை நினையாது - இனி அப் பொய்கைகளில் ஆடுவதனால எய்தும் பேறுகளை நீவிர் கருதாது விடினும்; மலைமிசை நின்றோன் பொன் தாமரைத்தாள் உள்ளம் பொருந்துமின் - அத்திருமலை மீது நின்ற திருக்கோலங் காட்டி நின்ற செங்கணெடியோன் பொற்றாமரைமலரனைய அழகிய திருவடிகளை நுமது நெஞ்சத்தே நினைமின்; உள்ளம் பொருந்துவிராயின் -அங்ஙனம் நினைப்பீராயின் அப்பொழுதே; மற்றவன் புள் அணை நீளகொடி புணர்நிலை தோன்றும் - அவ் விறைவனது கலுழப்புள் எய்திய நெடிய கொடித்தண்டு பொருந்தி நிற்கும் நிலையிடத்தையும் நீவிர் காணப்பெறுகுவிர்; தோன்றிய பின் அவன் துணைமலர்த்தாள் இணை என்று துயர் கெடுக்கும் - அக்கொடி நிற்கும் நிலை நுமக்குக் தோன்றிய பின்னர் அவ்விறைவனுடைய இரண்டு பொற்றாமரைகளை ஒரு சேரக் கண்டாற் போன்ற திருவடிகள்தாம் நும்மை வலிந்தெடுத்துப் போய் நுமது துன்பத்தைப் போக்கிப் பேரின்பம் வழங்கும்; இன்பம் எய்தி - அத்தகைய பேரின்பத்தையும் நுகர்ந்து மகிழ்ந்து பின்னர்; மாண்பு உடை மரபின் மதுரைக் கேகுமின் - அங்கிருந்து எவ்வாற்றானும் மாட்சிமை பொருந்திய மதுரை அணிததே யாகலின் இனிதே செல்லுமின் என்றான் என்க.

(விளக்கம்) 133. மற்றவை என்றது அப் பொய்கைகளில் ஆடுவதனாற் பெறக்கிடந்த நலங்களை. மற்றவை நினையாது என்றது மற்று அவற்றைப் பொருட்டாக நினையாதொழியின் என்பதுபட நின்றது. இனி, அப் பேறுகள்தாமும் உறுதிப் பொருள்கள் அல்லவாதலின் அவற்றை விடுத்தொழியினும் ஒழிகுதிர் இனி யான் கூறுவதனை ஒருதலையாகச் செய்ம்மின் என்பான் அங்ஙனம் கூறினன் எனக் கோடலுமாம்.

133 -135. மலைமிசை நின்றோன் தாள் நினைத்தற்கும் இனியன என்பான் பொற்றாமரைத்தாள் என்றான். நெஞ்சத்தே நன்கு நினைமின் என்பான் உள்ளம் பொருந்துமின் என்றான்.

135 - 138. அவன் அடி உள்ளம் பொருந்துமின் பொருந்துவிராயின் கொடிபுணர்நிலை தோன்றும் என்றது அவன் திருவடிகளை நினைந்தேத்தியவாறே மலைமிசை ஏறுதிராயின் முற்பட அவன் கொடி புணர்நிலை தோன்றும் என்றவாறு. கொடிநிலை தோன்றிய பின்னர் நீயிர் அவன் துணைமலர்த்காளினை வணங்கா தொழிவீரல்லீர் அத்துணைக் கடவுட்பண்புடையது அக் காட்சி என்பதும் பின்னர் அவன் தாளிணையே நும்மை வலிந்தெடுத்துப் போய்த் துன்பம் கெடுக்கும் என்றான். அவ்வழி நீங்கள் மெய்யின்பம் தலைப்படுவீர் இது தேற்றம் என்பதும் தோன்றத் தாளிணைகளை எழுவாயாக்கினன். அவன் தாளிணையை நினைவதே அமையும். அத் துணைக்கே அந் நெடியோன் மகிழ்ந்து நும்மை வலிந்தெடுத்துப் போய்ப் பேரின்பம் வழங்குவன், இஃது அப்பெருமான்றிருவருட் கியல்பு என்பது இங்ஙனம் கூறியதனாற் போந்த பயன் என்க. இப்பேறே பிறவிப் பயன் ஆதலால் இதனைச் செய்யாது செல்லற்க! என்றானுமாயிற்று.

மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின் என்றது, அத் திருமலையினின்றும் மதுரைக் கேகும் நெறி செவ்விய நெறியாகலின் அப்பால் மாண்புறு மரபில் ஏகுதல் கூடும் என்பதுபட நின்றது. என்னை? மதுரைக்கும் திருமால் குன்றத்திற்கும் இடைக்கிடந்த நெறி பெரு நெறிபாகலான் வழிப்போக்குக்கர்க்கு இன்றியமையாத நீரும் நிழலும் இருக்கைகளும் அவ் வழிக்கண் நிரம்ப உண்டென்பதுபட அங்ஙனம் கூறினன் என்று கொள்க. மேலும் அப்பால் மதுரைதானும் அணித்தேயாம் என்பது குறிப்பாகத் தோன்றுமாறு வழித்திறம் சிறிதும் கூறாதொழிந்தனன் என்க.

நடுவட் கிடந்த வழியினியல்பு

140-149: காண்டகு.................போகுவல்யானென

(இதன் பொருள்) காண் தகு பிலத்தின் காட்சி ஈது - மதுரைக்குச் செல்வோர் எல்லாம் காணத்தகுந்ததாகிய பிலக்காட்சி இத்தகைய சிறப்பிற்று ஆகலின் அதனை நுங்கட்குக் கூறினேன்; அவ்வழி ஆங்குப் படரீராயின் -அந்த வலப்பக்கத்து வழிமேல் நீயிர் போக நினைந்திலீராயின்; இடையது செந்நெறி ஆகும்-இனி அம் மூன்றனுள் நடுவட் கிடந்த வழியியல்பு கேண்மின் அதுதான் இயல்பாகவே செவ்விய வழியாகும் கண்டீர்; தேம்பொழில் உடுத்த ஊர் இடையிட்ட இனிய சோலைகளாற் சூழப்பட்ட ஊர்கள் பல இவ் வழியிடையே உள; காடுபல கடந்தால் அவ்வூர்கட்கு இடையிடையே கிடந்த காடுகள் பலவும் இனியனவே இவற்றையெல்லாம் நீயிர் இனிதே கடந்து சென்றக்கால்; ஆர் இடை ஓர் ஆர் அஞர்த் தெய்வம் உண்டு அப்பால் கிடக்கும் அரிய வழியிடத்தே வழிப்போக்கரைத் துன்புறுத்தும் தெய்வம் ஒன்றுண்டு; இடுக்கண் செய்யாது - அத்தெய்வம் வழிப்போவாரைத் துன்புறுத்துங்கால் அச்சுறுத்துதல் முதலியன செய்து துன்புறுத்தாது; (பின்னர் எங்ஙனம் துன்புறுத்துமோவெனின்) இயங்குநர் நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி தாங்கும் - வழிப்போவார்க்கு அச்சம் தோன்றாதபடி அவர் ஆர்வமுறும்படி அவர்முன் உருக்கொண்டு தோன்றி மயக்கி அவர் போககைத் தடுக்கும் அத்துணையே; மதுரைப் பெருவழி மடுத்து உடன் கிடக்கும் அதற்கு மயங்காமல் அப்பாற் செல்லின் அவ்விடத்தே பலவழிகளையும் மதுரைக்குச் செல்லும் பெருவழி தன்பாலேற்றுக்கொண்டு ஒன்றுபட்டுக் கிடக்கும்; நீளநிலம் கடந்த நெடுமுடி அண்ணல் தாள் தொழுத கையேன் யான் போகுவல் என - நெடிய இந்நிலவுலகத்தைத் தன்தொரு திருவடியினாலே அளந்தருளிய நெடிய முடியையுடைய முழுமுதல்வனாகிய இறைவனைத் தொழுத கையையுடைய யான் இன்னும் அவன் சேவடியைத் தொழுதுய்யச் செலகுவேன் என்றான் என்க.

(விளக்கம்) 140. காண் தகு பிலம் - எல்லோரானும் விரும்பிக் காணத்தகுந்த சிறப்புகளையுடைய பிலம் என்க. 141. இடையது - நடுவணவாகிய வழி. 142. செந்நெறி - செவ்விய வழி. ஆரிடை-கடத்தற்கரிய இடைவழி; அஃதாவது காட்டினூடு செல்லும் வழி. 144. அஞர்-துன்பம். 145. நடுக்கம்-அச்சம். 146. இயக்குநர்- வழிப்போக்கர். தாங்கும் - தடுக்கும். 147. மடுத்துடன் கிடத்தலாவது - தன்னுளேற்றுக்கொண்டு அவற்றுடன் ஒன்றாகிக் கிடக்கும் என்க. இதனால் இது பெருவழி எனப்பட்டது. தொழுத+கையேன் என்க கண்ணழித்திடுக. தொழு தகையேன் எனக் கோடலுமாம்; இதற்குத் தொழுகின்ற தன்மையுடையேன் என்க. நீவிரும் போமின் யானும் போகுவல் என்பதுபடக் கூறுதலின் யானும் எனல்வேண்டிய எச்சவும்மை தொக்கதென்க.

அந்தணனுக்குக் கவுந்தியடிகளார் கூறும் கட்டுரை

150 - 162: மாமறை ................. உணர்த்தி

(இதன் பொருள்) மாமறையோன் வாய் வழித்திறம் கேட்ட - இவ்வாறு அந்த முதுமறை யந்தணனுடைய வாய்மொழியாலே மதுரைக்குச் செல்கின்ற வழிகளினியல்பெலாம் கடைபோகக் கேட்டறிந்த; காவுந்தியையை ஓர் கட்டுரை சொல்லும் - கவுந்தியடிகளார் அவன் மிகைபடக் கூறியவற்றிற்கு மறு மொழியாக ஒரு பொருள் பொதிந்த மொழியைக் கூறுவார்; அது வருமாறு: நலம் புரி கொள்கை நான்மறையாள மன்னுயிர்க்கு நன்மை செய்தலையே தமக்குக் கோட்பாடாகவுடைய நான்கு மறைகட்கும் உரிமையுடைய அந்தணனே! பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை -நீதான் பாரித்துக் கூறிய பிலத்தினுட் புகவேண்டும் என்னும் குறிக்கோள் எங்கட்கு இல்லைகாண்! எற்றாலெனின்; கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டியற்கையின் விளங்கக்காணாய் நீடூழி வாழ்தலையுடைய இந்திரன் இயற்றிய அவ்வியாகரணத்தை எம்முடைய இறைவனாகிய அருகன் அருளிய பரமாகமங்களில் விளக்கமாக நீ காண்கிலையோ! அவ்வாகமத்தை யோதுமாற்றால் யாம் அதனைப் பெறுவேமாதலின் நீ கூறிய புண்ணிய சரவணத்தில் யாங்கள் பொருந்துதல்வேண்டா; இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் - முற்பிறப்பின்கண் நீ செய்த வினைகளையெல்லாம்; பிறந்த பிறப்பின் நீ காணாயோ பிறந்த இப்பிறப்பிலே நினக்கு வந்துறுகின்ற நுகர்ச்சிகளின் வாயிலாய் நீ அறியமாட்டாயோ? அறியக்கூடுமாகலான் நின் பவகாரணியிற் படிதலும் வேண்டேம்; வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநாக்கு எய்தா அரும் பொருள் யாவதும் உண்டோ வாய்மை என்னும் அறந்தலை நின்று இவ்வுலகத்தே மன்னிய உயிர்களை ஓம்புகின்ற சான்றாண்மையுடையோர்க்குக் கைவராத அரிய பொருள் யாதொன்றேனும் உண்டோ? இல்லையாகலின் நின் இட்ட சித்தியை எய்துதலும் வேண்டேம்; நீ காமுறு தெய்வம் கண்டு அடிபணியப்போ - இனி நீ பெரிதும் விரும்பிய கடவுளைக் கண்டு அவற்றின் அடிகளிற் பணிதற்குச் செல்வாயாக! யாங்களும் நீள் நெறிப் படர்குதும் இனி யாங்களும் செல்லக்கடவ வழியிலே செல்வேம்காண்! என்று அம் மறையோற்கு இசை மொழி உணர்த்தி என்றிங்ஙனம் அந்த அந்தணனுக்குப் பொருந்து மொழிகளை அருளிச்செய்து; என்க.

(விளக்கம்) 152. நலம்புரி கொள்கை நான்மறையாள, என்றது நின்கொள்கை நன்றே ஆயினும் நீ கூறும் வழிகள்தாம் பேதைமையுடையன என்பதுபட நின்றது. 154. கப்பம் - கறபம் என்னும் வடமொழிச் சிதைவு: ஊழி என்னும் பொருட்டு. கப்பத்திந்திரன் காட்டிய நூலினை எனல் வேண்டியது: ஈற்றின்கண் இரண்டாவது தொக்கது. நீடூழி வாழ்தலையுடைய இந்திரன் என்றவாறு. 155. மெய்ப்பாட்டியறகை - பரமாகமம் (156)

இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப்
பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து
செய்யும் வினையா லறிக இனிப்பிறந்
தெய்தும் வினையின் பயன்  (அறநெறிச்சாரம் -59)

என்னும் கோட்பாடுபற்றி இறந்த பிறப்பின் ........ 156) பிறந்த ...... (158) காணாயோ என்றார். 159. வாய்மை - யாதொன்றும் தீமையிலாத செல்லும் கடைப்பிடி. உயிர் ஓம்புதல் கொல்லாமை என்னும் அறத்தின்மேற்று. இவ்விரண்டையும் கடைப்பிடித் தொழுகுவார் தவஞ் செய்வாரினும் தலை சிறந்தவர் ஆதலின் அவர்க்கு எய்தா அரும் பொருள் இல்லையாயிற்று. இவ்வறங்களின் சிறப்பைத் திருக்குறளிற் காண்க.

வியாகரணம் உணர்தலும் பிறவும், பெறுதற்குரிய நெறிகளும் முயற்சியும் வேறு பிறவாக, இவற்றை நீரின் மூழ்கிப் பெறலாம் என்னும் நின் அறிவுரை அறிவொடு பொருந்தா வுரைகாண்; ஆதலால் நீ நின் வழியே போ! யாங்களும் எம் வழியே போகுவம் என்பது இதன் குறிப்புப் பொருள் என்றுணர்க.

160. காமுறு தெய்வம் என்றது காம வெகுளி மயக்கங்களையுடைய நினது தெய்வத்தை என்னும் பொருளும் தோற்றுவித்து நின் கடவுட் கொள்கைதானும் பெரும் பேதைமைத்தே காண்! என அவன் சமயத்தையும் பழித்தவாறுமாத லுணர்க.

கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி மூவரும் மதுரைக்கு வழிக்கொண்டு செல்லுங்கால் இடையில் கோவலன் நீர்நாடிச் சென்று ஒரு பொய்கையை அடைதல்

164 - 170 : குன்றா...........நிற்ப

(இதன் பொருள்) குன்றாக் கொள்கைக் கோவலன் தன்னுடன் தனது பொருளீட்டல் வேண்டும் என்னும் கொள்கைக்கண் சிறிது ஊக்கம் குறைதலில்லாத கோவலனோடும் (கண்ணகியோடும்) அன்றைய பகல் ஓர் அரும்பதித் தங்கி அற்றை நாள் தாம் தங்குதற்கரியதோர் ஊரின்கண் தங்கியிருந்து; பின்றையும் பெயர்ந்து அவ்வழிச் செல் வழிநாள் - பின்னரும் அவ்வூரினின்றும் புறப்பட்டு அந்த வழியே செல்லாநின்ற மற்றை நாளிலே; (170) நீர்நசை வேட்கையின் - நீரைப் பெரிதும் விரும்பும் வேட்கை காரணமாக; கருந்தடங் கண்ணியும் கவுந்தியடிகளும் வகுந்துசெல்வருத்தத்து வழிமருங்கு இருப்ப-கரிய பெரிய கண்ணையுடைய கண்ணகியும் கவுந்தியடிகளாரும் அவ்வழியின் பக்கத்தே ஒரு நீழலின்கண் வழி நடந்தமையாலே யுண்டான வருத்தஞ் சிறிது தணிதற்பொருட்டு அமர்ந்திருப்பாராகக் கோவலன் தமியனாய்; இடைநெறிக் கிடந்த இயவுகொள் புடை நெறிப் போய் -தாம் வந்த வழியிடையே கிளைத்துக் கிடந்த செலவை மேற்கோடற்குரியதொரு பக்கநெறி மேலே நீர்நிலை நாடிச் சென்றவன்; பொய்கையிற் சென்று மருங்கின்-ஆங்கொரு நீர்நிலையைக் கண்டு அதன் மருங்கு போய்; நெடுந்துறை நிற்ப-அதன் நெடிய துறையிலே நிற்கும் பொழுது; என்க.

(விளக்கம்) 163. குன்றாக் கொள்கை என்றது - மதுரையிற் சென்று வரை பொருளீட்டல் வேண்டும் என்னும் தனது குறிக்கோளை மண்மகளறிந்திலா வண்ணச் சேவடியுடைய மனைவியொடு இத்துணை தூரம் நடந்தும் அவன்றனது கோட்பாட்டிற் குறைந்திலன் என்றார். அங்ஙனம் அவனைச் செலுத்துவது அவன்றன் பழவினை என்பதுணர்த்தற்கு. இங்ஙனம் அன்றிக் குன்றாத வொழுக்கத்தினையுடைய கோவலன் என்ற முன்னையோர் உரை சிறவாமையுணர்க. 164. அரும்பதி என்றது தாம் தங்குதற்கேற்றதாக அரிதிற் கண்டதோர் ஊர் எனினுமாம். 166. வழிநாள் - மறுநாள். 170. நீர்நசை வேட்கையின் எனவரும் ஏதுவை மூவர்க்கும் ஏற்பக் (166) கருந்தடங்கண்ணி என்பதன் முன்னாகக் கூட்டுக. வகுந்து - வழி. இயவு - மாந்தர் இயங்கிய சுவடு. 169. ஒரு பொய்கையைக் கண்டு அதன் நெடுந்துறையிற் சென்று நிற்ப என்க.

வனசாரிணி ஆரிடை,
வயந்தமாலையின் வடிவில் தோன்றுதல்

171-175 : கானுறை .......... உகுத்து

(இதன் பொருள்) கான் உறை தெய்வம்-முன்பு மறையோன் கூறிய அக் காட்டின்கண் வதியும் தெய்வம்; காதலின் சென்று - அவன் பால் எய்திய காமங்காரணமாகச் சென்று; நயந்த காதலின் இவன் நல்குவன் என - இவன்றான் மாதவியைப் பெரிதும் விரும்பிய காதலுடையான் ஆதலின் அவளுடைய தோழியுருவத்தில் இவன்பாற் சென்று மயக்கினால் அத் தொடர்பு பற்றி என்னையும் விரும்பி அளி செய்குவன் என்று கருதி; வயந்தமாலை வடிவில் தோன்றி அவள் தோழியாகிய வயந்தமாலையினது வடிவத்தை மேற்கொண்டு வந்து அவன் முன்தோன்றி; கொடி நடுக்குற்றது போல ஆங்கு அவன் அடிமுதல் வீழ்ந்து பூங்கொடி யொன்று காற்றினாலே நடுங்குதல் போன்று உடல் நடுங்கியவளாய்க் கோவலன் அடிகளிலே வீழ்ந்து, ஆங்கு அருங்கணீர் உகுத்து அங்ஙனமே பொய்க்கண்ணீரைச் சொரிந்து அழுது; என்க.

(விளக்கம்) 171. காதல் - ஈண்டுக் காமம். 172. இவன் பண்டும் பரத்தைமை யொழுக்கமுடையானாகலான் இவன் காதற் பரத்தையின் தோழியாகும் உரிமைபற்றி வயந்தமாலையாய்ச் சென்றால் நம்மையும் நயந்த காதலின் நல்குவன் என்பது அத்தெய்வத்தின் உட்கோள் என்க.

174. வயந்தமாலையே இவள் என்று கோவலன் நம்புதற்பொருட்டு அத்தெய்வம் இனிப் பொய்யாக நடிக்கின்றது என்க. பொய்க்கண்ணீர் என்பது தோன்ற, 175. அருங்கணீர் என்றார்.

கானுறைதெய்வம் மாதவியின் கூற்றாகக் கூறுதலும் பிறவும்

176-187: வாசமாலையின் ........... துறந்தனன்

(இதன் பொருள்) மாதவி என்முன் மயங்கி வான் துயர் உற்று-எம்பெருமானே அடிச்சியேன் நீயிர் எம்பெருமாட்டியினது அணித்தோட்டுத் திருமுகத்தை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தீர். பின்னர் நிகழ்ந்தவை கேட்டருளுதிர்! அடிச்சி வறிதே சென்று அச் செய்தியை அம் மாதவிக்குக் கூறினேனாக அது கேட்டலும் அவள்தான் என்கண்முன்பே அளவிலாத் துன்பத்துளழுந்தி; என்னைச் சினந்து நோக்கி ஏடி வயந்தமாலாய்! வாசமாலையின் எழுதிய மாற்றம் தீதிலேன் - யான் எம் பெருமானுக்கு மணமிக்க மாலையிலே வரைந்து நின் கையிற் கொடுத்த திருமுகத்தின்கண் வரைந்த சொற்களாலே சிறிதும் தவறு செய்திலேன்; பிழை மொழி செப்பினை - நீதான் அவர் முன்னர்த் தவறான மொழி சில கூறினை போலும்; ஆதலின் கோவலன் கொடுமை செய்தனன் - ஆதலாற்றான் அவர் இத்தகைய கொடுமையைச் செய்தொழிந்தார், என்று என்னைக் கடிந்துகூறிப் பின்னரும்; மேலோராயினும் நூலோராயினும் பால்வகை தெரிந்த பகுதியோராயினும் - துறவோரும் கற்றோரும் கல்லாது வைத்தும் இயல்பாகவே நல்லதன் நலனும் தீயதன் தீமையும் பகுத்துணரும் நல்லறிவுபடைத்த சான்றோரும்; பிணி எனக்கொண்டு - இஃது அறியாமையாலே வரும் ஒரு நோயாகும் என்று கருத்தினுட் கொண்டு; பிறக்கிட்டு ஒழியும் - கண்ணெடுத்தும் பாராமற் புறங்கொடுத்துப் போதற்குக் காரணமான; கணிகையர் வாழ்க்கை கடையே போனம் என - யான் வாழுமிந்தக் கணிகையருடைய இல்வாழ்க்கையானது அவர்கள் கருதுமாறு ஒரு கடையாய வாழ்க்கையே போலும் எனத் தனக்குத் தானே கூறிக்கொண்டு; செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் வெள் முத்து உதிர்த்து - தனது செவ்வரிபடர்ந்த வளவிய கடைப்பகுதியையுடைய குளிர்ந்த கண்களினின்றும் வெள்ளிய முத்துக்களை யொத்த கண்ணீர்த்துளிகளை உதிர்த்து; வெள் நிலாத்திகழும் தண்முத்து ஒருகாழ் - வெள்ளிய நிலாவொளியைப் போன்று ஒளி பரப்பித் தன் கழுத்திலே கிடந்து விளங்கா நின்ற குளிர்ந்த முத்துக்களாலியன்ற ஒற்றை வடத்தை; தன்கையால் பரிந்து தன்கையாலேயே அறுத்து வீசியவளாய்; துனியுற்று என்னையும் துறந்தனள் - என்னோடு பிணங்கி ஒருபொழுதும் துறந்தறியாத என்னையும் நீயும் தொலைந்துபோ! என்று கூறி அகற்றி விட்டனள்; என்க.

(விளக்கம்) 176. வாசமாலையின்கண் எழுதிய மாற்றத்தால் யான் தவறிலேன் என்றவாறு. வாசமாலையில் கோவலனுக்குத் திருமுகம் வரைந்தமையை வேனிற் காதையில் (45-67) காண்க. தெய்வமாகலின் அந்நிகழ்ச்சியைத் தெரிந்து கூறுவதாயிற் றென்க. 177. நீ பிழைமொழி செப்பினை என ஒருசொற் பெய்க. மேலோர் என்றது ஈண்டுத் துறவோரை. என்னை? இருமை வகைதெரிந்தீண்டறம் பூண்டார், பெருமை பிறங்கிற் றுலகு (23) எனவரும் திருக்குறளானும் இதற்குப் பரிமேலழகர் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே உலகின்கண் உயர்ந்தது என உரை வகுத்தலானும் உணர்க. 180. பால்-நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஆகிய கூறுபாடுகள். 181. பிறக்கிட்டொழிதலாவது - முகங் கொடாது விரைந்து நீங்குதல். 183. வாழ்க்கை என்றது இகழ்ச்சி. போன்ம்-போலும்: ஈண்டு ஒப்பில் போலி. 187. துனி - பிணக்கு. என்னையும் என்றவும்மை நின்னைத் துறந்ததோடன்றி என்னையும் துறந்தனள் என இறந்தது தழீஇய எச்சவும்மை எனக் கோடலுமாம். துறவா என்னையும் துறந்தனள் என்புழிச் சிறப்பும்மையாம்.

இனி நின்னால் எனக்குக் கேடு வந்துற்றது என்பதுபட இத்தெய்வம் கூறுகின்ற நுணுக்கமும் ஈண்டு நினைக்கற்பாலது. என்னை? அவள்பாற் சீற்றங்கொண்ட கோவலன் அங்ஙனம் அவள் நின்னைத் துறந்தாளாயின் ஆகுக! யானே நின்னைப் புரந்திடுவேன் அஞ்சற்க! என அவனை ஏற்றுக்கோடற்கு இவ்வுபாயம் ஏதுவாகலான் என்க.

இதுவுமது

188 - 191: மதுரை..........யாதென

(இதன் பொருள்) ஆதலின் - என்னிலைமை இங்ஙனமாகிவிட்டமையால்; மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது - பின்னர்க் களை கணாவாரைப் பெறாத அடித்தொழிலாட்டியேன் பெருமானீர் மதுரை மாநகர் நோக்கிப் போந்ததனை; ஆங்கு எனக்கு எதிர் வழிப்பட்டோர் உரைப்ப அப் பூம்புகார் நகரத்தேயே நும்மைத் தேடி வருகின்ற எனக்கு எதிரே வழியில் வந்தவர் கூறக்கேட்டு; சாத்தொடு போந்து வாணிகச் சாத்தோடு கூடி வந்து; தனித்துயர் உழந்தேன்- தனிமையால் யான் பெரிதும் துயர் எய்தி இவ்விடத்தே நும்மைக் கண்டேன்; பாத்து அரும்பண்ப-பகுத்தலரிய பேரருளுடையீர் இஃதென்வரலாறாம்; நின் பணிமொழி யாது என - இனி அடிச்சிக்குப் பெருமான் பணிக்கும் மொழி யாதோ அதன்படியே ஒழுகுவல் என்றுகூற; என்க.

(விளக்கம்) 190. சாத்து - வாணிகக்கூட்டம். அக் கூட்டத்தில் என்னையறிவார் யாருமின்மையாலே தனிமையுற்றுத் துயர் உழந்தேன் எனவும், காதற்றுணையின்றித் தனிமையாலே காமப்பிணி யுழந்தேன் எனவும், இருபொருளுந் தோன்றுதற்குத் தனித்துயர் உழந்தேன் என்னும் நயந்தெரிக. பாத்து - பகுத்தல். 191. பாத்தரும் பண்ப என்றது உயர்ந்தவள் தாழ்ந்தவள் என்று பகுத்தலில்லாத பேரருளாள என்றும் பிறர்க்கில்லாத நற்பண்பாள என்றும் இருபொருள் தோற்றுவித்தலும் இவற்றுள் முன்னது தன்னை அவன்தோழி என இகழ்ந்து கைவிடாமைக்குக் குறிப்பேதுவாதலும் நுண்ணிதின் உணர்க.

கோவலன் மந்திரங் கூறி வஞ்சம் பெயர்த்தல்

192-200: மயக்குந்தெய்வம்............ஏக

(இதன் பொருள்) இவ் வன்காட்டு மயக்குந் தெய்வம் உண்டு என வியத்தகும் மறையோன் விளம்பினன் ஆதலின் அத் தெய்வம் இவ்வாறு நடிக்கக் கண்ட கோவலன், இந்த வலிய காட்டின்கண் நடுக்கஞ்சாலா நயத்திற் றோன்றி நெஞ்சத்தை மயக்குந் தெய்வம் ஒன்று உண்டு என்று முன்னரே வியக்கத்தகுந்த அந்தணன் அறிவுறுத்தனனாதலால்; வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் - அத்தகைய தெய்வங்கள் செய்யும் வஞ்சத்தைத் தீர்த்துத் தெளிவிக்கும் மந்திரத்தாலே; யான் இவ் ஐஞ்சில் ஓதியை அறிகுவன் என - யான் ஐம்பாலாகப் பகுக்கப்படும் சிலவாகிய கூந்தலையுடைய இவளை அவன் கூறிய தெய்வமகளோ? அன்றி வயந்தமாலைதானோ? யார் என்று அறிந்துகொள்ளக் கடவேன் என்று துணிந்து; கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திரம் ஆகலின் - அவன் தனது நாவிலே கூறிய அம் மந்திரத்தானும் பாய்ந்து செல்லும் கலையூர்தியாகிய கொற்றவை மந்திரம் ஆதலானே; யான் வனசாரிணி மயக்கம் செய்தேன் - அத் தெய்வம் அச்சமெய்தி ஐய யான் வயந்தமாலையல்லேன்! இக் காட்டிலே திரிகின்ற ஓரியக்கிகாண்; நின்னைக் காமுற்று அறியாமையாலே நின்னை இவ்வாறு நடித்து மயக்கி யொழிந்தேன், இப் பிழையைப் பொறுத்தருளுதி; புனமயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் என்திறம் உரையாது ஏகு என்று ஏக - காட்டகத்து மயில் போலும் சாயலையுடைய கண்ணகிக்கும் அறத்தலைவியாகிய அக் கவுந்தியடிகளார்க்கும் என்னுடைய இவ்விழிந்த செயலை அறிவியா தொழிக! என்றியம்பி மறைந்தொழியா நிற்ப; என்க.

(விளக்கம்) 194 மறையோனது பரந்துபட்ட அறிவுடைமையைப் பாராட்டுவான் வியத்தகு மறையோன் என்றான். 194. தெய்வ முதலியவற்றால் செய்யப்படும் வஞ்சத்தைப் போக்கி உண்மையுணர்த்தும் மந்திரம் என்பது கருத்து. 195 ஓதியாகிய இவள் மானிட மகளோ அல்லது தெய்வமகளோ என்றெழுகின்ற ஐயங்களைந்து உண்மையை உணர்குவேன் என்றுட்கொண்டவாறு. 197. பாயும் கலையை ஊர்தியாகக் கொண்ட கொற்றவை என்க. கலை-மான். வனசாரிணி - காட்டில் திரிபவள். இவளை இயக்கி என்பர் அடியார்க்கு நல்லார். 199. புனமயிற் சாயல்: அன்மொழித்தொகை கண்ணகிக்கும் என்க. புண்ணிய முதல்வி: கவுந்தி. தவத்தினும் கற்புச் சிறந்ததாகலின் கண்ணகியை முற்கூறினர் என்பர் அடியார்க்குநல்லார். இவ்விருவரும் குணமென்னும் குன்றேறி நின்றவர் ஆகலின் தவறு கண்டுழிச் சபிப்பர் என்றஞ்சி அவர்க்கு என்திறம் உரையாதொழிக என்று வேண்டுகின்றாள் என்க.

கவுந்தியின் கருத்து

201 - 206: தாமரை ............. அழுவத்து

(இதன் பொருள்) ஆங்குத் தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்து அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து - அங்ஙனம் அத் தெய்வம் அகன்றபின்னர் அவ்விடத்தே பொய்கைக்கண்ணுள்ள குளிர்ந்த நீரைத் தாமரையினது பசிய இலையைக் குடையாகக் கோலி முகந்து கொண்டுவந்து நீர்வேட்கையான் வருத்த முற்ற கண்ணகியினது வருத்தத்தைத் தீர்த்தபின்னர்; மீது செல்வெங்கதிர் வெம்மையின் தொடங்க- உச்சிவானத்தே இயங்குகின்ற ஞாயிறு மிகவும் வெப்பஞ் செய்தலைத் தொடங்குதலாலே; தீது இயல் கானம் செலவு அரிது - பாலை என்பதோர் படிவம் கொண்டு தன்னையடைந்தோர் நடுங்குதுயர் உறுத்தும் தீமை நிகழாநின்ற இக் காட்டுவழியில் இனிச் செல்லுதல் அரிதாம் என்றுட் கொண்டு; கோவலன் தன்னொடும் கொடுங்குழை மாதொடும் மாதவத் தாட்டியும் மயங்கு அதர் அழுவத்து அக் கோவலனோடும் வளைந்த மகரக்குழையையுடைய கண்ணகியோடும் பெரிய தவத்தையுடைய கவுந்தியடிகளாரும் மயங்குதற்குக் காரணமான வழிகளையுடைய அந்தப் பாலைப் பரப்பிடத்தே என்க.

(விளக்கம்) 201. பாசடை - பசிய இலை. தாமரையிலையைக் குடையாகக் கோலி அதன்கண் நீர் கொணர்ந்து என்க. நீர் வேட்கையாகலின் அருந்துயர் என்றார். அடிகளார் உற்றநோய் நோற்கும் ஆற்றல் உடையார் ஆகலின் அவர்க்கு நீர் ஊட்டல் வேண்டாவாயிற்று என்க. தீது முற்கூறப்பட்ட துன்பம்; அஃதாவது, (65) நடுங்குதுயருறுத்தல். அழுவம் - பாலைப்பரப்பு.

மூவரும் கொற்றவை கோயில் எய்துதல்

207 - 216 : குரவமும் ....... ஆங்கென்

(இதன் பொருள்) குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் - குராவும் வெண்கடம்பும் கோங்கும் வேங்கையும் ஆகிய மரங்கள் விரவிநிற்கின்ற அழகியதொரு சோலையாலே சூழப்பெற்று; விளங்கிய இருக்கை - விளக்கமுடையதோர் இருப்பிடத்தின்கண்ணே; ஆர் இடை அத்தத்து இயக்குநர் வளம் அல்லது மாரி வளம் பெறா வில் ஏர் உழவர். கடத்தற்கரிய இடத்தையுடைய அப்பாலைப் பரப்பிடைக் கிடக்கும் வழிகளின்கட் செல்லும் வழிப்போக்கர் கொணர்கின்ற பொருளைக் கவர்ந்து கொள்ளும் வளத்தையன்றி மழையினால் உண்டாகும் வளத்தைப் பெறாதவரும்; வில் ஏர் உழவர் - தமது விற்றொழிலையே தமது வாழ்க்கைக்கியன்ற உழவுத் தொழிலாகவுடையவரும் ஆகிய மறவர்; கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி வேற்றுப் புலம் போகி - மறலியை யொத்த ஆற்றலோடே வளைந்த விற்படையைக் கையில் ஏந்தித் தம் பகைவர் முனையிடத்தே புகாநிற்ப; நல் வெற்றங் கொடுத்து - அம் மறவர்க்குச் சிறந்த வெற்றியைக் கொடுத்தருளி; கழிபேராண்மைக் கடன் பார்த்திருக்கும் அதற்குக் கைம்மாறாக அம் மறவர் தனக்குச் செலுத்துதற்குரிய மிகப்பெரிய ஆண்மைத் தன்மைக்கு அடையாளமாகிய அவிப்பலியாகிய கடனை எதிர்பார்த்திருக்கின்ற நுதல் விழி குமரி விண்ணோர் பாவை மையறு சிறப்பின் வான நாடி நெற்றியின்கண் நெருப்புக் கண்ணையுடைய கன்னிகையும் குற்றமற்ற சிறப்பினையுடையவளும் அமரர்கள் கைதொழுதேத்தும் பாவை போல்வாளும் வானவர் நாட்டையுடையவளும் ஆகிய; ஐயைதன் கோட்டம் கொற்றவையினுடைய திருக்கோயிலை; ஆங்கு அடைந்தனர் அப்பொழுதே சென்றடைந்தனர்; என்பதாம்.

(விளக்கம்) பூம்பொழில் இருக்கைக்கண் அமைந்த ஐயைதன் கோட்டம் எனவும், கடன்பார்த்திருக்கும் ஐயைதன் கோட்டம் எனவும், குமரியும் பாவையும் நாடியும் ஆகிய ஐயைதன் கோட்டம் எனவும் தனித்தனி யியையும். 209. இயக்குநர் வளம் அல்லது என வளம் என்பதனை முன்னும் கூட்டுக. அஃதாவது ஆறு செல்வோர் கொணரும் பொருளைக் கவர்ந்துகொள்வதாகிய வளம் என்றவாறு. கழி பேராண்மைக் கடன் என்பது தன்னைத்தான் இடும்பலி. இதனை இந்திரவிழவு....80 அடியினும் அதனுரையினும் காண்க. நுதல்விழி என மாறுக.

பா - நிலைமண்டில ஆசிரியப்பா.

காடுகாண் காதை முற்றிற்று.

 
மேலும் சிலப்பதிகாரம் »
temple news
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்
 
temple news
1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar