Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

12. வேட்டுவ வரி 14. ஊர்காண் காதை
முதல் பக்கம் » சிலப்பதிகாரம்
13. புறஞ்சேரியிறுத்த காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
04:01

அஃதாவது - உறந்தையினின்றும் மாமதுரைக்குச் செல்லும் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளாரும் வெங்கதிர் வெயின் முறுகுதலாலே வழிநடை வருத்தந் தீர ஐயை கோட்டம் புக்கவர் ஆண்டுநிகழ்ந்த வேட்டுவவரிக் கூத்தைக் கண்ணுற்றுப் பாண்டியர் அருளாட்சி நிகழும் அந்த நாட்டிலே இரவினும் வழிப்போக்கர்க்கு ஏதம் சிறிதும் உண்டாகா தென்றறிந்த வாற்றால் படுகதிரமையம் பார்த்திருந்து இரவின்கண் திங்கள் தோன்றிப் பானிலா விரித்த பின்னர் அவ்விரவிலேயே மேலும் மதுரை நோக்கி நடந்து மதுரையின் மதிற் புறத்ததாகிய புறஞ் சேரியை எய்தி ஆண்டுத் தங்கிய செய்தியையும் அங்ஙனம் செல்லும்பொழுதில் இடையே நிகழ்ந்தவற்றையும் இயம்பும் பகுதி என்றவாறு.

பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு
புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக்
கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்
கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா  5

வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே  10

பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும்
நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
இரவிடைக் கழிதற் கேத மில்லெனக்
குரவரும் நேர்ந்த கொள்கையி னமர்ந்து
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்  15

படுங்கதி ரமையம் பார்த்திருந் தோர்க்குப்
பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித்
தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித்
தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும்
சீரிள வனமுலை சேரா தொழியவும்  20

தாதுசேர் கழுநீர்த் தண்பூம் பிணையல்
போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும்
பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி
செந்தளிர் மேனி சேரா தொழியவும்
மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து  25

புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு
பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய
வேனில் திங்களும் வேண்டுதி யென்றே
பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர்
ஆரிடை உழந்த மாதரை நோக்கிக்  30

கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்
இடிதரும் உளியமும் இனையா தேகெனத்
தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி
மறவுரை நீத்த மாசறு கேள்வி
அறவுரை கேட்டாங் காரிடைகழிந்து  35

வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக்
கான வாரணங் கதிர்வர வியம்ப
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து
மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர்  40

தீதுதீர் சிறப்பின் சிறையகத் திருத்தி
இடுமுள் வேலி நீங்கி ஆங்கோர்
நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன்
காதலி தன்னொடு கானகம் போந்ததற்
கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி  45

உட்புலம் புறுதலின் உருவந் திரியக்
கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான்
கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்
அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே  50

வருந்தினை போலுநீ மாதவி யென்றோர்
பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்தி
கோசிக மாணி கூறக் கேட்டே
யாதுநீ கூறிய உரையீ திங்கெனத்
தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக்  55

கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்
இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்
இன்னுயிர் இழந்த யாக்கை யென்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்  60

ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று
கோவலன் தேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும்
பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்  65

பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்
வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப்
பசந்த மேனியள் படர்நோ யுற்று
நெடுநிலை மாடத் திடைநிலத் தாங்கோர்
படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்  70

வீழ்துய ருற்றோள் விழுமங் கேட்டுத்
தாழ்துயர் எய்தித் தான்சென் றிருந்ததும்
இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன்
வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக்
கண்மணி யனையாற்குக் காட்டுக வென்றே  75

மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும்
ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிந்து
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்
வழிமருங் கிருந்து மாசற உரைத்தாங்கு
அழிவுடை உள்ளத் தாரஞ ராட்டி   80

போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை
மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட
உடனுறை காலத் துரைத்தநெய் வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக்
காட்டிய தாதலிற் கைவிட லீயான்   85

ஏட்டகம் விரித் தாங் கெய்திய துணர்வோன்
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ
டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது  90

கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி
என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து
தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி
என்தீ தென்றே எய்திய துணர்ந்தாங்  95

கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல்
பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது
மாசில் குரவர் மலரடி தொழுதேன்
கோசிக மாணி காட்டெனக் கொடுத்து
நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய  100

இடுக்கண் களைதற் கீண்டெனப் போக்கி
மாசில் கற்பின் மனைவியோ டிருந்த
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து   105

செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில்
தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து
ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி
உழைமுதல் கைக்கிளை யிறுவாய்க் கட்டி
வரன்முறை வந்த மூவகைத் தானத்து  110

பாய்கலைப் பாவை பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்
பாடற் பாணி அளைஇ அவரொடு
கூடற் காவதம் கூறுமின் நீரெனக்
காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம்  115

நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை
மான்மதச் சாந்தம் மணங்கமழ் தெய்வத்
தேமென் கொழுஞ்சே றாடி யாங்குத்
தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு
மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப்  120

போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி
அட்டிற் புகையும் அகலங் காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்
மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த
அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்  125

பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர்
விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்
அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும்
கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப்
புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின்  130

பொதியில் தென்றல் போலா தீங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்
நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர்
தனிநீர் கழியினுந் தகைக்குநர் இல்லென
முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு  135

பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலை முரசக் கனைகுரல் ஓதையும்  140

நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்
மாதவ ரோதி மலிந்த ஓதையும்
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாளணி முழவமும்
போரிற் கொண்ட பொருகரி முழக்கமும்  145

வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும்
பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும்
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்
கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல்
ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக்  150

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்
பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து
குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்  155

விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்
குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல்  160

வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்தி
பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி
எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை
கரைநின் றுதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய்
அருவி முல்லை அணிநகை யாட்டி  165

விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல்
உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி  170

தையற் குறுவது தானறிந் தனள்போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
அனநடை மாதரும் ஐயனுந் தொழுது  175

பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண்
மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்
தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தி  180

வானவர் உறையும் மதுரை வலங்கொளத்
தான்நனி பெரிதுந் தகவுடைத் தென்றாங்கு
அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக்
கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துறு துயரம்  185

ஐய மின்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந் தினைந் தேங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப்  190

புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும்
காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும்
வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை
அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்   195
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்.

உரை

1 -4 : பெண்ணணி .......... படிந்தில

(இதன்பொருள்.) பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி முற்கூறிய சாலினிமேற் கொண்ட கொற்றவைக் கோலமும் எயினர்கள் கொற்றவைக்குப் பலி கொடுத்துப் பராவி நிகழ்த்திய வரிக்கூத்துகளும் முடிந்த பின்னர்க் கோவலன் துறவறத் தலைவியாகிய கவுந்தி யடிகளாரின் திருத்தமுடைய திருவடிகளைத் தொழுது நோக்கிக் கூறுபவன்; இக் காரிகை வேனில் கடுங்கதிர் பொறாஅள் - பெரியீர்! இவள்தான் இனி இம்முதுவேனிற் பருவத்தே கடியவாகிய ஞாயிற்றின் ஒளியினது வெம்மையைப் பொறுத்துப் பகற் பொழுதிலே நம்மோடு நடக்க வல்லுநள் அல்லள்; சீறடி பரல் வெங்கானத்துப் படிந்தில - அன்றியும் அவள்தன் சிறிய மெல்லடிகள் தாமும் இது காறும் நடந்தமையாலே கொப்புளங் கொண்டிருத்தலாலே பருக்கைக் கற்களையும் வெப்பத்தையுமுடைய இந்தக் கொடு நெறிக் கண் படிந்தில கண்டீர் என்றான் என்க.

(விளக்கம்) 1. பெண் - சாலினி. அவள் கொண்டகோலம் பெயர்ந்த பிற்பாடு எனவே ஐயை திருமுன் எயினர் பலிக்கொடை செய்தலும் வரிக் கூத்தாடுதலும் வரம்வேண்டலும் ஆகிய நிகழ்ச்சிகள் ஓய்ந்தமையும் அவர் அகன்றமையும் பெற்றாம். புண்ணியம் ஈண்டு எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அருளறமுடைமை. அவ்வறத்தே அடிகளார் தலைசிறந்தமை தோன்றப் புண்ணிய முதல்வி என்றார். திருந்தடி என்றார் நன்னெறியிற் பிறழாதொழுகும் அடிகள் என்பது தோற்றுவித்தற்கு. அவர் அத்தகையராதலை நாடுகாண் காதையில் (86) குறுநரிட்ட .... துன்பந் தாங்கவும் ஒண்ணா என அவர் அறிவுறுத்த மொழிகளானும் அறிந்தாம். அடி பொருந்தி என்றது அவரையணுகித் திருவடியைத் தொழுகு என்பதுபட நின்றது. மேலே நிகழும் கூற்றுகட்கு எழுவாய் கோவலன் என்பது தகுதியாற் பெற்றாம்.

3. இக் காரிகை என்றது இவள் என்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. சீறடி படிந்திலாமைக்குக் காரணம் அவை கொப்புளங் கொண்டுள்ளன என்பது குறிப்புப் பொருள். இனி இவ்வடிகள் பகற்பொழுதிலே நடக்கவல்லுந அல்லது என்பது தோன்றப் பரற் கானம் என்றொழியாது பரல் வெங்கானம் என்றாள். எனவே பரற் கானமாயினும் தண்ணெனும் இரவில் ஒருவாறு அவை நடத்தல் கூடும் என்றானாம்.

பாண்டிய மன்னன் செங்கோன்மைச் சிறப்பு

5 - 10 : கோள்வல் ........... பெரிதே

(இதன்பொருள்.) செங்கோல் தென்னவர் காக்கும் நாடு - செங்கோன்மை பிறழாத பாண்டிய மன்னராற் காக்கப்படுகின்ற இந்த நாட்டின்கண்; கோள்வல் உளியமும் மேலும் எதிர்வாரைக் கைப்பற்றிக் கொள்ளுதலில் பெரிதும் வன்மையுடையவாகிய கரடிகள் தாமும்; கொடும்புற்று அகழா - தாம் அகழக்கடவ கொடிய புற்றினை அகழமாட்டா என்றும்; வாள் வரிவேங்கையும் மான்கணம் மறலா ஒளியுடைய வரிகளையுடைய புலிகள் தாமும் தாம் மாறுபடக் கடவ மானினத்தோடு மாறுபடமாட்டா என்றும்; அரவும் இரைதேர் முதலையும் சூரும் உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா என அவையேயன்றிப் பாம்பும் தமக்குரிய இரையை ஆராய்கின்ற முதலையும் தீண்டி வருத்தும் தெய்வமும் இடிகளுங்கூடத் தம்மை யணுகியவர்க்கு வருத்தம் செய்யுமியல் புடையவாயிருந்தும் சிறிதும் வருத்தம் செய்யமாட்டா என்றும்; எங்கணும் போகிய இசையோ பெரிது - உலகெங்கணும் பரந்த அவர்தம் அருளாட்சித் புகழ்தான் சாலவும் பெரியதன்றோ? என்றான் என்க.

(விளக்கம்) 5. கோள் - கைப்பற்றிக் கொள்ளுதல். உளியம் - கரடி. பாம்புறைவதுண்மையிற் கொடும்புற்றென்றார். 6. வாள்வரி - வாள்போன்ற வரி எனினுமாம். மறலுதல் - மாறுபடுதல், பகைத்தல். சூர் - தீண்டிவருத்துந் தெய்வம். உரும் - இடி. இவற்றிற்குக் காரணம் பாண்டியருடைய செங்கோன்மையே ஆம் என்றவாறு. இங்ஙனம் கூறவே மேலே இரவிடைக் கழிதற்கு ஏதம் இன்று என்றற்கு ஏதுக் கூறினானாயிற்று.

இனி அடிகளார் பின்னர்ப் பாண்டியன் அரசியல் பிழைத்தமைக்கும் கோவலன் கொலையுண்டமைக்கும் காரணம், பிழையும் ஊழுமே அல்லது பிறிதில்லை என்றற்குக் கோவலன் வாய்மொழியையே குறிப்பேதுவாக முன்மொழிந்து கோடல் என்னும் உத்திபற்றிக் காமத்தான் மயங்கிய பாண்டியன்பால் நம்மனோர்க்கு இரக்கமே தோன்றச் செய்யுமொரு சூழ்ச்சியே ஆதலறிக.

இனி, அடியார்க்குநல்லார் இப் பகுதிக்குக் கூறும் விளக்கமும் அறியத்தகும். அது - இவற்றான் இவன் ஆணையும் ஐவகை நிலத்திற்கு உரிமையும் கூறினார். ஐவகை நிலனென்பது எவற்றாற் பெறுதுமெனின்: கானம் என்பதனால் முல்லையும், சூர் கரடி யென்பவற்றால் குறிஞ்சியும், வேங்கை என்பதனாற் பாலையும், உருமு என்பதனால் மருதமும் முதலை என்பதனால் நெய்தலும், பெறுதும்; இவ்வகையான் இவனாட்டு இக்காலத்து வருத்துவது இவ் வெயிலொன்றுமே என்பதாயிற்று எனவரும்.

ஞாயிறு மறைதலும் திங்கள் தோன்றுதலும்

11 - 18 : பகலொளி .......... தோன்றி

(இதன்பொருள்.) பகல் ஒளி தன்னினும் - அடிகளே இவளால் பொறுக்கவொண்ணாத இவ் வேனிற்பருவத்துப் பகற்பொழுதிலே வெயிலிற் செல்லுதலினும் காட்டில்; பல்உயிர் ஓம்பும் நிலவொளி விளக்கின் - தனது தண்ணளியாலே பல்வேறுயிர்களையும் இனிதிற் காத்தருள்கின்ற நிலா வொளியாகிய விளக்கினையுடைய நீளஇடை மருங்கின் இரவிடைக் கழிதற்கு ஏதம் இல் என - நெடிய வழிமேல் இரவின்கண் செல்லுதற்கு வரும் இடுக்கண் யாதும் இல்லையாமே! என்று கூற; குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து - அதுகேட்ட கவுந்தியடிகளாரும் அஃதொக்கும் என உடன்பட்ட கொள்கையோடே பொருந்தி; கொடுங்கோல் வேந்தன குடிகள் போலக் கதிர்படும் அமையம் பார்த்து இருந்தோர்க்கு - கொடுங்கோல் மன்னவனுடைய வீழ்ச்சியை எதிர்பார்த்திருக்கும் அவன் குடிமக்கள் போன்று ஞாயிறு மறைகின்ற அந்தி மாலைப் பொழுதினை எதிர்பார்த்திருந்த இவர்களுக்கு தென்னவன் குல முதல்செல்வன் பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பித் தோன்றி - அப் பாண்டிய மன்னவனுடைய குலத்திற்கு முதல்வனாகிய தண்கதிர்த் திங்கட் செல்வன்றானும் இவர்கள் எதிர்பார்த்தற் கிணங்க ஞாயிறு மறைந்து நாழிகை சில சென்ற பின்னர்ப் பலவகைப்பட்ட விண்மீன் கூட்டங்களாகிய படைகளோடே பால் போன்ற தனது நிலா வொளியாகிய தண்ணளியை உலகெங்கணும் பரப்பித் தோன்றி என்க.

(விளக்கம்) 11 பகலொளி - வெயில்; நிலவொளியாகிய விளக்கினையுடைய நீளிடை மருங்கென்க. ஏதம் - இடுக்கண். குரவர் - கவுந்தியடிகள். கொடுங்கோல் வேந்தனுடைய வீழ்ச்சியையும் செங்கோன் மன்னன் வரவினையும் எதிர்பார்த்திருக்கும் குடிகள்போல என விரித்தோதுக. ஈண்டுக் கொடுங்கோல் மன்னர் கடுங்கதிர் ஞாயிற்றுக்கும் செங்கோன் மன்னன் திங்களுக்கும் குடிகள் கோவலன் முதலியோர்க்கும் உவமைகள். தன் மரபினர் காக்கும் நாட்டில் ஆறு செல்லுமிவர்கனைக் காத்தல் தன் கடனெனக் கருதினான் போன்று அக் குல முதல்வன் வந்து தோன்றினான் என்னும் தற்குறிப்புப் புலப்பட ஆசிரியர் அமையம் பார்த்திருந்தோர்க்கு என அப் பொருள்தரும் நான்கனுருபு பெய்துரைத்தார். அவன்றானும் காத்தற்கு வருதலின் தானையொடும் வந்தான் என்பது கருத்து. தோன்றி - தோன்ற. மீன்றானை என்பது தென்னவன் என்பதற் கிணங்கக் கயற்கொடி யுயர்த்திய தானை எனவும் ஒரு பொருள் தோற்றுவித்தது. மதுரை எரியுண்டமை அட்டமி எனப்படுதலின் ஞாயிறு மறைந்த பின்னரும் திங்கள் சில நாழிகை கழிப்பித் தோன்றலின் எதிர்பார்த்திருத்தல் வேண்டிற்றென்க.

நிலமகள் அயாவுயிர்த் தடங்குதல்

19 - 29 : தாரகை ................ அடங்கியபின்னர்

(இதன்பொருள்.) (29) பார்மகள் - திங்களின் வருகை கண்டு மகிழ்ந்த கண்ணகிக்கு நிலமகள் தானும் இரங்கி, (27) பாவை - பாவை போல்வாளே! நின்கணவன் நின்னைப்பிரிந்த காலந்தொட்டு இற்றைநாள் காறும்; தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும் சீர் இளமுலை சேரா தொழியவும் - விண்மீனைக் கோத்தாற் போன்ற ஒளிமிக்க முத்துவடமும் சந்தனக் குழம்பும் பேரழகும் இளமையுமுடைய நின்முலைகளைச் சேராவாய் ஒழியவும்; தாதுசேர் கழு நீர்த் தண்பூம் பிணையல் போதுசேர் பூங்குழல் பொருந்தா தொழியவும் - பல்வகைப் பூந்தாதும் கழுநீர்ப்பிணையலும் நினது முல்லை மலர் மட்டும் பற்றறாத அழகிய கூந்தலின் கண் பொருந்தாவா யொழியவும்; பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறு முறி செந்தளிர் மேனி சேரா தொழியவும் - அழகிய பசிய சந்தனத் தளிரோடே பல்வேறு பூக்களின் குறிய இதழ்களும் நினது சிவந்த மாந்தளிர் போலும் திருமேனியைச் சேரப் பெறாவாயொழியவும்; மல்பத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவில் பொருந்திய தென்றலோடு - பொதியத்துத் தோன்றி மதுரை நகரின்கண் வளர்ந்து நல்லிசைப் புலவர்தம் நாவின்கட் பொருந்திய தென்றற் காற்றுடன்; (பால் நிலா வெண் கதிர்சொரிய - இத்தகைய பால்போலும் வெள்ளிய நிலாவொளி நின்மேற் சொரிதலை நீ வெறுத்திருந்தனையல்லையோ?) இப்பொழுது அந்நிலைமை மாறி; வேனில் திங்களும் வேண்டுதி என்றே - இவ்வேனிற் காலத்து இந்தத் திங்கள் ஒளியை நீ விரும்புகின்றனை அல்லையோ! ஆயின் விரும்பி மகிழக்கடவை என்று மனமார வாழ்த்தியவளாய்; அயாவுயிர்த்து அடங்கிய பின்னர் - அவள் பொருட்டு வருந்தி நெட்டுயிர்ப்புக் கொண்டு அந்நிலமகள் தானும் துயின்றபின்னர் என்க.

(விளக்கம்) ஈண்டுத் திங்கள் தோன்றிய பின்னர் மன்னுயிர் எல்லாம் உறங்கியதனை நிலமகள் உறங்கியதாகக் கூறுகின்றனர். அங்ஙனம் கூறுபவர் புகாரினின்றும் புறப்பட்ட பின்னரும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் புணர்ச்சியின்மையை ஈண்டு நிலமகளின் கூற்றாக நம்மனோர்க் குணர்த்துகின்ற நயம் நினைந்து நினைந்து மகிழற் பாலதாம். இதனாற் போந்தய பயன் கண்ணகியின் குறிக்கோள் இன்ப நுகர்வன்று; அறம் ஒன்றே என்றுணர்த்துவதாம். இவ் வழிச்செலவினூடே கண்ணகி கோவலர்க்குப் புணர்ச்சி நிகழாமைக்கு அதுபற்றி யாண்டும் ஒரு சிறு குறிப்பேனும் காணப்படாமையே சான்றாம் என்க.

கோவலன் முதலிய மூவரும் இரவிடை மதுரை நோக்கிச் செல்லுதல்

30 - 35 : ஆரிடை ......... கழிந்து

(இதன்பொருள்.) ஆர் இடை உழந்த மாதரை நோக்கி - எதிர் பார்த்த வண்ணம் திங்களஞ் செல்வன் தோன்றிப் பால்நிலா விரிக்கக் கண்ட கோவலன், அதுகாறும் கடத்தற்கரிய வழியைப் பெரிதும் வருந்திக் கடந்த தன் காதலியாகிய கண்ணகியை நோக்கி, நங்காய்! இப்பொழுது யாம் செல்லும் வழியிடையே இஃதிரவுப் பொழுதாகலான்; கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் உளியமும் இடிதரும் - புலி உறுமும் கூகை குழறும் கரடியும் இடிக்கும்; இனையாது ஏகு என - இவற்றைக் கேட்புழித்துண்ணென அஞ்சி நடுங்காதே என் பின்னரே வருதி என்றறிவுறுத்து; தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி அவன் துயின் மயக்கமும் தளர்நடையும் தவிர்த்தற் பொருட்டு வளைந்த வளையலையுடைய அவள் தன் சிவந்த கைக்குப் பற்றுக் கோடாகத் தன் தோளைக் கொடுத்துப் பரிவுடன் அழைத்துப் போம்பொழுது; மறவுரை நீத்த மாசு அறு கேள்வி அறவுரை கேட்டு ஆங்கு ஆரிடை கழிந்து - இவர்க்கு வழிநடை வருத்தந் தோன்றாமைக்கும் அறந்தலைப்படுதற் பொருட்டும் இன்னாச் சொல்லைத் துவர நீத்த மனமாசு அறுதற்குக் காரணமான நூற்கேள்வியையுடைய கவுந்தியடிகளார் திருவாய் மலர்ந்தருளுகின்ற அறவுரைகளை வழிநெடுகக் கேட்டவண்ணமே சிறிதும் வருத்தமின்றித் கடத்தற்கரிய வழியை எளிதாகவே கடந்துபோய்; என்க.

(விளக்கம்) கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் உளியம் இடிக்கும் என்பன மரபு என்பது இதனாற் பெற்றாம். கொடுவரி - புலி. குடிஞை - கூகை: பேராந்தை. உளியம் - கரடி. இனையாது - வருந்தாமல். செங்கைக்குப் பற்றுக்கோடாகத் தோளைக் கொடுத்து என்க. மறவுரை - இன்னாச்சொல். மறவுரை நீத்தெனவே அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்னும் நான்கனையும் நீத்து என்றவாறாயிற்று. என்னை?

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்  - குறள் - 35.

என்பவாகலின் என்க மாசற்ற கேள்வி எனவும் மாசு அறுதற்குக் காரணமான கேள்வி எனவும் இருபொருளும் கொள்க. கேட்டாங்கு - கேட்டவாறே. மாசறு கேள்வி: அன்மொழித்தொகை. கேள்வியை யுடைய கவுந்தி என்க.

இதுவுமது

36 - 41 : வேனல் ......... சிறையகத்திருத்தி

(இதன்பொருள்.) வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக் கான வாரணம் கதிர் வரவு இயம்ப - முதுவேனிற் பருவம் நெடிது நிலை பெற்றிருந்தமையாலே வெந்துகரிந்து கிடக்கின்ற மூங்கிற் காட்டிலே உறையும் காட்டுக் கோழிச் சேவல்கள் கூவிக் கதிரவன் வருகையை அறிவிக்குந்துணையும் நடந்து சென்று; மறைநூல் வழுக்கத்து வரி நவில கொள்கைப் புரிநூல் மரர்பர் உறைபதிச் சேர்ந்து - அவ்விடத் தெதிர்ப்பட்டதொரு மறையோதாது இழுக்கினமையாலே தமக்குரிய அறுதொழிற்குமுரியராகாமல் வரிப்பாடல் முதலிய இசைத்தொழிலைப் பயின்று அதனால் வாழ்க்கை பேணுபவராகிய விரிநூல் கிடந்த மார்பினையுடைய பார்ப்பனர் உறைகின்ற ஊரையடைந்து; மாதவத்தாட்டியொடு காதலி தன்னை ஓர் தீது தீர் சிறப்பின் சிறை அகத்து இருத்தி - அந்த வைகறைப் பொழுதிலே கவுந்தியடிகளுடனே கண்ணகியையும் அவ்வூரினகத்தே குற்றமற்ற சிறப்பினையுடைய அடைப்பகத்தே அமர்ந்திருக்கச் செய்து என்க.

(விளக்கம்) 26. முதுவேனிலாதலின் வேனல் வீற்றிருந்த கானம் என்றார். வேயும் கரியுமளவு வேனல் வீற்றிருந்த கானம் என்பது கருத்து ஈண்டு வேயும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. கானவாரணம் - காட்டுக் கோழியிற் சேவல். கதிர் வரவியம்ப எனவே அற்றை இரவெல்லாம் வழி நடந்தமை பெற்றாம். கோழி கூவுந்துணையும் நடந்து ஆங்கு வழியிடையே ஓர் ஊரினைக் கண்டு அவ்வூரில் நாற்புறமும் சிக்கென அடைக்கப்பட்டிருந்த இருத்தற் கியன்ற ஓரிடத்தே இருத்தி என்றவாறு.

இனி அவ்வூர்தானும் பார்ப்பனர் உறையும் ஊர் என்றது இனி மதுரையும் அணித்தேயாம் என்பது தோற்றுவித்தது. இனி அப் பார்ப்பனர் தாமும் வேளாப்பார்ப்பனர் என்பார் மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் என்றார். வரி - இசைப்பாட்டு. வரிநவில் கொள்கைப் புரிநூல் மார்பர் என்றது மறையோதுதலில் இழுக்கியவிடத்தும் இசைத்தமிழ் பயின்று அதனாலே வாழும் கோட்பாடுடையர் என்றவாறு. இனி, இத்தகைய பார்ப்பனரை வேளாப்பார்ப்பனர் என்றும் கூறுப. இவர் சங்கரியும் தொழில் செய்வர் என்பது வேளாப்பார்ப்பான் வாளரம் துமித்த எனவரும் சான்றாற் பெறப்படுதலின் அரிநவில் புரிநூன் மார்பர் எனக்கொண்டு சங்கரிதற்றொழில் செய்யும் கோட்பாடுடைய பார்ப்பனர் எனினுமாம்.

அடியார்க்கு நல்லார் ஈண்டு புக்கென்னாது சேர்ந்தென்றதனால் அந்தப் பார்ப்பார் இழுக்கிய ஒழுக்கமுடைமை தமது சாவக நோன்பிற் கேலாமையின் ஊர்க்கு அயலதொரு நகரிற் கோயிற் பக்கத்தில் சேர்ந்தார் என்க என்றோதுவர்.

கோவலன் கோசிகமாணியைக் காண்டல்

42 - 47 : இடுமுள் ......... தெரியான்

(இதன்பொருள்.) இடுமுள் வேலி நீங்கி ஆங்கு ஓர் நெடுநெறி மருங்கின் நீர் தலைப்படுவோன் - பின்னர்க் கோவலன் இட்டுக் கட்டிய முள்வேலியைக் கடந்துபோய் அவ் விடத்தயலே கிடந்த நெடியதொரு வழிமேற் சென்று அவ் வழியின் பக்கலிலே நீர்நிலை ஒன்றனைக் கண்டு காலைக்கடன் கழித்தற் பொருட்டு அந் நீர் நிலையை அணுகுபவன்; காதலி தன்னொடும் கானகம் போந்ததற்கு - தனதருமைக் காதலியோடு இவ்வாறு காட்டகத்தே புகுந்ததனை நினைந்து வருந்தி; ஊது உலைக்குருகின் உயிர்த்தனன் கலங்கி உள் புலம்பு உறுதலின் உருவந் திரிய - கொல்லுலையில் ஊதும் துருத்திபோல நெட்டுயிர்ப் பெறிந்து உள்ளங் கலங்கித் தனிமையுற்று உருவமும் மாறுபட்டிருத்தலாலே; கவுசிகன் கட்புல மயக்கத்து - அவனைத் தேடியலைந்து அவ்விடத்தே கண்ட கவுசிகன் என்பான் தனது கட்புலம் மயக்கத்தான் இவன் கோவலனோ அல்லனோ என்றையமுற்று என்க.

(விளக்கம்) 42. இடுமுள் வேலி என்றது - கண்ணகியையும் அடிகளாரையும் இருத்திய சிறையகத்து வேலி; இடுமுள் வேலி என்பதற்கு அடியார்க்கு நல்லார் அவ் வேலியில் இடுமுள் ஒன்றைப் பிரித்து என்பது மிகை; அதனைப் பிரித்துப் போவானேன் புக்கவழியே புறப்படலாம் ஆகலின் அவ்வுரை பொருந்தாது. இடுமுள்ளையுடைய அவ் வேலியகத்தினின்றும் நீங்கி எனலே அமையும் என்க. கோவலன் உருவந்திரிந்திருத்தலான் கவுசிகன் கட்புலம் மயங்கிற்று என்க. தெரியான் என்றது நன்கு அறியாமல் ஐயுற்றவனாய் என்பதுபட நின்றது.

ஐயந்தெளிதற்குக் கவுசிகன் செய்த உபாயம்

48 - 53 : கோவலன் .......... கூறக்கேட்டே

(இதன்பொருள்.) ஓர் பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்தி - கோவலன் உருவந்திரிந் திருத்தலானும் தான் சிறிது சேய்மைக் கண் நின்று காண்டலானும் கட்புல மயங்கி ஐயுற்ற அக் கவுசிகன் அவ்வையந் தீர்ந்து தெளிதற்பொருட்டு அயலிருந்த பசிய இலைகளையுடைய குருக்கத்தி படர்ந்த ஒரு பந்தரின்கீழ்ச் சென்று அக் குறுக்கத்தியை நோக்கி ஓ! குருக்கத்தியே நீ தானும்; கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய மாமலர் நெடுங்கண் மாதவி போன்று - தன் காதலனாகிய கோவலன் றன்னோடு பிணங்கிக் கைவிட்டுப் பிரிந்துபோனமையாலே ஆற்றாமையால் கொடிய துன்பத்திற்காளாகிய கரிய நெய்தல் மலர்போன்ற நெடிய கண்ணையுடைய மாதவி போலவே; இவ் அருந்திறல் வேனிற்கு அலர்களைந்து உடனே வருந்தினை போலும் - பொறுத்தற்கரிய வெம்மையையுடைய இம் முதுவேனிற் பருவத்து வெயிற் காற்றாது வாடி நின்னை மலர்களாலே அழகு செய்தலையும் விடுத்து அவளோடு ஒருசேர வருத்தமுற்றனை போலும்; நீ மாதவி - அஃதொக்கும் நீ தானும் மாதவிஎன்னும் பெயருடையை அல்லையோ! என்று கூறக் கேட்டே என்று கூற அக் கூற்றைக் கேட்ட கோவலன் என்க.

(விளக்கம்) அருந்திறல் வேனில் என்பதனை மாதவிக்குங் கூட்டி அரிய திறலையுடைய வேனில் வேந்தனுக்குடைந்து எனவும் அலர்களைந்து என்பதனையும் கூட்டி அதற்கு, பிறர் கூறும் அலர்மொழியைப் பொருட்டாகக் கொள்ளாமல் விடுத்து எனவும் பொருள் கூறிக் கொள்க. நீ மாதவி என்றது நீதானும் மாதவியல்லையோ? என்பது பட நின்றது. உடனே அம் மாதவியுடனே. கோசிகமாணி கவுசிகன் என்னும் பிரமசாரி. கூற அதனைக் கோவலன் கேட்டு என்க.

கோவலன் கோசிகனை வினவுதலும் அவன் விடை கூறலும்

54 - 62 : யாதுநீ ................ பெயர்ந்ததும்

(இதன்பொருள்.) நீ இங்கு கூறிய உரை யீது யாது என - அக் கோசிகனை நோக்கி நீ இவ்விடத்தே கூறிய கூற்றிதன் பொருள்தான் என்னையோ? என்று வினவ; கோசிகமாணி - அதுகேட்ட அக் கோசிகன்றானும்; கண்டேன தீது இலன் எனச் சென்றெய்தி - அங்ஙனம் வினவிய குரலாலே இவன் கோவலனே என்று தெளிந்து கண்டேன் ! கண்டேன் ! இனி யான் குறையேதுமிலேன் என்று மகிழ்ந்து விரைந்து சென்று கோவலனை அணுகி; கொள்கையின் உரைப்போன் தான் வந்த காரியத்தினைக் குறிக்கொண்டு அதற்கேற்பக் கூறுபவன்; இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணி இழந்த நாகம் போன்றதும் -கோவலன் தந்தையாகிய மாசாத்துவானும் பெரிய மனைக்கிழத்தியாகிய தாயும் அவன் பிரிவாற்றாது இழத்தற்கரிய தனது மணியை இழந்த நாகப்பாம்பு போல அழகும் ஒளியும் இழந்து ஒடுங்கியதும்; துன்னிய சுற்றம் இன் உயிர் இழந்த யாக்கை என்னத் துயர்க்கடல் வீழ்ந்ததும் - நெருங்கிய சுற்றத்தாரெல்லாம் இனிய உயிரை இழந்துவிட்ட யாக்கைபோலச் செயலறவு கொண்டு துன்பமாகிய கடலிலே வீழ்ந்து கிடப்பதும்; ஏவலாளர் யாங்கணும் சென்று கோவலன் கொணர்க எனப் பெயர்ந்ததும் - மாசாத்துவான் தன் பணியாளர் எல்லாம் நாற்றிசையினும் சென்று தேடிக் கோவலனைக் கண்டு அழைத்து வருவாராக என்று கூற அவ் வேவலாளர் அங்ஙனமே தேடிச் சென்றதும்; என்க.

(விளக்கம்) 54. உரை யிதன் பொருள் யாது என இயைக்க. இது: பகுதிப் பொருளது; ஈதென நீண்டு நின்றது. தீது - குறை. இனி யான் தேடிய கோவலன் தீதிலாதிருக்கின்றான் என்று மகிழ்ந்து எனலுமாம். தீது - என்றது. ஐயம் என்பாருமுளர். 56. கொள்கை - கோவலனை மீட்டுக் கொடு போகவேண்டும் என்னும் கோட்பாடு. அதற்கேற்ப உரைப்பவன் என்றவாறு. இருநிதிக் கிழவன் - மாசாத்துவான். பெருமனைக் கிழத்தி என்றது கோவலன் தாயை 58. அருமணியிழந்த நாகம் பெரிதும் அலமரலெய்தும் என்பதனை .......... கருமணிப் பாவை யன்னான் கரந்துழிக் காண்டல் செல்லாள்...... அருமணி யிழந்தோர் நாக மலமருகின்ற தொத்தாள் எனவும், (சீவகசிந் - 1508) நன்மணி இழந்த நாகம் போன்றவள் தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப எனவும் (மணிமே 7: 131-2) பிறசான்றோர் ஓதுமாற்றானும் உணர்க. 59 - 60 இன்னுயிர் இழந்த யாக்கை என்னச் செயலறவு கொண்டு துயர்க்கடல் வீழ்ந்தனர் என்க 61 - 2: மாசாத்துவான் தேடிக் கொணர்கென என எழுவாய் பெய்துரைக்க.

இதுவுமது

63 - 66 : பெருமகன் .............. பேதுற்றதும்

(இதன்பொருள்.) பெருமகன் ஏவலல்லது யாங்கணும் அரசே தஞ்சம் என்று அருங்கான் அடைந்த - இருமுது குரவருள்ளும் பெருங் குரவனாகிய தந்தை ஏவிய பணிவிடையைச் செய்தலே உறுதிப் பொருளாம் அவன் ஏவப் பெறாதவழி யாண்டும் அரசாட்சி செய்தலும் சிறுமைத்து என்று துணிந்துமனைக்கிழத்தியோடும் இளையவனோடும் செல்லுதற்கரிய காட்டகத்தே சென்ற; அருந்திறல் பிரிந்த அயோத்திபோல - இராமனைப் பிரியலுற்ற அயோத்தி நகரத்து மாந்தர் போன்று; பெரும் பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும் பெரிய புகழையுடைய பழைய ஊராகிய பூம்புகாரில் வாழும் மாந்தரெல்லாம் பெரிதும் அறிவு மயங்கிய செய்தியும்; என்க.

(விளக்கம்) பெருமகன் - தயரதன். யாங்கணும் என்றது காலத்தின்மேற்று. பெருமகன் ஏவலல்லது அரசாட்சியும் எளிது. எனவே பெருமகன் ஏவியது எத்துணைச் சிறு தொழிலாயினும் உறுதிப்பொருள் என்பது கருத்தாயிற்று. தஞ்சம் - எண்மை; ஈண்டுச் சிறுமை மேற்று. அயோத்தி, மூதூர் இரண்டும் அவற்றுள் வாழும் மாந்தர்க்கு ஆகுபெயர். அருந்திறல்: அன்மொழித் தொகை; இராமன் என்க. பேதுறவு - அறிவு திரிதல்; மயக்கம்.

இதுவுமது

67 - 76 : வசந்தமாலை ............. ஈத்ததும்

(இதன்பொருள்.) வசந்தமாலை வாய் கேட்டு - மணித்தோட்டுத் திருமுகத்தை ஏலாது கோவலன் மறுத்துக் கூறிய மாற்றங்களை வசந்தமாலையிடத்தே கேட்டு; மாதவி பசந்த மேனியள் படர் நோய் உற்று நெடுநிலை மாடத்து இடைநிலத்து - மாதவியானவள் பசலைபாய்ந்த மேனியையுடையளாய்ப் பலப்பல நினைந்து ஆற்றாமையாற் பெரிதும் துன்பமெய்தி உயர்ந்த தனது எழுநிலை மாடத்தின் இடைநிலை மாடத்தின்கண்ணே; ஆங்குஓர் படை அமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும் - கிடந்ததொரு படுக்கை அமைந்த கட்டிலிலே கையறவுகொண்டு வீழ்ந்த செய்தியும்; வீழ் துயர் உற்றோர் விழுமம் கேட்டு தாழ்துயர் எய்தித் தான் சென்றிருந்ததும் - அவ்வாறு காமநோய் உற்ற அம்மாதவியின் துன்பநிலையைக் கேள்வியுற்று ஆழ்ந்த துயரமெய்திய அவளைத் தேற்றக் கருதித் தான் (கோசிகன்) அம் மாதவி மனைக்கட் சென்று அவள் மருங்கிருந்த செய்தியும்; இருந்துயர் உற்றோள் மாதவி - மாபெருந் துன்பமுற்றவளாகிய அம் மாதவி தன்னை நோக்கி அந்தணீர் அடியேன்; இணை அடி தொழுதேன் - நும்முடைய இரண்டு அடிகளையும் தொழுகின்றேன்; வருந்துயர் நீக்கு என அடிச்சிக்கு வந்த இத்துன்பத்தை நீக்கியருள்க என்று வேண்டி; மலர்க்கையின் எழுதி - தனது செந்தாமரை மலர் போன்ற கையாலேயே ஒரு திருமுகம் எழுதி; கண்மணி அனையாற்குக் காட்டுக என்றே இத் திருமுகத்தை என் கண்ணிற் கருமணி போல்வானாகிய அக் கோவலனுக்குக் காட்டுக! என்று கூறி; மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் - மண்ணிலச்சினை யுடைய அந்தத் திருமுகத்தைத் தன் கையிலே தந்த செய்தியும் என்க.

(விளக்கம்) 67. வசந்தமாலை வாய்க் கேட்டு என்றது பண்டு கோவலன் ஊடிச் சென்ற அற்றை நாளிலே மாதவி தாழந்தோட்டில் எழுதிக் கோவலனுக்கு விடுத்த திருமுகத்தை அவன் மறுத்துக் கூறிய செய்திகளை அது கொடு சென்ற வசந்தமாலை வறிதே மீண்டுவந்து கூறிய செய்தியை அவளிடம் கேட்டு என்றவாறு. 68. படர் நோய் - பல்வேறு நினைவுகளால் மிகுகின்ற காமநோய். 70. படை - படுக்கை. பள்ளி இடம். 72. வீழ்துயர் - விருப்பங் காரணமாக வந்த துன்பம். காமநோய். விழுமம் - இடும்பை. 73. தாழ்துயர் - ஆழ்ந்த துன்பம். இணையடி தொழுதேன் வருந்துயர் நீக்கு என்றது கோசிகன் மாதவி கூறியதனை அங்ஙனமே கூறியபடியாம். 75. கண்மணியனையான் என மாதவி கோவலனைக் குறித்தபடியாம். 76. மண் - மண்ணிலச்சினை. முடங்கல் - ஓலை. திருமுகம் என்பதுமது.

77 - 82 : ஈத்த வோலை ................ நீட்ட

(இதன்பொருள்.) தீத்திறம் புரிந்தோன் - வேள்வித் தொழிலை விரும்பிய அக் கோசிகன் மாதவி கொடுத்த அம் முடங்கலைக் கைக்கொண்டு கோவலனைத் தேடி இடைநெறிகள் பலவற்றினும் திரிந்து காணப்பெறாமல்; சென்ற தேயமும் - தான் பின்னுந் தேடிச் சென்ற இடங்களும்; வழிமருங்கிருந்து மாசு அற உரைத்து ஆங்கு - தான் அக் கோவலனைக் கண்ட அவ் வழியின் பக்கலிலே அவனோடிருந்து குற்றந்தீரக் கூறிய பின்னர்; அழிவுடை உள்ளத்து ஆரஞராட்டி போது அவிழ் புரிகுழல் பூங்கொடி நங்கை மாதவி ஓலை மலர்க்கையின் நீட்ட - பிரிவாற்றாமையால் அழிதலைத் தருகின்ற நெஞ்சத்தையும் அந் நெஞ்சகம் நிறைந்த காம நோயையும் உடையாளாகிய நாளரும்புகள் இதழ்விரிகின்ற கை செய்த கூந்தலையுமுடைய அந்த மாதவி தந்த முடங்கலைக் கோவலனுடைய மலர்போன்ற கையிலே கொடாநிற்ப; என்க.

(விளக்கம்) 78. தீத்திறம் புரிந்தோன் என்பது. தன்மையிற் படர்க்கை வந்த வழுவமைதி என்பாருமுளர். இவர் இஃது ஆசிரியர் கூற்றாய் வழாஅநிலையே ஆதலறிந்திலர் என்க. தேயம் - இடம். வழி என்றது ஆங்கோர் நெடுநெறு மருங்கின் நீர்தலைப்படுவோன் (42-3) என்ற நெடுநெறியை கோவலன் மாதவியின்பாற் கற்பனையாலே ஏற்றியிருந்த மாசு இம் மறையோன் கூற்றாலே தீர்ந்ததனைக் கருதி ஆசிரியர் மாசற வுரைத்து என்றனர். ஈதுணராது மாசு அற என்பதற்கு ஒழிவற என்பாருமுளர். கோவலனை மீட்டுக் கொடுபோதல் அவன் குறிக்கோளாகலின் அதற்கியைய மாசற வுரைத்தனன் என்பதே கருத்தென்க.

மாதவி முடங்கல் மாண்பு

83 - 93 : உடனுறை .............. உணர்ந்து

(இதன்பொருள்.) உடன் உறை காலத்து உரைத்த நெய்வாசம் - தான் அம் மாதவியோடு கூடியிருந்த பொழுது அவள் தன் கூந்தலிலே நீவியிருந்த நெய்யினது நறுமணத்தின் தன்மையை; குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக் காட்டியது ஆதலின் - அவ்வோலைச் சுருளினது முகப்பின்மேல் அம் மாதவி தனது குறிய நெறிப்பினையுடைய கூந்தலால் ஒற்றப்பட்டிருந்த மண்ணிலச்சினை தனக்கு நன்குணர்த்திக் காட்டியதாதலின்; கைவிடலீயான் - அவ்விலச்சினையைத் தன் கையாலகற்றிவிட மனம் வாராதவனாய்ச் சிறிது பொழுது அதனை நுகர்ந்திருந்து பின்னர்; ஏட்டு அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் - அவ் வோலையினுள பொதிந்த அவள் கருத்தைக் காணும் வேணவா மீக்கூர்தலாலே அவ்வோலையினது இலச்சினையகற்றி அதன் சுருணிமிர்த்தி அதன் அகந்தோன்ற விரித்து ஆங்கு அமைந்த அவள் கருத்தை ஓதி அறிபவன்; அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் - அடிகளார் திருமுன்னர்த் தங்கள் அடிச்சியாகிய யான் வீழ்ந்து வணங்கிக் கூறுகின்ற வடியாக் கிள விமனக் கொளல் வேண்டும் - தேர்ந்து தெளிந்து எழுதப்படாத அடிச்சியின் புன்மொழிகளைத் திருவுளம் பற்றியருளல் வேண்டும்! குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவு இடைக் கழிதற்கு பிழைப்பு என் - தமக்குத் தலைசிறந்த கடமையாகிய தம்முடைய இருமுது குரவர் ஏவிய பணி செய்தலைக் கைவிட்டதல்லாமலும் ஏசாச் சிறப்பின் இசை விளங்கும் உயர்குடிப் பண்புகளை ஆளுமியல்புடைய மனைவியாரோடு பதி யெழுவறியாப் பெருமையுடைய நம் பூம்புகாரினின்றும் அடிகளார் யாருமறியாவண்ணம் இரவிலே புறப்பட்டுப் போதற்கு நிகழ்ந்த தவறு யாதோ? அறியாது நெஞ்சம் கையறும் - அஃதறியாமையாலே அடிச்சியின் நெஞ்சம் அத்தவறு நம்முடையதாகவு மிருக்குமோ? பிறருடையதோ என்றையுற்று ஒன்றிற் றுணிவு பிறவாமையாலே செயலற்றுக் கிடக்கின்றது; ஒரோவழி அடிச்சியின் பிழையாயிருப்பினும் மகளிர் சொல் குற்றமற்றாத சொல்லென்றுட் கொண்டு அதனைப் பொருளாகக் கொள்ளாமல்; கடியல் வேண்டும் - விட வேண்டும்; பொய் தீர் காட்சிப் புரையோய் - மயக்கந் தீர்ந்த நற்காட்சியையுடைய மேன்மையுடையீர், போற்றி - நும் புகழ்க்குக் குறைவாராமற் போற்றுக; என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து - என்று அம் மாதவி அம் முடங்கலின்கண் வரைந்துள்ள பாசுரத்தின் பொருளை நன்குணர்ந்து; என்க.

(விளக்கம்) உரைத்த - நீவிய. நெய் - புழுகு நெய். குறுநெறி - அணுக்கமான நெறிப்பு, கூந்தலாலே மண்மேலொற்றிய இலச்சினை என்க கூந்தலாலே ஒற்றப்பட்டமையின் கூந்தலில் நீவிய புழுகு நெய்மணம் அவ் விலச்சினையிற் கமழ அதனை நுகர்ந்தவன் கையால் அவ் விலச்சினை அகற்றிவிடானாய் என்க. கைவிடலீயான்: ஒருசொல். கை விடான் என்னும் பொருட்டு. இச் செயல் கோவலன் அவள்பாற் கொண்டிருந்த அன்பிற்கோர் அறிகுறியாம் இங்ஙனம் கூறவே கோவலன் அவளைக் கைவிட்டமைக்குக் காரணம் ஊழேயன்றிப் பிறிதில்லை என்றுணர்த்தியவாறாயிற்று. கையால் இலச்சினை அகற்றிவிடானாய்ப் பின்னர் ஏட்டகம் விரித்து எனவே சிறிது பொழுது அங்ஙனம் ஏக்கற்றிருந்து பின்னர் அவ்வோலைதரும் செய்தியை உணர விரும்பி அதனை விரித்தான் என்பது பெற்றாம்.

86. ஆல்கு எய்தியது - அம்முடங்கலிலமைந்த செய்தி.

88 - 89. அடிகள் .......... மனக்கொளல் வேண்டும் என்னும் இரண்டடியும் அவ்வோலையின் முகப்பாசுரம் எனவும் ஏனைய அதன் உள்ளுறைப் பாசுரமுமாம் எனவும் கொள்க. அக்காரிகைப் பாசுரம் என்பர் அடியார்க்குநல்லார். மேலும் இருவர் இருமுது குரவரும் ஏவலாளர் மேவல கூறின் இறந்துபடுவர் என்பதூஉம் தேசுடைக் குலத்திற்கு மாசுவரும் என்பதூஉம்; தானிறந்துபடிற் சிறிது புகழே குறைபடுமென்பதூஉம் உணர்த்தியவா றாயிற்று என்றும் விளக்குவர்.

இங்ஙனம் இரவிடைக்கழிதற்கு அடிச்சியேன் பிழை செய்திருப்பினும் அடிச்சியை ஒறுப்பதன்றி அதன் பொருட்டு நீயிர் நுமது குரவரைப் பேணாது ஒழிதலும் குலப்பிறப்பாட்டியொடு போதலும் இரவிடைக் கழிதலும் நுங்குலத்திற்கு மாசு சேர்ப்பதாகாவோ? அங்ஙனம் மாசுபடாது போற்றுக என்று வேண்டினாளுமாயிற்று; இவ் வேண்டுகோள் மாதவியின் மாண்பைப் பலபடியானும் உயர்த்துதலறிக.

கோவலன் கோசிகனுக்குக் கூறுதல்

94 - 101 : தண்றீதிலள் ........... போக்கி

(இதன்பொருள்.) தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி - அதுகாறும் வல்வினை மயக்கத்தாலே மனமயக்குற்று அவளை வெறுத்திருந்த கோவலன் அவள் திருமுகப் பாசுரத்தாலே அவளது தூய்மையுணர்ந்து அவள் தன் தவறு சிறிதும் இலள் எனத் தெளிந்து அவள் தன்னை வஞ்சித்தனள் என்று கருதி அதுகாறும் தான் எய்திய மனத்தளர்ச்சி நீங்கப் பெற்றவனாய்; எய்தியது - இங்ஙனம் நிகழ்ந்ததற்கெல்லாம் காரணம்; என் தீது என்றே உணர்ந்து - யான் செய்த தீவினையே என்று தெளிந்து மீண்டும் அதனைக் கூர்ந்து ஓதியவன்; ஆங்கு எற்பயந்தோற்கு இம்மண் உடை முடங்கல் பொற்பு உடைத்தாகப் பொருந்தியது - மண் இலச்சினை தகர்க்கப்பட்ட இம்முடங்கல் தானே! புகார் நகரத்தே என்பொருட்டு வருந்தியிருக்கின்ற என் தந்தைக்கு யான் எழுதிய முடங்கலாதற்குப் பெரிதும் பொலிவுடையதாகப் பொருந்தி யுளது என்பதும் கண்டு; கோசிகமாணி - கோசிக்! ஈதொன்று கேள்; நீ கொடுத்த இம்மாதவி யோலைதானே யான் என் தந்தைக்கு எழுதும் ஓலையாதற்கு மிகவும் பொருந்தியிருந்தலாலே, நீ இதனைக் கொடுபோய்; மாசில் குரவர் மலரடி தொழுதேன் - குற்றமற்ற என் இருமுது குரவர்களின் மலரடி களை யான் தொழுதேன் என்று கூறி; காட்டு எனக் கொடுத்து - என் தந்தைக்கு காட்டுவாயாக என்றுகூறி அவ் வோலையை அவன் கையிற் கொடுத்து; அவர் நடுக்கம் களைந்து நல் அகம் பொருந்திய இடுக்கண் களைதற்கு - எம்மிரு குரவர் எய்திய நடுக்கத்தைத் தீர்த்துப் பின்னரும் அவர்தம் நன்னர் நெஞ்சத்தே பொருந்திய துன்பத்தை நினது ஆறுதன் மொழிகளாலே தீர்த்தற்பொருட்டு; ஈண்டு எனப் போக்கி - நீ இப்பொழுதே பூம்புகார்க்கு விரைந்து போதி என்று கூறி அவனைக் போக்கிய பின்னர்; என்க.

(விளக்கம்) 14. தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி என்றமையால் மாசிலா மனத்தினளாகிய மாதவிக்கும் இவள் பிறிதொன்றன் மேல் மனம் வைத்தனள் மாயப் பொய்பல கூட்டும் மாயத்தாள் என அடாப்பழி யேற்றிப் பிரிந்தநாள் தொட்டு இற்றைநாள் காறும் அவள் புன்மையை நினைந்து நினைந்து மனந்தளர்ந்திருந்தனன் என்பதும் பெற்றாம். அவள் மாசுடையாள் அல்லள் என்பது அவள் மலர்க்கையாலெழுதிய இவ் வோலைப் பாசுரம் நன்குணர்த்தி விட்டமையாலே அவன் மனத்தை அழுத்திய அத் துன்பப் பொறை அந்நொடியிலேயே அகன்றொழிதலாலே அவன் அயாவுயிர்த்தனன் என்றுணர்ந்தாம். நல்லோர் என நம்பி உயிருறக்கேண்மை கொண்டவர்பால் வஞ்சம் காணின் அக்காட்சியே நெடுங்காலம் உண்ணின்றுழப்பதாம். இம் மன வியல்பு பற்றி அடிகளார் ஈண்டு மிகவும் நுண்ணிதாகக் கோவலன் நெஞ்சத்துத் தளர்ச்சி நீங்கிற்றென்றோதியது பெரிதும் இன்பம் நல்குவதாம். பொய் தீர்காட்சி உடைமையின் இஃது என் தீவினை என்றுணர்ந்தனன் என்க.

இனி, மாதவி ஓலைப்பாசுரமே கோவலன் தந்தைக்கு எழுதும் பாசுரமாகச் சொல்லனும் பொருளானும் மிகவும் பொருந்தியிருத்தல் ஆராய்ந்துணர்ந்து மகிழ்க.

கோவலன் கண்ணகியும் கவுந்தியுமிருந்த இடத்தை யடைதல்

102 - 103 : மாசில் ................ அணைந்து

(இதன்பொருள்.) மாசு இல் கற்பின் மனைவியோடு இருந்த - குற்றமற்ற கற்பொழுக்கத்தையுடைய தன் மனைவியாகிய கண்ணகியோடு அமர்ந்திருந்த; ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து - குற்றமற்ற கோட்பாட்டையுடைய துறவற முதல்வியாகிய கவுந்தியடிகளார்பாற் சென்றெய்தி; என்க.

(விளக்கம்) மாசு இல் கற்பு என்புழி மாசு - பிறர் நெஞ்சுபுகுதல். ஆசு - குற்றம். அறவி - அறத்தை மேற்கொண்டவள்; கவுந்தி.

கோவலன் பாணரொடுகூடி இசைநலங் கூட்டுண்ணல்

103 - 113 : ஆங்கு ............ அவரொடு

(இதன்பொருள்.) ஆங்கு - கண்ணகியும் அடிகளாரும் அமர்ந்திருந்த இடத்தயலே; ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரில் - வெற்றியே தனக்கிலக்கணமாகக் கொண்ட கோட்பாட்டையுடைய கொற்றவையின் போர்க்கோலத்தை வண்ணித்துத் தமிழிசை பாடுகின்ற பாணர்களோடே; பாங்கு உறச் சேர்ந்து தானுமொருவனாகக் கேண்மையோடே கலந்து; செந்திறம் புரிந்த செங்கோட்டு யாழின் ஈரேழ் கோவையாகச் செவ்விதமாக நரம்பணியப்பட்ட சிவந்த கோட்டினையுடைய அவர் தம் யாழ்க்கருவியிடத்தே; தந்திரி கரத்தொடு திவை உறுத்து யாத்து - தந்திரிகரம் என்னும் உறுப்பினோடே திவவுகளையும் நிலையினெகிழாமல் உறுதியுறக் கட்டி; ஒற்று உறுப்ப உடைமையின் - அவ்வியாழ்தானும் ஒற்றுறுப்புடைத்தாதலாலே; பற்று வழி சேர்த்தி அதனைப் பற்றிற்கு இசை கூட்டி; உழை முதல் கைக்கிளை இறுவாய் - உழை என்னும் இசை குரலாகவும் கைக்கிளை என்னும் இசை தாரமாகவும் பண்ணி; வரல் முறை வந்த மூவகைத் தானத்து - நூல்களின் வரலாற்று முறையாலே வலிவும் மெலிவும் சமனும் ஆகிய மூன்று வகைப்பட்ட தானத்தாலும்; பாய்கலைப் பாவைப் பரணி - பாய்ந்து செல்லும் கலைமானூர்தியையுடைய கொற்றவையைப் பாடுதற்கியன்ற தேவபாணியாகிய இசையை; ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டு பாலையாழ் என்னும் பெரும்பண்ணின் திறப்பண்களுள் ஒன்றாகிய ஆசான் திறம் என்னும் பண்ணோடு இயைத்துப் பொருந்துதலுண்டாகச் செவியால் அளந்துணர்ந்து பின்னர்; பாடல் பாணி அளைஇ - அப் பண்ணோடு அத் தேவபாணியை யாழிலிட்டுப் பாடி மகிழ்ந்த பின்னர்; என்க.

(விளக்கம்) 104. ஆடு -வெற்றி. இறைவியின் உருவத் திருமேனிகளுள் கொற்றவையுருவம் வெற்றியின் அறிகுறியாதலின் அவ் வெற்றியே அவட்கிலக்கணம் என்பார் ஆடு இயல் கொள்கை அந்தரி என்றார். கொற்றவை கோலம் எனவே போர்க்கோலம் என்பது பெற்றாம். 105. பாங்குறச் சேர்ந்து என்றது அவர்களுடன் வேற்றுமை யின்றிக் கலந்து என்றவாறு. எனவே கோவலனுடைய எளிமை என்னும் உயர் பண்பு புலனாயிற்று. 106. செந்திறம் புரிதலாவது - ஈரேழ் கோவையாகச் செப்பஞ் செய்தல். அஃது அரங்கேற்றுக் காதையில் விளக்கினாம். தந்திரிகரம் என்பது - நரம்பு துவக்குவதற்குத் தகைப்பொழிய இருசாண் நால்விரல் நீளமாகக் குறுக்கிடத்துச் சேர்த்தமைப்போர் உறுப்பு. அஃதாவது - திவவு அமைத்திற்கு உட்குடைந்த யாழ்த் தண்டினைப் போர்த்தமைக்குமொரு பலகை என்க. திவவு - நரம்புகளை அழுத்தி இசையை வலிதாக்கும் கோல் (மெட்டு), திவவு என்பது நரம்புகளை வலிபெறக் கட்டும் என்பது அடியார்க்குநல்லார் உரை. ஈண்டு நரம்புகள் வலிபெறக் கட்டும் என்பது பிறழவுணர்ந்து நரம்புகளை என இரண்டாவதன் உருபுடையதாக எழுதப்பட்டிருத்தல் வேண்டும். ஈண்டு நரம்பு - இசை: ஆகுபெயர். இசை வன்மை யுடையதாதற்கு நரம்புகள் திவவுகளில் அழுத்தப்படுமாதலின் நரம்புகள் (இசைகள்) வலிபெறற் பொருட்டுக் கட்டும் வார்க்கட்டு என்பதே உரையாசிரியரின் கருத்தாகும். திவவுகள் பண்டைக் காலத்தே வார்களாலேயே அமைக்கப்பட்டன. இக்காலத்தே வெண்கலக் கோல்களால் அமைக்கப்படுகின்றன. மெட்டுக்கள் என்று கூறப்படுகின்றன. திவவுகள் மெட்டுக்களே என்பதனை,

அங்கோட்டுச் செறிந்த அவீழ்ந்துவீங்கு திவவின் எனவும் (சிறுபாணா 222) நெடும்பணைத் திரள்தோள் மடந்தைமுன் கைக்குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவு (பெரும்பாண் 12 -13) எனவும் வரும் சங்கச் செய்யுட் பகுதிகளும் அவற்றின் பழைய வுரைகளும் (திவவு என்பன - மெட்டுக்களே என்பதனையே) வலியுறுத்தும் இஃதுணராதார் திவவு என்னும் இவ்வுறுப்பினியல்புணரால் தத்தமக்குத் தோன்றியவாறே கூறுவாராயினர். அவருரை யெல்லாம் போலி யென்றொழிக. 108. ஒற்றுறுப்பு - தாளத்திற்கென அமைத்த வோருறுப்பு: நரம்பு. பற்று - சுதி. செங்கோட்டியாழ் அறுவகை உறுப்புடைத் தென்ப. இதனை,

செங்கோட் டியாழே செவ்விதிற் றெரியின்
அறுவகை யுறுப்பிற் றாகு மென்ப

எனவும்,

அவைதாம் - கோடே திவவே யொற்றே.....
தந்திரி கரமே நரம்போ டாறே

எனவும் வருவனவற்றாலறிக.

இவ் வியாழின்கண் ஒற்றைத் தோற்றுவித்தற்கென மூன்று நரம்புகள் பண்மொழி நரம்புகளினும் வேறாக அமைந்திருப்பன. ஆதலின் இவற்றை விரலாற் றெரிந்து ஒற்றைப் பிறப்பிக்குங் காலத்தே இவற்றில் எழுமொழி பண்மொழி நரம்பிற் கூட்டியுள்ள பற்றிசையோடு இயையுமாறு இவற்றையும் இசை கூட்டுவதனையே ஒற்றுறுப்புடைமையின் பற்றுவழிச் சேர்த்தி என்றார். இந்நரம்புகள் இக்காலத்தே பக்கசாரணி என்று வழங்கப்படுகின்றன. இவையிற்றை பத்தரினின்றும் தாங்கும் ஓருறுப்பே எனப்படுகிறது. இதனை இக்காலத்தே வளைவு ரேக்கு என்பர்.

உழை முதல் கைக்கிளை யிறுவாய் கட்டி எனவே, இதன்கட் பிறப்பது செம்பாலைப் பண் என்பது உழைமுதல் வம்புறு மரபில் செம்பாலையாயது எனவரும் அரங்கேற்று காதையாற் பெற்றாம். மேலும் பாலை யாழ் (பண்) செம்பாலையுட் பிறக்கும் என்பதையும் வேனிற் காதையுள் அடியார்க்குநல்லார் உரையிற் கண்டாம். இஃதுணராது அரும்பாலை என்னும் இசையைப் பிறப்பித் தென்பார் உரை போலி என்க. உழை குரலாக அரும்பாலை பிறப்பது இளிமுதலாக உழையீறாகக் கட்டிய வழியேயாம் என்பதனையும் அவர் கருதாராயினர். 111. பாய்கலைப் பாவைப் பாடற்பாணி என்றது பாலைநிலத் தெய்வமாகிய கொற்றவையைப் புகழ்ந்து பாடும் தேவபாணியைப் பாடி என்றவாறாம். மற்று அதுதானும் பெரும்பண்ணாகிய பாலைப்பண்ணாற் பாடாது, அதன் திறம் ஐந்தனுள் ஒன்றாகிய, ஆசான் திறத்தாற் பாடி அதனை அமைவரக் கேட்டு என்க. பாலைப்பண்ணின் திறங்கள் ஐந்தாம்; அவையாவன: அராகம் நோதிறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான் என்பன. இவற்றை-

அராகம் நோதிறம் உறுப்புக் குறுங்கலி
ஆசான் ஐந்தும் பாலையாழ்த் திறனே

எனவரும் பிங்கலந்தையா லறிக. இவ்வைந்தும் தனித்தனியே அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என நந்நான்காக விரியும். எனவே ஈண்டு ஆசான் திறத்தினது வழிபட்ட நான்கு பண்களையும் (இராகங்களையும்) யாழில் இயக்கிக் கேட்டனன் என்பார் ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டு என்றார். இப் பண்களை இயக்கி இவற்றில் பாய்கலைப்பாவைப் பாணியை மிடற்றாற் பாடி அப் பண்களோடு விரவி மகிழ்ந்து என்பாற் பாற் பாணி பாடி என்னாது அளைஇ என்றார். அளை இப் பாடிப் பின்னர் என்க. சிலசொற் பெய்து கொள்க. ஆசான் திறத்தின் சாதிப் பண்கள் அகச்சாதி காந்தாரம் புறச்சாதி சிகண்டி அருகு சாதி தசாக்கரி பெருகுசாதி சுத்தகாந்தாரம் என்பர் அடியார்க்கு நல்லார்.

கோவலன் பாணரை வினவுதலும் அவர் விடையும்

114 - 121 : கூடற்காவதம் .............. பொருந்தி

(இதன்பொருள்.) நீர் கூடல் காவதம் கூறுமின் என - இங்ஙனம் இனிதின் யாழிற் பாடி மகிழ்ந்த கோவலன் அப் பாணர்களை நோக்கி, பாண்மக்களே நீங்கள் இவ்விடத்தினின்றும் கூடல் நகரத்திற்கு எத்துணைக் காவதம்? அதனைக் கூறுமின என்று வினவ; ஆங்குக் காழ் அகில் சாந்தம் கமழ் பூங்குங்குமம் நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை - அதுகேட்ட பாணர் ஐய! அம் மதுரையின்கண்ணுள்ள வயிரமேறிய அகிற்சாந்தும் நறுமணங்கமழும் குங்குமப் பூங்குழம்பும் புழுகுக் குழம்பும் மணத்தால் நலங்கொண்ட சந்தனச் சாந்தும்; மான்மதச் சாந்தும் தெய்வத் தேம் மெல் கொழுஞ் சேறு ஆடி - கத்தூரிச் சாந்துமாகிய இவையிற்றின் தெய்வமணம் கமழுகின்ற மெல்லிய வளவிய இனிய சேற்றில் அளைந்து; தாது சேர் கழுநீர் சண்பகக் கோதையொடு மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப் போதுவிரி தொடையல் பூ அணை பொருந்தி - பூந்துகள் கெழுமிய கழுநீர் மலரும் சண்பக மலரும் என்னும் இவற்றாலியன்ற மாலைகளோடு குருக்கத்தி மலரும் மல்லிகை மலரும் மனைக்கண் வளர்க்கப்பட்ட வளவிய முல்லையினது நாளரும்புகள் விரியாநின்ற மலர்களாற் றொடுக்கப்பட்ட செவ்வி மாலைகளும் உடைய மலர் அணைகளிலே தவழ்ந்து என்க.

(விளக்கம்) 117. கூடல் - மதுரை. 115. காழ்-வயிரம். குங்குமக் குழம்பும் என்க. 116. நாவி-புழுகு. தேய்வை - சந்தனம். 117. மான்மதம் - கத்தூரி 118. தேம் இனிமை. சேறாடி - சேற்றில் அளைந்து.

இதுவுமது

122 - 126 : அட்டில் புகையும் .......... அளைஇ

(இதன்பொருள்.) அட்டில் புகையும் - அடுக்களையி லெழுகின்ற தாளிப்பு மணங்கமழ்கின்ற புகையும்; அகல் அங்காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் - அகன்ற அங்காடித் தெருவின்கண் ஒருபொழுதும் முட்டுப்பாடின்றி அப்பவாணிகர் சுடுகின்ற அப்ப வகைகளின் மணங்கமழ்கின்ற புகையும்; மாடத்து மைந்தரும் மகளிரும் எடுத்த அம் தீம் புகையும் - மேனிலை மாடத்தே கொழுங்குடிச் செல்வர் மக்களாகிய ஆடவரும் மகளிரும் தத்தம் ஆடைகட்கும் கூந்தற்கும் ஊட்டுகின்ற அழகிய இனிய மணப்புகையும்; ஆகுதிப் புகையும் - அந்தணர் வேள்விக் களத்தில் அவிசொரிந்து வளர்க்கின்ற தீயினின்றெழுகின்ற நறுமணப் புகையும்; பல்வேறு பூம்புகை அளைஇ - ஆகிய இன்னோரன்ன பலவேறு வகைப்பட்ட பொலிவினையுடைய புகைகளையும் அளாவிக் கொண்டு; என்க.

(விளக்கம்) 122. அட்டில் - மடைப்பள்ளி. அட்டிலிலெழும் பல்வேறு தாளிப்பு மணங்கமழும் புகை என்க. முட்டா - முட்டுப்பாட்டில்லாத; இடையறவில்லாத உணவுப் பண்டமாகலின் முட்டுப்பாடின்மை கூறினார். 124. மாடத் தெடுத்த அந்தீம் புகை எனலால் - கொழுங்குடிச் செல்வர் மைந்தரும் என்பது பெற்றாம். அம்மைந்தரும் மகளிரும் தத்தம் ஆடைக்கும் கூந்தற்கும் ஊட்டும் அழகிய நறுமணப்புகை என்க. ஆகுதிப் புகை - வேள்வியி லெழும் புகை.

இதுவுமது

126 - 134 : வெல்போர் ....... இல்லென

(இதன்பொருள்.) வெல் போர் விளங்குபூண் மார்பின் - வெல்லும் போராற்றலையும் இந்திரனாற் பூட்டப்பெற்றுப் புகழானும் ஒளியானும் விளங்குகின்ற ஆரத்தையும் உடைய; பாண்டியன் கோயிலின் - பாண்டிய மன்னனுடைய அரண்மனையின்கண்; அளந்து உணர்வு அறியா எத்தகைய வித்தகரானும் அளவிடப்பட்டு உணர்ந்தறியப் படாதனவாய்; ஆர் உயிர்ப்பிணிக்கும் கலவைக் கூட்டம் - நுகர்ந்தார் தம் பிணித்தற்கரிய வுயிரையும் பிணிக்கும் சிறப்புடைய கலவைக் கூட்டத்தின் நறு மணமனைத்தையும் தன் மெய்யெலாம் பூசிக்கொண்டு; காண் வர - சேய்மையிடத்தேமாகிய யாமும் நுகர்ந்தறியும்படி; தோன்றி - புலப்பட்டு; புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் பொதியில் தென்றல் போலாது - சங்கப்புலவாது செவ்விய நாவாற் புகழ்தற் கமைந்த சிறப்புடைமையாலே பொதியிலினின்றும் வருகின்ற தென்றலைப் போலன்றி; ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் - இங்கே அதனினும் சிறந்த மதுரைத் தென்றல் வந்து தவழ்தலை அறிந்திலிரோ? அவன் திருமலி முதூர் - அப்பாண்டியனுடைய செல்வமிக்க பழைய மதுரைமா நகரம்; நனி சேய்த்து அன்று - மிகவும் தொலைவின்கண்ணதன்று; அணித்தே தனிநீர் செல்லினும் தகைக்குநர் இல்என - தனித்த நீர்மையினராய்ச் சென்றாலும் அச் செலவினைத் தடை செய்வார் யாருமிலர் என்றுகூற; என்க.

(விளக்கம்) 126 - 7. வெல்போர்ப் பாண்டியன், விளங்கு பூண் பாண்டியன் எனத் தனித்தனி இயையும். விளங்குபூண் என்ற இந்திரன் பூட்டிய ஆரத்தை. 128. ஒருகால் நுகருமாயின் பின்னை வீட்டுலகம் கருதித் துறவிற் செல்லவொட்டாது மனத்தைப் பிணித்துக் கொள்ளும் கோயிற் கலவை என்க என்பர் அடியார்க்குநல்லார். கலவை - கலவை மணம். 129. காண்வர என்றது மெய்ப்பொறியானும் மூக்குப் பொறியானும் காண்டலுண்டாக என்றவாறு. காண்டல் - அறிதன்மேற்று. 120. புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பு என்புழி, நிவப்பு சிறப்பின் மேனின்றது. இவற்றைப் பொதியிலுக்கே அடையாக்கலுமாம். பொதியிற் றென்றற்கு இங்ஙனம் பல்வேறு கலவை மணமின்மையின் மதுரைத்தென்றல் அதனினும் சிறப்புடைத்தாயிற்று என்பார் பொதியிற் றென்றல் போலாது மதுரைத் தென்றல் வந்தது என்றார். காணீர் என்பது வினா ஓகாரந் தொக்கது. தென்றலின்கண் மதுரை மணங்கமழ்தலால் இது கேட்கவேண்டா! அந்த மணமே அம் மூதூர் அணித்தென்பதறிந்திலீரோ என்பது கருத்து. இனி ஆறின்னாமை யாதும் இல்லை என்பார். தனிநீர் செல்லினும் தகைக்குநர் இல் என்றார். தனிநீர் - தனித்த நீர்மை.

கோவலன் முதலிய மூவரும் அவ்விடத்தினின்றும் மதுரைக்குப் போதல்

125 - 150 : முன்னாள் ............ எதிர்கொள

(இதன்பொருள்.) முன் நாள் முறைமையின் - அற்றைப் பகற்பொழுதெல்லாம் அப்புரிநூன் மார்பர் உறைபதியிலேயே இருந்து இளைப்பாறி முதல்நாளில் புறப்பட்டாற் போன்றே ஞாயிறு மறைந்து திங்களஞ் செல்வன் பால் நிலாப் பரப்பிய பின்னர்; பின்னையும் - மீண்டும்; இருந்தவ முதல்வியொடு - பெரிய தவத்தலைவியாகிய கவுந்தியடிகளாரோடும் கோவலனும் கண்ணகியும்; அல் இடைப் பெயர்ந்தனர் - குளிர்ந்த இரவுப் பொழுதிலே அவ்வூரினின்றும் புறப்பட்டனராக; பெயர்ந்த ஆங்கு - அங்ஙனம் புறப்பட்டுப் போம்பொழுது அவ்வழி யிடத்தேயே; அருந் தெறல் கடவுள் அகல் பெருங்கோயிலும் பெரும் பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும் அரிய அழித்தற்றொழிலையுடைய இறைவன் எழுந்தருளிய அகன்ற பெரிய திருக் கோயிலினும் பெரிய புகழையுடைய பாண்டிய மன்னனுடைய பெரிய புகழையுடைய அரண்மனையினும்; பால் கெழு சிறப்பின் பல் இயல் சிறந்த காலை முரசக் கனைகுரல் ஓதையும் -பல்வேறு பகுதிப்பட்ட சிறப்பினையுடைய இன்னிசைக் கருவிகளின் இசையோடு கூடிச் சிறப்புற்ற காலை முரசினது மிக்க ஒலியாகிய முழக்கமும்; நால் மறை அந்தணர் நவின்ற ஓதையும் - நான்கு மறைகளையும் அந்தணர்கள் ஓதுவதனாலே எழுந்த ஒலியும்; மாலவர் ஓதி மலிந்த ஓதையும் - பெரிய தவத்தினையுடையோர் கடவுள் வாழ்த்துப் பாடுவதனாலே எழுந்த மிக்க ஒலியும்; வாளோர் மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு எடுத்த நாள் அணி முழவமும் - வாட்படை மறவர் பாண்டியனுடைய பிறக்கிடாத வெற்றிச் சிறப்பையுடைய வாழ்த்துப் பாடலோடு தொடங்கிய நாளணிமங்கல முழவினது இன்னிசையும்; போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் - அம்மறவர் பகைவரைப் போரில் வென்று கைப்பற்றிக் கொணர்ந்த போர் யானைகளின் பிளிற்றொலியும்; வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும் - அம் மறவர் தாமே காட்டிற் பிடித்துக் கொணர்ந்த போர் யானைகளின் பிளிற்றொலியும்; பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும் பந்திகள் தோறும் கட்டப்பட்ட போர்ப் புரவிகள் செருக்கினாலே கனைக்கின்ற பேரொலியும்; கிணை நிலைப் பொருநர் வைகறைப் பாணியும் - அரண்மனை வாயிலிடத்தே தடாரிப்பறை கொட்டுகின்ற கிணைவன் வைகறைப் பொழுதிலே அரசனை வாழ்த்திப் பாடுகின்ற பாட்டினது ஒலியும் ஆகிய; கார்க்கடல் ஒலியில் இப்பல்வேறு ஒலியும் விரவிக் கரிய கடலினது ஒலிபோல ஒலித்தலாலே; கலி கெழு கூடல் ஆர்ப்பு ஒலி ஆரவாரம் பொருந்திய மதுரைமா நகரத்து அவ்வாரவாரத்து ஒலியெலாம்; எதிர் கொள - தம்மை எதிர்கொண்டழைத்தலாலே; என்க.

(விளக்கம்) 137 - 40. இறைவன் கோயிலிலும் அரண்மனையினும் வைகறைப் பொழுதிலே குழலும் யாழு முழவு முதலிய இன்னிசைக் கருவிகளும் முழங்குதலுண்மையின் அவற்றோடுகூடிச் சிறப்புற்ற காலை முரசத்தின் கனைகுரல் ஓதல் யென்க. 141. அந்தணர் நவின்ற ஓதை என்றது வேத முழக்கத்தை. 142. மாதவர் ஓதிமலிந்த வோதை என்க. 144. வாளோர் எடுத்த நாள் அணிமுழவம் என்றது வீரமுரசத்தை. குடைநாட்கோள் முதலியனவுமாம். வாரி - யானை பிடிக்கும் காடு. 147. பணை - குதிரைப்பந்தி. 148. கிணை - தடாரிப்பறை. கிணைவன் வைகறை யாமத்தே அரண்மனை முன்றிலில் கிணைப்பறை கொட்டி அரசனை வாழ்த்துதல் மரபு. இதனை,

வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை
அள்ள கட்டன்ன அரிக்கிணை - வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன்
என்கடை நீங்கிற் றிடர்

எனவரும் புறப்பொருள் வெண்பாமாலை (பாடாண் - 18) யான் உணர்க. மற்று வாகைத்திணைக்கண் கிணைவன் உழவனைப் புகழ்தலுண்டு. அதனையே பழையவுரையாசிரியர் ஈண்டுக் கூறினர். அத்துறை ஈண்டைக்குப் பொருந்தாமை யறிக. 150. எதிர்கொள என்றது - கோவலன் முதலியோர் நகரிற்குத் தொலைவிலே வரும் பொழுதே இவ்வொலிகளைக் கேட்டனர் என்றபடியாம்.

வையை என்ற பொய்யாக் குலக்கொடி

(151 முதலாக 170 - முடிய வையை வண்ணனை)

150 - 161 : ஆரஞர் ........... அல்குல்

(இதன்பொருள்.) ஆர் அஞர் நீங்கி - மதுரை நகரத்து ஆரவாரங்கேட்டபொழுதே அதுகாறும் வழிநடையால் எய்திய துன்பம் எல்லாம் நெஞ்சத்தினின்றும் நீங்கப் பெற்று அப்பால் வையை என்னும் பேரியாற்றின் கரையை எய்தினராக; குரவமும் வகுளமும் கோங்கமும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து - அந்த யாற்றினது கரையின் புறப்பகுதி யெங்கும் குராமரமும் மகிழமரமும் கோங்கமரமும் வேங்கை மரமும் வெண்கடப்பமரமும் சுரபுன்னைமரமும் மஞ்சாடி மரமும் மருதமரமும் உச்சிச் செலுந்தின்மரமும் செருந்திமரமும் சண்பக மரமும் ஆகிய இவை பாதிரிமரத்தோடே மலர்ந்து திகழ்பவையே அவ் வையை என்னும் நங்கை தன்மீதுடுத்த பூந்துகில் ஆகவும்; குருகும் தளவமும் கொழுங்கோடி முசுண்டையும் விரிமலர் அதிரலும் வெள் கூதாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் - அகப்பகுதி யெங்கும் குருக்கத்தியும் செம்முல்லையும் வளவிய கொடியையுடைய முசுட்டையும் மலர்ந்த மலர் நிறைந்த மோசி மல்லிகையும் வெள்ளை நறுந்தாளியும் வெட்பாலையும் மூங்கிலும் இவற்றிற் படர்ந்த பெருங்கையாலும்; பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த கொடுங்கரை கோவை மேகலை - குட்டிப்பிடவமும் இருவாட்சியுமாகிய பல மலரும் விரிந்து பூங்கொடிகள் பின்னிப்படர்ந்த கிடப்பவற்றைத் தன்னை மிடைந்து சூழ்ந்த கோவையாகிய மேகலையாகவும் உடைய; கொடுங்கரை அகன்று ஏந்து அல்குல் - வளைந்த கரையாகிய அல்குலையும்; என்க.

(விளக்கம்) 150. தாம் குறிக்கொண்டுள்ள மதுரையை எய்திவிட்டோம் என்னும் மகிழ்ச்சி காரணமாக அதுகாறும் எய்திய துன்பமெல்லாம் மறைந்தன என்பது கருத்து. கரையின் வெளிப்புற மெல்லாம் குரவ முதலிய மரங்கள் வளமுடையனவாய் மலர்ந்து நிற்றலாலே பல்வேறு நிறமுடைய அம்மலர் ஒழுங்கு வையைமகளுடுத்த பல்வேறு நிறமுடைய பூந்துகில் போலத் திகழ்ந்தது என்றவாறு. 153. செண்பக வோங்கல் என்புழி ஓங்கல் - மரம்; ஆகுபெயர் - பகன்றை - பெருங்கையால்; சீந்திலுமாம்.

கரையின் புறவா யெங்கும் மலர்ந்து நிற்கும் பூம்பொழில் வையை மகட்குப் பூந்துகிலாகவும் கரையின் அகவாயெங்கும் பிடவ முதலியனவும் பிற பூங்கொடிகளும் பின்னிப் படர்ந்து மலர்ந்து திகழும் கொடிப்பிணக்கம் அவட்கு மேகலை என்னும் அணிகலனாகவும் வளைந்துயர்ந்தேந்திய கரை அல்குலாகவும் என ஏற்றி பெற்றி சில சொற்கள் பெய்துரைக்க. இவை குறிப்புவமம். உருவகம் என்பதுமது.

இதுவுமது

161 - 170 : வாலுகம் .......... குலக்கொடி

(இதன்பொருள்.) மலர்ப் பூந்துருத்தி - அகற்சியையும் போலிவையுமுடைய இடைக்குறையிலே; பால் புடைக்கொண்டு பல் மலர் ஓங்கிய - பக்கங்களிலே பருத்தலைக் கொண்டு தம்மீது பல்வேறு மலர்கள் உதிர் தலைப்பெற்று உயர்ந்த; குவைஇய - குவிந்துள்ள; எதிர் எதிர் விளங்கிய ஒன்றற்கொன்று எதிர் எதிராக நின்று திகழ்ந்த; வாலுகம் - மணற் குன்றுகளாகிய; கதிர் இள வனமுலை ஒளியுடைய இளமையுடைய அழகிய முலையினையும்; கவிர் கரை நின்று உதிர்த்த இதழ்ச் செவ்வாய் - முருக்க மரங்கள் கரையினின்றுதிர்த்த இதழ் ஆகிய சிவந்த வாயினையும்; அருவி முல்லை அணி நகையாட்டி - அருவி நீரோடும் இடையறாது வருகின்ற முல்லை யரும்பாகிய எயிற்றினையும் உடையவளும்; விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண் - குறுக்கே மறிந்தும் நெடுக ஓடியும் திரிகின்ற கயல்களாகிய நெடிய கண்களையும்; விரைமலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் - மணமலர் ஒருபொழுதும் நீங்குதலில்லாத விளங்குகின்ற அறலாகிய கூந்தலையும்; உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து - உலகத்தே வாழுகின்ற பல வுயிரினங்களையும் பேணி ஊட்டி வளர்க்கின்ற மிகவும் பெரிய அறிவொழுக்கத்தினையும்; புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி - அவ்வொழுக்கங் காரணமாகப் புலவர் பலரும் புகழுமாற்றால் அவருடைய செந்நாவிலே பொருந்தியுள்ள பூங்கொடி போல்பவளும்; வையை என்ற - வையை! வையை ! என்று உலகத்தாராற் சிறப்பித்துக் கூறப்படுகின்ற பெயரையுடையவளும் ஆகிய; பொய்யாக் குலக் கொடி - தன தொழுக்கம் ஒருகாலத்தும் பொய்யாதவளும் பாண்டியர் குலத்துப் பெண்ணா யிருப்பவளும் ஆகிய அந்த நங்கையானவள்; என்க.

(விளக்கம்) 161. மலர்களையுடைய துருத்தி எனினுமாம். பால் - இருபக்கங்களினும் எனினுமாம். குவைஇய வாலுகமாகிய முலை என்க. 164. கவிர் - முண்முருக்கு. 165. அருவி கொணர்ந்த முல்லைமலர் என்க. நகை - பல். 165. விலங்கு - குறுக்காக. குறுக்கே மறிந்தும் நெடுக ஓடியும் திரியும் கருங்கயல் என்க. 167. அவிர் கூந்தல், அறல் கூந்தல் எனத் தனித்தனி யியையும். அவிரும் அறல் எனினுமாம். அவிர்தல் - விளங்குதல். 168. உயர் பேரொழுக்கங் காரணமாகப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி. யாறுகளில் வைத்து வையையாறு புலவர் நாவாற் புகழப்பட்டிருத்தலைப் பரிறபாடலிலே காண்க.

வையை மகள் வருந்துதல்

171 - 173 : தையல் ............... அடக்கி

(இதன்பொருள்.) தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல் - மதுரை நகர்க்குக் கணவனோடு வருகின்ற அக் கண்ணகிநல்லாளுக்கு மேல் வருவதற்கிருக்கின்ற துன்பத்தை அவ் வையையென்னும் பொய்யாக் குலக்கொடிதான் முன்னரே அறிந்தவள்போல; புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து - தன்னைக் கொண்டு வழிபாடு செய்வார்க்குப் புண்ணியம் பயக்குமியல்புடைய நறிய மலராடையாலே தன் மெய்ம்முழுதும் போர்த்துக்கொண்டு; கண் நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி - அவட்கு இரங்குதலாலே தன் கண் மல்கிநின்ற நீரைப் புறத்திடின் கண்ணகி முதலியோர் வருந்துவாரென்று உள்ளடக்கிக் கொள்ளாநிற்ப; என்க.

(விளக்கம்) கண்ணகி முதலிய மூவரும் தன்பால் மகிழ்ச்சியுடன் வந்தெய்திய பொழுது தெய்வத் தன்மையுடைய அவ் வையை என்னும் மடந்தை ஊழ் காரணமாக மதுரை நகரத்தே அவட்கு இனி வரவிருக்கின்ற துன்பத்தை அறிந்தவள் போலத் தன் திருமேனி முழுவதும் பூவாடையாலே போர்த்துக்கொண்டு அவள் பொருட்டுத் தன் கண்களில் மல்கிய துன்பக் கண்ணீரையும் அவள் காணாவண்ணம் மறைத்துக் கொண்டனள் என்று அடிகளார் கூறுகின்றார். இது தற்குறிப்பேற்றம் என்னும் அணி. இஃதென் சொல்லியவாறோ எனின், வையையாற்றின் இருகரைகளினும் அமைந்த பல வேறுவகைப்பட்ட மரங்களும் செடிகொடிகளும் பூத்துச் சொரிதலாலே அந்த யாற்றின் நீர் தோன்றாதபடி அம் மலர்கள் மறைத்து விட்டன. இந் நிகழ்ச்சியையே அடிகளார் வையை மகள் கண்ணகிக்கு வருவதறிந்து அவள் பொருட்டுத் தானும் வருத்தமுடையவளாய்ப் பூவாடையாலே முக்காடிட்டுக் கொண்டு தன் கண்ணீரையும் அவளறியாமல் மறைத்துக்கொண்டனள் என்கின்றனர் என்க. இதன்கண் கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி என்புழி, தன்னிடத்தே நிறைந்தொழுகுந் தண்ணீரைப் பூவாலே மறைத்தனள் எனவும் தன் கண்களிலே மல்கிய துன்பக் கண்ணீரை அவளறியாம லடக்கினள் எனவும் சிலேடை வகையாற் பொருள் கொள்க. 173. அடக்கி என்பதனை அடக்க எனத் திரித்துக் கொள்க.

கோவலன் முதலிய மூவரும் வையையைப் புணையேறிக் கடத்தல்

174 - 180 : புனல் ............... எய்தி

(இதன்பொருள்.) அனநடை மாதரும் ஐயனும் - அழகிய அவ்வையை யாற்றின் கரைக்கட் சென்று அதன் நீரோட்டத்தின் அழகினைக் கண்ணுற்ற அன்னம் போன்ற நடை யழகினையுடைய கண்ணகி நல்லாளும் அவள் தலைவனாகிய கோவலனும் வியந்து; இது புனல்யாறு அன்று பூம்புனல் யாறு என தொழுது - இத் தெய்வப் பேரியாறு தான் புனல் ஒழுகும் யாறு அன்று பூவொழுகும் யாறு என்று புகழ்ந்து கைகூப்பித் தொழுது; பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பியும்  அருந்துறை இயக்கும் பெருந்துறை மருங்கில் பெயராது - அவ்வியாற்றினைக் கடப்பவர் பொருட்டு ஆங்குக் குதிரைமுக வோடமும் யானைமுக வோடமும் சிங்கமுக வோடமும் என்னும் சிறந்த ஓடங்களிலே பலரையும் ஏற்றி இயக்குதலையுடைய ஓடக்கோலுக்கும் நிலைத்தலரிய ஆழமான துறையாகிய பெருந்துறைப் பக்கத்தே செல்லாமல்; ஆங்கண் மாதவத்தாட்டியொடு மரப்புணை போகி - அதற்கு அயலதாகியதொரு துறையிலே கவுந்தியடிகளோடு தாமூவருமே மரப்புணையிலேறி யாற்றைக் கடந்துபோய்; தேம் மலர் நறும் பொழில் தென்கரை எய்தி - தேன் பொதுளிப மலர் நிரம்பிய நறிய பூம் பொழிலையுடைய தென்கரையில் பலர் செல்லாத வோரிடத்தே சென்றெய்தி யென்க.

(விளக்கம்) 175. அனநடை - அன்னம்போல் நடக்கும் நடை. மாதர் - கண்ணகி. ஐயன் -அவள் தலைவனாகிய கோவலன். 176. அம்பி - ஓடம். பரிமுக அம்பி முதலியன அக் காலத்தின் நாகரிகச் சிறப்பைப் புலப்படுத்தும். 177. அரி - சிங்கம். அருந்துறை - ஓடக்கோலுக்கும் நிலைத்தலில்லாத கடத்தலரிய துறை என்க. ஓடமியக்குவோரால் இயக்கப்படும் பெருந்துறை. 179. இவர்தாம் உயர்குடி மக்களும் துறவியுமாதலின் பலர் செல்லுந்துறையிற் செல்லாது மற்றொரு சிறுதுறையில் மரப்புணை போகினர் என்றவாறு. இனி அடியார்க்கு நல்லார் இவர் பெருந்துறையிற் செல்லாது மற்றொரு துறையிற் சென்றது, முன்னர் வம்பப்பரத்தை வறுமொழியாளனொடு சாபமுறுதலின் என்பர். என்னை? நாடுகாண் காதையில் நீரணி மாடத்துக் காவிரியின் நெடுந்துறை போகி என்றாராகலின் அவர் அங்ஙனம் கூறினர். ஆயினும் ஆங்கு அவர் சாபமுற்றமைக்கு நெடுந்துறை போகியது காரணம் அன்றாகலின் அவ் விளக்கம் போலி என்க.

கோவலன் முதலிய மூவரும் மதுரையை வலங்கொண்டு செல்லுதல்

181 - 183 : வானவர் ............ போகி

(இதன்பொருள்.) வானவர் உறையும் மதுரை வலம் கொளத் தான் நனிபெரிதும் தகவுடைத்து என்று - தேவர்களும் வந்து தங்கும் சிறப்புடைய அம் மதுரையை வலம் சுற்றிச் சென்றக்கால் அச் செயல்தானும் மிகப்பெரிய அறச் செயலாம் தகுதியுடையதாம் என்று கருதி; ஆங்கு அரு மிளை உடுத்த அகழி சூழ் போகி - அவ்விடத்தே அழித்தற்கரிய காவற்காடு சூழ்ந்த அந் நகரத்து அகழியையும் ஒருசேர வலங்கொண்டு சென்று; என்க.

(விளக்கம்) மற்று அவர் எண்ணித் துணிந்தவாறே மதுரையை வலங்கொண்டு சென்ற அறப்பயனே அங்கு அவர் தம் பழவினை தீரப் பெற்று வானவர் எதிர்கொள வலவனேவா வானவூர்தியில் விண்ணகம் புக்கு விண்ணவர் ஆயினர் என்று கோடலும் தகும் என்க. இது கருதிப் போலும் அடிகளார் மதுரை வலங்கொளத் தான் நனிபெரிதும் தகவுடைத்து என ஒருபொருட் பன்மொழி அடை புணர்த்து ஓதினர் போலும். இன்னும் கண்ணகியார் மண்ணகத்தே பலர்புகழ் பத்தினித் தெய்வமாகத் திகழ்வதும் ஈண்டு நினைக்கத்தகும்.

184 - 190 : கருநெடு ............. காட்ட

(இதன்பொருள்.) கரு நெருங்குவளையும் ஆம்பலும் கமலமும் - அங்ஙனம் அகழியையும் வலங்கொண்டு செல்லும் பொழுது அவ்வகழியின் கண்ணவாகிய கரிய நெடிய குவளைமலரும் ஆம்பன் மலரும் தாமரை மலரும்; தையலும் கணவனும் தனித்து உறு துயரம் - தையலாருட் சிறந்த அக் கண்ணகியும் அவள் கணவனாகிய கோவலனும் தம்முள் ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்தனியே அந் நகரத்தே இனி எய்தும் துன்பத்தை; ஐயம் இன்றி அறிந்தன போல - சிறிதும் ஐயமின்றி நன்கு அறிந்து கொண்டவைபோல; பரிந்து பண் நீர் வண்டு இணைந்து ஏங்கி - அவர்கட் கிரங்கிப் பண்களின் தன்மையோடு தம்பால் முரலுகின்ற வண்டுகளாகிய தம் வாயினாலே அழுது ஏங்கி; கண்ணீர் கொண்டு - கண்ணீர் மல்கப்பெற்று; கால் உற நடுங்க - தத்தம் கால்களின் நிலைபெற மாட்டாவாய்ப் பெரிதும் நடுங்காநிற்பவும்; போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங் கொடி - பகைவர் அழியும் போர்செய்து வாகைசூடி அதற்கு அறிகுறியாகக் கிட்டுதற்கரிய புறமதிலுச்சியிலே உயர்த்திய கொடிச் சிலைகள்; வாரல் என்பன போல் - இந் நகரத்தினுள் வாராதே புறம் போமின் என்று கூறுவன போன்று; கை மறித்துக் காட்ட - துகிலாகிய தமது கைகளாலே மறித்துக் குறிப்பாற் காட்டாநிற்ப என்க.

(விளக்கம்) குவளை முதலிய மலர்கள் பரிந்து தம்பாற் சூழும் வண்டுகளாகிய வாயாலே இனைந்து ஏங்கி என்க. வண்டுகளின் முரற்சியொலி அம் மலர்களின் வாயினின்றும் எழுவதனாலே இங்ஙனம் கூறிய படியாம். கண் நீர் கொண்டு எனவும்; கள் நீர் கொண்டெனவும் கண்ணழித்து இருபொருளும் கொள்க. கால் உற நடுங்க என்பதற்கும் - காற்று உறுதலாலே நடுங்க எனவும் கால் உறுதற்கு (நிலைத்தற் கியலாமல்) நடுங்க எனவும் இருபொருளும் காண்க.

தென்றல் வீசுதலாலே கொடித்துகில் வடதிசை நோக்கி அசைகின்றன. அங்ஙனம் அசைவது தென்றிசை நோக்கி வருவாரை ஈண்டு வாராதொழிமின் எனக் கையை அசைத்துப் போக்குதல் போலுதலுணர்க. இவை தற்குறிப்பேற்றம்.

இனி, ஈண்டு எயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட என்னுமித் தற்குறிப்பேற்ற அணியை -

ஈண்டுநீ வரினு மெங்க ளெழிலுடை யெழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட் கல்லாற் படைத்துணை யாக மாட்டான்
மீண்டுபோ கென்றென் றந்த வியன்மதிற் குடுமி தோறும்
காண்டகு பதாகை யாடை கைகளாற் றடுப்ப போன்ற

எனவரும் பாரதச் செய்யுளினும் (வி. பாரதம்: வாசுதேவனை) காண்க.

அவர்கள் புறஞ்சேரி புகுதல்

191 - 196 : புள்ளணி ............... புக்கனர் புரிந்தென்

(இதன்பொருள்.) புள் அணி - பறவைகளாலே அழகு செய்யப்பட்ட; கழனியும் பொழிலும் - வயல்களும் பூம்பொழில்களும்; வெள்ள நீர்ப்பண்ணையும் மிக்க நீரையுடைய ஓடைகளும் தோட்டங்களும்; விரி நீர் ஏரியும் - விரிந்த நீரையுடைய ஏரியும்; காய்க்குலைத் தெங்கும் - நிரம்பிய காய்களையுடைய குலைகளையுடைய தென்னையும்; வாழையும் கமுகும் - வாழைத் தோட்டங்களும் கமுகந் தோட்டங்களும்; வேய்த்திரள் பந்தரும் - மூங்கிற்றிரளாலே அமைக்கப்பட்ட தண்ணீர்ப் பந்தரும்; பொருந்தி யாண்டும் அமையப் பெற்று; விளங்கிய இருக்கை - விளங்கிய குடியிருப்புகளை யுடைத்தாய்; அறம்புரி மாந்தர் அன்றிச் சேரா - துறவற மேற்கொண்டொழுகும் சான்றோரனறிக் கயவர்கள் ஒருபொழுதும் புதுதலில்லாத; மூதூர் புறஞ்சிறை புரிந்து புக்கனர் - அம் மதுரை மூதூரின் புறஞ்சேரிக் கண்ணே தாம் மேற்கொண்டுள்ள கோட்பாட்டிலே மனம் விரும்பி அம் மூவரும் புகுந்தனர் என்க.

(விளக்கம்) இது கீழ்த்திசை வாயிற்கு அயலதொரு முனிவர் இருப்பிடம் என்பர் அடியார்க்கு நல்லார். புரிந்து புக்கனர் என்று பொதுவாகக் கூறினமையான் கோவலன் கண்ணகியும் தமது குறிக்கோளின்கண் மனம் வைத்தவராய்ப் புக்கனர் என்றும் கவுந்தியடிகளார் தங்குறிக்கோளாகிய அறங்கேட்டலில் விரும்பிப் புக்கனர் என்றும் கொள்க.

இனி இதனை, பெண்ணணிகோலம் பெயர்ந்த பிற்பாடு கோவலன் முதல்வி அடிபொருந்தி இவள் வேனிற் கடுங்கதிர் பொறாஅள் உளியம் அகழா வேங்கை மறலா அரவு முதலியனவும் உறுகண் செய்யாதென்னவர் காக்கும் நாடு எனப் போதிய இசை பெரிது (ஆதலால்) இரவிடைக் கழிதற்கு ஏதம் இல் என நேர்ந்த கொள்கையின் அமையம் பார்த்திருந்தோர்க்குச் செல்வன் தோன்றிச் சொரிய, பார்மகள் வேண்டுதி என்றே உயிர்த்து அடங்க, கோவலன் மாதரை நோக்கி மறுகும் கப்பிடும் இடிதரும் இனையாதேகெனக் காட்டிக் கேட்டுக் கழிந்து கோழி இயம்ப உறைபதிச் சேர்ந்து இருத்தி நீர்தலைப் படுவோன் புலம்புறுதலின் திரியக் கவுசிகன் தெரியான் கூறக்கேட்டு நீ கூறிய உரையீது எனக் கண்டேன் என எய்திக் கோசிகமாணி உரைப்போன் ஓலைநீட்ட, கைவிடலீயான் விரித்து உணர்வோன் உணர்ந்து நீங்கிக் கொடுத்துப் போக்கிப் பாணரிற் சேர்ந்து, கேட்டு. கூறுமின் என, தென்றல் வந்தது தகைக்குநர் இல்லெனப் பெயர்ந்தனர் எதிர்கொளத் தொழுது மரப்புணை போகி எய்திச் சூழ் போகி நடுங்கக் காட்ட, புறஞ்சிறை மூதூர் புரிந்து புக்கனர் என இயைத்திடுக.

பா - நிலைமண்டில ஆசிரியப்பா.

புறஞ்சேரியிறுத்த காதை முற்றிற்று.

 
மேலும் சிலப்பதிகாரம் »
temple news
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்
 
temple news
1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar