பதிவு செய்த நாள்
31
ஜன
2012
04:01
அஃதாவது - முற்காதையிற் கூறியவாறு கோவலன் முதலிய மூவரும் மதுரையின்கண் அறம்புரி மாந்தர் அன்றி மற்றோர் சேராத புறஞ்சேரி புகுந்த பின்னர்க் குணதிசையில் ஞாயிறு தோன்றிய பின்னர் அரண்மனைக்கண் காலைமுரச முழங்கிற்றாக, அதுகேட்ட கோவலன் தான் கருதிவந்த தொழில் தொடங்கற் பொருட்டு அந்நகரத்தினூடு புகுந்து அதற்கு ஆவனதேர்ந்து வருதற்குக் கண்ணகியைக் கவுந்தியடிகளார் காப்பினுள் வைத்துத் தான் தமியனாக அந்த நகரத்தினூடு புகுந்து ஆங்குள்ள வீதிகள் பலவற்றையும் சுற்றிப் பார்த்து அந்நகரத்தின் பேரழகைக் கண்டுமகிழ்ந்து மீண்டும் புறஞ்சேரிக்கு வந்த செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.
புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப் பண்ணையும்
இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந் தார்ப்பப்
புலரி வைகறைப் பொய்கைத் தாமரை
மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம்
வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன் 5
ஒங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப
நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்
உவணச் சேவ லுயர்த்தோன் நியமமும்
மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் 10
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
காலை முரசங் கனைகுரல் இயம்பக்
கோவலன் சென்று கொள்கையி னிருந்த 15
காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி
நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
நறுமலர் மேனி நடுங்குதுய ரெய்த
அறியாத் தேயத் தாரிடை யுழந்து
சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான் 20
தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என்னிலை யுணர்த்தி யான்வருங் காறும்
பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின்
ஏத முண்டோ அடிக ளீங் கென்றலும்
கவுந்தி கூறுங் காதலி தன்னொடு 25
தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்
மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்
றறந்துறை மாக்கள் திறத்திற் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார் 30
தீதுடை வெவ்வினை யுருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்
ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக்
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்
பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் 35
உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும்
புரிகுழல் மாதர்ப் புணந்தோர்க் கல்லது
ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை
பெண்டிரும் உண்டியும் இன்ப மென்றுலகிற்
கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம் 40
கண்டன ராகிக் கடவுளர் வரைந்த
காமஞ் சார்பாக் காதலின் உழந்தாங்கு
ஏமஞ் சாரா இடும்பை எய்தினர்
இன்றே யல்லால் இறந்தோர் பலரால்
தொன்று படவரூஉந் தொன்மைத் தாதலின் 45
தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோ னென்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ
வல்லா டாயத்து மண்ணர சிழந்து 50
மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன்
காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி
தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள்
அடவிக் கானகத் தாயிழை தன்னை
இடையிருள் யாமத் திட்டு நீக்கியது 55
வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச்
சொல்லலும் உண்டேற் சொல்லா யோநீ
அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே
வருந்தா தேகி மன்னவன் கூடல் 60
பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும்
இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்குநீர்ப் பரப்பின் வலம்புண ரகழியில்
பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகிக் 65
கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்கு
ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில்
குடகாற் றெறிந்து கொடுநுடங்கு மறுகின் 70
கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு
வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை
விரிபூந் துருத்தி வெண்மண லடைகரை
ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப்
பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து 75
தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும்
கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற அடைச்சி
வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல்
கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு 80
தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப்
பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு
எற்படு பொழுதின் இளநிலா முன்றில்
தாழ்தரு கோலந் தகை பாராட்ட
வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்கு 85
அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக்
குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச்
சிறுமலைச் சிலம்பின் செங்கூ தாளமொடு
நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து
குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச் 90
செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில்
அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு
மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்குக்
கலிகெழு கூடற் செவ்வணி காட்டக் 95
காரர சாளன் வாடையொடு வரூஉம்
கால மன்றியும் நூலோர் சிறப்பின்
முகில்தோய் மாடத் தகில்தரு விறகின்
மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து
நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு 100
குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்
வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி
இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர
விரிகதிர் மண்டிலந் தெற்கேர்பு வெண்மழை
அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும் 105
ஆங்க தன்றியும் ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் 110
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்
கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக்
காவும் கானமும் கடிமல ரேந்தத்
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து 115
மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம்
இன்னிள வேனில் யாண்டுளன் கொல்லென்று
உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு
பருவ மெண்ணும் படர்தீர் காலைக்
கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க 120
என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
ஓசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள் 125
வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும்
உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியுந் தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப்
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் 130
பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து
செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய
அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப்
பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும்
நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்கு 135
இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப்
புலவிக் காலத்துப் போற்றா துரைத்த
காவியங் கண்ணார் கட்டுரை எட்டுக்கும்
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்
அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன 140
செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத்
திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்
செவ்வி பார்க்குஞ் செழுங்குடிச் செல்வரொடு
வையங் காவலர் மகிழ்தரும் வீதியும் 145
சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை
வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து
மாத்திரை யறிந்து மயங்கா மரபின்
ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும் 150
கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து
நால்வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும்
வாரம் பாடுந் தோரிய மடந்தையும் 155
தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பட்டுக் கூத்தியும்
நால்வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅத்
தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு 160
அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாகத்
தவத்தோ ராயினுந் தகைமலர் வண்டின்
நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும்
காம விருந்தின் மடவோ ராயினும்
ஏம வைகல் இன்றுயில் வதியும் 165
பண்ணுங் கிளையும் பழித்த தீஞ்சொல்
எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்
வையமும் பாண்டிலும் மணித்தேர்க் கொடுஞ்சியும்
மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும்
அதள்புனை அரணமும் அரியா யோகமும் 170
வளைதரு குழியமும் வால்வெண் கவரியும்
ஏனப் படமும் கிடுகின் படமும்
கானப் படமும் காழூன்று கடிகையும்
செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும்
வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும் 175
வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும்
புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும்
வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய
அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்
காக பாதமும் களங்கமும் விந்துவும் 180
ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா
நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி
நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும்
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும் 185
பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்
பூச உருவின் பொலந்தெளித் தனையவும்
தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும்
இருள்தெளித் தனையவும் இருவே றுருவவும் 190
ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்
காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றந் துகளறத் துணிந்தவும்
சந்திர குருவே அங்காரக னென 195
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்
கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்
வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப்
பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும் 200
சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின்
பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்தாங்கு
இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும்
நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் 205
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்
அம்பண வளவையர் எங்கணுந் திரிதரக்
கால மன்றியும் கருங்கறி மூடையொடு 210
கூலங் குவித்த கூல வீதியும்
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்
மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து
விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாப் 215
பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல்
காவலன் பேரூர் கண்டுமகிழ் வெய்திக்
கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென்.
உரை
ஞாயிறு தோன்றுதல்
1-6 : புறஞ்சிறை ............ துயிலெடுப்ப
(இதன்பொருள்.) புறஞ் சிறைப் பொழிலும் பிறங்கும் நீர்ப் பண்ணையும் இறங்கு கதிர்க் கழனியும் - கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளாரோடு விரும்பிப் புகுந்த அம் மூதூர்ப் புறஞ்சேரி யிடத்திலமைந்த பூம்பொழில்களினும் விளங்குகின்ற நீர்மிக்க ஓடையையுடைய பண்ணைகளினும் வளைந்து முற்றிய நெற்கதிர் நிறைந்த வயல்களினும்; புள் எழுந்து ஆர்ப்ப - இரவுப் பொழுதெல்லாம் இனிதினுறைந்த காக்கை முதலிய பல்வேறு வகைப் பறவைகளும் தமதியற்கை யறிவினாலே தனது வருகையை யுணர்ந்து துயில் எழுந்து ஆரவாரியா நிற்ப; வைகறைப் புலரி பொய்கைத் தாமரை மலர் பொதி அவிழ்த்த - வைகறையாமத்தின் இறுதியாகிய இருள் புலர்கின்ற பொழுதே பொய்கைகளிடத்தேயுள்ள தாமரையினது நாளரும்புகளின் புரி நெகிழ்த்து மலர்வித்த; உலகு தொழு மண்டிலம் - உலகத்துச் சான்றோரெல்லாம் தொழுகின்ற சிறப்புடைய ஞாயிற்று மண்டிலமானது தனது வெளிப்பாட்டினாலே; வேந்து தலைபனிப்ப ஏந்துவாட் செழியன் ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப - பகை வேந்தர் தம் தலைகள் அச்சத்தாலே நடுங்கும்படி உறை கழித்து விதிர்த்து ஏந்துகின்ற வாளையுடைய பாண்டியனது புகழான் ஓங்கி வண்மையானுமுயர்ந்த அம் மதுரையின் வாழ்வோரை எல்லாம் துயிலுணர்த்தா நிற்ப வென்க.
(விளக்கம்) பறவைகள் வைகறைப் பொழுதிலேயே கதிரவன் வரவுணர்ந்து துயிலெழுந்து ஆரவாரிக்கும் இயல்புடையன ஆதலின் அவற்றை முற்கூறினர். தாமரைமலர்களில் செவ்வியரும்புகள் கதிரவன் தோன்றுகின்ற பொழுதே இளவெயில் கண்டு மலர்தலின் அவற்றை இரண்டாவதாகவும் மாக்கள் கதிரவன் தோன்றிய பின்னரே எழுதலின் இறுதியில் ஊர்துயில் எடுப்ப எனவும் முறைப்படுத்தோதினர். இனி மாக்கள் தாம் கதிரவனாற் றுயிலெழுப்புந் துணையும் துயில்வார். அவர் தம்முட் சான்றோர் பறவைகளோடொப்ப வைகறையாமத்தே துயில் எழுந்து காலைக்கடன் கழித்து நீராடி அவன் தோன்றும்பொழுது அவன் ஒளியிலே இறைவனுடைய அருள் ஒளியினைக் கண்டு அகங்குழைந்து கைகூப்பி வணங்குவர் என்பதும் இஃது எல்லாச் சமயத்தார்க்கும் உடன்பாடாம் என்பதும் தோன்ற உலகு தொழுமண்டிலம் என அடிகளார் விதந்தோததுலுணர்க.
மதுரையில் காலைமுரசம் கனைகுரலியம்பு மிடங்கள்
7 - 14 : நுதல்விழி ............... இயம்ப
(இதன்பொருள்.) நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் - அவ் விடியற் பொழுதிலேயும் இறைவி திருக்கண் புதைத்த பொழுது தனது நெற்றியின்கண் தோற்றுவித்து விழித்த கண்ணையுடைய இறைவனது திருக்கோயிலினும்; உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் - செம்பருந்துச் சேவலைக் கொடியாகவுயர்த்த திருமால் திருக்கோயிலினும்; மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் - மேழியாகிய படைக்கலத்தை வலக்கையின் ஏந்திய பலதேவர் திருக்கோயிலினும்; கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும் - கோழிச் சேவலாகிய கொடியையுடைய முருகவேள் திருக்கோயிலினும்; அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் - தத்தம் சமயத்திற் கியன்ற அறங்கள்தாம் தம்மிடத்தேயே விளக்க மெய்தியிருக்கின்ற துறவோர் உறைகின்ற தவப்பள்ளிகளினும்; மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் - மறப்பண்புடைய வஞ்சி முதலிய திணைகளும் அவற்றிற்குரிய துறைகளும் விளங்குதற்கிடனான மன்னவனுடைய அரண்மனையினும்; வால் வெண் சங்கோடு - தூய வெள்ளிய சங்கு முழக்கத்தோடே கூடிய; வகைபெற்று ஓங்கிய காலைமுரசம் கனைகுரல் இயம்ப - பலவகைப் பட்டுச் சிறந்த காலைமுரசங்களினது செறிந்த முழக்கங்கள் முழங்காநிற்ப என்க.
(விளக்கம்) 7. இறைவன் - சிவபெருமான். இறைவன் நுதலின் கண் நெருப்புவிழி புறப்பட விட்டமைக்கு வேறு காரணம் கூறுவாருமுளர். நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலை ஈண்டு அடிகளார் முற்கூறி யிருத்தலும் இங்ஙனமே இந்திரவிழாவெடுத்த காதையில் பூம்புகார் நகரத்தும் பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் என்று முற்படக் கூறியிருத்தலானும் அடிகளார் காலத்தே தமிழகத்தே சமயங்கள் பற்பல இருப்பினும் சைவசமயமே அவற்றுள்ளும் தலைசிறந்ததாகத் திகழ்ந்த தென்பது தேற்றமாம். 8. உவணம் - செம்பருந்து (கருடன்). 9. மேழி - கலப்பை. வெள்ளை: ஆகுபெயர் - வெண்ணிறமுடைய பலதேவர். 10. பிற பறவையினத்துச் சேவலை ஒழித்தற்கும் கோழியிற் பெடையை யொழித்தற்கும் கோழிச் சேவல் எனல் வேண்டிற்று. 11. அறத்துறை விளங்கிய அறவோர் என்றது பல்வேறு சமயங்கள் பற்றித் துறவறம் மேற்கொண்டுள்ள துறவிகளை இவர்தம் ஒழுக்கத்தானே அவ்வவர் சமயங்கூறும் அறங்களும் அவ்வவர்பால் விளங்கித் தோன்றுதலாலே அறத்துறை விளங்கிய அறவோர் என்றார். இதனால் அறவோர் தமது கூற்றிற்குத் தாமே சான்றாக நிற்றல் வேண்டும். அங்ஙனமன்றிச் சொல்லால் மட்டும் அறங்கூறுதல் பயனில் செயலாம் என்பது அடிகளார் கருத்தாதல் பெற்றாம். இங்ஙனமே மறத்துறைக்குத் தலைவனாகிய மன்னவன்றானே அம்மறப்பண்பிற்குச் சான்றாகத் திகழ்தல்வேண்டும் என்பதும் அவர், 12. மறத்துறை விளங்கிய மன்னவன் என்றதனாற் போந்தமையும் உணர்க.
13. கோயில்களினும் அரண்மனையினும் அகத்தே முழங்கும் மங்கலச் சங்கொலியோடு விரவிய காலைமுரசங் கனை குரலியம்ப என்க. உலகு தொழுமண்டிலம் ஊர் துயிலெடுப்பக் காலைமுரசம் முழங்க என்றாரேனும் வைகறை யாமத்தே முழங்கத் தொடங்கிய காலைமுரசங்களின் முழக்கம் ஊர் துயிலெழுந்துணையும் இடையறாது முழங்கின என்பதே கருத்தாகக் கொள்க. என்னை? அடிகளார் உலகு தொழுமண்டிலம் தோன்று முன்னரே இம்முரசம் முழங்குதலானன்றோ வைகறைப் பொழுதிலே மதுரைக்கு அணித்தாக வந்த கண்ணகி முதலியோரை அருந்தெறற் கடவுள் அகன் பெருங்கோயில் முதலியவற்றில் முழங்கிய காலைமுரசக் கனைகுரல் ஓதை முதலியவற்றின் ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கினர் என்று புறஞ்சேரி இறுத்த காதையினும் ஓதுவாராயினர் என்க - (புறஞ்சேரி - 137 - 50.)
இனி அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் என்னும் அடிக்கு அடியார்க்கு நல்லார் அறமும் அதன் துறையும் விளங்குதற்குக் காரணமான அறவோர்களுடைய இருப்பிடங்களும் என உரைப் பொருள் கூறக் கருதி அதற்கேற்ப விளக்கங் கூறினர். இவ்வுரையும் விளக்கங்களும் பொருந்தாமை பள்ளி என்ற ஒரு சொல்லே காட்டும். இச் சொல் தமது கருத்திற்குப் பொருந்தாதது கண்டு ஈண்டுப் பள்ளி என்றது அவ்விடங்களை எனவும் கூறினர். அவர் கருத்தின்படி இல்லறத்தார் முன்றிலிலுங் காலைமுரசம் இயம்புதல் வேண்டும். அது மரபன்மையின் அவ்வுரை போலியே என்றொழிக.
இனி, 11 - 12. அறத்துறை மறத்துறை என்பவற்றிற்கு அவர்கூறும் விளக்கம் வருமாறு: அறத்துறை - அறமும் அறத்தின் துறையுமென உம்மைத் தொகை. அறமாவது இருவகைத்து: இல்லறமும் துறவறமும் என. அவற்றுள், இல்லறமென்பது கற்புடை மனைவியோடு இல்லின்கண் இருந்து செய்யும் அறம்.
அதன் துறையாவன - தன்னை யொழிந்த மூவர்க்கும் துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் தேவர்க்கும் முனிவர்க்கும் விருந்தினர்க்கும் சுற்றத்தார்க்கும் பிறர்க்கும் துணையாதலும் வேள்வி செய்தலும் சீலங்காத்தல் முதலியனவும் அருளும் அன்பு முடையனாதலும் பிறவும்.
இனித் துறவறமாவது நாகந் தோலுரித்தால் போல அகப்பற்றும் புறப்பற்றுமற்று இந்திரீய வசமறுத்து முற்றத்துறத்தல்.
அதன் துறையாவன - சரியை கிரியை யோகம் ஞான மென்பன. அவற்றுள் சரியை அலகிடல் முதலியன. கிரியை பூசை முதலியன.
யோகம் எண்வகைய : அவை - இயமம், நியமம், ஆசனம், வளி நிலை, தொகை நிலை, பொறைநிலை, நினைவு, சமாதி என்பன.
அவற்றுள் - பொய் கொலை களவே காமம் பொருணசை இவ்வகை யைந்தும் அடக்கிய தியமம்; எனவும், பெற்றதற் குவத்தல் பிழம்பு நனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு பயனுடை மரபி னியம மைந்தே; எனவும், நிற்றல் இருத்தல் கிடத்த னடத்தலென் றொத்த நான்கினொல்கா நிலைமையொ டின்பம்பயக்குஞ் சமய முதலிய அந்தமில் சிறப்பினாசனமாகும்; எனவும்; உந்தியொடு புணர்ந்த விருவகை வளியும் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை எனவும்; பொறியுணர்வெல்லாம் புலத்தின் வழாமை ஒருவழிப் படுப்பது தொகைநிலை யாமே; எனவும், மனத்தினை யொருவழி புணர்ப்பது பொறைநிலை; எனவும், நிறுத்திய வம்மன நிலைதிரி யாமல் குறித்த பொருளொடு கொளுத்துவது நினைவே; எனவும், ஆங்ஙனம் குறித்த வம்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி, எனவும் வருவனவற்றால் அறிக.
12. மறத்துறை - மறமும் அதன் துறைகளும். இதுவும் உம்மைத்தொகை.
அதன் துறை எழுவகைய. அவை: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பையென வினவ எனவரும்.
இனி இப்பகுதியில் கோயில் நியமம் நகரம் கோட்டம் பள்ளி என ஒருபொருட்குப் பன்மொழி கூறப்பட்டிருத்தல் பரியாய வணி என்பர்.
கோவலன் கவுந்தியடிகளாரை வணங்கிக் கூறுதல்
15 - 24 : கோவலன் ............... ஈங்கென்றலும்
(இதன்பொருள்.) கோவலன் சென்று கொள்கையின் இருந்த காவுந்தியையையைக் கைதொழுது ஏத்தி - அப்பொழுது கோவலன் ஆங்கொரு சூழலிலே தமது கோட்பாட்டிற் கிணங்க அந்த விடியற்காலையிலே தருமத்தியானம் என்னும் யோகத்தில் அழுந்தி யிருந்த கவுந்தியடிகளார்பாற் சென்று கைகுவித்து வணங்கி; செய் தவத்தீர் - இடையறாது செய்த தவத்தினையுடைய அடிகளே! நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி - அடியேன் அறநெறியினின்றும் நீங்கிய கயவர்தம் நீர்மையுடையேன் ஆகி; நறுமலர் மேனி நடுங்கு துயர் எய்த - நறிய மலர்போலும் மென்மையுடைய திருமேனியையுடைய இவள் துன்பத்தாலே நடுங்கிப் பெரிதும் துன்பமுறும்படி; அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து - முன்னம் கனவினும் கண்டறியாத நாட்டிலே யுற்றேன் - இளிவர வெய்தினேன்; தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை உணர்த்தி யான் வருங்காறும் - இந்தப் பழைய நகரத்தின்கண் வாழ்கின்ற எம்மினத்தவராகிய பெருங்குடி வாணிகரைக் கண்டு அடியேனது நிலைமை அறிவித்து மீண்டும் யான் இங்கு வருமளவும்; பைந்தொடி பாதக்காப்பினள் ஆகலின் - இவள்தான் பண்டுபோன்றே அடிகளாரின் திருவடிகளாகிய காவலையுடையள், ஆதலாலே; ஈங்கு ஏதம் உண்டோ - இவ்விடத்தே இவட்கு வரும் துன்பம் யாதும் இல்லையன்றோ! என்றலும் - என்று பணிவுடன் கூறாநிற்ப என்க.
(விளக்கம்) 15. கொள்கை - அறநினைவினூடு அழுந்துதல். இங்ஙனம் அறக்கோட்பாட்டுகள் மூழ்கியிருத்தலை தர்மத்தியானம் - அல்லது சுபோபயோகம் என்பர் ஆருகதர். இத் தியானம் தீய எண்ணங்கள் தன்கண் நிகழாதவாறு தடுத்துத் தூய எண்ணங்களிலேயே தன் நெஞ்சத்தைப் பயிற்றுவிக்கு மொரு பயிற்சியாம். வியவகார ரத்தினத்திரயபாவனை என்பது மிது. கோவலன் சென்று தொழுதனன் என்றதனால் அடிகளார் தனித்திருந்தமையும் கொள்கையினிருந்த என்றதனால் தியானத்தோடிருந்தமையும் பெற்றாம்.
இனி, முதல்நாள் வழியிடைப் புரிநூன்மார்பர் உறைபதியின்கண் கோசிகமாணி கொடுத்த மாதவி யோலையை ஓதியவழி அவள்தான் நீயிர் குரவர்பாணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு? அறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் என்றவள் மலர்க்கையான் எழுதிய வரிகளை யோதியதுமே கோவலன் மாதவி தீதிலள், எனவும் இங்ஙனம் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்குக் காரணம் தன் தீதே என்று அதுகாறும் மாதவி வஞ்சஞ் செய்தாள் என்னும் எண்ணம் நெஞ்சினின் றுழக்கிய தளர்ச்சி நீங்கினன் என அடிகளாரே கூறுதலின் ஈண்டுக் கோவலன் 17 - நெறியின் நீங்கியோர் நீர்மையேனாகி என்றதற்கு இல்லற நெறியினீங்கிக் கணிகையர் வாழ்க்கையோடு பொருந்தினமையானும் ........ அங்ஙனம் கூறினன் என்பார் உரை போலியாம். என்னை? அந்தக் காலத்தே விழுக்குடிப் பிறந்த மைந்தர் தாமும் பரத்தையர் கேண்மையை ஓர் இழுக்கெனக் கொள்ளாமையை இவர்கள் கருதிற்றிலர். மற்று அம் மாதவியே நீயிர் குலப் பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதல் நும்குடிக்கு மாசாகாதே என்று வினவிய மாதவியின் வினாவிற்கிணங்க அதனையே ஈண்டு நெறியினீங்கியோர் நீர்மையென்று குறித்தனன் என்றுணர்க. இனி, கனாத்திறம் உரைத்த காதைக்கண் சலம்புணர்கொள்கைச் சலதியோடாடி என மாதவியை வெறுத்துரைத்ததும் அவள் சலம்புணர் கொள்கையினள் என்று அவன் அவளைத் தவறுடையளாகக் கருதினமையாலேதான் என்க. மேலும் கொலைக்களக்காதையினும் தான் அவர் மாதவியோடாடியது தவறு என்று கொள்ளாமையையும் கற்பின் செல்வியாகிய கண்ணகியும் மாதவியைக் குறை கூறாப் பெருந்தகைமை யுடையளாதலையும் அக் காதையிற் கூறுதும்.
இனி, தொன்னகர் மருங்கின் வணிகர்க்கு என்தன்மையுணர்த்திவருந்துணையும் வெட்கு ஏதுமின்றாகக் காத்தருளவேண்டும் எனக் கருதியவன் தெளிந்து போதுவல் யானும் போதுமின் என்ற வன்றே இவள் நும்பாதமாகிய காவலையுடையள் ஆதலின் இவட்கு இனி ஓரேத முண்டோ! இல்லை, என்று கையெடுத்துக் கூறினானாக வென்க என வகுத்த அடியார்க்கு நல்லார் உரை சாலவும் இனியவுரையாதல் நுண்ணிதின் உணர்க.
இனி, தொன்னகர் மருங்கின் வணிகர்க்கு என்னிலை கூறி யான் வருங்காறும் என்னாது மன்னர் பின்னோர்க்கு என வணிகரைக் குறித்தது தானும் இந்நகரத்துவணிகர் தம்முள்ளும் மாசாத்துவானும் மாநாய்கனும் போலப் பெருநில முழுதாளும் பெருமகன்றலை வைத்த ஒரு தனிக் குடிகளாய் உயர்ந்தோங்கு செல்வத்து வணிகர்க்கு என்றுணர்த்துதற் பொருட்டென்க. ஏதம் உண்டோ என்னும் வினா அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்து நின்றது.
25 - கவுந்தி என்பது தொடங்கி 61 - போதீங்கென்றலும் என்னுந் துணையும் கவுந்தி அடிகளார் மனங்கனிந்து கோவலனுக்குக் கூறும் அமிழ்தனைய ஆறுதன் மொழியாய ஒரு தொடர்.
கவுந்தியடிகளார் கனிவுரைகள்
25 - 32 : கவுந்தி ........... பேதுறுவர்
(இதன்பொருள்.) கவுந்தி கூறும் - இவ்வாறு தன் செயலுக்குத் தானே கழிவிரக்கங் கொண்டு கூறிய கோவலன் மொழியைக் கேட்ட கவுந்தியடிகளார் கூறுவார்; தவம் தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய் - முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயன் தீர்ந்தவிடத்தே முற்செய்த தீவினைகளின் பயனாகத் தந்தை முதலிய சுற்றத்தாரையும் பொருளையும் பிரிந்து நின் காதலியோடும் இங்ஙனம் வந்து தனிமையுற்றுப் பெரிதும் வருந்திய ஐயனே! ஈதொன்று கேள்! அறத்துறை மாக்கள் - உலகினர்க்கு அறங்களை அறிவுறுத்தும் சான்றோர்தாம்; வல்வினை ஊட்டும் - மக்களே! ஒருவன் செய்த தீவினையானது அதன் பயனாகிய துன்பத்தை அவனை ஒருதலையாக நுகர்வியா தொழியாது கண்டீர்! ஆதலால்; மறத்துறை நீங்குமின் - நீவிரும் நுமக்குத் துன்பம் வாராதொழிதல் வேண்டும் என்னும் கருத்துடையீராயின் பிற உயிர்க்குத் துன்பஞ் செய்யும் தீவினைச் செயலினின்றும் நீங்கி யுய்யுங்கோள்; எனத் திறத்தில் - என்று கேட்போர் அறியு முறையிலே; நா கடிப்பு ஆக வாய்ப்பறை சாற்றி அறையினும் - தமது செந்நாவாகிய குணில்கொண்டு வாயாகிய பறையை முழக்கி அறிவுறுத்திய வழியும்; யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார் - மனத்திண்மையற்ற மாக்கள் தமக்கியன்ற இயல்பு காரணமாக அவற்றைக் கொள்ளாதவராய்ப் பின்னும் தீவினையை நயந்து செய்பவரே ஆகின்றனர்; தீது உடை வெவ்வினை - துன்பத்தையே உடைய வெவ்விய அத் தீவினைகள் தாமே; உருத்த காலை - பயனாகத் தோன்றித் துன்புறுத்தும் பொழுதும்; பேதைமை கந்தாப் பெரும் பேது உறுவர் - இவை யாம் செய்ய வந்தன எனும் அறிவுமிலராகித் தமது அறியாமையையே பற்றாகக்கொண்டு பெரிதும் நெஞ்சு கலங்கி அத் துன்பத்துள் மூழ்கிக் கையற வெய்துபவராகின்றனர்; என்றார் என்க.
(விளக்கம்) தீதும் நன்றும் பிறர்தர வாரா ஆகலின் நீ பண்டு நுகர்ந்த இன்பத்திற் தெல்லாம் காரணம் முற்பிறப்பிலே நீ செய்த நல்வினையே ஆதல் வேண்டும். அங்ஙனமே நீ இப்பொழுது நுகரும் துன்பத்திற்கும் பண்டு நீ செய்த தீவினையே காரணம் என்று குறிப்பாலுணர்த்துவார், தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்! என்று அடிகளார் விளிப்பாராயினர். இதனாற் போந்த பயன்,
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன் (குறள் - 379)
இடுக்கண் வருங்கால் நகுக! எனத் தேற்றுதல் என்க.
26 - தவம் என்றது ஈண்டு நல்வினையை. அது தீர்ந்தவழி நுகர்ச்சிக்கு வருவது தீவினைப்பயனே ஆகலின் அதனைத் தவந்தீர் மருங்கு என்றார். 27 - மறத்துறை - தீவினை செய்தற்கியன்ற நெறி. அறத்துறை மாக்கள் என்புழி மக்கள் முதனீண்டது; செய்யுள் விகாரம். அறவோர் தமதருள் காரணமாகக் கைம்மாறு சிறிதும் வேண்டாதவராய் மாந்தர்கட்கு அறிவு கொளுத்தி அவரை உய்விக்கப் பெரிதும் வருந்தியும் முயல்கின்றமை தோன்ற நாக்கடிப்பாக வாய்ப்பறை திறத்திற் சாற்றி அறையினும் என்றார். இனி, சிறியார் உணர்ச்சியுள் பெரியார் அறிவுரை பேணிக் கொள்ளவே மென்னும் நோக்குச் சிறிதும் இல்லை என்றிரங்குவார், யாப்பறை மாக்கள் கொள்ளார் என்றொழியாது இயல்பிற் கொள்ளார் என விதந்தார். 31- செய்வார்க்கும் செய்யப்பட்டார்க்கும் துன்பமே தருமியல்புடையது என்பார் தீவினையை வெவ்வினை யென்றொழியாது தீதுடை வெவ்வினை என வேண்டா கூறி வேண்டியது முடித்தார். வெவ்வினை உருத்தகாலை இது யாம் செய்ய வந்ததே என்று அமையும் அறவுமிலார் என்பது தோன்றப் பேதைமை கந்தாப் பெரும் பேதுறுவர் என்றார்.
ஒரு தனிவாழ்க்கை யுரவோர் மாண்பு
33 - 38 : கற்றறி .................. இல்லை
(இதன்பொருள்.) கற்று அறி மாக்கள் - இனி மெய்ந்நூல்களைக் கற்று உறுதிப்பொருளை ஐயந்திரிபற அறிந்துள்ள மேலோர் தாம்; ஒய்யா வினைப்பயன் உண்ணும் காலை - எவ்வாற்றானும் போக்கப் படாத தீவினைப் பயனாகிய துன்பத்தை நுகரும்பொழுது; கையாறு கொள்ளார் - அதற்கிரங்கிச் செயலறவைத் தம் முள்ளத்தே கொள்ளாமல் நுகர்ந்தமைவர்; பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் - இனி, பெண்டிரே உண்டியே பிறவே ஆகிய நுகர்ச்சிப் பொருள்களைப் பிரிதலாலே வரும் துன்பங்களும் அவற்றை எய்துதற் பொருட்டால் வருகின்ற துன்பங்களும்; உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும் - அவற்றைப் பிரிந்த காலத்தே காமனும் நல்குரவென்னும் ஒரு பாவியுமாகிய உருவிலிகள் நெஞ்சத்தே நின்று வருத்துதலாலே வரும் துன்பமும் பிறவுமாகிய துன்பமனைத்தும்; புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது -கைசெய்த கூந்தலையுடைய மகளிரைப் புணர்ந்து மயங்கினார்க் குளவரவனவன்றி; ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை- அம்மயக்க மின்மையால் ஒப்பற்ற துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பேரறிவுடையோர்க்கு இல்லையாம் என்றார்; என்க.
(விளக்கம்) 33. ஒய்யா - போக்கப்படாத. ஊழ்வினையைப் போக்குதற்கு யாதோருபாயமுமில்லை என்பார் ஒய்யா வினைப்பயன் என்றார். முன்னர் நாடுகாண் காதையில் சாரணர் ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை ஒழிக்கவும் ஒண்ணா என்று அறிவுறுத்ததனை நினைந்து கவுந்தி அடிகளார் ஈண்டு இங்ஙனம் அடையுணர்த்துக் கூறுகின்றனர் என்க. 36. கற்றறி மாக்கள் என்புழி மாக்கள் விகாரம். 35-36. பிரிதல் புணர்தல் துன்பங்களை மேலே பெண்டிரும் உண்டியும் என்பதற் கிணங்கப் பொருள் கூறுக. உருவிலாளன் என்பதற்கும் இஃதொக்கும். பெண்டிர்க்குக் காமவேள் என்றும் பொருளுக்கு நல்குரவு என்னும் ஒருபாவி என்றும் கூறிக் கொள்க. 38. ஒரு தனி வாழ்க்கைக்கு ஏதுவினை உடம்படுத்துக் கூறுவார் உரவோர்க்கு என்றார். உரவு ஈண்டு அறிவின் மேலும் ஆற்றல் மேலும் நின்றது.
இடும்பையின் பிறப்பிடம்
39 - 45: பெண்டிரும் .............. ஆதலின்
(இதன்பொருள்.) உலகில் பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று கொண்டோர் இங்ஙனமாகவும் இவ்வுலகத்தின்கண் பெண்டிரும் உணவுமே இன்பந்தரும் பொருள்களாம் என்று மயங்கி அவற்றை நெஞ்சத்தாற் பற்றிக் கொண்ட மாந்தர்; உறூஉம் கொள்ளாத் துன்பம் கண்டனர் ஆகி - அவற்றால் எய்தாநின்ற நெஞ்சகம் கொள்ளாத, மாபெருந் துன்பங்களைக் காட்சியளவையானே நன்குணர்ந்து கொண்டவராதலாலே; கடவுளர் வரைந்த காமம் சார்பாக - அவ்வொரு தனி வாழ்க்கையுரவோராகிய துறவோர் துவரக்கடிந்து ஒதுக்கிய அப் பெருந் துன்பங்கட்கெல்லாம் காரணமாய காமத்தையே தமது வாழ்க்கைக்குச் சார்பாகக் கொண்டு; காதலின் உழந்து - அவற்றின்பாலெழும் வேணவாவினாலே தாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக வந்தெய்தும் அம் மாபெருந் துன்பத்திலே கிடந்துழன்று; ஆங்கு ஏமம் சாரா இடும்பை எய்தினர் - அவ்வழி அவற்றிற்குத் தீர்வு காணப்படாத இடும்பையையும் எய்தியொழிந்தோர்; இன்றே யல்லால் - இற்றைநாள் அறியாத் தேயத்து ஆரிடையுழந்து சிறுமை யுறுகின்றேன் என்கின்ற நீயே அன்றியும்; இறந்தோர் பலரால் இறந்த காலத்தோரும் எண்ணிறந்தோர் ஆயினர் காண்; ஆதலில் தொன்றுபட வரும் தொன்மைத்து ஆதலாலே இந்நிகழ்ச்சி தொன்றுதொட்டு நிகழ்ந்து வருமொரு பழைமையுடைத்துக் காண் என்றார்; என்க.
(விளக்கம்) உலகின்கண் அன்பானும் அறத்தானும் அறிவானும் வருவனவே மெய்யாய இன்பங்களாகவும் அஃதுணராமல் அவாவென்னும் மயக்கத்தாலே பெண்டிரும் உண்டியுமே இன்பம் என்று கொண்டோர் என்பது கருத்து. வாய்மையில் அவை இன்பங்களல்ல என்பார் இன்பம் என்று கொண்டோர் என்றார். 40. கொள்ளாத் துன்பம் - நெஞ்சகம் கொள்ள மாட்டாத பெருந்துன்பம். இனி, தாம் எதிர்கொள்ளாத துன்பம் எனினுமாம். என்னை? அவற்றை இன்பம் என்றே கொண்டனர். எனவே அவையிற்றுள் துன்பம் உண்மையை அறிந்து அதுவும் வருக வென்று கொண்டவரல்ல ராகலான் என்க. 41. கடவுளர் - துறவோர். இவர் தாமும் உலகியலைக் கடந்தவர் ஆகலின் அஃது அவர்க்கும் பெயராயிற்று. கண்டனர் ஆகி என்றது கருதல் முதலிய அளவைகளாலன்றிக் காட்சியளவையானே நன்கு கண்டனராகி என்பதுபட நின்றது. கண்டனர் என்றது வரைதற்கு ஏதுவாய் நின்றது. வரைந்த காமம் - தம்பால் நிகழாது கடியப்பட்ட காமம் என்றவாறு. சார்பு - தமது வாழ்க்கைக்குச் சார்பு. 42. காதலின் என்றது அவற்றின் பாலெழும் வேணவாவினால் என்றவாறாம். என்னை? காமம் சார்பாக வருதலின் காதல் ஈண்டு அதன் நேரிய பொருள் குறியாமல் அவாவைக் குறிப்பதாயிற்று. உழந்து என்னும் சொல்லே துன்பமுழந்து என்பதாயிற்று. ஆங்கு - ஏமம் சாரா இடும்பை என்றது, அத்துன்பத்தினின்றும் உய்தி பெறமாட்டாமையாலெய்தும் கையறு நிலையை. இன்றே யல்லால் என்றது இன்று கையாறு கொள்ளும் நின்னையல்லாமலும் என்றவாறு. இறந்தோர் இறந்த காலத்தினர் பலர் ஆதலின் இந்நிகழ்ச்சி தொன்றுபட வரும் தொன்மைத்து என மாறுக.
எடுத்துக்காட்டு (1)
46 - 49 : தாதை ................ அன்றோ
(இதன்பொருள்.) தாதை ஏவலின் மாதுடன் போகி - தன் தந்தையாகிய தயரத மன்னன் ஏவுதலானே அப் பணி தலைமேற் கொண்டு தன் வாழ்க்கைத் துணைவியோடும் அரசாட்சியைத் துறந்து காட்டகத்தே சென்று; காதலி நீங்க - ஆங்கு அரக்கனொருவன் கவர்ந்து கொள்ளுதலாலே தன்பால் காதன்மிக்க அவ் வாழ்க்கைத்துணைவி நீங்க அவளையும் துறந்து; கடுந்துயர் உழந்தோன் - பொறுக்க வொண்ணாத கடிய துன்பத்திலுழந்தோன் தானும்; வேதமுதல்வன் பயந்தோன் என்பது வேதங்களுக்கெல்லாம் தலைவனாகிய நான்முகனை யீன்றவனாகிய திருமால் என்று இவ்வுலகத்துச் சான்றோர் கூறுவது; நீ அறிந்திலையோ - நீ அறிந்திலையோ! நெடுமொழி அன்றோ - அதுதானும் நெடுங்காலம் இவ்வுலகிலே நடக்கின்றதொரு காப்பியக் கதையன்றோ! என்றார்; என்க.
(விளக்கம்) முன்னர்க் காமம் சார்பாக் காதலின் உழந்து ஏமஞ்சாலா இடும்பை எய்தினர் இறந்த காலத்தும் பலர் என்றவர் எடுத்துக்காட்டாக, தேவருள் சிறந்தான் ஒருவனையும் மக்களுள் சிறந்தானொருவனையும் காட்டுபவர் முதற்கண் தேவருட்சிறந்தானைக் காட்டியபடியாம்.
இனி ஈண்டு எடுத்துக் காட்டிய இராமன் வரலாற்றில் அவன் சீதையைப் புணர்தற்கு வில்லேற்றல் முதலிய துன்பமும் பின்னர் அவளைப் பிரிந்தகாலத்தே அவன் நெஞ்சகங் கொள்ளாவா றெய்திய துன்பமும், அங்ஙனமே தயரதன் இராமனுக்குப் பொருள் புணர்த்தலாகிய முடிசூட்டைக் காரணமாகக் கொண்டு எய்திய மாபெருந் துன்பமும் வந்தமை யுணர்க.
49. அறிந்திலையோ? என்னும் வினாவும் அது நெடு மொழியன்றோ என்னும் வினாவும் அதன் எதிர்மறைப் பொருளாகிய நன்குணர்ந்திருப்பாய் என்பது தேற்றம் என்னும் பொருளை வற்புறுத்தி நின்றன. உணர்ந்தவாற்றால் இவையெல்லாம் வினைப்பயன் என்று கருதி அமைதி; யாப்பறை மாக்கள் போன்று பெரும் பேதுறற்க என்பது இதனாற் போந்த பயனாம். மேல் வருவதற்கும் இஃதொக்கும். நெடுமொழி: ஆகுபெயர். தான் பொதிந்துள்ள வாய்மை காரணமாக உலகின்கண் நெடிது நிலைத்து நிற்கும் பெருங்காப்பியம் என்றவாறு.
எடுத்துக்காட்டு (2)
50 - 57 : வல்லாடாயத்து ........... சொல்லாயோ நீ
(இதன்பொருள்.) வல் ஆடு ஆயத்து மண் அரசு இழந்து மெல்லியல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன் - ஐய இன்னும் நிடதத்தார் மன்னவனாகிய நளன் என்பான்றானும் முன் புட்கரனோடு சூதாடுகளத்தே தன் நாட்டைப் பணயம் வைத்து ஆடித் தன் நாடும் அரசும் இழந்து மெல்லியல்புடைய தமயந்தியோடு வெவ்விய காட்டகம் புக்கவன்; காதலிற் பிரிந்தோன் அல்லன் - அத் தமயந்திபாற் றான்கொண்டுள்ள காதலன்பினின்று நீங்கும் சிறுமையுடையவனும் அல்லன்; காதலி தீதொடுபடூஉம் சிறுமையள் அல்லள் - அங்ஙனமே அவன் காதலி தானும் தீயபண்புடன் சார்கின்ற சிறுமையுடையவளும் அல்லள்; ஆயிழை தன்னை - அத்தகைய அக் கற்பின் செல்வியை; அடவிக் கானகத்து இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது - இங்ஙனமாகவும் அவன் அவளை அடவியாகிய காட்டகத்தே அரை இருள் யாமத்திலே உறக்கத்திலே போகட்டுப் பிரிந்துபோம்படி செய்தது யாது? வல்வினை அன்றோ - முன் செய்த தீவினையன்றோ? மடந்தை தன் பிழை எனச் சொல்லலும் உண்டேல் சொல்லாய் - அதனையன்றி அம் மடந்தைதன் பிழை என்று சொல்லுதற்கு வேறு காரணம் உண்டெனின் சொல்லுக என்றார்; என்க.
(விளக்கம்) 50. வல் - சூதாடு கருவி. ஆயம் -தாயம்; சூதுப்போரில் மண்ணை வைத்து ஆடித் தோற்று மண்ணையும் அரசுரிமையும் இழந்து என்க. 51. கானடையும் வன்மையில்லாமை தோன்ற மெல்லியல் என்று பெயர் கூறினர். காட்டை வெங்கானம் என்றதும் அவளொடு செல்லத்தகாத காடு என்றற்கு. 52. பிறிதொரு பொருண்மேற் சென்ற காதலால் அவளைப் பிரிந்தான் அல்லன் என்பாருமுளர். 53. தீது - கூடாவொழுக்கம், சிறுமை - இழிதகைமை. முல்லைக்கானம் அன்றென்றற்கு அடவிக் கானம் என்றார். அஃதாவது மலைசார்ந்த காடு. 54. கைவிட்டு நீங்கவொண்ணாத இடமும் காலமும் விளங்கித் தோன்ற அடவிக்க னகத்து ...... இடையிருள் யாமத்து என்றார். உறக்கத்தே நீத்தமை தோன்ற இட்டு நீக்கியது என்றார். ஆயிழை தன்னை உறக்கத்தினுள் இட்டு நீக்கியது எனினுமாம். நீங்கியது அவன் செயலன்மையின் நீக்கியது என வல்வினையின் செயலா யோதினர்.
ஈண்டும் நளனுக்குப் பெண்டிர் பொருள் இரண்டும் புணர்தற் றுன்பமும் பிரிதற் றுன்பமும் உண்மையுணர்க. உண்டெனிற் சொல்லாய் என்றது இல்லை என்பதனை வற்புறுத்தற்கு. ஈண்டு நளனும் தீதிலன் தமயந்தியுந் தீதிலள் என்றது இம்மையில் நீவிர் நெறியினீங்கா நீர்மையராய விடத்தும் இத் துயர் நுங்கட்கு எய்தியதற்குக் காரணம் நீவிர் உம்மைச்செய்த தீவினைப் பயனேயன்றிப் பிறிதில்லை என்றுணர்த்தற்பொருட்டாம். இது மக்களுள் சிறந்தான் ஒருவனைக் காட்டியவாறு.
இனி, கோவலனுக்கு இராமனும் நளனும் மனைவியரோடு அறியாத் தேயத்து ஆரிடையுழந்தமை ஒத்தலின் உவமங்காட்டிப் பின்னர்க் கோவலன் அவர்க்கெய்தா நலனொன்றுடையனாதலை அறிவுறுத்து அடிகளார் அவனை அமைதி செய்ய முயல்கின்றார்.
அடிகளாரின் தேற்றுரை
57 - 61 : நீ அனையையும் ............. என்றலும்
(இதன்பொருள்.) நீ ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே - இனி நீதானும் அவர்போலப் பொருளிற் பிரிந்து நறுமலர் மேனி நங்கைநல்லாள் நடுங்கு துயர் எய்த அறியாத்தேயத்து ஆரிடையுழத்தலின் ஒப்பாயேனும் அவர்க்கெய்தா நலனொன்றும் உடையை காண், அஃதியாதெனின் அவ்விருவரும் தத்தம் ஆருயிர்க் காதலியரையும் பிரிந்து கொள்ளாத் துன்பமுழந்தனராக, நீ நின் காதலியோடு பிரியாது வாழ்கின்ற இனிய வாழ்க்கையைப் பெற்றனை யல்லையோ! அவ்வாற்றால்; அனையையும் அல்லை - அவர்கள் போல்கின்றிலை, இந்த நலனை நினைக்கின் நீ நன்கு அமைதிபெறுதல் கூடும். அவ்வழி இனி அமைதி யுடையையாய்; வருந்தாது ஏகி - வருத்தம் சிறிதுமின்றிச் சென்று; மன்னவன் கூடல் பொருந்துழி அறிந்து - இம் மன்னவன் மாநகரினூடே நின்குலத்து வாணிகர் வாழுமிடத்தும் நீ மனைவியோடிருந்து சாவக நோன்புடன் இல்லறத்தினிதிருந்து வாழ்தற்கும் நின் குறிக்கோட்கும் குலத்திற்கும் இணங்கப் பொருளீட்டுதற்கும் இடையூறின்றிப் பொருந்துகின்ற இடம் ஒன்றனையும் ஆராய்ந்து அறிந்துகொண்டு; ஈங்குப் போது என்றலும் - மீண்டும் இங்கு வருவாயாக என்று அருளிச் செய்தலும் என்க.
(விளக்கம்) 67ஆம் அடியினீற்றிலுள்ள நீ என்பதனை 68 ஆம் அடிக்கட் கூட்டி; நீ அனையையும் அல்லை என இயைத்திடுக. நீ ஓராற்றால் அவர் போல்கின்றிலை, அஃதென்னையோ வெனின் அவ்விருவரும் மனைவியரைப் பிரிந்து வருந்தினராக; நீ நின் மனைவியைப் பிரியா வாழ்க்கை பெற்றனையல்லையோ அதனான் என்றவாறு. 58-9 ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றோ என்றது வருந்தாமைக் கேதுவாகியும் நின்றது. இனி மன்னவன் கூடலில் நினக்குப் பொருந்துழியறிந்து மீண்டும் ஈண்டு வருதி என்பதே கவுந்தியடிகளாரின் கருத்தென்பது தேற்றம். அங்ஙனமாயினும் அவர் கூற்று அவனது ஊழ்வினைத் திறத்தினும் பொருந்திய பொருளுடையதாய் அமைந்துவிட்டமை ஈண்டுணரற்பாற்று. என்னை? பொருந்துழி அறிந்துபோ தீங்கு என்னும் அச் சொற்றொடர் கண்ணழித்துப் பொருள் காண்புழி (நீ மன்னவன் கூடலில்) தீங்கு பொருந்துழி அறிந்து போ எனவும் பொருள் பயந்து நிற்றலான். இஃது அவனுக்குத் தீநிமித்தமாய் ஊழின் திறத்தில் அமைந்ததொரு விழுக்காடாகும்.
இனி, கவுந்தியடிகளார் கோவலன் கண்ணகியாரொடு வழித்துணையாய்ப் புறப்படும்பொழுது யானும், மறவுரை நீத்த மாசறு கேள்வியர் அறவுரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த....... மதுரைக்கு ஒன்றியவுள்ளமுடையேனாகலின் போதுவல் போதுமின் என்றுகூறி உடன் வந்தவராதலின், அவர் அப்பொழுதே அவர் கருதியாங்கு அறவுரை கேட்டற்பொருட்டுத் தம்மைப் பிரிந்து போதலும் கூடும். அங்ஙனம் அவரும் பிரிந்தக்கால் ஈண்டுக் கண்ணகிக்குத் துணையாவாரிலரே என்று கவன்று அடிகளாரிடம் சென்று யான் மதுரையுட் புகுந்து மீண்டு வருந்துணையும் அடிகளே இவட்குத் துணையாதல் வேண்டும் என்று கூறுவதே அவன் உட்கிடையாகவும் அங்ஙனம் கூறுதல் அடிகளார் பெருந்தகைமைக்குப் பொருந்தாதென்றுணர்ந்து தன் கருத்துக் குறிப்பாகப் புலப்படுமாறு நனி நாகரிகமாக, தொன்னகர் மருங்கின் மன்னர்பின்னோர்க்கு என்னிலை யுணர்த்தி யான் வருங்காறும் பைந்தொடி பாதக்காப்பினள் ஆகலின் ஈங்கு ஏதமுண்டோ? என்று கூறியதும்; அதற்கு அடிகளாரும் நீ வருந்துணையும் இவட்கு யானே துணையாகுவல் என்னும் தமது கருத்தும் வெளிப்படையானன்றிக் குறிப்பாகவே புலப்படுமாறு நீ வருந்தாதே சென்று வருதி என்னும் தேற்றுரையோடு அமையுமாறு கூறியதும் எண்ணி எண்ணி இன்புறற் பாலனவாம்.
கோவலன் புறஞ்சேரியினின்றும் அகநகரத்துட் புகுதல்
62 - 67 : இளைசூழ் ........... புக்கு
(இதன்பொருள்.) இளை சூழ் மிளையொடு -கட்டு வேலியாலே சூழப்பட்ட காவற்காட்டினோடு ஒருசேர; வளைவுடன் கிடந்த - தானும் வளைந்துகிடந்த; இலங்கு நீர்ப்பரப்பின் வலம் புணர் அகழியில் - விளங்குகின்ற நீர்ப்பரப்பினையுடைய வெற்றி பொருந்துதற்குக் காரணமான அகழியின்கண்; பெருங்கை யானை நிரை இனம் பெயரும் - பெரிய கையினையுடைய யானையின் நிரல்பட்ட இனங்களாகிய படைகள் அகத்தே புகுதற்பொருட்டு அமைக்கப்பட்ட; சுருங்கை வீதி மருங்கில் போகி - சுருங்கையையுடைய வீதியைக் கடந்து சென்று; கடிமதில் வாயில் காவலின் சிறந்த - அப்பால் உயர்ந்த மதிலினது வாயிலைக் காக்குந் தொழிலிலே பெரிதும் சிறப்புடைய; அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு - கொல்லும் வாட்படையேந்திய யவனரால் இவன் புதியவன் என்று ஐயப்படாதவண்ணம் சென்று அம் மதில் வாயிலையும் கடந்து அகத்தே புகுந்து என்க.
(விளக்கம்) 62. இளை - கட்டுவேலி. மிளை - காவற்காடு. 63. வலம் - வெற்றி; வெற்றியை மன்னர்க்குப் புணர்க்கும் அகழி என்றவாறு. சுருங்கை - கரந்துபடை. 67. யவனர் - மேலைநாட்டினர், துருக்கர் என்பர் அடியார்க்குநல்லார். அயிராது - ஐயமுறாது; ஐயமுறாதவண்ணம் புக்கு என்க. அஃதாவது நெஞ்சில் வஞ்சமின்மையின் அத்தகு மெய்ப்பாடுகள் சிறிதுமின்றிப் புகுந்தானாதலின் வாயிலோர் அயிராது புக விடுத்தனர் என்பது கருத்து.
கோவலன் மதுரையிற் கண்ட காட்சிகள்
67 - 75: ஆங்கு ................. புனலாட்டமர்ந்து
(இதன்பொருள்.) ஆங்கு - அவ்விடத்தே அமைந்த; ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய் திறந்தன்ன - ஆயிரம் கண்ணையுடைய அமரர் கோமானுடைய பெறுதற்கரிய மணியணிகலங்களைப் பெய்துவைத்த பணிப் பெட்டகத்தின் மூடியைத் திறந்து வைத்தாற்போன்ற வியத்தகு காட்சியமைந்த; மதில் அக வரைப்பில்-மதிலரண் சூழ்ந்த அகநகர்ப் பரப்பின்கண்; குடகாற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் மிகவும் விரைந்தியங்குகின்ற கோடைக்காற்று மோதுதலானே கொடியின்கண் துகில் மிக்கு நுடங்குகின்ற மறுகின்கண் வாழ்வோராகிய; கடைகழி மகளிர் - மகளிர்க்கியன்ற அறத்தின் வரம்பு கடந்து ஒழுகுகின்ற பொதுமகளிர்; காதல் அம் செல்வரொடு - தாம் விரும்புகின்ற செல்வத்தோடே அழகும் மிக்கவராகிய காமுகரோடு கூடி; வருபுனல் வையை மருது ஓங்கு துறைமுன் - இடையறாது வந்து பெருகும் நீரையுடைய வையைப் பேரியாற்றின்கண்; மருது ஓங்கு துறைமுன் - மருதமரங்கள் மிக்குயர்ந்து நிற்றலானே திருமருத முன்றுறை என்று சிறப்பித்துக் கூறப்படுகின்ற நீராடு பெருந்துறையினின்றும்; விரிபூந்துருத்தி வெள்மணல் அடைகரை - மலர்கின்ற பூக்களையுடைய இடைக்குறையினது வெளிய மணலாலியன்ற அடைகரைக்கு; ஓங்கு நீர் மாடமொடு நாவாயியக்கி - உயர்ந்த பள்ளியோடத்தையும் தோணிகளையும் ஏறிச் செலுத்தியும் அவ்விடைக் குறைமருங்கில்; பூம்புணை தழீஇப் புனல் ஆட்டு அமர்ந்து - பொலிவுடைய தெப்பங்களைத் தழுவிக் கொண்டு நீந்தியும் இவ்வாறு நீர்விளையாட்டை விரும்பியும் என்க.
(விளக்கம்) அகநகரத்தே அணியுடன் றிகழும் மாடமாளிகைகளின் செறிவும் அளந்து கடையறியா வளங்கெழு தாரமொடு புத்தேன் உலகம் கவினிக் காண்வர மிக்குப்புகழ் எய்திய மதுரை என்பர் மாங்குடி மருதனார். மற்று ஈண்டு அடிகளார் அந்த மதுரையின் அகநகரை அவரினும் பன்மடங்கு விஞ்சி ஆயிரங்கண்ணோன் அருங்கலச் செப்பு வாய்திறந்தன்ன மதிலக வரைப்பு என வியத்தகுமோருவமை தேர்ந்தோதுதலுணர்ந்து மகிழ்க. 70. ஆடித்திங்கள் என்பது தோன்ற, கோடைக் காற்றுக் கூறினர். 71. கடைகழி மகளிர் என்றது மகளிர்க்கியன்ற அறத்தின் வரம்பைக் கடந்தொழுகும் மகளிர் என்றவாறு. எனவே வரைவில் மகளிர் என்றாராயிற்று. காதல் அம் செல்வர் என்பதற்கு அடியார்க்குநல்லார் கூறும் உரை ஆற்றவும் இனிதாம். அதனையே யாமும் கூறினாம். 72. மருதோங்கு முன்றுறை என்றது திருமருத முன்றுறை. இத் துறை பண்டைக்காலத்துச் சிறந்திருந்தமை பிற நூல்களானும் உணரலாம். முன்றுறை - முன்பின்னாக மாறிநின்ற தொகைச்சொல். முன்றுறையினின்றும் நீர்மாடத்தும் நாவாயினும் சென்று துருத்தியின் மணலடைகரை எய்தி அவ்விடத்தே புணையான் நீந்தி ஆடினர் என்று கொள்க.
இது - மதுரை மாந்தர் பரத்தையரோடுகூடிச் சிறுபொழுதாறனுள் முதலாவதாகிய காலைப் பொழுதினைப் போக்கும்முறை கூறியவாறாம்.
நண்பகல்
76-82 : தண்ணறு ................ அமர்ந்தாங்கு
(இதன்பொருள்.) தண் நறுமுல்லையும் தாழ்நீர்க் குவளையும் கண் அவிழ் நெய்தலும் கதுப்பு உற அடைச்சி - இனி, குளிர்ந்த நறு மணங்கமழும் முல்லை மலரையும் ஆழ்ந்த நீர்நிலையிலே மலர்ந்த வளவிய குவளைமலரையும் தமது கண்போல மலர்ந்த நெய்தன் மலர்களையும் தமது கொண்டையிலே மிகுதியாகச் செருகி; வெள்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண் செங்கழுநீர்த் தாதுவிரி பிணையல் - வெண்மை நிறத்தாற் றிகழ்கின்ற மல்லிகையின் மலர்ந்த மலர்களோடே குளிர்ந்த செங்கழு நீர்மலரைக் கால் நெருங்கத் தொடுத்தமையாலே தலைமலர்ந்த மாலையை; கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு - தமது கொற்கைத் துறையிற் பிறந்த பெருமுத்தாற் செய்த வடத்தோடே மார்பகத்தே பூண்டு; தெக்கண மலயச் செழுஞ்சேறு ஆடி - தமது நாட்டின் தென்றிசைக் கண்ணதாகிய பொதியமலையிற் பிறந்த வளவிய சந்தனக் குழம்பைத் தமது மேனிமுழுதும் மட்டித்து; பொன்கொடி மூதூர்ப் பொழிலாட்டு அமர்ந்து - பொன்னாற் செய்த கொடிகளையுடைய பழையதாகிய தமது நகர்க்கு அயலவாகிய பூம்பொழில்களிலே புகுந்து ஆடுகின்ற விளையாட்டைப் பெரிதும் விரும்பி; என்க.
(விளக்கம்) 76. தாழ்தல் - ஆழ்தல். 77. கண்ணவிழ் - கண் போன்று மலர்ந்த: உவமவுருபு தொக்கது. கதுப்பு - கொண்டை. விரியல் - மலர்ந்த பூ. 80. கொற்கை - பாண்டியனாட்டில் ஒரு பட்டினம். ஈண்டுக் கிடைக்கும் முத்துச் சிறப்புடையது. முத்து - வடம்; ஆகுபெயர். 81. தெக்கணம் - வடமொழித் திரிபு. மலயத்திற் பிறந்த கொழுவிய சந்தனச் சேறு என்றவாறு. ஆங்கு : அசை. இஃது அவர் நண்பகற்பொழுது கழிக்குமாறு.
*எற்படு பொழுது
83 - 97 : எற்படு ............ காலமன்றியும்
(இதன்பொருள்.) எல் படு பொழுதின் - அந்திமாலைப் பொழுதின் கண் அப் பூம்பொழிலினின்றும் வந்து; இளநிலா முன்றில் தாழ்தரு கோலந் தகை பாராட்ட - இளநிலாத் தவழும் மேனிலை மாடத்து நிலாமுற்றத்திலேறி அவ்விடத்தே முன்னர்த் தாம் நீரினும் பூம்பொழிலினும் விளையாடியதனால் இளைத்த தன்மையைத் தங் கொழுநர் நலம் பாராட்டுமாற்றால் தீர்க்க; வீழ்பூஞ் சேக்கை மேல் இனிது இருந்து - ஒருவரையொருவர் பெரிதும் விரும்புதற்கிடனான மலர்ப்பாயலிலே கூடிமுயங்கி இன்பத்துள் அழுந்தியிருந்து; ஆங்கு - அப்பால்; அரத்தப் பூம்பட்டு அரைமிசை உடீஇ - துகில் களைந்து சிவந்த பூத்தொழிலமைந்த பட்டாடையைத் தம்மிடையிலுடுத்து; குரல் தலைக்கூந்தல் - பூம் பொழில் விளையாட்டிற் கொய்து சூடிப் பின்னர்க் கூட்டத்தாற் குலைந்த பூங்கொத்துக்களையுடைய இடத்தையுடைய கூந்தலின் கண் அவற்றைக் களைந்து; குடசம் பொருந்தி - செங்குடசப் பூவைப் பொருந்த வைத்து முடிந்து; சிறுமலைச் சிலம்பின் செங்கூதாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாள்மலர் வேய்ந்து - சிறுமலை என்னும் மலையின்கண் அரிதின்மலரும் நறிய மலரையுடைய குறிஞ்சியினது புதுப்பூவைச் சூடி கொங்கையின் குங்கும வருணம் இழைத்து - கொங்கையின் மேலே குங்கும நிறமுடைய வருணத்தாலே கோலம் எழுதி; சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில் - சிவந்த நறுமணச்சுண்ணம் அப்பிய மார்பகத்தே; செங்கோடு வேரிச் செழும்பூம் பிணையல் அம் துகிர்க் கோவை அணியொடு பூண்டு - சிவந்த கொடுவேரியின் செழிப்புமிக்க பூவாற்றொடுத்த மாலையினை அழகிய பவளக் கோவையோடு பூண்டு; மலைச் சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு - பறந்து திரியும் மலைகளின் சிறகினை அரிந்த வச்சிரப் படையையுடைய இந்திரனுக்கு; கலி கெழுகூடல் செவ்வணி காட்ட - ஆரவாரம் பொருந்திய அம் மதுரை மாநகரத்தில் தாம் இங்ஙனம் செவ்வணி அணிந்து காட்டற் பொருட்டு; கார் அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் - முகிலை ஆளுகின்ற காலமாகிய அரசன் தன் பணி யாளனாகிய வாடை என்பானோடு வருகின்ற அக்காலமும்; அக் காலம் அன்றியும்; என்க.
(விளக்கம்) 71. கடைகழி மகளிர் காதலம் செல்வரொடு காலைப் பொழுதில், 72. வையைத் துறையில், 75. புனலாட்டமர்ந்து நண்பகலில், 82. பொழிலாட்டமர்ந்து பின்னர், 83. எற்படு பொழுதில் இளநிலா முன்றிலே அச் செல்வர் பாராட்டச் சேக்கைமேலிருந்து பின்னர், அம் முதுவேனிற் பருவம் தீர்ந்தபின் கார்ப்பருவம் முதலியவற்றின்கண் அக் காதலஞ் செல்வரொடு தாம் இன்பநுகருமாற்றை (76 ஆம் அடி முதலாக) தம் அகக்கண்ணால் கண்டு மகிழ்வாராக. அடிகளார் அம் மதுரையில் ஏனைய பருவங்களினும் எய்தும் இன்பத்தை விதந்தோதுகின்றனர் என்றுணர்க. இஃதோர் அழகிய புலமை வித்தகமாம். 86. அரை என்பதற்கு ஆகுபெயரான் மேகலை என்று கூறிச் செம்பட்டை மேகலைமீதே உடுத்து என்பர். 87. குடசம் - வெட்பாலை - சிறுமலை: பெயர். தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் என முன்னும் (நாடுகாண்-85) வந்தமை நினைக. நறுமலர் குறிஞ்சி மலர்களினும் செவ்வி மலர் தேர்ந்தணிந்தென்பார் நாண்மலர் அணிந்து என்று விதந்தார். இது பன்னீராட்டைக் கொருமுறை மலரும் என்ப 71. கடைகழி மகளிர் இங்ஙனம் தாம் செவ்வணி அணிந்து கூடலின் கண் வச்சிர வேந்தற்குக் காட்டுதற்குரிய காலமாகிய காரரசாளன் வாடையொடு வருங்காலம் என்க. எனவே ஈண்டுக் கூறப்பட்ட குடசம் முதலிய செம்மலர்கள் கார்ப்பருவத்தே மலர்வன என்பதும் அவற்றை மலர்விக்கும் கார்ப்பருவத்து முகில்கட்கு அரசனாகலின் அச் செய்ந்நன்றி கருதி வச்சிர வேந்தனுக்குக் காட்ட எண்ணினர் என்பதும் பெற்றாம். கார் அரசாளன் என்றது அப் பருவம் நிகழும் காலத்தை.
இது, கார்ப்பருவத்துக் கடைகழி மகளிர் கோலங் கொள்ளுமாற்றைக் கூறியபடியாம்.
கூதிர்ப்பருவ நினைவு
97 - 101 : நூலோர் ............ கூதிர்க்காலையும்
(இதன்பொருள்.) நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடத்து - இனி, சிற்பநூலோர் தம் நூன்முறைப்படி சிறப்பித்துச் செய்யப்பட்ட முகில்களைத் தடவுமாறுயர்ந்த மேனிலைமாடத்துப் பள்ளியறைக்கண் அக்காலத்துக் கொடுங்குளிரை மாற்றித் தம்முடம்பையும் தம்மைத் தழுவும் நம்பியருடம்பையும் வெப்பமேற்றுதற் பொருட்டு; நறுஞ்சாந்து அகலத்து நம்பியர் தம்மொடு - நறிய சந்தனம் நீவிய மார்பையுடைய அந்நகர நம்பியரோடு ஒருங்கிருந்து; மடவரல் மகளிர்தரு அகில் விறகின் தடவு நெருப்பு அமர்ந்து - மடப்பம் வருதலையுடைய அப் பரத்தை மகளிர் மரக்கலங்கள் கொணர்ந்து தந்த அகிலாகிய நறுமணங் கமழும் விறகிட்டு மூட்டிய தடாக்களிலே கனலாநின்ற தீக்காய்தலை விரும்பி; குறுங்கண் அடைக்கும் - அம் மாடத்தின்கண் குறிய கண்களையுடைய சாளரங்களை வாடைகாற்றுப் புகாவண்ணம் சிக்கென அடைத்தற்குக் காரணமான; கூதிர்காலையும் கூதிராகிய காலமும் என்க;
(விளக்கம்) இது கூதிர்ப்பருவத்தே (பரத்தை மகளிர் தம்மை விரும்பிவரும் நகர நம்பியரோடு) தடவு நெருப்பினால் உடம்பினை வெப்பமேற்றிக்கொண்டு இன்ப நுகருதலை எண்ணியவாறாம். கூதிர் முதலிய குளிர்ப் பருவங்களிலே வெப்பம் காமப் பண்பிற்கு ஆக்கஞ் செய்யும்; மற்று இளவேனில் முதலிய வெப்பமுடைய பருவங்களிலே குளிர் அப் பண்பிற்கு ஆக்கமாம். ஈண்டு மனையறம்படுத்த காதைக் கண் குளிர்தரு தென்றலை விரும்பி மகளிர் சாளரம் திறக்கின்ற செவ்வி பார்த்து, கோலச் சாளரங் ருறுங்கண் நுழைத்து வண்டொடுபுக்க மணவாய்த் தென்றல் கண்டுளஞ் சிறந்து என வருகின்ற அடிகள் நினைவிற் கொள்ளற்பாலன. மற்றுக் கூதிர்ப்பருவத்தே தடவு நெருப்பமர்ந்து என்னுமிதனோடு
கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப (53-7)
எனவும்,
....... .......... .......... ........ ....... .........
பகுவாய்த் தடவில் செந்நெருப் பார (61)
எனவும் வரும் நெடுநல்வாடை அடிகள் நினைவுகூரற்பாலன.
முன்பனிப் பருவ நினைவு
102 - 105 : வளமனை .............. அச்சிரக்காலையும்
(இதன்பொருள்.) வளமனை மகளிரும் மைந்தரும் - வளப்பம் பொருந்திய மனையின்கண் வாழும் மகளிரும் ஆடவரும்; இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர விரும்பி - இளைதாகிய நிலாவொளியை நுகர்தற்கியன்ற நிலாமுற்றத்திலே ஏறி அந்நிலவொளியை விரும்பாராய் மேலைத்திசையில் வீழ்கின்ற ஞாயிற்றினது பச்சை வெயிலை நுகர்தற்கு அவாவுமாறு; விரிகதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு - ஒளிவிரிக்கின்ற அஞ்ஞாயிற்று மண்டிலம் ஆற்றவும் தென்கிழக்கிலே தோன்றி மறைதற்குக் காரணமாய்; அரிதில் வெண்மழை தோன்றும் - ஒவ்வொரு பொழுதில் வெண்முகில் தோன்றுதற்கிடனான; அச்சிரக்காலையும் - முன்பனிக் காலமும் எவ்விடத்துள்ளன? என்க.
(விளக்கம்) இள நிலா என்றது மாலைப்பொழுதில் தோன்றும் வளர்பிறைப் பக்கத்து நிலவுகளை. நுகர்தல் கண்ணாற் பார்த்து அதன் அழகால் உள்ளுள்ளே மகிழ்தல். வெண்மழை - வெள்ளை முகில்; பனிமாசுமாம் எவ்விடத்துள்ளன என ஒரு சொல் வருவிக்க.
பின்பனிக் காலம்
106 - 112 : ஆங்கதன்றியும் ........... யாண்டுளன்
(இதன்பொருள்.) ஆங்கு அது அன்றியும் - அந்த முன்பனிக்காலம் அல்லாமலும்; தொண்டியோர் ஓங்கு இரும்பரப்பின் வங்க சட்டத்து இட்ட - தொண்டிப்பட்டினத்தில் உள்ள வணிகர் கீழ்த்திசையில் உள்ள நாடுகளிற் சென்று தொகுத்து உயர்ந்த அலைகளையுடைய பெரிய நீர்ப்பரப்பையுடைய கடலின்கண் தமது மரக்கலங்களின் தொகுதியுள் இட்டுக்கொணரும்; அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகு கருப்பூரமும் சுமந்து உடன் வந்த - அகிலும் பட்டும் சந்தனமும் நறுமணப் பொருளும் கருப்பூரமும் என்னும் இவற்றை அவ்வங்கத்திரளோடு சுமந்து வந்த; கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும் - தன் நண்பனாகிய கொண்டற் காற்றோடு பாண்டியனுடைய மதுரையிலே புகுந்து வெவ்விய கண்ணையுடைய காமவேளுடைய வில் வெற்றி நிகழாநின்ற திருவிழாவைக் கண்டு களிக்கும்; பங்குனி முயக்கத்துப் பனி அரசு யாண்டு உளன் - பங்குனித் திங்கள் ஈறாகப் பொருந்திய பின்பனிக் காலமாகிய அரசன் எவ்விடத்துளன்? என்க.
(விளக்கம்) இதற்குக் குணதிசைக்கண் தொண்டி என்னும் பதியிலுள்ள அரசரால் வங்கத்திரளோடு திறையிடப்பட்ட அகில் முதலிய பொருள்கள் என அடியார்க்குநல்லார் கூறும் உரை பொருந்தாமை யுணர்க. தொண்டியில் உள்ள வணிகர் கீழ்த்திசையிலுள்ள கடலிடையிட்ட நாடுகளிற் கலத்தொடு சென்று ஈட்டிக்கொணரும் அகில் முதலியன என்பதே சிறந்த உரையாம். கொண்டல் - கீழ்த்திசைக் காற்று - இக்காற்று மரக்கலங்களையும் அவற்றில் கொணரும் அகில் முதலியவற்றின் மணங்களையும் சுமந்து வந்தது என்க. கொண்டற் காற்று பங்குனித் திங்களில் வருவது இயல்பு. ஆதலின் அதனை அக்காலத்திற்கு நண்பன் என்றார், அடியார்க்குநல்லார்.
இனி, அவர் தொரு என்பதனை அகில் துகில் ஆரம் வாசம் கருப்பூரம் முதலியவற்றோடும் தனித்தனி கூட்டி உரைக்கின்ற பொருள் வருமாறு:
அகில் : அருமணவன் தக்கோலி கிடாரவன் காரகில் என்று சொல்லப்பட்ட பலவகைத்தாய தொகுதியும், துகில் : கோசிகம் பீதகம் பச்சிலை அரத்தம் நுண்டுகில் சுண்ணம் வடகம் பஞ்சு இரட்டு பாடகம் கோங்கலர் கோபம் சித்திரக்கம்மி குருதி கரியல் பாடகம் பரியட்டக் காசு வேதங்கம் புங்கர்க் காழகம் சில்லிகை தூரியம் பங்கம் தத்தியம் வண்ணடை கவற்றுமடி நூல்யாப்பு திருக்கு தேவாங்கு பொன்னெழுத்து குச்சரி தேவகிரி காத்தூலம் இறைஞ்சி வெண்பொத்தி செம்பொத்தி பணிப்பொத்தியென்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், ஆரம் : மலையாரம் தீமுரன்பச்சை கிழான்பச்சை பச்சை வெட்டை அரிசந்தனம் வேரச்சுக் கொடியென்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், வாசம் : அம்பர் எச்சம் கத்தூரி சவாது சாந்து குங்குமம் பனிநீர் புழுகு தக்கோலம் நாகப்பூ இலவங்கம் சாதிக்காய் வசுவாகி நிரியாசம் தைலம் என்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், கருப்பூரம் : மலைச்சரக்கு கலை அடைவு சரக்கு மார்பு இளமார்பு ஆரூர்க்கால் கையொட்டுக்கால் மாரப்பற்று வராசான்கும டெறிவான் உருக்குருக்கு வாறோசு சூடன் சீனச்சூடன் என்று பெயர் கூறப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும் எனத் தொகுத்தும் விரித்தும் பொருளுரைக்க எனவரும்.
இளவேனில்
113 - 117 : கோதை ........... கொல்லென்று
(இதன்பொருள்.) கோதை மாதவி கொழுங்கொடி எடுப்ப - மாலை போல மலருகின்ற குருக்கத்தி வளவிய கொடியை உயர்த்தவும்; காவும் கானமும் கடிமலர் ஏந்த - இளமரக்காவும் நந்தவனமும் மணமுடைய மலர்களை ஏந்தா நிற்பவும்; தென்னவன் பொதியில் தென்றலோடு புகுந்து - பாண்டியனுடைய பொதியமலைக்குரிய தென்றற் காற்றோடு வந்து புகுந்து; மன்னவன் கூடல் மகிழ்துணை தழுவும் - அப்பாண்டியனுடைய மதுரை நகரின்கண் காதலாலே தம்முள் மகிழ்கின்ற காதலர்களைத் தழுவிக்கொள்ளச் செய்கின்ற இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று - இனிய இளவேனில் என்னும் அரசன் எவ்விடத்துளனோ என்று; என்க.
(விளக்கம்) மாதவி - குருக்கத்தி. கானம் - பூம்பொழிலுமாம். தழூஉம் - தழுவுவிக்கும் எனப் பிறவினைப் பொருள் குறித்து நின்றது கொல் : அசை.
118 - 119 : உருவ .................. காலை
(இதன்பொருள்.) உருவக் கொடியோர் உடைப்பெரும் கொழுநரொடு பருவம் எண்ணும் - அழகிய பூங்கொடி போல்பவராகிய மகளிர் தம்மையுடைய பெரிய காதலரோடு இங்ஙனமாகிய இன்பங்களை நுகர்தற்குரிய அவ்வப் பருவ வரவை நினைகின்ற; படர்தீர் காலை - துன்பம் நீங்கிய காலத்தில்; என்க.
(விளக்கம்) உருவம் - அழகு. கொடி - பூங்கொடி. இதுநாறுங் கூறப்பட்ட இவரைப் புறவீதி மகளிராய் முற்கூறிய கடைகழி மகளிர் என்பர் அடியார்க்கு நல்லார்.
முதுவேனிற் காலம்
120 - 125: கன்றமர் .......... நாள்
(இதன்பொருள்.) கன்று அமர் ஆயமொடு களிற்று இனம் நடுங்க - கன்றுகளை விரும்புகின்ற பிடிக்கூட்டங்களோடே அவற்றைக் காக்கும் களிற்றியானைக் கூட்டமும் கண்டு அச்சத்தால் நடுங்கும் படி; என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டுக் காடு தீப்பிறப்பகனை எரி பொத்தி - வெயில் நிலைபெற்ற மலைசார்ந்த நல்ல நாடாகிய குறிஞ்சி நிலத்திலேயுள்ள காடுகளில் நெருப்புத் தோன்றச் செய்து அவற்றை முழங்குகின்ற அழலை மூட்டி; கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட வேனில் வேந்தன் - கோடைக் காற்றோடு வந்து புகுந்து மதுரையை ஆட்சி செய்த முதுவேனில் என்னும் அரசன்; வேற்றுப்புலம் படர ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள் - தனதாட்சியைக் கைவிட்டு வேறிடங்களுக்குப் போவதற்கு நினைக்கின்ற மிக்க வெயிலையுடைய இறுதி நாளிலே; என்க.
(விளக்கம்) ஆயம் - கூட்டம். கன்றவர் என்றதனால் பிடிக் கூட்டம் என்க. காட்டின்கண் தீமூள அதுகண்டு யானைகள் நடுங்க என்றவாறு. என்றூழ் - வெயில். கோடையில் காட்டுத்தீ தோன்றுதலியல்பு. ஓசனித்தல் - போதற்கு ஒருப்பட்டு முயலுதல்; உடை திரை முத்தஞ் சிந்தவோ சனிக்கின்ற வன்னம் எனவரும் சிந்தாமணியினும் (2652) அஃது அப் பொருட்டாதல் உணர்க. வேற்றுப் புலம்படர என்றதற்கு ஓரோர் தேயத்திற்கு ஓரொரு காலம் மாறி நிகழ்தலின் வேற்றுப் புலம்படர வென்பர் அடியார்க்குநல்லார்.
இதுவுமது
126 - 133 : வையமும் ............... மயங்கி
(இதன்பொருள்.) வையமும் சிவிகையும் மணிக்கால் அமளியும் உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் - கூடாரப் பண்டியும் கடகத்தண்டும் பல்லக்குமாகிய சிவிகைகளும் வரிசையாகப் பெற்றதேயன்றி நீராவிச் சோலைக்கண்ணே தனக்குப் பொருந்திய துணையாய் வந்து விளையாடும் மகிழ்ச்சிக்குக் காரணமான சிறப்பும்; சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும் கூர் நுனை வாளும் - கவரிமயிராலியன்ற சாமரை இரட்டுதலும் பொன்னாலியன்ற அடைப்பை ஏந்துதலும் கூரிய நுனியையுடைய உடைவாள் எடுத்தலும் ஆகிய சிறப்புகளும்; கோமகன் கொடுப்ப - தம் அரசன் தமக்கு வழங்குதலாலே; பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் பொன்தொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து - அச் சிறப்புகள் வழிவழியாக மாறாமல் வருகின்ற வாழ்க்கையை யுடைய பொன்னாலியன்ற வளையலணிந்த அம் மகளிர் நாள்தோறும் புதியவரோடு மணம் புணர்ந்து; செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய அம் தீந் தேறல் மாந்தினர் மயங்கி - செம்பொன்னாலியன்ற வள்ளத்தில் ஏவல் மகளிர் ஏந்திக்கொடுக்கும் அழகிய இனிய கள்ளாகிய தேறலைப் பருகினராய்ப் பின்னும் மயங்கி; என்க.
(விளக்கம்) வையம் - ஒருவகை வண்டி. சிவிகை - கடகத்தண்டும் பல்லக்கும் என இருவகைப்படும். உய்யானம் - விளையாட்டுப் பொழில். அங்கு நீர்நிலையும் இருத்தலால் நீராவிச்சோலை என்றார் (அடியார்க்கு நல்லார்.) இம்மகளிர் அரசனோடு விளையாடும்பொழுது மெய்தொட்டும் புணைதழுவியும் விளையாடுகின்ற உரிமை பெற்றவர் ஆவர். மேலும் கவரி இரட்டுதலும் அடைப்பை ஏந்தலும் உடை வாள் எடுத்தலும் ஆகிய சிறப்புரிமை பெற்றவரும் ஆவார். இச் சிறப்புகள் வழி வழியாக அவர் மரபுக்கு உரியன என்பது தோன்ற, பிறழா வாழ்க்கை என்றார். செல்வம் என்றது இச் சிறப்புகளை என்க. சாமரை - கவரிமான் மயிராலியன்றது என்பது தோன்ற, சாமரைக் கவரி என்றார். புதுமணம் புணர்ந்தமையால் உண்டான இளைப்புத் தீர்தற்குத் தேறல் பருகுவர் என்றவாறு.
இதுவுமது
134 - 145 : பொறிவரி ............. வீதியும்
(இதன்பொருள்.) காவி அம் கண்ணார் - நீலமலர் போலும் கண்ணையுடைய அம் மகளிர்; பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் நறுமலர் மாலையின் வறிது இடம் கடிந்து ஆங்கு - கள் மயக்கத்தால் இமையில் மறைகின்ற தமது விழிகளைப் பூவின் இதழில் மறைகின்ற தமது இனம் என்று கருதிச் சேர்ந்த பொறியையும் பாட்டையும் உடைய வண்டுகளை அகற்றக் கருதியவர் கை சோர்ந்து நறிய மலர் மாலையாலே அவ் வண்டுகள் மொய்த்த இடத்தில் அல்லாமல் வறிய இடங்களிலே புடைத்து முன்னர்; இலவு இதழ்ச் செவ்வாய் இளமுத்து அரும்பப் புலவிக் காலத்து போற்றாது உரைத்த கட்டுரை எட்டுக்கு நாவொடு நவிலா நகைபடு கிளவியும் - இலவ மலர் போலும் தமது சிவந்த வாயின்கண் இளமுத்துப் போன்ற தமது எயிறுகள் அரும்பும்படி தம்முடைய காதலரோடு ஊடிய பொழுது கூறக்கருதியவற்றைக் கூறாமலே விடுத்து மயக்கம் காரணமாகச் செவ்வி தேறாமல் கூறிய புலவிப் பொருள் பொதிந்த சொல்லாகிய எட்டு வகை இடத்தோடும் பொருந்த நாவினாலே எழுத்துருவம்படக் கூறப்பெறாமல் குழறுதலாலே கேட்டோர்க்கு நகைச்சுவை தோற்றுவிக்கும் மொழியும்; அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்து அன்ன செங்கயல் நெடுங்கண் செழுங்கடைப் பூசலும் - அழகிய செங்கழுநீர் அரும்பை நெகிழ்த்துப் பார்த்தாலொத்த சிவந்த கயல்போலும் நெடிய கண்ணினது கடையால் செய்த பூசலும்; கொலை வில் புருவத்துக் கொழுங்கடை சுருளத் திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும் - கொலை செய்தற்குக் குனித்த வில்லைப்போன்று புருவத்தின் கோடிகள் வளையாநிற்பத் திலகம் பொருந்திய சிறிய நுதலின்கண் அரும்பிய வியர்வையுமாகிய இவை தீரும்; செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வரொடு வையம் காவலர் மகிழ்தரு வீதியும் - செவ்வி பார்த்து வருந்துகின்ற செழிப்புடைய குடியிற் பிறந்த செல்வரோடே உலகத்தைக் காவல் செய்கின்ற மன்னர்களும் விரும்புதற்குக் காரணமான வீதியும்; என்க.
(விளக்கம்) பொறி - புள்ளி. வரி - வரிப்பாட்டு; கோடு எனினுமாம். புல்லுதல் - தம் இனமென்று கருதித் தழுவுதல். கள்ளுண்டு மயங்கிய மகளிருடைய கண்கள் இமையுள் மூழ்குவது கண்டு அவற்றை வண்டுகள் பூவிதழுள் மறைகின்ற வண்டுகள் என்று கருதிப் புல்லும் எனவும் அவற்றை ஒட்டக் கருதி அம் மகளிர் மாலையாலே புடைப்பவர் அவை இல்லாத இடங்களிலே கைசோர்ந்து புடைப்பர் எனவும் கொள்க. இதனோடு :
ஒருத்தி, கணங்கொண்டவை மூசக் கையாற்றாள் பூண்ட, மணங்கமழ் கோதை பரிவுகொண்டோச்சி (கலி. 92 : 45 - 50) எனவும், ஒருத்தி, இறந்தகளியா ணிதழ்மறைந்த கண்ணள், பறந்தவைமூசக் கடிவாள் கடியும், இடந்தேற்றாள் சோர்ந்தனள்கை (கலி. 92:48-50) எனவும் வருவனவற்றை ஒப்புநோக்குக.
கட்டுரை - புலவிப் பொருள் பொதிந்த வுரை. எட்டு - எண்வகை இடம்; அவையாவன: தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் என்பன. இதற்கு எடுக்குநர்; எடுக்கும் எனவும் பாடம்.
கிளவியும் பூசலும் வியரும் தீரும் செவ்விபார்க்கும் செல்வர்; என்க. இம்மகளிர் அரசன் காவன் மகளிர்; என்க.
இதுவுமது
146 - 147: சுடுமண் ............... வாழ்க்கை
(இதன்பொருள்.) வடுநீங்கு சிறப்பின் முடி அரசு ஒடுங்கும் கடிமனை சுடுமண் ஏறா வாழ்க்கை - கொடுங்கோன்மையாகிய குற்றம் நீங்கும் செங்கோற் சிறப்பினையுடைய முடி சூடிய அரசரும் தங்கி இருத்தற்குரிய காவலையுடைய குற்றப்படாத தூய வாழ்க்கையையுடைய; என்க.
(விளக்கம்) இனி, சுடுமண் ஏறா என்பதனை மனைக்கு அடையாக்கி ஓடு வேயாத மனை என்பாரும் உளர். அவ்வுரை சிறப்பின்று. இனி, கூத்தியர் சாதியில் குற்றப்பட்டால் தலையிலே செங்கல் ஏற்றி ஊர் சூழ்வித்துக் கழித்து விடுதல் மரபு; இதனை, மற்றவன் றன்னால் மணிமேகலைதனைப் பொற்றேர்க்கொண்டு போதேனாகிற் சுடுமணேற்றி யாங்குஞ் சூழ் போகி, வடுவொடு வாழுமடந்தையர் தம் மோரனையேனாகி யரங்கக் கூத்தியர், மனையகம் புகாஅ மரபினன் என, மணிமேகலையிற் (18:31-6) சித்திராபதி வஞ்சினங் கூறுதலானு மறிக.
இதுவுமது
148 - 151 : வேத்தியல் ............ உணர்ந்து
(இதன்பொருள்.) வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து மாத்திரை அறிந்து மயங்கா மரபின் ஆடலும் வரியும் - வேத்தியல் பொதுவியல் என்று சொல்லப்பட்ட இருவகைக் கூத்துகளின் தாள அறுதிகளை யறிந்து அவை மயங்காத முறைமையினாலே ஆடுகின்ற ஆடலும் எண் வகையாகிய வரிக்கூத்துகளும்; பாணியும் தூக்கும் கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து - தாளங்களும் இத் தாளங்களின் வழிவரும் எழுவகைத் தூக்குகளும் இவற்றோடுகூடி யிசைக்கும் நால்வகைத் தோற்கருவிகளின் கூறுபாடுகளும் உணர்ந்து; என்க.
(விளக்கம்) கூத்து - ஆடல், வரி, பாணி, தூக்கு, குயிலுவக் கருவி எனவரும் இவற்றின் விளக்கங்களை அரங்கேற்றுகாதையின்கண் விளக்கமாகக் காண்க.
இதுவுமது
152 - 156 : நால்வகை ............ கூத்தியும்
(இதன்பொருள்.) நால்வகை மரபின் அவினயக் களத்தினும் - நால்வகைப்பட்ட மரபினையுடைய அவினய நிலத்தானும்; ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் மலைப்பு அருஞ்சிறப்பின் தலைக்கோல் அரிவையும் - எழுவகைப்பட்ட நிலத்தினும் சென்றெய்தும்படி கோப்புகளை விரித்துப் பாடும் மலைத்தல் அரிய சிறப்பினையுடைய தலைக்கோலி என்னும் பட்டமெய்திய கூத்தியும்; வாரம் பாடும் தோரிய மடந்தையும் - பற்றுப்பாடும் தோரிய மடந்தையும்; தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பாட்டுக் கூத்தியும் - தலைப்பாட்டைப் பாடும் கூத்தியும் இடைப்பாட்டைப் பாடும் கூத்தியும்; என்க.
(விளக்கம்) அவினய நிலம் நான்காவன: நிற்றல், இயங்கல், இருத்தல், கிடத்தல் என்பன. எழுவகை நிலமாவன: ச,ரி,க,ம,ப,த,நி என்னும் எழுவகைப்பட்ட எழுத்தடியாகப் பிறக்கும் குரல் முதலாகிய ஏழும்.
வாரம் பாடுதல் - பற்றுப் பாடுதல் பின்பாட்டுப் பாடுதல். தோரிய மடந்தை - ஆடி முதிர்ந்த கூத்தி. தலைப்பாட்டு - இதனை உகம் எனவும், இடைப்பாட்டு - இதனை ஒளகம் எனவும் கூறுவர். இவையிற்றிற்கெல்லாம் முன்னம் அரங்கேற்று காதைக்கண் விளக்கங் கூறப்பட்டன.
இதுவுமது
157 - 167 : நால்வேறு ............. வீதிகளும்
(இதன்பொருள்.) நால்வேறு வகையின் நயத்தகு மரபின் - நால்வகையோடுங் கூடி யாவரும் விரும்பத்தக்க முறைமையினால்; எட்டுக்கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு - ஆயிரத்தெட்டு என்னும் எண்ணினையுடைய கழஞ்சினை: முட்டா வைகல் முறைமையின் வழா - நாடோறும் முட்டாது பெறும் முறைமையினின்றும் வழுவாத; தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு - தீண்டி வருத்தும் அணங்குபோல்வாருடைய கண்ணாகிய வலையிலகப்பட்டு; அரும்பெறல் அறிவும் பெரும் பிறிதாக - தமது பெறுதற்கரிய அறிவும் கெட்டொழிய; தவத்தோர் ஆயினும் - தவநெறியில் ஒழுகும் பெரியோராயினும் அல்லது; தகைமலர் வண்டின் நகைப் பதம் பார்க்கும் இளையோர் ஆயினும் - அழகிய மலர்தோறும் தாவித் தாவிச்சென்று அவற்றின் தேனைப் பருகிப் பின் பாராது செல்லும் வண்டுபோல ஒருத்தியிடத்தே தங்காமல் நாள்தோறும் புதிய புதிய பரத்தை மகளிரைப் புணர்ந்து செல்லுகின்ற காமுகராயினும் அல்லது; காம விருந்தின் மடவோர் ஆயினும் - காமவின்பத்திற்குப் புதியோராய் முன்பு நுகர்ந்தறியாத பேதையோர் ஆயினும்; ஏம வைகல் இன்துயில் வதியும் - நாள்தோறும் புணர்ச்சிமயக்கத்தோடு கூடிய இனிய துயிலோடே தங்குதற்குக் காரணமான; பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல் எண் எண் கலையோர் இருபெரு வீதியும் பண்களையும் அவற்றின் திறங்களையும் பழித்த இனிய சொல்லையுடைய அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத்துறை போகிய கணிகை மகளிர் உறைகின்ற இருவகைப்பட்ட பெரிய வீதிகளும்; என்க.
(விளக்கம்) நால்வேறு வகை என்றது தலைக்கோலரிவை, தோரிய மடந்தை, தலைப்பாட்டுக் கூத்தி, இடைப்பாட்டுக் கூத்தி என்னும் நால்வகையினரையும் என்க. அவருள் அணங்கு அனையார்க்கு ஆயிரத்தெண்கழஞ்சு பொன் ஒருநாளைப் பரியப் பொருள் என்க. எனவே ஏனைய மகளிர்க்கு அவரவர் தகுதிக்கேற்ற பொருள் பரியமாம் என்பது பெற்றாம். இனி இதனை விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு ஒருமுறையாகப் பெற்றனள் எனவரும் அரங்கேற்று காதையானும் (162-3) உணர்க. பெரும் பிறிதாதல் - இறத்தல்; ஈண்டுக் கெடுதல் மேற்று. ஏமம் - மயக்கம். கிளை, கிள்ளை எனினுமாம். இருபெரு வீதி என்றது சிறுபொருள் பெறுவார் வீதியும், பெரும்பொருள் பெறுவார் வீதியும் ஆகிய இருபெரு வீதியும் என்றவாறு.
அங்காடித் தெரு
168 - 179: வையமும் .................. அங்காடி வீதியும்
(இதன்பொருள்.) வையமும் - கொல்லாப் பண்டியும்; பாண்டிலும் - இரண்டுருளையுடைய சகடமும்; மணித்தேர்க் கொடிஞ்சியும் - அழகிய தேர் மொட்டும்; மெய்புகு கவசமும் - மெய் புகுதற்கிடமாகிய கவசமும்; வீழ்மணித் தோட்டியும் - விரும்பப்படும் மணிகள் பதித்த அங்குசமும்; அதள்புனை அரணமும் - தோலாற் செய்யப்பட்ட கைத்தளமும்; அரியாயோகமும் - அரைப்பட்டிகையும்; வளைதரு குழியமும் - வளை தடியும்; வால் வெண்கவரியும் -மிக வெள்ளிய சாமரையும்; ஏனப் படமும் - பன்றி முகக் கடகும்; கிடுகின் படமும் - சிறு கடகும்; கானப்படமும் -காடெழுதின கடகும்; காழ் ஊன்று கடிகையும் - குத்துக் கோல்களும்; செம்பிற் செய்நவும் - செம்பாற் செய்தனவும்; கஞ்சத் தொழிலவும் - வெண்கலத்தாற் செய்தனவும்; வம்பின் முடிநவும் - கயிற்றால் முடிவனவும்; மாலையின் புனைநவும் - கிடையால் மாலையாகப் புனைவனவும்; வேதினத் துப்பவும் - ஈர்வாள் முதலிய கருவிகளும்; கோடுகடை தொழிலவும் - தந்தத்தைக் கடைந்து செய்த தொழிலையுடையவையும்; புகையவும் வாசப் புகைக்கு உறுப்பாயுள்ளனவும்; சாந்தவும் - மயிர்ச்சாந்துக்கு உறுப்பாயுள்ளனவும்; பூவிற் புனைநவும் - பூவாற் புனையப்படும் மாலைகளும் ஆகிய; வகை தெரிவு அறியா - வேறுபாடு தெரிதற்கரிய; வளம் தலை மயங்கிய - இன்னோரன்ன வளங்கள் கலந்து கிடக்கின்ற; அரசு விழை திருவின் அங்காடி வீதியும் - அரசரும் காணவிரும்பும் செல்வத்தையுடைய அங்காடித் தெருவும்; என்க.
(விளக்கம்) 198 - முதலாக, 179 - ஈறாக கம்மியர் முதலாயினாரால் பண்ணப்பட்ட பொருள்கள் விற்கும் அங்காடி கூறுகின்றார். 171. வளைதரு குழியமும் என்பதற்கு வாசவுண்டை என்பாரும் கட்டுக்குழியம் என்பாரும் உளர். கானப்படம் - யானை, சிங்கம் முதலிய ஓவியம் எழுதப்பட்ட கடகு எனினுமாம். 175. வம்பின் முடிந என்றது, அல்லிக்கயிறு, குசைக்கயிறு முதலியன; வம்பு - கயிறுமாம். 176. துப்ப - வலிமையுடைய கருவிகள். இவ்வங்காடியைப் பெரிய கடைத்தெரு என்பாரும் உளர்.
மணிக்கடை
180 - 183 : காக ............... ஒளியவும்
(இதன்பொருள்.) காகபாதமும் களங்கமும் விந்துவும் ஏகையும் நீங்கி - காகபாதம் களங்கம் விந்து இரேகை என்று கூறப்படுகின்ற பெருங்குற்றங்கள் நான்கும் நீங்கப்பெற்று; நூலவர் நொடிந்த இயல்பிற் குன்றா - நூலோரால் வரைந்து சொல்லப்பட்ட குணங்களிற் குன்றுதல் இல்லாத; நுழை நுண் கோடி - மிகவும் கூர்த்த விளிம்புகளையும் உடைய; நால்வகை வருணத்து நலம்கேழ் ஒளியவும் - நான்கு சாதிகளையுடைய நல்ல நிறம் உடையனவும் ஆகிய வயிரங்களும்; என்க.
(விளக்கம்) காகபாதம் முதலிய நான்கும் பெருங்குற்றம் ஆதலின் அவற்றை விதந்தார்.
இனி இவ் வயிரத்தைப் பற்றி அடியார்க்கு நல்லார் கூறிய விளக்கம் வருமாறு:
இவற்றுட் குற்றம் பன்னிரண்டாவன: சரைமலம் கீற்றுசப்படி பிளத்தல் துளை கரி விந்து காகபாதம் இருத்து கோடியில்லன கோடி முரிந்தன தாரை மழுங்கலென விவை; சரைமலங் கீற்று சப்படி பிளத்தல், துளைகரி விந்து காகபாதம், இருத்துக்கோடிக ளிலாதன முரிதல் தாரை மழுங்க றன்னோ டீராறும் வயிரத் திழிபென மொழிப என்றாராகலின். இனிக் குணங்கள் ஐந்தாவன: எட்டுப் பலகையும், ஆறு கோடியும், தாரையும், சுத்தியும், தராசமுமென விவை; பலகையெட்டுங் கோண மாறும், இலகிய தாரையுஞ் சுத்தியுந் தராசமும், ஐந்துங் குணமென் றறைந்தனர் புலவர், இந்திர சாபத் திகலொளி பெறினே என்றார். நால்வகை வருணத் தொளியாவன: அந்தணன் வெள்ளை யரசன்சிவப்பு, வந்த வசியன் பச்சை சூத்திரன், அந்தமில் கருமையென் றறைந்தனர் புலவர் இனி, மிக்க குற்றங்கள் நான்கின் பயனாவன: காக பாத நாகங் கொல்லும், மலம்பிரி யாதது நிலந்தரு கிளைகெடும், விந்து சிந்தையிற் சந்தா பந்தரும், கீற்றுவரவினை யேற்றவர் மாய்வர் எனவரும். இனி, வருண நான்கின் பயனாவன: மறையோ ரணியின் மறையோ ராகிப், பிறவியேழும் பிறந்து வாழ்குவரே, மன்னவ ரணியின் மன்னவர் சூழ, இந்நில வேந்த ராவரெழு பிறப்பும் வணிக ரணியின் மணிபொன் மலிந்து, தணிவற வடைந்து தரணியில் வாழ்வார், சூத்திர ரணியிற் றோகையர் கனகநெல், வாய்ப்ப மன்னி மகிழ்ந்து வாழ்குவரே எனவரும். ஏகை - இரேகை. இயல்பெனவே பலகை எட்டென்பதூஉம், கோடி ஆறென்பதூஉம் பெறுதும். குன்றா வென்பதனை அருத்தா பத்தியாக்கிக் குன்றுதலை யுடையவெனக் குற்றம் நான்கிற்கும் ஏற்றுக. நுழை நுண்கோடி - இருபெயரொட்டாய் மிகவும் கூர்த்த கோடி யென்பதாயிற்று. ஒளியவெனவே குறிப்பெச்சமாய் வலனென்பதாயிற்று.
வயிரம் வலன் என்னும் அவுணனைக் கொன்றுழி அவனுடைய எலும்பினின்றும் உண்டாயின என்பர். இனி, அவன் வயிற்றில் பித்தத்தைக் கொத்தி விழுங்கிய கருடன் நகைத்துழி, உமிழப்பட்ட அப்பித்தம் இமயமலை முதலிய பல மலைகளினும் வீழ்ந்து ஊறியதனால் மரகதம் எனும் மணி தோன்றிற்று எனவும், அதனால் அது கருடோற்காரம் என்று பெயர் பெற்றது எனவும் கூறுப.
மரகதமணி
184 - 185: ஏகையும் .................. ஒளியவும்
(இதன்பொருள்.) ஏகையும் மாலையும் இருளொடு துறந்த - ஏகை, மாலை, இருள் என்னும் பெருங்குற்றங்களை நீங்கின; பாசு ஆர் மேனி பசுங் கதிர் ஒளியவும் - பசுமை நிறைந்த உருவத்தையுடைய பச்சையொளி பரவிய மரகதமணி வகைகளும்; என்க.
(விளக்கம்) ஏகை - இரேகை (கீறல்). கீறல் முதலிய இம் மூன்று குற்றங்களும் பெருங் குற்றங்களாம். எனவே அவற்றை விதந்தா; என்க. இனி, இம் மரகதமணிக்குக் குற்றங்களும் குணங்களும் அடியார்க்கு நல்லார் பின்வருமாறு கூறிவர்.
இதற்குக் குற்றமெட்டு உள; அவை : கருகல் கல்மணல் கீற்று பொரிவு தராசம் இறுகுதலென விவை; என்னை? கருகுதல் வெள்ளை கன்மணல் கீற்றுப், பொரிவு தராச மிறுகுகள் மரகதத் தெண்ணிய குற்ற மிவையென மொழிப என்றாராகலின்; இவற்றுள், மிக்க குற்றமுடையன இம்மூன்று மென்றாரென்க. மாலை - தார்; இருள் - கருகுதல். பாசார் மேனிப் பசுங்கதிரொளி யென்ற மிகையானே குணங்களும் எட்டென்பதே பெறுதும்; நெய்தல் கிளிமயிற் கழுத்தொத்தல் பைம் பயிரிற், பசுத்தல் பொன்மை தன்னுடன் பசுத்தல், பத்தி பாய்தல் பொன்வண் டின்வயி, றொத்துத் தெளிதலோ டெட்டுங் குணமே என்றாராகலினெனக் கொள்க எனவரும்.
மாணிக்கமணி
186 - 187: பதும ............. சாதியும்
(இதன்பொருள்.) விதி முறை பிழையா விளங்கிய - நூல்களில் விதித்த முறையில் பிழைபடாதனவாய் விளங்கிய; பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் சாதியும் - பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் என்று கூறப்படுகின்ற நால்வகைச் சாதிமாணிக்க வகையும்; என்க.
(விளக்கம்) விதிமுறை பிழையாவெனவே பிறப்பிடமும், வருணமும், பெயரும், குணமும், குற்றமும், நிறமும், விலையும் பத்தியு மென்னுமிவையும் பிறவும் அடங்கின; என்னை? மாணிக்கத் தியல் வகுக்குங் காலைச், சமனொளி சூழ்ந்த வொருநான் கிடமும், நால்வகை வருணமும் நவின்றவிப் பெயரும், பன்னிரு குணமும் பதினறு குற்றமும், இருபத்தெண்வகை யிலங்கிய நிறமும், மருவிய விலையும் பத்தி பாய்தலும், இவையென மொழிப வியல்புணர்ந் தோரே என்றாகலின். இவற்றுள், பதுமம் - பதுமராகம்; சாதுரங்க மென்பதும் அது. நீலம் - நீலகந்தி; சவுகந்தி என்பதும் அது. விந்தம் - குருவிந்தம்; இரத்தவிந்து வென்பதுமது. படிதம் - கோவாங்கு; என்னை? வன்னியிற் கிடக்கும் வருணநாற் பெயரும், உன்னிய சாது ரங்க மொளிர் குருவிந்தம், சவுகந்தி கோவாங்கு தானா கும்மே எனவும், தாமரை கழுநீர் சாதகப் புட்கண் கோப மின்மினி கொடுங்கதிர் விளக்குமாதுளைப் பூவிதை வன்னியீ ரைந்தும், ஓதுசா துரங்க வொளியாகும்மே எனவும், திலக முலோத்திரஞ் செம்பருத் திப்பூக் கவிர்மலர் குன்றிமுயலுதி ரம்மே, சிந்துரங்குக்கிற் கண்ணென வெட்டும், எண்ணிய குருவிந்த மன்னிற நிறமே எனவும் கோகிலக்கண் செம் பஞ்சு கொய்ம்மலர்ப் பலாசம், அசோக பல்லவ மணிமலர்க் குவளை, இலவத் தலர்க ளென்றாறு குணமும், சவுகந் திக்குச் சாற்றிய நிறனே எனவும், கோவைநற் செங்கல் குராமலர் மஞ்சளெனக், கூறிய நான்குங் கோவாங்கு நிறனே எனவும் சொன்னார். ஒழிந்தனவும் விரிப்பின் உரை பெருகும், வந்தவழிக் கண்டுகொள்க என அடியார்க்கு நல்லார் விளக்கினர்.
புருடராகமணி
188 : பூச ................... அனையவும்
(இதன்பொருள்.) பூச உருவின் - பூசம் என்னும் விண்மீனினது உருவத்தையுடைய; பொலம் தெளித்து அனையவும் - பொன்னை மாசு நீங்கத் தெளியவைத்தாற்போன்ற புருடராக மணி வகைகளும்; என்க.
(விளக்கம்) பூசம் நாண்மீன்களில் ஒன்று. இனி, பூசையுருவிற் பொலந்தேய்ந்தனையவும் என்று பாடங்கொண்டு, பூனைக்கண் போன்ற பொன்னைத் தேய்த்தாற் போன்றவை புருடராகம் என்பர் அரும்பதவுரையாசிரியர். பொலம் - பொன்.
வைடூரியமணி
189 : தீது ........... உருவவும்
(இதன்பொருள்.) தீது அறு கதிர் ஒளி - குற்றமற்ற ஞாயிற்றின் ஒளி எனவும்; தெள் மட்டு உருவவும் - தெளிந்த தேன்துளி எனவும் சொல்லுதற்கு ஒத்த உருவமுடைய வைடூரியம் என்னும் மணி வகையும்; என்க.
(விளக்கம்) இதனை அரும்பதவுரையாசிரியர் கோமேதகம் என்பர்.
நீல மணியும் கோமேதக மணியும்
190 : இருள் ................ உருவவும்
(இதன்பொருள்.) இருள் தெளித்து அனையவும் - இருளைத் தெளிய வைத்தாற்போன்ற நிறமுடைய நீல மணி வகையும்; இருவேறு உருவவும் - மஞ்சளும் சிவப்பும் ஆகிய இருவேறு நிறங்களையும் கலந்தாற்போன்ற நிறமுடைய கோமேதகமணி வகையும்; என்க.
(விளக்கம்) இனி, இவற்றுள் நீலமணிக்குக் குற்றமும் குணமும் அடியார்க்கு நல்லார் கூறுமாறு:
இதற்குச் சாதி நான்கும், குணம் பதினொன்றும், குற்றம் எட்டுமெனக் கொள்க; என்னை? நீலத் தியல்பு நிறுக்குங்காலை நால்வகை வருணமு நண்ணுமா கரமும், குணம்பதி னொன்றுங் குறையிரு நான்கும், அணிவோர் செயலு மறிந்திசி னோரே என்றாராகலின்; வெள்ளை சிவப்பு பச்சை கருமையென், றெண்ணிய நாற்குலத் திலங்கிய நிறமே, கோகுலக் கழுத்துக் குவளை சுரும்பர், ஆகுலக் கண்கள் விரிச்சாறு .... காயா நெய்தல் கனத்தல் பத்தி, பாய்த லெனக்குணம் பதினொன் றாமே என்பன. இனிக் குற்றம் வந்தவழிக் கண்டு கொள்க என்பர்.
ஒரு முதலில் தோன்றிய ஐவகை மணிகள்
191 - 192 : ஒருமை .......... மணிகளும்
(இதன்பொருள்.) ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் - ஒரு முதலில் தோன்றித் தம்முள் வேறுபட்ட ஐந்துவகை அழகை உடையனவாகிய ஈண்டுக் கூறப்பட்ட மாணிக்கம் புருட ராகம் நீலம் கோமேதகம் வைடூரியம் என்னும்; இலங்கு கதிர் விடூஉம் நலம்கெழு மணிகளும் - விளங்குகின்ற ஒளி வீசுகின்ற நன்மை பொருந்திய மணிகளும்; என்க.
(விளக்கம்) இவ் வைந்திற்கும் முதலாவது பளிங்கு என்க.
முத்தும் பவளமும்
193 - 198 : காற்றினும் ................ வல்லியும்
(இதன்பொருள்.) காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் தோற்றிய குற்றம் துகள் அறத் துணிந்தவும் - காற்றேறு மணலேறு கல்லேறு நீர்நிலை என்னும் இந்த நான்கு பெருங் குற்றங்களும் ஒரு துகளளவும் இல்லையாய்த் தெளிந்த ஒளியை உடையனவும்; சந்திரகுருவே அங்காரகன் என வந்த நீர்மைய வட்டத்தொகுதியும் - வெள்ளியும் செவ்வாயும் போல நிரலே வெண்ணிறமும் செந்நிறமும் உடையவாய் உருண்டனவுமான முத்து வகைகளும்; கருப்பத்துளையவும் கல்லிடை முடங்கலும் திருக்கும் நீங்கிய - கருப்பத்திலேயே துளைபட்டனவும் கல்லிடுக்கில் புகுந்து முடங்கு பட்டனவும் திருகல் முறுகல் உடையனவாய் எழுந்தனவும் என்னும் இக் குற்றங்கள் நீங்கிய; செங்கொடி வல்லியும் - செம்மை மிகுந்து வளம்பெற வளர்ந்த கொடிப்பவள வகையும்; என்க.
(விளக்கம்) முத்திற்குக் காற்று மண் கல் நீர் என்னும் இந்த நான்கானும் உண்டாகும் குற்றங்களே பெருங் குற்றங்கள் என்பது தோன்ற இவற்றையே ஓதி ஒழிந்தார். பிறவும் குற்றங்கள் உள என்க. சந்திரகுரு - வெள்ளி; அஃதாவது கோள். அங்காரகன் - செவ்வாய்க் கோள். வெள்ளி தூய வெண்மை யாதலும், செவ்வாய் சிறிது செம்மை கலந்த வெண்மை யாதலும் உணர்க. இவ்விரண்டும் சிறந்த முத்தின் குணங்கள். வட்டம் என்றது உருண்டை வடிவமுடைய முத்தினை. இதனை ஆணிமுத்து என்றும் கூறுவர்.
இனி, பவளத்திற்கு ஈண்டுக் கூறிய குற்றங்கள் பெருங்குற்றங்களாம். நல்ல பவளங்கள் நிறமும் உருட்சியும் இவற்றால் சிந்துரமும் ஈச்சங்காயும் முசுமுசுக்கைக் கனியும் தூதுவழுதுணம் பழமும் போல்வன என்பர்.
199 - 200: வகை ............. வீதியும்
(இதன்பொருள்.) வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி - மேற்கூறப்பட்ட இவ்வொன்பது வகைப்பட்ட மணிகளின் பிறப்பு முதல் சிறப்பீறாகிய வகைகளை ஆராய்ந்து தெரிகின்ற வணிகர் தொகுதியைப் பெற்றுச் சிறப்புற்றுள்ள; பகை தெறல் அறியாப் பயம் கெழு வீதியும் - பகைவராலே அழிக்கின்ற தொழிலை எக்காலத்தும் கண்டறியாத பயன் கெழுமிய மணியங்காடி வீதியும்; என்க.
(விளக்கம்) வகை - மணிகளின் வகையும், அவற்றின் குற்றங் குண முதலிய வகைகளும் என்க. மாக்கள் என்றது வணிகரை.
பொன்னங்காடி
201 - 204 : சாதரூபம் ............... வீதியும்
(இதன்பொருள்.) சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் - சாதரூபமும் கிளிச்சிறையும் ஆடகமும் சாம்பூநதமும் என்று கூறப்படுகின்ற நான்கு வகையாய்ப் பெயர்பெற்றோங்கிய கோட்பாட்டையுடைய; பொலந்தெரிமாக்கள் - பொன்னினது கூறுபாட்டை ஆராய்ந்தறிந்த பொன் வாணிகர்; கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு - பொன் கொள வருவோர் எவ்விடத்து எப்பொன் உளதென்று ஐயுற்றுக் கலங்கும் கலக்கத்தை ஒழித்தற்கு இவ்விவ்விடங்களிலே இந்த இந்தப் பொன் உளதென்றுணர்த்தும்; இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் - விளக்கக் கொடிகள் இடந்தோறும் உயர்த்துதலையுடைய நன்மை பொருந்திய பொன்னங்காடிகளும்; என்க.
(விளக்கம்) பொலம் - பொன். மாக்கள் - பொன் வாணிகர். ஒழித்து - ஒழிப்ப. ஆங்கு - ஆங்காங்கு என்க. இலங்குகொடி - விளங்குதற்கு அறிகுறியான கொடி என்க. நலங்கிளர் - அழகுமிக்க எனினுமாம்.
அறுவையங்காடி
205 - 207: நூலினும் ............... வீதியும்
(இதன்பொருள்.) நுழை நூலினும் மயிரினும் பட்டு நூலினும் - நுண்ணிய பருத்தி நூலினானும் எலி மயிரினானும் பட்டு நூலினானும் நெய்யப்பட்டு; பால் வகை தெரியா - அவற்றின் பகுதியும் வகையும் தெரிந்து அடுக்கிய; பல் நூறு அடுக்கத்து - பலவாகிய நூறுநூறு கொண்ட அடுக்குகளாவன; நறுமடி செறிந்த அறுவை வீதியும் - நறிய மடிப் புடைவைகள் நெருங்கவைத்த புடைவை யங்காடியும்; என்க.
(விளக்கம்) நுழை நூலினும் என மாறுக. நூற்பட்டினும் என்றது. பட்டு நூலினும் என்றவாறு. பால் வகை தெரிந்து அடுக்கிய அடுக்கத்து எனவும் பன்னூறடுக்கத்து எனவும் தனித்தனி இயையும். மடி - புடைவை. புடைவைகளுக்கும் நறுமணப் புகை ஊட்டுதலின் நறுமடி என்றார். அறுவை - துணி. (அறுக்கப்படுவது - அறுவை; துணிக்கப்படுவது - துணி)
கூலக் கடைத்தெரு
208 - 211 : நிறைக்கோல் ................. வீதியும்
(இதன்பொருள்.) நிறைக்கோல் துலாத்தர் பறைக்கண் பராரையர் அம்பண அளவையர் - நிறுக்கும் துலாக்கோலையுடையவராகவும் மறிக்கும் பறையை யுடையராகவும் அளக்கும் மரக்காலை யுடையராகவும்; எங்கணும் திரிதர - தரகு செய்வார் அங்குமிங்குமாய் எங்கும் திரிந்துகொண்டிருப்ப; காலம் அன்றியும் கருங்கறி மூடையொடு கூலங்குவித்த கூல வீதியும் - இன்ன கூலம் இன்ன காலத்தில் கிடைக்கும் என்பதின்றி எக்காலமும் கரிய மிளகுப் பொதிகளோடு பல்வேறு வகைக் கூலங்களையும் குவித்து வைத்துள்ள கூலக் கடைத்தெருவும்; என்க.
(விளக்கம்) நிறைத் துலாக் கோலர், பராரைக்கண் பறையர், அளவை அம்பணர், எனற்பாலன இங்ஙனம் கூறப்பட்டன. துலாக்கோல், பறை, அம்பணம் என்பன அளவு கருவிகள். இவற்றுள் பராரைக்கட் பறை என்றது பரிய அறையையும் இரும்பால் வாய்மட்டாகப் பூண்கட்டின கண்ணையுமுடைய பறை என்றபடி; பறை வடிவிற்றாகலின் அப்பெயர் பெற்றதென்க. அம்பணம் - மரக்கால். கருங்கறி - மிளகு; வெளிப்படை. கூலம் - இரண்டு வகைப்பட்டனவாய்ப் பதினாறுவகை என்ப. அவையாவன: நெல் புல் வரகு தினை சாமை இறுங்கு தோரை இராகி என்பன ஓரினத்துக் கூலமாம். மற்றும் (பருப்பு) முதிரை வகைப்பட்ட எள்ளுக் கொள்ளுப் பயறு உழுந்து அவரை கடலை துவரை மொச்சை என்னும் இவை ஒருவகைக் கூலமாம் என்றுணர்க. இவற்றை இந்திரவிழவூரெடுத்த காதையினும் கூலங் குவித்த கூல வீதியும் என இவ்வாறே ஓதினர்.
கோவலன் நகர்கண்டு மீளுதல்
212 - 218 : பால்வேறு ......... புறத்தென்
(இதன்பொருள்.) பால் வேறு தெரிந்த நால்வேறு தெருவும் - அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என நூல்களாற் பகுத்துக் கூறியதற்கேற்ப நான்கு வெவ்வேறு வகுப்பினரும் தனித்தனியே உறைகின்ற தெருக்களும்; அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து முச்சந்தியும் நாற்சந்தியும் கோயிலங்காடியும் மன்றங்களும் கவர்க்கும் வழிகளும் தேர் வீதிகளும் ஆகிய இவ்விடங்களினும் இன்னோரன்ன பிறவிடங்களினும் சுற்றத் திரிந்து; விசும்பு அகடு திருகிய வெங்கதிர் நுழையா பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல் - ஞாயிறு விசும்பின் நடுவாக நின்று முறுகி ஓடுதலின் அதனுடைய வெப்பமுடைய கதிர்களும் நுழையமாட்டாத புதிய கொடியும் படாகை என்னும் பெருங்கொடியும் ஆகிய இவற்றாலியன்ற பந்தர் நீழல் போன்ற நிழலிடத்தே; காவலன் பேரூர் - மன்னுயிர் காக்கும் காவலனாகிய பாண்டியனது பெரிய தலைநகரத்தை; கோவலன் கண்டு மகிழ்வு எய்தி - கோவலன் பார்த்துப் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து; கொடி மதில் புறத்துப் பெயர்ந்தனன் - கொடி உயர்த்தப்பட்ட மதிலின் புறத்ததாகிய புறஞ்சேரிக்கு மீண்டு சென்றனன்.
(விளக்கம்) கவலை - முடுக்கு வழிகள். கதிர் மேடவீதியின் நீங்குதலின் விசும்பகடு திருகிய வென்றார். அகடு - நடு. திருகுதல் - முறுகுதல்; தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின் (அகநா. 89:1) என்றார் பிறரும். கொடி - சிறுகொடி. படாகை - பெருங்கொடி.
ஆர்ப்ப அவிழ்த்த மண்டிலம் துயிலெடுப்ப, இயம்பச் சென்று ஏத்திச் சிறுமையுற்றேனென்றலும், கவுந்தியடிகள்; அனையையுமல்லை; பெற்றனையன்றே; வருந்தாதே போதீங் கென்றலும் மருங்கிற்போகி அயிராது புக்கு மகிழ்தரு வீதியும் இருபெரு வீதியும் அங்காடி வீதியும் பயங்கெழு வீதியும் நலங்கிளர் வீதியும் அறுவை வீதியும் கூலவீதியும் நால்வேறு தெருவும் அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் மன்றமும் கவலையும் மறுகுமாகிய இவ்விடங்களில் பந்தர் நிழலில் திரிந்து காவலனூரைக் கோவலன் கண்டு மகிழ்வெய்திப் பெயர்ந்தானென முடித்திடுக.
பா - நிலைமண்டிலம்
ஊர்காண் காதை முற்றிற்று.