பதிவு செய்த நாள்
25
ஆக
2018
06:08
* அன்பு என்னும் சாணத்தால் மனதை மெழுகுங்கள். அதில் நன்றி என்னும் சந்தனம் தெளித்து, கருணை விளக்கை ஏற்றி வையுங்கள். ’மனித வடிவில் தெய்வம்’ என்று உலகம் உங்களை புகழும்.
* கோபம் வரும் போதெல்லாம் கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். அவலட்சணத்துடன் இருப்பதைக் காண்பீர்கள். உடனே கோபம் பறந்தோடி விடும்.
* தர்மவழியில் தேடிய பணம் பல தலைமுறைக்கும் தொடர்ந்து நற்பயன் தரும். பொய், சூழ்ச்சி, வஞ்சனையால் தேடிய பணம் வந்த வேகத்தில் காணாமல் போகும்.
* வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. நல்லதை மட்டும் சிந்தியுங்கள். நல்லதை மட்டும் பேசுங்கள்.
* வயதில் மூத்தவர்கள் மட்டும் பெரியவர்கள் அல்ல. பிறர் மீது குறை சொல்லாமல் பெருந்தன்மையுடன் இருப்பவர்களும் பெரியவர்கள் தான்.
* தொழிலில் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரி போல, மனதில் எழும் நல்ல, தீய எண்ணங்களை அலசி ஆராய்ந்து மனதைப் பண்படுத்துங்கள்.
* மனிதனையும், விலங்கையும் பிரித்துக் காட்டும் ஒரே கருவி ஒழுக்கம் தான். அதை உயிராக மதித்துப் போற்றுங்கள்.
* மனைவி தவிர்த்த மற்ற பெண்களை தாயாகக் கருதுங்கள். இதனால் சமுதாயத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி நிலைக்கும்.
* உயிர்கள் வாழ தேவையான அனைத்தையும் கடவுள் வழங்கியிருக்கிறார். ஆசையை கட்டுப்படுத்தி உழைக்கும்
மனப்பான்மை இருந்தால் போதும். அனைவரும் வளமுடன் வாழலாம்.
* அன்பினால் பக்தி செலுத்த வேண்டுமே ஒழிய, ’அதைக் கொடு! இதைக் கொடு’ என்று ஒருபோதும் கடவுளிடம் பேரம் பேசுவது கூடாது.
* காலையில் எழும் போதும், உணவு உண்ணும் போதும், இரவு தூங்கும் முன்பும் கடவுளின் திருவடிகளைப் பக்தியுடன் வணங்குங்கள்.
* அனைவரிடமும் ஒற்றுமை உணர்வுடன் பழகுங்கள். உயர்வு, மதிப்பு, அழகு இவை தானாகவே உங்களை வந்தடையும்.
* பணிவே வாழ்வின் உயிர்நாடி. பணிவில்லாத மனிதர்கள் வாழ்வில் ஒருபோதும் உயர்வு அடைவதில்லை.
* பிறர் கூறும் கொடிய சொற்களையும் இன்சொற்களாக கருதுங்கள். மறந்தும் கூட பிறர் மனம் நோகும்படி கடுஞ்சொல் பேச வேண்டாம்.
* மகிழ்ச்சிக்கான மந்திரச்சாவி மனதில் இருக்கிறது. கோடீஸ்வரன் கவலையால் வருந்தலாம். ஏழை மகிழ்ச்சியில் துள்ளலாம். எல்லாம் அவரவர் மனதை பொறுத்ததே.
* மற்றவர் தயவில் கிடைக்கும் பால் சோற்றை விட சுய உழைப்பால் கிடைத்த தண்ணீரும் சோறும் தித்திப்பானது.
* மழை நீரின் தன்மை அது விழும் மண்ணின் தன்மையை பொறுத்தது. அது போல ஒரு மனிதனின் தன்மை அவனுடன் பழகும் நண்பர்களைப் பொறுத்து அமையும்.
- பாராட்டுகிறார் வாரியார்