பண்டாசுரன் என்பவன் தேவர்களை கொடுமைப் படுத்தினான். அவனை அழிக்க வேண்டும் என பார்வதியிடம் தேவர்கள் முறையிட்டனர். பார்வதி தனது படையுடன் ’லலிதாம்பிகை’ என்னும் பெயர் தாங்கி புறப்பட்டாள். சிவனும் காமேஸ்வரராகப் பின் தொடர்ந்தார். அக்னிகோட்டை ஒன்றை எழுப்பி, அதனுள் லலிதாம்பிகை தங்கினாள். இதையறிந்த பண்டாசுரன், தனது உதவியாளரான விசுக்ரன் என்பவனை அனுப்பி ‘படைகளைச் செயல்படவிடாமல் செய்” என உத்தர விட்டான். சுற்றிலும் தீ எரிந்ததால் அசுரனால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. ’விக்ன யந்திரம்’ என்னும் தகடு ஒன்றை நெருப்பைத் தாண்டி கோட்டையின் மீது வீசினான். அது யாருடைய உயிரையும் வாங்காது. ஆனால் அங்குள்ளவர்களின் மனதை மாற்றி விடும் சக்தி கொண்டது. அதன்படி அவர்களின் மனதில் “லலிதாம்பிகைக்கு கட்டுப்பட்டு நாம் ஏன் போரிட வேண்டும்? நம்மால் கொல்லப்படுவது அசுரர்கள் என்றாலும் கொலைப்பாவம் நம்மையே சேரும். எனவே போர் புரியாமல் நிம்மதியாக உறங்கலாம்” என்ற எண்ணம் எழுந்தது.
அசுரனின் மாயச்செயலை அறிந்த லலிதா சிரித்தாள். இந்த நேரத்தில் காமேஸ்வரராக இருந்த சிவன் அவளைக் கண்டு புன்னகைத்தார். அவர்களது புன்னகையில் பூத்த மலராக அவதரித்தார் விநாயகர். தன் தும்பிக்கையை நீட்டி யந்திரத்தை எடுத்து, சுற்றிலும் எரியும் தீக்குள் வீசி சாம்பலாக்கினார். விக்ன யந்திரம் எரிந்து போகவே மீண்டும் படையினர் தூக்கத்தில் இருந்து விழித்தனர். ஆவேசத்துடன் போரிட்டு அசுரனை அழித்தனர். விக்னம் என்றால் ’தடை’. தடையை வேரறுத்து, லலிதாம்பிகையின் வெற்றிக்கு துணை நின்றதால் ’விக்னேஸ்வரர்’ என விநாயகர் பெயர் பெற்றார்.