ஓம் நம சிவ சிவாய சிவனே திவ்யரூபனே ஓம் நம சிவ சிவாய சங்கரா தீனதயாளனே அருளுடையார் தொடுத்து வரும் பாமாலை கேட்டுமனம் மகிழ்ந்து எம்பெருமானே திருப்பள்ளி எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே சிதம்பரநாதனே ஓம் நம சிவ சிவாய சங்கரா ஏகாம்பரநாதனே நினதடியார் எடுத்து வரும் பூமாலை சூட்டி உலகம் குளிர்ந்திடவே எம்பெருமானே திருப்பள்ளி எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே திருநீலகண்டா ஓம் நம சிவ சிவாய சங்கரா ஆலாலகண்டா பூபாளம் இசை பொழிய பூவெல்லாம் மணம் கமழ பூமகள் மனம் மகிழ எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே சச்சிதானந்தனே ஓம் நம சிவ சிவாய சங்கரா ஆத்மநாதா கதிரவன் எழுந்து உனக்கு காலை வணக்கம் சொல்ல கீழ்த்திசை உதித்து விட்டான் எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே ஜம்புகேஸ்வரா ஓம் நம சிவ சிவாய சங்கரா ஜலகண்டேஸ்வரா தாமரை எழுந்து வெண் சாமரம் வீசிடவே தடாகம் குளிர எம்பெரும்பானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே வைதீஸ்வரா ஓம் நம சிவ சிவாய சங்கரா லிங்கேஸ்வரா காரிருள் மறைந்திடவும் காகங்கள் கரைந்திடவும் பேர் அருள் புரிந்திட எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே கங்காதரா ஓம் நம சிவ சிவாய சங்கரா கருணாகர மாவிலைத் தோரணங்கள் உன் ஆலயம் அலங்கரிக்க தாமதம் தவிர்த்து எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே அருணாசலேஸ்வரா ஓம் நம சிவ சிவாய சங்கரா அர்த்தநாரீஸ்வரா குயில் கூவி உனை அழைக்க மயில் ஆடி மகிழ்விக்க கருணை மழை விழிபொழிய எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே பரமேஸ்வரா ஓம் நம சிவ சிவாய சங்கரா ஜெகதீஸ்வரா பறவைகள் சிறகடிக்க தவளைகள் குரல் எழுப்ப பசு மடியில் பால் சுரக்க எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே பிரகதீஸ்வரா ஓம் நம சிவ சிவாய சங்கரா விஸ்வேஸ்வரா நான் மறை ஓதியும் நறுமண மலர் தூவியும் நாயன்மார் உனை வணங்க எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே ராமநாதேஸ்வரா ஓம் நம சிவ சிவாய சங்கரா சுந்தரேஸ்வரா சிவனே சிவனே என்று தவம் புரிந்து தனித்து இருக்கும் சித்தருக்கு அருளவே எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே சிவமகாதேவா ஓம் நம சிவ சிவாய சங்கரா கற்பகநாதா சிவன் என்று வந்தோரை சிரமங்கள் தீண்டாமல் காத்தருளும் தருணம் இது எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே விஸ்வ ப்ரியனே ஓம் நம சிவ சிவாய சங்கரா சர்வேஸ்வரனே மெய் உருகி உனை அழைக்க ஊர் உலகம் மதிசெழிக்க எங்களை ஆட்கொள்ள எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே காலபைரவா ஓம் நம சிவ சிவாய சங்கரா மகாபைரவா நிர்க்கதி ஆனோர்க்கு நீ கதி... நீயே கதி நற்கதி அருளவே எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஒம் நம சிவாய சிவனே புரமெரித்த தேவனே ஓம் நம சிவ சிவாய சங்கரா புன்னைவன நாதனே உனை அன்றி என் மனம் வேறெங்கும் அலையாது தயைகூர்ந்து எமக்கு அருள எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே அம்பலவாணனே ஓம் நம சிவ சிவாய சங்கரா திருசிற்றம்பலனே ஆகாயம் நிறைபவனே ஆண்டருள் புரிபவனே திருநீற்றுப்பிரியனே எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே ருத்ராவதாரா ஓம் நம சிவ சிவாய சங்கரா புவனேஸ்வரா சங்கொலி முழங்கிட தமிழ்ச் சங்கம் வணங்கிட எங்குமாய் நிறைந்திட்ட எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே கபாலீஸ்வரா ஓம் நம சிவ சிவாய சங்கரா வாலீஸ்வரா வீணை இசை ஒருபுறமும் யாழ் இசை மறுபுறமும் ஏழ்திசை முழங்க எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே காளஹஸ்தீஸ்வரா ஓம் நம சிவ சிவாய சங்கரா மல்லிகார்ஜுனா கன்னியர் ஒருபுறமாய் காளையர் மறுபுறமாய் நின்றுனைத் துதித்தெழுப்ப எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே பஞ்சாட்சரநாதா ஓம் நம சிவ சிவாய சங்கரா பார்வதிநாதா தேவர்கள் ஒருபுறமாய் முனிவரர் மறுபுறமாய் இந்திரனும் காத்திருக்க எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே சம்போசிவா ஓம் நம சிவ சிவாய சங்கரா சாம்பசிவா புலவர்கள் புகழ்ந்திடவும் பூதங்கள் வணங்கிடவும் பூசைகள் தொடர்ந்திடவும் எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே மஹாமஹேஸ்வரா ஓம் நம சிவ சிவாய சங்கரா அகிலாண்டேஸ்வரா தேவர்கள் வாழ்த்துரைக்க தேவியர் போற்றி செய்ய ஆனந்தம் அடைந்துமே எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே தட்சிணாமூர்த்தியே ஓம் நம சிவ சிவாய சங்கரா தாண்டவமூர்த்தியே தேன் இருக்கும் மலரிடத்தே வண்டினம் மொய்ப்பதுபோல் உன் இடம் அடைந்தோம் எம்பெருமானே எழுந்தருள்வாய்
ஓம் நம சிவ சிவாய சிவனே தத்துவமூர்த்தியே ஓம் நம சிவ சிவாய சங்கரா சத்தியகீர்த்தியே நித்தியனே சத்தியனே தத்துவனே உத்தமனே ஒப்பிலா மணியோனே எம்பெருமானே எழுந்தருள்வாய்
விண் நிறைந்து மண் நிறைந்து எங்கும் நிறைந்தோனே கண்டம் அரவு தரித்தோனே சடை முடிநாதனே பெருந்துறைப் பெருமானே பெருமைக்கு உரியவனே நந்திக் கொடியுடையானே எம்பெருமானே எழுந்தருள்வாய்
சீர்வதனப் பார்வதியாள் சிங்கார வேலுனுடன் பார்புகழும் பாலகனாம் கணபதியும் வந்து தொழும் மறைநாதா யார் அறிவார் உன் அடியை? யார் தொடுவார் உன் முடியை? சிவனடியார் உனை அடைய எம்பெருமானே எழுந்தருள்வாய்
இத்திருப்பள்ளி எழுச்சியினை எடுத்துரைக்கும் எல்லோர்க்கும் இன்னும் உனை வேண்டும் பிற எவர்க்கும் வேண்டுவன தந்தருள ஈசனே இறைவனே எம்பெருமானே எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் எம்பெருமானே எழுந்தருள்வாய்
சிவனே கதி என்று உனை நம்பியவன் மலை போல் இங்கு உயர்ந்திட அருள் சிவனே சரணா கதி என்று உன் திருவடியில் வந்து விழுந்திடில் எழுந்திடச் செய்பவனே
இலைமேல் உறை பனித்துளி மறைவது போல் வீணாசைகள் அகற்றிடு சங்கரனே மனம் போகின்ற போக்கினில் அலைபவனை உன் ஆலயம் அடைந்திடவை சிவனே
கரை சேர்ப்பதும் சிவன் செயலே தினம் போகின்ற பயணம் சிவன் செயலே நாம் அழுவதும் சிரிப்பதும் சிவன் செயலே இங்கு சிவனுக்கு நிகர் இங்கு சிவன் சிவனே
சிறு புல் எனப் பிறப்பதும் சிவன் செயலே கரும் கல் என இருப்பதும் சிவன் செயலே மண் புழுவாய் நெளிவதும் சிவன் செயலே வரும் வழி தனில் விளக்கென வருபவனே
நம் வாழ்வினில் ஒளி தரும் விளக்கவனே நல்லருள் தரும் விளக்கே சிவன் சிவனே பொன் பொருள் தரும் வள்ளலும் சிவன் சிவனே சிவ ஸ்தலங்களை அடைந்திட வழி சிவனே
சிவ சிவ என்றழைத்திட துணை சிவனே தினம் தினம் உனை வணங்கிடத் துயர் இலையே அருள் திருப்பணி தொடர்ந்திட ஜெயம் அருளே நம் தியானமும் தானமும் சிவன் சிவனே.
சங்கீதமும் வேதமும் சிவன் சிவனே சிவ வேள்வியும் யாகமும் சிவன் சிவனே சிவன் வேண்டாதவர்க்கு அவன் எமனே சிவமயமே சிவம் சிவமே சிவமே
அரும் தவமே தவமே தவம் சிவமே உமை மறவேன் மறவேன் சங்கரனே எமது உள்ளத்தில் இல்லத்தில் நிலைப்பவனே சிவன் சன்னதி தரும் நிம்மதி மன நிம்மதி
சிவனே கதி சரணாகதி அடைவோம் இனி அருள் என்பதா பொருள் என்பதா சிவனே இவை திரு என்பதா குரு என்பதா சிவனே விடை அடியேன் என்னை கரை சேர்த்திடு
அடியேன் குறை அதைப் போக்கிடு சிவமே நிஜம் சிவமே ஜெயம் சிவமே சிவமே சிவம் சிவமே உயிர் இங்கு உய்ய வழி உனை அன்றி ஏதிலமே
உனதடிகள் சரணடைந்தோம் ஓயாமல் உனைப் பணிந்தோம் வழி இன்றி வந்தோர்க்கு வாழ அருள் புரிந்திடும் உன் திருவடிகள் சரண்டைந்தோம் திருவே என உனைப் புகழ்ந்தோம் ஞானமும் கல்வியும் நல்குவை செல்வமதும்
நாடி உனைச் சரணடைந்தோம் நாதன்தாள் கீழ் தவம் கிடந்தோம் நன்னெறி கிடைக்கவும் நல்லறிவைப் பெற்றிடவும் நின்னடிகள் சரணடைந்தோம் நிம்மதி தானடைந்தோம் அடியார்க்கு அமுதம் என பொடியார்க்கு புனிதன் என
உன்னடிகள் சரணடைந்தோம் பொன் அடிகள் போற்றி வந்தோம் எளியோரை ஏற்றிடுவாய் வலியோரை வாட்டிடுவாய் என்றும் உன் பாதம் சரண்அடைந்தோம் எல்லாம் உன் செயல் என்றோம் ஊழ்வினை போக்கிடுவாய் வரும் வினை தடுத்திடுவாய்
வந்துனைச் சரண் அடைந்தோம் வந்த வினை நீக்கிடுவாய் தேய்வினை அறுப்போனே தீயவினை வெறுப்போனே தேடியுன் திருவடிகள் சரணடைந்தோம் சரண் அடைந்தோம் சித்தி தரும் சிவனடி திருநீறு முத்தி தரும் திருநீறு
மெய் பூசி சரண் அடைந்தோம் மெய்யடிகள் மெய்யடிகள் பக்தி தரும் திருநீறு சக்தி சிவன் திருநீறு நெற்றி இட்டு சரண் அடைந்தோம் நெஞ்சுருகி நெஞ்சுருகி சிந்தையும் சிதறாமல் எந்தை உனை மறவாமல்
வந்து உனை சரண் அடைந்தோம் வாழ்வாங்கு வாழ்வதற்கு இவ்வடியும் இல்லாமல் எவ்வடியும் இல்லாமல் இருக்கும் இடம் சரண் அடைந்தோம் பேரின்பம்தான் அடைந்தோம்
அம்பலத்தாடுவான் ஆட்டுவித்தாடுவான் ஆடும் அவன் பாதங்கள் ஆடியே சரணடைந்தோம் என்னை நான் மறந்தேனும் ஈசனை மறவேனே என்று நான் சரணடைந்தேன் உன்னை நான் அடைவேன்
யாருக்கும் மடியாதார் சிவனிடத்தே மடிந்தாராம் அடிமை என சரண் அடைந்தோம் அவனுள் அடங்கினோம் ஓதுவார்க்கு இனியதாம் ஓம் நம சிவாயவே ஓதியே சரண் அடைந்தோம் மறவாமல் மறவாமல்
கண் விழித்து கரம் குவித்து சிரம் தாழ்த்தி உனதடியில் சரண் அடைந்தோம் சரண் அடைந்தோம் சரண் அடைந்தோம் இப்பிறப்பு என்றாலும் எப்பிறப்பு என்றாலும் தப்பாமல் முப்பொழுதும் தாள் பணிந்தோம் தாள் பணிவோம்
நினைக்காத பொழுது இல்லை நிலை என்று ஏதும் இல்லை நீ மட்டும் நிலை என்று நின்னடிகள் சரண் அடைந்தோம் கரம் நான்கும் கண் மூன்றும் கொண்டிருந்து காத்து அருளும் எந்தை அடி ஏகன் அடி ஈசன் அடி சரண் அடைந்தோம்
ஈசனே பிறை அணிந்த பெருமானாய் தான் விளங்கும் நேசன் அடி சரண் அடைந்தோம் சந்திரனைச் சூடியாடும் தில்லை நடராசனின் திருலோக நாதனின் தூக்கிய பாதங்கள் தினம் துதித்துச் சரண் அடைந்தோம்
தப்பில்லா மனத்துடனே ஒப்பில்லா மன்னியனே மலர்த் தூவி சரண் அடைந்தோம் உன் மலர் அடிகள் தான் பணிந்தோம் பாடுதர்க்கு இனியனே பெரும் துறைப் பெருமானே பாடியே சரண் அடைந்தோம் உன் தாமரைத் திருவடிகள்
மங்கை ஓர் பாகம் கொண்டு கங்கையைத் தலைகொண்டு செங்கையால் அருளும் சிவனடியைச் சரண் அடைந்தோம் வெந்திரு நீறணிந்து, பிரதோஷ நோன்பு இருந்து உந்திருவடி சரண் அடைந்தோம் மின்னும் உன் பொன்னடிகள்
இன்னுயிர் சிவனுக்கு அர்ப்பணம் என்று எழுதி பொற்பாதம் சரண் அடைந்தோம் போற்றியே சரண் அடைந்தோம் முத்தொழில் புரிகின்ற மூர்த்தியே கீர்த்தியே முன் நின்று சரண் அடைந்தோம் என்றென்றும் சரண் அடைவோம்
பிரமன் முடி தெரியாமல் மாலவன் அடி அறியாமல் திரும்ப வைத்த பரமசிவன் பாதங்கள் சரண் அடைந்தோம் அளவிலா பற்றுடைய அண்ணாமலை சுற்றி அண்ணல் அடி போற்றி போற்றியே சரண் அடைந்தோம்
மனம் வேண்டும் மங்களங்கள் மகிழ்வுடனே பொழிபவனே தினம் உந்தன் பேர்சொன்னோம் திக்கெட்டும் போற்றிடவே வேதங்கள் நான்கினிலும் விளங்கிடும் நாதனே பூதங்கள் பணிந்திடும் எம்பெருமானே உனக்கு மங்களம்
உலகங்கள் ஆள்பவனே உயிரினங்கள் காப்பவனே உயிரே நம சிவாயவே எம் பெருமானே உனக்கு மங்களம் நலன்கள் தந்தருளும் நாயன்மார் தலைவனே நான்மறை தொழுதிடும் நமசிவாயனே எம்பெருமானே மங்களம்