“ஆஞ்சநேயர் மாபெரும் வீரர்; எண்ணற்ற அரக்கர்களைக் கொன்று குவித்தவர். ஆனால் அவர் பக்தர்களுக்கு வரங்களை அருளும் வள்ளலாகத் திகழ்கிறார். இப்படி கருணையோடு இருக்கும்படி அவருக்கு உபதேசித்தவர் யார் தெரியுமா? எனக் கேட்டார் காஞ்சிப்பெரியவர். மவுனம் காத்த பக்தர்களிடம், “போர்க்களத்தில் ராமர் எய்த அம்பு, ராவணனின் உயிரைக் குடித்தது. புழுதியில் அவன் உடல் விழுந்ததைக் கண்ட வானரங்கள் மகிழ்ச்சியால் தாவிக் குதித்தன. ஆனால் ராவணவதம் முடிந்த மறுகணமே போர்க்களத்தை விட்டு கிளம்பிய ஆஞ்சநேயர், அசோக வனத்தை அடைந்தார். ராமரின் வெற்றிச் செய்தியை சீதாபிராட்டியிடம் தெரிவித்தார். எவ்வளவு கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு பிராட்டியார் அங்கிருக்கிறார் என்பது அவருக்குத் தானே நன்றாகத் தெரியும்! ராமரின் வெற்றியால் சீதாப்பிராட்டியார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.” அஞ்சனை மைந்தனே! இன்று போல் என்றும் நீ நலமுடன் இரு” என வாழ்த்தினாள்.
சுற்றுமுற்றும் பார்த்த ஆஞ்சநேயரின் கண்களில் அசோகவனத்து அரக்கிகள் தென்பட்டனர். பிராட்டியாருக்கு அளவில்லாத துன்பம் கொடுத்தவர்கள் அல்லவா இவர்கள்? என்ற எண்ணம் எழுந்தது. போர் புரிந்து விட்டு வந்த ஆஞ்சநேயரின் மனதில் ரவுத்திர குணம் தலைதூக்கியது. இத்தனை நாளாக சீதாப்பிராட்டியாரை என்ன பாடுபடுத்திக் கொண்டிருந்தார்கள் இவர்கள்? பழிவாங்கத் துடித்தார். அவரது ஆவேசம் கண்ட ராட்சசிகள் நடுங்கினர். ஆனால் அந்த ராட்சசிகளுக்கும் தான் தாயார் போன்றவள் என்பதை சீதாப்பிராட்டியார் புரிய வைத்தாள். அப்பா! ஆஞ்சநேயா! உயர்ந்தவர்களின் மேலான நற்பண்பு இரக்கம். உலகத்தில் தப்பு செய்யாதவர்கள் யாருமில்லை. இவர்களுக்கு தீங்கு செய்ய நினைக்காதே! இவர்கள் என்ன பண்ணுவார்கள்? அரசசேவகர்கள் இவர்கள். மன்னரின் கட்டளையை ஏற்று நடப்பது இவர்களின் பணி. அதனால் ராவணனின் கட்டளைப்படி எனக்கு துன்பம் இழைத்தனர். இப்போது ராவணன் தம்பி விபீஷணன் இலங்கைக்கு மன்னராகி விட்டால் அவரது கட்டளைப்படி ’எனக்கு நமஸ்காரம் செய்வார்கள்’ என்றாள். பிராட்டியின் உபதேசத்தால் கோபம் மறைந்ததோடு, மனதால் அன்பு மயமானார் ஆஞ்சநேயர். அன்பு, கருணை உணர்வை ஊட்டியவர் பிராட்டியார். கருணைக்கடலான ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தால் நாம் வேண்டியதெல்லாம் கிடைக்கும்” என்றார். – திருப்பூர் கிருஷ்ணன்