கொடைக்கானல் மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வராகமலைக்கு நடுவே கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது பழநிமலை. அடிவாரத்தில் இருந்து 450 அடி ஏறினால் பழநிமலையை அடையலாம். மொத்தப்படிகள் 697. படிக்கட்டு பாதை, யானைப்பாதை ஆகியவற்றில் நடந்து செல்லலாம். விஞ்ச், ரோப்கார் மூலமும் மலையை அடையலாம். யானைப்பாதையின் ஆரம்பத்தில் காவல் தெய்வமான கருப்பசாமியை தரிசிக்கலாம். வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் என்னும் பக்தர் இந்த கருப்பசாமியை வழிபட்ட பின்னரே மலையேறினார். மலையின் பின்புறம் திருமஞ்சனப்பாதை உள்ளது. ’திருமஞ்சனம்’ என்றால் அபிஷேகம். முருகனுக்கு அபிஷேக தீர்த்தம் இந்தப் பாதையில் தான் வரும். இந்த வழியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.