பதிவு செய்த நாள்
02
பிப்
2019
06:02
மாதத்தில் தை மாதமும் திதியில் அமாவாசையும். திங்கட்கிழமையும் திருவோணம் நட்சத்திரமும் வ்யாதீபாத யோகமும் இணைந்திருந்தால் அந்நாளின் சூர்ய உதயம் மகா
உதயம். அதுவே மகோதயம். இந்நாளில் தீர்த்தமாடுதலும், பிதுர்கடன் அளித்தலும் ஆயிரம் கிரகண தீர்த்தமாடுதலுக்கு சமம். அடுத்த மகோதயம் வர இருப்பது 09.02.2043 (24 ஆண்டுகளுக்கு பிறகு.)
உத்தராணய புண்ணிய காலத்தின் தொடக்கமான தை மாதம், தேவர்களின் விடியல். அந்த மாதத்தில் திங்கட்கிழமை, அமாவாசை, வியதீபாதம் யோகம், சதுஷ்பாத கரணம் இவற்றோடு திருவோணம் நட்சத்திரமும் சேர்ந்து அமைந்தால் அந்த தினமே மஹோதயம் என்கிறது ஜோதிட, புராண சாஸ்திரங்கள். அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து அவரவர் இருப்பிடத்துக்கு அருகே உள்ள நீர்நிலையில் நீராடிவிட்டு, பித்ரு கடன்கள் செய்வதும், இயன்ற அளவில் தானதர்மங்கள் அளிப்பதும் மிகச் சிறப்பான பலன்களைத் தரும். ராமபிரான் ராவண வதம் முடித்து அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ மகரிஷி அவரை தரிசித்து சில உபதேசங்களைச் செய்தார். அப்போது அவர் மஹோதய புண்யகாலத்தின் சிறப்பினையும் சொல்லி, அதை முறைப்படி கடைபிடிப்பது பித்ருக்களின் ஆசிகிட்டச் செய்வதோடு, சூரியனின் அருளால், ஆரோக்யமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வைப் பெறச் செய்யும் என்றும் சொன்னார்.
சூரிய குலத்தில் உதித்த ராமசந்திர மூர்த்தியும் மகரிஷியின் வார்த்தைகளை ஏற்று, தனது தந்தை தசரதருக்குத் தான் செய்ய இயலாமல் போன இறுதிக்கடன்களை ஈடு செய்யும் விதத்தில் மஹோதய புண்ய காலத்தில் பித்ரு வழிபாடு செய்தாராம். தேவர்களின் பகல்பொழுது தொடங்கும் காலம் என்பதால், தேவர்களும் இந்த சமயத்தில் தெய்வ ஆராதனைகளைச் செய்வார்கள் என்பதால், மஹோதய வழிபாடு செய்வது மகத்தான புண்ணியம் சேர்க்கும் என்பது ஐதிகம். இந்த ஆண்டு 4.2.2019 அன்று மஹோதயம், அன்றே தை அமாவாசையும் அமைவதால், இயன்ற அளவிலாவது பித்ரு கடன்களைச் செய்யுங்கள். முடிந்த தான தர்மம் செய்யுங்கள். எதுவுமே இயலாதவர்கள் காக்கைக்கு ஒருபிடி அன்னம் வையுங்கள். அதுவும் இயலாதவர்கள், சிறிது நீரையாவது முன்னோரை நினைத்துத் தெளியுங்கள். மகோதய புண்யகாலம் உங்களுக்கு மகத்தான நன்மைகள் கிட்டச் செய்யும். அதனால் மங்களங்கள் யாவும் பெருகும்.