பதிவு செய்த நாள்
03
பிப்
2019
05:02
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் உள்ளது. அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது. காலைப்பொழுது பூஜைக்குச் சிறந்தது என்பதால், முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. (தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் (கவனம்) செய்வது என்று அர்த்தம்) அவ்வாறு இயலாத பட்சத்தில், மந்திரம் ஏதும் சொல்லாமல் பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை வேறு யாருக்கேனும் தானம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். பித்ரு பூஜையைச் சரியாகச் செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபம் ஏற்படும். அவ்வாறு சாபம் பெற்ற குடும்பங்களில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.
அமாவாசையில் ஒரு நிலவு: திருக்கடையூரில் வசித்த சுப்பிரமணியன் என்ற பக்தர் அபிராமி அம்மனின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். நிலா போல ஒளித்தன்மை கொண்ட அம்பிகையின் முக அழகில் எப்போதும் லயித்திருப்பார். ஒருசமயம், அவர் அம்பிகைய தரிசித்துக் கொண்டிருந்தபோது, சரபோஜி மன்னர் அங்கு வந்தார். அவரைக் கவனிக்காத சுப்பிரமணியன், மன்னருக்குரிய மரியாதையை செய்யவில்லை. கோபம் கொண்ட மன்னர், அவர் அருகில் சென்று இன்று என்ன நாள்? என்று கேட்டார். அம்பிகையின் முகத்தையே நினைத்துக் கொண்டிருந்தவர் பவுர்ணமி என்று சொல்லிவிட்டார். மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. ஏனென்றால் அன்று அமாவாசை. மன்னர் அவரிடம் இன்று பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடும்! என எச்சரித்துச் சென்றுவிட்டார். அபிராமி அம்பிகை மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட சுப்பிரமணியன் அமாவாசை தினமான அன்று நிலா உதிக்க வேண்டும் என வேண்டி, அம்பிகையின் புகழைச் சிறப்பித்து நூறு பாடல்கள் பாடினார். அதுவே அபிராமி அந்தாதி என்னும் அற்புதமான பொக்கிஷ நூலாகும். அவரது பாடலில் லயித்த அம்பிகை, நிலவை ஒளிரச் செய்து, அவரது பக்தியை உலகம் உணரச் செய்தாள். மேலும் தனது பெயராலேயே, அவர் அழைக்கும்படியாகவும் அருள்புரிந்தாள். இதனால் அவர் அபிராமி பட்டர் என்று பெயர் பெற்றார். அமாவாசையை பவுர்ணமியாக்கிய வைபவம் ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் திருக்கடையூரில் நடக்கும்.